Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிசாசாகிய சாத்தான்

பிசாசாகிய சாத்தான்

பிசாசாகிய சாத்தான்

சொற்பொருள் விளக்கம்:  யெகோவா தேவனின் மற்றும் உண்மையான கடவுளை வணங்கும் எல்லாரின் பிரதான எதிரியாயுள்ள அந்த ஆவி சிருஷ்டி. யெகோவாவை எதிர்த்துநிற்பவனானதால் சாத்தான் என்ற பெயர் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. கடவுளைப் பழித்தூற்றுவதில் முதன்மையானவனாயிருப்பதால் பிசாசு எனவும் சாத்தான் அறியப்படுகிறான். ஏதேனில் ஏவாளை வஞ்சிப்பதற்கு சாத்தான் ஒரு பாம்பைப் பயன்படுத்தினதால் பழைய பாம்பு எனவும் அவனை விவரித்திருக்கிறது, மேலும் அந்தக் காரணத்தினிமித்தம் “சர்ப்பம்” “வஞ்சகனைக்” குறித்துக் காட்டுவதாயிற்று. வெளிப்படுத்துதல் புத்தகத்தில், விழுங்கும் வலுசர்ப்பமும் சாத்தானைக் குறிக்கும் அடையாளக் குறியாய்ப் பயன்படுத்தியுள்ளது.

அத்தகைய ஓர் ஆவி ஆள் உண்மையில் இருக்கிறானாவென நாம் எவ்வாறு அறியக்கூடும்?

பைபிளே இதைத் தெரிந்துகொள்வதற்கு முக்கிய செய்திமூலம். அதில் இவனைத் திரும்பத்திரும்பப் பெயரால் குறிப்பிட்டிருக்கிறது. (சாத்தான் என 52 தடவைகளும், பிசாசு என 33 தடவைகளும்). சாத்தான் இருப்பதைப் பற்றிய கண்கூடான சாட்சியும் அதில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அவனை நேரில் கண்ட அந்தச் சாட்சி யார்? பூமிக்கு வருவதற்கு முன்னால் பரலோகத்தில் வாழ்ந்த இயேசு கிறிஸ்துவே, இவர் அந்தப் பொல்லாங்கனைக் குறித்துத் திரும்பத்திரும்பப் பெயர்சொல்லிப் பேசினார்.—லூக்கா 22:31; 10:18; மத். 25:41.

பிசாசாகிய சாத்தானைப்பற்றி பைபிள் சொல்வது கருத்துள்ளதாயிருக்கிறது. மனிதவர்க்கம் அனுபவிக்கும் தீங்கு அதில் உட்படும் மனிதரின் வன்மையைப் பார்க்கிலும் மிக அதிகம் மீறியதாயுள்ளது. சமாதானமாய் வாழவேண்டுமென்பதே பெரும்பான்மையரின் விருப்பமாயிருப்பினும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதவர்க்கம் பகைமை, வன்முறை, மற்றும் போர் ஆகியவற்றால் வாதிக்கப்படுவதேன், இப்பொழுது மனிதவர்க்கம் முழுவதையும் அழிப்பதற்குப் பயமுறுத்தும் அத்தகைய உச்சநிலைக்கு இது எட்டியிருப்பதேன் என்பவற்றை, சாத்தானின் தொக்கத்தையும் அவனுடைய நடவடிக்கைகளையும் பற்றி பைபிள் கொடுக்கும் விளக்கம் தெளிவாக்குகிறது.

உண்மையில் பிசாசு இல்லையென்றால், அவனைப்பற்றி பைபிள் சொல்வதை ஏற்பது ஒருவனுக்கு நிலையான நன்மைகளைக் கொண்டுவராது. எனினும், பலருடைய காரியங்களில், முற்காலத்தில் மாயமந்திரங்களில் ஈடுபட்ட அல்லது ஆவியுலகத் தொர்பு கொள்ளும் தொகுதிகளைச் சேர்ந்திருந்த ஆட்கள் அக்காலத்தில், காணக்கூடாத மூலக்காரணங்களிலிருந்து “குரல்களைக்” கேட்பது, மீமானிட ஆவி ஆட்களால் “பிடித்தாட்டப்படுவது,” முதலியவற்றால் தாங்கள் வெகுவாய் சஞ்சலப்பட்டனரென அறிவிக்கின்றனர். இவர்கள், சாத்தானையும் அவனுடைய பேய்களையும்பற்றி பைபிள் சொல்வதைக் கற்றறிந்து, ஆவியுலகத் தொர்புகொள்ளும் பழக்கச் செயல்களை அறவே விட்டுவிலகியிருக்கும்படி கூறும் பைபிளின் அறிவுரையைப் பொருத்திப் பயன்படுத்தி, ஜெபத்தில் யெகோவாவின் உதவியை நாடித்தேடினபோது உண்மையான விடுதலையை அடைந்தார்கள்.—பக்கங்கள் 384-389-ல், “ஆவிக்கொள்கை” என்ற தலைப்பின்கீழ்ப் பாருங்கள்.

சாத்தான் இருப்பதை நம்புவது, அவனுக்குக் கொம்புகளும், கூர்முனையைக்கொண்ட வாலும் இருக்கின்றன, கவர்க்கோலை வைத்திருக்கிறான், ஆட்களை எரிகிற நரகத்தில் வாட்டிவதக்குகிறான் என்ற எண்ணத்தை ஏற்பதைக் குறிக்கிறதில்லை. பைபிள் சாத்தானைப்பற்றி இத்தகைய விவரிப்பு எதுவும் கொடுக்கிறதில்லை. அது, கிரேக்கப் புராணக்கதையில் பான் என்ற தேவதையின் உருவமைப்புகளாலும், இத்தாலிய கவிஞன் டான்டி அலிகியரி எழுதின இன்ஃபர்னோ என்பதாலும் கவரப்பட்ட இடைக்கால ஓவியக் கலைஞருடைய மனதின் விளைவாகும். எரி நரகத்தைப்பற்றி பைபிள் போதிப்பதில்லை, அதற்குப் பதில், “மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்,” என்று தெளிவாய்ச் சொல்லுகிறது.—பிர. 9:5.

சாத்தான் ஒருவேளை ஆட்களுக்குள்ளிருக்கும் தீமைத்தன்மையாயிருக்கலாமா?

யோபு 1:6-12-லும் 2:1-7-லும் யெகோவா தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையில் நடந்த உரையாடலைப்பற்றிச் சொல்லியிருக்கிறது. சாத்தான் ஓர் ஆளிலுள்ள தீயத்தன்மையாயிருந்தால், இந்தச் சந்தர்ப்பத்தில் அந்தத் தீயத் தன்மை யெகோவாவில் இருந்திருக்கவேண்டும். ஆனால் இது, “அவரிடத்தில் அநீதியில்லை,” என்று பைபிளில் யெகோவாவைப்பற்றி நமக்குச் சொல்லியிருப்பதுடன் முற்றிலும் பொருத்தமற்றிருக்கிறது. (சங். 92:15; வெளி. 4:8) யோபிலுள்ள இந்த விவரப் பதிவுகளில் எபிரெயு மூல வாக்கியத்தில் ஹாஸ்சேட்டன் (has.Sa.tan’) (அந்தச் சாத்தான்) என்ற சொல்லமைப்பு பயன்படுத்தியிருப்பது கவனிக்கத்தக்கது, இது கடவுளை முதன்மையாய் எதிர்ப்பவன் குறிப்பிடப்படுகிறானெனக் காட்டுகிறது.—துணைக் குறிப்புகளைக்கொண்ட NW பைபிள் பதிப்பில் சகரியா 3:1, 2-ன்பேரில் அடிக்குறிப்பையும் பாருங்கள்.

லூக்கா 4:1-13-ல் பிசாசானவன் தான் கட்டளையிடுவதைச் செய்யும்படி இயேசுவைத் தூண்ட முயற்சி செய்தானென அறிவித்திருக்கிறது. பிசாசு கூறினவற்றையும் இயேசு சொன்ன விடைகளையும் இந்த விவரப்பதிவு எடுத்துக் கூறுகிறது. அங்கே இயேசு தனக்குள்தானே இருந்தத் தீயத்தன்மையால் சோதிக்கப்பட்டாரா? பாவமில்லாதவரென இயேசுவைப்பற்றி பைபிளில் கொடுத்துள்ள விவரிப்போடு இத்தகைய கருத்து பொருந்துகிறதில்லை. (எபி. 7:26; 1 பேதுரு 2:22) யூதாஸ்காரியோத்தில் தோன்றிவளர்ந்த கெட்டத் தன்மையை விவரிப்பதற்கு யோன் 6:70-ல் டையாபோலஸ் (di.a’bo.los’) என்ற கிரேக்கச் சொல் பயன்படுத்தியுள்ளபோதிலும், லூக்கா 4:3-ல் ஹோ டையாபோலஸ் (அந்தப் பிசாசு) என்ற சொல்லமைப்பு பயன்படுத்தியுள்ளது, இவ்வாறு ஒரு குறிப்பிட்ட ஆளைக் குறித்துக் காட்டுகிறது.

பிசாசைக் குற்றஞ்சாட்டுவது கெட்ட நிலைமைகளுக்கான பொறுப்பிலிருந்து தப்பிக்கொள்ள முயன்று பயன்படுத்தும் வெறும் ஓர் உபாயமா?

சிலர் தாங்கள்தாமே செய்யும் காரியங்களுக்குப் பிசாசைக் குற்றஞ்சாட்டுகிறார்கள். இதற்கு மாறாக, பைபிள், மனிதர் மற்ற மனிதரின் கைகளிலோ அல்லது தங்கள் சொந்த நடத்தையின் விளைவாகவோ அனுபவிக்கும் கேட்டுக்கு, அடிக்கடி அவர்களே பெரும்பாலும் குற்றமுடையோராயிருக்கின்றனரென காட்டுகிறது. (பிர. 8:9; கலா. 6:7) எனினும், மனிவர்க்கத்துக்கு இவ்வளவு மிக துக்கத்தைக் கொண்டுவந்திருக்கிற இந்த மீமானிட எதிரி இருப்பதையும் அவனுடைய சூழ்ச்சிகளையும் பற்றி நம்மை அறியாமையிலிருக்க பைபிள் விடுகிறதில்லை. அவனுடைய ஆதிக்கத்திலிருந்து நாம் வெளிவரக்கூடிய வழியை அது காட்டுகிறது.

சாத்தான் எங்கிருந்து வந்தான்?

யெகோவாவின் செயல்களெல்லாம் பரிபூரணமானவை; அவர் அநீதியின் காரணர் அல்லர்; ஆகையால் பொல்லாங்கனான எவனையும் அவர் படைக்கவில்லை. (உபா. 32:4; சங். 5:4) சாத்தானான அவன் முதன்முதல் கடவுளின் ஒரு பரிபூரண ஆவி குமாரனாக இருந்தான். சாத்தான் “சத்தியத்திலே நிலைநிற்கவில்லை,” என்று இயேசு சொன்னபோது, ஒருகாலத்தில் அவன் “சத்தியத்தில்” இருந்தானென குறிப்பாய்க் காட்டினார். (யோவான் 8:44) ஆனால், கடவுளுடைய அறிவுள்ள சிருஷ்டிகள் யாவரின் காரியத்திலும் உண்மையாயிருப்பதுபோல், இந்த ஆவி குமாரனும் தானே தெரிந்துகொள்ளும் சுயாதீனம் அளிக்கப்பட்டிருந்தான். அவன் தன் தெரிந்துகொள்ளும் சுயாதீனத்தைத் தவறான வழியில் பயன்படுத்தினான், தற்பெருமையான உணர்ச்சிகள் தன் இருதயத்தில் தோன்றிவளர அவன் அனுமதித்தான், கடவுளுக்கு மாத்திரமே உரியதான வணக்கத்தைத் தான் பெறவேண்டுமென பேராசைக் கொண்டான், ஆகையால், ஆதாமும் ஏவாளும் கடவுளுக்குக் கீழ்ப்படிவதைப் பார்க்கிலும் தனக்கே செவிகொடுக்கும்படி அவர்களை வஞ்சித்து சிக்கவைத்தான். இவ்வாறு அவன் தன்னுடைய நடத்தைப்போக்கால் தன்னைச் சாத்தானாக்கிக்கொண்டான், இதன் பொருள் “எதிரி” என்பதாகும்.—யாக். 1:14, 15; மேலும் பக்கம் 372-ல் “பாவம்” என்ற தலைப்பின்கீழ்ப் பாருங்கள்.

சாத்தான் கலகஞ்செய்தப் பின் கடவுள் ஏன் அவனை உடனடியாக அழிக்கவில்லை?

சாத்தான் வினைமையான விவாதங்களை எழுப்பினான்: (1) யெகோவாவின் அரசாட்சியின் நீதியும் நேர்மையும். மனிதவர்க்கத்தின் சந்தோஷத்துக்கு உதவியாயிருக்கும் சுயாதீனத்தை யெகோவா அவர்களுக்குக் கொடாமல் நிறுத்திவைத்துக்கொண்டாரா? தங்கள் விவகாரங்களை வெற்றிகரமாய் ஆளும் மனிதவர்க்கத்தின் திறமையும் அவர்களுடைய வாழ்க்கை தொர்ந்திருப்பதும் அவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிவதன்பேரில் உண்மையில் சார்ந்திருந்ததா? கீழ்ப்படியாமை அவர்களுடைய மரணத்துக்கு வழிநடத்தும் என்று கூறின ஒரு சட்டத்தைக் கொடுப்பதில் யெகோவா நேர்மையற்றவராயிருந்தாரா? (ஆதி. 2:16, 17; 3:3-5) அப்படியானால், ஆளுவதற்கு யெகோவாவுக்கு உண்மையில் உரிமை இருந்ததா? (2) யெகோவாவினிடம் அறிவுள்ள சிருஷ்டிகளின் உண்மைத்தவறாமை. ஆதாமும் ஏவாளும் உண்மைத்தவறினதால் பின்வரும் கேள்வி எழும்பினது: யெகோவாவின் ஊழியர் உண்மையில் அன்பினால் தூண்டப்பட்டு அவருக்குக் கீழ்ப்படிந்தார்களா அல்லது அவர்கள் எல்லாரும் கடவுளை விட்டுவிலகி சாத்தான் கொடுக்கும் வழிநடத்துதலைப் பின்பற்றுவார்களா? இந்தப் பிந்தின விவாதத்தைச் சாத்தான், யோபின் நாட்களில் மேலும் வெளிப்பட செய்தான். (ஆதி. 3:6; யோபு 1:8-11; 2:3-5; லூக்கா 22:31-ஐயும் பாருங்கள்.) அந்தக் கலகக்காரர்பேரில் வெறுமென மரணதண்டனையை நிறைவேற்றுவதன்மூலம் இந்த விவாதங்களைத் தீர்க்கமுடியாது.

கடவுள் தமக்குத்தாமே எதையாவது நிரூபித்துக்கொள்ளத் தேவை எதுவும் இல்லை. ஆனால் இந்த விவாதங்கள் மறுபடியும் ஒருபோதும் சர்வலோகத்தின் சமாதானத்தையும் சுகநலத்தையும் கெடுக்கக்கூடாதபடி, அவை எத்தகைய சந்தேகத்துக்கும் இடமில்லாமல் தீர்க்கப்பட யெகோவா போதிய காலத்தை அனுமதித்திருக்கிறார். ஆதாமும் ஏவாளும் கடவுளுக்குக் கீழ்ப்படியாமற்போனதைப் பின்தொடர்ந்து மரித்தார்களென்பது உரிய காலத்தில் தெளிவாயிற்று. (ஆதி. 5:5) ஆனால் இன்னும் அதிகம் விவாதத்தில் இருந்தது. ஆகையால், சாத்தானும் மனிதரும் தங்கள் சொந்தமாய் உண்டுபண்ணும் எல்லா வகையான அரசாங்கத்தையும் முயன்று பார்க்கும்படி கடவுள் அனுமதித்திருக்கிறார். எதுவும் நிலையான சந்தோஷத்தைக் கொண்டுவரவில்லை. தம்முடைய நீதியுள்ள தராதரங்களைப் புறக்கணிக்கும் வாழ்க்கைமுறைகளைப் பின்தொடருமளவாகவுங்கூட செல்ல கடவுள் மனிதவர்க்கத்தை விட்டார். இதன் கனிகள்தாமே உண்மையைத் தெரிவிக்கிறது. பைபிள் உண்மையாய்ச் சொல்லுகிறபிரகாரம்: “தன் நடையை நடத்துவது நடக்கிறவன் வசத்தில் இல்லை.” (எரே. 10:23) அதேசமயத்தில் கடவுள் தம்முடைய ஊழியர்கள், சாத்தான் பின்னின்று தூண்டிவிடும் கவர்ச்சியூட்டுதல்களுக்கும் துன்புறுத்தல்களுக்கும் எதிரிலும் தங்கள் அன்புள்ளக் கீழ்ப்படிதலின் செயல்களால் தங்கள் உண்மைத்தவறாமையைத் தமக்கு நிரூபிக்கும்படி அவர்களுக்கு வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார், “என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவுகொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து,” என்று சொல்லி யெகோவா தம்முடைய ஊழியருக்கு அறிவுரை கூறுகிறார். (நீதி. 27:11) உண்மையுள்ளோராய் நிரூபிக்கிறவர்கள் அதன் பலனாக இப்பொழுது மிகுந்த நன்மைகளை அடைகிறார்கள் எதிர்காலத்தில் பரிபூரணத்தில் நித்திய ஜீவனின் எதிர்பார்ப்பை உடையோராயிருக்கின்றனர். யெகோவாவின் சித்தத்தைச் செய்யும்படி அவர்கள் அத்தகைய வாழ்க்கையைப் பயன்படுத்துவார்கள், அவரையும் அவருடைய வழிகளையும் அவர்கள் உண்மையில் நேசிக்கிறார்கள்.

இன்றைய உலகத்தில் சாத்தான் எத்தகைய வல்லமைவாய்ந்த ஆள்?

இயேசு கிறிஸ்து அவனை “இவ்வுலகத்தின் அதிபதி,” எனக் குறிப்பிட்டார், பொதுவான மனிதவர்க்கம் கடவுளுடைய கட்டளைகளைப் புறக்கணிக்கும்படியான இவனுடைய தூண்டுதலுக்குச் செவிகொடுப்பதன்மூலம் கீழ்ப்படிந்து வருகிற ஆள். (யோவான் 14:30; எபே. 2:2) பைபிள் இவனை “இந்தக் காரிய ஒழுங்குமுறயின் கடவுள்,” எனவும் அழைக்கிறது, இந்தக் காரிய ஒழுங்குமுறயைப் பற்றிக்கொண்டிருக்கும் ஜனங்களின் மதப் பழக்கவழக்கங்களால் இவன் கனப்படுத்தப்படுகிறான்.—2 கொரி. 4:4, NW; 1 கொரி. 10:20.

இயேசு கிறிஸ்துவைச் சோதிக்க முயன்றபோது, பிசாசு “அவரை உயரக் கொண்டுபோய் உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு க்ஷணப்பொழுதிலே அவருக்குக் காட்டி: இந்த அதிகாரம் முழுமையையும் இவற்றின் மகிமையையும் உமக்குத் தருவேன்; அது எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு அதைக் கொடுக்கிறேன் நீர் என்னை விழுந்து பணிந்துகொண்டால் எல்லாம் உம்முடையதாகும் என்று சொன்னான்.” (லூக்கா 4:5-7, தி.மொ.) ஆட்சிசெய்யும் பூகோள அரசியல் ஒழுங்குமுறைக்குச் சாத்தான் ‘பலத்தையும் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும்’ கொடுக்கிறானென வெளிப்படுத்துதல் 13:1, 2 தெரிவிக்கிறது. பூமியின் பிரதான ராஜ்யங்களின்மீது சாத்தான் தன் பேய் அதிபதிகளை வைத்திருந்தானென தானியேல் 10:13, 20 தெரிவிக்கிறது. எபேசியர் 6:12-ல் இவர்களைத் ‘துரைத்தனங்கள், அதிகாரங்கள், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகள், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகள்’ ஆகியவையென குறிப்பிட்டிருக்கிறது.

“உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது,” என்று 1 யோவான் 5:19-ல் சொல்லியிருப்பதில் அதிசயம் ஒன்றுமில்லை. ஆனால் அவனுடைய வல்லமை மட்டுப்பட்ட ஒரு காலப்பகுதிக்கு மாத்திரமேயுள்ளது மேலும் சர்வவல்லமையுள்ள கடவுளாயிருக்கிற யெகோவா அனுமதித்திருப்பதனால் மாத்திரமே உள்ளது.

சாத்தான் மனிதவர்க்கத்தை மோம்போக்க இன்னும் எவ்வளவு காலம் அனுமதிக்கப்படுவான்?

சாத்தானின் பொல்லாதக் காரிய ஒழுங்குமுறையின் கடைசி நாட்களில் நாம் வாழ்ந்துகொண்டிருப்பதைக் குறிக்கும் அத்தாட்சிக்கு, பக்கங்கள் 95-98-ல், “தேதிகள்” என்பதன்கீழும், “கடைசி நாட்கள்” என்ற முக்கிய தலைப்பின் கீழும் பாருங்கள்.

சாத்தானின் பொல்லாதப் பாதிப்பிலிருந்து விடுதலையடைவதற்கான ஏற்பாடு பின்வரும் முறையில் அடையாளக் குறிப்பாய் விவரிக்கப்பட்டிருக்கிறது: “ஒரு தூதன் பாதாளத்தின் [அபிஸ்ஸின், NW] திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்திறங்கிவரக் கண்டேன். பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும் வரைக்கும் அது ஜனங்களை மோம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே [அபிஸ்ஸிலே] தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான். அதற்குப் பின்பு அது கொஞ்சக்காலம் விடுதலையாகவேண்டும்.” (வெளி. 20:1-3) பின்பு என்ன நடக்கும்? “அவர்களை மோம்போக்கின பிசாசானவன் . . . அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான்.” (வெளி. 20:10) இது குறிப்பதென்ன? வெளிப்படுத்துதல் 21:8 பதிலளிக்கிறது: இதுவே “இரண்டாம் மரணம்.” அவன் என்றென்றுமாக ஒழிந்துபோவான்!

சாத்தான் ‘அபிஸ்ஸுக்குள்ளாக்கப்படுவது’ 1,000 ஆண்டுகளுக்கு தான் சோதிப்பதற்கு ஒருவரும் இல்லாமல் பாழான பூமியில் கட்டுப்படுத்தப்பட்டிருப்பான் என்று பொருள் கொள்கிறதா?

இந்த எண்ணத்தை ஆதரிக்கச் சிலர் (பக்கம் 365-ல் எடுத்துக் குறிப்பிட்டுள்ள) வெளிப்படுத்துதல் 20:3-ஐ எடுத்துக் காட்டுகின்றனர். “அபிஸ்” அல்லது “பாதாளம்” (UV), பூமி பாழாக்கப்பட்ட நிலையில் இருப்பதைக் குறிக்கிறதென அவர்கள் சொல்கின்றனர். அவ்வாறு குறிக்கிறதா? சாத்தான் அபிஸ்ஸுக்குள்ளாக்கப்படுவதற்கு முன்னான ஒரு காலத்தில் அவன் பரலோகத்திலிருந்து கீழே பூமிக்குத் “தள்ளப்பட்டான்” எனவும், இங்கே அவன் மனிதவர்க்கத்தின்மீது அதிகரிக்கப்பட்ட ஆபத்தைக் கொண்டுவருகிறான் எனவும் வெளிப்படுத்துதல் 12:7-9, 12 காட்டுகிறது. ஆகவே, சாத்தான் “பாதாளத்திலே தள்ளி அடை”க்கப்பட்டதாக வெளிப்படுத்துதல் 20:3 சொல்கையில், நிச்சயமாகவே, அவன் தான் ஏற்கெனவே இருந்த இடத்தில்—காணக்கூடாதவனாய் ஆனால் பூமிக்கு அருகில் கட்டுப்படுத்தி— வெறுமென விடப்படவில்லை. “அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது [அவன்] ஜனங்களை மோம்போக்காதபடிக்கு,” அங்கிருந்து வெகு தூரத்துக்கு விலக்கப்படுகிறான். அந்த ஆயிரம் ஆண்டுகளின் முடிவில் ஜனங்கள் அல்ல, சாத்தானே அபிஸ்ஸிலிருந்து விடுதலையாக்கப்படுகிறான் என்று வெளிப்படுத்துதல் 20:3-ல் சொல்லியிருப்பதைக் கவனியுங்கள். சாத்தான் கட்டவிழ்க்கப்படுகையில், முன்னால் அந்தச் சகல ஜாதியாராயிருந்த ஜனங்கள் ஏற்கெனவே அங்கிருப்பார்கள்.

இந்த நம்பிக்கையை ஆதரிக்க ஏசாயா 24:1-6-ம் எரேமியா 4:23-29-ம் (UV) சிலசமயங்களில் குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் சொல்லியிருப்பதாவது: “இதோ, கர்த்தர் தேசத்தை [பூமியை, KJ] வெறுமையும் பாழுமாக்கி, அதைக் கவிழ்த்து, . . . சிதறடிப்பார். . . . தேசம் முழுதும் கொள்ளையாகி, முற்றிலும் வெறுமையாகும், இது கர்த்தர் சொன்ன வார்த்தை.” “பூமியைப் பார்த்தேன், அது ஒழுங்கின்மையும் வெறுமையுமாயிருந்தது; . . . பின்னும் நான் பார்க்கும்போது, மனுஷனில்லை; . . . தேசமெல்லாம் பாழாய்ப்போம்; . . . என்று கர்த்தர் சொல்லுகிறார். . . . ஒரு மனுஷனும் அவைகளிலே குடியிராதபடி எல்லா ஊர்களும் விடப்பட்டிருக்கும்.” இந்தத் தீர்க்கதரிசனங்கள் குறிப்பதென்ன? இவை எருசலேமின்மீதும் யூதா தேசத்தின்மீதும் தங்கள் முதல் நிறைவேற்றத்தை அடைந்தன. தெய்வீக நியாயத்தீர்ப்பின் நிறைவேற்றமாக, யெகோவா பாபிலோனியரை அந்தத் தேசத்தின்மீது படையெடுத்துப் பாழ்ப்படுத்த அனுமதித்தார். முடிவில் அது முழுவதும் குடியிருப்பில்லாமல் பாழாய் விடப்பட்டது. (எரேமியா 36:29-ஐ பாருங்கள்.) ஆனால் கடவுள் அப்பொழுது இந்தப் பூகோளம் முழுவதையும் குடியிருப்பற்றதாக்கவில்லை, இப்பொழுதும் அவர் அவ்வாறு செய்யமாட்டார். (பக்கங்கள் 112-115-ல், “பூமி” என்பதன்கீழும், “பரலோகம்” என்ற முக்கிய தலைப்பின்கீழும் பாருங்கள்.) எனினும், உண்மையற்ற எருசலேமைச் சரிசமமாய்க் குறித்து நின்று அதன் பரிசுத்தமற்ற நடத்தையால் கடவுளுடைய பெயரை நிந்திக்கும் கிறிஸ்தவமண்டலத்தையும், சாத்தானின் காணக்கூடிய அமைப்பின் மீதிபாகம் முழுவதையும் அவர் முற்றிலும் பாழாக்குவார்.

குடியிருப்பற்று பாழாய்க் கிடப்பதற்குப்பதில், கிறிஸ்துவின் ஆயிர ஆண்டு ஆட்சியின்போது, சாத்தான் அபிஸ்ஸுக்குள்ளிருக்கையில், பூமி முழுவதும் பரதீஸாகும். (“பரதீஸ்” என்பதில் பாருங்கள்.)