Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

புதிய உலக மொழிபெயர்ப்பு

புதிய உலக மொழிபெயர்ப்பு

புதிய உலக மொழிபெயர்ப்பு

சொற்பொருள் விளக்கம்:  அபிஷேகஞ்செய்யப்பட்ட யெகோவாவின் சாட்சிகளடங்கிய ஒரு குழு, நேரே எபிரெயு, அரமேயிக், மற்றும் கிரேக்க மொழிகளிலிருந்து தற்கால ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பரிசுத்த வேத எழுத்துக்களின் ஒரு மொழிபெயர்ப்பு. இவர்கள் தங்கள் வேலையைக் குறித்து பின்வருமாறு தெரிவித்தார்கள்: “பரிசுத்த வேத எழுத்துக்களின் தெய்வீக ஆசிரியருக்குப் பயந்து அவரை நேசிக்கும் இந்த வேலையின் மொழிபெயர்ப்பாளர்கள், அவருடைய எண்ணங்களையும் அறிவிப்புகளையும் தங்களால் கூடிய திருத்தமான முறையில் மொழிபெயர்ப்பதற்கு அவரிடமாக ஒரு தனி பொறுப்பை உணருகின்றனர். மேலும் தங்கள் நித்திய இரட்சிப்புக்காக மகா உன்னத கடவுளுடைய ஏவப்பட்ட வார்த்தையின் ஒரு மொழிபெயர்ப்பின்மீது சார்ந்திருக்கிற ஆராய்ச்சி செய்யும் வாசகர்களினிடமும் அவர்கள் ஒரு பொறுப்பை உணருகின்றனர்.” இந்த மொழிபெயர்ப்பு, முதன்முதல் 1950-லிருந்து 1960 வரை பகுதிகளில் வெளியிடப்பட்டது. மற்ற மொழிகளில் இதன் பதிப்புகள் இந்த ஆங்கில மொழிபெயர்ப்பின்பேரில் ஆதாரங்கொண்டிருக்கின்றன.

“புதிய உலக மொழிபெயர்ப்பு” எவற்றின்பேரில் ஆதாரங்கொள்ள செய்யப்பட்டுள்ளது?

எபிரெய வேத எழுத்துக்களை மொழிபெயர்ப்பதற்கு, ருடால்ஃப் கிட்டெலின் பிப்ளியா ஹெப்ரேய்க்கா, 1951-1955-ன் பதிப்புகள், ஆதாரமாகப் பயன்படுத்தப்பட்டன. 1984-ல் திருத்தியமைத்த புதிய உலக மொழிபெர்ப்பு, 1977-ன் பிப்ளியா ஹெப்ரேய்க்கா ஸ்டட்கார்ட்டென்சியாவுக்கு ஒத்திசைய புத்தம்புதிய நிலைக்குக் கொண்டுவருவதிலிருந்து பயனடைந்தது. அதோடுகூட, சவக்கடல் சுருள்கள் மற்றும் வேறு மொழிகளில் மொழிபெர்க்கப்பட்ட பற்பல பூர்வ மொழிபெயர்ப்புகளும் கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. கிறிஸ்தவ கிரேக்க வேத எழுத்துக்களுக்கு உவெஸ்ட்காட்டும் ஹோர்ட்டும் தயாரித்த 1881-ன் தனிச் சிறப்புவாய்ந்த கிரேக்க மூலவாக்கியம் முக்கியமாய்ப் பயன்படுத்தப்பட்டது, ஆனால் மற்றப் பல சிறப்புவாய்ந்த மூலவாக்கியங்களும் மேலும் மற்ற மொழிகளிலிருந்த பல பூர்வ மொழிபெயர்ப்புகளும் கலந்தாராயப்பட்டன.

மொழிபெயர்ப்பாளர்கள் யார்?

தங்கள் மொழிபெயர்ப்பைப் பிரசுரிக்கும் உரிமைகளைப் பரிசாக அளிக்கையில், புதிய உலக பைபிள் மொழிபெயர்ப்பு குழு, அதன் உறுப்பினர் பெயர் அறியப்படாமல் இருக்கும்படி கேட்டுக்கொண்டனர். தி உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸயிட்டி ஆஃப் பென்ஸில்வேனியா அவர்களுடைய வேண்டுகோளுக்கு மதிப்புக் கொடுத்துள்ளது. இந்த மொழிபெயர்ப்பாளர்கள் தங்களுக்கு முதன்மையைத் தேடவில்லை பரிசுத்த வேத எழுத்துக்களின் தெய்வீக ஆசிரியரைக் கனப்படுத்துவதையே தேடினர்.

காலப்போக்கில் மற்ற மொழிபெயர்ப்பாளர் குழுக்களும் இதைப்போன்ற நோக்கை ஏற்றிருக்கின்றனர். உதாரணமாக, ஓர வசனக் குறிப்புகளைக்கொண்ட (1971) நியு அமெரிக்கன் ஸ்ன்டர்ட் பைபிளின் வண்ண அட்டைப் பொதியுரையில் பின்வருமாறு சொல்லியிருக்கிறது: “கடவுளுடைய வார்த்தை அதன் மதிப்புகளில் நிற்கவேண்டுமென்பது எங்கள் நம்பிக்கையாதலால் குறிப்புக்காயினும் அல்லது சிபாரிசுகளுக்காயினும் எந்த அறிவாளரின் பெயரையும் நாங்கள் பயன்படுத்தியில்லை.”

இது உண்மையில் புலமைவாய்ந்த மொழிபெயர்ப்பா?

மொழிபெயர்ப்பாளர்கள் பெயர் அறியப்படாமல் இருக்கத் தெரிந்துகொண்டதால், இந்தக் கேள்விக்கு அவர்களுடைய கல்வி பண்பாட்டறிவின்பேரில் இங்கே விடையளிக்க முடியாது. இந்த மொழிபெயர்ப்பை அதன் சொந்தத் தகுதிகளின்பேரில் மதிப்பிடவேண்டும்.

இது எத்தகையான மொழிபெயர்ப்பு? ஒரு காரியமென்னவெனில், இது மூல மொழிகளிலிருந்து திருத்தமாயும், பெரும்பாலும் நேர்ச்சொற்பொருளுடையதாயும் மொழிபெயர்த்த ஒரு மொழிபெயர்ப்பு. இது, மொழிபெயர்ப்பாளர்கள் முக்கியமல்லாதவையென தாங்கள் கருதும் நுட்பவிவரங்களை மொழிபெயர்க்காமல் விட்டு, உதவியாயிருக்குமென தாங்கள் நம்பும் எண்ணங்களைச் சேர்க்கும் தளர்ச்சியான பொழிப்புரை அல்ல. மாணாக்கருக்கு உதவியாக, பல பதிப்புகள் விரிவான அடிக்குறிப்புகளை அளிக்கின்றன, அவற்றில் சொற்றொடர்கள் நியாயப்படி ஒன்றுக்கு மேற்பட்ட முறையில் மொழிபெயர்க்கக் கூடியதாயுள்ளவற்றில் வேறுபட்ட மற்ற மொழிபெயர்ப்புகளைக் காட்டுகின்றன, மேலும் குறிப்பிட்ட சில மொழிபெயர்ப்புகள் ஆதாரங்கொண்டுள்ள திட்டமான பூர்வ கையெழுத்துப்பிரதிகளையும் வரிசையாகக் கொடுக்கின்றன.

சில வசனங்கள் ஒருவர் பழக்கப்பட்ட முறையில் ஒருவேளை வாசியாதிருக்கலாம். எந்த மொழிபெயர்ப்பு சரியானது? ஓரக் குறிப்புகளையுடைய புதிய உலக மொழிபெயர்ப்பு பதிப்பின் அடிக்குறிப்புகளில் ஆதாரமாகப் பெயர் குறிப்பிட்டுள்ள கையெழுத்துப் பிரதிகளை ஆராயும்படியும், பிற்சேர்க்கையில் கொடுத்துள்ள விளக்கங்களை வாசிக்கும்படியும், அந்த மொழிபெயர்ப்பை மற்றப் பல்வேறு மொழிபெர்ப்புகளோடு ஒத்துப் பார்க்கவும் வாசகர்கள் அழைக்கப்படுகின்றனர். வேறு சில மொழிபெயர்ப்பாளர்களும், அந்தக் காரியத்தை அதைப்போன்ற முறையில் மொழிபெயர்ப்பதன் தேவையைக் கண்டிருப்பதாக அவர்கள் பொதுவாய்க் காண்பார்கள்.

கிறிஸ்தவ கிரேக்க வேத எழுத்துக்களில் யெகோவாவின் பெயரை ஏன் பயன்படுத்தியிருக்கிறது?

புதிய உலக மொழிபெயர்ப்பு மாத்திரமே இவ்வாறு செய்யும் ஒரே பைபிள் அல்லவென்பதைக் கவனிக்கவேண்டும். கிறிஸ்தவ கிரேக்க வேத எழுத்துக்களை எபிரெயுவில் மொழிபெயர்த்துள்ள மொழிபெர்ப்புகளில் இந்தத் தெய்வீகப் பெயர், தேவாவியால் ஏவப்பட்ட எபிரெய வேத எழுத்துக்களிலிருந்து நேராக எடுத்துக் குறிப்பிட்டுள்ள மேற்கோள்களைக்கொண்ட பகுதிகளில் காணப்படுகிறது. தி எம்ஃபாட்டிக் டயக்லாட் (1864) யெகோவா என்ற பெயரை 18 தடவைகள் கொண்டிருக்கிறது. குறைந்த பட்சம் 38 வேறு மொழிகளிலும் கிறிஸ்தவ கிரேக்க வேத எழுத்துக்களின் மொழிபெயர்ப்புகள் இந்தத் தெய்வீகப் பெயரை அந்தந்த மொழிக்குரிய உருவமைப்பில் பயன்படுத்துகின்றன.

இயேசு கிறிஸ்து தம்முடைய பிதாவின் பெயரின்பேரில் வைத்த அழுத்தம் அவர்தாமே அதைத் தாராளமாய்ப் பயன்படுத்தினாரென உணர்த்திக் காட்டுகிறது. (மத். 6:9; யோன் 17:6, 26) பொ.ச. நான்காம் நூற்றாண்டு ஜெரோமின் பிரகாரம், அப்போஸ்தலன் மத்தேயு தன் சுவிசேஷத்தை முதல் எபிரெயுவில் எழுதினான், மேலும் இந்தச் சுவிசேஷத்தில் எபிரெய வேத எழுத்துக்களிலிருந்து தெய்வீகப் பெயரைக்கொண்டுள்ள பல பகுதிகள் மேற்கோள்களாக எடுத்துக் குறிப்பிட்டுள்ளன. கிறிஸ்தவ கிரேக்க வேத எழுத்துக்களின் மற்ற எழுத்தாளர்கள் கிரேக்க செப்டுவஜின்ட்டிலிருந்து (எபிரெய வேத எழுத்துக்களை கிரேக்குக்குத் திருப்பின மொழிபெயர்ப்பு, ஏறக்குறைய பொ.ச.மு. 280-ல் தொடங்கினது) மேற்கோள்கள் எடுத்துக் குறிப்பிட்டனர். பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள இதன் உண்மையான துண்டுப் பகுதிகள் காட்டுகிறபடி இதன் பூர்வப் பிரதிகள் இந்தத் தெய்வீகப் பெயரை எபிரெய எழுத்துக்களில், கொண்டிருந்தன.

ஜியார்ஜியா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜியார்ஜ் ஹோவர்ட் எழுதினதாவது: “டெட்ரக்ராம் [கடவுளுடைய பெயருக்குரிய நான்கு எபிரெய எழுத்துக்கள்] பூர்வ சர்ச்சின் வேத எழுத்துக்களை உண்டுபண்ணின கிரேக்க பைபிளின் பிரதிகளில் இன்னும் எழுதப்பட்டதால், பு[திய] ஏ[ற்பாடு] எழுத்தாளர்கள் வேத எழுத்திலிருந்து மேற்கோள்கள் எடுத்துக் குறிப்பிட்டபோது, இந்த டெட்ரக்ராமை பைபிளின் மூலவாக்கியத்தில் பாதுகாத்துவைத்தனரென்று நம்புவது நியாயமாயிருக்கிறது.”—பைபிள் இலக்கிய பத்திரிகை, மார்ச் 1977, பக். 77.

சில வசனங்கள் ஏன் விடப்பட்டதுபோல் தெரிகிறது?

சில மொழிபெயர்ப்புகளில் காணப்படுகிற இந்த வசனங்கள், கிடைக்கக்கூடிய மிகப் பூர்வ பைபிள் கையெழுத்துப்பிரதிகளில் இல்லை. தி நியு இங்கிலிஷ் பைபிள் மற்றும் கத்தோலிக் ஜெருசலெம் பைபிள் போன்ற மற்ற நவீன மொழிபெயர்ப்புகளுடன் ஒத்துப் பார்க்கையில், மற்ற மொழிபெயர்ப்பாளர்களும் சந்தேகத்திலிருக்கும் இந்த வசனங்கள் பைபிளுக்குரியவையல்லவென கண்டறிந்திருப்பதைக் காட்டுகிறது. சில சந்தர்ப்பங்களில், அவை பைபிளின் மற்றொரு பாகத்திலிருந்து எடுத்து ஒரு வேதப்பாரகன் நகல் எடுக்கும் மூலவாக்கியத்தில் கூட்டப்பட்டது.

ஒருவர் இவ்வாறு சொன்னால்—

‘நீங்கள் உங்கள் சொந்த பைபிளைக் கொண்டிருக்கிறீர்கள்’

நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்:  ‘நீங்கள் பைபிளின் எந்த மொழிபெயர்ப்பை வைத்திருக்கிறீர்கள்? (உங்கள் மொழியிலுள்ள பலவற்றை வரிசையாகக் குறிப்பிடுங்கள்) . . . இதுவா? பல மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன.’ பின்பு மேலும் சொல்லலாம்:  ‘உங்களுக்கு விருப்பமான எந்த மொழிபெயர்ப்பையாயினும் பயன்படுத்த நான் மகிழ்ச்சிகொள்கிறேன். ஆனால் நான் புதிய உலக மொழிபெயர்ப்பை முக்கியமாய் விரும்புவதன் காரணத்தை அறிய நீங்கள் விரும்பலாம். இது நவீன, விளங்கிக்கொள்ளத்தக்க மொழிநடையில் இருப்பதாலும், மேலும் இதன் மொழிபெயர்ப்பாளர்கள் மூல பைபிள் மொழிகளிலிருப்பதைவிட்டு விலகாமல் கடைப்பிடித்திருப்பதாலுமேயாகும்.’

அல்லது இவ்வாறு சொல்லலாம்:  ‘நீங்கள் சொல்வது உங்கள் வீட்டில் நிச்சயமாக ஒரு பைபிள் இருக்குமென்று நான் உணரும்படி செய்கிறது. எந்தப் பைபிள் மொழிபெயர்ப்பை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள்? . . . அதைக் கொண்டுவருவீர்களா?’ பின்பு மேலும் சொல்லலாம்:  ‘நாம் எந்த மொழிபெர்ப்பைப் பயன்படுத்தினாலும் சரி, நம்மெல்லாருக்கும் யோன் 17:3-ல், இயேசு, நாம் மனதில் வைக்கவேண்டிய முக்கியமான காரியத்தை அறிவுறுத்தினார், இங்கே உங்கள் சொந்த பைபிளில் நீங்கள் காண்கிறபடி . . . ’

பயன்படுத்தக்கூடிய இன்னொரு முறை:  ‘பைபிளின் மொழிபெயர்ப்புகள் பல இருக்கின்றன. ஒத்துப் பார்ப்பதற்கும் வேதவசனங்களின் உண்மையான உட்பொருளை விளங்கிக்கொள்ள மாணாக்கருக்கு உதவிசெய்வதற்கும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைப் பயன்படுத்தும்படி எங்கள் சங்கம் ஊக்மூட்டுகிறது. உங்களுக்குப் பெரும்பாலும் தெரிந்திருக்கிறபடி, பைபிள் முதன்முதல் எபிரெயுவிலும், அரமேயிக்கிலும், கிரேக்கிலும் எழுதப்பட்டது. ஆகையால் அதை நம்முடைய மொழியில் ஆக்குவதற்கு மொழிபெர்ப்பாளர்கள் செய்திருப்பதை நாம் நன்றியோடு மதிக்கிறோம். நீங்கள் எந்தப் பைபிள் மொழிபெர்ப்பைப் பயன்படுத்துகிறீர்கள்?’

கூடுதலான யோ னை: ‘நீங்கள் கடவுளுடைய வார்த்தையை நேசிக்கிற ஒருவரெனத் தெரிகிறது. ஆகையால் புதிய உலக மொழிபெயர்ப்புக்கும் மற்ற மொழிபெயர்ப்புகளுக்குமிடையேயுள்ள பெரிய வேறுபாடுகளில் ஒன்று என்னவென அறிவதில் நீங்கள் அக்கறைகொள்வீர்களென்று நான் நிச்சயமாயிருக்கிறேன். இது வேத எழுத்துக்களில் பேசப்பட்டுள்ள மிக அதிக முக்கியமான ஆளின் பெயர் உட்பட்டது. அவர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?’ பின்பு மேலும் சொல்லலாம்:  (1) ‘அவருடைய சொந்தப் பெயர் பைபிளில் மூல எபிரெயுவில் ஏறக்குறைய 7,000 தடவைகள்—வேறு எந்தப் பெயரைப்பார்க்கிலும் மேலாக—தோன்றுவதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?’ (2) ‘கடவுளுடைய சொந்தப் பெயரை நாம் பயன்படுத்துகிறோமா இல்லையா என்பது என்ன வேறுபாட்டை உண்டுபண்ணுகிறது? உங்களுக்குப் பெயர் தெரியாத, உண்மையில் மிக நெருங்கிய நண்பர் எவராவது உண்டா? . . . கடவுளுடன் தனிப்பட்ட நெருங்கிய உறவு நமக்கு வேண்டுமென்றால், அவருடைய பெயரை அறிவது ஒரு முக்கிய தொக்கமாகும். யோன்17:3, 6-ல் இயேசு சொன்னதைக் கவனியுங்கள். (சங். 83:17)’