பூசை (மாஸ்)
பூசை (மாஸ்)
சொற்பொருள் விளக்கம்: ரோமன் கத்தோலிக்கச் சர்ச்சின் பரிசுத்த சபை சடங்குகளால் கூறப்பட்டபடி, பூசை (மாஸ்) ஆனது “—ஒரு பலி, அதில் சிலுவையின் பலி நீடித்திருக்கச் செய்யப்படுகிறது;—‘என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்’ என்று சொன்ன கர்த்தரின் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் நினைவுகூருதல். (லூக்கா 22:19);—ஒரு பரிசுத்தப் பெருவிருந்து, அதில் கர்த்தரின் உடல் மற்றும் இரத்தத்தின் நற்கருணையின்மூலம், கடவுளின் ஜனங்கள் பஸ்கா பலியின் நன்மைகளில் பங்குகொள்கிறார்கள், கிறிஸ்துவின் இரத்தத்தின்மூலம் எல்லாக் காலத்துக்கும் ஒரே தடவையாகக் கடவுள் மனிதனுடன் செய்திருக்கும் அந்தப் புதிய உடன்படிக்கையைப் புதுப்பிக்கிறார்கள், மேலும் விசுவாசத்திலும் நம்பிக்கையிலும் பிதாவின் ராஜ்யத்தில் மறுமைக்குரிய பெரும்விருந்தை முன்குறிக்கிறார்கள் மற்றும் எதிர்பார்க்கிறார்கள், ‘அவருடைய வருகை வரையில்’ கர்த்தரின் மரணத்தை அறிவிக்கிறார்கள்.” (யூக்கரிஸ்டிக்கம் மிஸ்டீரியம், மே 25, 1967) இது கடைசி இராப்போஜனத்தில் இயேசு கிறிஸ்து செய்ததைத் தாங்கள் விளங்கிக்கொண்டபடி செய்யும் கத்தோலிக்க சர்ச்சின் முறையாகும்.
அப்பமும் திராட்ச மதுவும் கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் உண்மையில் மாற்றப்படுகின்றனவா?
ஜூன் 30, 1968 அன்று “விசுவாசத்தின் பயபக்தியான அறிவிப்பில்” போப் பால் VI பின்வருமாறு அறிவித்தார்: “கடைசி இராப்போஜனத்தின்போது கர்த்தரால் தெய்வப் பண்புள்ளதாக்கப்பட்ட அப்பமும் திராட்ச மதுவும் நமக்காகச் சிலுவையில் பலிசெலுத்தப்படவிருந்த அவருடைய உடலாகவும் அவருடைய
இரத்தமாகவும் மாற்றப்பட்டதுபோல், குருவால் தெய்வப்பண்புள்ளதாக்கப்பட்ட அப்பமும் திராட்ச மதுவும் 2பரலோகத்தில் மகிமையாய்ச் சிங்காசனத்தில் வீற்றிருக்கச் செய்யப்பட்டுள்ள கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாற்றப்படுகின்றனவென நாங்கள் நம்புகிறோம், மேலும் தெய்வப்பண்பாக்கப்பட்டதற்கு முன்பிருந்ததுபோல் பின்பும் அதே முறையில் நம்முடைய உணர்வுகளுக்குத் தோன்றும் அந்த மூலப் பொருட்களின் தோற்றத்தின்கீழ், கர்த்தரின் விளங்காப் புதிரான வந்திருக்கை, உண்மையும் மெய்ம்மையும் உள்ளபடியானதுமான வந்திருக்கையென நாங்கள் நம்புகிறோம். . . . இந்த விளங்காப் புதிரான மாற்றத்தைச் சர்ச் வெகு பொருத்தமாகவே வேறு பொருள்மாற்றம் என்றழைக்கிறது.” (அதிகாரப்பூர்வ கத்தோலிக் போதகங்கள்—நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து, உவில்மிங்டன், N.C.; 1978, அமந்தா G. உவாட்லிங்டன், பக். 411) பரிசுத்த வேத எழுத்துக்கள் இந்த நம்பிக்கையோடு ஒத்திருக்கின்றனவா?“இது என் சரீரமாயிருக்கின்றது,” “இது என் இரத்தமாயிருக்கின்றது,” என்று தாம் சொன்னபோது இயேசு பொருள்கொண்டது என்ன?
மத். 26:26-29, கத். பை.: “அப்படியே அவர்கள் அசனம் பண்ணிக்கொண்டிருக்கையில், யேசுநாதர் அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்துப் பிட்டுத் தம்முடைய சீஷர்களுக்குக் கொடுத்து: இதை வாங்கிப் புசியுங்கள், இது என் சரீரமாயிருக்கின்றது என்றார். பின்பு அவர் பாத்திரத்தையும் எடுத்துத் தோத்திரஞ்சொல்லி, அதை அவர்களுக்குக் கொடுத்து; நீங்கள் எல்லாரும் இதிலே பானஞ்செய்யுங்கள். ஏனெனில் இது பாவங்களின் பொறுத்தலினிமித்தம், அநேகருக்காகச் சிந்தப்படும் புதிய உடன்படிக்கையின் என் இரத்தமாயிருக்கின்றது. இதுமுதல், இனி என் பிதாவின் இராச்சியத்திலே உங்களோடுகூட நவமான திராட்சப்பழ இரசத்தை நான் பானம்பண்ணும் நாள் வரைக்கும், இதை நான் பானம் பண்ணுவதில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.”
“இது என் சரீரமாயிருக்கின்றது,” “இது என் இரத்தமாயிருக்கின்றது,” என்றக் கூற்றுகளைக் குறித்துப் பின்வருபவை கவனிக்கத்தக்கவை: MO மொழிபெயர்ப்பில், “இது என் சரீரத்தைக் குறிக்கிறது,” “இது என் இரத்தத்தைக் குறிக்கிறது என்றிருக்கிறது.” (தடித்த எழுத்து சேர்க்கப்பட்டது.) NW மொழிபெயர்ப்பிலும் அவ்வாறே இருக்கிறது. LEF-ல் “இது என் சரீரத்துக்குச் சின்னமாயிருக்கிறது,” “இது என் இரத்தத்துக்குச் சின்னமாயிருக்கிறது,” என்று மொழிபெயர்த்திருக்கிறது. (தடித்த எழுத்து சேர்க்கப்பட்டது.) இந்த மொழிபெயர்ப்புகள், பல கத்தோலிக்கப் பதிப்புகளில், சூழமைவில், 29-ம் வசனத்தில் சொல்லியிருப்பதோடு பொருந்துகின்றன. கத். வுல்காத்தாவில்: “இதுமுதல், இனி என் பிதாவின் இராச்சியத்திலே உங்களோடுகூட நவமான திராட்சப்பழ இரசத்தை நான் பானம்பண்ணும் நாள் வரைக்கும், இதை நான் பானம் பண்ணுவதில்லை,” என்றிருக்கிறது. (சாய்வெழுத்து சேர்க்கப்பட்டது.) CC, NAB, Dy ஆகியவையும் இயேசு அந்தப் பாத்திரத்தில் இருந்ததையே “திராட்சப்பழ ரசம்” எனக் குறிப்பிட்டார், மேலும் “இது என் இரத்தமாயிருக்கின்றது,” என்று இயேசு சொன்னபின்பே அவ்வாறு குறிப்பிட்டாரெனக் காட்டுகின்றன.
“
இது என் சரீரமாயிருக்கின்றது,” “இது என் இரத்தமாயிருக்கின்றது,” என்றக் கூற்றுகளை வேத எழுத்துக்களில் பயன்படுத்தியுள்ள மற்ற உயிர்ப்புத்தொனி வாய்ந்த மொழிநடையின் துணைகொண்டு கவனித்துப் பாருங்கள். இயேசு, “நான் உலகத்துக்கு ஒளியாயிருக்கிறேன்,” “நானே ஆடுகளுக்கு வாசல்,” “நான் மெய்யான திராட்சச்செடி,” என்றும் சொன்னார். (அருளப்பர் (யோவான்) 8:12; 10:7; 15:1, கத்.பை.) இந்தக் கூற்றுகள் எதுவும் அற்புதமான பொருள் மாற்றத்தை மறைமுகமாய்க் குறிப்பிடவில்லையல்லவா?1 கொரிந்தியர் 11:25-ல் (கத்.பை.) அப்போஸ்தலன் பவுல் இந்தக் கடைசி இராப்போஜனத்தைப்பற்றி எழுதி இதே எண்ணங்களை சிறிது வேறுபட்டச் சொற்களில் விளக்கினான். பாத்திரத்தைக் குறித்து, “நீங்கள் எல்லாரும் இதிலே பானஞ்செய்யுங்கள். ஏனெனில் இது . . . என் இரத்தமாயிருக்கின்றது,” என்று சொல்வதாக இயேசுவின் வார்த்தைகளை எடுத்துக் குறிப்பிடுவதற்குப் பதில், அவன் பின்வருமாறு சொற்களை அமைத்துக் கூறினான்: “இந்தப் பாத்திரம் என் இரத்தத்தில் புதிய உடன்படிக்கையாயிருக்கின்றது.” நிச்சயமாகவே, இது, அந்தப் பாத்திரம் எவ்வாறோ அற்புதமாய்ப் புதிய உடன்படிக்கையாக மாற்றமடைந்துவிட்டதென குறிக்கவில்லை. அந்தப் பாத்திரத்திலிருந்தது, அதைக்கொண்டு புதிய உடன்படிக்கை சட்டப்படி செல்லத்தக்கதாக்கப்பட்ட இயேசுவின் இரத்தத்துக்குச் சின்னமாயிருந்தது என்ற முடிவுக்கு வருவது பகுத்தறிவுக்கு மேலும் பொருத்தமாயிருக்கிறதல்லவா?
யோவான் 6:53-57-ல் தாம் சொன்ன கூற்றில் இயேசு கருதினதென்ன?
“யேசுநாதர் அவர்களை நோக்கி: மெய்யாகவே, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனுமகனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால், உங்களிடத்தில் ஜீவனைக் கொண்டிருக்கமாட்டீர்கள். என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவியம் உண்டு, கடைசி நாளிலே நான் அவனை உயிர்ப்பிப்பேன். ஏனெனில் என் மாம்சம் மெய்யாகவே போஜனமும், என் இரத்தம் மெய்யாகவே பானமுமாயிருக்கின்றது. என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவன் என்னில் வசிக்கிறான், நானும் அவனில் வசிக்கிறேன். சீவியராகிய பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் சீவிக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னால் சீவிப்பான்.”—அருளப்பர் (யோவான்) 6:53-57, கத்.பை.
அவர்கள் சொல்லர்த்தமாய் இயேசுவின் மாம்சத்தைச் சாப்பிட்டு அவருடைய இரத்தத்தைக் குடிக்கவேண்டுமென்று பொருள்கொள்வதாக இதைப் புரிந்துகொள்ள வேண்டுமா? அப்படியானால் இயேசு, கடவுள் மோசயின் மூலம் இஸ்ரவேலருக்குக் கொடுத்த நியாயப்பிரமாணத்தை மீறும்படி ஊக்குவிப்பவராக இருப்பார். அந்த நியாயப்பிரமாணம் எந்த வகையான இரத்தத்தையும் புசிக்கக்கூடாதென கட்டளையிட்டது. (லேவி. 17:10-12) அத்தகைய காரியத்தை ஆதரிப்பதற்கு நேர்மாறாக, இயேசு, நியாயப்பிரமாணத்தின் எந்தக் கட்டளையையும் மீறுவதைக் கண்டித்துப் பேசினார். (மத். 5:17-19) ஆகையால், இயேசுவின் பரிபூரண மனித பலியின் விலைமதிப்பில் விசுவாசம் காட்டுவதால், அடையாளக்குறிப்பான கருத்தில் சாப்பிடுவதும் குடிப்பதுமே இயேசுவின் மனதில் இருந்திருக்கவேண்டும்.—யோவான் 3:16; 4:14; 6:35, 40 ஆகியவற்றை ஒத்துப் பாருங்கள்.
இயேசு, தம்முடைய சீஷர்கள் தம் மரணத்தை நினைவுகூருதலைமட்டுமேயல்லாமல் தம்முடைய பலியை உண்மையில் திரும்பப் புதுப்பிக்கும் ஒரு சடங்குமுறையையும் கைக்கொண்டுவர வேண்டுமென கட்டளையிட்டாரா?
வாட்டிகன் II-ன் பத்திரங்களின் பிரகாரம்: “நம்முடைய மீட்பர், தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில், அந்தக் கடைசி இராப்போஜனத்தின்போது, தம்முடைய உடலின் மற்றும் இரத்தத்தின் இராப்போஜன சடங்குக்குரிய பலியைத் தொடங்கிவைத்தார். சிலுவையின் பலியை நீடித்திருக்கச் செய்ய அவர் இவ்வாறு செய்தார் . . . ”—(நியு யார்க், 1966), W. M. அபட் S.J., பக். 154; தடித்த எழுத்து சேர்க்கப்பட்டது.
தி கத்தோலிக் என்ஸைக்ளோபீடியா கூறுவதாவது: “பூசையை ‘உண்மையான உகந்த பலியாகக்’ கருதவேண்டுமென சர்ச் எண்ணுகிறது . . . எனினும், நம்முடைய கோட்பாட்டின் முக்கிய தோற்றுமூலம் பாரம்பரியமே, இது மிகப் பூர்வக்காலங்கள் முதற்கொண்டு பூசையின் பலியின் வேண்டிப்பெறும் மதிப்பை அறிவிக்கிறது.”—(1913), புத். X, பக். 6, 17.
“என் நினைப்புக்காக இதைச் செய்யுங்கள்,” என்று இயேசுதாமே சொன்னார். (லூக்கா 22:19; 1 கொரி. 11:24, கத்.பை.) லூக்கா 22:19-ல் Kx மற்றும் Dy-ல்: “என் நினைவுவிழாவாக இதைச் செய்யுங்கள்,” என்றிருக்கிறது. NAB-ல் “என்னை நினைவுகூருதலாக இதைச் செய்யுங்கள்,” என்றிருக்கிறது. அந்தக் கடைசி இராப்போஜனத்தில் தாம் செய்தது தம்மைப் பலிசெலுத்தினது என்றோ அல்லது அவருடைய சீஷர்கள் தம்முடைய பலியைப் புதுப்பிக்கவேண்டுமென்றோ இயேசு சொல்லவில்லை.
எபி. 9:25-28, கத்.பை.: “[யூதப்] பிரதான குரு அந்நிய இரத்தத்தோடு வருஷந்தோறும் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிக்கிறதுபோல், அடிக்கடி தம்மைப் பலியிடும்படி அவர் பிரவேசிக்கிறதில்லை. அல்லாவிட்டால் உலக ஆரம்ப முதல் அவர் அடிக்கடி பாடுபடவேண்டியதாயிருக்கும். இப்போதோவெனில் இந்தக் கடைசிக் காலங்களில் தம்மைத்தாமே பலியிட்டு, பாவத்தை நிர்மூலமாக்கும்படி ஒரேதரம் தோன்றினார். மனிதர்கள் ஒரேதரம் மரிக்கவும் அதன்பின் நடுத்தீர்க்கப்படவும் தீர்மானிக்கப்பட்டிருப்பது எப்படியோ, அப்படியே கிறீஸ்துநாதரும் அநேகருடைய பாவங்களை நிர்மூலமாக்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டார்.” [தடித்த எழுத்து சேர்க்கப்பட்டது.]
இதெல்லாம் வெறுமென “விளங்கிக்கொள்ளமுடியாதப் புதிரா”?
தெய்வீகப் புதைமறைவான செய்திகளை, அல்லது பரிசுத்த இரகசியங்களை பைபிள் நிச்சயமாகவே குறிப்பிடுகிறது. ஆனால் இவற்றில் எதுவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ள வேதப்பூர்வ சத்தியங்களோடு முரண்படுகிறதில்லை. வேத எழுத்துக்களுக்கு மேலாகத் தங்கள் பாரம்பரியங்களை வைத்தவர்களைக் குறித்து, இயேசு பின்வருமாறு கூறினார்: “கள்ள ஞானிகளே! உங்களைக் குறித்து இசையாஸென்பவர் நன்றாய்த் தீர்க்கதரிசனஞ் சொல்லியிருக்கிறார். அதாவது: இந்த ஜனம் உதடுகளால் என்னை ஸ்துதிக்கிறது. அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாயிருக்கின்றது. மனிதருடைய போதகங்களையும், கற்பனைகளையும் போதித்து, என்னை வியர்த்தமாய் வணங்குகிறார்கள் என்பதே.”—மத். 15:7-9, கத்.பை.
இந்த நினைவுகூருதலை ஒருவேளை ஒவ்வொரு நாளும் அல்லது ஒவ்வொரு வாரமும் கைக்கொள்ள வேண்டுமென்று இயேசு கருதினாரா?
அடிப்படை மதப்போதக வினாவிடையில் சொல்லியிருப்பதாவது: “ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையிலும் சட்டப்படியான திருநாளிலும் பூசையில் பங்குகொள்வது கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் விசேஷித்தக் கடமைகளில்” அடங்கியிருக்கிறது. (பாஸ்டன், 1980, பக். 21) “விசுவாசிகள் பூசையில் பங்குகொள்ளும்படியும் அடிக்கடி, ஒவ்வொரு நாளுங்கூட இராப்போஜனத்தைப் பெறும்படியும் உண்மையில் ஊக்கப்படுத்தப்படுகின்றனர்.”—வயதுவந்தவர்களுக்கு ஒரு கத்தோலிக்க மதபோதனை வினாவிடை, சுருக்கப்பட்ட பதிப்பு (ஹன்டிங்டன், இன்ட்.; 1979), பக். 281.
‘அப்பத்தைப் பிட்பதைப்’ பற்றிய வேதவசனக் குறிப்புகள் எல்லாம் கிறிஸ்துவின் மரணத்தை நினைவுகூரும் ஆசரிப்பைக் குறித்தனவா? (அப். 2:42, 46; 20:7, கத்.பை.) இயேசு கடைசி இராப்போஜனத்தில் மட்டுமல்ல முன்னால் ஒரு சாப்பாட்டு சமயத்தில் உணவு பகிர்ந்துகொள்ளப்படுகையிலும் ‘அப்பம் பிட்டிருக்கிறார்.’ (மாற்கு 6:41; 8:6) அந்தக் காலத்தில் யூதர்கள் பயன்படுத்தின அப்பம் இன்று பலர் பழக்கப்பட்டுள்ள அப்பத்தைப்போல் இல்லை. அதைச் சாப்பிடுகையில், அவர்கள் பெரும்பாலும் ஒரு துண்டைப் பிட்பார்கள் அல்லது கிழித்தெடுப்பார்கள்.
தம்முடைய மரணத்தின் நினைவுகூருதலை எத்தனை தடவைகள் கைக்கொள்ளவேண்டுமென இயேசு திட்டவட்டமாய்ச் சொல்லவில்லை. எனினும், அவர் அதை யூதப் பஸ்காவின் நாளில் தொடங்கிவைத்தார், அவருடைய சீஷர்களுக்குள் அந்தப் பஸ்காவின் இடத்தை கிறிஸ்துவின் மரணத்தை நினைவுகூருதல் ஏற்றது. அந்தப் பஸ்கா ஆண்டுக்கொருமுறை ஆசரிக்கும் நிகழ்ச்சி, நிசான் 14-ல் ஆசரிக்கப்பட்டது. அவ்வாறே, யூதரின் புளிப்பில்லா அப்பப்பண்டிகை, வாரங்களின் (பெந்தெகொஸ்தே) பண்டிகை, கூடாரப் பண்டிகை, அல்லது சேர்ப்புக்கால பண்டிகை, மற்றும் பிராயச்சித்த நாள் ஆகியவை யாவும் ஆண்டுக்கு ஒருமுறையே கடைப்பிடிக்கப்பட்டன.
மாஸ் ஓதுதல் உத்தரிக்கும் ஸ்தலத்திலுள்ள ஆத்துமாக்களுக்கு விடுதலையைக் கொண்டுவருகிறதா?
கிறிஸ்துவின் போதகம்—வயதுவந்தவர்களுக்கு ஒரு கத்தோலிக்க மதபோதனை வினாவிடை கூறுவதாவது: “‘உத்தரிக்கும் ஸ்தலம்’ என்ற சொல் பைபிளில் இல்லை, உத்தரிக்கும் ஸ்தலத்தைப்பற்றிய கோட்பாடும் அதில் தெளிவாய்க் கற்பிக்கப்படுகிறதில்லை. . . . பிதாக்களின் வேலைகள், உத்தரிக்கும் ஸ்தலம் இருப்பதைப்பற்றிமட்டுமல்லாமல், மரித்த விசுவாசிகள் உயிருள்ளோரின் ஜெபங்களால், முக்கியமாய் பூசையின் பலியால் உதவிசெய்யப்படலாமென்பதற்கும் பல குறிப்புகளைக் கொண்டிருக்கின்றன.”—பக். 347, 348.
மரித்தோரின் நிலைமையைப்பற்றி, பரிசுத்த வேத எழுத்துக்கள் பின்வருமாறு சொல்கின்றன: “உயிருள்ளோர் தாங்கள் மரிப்பார்கள் என்றாவது அறிந்திருக்கின்றனர், மரித்தோரோ ஒன்றும் அறியார்.” (பிர. 9:5, JB) “பாவஞ்செய்கிற ஆத்துமாவே [“ஆத்துமா,” Kx; “மனிதன்,” JB] சாகும்.” (எசே. 18:4, Dy) (மேலும் பக்கங்கள் 100-102-ல், “மரணம்,” என்ற தலைப்பின்கீழ்ப் பாருங்கள்.)