Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மகா பாபிலோன்

மகா பாபிலோன்

மகா பாபிலோன்

சொற்பொருள் விளக்கம்: பொய்மத உலகப் பேரரசு, இது, ஒரே உண்மையான கடவுளாகிய, யெகோவாவின் உண்மையான வணக்கத்துக்கு ஒத்திராத போதகங்களையும் பழக்கச் செயல்களையும் கொண்டுள்ள எல்லா மதங்களும் அடங்கியது. நோவாவின் நாளில் ஏற்பட்ட ஜலப்பிரளயத்தைப் பின்தொடர்ந்து, பொய்மதம் பாபேலில் (பின்னால் பாபிலோன் என அறியப்பட்டது) அதன் தொடக்கத்தைக் கொண்டது. (ஆதி. 10:8-10; 11:4-9) காலப்போக்கில், பாபிலோனிய மத நம்பிக்கைகள் மற்றும் பழக்கச் செயல்கள் பல நாடுகளுக்குப் பரவின. ஆகவே பொய்மதம் முழுவதற்கும் மகா பாபிலோன் என்பது பொருத்தமான பெயராயிற்று.

வெளிப்படுத்துதலில் குறிப்பிட்டிருக்கும் மகா பாபிலோனை அடையாளங் கண்டுகொள்வதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?

அது பூர்வ பாபிலோனாக இருக்க முடியாது. வெளிப்படுத்துதல் பொ.ச. முதல் நூற்றாண்டின் இறுதியில் எழுதப்பட்டது. மேலும் நம்முடைய நாள் வரையிலுங்கூட நடைபெறும் சம்பவங்களையும் விவரிக்கிறது. தி என்ஸைக்ளோபீடியா அமெரிக்கானா பின்வருமாறு சொல்கிறது: “அந்த நகரம் [பாபிலோன்] மகா கோரசுவின் தலைமையில் பெர்சியர்களால் கி.மு. 539-இல் கைப்பற்றப்பட்டது. பின்னால் அலெக்ஸாந்தர் பாபிலோனைத் தன்னுடைய கிழக்குப் பேரரசின் தலைநகராக்கத் திட்டமிட்டான், ஆனால் அவனுடைய மரணத்துக்குப்பின் பாபிலோன் படிப்படியாக அதன் முக்கியத்துவத்தை இழந்தது.” (1956, புத். III, பக். 7) இன்று இந்த நகரம் குடியிருப்பில்லா இடிபாடாக இருக்கிறது.

வெளிப்படுத்துதலின் அடையாளக் குறியீட்டில், மகா பாபிலோன் மற்ற ராஜாக்களை ஆளும் “மகா நகரம்,” ஒரு “ராஜ்யம்” என குறிப்பிடப்பட்டிருக்கிறது. (வெளி. 17:18) ஒரு நகரத்தைப்போல் அது தன்னில் பல அமைப்புகளைக் கொண்டிருக்கும்; மேலும் மற்ற ராஜாக்களைத் தன் ஆதிக்கத்தில் உட்படுத்தும் ஒரு ராஜ்யத்தைப்போல், அது சர்வதேச அளவிலானது. அது அரசியல் ஆட்சியாளரோடு உறவுகொள்கிறதெனவும், வியாபாரிகளின் செல்வத்திற்குப் பெரும் உடனுதவியளிக்கிறதெனவும், அதேசமயத்தில் அதுதானே “பேய்களுடைய குடியிருப்பாகி”யிருக்கிற மற்றும் “தீர்க்கதரிசிகளையும் பரிசுத்தவான்களையும்” துன்புறுத்துகிற ஒரு மூன்றாவது தொகுதியெனவும் விவரிக்கப்பட்டுள்ளது.—வெளி. 18:2, 9-17, 24.

பூர்வ பாபிலோன் அதன் மதத்துக்கும் யெகோவாவை எதிர்த்துநிற்பதற்கும் பெயர்போனது

ஆதி. 10:8-10: “நிம்ரோது . . . கர்த்தருக்கு [யெகோவாவுக்கு] முன்பாக பலத்த வேட்டைக்காரனாயிருந்தான்; . . . பாபேல் [பின்னால் பாபிலோன் என்று அறியப்பட்டது] . . . அவன் ஆண்ட ராஜ்யத்திற்கு ஆதி ஸ்னங்கள்.”

தானி. 5:22, 23: “நீரோவென்றால் [பாபிலோனின் ராஜாவாகிய பெல்ஷாத்சார்] . . . பரலோகத்தின் ஆண்டவருக்கு விரோதமாக உம்மை உயர்த்தினீர்; . . . தம்முடைய கையில் உமது சுவாசத்தை வைத்திருக்கிறவரும், உமது வழிகளுக்கு எல்லாம் அதிகாரியுமாகிய தேவனை நீர் மகிமைப்படுத்தாமல் காணாமலும் கேளாமலும் உணராமலும் இருக்கிற வெள்ளியும் பொன்னும் வெண்கலமும் இரும்பும் மரமும் கல்லுமாகிய தேவர்களைப் புகழ்ந்தீர்.”

பூர்வ ஆப்பு வடிவ செதுக்கப்பட்ட எழுத்துக்களில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறது: “மொத்தமாக பிரதான கடவுட்களின் 53 ஆலயங்களும், மர்தக்கின் 55 கோயில்களும், பூமிக்குரிய தேவர்களுக்காக 300 கோயில்களும், வானுலக தேவர்களுக்காக 600 கோயில்களும், இஷ்டார் தேவதைக்கு 180 பலிபீடங்களும், நெர்கால் மற்றும் ஆதாத் தெய்வங்களுக்கு 180 பலிபீடங்களும், மேலும் வேறுபட்ட மற்றத் தெய்வங்களுக்கு 12 பலிபீடங்களும் பாபிலோனில் இருக்கின்றன.”—சரித்திரமாயுள்ள பைபிள் என்பதில் மேற்கோளாகக் குறிப்பிட்டுள்ளது (நியு யார்க், 1964), W. கெல்லர், பக். 301.

தி என்ஸைக்ளோபீடியா அமெரிக்கானா பின்வருமாறு குறிப்பிடுகிறது: “சுமேரிய நாகரிகம் [பாபிலோனியாவின் ஒரு பாகமாக இருந்தது] ஆசாரியர்களின் ஆதிக்கத்துக்குட்பட்டிருந்தது; ராஜ்யத்தின் தலைவரான லூகல் (சொல்லர்த்தமாக ‘பெரிய மனிதன்’) தேவர்களின் பிரதிநிதி.”—(1977), புத். 3, பக். 9.

ஆகையால், நியாயமாகவே, வெளிப்படுத்துதலில் குறிப்பிட்டுள்ள மகா பாபிலோன் மதசம்பந்தமானது. ஒரு நகரமாகவும் பேரரசாகவும் இருப்பதால், இது ஒரு மதத்தொகுதிக்கு மட்டுப்படுத்தப்படுவதில்லை. மாறாக, உண்மையான கடவுளாகிய யெகோவாவுக்கு எதிரான, எல்லா மதங்களையும் உள்ளடக்குகிறது.

பூர்வ பாபிலோனிய மதக்கோட்பாடுகள் மற்றும் பழக்கங்கள் உலகமுழுவதிலுமுள்ள மதங்களில் காணப்படுகின்றன

“எகிப்து, பெர்சியா மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகள் பாபிலோனிய மதத்தின் செல்வாக்கை உணர்ந்தன . . . பூர்வ கிரேக்க புராணக் கதைகளிலும் கிரேக்க வழிபாட்டு மரபிலும் இருக்கும் ஆழ்ந்த புறமதக் கலப்படம் கல்விமான்களால் மேலுமான எந்தக் குறிப்பும் தேவையில்லை என பொதுவாக ஒப்புக்கொள்ளப்படுகிறது. இந்தப் புறமத மூலக்கூறுகள் பெரும்பாலும் குறிப்பாக பாபிலோனிலிருந்து வந்தவை.”—பாபிலோனியா மற்றும் அசீரியாவின் மதம் (பாஸ்டன், 1898), M. ஜஸ்ட்ரோ, இளை., Jr.,பக். 699, 700.

அவர்களுடைய கடவுட்கள்: அங்கே திரித்துவக் கடவுட்கள் இருந்தனர், மேலும் இயற்கையின் பற்பல சக்திகளைப் பிரதிநிதித்துவம் செய்பவையும் மற்றும் மனிதவர்க்கத்தின் குறிப்பிட்ட செயல்களில் விசேஷித்த செல்வாக்கைச் செலுத்துபவையும் அவர்கள் தெய்வங்களுக்குள் இருந்தன. (பாபிலோனியா மற்றும் அசீரியாவின் மதம், நார்மன், ஓக்லா.; 1963, S. H. ஹூக், பக். 14-40) “பிளேட்டோவின் திரித்துவம், முற்பட்ட காலத்திற்குரிய மக்களின் பழைய திரித்துவங்களின் மறுசீரமைப்பே. இந்தக் காரணரீதியான தத்துவசாஸ்திர திரித்துவப் பண்புகள் கிறிஸ்தவ சர்ச்சுகளால் போதிக்கப்படும் மூன்று தெய்வீக ஆட்கள் என்பதைப் பிறப்பித்தன. . . . இந்தக் கிரேக்க தத்துவஞானியின் [பிளேட்டோவின்] தெய்வீகத் திரித்துவத்தின் கருத்து. . . . எல்லாப் பூர்வ [புற] மதங்களிலும் காணப்படக்கூடும்.”—நோவியா டிக்‍ஷனரி யூனிவேர்சல் (பாரிஸ், 1865-1870), M. லக்கேட்டர் பதிப்பித்தது, புத். 2, பக். 1467.

விக்கிரகங்களை உபயோகித்தல்: “[மெசொப்பொத்தாமியரின் மதத்தில்] வழிபாட்டு மரபிலும், தனிப்பட்ட வணக்கமுறையிலும் விக்கிரகம் மையப்பாகமாக இருந்தது. இத்தகைய விக்கிரகங்களுடைய மலிவான நகல்களின் பரவலான விநியோகம் இதை வெளிக்காட்டுகிறது. அடிப்படையாக, இந்த விக்கிரகத்தின் குறிப்பிட்ட அம்சங்களும், உபகரணங்களும் காணப்பட்டு, தகுந்த முறையில் பராமரிக்கப்படும்போது தெய்வம் அதில் குடியிருப்பதாகக் கருதப்பட்டது.”—பூர்வ மெசொப்பொத்தாமியா—மறைந்துபோன ஒரு நாகரீகத்தின் வர்ணனை (சிக்காகோ, 1964), A. L. ஓப்பஹீம், பக். 184.

மரணத்தைப் பற்றிய நம்பிக்கை: “[பாபிலோனின்] மக்களோ, மத சிந்தனையாளரான குருக்களோ உயிருக்குக் கொண்டுவரப்பட்ட ஒன்று முழுமையான அழிவைக் காணும் சாத்தியத்தை எதிர்ப்படவே இல்லை. மரணம் இன்னொரு விதமான உயிர்வாழ்க்கைக்கு ஒரு வழியாக இருந்தது.”—பாபிலோனின் மற்றும் அசீரியாவின் மதம், பக். 556.

ஆசாரியத்துவத்தின் நிலை: “மதகுரு மற்றும் பாமரமக்களுக்கிடையேயான தெளிவான வேறுபாடு [பாபிலோனிய] மதத்தின் சிறப்பியல்பு.”—என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா (1948), புத். 2, பக். 861.

ஜோதிடம், குறிசொல்லுதல், மந்திரம் மற்றும் சூனியம் ஆகியவற்றைப் பழக்கமாய் அனுசரித்தல்: சரித்திராசிரியராகிய A. H. சேய்ஸ் பின்வருமாறு எழுதுகிறார்: “பூர்வ பாபிலோனிய மதத்தில் . . . இயற்கையின் ஒவ்வொரு பொருளும், சக்தியும் அதன் ‘ஸி’-யை [zi] அல்லது ஆவியைக் கொண்டிருப்பதாகக் கருதப்பட்டது. அது ஷாமானின் அல்லது சூனிய-பாதிரியின் மந்திரச் செயல்களால் கட்டுப்படுத்தப்படக்கூடும்.” (தேசங்களின் சரித்திரம், நியு யார்க், 1928, புத். 1, பக். 96) “நட்சத்திரங்களின்மூலம் எதிர்காலத்தைக் கண்டுணர முயற்சிசெய்து கல்தேயர்கள் (பாபிலோனியர்கள்) வான்கணிக்கும் ஆராய்ச்சியில் பேரளவான முன்னேற்றம் செய்தனர். இந்தக் கலையை நாம் ‘ஜோதிடம்’ என்று அழைக்கிறோம்.”—நாகரிகத்தின் தொக்கமும் பூர்வ கிழக்கில் வாழ்க்கையும் (சிக்காகோ, 1938), R. M. இங்க்பெர்க், பக். 230.

மகா பாபிலோன் ஒழுக்கநெறியற்ற வேசியைப் போன்றவள், செல்வச் செருக்காய் வாழ்பவள்

வெளிப்படுத்துதல் 17:1-5-ல் பின்வருமாறு சொல்லியிருக்கிறது: “நீ வா, திரளான தண்ணீர்கள் [ஜனங்கள்] மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடே பூமியின் ராஜாக்கள் [அரசியல் ஆட்சியாளர்கள்] வேசித்தனம் பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறிகொண்டிருந்தார்களே, . . . மேலும் இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது.” வெளிப்படுத்துதல் 18:7 மேலும் சொல்வதாவது: “அவள் தன்னை மகிமைப்படுத்தி செல்வச் செருக்காய் வாழ்ந்”தாள்.

பொதுஜனங்களுக்குத் துன்பம் விளைவடைந்தபோதிலும் அதிகாரத்திற்காகவும் பொருள் ஆதாயத்திற்காகவும் பிரதான மத அமைப்புகள் அரசியல் ஆட்சியாளரோடு கூட்டுறவு வைத்துகொள்வதை ஒரு பழக்கமாக்கியிருப்பது உண்மையல்லவா? தாங்கள் ஊழியம் செய்யவேண்டிய மக்களில் பலர் ஏழ்மையில் இருந்தபோதிலும் அவர்களுடைய உயர் குருவர்க்கம் செல்வச் செருக்காய் வாழ்வதும் உண்மையல்லவா?

கிறிஸ்தவமென உரிமைபாராட்டும் மதங்களும், பைபிளின் கடவுளைப்பற்றி ஒன்றும் அறியாத மதங்களோடுகூட மகா பாபிலோனின் பாகமானவையென ஏன் சரியாகவே கருதப்படலாம்?

யாக். 4:4: “விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.” (ஆகவே, கடவுளைப்பற்றி பைபிள் என்ன சொல்கிறதென அவர்களுக்குத் தெரிந்திருந்தபோதிலும் உலகின் வழிகளைப் பின்பற்றுவதன்மூலம் உலகத்தின் சிநேகத்தைத் தெரிவுசெய்வார்களேயானால் கடவுளுக்குத் தங்களைப் பகைஞராக்கிக் கொள்கிறார்கள்.)

2 கொரி. 4:4; 11:14, 15: “தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.” “சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே, ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும்.” (இவ்வாறு, தாங்கள் கிறிஸ்தவர்களென உரிமைபாராட்டினாலும், உண்மையான கடவுள் நியமித்த முறையில் அவரை வணங்காதவர்கள் எல்லாரும், யெகோவாவின் பிரதான எதிராளியான பிசாசாகிய சாத்தானையே மகிமைப்படுத்துகின்றனர். 1 கொரிந்தியர் 10:20-ஐயும் பாருங்கள்.)

மத். 7:21-23: “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல் என்னை [இயேசு கிறிஸ்துவை] நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உனது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.”

மகா பாபிலோனைவிட்டு தாமதமின்றி வெளியேறுவது ஏன் அவசரமானது?

வெளி. 18:4: “என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.”

வெளி. 18:21: “பலமுள்ள தூதனொருவன் பெரிய ஏந்திரக்கல்லையொத்த ஒரு கல்லை எடுத்துச் சமுத்திரத்திலே எறிந்து: இப்படியே பாபிலோன் மகா நகரம் வேகமாய்த் தள்ளுண்டு, இனி ஒருபோதும் காணப்படாமற்போகும். . . . என்று விளம்பினான்.”

லூக்கா 21:36: “ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள்.”

பைபிள் சத்தியத்தை அறியாமல், கடந்த காலத்தில் மகா பாபிலோனின் பாகமாயிருந்து வாழ்ந்து மரித்த ஜனங்களுக்கு என்ன நேரிடும்?

அப். 17:30: “அறியாமையுள்ள காலங்களைத் தேவன் காணாதவர்போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்ப வேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.”

அப். 24:15: “நீதிமான்களும், அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டு.” (“அநீதிமான்களில்” யார் உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்பதைக் கடவுள் தீர்மானிப்பார்.)

யோபு 34:12: “தேவன் அநியாயஞ் செய்யாமலும் சர்வவல்லவர் நீதியைப் புரட்டாமலும் இருக்கிறது மெய்யே.”