Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவா

யெகோவா

யெகோவா

சொற்பொருள் விளக்கம்: ஒரே உண்மையான கடவுளின் சொந்த பெயர். அவருடைய சொந்த சுய-நியமிப்பு. யெகோவாவே சிருஷ்டிகர், நியாயப்படி சர்வலோகத்தின் ஈடற்ற உன்னதப் பேரரசர். “யெகோவா” எபிரெய நான்கெழுத்துச் சொல்லாகிய, יהזה என்பதிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது, இதன் பொருள் “உண்டாகும்படி செய்விக்கிறார்,” என்பதாகும். இந்த நான்கு எபிரெயு எழுத்துக்கள் பல மொழிகளில் ஜ்ஹ்வ்ஹ் (JHVH) அல்லது ய்ஹ்வ்ஹ் (YHWH) என்ற எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன.

இன்று பொதுவாய்ப் பயன்படுத்தும் பைபிள் மொழிபெயர்ப்புகளில் கடவுளுடைய பெயர் எங்கே காணப்படுகிறது?

தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பு: யெகோவா என்ற பெயர் யாத்திராகமம் 6:2, 3; சங்கீதம் 68:4; 83: 17; ஏசாயா 12:2; 26:4 ஆகிய இடங்களில் காணப்படுகிறது. தமிழ் பைபிள், 1936-ன் திருத்திய மொழிபெயர்ப்பு: இந்த மொழிபெயர்ப்பில் ஆதியாகமம் 2:4 முதற்கொண்டு எபிரெயு வேத எழுத்துக்கள் முழுவதிலும் யெகோவா என்ற பெயர் நிலையாய்ப் பயன்படுத்தியிருக்கிறது. தி நியு இங்கிலிஷ் பைபிள்: ஜெஹோவா என்ற பெயர் யாத்திராகமம் 3:15; 6:3-ல் தோன்றுகிறது. ஆதியாகமம் 22:14; யாத்திராகமம் 17:15; நியாயாதிபதிகள் 6:24; எசேக்கியேல் 48:35 ஆகியவற்றையும் பாருங்கள். (இதுவும் மற்ற மொழிபெயர்ப்புகளும் “ஜெஹோவா” என்பதைப் பல இடங்களில் பயன்படுத்துகையில், எபிரெயு மூலவாக்கியத்தில் அந்தப் பெயரின் நான்கெழுத்துக்கள் தோன்றும் எல்லா இடங்களிலும் அதை நிலையாய் ஏன் பயன்படுத்தக்கூடாது?)

ரிவைஸ்ட் ஸ்ன்டர்ட் வெர்ஷன்: யாத்திராகமம் 3:15-ன் பேரில் அடிக்குறிப்பு சொல்வதாவது: “கர்த்தர் என்ற சொல் பெரிய எழுத்துக்களில் குறிப்பிட்டிருக்கையில், ய்ஹ்வ்ஹ் என்ற தெய்வீகப் பெயரைக் குறித்து நிற்கிறது.”

டுடேஸ் இங்கிலிஷ் வெர்ஷன்: யாத்திராகமம் 6:3-ன் பேரில் அடிக்குறிப்பு சொல்வதாவது: “கர்த்தர்: . . . எபிரெயு மூலவாக்கியத்தில் யஹ்வே என்றும், பாரம்பரியமாய் யெஹோவா என எழுத்துப்பெயர்க்கப்பட்டும் இருக்கையில், இந்த மொழிபெயர்ப்பு, ஆங்கில மொழிபெயர்ப்புகளில் விரிவாய்க் காணப்படும் முறையைப் பின்பற்றி, கர்த்தர் என்பதைப் பயன்படுத்தி பெரிய எழுத்துக்களில் அதைக் குறிக்கிறது.

கிங் ஜேம்ஸ் வெர்ஷன்: ஜெஹோவா என்ற பெயர் யாத்திராகமம் 6:3; சங்கீதம் 83:17; ஏசாயா 12:2; 26:4 ஆகிய இடங்களில் காணப்படுகிறது. ஆதியாகமம் 22:14; யாத்திராகமம் 17:15; நியாயாதிபதிகள் 6:24 ஆகியவற்றிலும் பாருங்கள்.

அமெரிக்கன் ஸ்ண்டர்ட் வெர்ஷன்: இந்த மொழிபெயர்ப்பில், ஆதியாகமம் 2:4-ல் தொங்கி எபிரெயு வேத எழுத்துக்கள் முழுவதிலும் ஜெஹோவா என்ற பெயர் நிலையாய்ப் பயன்படுத்தியிருக்கிறது.

டூவே வெர்ஷன்: யாத்திராகமம் 6:3-ன் பேரில் அடிக்குறிப்பு சொல்வதாவது: “என் பெயர் அடோனாய். எபிரெயு மூலவாக்கியத்திலுள்ள அந்தப் பெயர் கடவுளின் மிக அதிகத் தகுந்த பெயர், அது அவருடைய நித்திய சுய-இருப்பைக் குறிக்கிறது. (யாத். 3, 14,) இதை யூதர்கள் பயபக்தியின் காரணமாக ஒருபோதும் உச்சரிக்கிறதில்லை; ஆனால், அதற்குப் பதில், பைபிளில் அது வரும் இடங்களிலெல்லாம், அடொனாய் என வாசிக்கிறார்கள், இது அந்தக் கர்த்தர் எனக் குறிக்கிறது; ஆகையால், அந்த மற்ற சொல்லுதற்கரிய பெயரின் நான்கெழுத்தாகிய ஜாட், ஹெ, வா, ஹெ என்பதற்கு அடோனாய் என்ற பெயருக்குரிய குறிகளை அல்லது உயிரெழுத்துக்களை வைக்கிறார்கள். ஆகவே நவீன காலத்தவர் சிலர் ஜெஹோவா என்ற பெயரை வகுத்தமைத்திருக்கின்றனர், இது யூதராயினும் கிறிஸ்தவராயினும் பூர்வத்தார் யாவருக்கும் அறியப்படாதது; ஏனெனில் எபிரெயு மூலவாக்கியத்திலிருந்த இந்தப் பெயரின் உண்மையான உச்சரிப்பு, நீண்டகாலம் பயன்படுத்தாதிருந்ததால் இப்பொழுது முற்றிலும் விட்டுப்போயிற்று.” (தி கத்தோலிக் என்ஸைக்ளோபீடியாவில் [1913, புத். VIII, பக். 329] பின்வருமாறு சொல்லியிருப்பது கவனத்தைக் கவருகிறது: “ஜெஹோவா, பழைய ஏற்பாட்டில் கடவுளுடைய தனிப் பெயர்; ஆகவே யூதர் இதைத் தனிச் சிறப்பால் அந்தப் பெயர், அந்த மகா பெயர், அந்த ஒரே பெயர் என அழைத்தனர்.”)

தி ஹோலி பைபிள் ரொனால்ட் A. நாக்ஸ் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டது: யஹ்வே என்ற பெயர் யாத்திராகமம் 3:14 மற்றும் 6:3-ன் அடிக்குறிப்புகளில் காணப்படுகிறது.

தி நியு அமெரிக்கன் பைபிள்: யாத்திராகமம் 3:14-ன்பேரில் அடிக்குறிப்பு “யஹ்வே” என்ற அமைப்பை ஆதரிக்கிறது, ஆனால் இந்தப் பெயர் அந்த மொழிபெயர்ப்பின் மூல வாக்கிய உடற்பகுதியில் காணப்படுகிறதில்லை. செயின்ட் ஜோசஃப் பதிப்பில், பைபிள் அகராதி பிற்சேர்க்கையிலும் “கர்த்தர்” மற்றும் “யஹ்வே” என்பவற்றின்கீழ்ப் பாருங்கள்.

தி ஜெருசலெம் பைபிள்: இந்த எபிரெயு நான்கெழுத்து, ஆதியாகமம் 2:4-ல் அது முதல் காணப்படுவதிலிருந்து தொங்கி, யஹ்வே என மொழிபெர்த்துள்ளது.

நியு உவோர்ல்ட் டிரான்ஸ்லேஷன்: இந்த மொழிபெயர்ப்பில் ஜெஹோவா என்ற இந்தப் பெயர் எபிரெயு மற்றும் கிறிஸ்தவ கிரேக்க வேத எழுத்துக்கள் இரண்டிலுமே பயன்படுத்தியிருக்கிறது, 7,210 தடவைகள் காணப்படுகிறது.

அன் அமெரிக்கன் டிரான்ஸ்லேஷன்: யாத்திராகமம் 3:15-லும் 6:3-லும் யஹ்வே என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது, அவற்றைப் பின்தொடர்ந்து “அந்தக் கர்த்தர்” என்று அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளது.

தி பைபிள் இன் லிவ்விங் இங்கிலிஷ், S. T. பையிங்டன்: எபிரெயு வேத எழுத்துக்கள் முழுவதிலும் ஜெஹோவா என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தி ‘ஹோலி ஸ்கிரிப்ச்சர்ஸ்’ J. N. டார்பி என்பவர் மொழிபெயர்த்தது: ஜெஹோவா என்ற பெயர் எபிரெயு வேத எழுத்துக்கள் முழுவதிலும், மேலும் மத்தேயு 1:20 தொங்கி, கிரேக்க வேத எழுத்துக்களின் வசனங்களின் அடிக்குறிப்புகள் பலவற்றிலும் காணப்படுகிறது.

தி எம்ஃபாட்டிக் டயக்ளாட், பெஞ்சமின் உவில்சன்: கிறிஸ்தவ கிரேக்க வேத எழுத்துக்களின் இந்த மொழிபெயர்ப்பில் ஜெஹோவா என்ற பெயர் மத்தேயு 21:9-லும் வேறு 17 இடங்களிலும் காணப்படுகிறது.

மசோரெட்டிக் மூலவாக்கியத்தின் பிரகாரமான பரிசுத்த வேத எழுத்துக்கள்ஒரு புதிய மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்), அமெரிக்காவின் யூத புத்தகப் பிரசுர சங்கம், மாக்ஸ் மார்கோலிஸ் தலைமை பதிப்பாளர்: யாத்திராகமம் 6:3-ல் இந்த எபிரெயு நான்கெழுத்து ஆங்கிலத்தில் தோன்றுகிறது.

தி ஹோலி பைபிள் ராபர்ட் யங் மொழிபெயர்த்தது: இந்த நேர்ச்சொற்பொருள் மொழிபெயர்ப்பில் ஜெஹோவா என்ற பெயர் எபிரெயு வேத எழுத்துக்கள் முழுவதிலும் காணப்படுகிறது.

பைபிள் மொழிபெயர்ப்புகள் பல ஏன் கடவுளுடைய சொந்தப் பெயரைப் பயன்படுத்துகிறதில்லை அல்லது அதை ஒருசில தடவைகள் மட்டும் பயன்படுத்துகின்றன?

ரிவைஸ்ட் ஸ்ண்டர்ட் வெர்ஷனின் முன்னுரை பின்வருமாறு விளக்குகிறது: “இரண்டு காரணங்களினிமித்தம் இந்தக் குழு கிங் ஜேம்ஸ் வெர்ஷனின் மேலுமதிகப் பழக்கமான உபயோகிப்புக்குத் திரும்பினது: (1) ‘ஜெஹோவா’ என்றச் சொல் அந்தப் பெயர் எபிரெயுவில் எப்போதாவது பயன்படுத்தப்பட்ட எந்த வகையையும் திருத்தமாய் குறிக்கிறதில்லை; மேலும் (2) மற்றக் கடவுட்கள் இருக்கிறார்கள் அவர்களிலிருந்து அவரை வேறுபடுத்திக் காட்டவேண்டுமென்பதுபோல், ஒரே ஒரு கடவுளுக்கு எந்தத் தனிச் சிறப்புப் பெயரையாவது பயன்படுத்துவது, கிறிஸ்தவ சகாப்தத்துக்கு முன்பே யூதேய மதத்தில் நிறுத்திவிடப்பட்டது, மேலும் கிறிஸ்தவ சர்ச்சின் உலகளாவிய விசுவாசத்துக்கு முற்றிலும் பொருத்தமற்றது.” (இவ்வாறு பொருத்தமற்றது எதுவென கருதும் தங்கள் சொந்தக் கருத்தையே, பரிசுத்த பைபிளிலிருந்து அதன் தெய்வீக நூலாசிரியரின் சொந்தப் பெயரை நீக்குவதற்கு, ஆதாரமாகக் கொண்டனர், மூல எபிரெயுவில் அவருடைய பெயர் வேறு எந்தப் பெயரையோ பட்டத்தையோ பார்க்கிலும் மிக அடிக்கடி காணப்படுகிறது. தாங்கள்தாமே ஒப்புக்கொள்கிறபடி அவர்கள் யூதேய மதத்தைக் கடைப்பிடிக்கிறவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றுகின்றனர், அவர்களைக் குறித்து இயேசு: “உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள்,” என்று சொன்னார்.—மத். 15:6.)

கடவுளின் சொந்தப் பெயரை, எபிரெயுவில் அது தோன்றும் ஒவ்வொரு தடவையும், மூலவுரையின் உடற்பகுதியில் குறிக்காவிடினும், ஒரு தடவையாவது அல்லது ஒருசில தடவைகளாவது அதில் அடங்கியிருக்கச் செய்யும்படி கடமைப்பட்ட உணர்ச்சிகொண்ட மொழிபெயர்ப்பாளர்கள், உவில்லியம் டின்டேலின் முன்மாதிரியைப் பின்பற்றினார்களெனத் தெரிகிறது, அவன், 1530-ல் பிரசுரித்த பைபிளின் முதல் ஐந்து ஆகமங்களைக்கொண்ட தன் மொழிபெயர்ப்பில் தெய்வீகப் பெயர் அடங்கியிருக்கச் செய்தான், இவ்வாறு அந்தப் பெயரை முற்றிலும் விட்டுவிடுவதன் பழக்கத்தைத் தகர்த்தனர்.

கிறிஸ்தவ கிரேக்க வேத எழுத்துக்களை எழுதின தேவாவியால் ஏவப்பட்ட எழுத்தாளர்கள் யெகோவாவின் பெயரைப் பயன்படுத்தினார்களா?

ஜெரோம், நான்காம் நூற்றாண்டில் பின்வருமாறு எழுதினான்: “லேவி எனப்பட்டவனும், ஆயக்காரனாயிருந்து அப்போஸ்தலனானவனுமான மத்தேயு, விசுவாசித்த விருத்தசேதனமுள்ளவர்களின் நன்மைக்காக யூதேயாவில் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை முதன்முதல் எபிரெயு மொழியிலும் எழுத்துக்களிலும் இயற்றினான்.” (டி வைரிஸ் இன்டஸ்ட்ரிபஸ், அதி. III) இந்தச் சுவிசேஷத்தில், கடவுளுடைய பெயரின் எபிரெயு நான்கெழுத்துக்கள் காணப்படுகிற எபிரெயு வேத எழுத்துக்களின் நேரடியான 11 மேற்கோள் பகுதிகள் அடங்கியிருக்கின்றன. அவன் மேற்கோள்கள் எடுத்தெழுதின அந்த எபிரெயு மூலவாக்கியத்தில் எழுதப்பட்டிருந்த பிரகாரமே அந்தப் பகுதிகளை அவன் எடுத்தெழுதவில்லையென நம்புவதற்கு ஒரு காரணமுமில்லை.

கிறிஸ்தவ கிரேக்க வேத எழுத்துக்களில் அடங்கியுள்ளவற்றிற்குத் தங்கள் பங்கையளித்த தேவாவியால் ஏவப்பட்ட மற்ற எழுத்தாளர்கள், எபிரெயு வேத எழுத்துக்களின் ஒரு கிரேக்க மொழிபெயர்ப்பாகிய, செப்டுவஜின்ட் என்பதிலிருந்து நூற்றுக்கணக்கான பகுதிகளை மேற்கோள்களாக எடுத்துக் குறிப்பிட்டிருக்கின்றனர். இந்தப் பகுதிகளில் பல அந்தச் செப்டுவஜின்ட்டின் தொக்கக்கால பிரதிகளின் கிரேக்க மூலவாக்கியத்திலேயே கடவுளுடைய பெயரின் இந்த எபிரெயு நான்கெழுத்தைக் கொண்டிருந்தன. தம்முடைய பிதாவின் பெயரைக் குறித்த இயேசுவின் சொந்த மனப்பான்மைக்குப் பொருந்த, இயேசுவின் சீஷர்கள் அந்தப் பெயரை அந்த மேற்கோள்களில் விடாது வைத்திருப்பார்கள்.—யோவான் 17:6, 26-ஐ ஒத்துப்பாருங்கள்.

பைபிள் சம்பந்த இலக்கியத்தின் பத்திரிகையில், ஜியார்ஜியா சர்வகலாசாலையின் ஜியார்ஜ் ஹோவர்ட் பின்வருமாறு எழுதினார்: “கிரேக்கு-பேசும் யூதர்கள் தங்கள் கிரேக்க வேத எழுத்துக்களுக்குள் יתזח என்பதைத் தொடர்ந்து எழுதிவந்தார்கள் என்றதை நாங்கள் உண்மையாய் அறிவோம். மேலும், மாறுதல்-விரும்பாத கிரேக்கு-பேசும் யூதக் கிறிஸ்தவர்கள் இந்தப் பழக்கத்திலிருந்து வேறுபட்டனர் என்பது பெரும்பாலும் நிகழக்கூடாததாகும். இரண்டாம் வருநிலைக் குறிப்புகளில் கடவுளுக்கு [கடவுள்] மற்றும் [கர்த்தர்] என்றச் சொற்களை அவர்கள் ஒருவேளைப் பயன்படுத்தியிருந்தாலும், கடவுளுடைய பெயரின் இந்த எபிரெயு நான்கெழுத்துக்களை பைபிளின் மூலவாக்கியத்திலிருந்தே அகற்றுவது அவர்களுக்கு முற்றிலும் அசாதாரணமாயிருக்கும். . . . பூர்வ சர்ச்சின் வேத எழுத்துக்களை உண்டுபண்ணின அந்தக் கிரேக்க பைபிளின் நகல்களில் இந்த எபிரெயு நான்கெழுத்துச் சொல் இன்னும் எழுதப்பட்டதால், பு[திய] ஏ[ற்பாட்டின்] எழுத்தாளர்கள், வேதவசனங்களை மேற்கோள்களாக எடுத்துக் குறிப்பிடுகையில், பைபிளின் மூலவசனத்துக்குள் இந்த நான்கெழுத்துக்களைப் பாதுகாத்து வைத்தனரென நம்புவது நியாயமாயிருக்கிறது. . . . ஆனால் அது கிரேக்க ப[ழைய] ஏ[ற்பாட்டிலிருந்து] நீக்கப்பட்டபோது, பு[திய] ஏ[ற்பாட்டில்] இருந்த ப[ழைய] ஏ[ற்பாட்டின்] மேற்கோள் குறிப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டது. இவ்வாறு பெரும்பாலும் இரண்டாம் நூற்றாண்டு தொக்கத்தில் துணைச் சொற்களின் [பதில் மாற்றீடு சொற்களின்] உபயோகம் இரண்டு ஏற்பாடுகளிலும் இந்த எபிரெயு நான்கெழுத்துக்களை நெருக்கி வெளித்தள்ளிவிட்டிருக்கவேண்டும்.”—புத். 96, எண் 1, மார்ச் 1977, பக். 76, 77.

தெய்வீகப் பெயரின் எந்த அமைப்பு திருத்தமானது—ஜெஹோவா அல்லது யஹ்வே?

அது எபிரெயுவில் முதன்முதல் உச்சரிக்கப்பட்ட முறையைக் குறித்து இன்று ஒரு மனிதனும் நிச்சயமாயிருக்க முடியாது. ஏன்? பைபிளில் பயன்படுத்தியுள்ள எபிரெயு உயிரெழுத்துக்கள் இல்லாமல் வெறும் மெய்யெழுத்துக்களில் மாத்திரமே முதன்முதல் எழுதப்பட்டது. இந்த மொழி அனுதின உபயோகத்தில் இருந்தபோது, வாசிப்போர் சரியான உயிரெழுத்துக்களை எளிதில் சேர்த்துகொண்டனர். எனினும், காலப்போக்கில், யூதர்கள், கடவுளுடைய சொந்த பெயரைச் சத்தமாய்ச் சொல்வது தவறென்ற மூட நம்பிக்கையான எண்ணத்தைக் கொண்டனர், ஆகையால் அவர்கள் பதில் மாற்றீடு சொற்களைப் பயன்படுத்தினர். பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர், யூத அறிஞர்கள், பூர்வ எபிரெயுவை வாசிக்கையில் எந்த உயிரெழுத்துக்கள் பயன்படுத்தவேண்டுமென்பதைக் குறிப்பிட்டுக்காட்டும் குறிகளைக்கொண்ட ஓர் அமைப்புமுறையை உண்டாக்கினர், ஆனால் தெய்வீகப் பெயரைக் குறித்துநின்ற எபிரெயு நான்கெழுத்துக்களைக் சுற்றியிருந்த அந்தப் பதில் மாற்றீடு சொற்களுக்கே அவர்கள் அந்த உயிரெழுத்துக்களை வைத்தனர். இவ்வாறு தெய்வீகப் பெயரின் முதல் உச்சரிப்பு இழக்கப்பட்டுப்போயிற்று.

“யஹ்வே,” என்ற எழுத்துக்கூட்டுருவைப் பல அறிஞர்கள் ஆதரிக்கிறார்கள், ஆனால் அது நிச்சயமாயில்லை மேலும் அவர்களுக்குள் கருத்தொற்றுமையும் இல்லை. மறுபட்சத்தில், “ஜெஹோவா” என்பது மிக விரைவில் அடையாளங்கண்டுகொள்ளும் பெயர் உருவாயிருக்கிறது, ஏனெனில் இது ஆங்கிலத்தில் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது, மேலும் மற்ற உருவகைகளுக்குச் சரிசமமாக, எபிரெயு நான்கெழுத்தின் மெய்யெழுத்துக்களைப் பாதுகாத்துவைக்கிறது.

தி எம்ஃபஸைஸ்ட் பைபிளில், J. B. ரோதர்ஹாம், எபிரெயு வேத எழுத்துக்கள் முழுவதிலும் யஹ்வே என்ற சொல்லமைப்பைப் பயன்படுத்தியிருக்கிறார். எனினும், பின்னால் சங்கீதங்களில் ஆராய்ச்சி என்ற தன் புத்தகத்தில் “ஜெஹோவா” என்ற சொல்லமைப்பைப் பயன்படுத்தியிருக்கிறார். அவர் விளக்கினதாவது: “ஜெஹோவா—இந்த நினைவுச்சின்னப் பெயரின் இந்த ஆங்கில அமைப்பை . . . சங்கீதத்தின் தற்போதைய மொழிபெயர்ப்பில் பயன்படுத்துவது, யஹ்வே அதிகத் திருத்தமான உச்சரிப்பானது என்பதைக் குறித்து எந்தச் சந்தேக உணர்ச்சியும் எழும்பினதால் அல்ல; ஆனால், இந்த வகையான காரியத்தில், பொதுமக்களின் காதுக்கும் கண்ணுக்கும் இசைவாக வைக்கும் விருப்பத்தால் நடைமுறை அத்தாட்சியிலிருந்து தெரிந்துகொண்டதாகும், இதில் தெய்வீகப் பெயரை எளிதில் அடையாளங்கண்டுகொள்ளச் செய்வதே முக்கியமான காரியமாகக் கருதப்பட்டது.”—(லண்டன், 1911), பக். 29.

பல்வேறு உச்சரிப்புகளைத் தர்க்கித்துப்பேசினபின், ஜெர்மன் பேராசிரியர் கஸ்டாவ் ஃபிரீட்ரிச் ஒஹலெர் முடிவுசெய்ததாவது: “இந்தக் கட்டம் முதற்கொண்டு நான் யெஹோவா என்ற இந்தச் சொல்லைப் பயன்படுத்துகிறேன், ஏனெனில், உண்மையாகவே இந்தப் பெயர் நம்முடைய சொற்றொகுதியில் இப்பொழுது அதிக இயல்பாகிவிட்டது, இதை அகற்றமுடியாது.”—Theologie des Alten Testaments, இரண்டாம் பதிப்பு (ஸ்டட்கார்ட், 1882), பக். 143.

ஜெஸ்யுட் புலவர் பால் ஜூவன் கூறுவதாவது: “நம்முடைய மொழிபெர்ப்பில் (மெய்ம்மைக்கோளியலான) யஹ்வே என்றச் சொல்லமைப்புக்குப் பதில், ஜெஹோவா சொல்லமைப்பை நாங்கள் பயன்படுத்தியிருக்கிறோம் . . . இது ஃபிரெஞ்ச்சில் பயன்படுத்தும் வழக்கத்திலுள்ள இலக்கியச் சொல்லமைப்பாகும்.”—Grammaire de l’hebreu biblique (ரோம், 1923), பக்கம் 49-ல் அடிக்குறிப்பு.

ஒரு மொழியிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றுகையில் பெரும்பான்மையான பெயர்கள் ஓரளவு மாறுகின்றன. இயேசு ஒரு யூதனாகப் பிறந்தார், எபிரெயுவில் அவருடைய பெயர் பெரும்பாலும் யெஷூவா என உச்சரிக்கப்பட்டிருக்கலாம், ஆனால் கிறிஸ்தவ வேத எழுத்துக்களின் தேவாவியால் ஏவப்பட்ட எழுத்தாளர்கள் அந்தப் பெயரின் கிரேக்கச் சொல்லமைப்பாகிய இயேஸோஸ் என்பதைப் பயன்படுத்தத் தயங்கவில்லை. மற்ற மொழிகள் பெரும்பான்மையானவற்றில் இதன் உச்சரிப்பு சிறிது வேறுபடுகிறது, ஆனால் நம்முடைய மொழியில் பொதுவாயுள்ள சொல்லமைப்பை நாம் தாராளமாய்ப் பயன்படுத்துகிறோம். பைபிள் பெயர்கள் மற்றவற்றைக் குறித்தும் இவ்வாறே இருக்கிறது. அப்படியானால், எல்லாவற்றையும்விட மிக அதிக முக்கியமான பெயர் உடையவருக்குச் சரியான மரியாதையை நாம் எவ்வாறு காட்டலாம்? அது முதன்முதல் உச்சரிக்கப்பட்டது எவ்வாறென நாம் சரியாய் அறியாததனால் அவருடைய பெயரை ஒருபோதும் சொல்லாமலோ அல்லது எழுதாமலோ இருப்பதன் மூலமா? அல்லது, அதற்கு மாறாக, அதற்குரியவரைப்பற்றி நல்லமுறையில் பேசியும் அவரைக் கனப்படுத்தும் முறையில் அவருடைய வணக்கத்தாராக நம்மை நடத்தியும் வருகையில், நம்முடைய மொழியில் பொதுவாயுள்ள உச்சரிப்பையும் எழுத்துக்கூட்டுதலையும் பயன்படுத்துவதன்மூலமா?

கடவுளுடைய சொந்த பெயரை அறிவதும் பயன்படுத்துவதும் ஏன் முக்கியம்?

ஒருவருடைய சொந்தப் பெயர் உங்களுக்குத் தெரியாத எவருடனாவது உங்களுக்கு நெருங்கிய உறவு உண்டா? கடவுள் பெயரில்லாதவராயிருக்கும் ஆட்களுக்கு அவர் மெய்யான ஆளாக அல்ல, தாங்கள் அறிந்து நேசித்து ஜெபத்தில் இருதயத்திலிருந்து அவரிடம் பேசக்கூடியவராக அல்ல, பெரும்பாலும் வெறும் ஒரு பண்பைக் குறிக்கும் சக்தியாகவே இருக்கிறார். அவர்கள் உண்மையில் ஜெபித்தால், அவர்களுடைய ஜெபங்கள் புற ஆசாரமாய் மனப்பாடம் செய்துள்ள சொற்களைத் திரும்பத்திரும்பச் சொல்லும் வெறும் சடங்காசாரமாகவே இருக்கின்றன.

உண்மையான கிறிஸ்தவர்கள், சகல ஜாதியாரின் ஜனங்களையும் சீஷர்களாக்குவதற்கான வேலைப் பொறுப்பை இயேசு கிறிஸ்துவினிடமிருந்து பெற்றிருக்கின்றனர். அந்த ஆட்களுக்குக் கற்பிக்கையில், அந்த ஜாதியாரின் பொய்த் தெய்வங்களிலிருந்து வேறுபட்டவராக உண்மையான கடவுளை அடையாளங்கண்டுகொள்ளச் செய்வது எவ்வாறு சாத்தியமாயிருக்கும்? பைபிள்தானே செய்வதுபோல், அவருடைய சொந்தத் தனிப் பெயரைப் பயன்படுத்துவதனால் மாத்திரமே முடியும்.—மத். 28:19, 20; 1 கொரி. 8:5, 6.

யாத். 3:15, தி.மொ.: “கடவுள் மோசயினிடம்: . . . உங்கள் பிதாக்களின் கடவுளாகிய யெகோவா என்னை உங்களிடம் அனுப்பினார் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக; என்றென்றும் இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என்னை நினைப்பதற்குரிய பேர்.”

ஏசா. 12:4, தி.மொ.: “யெகோவாவுக்கு நன்றிசெலுத்துங்கள்; அவர் திருநாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்; அவருடைய திருச்செயல்களை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்; அவருடைய திருநாமமே உயர்ந்ததென்று பிரஸ்தாபம் பண்ணுங்கள்.”

எசே. 38:17, 23, தி.மொ.: “யெகோவாவாகிய ஆண்டவர் சொல்வது இதுவே: . . . நான் பல ஜாதியாரின் கண்களுக்கு முன்பாக என் மகத்துவத்தையும் என் பரிசுத்தத்தையும் விளங்கப்பண்ணி அவர்கள் என்னை அறியும்படி செய்வேன்; நான் யெகோவா என்று அப்பொழுது அறிந்துகொள்வார்கள்.”

மல். 3:16, தி.மொ.: “யெகோவாவுக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிவந்தார்கள், யெகோவா கவனித்துக் கேட்டார்; யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கெனவும் அவருடைய திருநாமத்தை நினைக்கிறவர்களுக்கெனவும் ஞாபகப்புஸ்தகம் ஒன்று அவருக்குமுன்பாக எழுதப்பட்டிருக்கிறது.”

யோவான் 17:26: “[இயேசு தம்முடைய பிதாவினிடம் ஜெபித்து:] நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்திலிருக்கும்படிக்கும், நானும் அவர்களிலிருக்கும்படிக்கும், உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் [தம்மைப் பின்பற்றினோருக்கு] தெரியப்படுத்தினேன்; இன்னமும் தெரியப்படுத்துவேன் என்றார்.”

அப். 15:14: “தேவன் புறஜாதிகளினின்று தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தைத் தெரிந்துகொள்ளும்படி முதல்முதல் அவர்களுக்குக் கடாட்சித்தருளின விதத்தைச் சிமியோன் விவரித்துச் சொன்னாரே.”

“பழைய ஏற்பாட்டில்” உள்ள யெகோவா “புதிய ஏற்பாட்டில்” இயேசு கிறிஸ்துவா?

மத். 4:10, NW: “இயேசு அவனிடம்: ‘அப்பாலே போ, சாத்தானே! உன் கடவுளாகிய யெகோவாவையே [“கர்த்தரையே,” UV, KJ இன்னும் மற்றவற்றில்] நீ வணங்வேண்டும், அவர் ஒருவருக்கே நீ பரிசுத்த சேவை செலுத்தவேண்டும்” என்று எழுதியிருக்கிறதே,’ என்றார்.” (இயேசு, தாமே வணங்கப்பவேண்டுமென சொல்லவில்லை என்பது தெளிவாயிருக்கிறது.)

யோவான் 8:54: “இயேசு [யூதருக்குப்] பிரதியுத்தரமாக: என்னை நானே மகிமைப்படுத்தினால் அந்த மகிமை வீணாயிருக்கும், என் பிதா என்னை மகிமைப்படுத்துகிறவர், அவரை உங்கள் தேவனென்று நீங்கள் சொல்லுகிறீர்கள். . . . என்றார்.” (எபிரெயு வேத எழுத்துக்கள் யெகோவாவை யூதர் வணங்குவதாக உரிமைபாராட்டின கடவுள் என தெளிவாய் அடையாளங் காட்டுகின்றன. இயேசு, தாமே யெகோவா என்று சொல்லவில்லை, யெகோவா தம்முடைய பிதா என்றே சொன்னார். தாமும் தம்முடைய பிதாவும் தனித்தனி ஆட்கள் என இயேசு இங்கே வெகுத் தெளிவாக்கினார்.)

சங். 110:1, தி.மொ.: “யெகோவா என் [தாவீதின்] ஆண்டவரிடம்: நான் உமது சத்துருக்களை உமது பாதபடியாக்கிப்போடுமட்டும் நீர் என் வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்.” (மத்தேயு 22:41-45-ல், இயேசு, இந்தச் சங்கீதத்தில் குறிப்பிட்டுள்ள தாவீதின் “ஆண்டவர்,” தாமே என விளக்கிக் காட்டினார். ஆகையால் இயேசு யெகோவா அல்லர் ஆனால் யெகோவாவின் வார்த்தைகள் இங்கே அவரை நோக்கிச் சொல்லப்பட்டன.)

பிலி. 2:9-11: “ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும் பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசு கிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும் எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.” [தமிழ் கத். பைபிளில்: “ஆண்டவராகிய யேசுக் கிறீஸ்துநாதர் பிதாவாகிய சர்வேசுரனுடைய மகிமையில் வீற்றிருக்கிறாரென்று எல்லா நாவும் அறிக்கையிடவும்,” என்றிருக்கிறது. Kx-லும் CC-லும் அதற்கொப்பாயிருக்கிறது, ஆனால் Kx-ல் அடிக்குறிப்பு பின்வருமாறு ஒப்புக்கொள்கிறது: “ . . . இந்தக் கிரேக்கை “மகிமைக்கு,” என்று ஒருவேளை மேலுமதிக இயல்பாய் மொழிபெர்க்கலாம்,” மேலும் NAB-ம் JB-ம் இதை இம்முறையில் மொழிபெயர்க்கின்றன.]” (இயேசு கிறிஸ்து பிதாவாகிய கடவுளிலிருந்து வேறுபட்டவராகவும் அவருக்குக் கீழ்ப்பட்டவராகவும் இங்கே காட்டியிருப்பதைக் கவனியுங்கள்.)

ஒருவன் யெகோவாவுக்குப் பயப்படவும் வேண்டுமென்றால் அவரை எவ்வாறு நேசிக்கமுடியும்?

நாம் யெகோவாவை நேசிக்கவும் (லூக்கா 10:27) அவருக்குப் பயப்படவும் வேண்டுமென பைபிளில் நமக்குச் சொல்லியிருக்கிறது. (1 பேதுரு 2:17; நீதி. 1:7; 2:1-5; 16:6) கடவுளுக்குப் பயப்படும் ஆரோக்கியமான பயம் அவருடைய கோத்துக்குள்ளாவதைத் தவிர்ப்பதற்கு வெகு கவனமாயிருக்க நம்மைச் செய்விக்கும். யெகோவாவின்பேரிலுள்ள நம்முடைய அன்பு அவருக்கு பிரியமான காரியங்களைச் செய்ய விரும்பவும், அவருடைய அன்பின் மற்றும் தகுதியற்றத் தயவின் எண்ணற்ற வெளிக்காட்டுதல்களுக்கு நம் நன்றியறிதலை வெளிப்படுத்திக் காட்டவும் நம் உள்ளத்தைத் தூண்டுவிக்கும்.

உதாரணங்கள்: ஒரு மகன் தன் தகப்பனுக்குக் கோமுண்டாக்குவதற்குச் சரியாகவே பயப்படுகிறான், ஆனால் தன் தகப்பன் தனக்குச் செய்யும் எல்லாவற்றையும் நன்றியோடு மதித்துணர்வது தன் தகப்பனுக்கு உண்மையான அன்பை வெளிப்படுத்திக் காட்டும்படியும் அவன் உள்ளத்தைத் தூண்டுவிக்க வேண்டும். நீர்மூழ்கிக் கவசமணிந்து கடலடியில் வேலைசெய்பவன் தான் கடலை நேசிப்பதாகச் சொல்லலாம், ஆனால் அதற்குக் கொண்டுள்ள ஆரோக்கியமான பயம் தான் செய்யாமல் தவிர்க்கவேண்டிய சில காரியங்கள் இருப்பதை உணரும்படி அவனைச் செய்விக்கும். இவ்வாறே, கடவுள்மீது கொண்டுள்ள நம்முடைய அன்புடன் அவருடைய கோத்தை வருவித்துக்கொள்ளும் எதையும் செய்வதற்குப் பயப்படும் ஆரோக்கியமான பயமும் சேர்ந்திருக்கவேண்டும்.