Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

யெகோவாவின் சாட்சிகள்

யெகோவாவின் சாட்சிகள்

சொற்பொருள் விளக்கம்:  யெகோவா தேவனையும் மனிதவர்க்கத்தைப் பாதிக்கும் அவருடைய நோக்கங்களையும் பற்றிச் சுறுசுறுப்பாய்ச் சாட்சி பகருகிற உலகமெங்கும் விரிவாயுள்ள கிறிஸ்தவ சமுதாய மக்கள் ஆகும். பைபிள் ஒன்றை மாத்திரமே இவர்கள் தங்கள் நம்பிக்கைகளின் ஆதாரமாகக் கொண்டிருக்கின்றனர்.

யெகோவாவின் சாட்சிகளின் என்ன நம்பிக்கைகள் அவர்களை மற்ற மதங்களிலிருந்து வேறுபட்டவர்களாகத் தனியே ஒதுக்கி வைக்கின்றன?

(1) பைபிள்: பைபிள் முழுவதும் கடவுளுடைய ஏவப்பட்ட வார்த்தை என யெகோவாவின் சாட்சிகள் நம்புகின்றனர், மேலும் மனித பாரம்பரியத்தின்மீது ஆதாரங்கொண்ட ஒரு விசுவாச பிரமாணத்தைக் கடைப்பிடிப்பதற்குப் பதில், அவர்கள் பைபிளையே தங்கள் எல்லா நம்பிக்கைகளுக்கும் தராதரமாகப் பற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

(2) கடவுள்: யெகோவாவையே ஒரே உண்மையான கடவுளாக அவர்கள் வணங்குகிறார்கள், அவரையும் மனிதவர்க்கத்துக்குக் கொண்டுள்ள அவருடைய அன்புள்ள நோக்கங்களைப் பற்றி மற்றவர்களிடம் தாராளமாய்ப் பேசுகிறார்கள். யெகோவாவைப்பற்றி வெளிப்படையாய்ச் சாட்சிகொடுக்கிற எவரும் பொதுவாய் அந்த ஒரே தொகுதியை—“யெகோவாவின் சாட்சிகளைச்”—சேர்ந்தவர்களென அடையாளங் கண்டுகொள்ளப்படுகிறார்கள்.

(3) இயேசு கிறிஸ்து: இயேசு கிறிஸ்து ஒரு திரித்துவத்தின் பாகமென்றல்ல, ஆனால், பைபிளில் சொல்லியிருக்கிறபிரகாரம், அவர் கடவுளுடைய குமாரன், கடவுளுடைய சிருஷ்டிகளில் முதல்வர் எனவும்; மனிதனானதற்கு முன்னால் அவர் வாழ்ந்திருந்தார் என்றும் அவருடைய உயிர் பரலோகத்திலிருந்து கன்னி மரியாளின் கர்ப்பத்துக்கு மாற்றப்பட்டதெனவும்; பலியாகச் செலுத்தப்பட்ட வருடைய பரிபூரண மனித உயிர், விசுவாசங்காட்டுவோருக்கு நித்திய ஜீவனடைய மீட்பைக் கூடியதாக்குகிறதெனவும்; கிறிஸ்து 1914 முதற்கொண்டு கடவுள் கொடுத்த அதிகாரத்தோடு பூமிமுழுவதன்மீதும் அரசராக ஆட்சி செய்துகொண்டிருக்கிறார் எனவும் அவர்கள் நம்புகின்றனர்.

(4) கடவுளுடைய ராஜ்யம்: கடவுளுடைய ராஜ்யமே மனிதவர்க்கத்துக்கு ஒரே நம்பிக்கையெனவும்; அது உண்மையான அரசாங்கம் எனவும்; அது மனித அரசாங்கங்கள் யாவும் உட்பட இந்தத் தற்போதைய பொல்லாத காரிய ஒழுங்குமுறயைச் சீக்கிரத்தில் அழித்துப்போடுமெனவும், ஒரு புதிய ஒழுங்குமுறயை அது உண்டுபண்ணும் அதில் நீதி வாசமாயிருக்குமெனவும் அவர்கள் நம்புகிறார்கள்.

(5) பரலோக வாழ்க்கை: ஆவியால் அபிஷேகஞ்செய்யப்பட்ட 1,44,000 கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவுடன் அவருடைய பரலோக ராஜ்யத்தில் பங்குகொண்டு, அவரோடு அரசராக ஆட்சிசெய்வார்கள் என அவர்கள் நம்புகிறார்கள். “நல்லவர்கள்” எல்லாருக்கும் அளிக்கப்படும் பரிசு பரலோகம் என அவர்கள் நம்புகிறதில்லை.

(6) பூமி: பூமிக்குக் கடவுள் கொண்டிருந்த முதல் நோக்கம் நிறைவேற்றமடையுமெனவும்; இந்தப் பூமி யெகோவாவை வணங்குவோரால் முற்றிலும் குடியிருக்கப்படும் மேலும் இவர்கள் மனிதப் பரிபூரணத்தில் நித்திய ஜீவனை அனுபவித்து மகிழமுடியும் எனவும்; இந்த ஆசீர்வாதங்களில் பங்குகொள்ளும் வாய்ப்புக்கு மரித்தோரும் எழுப்பப்படுவரெனவும் அவர்கள் நம்புகிறார்கள்.

(7) மரணம்: மரித்தோர் எதைக்குறித்தும் முற்றிலும் உணர்வற்றவர்கள் எனவும்; அவர்கள் ஏதோ ஓர் ஆவி மண்டலத்தில் வேதனையையோ இன்பத்தையோ அனுபவித்துக்கொண்டில்லை எனவும்; அவர்கள் கடவுளுடைய நினைவில் தவிர வேறு எங்கேயும் இல்லை, ஆகையால் அவர்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கான நம்பிக்கை மரித்தோரின் உயிர்த்தெழுதலிலேயே இருக்கிறதெனவும் அவர்கள் நம்புகிறார்கள்.

(8) கடைசி நாட்கள்: 1914 முதற்கொண்டு, நாம் இப்பொழுது இந்தப் பொல்லாதக் காரிய ஒழுங்குமுறையின் கடைசி நாட்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் எனவும்; 1914-ன் சம்பவங்களைக் கண்ட சிலர் இந்தத் தற்போதைய பொல்லாத உலகத்தின் முழுமையான அழிவைக் காண்பார்களெனவும்; நீதியை நேசிப்போர் சுத்தமாக்கப்பட்ட பூமிக்குள் தப்பிப் பிழைப்பார்களெனவும் அவர்கள் நம்புகிறார்கள்.

(9) இந்த உலகத்திலிருந்து பிரிந்திருத்தல்: இயேசு தம்மைப் பின்பற்றுவோர் அவ்வாறிருப்பார்களென்று சொன்னதுபோல், அவர்கள் இந்த உலகத்தின் பாகமாயிராதபடி ஊக்கமாய்ப் பிரயாசப்படுகிறார்கள். தங்கள் அயலாருக்கு உண்மையான கிறிஸ்தவ அன்பு காட்டுகிறார்கள், ஆனால் எந்தத் தேசத்தின் அரசியலிலோ அல்லது போர்களிலோ அவர்கள் பங்குகொள்கிறதில்லை. தங்கள் குடும்பங்களின் பொருள் சம்பந்தமான தேவைகளை அவர்களுக்கு அளிக்கிறார்கள் ஆனால் பொருட்களையும் சொந்தப் புகழையும் பேராசையுடன் நாடித்தொடருவதும் இன்பத்தில் மிதமீறி தோய்ந்திருப்பதுமான இவ்வுலகத்தின் பேராசையான போக்கை அவர்கள் அறவே தவிர்க்கிறார்கள்.

(10) பைபிளிலுள்ள அறிவுரையைப் பொருத்திப் பயன்படுத்துவது: இப்பொழுது அனுதின வாழ்க்கையில்—வீட்டில், பள்ளியில், வேலையில், தங்கள் சபையில்—கடவுளுடைய வார்த்தையின் அறிவுரையைப் பொருத்திப் பயன்படுத்துவது முக்கியமென அவர்கள் நம்புகிறார்கள். ஒருவனுடைய சென்ற கால வாழ்க்கை என்னவாயிருந்தாலும், அவன், கடவுளுடைய வார்த்தை கண்டனம்செய்கிற பழக்கவழக்கச் செயல்களை முற்றிலும் விட்டொழித்து, அதன் தெய்வீக அறிவுரையை வாழ்க்கையில் பொருத்திப் பயன்படுத்தினால், அவன் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவனாகலாம். ஆனால் அதற்குப்பின் எவனாவது விபசாரம், வேசித்தனம், ஒத்தபாலினத்தவர் புணர்ச்சி, போதப்பொருள் துர்ப்பழக்கம், குடிவெறி, பொய்ச் சொல்லுதல், அல்லது திருடுதல் ஆன எதிலாவது பழக்கமாக ஈடுபட்டால், அமைப்பிலிருந்து நீக்கப்படுவான்.

(மேலே கொடுத்துள்ள குறிப்புப் பட்டியல், யெகோவாவின் சாட்சிகளின் முதன்மையான நம்பிக்கைகளில் சிலவற்றைச் சுருக்கமாய்க் குறிப்பிடுகிறது, ஆனால் மற்றத் தொகுதிகளிலிருந்து வேறுபடுகிற அவர்கள் நம்பிக்கைகளின் பேரில் எல்லாக் குறிப்புகளும் அதில் கொடுத்தில்லை. மேல்கொடுத்துள்ள நம்பிக்கைகளுக்கு வேதப்பூர்வ ஆதாரத்தை இந்தப் புத்தகத்தின் பொருளடக்க அட்டவணையைப் பயன்படுத்திக் கண்டறியலாம்.)

யெகோவாவின் சாட்சிகள் ஓர் அமெரிக்க மதத்தினரா?

அவர்கள் கடவுளுடைய ராஜ்யத்தின் சார்பாகப் பேசுபவர்கள், இந்தப் பழைய உலகத்துக்குரிய எந்தத் தேசத்தின் அரசியலையோ, பொருளாட்சியையோ, அல்லது சமுதாய ஒழுங்குமுறையையோ ஆதரிப்போரல்ல.

ஐக்கிய மாகாணங்களில் யெகோவாவின் சாட்சிகள் தங்கள் தற்காலத் தொக்கத்தைக் கொண்டனரென்பது உண்மையே. அவர்களுடைய உலகத் தலைமை அலுவலகம் அங்கிருப்பது பைபிள் புத்தகங்களை அச்சடித்து உலகத்தின் பெரும்பான்மையான பாகங்களுக்கு அனுப்புவதைச் சாத்தியமாக்க உதவிசெய்திருக்கிறது. ஆனால் சாட்சிகள் ஒரு தேசத்தை மற்றொன்றுக்கு மேலானதாக நோக்குகிறதில்லை; அவர்கள் பெரும்பாலும் எல்லா நாடுகளிலும் காணப்படுகிறார்கள், மேலும் பூமியின் பல பாகங்களில் அந்தந்தப் பகுதிகளிலுள்ள வேலையை மேற்பார்வையிட அலுவலகங்களைக் கொண்டிருக்கிறார்கள்.

கவனியுங்கள்: இயேசு ஒரு யூதனாகப் பலஸ்தீனாவில் பிறந்தார், ஆனால் கிறிஸ்தவம் பலஸ்தீனிய மதம் அல்லவல்லவா? மனிதனாக இயேசுவின் பிறப்பிடம் கவனிப்பதற்கு மிக முக்கிய காரியம் அல்ல. இயேசு கற்பித்தது அவருடைய பிதாவாகிய யெகோவா தேவனிடமிருந்து தொங்கினது, அவர் எல்லாத் தேசத்தாரின் ஜனங்களையும் பட்சபாதமில்லாமல் கையாளுகிறார்.—யோவான் 14:10; அப்போஸ்தலர் 10:34, 35.

யெகோவாவின் சாட்சிகளின் வேலைக்குப் பணச் செலவு எவ்வாறு நிறைவு செய்யப்படுகிறது?

பூர்வக் கிறிஸ்தவர்களின் காரியத்தில் இருந்ததுபோல், தாங்களாக விரும்பி அளிக்கும் நன்கொடைகளால் நடத்தப்படுகிறது. (2 கொரி. 8:12; 9:7) அவர்களுடைய கூட்டங்களில் ஒருபோதும் காணிக்கைகள் வாங்கப்படுகிறதில்லை; பொதுமக்களிடமிருந்து அவர்கள் ஒருபோதும் பணம் வசூலிப்பதில்லை. பைபிள் புத்தகங்களுக்குக் கொடுக்கும் நன்கொடைகள் அவற்றை அச்சடித்து அனுப்பும் செலவுக்கே உரியவை.

வீடுவீடாகச் செல்வதற்காயினும் வீதிகளில் பைபிள் புத்தகங்களை அளிப்பதற்காயினும் சாட்சிகளுக்குச் சம்பளம் கொடுக்கப்படுகிறதில்லை. கடவுளுக்கும் அயலாருக்கும் கொண்டுள்ள அன்பே, மனிதவர்க்கத்துக்குக் கடவுள் செய்திருக்கும் அன்புள்ள ஏற்பாடுகளைப்பற்றிப் பேச அவர்களுக்கு உள்நோக்கத் தூண்டுதலைக் கொடுக்கிறது.

யெகோவாவின் சாட்சிகள் பயன்படுத்தும் சட்டப்பூர்வ அரசியல் தனியுரிமை பெற்ற மத நிறுவனமான தி உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸயிட்டி ஆஃப் பென்சில்வேனியா, 1884-ல், அ.ஐ.மா. பென்சில்வேனியா சரிசம உரிமைக் கூட்டரசின் இலாபமற்ற நிறுவன சட்டத்துக்கிசைய சங்கமாக அமைக்கப்பட்டது. இவ்வாறு, சட்டப்படி இது இலாபம் உண்டுபண்ணும் வியாபார அமைப்பாக இருக்கமுடியாது, இருப்பதுமில்லை, தனியாட்களும் இந்தச் சங்கத்தின்மூலம் இலாபம் சம்பாதிப்பதில்லை. இந்தச் சங்கத்தின் தனியுரிமைப் பத்திரம் பின்வருமாறு கூறுகிறது: “இது [இந்தச் சங்கம்] அதன் உறுப்பினருக்காயினும், இயக்குநருக்காயினும், அலுவலர்களுக்காயினும் அவ்வப்போதோ மற்றப்படியோ பண வகையான ஆதாயத்தை அல்லது இலாபத்தைக் கருத்தில் கொண்டில்லை.”

யெகோவாவின் சாட்சிகள் ஒரு மத உட்பிரிவா அல்லது கருத்துவேறுபாட்டுக் குழுவா?

மத உட்பிரிவு என்பதைச் சிலர் சட்டப்படி நிறுவப்பட்ட ஒரு மதத்தைவிட்டுப் பிரிந்துசென்ற ஒரு குழுவென பொருள்கொள்கின்றனர். மற்றவர்கள் இந்தப் பதத்தை, ஒரு குறிப்பிட்ட மனிதத் தலைவனை அல்லது போகனைப் பின்பற்றும் ஒரு தொகுதிக்குப் பயன்படுத்துகின்றனர். பொதுவாய் இந்தப் பதம் இழிவான முறையில் பயன்படுத்தப்படுகிறது. யெகோவாவின் சாட்சிகள் ஏதோ சர்ச்சின் கிளைவிளைவு அல்லர் ஆனால் எல்லா வாழ்க்கைத் துறைகளிலிருந்தும் பல மத வளர்ப்புகளிலிருந்தும் வந்த ஆட்கள் அடங்கியவர்கள். அவர்கள் எந்த மனிதனையுமல்ல, அதற்கு மாறாக இயேசு கிறிஸ்துவையே தங்கள் தலைவராக நோக்குகின்றனர்.

கருத்துவேறுபாட்டுக் குழு என்பது புராதன நம்பிக்கைகளைக் கடைப்பிடிக்காத அல்லது விதிக்கப்பட்ட சடங்கு முறைப்படியான வணக்க வழிபாட்டுக்கு அழுத்தம் வைக்கும் ஒரு மதம் எனச் சொல்லப்படுகிறது. கருத்துவேறுபாட்டுக் குழுக்கள் பல, உயிர் வாழும் ஒரு மனிதத் தலைவனைப் பின்பற்றுகின்றனர், மேலும் அவர்கள் பற்றாளர்கள் சமுதாயத்திலுள்ள மற்றவர்களிலிருந்து தனியே பிரிந்து குழுக்களாக வாழ்கின்றனர். எனினும் புராதன நம்பிக்கைகளுக்குத் தராதரம் கடவுளுடைய வார்த்தையாகவே இருக்கவேண்டும், யெகோவாவின் சாட்சிகள் பைபிளைக் கண்டிப்பாய்க் கடைப்பிடிக்கின்றனர். அவர்களுடைய வணக்கம் ஒரு வாழ்க்கைமுறையாகும், சடங்காச்சார பக்தியல்ல. அவர்கள் எந்த மனிதனையாவது பின்பற்றுவதுமில்லை சமுதாயத்திலுள்ள மற்றவர்களிலிருந்து தங்களைத் தனியே ஒதுக்கிவைத்துக்கொள்வதுமில்லை. மற்ற ஜனங்களுக்கு மத்தியில் அவர்கள் வாழ்ந்தும் வேலைசெய்தும் வருகிறார்கள்.

யெகோவாவின் சாட்சிகளின் மதம் எவ்வளவு பழமையானது?

பைபிளின்படி, யெகோவாவின் சாட்சிகளின் வரிசை உண்மையுள்ள ஆபேல் வரைப் பின்சென்றெட்டுகிறது. எபிரெயர் 11:4–12:1-ல் பின்வருமாறு சொல்லியிருக்கிறது: “விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்; . . . விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக் குறித்துத் தேவ எச்சரிப்புப்பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான்; . . . விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான். . . . விசுவாசத்தினாலே மோச தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து, அநித்தியமான பாவசந்தோஷங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்[டான்]. . . . ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்.”

இயேசு கிறிஸ்துவைக் குறித்து, பைபிளில் பின்வருமாறு கூறியிருக்கிறது: “உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது.” அவர் யாருக்குச் சாட்சியாயிருந்தார்? தம்முடைய பிதாவின் பெயரைத் தாம் வெளிப்படுத்தினாரென அவர்தாமே சொன்னார். அவர் யெகோவாவின் முதன்மையான முதல் சாட்சி.—வெளி. 3:14; யோன் 17:6.

கவனத்தைத் தூண்டுவதாய், யூதரில் சிலர், இயேசு கிறிஸ்துவின் ஊழியம் ஒரு “புதிய உபதேசத்தைக்” குறித்ததாவெனக் கேட்டார்கள். (மாற்கு 1:27) பின்னால், கிரேக்கர் சிலர் அப்போஸ்தலனாகிய பவுல் ஒரு “புதிதான உபதேசத்தை” அறிமுகஞ்செய்வதாக எண்ணினர். (அப். 17:19, 20) அதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களின் செவிகளுக்கு அது புதிதாயிருந்தது, ஆனால் முக்கியமானக் காரியம் என்னவெனில் அது சத்தியமாயும், கடவுளுடைய வார்த்தைக்கு முழு ஒத்திசைவுடனும் இருந்ததேயாகும்.

யெகோவாவின் சாட்சிகளின் தற்கால சரித்திரம், அ.ஐ.மா., பென்சில்வேனியாவிலுள்ள அலிகெனியில், 1870-க்குரிய பத்தாண்டுகளின் முற்பகுதியில், பைபிள் படிப்புக்காக ஒரு தொகுதி உருவானதோடு தொங்கினது. முதன்முல் அவர்கள் பைபிள் மாணாக்கர்கள் என்று மாத்திரமே அறியப்பட்டனர், ஆனால் 1931-ல் அவர்கள் யெகோவாவின் சாட்சிகள் என்ற வேதப்பூர்வ பெயரை ஏற்றனர். (ஏசா. 43:10-12) அவர்களுடைய நம்பிக்கைகளும் நடவடிக்கைகளும் புதியவையல்ல அவை முதல்-நூற்றாண்டு கிறிஸ்தவத்தைத் திரும்ப நடைமுறைக்குக் கொண்டுவந்ததேயாகும்.

தங்கள் மதம் ஒன்றே சரியானதென்று யெகோவாவின் சாட்சிகள் நம்புகிறார்களா?

கடவுளை வணங்குவதற்கு ஏற்கத்தகுந்த வழிகள் பல உண்டென்ற தற்காலக் கருத்தை பைபிள் ஒப்புக்கொள்கிறதில்லை. “ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமுமே” இருக்கிறதென எபேசியர் 4:5-ல் சொல்லியிருக்கிறது. இயேசு பின்வருமாறு கூறினார்: “ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர். . . . பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.”—மத். 7:13, 14, 21; 1 கொரிந்தியர் 1:10-ஐயும் பாருங்கள்.

உண்மையான கிறிஸ்தவ போகங்களின் தொகுதியை வேத எழுத்துக்கள் “சத்தியம்,” என திரும்பத்திரும்பக் குறிப்பிடுகின்றன, மேலும் கிறிஸ்தவம் “சத்தியமார்க்கம்,” எனப் பேசப்பட்டிருக்கிறது. (1 தீமோ. 3:15; 2 யோவான் 1; 2 பேதுரு 2:2) யெகோவாவின் சாட்சிகள் தங்கள் எல்லா நம்பிக்கைகளையும், நடத்தைக்குரிய தங்கள் தராதரங்களையும், அமைப்பு செயல்படுவதற்குரிய முறைகளையும் பைபிளில் ஆதாரங்கொள்ள வைப்பதால், பைபிள்தானே கடவுளுடைய வார்த்தை என்ற அவர்களுடைய விசுவாசம், தாங்கள் கொண்டிருப்பது நிச்சயமாகவே சத்தியம் என்ற உறுதியான நம்பிக்கையை அவர்களுக்குக் கொடுக்கிறது. ஆகையால் அவர்கள் நிலை தற்பெருமை காட்டுவதல்ல, ஆனால் ஒருவருடைய மதத்தை மதிப்பிட்டறிய பைபிளே சரியான தராதரம் என்ற அவர்கள் திடநம்பிக்கையை தெளிவுபடுத்திக் காட்டுகிறது. அவர்கள் தன்னலமே கருதியிருப்போரல்ல, தங்கள் நம்பிக்கைகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள ஆவலுள்ளோராய் இருக்கின்றனர்.

மற்ற மதங்களும் பைபிளைப் பின்பற்றுகின்றனவல்லவா?

அவற்றில் பல ஓரளவுக்கு அதைப் பயன்படுத்துகின்றன. ஆனால் அதில் அடங்கியுள்ளவற்றை அவை உண்மையில் கற்பித்து நடைமுறையில் கடைப்பிடிக்கின்றனவா? கவனியுங்கள்: (1) பைபிள் மொழிபெயர்ப்புகள் பெரும்பான்மையானவற்றிலிருந்து உண்மையான கடவுளுடைய பெயரை அவை ஆயிரக்கணக்கான தடவைகள் நீக்கியிருக்கின்றன. (2) கடவுளைப்பற்றித்தானே அவை கொண்டுள்ள கருத்தாகிய திரித்துவக் கோட்பாடு, பைபிள் எழுதி பூர்த்தியாக்கப்பட்டு பல நூற்றாண்டுகளானபின்பு, புறமத தோற்றுமூலங்களிலிருந்து கடன்வாங்கி அதன் தற்போதைய முறையில் வளர்த்து உருவாக்கப்பட்டது. (3) தொடர்ந்த வாழ்க்கைக்கு ஆதாரமாக மனித ஆத்துமா சாவாமையில் அவர்களின் நம்பிக்கை பைபிளிலிருந்து எடுக்கப்படவில்லை; பூர்வ பாபிலோனில் அது மூலத் தோற்றத்தைக் கொண்டிருக்கிறது. (4) இயேசுவின் பிரசங்கப் பொருள் கடவுளுடைய ராஜ்யமாகும், மேலும் அதைப்பற்றி மற்றவர்களிடம் நேரில் சந்தித்துப் பேச அவர் தம்முடைய சீஷர்களை வெளியில் அனுப்பினார்; ஆனால் இன்று சர்ச்சுகள் இந்த ராஜ்யத்தைப்பற்றி மிக அரிதாகவே குறிப்பிடுகின்றன. மேலும் அவற்றின் உறுப்பினர் “ராஜ்யத்தைப்பற்றிய இந்த நற்செய்தியைப்” பிரசங்கிக்கும் வேலையைச் செய்கிறதில்லை. (மத். 24:14) (5) தம்மை உண்மையாய்ப் பின்பற்றுவோரை, அவர்கள் தாங்கள் ஒருவருக்கொருவர் கொண்டுள்ள தன்னலத்தியாக அன்பினால் உடனடியாக அடையாளங்கண்டுகொள்ள முடியுமென இயேசு சொன்னார். தேசங்கள் போரிடுகையில் கிறிஸ்தவ மதங்களின் காரியத்தில் இவ்வாறிருக்கிறதா? (6) கிறிஸ்துவின் சீஷர்கள் இவ்வுலகத்தின் பாகமாக இரார் என்று பைபிளில் சொல்லியிருக்கிறது, மேலும், உலகத்தின் சிநேகிதனாயிருக்க விரும்புகிற எவனும் தன்னைக் கடவுளின் பகைஞனாக்கிக்கொள்கிறான் என்றும் அது எச்சரிக்கிறது; ஆனால் கிறிஸ்தவமண்டலத்தின் சர்ச்சுகளும் அவற்றின் உறுப்பினரும் தேசங்களின் அரசியல் விவகாரங்களில் ஆழ்ந்து உட்பட்டிருக்கின்றனர். (யாக். 4:4) இத்தகைய பதிவைக் கருதுகையில், அவர்கள் உண்மையில் பைபிளைக் கடைப்பிடிக்கின்றனரென நேர்மையாய்ச் சொல்லமுடியுமா?

யெகோவாவின் சாட்சிகள் பைபிளைப்பற்றிய தங்கள் விளக்கத்தை எவ்வாறு அடைகின்றனர்?

பைபிள் கடவுளுடைய வார்த்தை எனவும் அதில் அடங்கியுள்ளது தங்கள் போனைக்கே எனவும் சாட்சிகள் உண்மையில் நம்புவதே ஒரு முக்கிய காரியமாகும். (2 தீமோ. 3:16, 17; ரோமர் 15:4; 1 கொரி. 10:11) ஆகையால் சத்தியத்தைப்பற்றிய அதன் தெளிவான கூற்றுகளைத் தவிர்க்க அல்லது அதன் ஒழுக்கத் தராதரங்களைத் தள்ளிவிட்ட ஆட்களின் வாழ்க்கைமுறையைச் சரி என்பதுபோல் காட்ட அவர்கள் தத்துவ விவாதங்களை நாடிச் செல்வதில்லை.

பைபிளிலுள்ள அடையாளக்குறிப்பான மொழியின் பொருளைக் குறிப்பிடுகையில், அவை குறிக்கும் பொருளைப் பற்றித் தாங்கள் யூகிக்கும் கருத்தைக் கொடுப்பதற்கு மாறாக, பைபிள்தானேயும் அதன் சொந்த விளக்கத்தை அளிக்கும்படி அவர்கள் விடுகின்றனர். (1 கொரி. 2:13) அடையாளக்குறிப்பான பதங்களின் பொருளைப்பற்றிய விளக்கக் குறிப்புகள் பைபிளின் மற்றப் பாகங்களில் பொதுவாய்க் காணப்படுகின்றன. (உதாரணமாக, வெளிப்படுத்துதல் 21:1-ஐப் பாருங்கள்; பின்பு, “சமுத்திரம்,” என்பதன் பொருளைக் குறித்து, ஏசாயா 57:20-ஐ வாசியுங்கள். வெளிப்படுத்துதல் 14:1-ல் குறிப்பிட்டுள்ள “ஆட்டுக்குட்டியானவர்,” யாரென அடையாளங் கண்டுகொள்ள, யோன் 1:29-ஐயும் 1 பேதுரு 1:19-ஐயும் பாருங்கள்.)

தீர்க்கதரிசன நிறைவேற்றத்தைக் குறித்ததில், முன்னறிவித்துள்ளவற்றிற்கு ஒத்தச் சம்பவங்களைக் கவனிக்க விழிப்பாயிருப்பதைப்பற்றி இயேசு சொன்னதை அவர்கள் பொருத்திப் பயன்படுத்துகின்றனர். (லூக்கா 21:29-31; 2 பேதுரு 1:16-19-ஐ ஒத்துப்பாருங்கள்.) மனச்சாட்சியுடன் அவர்கள் அந்தச் சம்பவங்களைக் குறிப்பிட்டுக்காட்டி அவை பொருள்கொள்வதாக பைபிள் தெரிவிப்பவற்றிற்குக் கவனஞ்செலுத்தும்படி செய்கிறார்கள்.

இயேசு தாம் பூமியில் “உண்மையும் விவேகமுமுள்ள அடிமையைக்” (தம்மைப் பின்பற்றும் அபிஷேகஞ்செய்யப்பட்டவர்களை ஒரு தொகுதியாகக் கருதுதல்), கொண்டிருப்பாரெனவும், தம்முடைய விசுவாச வீட்டாராயிருப்போருக்கு இந்தக் கருவியின்மூலம் ஆவிக்குரிய உணவைத் தாம் அருளுவாரெனவும் சொன்னார். (மத். 24:45-47) யெகோவாவின் சாட்சிகள் இந்த ஏற்பாட்டை அறிந்து ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். முதல்-நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் செய்ததைப்போல், கடினமான கேள்விகளை ஆராய்ந்து முடிவு செய்வதற்கு இவர்கள் இந்த “அடிமை” வகுப்பாரின் நிர்வாகக் குழுவை நோக்கியிருக்கிறார்கள்—மனித ஞானத்தின் அடிப்படையில் அல்ல, ஆனால் கடவுளுடைய வார்த்தையின்பேரிலும் தம்முடைய ஊழியரோடு அவர் தொர்புகொண்டிருந்தவற்றின்பேரிலும் கொண்டுள்ள தங்கள் அறிவைக்கொண்டும், கடவுளுடைய ஆவிக்காக ஊக்கமாய் ஜெபித்து, அதன் உதவியைக் கொண்டும் நிர்வாகக் குழு தீர்மானிக்கிறது.—அப். 15:1-29; 16:4, 5.

ஆண்டுகளின்போக்கில் யெகோவாவின் சாட்சிகளின் போகங்களில் ஏன் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன?

யெகோவா, தம் ஊழியர் தம்முடைய நோக்கத்தைப் படிப்படியாய் முன்னேறும் முறையில் விளங்கிக்கொள்ளச் செய்கிறாரென பைபிள் காட்டுகிறது. (நீதி. 4:18; யோன் 16:12) இவ்வாறு, பைபிளின் பாகங்களை எழுத தேவாவியால் ஏவப்பட்ட தீர்க்கதரிசிகள் தாங்கள் எழுதின எல்லாவற்றின் பொருளையும் விளங்கிக்கொள்ளவில்லை. (தானி. 12:8, 9; 1 பேதுரு 1:10-12) இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் தங்கள் காலத்தில் தாங்கள் விளங்கிக்கொள்ளாத மிகுதியானவை இருந்ததை உணர்ந்தார்கள். (அப். 1:6, 7; 1 கொரி. 13:9-12) “முடிவுகாலத்தின்”போது சத்தியத்தின் அறிவில் மிகுதியான பெருக்கம் இருக்குமென பைபிள் காட்டுகிறது. (தானி. 12:4) அறிவின் பெருக்கம் ஒருவரின் சிந்தனையில் சரிசெய்தலைப் பெரும்பாலும் தேவைப்படுத்துகிறது. இத்தகைய சரிப்படுத்தல்களை மனத்தாழ்மையுடன் செய்துகொள்ள யெகோவாவின் சாட்சிகள் மனமுள்ளோராய் இருக்கிறார்கள்.

யெகோவாவின் சாட்சிகள் ஏன் வீடுவீடாய்ப் பிரசங்கிக்கிறார்கள்?

இந்த வேலை நம் நாளில் செய்யப்படுவதை இயேசு முன்னறிவித்தார்: “இராஜ்யத்தைப்பற்றிய இந்த நற்செய்தி குடியிருக்கப்பட்ட பூமியெங்கும் சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்.” மேலும் அவர் தம்மைப் பின்பற்றினோருக்குப் பின்வருமாறு கட்டளையிட்டார்: “போய் . . . சகல ஜாதியாரின் ஜனங்களையும் சீஷராக்குங்கள்.”—மத். 24:14; 28:19, NW.

இயேசு தம்முடைய முதல் சீஷர்களை அனுப்பினபோது, ஜனங்களின் வீடுகளுக்குப் போகும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார். (மத். 10:7, 11-13) அப்போஸ்தலனாகிய பவுல் தன் ஊழியத்தைக் குறித்துப் பின்வருமாறு கூறினான்: “பிரயோஜனமானவைகளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்துவைக்காமல் பகிரங்கமாகவும் வீடுவீடாகவும் உங்களுக்கு உபதேசித்து அறிவித்தேன்.”—அப். 20:20, 21, தி.மொ.; அப்போஸ்தலர் 5:42-ஐயும் பாருங்கள்.

சாட்சிகள் அறிவிக்கும் இந்தச் செய்தி ஜனங்களின் உயிரை உட்படுத்துகிறது; அவர்கள் ஒருவரையும் விட்டுவிடாதபடி கவனமாயிருக்க விரும்புகிறார்கள். (செப். 2:2, 3) அவர்களுடைய சந்திப்புகள்—முதலாவது கடவுளின் பேரிலும் பின்னும் தங்கள் அயலாரின்பேரிலுமுள்ள—அன்பின் நோக்கத்தால் தூண்டப்பட்டவை.

ஸ்பெய்னில் நடந்த மதத் தலைவர்களின் ஒரு மாநாட்டில் பின்வரும் இது குறிப்பிடப்பட்டது: “விதிமுறைவழுவாமல் அமைத்துள்ள சாட்சிகளின் மிகப் பெரிய முன்னீடுபாட்டை—வீட்டுச் சந்திப்பை, ஒருவேளை [சர்ச்சுகள்] மட்டுக்குமீறிய அளவில் புறக்கணித்திருக்கலாம், இது [வீட்டுச் சந்திப்பு] பண்டைக்காலத்திய சர்ச்சின் அப்போஸ்தல ஒழுங்குமுறைக்குள் வருகிறது. சர்ச்சுகள், பெரும்பாலும், தங்கள் ஆலயங்களைக் கட்டுவதற்கும், தங்கள் ஜனங்களைக் கவர்ந்திழுக்கத் தங்கள் மணிகளை அடிப்பதற்கும் வணக்கத்துக்குரிய தங்கள் இடங்களுக்குள் பிரசங்கிப்பதற்கும் தங்களை மட்டுப்படுத்தி வைத்திருக்கையில், [சாட்சிகள்] அப்போஸ்தலரின் திறம்பட்ட முறையாகிய வீடுவீடாகச் செல்வதையும் சாட்சி கொடுப்பதற்கு எல்லாச் சந்தர்ப்பத்தையும் அனுகூலப்படுத்திக்கொள்வதையும் பின்பற்றுகிறார்கள்.”—El Catolicismo, போகாட்டா, கொலாம்பியா, செப்டம்பர் 14, 1975, பக். 14.

ஆனால் தங்கள் விசுவாசத்தில் பங்குகொள்ளாத ஆட்களின் வீடுகளுக்குங்கூட சாட்சிகள் ஏன் திரும்பத்திரும்பச் சென்று சந்திக்கிறார்கள்?

அவர்கள் தங்கள் செய்தியை மற்றவர்களின்பேரில் வற்புறுத்துகிறதில்லை. ஆனால் ஆட்கள் புதிய வீடுகளுக்கு மாறிச் செல்கின்றனரெனவும் ஆட்களின் சூழ்நிலைமைகள் மாறுகின்றனதெனவும் அவர்கள் அறிந்திருக்கிறார்கள். இன்று ஒருவர் கேட்பதற்கு நேரமில்லாமல் மிக வேலையாயிருக்கலாம்; மற்றொரு சமயத்தில் அவர் கேட்பதற்கு மகிழ்ச்சியுடன் நேரம் செலவிடலாம். குடும்பத்தின் ஓர் உறுப்பினர் ஒருவேளை அக்கறைகாட்டாதிருக்கலாம், ஆனால் மற்றவர்கள் அக்கறை காட்டலாம். ஆட்கள்தாமேயும் மாறுகிறார்கள்; வாழ்க்கையில் வினைமையான பிரச்னைகள் ஆவிக்குரிய தேவையைப்பற்றிய உணர்வைத் தூண்டிவிலாம்.—ஏசாயா 6:8, 11, 12-ஐயும் பாருங்கள்.

யெகோவாவின் சாட்சிகள் ஏன் துன்புறுத்தப்படுகின்றனர், எதிர்ப்புடன் பேசப்படுகின்றனர்?

இயேசு பின்வருமாறு கூறினார்: “உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள். நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.” (யோவான் 15:18, 19; 1 பேதுரு 4:3, 4-ஐயும் பாருங்கள்.) உலகம் முழுவதும் சாத்தானின் கட்டுப்பாட்டுக்குள் கிடக்கிறதென பைபிள் காட்டுகிறது; அவனே இந்தத் துன்புறுத்தலுக்கு மூலக்காரணனாயிருந்து தூண்டிவிடுகிறவன்.—1 யோவான் 5:19; வெளி. 12:17.

இயேசு மேலும் தம்முடைய சீஷருக்குச் சொன்னதாவது: “என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள். முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.” (மாற்கு 13:13) இங்கே “நாமம்” (பெயர்) அதிகாரப் பதவியின்படி இயேசு இருப்பதை, மேசியானிய அரசராக அவர் இருப்பதைக் குறிக்கிறது. யெகோவாவின் சாட்சிகள், பூமிக்குரிய எந்த அரசரின் கட்டளைளுக்கும் முற்பட அவருடைய கட்டளைகளை வைப்பதனால் துன்புறுத்தல் வருகிறது.

ஒருவர் இவ்வாறு சொன்னால்—

‘இந்த உலகத்தை (சமுதாயத்தை) வாழ்வதற்கு மேம்பட்ட நலமுடைய இடமாக்குவதற்கு உதவிசெய்யும் காரியங்களைச் செய்வதில் நீங்கள் ஏன் ஈடுபடக்கூடாது?’

நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்:  ‘இந்தச் சமுதாயத்திலுள்ள நிலைமைகள் சந்தேகமில்லாமல் உங்களுக்கு முக்கியமானவை, எனக்குங்கூட அவை அவ்வாறிருக்கின்றன. நான் ஒன்று கேட்கலாமா, எந்தப் பிரச்னை முதலாவது கவனம் செலுத்தப்படவேண்டியதென நீங்கள் உணருகிறீர்கள்?’ பின்பு மேலும் சொல்லலாம்:  ‘இது இத்தகைய பெரும் தேவையாய்விட்டதென நீங்கள் ஏன் உணருகிறீர்கள்? . . . தெளிவாகவே, இந்தக் காரியத்தின்பேரில் உடனடியான நடவடிக்கை எடுப்பது நன்மையாயிருக்கும், ஆனால் நீடித்த கால முன்னேற்றத்தைக் காண நாம் விரும்புவோமென்பதை ஒப்புக்கொள்வீர்களென நான் நிச்சயமாயிருக்கிறேன். இந்தக் காரியத்தின்பேரில் இந்த நோக்கையே யெகோவாவின் சாட்சிகளான நாங்கள் ஏற்கிறோம். (தனித்தனி ஆட்களாக இந்தக் காரியத்தின் மூலக் காரணத்தை நீக்க ஆட்கள் தங்கள் வாழ்க்கையில் பைபிள் நியமங்களைப் பொருத்திப் பயன்படுத்துவதற்கு உதவிசெய்ய நாம் செய்வதையும்; மேலும் கடவுளுடைய ராஜ்யம் செய்யப்போவதையும், இது மனிதவர்க்கத்தின் பிரச்னைகளை நிலையாய்த் தீர்க்குமென்பதையும் விளக்குங்கள்.)’

அல்லது இவ்வாறு சொல்லலாம்:  ‘(முன் சொன்ன பதிலில் சில குறிப்புகளை எடுத்துக் கூறினபின்பு . . . ) சிலர் பணம் கொடுப்பதன்மூலம் சமுதாய முன்னேற்றத்துக்கு உதவிசெய்கிறார்கள்; மற்றவர்கள் தங்கள் சேவையைத் தாங்களாக முன்வந்து அளிப்பதனால் அவ்வாறு செய்கிறார்கள். யெகோவாவின் சாட்சிகள் இரண்டையும் செய்கிறார்கள். இதை நான் விளக்குகிறேன்.’ பின்பு மேலும் சொல்லலாம்:  (1) ‘யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராயிருக்க, ஒருவன் மனச்சாட்சியுடன் தன் வரிகளைச் செலுத்தவேண்டும்; இது தேவைப்பட்ட சேவைகளைச் செய்ய அரசாங்கத்துக்குப் பணம் அளிக்கிறது.’ (2) ‘இதற்கும் மேலாகவும் நாங்கள் செல்கிறோம், ஆட்களின் வீடுகளுக்குச் சென்று சந்தித்து, அவர்களுக்குச் செலவில்லாமல் இலவசமாய் அவர்களோடு பைபிளைப் படிக்க முன்வருகிறோம். பைபிளில் சொல்லியிருப்பவற்றோடு அவர்கள் அறிமுகமாகையில், பைபிள் நியமங்களை வாழ்க்கையில் பொருத்திப் பயன்படுத்தவும் இவ்வாறு தங்கள் பிரச்னைகளை எதிர்த்துச் சமாளிக்கவும் கற்றுக்கொள்கிறார்கள்.’

பயன்படுத்தக்கூடிய இன்னொரு முறை:  ‘இந்தக் காரியத்தை நீங்கள் கவனத்துக்குக் கொண்டுவந்ததைக் குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். சமுதாய விவகாரங்களைப்பற்றிச் சாட்சிகள் உண்மையில் என்ன செய்கிறார்களெனக் கண்டுகொள்ள பலர் ஒருபோதும் விவரம் கேட்டதில்லை. உதவிசெய்ய முன்வருவதற்கு சந்தேகமில்லாமல் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகள் இருக்கின்றன.’ பின்பு மேலும் சொல்லலாம்:  (1) ‘சிலர்—மருத்துவ சாலைகள், முதியோர் விடுதிகள், போதப்பொருள் துர்ப்பழக்கத்தாருக்கான சீர்ப்படுத்தும் ஸ்பனங்கள், முதலியவைப்போன்ற—நிறுவனங்களை அமைப்பதன்மூலம் அதைச் செய்கின்றனர். மற்றவர்கள் ஜனங்களின் வீடுகளுக்கே நேரில் சென்று தங்களால்கூடிய பொருத்தமான உதவி செய்ய தாங்களாக முன்வரலாம். இதையே யெகோவாவின் சாட்சிகள் செய்கிறார்கள்.’ (2) ‘வாழ்க்கையின்பேரில் ஒருவரின் முழு நோக்குநிலையையும் மாற்றக்கூடிய ஒன்று இருக்கிறதென்று நாங்கள் கவனித்திருக்கிறோம், அதுவே வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தையும் எதிர்காலம் வைத்திருப்பதையும் பற்றி பைபிளில் காட்டியுள்ள அறிவாகும்.’

கூடுதலான யோ னை: ‘இந்தக் கேள்வியை நீங்கள் எழுப்பினதை நான் மதிக்கிறேன். நிலைமைகள் முன்னேற்றமடைவதைக் காண நாம் விரும்புகிறோம் அல்லவா? நான் இதைக் கேட்கலாமா, இயேசு கிறிஸ்துதாமே செய்ததைப்பற்றி நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள்? அவர் ஜனங்களுக்கு உதவிசெய்துகொண்டு சென்ற முறை நடைமுறையானதென்று நீங்கள் சொல்வீர்களா? . . . அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றவே நாங்கள் முயற்சி செய்கிறோம்.’

‘கிறிஸ்தவர்கள் இயேசுவுக்கே சாட்சிகளாயிருக்கும்படி கருதப்படுகிறார்கள், யெகோவாவுக்கு அல்ல’

நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்:  ‘கவனத்தைக் கவரும் ஒரு குறிப்பை நீங்கள் கொண்டுவந்தீர்கள். இயேசுவின் சாட்சிகளாயிருக்கவேண்டிய ஒரு பொறுப்பு நமக்கு இருக்கிறதென்று நீங்கள் சொன்னது சரியே. இதனிமித்தமே கடவுளுடைய நோக்கத்தில் இயேசு வகிக்கும் பாகம் எங்கள் பிரசுரங்களில் அறிவுறுத்தப்படுகிறது. (இதை மெய்ப்பித்துக்காட்ட தற்போதைய ஒரு புத்தகம் அல்லது பத்திரிகையை நீங்கள் பயன்படுத்த விரும்பலாம்.) ஆனால்ங்களுக்குப் புதிய எண்ணமாயிருக்கக்கூடிய ஒன்று இங்கே இருக்கிறது. (வெளி. 1:5) . . . இயேசு யாருக்கு “உண்மையுள்ள சாட்சி”யாக இருந்தார்? (யோவான் 5:43; 17:6) . . . நாம் பார்த்துப் பின்பற்றவேண்டிய முன்மாதிரியை இயேசு வைத்தார் அல்லவா? . . . இயேசுவையும் அவருடைய பிதாவையும் அறிவது ஏன் முக்கியம்? (யோவான் 17:3)’