Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆராய்ச்சி எண் 1—வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை வலம்வருதல்

ஆராய்ச்சி எண் 1—வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை வலம்வருதல்

ஆராய்ச்சி எண் 1—வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை வலம்வருதல்

வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் நிலப்பகுதிகள், இயற்கை அமைப்புகள், மலைகள், பள்ளத்தாக்குகள், நதிகள், ஏரிகள், தட்பவெப்பநிலை, மண், பல்வேறு தாவர வகைகள்.

வாக்குப்பண்ணப்பட்ட பூர்வ தேசத்துக்கு யெகோவா தேவனே எல்லைகளைக் குறித்தார். (யாத். 23:31; எண். 34:​1-12; யோசு. 1:4) பல நூற்றாண்டுகளாக இந்த நிலப்பகுதியைப் பலஸ்தீனா தேசம் என்று சிலர் குறிப்பிட்டனர். இது பலேஸ்டீனா (Palaestina) என்ற லத்தீன் சொல்லிலிருந்தும் பலேய்ஸ்டைன் (Pa·lai·stiʹne) என்ற கிரேக்க சொல்லிலிருந்தும் உருவான ஒரு பெயர். பலேய்ஸ்டைன் என்ற சொல், பெலீஷெத் (Peleʹsheth) என்ற எபிரெய சொல்லிலிருந்து வந்தது. எபிரெய வேதாகமத்தில், பெலீஷெத் என்ற சொல், “பெலிஸ்தியா” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது; இது பெலிஸ்தரின் பிராந்தியத்தை மாத்திரமே குறிப்பிடுகிறது, இவர்கள் கடவுளுடைய ஜனங்களுக்கு விரோதிகள். (யாத். 15:14) எனினும், உண்மையுள்ள ஆபிரகாமுக்கும் அவருடைய சந்ததிக்கும் அந்தத் தேசத்தை கொடுப்பதாக யெகோவா வாக்கு கொடுத்திருந்தார். அதனால், ‘வாக்குப்பண்ணப்பட்ட தேசம்,’ அல்லது “வாக்குத்தத்த தேசம்” என்பது மிகப் பொருத்தமாக உள்ளது. (ஆதி. 15:18; உபா. 9:​27, 28, தி.மொ.; எபி. 11:​9, தி.மொ.) இந்தத் தேசம் பல்வகைப்பட்ட நில இயல் அமைப்பை பெற்றிருப்பதால் அதன் சிறப்பே தனிதான். ஏனெனில் பூமி முழுவதும் காணப்படுகிற சிறப்புவாய்ந்த அம்சங்களும், மிக வித்தியாசமான இயற்கை அமைப்புகளும் இச்சிறிய நிலப்பகுதியில் அடங்கியுள்ளன. யெகோவா தம்முடைய பூர்வ சாட்சிகளுக்கு பல்வேறு அழகிய அம்சங்கள் நிறைந்த வாக்குத்தத்த தேசத்தை சுதந்தரமாக கொடுத்தார். அப்படியென்றால், எதிர்காலத்திலும் தம்முடைய ஒப்புக்கொடுத்த வணக்கத்தாருக்கு, அவர்களுடைய மகிழ்ச்சிக்காக பூமி முழுவதிலுமே மலைகளையும், பள்ளத்தாக்குகளையும், நதிகளையும், ஏரிகளையும் கொண்ட சிறப்புமிக்க புதிய உலகப் பரதீஸை அவர் நிச்சயமாகவே கொடுப்பார். நாம் இப்போது வாக்குத்தத்த தேசத்துக்கு சுற்றுலா செல்வதாக கற்பனை செய்துகொள்வோம். அதன் நிலவியல் அமைப்புக்கு கூர்ந்து கவனம் செலுத்துவோம். a

தேசத்தின் பரப்பளவு

2எண்ணாகமம் 34:​1-12-ல் சொல்லப்பட்டிருக்கிறபடி, கடவுள் குறித்த எல்லைகளைப் பார்த்தால், இஸ்ரவேலுக்கு கொடுக்கப்போவதாக வாக்குப்பண்ணப்பட்ட அந்தத் தேசம் நீண்ட, ஆனால் குறுகலான ஒரு பிராந்தியம். வடக்கு-தெற்காக அதன் சராசரி நீளம் ஏறக்குறைய 480 கிலோமீட்டர்; சராசரி அகலமோ ஏறக்குறைய 56 கிலோமீட்டர். தாவீது, சாலொமோன் ஆகிய ராஜாக்களின் ஆட்சிவரை, வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் முழு நிலப்பகுதியையும் கைப்பற்றி, அங்கிருந்த அநேக மக்களை தங்கள் ஆதிக்கத்திற்கு உட்படுத்தவில்லை. எனினும், யூதர்கள் உண்மையில் தாண் துவக்கிப் பெயெர்செபா மட்டும் குடியேறியதாக பொதுவாய் சொல்லப்படுகிறது. அது வடக்கிலிருந்து தெற்கு வரை சுமார் 240 கிலோமீட்டர் தூரம். (1 இரா. 4:25) கர்மேல் மலையிலிருந்து கலிலேயா கடல்வரை இதன் தூரம் ஏறக்குறைய 51 கிலோமீட்டர்; தெற்கில் மத்தியதரைக் கடலின் தென்மேற்கு வளைவில் காசா அமைந்துள்ளது. காசாவிலிருந்து சவக்கடல் வரை உள்ள தூரம் 80 கிலோமீட்டருக்கு மேல். யோர்தான் நதிக்கு மேற்கே மக்கள் குடியேறிய பகுதி ஏறக்குறைய 15,000 சதுர கிலோமீட்டர் மாத்திரமே. எனினும், இஸ்ரவேலர் யோர்தானுக்குக் கிழக்கேயிருந்த நிலங்களிலும் (ஆரம்பத்தில் வாக்குப்பண்ணப்பட்ட எல்லைகளுக்கு உட்படாத நிலங்கள்) குடியேறினர். ஆக, குடியேறிய பிராந்தியத்தின் மொத்த பரப்பளவு கிட்டத்தட்ட 26,000 சதுர கிலோமீட்டர்.

இயற்கை பிரதேசங்கள்

3வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை நாம் சுற்றிப் பார்ப்பது அந்த நாட்டின் பின்வரும் இயற்கை பிரிவுகளின் வழியாக நம்மை கொண்டுசெல்லும். கீழ்க்காணும் முக்கிய பகுதிகள், தொடர்ந்துவரும் நிலப்படத்தை விளங்கிக்கொள்ள உதவுகின்றன. ஆராயப்படும் நிலப்பகுதிகளின் தோராயமான எல்லைகளை இவை குறித்துக் காட்டுகின்றன.

பிரதேசங்களின் புவியியல் அமைப்புகள்

அ. பெரிய சமுத்திரத்தின் கடலோரப் பகுதி.​—யோசு. 15:12.

ஆ. யோர்தானுக்கு மேற்கிலுள்ள சமவெளிகள்

1. ஆசேர் சமவெளி.​—நியா. 5:17.

2. தோரின் நீண்ட, குறுகலான கடலோரப் பகுதி.யோசு. 12:23.

3. சாரோனின் மேய்ச்சல் நிலங்கள்.​—1 நா. 5:16.

4. பெலிஸ்த சமவெளி.​—ஆதி. 21:32; யாத். 13:17.

5. மத்திய கிழக்கு-மேற்கு பள்ளத்தாக்கு

(i) மெகிதோ சமவெளி (எஸ்ட்ரெலான்).​—2 நா. 35:22.

(ii) யெஸ்ரயேல் பள்ளத்தாக்கு.​—நியா. 6:33.

இ. யோர்தானுக்கு மேற்கிலுள்ள மலைப் பிரதேசங்கள்

1. கலிலேய மலைகள்.​—யோசு. 20:7; ஏசா. 9:1.

2. கர்மேல் மலைகள்.​—1 இரா. 18:​19, 20, 42.

3. சமாரிய மலைகள்.​—எரே. 31:​5; ஆமோ. 3:9.

4. சமபூமி.​—யோசு. 11:​2; நியா. 1:9.

5. யூதாவின் மலைநாடு.​—யோசு. 11:21.

6. யூதாவின் வனாந்தரம் (எஷிமோன்).​—நியா. 1:16; 1 சா. 23:19.

7. நெகெப் (தென்னாடு, தி.மொ.).​—ஆதி. 12:9, NW; எண். 21:1.

8. பாரான் வனாந்தரம்.​—ஆதி. 21:21; எண். 13:​1-3.

ஈ. பெரும் அராபா (மகா பிளவு பள்ளத்தாக்கு).​—2 சா. 2:​29; எரே. 52:7; தி.மொ.

1. ஹுல்லா நதிப்பள்ளத்தாக்கு.

2. கலிலேயா கடலைச் சூழ்ந்த பிரதேசம்.​—மத். 14:34; யோவா. 6:1.

3. யோர்தான் பள்ளத்தாக்கு மாகாணம் (கோர்).​—1 இரா. 7:​46; 2 நா. 4:17; NW; லூக். 3:6.

4. உப்புக் (சவக்) கடல் (அராபாக் கடல்).​—எண். 34:3; உபா. 4:​48, தி.மொ.; யோசு. 3:16.

5. அராபா (உப்புக் கடலுக்குத் தெற்கேயுள்ள பகுதி).​—உபா. 2:8, தி.மொ.

உ. யோர்தானுக்குக் கிழக்கிலுள்ள மலைகளும் பீடபூமிகளும்.​—யோசு. 13:​9, 16, 17, 21; 20:8.

1. பாசான் தேசம்.​—1 நா. 5:11; சங். 68:15.

2. கீலேயாத் தேசம்.​—யோசு. 22:9.

3. அம்மோன் மற்றும் மோவாப் தேசம்.​—யோசு. 13:25; 1 நா. 19:2; உபா. 1:5.

4. ஏதோமின் பீடபூமி.​—எண். 21:4; நியா. 11:18.

ஊ. லீபனோன் மலைகள்.​—யோசு. 13:5.

அ. பெரிய சமுத்திரத்தின் கடலோரப் பகுதி

4நம் சுற்றுலா மேற்கிலிருந்து தொடங்குகிறது. முதலாவதாக, அழகிய நீலநிற மத்தியதரைக் கடல், அதாவது பெரிய சமுத்திரத்தின் நெடுகவிருக்கும் கடலோரப் பகுதிகள். நெடுகவிருக்கும் பெரும் மணற்குன்றுகளின் காரணமாக, கர்மேல் மலைக்குக் கீழுள்ள யோப்பாவில் மட்டுமே நல்ல இயற்கை துறைமுகம் ஒன்று அமைந்துள்ளது. ஆனால் கர்மேலுக்கு வடக்கில் நல்ல இயற்கை துறைமுகங்கள் பல உள்ளன. இந்தக் கரையோரப் பகுதியிலிருந்த நாட்டில் வாழ்ந்த பொனீஷியர்கள் கடற்பயணத்திற்குப் பெயர்போனவர்கள். இந்தக் கடலோரத்தில் வருடாந்தர சராசரி வெப்பநிலை 19 டிகிரி செல்ஷியஸ் என்பதால் தட்பவெப்பம் இதமாக இருக்கும். எனினும் கோடை காலங்களில் வெப்பம் கடுமையாக இருக்கும்; காசாவில் பகலில் சராசரி வெப்பநிலை ஏறக்குறைய 34 டிகிரி செல்ஷியஸ்.

ஆ-1 ஆசேர் சமவெளி

5இந்தக் கடற்கரையோர சமவெளி கர்மேல் மலையிலிருந்து வடக்கே ஏறக்குறைய 40 கிலோமீட்டர் தூரம் வரை நீண்டிருக்கிறது. இதன் அதிகபட்ச அகலம் ஏறக்குறைய 13 கிலோமீட்டர். இது ஆசேர் கோத்திரத்துக்கு நியமிக்கப்பட்ட தேசத்தின் பாகம். (யோசு. 19:​24-30) இது செழிப்பான சமவெளியாகும். இங்கு விளைச்சல் அமோகமாய் இருந்ததால், சாலொமோனின் அரசப் பந்திக்கே உணவுப்பொருட்கள் இங்கிருந்து செல்லும்.​—ஆதி. 49:​20; 1 இரா. 4:​7, 16.

ஆ-2 தோரின் நீண்ட குறுகலான கடலோரப் பகுதி

6நீண்ட குறுகலான இந்த நிலம் கர்மேல் மலைத்தொடரின் ஓரமாக ஏறக்குறைய 32 கிலோமீட்டர் வரை செல்கிறது. இதன் அகலம் ஏறக்குறைய 4 கிலோமீட்டர் மாத்திரமே. சொல்லப்போனால், இது கர்மேலுக்கும் மத்தியதரைக் கடலுக்கும் இடையேயுள்ள நீண்ட குறுகலான நிலமேயாகும். இதன் தெற்கு பாகத்தில், துறைமுகப் பட்டணமாகிய தோர் உள்ளது; இதற்குத் தெற்கே மணற்குன்றுகள் தொடங்குகின்றன. தோருக்குப் பின்னால் உள்ள குன்றுகள் சாலொமோனின் பந்திகளுக்கு சிறந்த உணவை விளைவித்தன. சாலொமோனின் ஒரு குமாரத்தி இந்தப் பிரதேசத்திலிருந்த அதிபதிக்கு மணம் செய்து கொடுக்கப்பட்டாள்.​—1 இரா. 4:​7, 11.

ஆ-3 சாரோனின் மேய்ச்சல் நிலங்கள்

7மலர்களுக்குப் பெயர்பெற்ற சாரோனின் அழகை எண்ணிப் பார்க்கையில் அது, திரும்ப நிலைநாட்டப்பட்ட இஸ்ரவேல் தேசத்தைப் பற்றிய ஏசாயாவின் தீர்க்கதரிசன காட்சியில் குறிப்பிடப்பட்டிருப்பது பொருத்தமே. (ஏசா. 35:2) இது நீர்நிறைந்த செழிப்பான ஒரு சமவெளி; இதன் அகலம் 16-19 கிலோமீட்டர். இதன் நீளமோ, நீண்ட குறுகலான கரையோர நிலமான தோருக்குத் தெற்கே ஏறக்குறைய 64 கிலோமீட்டர் வரை செல்கிறது. எபிரெய காலங்களில் சாரோனின் வட பகுதியில் ஓக் மரக் காடுகள் இருந்தன. தானிய அறுவடைக்குப் பின்பு ஆடுமாடுகள் மந்தை மந்தையாக அங்கு மேய்ந்தன. இதனாலேயே அது சாரோனின் மேய்ச்சல் நிலங்கள் என்று அழைக்கப்பட்டது. அரசனாகிய தாவீதின் காலத்தில், அரச குடும்பத்தாருக்கு சொந்தமான மந்தைகள் சாரோனில்தான் மேய்ந்தன. (1 நா. 27:29) இன்று இந்த நிலப்பகுதியில், ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழத்தோட்டங்களே எங்கும் காணப்படுகின்றன.

ஆ-4 பெலிஸ்த சமவெளி

8தேசத்தின் இந்தப் பகுதி, சாரோனின் மேய்ச்சல் நிலங்களுக்குத் தெற்கே அமைந்துள்ளது. இது கடற்கரையோரமாக ஏறக்குறைய 80 கிலோமீட்டர் நீளத்தையும், நிலப்பகுதியில் சுமார் 24 கிலோமீட்டர் நீளத்தையும் உள்ளடக்கிய பகுதியாகும். (1 இரா. 4:21) கரையோரமாயுள்ள மணல் அடுக்குகள் சில சமயங்களில் 6 கிலோமீட்டர் வரைகூட உள்ளே செல்கின்றன. இந்த மணல் அடுக்குகள் தெற்கே உள்ள காசாவுக்குப் பின்னால், 30 மீட்டர் முதல் 200 மீட்டர் வரை உயரே எழும்புகின்றன. இப்பகுதியிலுள்ள மண் வளமிக்கது; ஆனால் மழை அதிகம் இல்லை, வறட்சி ஏற்படும் ஆபத்து எப்போதும் உள்ளது.

ஆ-5 மத்திய கிழக்கு-மேற்கு பள்ளத்தாக்கு

9இந்த மத்திய கிழக்கு-மேற்கு பள்ளத்தாக்கு உண்மையில் இரண்டு பாகங்களாகும். அவையாவன: மேற்கே மெகிதோ பள்ளத்தாக்குச் சமவெளி அல்லது எஸ்ட்ரெலான். கிழக்கே யெஸ்ரயேல் பள்ளத்தாக்கு. (2 நா. 35:22; நியா. 6:33) இந்த மத்திய பள்ளத்தாக்கு முழுவதும், எளிதில் பயணம் செல்ல உதவும் மார்க்கமாய் அமைந்தது. இதன் வழியாக, யோர்தானின் பிளவுப் பள்ளத்தாக்கிலிருந்து மத்தியதரைக் கடலோரப் பகுதிக்கு, குறுக்கே கடந்து சென்றுவிடலாம். அத்துடன் இது முக்கிய வாணிக மார்க்கமாகவும் ஆயிற்று. மெகிதோ சமவெளியிலுள்ள தண்ணீர் கீசோன் பள்ளத்தாக்கு வழியாக பாய்ந்தோடி, கர்மேல் மலைக்கும் கலிலேய மலைகளுக்கும் இடையேயுள்ள குறுகிய கணவாயினூடே ஆசேர் சமவெளிக்குச் சென்று அங்கிருந்து மத்தியதரைக் கடலில் கலக்கிறது. இந்தச் சிறு நதி கோடை காலத்தில் பெரும்பாலும் வறண்டுவிடுகிறது, ஆனால் மற்ற சமயங்களில் கரைபுரண்டோடும் வெள்ளமாக பெருக்கெடுக்கிறது.​—நியா. 5:21.

10யெஸ்ரயேல் பள்ளத்தாக்கு தென் கிழக்கே சரிந்து, யோர்தானை நோக்கியுள்ளது. இந்தப் பள்ளத்தாக்கின் நீண்ட குறுகலான பகுதியே யெஸ்ரயேல் சமவெளி. இது ஏறக்குறைய 3.2 கிலோமீட்டர் அகலத்தில், கிட்டத்தட்ட 19 கிலோமீட்டர் தூரம்வரை செல்கிறது. இது 90 மீட்டருக்கும் அதிக உயரம்வரை ஏறி, பின்பு பெத்செயானுக்கருகில், கடல்மட்டத்துக்குக் கீழ் சுமார் 120 மீட்டர் வரையாக சீராய் இறங்குகிறது. இந்த மத்திய பள்ளத்தாக்கு முழுவதுமே மிகவும் செழிப்பானது. நாட்டின் மிக வளமான பகுதிகளில் யெஸ்ரயேலும் ஒன்று. யெஸ்ரயேல் என்பதற்கு, ‘கடவுள் விதை விதைப்பார்’ என்று அர்த்தம். (ஓசி. 2:​22, NW) இந்த மாகாணத்தின் இனிமையையும் அழகையும் வேதவாக்கியங்கள் குறிப்பிடுகின்றன. (ஆதி. 49:14, 15) இஸ்ரவேலுக்கும் அதைச் சுற்றிலுமிருந்த தேசங்களுக்கும் இடையிலான போர்களில், இந்த மெகிதோவும் யெஸ்ரயேலும் போர்செய்வதற்கு ஏற்ற முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக இருந்தன. இங்கேயே பாராக், கிதியோன், சவுல் அரசன், யெகூ ஆகியோர் போரிட்டார்கள்.​—நியா. 5:​19-21; 7:​12; 1 சா. 29:1; 31:​1, 7; 2 இரா. 9:27.

இ-1 கலிலேய மலைகள்

11கலிலேய மலைகளின் தெற்குப் பகுதியிலேயே (கலிலேயா கடலைச் சுற்றி) இயேசு, யெகோவாவின் பெயருக்கும் ராஜ்யத்துக்கும் சாட்சிபகரும் தம்முடைய ஊழியத்தின் பெரும்பாகத்தைச் செய்தார். (மத். 4:​14-17; மாற். 3:8) இயேசுவின் உண்மையுள்ள அப்போஸ்தலர் 11 பேர் உட்பட, அவரைப் பின்பற்றினவர்களில் பெரும்பான்மையர் கலிலேயரே. (அப். 2:7) இந்த மாகாணத்தில், கீழ் கலிலேயா என்று அழைக்கப்பட்ட ஊர் இருந்தது. அங்கே காணப்படும் மலைகளின் உயரம் 600 மீட்டரைத் தாண்டவில்லை; நிஜமாகவே இது எழில் கொஞ்சும் ஊர்! இந்த இனிய தேசத்தில் இலையுதிர்காலம் முதல் வசந்தகாலம் வரை மழைக்குப் பஞ்சமேயில்லை, ஆகவே இப்பகுதி வறண்டு போவதில்லை. வசந்தகாலத்தில் மலைச்சரிவுகள் எங்கும் கண்ணைப் பறிக்கும் பூக்கள்மயம்! பள்ளத்தாக்குகளெல்லாம் அமோக விளைச்சல்! உயரம் குறைந்த பீடபூமிகளில் பயிரிடுவதற்கு ஏற்ற வளமான மண் உள்ளது. மலைகளோ ஒலிவ மரங்கள் செழித்தோங்கவும் திராட்சத் தோட்டங்கள் காய்த்துக் குலுங்கவும் ஏற்றவை. இந்தப் பகுதியிலுள்ள நாசரேத், கானா, நாயீன் ஆகிய ஊர்கள் பைபிளில் பிரசித்திபெற்று விளங்குகின்றன. (மத். 2:​22, 23; யோவா. 2:1; லூக். 7:11) இப்பகுதியில் கண்ட காட்சிகளை வைத்தே இயேசு விவசாயத்தை அடிப்படையாக கொண்ட உவமைகளை கூறினார்.​—மத். 6:​25-32; 9:​37, 38.

12வடபகுதியில், அதாவது மேல் கலிலேயாவில், இம்மலைகள் 1,100 மீட்டருக்கும் மேற்பட்டு கம்பீரமாய் நிற்பதால், லீபனோனின் மலையடிவார குன்றுகள்போல் தோன்றுகின்றன. மேல் கலிலேயா தனித்து நிற்கிறது, இங்கு பலத்த காற்று வீசுகிறது, கனத்த மழையும் பெய்கிறது. பைபிள் காலங்களில் மேற்குச் சரிவுகளில் அடர்ந்த காடுகள் நிரம்பியிருந்தன. இந்தப் பிரதேசம் நப்தலி கோத்திரத்துக்கு ஒதுக்கப்பட்டது.​—யோசு. 20:7.

இ-2 கர்மேல் மலைகள்

13கர்மேல் மலைத்தொடர் மத்தியதரைக் கடலுக்குள் கம்பீரமாய் எட்டிப்பார்க்கிறது. சொல்லப்போனால், குன்றுகள் நிரம்பிய மலைத்தொடரே கர்மேல் எனப்படுகிறது. இதன் நீளம் சுமார் 48 கிலோமீட்டர்; உயரமோ கடல்மட்டத்திலிருந்து 545 மீட்டர். இது சமாரிய குன்றுகளில் தொடங்கி மத்தியதரைக் கடல்வரை செல்கிறது. வடமேற்கு முனையிலுள்ள இதன் உச்சிப்பகுதியின் எழில் கொஞ்சும் வசீகரம் காண்போரை சுண்டி இழுக்கிறது. (உன். 7:5) கர்மேல் என்பதன் அர்த்தம் “பழத்தோட்டம்” என்பதாகும். இந்தப் பெயர், பிரசித்திபெற்ற திராட்சத் தோட்டங்களினாலும் பழமரங்களினாலும் ஒலிவ மரங்களினாலும் அலங்கரிக்கப்பட்ட இந்தச் செழிப்பான மலைமுகட்டிற்கு நிஜமாகவே பொருந்தும். இதை வைத்துத்தான், திரும்ப நிலைநாட்டப்பட்ட இஸ்ரவேல் தேசத்தின் பலன்தரும் செழுமைக்கு அடையாளமாக, ‘கர்மேலின் . . . அலங்காரம் அதற்கு அளிக்கப்படும்’ என்று ஏசாயா 35:2 குறிப்பிடுகிறது. இங்குதான் பாகால் பூஜாரிகளை எதிர்த்து எலியா சவால்விட்டார், யெகோவாவின் ஈடற்ற மாட்சிமையின் நிரூபணமாக “யெகோவாவினிடமிருந்து அக்கினி இறங்கி[னது].” மேலும், இஸ்ரவேலில் உண்டாயிருந்த வறட்சியை அற்புதமாக முடிவுக்குக் கொண்டுவந்த சிறிய மேகத்தை தன் ஊழியக்காரன் பார்க்கும்படி எலியா செய்தது இந்த கர்மேல் சிகரத்திலிருந்தே. இந்த மேகம்தான் பெருமழையாக மாறியது.​—1 இரா. 18:​17-46, தி.மொ.

இ-3 சமாரிய மலைகள்

14இந்த நிலப்பகுதியின் தெற்கு பாகத்தின் பெரும்பகுதி மலைப்பாங்கானது. கிழக்கே 900 மீட்டருக்கு மேல் உயர்ந்துள்ளது. (1 சா. 1:1) இந்த நிலப்பகுதியில், தெற்கே யூதாவில் பெய்வதைக் காட்டிலும் மிகுதியாக மழை பொழிகிறது; அது தவறுவதில்லை. இந்த நிலப்பகுதியில் யோசேப்பின் இளைய மகனாகிய எப்பிராயீமின் சந்ததியினர் குடியேறினர். இந்நிலப்பகுதியின் வடக்கு பாகத்தில் யோசேப்பின் மூத்த மகனாகிய மனாசேயின் பாதி கோத்திரத்தார் குடியேறினர்; இது நதிப்பள்ளத்தாக்குகளும், சுற்றிலும் மலைப்பாங்கான சிறிய சமவெளிகளும் அடங்கியது. மலைப்பாங்கான இந்நிலம் அந்தளவுக்கு செழிப்பானதல்ல; இருந்தாலும் உயரம் குறைந்த மலைச்சரிவுகள் படிக்கட்டு முறையில் அமைக்கப்பட்டிருப்பதால் திராட்சத் தோட்டங்களும் ஒலிவத் தோப்புகளும் இருக்கின்றன. (எரே. 31:5) எனினும், பெரிய பெரிய நதிப்பள்ளத்தாக்குகள், பயிர்செய்வதற்கும் தானியம் விளைவிப்பதற்கும் மிகச் சிறந்தவை. பைபிள் காலங்களில் இந்தப் பகுதியில் பல பட்டணங்கள் இருந்தன. வடக்கு ராஜ்யம் ஆட்சி செய்தபோது, மனாசே கோத்திரத்துக்கு கிடைத்த பகுதியிலிருந்து ஒன்றன்பின் ஒன்றாக மூன்று தலைநகரங்கள்​—சீகேம், திர்சா, சமாரியா​—ஏற்படுத்தப்பட்டன. அந்தத் தலைநகரத்தின் பெயரால் அந்தப் பகுதி முழுவதும் சமாரியா என்று அழைக்கப்படலாயிற்று.​—1 இரா. 12:25; 15:33; 16:24.

15யோசேப்பின்பேரில் மோசே கூறின ஆசீர்வாதம் இந்தத் தேசத்தின்மீது மெய்யாகவே நிறைவேறினது. அவர் “யோசேப்பை ஆசீர்வதித்து: யெகோவாவின் ஆசீர்வாதம் அவன் தேசத்தின்மேல் வருக, வானத்தின் அருமையான பனியையும் . . . சூரியன் பக்குவப்படுத்தும் அருமையான பலன்களையும் மாதந்தோறும் விளையும் அருமையானவைகளையும் ஆதிபர்வதங்களில் உண்டாகும் விசேஷித்தவைகளையும் நித்திய மலைகளில் கிடைக்கும் அரும் பொருட்களையும் . . . தந்தருளுவாராக” என்று சொன்னார். (உபா. 33:​13-15, தி.மொ.) ஆம், இது ஓர் இனிய நாடு! இதன் மலைகள் எங்கும் அடர்ந்த காடுகள் நிறைந்திருந்தன. இதன் பள்ளத்தாக்குகளில் நல்ல மகசூலைப் பெற முடிந்தது; இதனால் இங்குள்ள பட்டணங்கள் செழித்தோங்கின; ஜனத்தொகையும் பெருகியது. (1 இரா. 12:25; 2 நா. 15:8) பிற்பட்ட காலங்களில் இயேசு, சமாரியா தேசத்தில் பிரசங்கித்தார், அவருடைய சீஷர்களும் அங்கே பிரசங்கித்தார்கள், அங்கே பலர் கிறிஸ்தவத்தை ஆதரித்தனர்.​—யோவா. 4:​4-10; அப். 1:8; 8:​1, 14.

இ-4 சமபூமி

16சமபூமி என்பது ‘தாழ்நிலம்’ என்று பொருள்படுகிறபோதிலும், இது உண்மையில் மலைப்பாங்கான ஒரு பகுதியே. தென்பகுதியில் இதன் உயரம் ஏறக்குறைய 450 மீட்டர். கிழக்கிலிருந்து மேற்குவரை இடையிடையே பள்ளத்தாக்குகள் இதைப் பிரிக்கின்றன. (2 நா. 26:10) இதன் உயரம் சரியாக பெலிஸ்த கடலோர சமவெளிக்குக் கிழக்கே ஆரம்பிக்கிறது. இதற்குக் கிழக்கே, தொலைவிலுள்ள அதி உயரமான யூதாவின் குன்றுகளோடு ஒப்பிடுகையில் மட்டுமே இது தாழ்நிலம். (யோசு. 12:7, 8) காட்டத்தி மரங்களால் நிறைந்திருந்த இதன் குன்றுகளில், இப்போது திராட்சத் தோட்டங்களும் ஒலிவத் தோப்புகளும் ஏராளம். (1 இரா. 10:27) இதில் பல பட்டணங்கள் அமைந்திருந்தன. பைபிள் சரித்திரத்தில் இது இஸ்ரவேலருக்கும் பெலிஸ்தருக்கும் இடையிலோ, அல்லது கடலோர சமவெளியிலிருந்து யூதாவுக்குள் படையெடுத்த மற்ற சேனைகளுக்கும் இடையிலோ தடைமுனையாக (buffer zone) சேவித்தது.​—2 இரா. 12:17; ஒப. 19.

இ-5 யூதாவின் மலைநாடு

17இது, பெரிய பெரிய பாறைகள் நிறைந்த ஒரு பகுதி. சுமார் 80 கிலோமீட்டர் நீளமும் 32 கிலோமீட்டரைவிடக் குறைந்த அகலமும் உடையது; உயரமோ கடல் மட்டத்திலிருந்து 600 முதல் 1,000 மீட்டர் வரை வேறுபடுகிறது. பைபிள் காலங்களில், கட்டடம் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட மரங்கள் இந்தப் பகுதியில் செழித்தோங்கின; முக்கியமாய் மேற்கு பாகத்திலுள்ள குன்றுகளிலும் பள்ளத்தாக்குகளிலும், தானிய வயல்களும் ஒலிவ மரங்களும் திராட்சத் தோட்டங்களும் நிறைந்து காணப்பட்டன. இது இஸ்ரவேலுக்கு ஏராளமான நல்ல தானியத்தையும், எண்ணெய்யையும், திராட்ச ரசத்தையும் தந்த ஒரு மாகாணமாகும். முக்கியமாய் எருசலேமைச் சுற்றியிருக்கும் பகுதியில், பைபிள் காலத்திலிருந்தே மிகுதியான மரங்கள் அழிக்கப்பட்டன; ஆகவே முன்னொரு காலத்தில் இருந்ததோடு ஒப்பிட இப்போது வெறுமையானதாக தோன்றுகிறது. குளிர்காலத்தில், சில சமயங்களில் மத்தியிலுள்ள உயர்ந்த சிகரங்களில், பெத்லகேமில் இருப்பதைப் போன்றே பனி பெய்கிறது. பூர்வ காலங்களில் பட்டணங்களுக்கும் கோட்டைகளுக்கும் வசதியான இடமாக யூதா கருதப்பட்டது; ஏனெனில் ஆபத்து சமயங்களில் ஜனங்கள் புகலிடம் தேடி இந்த மலைகளில் ஒளிந்துகொள்ளலாம்.​—2 நா. 27:4.

18யூதா மற்றும் இஸ்ரவேலின் சரித்திரத்தில் எருசலேம் தலைசிறந்து விளங்கியது. இங்குள்ள கோட்டையின் பெயரால் சீயோன் என்றும் அழைக்கப்பட்டது. (சங். 48:​1, 2) தொடக்கத்தில் இது எபூசியரின் கானானிய நகரமாயிருந்தது; இன்னோம் பள்ளத்தாக்கும் கீதரோன் பள்ளத்தாக்கும் சேரும் இடத்திலுள்ள மேடான நிலப்பகுதியில் அமைந்திருந்தது. தாவீது இதைக் கைப்பற்றி தலைநகராக்கின பின்பு, இது வடமேற்கே விரிவாக்கப்பட்டது, முடிவில் டைரோப்பியன் பள்ளத்தாக்கும் இத்துடன் சேர்க்கப்பட்டது. காலப்போக்கில் இன்னோம் பள்ளத்தாக்கு கெஹென்னா என்று அழைக்கப்படலாயிற்று. யூதர்கள் அங்கே விக்கிரகங்களுக்குப் பலிகளைச் செலுத்தினதால், அது அசுத்தமானதென அறிவிக்கப்பட்டது. அதோடு, குப்பை கொட்டுவதற்கும், மோசமான குற்றவாளிகளின் பிணங்களைப் போடுவதற்குமுரிய இடமாக்கப்பட்டது. (2 இரா. 23:10; எரே. 7:​31-33) இவ்வாறு, அதன் நெருப்பு முழுமையான அழிவுக்கு அடையாளமாயிற்று. (மத். 10:28; மாற். 9:​47, 48; NW) கீதரோன் பள்ளத்தாக்குக்கு மேற்கேயிருந்த சீலோவாம் குளத்துத் தண்ணீர் குறைந்தளவே எருசலேமுக்குக் கிடைத்தது. இவ்வாறு கிடைத்த தண்ணீரும் வீணாக போய்விடாமல் நகரத்துக்குள் தேக்கி வைப்பதற்கு எசேக்கியா வெளிப்புற மதில் ஒன்றைக் கட்டி பாதுகாத்தார்.​—ஏசா. 22:11; 2 நா. 32:​2-5.

இ-6 யூதாவின் வனாந்தரம் (எஷிமோன்)

19எஷிமோன் என்பது யூதாவின் வனாந்தரத்துக்குரிய பைபிள் பெயர். இதன் அர்த்தம் “பாலைவனம்” என்பதாகும். (1 சா. 23:​19, NW அடிக்குறிப்பு) இந்தப் பெயர் எவ்வளவு கனகச்சிதமாக பொருந்துகிறது! யூதேய மலைகளின் சுண்ணாம்புப் பாறைகள் நிறைந்த, வறண்ட, கரடுமுரடான கிழக்குச் சரிவுகள் இந்த வனாந்தரத்தில் உள்ளன. இவை 24 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சவக்கடலை நோக்கிச் செல்லச்செல்ல 900 மீட்டருக்கும் மேல் சரிகின்றன. அவை முடிகிற சவக்கடல் பகுதியில் கரடுமுரடான பாறை முகடுகள் உள்ளன. எஷிமோனில் பட்டணங்கள் ஒன்றும் இல்லை, ஒருசில குடியிருப்புகளே உள்ளன. யூதாவிலுள்ள இந்த வனாந்தரத்திற்கே தாவீது, சவுல் அரசனிடமிருந்து தப்பியோடினார்; இந்த வனாந்தரத்துக்கும் யோர்தானுக்கும் இடையிலேயே முழுக்காட்டுபவரான யோவான் பிரசங்கித்தார்; இயேசு 40 நாட்கள் உபவாசித்தபோது இந்தப் பிரதேசத்திலேயே தனித்திருந்தார். b1 சா. 23:14; மத். 3:1; லூக். 4:1.

இ-7 நெகெப் (தென்னாடு)

20யூதாவின் மலைகளுக்குத் தெற்கே நெகெப் எனப்பட்ட இந்தத் தென்னாடு அமைந்துள்ளது. இங்கு கோத்திரப் பிதாக்களாகிய ஆபிரகாமும் ஈசாக்கும் பல ஆண்டுகள் தங்கினர். (ஆதி. 13:​1-3, தி.மொ.; 24:62) இந்தப் பாகத்தின் தெற்குப் பகுதியை ‘சீன் வனாந்தரம்’ என்றும் பைபிள் குறிப்பிடுகிறது. (யோசு. 15:1) இந்தத் தென்னாடு மிதமாக மழைபொழியும் பகுதியாகும். இது வடக்கே பெயெர்செபா மாகாணத்திலிருந்து தெற்கே காதேஸ்பர்னேயா வரை பரவியுள்ளது. (ஆதி. 21:31; எண். 13:​1-3, 26; 32:8) இந்த நிலம் யூதாவின் மலைகளிலிருந்து படிப்படியாய் இறங்கி, கிழக்கிலும் மேற்கிலும் முகடுகளாக தொடருகிறது. இவ்வாறு, தெற்கிலிருந்து போக்குவரத்துக்கும் படையெடுப்புக்கும் எதிராக இயற்கை அரணாக விளங்குகிறது. யூத மலைகளின் சரிவு நிலப்பகுதி, தென்னாட்டின் கிழக்கு கடற்கரையோரத்திலிருந்து, மேற்கிலுள்ள வனாந்தரம் வரை செல்கிறது. கோடை காலத்தில், வெள்ளப் பெருக்கெடுக்கும் சில பள்ளத்தாக்குகளுக்கு அருகிலுள்ள நிலப்பகுதிகளைத் தவிர, இது பாலைவனம்போல் வறட்சியாக உள்ளது. எனினும் இங்கு கிணறு தோண்டினால் தண்ணீர் கிடைக்கும். (ஆதி. 21:​30, 31) தற்கால இஸ்ரேல் அரசாங்கம் இந்தத் தென்னாட்டின் சில பாகங்களுக்கு பாசன வசதி அளித்து, அபிவிருத்தி செய்து வருகிறது. “எகிப்தின் நதி,” வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் தெற்கு எல்லையாகவும், இந்தத் தென்னாட்டின் தென்மேற்கு எல்லையாகவும் இருந்தது.​—ஆதி. 15:18.

இ-8 பாரான் வனாந்தரம்

21தென்னாட்டின் தெற்கே சீன் வனாந்தரத்தோடு இணைவது பாரான் வனாந்தரம். இஸ்ரவேலர், சீனாயை விட்டு வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்குப் போகும் வழியில் இந்த வனாந்தரத்தைக் கடந்துதான் சென்றனர்; அதுமட்டுமல்ல, பாரானிலிருந்தே மோசே 12 பேரை வேவுபார்க்கும்படி அனுப்பினார்.​—எண். 12:​16–13:3.

ஈ. பெரும் அராபா (மகா பிளவு பள்ளத்தாக்கு)

22பூமியிலேயே மிக அபூர்வமான நில அமைப்புகளில் ஒன்று இந்த மகா பிளவு பள்ளத்தாக்கு. வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தினூடே வடக்குத் தெற்காக ஊடுருவிச் செல்லும் இதன் ஒரு பகுதியே பைபிளில் “அராபா” என்று அழைக்கப்படுகிறது. (யோசு. 18:​18) புவியின் கடினமான மேற்பரப்பிலுள்ள இந்தப் பிளவு, 2 சாமுவேல் 2:​29-ல் (NW) மலையிடுக்கு என்று விவரிக்கப்படுகிறது. இதற்கு வடக்கே எர்மோன் மலை உள்ளது. (யோசு. 12:1) எர்மோன் மலை அடிவாரத்திலிருந்து, மகா பிளவு பள்ளத்தாக்கு தெற்கு நோக்கி, சவக்கடலுக்குள் கடல் மட்டத்துக்குக் கீழ் ஏறக்குறைய 800 மீட்டர் ஆழத்துக்கு திடீரென சரிகிறது. சவக்கடலின் தென்முனையிலிருந்து அராபா தொடர்ந்து செல்கிறது. பின்பு சவக்கடலுக்கும் அகபா வளைகுடாவுக்கும் இடையேயான மத்திபப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 200 மீட்டருக்கும் மேலாக உயருகிறது. அதன்பின் தொடர்ந்து சென்று, நீட்டிக்கொண்டிருக்கும் செங்கடலின் கிழக்குமுனையின் வெதுவெதுப்பான தண்ணீரில் இறங்குகிறது. இத்துடன் கொடுக்கப்பட்டுள்ள குறுக்குவெட்டு வரைபடங்கள் இந்த மகா பிளவு பள்ளத்தாக்கும் அதைச் சூழ்ந்துள்ள நாடுகளும் எவ்வாறு இணைகின்றன என்பதை காட்டுகின்றன.

ஈ-1 ஹுல்லா நதிப்பள்ளத்தாக்கு

23எர்மோன் மலை அடிவாரத்தில் தொடங்கும் இந்தப் பிளவு பள்ளத்தாக்கு, திடீரென்று 490 மீட்டருக்கும் அதிகமாக கீழே இறங்கி, கிட்டத்தட்ட கடல்மட்டத்திற்குச் சமமாக இருக்கும் ஹுல்லா பிரதேசத்துடன் இணைகிறது. இந்த மாகாணம் நீர்வளம் மிக்கதாய் இருப்பதால் வெப்பமான கோடை காலங்களிலும் பச்சைப் பசேலென்றிருக்கும். இந்தப் பகுதியிலேயே தாண் கோத்திரத்தார் தங்கள் நகரமாகிய தாணில் குடியேறினர். இது நியாயாதிபதிகளின் காலம் முதல் இஸ்ரவேலின் பத்துக் கோத்திர ராஜ்யத்தின் காலம் வரை விக்கிரக வணக்க மையமாகவே செயல்பட்டது. (நியா. 18:​29-31; 2 இரா. 10:29) பூர்வ தாண் இருந்த இடத்துக்கு அருகிலுள்ள ஒரு நகரமாகிய பிலிப்புச் செசரியாவிலேயே தாம் கிறிஸ்து என்பதை இயேசு தம்முடைய சீஷர்களுக்கு உறுதிப்படுத்தினார். ஆறு நாட்களுக்குப் பின்பு, அருகிலிருந்த எர்மோன் மலைமீதே இயேசு மறுரூபமானார் என்று பலர் நம்புகின்றனர். ஹுல்லாவிலிருந்து, இந்த மகா பிளவு பள்ளத்தாக்கு கலிலேயா கடலுக்குள் இறங்குகிறது; கலிலேயா கடல், கடல் மட்டத்திலிருந்து சுமார் 210 மீட்டர் கீழே உள்ளது.​—மத். 16:​13-20; 17:​1-9.

ஈ-2 கலிலேயா கடலைச் சூழ்ந்த பிரதேசம்

24கலிலேயா கடலும் அதன் சுற்றுப்புறங்களும் காண்போர் கண்களுக்கு விருந்து படைப்பவை. c இங்குதான் இயேசுவின் ஊழியத்தில் அநேக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. எனவே இந்தப் பிரதேசத்தைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்கிறது. (மத். 4:23) கலிலேயா கடல், கெனேசரேத்துக் கடல் அல்லது கின்னரேத் கடல் என்றும், திபேரியா கடல் என்றுங்கூட அழைக்கப்படுகிறது. (லூக். 5:1; யோசு. 13:27; யோவா. 21:1) உண்மையில் இது, இருதய வடிவமான ஓர் ஏரியாகும். இதன் அதிகபட்ச நீளம் 21 கிலோமீட்டர்; அகலம் சுமார் 11 கிலோமீட்டர். இதுவே அந்த முழு நிலப்பகுதிக்கும் முக்கியமான நீர்த்தேக்கமாகும். இது ஏறக்குறைய நான்கு பக்கங்களிலுமே குன்றுகளால் சூழப்பட்டுள்ளது. இந்த ஏரியின் மேற்பரப்பு, கடல்மட்டத்திற்கு ஏறக்குறைய 210 மீட்டர் கீழே உள்ளது. இதனால் இனிமை தரும் மிதமான குளிர்காலங்களும், வெப்பமான நீண்ட கோடை காலங்களும் ஏற்படுகின்றன. இயேசுவின் நாட்களில், நன்கு வளர்ச்சியடைந்த மீன்பிடிக்கும் தொழிலுக்கு இதுவே மையமாக இருந்தது. எனவே இந்த ஏரிக் கரையிலோ, இதற்கு அருகிலோ அமைந்திருந்த கோராசின், பெத்சாயிதா, கப்பர்நகூம், திபேரியா ஆகிய பட்டணங்கள் செழித்தோங்கின. ஆனால் திடீரென வீசும் புயல் இந்த ஏரியின் அமைதியைக் குலைத்துவிடும். (லூக். 8:23) முக்கோண வடிவமுள்ள சிறிய சமவெளியாகிய கெனேசரேத்து, இந்த ஏரியின் வடமேற்கில் உள்ளது. இங்குள்ள மண் வளமானது; எனவே வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் எல்லா வகை பயிர்களும் இங்கு விளைவதாகவே சொல்லலாம். வசந்த காலத்தில் பல வண்ணத்தில் காணப்படும் சரிவுகளின் ஒளிவீசும் அழகை இஸ்ரவேல் தேசத்தில் வேறெங்கும் காண முடியாது. d

ஈ-3 யோர்தான் பள்ளத்தாக்கு மாகாணம் (கோர்)

25கால்வாயைப் போன்று கீழிறங்கும் இந்த முழு பள்ளத்தாக்கும் “அராபா” என்றும் அழைக்கப்படுகிறது. (உபா. 3:17, NW) இன்று அரேபியர்கள் இதை “இறக்கம்” என்று பொருள்படும் கோர் என குறிப்பிடுகின்றனர். இந்தப் பள்ளத்தாக்கு கலிலேயா கடலில் தொடங்குகிறது; பொதுவாக அகலமாக​—சில இடங்களில் ஏறக்குறைய 19 கிலோமீட்டர் அகலமாக​—உள்ளது. இந்த பள்ளத்தாக்கின் சமவெளிக்கு சுமார் 46 மீட்டருக்கு கீழேதான் யோர்தான் நதி ஓடுகிறது. பிறகு இது 105 கிலோமீட்டர் தூரத்திலுள்ள சவக்கடலில் கலப்பதற்குமுன், வளைந்து வளைந்து 320 கிலோமீட்டர் தூரம் ஓடுகிறது. e இதன் தண்ணீர் 27 நீர்வீழ்ச்சிகளாகவும் போய் விழுகிறது. ஆக மொத்தம் சவக்கடலில் கலப்பதற்குள் ஏறக்குறைய 180 மீட்டர் கீழ்நோக்கி பாய்கிறது. கீழ் யோர்தானைச் சுற்றிலும் அடர்ந்த மரங்களும் புதர்களுமே நிறைந்துள்ளன; இங்கு முக்கியமாய் காணப்படும் மரங்களாவன: தாமரிஸ்க்குகள், அலரிச் செடிகள், வில்லோ எனப்படும் காற்றாடி வகை மரங்கள். பைபிள் காலங்களில் இங்கே சிங்கங்களும் அவற்றின் குட்டிகளும் பதுங்கியிருந்தன. இது, இன்று ஸோர் எனப்படுகிறது, இங்கு வசந்த காலத்தில் வெள்ளம் ஓரளவு பெருக்கெடுக்கிறது. (எரே. 49:19) நீண்ட குறுகலான காடுபோன்ற இந்தப் பகுதியின் இருபுறமும் மேலெழும்புவதே குவாட்டாரா. இது தரிசாக உள்ள சிறுசிறு பீடபூமிகளுக்கு எல்லையாக அமைந்துள்ளது. இடையிடையே சிறு குன்றுகளால் பிளவுபட்டுள்ள இதன் சரிவுகள் கோர் சமவெளி வரை செல்கிறது. இந்தக் கோர் அல்லது அராபாவின் வட பாகத்திலுள்ள சமவெளிகளில் பேரளவு விவசாயம் நடைபெறுகிறது. இன்று மிகவும் வறண்டிருக்கும் மேட்டு நிலமாகிய அராபாவில், சவக்கடலை நோக்கிச் செல்லும் தெற்குப் பாகத்தில், ஒரு காலத்தில் பல வகை பேரீச்சம் பழங்களும், பலவித வெப்பமண்டல பழங்களும் காய்த்துக் குலுங்கியதாக சொல்லப்படுகிறது. இந்த யோர்தான் பள்ளத்தாக்கிலுள்ள எரிகோ, மிகப் பிரசித்திபெற்ற பட்டணமாக இருந்தது, இன்றும் அவ்வாறே உள்ளது.​—யோசு. 6:​2, 20; மாற். 10:46.

ஈ-4 உப்புக் (சவக்) கடல்

26இது பூமியின் நீர்த்தேக்கங்களில் குறிப்பிடத்தக்கவற்றுள் ஒன்றாகும். இது சவக்கடல் என்று பொருத்தமாகவே அழைக்கப்படுகிறது, ஏனெனில் இந்தக் கடலில் மீன்களே கிடையாது; இதைச் சுற்றியுள்ள கரையிலும் தாவரங்கள் அரிதாகவே காணப்படுகின்றன. பைபிள் இதை உப்புக் கடல் என்று அழைப்பதுடன், இது அராபாவின் பிளவு பள்ளத்தாக்கில் இருப்பதால் அராபா கடல் என்றும் அழைக்கிறது. (ஆதி. 14:3; யோசு. 12:​3, தி.மொ.) இந்தக் கடல், வடக்கு-தெற்காக ஏறக்குறைய 75 கிலோமீட்டர் நீளமும், 15 கிலோமீட்டர் அகலமும் உடையது. இதன் மேற்பரப்பே, மத்தியதரைக் கடல் மட்டத்திற்கு ஏறக்குறைய 400 மீட்டர் கீழே உள்ளது. பூமியிலேயே மிகத் தாழ்வான இடம் இதுதான். வட பாகத்தில் இதன் ஆழம் ஏறக்குறைய 400 மீட்டர். இந்தக் கடலைச் சுற்றி நாலா பக்கங்களிலும் வெறும் பாறைகள் நிறைந்த குன்றுகளும் செங்குத்தான மலை உச்சிகளும் சூழ்ந்துள்ளன. யோர்தான் நதியிலிருந்து வரும் நன்னீர் இதில் கலக்கிறபோதிலும், அந்த நீர் நீராவியாக மட்டுமே வெளியேறுகிறது. அதுவும், அது வந்த வேகத்தில் ஆவியாகிவிடுகிறது. தேங்கியிருக்கும் நீரிலோ, ஏறக்குறைய 25 சதவீத திடப்பொருள் கரைந்திருக்கும்; இதில் பெரும்பாலும் இருப்பது உப்பு. இது மீன்களுக்கு விஷமாயிருப்பது மட்டுமின்றி, மனிதருக்கும் கண் எரிச்சலை ஏற்படுத்தும். சவக்கடலைச் சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகளைப் பார்க்க வருவோர், அங்கே நிலவும் மயான அமைதியையும், அங்கு நேர்ந்த அழிவையும் காணும்போது விக்கித்துப் போகின்றனர். இது ஜீவராசியே இல்லாத இடம். இந்த முழு பிரதேசமும் ஒரு காலத்தில் “நீர்வளம் பொருந்தினதாய் . . . யெகோவாவின் தோட்டத்தைப் போல” இருந்தபோதிலும், சவக்கடலைச் சுற்றியுள்ள நிலப்பகுதி இப்போது பெரும்பாலும் ‘பாழாக’ உள்ளது. கிட்டத்தட்ட 4,000 ஆண்டுகளாக அவ்வாறே இருந்து வருகிறது. இவ்வாறு, அங்கிருந்த சோதோமுக்கும் கொமோராவுக்கும் விரோதமாக நிறைவேற்றப்பட்ட யெகோவாவின் நியாயத்தீர்ப்புகளை யாரும் மாற்ற முடியாது என்பதற்கு பலமான ஓர் அத்தாட்சியாய் உள்ளது.​—ஆதி. 13:​10, NW; 19:​27-29; செப். 2:9.

ஈ-5 அராபா (உப்புக் கடலுக்குத் தெற்கேயுள்ள பகுதி)

27பிளவு பள்ளத்தாக்கின் இந்த முடிவான பகுதி, தெற்கே இன்னும் 160 கிலோமீட்டர் தூரம் செல்கிறது. இந்தப் பிரதேசம் ஏறக்குறைய வனாந்தரம்தான். இங்கு மழையைக் காண்பதே அரிது; வெயிலோ சுட்டுப்பொசுக்குகிறது. பைபிள் இதையும் “அராபா” என்று அழைக்கிறது. (உபா. 2:8, தி.மொ.) பாதி தூரத்தில், கடல்மட்டத்திலிருந்து 200 மீட்டருக்கும் மேல் உயர்ந்து நிற்கிறது. பின்பு மறுபடியுமாக தெற்கே, செங்கடலின் கிழக்கு முனையான அகபா வளைகுடாவில் இறங்குகிறது. இங்குதான், எசியோன் கேபேர் துறைமுகத்தில் சாலொமோன் கப்பல்கள் கட்டினார். (1 இரா. 9:26) யூத அரசர்களின் காலத்தில், அராபாவின் இந்தப் பகுதி வெகுகாலமாக ஏதோம் ராஜ்யத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தது.

உ. யோர்தானுக்குக் கிழக்கிலுள்ள மலைகளும் பீடபூமிகளும்

28“யோர்தானுக்கு அப்புறத்திலே கிழக்கே” இப்பகுதி, பிளவு பள்ளத்தாக்கிலிருந்து கிடுகிடுவென்று உயர்ந்து, அடுத்தடுத்து பீடபூமிகளை உண்டுபண்ணுகிறது. (யோசு. 18:7; 13:​9-12; 20:8) வடக்கே பாசான் தேசம் உள்ளது (உ-1). இது, கீலேயாத்தின் பாதிப்பகுதியுடன் சேர்த்து மனாசே கோத்திரத்துக்குக் கொடுக்கப்பட்டது. (யோசு. 13:​29-31) இந்நாட்டில் கால்நடைகள் ஏராளம்; இது விவசாயிகளுக்கு ஏற்ற நிலம்; வளமிக்க பீடபூமியின் சராசரி உயரம் கடல்மட்டத்திலிருந்து ஏறக்குறைய 600 மீட்டருக்கு மேல். (சங். 22:12; எசே. 39:18; ஏசா. 2:13; சக. 11:2) இயேசுவின் நாளில் இந்த நிலப்பகுதி மிகுந்த தானியத்தை ஏற்றுமதி செய்தது, இன்றும் இங்கு வேளாண்மை செழிக்கிறது. அடுத்தபடியாக, தெற்கே கீலேயாத் தேசம் உள்ளது (உ-2). இதன் கீழ்ப்பகுதியிலுள்ள பாதிபாகம் காத் கோத்திரத்தாருக்கு கிடைத்தது. (யோசு. 13:​24, 25) இது 1,000 மீட்டர் உயரத்தை எட்டும் மலைப்பாங்கான பிரதேசம். இங்கு குளிர்காலத்தில் கனத்த மழையும் கோடைகாலத்தில் மிகுந்த பனியும் பெய்வதால் நீருக்குப் பஞ்சமேயில்லை. இது ஆடுமாடுகளுக்கு ஏற்ற நாடாகவும் இருந்தது. இது ‘பால்ஸம்’ என்ற நறுமண பிசின் தைலத்துக்குப் பிரசித்திபெற்ற முக்கியமான இடம். இன்று இது முதல்தர திராட்சப்பழங்களுக்குப் பெயர்பெற்றது. (எண். 32:1; ஆதி. 37:25; எரே. 46:11) இந்தக் கீலேயாத் தேசத்துக்கே தாவீது அப்சலோமிடமிருந்து தப்பியோடினார். இதன் மேற்கு பாகத்திலுள்ள ‘தெக்கப்போலியின் எல்லைகளில்’ இயேசு பிரசங்கித்தார்.​—2 சா. 17:​26-29; மாற். 7:31.

29‘அம்மோன் புத்திரரின் தேசம்’ (உ-3) கீலேயாத்தை அடுத்து தெற்கிலுள்ளது. இதில் பாதிபாகம், காத் கோத்திரத்தாருக்குக் கொடுக்கப்பட்டது. (யோசு. 13:24, 25; நியா. 11:​12-28) இந்த பீடபூமி ஆடுகளுக்கு ஏற்ற மேய்ச்சல் நிலம். (எசே. 25:5) இன்னும் சற்றுப்போனால் தெற்கே ‘மோவாபின் தேசம்’ உள்ளது. (உபா. 1:5) மோவாபியரோ சிறந்த ஆட்டிடையர்கள்; இந்நாள் வரையில் ஆடு வளர்ப்புதான் அந்தப் பகுதியின் முக்கிய தொழில். (2 இரா. 3:4) பின்பு, சவக்கடலுக்குத் தென்கிழக்கில், ஏதோம் மலைப் பீடபூமிக்கு நாம் வருகிறோம் (உ-4). பெட்ராவைப் போன்ற பிரசித்திபெற்ற வாணிகத்தலங்களின் இடிபாடுகள் இந்நாள்வரை இங்கு உள்ளன.​—ஆதி. 36:​19-21; ஒப. 1-4.

30இந்தக் குன்றுகளுக்கும் பீடபூமிகளுக்கும் கிழக்கே பரந்த கரடுமுரடான வனாந்தரம் உள்ளது. அதனால் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கும் மெசொப்பொத்தாமியாவுக்கும் இடையே நேர்வழியில் பயணிக்க முடியாது. வடக்கு நோக்கி பல கிலோமீட்டர் தூர சுற்றுவழியில்தான் வாணிகர்களும் மற்றவர்களும் பயணிக்க முடியும். தெற்கே, இந்த வனாந்தரம் அரபிய பாலைவனத்திலுள்ள பெரும் மணல் அடுக்குகளில் முடிகிறது.

ஊ. லீபனோன் மலைகள்

31வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் இயற்கை காட்சியில் உயர்ந்தோங்கி நிற்பவை லீபனோன் மலைகள்தான். உண்மையில் இரண்டு மலைத்தொடர்கள் இணையாக செல்கின்றன. லீபனோன் மலைத்தொடரின் அடிவார குன்றுகளே (foothills) மேல் கலிலேயாவாக தொடருகின்றன. பல இடங்களில் இந்தக் குன்றுகள் கடலோரம் வரையாகவும் செல்கின்றன. இந்த மலைத்தொடரில் மிக உயர்ந்த சிகரம், கடல் மட்டத்திலிருந்து ஏறக்குறைய 3,000 மீட்டர் உயரமாகும். இதற்கு இணையாகச் செல்லும் எதிர் லீபனோன் மலைத்தொடரில் மிக உயர்ந்த சிகரம் அழகிய எர்மோன் மலையாகும். இது, கடல் மட்டத்திலிருந்து 2,814 மீட்டர் உயரமுள்ளது. பெரும்பாலும் யோர்தான் நதியின் தண்ணீருக்கும், வசந்த காலத்தின் பிற்பகுதியில் ஏற்படும் வறட்சியான சமயத்தில் பனி பெய்வதற்கும் இந்த எர்மோன் மலையிலிருந்து உருகும் பனிதான் காரணம். (சங். 133:3) லீபனோன் மலைகள் பெரிய பெரிய கேதுரு மரங்களுக்குப் பிரசித்திபெற்றவை. சாலொமோன் கட்டின ஆலயத்திற்கு இந்த மரங்களே முக்கியமாக பயன்படுத்தப்பட்டன. (1 இரா. 5:​6-10) இன்று கேதுரு மரத் தோப்புகள் சிலவே மீந்துள்ளன; என்றாலும், கீழேயுள்ள மலைச் சரிவுகளில், பைபிள் காலங்களில் இருந்ததுபோலவே, இன்றும் திராட்சத் தோட்டங்களும் ஒலிவத் தோப்புகளும் பழத்தோட்டங்களும் உள்ளன.​—ஓசி. 14:​5-7.

32யெகோவா வாக்கு கொடுத்திருந்தபடியே தேசத்தை இஸ்ரவேலருக்குக் கொடுத்தார். இந்தத் தேசம், கிழக்கேயுள்ள பயணிக்க முடியாத வனாந்தரத்துக்கும் மேற்கேயுள்ள பெருங்கடலுக்கும் இடையே அமைந்திருந்தது. இந்தத் தேசத்திற்கு கற்பனை சுற்றுலா சென்று வந்த நாம், இஸ்ரவேலரது நாட்களில் இத்தேசத்தில் இருந்த செழுமையையும் வளத்தையும் மனக்கண்ணால் கண்டுகளித்தோம். மெய்யாகவே அது ‘மகா நல்ல தேசம். . . . பாலும் தேனும் ஓடுகிற தேசம்.’ (எண். 14:​7, 8; 13:23) மோசே அந்தத் தேசத்தை இவ்வாறு வர்ணித்தார்: “உன் கடவுளாகிய யெகோவா உன்னை நல்ல தேசத்திலே கொண்டுவந்து சேர்க்கிறார்; அது பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலும் பிறக்கும் நீரோட்டங்களும் ஊற்றுகளும் மடுக்களும் உள்ள தேசம்; அது கோதுமையும் வாற்கோதுமையும் திராட்சச்செடிகளும் அத்திமரங்களும் மாதளஞ்செடிகளுமுள்ள தேசம்; அது எண்ணெய் தரும் ஒலிவமரங்களும் தேனுமுள்ள தேசம்; அது குறைவின்றி ஆகாரம் புசிக்கத்தக்கதும் ஒன்றும் உனக்குக் குறைபடாததுமான தேசம்; அதன் கற்கள் இரும்பு, அதின் மலைகளில் செம்பு வெட்டி எடுப்பாய். நீ புசித்துத் திருப்தியாயிருக்கையில் உன் கடவுளாகிய யெகோவா உனக்குக் கொடுத்த அந்த நல்ல தேசத்துக்காக அவரை ஸ்தோத்திரி.” (உபா. 8:​7-10, தி.மொ.) அன்றைய வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைப்போலவே, இந்த முழு பூமியையும் எழில்கொஞ்சும் பரதீஸாக்குவதே யெகோவாவின் நோக்கம் என்பதை அறிந்து, இப்போது யெகோவாவை நேசிப்போர் யாவரும் அவருக்கு நன்றி செலுத்துவார்களாக.​—சங். 104:​10-24.

[அடிக்குறிப்புகள்]

a வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கங்கள் 332-3.

b வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கம் 335.

c வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கம் 336.

d வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 2, பக்கங்கள் 737-40.

e வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கம் 334.

[கேள்விகள்]

1. (அ) ‘வாக்குப்பண்ணப்பட்ட தேசம்’ என்ற பெயர் ஏன் பொருத்தமானது? (ஆ) இந்தத் தேசத்தின் நிலவியல் அமைப்பை நாம் ஆராய்கையில் என்ன ஒளிமயமான எதிர்காலம் நம் மனதுக்கு வரலாம்?

2. வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் யூதர்கள் குடியேறிய பகுதியின் பரப்பளவு எவ்வளவு, வேறு எந்தப் பிராந்தியத்திலும் குடியேறினர்?

3. “வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் இயற்கை பிரதேசங்கள்” என்ற நிலப்படத்தைப் பாராவோடு ஒப்பிட்டு, அந்தத் தேசத்தின் பின்வரும் இயற்கை பிரிவுகளில் அடங்கியுள்ள நிலப்பகுதிகளை சுருக்கமாக தெரிந்துகொள்ளுங்கள்: (அ) யோர்தானுக்கு மேற்கிலுள்ள சமவெளிகள், (ஆ) யோர்தானுக்கு மேற்கிலுள்ள மலைப் பிரதேசங்கள், (இ) யோர்தானுக்குக் கிழக்கிலுள்ள மலைகளும் பீடபூமிகளும்.

4. கடலோரப் பகுதியின் தனித்தன்மைகளும் தட்பவெப்பநிலையும் யாவை?

5, 6. (அ) ஆசேர் சமவெளி, (ஆ) தோரின் நீண்டு குறுகிய கடலோரப் பகுதி ஆகியவற்றை சுருக்கமாய் விவரியுங்கள்.

7. (அ) தீர்க்கதரிசனத்தில் சாரோன் எவ்வாறு குறிப்பிடப்படுகிறது, ஏன்? (ஆ) எபிரெய காலங்களில் இந்தப் பிரதேசம் எதற்குப் பயன்படுத்தப்பட்டது?

8. பெலிஸ்த சமவெளி எங்குள்ளது, அதன் தனிச்சிறப்புகள் யாவை?

9. (அ) மத்திய கிழக்கு-மேற்கு பள்ளத்தாக்கில் அடங்கியுள்ள இரண்டு பாகங்கள் யாவை, அது எவ்வாறு பயன்பட்டது? (ஆ) “வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம்” வரைபடங்களைப் பயன்படுத்தி, இப்பகுதியின் நிலவியல்பை விவரியுங்கள்.

10. (அ) யெஸ்ரயேல் பள்ளத்தாக்கை விவரியுங்கள். (ஆ) இந்த நிலப்பகுதியோடு தொடர்புடைய பைபிள் நிகழ்ச்சிகள் யாவை?

11, 12. (அ) இயேசு எந்தளவுக்கு கலிலேயாவில் ஊழியம் செய்தார், யார் யார் இந்த மாகாணத்தை சேர்ந்தவர்கள்? (ஆ) கீழ் கலிலேயாவை மேல் கலிலேயாவோடு ஒப்பிட்டு வேறுபாட்டைக் காண்க.

13. (அ) கர்மேல் எனப்படுவது எது? (ஆ) இதைப் பற்றி பைபிளில் என்ன குறிப்பிடப்பட்டிருக்கிறது?

14. சமாரிய மலைகளில் எந்தக் கோத்திரத்தார் குடியேறினர், இந்த நிலப்பகுதி எவற்றைப் பயிரிடுவதற்கு ஏற்றது?

15. (அ) மோசே யோசேப்பின்பேரில் கூறின ஆசீர்வாதம் எவ்வாறு சமாரிய தேசத்தில் நிறைவேறினது? (ஆ) இயேசுவின் காலத்தின்போது இந்தத் தேசம் எவ்வாறு மேலுமாக ஆசீர்வதிக்கப்பட்டது?

16. (அ) சமபூமியின் தனித்தன்மை என்ன? (ஆ) பைபிள் சரித்திரத்தில் இந்த மாகாணத்திற்கு இருந்த முக்கியத்துவம் என்ன?

17. (அ) யூதாவின் மலைநாடு பைபிள் காலங்களில் எந்தளவு செழிப்பாக இருந்தது, இன்று எவ்வாறு இருக்கிறது? (ஆ) யூதா எவற்றிற்குத் தோதான இடமாக கருதப்பட்டது?

18. (அ) எருசலேம் எப்போது இஸ்ரவேலுக்கும் யூதாவுக்கும் தலைநகராயிற்று? (ஆ) இந்த நகரத்தின் சிறப்புவாய்ந்த சில அம்சங்கள் யாவை?

19. (அ) எஷிமோன் என்ற பெயர் எவ்வாறு பொருத்தமாயுள்ளது? (ஆ) இந்தப் பிரதேசத்தில் நிகழ்ந்த பைபிள் சம்பவங்கள் யாவை?

20. நெகெப்பை (தென்னாட்டை) விவரியுங்கள்.

21. பாரான் எங்குள்ளது, பைபிள் சரித்திரத்தில் இது வகித்த பாகம் என்ன?

22. 272-ம் பக்கத்திலுள்ள நிலப்படத்தையும் 273-ம் பக்கத்திலுள்ள குறுக்குவெட்டு வரைபடங்களையும் பாராவோடு ஒப்பிட்டு, அராபாவின் (மகா பிளவு பள்ளத்தாக்கின்) முக்கிய அம்சங்களைச் சுருக்கமாக விவரியுங்கள்; பிறகு அராபாவும் அதைச் சூழ்ந்துள்ள நாடுகளும் எவ்வாறு இணைகின்றன என்பதை குறிப்பிடுங்கள்.

23. பைபிள் காலங்களில் ஹுல்லா பிரதேசம் எதோடு சம்பந்தப்பட்டிருந்தது?

24. (அ) பைபிளில் கலிலேயா கடலுக்கு வழங்கப்பட்ட வேறு பெயர்கள் யாவை? (ஆ) இயேசுவின் நாட்களில் அதன் சுற்றுப்புறங்கள் எப்படி இருந்தன?

25. யோர்தான் பள்ளத்தாக்கின் முக்கிய அம்சங்கள் யாவை?

26. (அ) சவக்கடலைப் பற்றிய குறிப்பிடத்தக்க உண்மைகள் சில யாவை? (ஆ) யெகோவாவின் நியாயத்தீர்ப்புகளைக் குறித்து பலமான என்ன அத்தாட்சியை இந்தப் பிரதேசம் அளிக்கிறது?

27. தெற்கு அராபா என்ன வகையான பிரதேசம், பூர்வ காலங்களில் இது எதன் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தது?

28. விவசாயத்தைக் குறித்ததில் பாசானும் கீலேயாத்தும் எதற்குப் பெயர்பெற்றவை, பைபிள் சரித்திரத்தில் இந்தப் பிரதேசங்கள் வகிக்கும் பங்கு யாது?

29. யோர்தானுக்குக் கிழக்கே, தெற்கு நோக்கி என்னென்ன நாடுகள் இருக்கின்றன, அவை எதற்குப் பிரசித்திபெற்றவை?

30. இந்தப் பீடபூமிகளுக்குக் கிழக்கில் பயணத்தைத் தடுப்பது எது?

31. (அ) எவை லீபனோன் மலைகள்? (ஆ) பைபிள் காலங்களில் இருந்தது போலவே, எவையெல்லாம் லீபனோனில் இன்றும் உள்ளன?

32. வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை மோசே எவ்வாறு சரியாக விவரித்தார்?

[பக்கம் 272-ன் தேசப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் இயற்கை பிரதேசங்கள்

(அடுத்துள்ள பிராந்தியமும்)

மைல் 0 10 20 30 40 50 60

கிமீ 0 20 40 60 80

(குறுக்குவெட்டுகள் V​—V, W​—W, X​—X, Y​—Y, Z​—Z, எதிர்ப் பக்கம் காண்க)

எண்களுக்கு விளக்கக் குறிப்புகள்

மத்தியதரைக் கடல்

அ பெரிய சமுத்திரத்தின் கடலோரப் பகுதி

யோப்பா

ஆ-1 ஆசேர் சமவெளி

ஆ-2 தோரின் நீண்டு குறுகிய கடலோரப் பகுதி

தோர்

ஆ-3 சாரோனின் மேய்ச்சல் நிலங்கள்

ஆ-4 பெலிஸ்த சமவெளி

அஸ்தோத்

அஸ்கலோன்

எக்ரோன்

காத்

காசா

ஆ-5 மத்திய கிழக்கு-மேற்கு பள்ளத்தாக்கு (மெகிதோ சமவெளி,

யெஸ்ரயேல் பள்ளத்தாக்கு)

பெத்-சான்

இ-1 கலிலேய மலைகள்

கானா

நாயீன்

நாசரேத்து

தீரு

இ-2 கர்மேல் மலைகள்

இ-3 சமாரிய மலைகள்

பெத்தேல்

எரிகோ

சமாரியா

திர்சா

சீகேம்

இ-4 சமபூமி

லாகீஸ்

இ-5 யூதாவின் மலைநாடு

பெத்லகேம்

கேபா

எபிரோன்

எருசலேம்

இ-6 யூதாவின் வனாந்தரம் (எஷிமோன்)

இ-7 நெகெப் (தென்னாடு)

பெயெர்செபா

காதேஸ்-பர்னேயா

எகிப்தின் நதி

இ-8 பாரான் வனாந்தரம்

ஈ-1 ஹுல்லா நதிப்பள்ளத்தாக்கு

தாண்

பிலிப்புச் செசரியா

ஈ-2 கலிலேயா கடலைச் சூழ்ந்த பிரதேசம்

பெத்சாயிதா

கப்பர்நகூம்

கோராசின்

கலிலேயாக் கடல்

திபேரியா

ஈ-3 யோர்தான் பள்ளத்தாக்கு மாகாணம் (கோர்)

யோர்தான் நதி

ஈ-4 உப்புக் (சவக்) கடல் (அராபா கடல்)

உப்புக் கடல்

ஈ-5 அராபா (உப்புக்கடலுக்கு தெற்கேயுள்ள பகுதி)

எசியோன்-கேபேர்

செங்கடல்

உ-1 பாசான் தேசம்

தமஸ்கு

எத்ரே

உ-2 கீலேயாத் தேசம்

ரப்பா

ராமோத்-கிலெயாத்

யாப்போக்கு உபநதி

உ-3 அம்மோன் மற்றும் மோவாப் தேசம்

எஸ்போன்

கிராரேசேத்

மேதேபா

அர்னோன் உபநதி

சாரேத் உபநதி

உ-4 ஏதோமின் பீடபூமி

பெட்ரா

ஊ லீபனோன் மலைகள்

சீதோன்

லீபனோனின் மலைகள்

எர்மோன் மலை

[பக்கம் 273-ன் தேசப்படங்கள்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் குறுக்கு வெட்டு தோற்ற மாதிரி

(இடங்களுக்கு, எதிர்ப் பக்க வரைபடத்தைக் காண்க)

உயரம் நீட்டலளவுக்கு ஏறக்குறைய 10 மடங்கு அதிகம்

எப்பிராயீமுக்குக் குறுக்கே கிழக்கு-மேற்கு பகுதி (V​—V)

மத்தியதரைக் கடல்

ஆ-3 சாரோனின் மேய்ச்சல் நிலங்கள்

இ-3 சமாரிய குன்றுகள்

ஈ-3 அராபா அல்லது யோர்தான் பள்ளத்தாக்கு (கோர்)

குவாட்டாரா

ஸோர்

உ-2 கிலெயாத் தேசம்

MI 0 5 10

KM 0 8 16

இடதுபுறத்திலுள்ள எண்கள் மீட்டரில் வலதுபுறத்திலுள்ள எண்கள் அடி கணக்கில்

+900 +3,000

+600 +2,000

+300 +1,000

0 (கடல் மட்டம்) 0

—300 —1,000

—600 —2,000

யூதாவுக்குக் குறுக்கே மேற்கு-கிழக்குப் பகுதி (W-W)

மத்தியதரைக் கடல்

ஆ-4 மணற்குன்றுகள்

பெலிஸ்திய சமவெளி

இ-4 சமநிலநாடு

இ-5 யூதாவின் மலை நாடு

எருசலேம்

இ-6 யூதாவின் வனாந்தரம்

ஈ-4 பிளவு பள்ளத்தாக்கு

உ-3 அம்மோன் மற்றும் மோவாபின் தேசம்

MI 0 5 10

KM 0 8 16

இடதுபுறத்திலுள்ள எண்கள் மீட்டரில் வலதுபுறத்திலுள்ள எண்கள் அடி கணக்கில்

+900 +3,000

+600 +2,000

+300 +1,000

0 (கடல் மட்டம்) 0

—300 —1,000

—600 —2,000

யூதாவுக்குக் குறுக்கே மேற்கு-கிழக்குப் பகுதி (X—X)

மத்தியதரைக் கடல்

ஆ-4 மணற்குன்றுகள்

பெலிஸ்திய சமவெளி

இ-4 சமநிலநாடு

இ-5 யூதாவின் மலை நாடு

இ-6 யூதாவின் வனாந்தரம்

ஈ-4 பிளவு பள்ளத்தாக்கு

உப்புக் கடல்

உ-3 அம்மோன் மற்றும் மோவாபின் தேசம்

MI 0 5 10

KM 0 8 16

இடதுபுறத்திலுள்ள எண்கள் மீட்டரில் வலதுபுறத்திலுள்ள எண்கள் அடி கணக்கில்

+900 +3,000

+600 +2,000

+300 +1,000

0 (கடல் மட்டம்) 0

—300 —1,000

—600 —2,000

—900 —3,000

யோர்தானுக்கு மேற்கே மலைகளினூடே தெற்கு-வடக்குப் பகுதி (Y—Y)

இ-7 நெகெப்

இ-5 யூதாவின் மலைநாடு

இ-3 சமாரிய குன்றுகள்

ஆ-5 யெஸ்ரயேலின் தாழ்ந்த சமவெளி

இ-1 கலிலேய குன்றுகள்

MI 0 5 10 20

KM 0 8 16 32

இடதுபுறத்திலுள்ள எண்கள் மீட்டரில் வலதுபுறத்திலுள்ள எண்கள் அடி கணக்கில்

+900 +3,000

+600 +2,000

+300 +1,000

0 (கடல் மட்டம்) 0

அராபாவுக்கு அல்லது பிளவு பள்ளத்தாக்குக்கு அருகே தெற்கு-வடக்குப் பகுதி (Z—Z)

ஈ-5

ஈ-4 உப்புக் கடல்

ஈ-3 அராபா அல்லது யோர்தான் பள்ளத்தாக்கு (கோர்)

ஈ-2 கலிலேய கடல்

ஈ-1 ஹுல்லா நதிப்பள்ளத்தாக்கு

MI 0 5 10 20

KM 0 8 16 32

இடதுபுறத்திலுள்ள எண்கள் மீட்டரில் வலதுபுறத்திலுள்ள எண்கள் அடி கணக்கில்

+900 +3,000

+600 +2,000

+300 +1,000

0 (கடல் மட்டம்) 0

—300 —1,000

—600 —2,000

—900 —3,000