Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆராய்ச்சி எண் 2—காலமும் பரிசுத்த வேதாகமமும்

ஆராய்ச்சி எண் 2—காலமும் பரிசுத்த வேதாகமமும்

ஆராய்ச்சி எண் 2—காலமும் பரிசுத்த வேதாகமமும்

பைபிளில் பயன்படுத்தப்பட்ட காலப் பிரிவுகளை விவரித்தல், பொதுவாகப் பயன்படுத்தப்படும் காலண்டர்கள், பைபிளுக்குரிய முக்கிய தேதிகள், ‘கால ஓட்டத்தைக்’ குறித்த ஆர்வமூட்டும் குறிப்புகள்.

நேரம் ஓடுவது மனிதனுக்கு நன்றாகவே தெரிகிறது. கடிகாரம் ‘டிக்-டிக்’ என்று ஒவ்வொரு முறை ஒலிக்கும்போதும், அவன் கால ஓட்டத்தில் இன்னும் ஓர் அடி முன்னேறுகிறான். தனக்குக் கிடைத்த நேரத்தைச் சரியான முறையில் பயன்படுத்தினால் அவன் நிச்சயமாகவே ஞானமுள்ளவன். அரசன் சாலொமோன் எழுதின பிரகாரம்: “ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு. பிறக்க ஒரு காலமுண்டு, இறக்க ஒரு காலமுண்டு; நட ஒரு காலமுண்டு, நட்டதைப் பிடுங்க ஒரு காலமுண்டு; கொல்ல ஒரு காலமுண்டு, குணமாக்க ஒரு காலமுண்டு; இடிக்க ஒரு காலமுண்டு, கட்ட ஒரு காலமுண்டு; அழ ஒரு காலமுண்டு, நகைக்க ஒரு காலமுண்டு.” (பிர. 3:​1-4) காலம்தான் எவ்வளவு விரைவில் பறந்துவிடுகிறது! பொதுவாக மனிதனின் ஆயுட்காலம் 70 வருடமே. அறிவுக் கடலை நீந்தி கடக்கவும், மனிதனுக்காக யெகோவா இந்தப் பூமியில் சேர்த்து வைத்துள்ள நல்ல நல்ல பொருட்களையெல்லாம் அனுபவித்து மகிழவும் இது போதாது. “அவர் யாவற்றையும் அதினதின் காலத்திலே அழகாகச் செய்திருக்கிறார்; நித்தியகால நினைவையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்; என்றாலும் கடவுள் ஆதிமுதல் அந்தம் மட்டும் செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுணரான்.”​—பிர. 3:​11, தி.மொ.; சங். 90:10.

2யெகோவாவோ நித்திய காலமாய் வாழ்கிறார். அந்தக் கால ஓட்டத்தில் அவர் படைத்தவற்றை வைப்பதில் அவருக்கு அலாதிப் பிரியம். கலகக்கார சாத்தான் உட்பட, பரலோகத்திலுள்ள தூதர்கள் கால ஓட்டத்தை நன்கு அறிவர். (தானி. 10:13; வெளி. 12:12) மனிதகுலத்தைக் குறித்து, ‘சமயமும் எதிர்பாராத நிகழ்ச்சியும் எல்லாருக்கும் நேரிடுகிறது,’ என்று எழுதப்பட்டிருக்கிறது. (பிர. 9:​11, NW) எல்லா சமயங்களிலும் கடவுளைத் தன் நினைவுகளில் கொண்டு, அவர் ஏற்பாடு செய்துள்ள ‘ஏற்றவேளை போஜனத்தை’ ஆவலோடு ஏற்கிற மனிதனே மகிழ்ச்சியுள்ளவன்!​—மத். 24:45, தி.மொ.

3காலம் ஒரே திசையில் செல்கிறது. காலம் உலகளாவியதாக இருக்கிறபோதிலும் அது என்னவென உயிர்வாழும் எந்தவொரு மனிதனாலும் சொல்ல முடிகிறதில்லை. பரந்த விண்வெளியை எப்படி அளவிட முடியாதோ, அப்படியே காலத்தையும் அளவிட முடியாது. காலம் ஓடத் தொடங்கினது எப்போது என்றும், எங்கு போய் முடிகிறது என்றும் யாராலும் விளக்க முடியாது. எல்லாம் அறிந்த யெகோவாவுக்கு மட்டுமே இது தெரியும். ஏனெனில் அவர் “ஆதியந்தமில்லாத சதாகாலங்களிலும்” இருப்பவராக விவரிக்கப்பட்டிருக்கிறார்.​—சங். 90:​2, தி.மொ.

4மறுபட்சத்தில், காலத்திற்கே உரிய சில தனிப் பண்புகள் உள்ளன. அவற்றை வைத்து காலத்தைப் புரிந்துகொள்ளலாம். அது ஓடும் வேகத்தை ஓரளவு அளவிட முடியும். மேலும், அது ஒரே திசையில் மாத்திரமே ஓடுகிறது. ஒருவழிப் பாதையில் செல்லும் வண்டிகளைப்போல், காலம் அந்த ஒரே திசையில், நிற்காமல்​—முன்னோக்கி​—என்றுமே முன்னோக்கிச் செல்கிறது. அது எந்த வேகத்தில் முன்னோக்கி ஓடினாலும் சரி, காலத்தை ஒருபோதும் பின்னோக்கி திருப்ப முடியாது. கணநேரமே இருக்கும் நிகழ்காலத்தில் நாம் வாழ்கிறோம். எனினும், இந்த நிகழ்காலமும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது, இவ்வாறு ஓடி ஓடி, கடந்தகாலமாக மாறிக்கொண்டே இருக்கிறது. அதை நிறுத்தவே முடியாது.

5கடந்த காலம். கடந்த காலம் சென்றுவிட்டது, அது இப்போது வெறும் சரித்திரமே, அது திரும்ப வராது. கடந்த காலத்தைத் திரும்பக் கொண்டுவர எப்படித்தான் முயன்றாலும் அது நடக்காது. அது, ஒரு நீர்வீழ்ச்சியைத் திரும்ப மலைக்கே மேல்நோக்கிப் புரண்டோடும்படி செய்ய முயற்சிப்பது அல்லது ஓர் அம்பை அதை எறிந்த வில்லிற்கு திரும்பப் பறந்து வந்து சேரும்படி செய்விக்க முயற்சி செய்வது போன்றது. நம்முடைய தவறுகள் கால ஓட்டத்தில் அவற்றின் தடயத்தை விட்டுச் சென்றிருக்கின்றன, அது யெகோவா மாத்திரமே அழிக்கக்கூடிய ஒரு தடயம். (ஏசா. 43:25) இவ்வாறே, கடந்த காலத்தில் ஒரு மனிதன் செய்த நல்ல செயல்கள் ஒரு பதிவை உண்டுபண்ணியிருக்கின்றன, அவை யெகோவாவிடமிருந்து வரும் ஆசீர்வாதத்தோடு ‘அவனுக்குக் கிடைக்கும்.’ (நீதி. 12:14; 13:22) கடந்த காலம் பிரயோஜனப்படுத்தப்பட்டது, அல்லது வீணாக்கப்பட்டது. இனிமேலும் அதன்மீது எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. பொல்லாதவர்களைக் குறித்து: “அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் உலர்ந்துபோவார்கள்; பசும் பூண்டைப்போல் வாடிப்போவார்கள்” என்று எழுதப்பட்டுள்ளது.​—சங். 37:2.

6எதிர்காலம். எதிர்காலம் வேறுபட்டது. அது எப்போதும் நம்மைநோக்கி வருகிறது. கடவுளுடைய வார்த்தையின் உதவியால் நமக்கு முன்னாலுள்ள இடையூறுகளை நாம் கண்டுணர்ந்து, அவற்றை எதிர்ப்படுவதற்கு நம்மை ஆயத்தப்படுத்திக்கொள்ளலாம். நமக்குப் ‘பரலோகத்திலே . . . பொக்கிஷங்களைச்’ சேர்த்து வைக்கலாம். (மத். 6:20) இந்தப் பொக்கிஷங்கள் கால ஓட்டத்தால் அடித்துச் செல்லப்படாது. இவை நம்மோடு நிலைத்திருந்து, நித்திய எதிர்கால ஆசீர்வாதமாக நீடித்திருக்கும். காலம் எதிர்காலத்தைப் பாதிப்பதால், அதை ஞானமாக பயன்படுத்துவதில் நாம் கண்ணும் கருத்துமாக இருக்கிறோம்.​—எபே. 5:​15, 16.

7காலங்காட்டும் கருவிகள். தற்கால கடிகாரங்களும் கைக் கடிகாரங்களும் காலங்காட்டும் கருவிகள். அவை காலத்தை அளவிடும் அளவுகோல்கள். அவ்வாறே சிருஷ்டிகராகிய யெகோவா, பூமியில் மனிதன் தன்னுடைய நோக்குநிலையிலிருந்து காலத்தைத் திருத்தமாய் அறிந்துகொள்ளும்படி, அதன் அச்சில் சுற்றும் பூமி, பூமியையும் சூரியனையும் சுற்றிவரும் சந்திரன் போன்ற காலங்காட்டும் மாபெரும் கருவிகளை இயங்கச் செய்திருக்கிறார். “பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும் காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்.” (ஆதி. 1:14) இவ்வாறு, ஒன்றோடொன்று இணைந்தியங்கும் திரளான இந்த வான்கோளங்கள் அவற்றின் சரியான சுழல்வட்டப் பாதையில் முடிவின்றி பிழையின்றி இயங்கி, ஒரே திசையில் முன்னேறும் காலத்தை அளவிடுகின்றன.

8நாள். “நாள்” என்ற சொல், நவீன காலங்களில் வெவ்வேறாக பொருள்படுவதைப் போலவே, பைபிளிலும் வெவ்வேறான அர்த்தத்தில் பேசப்படுகிறது. பூமி அதன் அச்சில் தன்னைத்தானே ஒருதரம் சுற்றிக்கொள்ள 24 மணிநேரத்தைக் கொண்ட ஒரு நாளை எடுக்கிறது. இந்தக் கருத்தில், ஒரு நாளுக்கு, பகலையும் இரவையும் சேர்த்து மொத்தம் 24 மணிநேரம். (யோவா. 20:19) வெளிச்சமாய் உள்ள 12 மணிநேரப் பகுதி பகல் என்றும், இருள் சூழ்ந்த 12 மணிநேர பகுதி இரவு என்றும் அழைக்கப்படுகின்றன. (யாத். 10:13) “தேவன் வெளிச்சத்துக்குப் பகல் [“நாள்,” NW] என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்.” (ஆதி. 1:5) மற்றொரு கருத்தில் “நாள்” அல்லது “நாட்கள்” என்ற சொல் முக்கியமான நபர் வாழ்ந்த காலப்பகுதியைக் குறிப்பிடுகிறது. உதாரணமாக, ஏசாயா தன் தரிசனத்தை “உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களில்” கண்டார். (ஏசா. 1:1) மேலும் நோவா மற்றும் லோத்தின் நாட்கள் தீர்க்கதரிசன கருத்துடையவையாக குறிப்பிடப்படுகின்றன. (லூக். 17:​26-30) “நாள்” என்ற சொல் வெவ்வேறு அர்த்தத்தில் அல்லது உருவகமாக உபயோகப்படுத்தப்பட்டதற்கு மற்றொரு உதாரணம், ‘யெகோவாவை குறித்ததில் ஒரு நாள் ஆயிரம் ஆண்டுகள்’ என்று பேதுரு சொன்னதாகும். (2 பே. 3:​8, NW) ஆதியாகம விவரத்தில், சிருஷ்டிப்பு நாள் இன்னுமதிகம் நீண்ட​—பல ஆயிரம் ஆண்டுகள் அடங்கிய​—காலப்பகுதியாக உள்ளது. (ஆதி. 2:​2, 3; யாத். 20:11) ஆகவே, “நாள்” என்று எந்தக் கருத்தில் சொல்லப்படுகிறது என்பதை வசனத்தின் சூழமைவுதான் சுட்டிக்காட்டுகிறது.

9மணிநேரம். ஒரு நாளுக்கு 24 மணிநேரம் என வகுத்தது எகிப்து என்றே தெரிகிறது. நவீன காலத்தில், மணிக்கு 60 நிமிடம் என்ற கணக்கு பாபிலோனிய கணித முறைப்படி தோன்றினது. ஏனெனில், அந்தக் கணித முறையில்தான் எதையும் அறுபதறுபதாய் (60 என்ற எண்ணின் அடிப்படையில்) சொல்லும் பழக்கம் இருந்தது. எபிரெய வேதாகமம் மணிநேரப் பிரிவு பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. a ஒரு நாளில், ஒரு மணி இரண்டு மணி என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக, “காலை,” ‘மத்தியானம்,’ ‘பட்டப்பகல்,’ மற்றும் “சாயங்கால வேளை” போன்ற சொற்களால் நேரத்தைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது. (ஆதி. 24:11; 43:16; உபா. 28:29; 1 இரா. 18:​26) இரவுப்பொழுதோ, ‘இராச்சாமங்கள்’ எனப்பட்ட மூன்று நேரப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. (சங். 63:6) இவற்றில் இரண்டை பைபிள் விசேஷமாக குறிப்பிடுகிறது: ‘நடுஜாமம்’ (நியா. 7:19), ‘விடியும் ஜாமம்.’​—யாத். 14:24; 1 சா. 11:​11, தி.மொ.

10எனினும், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் “வேளை” அல்லது “மணிநேரம்” என்ற சொல் அடிக்கடி வருகிறது. (யோவா. 12:23; மத். 20:​2-6, NW) சூரிய உதயத்திலிருந்து, அல்லது சுமார் காலை 6 மணியிலிருந்து மணிநேரங்கள் கணக்கிடப்பட்டன. “மூன்றாம் மணி” என பைபிள் குறிப்பிடுகிறது, இது ஏறக்குறைய காலை 9 மணியாயிருக்கும். இயேசு கழுமரத்தில் அறையப்பட்டபோது எருசலேமில் இருள் சூழ்ந்த நேரம், “ஆறாம்மணி” என குறிப்பிடப்படுகிறது. இது நம்முடைய நடுப்பகல் 12 மணிக்கு ஒப்பாயிருக்கும். கழுமரத்தில் வாதிக்கப்பட்ட இயேசுவின் மரணம், “ஒன்பதாம் மணி நேர”த்தில், அல்லது ஏறக்குறைய மாலை 3 மணிக்கு ஏற்பட்டதாக சொல்லப்பட்டிருக்கிறது.​—மாற். 15:25; லூக். 23:44; மத். 27:​45, 46. b

11வாரம். மனித சரித்திரத்தின் தொடக்கத்திலேயே மனிதன் நாட்களை ஏழேழாக கணக்கிட தொடங்கினான். இதில், மனிதன் தன் சிருஷ்டிகரின் மாதிரியையே பின்பற்றினான். அவர் தம்முடைய ஆறு சிருஷ்டிப்பு நாட்களை, ஏழாவது காலப்பகுதியோடு சேர்த்தார். அதுவும் நாள் என்றே அழைக்கப்பட்டது. நோவா நாட்களை ஏழேழாக கணக்கிட்டார். எபிரெய மொழியில், “வாரம்” என்பது சொல்லர்த்தமாக ஏழு பிரிவுகள் அடங்கிய தொகுப்பை அல்லது காலப்பகுதியை குறிப்பிடுகிறது.​—ஆதி. 2:​2, 3; 8:​10, 12; 29:27.

12சந்திர மாதங்கள். ‘சந்திர மாதங்களைப்’ பற்றி பைபிள் குறிப்பிடுகிறது. (யாத். 2:​2; உபா. 21:13; 33:​14; எஸ்றா 6:​15; NW) நம்முடைய தற்கால மாதங்கள் சந்திர மாதங்கள் அல்ல, ஏனெனில் அவை சந்திரனை வைத்துக் கணக்கிடப்படுவதில்லை. இவை சூரிய ஆண்டின் தோராயமான 12 பிரிவுகளே. சந்திர மாதம், அமாவாசையை அடிப்படையாக வைத்து தீர்மானிக்கப்படுகிற ஒரு மாதம். சந்திரனில் நான்கு பிறைகள் (phases) உள்ளன. ஒரு அமாவாசைக்கும் இன்னொரு அமாவாசைக்கும் இடையே சராசரியாக 29 நாட்களும், 12 மணிநேரங்களும், 44 நிமிடங்களும் உள்ளன. ஒருவர் சந்திரனின் பிறையைப் பார்த்தே சந்திர மாதத்து நாளை தோராயமாக சொல்லிவிடலாம்.

13நோவா, சந்திர மாதங்களை நுட்பமாக கணக்கிடுவதற்குப் பதிலாக, முப்பது முப்பது நாட்களை ஒவ்வொரு மாதமாக கணக்கிட்டு நிகழ்ச்சிகளைப் பதிவு செய்ததாக தெரிகிறது. ஜலப்பிரளயத்திற்குப் பின் ஐந்து மாதங்களாக, அல்லது ‘நூற்றைம்பது நாட்களாக’ பூமியில் தண்ணீர் குறையவே இல்லை என்பதை பேழையில் நோவா கணக்கிட்ட நாள்-விவரப்பதிவிலிருந்து நாம் புரிந்துகொள்கிறோம். 12 மாதங்களும் 10 நாட்களும் சென்ற பின்பே பூமியில் ஜலம் வற்றி, பேழையிலிருந்தவர்கள் வெளிவர முடிந்தது. இவ்வாறு ஒரு சகாப்தத்தை உண்டுபண்ணின அந்த நிகழ்ச்சிகளின் காலம் திருத்தமாக பதிவு செய்யப்பட்டது.​—ஆதி. 7:​11, 24; 8:​3, 4, 14-19.

14பருவங்கள். குடியிருப்புக்காக பூமியை ஆயத்தம் செய்கையில், பருவங்கள் உண்டாவதற்குரிய ஞானமான அன்புள்ள ஏற்பாட்டை யெகோவா செய்தார். (ஆதி. 1:14) பூமி சூரியனை சுற்றுகையில், அதன் அச்சிலிருந்து 23.5 டிகிரி கோணத்தில் சாய்வாக இருப்பதால் இவை உண்டாகின்றன. இது, முதலில் பூமியின் தென் பாதிக் கோளமும், ஆறு மாதங்களுக்குப் பின்பு வட பாதிக் கோளமும் சூரியனை நோக்கி சாய்ந்திருக்கச் செய்கிறது, ஆகவே பருவங்கள் ஒழுங்காக ஒன்றன்பின் ஒன்றாக தொடருகின்றன. இந்தப் பருவமாற்றமே, நடவுக்கும் அறுவடைக்குமான காலங்களையும் கட்டுப்படுத்துகிறது. இதனால், வித்தியாசமான வெவ்வேறு பொருட்கள் விளைகின்றன. ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு பருவங்கள் மாறி மாறி வருவதற்கான இந்த ஏற்பாடு என்றென்றும் தொடருமென கடவுளுடைய வார்த்தை நமக்கு உறுதியளிக்கிறது. “பூமியுள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும், சீதளமும் உஷ்ணமும், கோடைகாலமும் மாரிகாலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை.”​—ஆதி. 8:22.

15வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் ஓர் ஆண்டை மழைப் பருவம், வறட்சிப் பருவம் என பொதுவாக பிரிக்கலாம். ஏப்ரல் மாதப் பாதியிலிருந்து அக்டோபர் மாதப் பாதிவரை வெகு சொற்ப மழையே பெய்கிறது. மழைப் பருவத்தைப் பின்வருமாறு பிரிக்கலாம்: முன்மாரி எனப்படும் தொடக்க மழை அல்லது “இலையுதிர் கால” மழை (அக்டோபர்-நவம்பர்); பனிக்கால கனத்த மழையும் கடுங்குளிர் காலமும் (டிசம்பர்-பிப்ரவரி); “பின்மாரி” அல்லது வசந்தகால மழை (மார்ச்-ஏப்ரல்). (உபா. 11:14; யோவே. 2:​23) இந்தப் பிரிவுகள் தோராயமானவை. ஏனெனில் இந்தத் தேசத்தின் வெவ்வேறு பாகங்களில் வெவ்வேறு தட்பவெப்ப நிலை நிலவுவதால், பருவங்கள் முன்பின்னாக வரலாம். முன்மாரி எனப்படும் தொடக்க மழை, வறண்ட பூமியை மிருதுவாக்குகிறது, ஆகவே அக்டோபர்-நவம்பர் மாதங்கள் ‘உழவுக்கும்,’ ‘விதைப்புக்கும்’ ஏற்ற காலங்களாகும். (யாத். 34:22, தி.மொ.; லேவி. 26:5) டிசம்பரிலிருந்து பிப்ரவரி வரை பனிக்கால கனத்த மழை பெய்யும்போது, பொதுவாக பனியும் விழுகிறது. ஜனவரியிலும் பிப்ரவரியிலும் மிகவும் உயரமான பகுதிகளில் தட்ப வெப்பநிலை உறைநிலைக்குக் கீழும் செல்லக்கூடும். தாவீதின் பராக்கிரமசாலிகளில் ஒருவனாகிய பெனாயா, “உறைந்த மழை பெய்திருந்த ஒருநாளில்” ஒரு சிங்கத்தைக் கொன்றதாக பைபிள் சொல்கிறது.​—2 சா. 23:20, தி.மொ.

16மார்ச், ஏப்ரல் மாதங்கள் (பெரும்பாலும் நிசான் மற்றும் அய்யார் என்ற எபிரெய மாதங்கள்) ‘பின்மாரிகாலத்து [வசந்தகால] மழைக்குரிய’ மாதங்கள். (சக. 10:​1) இலையுதிர் காலத்தில் நடப்பட்ட பயிர் முதிர்ந்து நல்ல மகசூல் கிடைப்பதற்கு இந்தப் பின்மாரி தேவை. (ஓசி. 6:3; யாக். 5:7) இது முதல் அறுவடை பருவம். அறுவடையின் முதற்பலனை நிசான் 16-ல் செலுத்தும்படி கடவுள் இஸ்ரவேலருக்குக் கட்டளையிட்டார். (லேவி. 23:10; ரூத் 1:22) இது அழகும் மகிழ்ச்சியும் பொங்கும் காலம். “பூமியிலே புஷ்பங்கள் காணப்படுகிறது; குருவிகள் பாடுங்காலம் வந்தது, காட்டுப்புறாவின் சத்தம் நமது தேசத்தில் கேட்கப்படுகிறது. அத்திமரம் காய்காய்த்தது; திராட்சக்கொடிகள் பூப்பூத்து வாசனையும் பரிமளிக்கிறது.”​—உன். 2:​12, 13.

17பெரும்பாலும் ஏப்ரல் மத்திபத்தில் வறண்ட காலம் தொடங்குகிறது. ஆனால் இந்தக் காலப்பகுதி முழுவதிலுமே, கடற்கரையோர சமவெளிகளிலும் மலைகளின் மேற்குச் சரிவுகளிலும், ஏராளமாக பனி பெய்வதால் கோடைக்காலப் பயிர்கள் பிழைக்கின்றன. (உபா. 33:28) மே மாதத்தின்போது, தானியம் அறுவடை செய்யப்படுகிறது, இந்த மாதத்தின் முடிவில்தான் வாரங்களின் பண்டிகை (பெந்தெகொஸ்தே) ஆசரிக்கப்பட்டது. (லேவி. 23:​15-21) பின்பு, வானிலை வெப்பமாகியும் தரை வறண்டும் வருகையில் திராட்சைக் கொடிகளில் திராட்சைப் பழங்கள் பழுத்து அறுவடை செய்யப்படுகின்றன. இதைப் பின்தொடர்ந்து ஒலிவப்பழங்கள், பேரீச்சம்பழங்கள், அத்திப்பழங்கள் போன்ற கோடைக்கால பழங்கள் அறுவடை செய்யப்படுகின்றன. (2 சா. 16:1, தி.மொ.) வறண்ட காலம் முடிந்து முன்மாரி தொடங்குகையில், தேசத்தின் எல்லா விளைச்சலும் அறுவடை செய்யப்பட்டாகிவிடுகிறது. அப்போதே (ஏறக்குறைய அக்டோபரின் தொடக்கத்தில்) கூடாரப் பண்டிகை ஆசரிக்கப்பட்டது.​—யாத். 23:16; லேவி. 23:​39-43.

18வருஷம். பைபிளில் காலத்தைப் பற்றி ஆராய்கிற நாம், இப்போது ‘ஆண்டு’ அல்லது ‘வருஷம்’ என்ற சொல்லை ஆராயலாம். வருஷம் என்ற வார்த்தை மனித வரலாறு தொடங்கியபோதே உபயோகிக்கப்பட்டுள்ளது. (ஆதி. 1:14) ‘வருஷம்’ என்பதற்குரிய எபிரெய சொல் ஷானா (sha·nahʹ). இதன் மூல அர்த்தம் “திரும்பத் திரும்பச் செய்; மறுடியும் செய்” என்பதாகும். இச்சொல், காலம் என்பது ஒரு சுழற்சி என்ற அடிப்படை கருத்தை உணர்த்துகிறது. பல்வேறு பருவங்கள் மாறிமாறி வரும் ‘வருஷத்திற்கு’ ஷானா என்ற பெயர் மிகப் பொருத்தம். நமக்கு ஒரு வருஷம் என்பது, பூமி சூரியனை முழுமையாக ஒரு தரம் சுற்றிவருவதற்கு, அதாவது பயணப்பட்டு வருவதற்கு எடுக்கும் காலம் ஆகும். இவ்வாறு பூமி சூரியனை சுற்றிவர 365 நாட்கள் 5 மணிநேரம் 48 நிமிடம் 46 வினாடி ஆகும், அல்லது ஏறக்குறைய 365 1/4 நாட்களாகும். இதுவே சரியான சூரிய ஆண்டு என்றழைக்கப்படுகிறது.

19பைபிள் ஆண்டுகள். பைபிள் சம்பந்தப்பட்ட பூர்வ கணக்கீட்டின்படி, ஓர் ஆண்டு இலையுதிர் காலத்திலிருந்து அடுத்த இலையுதிர் காலம்வரை நீடித்தது. இது முக்கியமாய் விவசாய வாழ்க்கைக்கு ஏற்றவாறு அமைந்திருந்தது. எப்படியென்றால், இந்த ஆண்டு நமது காலண்டரின்படி அக்டோபர் மாதத்தின் முதல் பாகத்தில், உழுவதிலும் விதைப்பதிலும் தொடங்கி, அறுவடைக்குப் பின் தானியத்தைக் கூட்டிச் சேர்ப்பதோடு முடிந்தது. இலையுதிர் காலத்தில் புதிய ஆண்டு தொடங்கினதாக நோவா கணக்கிட்டார். ஜலப்பிரளயம் ‘இரண்டாம் மாதத்தில்’ தொடங்கினதாக பதிவுசெய்தார். இது அக்டோபரின் பிற்பகுதிக்கும் நவம்பரின் முற்பகுதிக்கும் சமமாயிருக்கும். (ஆதி. 7:​11, NW அடிக்குறிப்பு) இந்நாள் வரை, உலகில் பலர் புதிய ஆண்டை இலையுதிர் காலத்தில் தொடங்குகின்றனர். பொ.ச.மு. 1513-ல் யூதர்கள் எகிப்திலிருந்து வெளியேறின சமயத்தில் ஆபிப் (நிசான்) மாதம் வருஷத்தின் ‘முதலாம் மாதமாக’ இருக்க வேண்டுமென யெகோவா அவர்களுக்கு கட்டளையிட்டார். ஆகவே அவர்களது பரிசுத்த ஆண்டு ஒரு வசந்த காலத்திலிருந்து அடுத்த வசந்த காலம் வரை நீடித்தது. இது அவர்களது புனித காலண்டர். (யாத். 12:2) எனினும், நம் நாளைய யூதர்கள், சமுதாய காலண்டரையும் வைத்துள்ளனர். இக்காலண்டரின்படி, ஒரு வருஷம் இலையுதிர் காலத்தில் தொடங்கி அடுத்த இலையுதிர் காலம் வரைக்கும் நீடிக்கும். இதில் திஸ்ரி முதல் மாதம்.

20சந்திரசூரிய ஆண்டு. காலத்தைக் கணக்கிடுவதற்கு, கிறிஸ்துவின் காலம் வரையில் பெரும்பான்மையான தேசங்களில் சந்திர ஆண்டு பயன்படுத்தப்பட்டது. சூரிய ஆண்டுக்கு ஓரளவு பொருத்தமாயிருக்கும்படி அந்த ஆண்டை சரிப்படுத்தி அமைப்பதற்குப் பல்வேறு வழிகளைப் பயன்படுத்தினர். 12 சந்திர மாதங்கள் அடங்கிய பொதுவான சந்திர ஆண்டு 354 நாட்களைக் கொண்டது. இவை அமாவாசை நாளின் அடிப்படையில் 29 அல்லது 30 நாட்களைக்கொண்ட மாதங்களாகும். ஆகையால் 365 1/4 நாட்களையுடைய சரியான சூரிய ஆண்டைப் பார்க்கிலும் சந்திர ஆண்டு ஏறக்குறைய 11 1/4 நாட்கள் குறைவானது. எபிரெயர்கள் சந்திர ஆண்டையே பின்பற்றினர். இவர்கள் சந்திர ஆண்டைச் சூரிய ஆண்டோடும் பருவங்களோடும் எவ்வாறு ஒத்துப்போகச் செய்தனர் என்ற விவரம் பைபிளில் இல்லை. ஒருவேளை அவர்களது காலண்டரில் கூடுதலான மாதங்கள் இருந்திருக்கும் அல்லது தேவைக்கு ஏற்ப புதிய மாதங்களை புகுத்தியிருப்பார்கள். புகுத்தப்பட்ட மாதங்களின் இந்த ஏற்பாடு, பின்னால் பொ.ச.மு. ஐந்தாம் நூற்றாண்டில், இப்போது மெட்டானிக் காலவட்டம் என்று அறியப்படும் முறையில், ஒழுங்குபடுத்தி அமைக்கப்பட்டது. இதன்படி 19 ஆண்டுகளில் ஏழு தடவை, புகுத்தப்பட்ட ஒரு மாதம் கணக்கில் சேர்க்கப்பட்டது. யூதக் காலண்டரில் இது 12-வது மாதமான ஆதாருக்குப் பின் சேர்க்கப்பட்டு, வியாதார், அல்லது “இரண்டாம் ஆதார்” என்றழைக்கப்பட்டது. சந்திர காலண்டர் இவ்வாறு சூரிய காலண்டருக்கு ஏற்ப சரிசெய்து அமைக்கப்பட்டிருப்பதால், 12 அல்லது 13 மாதங்களையுடைய அந்த ஆண்டுகள் சந்திரசூரிய ஆண்டுகள் என்றறியப்படுகின்றன.

21ஜூலியன் மற்றும் க்ரெகோரியன் காலண்டர்கள். ஓர் ஆண்டின் தொடக்கத்தையும் அளவையும் பிரிவுகளையும் நிர்ணயித்து, அந்தப் பிரிவுகளை வரிசைப்படி அமைக்கும் முறையே காலண்டர். ஜூலியன் காலண்டர், ரோம மக்களுக்கு சந்திர ஆண்டுக்குப் பதிலாக சூரிய ஆண்டு கால ஏற்பாட்டை அளிப்பதற்காக பொ.ச.மு. 46-ல் ஜூலியஸ் சீசரால் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது. ஜூலியன் காலண்டரின்படி, ஓர் ஆண்டுக்கு 365 நாட்கள்; ஒவ்வொரு நான்காவது ஆண்டில் (லீப் வருடம்) மாத்திரம் ஒரு நாள் சேர்க்கப்பட்டு அது 366 நாட்களைக் கொண்டதாகிறது. எனினும், காலப்போக்கில், ஜூலியன் காலண்டர் ஆண்டு, சரியான சூரிய ஆண்டைப் பார்க்கிலும் 11-க்கும் சற்று அதிகமான நிமிடங்கள் நீண்டதாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. பொ.ச. 16-வது நூற்றாண்டுக்குள், இந்த வேறுபாடு பத்து முழு நாட்களாக சேர்ந்துவிட்டது. எனவே, 1582-ல் பதின்மூன்றாம் போப் க்ரெகோரி சிறிது மாற்றம் செய்து, ஒரு காலண்டரை ஏற்படுத்தினார். அதுவே இப்போதுள்ள க்ரெகோரியன் காலண்டர். போப்பின் கட்டளையின்பேரில் 1582-ம் ஆண்டில் பத்து நாட்கள் அப்படியே விட்டுவிடப்பட்டன; இதனால் அக்டோபர் 4-க்கு அடுத்த நாள் அக்டோபர் 15 என்று ஆயிற்று. அத்துடன், க்ரெகோரியன் காலண்டரின்படி, 400-ஆல் மீதமின்றி வகுக்க முடியாத நூற்றாண்டுகள் லீப் ஆண்டுகள் அல்ல. உதாரணமாக, வருஷம் 2000 ஒரு லீப் ஆண்டு. ஆனால் வருஷம் 1900 ஒரு லீப் ஆண்டு அல்ல. ஏனெனில் 1,900-ஐ 400-ஆல் மீதமின்றி வகுக்க முடியாது. க்ரெகோரியன் காலண்டரே இப்போது உலகத்தின் பெரும்பான்மையான பாகங்களில் பொதுவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

22தீர்க்கதரிசன ‘வருஷம்.’ பைபிள் தீர்க்கதரிசனத்தில் ‘வருஷம்’ என்ற சொல், 30 நாட்களைக் கொண்ட 12 மாதங்கள் அடங்கிய, அதாவது மொத்தம் 360 நாட்களைக் குறிப்பதாய், அடிக்கடி பிரத்தியேகமாய் பயன்படுத்தப்படுகிறது. எசேக்கியேல் 4:​5, 6-ன் பேரில் விளக்கமளிக்கும் வகையில், ஒரு பதிவு சொல்வதைக் கவனியுங்கள்: “எசேக்கியேல் 360 நாட்களைக் கொண்ட ஓர் ஆண்டை அறிந்திருந்தாரென்று நாம் கருத வேண்டும். இது சரியான சூரிய ஆண்டுமல்ல, சந்திர ஆண்டுமல்ல. ஒவ்வொன்றும் 30 நாட்களைக் கொண்ட ஒரு ‘சராசரி’ ஆண்டு.” c

23ஒரு தீர்க்கதரிசன வருடம், “காலம்” என்றும்கூட அழைக்கப்படுகிறது. இந்த “காலம்” 360 நாட்களாக கணக்கிடப்பட்டிருக்கும் விதத்தை வெளிப்படுத்துதல் 11:​2, 3 மற்றும் 12:​6, 14 தெரிவிக்கின்றன. தீர்க்கதரிசனத்தில் ஒரு வருடம் எப்போதாவது “நாள்” என்றும் அடையாள அர்த்தத்தில் குறிக்கப்படுகிறது.​—எசே. 4:​5, 6.

24பூஜ்ய ஆண்டு கிடையாது. கல்விமான்களான கிரேக்கரும் ரோமரும் யூதரும் உட்பட பூர்வ காலத்து மக்களுக்குப் பூஜ்யத்தைப் பற்றியே தெரியாது. அவர்கள் எல்லாவற்றையும் ஒன்றிலிருந்துதான் கணக்கிடத் தொடங்கினர். பள்ளியில் ரோம எண்களை (I, II, III, IV, V, X போன்றவை) நீங்கள் கற்றபோது பூஜ்யம் என்ற ஒரு இலக்கத்தைக் கற்றீர்களா? இல்லை, ஏனெனில் ரோமர்களுக்கு அப்படிப்பட்ட இலக்கமே வழக்கில் இருக்கவில்லை. ரோமர்கள் பூஜ்யம் என்ற எண்ணைப் பயன்படுத்தாததால், பொது சகாப்தம், பூஜ்ய ஆண்டுடன் அல்ல, பொ.ச. 1-ல் தொடங்கினது. இதனால்தான், முதலாவது (1-வது), இரண்டாவது (2-வது), மூன்றாவது (3-வது), பத்தாவது (10-வது), நூறாவது (100-வது) போன்ற வரிசை (ordinal) எண் முறையும் தோன்றியது. தற்கால கணிதத்தில், எல்லாமே ஒன்றுமில்லாமையிலிருந்து அல்லது பூஜ்யத்திலிருந்து தொடங்குவதாக மனிதன் கருதுகிறான். பூஜ்யம் என்ற இலக்கத்தை அநேகமாக இந்துக்கள் கண்டுபிடித்திருக்கலாம்.

25ஆகவே வரிசை எண்களைப் பயன்படுத்தும்போதெல்லாம், எண்ணை முழுமையாக அடைய 1-ஐ நாம் கழிக்க வேண்டும். உதாரணமாக, பொ.ச. 20-வது நூற்றாண்டில் ஒரு தேதியைப் பற்றி நாம் பேசுகையில், 20 முழு நூற்றாண்டுகள் பூர்த்தியாகிவிட்டதென்று பொருள்படுகிறதா? இல்லை, அது 19 முழு நூற்றாண்டுகளும் கூடுதலாக சில ஆண்டுகளும் என்றே குறிக்கிறது. எண்களை முழுமையாக குறிப்பிடுவதற்கு, பைபிளும் தற்கால கணிதமும், 1, 2, 3, 10, 100 போன்ற இயல் (cardinal) எண்களைப் பயன்படுத்துகின்றன. இவை “முழு எண்கள்” என்றும் அழைக்கப்படுகின்றன.

26பொது சகாப்தம் பூஜ்ய ஆண்டில் தொடங்காமல் பொ.ச. 1-ல் தொடங்கியது. ஆகவே, பொது சகாப்தத்துக்கு முன் காலண்டர் பூஜ்ய ஆண்டிலிருந்து தொடங்காமல் பொ.ச.மு. 1-லிருந்து தொடங்கியதால் ஆண்டின் தேதியைக் குறிக்க உண்மையில் எண் வரிசை பயன்படுத்தப்பட்டது. உதாரணத்திற்கு, பொ.ச. 1990 என்றால், பொது சகாப்தத்தில் தொடங்கிய 1,989 ஆண்டுகள் அதில் முழுமையாக அடங்கியுள்ளன. அதையே, ஜூலை 1, 1990 என்று தேதியோடு குறிப்பிட்டால், பொது சகாப்தத்தின் தொடக்கத்திலிருந்து 1,989 ஆண்டுகளையும் மேலும் ஒரு பாதி ஆண்டையுமே குறிக்கும். பொ.ச.மு. தேதிகளுக்கும் இதே நியமம்தான் பொருந்தும். ஆகவே பொ.ச.மு. அக்டோபர் 1, 607-க்கும் பொ.ச. அக்டோபர் 1, 1914-க்கும் இடையில் எத்தனை ஆண்டுகள் கடந்து சென்றனவென்று கணக்கிடுவதற்கு, 606 ஆண்டுகளையும் (முந்தின ஆண்டின் கடைசி மூன்று மாதங்களையும் கூட்டிக்கொள்ளவும்) அதோடு 1,913 ஆண்டுகளையும் (அடுத்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களையும் கூட்டிக்கொள்ளவும்) கூட்டினால் இதன் தொகை 2,519 ஆண்டுகள் (கூடுதலாக 12 மாதங்களும்), அதாவது 2,520 ஆண்டுகளாகும். ஒருவேளை, பொ.ச.மு. 607 அக்டோபர் 1-லிருந்து 2,520 ஆண்டுகளுக்குப் பின் வரும் தேதியைக் கணக்கிட்டறிய விரும்பினால், முதலில் 607 என்ற எண், வரிசை எண் என்பதை நினைவில் வையுங்கள், அதாவது இதில் 606 முழு ஆண்டுகள் உள்ளன. நாம் கணக்கிடுவது பொ.ச.மு. 607 டிசம்பர் 31-லிருந்து அல்ல. ஆனால் பொ.ச.மு. 607 அக்டோபர் 1-லிருந்து கணக்கிடுகிறோம். ஆகவே, பொ.ச.மு. 607-ன் முடிவிலிருந்த அந்த மூன்று மாதங்களை 606-உடன் கூட்ட வேண்டும். இப்போது 2,520 ஆண்டுகளிலிருந்து 606 1/4-ஐக் கழித்துவிடவும். மீதம் 1913 3/4 ஆண்டுகள். அப்படியென்றால், பொ.ச.மு. 607 அக்டோபர் 1-லிருந்து 2,520 ஆண்டுகளைக் கணக்கிட, பொது சகாப்தம் 1,913 3/4 ஆண்டுக்கு இது நம்மைக் கொண்டுசெல்கிறது. 1,913 முழு ஆண்டுகள் பொ.ச. 1914-ன் தொடக்கத்தில் விடுகிறது; கூடுதலான முக்கால் ஆண்டு, பொ.ச. அக்டோபர் 1, 1914-க்கு நம்மைக் கொண்டுவருகிறது. d

27மையத் தேதிகள். நம்பகமான பைபிள் காலவரிசைப் பட்டியலானது, சில மையத் தேதிகளில் ஆதாரம் கொண்டுள்ளது. மையத் தேதி என்பது, ஆதாரப்பூர்வ சரித்திர தேதி, பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ள குறிப்பிட்ட நிகழ்ச்சியோடு ஒத்துப்போவதாகும். இந்த மையத் தேதியை தொடக்கமாக கொண்டு, பைபிளின் தொடர்ச்சியான சம்பவங்கள் பலவற்றின் தேதியைக் காலண்டரில் திருத்தமாக தெரிந்துகொள்ள முடியும். மையத் தேதியை திட்டமாக தீர்மானித்துவிட்டால், பைபிளில் திருத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ள ஆட்களின் ஆயுட்காலம், அரசாண்ட அரசர்களின் ஆட்சிக்காலம் ஆகியவை மையத் தேதிக்கு முன்பா அல்லது பின்பா என்று கணக்கிட முடியும். இவ்வாறு, நிலையான ஒரு மையத் தேதியிலிருந்து, பைபிளில் உள்ள நம்பகமான காலவரிசைப் பட்டியலைப் பயன்படுத்தி, பைபிள் நிகழ்ச்சிகள் பலவற்றின் தேதிகளை நம்மால் சொல்ல முடியும்.

28எபிரெய வேதாகமத்திற்கு மையத் தேதிகள். பைபிளிலும் உலக சரித்திரத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ள முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்ச்சி பாபிலோனின் வீழ்ச்சி. கோரேசின் தலைமையில் மேதியரும் பெர்சியரும் பாபிலோன் நகரத்தை வென்று வீழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சி பைபிளில், தானியேல் 5:​30-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோரேசு பாபிலோனை வென்று வீழ்த்தின ஆண்டு பொ.ச.மு. 539 என்பதை பல்வேறு சரித்திர அத்தாட்சிகள் (டயடோரஸ், ஆப்பிரிக்கானஸ், யூஸிபியஸ், தாலமி போன்றோரின் சரித்திர பதிவுகளும் பாபிலோனிய கற்பலகைகளும்) ஆதரிக்கின்றன. நபோனிடஸ் செய்திப் பட்டியல் அந்த நகரம் வீழ்த்தப்பட்ட மாதத்தையும் நாளையும் குறிப்பிடுகிறது (ஆனால் ஆண்டைக் குறிப்பிடவில்லை). பைபிள் துறையை சாராத காலக்கணிப்பு ஆய்வாளர்கள் பாபிலோன் வீழ்ச்சியடைந்த தேதியை ஜூலியன் காலண்டரின்படி பொ.ச.மு. அக்டோபர் 11, 539, அல்லது க்ரெகோரியன் காலண்டரின்படி அக்டோபர் 5 என குறிப்பிட்டிருக்கின்றனர். e

29கோரேசு பாபிலோனை வீழ்த்தி, அதன்மீது அரசனாக ஆட்சியைத் தொடங்கினார். அவர் அரசாண்ட முதலாம் ஆண்டில், யூதர்கள் எருசலேமுக்குத் திரும்பிச் செல்ல அனுமதித்து, பிரத்தியேக கட்டளையைப் பிறப்பித்தார். பைபிள் பதிவின்படி, இந்தக் கட்டளை பொ.ச.மு. 538-ன் பிற்பகுதியில், அல்லது பொ.ச.மு. 537-ன் வசந்த காலத்தில் பிறப்பிக்கப்பட்டிருக்கலாம். இது, யூதர்கள் தங்கள் தாய்நாட்டுக்குத் திரும்பிச் சென்று குடியேறி, “ஏழாம் மாதமான” திஸ்ரியில், அல்லது பெரும்பாலும் பொ.ச.மு. அக்டோபர் 1, 537-ல் யெகோவாவின் வணக்கத்தைத் திரும்ப நிலைநாட்ட எருசலேமுக்கு வருவதற்குப் போதிய வாய்ப்பை அளித்திருக்கும்.​—எஸ்றா 1:​1-4; 3:​1-6. f

30கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்திற்கு மையத் தேதிகள். கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்துக்குரிய ஒரு மையத் தேதி, பேரரசன் அகுஸ்துவை (Augustus) பின்தொடர்ந்து திபேரியு ராயன் ஆட்சிக்கு வந்த தேதியால் தீர்மானிக்கப்படுகிறது. அகுஸ்து இறந்த தேதி (க்ரெகோரியன் காலண்டர்படி) பொ.ச. 14 ஆகஸ்ட் 17. ரோம ஆட்சிப்பேரவை திபேரியுவை பொ.ச. 14, செப்டம்பர் 15-ல் பேரரசனாக நியமித்தது. முழுக்காட்டுபவரான யோவான், திபேரியுவினுடைய ஆட்சியின் 15-வது ஆண்டில் தன் ஊழியத்தைத் தொடங்கினாரென்று லூக்கா 3:​1, 3-ல் சொல்லப்பட்டிருக்கிறது. அகுஸ்து மரித்ததிலிருந்து இந்த 15 ஆண்டுகளைக் கணக்கிட்டால், இந்த 15-வது ஆண்டு பொ.ச. 28-ன் ஆகஸ்ட்டிலிருந்து பொ.ச. 29-ன் ஆகஸ்ட் வரை ஆகும். ரோம ஆட்சிப்பேரவை திபேரியுவை நியமித்ததிலிருந்து இந்த ஆண்டுகளைக் கணக்கிட்டிருந்தால், இந்த ஆண்டு பொ.ச. 28-ன் செப்டம்பரிலிருந்து பொ.ச. 29-ன் செப்டம்பர் வரை நீடித்ததாயிருக்கும். இதன்பின் சீக்கிரத்தில், முழுக்காட்டுபவரான யோவானுக்கு சுமார் ஆறு மாதங்கள் இளையவராயிருந்த இயேசு, ‘ஏறக்குறைய முப்பது வயதுள்ளவராக’ இருந்தபோது முழுக்காட்டுதல் பெற வந்தார். (லூக். 3:​2, 21-23; 1:​34-38) இது, “எருசலேமை”யும் அதன் அலங்கத்தையும் “திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவதுமுதல்” மேசியா தோன்றும் வரையில் 69 “வாரங்கள்” (ஒவ்வொன்றும் 7 ஆண்டுகளைக்கொண்ட தீர்க்கதரிசன வாரங்கள், இவ்வாறு மொத்தம் 483 ஆண்டுகள்) செல்லும் என்ற தானியேல் 9:​25-ல் உள்ள தீர்க்கதரிசனத்தோடு ஒத்திருக்கிறது. (தானி. 9:​24, NW அடிக்குறிப்பு) அந்தக் “கட்டளை” பொ.ச.மு. 455-ல் அர்தசஷ்டாவால் (லாங்கிமானஸ்) பிறப்பிக்கப்பட்டது. நெகேமியா இக்கட்டளையை எருசலேமில் அந்த ஆண்டின் பிற்பகுதியில் செயல்படுத்தினார். 483 ஆண்டுகளுக்குப் பின், பொ.ச. 29-ன் பிற்பகுதியில், யோவானால் இயேசு முழுக்காட்டப்பட்டபோது, கடவுளின் பரிசுத்த ஆவியால் அபிஷேகமும் செய்யப்பட்டார். இவ்வாறு மேசியா அல்லது அபிஷேகம் பண்ணப்பட்டவரானார். அந்த ஆண்டின் பிற்பகுதியில் இயேசு முழுக்காட்டப்பட்டு தம் ஊழியத்தைத் தொடங்கியதுகூட, “அந்த வார” ஆண்டுகள் “பாதி சென்றபோது” (அல்லது மூன்றரை ஆண்டுகளுக்குப்பின்) அவர் கொல்லப்படுவார் என்ற தீர்க்கதரிசனத்தோடு ஒத்துள்ளது. (தானி. 9:27) வசந்த காலத்தில் அவர் மரித்ததால், அவருடைய மூன்றரை ஆண்டுகளின் ஊழியம் கிட்டத்தட்ட பொ.ச. 29-ன் இலையுதிர் காலத்தில் தொடங்கியிருக்க வேண்டும். g இயேசு தம்முடைய ஊழியத்தைத் தொடங்குகையில் 30 வயதுடையவராக இருந்தார் என்று லூக்கா 3:23 காட்டுகிறது. h அப்படியானால், இந்த இரண்டு அத்தாட்சிகளும் இயேசு பொ.ச.மு. 2-ன் இலையுதிர் காலத்தில் பிறந்தார் என்று நிரூபிக்கின்றன.

31காலம் எவ்வாறு விரைவாய் நகருகிறது. ‘காத்திருந்தால் நொடியும் யுகமாய் தோன்றும்’ என்று ஒரு பழமொழி உண்டு. காலத்தை நாம் கவனித்துக் கொண்டேயிருக்கையில், அதைப் பற்றி உணர்வுடையோராக இருக்கையில், ஏதோ நடக்கும்படி காத்துக்கொண்டே இருக்கையில் காலம் மிக மெதுவாக செல்வதுபோல் தோன்றுகிறது. எனினும், நாம் சுறுசுறுப்பாய் வேலையில் ஈடுபட்டிருந்தால், நாம் செய்யும் வேலையில் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டு அதில் ஆழ்ந்திருந்தால், ‘காலம் பறந்துவிடுவதாக’ உண்மையில் தோன்றுகிறது. மேலும், இளம் பிள்ளைகளைவிட வயதான ஆட்களுக்கு காலம் மிக விரைவாக கடந்துசெல்வதுபோல் தோன்றுகிறது. இது ஏன்? ஒரே ஒரு வயது நிரம்பிய குழந்தையின் வாழ்க்கையோடு ஓர் ஆண்டு கூட்டப்படுவது, வாழ்க்கை அனுபவங்களில் 100 சதவீதம் அதிகரிப்பைக் குறிக்கிறது. 50 வயதையுடைய ஒருவரின் வாழ்க்கையோடு ஓர் ஆண்டு கூட்டப்படுவது வெறும் 2 சதவீத அதிகரிப்பையே குறிக்கிறது. சிறுபிள்ளைக்கு ஓர் ஆண்டு மிக மிக நீண்ட காலமாக தோன்றுகிறது. முதியவருக்கோ, அவர் சுறுசுறுப்பாய் வேலையில் ஈடுபட்டும் நல்ல சுகத்தோடும் இருந்தால், ஆண்டுகள் மிக மிக விரைவாக பறப்பதுபோல் தோன்றுகிறது. “சூரியனுக்குக் கீழே நூதனமானது ஒன்றுமில்லை” என்ற சாலொமோனின் வார்த்தைகளின் கருத்தை மேலும் ஆழ்ந்து புரிந்துகொள்கிறார். மறுபட்சத்தில், இளைஞர்களுக்கோ ஆமை வேகத்தில் நகருவதைப்போல் தோன்றும், வளரும் பருவத்துக்குரிய ஆண்டுகள் இன்னும் இருக்கின்றன. பொருளாசை மிக்க உலகத்துடன் ஒத்துப்போகும் வகையில் ‘காற்றைப் பிடிக்க வேட்டையாடுவதற்குப்’ பதிலாக, தேவபக்திக்குரிய அனுபவத்தின் ஐசுவரியத்தை நற்பயனுண்டாகக் குவித்து வைப்பதில் அவர்கள் இந்த ஆண்டுகளைப் பயன்படுத்தலாம். சாலொமோனின் மேலுமான வார்த்தைகள் காலத்துக்கு ஏற்றவையாக உள்ளன: “நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை; தீங்குநாட்கள் வராததற்குமுன்னும், எனக்குப் பிரியமானவைகளல்ல என்று நீ சொல்லும் வருஷங்கள் சேராததற்குமுன்னும்.”​—பிர. 1:​9, 14, தி.மொ.; 12:1.

32காலம்​—மக்கள் என்றென்றுமாக வாழும்போது. எனினும், வயோதிபமே இல்லாத, மகிழ்ச்சி நிறைந்த நாட்கள் நம்முன் உள்ளன. நீதியை நேசிப்போரின் ‘காலங்கள் யெகோவாவின் கரத்திலுள்ளன.’ கடவுளுடைய ஆட்சியில் இவர்கள் நித்திய ஜீவனை எதிர்பார்க்கலாம். (சங். 31:14-16, NW; மத். 25:​34, 46) அந்த ராஜ்யத்தில், மரணம் இனிமேலும் இராது. (வெளி. 21:4) சோம்பல், நோய், சலிப்புணர்வு, பயனின்மை யாவும் மறைந்துவிடும். அங்கே, கவனத்தையும் ஆவலையும் தூண்டுகிற வேலை இருக்கும். அந்த வேலை, மனிதனின் பரிபூரணத் திறமைகளை வெளிப்படுத்தும்படி செய்து, சாதனை புரிந்த முழு திருப்தியைக் கொடுக்கும். ஆண்டுகள் மேலும் மேலும் விரைவாய் ஓடுபவையாக தோன்றும், மதித்துணர்வும் நினைவாற்றலும் மிகுந்த மனங்கள், சந்தோஷ நிகழ்ச்சிகளின் நினைவுகளால் தொடர்ந்து நிரப்பப்பட்டுவரும். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்து சென்றுகொண்டிருக்கையில், காலத்தைப் பற்றிய யெகோவாவின் நோக்கை, பூமியிலுள்ள மனிதர் நிச்சயமாய் மேலும் முழுமையாக மதித்துணருவர்: ‘ஆயிரம் வருஷம் யெகோவாவின் பார்வைக்குக் கடந்துபோன நேற்றைய தினம்போலாம்.’​—சங். 90:​4, தி.மொ.

33நம் தற்போதைய மனித நோக்குநிலையிலிருந்து கால ஓட்டத்தைக் கணக்கில் எடுத்து, நீதியுள்ள ஒரு புதிய உலகத்தைப் பற்றிய கடவுளுடைய வாக்கைக் கவனத்துக்குக் கொண்டுவருகையில், அந்த நாளின் ஆசீர்வாதங்களைப் பற்றிய எதிர்பார்ப்பு எவ்வளவு மகிழ்ச்சி தருகிறது! “அங்கே யெகோவா ஆசீர்வாதத்தை, என்றென்றுமுள்ள ஜீவனையே, கட்டளையிடுகிறார்”!​—சங். 133:​3, தி.மொ.

[அடிக்குறிப்புகள்]

a அராமிக் மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட “hour” (மணிநேரம்) என்ற ஆங்கில சொல், கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்) பைபிளில், தானியேல் 3:​6, 15; 4:​19, 33; 5:​5 ஆகிய இடங்களில் காணப்படுகிறது; எனினும், ஸ்டிராங்ஸ் சொல் ஒப்பீட்டாராய்ச்சி என்ற ஆங்கில நூலும் எபிரெய மற்றும் கல்தேய மொழியின் ஆங்கில அகராதியும் மணிநேரம் என்ற சொல்லின் பொருள் “ஒரு பார்வை, அதாவது, ஒரு கணநேரம்” என குறிப்பிடுகிறது. பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளில் இது “கணநேரம்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

b NW-ல் இந்த வசனங்களுக்கான அடிக்குறிப்புகளைப் பாருங்கள்.

c ஜே. வான் கூடோவர் என்பவரால் எழுதப்பட்ட பிப்ளிக்கல் காலண்டர்ஸ், 1961, பக்கம் 75.

d வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கம் 458.

e வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கங்கள் 453-4, 458; தொ. 2, பக்கம் 459.

f வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கம் 568.

g வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 2, பக்கங்கள் 899-902.

h வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 2, பக்கங்கள் 56-58.

[கேள்விகள்]

1, 2. காலத்தைக் குறித்து சாலொமோன் என்ன எழுதினார், விரைவில் பறந்துவிடும் காலத்தின் இயல்பை கருதி நாம் என்ன செய்ய வேண்டும்?

3. காலத்துக்கும் பரந்த விண்வெளிக்கும் இடையேயுள்ள ஒற்றுமை யாது?

4. கால ஓட்டத்தைக் குறித்து என்ன சொல்லலாம்?

5. கடந்த காலம் பயன்படுத்தப்பட்டது அல்லது வீணாக்கப்பட்டது என்று ஏன் சொல்லப்படலாம்?

6. எதிர்காலம் கடந்த காலத்திலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது, ஏன் அதில் நாம் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்?

7. காலங்காட்டும் என்ன கருவிகளை யெகோவா மனிதனுக்குத் தந்திருக்கிறார்?

8. என்ன வெவ்வேறான அர்த்தத்தில் “நாள்” என்ற சொல் பைபிளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது?

9. (அ) மணிக்கு 60 நிமிடம் கொண்ட 24 மணிநேரமே ஒரு நாள் என்ற பிரிவு எவ்வாறு தோன்றியது? (ஆ) எபிரெய வேதாகமம் எப்படிப்பட்ட சொற்களால் நேரத்தைக் குறிப்பிடுகிறது?

10. இயேசுவின் காலத்தில் யூதர்கள் மணிநேரங்களை எவ்வாறு கணக்கிட்டனர், இதை அறிவது, இயேசு மரித்த நேரத்தைத் திட்டமாக குறிப்பிட நமக்கு எவ்வாறு உதவுகிறது?

11. “வாரம்” என்பது கால அளவாக எப்போதிலிருந்து பயன்படுத்தப்படுகிறது?

12. சந்திர மாதம் என்பது என்ன, அது நம்முடைய தற்கால மாதங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

13. ஜலப்பிரளயத்தைப் பற்றிய காலம் எவ்வாறு திருத்தமாக பதிவு செய்யப்பட்டது?

14. (அ) பருவங்கள் மாறி மாறி வருவதற்காக யெகோவா என்ன செய்தார்? (ஆ) பருவங்களின் இந்த ஏற்பாடு எவ்வளவு காலம் தொடர்ந்திருக்கும்?

15, 16. (அ) வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் மழைப் பருவத்தை எவ்வாறு பிரிக்கலாம்? (ஆ) மழைப் பருவங்களையும், இவற்றிற்கும் பயிர் செய்வதற்கும் இடையிலுள்ள தொடர்பையும் விவரியுங்கள்.

17. (அ) வறண்ட காலத்தின்போது பயிர்கள் எவ்வாறு பிழைக்கின்றன? (ஆ) “இஸ்ரவேலரின் ஆண்டு” என்ற அட்டவணையை வைத்து, பாராக்கள் 15-17-ல் ஆராய்ந்த பருவங்களின்படி ஆண்டைப் பிரியுங்கள். (இ) முதல் அறுவடை, தானிய அறுவடை, கனிகள் யாவும் சேர்க்கப்படும் காலம் ஆகியவை எப்பொழுது, எந்தப் பண்டிகைகளுடன் சேர்ந்து வந்தன?

18. (அ) “ஆண்டு” என்பதற்கான எபிரெய சொல்லின் பொருள் ஏன் பொருத்தமானது? (ஆ) பூமியைப் பொருத்தவரை, சரியான சூரிய ஆண்டு என்பது என்ன?

19. (அ) பூர்வகாலத்தில் பைபிள் ஆண்டுகள் எவ்வாறு கணக்கிடப்பட்டன? (ஆ) பின்னர் யெகோவா கட்டளையிட்ட ‘பரிசுத்த ஆண்டு’ என்ன?

20. சந்திர ஆண்டு சூரிய ஆண்டோடு ஒத்திருக்கும்படி எவ்வாறு சரிப்படுத்தி அமைக்கப்பட்டது, சந்திரசூரிய ஆண்டுகள் யாவை?

21. (அ) ஜூலியன் காலண்டர் என்பது என்ன? (ஆ) க்ரெகோரியன் காலண்டர் ஏன் அதிக திருத்தமானது?

22, 23. ஒரு தீர்க்கதரிசன ஆண்டு எவ்வளவு நீண்டது?

24. பூர்வ காலத்து மக்கள் எண்களை எதிலிருந்து கணக்கிடத் தொடங்கினர்?

25. வரிசை எண்கள், இயல் எண்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன?

26. இவற்றை எவ்வாறு கணக்கிடுவீர்கள்: (அ) பொ.ச.மு. அக்டோபர் 1, 607-லிருந்து பொ.ச. அக்டோபர் 1, 1914 வரை? (ஆ) பொ.ச.மு. அக்டோபர் 1, 607-லிருந்து 2,520 ஆண்டுகள்?

27. மையத் தேதிகள் என்பவை யாவை, அவை ஏன் அதிக பயனுள்ளவை?

28. எபிரெய வேதாகமத்திற்கு என்ன மையத் தேதி அளிக்கப்பட்டுள்ளது?

29. கோரேசின் கட்டளை எப்போது பிறப்பிக்கப்பட்டது, இது எதற்கு வாய்ப்பளித்தது?

30. எவ்வாறு ஒரு மையத் தேதியும், நிறைவேறிய தீர்க்கதரிசனமும் இயேசு முழுக்காட்டப்பட்ட ஆண்டையும் அவர் பிறந்த ஆண்டையும் உறுதிப்படுத்துகின்றன?

31. (அ) காலம் செல்லும் வேகம் ஏன் ஆளுக்கு ஆள் மாறுபடுவதுபோல் தோன்றுகிறது? (ஆ) ஆகவே இளைஞர்களுக்கு என்ன அனுகூலம் உள்ளது?

32. காலத்தைப் பற்றிய யெகோவாவின் நோக்கை மனிதர் எவ்வாறு இன்னும் முழுமையாய் மதித்துணரலாம்?

33. காலத்தைப் பொருத்தவரை, என்ன ஆசீர்வாதத்தை யெகோவா கட்டளையிட்டிருக்கிறார்?

[பக்கம் 281-ன் அட்டவணை]

இஸ்ரவேலரின் ஆண்டு

மாதத்தின் பெயர் நிசான் (ஆபிப்)

ஒப்பானது மார்ச் - ஏப்ரல்

புனித ஆண்டு 1-வது மாதம்

சரித்திர ஆண்டு 7-வது மாதம்

வசனங்கள் யாத். 13:4; நெ. 2:1

பண்டிகைகள் நிசான் 14 பஸ்கா

நிசான் 15-21 புளிப்பில்லா அப்பப் பண்டிகை

நிசான் 16 முதற்கனிகளைச் செலுத்துதல்

மாதத்தின் பெயர் அய்யார் (சீப்)

ஒப்பானது ஏப்ரல் - மே

புனித ஆண்டு 2-வது மாதம்

சரித்திர ஆண்டு 8-வது மாதம்

வசனங்கள் 1 இரா. 6:1

மாதத்தின் பெயர் சீவான்

ஒப்பானது மே - ஜூன்

புனித ஆண்டு 3-வது மாதம்

சரித்திர ஆண்டு 9-வது மாதம்

வசனங்கள் எஸ்தர் 8:9

பண்டிகைகள் சீவான் 6 வாரப் பண்டிகை

(பெந்தெகொஸ்தே)

மாதத்தின் பெயர் தம்மூஸ்

ஒப்பானது ஜூன் - ஜூலை

புனித ஆண்டு 4-வது மாதம்

சரித்திர ஆண்டு 10-வது மாதம்

வசனங்கள் எரே. 52:6

மாதத்தின் பெயர் ஆப்

ஒப்பானது ஜூலை - ஆகஸ்ட்

புனித ஆண்டு 5-வது மாதம்

சரித்திர ஆண்டு 11-வது மாதம்

வசனங்கள் எஸ்றா 7:8

மாதத்தின் பெயர் எலூல்

ஒப்பானது ஆகஸ்ட் - செப்டம்பர்

புனித ஆண்டு 6-வது மாதம்

சரித்திர ஆண்டு 12-வது மாதம்

வசனங்கள் நெ. 6:15

மாதத்தின் பெயர் திஸ்ரி (ஏத்தானீம்)

ஒப்பானது செப்டம்பர் - அக்டோபர்

புனித ஆண்டு 7-வது மாதம்

சரித்திர ஆண்டு 1-வது மாதம்

வசனங்கள் 1 இரா. 8:2

பண்டிகைகள் திஸ்ரி 1 எக்காளம் ஊதும் நாள்

திஸ்ரி 10 பாவநிவிர்த்தி நாள்

திஸ்ரி 15-21 கூடாரப் பண்டிகை

திஸ்ரி 22 சபைகூடும் பரிசுத்த நாள்

மாதத்தின் பெயர் எஷ்வன் (பூல்)

ஒப்பானது அக்டோபர் - நவம்பர்

புனித ஆண்டு 8-வது மாதம்

சரித்திர ஆண்டு 2-வது மாதம்

வசனங்கள் 1 இரா. 6:38

மாதத்தின் பெயர் கிஸ்லே

ஒப்பானது நவம்பர் - டிசம்பர்

புனித ஆண்டு 9-வது மாதம்

சரித்திர ஆண்டு 3-வது மாதம்

வசனங்கள் நெ. 1:1

மாதத்தின் பெயர் தேபேத்

ஒப்பானது டிசம்பர் - ஜனவரி

புனித ஆண்டு 10-வது மாதம்

சரித்திர ஆண்டு 4-வது மாதம்

வசனங்கள் எஸ்தர் 2:16

மாதத்தின் பெயர் சேபாத்

ஒப்பானது ஜனவரி - பிப்ரவரி

புனித ஆண்டு 11-வது மாதம்

சரித்திர ஆண்டு 5-வது மாதம்

வசனங்கள் சக. 1:7

மாதத்தின் பெயர் ஆதார்

ஒப்பானது பிப்ரவரி - மார்ச்

புனித ஆண்டு 12-வது மாதம்

சரித்திர ஆண்டு 6-வது மாதம்

வசனங்கள் எஸ்தர் 3:7

மாதத்தின் பெயர் வியாதார்

ஒப்பானது (புகுத்தப்பட்ட மாதம்)

புனித ஆண்டு 13-வது மாதம்