Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆராய்ச்சி எண் 5—எபிரெய வேதாகம புத்தகங்கள்

ஆராய்ச்சி எண் 5—எபிரெய வேதாகம புத்தகங்கள்

ஆராய்ச்சி எண் 5—எபிரெய வேதாகம புத்தகங்கள்

கடவுளுடைய ஏவப்பட்ட வார்த்தையின் பாகமான எபிரெய வேதாகமம் எவ்வாறு பிரதியெடுக்கப்பட்டு, உண்மையாய் பாதுகாக்கப்பட்டு, இந்நாள் வரையாக கைமாறி வந்தது என்ற விவரம்.

தேவாவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட ‘யெகோவாவின் வார்த்தைகளை,’ அருமையான நீர்த்தேக்கத்தில் சேர்த்துவைக்கப்பட்ட சத்திய தண்ணீருக்கு ஒப்பிடலாம். பரலோகச் செய்திகள் வெளிப்படுத்தப்பட்ட காலப்பகுதி முழுவதிலும் யெகோவா இந்த “தண்ணீரை” ஒன்றுசேர்த்து, உயிர் காக்கும் வற்றாத நீரூற்றாக்கினார். அதற்காக நாம் எவ்வளவு நன்றியோடு இருக்க வேண்டும்! அரசர்களின் கிரீடங்கள், பரம்பரை உடைமைகள், மனிதரின் நினைவுச் சின்னங்கள், கடந்தகால அரும்பொருட்கள் போன்றவை காலப்போக்கில் மங்கி, படிப்படியாய் அரிக்கப்பட்டுப் போயின அல்லது அழிந்துவிட்டன. ஆனால் நம்முடைய கடவுளின் பொக்கிஷம் போன்ற வார்த்தைகளோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். (ஏசா. 40:8) எனினும் இந்தச் சத்திய தண்ணீர், நீர்த்தேக்கத்திற்கு வந்த பிறகு மாசுபடுத்தப்பட்டதா என்ற கேள்வி எழும்புகிறது. அது கலப்படம் செய்யப்படாமல் இருந்திருக்கிறதா? அது மூலமொழி வாக்கியங்களில் உள்ளபடியே கைமாறியிருக்கிறதா? இதனால், இன்று பூமியில் பல மொழி பேசும் ஜனங்களுக்கு கிடைக்கும் தேவ வசனங்கள் நம்பத்தக்கவையா? எபிரெய வாக்கியம் என்று அழைக்கப்படும் இந்த நீர்த்தேக்கப் பகுதியை கூர்ந்து கவனிப்பது சுவாரஸ்யமான ஆராய்ச்சியாக இருக்கும். இதன் திருத்தமான தன்மையைப் பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ட சிரமத்தையும், பல பதிப்புகளின் மூலமும் புதிய மொழிபெயர்ப்புகளின் மூலமும் மனிதவர்க்கத்தார் யாவருக்கும் கிடைப்பதற்காக செய்யப்பட்ட அதிசயமான ஏற்பாடுகளையும் கூர்ந்து கவனிப்பது பிரயோஜனமாக இருக்கும்.

2எபிரெயு, அரமிக் மொழிகளில் உள்ள மூலப் படிவங்கள் கடவுளுடைய மனித-செயலாளர்களால் பதிவுசெய்யப்பட்டன; பொ.ச.மு. 1513-ல் மோசே தொடங்கி, கிட்டத்தட்ட பொ.ச.மு. 443 வரை இப்பணி நீடித்தது. நாம் அறிந்த வரை, இவ்வாறு எழுதப்பட்ட மூல எழுத்துக்கள் எல்லாமே அழிந்து விட்டன. எனினும், ஆரம்பத்திலிருந்தே தேவாவியால் ஏவப்பட்ட இந்த எழுத்துக்களை பாதுகாத்து வைப்பதற்கு மிகுந்த கவனம் செலுத்தப்பட்டது; இவற்றின் அதிகாரப்பூர்வ பிரதிகளுக்கும் அதே கவனம் செலுத்தப்பட்டது. ஏறக்குறைய பொ.ச.மு. 642-ல், அரசன் யோசியாவின் காலத்தில் மோசேயின் ‘நியாயப்பிரமாண புஸ்தகத்தின்’ மூலப்பிரதி யெகோவாவின் ஆலயத்தில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தனர். அது மோசேயால் எழுதப்பட்ட மூலப்பிரதி என்பதில் சந்தேகமில்லை; இது, 871 ஆண்டு காலமாக கவனத்துடன் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது. பைபிள் எழுத்தாளராகிய எரேமியாவுக்கு இந்தக் கண்டுபிடிப்பில் அவ்வளவு ஆர்வம் இருந்ததால் 2 இராஜாக்கள் 22:​8-10-ல் இதைப்பற்றி எழுதினார். இவரைப் போலவே, ஏறக்குறைய பொ.ச.மு. 460-ம் ஆண்டில் எஸ்றா இதே நிகழ்ச்சியை மறுபடியும் குறிப்பிட்டார். (2 நா. 34:​14-18) இவர், ‘இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா அருளியிருந்த மோசேயின் நியாயப்பிரமாணத்தை நகல் எடுப்பதில் தேர்ந்தவராக இருந்ததால்’ இந்த விஷயத்தில் அக்கறை காண்பித்தார். (எஸ்றா 7:​6, NW) தன்னுடைய காலம் வரையில் எழுதி முடிக்கப்பட்டிருந்த எபிரெய வேதாகமத்தின் சுருள்களை படிப்பதற்கு எஸ்றாவுக்கு வாய்ப்பு இருந்திருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. இவற்றில், தேவாவியால் ஏவப்பட்ட எழுத்துக்களின் சில மூலப்படிவங்களும் இருந்திருக்கலாம். அக்காலத்தில் ஏவப்பட்ட எழுத்துக்களின் பொறுப்பாளராக எஸ்றா இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.​—நெ. 8:​1, 2.

கையெழுத்துப்பிரதி நகல் எடுக்கும் சகாப்தம்

3எபிரெய வேதாகமத்தின் நகல்களுக்கான தேவை எஸ்றா காலத்திலிருந்து அதிகரித்தது. பொ.ச.மு. 537-லிலும் அதற்குப் பின்னும் யூதர்கள் அனைவரும் எருசலேமுக்கும் பலஸ்தீனாவுக்கும் திரும்பிவிடவில்லை. மாறாக, ஆயிரக்கணக்கான யூதர்கள் பாபிலோனில் தங்கிவிட்டனர், சிலர் வியாபார மற்றும் வேறு காரணங்களுக்காக வேறு நாடுகளுக்கு சென்றனர். இதனால் பூர்வ உலகத்தின் பல வாணிப மையங்களில் அவர்கள் இருந்தனர். ஆலய பண்டிகைகளுக்காக பல யூதர்கள் ஆண்டுதோறும் எருசலேமுக்கு யாத்திரை செய்தனர், அங்கு பைபிள் மொழியான எபிரெயுவில் நடத்தப்பட்ட ஆசரிப்பில் பங்குகொண்டனர். எஸ்றாவின் காலத்தில், இப்படிப்பட்ட தூர தேசங்களில் வாழ்ந்த யூதர்கள் ஜெப ஆலயங்கள் என்றழைக்கப்பட்ட உள்ளூர் கூடுமிடங்களைப் பயன்படுத்தினர். அங்கே எபிரெய வேதாகமத்தை வாசித்து கலந்தாராய்ந்தனர். a வணக்கத்துக்குரிய இந்த மையங்கள் அநேக இடங்களில் சிதறியிருந்ததால் நகல் எடுப்போர் அதிக எண்ணிக்கையில் கையெழுத்துப் பிரதிகளை எடுக்க வேண்டியிருந்தது.

4இந்த ஜெப ஆலயங்களில் கெனீஸா எனப்படும் சேமிப்பு அறை இருந்தது. காலப்போக்கில், இந்த கெனீஸாவில் கிழிந்த அல்லது பழைய கையெழுத்துப் பிரதிகளை யூதர்கள் வைத்தனர், அவற்றிற்கு பதில் ஜெப ஆலயத்தின் உபயோகத்துக்கு புதிய பிரதிகளை எடுத்தனர். யெகோவாவின் பரிசுத்தப் பெயர் மூலப்பிரதியில் இருந்ததால் அதன் தூய்மையை காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கெனீஸாவிலிருந்த பழைய பிரதிகளை அவ்வப்போது பயபக்தியோடு பூமியில் புதைக்க ஆரம்பித்தனர். தொடர்ந்து வந்த பல நூற்றாண்டுகளில், இவ்வாறுதான் நூற்றுக்கணக்கான பழைய எபிரெய பைபிள் கையெழுத்துப் பிரதிகள் உபயோகத்தில் இல்லாமல் அழிந்துபோயின. எனினும், பழைய கெய்ரோவிலிருந்த ஒரு ஜெப ஆலயத்தின் கெனீஸாவில் சேமிக்கப்பட்டிருந்த அநேக பிரதிகள் புதைக்கப்படவில்லை. அதன் மீது ஒரு சுவர் கட்டப்பட்டுவிட்டது, இது 19-ம் நூற்றாண்டின் மத்திபம் வரை மறக்கப்பட்டு விட்டதால் அந்தப் பிரதிகள் தப்பின. 1890-ல், இந்த ஜெப ஆலயத்தை பழுதுபார்த்தனர்; அப்போது கெனீஸாவில் இருந்த நகல்களை திரும்ப ஆராய்ந்தனர். அதன்பின் அந்த பொக்கிஷங்கள் விற்கப்பட்டன அல்லது நன்கொடையாக அளிக்கப்பட்டன. இந்த இடத்திலிருந்து, பெரும்பாலும் பூர்த்தியான கையெழுத்துப் பிரதிகளும் ஆயிரக்கணக்கான துண்டுப்பகுதிகளும் (சில பொ.ச. ஆறாம் நூற்றூண்டைச் சேர்ந்தவை என்று சொல்லப்படுகிறது) கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக நூலகத்துக்கும் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள மற்ற நூலகங்களுக்கும் சென்றன.

5இன்று, எபிரெய வேதாகமத்தை முழுமையாக அல்லது பகுதிகளாக கொண்டுள்ள கிட்டத்தட்ட 6,000 கையெழுத்துப் பிரதிகள் உலகத்தின் பல்வேறு நூலகங்களில் எண்ணப்பட்டு பட்டியலிடப்பட்டிருக்கின்றன. பொ.ச. பத்தாம் நூற்றாண்டுக்கும் முற்பட்ட இவற்றைப் போன்ற கையெழுத்துப் பிரதிகள் (சில பிரதிகளின் பாகங்களைத் தவிர) சமீப காலம் வரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. பின்பு 1947-ல், சவக்கடல் பகுதியில், ஏசாயா புத்தகத்தின் ஒரு சுருள் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு பிற்பட்ட ஆண்டுகளில் சவக்கடல் பகுதியிலுள்ள குகைகளில் ஏறக்குறைய 1,900 ஆண்டுகள் புதைந்து கிடந்த எபிரெய வேதாகமத்தின் மதிப்புமிக்க கையெழுத்துப் பிரதிகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் சில பொ.ச.மு. கடைசி நூற்றாண்டுகளில் நகல் எடுக்கப்பட்டவை என்று நிபுணர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். இவ்வாறு கிடைத்த எபிரெய வேதாகமத்தின் ஏறக்குறைய 6,000 கையெழுத்துப் பிரதிகளை அவர்கள் ஒப்பிட்டு ஆராய்ந்தனர்; அதன் வாயிலாக எபிரெய வாக்கியத்தை உறுதிப்படுத்துவதற்கு நல்ல ஆதாரம் கிடைத்தது, அதேபோல வாக்கியத்தை நேர்மையுடன் பிரதியெடுத்திருப்பதையும் இது வெளிப்படுத்துகிறது.

எபிரெயு மொழி

6இன்று எபிரெயு என்று அறியப்பட்டிருக்கும் மொழியின் ஆரம்பகால வடிவத்தைத்தான் ஆதாம் ஏதேன் தோட்டத்தில் பேசினான். இதனால் இதை மனிதனின் மொழியென்று குறிப்பிடலாம். இதுவே நோவாவின் நாளில் பேசப்பட்ட மொழி, அச்சமயம் அது இன்னும் வளர்ச்சியடைந்து வந்தது. பாபேல் கோபுரத்தில் மனிதவர்க்கத்தின் பேச்சை யெகோவா தாறுமாறாக்கியபோது அழியாது தப்பிய மூல மொழி இதுதான், அச்சமயம் அது இன்னும் அதிக வளர்ச்சியடைந்திருந்தது. (ஆதி. 11:​1, 7-9) எபிரெயு, செமிட்டிக் மொழி தொகுதியைச் சேர்ந்தது, அந்த மொழி குடும்பத்தில் இதுதான் தலை. ஆபிரகாமின் காலத்தில் இது கானானின் மொழியோடு சம்பந்தப்பட்டிருந்ததாகவும், எபிரெய கிளையிலிருந்தே கானானியர் பல்வேறு பேச்சு வழக்குகளை உருவாக்கினர் என்றும் தோன்றுகிறது. ஏசாயா 19:​18-ல் இது “கானான் பாஷை” எனக் குறிப்பிடப்படுகிறது. அந்த காலத்தில் மோசே எகிப்தியரின் ஞானத்தில் மட்டுமல்ல, தன் முற்பிதாக்களின் எபிரெய மொழியிலும் சிறந்த கல்விமானாக இருந்தார். இதனால் தனக்கு கிடைத்தப் பூர்வ படிவங்களை அவர் வாசித்தார்; இன்று பைபிள் புத்தகமாகிய ஆதியாகமம் என்றறியப்படும் புத்தகத்தில் அவர் பதிவுசெய்த தகவல் சிலவற்றிற்கு இவை ஆதாரத்தை அளித்திருக்கலாம்.

7பின்னர் யூத அரசர்களின் நாட்களில், எபிரெயு “யூதபாஷை” என்று அறியப்பட்டது. (2 இரா. 18:​26, 28) இயேசுவின் காலத்தில், யூதர்கள் புதிய அல்லது விரிவாக்கப்பட்ட எபிரெயுவைப் பேசினர், இது பின்னர் ரபீனிய எபிரெயு ஆயிற்று. எனினும் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் இந்த மொழி “எபிரெய” மொழி என்றுதான் குறிப்பிடப்படுகிறது, அரமிக் என்றல்ல என்பதை கவனிக்க வேண்டும். (யோவா. 5:2; 19:​13, 17; அப். 22:2; வெளி. 9:11) பூர்வ காலங்களிலிருந்தே பைபிள் எபிரெயுவே தொடர்புகொள்வதற்குரிய பொது மொழியாக இருந்தது. இதை கிறிஸ்தவ காலத்துக்கு முந்திய யெகோவாவின் சாட்சிகள் அநேகரும் முதல் நூற்றாண்டின் கிறிஸ்தவ சாட்சிகளும் புரிந்துகொண்டனர்.

8தேவாவியின் ஏவுதலின்கீழ் அருளப்பட்டு தொகுக்கப்பட்ட எபிரெய வேதாகமம், பளிங்குபோன்ற தெளிவான சத்திய தண்ணீரின் நீர்த்தேக்கமாக இருந்தது. எனினும், எபிரெயுவை வாசிப்போர் மட்டுமே கடவுளால் அருளப்பட்ட இந்தத் தண்ணீரை நேரடியாக பயன்படுத்த முடியும். பலமொழி தேசங்களின் மக்கள் எவ்வாறு இந்தச் சத்திய தண்ணீரை பருகி, அதனால் தேவ வழிநடத்துதலையும் தங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதலையும் காண முடியும்? (வெளி. 22:17) ஒரே வழி எபிரெயுவிலிருந்து மற்ற மொழிகளுக்கு மொழிபெயர்ப்பதுதான்; இதனால் கடவுளுடைய சத்தியம் எனும் நீரோடை திரளான ஜனங்களுக்கு பாய்ந்தோடும்படி செய்ய முடியும். ஏறக்குறைய பொ.ச.மு. நான்காம் அல்லது மூன்றாம் நூற்றாண்டிலிருந்து தற்காலம் வரை பைபிளின் பகுதிகள் 1,900-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன; அதற்காக யெகோவா தேவனுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும். நீதியிடம் மனச்சாய்வுள்ள மக்கள் யாவருக்கும் இது பேருதவியாக இருக்கிறது; அவர்கள் இந்த அருமையான தண்ணீரில் ‘இன்பத்தைக்’ கண்டடைகின்றனர்!​—சங். 1:2; 37:​3, 4.

9பைபிளின் மூலவாக்கியத்தை மற்ற மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கு பைபிள் அதிகாரம் அல்லது உரிமை அளிக்கிறதா? நிச்சயமாகவே! “ஜாதிகளே, அவருடைய ஜனங்களோடேகூடக் களிகூருங்கள்” என்று கடவுள் இஸ்ரவேலுக்கு சொன்னதும், “ராஜ்யத்தைப் பற்றிய இந்த நற்செய்தி குடியிருக்கப்பட்ட பூமி முழுவதிலும் சகல தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்” என்று கிறிஸ்தவர்களுக்கு இயேசு கொடுத்த தீர்க்கதரிசன கட்டளையும் நிறைவேற வேண்டும். அதற்கு வேதவாக்கியங்களை மொழிபெயர்க்க வேண்டும். பைபிளை மொழிபெயர்ப்பதில் ஏறக்குறைய 24 நூற்றாண்டுகள் கடந்திருக்கின்றன, அவற்றை பின்னோக்கி பார்க்கும்போது யெகோவாவின் ஆசீர்வாதம் இந்த வேலையில் இருந்திருக்கிறது என்பது தெளிவாக உள்ளது. மேலும், கையெழுத்துப் பிரதிகளில் எஞ்சியிருக்கிற பைபிளின் பூர்வ மொழிபெயர்ப்புகளும், எபிரெய சத்திய நீர்த்தேக்கத்தின் மூலவாக்கியம் முற்றுமுழுக்க உண்மையானது என்பதை உறுதிசெய்கின்றன.​—உபா. 32:43; மத். 24:14, NW.

ஆரம்பகால பைபிள் மொழிபெயர்ப்புகள்

10சமாரிய ஐந்தாகமம். பூர்வகாலங்களிலிருந்து சமாரிய ஐந்தாகமம் என்ற பதிப்பு இருந்து வந்திருக்கிறது. அதன் பெயருக்கு ஏற்றபடி இதில் எபிரெய வேதாகமத்தின் முதல் ஐந்து புத்தகங்கள் மட்டுமே அடங்கியுள்ளன. எபிரெய மூல சொற்கள் சமாரிய மொழியில் எழுத்துப்பெயர்ப்பு (transliteration) செய்யப்பட்டன. பூர்வ எபிரெய எழுத்துக்களிலிருந்து உருவாக்கப்பட்டதே சமாரிய எழுத்துக்கள். இது அக்கால எபிரெய வாக்கியத்தைப் பற்றிய பயனுள்ள தகவலை அளிக்கிறது. சமாரியர் இந்த எழுத்துப்பெயர்ப்பை செய்தனர். இவர்கள் பொ.ச.மு. 740-ல் இஸ்ரவேலின் பத்துக்கோத்திர ராஜ்யம் முறியடிக்கப்பட்ட பிறகு சமாரியாவில் மீதியாக இருந்தவர்களும் அசீரியர் அந்த பட்டணத்தில் குடியேற்றியவர்களின் சந்ததியுமாவர். இந்தச் சமாரியர்கள் இஸ்ரவேலரின் வணக்கத்தைத் தங்கள் பலதெய்வ வணக்கத்துடன் இணைத்தனர், ஐந்தாகமத்தையும் ஏற்றனர். அதை அவர்கள் நகலெடுத்தது ஏறக்குறைய பொ.ச.மு. நான்காம் நூற்றாண்டு என்று எண்ணப்படுகிறது. எனினும் அதைவிட பிற்பட்ட காலமான பொ.ச.மு. இரண்டாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்றும் சில கல்விமான்கள் குறிப்பிடுகின்றனர். அவர்கள் அதை வாசிக்கையில், உண்மையில் எபிரெயுவை உச்சரிப்பர். இதற்கும் எபிரெய வாக்கியத்திற்கும் ஏறக்குறைய 6,000 வேறுபாடுகள் இருக்கின்றன என்றாலும் அவை சிறு வேறுபாடுகளே. கைவசம் இருக்கும் கையெழுத்துப்பிரதி நகல்களில் சில பொ.ச. 13-வது நூற்றாண்டுக்கும் முற்பட்டவை. ஆங்கில புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளின் அடிக்குறிப்புகளில் சமாரிய ஐந்தாகமத்தைப் பற்றி சில குறிப்புகள் கொடுக்கப்படுகின்றன. b

11அரமிக் டார்கம்கள். “பொருள்விளக்கம்” அல்லது “பொழிப்புரை” என்பதற்கான அரமிக் சொல் டார்கம். நெகேமியாவின் காலத்திலிருந்து அரமிக் மொழி, பெர்சிய பிராந்தியத்தில் வாழ்ந்த பல யூதர்களின் பொதுமொழியானது. ஆகையால் எபிரெய வேதாகமத்தை வாசித்த பிறகு, அதை அரமிக் மொழியில் மொழிபெயர்த்து விளக்கமளிக்க வேண்டிய தேவை இருந்தது. ஏறக்குறைய பொ.ச. ஐந்தாம் நூற்றாண்டில் அவற்றிற்கு இப்போது இருக்கும் வடிவமைப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். அவை திருத்தமான மொழிபெயர்ப்பல்ல, எபிரெய மூலவாக்கியங்களுக்கு பொழிப்புரைகளாக மட்டுமே இருக்கின்றன; இருந்தாலும் மூலவாக்கியத்துக்கு சிறந்த பின்னணிச்சூழல் அளிப்பதால் கடினமான பகுதிகள் சிலவற்றை தீர்மானிப்பதில் உதவியளிக்கின்றன. புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளின் அடிக்குறிப்புகளில் இந்த டார்கம்கள் அடிக்கடி குறிப்பிடப்படுகின்றன. c

12கிரேக்க செப்டுவஜின்ட். இது எபிரெய வேதவாக்கியங்களின் பூர்வ மொழிபெயர்ப்புகளில் முக்கியமானது. எபிரெயுவிலிருந்து முதன் முதலில் மொழிபெயர்க்கப்பட்டது, இதைத்தான் கிரேக்க செப்டுவஜின்ட் (“எழுபது” எனப் பொருள்படுகிறது) என்று அழைக்கின்றனர். இதன் மொழிபெயர்ப்பு சுமார் பொ.ச.மு. 280-ல் தொடங்கப்பட்டது. யூதப் பாரம்பரியத்தின்படி எகிப்தில் உள்ள அலெக்சாண்டிரியாவைச் சேர்ந்த 72 யூத கல்விமான்கள் இதில் ஈடுபட்டனர். ஏதோ ஒரு காரணத்திற்காக இந்த 70 என்ற எண்ணை பிற்காலத்தில் பயன்படுத்தினர், இதனால் இந்த மொழிபெயர்ப்பு செப்டுவஜின்ட் என்றழைக்கப்பட்டது. இது பொ.ச.மு. இரண்டாம் நூற்றாண்டில் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். கிரேக்கு பேசிய யூதருக்கு இது வேதவாக்கியமாகப் பயன்பட்டது. இயேசு மற்றும் அப்போஸ்தலரின் காலம்வரை இது பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில், எபிரெய வேதாகமத்திலிருந்து நேரடியாக குறிப்பிடப்பட்ட 320 மேற்கோள்களில் பெரும்பான்மையும், மொத்தத்தில் கிட்டத்தட்ட 890 மேற்கோள்களும் குறிப்புரைகளும் எபிரெய வேதாகமங்களின் செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பு அடிப்படையில் செய்யப்பட்டவை.

13பப்பைரஸ் என்றழைக்கப்படும் நாணற்தாளில் எழுதப்பட்ட செப்டுவஜின்ட்டின் பாகங்கள் பல இன்றும் ஆராய்ச்சி செய்வதற்கு உபயோகிக்கப்படுகின்றன. அவை பூர்வ கிறிஸ்தவ காலத்தை சேர்ந்ததால் மதிப்பு வாய்ந்தவை. அவற்றில் சில வசனங்கள் அல்லது அதிகாரங்கள் மட்டுமே இருக்கின்றன என்றாலும், செப்டுவஜின்ட் வாக்கியத்தை மதிப்பிடுவதற்கு உதவிசெய்கின்றன. ஃபோயட் பேபரை கலக்‍ஷன் (விளக்க விவரப்பட்டியல் எண் 266) 1939-ல் எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டது, அது பொ.ச.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று அறிய வந்துள்ளது. இதில் ஆதியாகமம் மற்றும் உபாகமத்தின் பகுதிகள் அடங்கியிருக்கின்றன. சரியாக பாதுகாக்கப்படாததால் ஆதியாகமத்தின் துண்டுச்சுருள்களில் கடவுளுடைய பெயர் காணப்படவில்லை. எனினும், உபாகமத்தில் பல இடங்களில் அது காணப்படுகிறது. கிரேக்க மூல எழுத்துக்களுக்கு மத்தியில் சதுரமான எபிரெய எழுத்துக்களில் கடவுளுடைய பெயர் காணப்படுகிறது. d மற்ற நாணற்தாள் கையெழுத்துப் பிரதிகள் பெரும்பாலும் பொ.ச. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அதிக காலம் நீடித்திருக்கும், மென்மையான தோல் இதற்காக பயன்படுத்தப்பட்டது; அவை பொதுவாக கன்றுக்குட்டி, செம்மறியாட்டுக் குட்டி, அல்லது வெள்ளாட்டு தோல்களால் செய்யப்பட்டவை.

14பொ.ச. 245-ல் முடிக்கப்பட்ட ஆரிகெனின் ஆறு பத்தி ஹெக்ஸப்லா செப்டுவஜின்ட் பைபிளிலும், கடவுளுடைய பெயர் எபிரெய நான்கெழுத்து உருவில் தோன்றுவது கவனத்திற்குரியது. சங்கீதம் 2:2-ஐ குறித்து விளக்கவுரை அளிக்கையில் ஆரிகென் செப்டுவஜின்ட்டைக் குறித்து இவ்வாறு எழுதினார்: “மிகத் திருத்தமான கையெழுத்துப் பிரதிகளில் இந்தப் பெயர் எபிரெய எழுத்துக்களில் காணப்படுகிறது, எனினும் இன்றைய எபிரெயுவில் அல்ல, பழைய எபிரெய எழுத்துக்களில் காணப்படுகிறது. e வெகு முன்னரே செப்டுவஜின்ட் மாற்றியமைக்கப்பட்டது என்பதற்கான அத்தாட்சி இதிலிருந்து தெளிவாகிறது; அதில் கடவுளுடைய எபிரெய நான்கெழுத்துப் பெயருக்குப் பதிலாக கைரியாஸ் (கர்த்தர்) என்றும், தியாஸ் (கடவுள்) என்றும் மாற்றப்பட்டிருக்கிறது. பூர்வ கிறிஸ்தவர்கள் கடவுளுடைய பெயர் அடங்கிய கையெழுத்துப் பிரதிகளைப் பயன்படுத்தினர்; எனவே அவர்கள் யூத பாரம்பரியத்தைப் பின்பற்றி, ஊழியத்தின்போது ‘அந்தப் பெயரை’ உச்சரிக்கவில்லை என்று யாரும் சொல்ல முடியாது. அவர்கள் கிரேக்க செப்டுவஜின்ட்டிலிருந்து யெகோவாவின் பெயரை பயன்படுத்தி நேரடியாக சாட்சிகொடுத்திருக்க வேண்டும்.

15மென்மையான தோல் (vellum) பிரதிகள் மற்றும் பதனிட்ட தோல் கையெழுத்துப் பிரதிகளில் பதிவு செய்யப்பட்ட கிரேக்க செப்டுவஜின்ட்டின் நூற்றுக்கணக்கான பிரதிகள் இப்போதும் இருக்கின்றன. இவற்றில் பல, பொ.ச. நான்காம் நூற்றாண்டுக்கும் பொ.ச. ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் இடையே எழுதப்பட்டவை. இவற்றில் எபிரெய வேதாகமத்தின் பெரும் பகுதிகள் அடங்கியிருப்பதால் முக்கியத்துவம் வாய்ந்தவை. இவை முழுவதும் பெரிய எழுத்துக்களில் தனித்தனியாக (uncials) எழுதப்பட்டிருக்கின்றன. மீதியானவை சிற்றெழுத்துக்களாக (minuscules) வளைவு நெளிவான நடையில் (cursive) எழுதப்பட்டிருக்கின்றன. ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து அச்சடிக்க ஆரம்பித்த காலம் வரை சிற்றெழுத்து அல்லது தொடரெழுத்துக் கையெழுத்துப் பிரதிகள் உபயோகத்தில் இருந்தன. வாடிகன் எண் 1209, சினியாட்டிக், அலெக்ஸாண்ட்ரின் ஆகியவை நான்காம், ஐந்தாம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட பிரபலமான ‘அன்சியல்’ கையெழுத்துப் பிரதிகள்; இவற்றில் கிரேக்க செப்டுவஜின்ட் சிறிதளவு மாற்றத்துடன் காணப்படுகின்றன. புதிய உலக மொழிபெயர்ப்பின் அடிக்குறிப்புகளிலும் விளக்கவுரைகளிலும் செப்டுவஜின்ட் அடிக்கடி மேற்கோள் காட்டப்படுகிறது. f

16லத்தீன் வல்கேட். மேற்கத்திய கிறிஸ்தவமண்டல மொழிகள் பலவற்றில் மொழிபெயர்ப்பதற்கு, பல கத்தோலிக்க மொழிபெயர்ப்பாளர்கள் லத்தீன் வல்கேட் மொழிபெயர்ப்பைத்தான் மூலவாக்கியமாக பயன்படுத்தினர். வல்கேட் எவ்வாறு ஆரம்பிக்கப்பட்டது? வல்கேட்டஸ் (vulgatus) என்ற லத்தீன் சொல்லுக்கு “பொதுவான, பொதுமக்கள் அறிந்த” என்பது பொருள். வல்கேட் முதன்முதல் மொழிபெயர்க்கப்பட்டபோது சாதாரண மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, மேற்கத்திய ரோமப் பேரரசில் வாழ்ந்த மக்கள் பேசிய அல்லது பொதுமக்கள் அறிந்த லத்தீனில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்த மொழிபெயர்ப்பைச் செய்த கல்விமான் ஜெரோம், பழைய லத்தீன் சங்கீதங்களைக் கிரேக்க செப்டுவஜின்ட்டுடன் ஒப்பிட்டு, முன்னதாக இரண்டு திருத்திய பதிப்புகளை எழுதியிருந்தார். எனினும், அவருடைய வல்கேட் பைபிள் மூல எபிரெயு மற்றும் கிரேக்க மொழிகளிலிருந்து நேரடியாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது, ஆகவே அது ஒரு மொழிபெயர்ப்பின் மொழிபெயர்ப்பு அல்ல. ஏறக்குறைய பொ.ச. 390 முதல் பொ.ச. 405 வரையில் ஜெரோம் எபிரெயுவிலிருந்து லத்தீனுக்கு மொழிபெயர்ப்பு செய்தார். இந்தச் சமயத்தில் செப்டுவஜின்ட் பிரதிகளில் தள்ளுபடி ஆகமங்களும் சேர்க்கப்பட்டிருந்தன; எனவே பூர்த்தி செய்யப்பட்ட அவருடைய மொழிபெயர்ப்பில் தள்ளுபடி ஆகமங்கள் அடங்கியிருந்தபோதிலும் அங்கீகரிக்கப்பட்ட புத்தகங்களையும் அங்கீகரிக்கப்படாதவற்றையும் அவர் தெளிவாக வேறுபடுத்திக் காட்டினார். புதிய உலக மொழிபெயர்ப்பு, ஜெரோமின் வல்கேட் மொழிபெயர்ப்பைப் பல தடவை அடிக்குறிப்புகளில் குறிப்பிடுகிறது. g

எபிரெய வாக்கியங்கள்

17சோஃபெரிம். எஸ்றாவின் நாட்கள் தொடங்கி இயேசுவின் காலம் வரையாக எபிரெய வேதாகமத்தைப் பிரதியெடுத்து வந்த மனிதர்களை வேதபாரகர் அல்லது சோஃபெரிம் என்று அழைத்தனர். அவர்கள் காலப்போக்கில் வாக்கியங்களில் மாற்றங்களை செய்யத் தொடங்கினர். நியாயப்பிரமாணத்திற்கு பொறுப்பாளர்களாக இருப்பதாக உரிமைபாராட்டிய இவர்களை இயேசு வெளிப்படையாய் கண்டனம் செய்தார்; ஏனெனில் தங்களுக்கு இல்லாத அதிகாரங்களை இருப்பதாக உரிமைபாராட்ட ஆரம்பித்தனர்.​—மத். 23:2, 13.

18மாற்றங்களை மசோரா வெளிப்படுத்துகிறது. கிறிஸ்துவுக்குப் பின் வந்த நூற்றாண்டுகளில், வேதபாரகரான சோஃபெரிம்களுக்கு பிறகு பொறுப்பேற்றவர்கள் மசோரெட்டுகள் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் சோஃபெரிம்கள் செய்த மாற்றங்களை கவனித்து, அவற்றை ஓரப்பகுதியில் அல்லது எபிரெய வாக்கியத்தின் முடிவில் குறித்து வைத்தனர். இந்த ஓரக் குறிப்புகள் மசோரா என்று அழைக்கப்பட்டன. இந்த மசோரா, சோஃபெரிமின் 15 தனிப்பட்ட குறிப்புகளை அதாவது, எபிரெய வாக்கியத்தில் புள்ளிகளால் அல்லது கோடுகளால் குறிக்கப்பட்டிருந்த 15 வார்த்தைகளை அல்லது சொற்றொடர்களை வரிசையாக குறிப்பிட்டன. இந்தத் தனிப்பட்ட குறிப்புகளில் சில ஆங்கில மொழிபெயர்ப்பை அல்லது கருத்து விளக்கத்தைப் பாதிக்கவில்லை; ஆனால் மற்றவை பாதிக்கின்றன அதனால் அவை முக்கியமானவை. h இந்த சோஃபெரிம்கள் யெகோவா என்ற பெயரை உச்சரிக்கவில்லை, அதற்கு மூடநம்பிக்கையே காரணம். அதனால், அந்தப் பெயருக்கு பதிலாக அடோனாய் (கர்த்தர்) என்று 134 இடங்களிலும், ஏலோஹிம் (கடவுள்) என்று சில சந்தர்ப்பங்களிலும் மாற்றம் செய்தனர். மசோரா இந்த மாற்றங்களை வரிசையாக குறிப்பிடுகிறது. i மசோராவிலுள்ள ஒரு குறிப்பின்படி, இந்த சோஃபெரிம் அல்லது பூர்வ வேதபாரகர் குறைந்தது 18 திருத்தங்களையாவது செய்திருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகின்றனர்; ஆனால் இதற்கும் மேலாக செய்திருப்பதற்கு அத்தாட்சி இருக்கிறது. j இந்தத் திருத்தங்களை நல்ல நோக்கத்துடன் செய்திருக்கலாம், ஏனெனில், மூலவாக்கியத்தின் அந்தப் பகுதிகள் கடவுளுடைய பரிசுத்த தன்மையை கெடுப்பதாகவோ அல்லது அவருடைய பூமிக்குரிய பிரதிநிதிகளுக்கு அவமரியாதை காட்டுவதாகவோ தோன்றியது.

19மெய்யெழுத்து வாக்கியம். எபிரெய எழுத்துத் தொகுதி 22 மெய்யெழுத்துக்கள் அடங்கியது, உயிரெழுத்துக்கள் கிடையா. தொடக்கத்தில், அந்த மொழியைப் பற்றி தனக்கிருக்கும் அறிவை உபயோகித்து வாசிப்பவரே உயிரெழுத்துத் தொனிகளைத் தேவைப்பட்ட இடங்களில் நிரப்பிக்கொள்ள வேண்டும். எபிரெயுவில் எழுதுவது சுருக்கெழுத்தைப்போல் இருந்தது. பல திட்டமான சுருக்கக் குறிப்புகளை தற்கால ஆங்கிலத்திலும் மக்கள் பயன்படுத்துகின்றனர், அவற்றில் மெய்யெழுத்துக்கள் மட்டுமே இருக்கின்றன. உதாரணமாக, லிமிட். (ltd.) என்பது லிமிடெட் (limited) என்பதன் சுருக்கம். இதைப் போலவே எபிரெய மொழியில் மெய்யெழுத்துக்கள் மட்டுமே உபயோகிக்கப்பட்ட வார்த்தைகள் இருக்கின்றன. ஆகவே, “மெய்யெழுத்து வாக்கியம்” என்பது, உயிரெழுத்துக் குறிகள் எதுவும் இல்லாத எபிரெய வாக்கியம் ஆகும். எபிரெய கையெழுத்துப் பிரதிகளின் மெய்யெழுத்து வாக்கியம், பொ.ச. முதலாம் இரண்டாம் நூற்றாண்டுகளுக்கிடையில் உறுதி செய்யப்பட்டது. எனினும் வேறுபட்ட எழுத்துக்களைக் கொண்ட மூலவாக்கிய கையெழுத்துப் பிரதிகள் சிறிது காலம் தொடர்ந்து பரவிக்கொண்டிருந்தன. அதன்பின், சோஃபெரிம்களின் காலத்தில் செய்ததைப்போல் மாற்றங்கள் செய்யப்படவில்லை.

20மசோரெட்டிக் வாக்கியம். பொ.ச. 500-க்கும் பிற்பட்ட காலப்பகுதியில் மசோரெட்டுகள் (எபிரெயுவில், பாயல்லெஹ் ஹம்மசோரா, இதன் பொருள் “பாரம்பரிய நிபுணர்கள்”) உயிரெழுத்து மற்றும் அழுத்தக் குறிகள் அடங்கிய ஒரு சீரான முறையை வகுத்தனர். முன்பு மொழியின் உச்சரிப்பு வாய்மொழியாக ஒவ்வொரு பரம்பரைக்கும் கடத்தப்பட்டது. இப்போது, வாசிப்பதற்கும் உயிரெழுத்துத் தொனிகளை உச்சரிப்பதற்கும், குறிக்கப்பட்ட இந்தக் குறிகள் உதவியாக இருந்தன. மசோரெட்டுகள் தாங்கள் பிரதியெடுத்த வாக்கியங்களில் எந்த மாற்றங்களும் செய்யவில்லை, ஆனால் தேவை என்று நினைத்த மசோராவில் ஓரக் குறிப்புகளை மாத்திரமே எழுதி வைத்தனர். மூலவாக்கியத்தில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தினர். மேலும் அவர்களுடைய மசோராவில், மூலவாக்கியத்தோடு ஒத்திராதவற்றை குறிப்பிட்டனர், அவசியம் என்று அவர்கள் நினைத்தவற்றிற்கு திருத்தப்பட்ட வாசிப்புமுறைகளைக் கொடுத்தனர்.

21மெய்யெழுத்து வாக்கியத்துக்கு ஒலி உருவம் கொடுப்பதற்கும் அழுத்தக் குறியிடுவதற்கும் மசோரெட்டுகளின் மூன்று பிரிவுகள் ஈடுபட்டன, அவை பாபிலோனிய, பலஸ்தீனிய, திபேரிய பிரிவுகள் ஆகும். இப்போது அச்சடிக்கப்படும் எபிரெய பைபிள்களில் உள்ள எபிரெய வாக்கியம் மசோரெட்டிக் வாக்கியம் என்று அழைக்கப்படுகிறது, அது திபேரியன் பிரிவினரால் உருவாக்கப்பட்ட முறையைப் பயன்படுத்துகிறது. கலிலேயாக் கடலின் மேற்குக் கரையிலுள்ள திபேரியா நகரில் வாழ்ந்த மசோரெட்டுகளால் இந்த முறை உருவாக்கப்பட்டது. புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளிலுள்ள அடிக்குறிப்புகள், (M என்ற குறியீட்டால்) இந்த மசோரெட்டிக் வாக்கியத்தையும், (Mmarginஎன்ற குறியீட்டால்) அதன் ஓரக் குறிப்புகளாகிய மசோராவையும் பல தடவை குறிப்பிடுகின்றன. k

22பலஸ்தீனிய பிரிவினர் இந்த உயிரெழுத்துக் குறிகளை மெய்யெழுத்துக்களுக்கு மேல் குறிப்பிட்டனர். அப்படிப்பட்ட கையெழுத்துப் பிரதிகளில் சில பிரதிகள் மட்டுமே நமக்கு கிடைத்திருக்கின்றன; இதிலிருந்து இந்த முறையில் குறை இருப்பது தெரிந்தது. உயிரெழுத்தைக் காட்டும் பாபிலோனிய முறையும் அவ்வாறே மேல்குறியீட்டு முறையாக இருந்தது. பொ.ச. 916-ல் எழுதப்பட்ட தீர்க்கதரிசிகளின் பீட்டர்ஸ்பர்க் கோடக்ஸில், இந்த பாபிலோனிய குறியீட்டு முறையை பயன்படுத்தியிருக்கின்றனர்; இந்த கையெழுத்துப்பிரதி, ரஷ்யாவின் லெனின்கிராட் பொது நூல் நிலையத்தில் பாதுகாக்கப்படுகிறது. இந்தக் கையெழுத்துச் சுவடியில், ஏசாயா, எரேமியா, எசேக்கியேல், மற்றும் “சிறிய” தீர்க்கதரிசிகள், ஓரக் குறிப்புகளுடன் (மசோரா) காணப்படுகிறது. கல்விமான்கள் இந்தக் கையெழுத்துப் பிரதியை ஆவலுடன் ஆராய்ந்து, இதைத் திபேரிய வாக்கியத்தோடு ஒத்துப்பார்த்திருக்கின்றனர். இது மேல்குறியீட்டு முறையைப் பயன்படுத்துகிறபோதிலும், மெய்யெழுத்து வாக்கியம், உயிரெழுத்துக்கள், மசோரா குறித்தவற்றில் திபேரிய வாக்கியத்தைப் பின்பற்றுகிறது. பாபிலோனிய வாக்கியத்தின் ஒரு பிரதி பிரிட்டிஷ் பொருட்காட்சி சாலையில் காணப்படுகிறது; அதில் ஐந்தாகமத் தொகுதி இருக்கிறது. இது திபேரிய வாக்கியத்துடன் பேரளவு ஒத்திருக்கிறது.

23சவக்கடல் சுருள்கள். 1947-ல் எபிரெயக் கையெழுத்துப் பிரதியின் சரித்திரத்தில் சுவாரஸ்யமான ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியது. சவக்கடல் பகுதியில், வாடி கும்ரன் (நஹல் குமெரன்) என்ற இடத்திலுள்ள ஒரு குகையில் முதல் ஏசாயா சுருள் கண்டுபிடிக்கப்பட்டது; இதோடு, பைபிள் சம்பந்தப்பட்ட மற்றும் பைபிள் சம்பந்தப்படாத பல சுருள்களும் கண்டுபிடிக்கப்பட்டன. அதற்கு பிறகு, நன்றாக பாதுகாத்து வைக்கப்பட்ட இந்த ஏசாயா சுருளின் (1QIsa) ஒரு நகல் அறிஞர்கள் ஆராய்ச்சி செய்வதற்காக பிரசுரிக்கப்பட்டது. இது பொ.ச.மு. இரண்டாம் நூற்றாண்டின் முடிவு காலத்தை சேர்ந்தது என்று நம்பப்படுகிறது. இது நிச்சயமாகவே வியக்கத்தக்க ஒரு கண்டுபிடிப்பு. இது, கைவசம் இருக்கும் மிகப் பழைய கையெழுத்துப் பிரதியாகிய ஏசாயா புத்தகத்தின் ஏற்கப்பட்ட மசோரெட்டிக் வாக்கியத்தைப் பார்க்கிலும் ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஓர் எபிரெய கையெழுத்துப்பிரதி! l எஸ்தர் புத்தகத்தைத் தவிர எபிரெய வேதாகமத்தின் மற்ற எல்லா புத்தகங்களின் பாகங்களையும் குறிப்பிடும் 170-க்கும் மேற்பட்ட சுருள்களின் பாகங்கள் கும்ரனிலிருந்த மற்ற குகைகளில் கண்டுபிடிக்கப்பட்டன. அத்தகைய சுருள்களின் ஆராய்ச்சி இன்றும் தொடருகிறது.

24அறிஞர் ஒருவர், சங்கீதங்கள் அடங்கிய முக்கியமான சவக்கடல் சுருள் ஒன்றை (11QPsa) ஆராய்ந்தார். அதில் சங்கீதம் 119-ஐ மசோரெட்டிக் வாக்கியத்திலுள்ள 119-ம் சங்கீதத்துடன் ஒப்பிட்டு ஆராய்ந்தார்; அவற்றில் வரும் சொற்கள் ஏறக்குறைய முற்றிலும் ஒத்திருப்பதாக அறிவிக்கிறார். இந்தச் சங்கீதங்களின் சுருளைக் குறித்து பேராசிரியர் ஜே. எ. சான்டர்ஸ் இவ்வாறு குறிப்பிட்டார்: “சொற்களின் எழுத்துக்கூட்டலில்தான் பெரும்பான்மையான [வேறுபாடுகள்] காணப்படுகின்றன; இவை பண்டைக்கால எபிரெய உச்சரிப்பையும் அதோடு சம்பந்தப்பட்டவற்றையும் தெரிந்துகொள்ள விரும்பும் அறிஞர்களுக்கு மட்டுமே அக்கறைக்குரியவை. a கவனிக்கத்தக்க இந்தப் பழைய கையெழுத்துப் பிரதிகளில் மற்ற விஷயங்களில் பெரிய வேறுபாடுகள் இல்லை. ஏசாயா சுருள், எழுத்துக்கூட்டலிலும் இலக்கண அமைப்பிலும் சில வேறுபாடுகளைக் காட்டுகிறது என்றாலும், கோட்பாடு சம்பந்தப்பட்ட குறிப்புகளில் வேறுபடவில்லை. புதிய உலக மொழிபெயர்ப்பைத் தயாரிக்கையில், பிரசுரிக்கப்பட்ட இந்த ஏசாயா சுருள், அதன் வேறுபாடுகள் சம்பந்தமாக ஆராயப்பட்டது, அதைப் பற்றிய குறிப்புகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. b

25எபிரெய வாக்கியங்கள் நமக்கு கிடைத்த முக்கிய வழிகளை இப்போது சிந்தித்தோம். அவை சமாரிய ஐந்தாகமம், அரமிக் டார்கம்கள், கிரேக்க செப்டுவஜின்ட், திபேரிய எபிரெய வாக்கியம், பலஸ்தீனிய எபிரெய வாக்கியம், பாபிலோனிய எபிரெய வாக்கியம், சவக்கடல் சுருள்களின் எபிரெய வாக்கியம் ஆகியவை. கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்ட ஊழியர்கள் எபிரெய வேதவாக்கியங்களை பதிவுசெய்தனர்; அவை பெரும்பாலும் அவர்கள் முதலில் பதிவு செய்த அதே முறையில் நமக்கு வந்துசேர்ந்திருக்கின்றன என்பதை இந்த வாக்கியங்களை ஆராய்ந்து ஒத்துப்பார்த்ததன் பலனாக உறுதியுடன் நம்ப முடிகிறது.

துல்லியமாக்கப்பட்ட எபிரெய வாக்கியம்

261524-25-ல் பிரசுரிக்கப்பட்ட ஜேக்கப் பென் சயிமின் இரண்டாவது ரபினிக் பைபிள்தான் 19-வது நூற்றாண்டுவரை அச்சடிக்கப்பட்ட தரமான எபிரெய பைபிள். 18-வது நூற்றாண்டில்தான் அறிஞர்கள் எபிரெய வாக்கியத்தை நுட்பமாய் அலசி ஆராயத் தொடங்கினர். 1776-80-ல், ஆக்ஸ்ஃபர்ட்டில், பென்ஜமின் கென்னிக்காட் 600-க்கும் மேற்பட்ட எபிரெய கையெழுத்துப் பிரதிகளின் பல்வேறு வாசகங்களைப் பிரசுரித்தார். பின்பு, 1784-98-ல், பர்மாவில், இத்தாலிய அறிஞர் ஜே. பி. டீ ரோஸை, இன்னும் 800-க்கும் மேற்பட்ட கையெழுத்துப் பிரதிகளின் பல்வேறு வாசகங்களைப் பிரசுரித்தார். ஜெர்மனியை சேர்ந்த எபிரெய அறிஞர் எஸ். பேயர் என்பவரும் ஒரு முதன்மையான மூலவாக்கியத்தை ஏற்படுத்தினார். சமீப காலங்களில், சி. டி. கின்ஸ்பர்க் மேன்மையான எபிரெய மூலவாக்கியத்தை (master text) ஏற்படுத்துவதற்கு பல ஆண்டுகள் பாடுபட்டார். இது முதலாவதாக 1894-ல் வெளிவந்தது, 1926-ல் முடிவாக திருத்தியமைக்கப்பட்டது. c ஜோஸஃப் ராதர்ஹாம், இந்த மூலவாக்கியத்தின் 1894-ம் பதிப்பை பயன்படுத்தினார்; அவர் ஆங்கில மொழிபெயர்ப்பாகிய தி எம்ஃபஸைஸ்ட் பைபிளை உருவாக்குவதற்கு இதைப் பயன்படுத்தினார். மேலும், பேராசிரியர் மாக்ஸ் எல். மர்கொலிஸும் அவரோடு வேலை செய்தவர்களும் கின்ஸ்பர்க், பேயர் ஆகியோரின் வாக்கியங்களைப் பயன்படுத்தி 1917-ல் ஒரு எபிரெய மொழிபெயர்ப்பை உருவாக்கினர்.

27எபிரெய அறிஞர் ருடால்ஃப் கிட்டல் 1906-ல் பிப்ளியா ஹெப்ரேய்க்கா, அல்லது “எபிரெய பைபிள்” என்ற தலைப்புடைய செம்மையாக்கப்பட்ட எபிரெய வாக்கியத்தின் முதல் பதிப்பை (பின்னால், இரண்டாவது பதிப்பை) ஜெர்மனியில் வெளியிட்டார். இந்தப் புத்தகத்தில் கிட்டல், விரிவாக்கப்பட்ட அடிக்குறிப்புகளை பைபிள் ஆராய்ச்சி சாதனமாக அளித்தார். இந்த அடிக்குறிப்புகளில், அந்தச் சமயத்தில் கிடைத்த மசோரெட்டிக் வாக்கியத்தின் எபிரெய கையெழுத்துப் பிரதிகள் பலவற்றை அடிக்குறிப்பில் வெளியிட்டு அவற்றை ஒப்பிட்டார். ஜேக்கப் பென் சயிம் எழுதிய, பொதுவாய் ஏற்கப்பட்ட மூலவாக்கியத்தை அடிப்படை மூலவாக்கியமாக இவர் பயன்படுத்தினார். இதைக் காட்டிலும் பழமையானதும், மேம்பட்டதும், ஏறக்குறைய பொ.ச. 10-ம் நூற்றாண்டில் நிர்ணயிக்கப்பட்டதுமான பென் அஷெர் மசோரெட்டிக் வாக்கியங்கள் கிடைத்தவுடன், பிப்ளியா ஹெப்ரேய்க்காவின் முற்றிலும் வேறுபட்ட மூன்றாவது பதிப்பு ஒன்றை உருவாக்குவதில் கிட்டல் மும்முரமாய் ஈடுபட்டார். இந்த வேலை அவருடைய மரணத்திற்குப் பின் அவருடைய கூட்டாளிகளால் செய்து முடிக்கப்பட்டது.

28கிட்டலின் பிப்ளியா ஹெப்ரேய்க்கா, 7-வது, 8-வது, மற்றும் 9-வது பதிப்புகள் (1951-55), ஆங்கில புதிய உலக மொழிபெயர்ப்பின் எபிரெய பகுதியை உருவாக்குவதில் உதவியாக இருந்தன. 1977-ல் பிப்ளியா ஹெப்ரேய்க்கா ஸ்டட்கார்ட்டென்ஸியா என்ற எபிரெய வாக்கியத்தின் ஒரு புதிய பதிப்பு பிரசுரிக்கப்பட்டது; 1984-ல் பிரசுரிக்கப்பட்ட புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளின் அடிக்குறிப்புகளில் கொடுக்கப்பட்ட தகவலைப் புதுப்பிப்பதற்கு இது பயன்படுத்தப்பட்டது.

29கிறிஸ்தவ சகாப்தத்திற்கு முன்பு வேதபாரகர்கள் செய்த மூலவாக்கிய மாற்றங்கள் பலவற்றை எடுத்துக்காட்டும் மசோராவின் ஓரக்குறிப்புகளை கிட்டல் தெளிவாக்கியிருக்கிறார்; அவை புதிய உலக மொழிபெயர்ப்பை திருத்தமாய் மொழிபெயர்க்கவும் கடவுளுடைய பெயராகிய யெகோவாவை சரியான இடங்களில் மறுபடியும் உபயோகிப்பதற்கும் உதவிசெய்திருக்கின்றன. அதிகரித்து வரும் பைபிள் சம்பந்தப்பட்ட ஆழ்ந்த புலமை புதிய உலக மொழிபெயர்ப்பு மூலமாக தொடர்ந்து கிடைக்கிறது.

30இந்த ஆராய்ச்சியோடு சேர்ந்து ஓர் அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது. அது, புதிய உலக மொழிபெயர்ப்பின் எபிரெய வேதாகமத்திற்கான அடிப்படை ஆதாரங்களை குறிப்பிடுகிறது. முக்கிய ஆதாரமாக பயன்படுத்தப்பட்டுள்ள கிட்டலின் பிப்ளியா ஹெப்ரேய்க்கா எவ்வாறு படிப்படியாக உருவானது என்பதை இந்த அட்டவணை சுருக்கமாய் காட்டுகிறது. பயன்படுத்தப்பட்ட மற்ற ஆதாரங்கள் வெண் புள்ளிக் கோடுகளால் காட்டப்படுகின்றன. இந்த அட்டவணை, லத்தீன் வல்கேட் மற்றும் கிரேக்க செப்டுவஜின்ட் போன்ற மொழிபெயர்ப்புகளின் மூலப்படிவங்கள் ஆராயப்பட்டதை காட்டுகின்றது என்பதாக நினைக்கக்கூடாது. தேவாவியால் ஏவப்பட்ட எபிரெய எழுத்துக்களைப் போலவே இந்த மொழிபெயர்ப்புகளின் மூலப்படிவங்கள் இப்போது அழிந்துவிட்டன. வாக்கியங்களின் நம்பத்தக்கப் பதிப்புகள், அல்லது நம்பத்தக்கப் பூர்வ மொழிபெயர்ப்புகள் மற்றும் நுண்ணாய்வு குறிப்புகள் போன்றவற்றில் இருந்து இந்த ஆதார மூலங்கள் ஆராயப்பட்டன. புதிய உலக பைபிள் மொழிபெயர்ப்பு குழு இந்தப் பல்வேறு தகவல்மூலங்களை ஆராய்ந்தது; எனவே தேவாவியால் ஏவப்பட்ட மூல எபிரெய வேதாகமத்தின் அதிகாரப்பூர்வமான, நம்பத்தக்க ஒரு மொழிபெயர்ப்பை அளிக்க முடிந்தது. இந்தத் தகவல்மூலங்கள் யாவும் புதிய உலக மொழிபெயர்ப்பின் அடிக்குறிப்புகளில் குறிப்பிடப்படுகின்றன.

31இவ்வாறு, புதிய உலக மொழிபெயர்ப்பின் எபிரெய வேதாகமப் பகுதி, நெடுங்காலமாக செய்த ஆராய்ச்சியாலும் பைபிள் புலமையாலும் உருவாக்கப்பட்டது. இது, திருத்தமான வாக்கியத்தை ஆதாரமாக கொண்டுள்ளது, மூலவாக்கியத்தை உண்மையுடன் வழிவழியாக நகல் எடுத்ததால் கிடைத்த நிறைவான பலன் இது. கவனத்தைக் கவரும் சரளமான வாசிப்பு பாங்கோடும் மொழிநடையோடும் அமைந்திருக்கிறது; இது நேர்மையான மற்றும் திருத்தமான ஒரு மொழிபெயர்ப்பாக இருப்பதால் கவனமான பைபிள் படிப்புக்கு உதவியாக இருக்கிறது. கடவுளுடைய வார்த்தை இன்று ஜீவனுள்ளதாயும் வல்லமை செலுத்துவதாயும் இருப்பதற்காக, மனிதர்களோடு தொடர்புகொள்ளும் கடவுளாகிய யெகோவாவுக்கு நன்றி! (எபி. 4:12) நேர்மை இருதயமுள்ள ஆட்கள் கடவுளுடைய அருமையான வார்த்தையைப் படிப்பதன் மூலம், தொடர்ந்து விசுவாசத்தை வளர்த்துக்கொள்வார்களாக; பெரும் மாற்றங்கள் நிகழவிருக்கும் இந்நாட்களில் யெகோவாவின் சித்தத்தைச் செய்வதற்கு அவர்கள் ஆர்வத்துடன் செயல்படுவார்களாக.​—2 பே. 1:​12, 14.

[அடிக்குறிப்புகள்]

a ஜெப ஆலயங்களை எப்போது பயன்படுத்த ஆரம்பித்தனர் என்பது தெரியவில்லை. பாபிலோனில் 70 ஆண்டுகள் நாடுகடத்தப்பட்டிருந்தபோது ஆலயம் இல்லாததால் இதனை ஆரம்பித்திருக்கலாம். அல்லது, திரும்பி வந்த பிறகு எஸ்றாவின் காலத்தில் ஆரம்பித்திருக்கலாம்.

b புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளில் ஆதியாகமம் 4:8; யாத்திராகமம் 6:2; 7:9; 8:15; 12:40-ன் அடிக்குறிப்புகளில் “Sam” என்பதைக் காண்க. இந்தக் கடைசி மொழிபெயர்ப்பு கலாத்தியர் 3:17-ஐ புரிந்துகொள்ள நமக்கு உதவிசெய்கிறது.

c புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளில் எண்ணாகமம் 24:17; உபாகமம் 33:13; சங்கீதம் 100:3-ன் அடிக்குறிப்புகளில் “T” என்பதைக் காண்க.

d துணைக்குறிப்புகளுள்ள பைபிள் (NW), பிற்சேர்க்கை 1C, “பூர்வ கிரேக்க மொழிபெயர்ப்புகளில் கடவுளுடைய பெயர்.”

e வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 2, பக்கம் 9.

f புதிய உலக மொழிபெயர்ப்பு இந்த வேறுபாடுகளை பின்வரும் அடையாளக் குறியால் குறிப்பிடுகிறது: சினியாட்டிக் என்பதற்கு LXXא, அலெக்ஸாண்ட்ரின் என்பதற்கு LXXA, வாடிகன் என்பதற்கு LXXB. 1 இராஜாக்கள் 14:2-லும் 1 நாளாகமம் 7:34; 12:19-லும் உள்ள அடிக்குறிப்புகளைக் காண்க.

g யாத்திராகமம் 37:6-ன் (NW) அடிக்குறிப்பில் “Vg” என்பதைக் காண்க.

h துணைக்குறிப்புகளுள்ள பைபிள், பிற்சேற்கை 2A, “தனிப்பட்ட குறிப்புகள்.”

i துணைக்குறிப்புகளுள்ள பைபிள், பிற்சேர்க்கை 1B, “கடவுளுடைய பெயரை வேதபாரகர் மாற்றிய இடங்கள்.”

j துணைக்குறிப்புகளுள்ள பைபிள், பிற்சேர்க்கை 2B, “சோஃபெரிம்களின் திருத்தங்கள்.”

k இவற்றின் (NW) அடிக்குறிப்புகளைக் காண்க: சங்கீதம் 60:5; 71:20; 100:3; 119:79.

l வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கம் 322.

a சங்கீதங்களடங்கிய சவக்கடல் சுருள், 1967, ஜே. எ. சான்டர்ஸ், பக்கம் 15.

b ஏசாயா 7:1; 14:​4-ன் அடிக்குறிப்புகளில் “1QIsa” என்பதைக் காண்க.

c லேவியராகமம் 11:​42-ன் (NW) அடிக்குறிப்பில் “Gins.” என்பதைக் காண்க.

[கேள்விகள்]

1. (அ) ‘யெகோவாவின் வார்த்தைகள்’ மற்ற அரும்பொருட்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன? (ஆ) கடவுளுடைய வார்த்தை பாதுகாத்து வைக்கப்பட்டதைக் குறித்து என்ன கேள்விகள் எழும்புகின்றன?

2. தேவாவியால் ஏவப்பட்ட எழுத்துக்கள் எஸ்றாவின் நாள்வரையில் எவ்வாறு பாதுகாத்து வைக்கப்பட்டன?

3. வேதவாக்கியங்களை கூடுதலாக நகல் எடுப்பதற்கு என்ன தேவை ஏற்பட்டது, இது எவ்வாறு பூர்த்திசெய்யப்பட்டது?

4. (அ) கெனீஸா என்பது என்ன, அது எவ்வாறு பயன்படுத்தப்பட்டது? (ஆ) இதிலிருந்து 19-வது நூற்றாண்டில் என்ன மதிப்புவாய்ந்த பிரதிகள் கண்டுபிடிக்கப்பட்டன?

5. (அ) என்ன பூர்வ எபிரெய கையெழுத்துப் பிரதிகள் இப்போது பட்டியலிடப்பட்டிருக்கின்றன, அவை எவ்வளவு பழமையானவை? (ஆ) அவற்றின் ஆராய்ச்சி எதை வெளிப்படுத்துகிறது?

6. (அ) எபிரெய மொழியின் ஆரம்பகால சரித்திரம் என்ன? (ஆ) மோசே ஏன் ஆதியாகமத்தை எழுத தகுதிபெற்றிருந்தார்?

7. (அ) எபிரெய மொழியில் எப்படிப்பட்ட மாற்றங்கள் பின்னர் வந்தன? (ஆ) பைபிள் எபிரெயு என்னவாக சேவித்தது?

8. வேதவாக்கியங்களின் நோக்கத்தை கவனிக்கும்போது நாம் எதற்காக நன்றியோடு இருக்க வேண்டும்?

9. (அ) மொழிபெயர்ப்பதற்கு என்ன அதிகாரத்தை பைபிள் அளிக்கிறது? (ஆ) பூர்வ பைபிள் மொழிபெயர்ப்புகள் இன்னும் என்ன நல்ல நோக்கத்தைச் சேவித்திருக்கின்றன?

10. (அ) சமாரிய ஐந்தாகமம் என்பது என்ன, அது நமக்கு எவ்வாறு பயனுள்ளது? (ஆ) புதிய உலக மொழிபெயர்ப்பில் சமாரிய ஐந்தாகமத்தின் உபயோகத்திற்கு ஓர் உதாரணத்தைக் கொடுங்கள்.

11. டார்கம்கள் என்றால் என்ன, அவற்றால் எபிரெய வேதாகமத்திற்கு என்ன பயன்?

12. செப்டுவஜின்ட் என்பது என்ன, இது ஏன் அவ்வளவு முக்கியமானது?

13. தற்காலம் வரை செப்டுவஜின்ட்டின் எப்படிப்பட்ட பாகங்கள் தப்பியிருக்கின்றன, அவை எந்தளவு மதிப்பு வாய்ந்தவை?

14. (அ) செப்டுவஜின்ட்டைக் குறித்து ஆரிகென் என்ன சாட்சி பகருகிறார்? (ஆ) எப்போது, எவ்வாறு செப்டுவஜின்ட் மாற்றியமைக்கப்பட்டது? (இ) செப்டுவஜின்ட்டைப் பயன்படுத்தி பூர்வ கிறிஸ்தவர்கள் என்ன சாட்சி கொடுத்திருக்க வேண்டும்?

15. (அ) 314-வது பக்கத்திலுள்ள அட்டவணையைப் பயன்படுத்தி, செப்டுவஜின்ட்டின் மென்தோல் மற்றும் பதனிட்ட தோல் கையெழுத்துப் பிரதிகளை விவரியுங்கள். (ஆ) புதிய உலக மொழிபெயர்ப்பு எவ்வாறு இவற்றை மேற்கோள் காட்டுகிறது?

16. (அ) லத்தீன் வல்கேட் என்பது என்ன, அது ஏன் அவ்வளவு மதிப்பு வாய்ந்தது? (ஆ) புதிய உலக மொழிபெயர்ப்பில் அதை மேற்கோள் காட்டும் ஓர் உதாரணத்தை எடுத்துக்காட்டவும்.

17. வேதபாரகர் அல்லது சோஃபெரிம் யார், எதற்காக இயேசு அவர்களைக் கண்டனம் செய்தார்?

18. (அ) மசோரெட்டுகள் யார், எபிரெய வாக்கியத்தில் பயனுள்ள என்ன குறிப்புகளை இவர்கள் எழுதினர்? (ஆ) புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளில் குறிப்பிட்டிருக்கிறபடி, அவர்களுடைய திருத்தங்களுக்கு சில உதாரணங்கள் யாவை?

19. எபிரெய மெய்யெழுத்து வாக்கியம் என்பது என்ன, அது எப்போது உறுதி செய்யப்பட்டது?

20. எபிரெய வாக்கியம் சம்பந்தமாக மசோரெட்டுகள் என்ன செய்தனர்?

21. மசோரெட்டிக் வாக்கியம் என்பது என்ன?

22. பாபிலோனிய முறையை பின்பற்றும் என்ன வாக்கியத்தின் கையெழுத்துப்பிரதி கிடைத்திருக்கிறது, திபேரிய வாக்கியத்தோடு இது எவ்வாறு ஒத்திருக்கிறது?

23. சவக்கடலுக்கு அருகில் என்ன எபிரெய கையெழுத்துப் பிரதிகள் கண்டுபிடிக்கப்பட்டன?

24. இந்தக் கையெழுத்துப் பிரதிகளை மசோரெட்டிக் வாக்கியத்துடன் ஒப்பிடும்போது என்ன தெரியவந்தது, புதிய உலக மொழிபெயர்ப்பு அவற்றை எவ்வாறு உபயோகித்தது?

25. என்ன எபிரெய வாக்கியங்கள் இப்போது கலந்தாராயப்பட்டிருக்கின்றன, அவற்றின் ஆராய்ச்சி நமக்கு என்ன உறுதியளிக்கிறது?

26. (அ) எபிரெய வாக்கியத்தை நுட்பமாய் அலசி ஆராய்வது எப்போது ஆரம்பிக்கப்பட்டது, அச்சடிக்கப்பட்டிருக்கிற சில முதன்மையான மூலவாக்கியங்கள் யாவை? (ஆ) கின்ஸ்பர்க் வாக்கியம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டிருக்கிறது?

27, 28. (அ) பிப்ளியா ஹெப்ரேய்க்கா என்பது என்ன, அது எவ்வாறு உருவாக்கப்பட்டது? (ஆ) இந்த வாக்கியத்தைப் புதிய உலக மொழிபெயர்ப்பு எவ்வாறு பயன்படுத்தியிருக்கிறது?

29. கடவுளுடைய பெயரை சரியான இடங்களில் மறுபடியும் உபயோகிப்பதற்கு பிப்ளியா ஹெப்ரேய்க்காவின் எந்த அம்சம் குறிப்பாக உதவியது?

30. (அ) 308-வது பக்கத்திலுள்ள அட்டவணையைப் பயன்படுத்தி, புதிய உலக மொழிபெயர்ப்பின் முக்கிய தகவல்மூலமான பிப்ளிக்கா ஹெப்ரேய்க்கா வரையில் எபிரெய வாக்கியத்தின் சரித்திரத்தைப் படிப்படியாக கூறுங்கள். (ஆ) புதிய உலக பைபிள் மொழிபெயர்ப்பு குழு துணை ஆதாரமாக பயன்படுத்திய மற்ற தகவல்மூலங்கள் யாவை?

31. (அ) புதிய உலக மொழிபெயர்ப்பின் எபிரெய வேதாகமப் பகுதி எவ்வாறு உருவாக்கப்பட்டது? (ஆ) நாம் எதில் நம்பிக்கை வைக்க வேண்டும், எதற்காக நன்றி தெரிவிக்க வேண்டும்?

[பக்கம் 313-ன் அட்டவணை]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

முக்கிய நாணற்தாள் கையெழுத்துப் பிரதிகள் சில

எபிரெய வேதாகமத்தினுடையவை

கையெழுத்துப்பிரதியின் பெயர் நாஷ் நாணற்தாள்

தேதி பொ.ச.மு. 2-ம் அல்லது 1-ம் நூற்.

மொழி எபிரெயு

இருக்குமிடம் கேம்பிரிட்ஜ், இங்கிலாந்து

ஏறத்தாழ அடங்கியுள்ளவை பத்துக் கற்பனைகளின் 24 வரிகளும்

உபாகமம் அதி. 5, 6-ன் சில வசனங்களும்

கையெழுத்துப்பிரதியின் பெயர் ரைலண்ட்ஸ் 458

குறியீடு 957

தேதி பொ.ச.மு. 2-ம் நூற்.

மொழி கிரேக்கு

இருக்குமிடம் மான்செஸ்டர், இங்கிலாந்து

ஏறத்தாழ அடங்கியுள்ளவை உபாகமம் அதி. 23-28-ன் பாகங்கள்

கையெழுத்துப்பிரதியின் பெயர் ஃபொயட் 266

தேதி பொ.ச.மு. 1-ம் நூற்.

மொழி கிரேக்கு

இருக்குமிடம் கெய்ரோ, எகிப்து

ஏறத்தாழ அடங்கியுள்ளவை ஆதியாகமத்தின் மற்றும் உபாகமத்தின் பாகங்கள்

புதிய உலக மொழிபெயர்ப்பு—துணைக்குறிப்புகளுடன் பைபிளில் பயன்படுத்தும் உதாரணங்கள் (வசன

இடக்குறிப்புகளை அடிக்குறிப்புகளில் பாருங்கள்)

உபா. 18:5; அப். 3:22; பிற்சேர்க்கை 1சி

கையெழுத்துப்பிரதியின் பெயர் சவக்கடல் லேவியராகமம் சுருள்

குறியீடு Q LXX Levb

தேதி பொ.ச.மு. 1-ம் நூற்.

மொழி கிரேக்கு

இருக்குமிடம் ஜெரூசலம், இஸ்ரேல்

ஏறத்தாழ அடங்கியுள்ளவை லேவியராகமத்தின் துண்டுப்பகுதிகள்

புதிய உலக மொழிபெயர்ப்பு—துணைக்குறிப்புகளுடன் பைபிளில் பயன்படுத்தும் உதாரணங்கள் (வசன

இடக்குறிப்புகளை அடிக்குறிப்புகளில் பாருங்கள்)

லேவி. 3:12; 4:27

கையெழுத்துப்பிரதியின் பெயர் செஸ்டர் பியட்டி 6

குறியீடு 963

தேதி பொ.ச. 2-ம் நூற்.

மொழி கிரேக்கு

இருக்குமிடம் டப்ளின், அயர்லாந்து, மற்றும் ஆன் ஆர்பர்,

மிச்சிகன், அ.ஐ.மா.

ஏறத்தாழ அடங்கியுள்ளவை எண்ணாகமத்தின் மற்றும் உபாகமத்தின் பாகங்கள்

கையெழுத்துப்பிரதியின் பெயர் செஸ்டர் பியட்டி 9, 10

குறியீடு 967/ 968

தேதி பொ.ச. 3-ம் நூற்.

மொழி கிரேக்கு

இருக்குமிடம் டப்ளின், அயர்லாந்து, மற்றும் பிரின்ஸ்டன்,

நியூ ஜெர்ஸி, அ.ஐ.மா.

ஏறத்தாழ அடங்கியுள்ளவை எசேக்கியேலின், தானியேலின், எஸ்தரின் பாகங்கள்

கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தினுடையவை

கையெழுத்துப்பிரதியின் பெயர் ஆக்ஸிரின்க்கஸ் 2

குறியீடு P1

தேதி பொ.ச. 3-ம் நூற்.

மொழி கிரேக்கு

இருக்குமிடம் ஃபிலடெல்ஃபியா, பென்ஸில்வேனியா, அ.ஐ.மா.

ஏறத்தாழ அடங்கியுள்ளவை மத். 1:​1-9, 12, 14-20

கையெழுத்துப்பிரதியின் பெயர் ஆக்ஸிரின்க்கஸ் 1228

குறியீடு P22

தேதி பொ.ச. 3-ம் நூற்.

மொழி கிரேக்கு

இருக்குமிடம் கிளாஸ்கோ, ஸ்காட்லாந்து

ஏறத்தாழ அடங்கியுள்ளவை யோவான் அதி. 15, 16-ன் துண்டுப்பகுதிகள்

கையெழுத்துப்பிரதியின் பெயர் மிச்சிகன் 1570

குறியீடு P37

தேதி பொ.ச. 3-ம்/ 4-ம் நூற்.

மொழி கிரேக்கு

இருக்குமிடம் ஆன் ஆர்பர், மிச்சிகன், அ.ஐ.மா.

ஏறத்தாழ அடங்கியுள்ளவை மத். 26:​19-52

கையெழுத்துப்பிரதியின் பெயர் செஸ்டர் பியட்டி 1

குறியீடு P45

தேதி பொ.ச. 3-ம் நூற்.

மொழி கிரேக்கு

இருக்குமிடம் டப்ளின், அயர்லாந்து; வியன்னா, ஆஸ்திரியா

ஏறத்தாழ அடங்கியுள்ளவை மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான்,

அப்போஸ்தலர் ஆகியவற்றின் பாகங்கள்

புதிய உலக மொழிபெயர்ப்பு—துணைக்குறிப்புகளுடன் பைபிளில் பயன்படுத்தும் உதாரணங்கள் (வசன

இடக்குறிப்புகளை அடிக்குறிப்புகளில் பாருங்கள்)

லூக். 10:42; யோவா. 10:18

கையெழுத்துப்பிரதியின் பெயர் செஸ்டர் பியட்டி 2

குறியீடு P46

தேதி ஏ. பொ.ச. 200

மொழி கிரேக்கு

இருக்குமிடம் டப்ளின், அயர்லாந்து; ஆன் ஆர்பர், மிச்சிகன், அ.ஐ.மா.

ஏறத்தாழ அடங்கியுள்ளவை பவுலின் நிருபங்களில் ஒன்பது

புதிய உலக மொழிபெயர்ப்பு—துணைக்குறிப்புகளுடன் பைபிளில் பயன்படுத்தும் உதாரணங்கள் (வசன

இடக்குறிப்புகளை அடிக்குறிப்புகளில் பாருங்கள்)

ரோ. 8:​23, 28; 1 கொ. 2:16

கையெழுத்துப்பிரதியின் பெயர் செஸ்டர் பியட்டி 3

குறியீடு P47

தேதி பொ.ச. 3-ம் நூற்.

மொழி கிரேக்கு

இருக்குமிடம் டப்ளின், அயர்லாந்து

ஏறத்தாழ அடங்கியுள்ளவை வெளி. 9:​10–17:2 வெளி. 13:18; 15:3

கையெழுத்துப்பிரதியின் பெயர் ரைலண்ட்ஸ் 457

குறியீடு P52

தேதி ஏ. பொ.ச. 125

மொழி கிரேக்கு

இருக்குமிடம் மான்செஸ்டர், இங்கிலாந்து

ஏறத்தாழ அடங்கியுள்ளவை யோவா. 18:​31-33, 37, 38

கையெழுத்துப்பிரதியின் பெயர் போட்மர் 2

குறியீடு P66

தேதி ஏ. பொ.ச. 200

மொழி கிரேக்கு

இருக்குமிடம் ஜெனீவா, ஸ்விட்ஸர்லாந்து

ஏறத்தாழ அடங்கியுள்ளவை யோவானின் பெரும்பாகம்

புதிய உலக மொழிபெயர்ப்பு—துணைக்குறிப்புகளுடன் பைபிளில் பயன்படுத்தும் உதாரணங்கள் (வசன

இடக்குறிப்புகளை அடிக்குறிப்புகளில் பாருங்கள்)

யோவா. 1:18; 19:39

கையெழுத்துப்பிரதியின் பெயர் போட்மர் 7, 8

குறியீடு P72

தேதி பொ.ச. 3-ம்/4-ம் நூற்.

மொழி கிரேக்கு

இருக்குமிடம் ஜெனீவா, ஸ்விட்ஸர்லாந்தும் ரோம்,

இத்தாலியில், வத்திகன் நூலகமும்

ஏறத்தாழ அடங்கியுள்ளவை யூதா, 1 பேதுருவும், 2 பேதுருவும்

கையெழுத்துப்பிரதியின் பெயர் போட்மர் 14, 15

குறியீடு P75

தேதி பொ.ச. 3-ம் நூற்.

மொழி கிரேக்கு

இருக்குமிடம் ஜெனீவா, ஸ்விட்ஸர்லாந்து

ஏறத்தாழ அடங்கியுள்ளவை லூக்காவின் மற்றும் யோவானின் பெரும்பாகம்

புதிய உலக மொழிபெயர்ப்பு—துணைக்குறிப்புகளுடன் பைபிளில் பயன்படுத்தும் உதாரணங்கள் (வசன

இடக்குறிப்புகளை அடிக்குறிப்புகளில் பாருங்கள்)

லூக். 8:26; யோவா. 1:18

[பக்கம் 314-ன் அட்டவணை]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

முக்கிய மென்தோல் மற்றும் பதனிட்ட தோல் கையெழுத்துப் பிரதிகள் சில

எபிரெய வேதாகமத்தினுடையவை (எபிரெயுவில்)

கையெழுத்துப் பிரதியின் பெயர் அலெப்போ தொகுப்புநூல்

குறியீடு Al

தேதி பொ.ச. 930

மொழி எபிரெயு

காணப்பட்ட இடம் முன்பு சிரியாவிலுள்ள அலெப்போவில், இப்போது இஸ்ரேலில்

ஏறத்தாழ அடங்கியிருப்பவை எபிரெய வேதாகமத்தின் பெரும்பாகம்

(பென்அஷெர் மூலவாக்கியம்)

புதிய உலக மொழிபெயர்ப்பு—துணைக்குறிப்புகளுடன் பயன்படுத்தும் உதாரணங்கள் (வசன

இடக்குறிப்புகளை அடிக்குறிப்புகளில் காண்க)

யோசு. 21:37

கையெழுத்துப் பிரதியின் பெயர் பிரிட்டிஷ் அருங்காட்சியகம் தொகுப்புநூல் Or4445

தேதி பொ.ச. 10-ம் நூற்.

மொழி எபிரெயு

காணப்பட்ட இடம் லண்டன், இங்கிலாந்து

ஏறத்தாழ அடங்கியிருப்பவை ஐந்தாகமத்தின் பெரும்பாகம்

கையெழுத்துப் பிரதியின் பெயர் கெய்ரோ கரேய்ட் தொகுப்புநூல்

குறியீடு Ca

தேதி பொ.ச. 895

மொழி எபிரெயு

காணப்பட்ட இடம் கெய்ரோ, எகிப்து

ஏறத்தாழ அடங்கியிருப்பவை முற்பட்ட மற்றும் பிற்பட்ட தீர்க்கதரிசிகள்

புதிய உலக மொழிபெயர்ப்பு—துணைக்குறிப்புகளுடன் பயன்படுத்தும் உதாரணங்கள் (வசன

இடக்குறிப்புகளை அடிக்குறிப்புகளில் காண்க)

யோசு. 21:37; 2 சா. 8:3

கையெழுத்துப் பிரதியின் பெயர் லெனின்கிராட் தொகுப்புநூல்

குறியீடு B19A

தேதி பொ.ச. 1008

மொழி எபிரெயு

காணப்பட்ட இடம் லெனின்கிராட்,

ரஷ்யா

ஏறத்தாழ அடங்கியிருப்பவை எபிரெய வேதாகமம்

புதிய உலக மொழிபெயர்ப்பு—துணைக்குறிப்புகளுடன் பயன்படுத்தும் உதாரணங்கள் (வசன

இடக்குறிப்புகளை அடிக்குறிப்புகளில் காண்க)

யோசு. 21:37; 2 சா. 8:3;

பிற்சேர்க்கை 1A

கையெழுத்துப் பிரதியின் பெயர் தீர்க்கதரிசிகளைக் கொண்ட பீட்டர்ஸ்பர்க் தொகுப்புநூல்

குறியீடு B 3

தேதி பொ.ச. 916

மொழி எபிரெயு

காணப்பட்ட இடம் லெனின்கிராட், ரஷ்யா

ஏறத்தாழ அடங்கியிருப்பவை பிற்பட்ட தீர்க்கதரிசிகள்

புதிய உலக மொழிபெயர்ப்பு—துணைக்குறிப்புகளுடன் பயன்படுத்தும் உதாரணங்கள் (வசன

இடக்குறிப்புகளை அடிக்குறிப்புகளில் காண்க)

பிற்சேர்க்கை 2B

கையெழுத்துப் பிரதியின் பெயர் சவக்கடல் முதல் ஏசாயா சுருள்

குறியீடு 1QIsa

தேதி பொ.ச.மு. 2-ம் நூற். முடிவு

மொழி எபிரெயு

காணப்பட்ட இடம் ஜெரூசலம், இஸ்ரேல்

ஏறத்தாழ அடங்கியிருப்பவை ஏசாயா

புதிய உலக மொழிபெயர்ப்பு—துணைக்குறிப்புகளுடன் பயன்படுத்தும் உதாரணங்கள் (வசன

இடக்குறிப்புகளை அடிக்குறிப்புகளில் காண்க)

ஏசா. 11:1; 18:2; 41:29

கையெழுத்துப் பிரதியின் பெயர் சவக்கடல் சங்கீதங்களின் சுருள்

குறியீடு 11QPsa

தேதி பொ.ச. 1-ம் நூற்.

மொழி எபிரெயு

காணப்பட்ட இடம் ஜெரூசலம், இஸ்ரேல்

ஏறத்தாழ அடங்கியிருப்பவை சங்கீதங்களின் மூன்றாவது பகுதியின்

கடைசி 41 பாகங்கள்

செப்டுவஜின்ட் மற்றும் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தினுடையவை

கையெழுத்துப் பிரதியின் பெயர் சினியாட்டிக்கஸ்

குறியீடு 01( א)

தேதி பொ.ச. 4-ம் நூற்.

மொழி கிரேக்கு

காணப்பட்ட இடம் லண்டன், இங்கிலாந்து

ஏறத்தாழ அடங்கியிருப்பவை எபிரெய வேதாகமத்தின் பாகமும் கிரேக்க

வேதாகமம் முழுமையும் அவற்றோடு

தள்ளுபடியாகமங்கள் சிலவும்

புதிய உலக மொழிபெயர்ப்பு—துணைக்குறிப்புகளுடன் பயன்படுத்தும் உதாரணங்கள் (வசன

இடக்குறிப்புகளை அடிக்குறிப்புகளில் காண்க)

1 நா. 12:19; யோவா. 5:2;

2 கொ. 12:4

கையெழுத்துப் பிரதியின் பெயர் அலெக்ஸாண்ட்ரினஸ்

குறியீடு A (02)

தேதி பொ.ச. 5-ம் நூற்.

மொழி கிரேக்கு

காணப்பட்ட இடம் லண்டன், இங்கிலாந்து

ஏறத்தாழ அடங்கியிருப்பவை எபிரெய, கிரேக்க வேதாகமம் முழுமையும்

(சிறிய பாகங்கள் சில கிடைக்கவில்லை

அல்லது அழிந்துபோயின) தள்ளுபடியாகமங்கள்

சிலவும்

புதிய உலக மொழிபெயர்ப்பு—துணைக்குறிப்புகளுடன் பயன்படுத்தும் உதாரணங்கள் (வசன

இடக்குறிப்புகளை அடிக்குறிப்புகளில் காண்க)

1 இரா. 14:2; லூக். 5:39;

அப். 13:20; எபி. 3:6

கையெழுத்துப் பிரதியின் பெயர் வத்திகன் 1209

குறியீடு B (03)

தேதி பொ.ச. 4-ம் நூற்.

மொழி கிரேக்கு

காணப்பட்ட இடம் இத்தாலி, ரோமில், வத்திகன் நூல் நிலையம்

ஏறத்தாழ அடங்கியிருப்பவை தொடக்கத்தில் முழு பைபிள். இப்போது

காணப்படாதவை: ஆதி. 1:​1–46:28;

சங். 106-137; எபிரெயர் 9:​14-க்குப்

பிற்பட்டவை; 2 தீமோத்தேயு; தீத்து;

பிலேமோன்; வெளிப்படுத்துதல்

புதிய உலக மொழிபெயர்ப்பு—துணைக்குறிப்புகளுடன் பயன்படுத்தும் உதாரணங்கள் (வசன

இடக்குறிப்புகளை அடிக்குறிப்புகளில் காண்க)

மாற். 6:14; யோவா. 1:18;

யோவா7:​53–8:11

கையெழுத்துப் பிரதியின் பெயர் இஃப்ரேமி சிரி ரெஸ்கிரிப்டஸ்

குறியீடு C (04)

தேதி பொ.ச. 5-ம் நூற்.

மொழி கிரேக்கு

காணப்பட்ட இடம் பாரிஸ், பிரான்ஸ்

ஏறத்தாழ அடங்கியிருப்பவை எபிரெய வேதாகமத்தின் பாகங்களும்

(64 தாள்கள்) கிரேக்க வேதாகமத்தின்

பாகங்களும் (145 தாள்கள்)

புதிய உலக மொழிபெயர்ப்பு—துணைக்குறிப்புகளுடன் பயன்படுத்தும் உதாரணங்கள் (வசன

இடக்குறிப்புகளை அடிக்குறிப்புகளில் காண்க)

அப். 9:12; ரோ. 8:​23, 28, 34

கையெழுத்துப் பிரதியின் பெயர் தொகுப்புநூல் பெஸே கான்ட்டாப்ரிகீன்ஸிஸ்

குறியீடு Dea (05)

தேதி பொ.ச. 5-ம் நூற்.

மொழி கிரேக்கு-லத்தீன்

காணப்பட்ட இடம் கேம்ப்ரிட்ஜ், இங்கிலாந்து

ஏறத்தாழ அடங்கியிருப்பவை நான்கு சுவிசேஷங்களில் பெரும்பான்மையும்

அப். நடபடிகளும், 3 யோவானில்

சில வசனங்களும்

புதிய உலக மொழிபெயர்ப்பு—துணைக்குறிப்புகளுடன் பயன்படுத்தும் உதாரணங்கள் (வசன

இடக்குறிப்புகளை அடிக்குறிப்புகளில் காண்க)

மத். 24:36; மாற். 7:16;

லூக். 15:21 (“D” என்று மாத்திரமே

அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது)

கையெழுத்துப் பிரதியின் பெயர் தொகுப்புநூல் க்ளேரோமோன்டனஸ்

குறியீடு DP (06)

தேதி பொ.ச. 6-ம் நூற்.

மொழி கிரேக்கு-லத்தீன்

காணப்பட்ட இடம் பாரிஸ், பிரான்ஸ்

ஏறத்தாழ அடங்கியிருப்பவை பவுலின் நிருபங்கள் (எபிரெயர் உட்பட)

புதிய உலக மொழிபெயர்ப்பு—துணைக்குறிப்புகளுடன் பயன்படுத்தும் உதாரணங்கள் (வசன

இடக்குறிப்புகளை அடிக்குறிப்புகளில் காண்க)

கலா. 5:12 (“D” என்று மாத்திரமே

அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது)

[பக்கம் 308-ன் படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

புதிய உலக மொழிபெயர்ப்பின் மூலவாக்கியத்திற்கான மூல ஆதாரங்கள்

எபிரெய வேதாகமம்

மூலமுதல் எபிரெய எழுத்துக்களும் பூர்வ பிரதிகளும்

அரமேயிக் டார்கம்கள்

சவக் கடல் சுருள்கள்

சமாரிய ஐந்தாகமங்கள்

கிரேக்க செப்டுவஜின்ட்

பழைய லத்தீன்

கோப்டிக், எத்தியோப்பிக், அர்மீனியன்

எபிரெய மெய்யெழுத்து மூலவாக்கியம்

லத்தீன் வல்கேட்

கிரேக்க மொழிபெயர்ப்புகள்​—ஆக்கில்லா, தியோடோஷன், சிம்மேக்கஸ்

சிரியாக் பெஷீட்டா

மசோரெட்டிக் மூலவாக்கியம்

கெய்ரோ தொகுப்புநூல்

தீர்க்கதரிசிகள் அடங்கிய பீட்டர்ஸ்பர்க் தொகுப்புநூல்

அலெப்போ தொகுப்புநூல்

கின்ஸ்பர்க்கின் எபிரெயு மூலவாக்கியம்

லெனின்கிராட் B 19A தொகுப்புநூல்

பிப்ளியா ஹெப்ரேய்க்கா (BHK), பிப்ளியா ஹெப்ரேய்க்கா

ஸ்டட்கார்ட்டென்சியா (BHS)

புதிய உலக மொழிபெயர்ப்பு

எபிரெய வேதாகமம்​—ஆங்கிலம்; ஆங்கிலத்திலிருந்து மற்றப் பல நவீன மொழிகளில்

[பக்கம் 309-ன் படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

புதிய உலக மொழிபெயர்ப்பின் மூலவாக்கியத்திற்கான மூல ஆதாரங்கள் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம்

மூலமுதல் கிரேக்க எழுத்துக்களும் பூர்வ பிரதிகளும்

அர்மீனியன் மொழிபெயர்ப்பு

கோப்டிக் மொழிபெயர்ப்புகள்

சிரியாக் மொழிபெயர்ப்புகள்​—க்யூரெட்டோனியன், ஃபிலோக்ஸெனியன், ஹர்க்ளீன், பலஸ்தீனியன்,

சினியாட்டிக், பெஷீட்டா

பழங்கால லத்தீன்

லத்தீன் வல்கேட்

சிக்ஸ்டீன் மற்றும் கிளெமென்டீன் திருத்திய லத்தீன் மூலவாக்கியங்கள்

கிரேக்கத் தொடரெழுத்து கை.பி.

எராஸ்மஸ் மூலவாக்கியம்

ஸ்டீஃபனஸ் மூலவாக்கியம்

டெக்ஸ்டஸ் ரிசெப்டஸ்

கிரீஸ்பாச் கிரேக்க மூலவாக்கியம்

எம்ஃபாட்டிக் டயக்ளாட்

நாணற்தாள் கை.பி.​—(உதா., செஸ்டெர் பீயட்டி P45, P46, P47, போட்மெர் P66,

P74, P75)

பூர்வ கிரேக்க அன்சியல் கை.பி.​—வாட்டிகன் 1209 (B), சினியாட்டிக் (א),

அலெக்ஸாந்த்ரின் (A), இஃப்ரேமி சிரி, ரெஸ்க்ரிப்டஸ் (C), பெஸே (D)

உவெஸ்ட்காட்டும் ஹார்ட்டும் கிரேக்க மூலவாக்கியம்

போவர் கிரேக்க மூலவாக்கியம்

மெர்க் கிரேக்க மூலவாக்கியம்

நெசில்-1 ஆலந்த் கிரேக்க மூலவாக்கியம்

ஐக்கிய பைபிள் சங்கங்கள் கிரேக்க மூலவாக்கியம்

23 எபிரெயு மொழிபெயர்ப்புகள் (14-வது-20-வது நூற்றாண்டுகள்), கிரேக்கிலிருந்து

அல்லது லத்தீன் வல்கேட்டிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது, கடவுளுடைய பெயருக்கு

எபிரெய நான்கெழுத்தைப் பயன்படுத்துகிறது

புதிய உலக மொழிபெயர்ப்பு

கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம்​—ஆங்கிலம்; ஆங்கிலத்திலிருந்து நவீன மொழிகள் மற்றப் பலவற்றில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது