Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆராய்ச்சி எண் 6—கிரேக்க வேதாகம புத்தகங்கள்

ஆராய்ச்சி எண் 6—கிரேக்க வேதாகம புத்தகங்கள்

ஆராய்ச்சி எண் 6—கிரேக்க வேதாகம புத்தகங்கள்

கிரேக்க வேதாகமத்தின் வாக்கியத்தை நகல் எடுப்பது; கிரேக்கிலும் மற்ற மொழிகளிலும் இந்நாள் வரையில் அது மொழிபெயர்க்கப்படுவது; தற்கால வாக்கியத்தின் நம்பகத்தன்மை.

பூர்வ கிறிஸ்தவர்கள், எழுதப்பட்ட ‘யெகோவாவின் வார்த்தையை’ உலகமெங்கும் கற்பிப்பவர்களாகவும் பிரஸ்தாபிப்பவர்களாகவும் இருந்தனர். இயேசு பரலோகத்துக்கு எழும்பிச் செல்வதற்குமுன் சொன்ன வார்த்தைகளை அவர்கள் பொறுப்புடன் ஏற்றுக்கொண்டனர்: “பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.” (ஏசா. 40:8; அப். 1:8) இயேசு முன்னறிவித்தபடி, முதல் 120 சீஷர்கள் பரிசுத்த ஆவியையும், அதன் காரணமாக மிகுந்த பலத்தையும் பெற்றார்கள். அது பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தே நாளில் நடந்தது. அதே நாளில், பேதுரு முழுமையான சாட்சி பகருவதன்மூலம் புதிய கற்பிக்கும் திட்டத்தைத் தொடங்கிவைத்தார். இதனால் அந்தச் செய்தியைப் பலர் முழு மனதோடு ஏற்றனர், ஏறக்குறைய 3,000 பேர், புதிதாகத் தொடங்கப்பட்ட கிறிஸ்தவ சபையில் சேர்க்கப்பட்டனர்.​—அப். 2:​14-42.

2சரித்திரம் முழுவதிலும் வேறு எந்தத் தொகுதியும் செய்யாத ஒரு போதிக்கும் வேலையை, இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் வைராக்கியத்துடன் தொடங்கினர்; இதன் விளைவாக அப்போது அறியப்பட்ட உலகம் முழுவதும் இந்தச் செய்தி முழுமையாகப் பரவிற்று. (கொலோ. 1:23) இந்த யெகோவாவின் சாட்சிகள், வீடுவீடாகவும், பட்டணங்கள்தோறும், நாடுநாடாகவும் நடந்துசென்று ‘நற்காரியங்களை சுவிசேஷமாய்’ அறிவிப்பதற்கு தங்கள் பாதங்களை அர்ப்பணிக்க ஆவலாக இருந்தனர். (ரோ. 10:15) கிறிஸ்துவின் மீட்கும் ஏற்பாட்டையும், உயிர்த்தெழுதலின் நம்பிக்கையையும், கடவுளுடைய வாக்குப்பண்ணப்பட்ட ராஜ்யத்தையும் இந்த நற்செய்தி அறிவித்தது. (1 கொ. 15:​1-3, 20-22, 50; யாக். 2:5) காணாத விஷயங்களைப் பற்றிய அத்தகைய ஒரு சாட்சி முன்னொருபோதும் மனிதவர்க்கத்துக்குக் கொடுக்கப்படவில்லை. பலருக்கு அது, ‘காணாத உண்மைகளைப் பற்றிய மெய்ப்பிப்பாக,’ விசுவாசத்தின் வெளிக்காட்டாக இருந்தது. அவர்கள் இப்போது இயேசுவின் பலியின் அடிப்படையில் யெகோவாவைத் தங்கள் ஈடற்ற உன்னத கர்த்தராக ஏற்றனர்.​—எபி. 11:​1, NW; அப். 4:24; 1 தீ. 1:​14-17.

3ஆண்களும் பெண்களும் அடங்கிய இந்தக் கிறிஸ்தவ ஊழியர்கள் கடவுளுடைய அறிவொளி அளிக்கப்பட்டவர்கள். அவர்கள் எழுத படிக்கத் தெரிந்தவர்கள். பரிசுத்த வேதவாக்கியங்களில் கற்பிக்கப்பட்டவர்கள். உலக சம்பவங்களைப் பற்றி அறிந்தவர்கள். பயணம் செய்வதில் அனுபவம் பெற்றவர்கள். வெட்டுக்கிளிகளைப் போன்றவர்கள், அதாவது நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக எந்தத் தடைகளையும் பொருட்படுத்தாமல் முன்னேறுபவர்கள். (அப். 2:​7-11, 41; யோவே. 2:​7-11, 25) பொது சகாப்தத்தின் முதல் நூற்றாண்டில் வாழ்ந்த ஜனங்கள் நவீன காலத்திலுள்ள ஆட்களைப் போலத்தான் பெரும்பாலும் நடந்துகொண்டனர்; இப்படிப்பட்டவர்கள் மத்தியில்தான் கிறிஸ்தவர்கள் ஊழியம் செய்தனர்.

4“ஜீவவசனத்தைப்” பிரசங்கிப்பதில் தொடர்ந்து முன்னேறுபவர்களாக இருந்ததால் தங்களுக்குக் கிடைத்த பைபிள் சுருள்கள் எல்லாவற்றையும் பூர்வ கிறிஸ்தவர்கள் நன்றாய்ப் பயன்படுத்தினர். (பிலி. 2:​14, 15; 2 தீ. 4:13) ‘இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை’ எழுத்தில் பதிவுசெய்வதற்கு மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகியோர் யெகோவாவால் ஏவப்பட்டனர். (மாற். 1:1; மத். 1:1) பேதுரு, பவுல், யோவான், யாக்கோபு மற்றும் யூதா போன்றவர்கள் தேவாவியால் ஏவப்பட்டு நிருபங்களை எழுதினார்கள். (2 பே. 3:​15, 16) மற்றவர்கள் ஏவப்பட்ட இந்தத் தகவல்களை நகல்கள் எடுத்தனர், இவை அதிகரித்து வரும் சபைகளுக்கு நன்மையளிப்பதற்காக ஒரு சபையிலிருந்து மற்ற சபைக்கு பரிமாற்றம் செய்யப்பட்டன. (கொலோ. 4:16) மேலும், ‘எருசலேமிலிருந்த அப்போஸ்தலர்களும் மூப்பர்களும்’ கடவுளுடைய ஆவியின் வழிநடத்துதலில் கோட்பாடு சம்பந்தப்பட்ட தீர்மானங்களைச் செய்தனர், இவை பின்னால் பயன்படுத்தப்படுவதற்கு எழுதிப் பதிவுசெய்யப்பட்டன. இந்த மத்திய ஆளும் குழு, வெகு தொலைவிலிருந்த சபைகளுக்குப் போதனைகளும் கட்டளைகளும் அடங்கிய கடிதங்களை அனுப்பியது. (அப். 5:​29-32; 15:​2, 6, 22-29; 16:4) இதைச் செய்வதற்காக அவர்கள் சுய கடிதப்போக்குவரத்து சேவையை ஏற்படுத்த வேண்டியிருந்தது.

5வேதவாக்கியங்களை விரைவாக பரப்புவதற்கும் பயன்படுத்துவதற்கு வசதியான முறையில் அளிப்பதற்கும், பூர்வ கிறிஸ்தவர்கள் சுருள்களுக்கு பதிலாக கையெழுத்துப் பிரதிகளை தொகுப்புநூலாக இணைத்து பயன்படுத்தத் தொடங்கினர். இது தற்கால புத்தகத்தைப் போன்றது. ஒரு குறிப்பைப் பார்க்க வேண்டும் என்றால் சுருளை முழுவதுமாக பிரிக்க வேண்டும்; அதற்கு பதில் தொகுப்புநூலில் பக்கங்களை சுலபமாக திருப்பலாம். சுருள்கள் பொதுவாக தனித்தனியே வைக்கப்பட்டன, இந்தத் தொகுப்புநூலில் அங்கீகரிக்கப்பட்ட புத்தகங்களை ஒரு கட்டாக சேர்த்து தைக்க முடிந்தது. இந்தத் தொகுப்புநூலைப் பயன்படுத்துவதில் பூர்வக் கிறிஸ்தவர்கள்தான் முன்னோடிகள். அவர்களே அதை கண்டுபிடித்திருக்கலாம். கிறிஸ்தவரல்லாத மற்ற எழுத்தாளர்கள் இதைப்போன்ற தொகுப்புநூல்களை தாமதமாகவே பயன்படுத்த ஆரம்பித்தனர்; ஆனால் இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டின் கிறிஸ்தவ நாணற்தாள் கையெழுத்துப்பிரதிகளில் பெரும்பான்மையானவை தொகுப்புநூல்களாகவே இருக்கின்றன. a

6கோய்னி (பொதுப்படையான கிரேக்கு) பேசப்பட்ட சமயம். பொ.ச.மு. ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து பொ.ச.மு. நான்காம் நூற்றாண்டு வரை இருந்த காலப்பகுதியை கிரேக்க மொழியின் இலக்கிய காலம் என்று அழைத்தனர். இந்த காலத்தில்தான் கிரேக்க மொழியின் அட்டிக் மற்றும் அயோனிக் பேச்சுவழக்கு பிரபலமாக இருந்தது. இந்த காலத்தில்தான் அதிலும் முக்கியமாய் பொ.ச.மு. ஐந்தாம், நான்காம் நூற்றாண்டுகளில், கிரேக்க நாடக ஆசிரியர்கள், கவிஞர்கள், சொற்பொழிவாளர்கள், சரித்திராசிரியர்கள், தத்துவஞானிகள் மற்றும் விஞ்ஞானிகள் பலர் செழித்தோங்கினர். இவர்களில், ஹோமர், ஹெரோடோட்டஸ், சாக்ரட்டீஸ், பிளேட்டோ போன்றவர்கள் புகழ் பெற்றனர். ஏறக்குறைய பொ.ச.மு. நான்காம் நூற்றாண்டிலிருந்து பொ.ச. ஆறாம் நூற்றாண்டு வரையான காலம் கோய்னி அல்லது பொதுப்படையான கிரேக்க மொழியின் சகாப்தம். மகா அலெக்ஸாந்தரின் இராணுவ நடவடிக்கைகளே இதன் வளர்ச்சிக்கு முக்கிய காரணம். கிரீஸின் எல்லா பாகங்களிலிருந்தும் வந்த போர்வீரர்கள் இவருடைய சேனையில் இருந்தனர். அவர்கள் கிரேக்க மொழியின் வெவ்வேறு பேச்சுவழக்குகளில் பேசினர். இவை ஒன்றாகக் கலந்தபோது கோய்னி என்ற பொதுப் பேச்சுவழக்கு தோன்றி படிப்படியாக வளர்ந்து பொதுவாக எல்லோராலும் பேசப்பட்டது. அலெக்ஸாந்தர், எகிப்தையும் இந்தியா வரையில் வந்து ஆசியாவையும் கைப்பற்றினார்; இதனால் கோய்னி பல தேசங்களில் பரவி சர்வதேச மொழியாகி, பல நூற்றாண்டுகள் அவ்வாறு நிலைத்திருந்தது. பொ.ச.மு. மூன்றாம் இரண்டாம் நூற்றாண்டுகளில் எகிப்தின் அலெக்ஸாந்திரியாவில் பேச்சுவழக்கிலிருந்த கோய்னியின் கிரேக்கச் சொல்தொகுதி செப்டுவஜின்ட்டில் பயன்படுத்தப்பட்டது.

7இயேசுவும் அவருடைய அப்போஸ்தலரும் இருந்த நாட்களில் கோய்னி, ரோம ஆட்சிப் பகுதியின் சர்வதேச மொழியானது. இந்த உண்மைக்கு பைபிளே சாட்சியளிக்கிறது. இயேசு கழுமரத்தில் அறையப்பட்டபோது, அவருடைய தலைக்குமேலாக வைக்கப்பட்ட பலகையில், யூதரின் மொழியாகிய எபிரெயுவில் மட்டுமல்ல, தேசிய மொழியான லத்தீனிலும், ரோம், அலெக்சந்திரியா, அல்லது ஏதென்ஸில் பேசப்பட்டதுபோல் எருசலேமின் வீதிகளிலும் பேசப்பட்ட கிரேக்கிலும் எழுத வேண்டியிருந்தது. (யோவா. 19:​19, 20; அப். 6:1) எருசலேமில் கிரேக்க மொழியைப் பேசிய யூதருக்கு பவுல் நற்செய்தியைப் பிரசங்கித்தார் என்று அப்போஸ்தலர் 9:29 (NW) காட்டுகிறது. அந்தச் சமயத்திற்குள் கோய்னி ஆற்றல்வாய்ந்த, நடப்பில் இருந்த, நன்றாய் முன்னேறிய மொழியாயிருந்தது. யெகோவாவின் உன்னத நோக்கத்தை தெரிவிப்பதற்கு ஏற்றதாகவும் உடனடியாகப் பயன்படுத்த ஆயத்தமானதாகவும் இருந்ததால் இம்மொழி கூடுதலான தெய்வீக வெளிப்படுத்துதல்களை அறிவிக்க பயன்படுத்தப்பட்டது.

கிரேக்க வாக்கியமும் அது கைமாறியதும்

8யெகோவா தம்முடைய சத்திய தண்ணீரை எழுதப்பட்ட படிவங்களின் நீர்த்தேக்கத்தில் அதாவது ஏவப்பட்ட எபிரெய வேதாகமத்தில், பாதுகாத்து வைத்தார் என்று நாம் முந்திய ஆராய்ச்சியில் அறிந்தோம். அப்படியென்றால் அப்போஸ்தலராலும் இயேசு கிறிஸ்துவின் மற்ற சீஷர்களாலும் எழுதப்பட்ட வேதவாக்கியங்களைப் பற்றியதென்ன? அவற்றைப்போல் இந்த வேதவாக்கியங்களும் நமக்காகப் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றனவா? கிரேக்கிலும் மற்ற மொழிகளிலும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள கையெழுத்துப்பிரதிகளின் பெருங்களஞ்சியத்தை ஆராய்ந்து பார்க்கையில் அவை அவ்வாறுதான் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றன என்பது தெளிவாகிறது. ஏற்கெனவே விளக்கியபடி, பைபிளின் அங்கீகரிக்கப்பட்ட புத்தகத்தொகுப்பின் இந்தப் பகுதியில் 27 புத்தகங்கள் இருக்கின்றன. முதல் கிரேக்க வாக்கியம் தற்போதைய நாள்வரை எவ்வாறு பாதுகாத்து வைக்கப்பட்டது என்பதை புரிந்துகொள்ள இந்த 27 புத்தகங்கள் கைமாறி வந்த வழிகளைக் கவனிக்கலாம்.

9கிரேக்க கையெழுத்துப்பிரதிகளின் ஊற்றுமூலம். கிறிஸ்தவ வேதவாக்கியங்களின் அங்கீகரிக்கப்பட்ட 27 புத்தகங்கள் அந்நாளின் பொதுவழக்கிலிருந்த கிரேக்கில் எழுதப்பட்டன. எனினும், மத்தேயுவின் புத்தகம் யூத ஜனங்களுக்காக முதலாவது பைபிள்பூர்வ எபிரெயுவில் எழுதப்பட்டிருக்க வேண்டும். நான்காவது நூற்றாண்டு பைபிள் மொழிபெயர்ப்பாளராகிய ஜெரோம் இவ்வாறு கூறி, பின்னால் அது கிரேக்கில் மொழிபெயர்க்கப்பட்டது என்று சொல்கிறார். b மத்தேயுவே இந்த மொழிபெயர்ப்பைச் செய்திருக்கலாம்; அவர் ரோம அரசாங்க ஊழியராக, வரிவசூலிப்பவராக இருந்ததால், எபிரெயு, லத்தீன், கிரேக்கு மொழிகளை அறிந்திருந்தார்.​—மாற். 2:​14-17.

10கிறிஸ்தவ பைபிள் எழுத்தாளர்களான மாற்கு, லூக்கா, யோவான், பவுல், பேதுரு, யாக்கோபு, யூதா ஆகியோர் கோய்னியில் எழுதினர். இது முதல் நூற்றாண்டின் கிறிஸ்தவர்களாலும் பெரும்பான்மையான ஜனங்களாலும் புரிந்துகொள்ளப்பட்ட பொதுவான, நடப்பிலிருந்த மொழியாகும். கடைசி கிரேக்க மூலப்படிவம் ஏறக்குறைய பொ.ச. 98-ல் யோவானால் எழுதப்பட்டது. நாம் அறிந்தவரை, கோய்னியில் எழுதப்பட்ட இந்த 27 மூல கையெழுத்துப் பிரதிகளில் ஒன்றுகூட இந்நாள்வரை தப்பவில்லை. எனினும், இந்த மூலமுதல் ஊற்றுமூலத்திலிருந்து, மூலப்படிவங்களின் நகல்கள், நகல்களின் நகல்கள், நகல்களின் குடும்பங்கள், என்று கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் ஒரு பெரும் நீர்த்தேக்கத்தை உண்டுபண்ணும் கையெழுத்துப் படிவங்கள் நம்மிடம் புரண்டோடி வந்துள்ளன.

1113,000-த்துக்கு மேற்பட்ட கையெழுத்துப்பிரதிகளின் நீர்த்தேக்கம். அங்கீகரிக்கப்பட்ட புத்தகங்கள் மொத்தம் 27; அவற்றின் கையெழுத்துப்பிரதி நகல்கள் அநேகம், அவை இன்றும் நமக்கு கிடைக்கின்றன. சிலவற்றில் வேதவாக்கியத்தின் பெரும்பகுதிகள் அடங்கியுள்ளன; மற்றவை சிறு பாகங்களே. ஒரு கணக்கீட்டின்படி, மூலக் கிரேக்கில் 5,000-த்துக்கு மேற்பட்ட கையெழுத்துப்பிரதிகள் உள்ளன. கூடுதலாக, மற்ற மொழிகளில் 8,000-க்கும் அதிகமான கையெழுத்துப் பிரதிகள் இருக்கின்றன; இவற்றை ஒன்றுசேர்த்தால் 13,000-த்துக்கும் மேற்பட்ட கையெழுத்துப்பிரதிகள் தற்போது கைவசம் இருக்கின்றன. பொ.ச. 2-வது நூற்றாண்டிலிருந்து பொ.ச. 16-வது நூற்றாண்டு வரையான காலத்தில் இவை எழுதப்பட்டன; இவை யாவும், உண்மையான முதல் மூலவாக்கியத்தைத் தீர்மானிப்பதற்கு உதவிசெய்கின்றன. இங்கிலாந்தில் மான்ச்செஸ்டரிலுள்ள ஜான் ரைலண்ட்ஸ் நூலகத்திலிருக்கும் யோவான் சுவிசேஷத்தின் நாணற்தாள் கையெழுத்துப் பிரதியின் பாகம்தான் இந்த கையெழுத்துப்பிரதிகளில் பழமையானது. P52என்று அழைக்கப்படும் இது, இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பமுதல் பகுதியை​—பெரும்பாலும் பொ.ச. 125-ஐ​—சேர்ந்தது. c ஆகவே, முதல் மூலப்பிரதி எழுதப்பட்டு பெரும்பாலும் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப்பின் இது எழுதப்பட்டது. நாம் இலக்கிய சிறப்புவாய்ந்த நூலாசிரியர்களின் மூலவாக்கியத்தை உறுதிப்படுத்த விரும்பினால் அதற்கு மிக சொற்ப கையெழுத்துப் பிரதிகளே கிடைக்கின்றன. அதுவும், மூல எழுத்துக்கள் எழுதப்பட்ட நூற்றாண்டிலேயே எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகளைக் காண்பது மிகவும் அரிது. நாம் இவற்றை கவனிக்கும்போது, கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் வாக்கியம் அதிகாரப்பூர்வமானதுதான் என்பதற்கு இவ்வளவு அதிகமான அத்தாட்சிகள் இருப்பதற்கு நாம் எவ்வளவு நன்றியோடு இருக்க வேண்டும்.

12நாணற்தாள் கையெழுத்துப்பிரதிகள். செப்டுவஜின்ட்டின் பூர்வ நகல்களை நாணற்தாளில் எழுதியதைப்போல் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் முதல் கையெழுத்துப் பிரதிகளும் நாணற்தாளில் எழுதப்பட்டன. இவை ஏறக்குறைய பொ.ச. நான்காம் நூற்றாண்டு வரையில் பைபிள் கையெழுத்துப்பிரதிகள் எழுதுவதற்கு பயன்படுத்தப்பட்டன. பைபிள் எழுத்தாளர்கள் கிறிஸ்தவ சபைகளுக்குக் கடிதங்கள் அனுப்பியபோதும் நாணற்தாளையே பயன்படுத்தியிருக்க வேண்டும்.

13எகிப்தில் ஃபயூம் மாகாணத்தில் நாணற்தாள் ஆவணங்கள் அதிகளவில் கண்டுபிடிக்கப்பட்டன. 19-வது நூற்றாண்டின் முடிவில், நாணற்தாளில் எழுதப்பட்ட பைபிள் கையெழுத்துப்பிரதிகள் பெரும் எண்ணிக்கையில் கிடைத்தன. தற்கால கையெழுத்துப்பிரதி கண்டுபிடிப்புகள் எல்லாவற்றிலும் முக்கியமான ஒன்று 1931-ல் வெளிச்சத்திற்கு வந்தது. இதில் 11 தொகுப்புநூல்களின் பாகங்கள் இருந்தன; அவற்றில், தேவாவியால் ஏவப்பட்ட எபிரெய வேதாகமத்தின் 8 புத்தகங்களின் பாகங்களும், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் 15 புத்தகங்களின் பாகங்களும் அடங்கியிருந்தன, எல்லாம் கிரேக்கில் இருந்தன. இந்த நாணற்தாள் கையெழுத்துப்பிரதிகள் பொது சகாப்தத்தின் இரண்டாம் நூற்றாண்டிலிருந்து நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை. இந்தக் கண்டுபிடிப்பில் உள்ள கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் பெரும்பான்மை புத்தகங்கள் இப்போது செஸ்டர் பியட்டி தொகுப்புகளில் உள்ளன; அவை P45, P46, மற்றும் P47என்று வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன, “P” என்ற அடையாளம் “பப்பைரஸ்” (Papyrus) என்பதைக் குறிப்பிடுகிறது.

14குறிப்பிடத்தக்க சில நாணற்தாள் கையெழுத்துப் பிரதிகள் 1956-லிருந்து 1961 வரையில் ஸ்விட்ஸர்லாந்திலுள்ள ஜெனீவாவில் பிரசுரிக்கப்பட்டன. இவை போட்மர் நாணற்தாள் கையெழுத்துப்பிரதிகள் என அறியப்பட்டன. அவற்றில் பொ.ச. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதப்பட்ட இரண்டு சுவிசேஷங்களின் பகுதிகள் (P66மற்றும் P75) அடங்கியுள்ளன. இந்தக் கட்டுரைக்கு முன்பு கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை, எபிரெய மற்றும் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் முக்கியமான பூர்வ நாணற்தாள் பைபிள் கையெழுத்துப்பிரதிகளில் சிலவற்றை வரிசைப்படுத்தியிருக்கிறது. அதன் கடைசி பத்தியில், பரிசுத்த வேதவாக்கியங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளின் சில பாகங்களை மொழிபெயர்த்ததில் இந்த நாணற்தாள் கையெழுத்துப்பிரதிகளை பயன்படுத்திய இடக்குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவை அந்த வசனங்களின் அடிக்குறிப்புகளில் காட்டப்பட்டிருக்கின்றன.

15பைபிளின் அங்கீகரிக்கப்பட்ட புத்தகத்தொகுப்பு வெகுகாலத்திற்கு முன்பே முடிவு செய்யப்பட்டது என்பதற்கு, இந்த நாணற்தாள் கையெழுத்துப்பிரதிகளின் கண்டுபிடிப்புகள் நிரூபணம் அளிக்கின்றன. செஸ்டர் பியட்டி நாணற்தாள் கையெழுத்துப்பிரதிகளில் இரண்டு தொகுப்புகள் உள்ளன; ஒன்று, நான்கு சுவிசேஷங்களின் பாகங்களையும் அப்போஸ்தலர் நடபடிகளையும் (P45) ஒன்றாகச் சேர்த்து தைக்கப்பட்டிருக்கிறது; மற்றொன்று, பவுலின் 14 நிருபங்களில் (P46) 9-ஐ ஒன்றாக சேர்த்து தைக்கப்பட்டிருக்கிறது; இவை, தேவாவியால் ஏவப்பட்ட கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம், அப்போஸ்தலருடைய மரணத்துக்குப் பின் விரைவிலேயே ஒன்றுசேர்க்கப்பட்டது என்பதைக் காட்டுகின்றன. இந்த நாணற்தாள் கையெழுத்துப் பிரதிகள் விரிவாக பரவி எகிப்திற்கு செல்வதற்குக் காலம் எடுத்திருந்திருக்கும். எனவே இரண்டாம் நூற்றாண்டுக்குள், இந்த வேதவாக்கியங்கள் நிர்ணயிக்கப்பட்டு தொகுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது தெரிகிறது. ஆகவே, இரண்டாம் நூற்றாண்டின் முடிவுக்குள் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் அங்கீகரிக்கப்பட்ட புத்தகத்தொகுப்பு முடிவுக்கு வந்து, இவ்வாறு முழு பைபிளின் அங்கீகரிக்கப்பட்ட புத்தகத்தொகுப்பு பூர்த்தியாயிற்று என்பதிலும் சந்தேகமில்லை.

16வெள்ளம் மற்றும் பதனிட்ட தோல் கையெழுத்துப்பிரதிகள். முந்தின ஆராய்ச்சியில் நாம் கற்றறிந்தபடி, ஏறக்குறைய பொ.ச. நான்காம் நூற்றாண்டிலிருந்து கையெழுத்துப்பிரதிகள் எழுதுவதில் நாணற்தாளுக்குப் பதில் தோலை பயன்படுத்தத் தொடங்கினர். அதற்காக, வெள்ளம் என்று அழைக்கப்பட்ட கன்றுகுட்டி, செம்மறியாட்டுக்குட்டி, அல்லது வெள்ளாட்டுக்குட்டி தோல்களால் செய்யப்பட்ட நீடித்து உழைக்கக்கூடிய மென்தோலை உபயோகித்தனர். இன்றுவரை நீடித்திருக்கும் சில முக்கிய பைபிள் கையெழுத்துப்பிரதிகள் மென்தோலில் எழுதப்பட்டிருக்கின்றன. எபிரெய வேதாகமத்தின் மென்தோல் அல்லது பதனிட்ட தோல் கையெழுத்துப் பிரதிகளைப் பற்றி ஏற்கெனவே ஆராய்ந்திருக்கிறோம். 314-வது பக்கத்திலுள்ள அட்டவணை, கிறிஸ்தவ கிரேக்க மற்றும் எபிரெய வேதாகமத்தின் முக்கியமான சில மென்தோல் மற்றும் பதனிட்ட தோல் கையெழுத்துப்பிரதிகளை வரிசையாகக் குறிப்பிடுகிறது. பட்டியலில் உள்ள கிரேக்க வேதாகமத்தின் கையெழுத்துப்பிரதிகள் முழுமையாக பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டன, அவை அன்சியல்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. புதிய பைபிள் அகராதி, கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் 274 அன்சியல் கையெழுத்துப்பிரதிகளை அறிவிக்கிறது, இவை பொ.ச. நான்காம் நூற்றாண்டிலிருந்து பொ.ச. பத்தாம் நூற்றாண்டின் காலத்துக்குரியவை. பின்னும், சேர்த்து எழுதும் முறையில் எழுதப்பட்ட 5,000-த்துக்கு மேற்பட்ட நேரொழுக்கு, அல்லது மினிஸ்கியூல் கையெழுத்துப் பிரதிகள் இருக்கின்றன. d அவை வெள்ளத்தில் எழுதப்பட்டவை, பொ.ச. ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து அச்சடிப்பு தொடங்கும் காலம் வரை எழுதப்பட்டன. இந்த அன்சியல் கையெழுத்துப் பிரதிகள் பூர்வ காலத்தை சேர்ந்தவையாகவும் திருத்தமாகவும் இருப்பதால், புதிய உலக பைபிள் மொழிபெயர்ப்பு குழுவினர், கிரேக்க வாக்கியத்திலிருந்து கவனமாக மொழிபெயர்ப்பு செய்வதற்கு இதை அதிகமாக பயன்படுத்தினர். “முக்கிய மென்தோல் மற்றும் பதனிட்ட தோல் கையெழுத்துப் பிரதிகள் சில” என்ற அட்டவணையில் இது குறிப்பிட்டுக் காட்டப்பட்டிருக்கிறது.

வாக்கியத்தை விமர்சித்தல் மற்றும் துல்லியமாக்கும் சகாப்தம்

17இராஸ்மஸின் வாக்கியம். நீண்ட இருண்ட சகாப்தங்களின் நூற்றாண்டுகளில், லத்தீன் மொழி ஆதிக்கம் செலுத்தியபோது மேற்கத்திய ஐரோப்பா ரோமன் கத்தோலிக்க சர்ச்சின் இரக்கமற்ற கட்டுப்பாட்டில் இருந்தது; அப்போது புலமையும் கல்வியும் மிகத் தாழ்ந்த நிலையில் இருந்தன. எனினும், 15-வது நூற்றாண்டில் ஐரோப்பாவில் அச்சடிக்கும் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது, 16-வது நூற்றாண்டின் தொடக்கத்தில் மத சீர்திருத்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது; அச்சமயத்திலிருந்து அதிக சுதந்திரம் நிலவியதால் கிரேக்க மொழியில் மறுபடியும் அக்கறை பிறந்தது. இப்படிப்பட்ட கல்வியின் மறுமலர்ச்சி காலத்தில்தான் புகழ்பெற்ற டச்சு அறிஞர் டெசிடெரியஸ் இராஸ்மஸ் ‘புதிய ஏற்பாட்டின்’ தனிச்சிறப்பு வாய்ந்த கிரேக்க மூலவாக்கியத்தின் முதல் பதிப்பை உண்டுபண்ணினார். (இத்தகைய அச்சடிக்கப்பட்ட தனிச்சிறப்புவாய்ந்த மூலவாக்கியம், (master text) பல கையெழுத்துப் பிரதிகளைக் கவனமாய் ஒப்பிட்டு, மூல எழுத்துக்களில் இருந்த வார்த்தைகள் என்பதாக பொதுவாய் ஒத்துக்கொள்ளும் வார்த்தைகளைப் பயன்படுத்தி, கையெழுத்துப்பிரதிகள் சிலவற்றிலுள்ள வேறுபட்ட வாசிப்புகளைப்பற்றிய குறிப்புகளைச் சேர்த்தும் கவனமாய்த் தயாரிக்கப்படுகிறது.) ஜெர்மனியில் சீர்திருத்தம் தொடங்குவதற்கு ஓர் ஆண்டுக்கு முன்பாக, 1516-ல் ஸ்விட்ஸர்லாந்திலுள்ள பேசலில் இந்த முதல் பதிப்பு அச்சடிக்கப்பட்டது. இந்த முதல் பதிப்பில் பல பிழைகள் இருந்தன, ஆனால் திருத்தங்கள் செய்யப்பட்ட பதிப்புகள் 1519-லும், 1522-லும், 1527-லும், 1535-லும் அச்சடிக்கப்பட்டன. தனிச்சிறப்புவாய்ந்த மூலவாக்கியத்தை நுட்பமாக ஒத்து சரிபார்க்கவும், தயாரிக்கவும் பிற்காலத்தைச் சேர்ந்த சில நேரொழுக்கானக் கையெழுத்துப்பிரதிகள் மட்டுமே இராஸ்மஸிடம் இருந்தன.

18மேற்கு ஐரோப்பிய மொழிகள் பலவற்றில் மேம்பட்ட மொழிபெயர்ப்புகள் செய்வதற்கு இராஸ்மஸின் துல்லியமாக்கப்பட்ட கிரேக்க வாக்கியம் ஆதாரமாக இருந்தது. இதனால், முன்பு லத்தீன் வல்கேட்டிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டிருந்த பதிவுகளைப் பார்க்கிலும் சிறப்பான மொழிபெயர்ப்புகள் செய்ய முடிந்தது. ஜெர்மனியின் மார்ட்டின் லூத்தரே இராஸ்மஸின் வாக்கியத்தை முதலில் பயன்படுத்தியவர். இவர் 1522-ல் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்தார். அதிக துன்புறுத்தலுக்கு மத்தியில் இங்கிலாந்தின் உவில்லியம் டின்டேல் இராஸ்மஸின் வாக்கியத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ஆரம்பித்தார்; 1525-ல் ஐரோப்பா கண்டத்தில் நாடுகடத்தப்பட்டிருந்தபோது அந்த மொழிபெயர்ப்பை முடித்தார். இத்தாலியின் அன்சோனியோ புரூசியோலி, 1530-ல் இராஸ்மஸின் வாக்கியத்தை இத்தாலிய மொழியில் மொழிபெயர்த்தார். இராஸ்மஸின் கிரேக்க வாக்கியம் வந்த பிறகு வாக்கியத்தை விமர்சிக்கும் சகாப்தம் தொடங்கியது. பூர்வீக பைபிள் மூலவாக்கியத்தைத் ஒழுங்கமைத்து, முன்பு இருந்த நிலைக்கு திரும்பக் கொண்டுவருவதற்கு பயன்படுத்தப்படும் முறைதான் வாக்கியத்தை விமர்சிப்பது ஆகும்.

19அதிகாரங்களாகவும் வசனங்களாகவும் பிரித்தல். ராபர்ட் எஸ்டீன், அல்லது ஸ்டீஃபனஸ், 16-வது நூற்றாண்டில் பாரிஸில் பெயர்பெற்ற அச்சடிப்பவரும் பதிப்பாசிரியருமாக பணி செய்தார். பதிப்பாசிரியராக இருந்ததால், உடனடியாகக் குறிப்புகளை எடுத்துக் காண்பதற்கு அதிகாரங்களையும் வசனங்களையும் கொண்ட ஓர் முறையைப் பயன்படுத்தினால் பிரயோஜனமாக இருக்கும் என்பதை உணர்ந்தார். ஆகவே 1551-ல் அவருடைய கிரேக்கு-லத்தீன் புதிய ஏற்பாட்டில் இந்த ஒழுங்கைப் புதிதாகத் தொடங்கினார். வசனப் பிரிவுகளை மசோரெட்டுகள் முதலாவதாக எபிரெய வேதாகமத்துக்குச் செய்தனர்; ஆனால், 1553-ல் முதலாவதாக ஸ்டீஃபனஸின் பிரென்ஞ் பைபிளில்தான் தற்போதிருக்கும் பிரிவுகள் முழு பைபிளுக்கும் செய்யப்பட்டன. பிறகு ஆங்கிலமொழி பைபிள்களில் இது பின்பற்றப்பட்டது; மேலும், பைபிள் சொல்தொகுதி விளக்கப்பட்டியல் நூல்கள் (concordances) உண்டாக்குவதற்கு பிரயோஜனமாக இருந்தது. உதாரணமாக, 1737-ல் அலெக்ஸாந்தர் க்ரூடன் இப்படிப்பட்ட நூலை உண்டாக்கினார். ஆங்கில பைபிளாகிய ஆதரைஸ்ட் மொழிபெயர்ப்புக்கு இரண்டு முழுமையான சொல்தொகுதி விளக்கப்பட்டியல் நூல்கள் தயாரிக்கப்பட்டன. ஒன்று ராபர்ட் யங் என்பவருடையது, இது 1873-ல் எடின்பர்க்கில் முதலாவதாகப் பிரசுரிக்கப்பட்டது; இரண்டாவது ஜேம்ஸ் ஸ்டிராங் தயாரித்தது, 1894-ல் நியூ யார்க்கில் பிரசுரிக்கப்பட்டது.

20 டெக்ஸ்டஸ் ரிஸெப்டஸ். கிரேக்க ‘புதிய ஏற்பாட்டின்’ பல பதிப்புகளையும் ஸ்டீஃபனஸ் வெளியிட்டார். இவை பெரும்பாலும் இராஸ்மஸின் வாக்கியத்தை ஆதாரங்கொண்டவை. இவை 1522-ல் கம்ப்ளுடென்ஸியன் பாலிகாட்டின் பதிப்பின் அடிப்படையிலும் முந்தின நூற்றாண்டுகளுக்குரிய 15 நேரொழுக்குக் கையெழுத்துப் பிரதிகளின் அடிப்படையிலும் திருத்தங்கள் செய்யப்பட்டவை. 1550-ல் ஸ்டீஃபனஸின் கிரேக்க வாக்கியத்தின் மூன்றாவது பதிப்பு டெக்ஸ்டஸ் ரிஸெப்டஸ் (“பெற்றுக்கொண்ட வாக்கியம்” என்பதற்கு லத்தீன்) ஆயிற்று. இதன் அடிப்படையில்தான் 16-வது நூற்றாண்டு ஆங்கில மொழிபெயர்ப்புகளும் 1611-ன் கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு-ம் மொழிபெயர்க்கப்பட்டன.

21துல்லியமாக்கப்பட்ட கிரேக்க வாக்கியங்கள். பிற்காலத்தில் கிரேக்க அறிஞர்கள் இன்னும் துல்லியமாக்கப்பட்ட வாக்கியங்களை உண்டாக்கினர். இவற்றில் ஜே. ஜே. கிரீஸ்பாச் உருவாக்கிய பதிப்பு முதன்மையானது; 18-வது நூற்றாண்டின் முடிவில் கிடைத்த நூற்றுக்கணக்கான கிரேக்கக் கையெழுத்துப் பிரதிகளைப் பயன்படுத்தும் வாய்ப்பு அவருக்கிருந்தது. கிரீஸ்பாச்சின் முழுமையான கிரேக்க வாக்கியத்தின் சிறந்த பதிப்பு 1796-1806-ல் பிரசுரிக்கப்பட்டது. அவருடைய தனிச்சிறப்பு வாய்ந்த மூலவாக்கியம் 1840-ல் ஷார்ப்ஸின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு மூல ஆதாரமாயிருந்தது; இதுதான் 1864-ல் முதன் முதலில் முழுமையாக பிரசுரிக்கப்பட்ட தி எம்ஃபாட்டிக் டயக்ளாட்டில் அச்சடிக்கப்பட்டுள்ள கிரேக்க வாக்கியமாகும். மற்ற சிறப்பான வாக்கியங்களை கோன்ஸ்டன்டின் வான் டிஸ்ச்சென்டர்ஃப் (1872) மற்றும் ஹெர்மன் வான் சோடென் (1910) என்போர் பதிப்பித்தனர். இதில் கடைசியாக சொல்லப்பட்ட வாக்கியம் 1913-ல் பதிப்பித்த மொஃபட்டின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு ஆதாரமாக இருந்தது.

22உவெஸ்ட்காட் மற்றும் ஹார்ட் வாக்கியம். உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் சிறப்புவாய்ந்த கிரேக்க மூலவாக்கியம் ஒன்றை கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகக் கல்வியறிஞர்களான பி. எஃப். உவெஸ்ட்காட்டும் எஃப். ஜே. எ. ஹார்ட்டும் 1881-ல் உருவாக்கினர். உவெஸ்ட்காட் மற்றும் ஹார்ட்டின் கிரேக்க பிரதிகள் பிரிட்டிஷ் திருத்த ஆலோசனைக் குழுவால் கலந்தாலோசிக்கப்பட்டன. இவர்களுடைய ‘புதிய ஏற்பாட்டை’ 1881-ல் திருத்தியமைப்பதற்கு இந்தக் குழு கூடினர், அதில் உவெஸ்ட்காட்டும் ஹார்ட்டும் உறுப்பினராக இருந்தனர். இந்த மூலவாக்கியமே புதிய உலக மொழிபெயர்ப்பில் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதற்கு முக்கியமாய்ப் பயன்படுத்தப்பட்டது. பின்வரும் ஆங்கில மொழிபெயர்ப்புகளைச் செய்வதற்கும் இந்த மூலவாக்கியமே ஆதாரமாயிருந்திருக்கிறது: தி எம்ஃபஸைஸ்ட் பைபிள், அமெரிக்கன் ஸ்டான்டர்ட் வர்ஷன், அன் அமெரிக்கன் டிரான்ஸ்லேஷன் (ஸ்மித் குட்ஸ்பீட்), மற்றும் ரிவைஸ்ட் ஸ்டான்டர்ட் வர்ஷன். e இந்தக் கடைசி மொழிபெயர்ப்பு நெஸ்லெயின் வாக்கியத்தையும் பயன்படுத்தினது.

23நெஸ்லெயின் கிரேக்க வாக்கியமும் (18-வது பதிப்பு, 1948), ஒத்துப்பார்க்கும் நோக்கத்திற்காகப் புதிய உலக பைபிள் மொழிபெயர்ப்பு குழுவால் பயன்படுத்தப்பட்டது. கத்தோலிக் ஜெஸ்யுட் அறிஞர்கள் ஜோஸி எம். போவர் (1943) மற்றும் அகஸ்டினஸ் மெர்க் (1948) ஆகியோருடைய பதிப்புகளையும் இந்தக் குழு ஆராய்ந்தது. 1984-ல் வெளியிட்ட துணைக்குறிப்புகளுள்ள பைபிளின் (NW) அடிக்குறிப்புகளை புதுப்பிப்பதற்கு, 1975-ல் வெளியிடப்பட்ட ஐக்கிய பைபிள் சங்கங்களின் வாக்கியமும், 1979-ல் வெளியிடப்பட்ட நெஸ்லெ-ஆலந்த் வாக்கியமும் ஆராயப்பட்டன. f

24கிரேக்கிலிருந்து மொழிபெயர்த்தப் பூர்வ மொழிபெயர்ப்புகள். கிறிஸ்தவ வேதாகமத்தின் கிரேக்கக் கையெழுத்துப் பிரதிகள் மட்டுமல்லாமல், மற்ற பல மொழிபெயர்ப்புகளின் கையெழுத்துப் பிரதிகளும் இன்று ஆராய்ச்சிக்குக் கிடைக்கின்றன. பழைய லத்தீன் மொழிபெயர்ப்புகளில் ஏறக்குறைய 30 பகுதிகளும், ஜெரோமின் லத்தீன் வல்கேட்டின் ஆயிரக்கணக்கான கையெழுத்துப் பிரதிகளும் இருக்கின்றன. புதிய உலக பைபிள் மொழிபெயர்ப்பு குழுவினர் இவற்றையும், இவற்றோடு கோப்டிக், அர்மீனியன் மற்றும் சிரியாக் மொழிபெயர்ப்புகளையும் கலந்தாராய்ந்தனர். g

2514-வது நூற்றாண்டு முதல் கிரேக்க வேதாகமம் எபிரெய மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வந்திருக்கிறது. இவற்றில் பல, கிறிஸ்தவ வேதவாக்கியங்களில் கடவுளுடைய பெயரை மீண்டும் அதற்குரிய இடங்களில் வைத்ததால் அக்கறைக்குரியவை. புதிய உலக மொழிபெயர்ப்பு, இந்த எபிரெய மொழிபெயர்ப்புகளை, “J”-க்கு மேலாக ஒரு எண் சேர்த்து பல இடங்களில் குறிப்பிடுகிறது. கூடுதலான விவரங்களுக்கு, பரிசுத்த வேதாகமங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பு​—துணைக்குறிப்புகளுடன், பைபிளின் முன்னுரை, பக்கங்கள் 9-10-ஐயும், பிற்சேர்க்கை 1டி, “கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் கடவுளுடைய பெயர்” என்பதையும் காண்க.

வாக்கிய வேறுபாடுகளும் அவற்றின் அர்த்தமும்

26கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் 13,000-த்துக்கு மேற்பட்ட கையெழுத்துப் பிரதிகளில் வாக்கிய வேறுபாடுகள் பல உள்ளன. கிரேக்க மொழியில் மட்டுமே உள்ள 5,000 கையெழுத்துப் பிரதிகளில் அத்தகைய வேறுபாடுகள் நிறைய இருக்கின்றன. பூர்வ கையெழுத்துப் பிரதிகளிலிருந்து உருவாக்கப்பட்ட ஒவ்வொரு நகலும் தனிப்பட்ட எழுத்துப் பிழைகளை கொண்டிருக்கும் என்பதை நாம் நன்றாய் புரிந்துகொள்ள முடியும். இந்தப் பூர்வக் கையெழுத்துப்பிரதிகளில் ஏதாவதொன்றைப் பயன்படுத்துவதற்காக ஒரு இடத்திற்கு அனுப்பியபோது, அந்த இடத்தில் எடுக்கப்பட்ட நகல்களில் இந்தப் பிழைகள் மீண்டும் ஏற்பட்டுவிடும். எனவே இந்தப் பிழை அங்கிருக்கும் மற்றக் கையெழுத்துப்பிரதிகளின் பாகமாகிவிடும். இந்த முறையில்தான் கையெழுத்துப்பிரதிகளின் குடும்பங்கள் என்றழைக்கப்படும் ஒரே மாதிரியான தொகுதிகள் பெருகின. ஆகவே இந்த ஆயிரக்கணக்கான எழுத்துப் பிழைகளை அதிர்ச்சியுடன் பார்க்கவேண்டுமா? வாக்கியத்தை பிழைகளுடன் நகல் எடுத்ததால் இது உண்மையற்ற தன்மையை எடுத்துக்காட்டவில்லையா? இல்லவேயில்லை!

27உவெஸ்ட்காட் மற்றும் ஹார்ட்டின் வாக்கியத்தை தயாரித்தவர்களில் ஒருவரான எஃப். ஜே. எ. ஹார்ட் பின்வருமாறு எழுதுகிறார்: “புதிய ஏற்பாட்டில் காணப்படும் அதிகளவான வார்த்தைகள் குற்றங்குறைகாணும் எல்லா நடவடிக்கைகளுக்கும் மேலாக உயர்ந்து நிற்கின்றன. ஏனெனில் அவை வேறுபாடின்றி இருக்கின்றன, அவற்றை பார்த்து எழுதினால் போதும். . . . இவற்றில் அவசியமற்ற சிறிய விஷயங்களை . . . ஒதுக்கிவிட்டால், இன்னும் சந்தேகத்துக்குள்ளாகும் சொற்கள் எனப்படுபவை எங்கள் மதிப்பீட்டில், முழு புதிய ஏற்பாட்டிலும் ஆயிரத்தில் ஒரு பாகத்துக்கும் குறைவானதே.” h

28வாக்கிய கைமாற்றத்தை மதிப்பிடுவது. அப்படியென்றால், பல நூற்றாண்டுகளாக கைமாறிவந்த வாக்கியத்தின் நேர்மையையும் நம்பகத்தன்மையையும் எவ்வாறு மொத்தமாக மதிப்பிடுவது? ஒத்துப்பார்ப்பதற்கு ஆயிரக்கணக்கான கையெழுத்துப் பிரதிகள் இருப்பது மட்டுமன்றி, கடந்த சில ஆண்டுகளில் பழமையான பைபிள் கையெழுத்துப் பிரதிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இவை ஏறக்குறைய பொ.ச. 125-ம் ஆண்டை சேர்ந்த கிரேக்க பிரதிகளாகும். அதாவது அப்போஸ்தலன் யோவான் மரித்த சமயமாகிய ஏறக்குறைய பொ.ச. 100-லிருந்து சுமார் முப்பது ஆண்டுகள்தான் கடந்திருக்கின்றன. இந்தக் கையெழுத்துப் பிரதி அத்தாட்சிகள், இன்றுள்ள கிரேக்க வேதாகமம் நம்பகமானது, துல்லியமானது என்ற உறுதியான நிச்சயத்தை நமக்கு அளிக்கின்றன. பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின் முந்நாள் இயக்குநரும் நூலகருமான, சர் ஃபிரெட்ரிக் கெனியன் இதைப் பற்றி எப்படி மதிப்பிடுகிறார் என்பதை கவனியுங்கள்:

29“முதலில் எழுதப்பட்ட தேதிக்கும், இருப்பிலுள்ள பூர்வ கையெழுத்து பிரதிகளின் தேதிகளுக்கும் இடைப்பட்ட காலம் அவ்வளவு சொற்பமாக இருக்கிறது. வேதவாக்கியங்கள், பெரும் மாறுதல்கள் இல்லாமல் அவை எழுதப்பட்ட பிரகாரம்தான் நம்மிடம் வந்திருக்கின்றனவா என்பதைப் பற்றிய சந்தேகத்திற்கான கடைசி ஆதாரமும் இப்போது நீக்கப்பட்டது. புதிய ஏற்பாட்டின் புத்தகங்களுடைய நம்பகத்தன்மையும் பொது நேர்மையும் முடிவாக நிறுவப்பட்டது என்று கருதலாம். இருந்தாலும், பொதுவான நேர்மை என்பது வேறு, நுணுக்கமான விவரங்களில் துல்லியம் என்பது வேறு.” i

30‘நுணுக்கமான விவரங்களில் துல்லியம்’ இருப்பதைப் பற்றி பாரா 27-ல் டாக்டர் ஹார்ட்டின் வார்த்தைகள் தெளிவாக்குகிறது. நுட்பவிவரங்களை திருத்தியமைப்பது வாக்கியத்தை துல்லியமாக்குபவரின் வேலை. இதை அவர்கள் அதிகளவில் செய்திருக்கின்றனர். இந்தக் காரணத்தால், உவெஸ்ட்காட் மற்றும் ஹார்ட்டின் துல்லியமாக்கப்பட்ட கிரேக்க வாக்கியம் உயர்ந்த தரமுடையது என்று பொதுவாக ஏற்கப்படுகிறது. புதிய உலக மொழிபெயர்ப்பின் கிறிஸ்தவ கிரேக்கப் பகுதி இந்த மிகச் சிறந்த கிரேக்க வாக்கியத்தின் அடிப்படையில் அமைந்தது. இதனால், உண்மையான ‘யெகோவாவின் வசனிப்பை,’ அதன் வாசகர்களுக்கு அளிக்கிறது. கிரேக்கக் கையெழுத்துப் பிரதிகளின் களஞ்சியத்தில் நமக்காக அதிசயமாக பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த வண்ணமாகவே அளிக்கிறது.​—1 பே. 1:​24, 25.

31 நம்முடைய பைபிளும் பூர்வ கையெழுத்துப் பிரதிகளும், 1962, என்ற ஆங்கில புத்தகத்தில், 249-ம் பக்கத்தில் சர் ஃபிரட்ரிக் கெனியன் அருமையான பின்வரும் விஷயத்தைக் கூறுகிறார்: “புதிய ஏற்பாட்டின் நம்பகத்தன்மை, தற்கால கண்டுபிடிப்புகளால் ஆதரிக்கப்பட்டிருக்கிறது. முதலில் எழுதப்பட்ட கையேடுகளுக்கும் நம்முடைய பூர்வமான கையெழுத்துப் பிரதிகளுக்கும் இடையே உள்ள காலம் மிகக் குறைவே. மேலும் இந்த இரண்டு பிரதிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் ஆர்வத்திற்குரியவையாக இருந்தாலும் கிறிஸ்தவ விசுவாசத்தின் முக்கிய கோட்பாடுகளை பாதிக்கவில்லை.” 309-வது பக்கத்திலுள்ள, “புதிய உலக மொழிபெயர்ப்பின் மூலவாக்கியத்திற்கான மூல ஆதாரங்கள்​—கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம்” என்ற அட்டவணை காட்டுகிறபடி, திருத்தமான ஆங்கில மொழிபெயர்ப்பை அளிப்பதற்கு, சம்பந்தப்பட்ட எல்லா படிவங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த உண்மையுள்ள மொழிபெயர்ப்புகள் எல்லாவற்றிற்கும் மதிப்புள்ள அடிக்குறிப்புகள் ஆதாரமளிக்கின்றன. புதிய உலக பைபிள் மொழிபெயர்ப்பு குழு, மிகச் சிறந்த மொழிபெயர்ப்பை உண்டாக்குவதற்கு பல நூற்றாண்டுகளில் வளர்ந்த பைபிள் புலமையின் சிறந்த பலன்களைப் பயன்படுத்தியது. இப்போது நமக்கு கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் கிடைத்திருக்கிறது; இது தேவாவியால் ஏவப்பட்ட இயேசு கிறிஸ்துவின் சீஷர்களால் எழுதப்பட்டபடியே “ஆரோக்கியகரமான வார்த்தைகளின் மாதிரியை” கொண்டுள்ளது என்று நாம் நிச்சயம் நம்பலாம். மதிப்புமிகுந்த இந்த வார்த்தைகளை, விசுவாசத்தோடும் அன்போடும் நாம் தொடர்ந்து கடைப்பிடிப்போமாக!​—2 தீ. 1:​13, தி.மொ.

32பரிசுத்த வேதவாக்கியங்களின் கையெழுத்துப் பிரதிகளையும், வாக்கியத்தையும் கலந்தாராய்வதற்கு இதுவும் இதற்கு முந்தைய ஆராய்ச்சியும் உதவின. இவை இத்தகைய நுணுக்கவிவரமான ஆராய்ச்சிக்கு ஏன் உட்படுத்தப்பட்டன? எபிரெய மற்றும் கிரேக்க வேதாகமங்கள், பூர்வகால உண்மையுள்ள மனிதரை யெகோவா ஏவி பதிவுசெய்த மூலவாக்கியத்தின்படியே இருக்கின்றன என்பதை நிரூபித்து காட்டுவதற்கே. அந்த முதல் எழுத்துக்கள் தேவாவியால் ஏவப்பட்டவை. நகல் எடுத்தவர்கள் திறமைவாய்ந்தவர்களாக இருந்தபோதிலும், தேவாவியால் ஏவப்படவில்லை. (சங். 45:1; 2 பே. 1:​20, 21; 3:16) ஆகவே, மகா ஊற்றுமூலராகிய யெகோவாவிடமிருந்து சத்தியத் தண்ணீர் ஆரம்பத்தில் ஊற்றப்பட்டது; அதை தூய்மையாகவும் தெளிவாகவும் சந்தேகமில்லாமலும் அடையாளம் கண்டுகொள்வதற்கு கையெழுத்துப்பிரதிகளின் மாபெரும் தேக்கத்தில் சலித்தெடுப்பது அவசியமாயிருந்தது. தம்முடைய வார்த்தையாகிய, தேவாவியால் ஏவப்பட்ட பைபிள் என்ற இந்த அருமையான பரிசுக்காகவும், அதன் பக்கங்களிலிருந்து பாய்ந்தோடும் புத்துயிரளிக்கும் ராஜ்ய செய்திக்காகவும் யெகோவாவுக்கே நன்றி செலுத்துகிறோம்!

[அடிக்குறிப்புகள்]

a வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கங்கள் 354-5.

b பக்கம் 176, பத்தி 6-ஐக் காண்க.

c வேதவாக்கியங்களின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கம் 323; நியூ பைபிள் டிக்ஷ்னரி, இரண்டாம் பதிப்பு, 1986, ஜே. டி. டக்லஸ், பக்கம் 1187.

d நியூ பைபிள் டிக்ஷ்னரி, இரண்டாம் பதிப்பு, பக்கம் 1187.

e பக்கம் 322-ல், “முக்கிய ஏழு மொழிகளில் பிரபல பைபிள் மொழிபெயர்ப்புகள் சில,” என்ற அட்டவணையைப் பாருங்கள்.

f தி கிங்டம் இன்டர்லினியர் டிரான்ஸ்லேஷன் ஆஃப் தி கிரீக் ஸிகிரிப்ச்சர்ஸ், 1985, பக்கங்கள் 8-9.

g இவற்றின் (NW) அடிக்குறிப்புகளைக் காண்க: லூக்கா 24:40; யோவான் 5:4; அப்போஸ்தலர் 19:23; 27:37; வெளிப்படுத்துதல் 3:16.

h புதிய ஏற்பாடு மூல கிரேக்கில், (ஆங்கிலம்) 1974, தொ. 1, பக்கம் 561.

i பைபிளும் தொல்பொருள் ஆராய்ச்சியும், (ஆங்கிலம்) 1940, பக்கங்கள் 288-9.

[கேள்விகள்]

1. கிறிஸ்தவ கற்பிக்கும் திட்டம் எவ்வாறு ஆரம்பித்தது?

2. என்ன நற்செய்தி இப்போது அறிவிக்கப்பட்டது, சாட்சிகொடுக்கும் இந்த ஊழியம் எதன் வெளிக்காட்டாக இருந்தது?

3. பொ.ச. முதல் நூற்றாண்டின் கிறிஸ்தவ ஊழியர்கள் எப்படிப்பட்டவர்கள்?

4. பூர்வ கிறிஸ்தவ சபையின் நாட்களில், யெகோவாவின் ஏவுதல் மற்றும் வழிநடத்துதலின் அடிப்படையில் எவை எழுதப்பட்டன?

5. (அ) தொகுப்புநூல் என்பது என்ன? (ஆ) பூர்வ கிறிஸ்தவர்கள் இந்தத் தொகுப்புநூலை எந்த அளவுக்குப் பயன்படுத்தினர், அதன் அனுகூலங்கள் யாவை?

6. (அ) கிரேக்க இலக்கிய காலம் என்பது என்ன? அதில் என்ன உட்பட்டிருந்தது, கோய்னி அல்லது பொதுப்படையான கிரேக்கு எப்போது தோன்றி வளர்ந்தது? (ஆ) எவ்வாறு மற்றும் எந்த அளவுக்குக் கோய்னி பொது உபயோகத்துக்கு வந்தது?

7. (அ) இயேசுவும் அவருடைய அப்போஸ்தலரும் வாழ்ந்த காலத்தில் கோய்னி பயன்படுத்தப்பட்டதற்கு பைபிள் எவ்வாறு சாட்சியளிக்கிறது? (ஆ) கடவுளுடைய வார்த்தையைத் தெரிவிப்பதற்குக் கோய்னி ஏன் மிகப் பொருத்தமானதாக இருந்தது?

8. கிரேக்க வேதாகம கையெழுத்துப்பிரதிகளின் களஞ்சியத்தை இப்போது நாம் ஏன் ஆராய்கிறோம்?

9. (அ) கிறிஸ்தவ வேதவாக்கியங்கள் எந்த மொழியில் எழுதப்பட்டன? (ஆ) மத்தேயுவைக் குறித்ததில் என்ன விதிவிலக்கு கவனிக்கப்படுகிறது?

10. பைபிள் எழுத்துக்கள் எவ்வாறு நம்மிடம் வந்து சேர்ந்தன?

11. (அ) எவ்வளவு அதிகமான கையெழுத்துப்பிரதி நகல்கள் இன்று கிடைக்கின்றன? (ஆ) எண்ணிக்கையையும் காலத்தையும் குறித்ததில் இவை எவ்வாறு இலக்கிய எழுத்துக்களிலிருந்து வேறுபடுகின்றன?

12. முதல் கையெழுத்துப்பிரதிகள் எதில் எழுதப்பட்டன?

13. 1931-வது ஆண்டில் என்ன முக்கியமான நாணற்தாள் கையெழுத்துப்பிரதி கண்டுபிடிப்பு வெளிச்சத்திற்கு வந்தது?

14, 15. (அ) 313-வது பக்கத்தில் காணப்படும் அட்டவணையில் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் முக்கிய நாணற்தாள் கையெழுத்துப்பிரதிகள் யாவை? (ஆ) புதிய உலக மொழிபெயர்ப்பு இந்தக் கையெழுத்துப்பிரதிகளை எவ்வாறு பயன்படுத்தியிருக்கிறது என்பதைக் காட்டுங்கள். (இ) பூர்வ நாணற்தாள் கையெழுத்துப்பிரதி தொகுப்புநூல்கள் எதை உறுதிசெய்கின்றன?

16. (அ) கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் எந்த அன்சியல் கையெழுத்துப்பிரதிகள் இந்நாள்வரை அழியாமல் இருக்கின்றன? (ஆ) இந்த அன்சியல் கையெழுத்துப்பிரதிகள் எந்த அளவில் புதிய உலக மொழிபெயர்ப்பில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன, ஏன்?

17. (அ) என்ன இரண்டு சம்பவங்கள், பைபிளின் கிரேக்க வாக்கியத்தை அதிகமாக ஆராய்ச்சி செய்வதற்கு வழிநடத்தின? (ஆ) இராஸ்மஸ் என்ன வேலைக்குப் புகழ்பெற்றிருக்கிறார்? (இ) அச்சடிக்கப்பட்ட ஒரு மூலவாக்கியம் எவ்வாறு அமைக்கப்பட்டது?

18. எதை செய்வதற்கு இராஸ்மஸின் வாக்கியம் ஆதாரமாக இருந்தது, இதை யார் நன்றாய்ப் பயன்படுத்தினர்?

19. பைபிள், அதிகாரங்களாகவும் வசனங்களாகவும் பிரிக்கப்பட்டதன் சரித்திரம் என்ன, இதனால் என்ன செய்ய முடிந்தது?

20. டெக்ஸ்டஸ் ரிஸெப்டஸ் என்பது என்ன, இது எதற்கு ஆதாரமாயிற்று?

21. துல்லியமாக்கப்பட்ட என்ன வாக்கியங்கள் 18-வது நூற்றாண்டிலிருந்து உருவாக்கப்பட்டன, அவை எவ்வாறு பயன்படுத்தப்பட்டன?

22. (அ) எந்த கிரேக்க வாக்கியம் பரவலாக ஏற்கப்பட்டிருக்கிறது? (ஆ) எந்த ஆங்கில மொழிபெயர்ப்புகளுக்கு இது ஆதாரமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது?

23. புதிய உலக மொழிபெயர்ப்புக்கு வேறு என்ன வாக்கியங்களும் பயன்படுத்தப்பட்டன?

24. எந்தப் பூர்வ மொழிபெயர்ப்புகளையும் புதிய உலக மொழிபெயர்ப்பு கலந்தாராய்ந்தது? சில உதாரணங்கள் யாவை?

25. புதிய உலக மொழிபெயர்ப்பில் குறிப்பிடப்படும் எபிரெயமொழி மொழிபெயர்ப்புகள் எவ்விதத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவை?

26. வாக்கிய வேறுபாடுகளும் கையெழுத்துப்பிரதி குடும்பங்களும் எவ்வாறு உண்டாயின?

27. கிரேக்க வாக்கியத்தின் உண்மையைக் குறித்து என்ன உறுதி நமக்குள்ளது?

28, 29. (அ) துல்லியமாக்கப்பட்ட கிரேக்க வாக்கியத்தைப் பற்றி நம்முடைய முடிவான மதிப்பீடு என்ன? (ஆ) இதைப் பற்றி என்ன அதிகாரப்பூர்வ வாக்குமூலம் இருக்கிறது?

30. புதிய உலக மொழிபெயர்ப்பு அதன் வாசகர்களுக்கு உண்மையுள்ள ‘யெகோவாவின் வசனிப்பை’ அளிக்கிறது என்று நாம் ஏன் நம்பிக்கையுடன் இருக்கலாம்?

31. (அ) கிரேக்க வேதாகமத்தின் வாக்கியத்தைப் பற்றி தற்கால கண்டுபிடிப்புகள் என்ன காட்டியிருக்கின்றன? (ஆ) புதிய உலக மொழிபெயர்ப்பின் கிறிஸ்தவ கிரேக்க வேதாகம பகுதியின் வாக்கியத்துக்கான மூல ஆதாரங்களை 309-வது பக்கத்திலுள்ள அட்டவணை எவ்வாறு காட்டுகிறது, பயன்படுத்தப்பட்ட இரண்டாம் பட்சமான மூல ஆதாரங்கள் யாவை?

32. பரிசுத்த வேதவாக்கியங்களின் கையெழுத்துப் பிரதிகளையும் வாக்கியத்தையும் பற்றிப் பேச ஏன் இவ்வளவு ஆழமான ஆராய்ச்சி செய்யப்பட்டிருக்கிறது, திருப்திதரும் என்ன முடிவுக்கு வந்திருக்கிறோம்?