Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆராய்ச்சி எண் 8—“புதிய உலக மொழிபெயர்ப்பின்” நற்பயன்கள்

ஆராய்ச்சி எண் 8—“புதிய உலக மொழிபெயர்ப்பின்” நற்பயன்கள்

ஆராய்ச்சி எண் 8—“புதிய உலக மொழிபெயர்ப்பின்” நற்பயன்கள்

புதிய உலக மொழிபெயர்ப்பின் நவீன மொழி, அதன் ஒரே சீரான தன்மை, வினைச்சொற்களின் கவனமான மொழிபெயர்ப்பு, தேவாவியால் ஏவப்பட்ட கடவுளுடைய வார்த்தையை மொழிபெயர்க்கும் சக்தி வாய்ந்த சொல்லமைப்பு ஆகியவற்றின் சம்பந்தமாக ஒரு கலந்தாலோசிப்பு.

சமீப ஆண்டுகளில் பைபிளின் நவீன மொழிபெயர்ப்புகள் பல பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. இவை, கடவுளுடைய வார்த்தையை நேசிப்போர் அதன் மூல எழுத்துக்களின் கருத்தை விரைவாக புரிந்துகொள்ளுவதற்கு பெருமளவு உதவிசெய்திருக்கின்றன. எனினும், பல மொழிபெயர்ப்புகள் பைபிளிலிருந்து கடவுளுடைய பெயரை அகற்றி விட்டிருக்கின்றன. மறுபட்சத்தில், புதிய உலக மொழிபெயர்ப்பு மகா உன்னத கடவுளின் மதிப்புள்ள பெயரை அதற்குரிய இடங்களில் பயன்படுத்துவதன் மூலம் அவரை மேன்மைப்படுத்தி கனப்படுத்துகிறது. இந்தப் பெயர் எபிரெய வேதாகமத்தில் 6,973 இடங்களிலும், கிரேக்க வேதாகமத்தில் 237 இடங்களிலும், ஆக மொத்தம் 7,210 இடங்களில் காணப்படுகிறது. பொதுவாக, யாவே என்ற உச்சரிப்பையே எபிரெய அறிஞர்கள் விரும்புகின்றனர், ஆனால் சரியான உச்சரிப்பு இப்போது அறியப்படவில்லை. ஆகவே, லத்தீன் உச்சரிப்பான ஜெஹோவா தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. இது நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்திருப்பதாலும், יהוה என்ற எபிரெய நான்கெழுத்து பெயரின் (டெட்ராகிராமட்டன்) ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்பாக இருப்பதாலும் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. எபிரெய அறிஞராகிய ஆர். ஹெச். பிஃபர் கூறினார்: “இந்தப் பெயரைக் குறித்து எவ்வளவுதான் சந்தேகம் எழும்பினாலும், ‘ஜெஹோவா’ என்பதே யாவேயின் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பு, அப்படித்தான் தொடர்ந்து இருக்கவும் வேண்டும். a

2கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் கடவுளுடைய பெயரை அதற்குரிய இடங்களில் முதன்முதலில் பயன்படுத்துவது புதிய உலக மொழிபெயர்ப்பு மட்டுமல்ல, குறைந்தது 14-வது நூற்றாண்டிலிருந்தாவது, அநேக மொழிபெயர்ப்பாளர்கள் கடவுளுடைய பெயரை பயன்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்தனர்; முக்கியமாக, கிறிஸ்தவ கிரேக்க வேதாகம எழுத்தாளர்கள் கடவுளுடைய பெயர் அடங்கிய எபிரெய வேதாகம வசனங்களை மேற்கோளாக குறிப்பிடுகிற இடங்களில் அதை பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தனர். சில ஐரோப்பிய மொழிபெயர்ப்புகள் யெகோவா என்ற பெயரை அநேக முறை பயன்படுத்துகின்றன. அதைப் போலவே பஸிபிக் தீவு, ஆப்பிரிக்க, ஆசிய மற்றும் அமெரிக்க மொழிபெயர்ப்புகள் உட்பட நவீன மிஷனரி மொழிபெயர்ப்புகள் பல, கிரேக்க வேதாகமத்தில் அந்தப் பெயரை அநேக முறை பயன்படுத்துகின்றன. இவ்வாறு, “கர்த்தர்” என்று குறிப்பிடாமல் கடவுளுடைய பெயரையே நேரடியாக குறிப்பிடுவதால், எந்த “கர்த்தர்” இங்கே குறிப்பிடப்படுகிறார் என்பது சந்தேகத்திற்கே இடமில்லாமல் தெளிவாகிறது. அந்தக் கர்த்தர் வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவராகிய யெகோவாவே. பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பில் அவருடைய பெயருக்கு தனிச்சிறப்பு கொடுக்கப்பட்டு பரிசுத்தப்படுத்தப்படுகிறது. b

3 புதிய உலக மொழிபெயர்ப்பு யெகோவாவின் ஏவப்பட்ட வேதாகமத்தினுடைய கருத்தை வாசகர் தெளிவாக புரிந்துகொள்ளும் மொழிநடையில் அளிக்கிறது; எனவே யெகோவாவின் பெயர் இன்னும் அதிகமாக பரிசுத்தப்படுவதற்கு இது உதவுகிறது. எளிதான, நவீன மொழியை அது பயன்படுத்துகிறது, இந்த மொழிபெயர்ப்பு கூடுமானவரை ஒரே சீராக இருக்கிறது. எபிரெய மற்றும் கிரேக்க வினைச்சொற்களின் செயலை அல்லது நிலையைத் திருத்தமாக கூறுகிறது. ‘நீ’ “நீங்கள்” என பொருள்படும் “you” என்ற சுட்டுப்பெயர் மற்றும் ஏவல்வடிவ சொல்லை (imperative form) பயன்படுத்த வேண்டிய இடங்களில், சூழமைவு தெளிவாக்காத இடங்களில் பன்மையையும் ஒருமையையும் வேறுபடுத்திக் காட்டுகிறது. இவற்றின் மூலமும் மற்ற வழிகளிலும், புதிய உலக மொழிபெயர்ப்பு, கூடிய வரையில், மூல எழுத்துக்களின் ஆற்றலையும் அழகையும் உட்கருத்தையும் நவீன மொழிநடையில் விளக்குகிறது.

நவீன மொழியில் மொழிபெயர்த்துள்ளது

4பழைய ஆங்கில மொழிபெயர்ப்புகளில், 16-வது 17-வது நூற்றாண்டுகளில் பயன்படுத்தப்பட்ட வழக்கற்றுப்போன அநேக சொற்கள் இருக்கின்றன. இப்போது அவை புரியவில்லை என்றாலும் அக்காலத்தில் அவை நன்றாகப் புரிந்துகொள்ளப்பட்டன. உதாரணமாக, இவற்றை ஆங்கில பைபிளில் அதிகமாக பயன்படுத்தியவர் உவில்லியம் டின்டேல். இவர் தன்னுடைய மத எதிரிகளில் ஒருவரிடம் இவ்வாறு சொன்னதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது: ‘கடவுள் என்னை அநேக வருடம் வாழ அனுமதித்தால், ஏர் உழுகிற ஒரு சிறுவன், வேதாகமத்தை உங்களைவிட அதிகமாக அறியும்படி செய்வேன்.’ டின்டேலின் கிரேக்க வேதாகம மொழிபெயர்ப்பு, அவருடைய காலத்திலிருந்த ஏர் உழும் சிறுவன் புரிந்துகொள்ளும் அளவிற்கு எளிதாயிருந்தது. இருப்பினும், அவர் பயன்படுத்திய சொற்களில் பல இப்போது பழமையாகி விட்டன. ஆகவே ‘ஏர் உழும் சிறுவன்’ கிங் ஜேம்ஸ் பைபிளிலும் மற்ற பழைய பைபிள் மொழிபெயர்ப்புகளிலும் உள்ள அநேக சொற்களின் அர்த்தத்தை இக்காலத்தில் தெளிவாக புரிந்துகொள்ள முடியாது. இதனால், வழக்கற்றுப்போன பழங்காலத்திய மொழியின் வார்த்தைகளை நீக்கிவிட்டு பொதுமக்களின் வழக்கமான மொழியில் பைபிளை திரும்பப் புதுப்பிப்பது அவசியமாயிற்று.

5தேவாவியால் ஏவப்பட்ட வேதவாக்கியங்களை எழுதுவதில் பாமரர்கள் பேசிய மொழியே பயன்படுத்தப்பட்டது. பிளேட்டோவை போன்ற தத்துவஞானிகள் இலக்கிய கிரேக்கை பயன்படுத்தினர்; அப்போஸ்தலரும் மற்ற பூர்வ கிறிஸ்தவர்களும் அதைப் பயன்படுத்தவில்லை. அன்றாடம் பயன்படுத்தப்பட்ட கோய்னி, அதாவது பாமரர்கள் பேசிய கிரேக்கை அவர்கள் பயன்படுத்தினர். எபிரெய வேதாகமம் பொதுமக்கள் பேசிய மொழியில் எழுதப்பட்டது. அதைப் போலவே கிரேக்க வேதாகமமும் பாமர மொழியில் எழுதப்பட்டது. அப்படியானால், அவற்றின் மொழிபெயர்ப்புகளும், தெளிவாக புரிந்துகொள்வதற்கு பொதுமக்களின் மொழியில் இருப்பது மிகவும் முக்கியமானது. இதன் காரணமாக புதிய உலக மொழிபெயர்ப்பு, மூன்று அல்லது நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்த பழங்கால மொழியை பயன்படுத்தவில்லை; அதற்கு பதில் பைபிள் என்ன சொல்கிறது என்பதை வாசகர்கள் புரிந்துகொள்வதற்காக தெளிவான நவீன பேச்சு வழக்கைப் பயன்படுத்துகிறது.

617-வது நூற்றாண்டிலிருந்து 20-வது நூற்றாண்டு வரை, ஆங்கில மொழியில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றத்தின் அளவைப்பற்றி ஓரளவு புரிந்துகொள்வதற்கு கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பையும் புதிய உலக மொழிபெயர்ப்பையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். பின்வரும் உதாரணங்களைக் கவனியுங்கள்: கிங் ஜேம்ஸ் வர்ஷனில் “Suffered” என்பது புதிய உலக மொழிபெயர்ப்பில் “allowed” என்பதாகிறது (ஆதி. 31:7), “was bolled” என்பது “had flower buds” என்பதாகிறது (யாத். 9:31), “spoilers” என்பது “pillagers” என்பதாகிறது (நியா. 2:14), “ear his ground” என்பது “do his plowing” என்பதாகிறது (1 சா. 8:12), “when thou prayest” என்பது “when you pray” என்பதாகிறது (மத். 6:6), “sick of the palsy” என்பது “paralytic” என்பதாகிறது (மாற். 2:3), “quickeneth” என்பது “makes . . . alive” என்பதாகிறது (ரோ. 4:17), “shambles” என்பது “meat market” என்பதாகிறது (1 கொ. 10:25), “letteth” என்பது “acting as a restraint” என்பதாகிறது (2 தெ. 2:7). இன்னும் எத்தனையோ உதாரணங்களை சொல்லலாம். ஆகவே, வழக்கற்றுப்போன சொற்களுக்கு பதில் தற்போது நடப்பிலுள்ள சொற்களை பயன்படுத்தும் புதிய உலக மொழிபெயர்ப்பின் மதிப்பைப் போற்ற முடிகிறது.

சீரான மொழிபெயர்ப்புகள்

7 புதிய உலக மொழிபெயர்ப்பு, சொற்களை மொழிபெயர்க்கும் முறையில் மாறுபாடில்லாமல் ஒரே சீராக இருப்பதற்கு எல்லா முயற்சிகளையும் எடுக்கிறது. ஒரு எபிரெய அல்லது கிரேக்கச் சொல்லுக்கு, ஓர் ஆங்கிலச் சொல் குறிக்கப்பட்டிருக்கிறது. இது, ஆங்கிலத்தில் கருத்தை முழுமையாக அளிப்பதில் மொழி மரபு அல்லது சூழமைவு அனுமதிக்கும் வரை சீராக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உதாரணமாக, எபிரெய சொல்லாகிய நேபெஷ், “soul” என்று எல்லா இடங்களிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இதற்கு ஒத்த கிரேக்க சொல்லாகிய சைக்கீ, அது தோன்றும் ஒவ்வொரு இடத்திலும் “soul” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

8சில வார்த்தைகளுக்கு ஒரேவித ஸ்பெல்லிங் இருக்கும், ஆனால் அர்த்தம் வேறுபடும். Homographs எனப்படும் இப்படிப்பட்ட சொற்களை மொழிபெயர்ப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இவை மூல மொழியில் ஒரே விதமாக எழுதப்பட்டிருக்கின்றன, ஆனால் வேறுபட்ட அர்த்தங்களை அளிக்கின்றன. ஆகவே, இவற்றை மொழிபெயர்க்கும்போது சரியான அர்த்தமுடைய வார்த்தையை அளிப்பது சவாலாயுள்ளது. ஆங்கிலத்தில் ஒரே வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உள்ளன, உதாரணத்திற்கு “Polish” மற்றும் “polish”; “lead” என்பது ஈயம் என்றும் அர்த்தப்படுத்தும் வழிநடத்து என்றும் அர்த்தப்படுத்தும். இவற்றிற்கு ஸ்பெல்லிங் ஒன்றுதான், ஆனால் நிச்சயமாகவே அர்த்தங்கள் வேறு. ஒரு பைபிள் உதாரணத்திற்கு ரவ் (rav) என்ற எபிரெய வார்த்தையை எடுத்துக்கொள்ளலாம்; இது முற்றிலும் வித்தியாசப்படும் மூல சொற்களை குறிக்கிறது. ஆகவே, புதிய உலக மொழிபெயர்ப்பில் இவை வெவ்வேறு வார்த்தைகளாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. ரவ் என்பது யாத்திராகமம் 5:​5-ல் இருப்பதைப்போல் “பல” என்பதாக பொதுவாக அர்த்தப்படுகிறது. எனினும், 2 இராஜாக்கள் 18:​17-ல் “ரப்சாக்கே” (எபிரெயுவில் ரவ்-ஷா·க்கே [Rav-sha·qehʹ]) என்ற பட்டப் பெயரில் ரவ் பயன்படுத்தப்படும்போது ‘தலைவன்’ என அர்த்தங்கொள்கிறது. தானியேல் 1:​3-ல் (தி.மொ.) ‘தன் அரண்மனை உத்தியோகஸ்தரின் தலைவன்’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. (எரேமியா 39:​3, NW அடிக்குறிப்பையும் பாருங்கள்.) ரவ் என்ற சொல்லுக்கு ‘வில்வீரன்’ என்ற அர்த்தமும் உண்டு. இதன் காரணமாகவே எரேமியா 50:​29-ல் அவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட சொற்களை வேறுபடுத்துவதில், எல். கோலர், டபிள்யு. பாம்கார்ட்னர் போன்ற சொல் நிபுணர்கள்தான் அதிகாரம் உள்ளவர்கள் என்று மொழிபெயர்ப்பாளர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.

9ஒரே சீராயிருக்கும் இந்த அம்சத்தை குறித்ததில், எபிரெய மற்றும் கிரேக்க விளக்கவுரையாளரான அலெக்ஸாண்டர் தாம்ஸன், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பின் பேரில் தன் மதிப்பாய்வுரையில் சொன்னதை கவனியுங்கள்: “இந்த மொழிபெயர்ப்பு சந்தேகமில்லாமல் திறமைவாய்ந்த அறிவுக்கூர்மையுள்ள அறிஞர்களின் படைப்பு. இவர்கள், கிரேக்க மூலவாக்கியத்தின் உண்மையான கருத்தை ஆங்கிலத்தில் எவ்வளவு சரியாக முடியுமோ அவ்வளவு சரியாக வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கின்றனர். இந்த மொழிபெயர்ப்பு, முக்கியமான ஒவ்வொரு கிரேக்கச் சொல்லுக்கும் ஒரே ஆங்கில அர்த்தத்தை கொடுப்பதற்கும், கூடியவரை சொல்லர்த்தமாயிருப்பதற்கும் முயற்சிக்கிறது. . . . “justify” என்ற வார்த்தை ‘நீதிமானாக அறிவிக்கப்படுவது’ என்பதாக வெகு திருத்தமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. . . . சிலுவை என்பதற்கான சொல் ‘வாதனையின் கழுமரம்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது, . . . லூக்கா 23:​43, ‘மெய்யாகவே இன்று நான் உனக்குச் சொல்கிறேன், நீ பரதீஸில் என்னுடன் இருப்பாய்,’ என்பதாக சரியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையான மொழிபெயர்ப்புகளை ஒப்பிடும்போது இது குறிப்பிடத்தக்க முன்னேற்றமே.” எபிரெய வேதாகமத்தின் மொழிபெயர்ப்பின்பேரில் இதே மதிப்பாய்வாளர் இந்த குறிப்பை கூறினார்: “புதிய உலக மொழிபெயர்ப்பை சொந்தமாக வைத்திருப்பது பயனுள்ளது. அது உயிர்த்துடிப்புள்ள மொழிபெயர்ப்பு, வாசகரை சிந்தித்து படிக்கும்படி செய்கிறது. இது நுட்பப் பிழை கண்டுபிடிப்போரின் தயாரிப்பு அல்ல, மாறாக கடவுளுக்கும் அவருடைய வார்த்தைக்கும் மதிப்புக்கொடுக்கும் அறிஞர்களின் படைப்பு.”​—த டிஃபரன்ஷியேட்டர், ஏப்ரல் 1952, பக்கங்கள் 52-7-ம், ஜூன் 1954, பக்கம் 136-ம்.

10 புதிய உலக மொழிபெயர்ப்பின் ஒத்திசைவு, நுணுக்கமான பைபிள் விவாதங்கள் பலவற்றில் வெற்றி பெற்றிருக்கிறது. உதாரணமாக, சில ஆண்டுகளுக்கு முன்னால், நியூ யார்க்கிலுள்ள பகுத்தறிவாளர் சங்கம், பைபிள் சம்பந்தமாக தங்கள் தொகுதியினருக்கு பேச்சு கொடுக்க இரண்டு பேச்சாளர்களை அனுப்பும்படி உவாட்ச் டவர் சொஸைட்டியை கேட்டது. அந்த வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தக் கல்வியறிவாளர்கள், ஃபால்சம் இன் யுனொ ஃபால்சம் இன் டோட்டோ என்ற லத்தீன் விதியை கடைப்பிடித்தனர். இதன் அர்த்தம், ஒரு குறிப்பில் தவறானதாக நிரூபிக்கப்படுகிற ஒரு விவாதம் முற்றிலும் தவறானதே என்பதாகும். அந்த விவாதத்தின்போது, பைபிளின் நம்பக தன்மையை மறுத்து யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக ஒருவர் சவால்விட்டார். ஆதியாகமம் 1:3-ஐ அங்கு கூடியிருந்தவர்களுக்கு வாசிக்கும்படி கேட்டார், இது புதிய உலக மொழிபெயர்ப்பிலிருந்து வாசிக்கப்பட்டது: “கடவுள் தொடர்ந்து: ‘ஒளி உண்டாகக்கடவது’ என்று சொன்னார். அப்போது ஒளி உண்டாயிற்று.” நம்பிக்கையுடன், அவர் அடுத்தபடியாக ஆதியாகமம் 1:​14-ஐ வாசிக்கும்படி கேட்டார். இதுவும் புதிய உலக மொழிபெயர்ப்பிலிருந்து வாசிக்கப்பட்டது: “கடவுள் மேலும் தொடர்ந்து: ‘வானங்களின் ஆகாயவிரிவில் சுடர்கள் உண்டாகக்கடவது’ என்றார்.” “நிறுத்தும்,” என்று அவர் கூறி, “என்ன வாசிக்கிறீர்? முதலாவது நாளிலும், மறுபடியுமாக நான்காவது நாளிலும் கடவுள் வெளிச்சத்தை உண்டாக்கினார் என்று என்னுடைய பைபிள் சொல்கிறது, இது முரண்பாடாயுள்ளது,” என்றார். எபிரெயு தனக்கு தெரியுமென்று அவர் சொன்னபோதிலும், 3-வது வசனத்தில் “வெளிச்சம்” என்று மொழிபெயர்க்கப்பட்ட எபிரெயச் சொல் ஓர் (ʼohr) எனவும், 14-வது வசனத்திலுள்ளது வேறு சொல்லாகிய மாஓர் (ma·ʼohrʹ) எனவும், இது சுடரை அல்லது வெளிச்சத்தின் தோற்றுமூலத்தை குறிக்கிறதென்றும் அவருக்கு சுட்டிக்காட்ட வேண்டியதாயிற்று. விளைவு? அந்த ‘அறிவாளி’ தொங்கிய முகத்தோடு பேசாமல் உட்கார்ந்துவிட்டார். c புதிய உலக மொழிபெயர்ப்பின் ஒத்திசைவு அந்த குறிப்பில் வெற்றியடைந்து, பைபிள் நம்பகமானது, பயனுள்ளது என்பதை நிரூபித்தது.

வினைச்சொற்கள் கவனமாக மொழிபெயர்க்கப்பட்டிருப்பது

11கிரேக்க மற்றும் எபிரெய வினைச்சொற்களுடைய செயலின் கருத்தை தெரிவிப்பதற்கு புதிய உலக மொழிபெயர்ப்பு விசேஷ கவனம் செலுத்துகிறது. இவ்வாறு செய்வதில், புதிய உலக மொழிபெயர்ப்பு, மூலமொழி எழுத்துக்களின் விசேஷித்த அழகையும், எளிமையையும், வலிமையையும், சொல்லமைப்பையும் பாதுகாக்க முயற்சிக்கிறது. இவ்வாறு செயல்களின் உண்மையான நிலைகளை கவனமாக விளக்குவதற்கு ஆங்கிலத்தில் துணை வினைச்சொற்களை (auxiliary verbs) பயன்படுத்துவது அவசியமாக இருந்திருக்கிறது. மூல வேதவாக்கியங்கள், அவற்றின் வினைச்சொற்களுடைய வல்லமையால், அவ்வளவு சக்தி வாய்ந்தவையாகவும் வலியுறுத்துபவையாகவும் உள்ளன.

12மேற்கத்திய மொழிகள் பெரும்பான்மையானவற்றிற்கு “காலம்” பொருத்தப்படும் முறையில் எபிரெய வினைச்சொற்களுக்கு “காலங்கள்” (tenses) இல்லை. ஆங்கிலத்தில், வினைச்சொற்கள் கால நோக்குநிலையிலிருந்தே முக்கியமாக கருதப்படுகின்றன: இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம். மறுபட்சத்தில் எபிரெய வினைச்சொல்லோ, செயலின் நிலையையே அடிப்படையாக வெளிப்படுத்துகிறது. அதாவது, அந்த செயல் முடிவடைந்ததாக (முற்றுப்பெற்ற நிலை [perfect state]) அல்லது முடிவடையாததாக (முற்றுப்பெறா நிலை [imperfect state]) கருதப்படுகிறது. எபிரெய வினைச்சொல்லின் இந்த நிலைகளை, கடந்தகால அல்லது எதிர்கால செயல்களை குறிப்பதற்கு பயன்படுத்தலாம், சூழமைவு காலத்தை தீர்மானிக்கும். உதாரணமாக, வினைச்சொல்லின் முற்றுப்பெற்ற, அல்லது முடிவடைந்த நிலை, இயல்பாகவே கடந்தகால செயல்களை குறிக்கிறது. எனினும், அது எதிர்கால சம்பவத்தையும், எதிர்காலத்தில் அச்சம்பவம் நிச்சயமாக நடக்கப்போவதை அல்லது நடப்பதற்கு கடமைப்பட்டிருப்பதை காட்டி, ஏற்கெனவே நடந்துவிட்டதைப்போல் சொல்லப்படுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

13எபிரெய வினைச்சொல்லின் நிலையை ஆங்கிலத்தில் திருத்தமாக மொழிபெயர்ப்பது மிகவும் முக்கியமானது; இல்லையெனில் அதன் கருத்து மாற்றப்பட்டு முற்றிலும் வேறுபட்ட எண்ணத்தை கொடுத்துவிடும். இதற்கு உதாரணமாக, ஆதியாகமம் 2:​2, 3-ல் உள்ள சொற்களை கவனியுங்கள். கடவுள் ஏழாம் நாளில் ஓய்ந்திருப்பதை குறித்து பேசுகையில், “ஓய்ந்திருந்தார்,” “நிறுத்தினார்,” “நிறுத்தியிருந்தார்,” “பின்பு ஓய்வெடுத்தார்,” “கடவுள் ஓய்வெடுத்தார்,” ஆகியவற்றை பல மொழிபெயர்ப்புகள் பயன்படுத்துகின்றன. இதை வாசிப்பவர், கடவுள் ஏழாம் நாளில் ஓய்வெடுத்தது, கடந்த காலத்திலேயே முடிந்துவிட்டது என்ற தீர்மானத்திற்கு வருவார். ஆனால் புதிய உலக மொழிபெயர்ப்பு ஆதியாகமம் 2:​2, 3-ல் வினைச்சொற்களின் கருத்தை எவ்வாறு தெரிவிக்கிறது என்பதை கவனியுங்கள்: “கடவுள் தம்முடைய வேலையை ஏழாம் நாளில் நிறைவேற்றி தம்முடைய எல்லா வேலையிலிருந்தும் ஏழாவது நாளில் ஓய்ந்திருக்க தொடங்கினார். ஏழாம் நாளை கடவுள் ஆசீர்வதிக்கத் தொடங்கி அதை பரிசுத்தமாக்கினார், ஏனெனில் தாம் படைத்த எல்லாவிதமான வேலையிலிருந்தும் அவர் ஓய்ந்துகொண்டிருக்கிறார்.” 2-வது வசனத்தில் “ஓய்ந்திருக்கத் தொடங்கினார்” என்ற சொற்றொடர் எபிரெயுவில் முற்றுப்பெறா நிலையிலுள்ள ஒரு வினைச்சொல்லாகும், ஆகவே முடிவடையாத அல்லது தொடர்ந்துகொண்டிருக்கும் செயலின் எண்ணத்தை இது வெளிப்படுத்துகிறது. “ஓய்ந்திருக்கத் தொடங்கினார்” என்ற இந்த மொழிபெயர்ப்பு எபிரெயர் 4:​4-7-ல் சொல்லப்பட்டிருப்பதோடு ஒத்திருக்கிறது. மறுபட்சத்தில், ஆதியாகமம் 2:​3-ல் உள்ள வினைச்சொல் முற்றுப்பெற்ற நிலையில் இருக்கிறது. ஆனால் 2-வது வசனத்தோடும் எபிரெயர் 4:​4-7-வரையுள்ள வசனங்களோடும் இசைவாக இருப்பதற்காக ஆதியாகமம் 2:​3-ல் “ஓய்ந்துகொண்டிருக்கிறார்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

14எபிரெய வினைச்சொல்லின் அமைப்புகளை மொழிபெயர்ப்பதில் பிழைகள் ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்று, வாவ் (waw) தொடர்ச்சி எனப்படும் இலக்கணக் கோட்பாடாகும். வாவ் (ו) (Waw [ו]) என்பது அடிப்படையாக “உம்” எனப் பொருள்படும் எபிரெய இணையிடைச் சொல்லாகும். இது ஒருபோதும் தனியாக தோன்றுவதில்லை. ஒரு சொல்லை அமைப்பதற்காக, எப்போதும் மற்றொரு சொல்லோடு, பல சந்தர்ப்பங்களில் எபிரெய வினைச்சொல்லோடு இணைந்திருக்கும். இந்த சம்பந்தம், அந்த வினைச்சொல்லை ஒரு நிலையிலிருந்து மற்றொன்றிற்கு, அதாவது, (ஆதியாகமம் 2:​2, 3-ல், தற்கால மொழிபெயர்ப்புகள் உட்பட பல மொழிபெயர்ப்புகளில் செய்யப்பட்டிருப்பதுபோல்) பூரணமற்ற நிலையிலிருந்து பூரண நிலைக்கு அல்லது பூரண நிலையிலிருந்து பூரணமற்ற நிலைக்கு இப்போதும் மாற்றுவதாக கூறப்படுகிறது; இந்த விளைவு “வாவ் பரிமாற்றம்” என்பதாக விவரிக்கப்பட்டிருக்கிறது. வினைச்சொல்லின் இந்த அமைப்பை தவறாக பொருத்தியது மிகுந்த குழப்பத்திற்கும் எபிரெய மூலவாக்கியத்தை தவறாக மொழிபெயர்ப்பதற்கும் வழிநடத்தியிருக்கிறது. வினைச்சொல்லின் நிலையை, ‘வாவ்’ என்பதால் மாற்ற முடியாது என்பதாக புதிய உலக மொழிபெயர்ப்பு கருதுகிறது. மாறாக, எபிரெய வினைச்சொல்லின் சரியான மற்றும் தனித்தன்மையான வலிமையை வெளிப்படுத்தி, இவ்வாறு மூலவாக்கியத்தின் திருத்தமான அர்த்தத்தை பாதுகாக்க முயற்சிக்கிறது. d

15கிரேக்க வினைச்சொற்களை மொழிபெயர்ப்பதிலும் இதைப்போன்ற கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. கிரேக்கில் வினைச்சொல்லின் காலங்கள் ஒரு செயலின் அல்லது நிலையின் காலத்தை மட்டுமல்ல, அது கணநேரமேயுள்ளதா, தொடங்குகிறதா, தொடருகிறதா, திரும்பத்திரும்ப செய்யப்படுகிறதா, அல்லது முடிவடைந்ததா என்பதாக செயலின் வகையையுங்கூட வெளிப்படுத்துகின்றன. கிரேக்க மொழியின் வினைச்சொல் அமைப்புகளில் இத்தகைய கருத்துக்களுக்கு கவனம் செலுத்துவது, விவரிக்கப்பட்ட செயலின் முழு வலிமையுடன் துல்லியமான மொழிபெயர்ப்புக்கு வழிநடத்துகிறது. உதாரணமாக, கிரேக்க வினைச்சொல்லில், தொடரும் எண்ணம் ஏற்படுமிடத்தில், அதன் கருத்தை கொடுப்பது ஒரு நிலைமையின் உண்மையான இயல்பை வெளிப்படுத்துகிறது. அதோடு எச்சரிப்பையும் அறிவுரையையும் அதிக வலிமையுள்ளதாக்குகிறது. உதாரணமாக, பரிசேயர் சதுசேயரின் தொடர்ந்த நம்பிக்கையற்றத் தன்மை இயேசுவின் இவ்வார்த்தைகளில் தெளிவாகிறது: “பொல்லாத விபசார சந்ததி ஒரு அடையாளத்துக்காக தொடர்ந்து தேடிக்கொண்டிருக்கிறது.” சரியான காரியங்களில் தொடர்ந்து செயல்படுவதற்கான தேவை, இயேசுவின் இவ்வார்த்தைகளில் நன்றாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது: “உங்கள் சத்துருக்களில் தொடர்ந்து அன்புகூருங்கள்.” “அப்படியானால், முதலாவது ராஜ்யத்தைத் . . . தொடர்ந்து தேடிக்கொண்டிருங்கள்.” “தொடர்ந்து கேட்டுக்கொண்டிருங்கள், அது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தொடர்ந்து தேடிக்கொண்டிருங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தொடர்ந்து தட்டிக்கொண்டிருங்கள், அது உங்களுக்குத் திறக்கப்படும்.”​—மத். 16:4; 5:44; 6:33; 7:​7; NW.

16கிரேக்க மொழி, ஏரிஸ்ட் (aorist) எனப்படும் வழக்கத்திற்கு மாறான ஒரு காலத்தை கொண்டுள்ளது. இது கணநேரமேயுள்ள நீடிக்கும் ஒரு செயலை குறிப்பிடுகிறது. ஏரிஸ்ட் கால வினைச்சொற்கள், அவற்றின் சூழமைவுக்கேற்ப பல்வேறு வகைகளில் மொழிபெயர்க்கப்படலாம். திட்டவட்டமான எந்த காலமும் சம்பந்தப்படாமல் இருப்பினும் குறிப்பிட்ட ஒரு செயலை சுட்டி காட்டுவதற்கும் அது பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய ஓர் உதாரணம் 1 யோவான் 2:​1-ல் காணப்படுகிறது. அந்த வசனத்திலுள்ள “பாவம்” என்பதற்கான வினைச்சொல்லை பல மொழிபெயர்ப்புகள் எவ்வாறு மொழிபெயர்க்கின்றன? பாவத்தை தொடர்ந்து செய்வது போன்ற கருத்தையே அந்த மொழிபெயர்ப்புகள் கொடுக்கின்றன. புதிய உலக மொழிபெயர்ப்போவெனில், ‘பாவம் செய்துவிட்டால்’ என வாசிக்கிறது; அதாவது ஒரேவொரு பாவ செயலை குறிக்கிறது. கிறிஸ்தவன் ஒரு பாவச் செயலை செய்துவிட்டால், அவனுக்கு இயேசு கிறிஸ்து இருக்கிறார், அவர் பரலோக தகப்பனிடம் பரிந்துபேசுபவராக அல்லது உதவியாளராக செயல்படுகிறார் என்ற திருத்தமான கருத்தை தெரிவிக்கிறது. 1 யோவான் 3:​6-8, 5:​18 போன்ற வசனங்கள் ‘பாவத்தை பழக்கமாக’ செய்வதை கண்டனம் செய்கின்றன. ஆகவே, இவற்றோடு 1 யோவான் 2:1 எவ்வகையிலும் முரண்படுகிறதற்குப் பதிலாக, ஒரு பாவச் செயலுக்கும், ஆக்கினைத் தீர்ப்பில் விளைவடையும் பாவத்தை பழக்கமாக செய்வதற்கும் உள்ள வித்தியாசத்தையே காட்டுகிறது. e

17கிரேக்க மொழியில் முற்றுப்பெறா காலம் (imperfect tense), தொடரும் ஒரு செயலை மட்டுமல்லாமல், தொடங்கி ஆனால் முடிக்கப்படாத ஒரு செயலையுங்கூட தெரிவிக்கலாம். கிங் ஜேம்ஸ் வர்ஷனில் எபிரெயர் 11:17-19-வரை உள்ள வசனங்களை கவனியுங்கள்: “விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான். வாக்குத்தத்தங்களைப் பெற்றவன் . . .  தனக்கு ஒரேபேறானவனையே பலியாக ஒப்புக்கொடுத்தான்.” “பலியாக ஒப்புக்கொடுத்தான்” என்பதில் வரும் வினைச்சொல் கிரேக்கில் இந்த இரண்டு இடங்களிலும் வேறுபடுகிறது. முதலாவதாக தோன்றும்போது அது முற்றுப்பெற்ற (perfect tense) காலத்திலுள்ளது, இரண்டாவதில் அது முற்றுப்பெறா (imperfect tense) (கடந்தகால தொடரும் [past continuous form]) காலத்தில் உள்ளது. இந்த வெவ்வேறுபட்ட கால நிலைகளை கவனத்தில் கொண்டு, புதிய உலக மொழிபெயர்ப்பு, அந்த வசனத்தை இவ்வாறு மொழிபெயர்க்கிறது: ‘ஆபிரகாம், தான் சோதிக்கப்பட்டபோது, ஈசாக்கை ஏறக்குறைய பலிசெலுத்திவிட்டார், . . . தன்னுடைய ஒரேபேறான குமாரனை அவர் பலிசெலுத்த முயற்சித்தார்.’ இவ்வாறு அந்த முதல் வினைச்சொல்லின் முற்றுப்பெற்ற நிலை பாதுகாக்கப்பட்டது, அதேசமயத்தில் இரண்டாவது வினைச்சொல்லின் முற்றுப்பெறா காலமானது, அந்த செயல் முயற்சி செய்யப்பட்டும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்பதை காட்டுகிறது.​—ஆதி. 22:​9-14.

18பெயர்ச்சொற்கள் (nouns) போன்ற சொல்லிலக்கண கூறுகளின் மற்ற பாகங்களுக்கு கூர்ந்த கவனம் செலுத்துவது, முரண்பாடுகளாக தோன்றுகிறவற்றை தெளிவாக்கியிருக்கிறது. உதாரணமாக, அப்போஸ்தலர் 9:​7 தமஸ்குவுக்கு போகும் வழியில் சவுலுக்கு ஏற்பட்ட குறிப்பிடத்தக்க அனுபவத்தை சொல்கிறது. அதில், அவருடைய பயண தோழர்கள் ‘குரலைக் கேட்டார்கள்’ ஆனால் ஒருவரையும் காணவில்லை என்று பல மொழிபெயர்ப்புகள் சொல்கின்றன. பின்பு அப்போஸ்தலர் 22:​9-ல் பவுல் இந்த நிகழ்ச்சியை எடுத்துரைக்கும்போது, அதே மொழிபெயர்ப்புகள், அவர்கள் வெளிச்சத்தை கண்டபோதிலும் ‘குரலையோ அவர்கள் கேட்கவில்லை’ என்று கூறுகின்றன. எனினும், முதல் குறிப்பில், “குரல்” என்பதற்கான கிரேக்க சொல் ஆறாம் (genitive case) வேற்றுமையிலுள்ளது, ஆனால் இரண்டாவது குறிப்பில், அப்போஸ்தலர் 9:​4-ல் இருப்பதுபோல், இது இரண்டாம் வேற்றுமையிலுள்ளது (accusative case). ஏன் இந்த வேறுபாடு? பல்வேறு மொழிபெயர்ப்புகள் இந்த வித்தியாசத்தை எடுத்துக்காட்டுவதில்லை, எனினும் கிரேக்க மொழியில் வேற்றுமையின் மாற்றத்தால் இந்த வித்தியாசம் தெளிவாக தெரிகிறது. சொல்லர்த்தமாக அந்த மனிதர் ‘குரலைக்’ கேட்டார்கள். ஆனால் பவுல் கேட்ட முறையில் அவர்கள் அதை கேட்கவில்லை, அதாவது, சொற்களை கேட்டு அவற்றை புரிந்துகொள்ளவில்லை. இவ்வாறு, புதிய உலக மொழிபெயர்ப்பு, அப்போஸ்தலர் 9:​7-ல் ஆறாம் வேற்றுமை பயன்படுத்தப்பட்டிருப்பதை கருத்தில் கொள்கிறது. ஆகவே பவுலுடன் இருந்த மனிதர் ‘நிச்சயமாகவே ஒரு குரலின் சத்தத்தை கேட்டனர், ஆனால் எந்த மனிதனையும் காணவில்லை,’ என்பதாக மொழிபெயர்க்கிறது.

ஆங்கில “YOU” என்பதன் பன்மை காட்டப்பட்டுள்ளது

19பழைய ஆங்கிலத்தின் முன்னிலையாகிய “thee,” “thou,” மற்றும் “thy” என்பவை கடவுளை குறிப்பிடும் சந்தர்ப்பங்களில் நவீன மொழிபெயர்ப்புகள் சிலவற்றில் மாறாமல் தொடர்ந்திருக்கின்றன. எனினும், பைபிள் எழுதப்பட்ட மொழிகளில், கடவுளை நோக்கி பேசும்போது பயன்படுத்துவதற்குத் தனிப்பட்ட சுட்டுப்பெயர் எதுவும் இல்லை, ஒருவர் மற்றொருவரை அழைப்பதற்கு உயோகப்படுத்தும் சுட்டுப்பெயர்களே கடவுளுக்கும் பயன்படுத்தப்பட்டன. ஆகவே புதிய உலக மொழிபெயர்ப்பு, இப்படிப்பட்ட போலியான பக்தி ததும்பும் வார்த்தைகளை பயன்படுத்தவில்லை. மாறாக வழக்கமான பேச்சுவழக்கிலுள்ள “you” என்பதை எல்லா சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்துகிறது. “you” என்பதன் முன்னிலை பன்மையையும், ஆங்கிலத்தில் வெளிப்படையாக தெரியாத பன்மை வினைச்சொற்களையும் வேறுபடுத்தி காட்டுவதற்கு, இந்தச் சொற்கள் முழுவதுமாக பெரிய எழுத்துக்களில் (Captial Letters) சிறியதாக அச்சடிக்கப்பட்டுள்ளன. கொடுக்கப்பட்ட வேதவசனம் “you” என்பதைத் தனிப்பட்ட ஆளுக்கா அல்லது “YOU” என்பதாக தொகுதியான ஆட்களுக்கா/ஒரு சபைக்கா, எதற்கு பயன்படுத்துகிறது என்பதை அறிய வாசகருக்கு உதவுகிறது.

20உதாரணமாக, ரோமர் 11:​13-ல் பவுல் பலரை நோக்கி பேசுகிறார்: “புறஜாதியாராகிய உங்களுடனே (YOU) பேசுகிறேன்.” ஆனால் 17-ம் வசனத்தை பற்றியதென்ன? கிரேக்க மொழியில் (you) என்பது “நீ” என்ற ஒருமைக்கு மாறி, தெளிவாகவே தனியாளுக்கு பொருத்தப்படுகிறது: “சில கிளைகள் முறித்துப்போடப்பட்டிருக்க, . . . அவை இருந்த இடத்தில் நீ (you) ஒட்டவைக்கப்பட்”டிருக்கிறாய்.

புதிய உலக மொழிபெயர்ப்பு மற்ற மொழிகளில்

21உவாட்ச் டவர் சொஸைட்டி, புதிய உலக மொழிபெயர்ப்பை, அதிக பரவலாக பயன்படுத்தப்படுகிற ஆறு மொழிகளாகிய, டச், பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், போர்ச்சுகீஸ், மற்றும் ஸ்பானிஷில் மொழிபெயர்க்க போவதாக 1961-ல் அறிவித்தது. இந்த மொழிபெயர்ப்பு வேலை அதிக திறமைவாய்ந்த ஒப்புக்கொடுத்த மொழிபெயர்ப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இவர்கள் எல்லாரும் நியூ யார்க், புரூக்லினிலுள்ள உவாட்ச் டவர் சொஸைட்டியின் தலைமை அலுவலகத்தில் ஒன்றாக வேலைசெய்தனர். திறம்பட்ட வழிநடத்துதலின்கீழ், அவர்கள் பெரிய சர்வதேச குழுவாக சேவித்தனர். 1963-ல், அ.ஐ.மா., விஸ்கான்ஸின், மில்வாக்கியில் யெகோவாவின் சாட்சிகளின் “நித்திய நற்செய்தி” மாநாட்டில், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு, மேற்குறிப்பிட்ட ஆறு மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியிடப்பட்டபோது, இந்த மொழிபெயர்ப்பின் பயன்கள் பொதுமக்களை சென்றெட்டியது. ஆங்கிலம் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளை பேசுவோரும் இப்போது இந்த நவீன மொழிபெயர்ப்பின் பலன்களை அனுபவிக்கலாம். அதன் பின்னும் மொழிபெயர்ப்பு வேலை தொடர்ந்துகொண்டிருக்கிறது, ஆகவே 1999-ல் பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு 34 மொழிகளில் கிடைத்தது, முழுமையாகவோ பகுதியாகவோ 10 கோடிக்கும் மேற்பட்ட பிரதிகள் அச்சடிக்கப்பட்டிருந்தன. f

வல்லமைவாய்ந்த கருவிக்காக நன்றி

22‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’ என்பதை நிரூபிப்பதற்கு புதிய உலக மொழிபெயர்ப்பு நிச்சயமாகவே வல்லமைவாய்ந்த கருவியாகும். அது திருத்தமாகவும் நம்பகமானதாகவும் இருக்கிறது, கடவுள் மனிதனிடம் பேசுவதை கேட்க விரும்புவோருக்கு உண்மையான மகிழ்ச்சியை அது அளிக்கக்கூடும் என்பதையும், குறிப்பாக வழக்கிலுள்ள நவீன மொழியில் உள்ளத்தை தொடுமாறு எழுதப்பட்டிருக்கிறது என்பதையும் இந்தக் கட்டுரையில் கவனிக்கிறோம். புதிய உலக மொழிபெயர்ப்பின் மொழிநடை கட்டியெழுப்புகிறது. மேலும் ஏவப்பட்ட மூல வேதவாக்கியங்களின் சக்திவாய்ந்த சொற்களை வாசகர் விரைவில் புரிந்துகொள்ள வைக்கிறது. தெளிவற்ற சொற்றொடர்களை புரிந்துகொள்வதற்கு வசனங்களை நாம் இனிமேலும் திரும்பத்திரும்ப வாசிக்க வேண்டியதில்லை. முதல் தடவையாக வாசிக்கும்போதே அது வல்லமையோடும் தெளிவோடும் நம்மிடத்தில் பேசுகிறது.

23 பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு, ‘ஆவியின் பட்டயமாகிய’ கடவுளுடைய வார்த்தையின் நேர்மையான மொழிபெயர்ப்பாகும். கிறிஸ்தவனின் ஆவிக்குரிய போரில் இது நிச்சயமாகவே பயனுள்ள போராயுதம். ‘கடவுளுடைய அறிவுக்கு எதிராக எழுப்பப்பட்ட பலத்த அரண்களான பொய்யான போதகங்களையும் விவாதங்களையும் தகர்ப்பதில்’ இது உதவுகிறது. நீதியுள்ள கடவுளுடைய ராஜ்யம் சம்பந்தப்பட்ட மகிமையான, பயனுள்ள, கட்டியெழுப்பும் காரியங்களாகிய, “தேவனுடைய மகத்துவங்களை” நன்றாக புரிந்துகொண்டு அறிவிப்பதற்கு எவ்வளவு சிறப்பாக அது நமக்கு உதவுகிறது!​—எபே. 6:​17, NW; 2 கொ. 10:​4, 5, தி.மொ.; அப். 2:11.

[அடிக்குறிப்புகள்]

a பழைய ஏற்பாட்டுக்கு அறிமுகம், (ஆங்கிலம்) ராபர்ட் ஹெச். பிஃபர், 1952, பக்கம் 94.

b கிங்டம் இன்டர்லீனியர் டிரான்ஸ்லேஷன், 1985 பதிப்பு, பக்கங்கள் 1133-8.

c வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கம் 528.

d துணைக்குறிப்புகளுள்ள NW பைபிள், பிற்சேர்கை 3சி, “எபிரெய வினைச்சொற்கள், தொடரும் செயலை அல்லது படிப்படியாக முன்னேறும் செயலை காட்டுதல்.”

e வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கம் 1008.

f முழுமையான பதிப்புகள் டேனிஷ், டச், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், ஜாப்பனீஸ், போர்ச்சுகீஸ், ஸ்பானிஷ் போன்ற மொழிகளில் (பகுதியாக ஃபின்னிஷிலும் ஸ்வீடிஷிலும்) பிரசுரிக்கப்பட்டன.

[கேள்விகள்]

1. (அ) என்ன போக்கை புதிய உலக மொழிபெயர்ப்பு திருத்துகிறது, எவ்வாறு? (ஆ) ஆங்கிலத்தில் யாவே அல்லது வேறு வார்த்தையை பயன்படுத்துவதைப் பார்க்கிலும் ஜெஹோவா என்பதாக ஏன் பயன்படுத்தப்படுகிறது?

2. (அ) கடவுளுடைய பெயரை கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் ஏற்கெனவே உபயோகித்தற்கு உதாரணங்கள் இருக்கின்றனவா? (ஆ) இதனால் என்ன சந்தேகம் நீக்கப்படுகிறது?

3. என்ன வழிவகைகளில் புதிய உலக மொழிபெயர்ப்பு, மூல எழுத்துக்களின் ஆற்றலையும் அழகையும் கருத்தையும் தெரிவிக்க உதவுகிறது?

4. (அ) பூர்வ மொழிபெயர்ப்பாளர் ஒருவருடைய சிறந்த லட்சியம் என்ன? (ஆ) காலப்போக்கில் எது அவசியமாயிற்று?

5. எப்படிப்பட்ட மொழியில் பைபிள் இருக்க வேண்டும், ஏன்?

6. வழக்கற்றுப்போன சொற்களுக்கு பதிலாக தற்போது நடப்பிலுள்ள சொற்களை பயன்படுத்துவதன் நன்மையை உதாரணத்தால் விளக்குங்கள்.

7. புதிய உலக மொழிபெயர்ப்பு அதன் மொழிபெயர்ப்பில் எவ்வாறு சீராக உள்ளது?

8. (அ) ஸ்பெல்லிங் ஒரே மாதிரி இருந்து ஆனால் அர்த்தத்தில் வேறுபடும் சொற்களின் உதாரணங்களை கொடுங்கள். (ஆ) மொழிபெயர்ப்பில் இவை எவ்வாறு கையாளப்பட்டிருக்கின்றன?

9. எபிரெய மற்றும் கிரேக்க மதிப்புரையாளர் ஒருவர் புதிய உலக மொழிபெயர்ப்பை எவ்வாறு மதிப்பிட்டார்?

10. புதிய உலக மொழிபெயர்ப்பின் ஒரே சீரான தன்மை எவ்வாறு பைபிள் சத்தியத்திற்கு ஆதரவாக இருக்கிறது என்பதை விளக்குங்கள்.

11. மூல வேதவாக்கியங்களின் ஊக்கமிகுந்த என்ன அம்சம் புதிய உலக மொழிபெயர்ப்பில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது, எவ்வாறு?

12. (அ) எபிரெயு எந்த முறையில் மேற்கத்திய மொழிகளிலிருந்து வேறுபடுகிறது? (ஆ) எபிரெய வினைச்சொல்லின் இரண்டு நிலைகளை விளக்குங்கள்.

13. ஆதியாகமம் 2:​2, 3-ஐத் திருத்தமாக புரிந்துகொள்வதில், எபிரெய வினைச்சொல்லின் நிலைக்கு சரியான கவனம் செலுத்துவது ஏன் முக்கியம்?

14. வாவ் தொடர்ச்சியை பற்றிய பிழையான கருத்தை தவிர்த்து, புதிய உலக மொழிபெயர்ப்பு எபிரெய வினைச்சொற்களை குறித்ததில் என்ன செய்ய பிரயாசப்படுகிறது?

15. (அ) கிரேக்க வினைச்சொற்கள் எவ்வளவு கவனமாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன? (ஆ) தொடரும் எண்ணத்தை திருத்தமாக தருவதன் நன்மையை விளக்குங்கள்.

16. கிரேக்க மொழியில் ஏரிஸ்ட் காலத்தை கவனத்தில் வைத்து, 1 யோவான் 2:​1-ல் ‘பாவத்தின்’ சம்பந்தமாக யோவானின் குறிப்பு எவ்வாறு திருத்தமாக இருக்கிறது?

17. கிரேக்கில் முற்றுப்பெறா காலம், தொடரும் செயலை காட்டுவது மட்டுமல்லாமல், வேறு எதையும் வெளிப்படுத்தலாம்? உதாரணத்துடன் விளக்குங்கள்.

18. சொல்லிலக்கண கூறுகளின் மற்ற பாகங்களுடைய உபயோகத்திற்கு கூர்ந்த கவனம் செலுத்துவதிலிருந்து என்ன பயன் உண்டாயிருக்கிறது? ஒரு உதாரணம் கொடுங்கள்.

19, 20. (அ) போலியான பக்தி ததும்பும் வார்த்தைகளை பற்றியதில் புதிய உலக மொழிபெயர்ப்பு என்ன செய்திருக்கிறது, ஏன்? (ஆ) ஒருமை “நீ” (you) என்பதை பன்மையிலிருந்து எவ்வாறு வேறுபடுத்தலாம் என்பதை விளக்குங்கள்.

21. (அ) பெரும்பாலானவர்கள் புதிய உலக மொழிபெயர்ப்பின் நன்மைகளை மகிழ்ச்சியோடு அனுபவிப்பதற்கு காரணம் என்ன? (ஆ) 1999-ம் ஆண்டுக்குள் உவாட்ச் டவர் சொஸைட்டி அச்சடித்த புதிய உலக மொழிபெயர்ப்பு பிரதிகளின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?

22, 23. தேவாவியால் ஏவப்பட்ட வேதவாக்கியத்தின் இந்த மொழிபெயர்ப்பு என்ன சிறப்பான வழிகளில் கிறிஸ்தவனுக்கு நன்மையளிக்கிறது?