Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆராய்ச்சி எண் 9—தொல்பொருள் ஆராய்ச்சியும் பைபிளும்

ஆராய்ச்சி எண் 9—தொல்பொருள் ஆராய்ச்சியும் பைபிளும்

ஆராய்ச்சி எண் 9—தொல்பொருள் ஆராய்ச்சியும் பைபிளும்

பைபிள் பதிவை உறுதிப்படுத்தும் தொல்பொருள் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளையும் பைபிள் சாரா சரித்திரத்தின் பூர்வ பதிவுகளையும் பற்றிய ஆராய்ச்சி.

பைபிள் சம்பந்தப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சியானது, பூமியில் காணப்படும் கருவிகள், கட்டிடங்கள், எழுத்துக்கள், இன்னும் மற்ற தடயங்களின் மூலமாக, பைபிள் கால ஜனங்களையும் சம்பவங்களையும் பற்றி கற்றறிவதாகும். பைபிள் சார்ந்த பூர்வ இடங்களில், எஞ்சியுள்ள பூர்வ பொருட்களை அல்லது கலைவேலைப்பாடுகளை தேடிக் கண்டுபிடிப்பது, கடுமையாக அலைந்து ஆராய்வதையும் லட்சக்கணக்கான டன் எடையுள்ள மண்ணை தோண்டியெடுப்பதையும் உட்படுத்தியிருக்கிறது. கலைவேலைப்பாடு என்பது, மனித வேலைத் திறனை காட்டுவதும் அவனுடைய நடவடிக்கைக்கும் வாழ்க்கைக்கும் அத்தாட்சியை அளிப்பதுமான ஏதாவது ஒரு பொருளாகும். மண்பாண்டங்கள், பாழடைந்த கட்டிடங்கள், களிமண் பலகைகள், பொறிக்கப்பட்ட எழுத்துக்கள், ஆவணங்கள், நினைவுச் சின்னங்கள், கல்லில் பதிவுசெய்யப்பட்ட செய்திப் பட்டியல்கள் ஆகியவை கலைவேலைப்பாடுகளில் உள்ளடங்கலாம்.

2தொல்பொருள் ஆராய்ச்சியானது, 20-வது நூற்றாண்டின் தொடக்கத்துக்குள், கவனமாக ஆராயும் துறையாக முன்னேறியிருந்தது. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலுமுள்ள பெரிய பல்கலைக்கழகங்களும் அரும்பொருட்காட்சி சாலைகளும் பைபிள் நாடுகளுக்கு சுற்றுப்பயணங்களை ஆதரித்தன. இதன் விளைவாக, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், பைபிள் காலங்களில் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதைப் பற்றிய ஏராளமான தகவல்களை தோண்டியெடுத்திருக்கின்றனர். சில சமயங்களில் தொல்பொருள் கண்டுபிடிப்புகள், பைபிளின் திருத்தமான தன்மையை நுட்ப விவரம் வரையாகவுங்கூட காட்டி, பைபிளின் நம்பகத் தன்மையை மெய்ப்பித்திருக்கின்றன.

தொல்பொருள் ஆராய்ச்சியும் எபிரெய வேதாகமமும்

3பாபேல் கோபுரம். பைபிளின் பிரகாரம், பாபேல் கோபுரம் மிகப் பெரிய கட்டிட வேலையாயிருந்தது. (ஆதி. 11:​1-9) கவனத்தை கவரும் விதமாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், பூர்வ பாபிலோனின் பண்டைய இடிபாடுகளிலும் அவற்றைச் சுற்றிலும், படிப்படியாக ஏறும் பல கோபுரக் கோயில்களை அல்லது கூர்கோபுரங்களைப் போன்ற ஆலய கோபுரங்களையும், பாபிலோனின் மதில்களுக்குள் இருந்த எட்டிமெனான்கியின் பாழடைந்த ஆலயத்தையும் கண்டுபிடித்திருக்கின்றனர். இத்தகைய ஆலயங்களைப் பற்றிய பூர்வ பதிவுகளில், “அதன் உச்சி வானங்களை எட்டும்,” என்ற வாசகம் அடிக்கடி தோன்றுகிறது. அரசன் நேபுகாத்நேச்சார் பின்வருமாறு சொன்னதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது: “எட்டிமெனான்கியிலுள்ள படிப்படியான மேடைகளைக் கொண்ட கோபுரத்தின் உச்சி, வானங்களுக்கு மேலாக உயரும்படி அதை நான் எழுப்பினேன்.” அதைப் போன்ற ஒரு கோபுரத்தின் வீழ்ச்சி சம்பந்தமாக ஒரு துண்டுப்பகுதி இவ்வாறு கூறுகிறது: “இந்த ஆலயத்தைக் கட்டியது தெய்வங்களுக்கு கோபமூட்டியது. கட்டப்பட்டதை ஒரே இரவில் அவை தகர்த்தன. அம்மக்களை அவை தூரமாக சிதறிப்போகச் செய்து, அவர்களுடைய பேச்சை விளங்காததாக ஆக்கின. தொடர்ந்து கட்டுவதையும் தடைசெய்துவிட்டன.” a

4கீகோனின் ஊற்றில் தண்ணீர் சுரங்கங்கள். 1867-ல் எருசலேமுக்கு அருகில் ஒரு தண்ணீர் கால்வாய், கீகோன் ஊற்றிலிருந்து திரும்ப மலைக்குள் ஓடிக்கொண்டிருப்பதையும், அதிலிருந்து ஒரு சுரங்க கால்வாய் மேலே தாவீதின் நகரத்தை நோக்கி செல்வதையும் சார்ல்ஸ் வாரன் கண்டுபிடித்தார். இதுவே, தாவீதின் ஆட்கள் அந்த நகரத்துக்குள் முதலாவதாக நுழைந்த வழியாக தோன்றுகிறது. (2 சா. 5:​6-10) 1909-11-ல் கீகோன் நீரூற்றிலிருந்து செல்லும் இந்த சுரங்க கால்வாய்கள் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டன. சராசரியாக 1.8 மீட்டர் உயரமுள்ள பெரிய சுரங்க கால்வாய் ஒன்று, கடினமான பாறைகளில் 533 மீட்டர் தூரம் உளியால் செதுக்கி உண்டாக்கப்பட்டிருந்தது. இது கீகோனிலிருந்து (நகரத்திற்குள் இருந்த) டைரோப்பியன் பள்ளத்தாக்கிலுள்ள சீலோவாம் குளத்துக்கு வழிநடத்தியது. இது எசேக்கியா உண்டாக்கியதாக தெரிகிறது. இந்த ஒடுக்கமான சுரங்கப் பாதையின் சுவரில் பழங்கால எபிரெய எழுத்து கல்வெட்டில் காணப்பட்டது. அதன் வாசகங்களின் ஒரு பகுதி பின்வருமாறு வாசிக்கிறது: “இந்த முறையிலேயே இது வெட்டப்பட்டது:​—வேலையாட்கள் ஒவ்வொருவரும் எதிர் திசையில் மண்வெட்டிகளால் வெட்டிக்கொண்டிருந்தனர். . .], இன்னும் மூன்று முழங்களே வெட்டப்படவிருக்கையில், ஒருவன் தன் தோழனை கூப்பிடும் குரல் [கேட்டது], ஏனெனில் வலதுபுறத்திலும் [இடதுபுறத்திலும்] பாறையின் பக்கவாட்டில் ஒன்றுக்கு அருகில் இன்னொரு பாதை வெட்டப்பட்டது. அந்தச் சுரங்கம் முழுமையாக வெட்டி முடிக்கப்பட்டபோது, கற்சுரங்கத்தை வெட்டியவர்கள், ஒவ்வொருவரும் தன் தன் தோழனுக்கு நேர் எதிராக, கோடாரிக்கு எதிராகக் கோடாரியாக, (அந்தப் பாறையை) வெட்டித் துளைத்தனர். ஊற்றிலிருந்து தண்ணீர் நீர்த்தேக்கத்தை நோக்கி 1,200 முழத்திற்கு பாய்ந்தோடியது, கற்சுரங்கம் வெட்டும் மனிதரின் தலைகளுக்குமேல் பாறையின் உயரம் 100 முழங்களாக இருந்தது.” அந்தக் காலத்தில் அது, பொறியியல் திறமையை வெளிக்காட்டும் எப்பேர்ப்பட்ட அருஞ்செயல்! b2 இரா. 20:20; 2 நா. 32:30.

5சீஷாக்கின் வெற்றிச் செதுக்கோவியம். எகிப்தின் அரசனாகிய சீஷாக், பைபிளில் ஏழு தடவை குறிப்பிடப்படுகிறான். அரசன் ரெகொபெயாம் யெகோவாவின் பிரமாணத்தை விட்டு விலகியதால், பொ.ச.மு. 993-ல் சீஷாக் யூதாவுக்கு எதிராக படையெடுக்கும்படி யெகோவா அனுமதித்தார், ஆனால் அதை முழுமையாக அழிக்கும்படியல்ல. (1 இரா. 14:​25-28, தி.மொ.; 2 நா. 12:​1-12) சமீப ஆண்டுகள் வரையில், இந்தப் படையெடுப்பை பற்றி பைபிள் மாத்திரமே குறிப்பிடுவதாக கருதப்பட்டது. பின்பு சீஷாக் (முதலாம் ஷெஷாங்க்) என்று பைபிள் அழைக்கும் பார்வோனின் பெரிய ஆவணம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது, கார்னக்கிலுள்ள (பூர்வ தீபஸ்) பெரிய எகிப்திய கோயிலின் தெற்கு மதிலின்மீது சித்திர எழுத்துக்களையும் படங்களையுங்கொண்ட கவர்ச்சிகரமான செதுக்கோவியமாக இருந்தது. பிரமாண்டமான இந்த செதுக்கோவியத்தில், எகிப்திய தெய்வமாகிய அம்மோன், தன் வலது கரத்தில் அரிவாள் வடிவ பட்டயத்தை பிடித்திருப்பதைப்போல் சித்தரிக்கப்பட்டுள்ளான். அவன் 156 பலஸ்தீனிய கைதிகளை விலங்கிட்டு பார்வோனாகிய சீஷாக்கிடம் கொண்டுவருகிறான், அவர்கள் கயிறுகளால் அவனுடைய இடது கரத்தில் கட்டப்பட்டிருக்கின்றனர். ஒவ்வொரு கைதியும் ஒரு நகரத்தை அல்லது கிராமத்தை பிரதிநிதித்துவம் செய்கிறான், அவற்றின் பெயர்கள் எகிப்தியரின் சித்திர எழுத்துக்களில் காட்டப்பட்டுள்ளன. அதில் பின்வருபவை, வாசித்து அடையாளம் கண்டுகொள்ளக்கூடியவற்றில் சில உதாரணங்களாகும்: ராப்பித் (யோசு. 19:20); தானாக், பெத்செயான், மெகிதோ (யோசு. 17:11); சூனேம் (யோசு. 19:18); ரேகோப் (யோசு. 19:28); அப்பிராயீம் யோசு. 19:19); கிபியோன் (யோசு. 18:25); பெத்தொரோன் (யோசு. 21:22); ஆயலோன் (யோசு. 21:24); சோக்கோ (யோசு. 15:35); ஆராத் (யோசு. 12:14). “ஆபிராமின் வயல்” என்பதையும் இந்த ஆவணம் குறிப்பிடுகிறது, இது எகிப்திய பதிவுகளில் ஆபிரகாமைப் பற்றிய மிகவும் பூர்வமான குறிப்பாகும். c

6மோவாபிய கல். ஜெர்மன் மிஷனரி எஃப். எ. க்ளீன் 1868-ல், கவனத்திற்குரிய பூர்வ கல்வெட்டை தீபனில் (டைபான்) கண்டுபிடித்தார். இது மோவாபிய கல் என்று அழைக்கப்பட்டது. இதில் எழுதப்பட்டிருந்தது வார்ப்புரு செய்யப்பட்டது, ஆனால் அதை அங்கிருந்து எடுப்பதற்குமுன் அராபிய நாடோடிகளால் அந்தக் கல் உடைக்கப்பட்டது. எனினும் அதன் துண்டுப்பகுதிகள் பெரும்பான்மையானவை திரும்ப சேர்க்கப்பட்டு, தற்போது அந்தக் கல் பாரிஸிலுள்ள லூவரில் பாதுகாப்பாக உள்ளது. அதன் நகல் லண்டனிலுள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திலுள்ளது. அது முதன்முதல், மோவாபிலுள்ள டைபானில் நிறுவப்பட்டது, அரசன் மேசா இஸ்ரவேலுக்கு எதிராக தான் கலகம் செய்ததை அவனே சொல்வதுபோல இருக்கிறது. (2 இரா. 1:1; 3:​4, 5) அதன் ஒரு பகுதி வாசிப்பதாவது: “நான் மேசா, கெமோஷின் குமாரன்-. . .], மோவாபின் அரசன், டைபானியன் . . . இஸ்ரவேலின் அரசனாகிய ஓம்ரி, பல ஆண்டுகளாக (சொல்லர்த்தமாக, நாட்கள்) மோவாபை தாழ்த்தினான், ஏனெனில் கெமோஷ் [மோவாபின் தெய்வம்] தன்னுடைய தேசத்தின்மீது கோபமாயிருந்தான். அவனுக்குப் பிறகு அவன் குமாரன் வந்தான், அவனும், ‘நான் மோவாபை தாழ்த்துவேன்’ என்றான். என் காலத்தில் அவன் (அவ்வாறு) சொன்னான், ஆனால் நான் அவன்மீதும் அவன் வீட்டின்மீதும் வெற்றிபெற்றேன், இஸ்ரவேலோ என்றென்றுமாக அழிந்துபோயிற்று! . . . கெமோஷ் என்னிடம் சொன்னதாவது, ‘போய், இஸ்ரவேலிலிருந்து நேபோவை எடுத்துக்கொள்!’ ஆகவே நான் இரவில் சென்று, விடியற்காலையிலிருந்து நடுப்பகல்வரை அதற்கு விரோதமாக போரிட்டு, அதை கைப்பற்றி எல்லாரையும் கொன்றேன் . . . மேலும் அங்கிருந்து யாவேயின் [பாத்திரங்களை] எடுத்து, அவற்றை கெமோஷுக்கு முன்பாக இழுத்துவந்தேன். d கடைசி வாக்கியத்தில் கடவுளுடைய பெயர் குறிப்பிட்டிருப்பதை கவனியுங்கள். இங்கு கொடுக்கப்பட்டுள்ள மோவாபிய கல்லின் படத்தில் இதை காணலாம். இது இந்த ஆவணத்தின் வலதுபுறத்தில், 18-வது வரியில், எபிரெய நான்கெழுத்து உருவில் உள்ளது.

7இந்த மோவாபிய கல்லுங்கூட பின்வரும் பைபிள் இடங்களை குறிப்பிடுகிறது: அதரோத், நேபோ (எண். 32:​34, 38); அர்னோன், ஆரோவேர், மெதெபா, டைபான் (யோசு. 13:9); பாமோத்பாகால், பெத்பாகால்மெயோன், யாகசா, கீரியாத்தாயீம் (யோசு. 13:​17-19); பேசேர் (யோசு. 20:8); ஒரோனாயீம் (ஏசா. 15:5); பெத்திப்லாத்தாயீம், கீரியோத் (எரே. 48:​22, 24). இவ்வாறு இந்த இடங்கள் சரித்திரப்பூர்வமானவை என்பதை இந்தக் கல் ஆதரிக்கிறது.

8அரசன் சனகெரிப்பின் பட்டகம். பொ.ச.மு. 732-ம் ஆண்டில் அரசனாகிய சனகெரிப்பின் தலைமையில் அசீரியர் படையெடுத்ததை போதிய நுட்பவிவரத்துடன் பைபிள் பதிவுசெய்கிறது. (2 இரா. 18:​13–19:37; 2 நா. 32:​1-22; ஏசா. 36:​1–37:38) ஆங்கிலேய தொல்பொருள் ஆராய்ச்சியாளர் எ. ஹெச். லேயர்ட், 1847-51-ல், பூர்வ அசீரியாவின் பிராந்தியத்தில், நினிவேயில் சனகெரிப்பின் பெரிய அரண்மனையின் பாழிடங்களை தோண்டியெடுத்தார். அந்த அரண்மனையில் 70 அறைகளும், சிற்பவேலைப்பாடு கொண்ட கற்கள் வரிசையாக அமைந்த ஏறக்குறைய 3,000 மீட்டர் நீளமுள்ள சுவர்களும் இருந்தன. சனகெரிப்பின் வருடாந்தர அறிக்கைகள் அல்லது ஆண்டு நிகழ்ச்சி பதிவுகள், நீண்ட மண் உருளைகளில் அல்லது பட்டகங்களில் பதிவுசெய்யப்பட்டிருந்தன. அவனுடைய மரணத்துக்கு சிறிது காலத்துக்கு முன்பு பதிவு செய்யப்பட்டதாக தோன்றும் நிகழ்ச்சிகளைப் பற்றிய கடைசி பதிப்பு, டேலர் பட்டகம் என அழைக்கப்படுகிறது. இது பிரிட்டிஷ் அரும்பொருட்காட்சி சாலையில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதைவிட சிறந்த நகல் ஒன்று சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஓரியன்டல் இன்ஸ்டிட்யூட்டில் இருக்கிறது; இதை அசீரிய பேரரசின் தலைநகரமாகிய பூர்வ நினிவே இருந்த இடத்திற்கு அருகில் கண்டுபிடித்தனர்.

9ஆண்டு நிகழ்ச்சிப் பதிவுகளில், கடைசியான இப்பதிவில் சனகெரிப், யூதாவின்மீது படையெடுத்த விஷயத்தை பெருமையுடன் சொல்கிறான்: ‘யூதனாகிய எசேக்கியா என் நுகத்துக்கு கீழ்ப்படியவில்லை, அவனுடைய பலத்த நகரங்களில் 46-ஐயும், மதில் சூழ்ந்த அரண்களையும், அவற்றின் சுற்றுப்புறத்திலிருந்த எண்ணற்ற சிறிய கிராமங்களையும் நான் முற்றுகையிட்டேன். உறுதியான சாய்தளங்களை உபயோகித்தும் மதில் தகர்ப்பு சாதனங்களை (மதில்களுக்கு) அருகில் கொண்டுவந்து தாக்கியும், (அதோடு சேர்ந்து) காலாட்படை வீரர்களைக் கொண்டும், சுரங்கத்தின் வழியாக தாக்கியும் பிளவுண்டாக்கியும் ஊடுமறைவுக்குழி தோண்டியும் நான் கைப்பற்றினேன். (அவற்றிலிருந்து) 2,00,150 ஜனங்களை வெளியேற்றினேன், இளைஞரையும் முதியோரையும், ஆண்களையும் பெண்களையும், குதிரைகளையும், கோவேறு கழுதைகளையும், கழுதைகளையும், ஒட்டகங்களையும், பெரியவையும் சிறியவையுமான எண்ணற்ற ஆடுமாடுகளையும் எடுத்து வந்தேன், (அவற்றை) கொள்ளைப்பொருட்களாக கருதினேன். அவனை [எசேக்கியாவை] எருசலேமில், அவனுடைய அரண்மனையில், கூண்டிலிடப்பட்ட ஒரு பறவையைப்போல், கைதியாக்கினேன். . . . நான் கைப்பற்றிய அவனுடைய பட்டணங்களை அவனுடைய நாட்டிலிருந்து பிரித்து அவற்றை அஸ்தோத்தின் அரசன் மிட்டின்டிக்கும், எக்ரோனின் அரசன் பாடிக்கும், காசாவின் அரசன் சில்லிபெல்லுக்கும் கொடுத்தேன். . . . பின்னால், எசேக்கியா . . . எனக்கு, 30 தாலந்து பொன்னோடு, 800 தாலந்து வெள்ளியையும், விலையுயர்ந்த கற்களையும், அஞ்சனக் கல்லையும், பெரிய செந்நிற கற்களையும், தந்தம் (பதித்த) மஞ்சங்களையும், தந்தம் (பதித்த) நிமேடு நாற்காலிகளையும், பதனிட்ட யானைத் தோல்களையும், கருங்காலிக் கட்டைகளையும், பாக்ஸ் பலகைகளையும், மதிப்புவாய்ந்த எல்லா வகையான பொக்கிஷங்களையும், தன் (சொந்த) குமாரத்திகளையும், வைப்பாட்டிகளையும், ஆண் மற்றும் பெண் இசைப்பாடகர்களையும், பின்னால் என் ஆதிக்கத்திலிருந்த நகரமாகிய நினிவேக்கு அனுப்பினான். இந்தக் கப்பத்தைச் செலுத்தி அடிமையாக வணக்கம் செய்வதற்கு அவன் தன் (தனிப்பட்ட) தூதுவனை அனுப்பினான். e சனகெரிப் எசேக்கியாவின்மீது சுமத்திய இந்த கப்பத்தைக் குறித்ததில், 30 தாலந்துகள் பொன்னை பைபிள் உண்மையென உறுதிசெய்கிறது, ஆனால் 300 தாலந்துகள் வெள்ளியை மாத்திரமே குறிப்பிடுகிறது. மேலும் இது, சனகெரிப் எருசலேமை முற்றுகையிடப்போவதாக பயமுறுத்தியதற்கு முன்பு என அது காட்டுகிறது. அசீரிய சரித்திரத்துக்காக சனகெரிப் குறிப்பிட்ட ஒருதலைப்பட்சமான அறிக்கையில், யெகோவாவின் தூதன் ஒரே இரவில் அவனுடைய 1,85,000 போர்வீரர்களை அழித்தது சம்பந்தமாக எந்த விபரமும் இல்லை. சாட்டையடிபட்ட நாயைப்போல் நினிவேக்குத் தப்பியோடும் நிலை ஏற்பட்டதால் யூதாவில் ஏற்பட்ட படுதோல்வியை வேண்டுமென்றே அவன் குறிப்பிடவில்லை. இருப்பினும், சனகெரிப்பின் பட்டகத்தில் எழுதப்பட்ட தற்பெருமைகொண்ட இந்தப் பதிவு, அசீரியர் எருசலேமை அச்சுறுத்திய பின்பு யெகோவா அசீரியரை திரும்பியோட செய்ததற்கு முன்பாக யூதாவின்மீது ஒரு பெரும் படையெடுப்பை குறிப்பிடுகிறது.​—2 இரா. 18:14; 19:​35, 36.

10லாகீஸின் கடிதங்கள். பிரசித்திபெற்ற அரண் நகரமாகிய லாகீஸ், பைபிளில் 20 தடவைக்குமேல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது எருசலேமின் மேற்கு-தென்மேற்கில் 44 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. இதனுடைய இடிபாடுகள் தோண்டியெடுக்கப்பட்டிருக்கின்றன. 1935-ல், இரட்டை வாசல்களையுடைய படைவீரர்கள் தங்கும் விடுதியில், 18 ஆஸ்ட்ரக்கா, அல்லது எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன (1938-ல் மேலும் மூன்று கண்டுபிடிக்கப்பட்டன). இவை பூர்வ எபிரெய எழுத்துக்களில் எழுதப்பட்ட பல கடிதங்களாக இருந்தன. இப்படிப்பட்ட 21 துண்டுகளின் சேர்க்கை இப்போது லாகீஸ் கடிதங்கள் என்று அறியப்படுகின்றன. நேபுகாத்நேச்சாரின் கைக்குட்படாமல் உறுதியாக நின்ற யூதாவின் கடைசி அரண்களில் லாகீஸும் ஒன்றாகும். பொ.ச.மு. 609-க்கும் 607-க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் அது எரித்து சாம்பலாக்கப்பட்டது. இந்த கடிதங்கள் அந்தக் காலங்களின் அவசரத் தன்மையை பிரதிபலிக்கின்றன. யூதேய பட்டாளங்களின் மீந்திருந்த புறக்காவற்படை, லாகீஸிலிருந்த இராணுவ தலைவனாகிய யாவோஷுக்கு இவைகளை எழுதியிருக்கலாம். இக்கடிதங்கள் ஒன்றில் (எண் IV) இவ்வாறு சொல்லப்படுகிறது: “என் தலைவர் இப்போதுங்கூட நற்செய்தியை கேட்கும்படி ய்ஹ்வ்ஹ் [“யெகோவா” என்பதற்கான எபிரெய நான்கெழுத்து] செய்வாராக. . . . என் தலைவர் சாதாரணமாக கொடுக்கும் அடையாளங்களைப்போல் லாகீஸிலிருந்து நெருப்பு அடையாளத்தை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். ஏனெனில் அசேக்காவை நாங்கள் காண்கிறதில்லை.” இது, மீந்தவையாக விடப்பட்ட கடைசி இரண்டு அரணிப்பான பட்டணங்களென லாகீஸையும் அசேக்காவையும் குறிப்பிடுகிற எரேமியா 34:​7-ஐ (தி.மொ.) ஆச்சரியமாக உறுதிசெய்கிறது. அசேக்கா இப்போது வீழ்ந்துவிட்டதென இந்தக் கடிதம் குறிப்பிடுவதாக தெரிகிறது. இந்தக் கடிதங்களில் கடவுளுடைய பெயர், எபிரெய நான்கெழுத்தில் அடிக்கடி தோன்றுகிறது. இது, யெகோவா என்ற பெயர் அந்தக் காலத்தில் யூதருக்குள் அன்றாடம் பயன்படுத்தப்பட்டது என்பதை காட்டுகிறது.

11மற்றொரு கடிதம் (எண் III) பின்வருமாறு தொடங்குகிறது: “என் தலைவர் சமாதான செய்தியை கேட்கும்படி ய்ஹ்வ்ஹ் [அதாவது, யெகோவா] செய்வாராக! . . . உமது ஊழியனுக்கு இது அறிவிக்கப்பட்டிருக்கிறது, ‘சேனைத்தலைவனாகிய கோனியா எல்நாத்தனின் குமாரனாவான், இவன் எகிப்திற்குப் போவதற்கு வந்திருக்கிறான், தனக்கு [தேவையான பொருட்களை] பெறும்படி அகியாவின் குமாரன் கொடாவியாவிடமும் அவனுடைய ஆட்களிடமும் செல்லவிருக்கிறான்.’” யெகோவாவின் கட்டளையை மீறி, தனக்கே அழிவுண்டாக, யூதா உதவிக்காக எகிப்துக்குச் சென்றதை இந்த கடிதம் உறுதிசெய்வதாக தோன்றுகிறது. (ஏசா. 31:1; எரே. 46:​25, 26) இந்தக் கடிதம் முழுவதிலும் தோன்றும் எல்நாத்தான், ஓசியா போன்ற பெயர்கள், எரேமியா 36:​12-லும் 42:​1-லும் காணப்படுகின்றன. இந்த கடிதங்களில் குறிப்பிடப்பட்ட வேறு மூன்று பெயர்களுங்கூட பைபிள் புத்தகமாகிய எரேமியாவில் காணப்படுகின்றன. கெமரியா, நேரியா, யசினியா என்பவையே அந்தப் பெயர்கள்.​—எரே. 32:12; 35:3; 36:10. f

12நபோனிடஸ் செய்திப்பட்டியல். 19-வது நூற்றாண்டின் பின் பாதியில் பாக்தாத்திற்கு அருகில் அகழ்வாய்வுகள் செய்யப்பட்டன. அப்போது, பூர்வ பாபிலோனின் சரித்திரத்தைப் பற்றி அதிக தகவலளித்த எழுத்துக்களைக் கொண்ட களிமண் பலகைகளும் நீள் உருளைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் ஒன்று நபோனிடஸ் செய்திப்பட்டியல் என்பதாக அறியப்பட்ட மிகவும் மதிப்புவாய்ந்த ஆவணமாகும். இது இப்போது பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் உள்ளது. பாபிலோனின் அரசனான நபோனிடஸ் தன்னோடு துணை அரசனாக ஆண்ட பெல்ஷாத்சாரின் தகப்பன். இவன் தன் குமாரன் மரித்தப்பின்னும் நீடித்து வாழ்ந்தான். பெல்ஷாத்சார் பொ.ச.மு. 539, அக்டோபர் 5-ன் இரவில் பெர்சியனாகிய கோரேசின் படைகள் பாபிலோனை கைப்பற்றியபோது கொல்லப்பட்டான். (தானி. 5:​30, 31) பாபிலோனின் வீழ்ச்சியை கவனிக்கத்தக்க முறையில் திருத்தமாக குறிப்பிட்டுள்ள பதிவாகிய இந்த நபோனிடஸ் செய்திப்பட்டியல், இச்சம்பவம் எந்த நாளில் நடந்தது என்பதை உறுதிசெய்கிறது. பின்வருவது நபோனிடஸ் செய்திப்பட்டியலின் ஒரு பகுதியின் மொழிபெயர்ப்பாகும்: “டாஸ்ரிட்டோ [திஸ்ரி (செப்டம்பர்-அக்டோபர்)] மாதத்தில், கோரேசு டைகிரீஸின் மீதுள்ள ஓப்பிஸில் அக்காடின் சேனையை தாக்கியபோது . . . 14-வது நாள், சிப்பார் போரில்லாமலே கைப்பற்றப்பட்டது. நபோனிடஸ் தப்பியோடிவிட்டார். 16-வது நாள் [பொ.ச.மு. 539, அக்டோபர் 11, ஜூலியன், அல்லது அக்டோபர் 5, கிரகோரியன்] குட்டியமின் அதிபதியாகிய கோப்ரியாஸும் (உக்பாரு), கோரேசின் படையும் போரில்லாமலே பாபிலோனுக்குள் நுழைந்தனர். பின்னாளில் நபோனிடஸ் பாபிலோனுக்கு திரும்பியபோது (அங்கே) கைதுசெய்யப்பட்டார். . . . அரஷம்னு மாதத்தில் [மார்ச்சேஸ்வன் (அக்டோபர்-நவம்பர்)], 3-வது நாளில் [அக்டோபர் 28, ஜூலியன்], கோரேசு பாபிலோனுக்குள் நுழைந்தார், பசும் துளிர் கிளைகள் அவர் முன் பரப்பிவைக்கப்பட்டன​—‘சமாதான’ (சல்மு) நிலை நகரத்தின்மீது அமல்படுத்தப்பட்டது. கோரேசு பாபிலோன் முழுவதற்கும் வாழ்த்துக்களை அனுப்பினார். அவருடைய தேசாதிபதி கோப்ரியாஸ், பாபிலோனில் (உப) அதிபதிகளை அமர்த்தினார். g

13மேதியனாகிய தரியு, இந்த செய்திப்பட்டியலில் குறிப்பிடப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இதுவரையில் பைபிள் சம்பந்தமற்ற எந்த எழுத்துக்களிலும் தரியுவைப் பற்றிய குறிப்புகள் இல்லை. ஜொஸிபஸ் (பொ.ச. முதல் நூற்றாண்டு யூதச் சரித்திராசிரியன்) காலத்துக்கு முந்தைய உலகப்பிரகாரமான சரித்திர பதிவுகள் எதிலும் அவர் குறிப்பிடப்படவில்லை. ஆகவே அவர், மேலுள்ள விவரத்தில் குறிப்பிடப்பட்ட கோப்ரியாஸாக இருக்கலாமென சிலர் கூறியுள்ளனர். கோப்ரியாஸைப் பற்றி கிடைக்கும் தகவல் தரியு சம்பந்தப்பட்ட தகவலுக்கு ஒத்ததாகத் தோன்றுகிறபோதிலும், அத்தகைய அடையாளங்களை மெய்யானவை என்பதாக தீர்க்க முடியாது. h எவ்வாறாயினும், பாபிலோனை கைப்பற்றுவதில் கோரேசு முக்கியமான நபராக இருந்தார் என்றும், அதன்பின் அவர் அங்கே அரசாண்டார் என்றும் உலகப்பிரகாரமான சரித்திரம் உறுதிசெய்கிறது.

14கோரேசுவின் உருளை. பெர்சிய உலக வல்லரசின் அரசனாக கோரேசு ஆட்சி செய்யத் தொடங்கிய சிறிது காலத்துக்குப் பின், அவர் பொ.ச.மு. 539-ல் பாபிலோனை கைப்பற்றியது களிமண் உருளையில் பதிவுசெய்யப்பட்டது. இந்த மேம்பட்ட எழுத்துச் சான்றும் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. பின்வருவது அதன் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு பாகமாகும்: “நான் கோரேசு, உலகத்தின் அரசன், பேரரசன், சட்டப்படியான அரசன், பாபிலோனின் அரசன். சுமர் மற்றும் அக்காடின் அரசன், (பூமியின்) நான்கு விளிம்புகளின் அரசன், . . . டைகிரீஸின் மறுபுறத்திலுள்ள [முன்னால் பெயர் குறிப்பிடப்பட்ட சில] பரிசுத்த நகரங்களுக்கு திரும்பினேன். அவற்றின் புனித இடங்கள் நெடுங்காலம் பாழடைந்திருந்தன; அவற்றின் சிலைகள் அங்கு இருந்தன, அவற்றிற்கு நிலையான புனித ஸ்தலங்களை ஸ்தாபித்தேன். (மேலும்) அவற்றின் (முந்தைய) குடியிருப்பாளர்கள் யாவரையும் நான் கூட்டிச்சேர்த்து (அவர்களுக்கு) அவர்களுடைய குடியிருப்புகளை திரும்பக்கொடுத்தேன்.” i

15சிறைப்படுத்தப்பட்ட ஜனங்களை அவர்களுடைய முந்தைய இடங்களுக்கு திரும்ப அனுப்பிவிடுவது என்ற இந்த அரசனின் கொள்கையை கோரேசுவின் உருளை இவ்வாறு தெரிவிக்கிறது. இதற்கு ஒத்திசைவாக, யூதர்கள் எருசலேமுக்கு திரும்பி, அங்கே யெகோவாவின் ஆலயத்தை திரும்ப கட்டும்படி கோரேசு கட்டளை பிறப்பித்தார். கவனத்தை கவரும் விதமாக, இதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்னால், பாபிலோனை கைப்பற்றப்போகிறவரும், தம்முடைய ஜனத்தை திரும்பவும் நிலைநாட்டுபவரும் கோரேசுதான் என்று தீர்க்கதரிசனத்தில் யெகோவா பெயரிட்டு அறிவித்திருந்தார்.​—ஏசா. 44:28; 45:1; 2 நா. 36:23.

தொல்பொருள் ஆராய்ச்சியும்

கிறிஸ்தவ கிரேக்க வேதாகமமும்

16தொல்பொருள் ஆராய்ச்சி கண்டெடுத்திருக்கும் ஆர்வத்திற்குரிய அத்தாட்சிகள், எபிரெய வேதாகமத்தை மட்டுமல்ல கிரேக்க வேதாகத்தையும் தேவாவியால் ஏவப்பட்டதாக நிரூபிக்கின்றன.

17திபேரியுவின் உருவப்பொறிப்புடன் திநாரிய நாணயம். திபேரியு இராயனுடைய ஆட்சியின்போது இயேசு ஊழியம் செய்துவந்தார்என்பதாக பைபிள் தெளிவாக காட்டுகிறது. இயேசுவின் எதிரிகள் சிலர், இராயனுக்கு வரி செலுத்துவது சம்பந்தமாக கேட்டு அவரை சிக்கவைக்க முயன்றனர். அந்த பதிவு வாசிப்பதாவது: “அவர்கள் மாய்மாலத்தை அவர் அறிந்து அவர்களைப் பார்த்து: நீங்கள் என்னைச் சோதிக்கிறதென்ன? ஒரு திநாரியத்தை என்னிடங் கொண்டுவந்து காண்பியுங்களென்றார். அவர்கள் அதைக் கொண்டுவந்தார்கள். அப்பொழுது அவர்: இந்தச் சுரூபமும் மேலெழுத்தும் யாருடையதென்று கேட்க, இராயனுடையது என்றார்கள். அதற்கு இயேசு: இராயனுடையவைகளை இராயனுக்கும் கடவுளுடையவைகளைக் கடவுளுக்குஞ் செலுத்துங்கள் என்றார். அவர்கள் அவரை குறித்து மிகவும் ஆச்சரியப்பட்டார்கள்.” (மாற். 12:​15-17, தி.மொ.) திபேரியு ராயனின் தலை பொறிக்கப்பட்ட வெள்ளி திநாரிய நாணயம் ஒன்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர்! அது பெரும்பாலும் பொ.ச. 15-ல் பரவலாக பயன்படுத்தப்பட்டது. இது, பேரரசனாக திபேரியுவின் ஆட்சிக் காலம், பொ.ச. 14-ல் தொடங்கியதோடு பொருந்துகிறது. மேலும் திபேரியுவின் 15-வது ஆண்டில், அல்லது பொ.ச. 29-ன் இளவேனிற்காலத்தில், முழுக்காட்டுபவரான யோவானின் ஊழியம் தொடங்கியது என்பதாக கூறும் பதிவுக்கும் கூடுதலான ஆதாரத்தை கொடுக்கிறது.​—லூக். 3:​1, 2.

18பொந்தியு பிலாத்து எழுத்துப்பொறிப்பு. 1961-ல் பொந்தியு பிலாத்துவை குறித்த முதல் தொல்பொருள் ஆராய்ச்சி கண்டுபிடிப்பு கிடைத்தது. செசரியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கற்பலகையில் லத்தீன் மொழியில் பொந்தியு பிலாத்துவின் பெயர் காணப்படுகிறது.

19ஆரியோப்பாகஸ். பதிவுசெய்யப்பட்ட பவுலின் பேச்சுகளில் மிகச் சிறந்த ஒன்றை அவர் பொ.ச. 50-ல், கிரீஸிலுள்ள அத்தேனே பட்டணத்தில் கொடுத்தார். (அப். 17:​16-34, தி.மொ.) இது, அத்தேனியர் சிலர் பவுலை பிடித்து ஆரியோப்பாகஸுக்கு அழைத்துச் சென்றபோது நடந்தது. ஆரியோப்பாகஸ் அல்லது அரஸின் குன்று (மார்ஸ் மேடை) என்பது, அத்தேனே பட்டணத்தின் உள்ளரணுக்கு அடுத்து வடமேற்கிலிருக்கும் ஏறக்குறைய 113 மீட்டர் உயரமான தட்டையான கற்பாறை குன்றின் பெயராகும். உச்சிக்கு செல்வதற்கு கற்பாறையில் படிகள் வெட்டப்பட்டுள்ளன. அங்கே பாறையில் குடைந்து வெட்டப்பட்ட கரடுமுரடான இருக்கைகள், சதுரத்தின் மூன்று பக்கங்களை உண்டுபண்ணுபவையாக இன்னும் காணப்படுகின்றன. பவுலின் சரித்திரப்பூர்வ பேச்சுக்கு பின்னணியாக பைபிள் பதிவுசெய்திருப்பதை உறுதிப்படுத்துவதாக இந்த ஆரியோப்பாகஸ் இன்னும் நிலைத்திருக்கிறது.

20டைட்டஸ் வளைவு. பொ.ச. 70-ல் டைட்டஸின் தலைமையின்கீழ் ரோமர் எருசலேமையும் அதன் ஆலயத்தையும் அழித்தனர். அடுத்த ஆண்டில் ரோமில், டைட்டஸ், தனது தகப்பனாகிய பேரரசன் வெஸ்பாஸியனோடு சேர்ந்து, அந்த வெற்றியை கொண்டாடினான். தேர்ந்தெடுக்கப்பட்ட எழுநூறு யூத கைதிகள் இந்த வெற்றி பவனியில் நடந்து சென்றனர். ஆலய பொக்கிஷங்கள் உட்பட போரின் ஏராளமான கொள்ளைப்பொருட்களும் ஊர்வலத்தில் பகட்டாக கொண்டுசெல்லப்பட்டன. பொ.ச. 79-லிருந்து 81 வரையில் டைட்டஸ் பேரரசனாக இருந்தான். அவனுடைய மரணத்துக்குப் பின், டைட்டஸ் வளைவு எனப்படும் ஒரு பெரிய நினைவுச் சின்னம் கட்டப்பட்டு, டீவோ டைட்டோவுக்கு (தெய்வமாக்கப்பட்ட டைட்டஸுக்கு) அர்ப்பணிக்கப்பட்டது. அந்த வளைவில் செல்லும் வழியின் இருபுறங்களிலும் அவனுடைய வெற்றி பவனி ஓவியமாக தீட்டப்பட்டுள்ளது. ஒரு புறத்தில், ரோமப் போர்வீரர்கள் கூர்மையற்ற ஈட்டிகளை பிடித்துக்கொண்டு, லாரல் கிரீடங்களை அணிந்தவர்களாக, எருசலேமின் ஆலயத்திலிருந்து எடுத்த பரிசுத்த தட்டுமுட்டு பொருட்களை சுமந்துசெல்வதாக ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. இதில் ஏழு கிளைகளையுடைய விளக்குத் தண்டும் தேவசமுகத்து அப்பங்களை வைக்கும் மேசையும் அடங்கியுள்ளது. மேசையின்மீது பரிசுத்த எக்காளங்கள் வைக்கப்பட்டிருப்பதாக காணப்படுகின்றன. வழியின் மறுபுறத்திலுள்ள ஓவியத்தில், நான்கு குதிரைகள் பூட்டப்பட்டு, ரோம் நகரத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு பெண்ணால் ஓட்டப்படும் இரதத்தில், வெற்றிசிறந்த டைட்டஸ் நிற்பதாக காட்டப்பட்டிருக்கிறது. j ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் டைட்டஸின் வெற்றிச் சின்னமாகிய இந்த வளைவை கண்டுகளிக்கின்றனர். இது, இயேசுவின் தீர்க்கதரிசன நிறைவேற்றத்திற்கும் கலகஞ்செய்த எருசலேமின்மீது யெகோவா அளித்த கடும் நியாயத்தீர்ப்பின் நிறைவேற்றத்திற்கும் மௌனமான சாட்சியாக இன்றும் ரோமில் நிற்கிறது.​—மத். 23:​37–24:2; லூக். 19:​43, 44; 21:​20-24.

21பூர்வ கையெழுத்து பிரதிகளை கண்டுபிடித்தது, பைபிளின் முதல் மூலவாக்கியத்தினுடைய தூய்மையை மீண்டும் நிலைநாட்டுவதற்கு உதவியிருக்கிறது. அதேவிதமாக, ஏராளமான கலைவேலைப்பாடுகளின் கண்டுபிடிப்பு, பைபிளின் மூலவாக்கியத்தில் கூறப்பட்டுள்ள நுணுக்கமான விவரங்கள்கூட சரித்திரப்பூர்வமாகவும், காலவரிசைப்படியும், புவியியலின்படியும் நம்பகமானவை என்பதை பலமுறை மெய்ப்பித்திருக்கிறது. எனினும், தொல்பொருள் ஆராய்ச்சி எல்லா காரியங்களிலும் பைபிளோடு ஒத்துப்போகிறது என்ற முடிவுக்கு வருவது தவறு. தொல்பொருள் ஆராய்ச்சியில் பிழை ஏற்படும் என்பதை நினைவில் வைக்க வேண்டும். தொல்பொருள் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் மனித கருத்துக்களுக்கு உட்பட்டவை, இந்தக் கருத்துக்கள் அவ்வப்போது மாற்றப்பட்டிருக்கின்றன. சில சமயங்களில் தொல்பொருள் ஆராய்ச்சி, கடவுளுடைய வார்த்தையின் சத்தியத் தன்மைக்கு தேவைப்படாத ஆதரவை அளித்துள்ளது. பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின் இயக்குநரும் முக்கிய நூலகப் பொறுப்பாளராக பல ஆண்டுகள் இருந்த, காலஞ்சென்ற சர் பிரெட்ரிக் கெனியன் சொன்னார்: தொல்பொருள் ஆராய்ச்சி, பைபிளை “அதன் சூழமைவு, பின்னணி சம்பந்தப்பட்ட முழுமையான அறிவின்மூலம் அதிகமாக புரிந்துகொள்ள உதவியுள்ளது. k ஆனால் விசுவாசம், தொல்பொருள் ஆராய்ச்சியின்மீதல்ல பைபிளின்மீதே இருக்க வேண்டும்.​—ரோ. 10:9; எபி. 11:6.

22அடுத்த ஆராய்ச்சியில் நாம் காணப்போகிறபடி, பைபிள் நிச்சயமாகவே, ‘உயிருள்ளவரும் நிலைத்திருப்பவருமான கடவுளின்’ நம்பகமான ‘வார்த்தை’ என்பதற்கு, மறுக்கமுடியாத அத்தாட்சியை தன்னில்தானே கொண்டுள்ளது.​—1 பே. 1:23, NW.

[அடிக்குறிப்புகள்]

a பைபிளும் மண்வெட்டியும், (ஆங்கிலம்) 1938, எஸ். எல். கேய்கர், பக்கம் 29.

b ஏன்ஷியன்ட் நியர் ஈஸ்டர்ன் டெக்ஸ்ட்ஸ், 1974, ஜே. பி. பிரிட்ச்சார்ட், பக்கம் 321; வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கங்கள் 941-2, 1104.

c பூர்வ காலத்திலிருந்து வரும் ஒளி, (ஆங்கிலம்) 1959, ஜே. ஃபினிகன், பக்கம் 91, 126.

d ஏன்ஷியன்ட் நியர் ஈஸ்டர்ன் டெக்ஸ்ட்ஸ், பக்கம் 320.

e ஏன்ஷியன்ட் நியர் ஈஸ்டர்ன் டெக்ஸ்ட்ஸ், பக்கம் 288.

f வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கங்கள் 151-2; பூர்வ காலத்திலிருந்து வரும் ஒளி, பக்கங்கள் 192-5.

g ஏன்ஷியன்ட் நியர் ஈஸ்டர்ன் டெக்ஸ்ட்ஸ், பக்கம் 306.

h வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கங்கள் 581-3.

i ஏன்ஷியன்ட் நியர் ஈஸ்டர்ன் டெக்ஸ்ட்ஸ், பக்கம் 316.

j பூர்வ காலத்திலிருந்து வரும் ஒளி, பக்கம் 329.

k பைபிளும் தொல்பொருள் ஆராய்ச்சியும், (ஆங்கிலம்) 1940, பக்கம் 279.

[கேள்விகள்]

1. இவை குறிப்பதென்ன (அ) பைபிளின் தொல்பொருள் ஆராய்ச்சி? (ஆ) கலைவேலைப்பாடு?

2. பைபிள் சம்பந்தப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சியின் பயன் என்ன?

3. பூர்வ பாபிலோனில் கோபுர கோயில்கள் இருந்ததை எந்த பண்டைய இடிபாடுகளும் பதிவுகளும் உறுதிசெய்கின்றன?

4. கீகோனில் நடத்தப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் யாவை, பைபிள் பதிவோடு இவற்றிற்கு என்ன தொடர்பு இருக்கலாம்?

5. சீஷாக்கின் படையெடுப்பையும் பைபிள் சம்பந்தப்பட்ட இடங்களின் பெயர்களையும் பற்றிய என்ன தொல்பொருள் அத்தாட்சி கார்னக்கில் கண்டுபிடிக்கப்பட்டது?

6, 7. மோவாபிய கல்லின் சரித்திரம் என்ன, இஸ்ரவேலுக்கும் மோவாபுக்குமிடையில் உண்டான போரைக் குறித்து அது என்ன தகவலை அளிக்கிறது?

8. சனகெரிப்பைக் குறித்து பைபிள் என்ன பதிவுசெய்திருக்கிறது, அவனுடைய அரண்மனையை தோண்டியெடுத்ததில் என்ன கண்டுபிடிக்கப்பட்டது?

9. பைபிள் விவரத்துக்கு ஒத்திசைவாக சனகெரிப் என்ன பதிவு செய்கிறான், ஆனால் எதை குறிப்பிடத் தவறுகிறான், ஏன்?

10, 11. (அ) லாகீஸின் கடிதங்கள் யாவை, அவை எதைக் குறிப்பாக தெரிவிக்கின்றன? (ஆ) எரேமியா எழுதியதை அவை எவ்வாறு ஆதரிக்கின்றன?

12, 13. நபோனிடஸ் செய்திப்பட்டியல் விவரிப்பதென்ன, அது ஏன் தனிச்சிறப்பு வாய்ந்தது?

14. கோரேசின் உருளையில் பதிவுசெய்யப்பட்டிருப்பது என்ன?

15. கோரேசின் உருளை அவரைக் குறித்து என்ன தெரிவிக்கிறது, இது எவ்வாறு பைபிளுடன் ஒத்திருக்கிறது?

16. கிரேக்க வேதாகமத்தின் சம்பந்தமாக தொல்பொருள் ஆராய்ச்சி எவற்றை வெளிப்படுத்தியுள்ளது?

17. வரியைப் பற்றிய கேள்விக்கு இயேசு பதிலளித்ததை தொல்பொருள் ஆராய்ச்சி எவ்வாறு ஆதரிக்கிறது?

18. பொந்தியு பிலாத்தின் சம்பந்தமாக என்ன கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது?

19. அப்போஸ்தலர் 17:​16-34-ன் பின்னணியை உறுதிசெய்வதாக அத்தேனே பட்டணத்தில் எது இன்னும் இருக்கிறது?

20. டைட்டஸின் வளைவு எதற்கு தொடர்ந்து சாட்சிபகருகிறது, எவ்வாறு?

21. (அ) கையெழுத்துப் பிரதிகளின் கண்டுபிடிப்போடு இணைந்து தொல்பொருள் ஆராய்ச்சி எவ்வாறு உதவியிருக்கிறது? (ஆ) தொல்பொருள் ஆராய்ச்சி சம்பந்தமான என்ன சரியான மனப்பான்மை இருக்க வேண்டும்?

22. அடுத்த ஆராய்ச்சியில் என்ன அத்தாட்சி சிந்திக்கப்படும்?

[பக்கம் 333-ன் படங்கள்]

மோவாபிய கல்

வலப்புறத்தில், 18-வது வரியில், பூர்வ எழுத்துக்களிலுள்ள எபிரெய நான்கெழுத்து (பெரிதாக்கப்பட்டது)

[பக்கம் 334-ன் படம்]

அரசனாகிய சனகெரிப்பின் பட்டகம்

[பக்கம் 335-ன் படம்]

நபோனிடஸ் செய்திப்பட்டியல்

[பக்கம் 336-ன் படம்]

திபேரியு ராயன் சின்னம் பொறிக்கப்பட்ட தினாரியஸ் நாணயம்

[பக்கம் 337-ன் படம்]

டைட்டஸ் வளைவு

[பக்கம் 337-ன் படத்திற்கான நன்றி]

ஆராய்ச்சி 9-லுள்ள படங்களுக்கான பாராட்டு பக்கம் வாரியாக குறிப்பிடப்பட்டிருக்கிறது:

பக்கம் 333, Musée du Louvre, Paris;

பக்கம் 334, Courtesy of the Oriental Institute, University of Chicago;

பக்கம் 335, Courtesy of the Trustees of The British Museum;

பக்கம் 336, Courtesy of the Trustees of The British Museum.