Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் புத்தகம் எண் 12—2 இராஜாக்கள்

பைபிள் புத்தகம் எண் 12—2 இராஜாக்கள்

பைபிள் புத்தகம் எண் 12—2 இராஜாக்கள்

எழுத்தாளர்: எரேமியா

எழுதப்பட்ட இடம்: எருசலேம் மற்றும் எகிப்து

எழுதி முடிக்கப்பட்டது: பொ.ச.மு. 580

காலப்பகுதி: ஏ. பொ.ச.மு. 920-580

இஸ்ரவேல், யூதா ராஜ்யங்களின் கீழ்ப்படியாத கலகத்தனமான போக்கை இரண்டு இராஜாக்கள் தொடர்ந்து கூறுகிறது. எலியாவின் சால்வையை எலிசா எடுத்துக் கொண்டார்; எலியாவைவிட இரண்டு மடங்கு அதிக ஆவியால் ஆசீர்வதிக்கப்பட்டார். எலியா 8 அற்புதங்களை செய்தார். எலிசாவோ 16 அற்புதங்களை செய்தார். விசுவாசதுரோக இஸ்ரவேல் எதிர்ப்படப்போகும் நியாயத்தீர்ப்பை அவர் தொடர்ந்து தீர்க்கதரிசனமாக உரைத்து வந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இஸ்ரவேலில் யெகூ மாத்திரமே யெகோவாவுக்கான வைராக்கியத்தை காண்பித்தார். இது ஒரு குறுகிய காலப்பகுதிக்கே இருந்தது. இஸ்ரவேலின் மற்ற அரசர்களோ மேன்மேலும் பொல்லாங்கு என்னும் பாதாளத்தில் மூழ்கிக்கொண்டே இருந்தனர். முடிவாக பொ.ச.மு. 740-ல் அசீரியாவால் வட ராஜ்யம் நசுக்கப்படும் வரை இந்நிலை தொடர்ந்தது. தெற்கத்திய ராஜ்யமாகிய யூதாவில், யோசபாத், யோவாஸ், எசேக்கியா, யோசியா போன்ற சில அரசர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். சிறந்த அரசர்களான இவர்கள் சிறிது காலத்துக்கு விசுவாசதுரோகம் எழும்பாதபடி அடக்கி வைத்தனர். ஆனால் கடைசியாக நேபுகாத்நேச்சார் பொ.ச.மு. 607-ல் எருசலேமையும் அதன் ஆலயத்தையும் யூதா தேசத்தையும் அழிப்பதன் மூலம் யெகோவாவின் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றினான். இவ்வாறு யெகோவாவின் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறின, அவருடைய வார்த்தையும் சரியென நிரூபிக்கப்பட்டது!

2இரண்டு இராஜாக்கள் புத்தகம் முதன்முதலில் ஒன்று இராஜாக்கள் புத்தகத்தோடு ஒரே சுருளாக இருந்தது. ஆகவே இதன் எழுத்தாளர் எரேமியாதான் என்பதற்கும் இந்த புத்தகம் அதிகாரப்பூர்வ பட்டியலைச் சேர்ந்தது என்பதற்கும் இதன் நம்பகத்தன்மைக்கும் ஒன்று இராஜாக்கள் புத்தகத்திற்கு சொல்லப்பட்ட அதே காரணங்களை சொல்லலாம். இப்புத்தகம் ஏறக்குறைய பொ.ச.மு. 580-ல் எழுதி முடிக்கப்பட்டது. இது, ஏறக்குறைய பொ.ச.மு. 920-ல் இஸ்ரவேலின் அரசன் அகசியாவின் ஆட்சிகாலம் முதல் யோயாக்கீன் நாடுகடத்தப்பட்ட 37-வது ஆண்டாகிய பொ.ச.மு. 580 வரையான காலப்பகுதியை உள்ளடக்கும்.​—1:1; 25:27.

3தொல்பொருள் ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் இரண்டு இராஜாக்களின் பதிவை ஆதரிக்கின்றன. இதில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள் உண்மையில் நடந்தன என்பதற்கு கூடுதலான அத்தாட்சி அளிக்கின்றன. ஓர் உதாரணம், பிரசித்திபெற்ற மோவாபிய கல். இதில் மோவாபுக்கும் இஸ்ரவேலுக்கும் இடையே ஏற்பட்ட போரைப் பற்றி, மோவாபிய அரசன் மேசா சொல்வதாக பொறிக்கப்பட்டுள்ளது. (3:​4, 5) மேலும், இப்பொழுது லண்டனிலுள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள அசீரிய அரசன் மூன்றாம் ஷல்மனேசரின் கரும் சுண்ணாம்புக்கல் ஸ்தூபி உள்ளது; இது இஸ்ரவேலின் அரசராகிய யெகூவின் பெயரை குறிப்பிடுகிறது. அசீரிய அரசன் (பூல்) மூன்றாம் திகிலாத்-பிலேசரின் கல்வெட்டுகளும் இருக்கின்றன. இவை மெனாகேம், ஆகாஸ், பெக்கா உட்பட இஸ்ரவேல், யூதா அரசர்கள் பலருடைய பெயர்களை குறிப்பிடுகின்றன.​—15:​19, 20; 16:​5-8. a

4யெகோவாவின் சொந்த ஜனங்களின்மீது நியாயத்தீர்ப்பு நிறைவேறியதை கொஞ்சம்கூட ஒளிவுமறைவின்றி இப்புத்தகம் விவரிக்கிறது. இதுவே இதன் நம்பகத் தன்மைக்கு தெளிவான நிரூபணத்தை அளிக்கிறது. முதலாவதாக இஸ்ரவேல் ராஜ்யமும், பின்பு யூதா ராஜ்யமும் அழிந்துபோவதை காணும்போது, உபாகமம் 28:​15–29:​28-ல் கூறப்பட்ட யெகோவாவின் தீர்க்கதரிசன நியாயத்தீர்ப்பு நம் நினைவுக்கு வருகிறது. அந்த ராஜ்யங்களை அழிக்கும்போது “யெகோவா இந்தத் தேசத்தின்மேல் கோபமூண்டவராகி இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபங்கள் எல்லாவற்றையும் இதன்மேல் வரச்செய்தார்.” (உபா. 29:​27, தி.மொ.; 2 இரா. 17:18; 25:​1, 9-11) இப்புத்தகத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள அநேக சம்பவங்கள் மற்ற புத்தகங்களில் மேற்கோள்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. உதாரணம், தம்முடைய சொந்த பிராந்தியத்தில் தாம் ஒரு தீர்க்கதரிசியாக ஏற்கப்படாததன் காரணத்தை லூக்கா 4:​24-27-ல் இயேசு சொல்கிறார். அப்போது எலியாவையும் சாறிபாத் விதவையையும் குறிப்பிட்ட பின்பு, எலிசாவையும் நாகமானையும் குறித்துப் பேசுகிறார். இவ்வாறு இராஜாக்களின் இரண்டு புத்தகங்களுமே பரிசுத்த வேதாகமத்தின் ஒரு பாகமாகத்தான் இருக்கின்றன.

இரண்டு இராஜாக்களின் பொருளடக்கம்

5இஸ்ரவேலின் அரசன் அகசியா (1:​1-18). ஆகாபின் குமாரனாகிய அகசியா தன் வீட்டு மாடியிலிருந்து விழுந்து வியாதிப்படுகிறான். தான் மீண்டும் சுகமடைவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள எக்ரோனிலுள்ள பாகால்சேபூ தெய்வத்திடம் விசாரிக்கும்படி தூதுவர்களை அனுப்புகிறான். எலியா அந்தத் தூதுவர்களை வழிமறித்து, அவர்களை அரசனிடமே திருப்பி அனுப்புகிறார். உண்மையான கடவுளிடம் விசாரியாமல் இருந்ததற்காக அரசனை அவர் கடிந்துகொள்கிறார். மேலும் அவன் இஸ்ரவேலின் கடவுளிடம் திரும்பாததால் நிச்சயமாகவே இறந்துவிடுவான் என்பதாகவும் கூறுகிறார். எலியாவை தன்னிடம் கொண்டுவருவதற்கு அரசன் ஒரு தலைவனையும் அவனோடு 50 ஆட்களையும் அனுப்புகிறான். ஆனால், வானத்திலிருந்து அக்கினி வந்து அவர்களை அழித்துவிடும்படி எலியா செய்கிறார். இரண்டாவதாக அனுப்பப்பட்ட தலைவனுக்கும் அவனுடைய 50 பேருக்கும் அதுவே சம்பவிக்கிறது. இறுதியில் மூன்றாவது தலைவனோடு 50 பேர் அனுப்பப்படுகின்றனர். இத்தருணத்தில் அந்த தலைவனின் பணிவான வேண்டுகோளினால், எலியா அவர்களை உயிரோடே விடுகிறார். எலியா அவர்களோடு சென்று, மறுபடியும் அகசியாவிடம் மரணத் தீர்ப்பை கூறுகிறார். எலியா சொன்னபடியே அரசன் மரிக்கிறான். பின்பு அகசியாவின் சகோதரன் யோராம் இஸ்ரவேலின் அரசனாகிறான். ஏனெனில் அகசியாவிற்கு வாரிசு இல்லை.

6எலியாவுக்குப் பிறகு எலிசா வருகிறார் (2:​1-25). எலியா எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய சமயம் வருகிறது. கில்காலிலிருந்து பெத்தேலுக்கும், எரிகோவுக்கும், கடைசியாக யோர்தானைக் கடந்து அக்கரைக்கும் செல்லும் எலியாவுடன் எலிசா விடாப்பிடியாக செல்கிறார். எலியா தனது அதிகாரத்தை பிரதிநிதித்துவம் செய்த சால்வையால் யோர்தானின் தண்ணீரை அடித்து அதை பிரிக்கிறார். எலிசாவுக்கும் எலியாவுக்கும் இடையில் அக்கினிப் போர் ரதமும் அக்கினிக் குதிரைகளும் தோன்றுகின்றன. அப்போது எலியா சுழல் காற்றில் மேலேறுவதை எலிசா காண்கிறார். வாக்குப்பண்ணப்பட்ட எலியாவின் ஆவியில் இரட்டிப்பான பாகத்தை அவர் பெறுகிறார். “எலியாவின் ஆவி” தன்மீது இறங்கி இருப்பதை அவர் விரைவில் காட்டுகிறார். (2:15) கீழே விழுந்த எலியாவின் சால்வையை எடுத்துக்கொண்டு, தண்ணீரை மறுபடியும் பிரிப்பதற்கு அதைப் பயன்படுத்துகிறார். பின்பு அவர் எரிகோவில் அசுத்தமான தண்ணீரை சுத்தமாக்குகிறார். பெத்தேலுக்குப் போகும் வழியில், சிறு பையன்கள், “மொட்டைத் தலையா ஏறிப்போ, மொட்டைத் தலையா ஏறிப்போ” என அவரை ஏளனம் செய்கின்றனர். (2:23) எலிசா யெகோவாவை நோக்கி கூப்பிடுகிறார், காடுகளிலிருந்து இரண்டு பெண்-கரடிகள் (NW) வந்து தவறுசெய்த இந்த சிறு பையன்களில் 42 பேரைக் கடித்துக் கொன்றுவிடுகின்றன.

7இஸ்ரவேலின் அரசன் யோராம் (3:​1-27). இந்த அரசன் யெகோவாவின் பார்வையில் கெட்ட செயல்களை தொடர்ந்து செய்கிறான். யெரொபெயாமின் பாவங்களை விட்டு இவன் விலகாதிருக்கிறான். மோவாபின் அரசன் இஸ்ரவேலுக்கு கப்பம் கட்டி வந்தான். ஆனால் இப்பொழுதோ கலகம் செய்கிறான். மோவாபுக்கு எதிராக படையெடுப்பதற்கு யோராம் தயாராகிறான். யூதாவின் அரசனாகிய யோசபாத்தும் ஏதோமின் அரசனும் இவனுக்கு உதவிக்கரம் நீட்டுகின்றனர். தாக்குவதற்குச் செல்லும் வழியில், இவர்களுடைய படைகள் தண்ணீரற்ற நிலப்பகுதிக்கு வந்துசேருகின்றன. அவர்கள் ஏறக்குறைய அழிந்துபோகும் நிலையில் இருக்கின்றனர். எலிசாவின் கடவுளாகிய யெகோவாவிடம் விசாரிக்கும்படி இந்த மூன்று அரசர்களும் அவரிடம் செல்கின்றனர். உண்மையுள்ள யோசபாத்தின் காரணமாக யெகோவா அவர்களை காப்பாற்றுகிறார். மேலும் மோவாபின்மீதும் வெற்றியை அருளுகிறார்.

8தொடரும் எலிசாவின் அற்புதங்கள் (4:​1–8:15). தீர்க்கதரிசிகளின் புத்திரரில் ஒருவருக்கு மனைவியாயிருந்த ஒரு விதவையின் இரண்டு குமாரர்களை கடன்கொடுத்தவர்கள் அடிமைகளாக கொண்டு செல்லவிருக்கின்றனர். அப்போது அந்த விதவை எலிசாவின் உதவியை நாடுகிறாள். அவளுடைய வீட்டிலிருக்கும் குறைந்தளவு எண்ணெய்யை அற்புதத்தினால் எலிசா பெருகச் செய்கிறார். அவள் அந்த எண்ணெய்யை விற்று தனது கடனை அடைக்கிறாள். அடுத்ததாக ஒரு சூனேமிய பெண், எலிசா உண்மையான கடவுளின் தீர்க்கதரிசி என்பதை புரிந்துகொள்கிறாள். எலிசா சூனேமில் இருக்கும்போது தங்குவதற்கு ஓர் அறையை அவளும் அவளுடைய கணவனும் ஏற்பாடு செய்கின்றனர். அவளுடைய தயவின் காரணமாக புத்திர பாக்கியத்தால் யெகோவா அவளை ஆசீர்வதிக்கிறார். சில ஆண்டுகளுக்குப் பின்பு, இந்தப் பிள்ளை நோய்வாய்ப்பட்டு இறந்துவிட, இந்தப் பெண் உடனடியாக எலிசாவை தேடி போகிறாள். எலிசா அவளுடைய வீட்டுக்கு வந்து, யெகோவாவின் வல்லமையால் அந்தப் பிள்ளையை உயிர்த்தெழுப்புகிறார். கில்காலில் இருக்கும் தீர்க்கதரிசிகளின் புத்திரரிடம் எலிசா திரும்பி செல்கிறார். அங்கு கொம்மட்டிக்காய்களின் விஷத்தை முறித்து ‘பானையில் இருக்கும் சாவை’ அற்புதமாக நீக்குகிறார். பின்பு அவர் 20 வாற்கோதுமை அப்பங்களினால் நூறு ஆண்களுக்கு உணவளிக்கிறார், எனினும் “மீதி” இருக்கிறது.​—4:​40, 44.

9சீரியரின் படைத்தலைவன் நாகமான் ஒரு குஷ்டரோகி. சமாரியாவிலுள்ள ஒரு தீர்க்கதரிசியால் அவனை சுகப்படுத்த முடியும் என்பதாக நாகமானுடைய மனைவியிடம் சொல்கிறாள் ஒரு சிறுபெண். இவள் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரவேல பெண். நாகமான் எலிசாவை சந்திக்க பயணப்படுகிறான். ஆனால் நாகமானை எலிசா நேரில் சந்திக்கவில்லை. மாறாக யோர்தான் நதியில் ஏழு தரம் குளிக்கும்படி வேலைக்காரன் மூலம் அவனுக்கு சொல்லி அனுப்புகிறார். இப்படிச் செய்தது தன்னை அவமதிப்பதாக நாகமானுக்கு தோன்றுகிறது. இதனால் அவன் கடும் சீற்றமடைகிறான். இஸ்ரவேலின் தண்ணீரை பார்க்கிலும் தமஸ்குவின் நதிகள் மேலானவை அல்லவா? ஆனால் எலிசாவுக்குக் கீழ்ப்படிவதன் பலனை அவனுடைய ஆட்கள் எடுத்துரைக்கின்றனர். இதன் விளைவாக அவன் சுகமாகிறான். இதற்கு கைம்மாறாக அவன் அளித்த பரிசை எலிசா வாங்க மறுத்துவிடுகிறார். ஆனால் அவருடைய வேலைக்காரனாகிய கேயாசி நாகமானிடம் ஓடி வருகிறான். எலிசாவின் பெயரில் அவன் நாகமானிடம் அந்த பரிசை கேட்கிறான். அவன் திரும்பி வந்த பிறகு நடந்த விஷயத்தை எலிசாவுக்கு மறைக்க முயற்சிக்கிறான். இதனால் கேயாசி குஷ்டரோகத்தால் தாக்கப்படுகிறான். எலிசா செய்த இன்னுமொரு அற்புதம், கோடரியைத் தண்ணீரில் மிதக்க செய்ததாகும்.

10இஸ்ரவேலின் அரசனை கொல்லும்படியான சீரியரின் சதித்திட்டம் ஒன்றைக் குறித்து எலிசா அரசனை எச்சரிக்கிறார். எலிசாவை பிடிப்பதற்கு சீரியாவின் அரசன் ஓர் இராணுவப் படையை தோத்தானுக்கு அனுப்புகிறான். பட்டணத்தை சீரியாவின் சேனைகள் சூழ்ந்துகொள்கின்றன. இதை பார்க்கும் எலிசாவின் வேலைக்காரன் மிகவும் பயந்து நடுங்குகிறான். எலிசா அவனுக்கு பின்வருமாறு நம்பிக்கையளிக்கிறார்: “பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்.” பின்பு, தன்னோடு இருக்கும் அந்த பெரும் படையை தன்னுடைய வேலைக்காரன் காண செய்யுமாறு எலிசா யெகோவாவிடம் ஜெபிக்கிறார். ‘இதோ, எலிசாவைச் சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலைப்பிரதேசம் நிரம்பிவழிகிறது.’ (6:​16, 17) சீரியர்கள் தாக்க தொடங்குகின்றனர். தீர்க்கதரிசியாகிய எலிசா மறுபடியும் யெகோவாவிடம் ஜெபிக்கிறார். அந்த சீரியர்கள் மனம் குருடானவர்களாக இஸ்ரவேலின் அரசனிடம் வழிநடத்தப்படுகின்றனர். எனினும், அந்த வீரர்களை கொல்வதற்கு பதிலாக, அவர்களுக்கு ஒரு விருந்தை அளித்து அவர்களுடைய வீட்டுக்கு அனுப்பி வைக்கும்படி எலிசா அரசனிடம் சொல்கிறார்.

11பின்னால், சீரியாவின் அரசன் பெனாதாத் சமாரியாவை முற்றுகையிடுகிறான். அங்கு மிகுந்த பஞ்சம் உண்டாகிறது. இஸ்ரவேலின் அரசன் எலிசாவை குற்றம் சாட்டுகிறான். ஆனால் இந்த தீர்க்கதரிசி அடுத்த நாள் ஏராளமான உணவு இருக்கும் என்பதாக முன்னறிவிக்கிறார். அந்த இரவில், ஒரு பெரும் படையின் இரைச்சலை சீரியர் கேட்கும்படி யெகோவா செய்கிறார். ஆகவே அவர்கள், தங்கள் உணவுப்பொருட்கள் எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டு ஓடிப்போகிறார்கள். இஸ்ரவேலர் அவற்றை கைப்பற்றுகின்றனர். சிறிது காலத்துக்குப் பின்பு, பெனாதாத் வியாதிப்படுகிறான். எலிசா தமஸ்குவுக்கு வந்திருக்கிறார். இதை கேள்விப்பட்ட அரசன் தான் சுகமடைவானா என்பதை விசாரிக்கும்படி ஆசகேலை அனுப்புகிறான். அரசன் இறந்து விடுவான் என்பதாகவும் ஆசகேல் அவனுடைய இடத்தில் அரசனாவான் என்பதாகவும் எலிசா பதிலளிக்கிறார். ஆசகேலே அரசனை கொலை செய்து அரசதிகாரத்தை கைப்பற்றுகிறான்.

12யூதாவின் அரசன் யோராம் (8:​16-29). இதற்கிடையில், யூதாவில் யோசபாத்தின் குமாரன் யோராம் இப்பொழுது அரசனாக இருக்கிறான். இஸ்ரவேலின் அரசர்களைப் போலவே இவனும் யெகோவாவின் பார்வையில் கெட்டவற்றையே செய்கிறான். ஆகாபின் குமாரத்தியாகிய அத்தாலியாளே இவனுடைய மனைவி. அத்தாலியாளுடைய சகோதரன் பெயரும் யோராம். இவன் இஸ்ரவேலை ஆட்சி செய்கிறான். யூதாவின் யோராம் மரித்த பிறகு அவனுடைய குமாரன் அகசியா எருசலேமில் அரசனாகிறான்.

13இஸ்ரவேலின் அரசன், யெகூ (9:​1–10:36). யெகூவை இஸ்ரவேலின்மீது அரசனாயிருக்கும்படி அபிஷேகம் செய்வதற்காக தீர்க்கதரிசிகளின் புத்திரரில் ஒருவரை எலிசா அனுப்புகிறார். மேலுமாக ஆகாபின் முழு குடும்பத்தையும் அழித்துப்போடும்படி யெகூ பொறுப்பளிக்கப்படுகிறார். யெகூ கொஞ்ச நேரத்தைக்கூட வீணடிப்பதற்கு தயாராக இல்லை. போர்க் காயங்களிலிருந்து சுகமடைந்துவரும் இஸ்ரவேலின் அரசனாகிய யோராமை சந்திக்க யெகூ யெஸ்ரயேலுக்குச் செல்கிறார். விரைவாக நெருங்கிவரும் கூட்டத்தை காவற்காரன் காண்கிறான். பிறகு அரசனிடம், “நிம்சியின் பேரனாகிய யெகூ ஓட்டுகிறதுபோல இருக்கிறது; அதிவேகமாய் ஓட்டுகிறான்” என்று அறிவிக்கிறான். (9:20, NW) இஸ்ரவேலின் யோராமும் யூதாவின் அகசியாவும் யெகூவின் நோக்கத்தை கேட்கிறார்கள். யெகூ பின்வருமாறு கேட்பதன் மூலமாக பதிலளிக்கிறார்: “உன் தாயாகிய யேசபேலின் வேசித்தனங்களும் அவளுடைய பில்லிசூனியங்களும், இத்தனை ஏராளமாயிருக்கையில் சமாதானம் ஏது”? (9:22) யோராம் தப்பியோட திரும்புகையில், யெகூ எய்த அம்பு அவனுடைய நெஞ்சில் பாய்கிறது. அவனுடைய உடல் நாபோத்தின் வயல்நிலத்தில் எறியப்படுகிறது. ஆகாப் சிந்தின குற்றமற்ற இரத்தத்திற்காக இன்னும் கூடுதலான பழிவாங்குதலாக இது இருக்கிறது. பிற்பாடு யெகூவும் அவருடைய ஆட்களும் அகசியாவை பின்தொடர்ந்து விரட்டுகின்றனர். அவர்கள் அகசியாவை தாக்குவதால் மெகிதோவில் அவன் சாகிறான். யெகூவின் முதல் அதிரடி நடவடிக்கையில் இரண்டு ராஜாக்களும் இறந்து போகின்றனர்.

14இப்போது யேசபேலின் முறை! யெகூ வெற்றி பவனியில் யெஸ்ரயேலுக்குள் செல்கிறார். யேசபேல் மிகக் கவர்ச்சியாக சிங்காரித்தவளாய் சன்னலில் இருந்து பார்க்கிறாள். இதற்கெல்லாம் யெகூ மசிந்துகொடுக்கவில்லை. “அவளைக் கீழே தள்ளுங்கள்” என்று வேலைக்காரர்கள் சிலரிடம் சொல்லுகிறார். அவள் கீழே தள்ளப்படுகிறாள், அவளுடைய இரத்தம் சுவரின்மீதும் குதிரைகளின்மீதும் தெறிக்கிறது. அக்குதிரைகள் அவளை மிதித்துப் போடுகின்றன. யேசபேலை அடக்கம் செய்வதற்கு அவர்கள் செல்லும்போது, அவளுடைய மண்டையோடும், பாதங்களும், உள்ளங்கைகளும் மாத்திரமே எஞ்சியவையாய் அவர்களுக்கு கிடைக்கின்றன. எலியாவின் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தின்படி, ‘நாய்கள் அவளைத் தின்றுவிட்டன, யெஸ்ரயேலின் நிலத்தில் எருவாகிவிட்டாள்.’​—2 இரா. 9:​33, 36, 37; 1 இரா. 21:23.

15அடுத்தபடியாக, ஆகாபின் 70 குமாரர்களை கொல்லும்படி யெகூ உத்தரவு பிறப்பிக்கிறார். அவர்களுடைய தலைகளை யெஸ்ரயேலின் வாசலருகே குவித்து வைக்கிறார். யெஸ்ரயேலில் ஆகாபின் வார்த்தைக்கு தலையை ஆட்டிய அனைவரும் கொல்லப்படுகின்றனர். இப்பொழுது, இஸ்ரவேலின் தலைநகராகிய சமாரியாவுக்கு யெகூவின் வெற்றிப்பயணம் தொடர்கிறது. வழியில் அகசியாவின் 42 சகோதரர்களை சந்திக்கிறார். என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை அறியாதவர்களாக, அவர்கள் யெஸ்ரயேலுக்குப் பயணப்படுகின்றனர். அவர்களும் பிடிக்கப்பட்டு கொல்லப்படுகின்றனர். ஆனால் இப்பொழுது வித்தியாசமான ஒரு சந்திப்பு எதிர்பாராத விதத்தில் நிகழ்கிறது. ரேகாபின் குமாரனாகிய யோனதாப் யெகூவைச் சந்திக்க வருகிறார். “என் சொந்த இருதயம் உன் இருதயத்தோடு இருப்பதுபோல், உன் இருதயம் என்னுடன் நேர்மையாக இருக்கிறதா?” என்ற யெகூவின் கேள்விக்கு, “அப்படியே இருக்கிறது” என்று யோனதாப் பதிலளிக்கிறார். யெகூ அப்பொழுது, ‘யெகோவாவின் விஷயத்தில் தனக்குள்ள பக்திவைராக்கியத்தை’ நேரடியாக காணும்படி அவரை தன்னுடைய இரதத்தில் ஏற்றிச் செல்கிறார்.​—2 இரா. 10:​15, 16, தி.மொ.

16சமாரியாவில் வந்து சேருகையில், எலியாவுக்கு சொல்லப்பட்ட யெகோவாவின் வார்த்தையின்படி, ஆகாபுக்கு சொந்தமானதில் மிச்சமீதியுள்ள எல்லாவற்றையும் பூண்டோடு அழித்துப்போடுகிறார். (1 இரா. 21:​21, 22) எனினும், வெறுக்கத்தக்க பாகாலின் மதத்தைப்பற்றி என்ன? “ஆகாப் பாகாலைச் சேவித்தது கொஞ்சம், யெகூ அவனைச் சேவிப்பது மிகுதி” என யெகூ அறிவிக்கிறார். (2 இரா. 10:18) இந்தப் பேய் வணக்கத்தார் எல்லாரையும் பாகாலின் கோயிலுக்கு வரவழைக்கிறார். தங்களை அடையாளம் காட்டும் உடைகளை அணிந்துவரும்படி அவர்களிடம் சொல்கிறார். அந்த பாகால் வணக்கத்தாருக்குள் யெகோவாவை வணங்குவோர் ஒருவரும் இராதபடி நிச்சயப்படுத்திக் கொள்கிறார். பின்பு, பாகால் வணக்கத்தாரை வெட்டும்படி தன் ஆட்களை உள்ளே அனுப்புகிறார். ஒருவரையும் தப்பவிடாமல் இவர்கள் எல்லாரையும் வெட்டி வீழ்த்துகிறார்கள். பாகாலின் கோயில் இடித்து தரைமட்டமாக்கப்படுகிறது. அந்த இடம் ‘பொதுக்கழிப்பிடமாக’ மாற்றப்படுகிறது. இந்நிலை எரேமியாவின் நாள்வரையிலும் நீடிக்கிறது. ‘இப்படியே யெகூ பாகாலை இஸ்ரவேலில் இராதபடிக்கு அழித்துப்போட்டார்.’​—10:28.

17இருப்பினும், வைராக்கியம் மிக்க யெகூவுங்கூட தவறுகிறார். எதில்? பெத்தேலிலும் தாணிலும் யெரொபெயாம் நிறுத்தி வைத்தப் பொன் கன்றுகுட்டிகளின் வணக்கத்தை தொடர்ந்து பின்பற்றுகிறார். “இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவின் நியாயப்பிரமாணத்தின்படி தன் முழு இருதயத்தோடும் நடந்துகொள்ள ஜாக்கிரதையாய் இருக்கவில்லை.” (10:​31, தி.மொ.) ஆனால் ஆகாபின் குடும்பத்துக்கு எதிராக அவர் நடவடிக்கை எடுத்ததன் காரணமாக அவருடைய சந்ததி நான்காம் தலைமுறை வரையாக இஸ்ரவேலின்மீது ஆட்சி செய்யும் என்பதாக யெகோவா வாக்குறுதி அளிக்கிறார். இவருடைய நாட்களில், யெகோவா இஸ்ரவேலுக்கு விரோதமாக சீரியாவின் ஆசகேலை வரவழைத்து, அந்த ராஜ்யத்தின் கிழக்குப் பாகத்தை துண்டித்துப்போட தொடங்குகிறார். 28 ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகு யெகூ மரணமடைகிறார். அவருடைய குமாரன் யோவாகாஸ் பதவி ஏற்கிறான்.

18யூதாவின் அரசன், யோவாஸ் (11:​1–12:21). அரசனின் தாயாகிய அத்தாலியாள், யேசபேலின் குமாரத்தி; இவள் குணத்திலும் தாயைப் போலவே இருக்கிறாள். தன் குமாரன் அகசியாவின் மரணத்தை இவள் கேள்விப்படுகிறாள். அரச குடும்பத்தார் அனைவரையும் கொன்றுவிடும்படி கட்டளையிட்டு சிங்காசனத்தை கைப்பற்றுகிறாள். அகசியாவின் குழந்தை யோவாஸ் மாத்திரமே மறைத்து வைக்கப்படுவதால் உயிர் தப்புகிறான். அத்தாலியாளின் ஆட்சியின் ஏழாம் ஆண்டில், ஆசாரியனாகிய யோய்தா, யோவாஸை அரசராக அபிஷேகம் செய்கிறார். மேலுமாக அவருடைய கட்டளைப்படி அத்தாலியாள் கொல்லப்படுகிறாள். யெகோவாவின் வணக்கத்தில் யோய்தா ஜனங்களை வழிநடத்துகிறார். கடவுளுக்கு முன்பாக தனது கடமைகளை நிறைவேற்றும்படி அந்த இளம் அரசனுக்கு அவர் போதிக்கிறார்; மேலும் யெகோவாவின் ஆலயத்தை பழுதுபார்ப்பதற்கும் ஏற்பாடு செய்கிறார். பரிசுகள் கொடுப்பதன்மூலம் சீரிய அரசனாகிய ஆசகேல் தாக்குவதிலிருந்து பின்வாங்கும்படியாக யோவாஸ் செய்கிறார். யோவாஸ் எருசலேமில் 40 ஆண்டுகள் ஆண்டபின்பு, அவனுடைய ஊழியக்காரர் அவனை படுகொலை செய்கின்றனர். அவனுடைய குமாரன் அமத்சியா அவனுக்குப் பதிலாக ஆளத் தொடங்குகிறான்.

19இஸ்ரவேலின் அரசர்களான யோவாகாஸும் யோவாஸும் (13:​1-25). யெகூவின் குமாரன் யோவாகாஸ் தொடர்ந்து விக்கிரக வணக்கத்தில் ஈடுபடுகிறான். சீரியாவின் அதிகாரத்துக்குள் இஸ்ரவேல் வருகிறது; இருந்தபோதிலும் யோவாகாஸ் அரச பதவியிலிருந்து நீக்கப்படவில்லை. காலப்போக்கில் யெகோவா இஸ்ரவேலரை விடுவிக்கிறார், ஆனால் அவர்கள் யெரொபெயாமின் கன்றுக்குட்டி வணக்கத்தில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். யோவாகாஸ் மரிக்கையில், அவனுடைய குமாரன் யோவாஸ் இஸ்ரவேலில் அரசனாகிறான். அதே சமயத்தில் அந்த மற்ற யோவாஸ் யூதாவில் அரசாளுகிறான். இஸ்ரவேலின் யோவாஸ் தன் தகப்பனுடைய விக்கிரக வணக்கத்தில் தொடர்ந்து ஈடுபடுகிறான். யோவாஸின் மரணத்திற்கு பின்பு அவனுடைய குமாரன் யெரொபெயாம் அரசனாகிறான். யோவாஸின் ஆட்சி காலத்தின்போதே எலிசா நோய்வாய்ப்படுகிறார். யோவாஸ் மூன்று தடவை சீரியரை முறியடிப்பான் என்பதாக தன் கடைசி தீர்க்கதரிசனத்தை சொன்ன பின்பு மரிக்கிறார்; இது ஏற்ற காலத்தில் நிறைவேற்றமடைகிறது. எலிசாவினுடையதாக ஏற்கப்படுகிற கடைசி அற்புதம் அவருடைய மரணத்துக்கு பின் நிகழ்கிறது. செத்த ஒருவனை, எலிசா அடக்கம் பண்ணப்பட்ட அதே இடத்தில் அடக்கம் செய்கிறார்கள். அவனுடைய பிரேதம் எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டவுடன் அவன் உயிரடைந்து எழுகிறான்.

20யூதாவின் அரசன், அமத்சியா (14:​1-22). அமத்சியா யெகோவாவின் பார்வையில் நேர்மையானதை செய்கிறார். ஆனால் வணக்கத்துக்காக பயன்படுத்தப்பட்ட மேடைகளை அழித்துப்போட தவறுகிறார். இவர் இஸ்ரவேலின் அரசனாகிய யோவாஸால் போரில் தோற்கடிக்கப்படுகிறார். 29 ஆண்டு ஆட்சிக்குப் பின்பு, இவர் ஒரு சதித்திட்டத்தில் கொல்லப்படுகிறார். இவருடைய குமாரன் அசரியா இவர் ஸ்தானத்தில் அரசனாக்கப்படுகிறான்.

21இஸ்ரவேலின் அரசன் இரண்டாம் யெரொபெயாம் (14:​23-29). இஸ்ரவேலின் அரசனாகிய இரண்டாம் யெரொபெயாம் தனது முன்னோர்களின் பொய் வணக்கத்தை அப்படியே தொடர்ந்து பின்பற்றுகிறான். இவன் சமாரியாவில் 41 ஆண்டுகள் ஆட்சி செலுத்துகிறான். இஸ்ரவேல் இழந்த பிராந்தியங்களை மீட்பதில் அவன் வெற்றி சிறக்கிறான். யெரொபெயாமுடைய மரணத்திற்கு பின்பு அவனுடைய மகன் சகரியா அரியணை ஏறுகிறான்.

22யூதாவின் அரசன் அசரியா (உசியா) (15:​1-7). அசரியா 52 ஆண்டுகள் ஆட்சி செய்கிறார். இவர் யெகோவாவுக்கு முன்பாக நேர்மையுள்ளவராக இருக்கிறார். ஆனால் மேடைகளை அழிக்க தவறுகிறார். பின்னால், யெகோவா இவரைக் குஷ்டரோகத்தால் வாதிக்கிறார். இவருடைய குமாரன் யோதாம் அரச பொறுப்புகளைக் கவனிக்கிறான். அசரியாவின் மரணத்திற்குப் பிறகு இவன் அரசனாகிறான்.

23இஸ்ரவேலின் அரசர்களான சகரியா, சல்லூம், மெனாகேம், பெக்காகியா, பெக்கா (15:​8-31). யெகோவாவுடைய வாக்கின்படி, இஸ்ரவேலின் சிங்காசனம் யெகூவின் குடும்பத்தில் நான்காவது தலைமுறையாகிய சகரியா வரையில் நிலைத்திருக்கிறது. (10:30) இதன்படி, இவன் சமாரியாவில் அரசனாகிறான். ஆறு மாதங்களுக்கு பின்பு ஒரு கொலைகாரன் அவனை கொன்றுபோடுகிறான். உரிமையின்றி அரசாட்சியை கைப்பற்றின சல்லூம் ஒரு மாதம் மட்டுமே அரசாளுகிறான். மெனாகேம், பெக்காகியா, பெக்கா ஆகிய அரசர்கள் ஒருவர்பின் ஒருவராக ஆட்சி செலுத்தும்போது பொய் வணக்கமும், படுகொலையும், உட்கிளர்ச்சியும் இஸ்ரவேலைத் தொடர்ந்து வாட்டி வதைக்கின்றன. பெக்காவின் ஆட்சியின்போது அசீரியா படையெடுக்கிறது. ஓசெயா பெக்காவை கொலைசெய்து, இஸ்ரவேலின் கடைசி அரசனாகிறான்.

24யூதாவின் அரசர்களான யோதாமும் ஆகாஸும் (15:​32–16:20). யோதாம் தூய்மையான வணக்கத்தை அனுசரிக்கிறான், ஆனால் மேடைகள் தொடர்ந்திருக்கும்படி விடுகிறான். இவனுடைய குமாரன் ஆகாஸ் அருகிலுள்ள இஸ்ரவேல் அரசர்களின் மாதிரியை பின்பற்றி யெகோவாவின் பார்வையில் பொல்லாங்கை செய்கிறான். இஸ்ரவேலின் அரசர்களும் சீரியர்களும் இவனை தாக்குகின்றனர். அப்போது அவன் அசீரியாவின் அரசனை உதவிக்கு அழைக்கிறான். அசீரியரின் உதவியோடு தமஸ்கு கைப்பற்றப்படுகிறது. அசீரியாவின் அரசனை சந்திக்கும்படி ஆகாஸ் அங்கு செல்கிறான். அங்கு வணக்கத்துக்குரிய பலிபீடம் ஒன்றை ஆகாஸ் காண்கிறான். அதே மாதிரியின்படி எருசலேமில் ஒரு பலிபீடத்தை கட்டுகிறான். யெகோவாவின் ஆலயத்திலுள்ள வெண்கலப் பலிபீடத்தின்மேல் பலிசெலுத்துவதற்கு பதிலாக இதன்மேல் பலிசெலுத்த தொடங்குகிறான். இவனுக்குப்பின் இவனுடைய குமாரன் எசேக்கியா யூதாவின் அரசனாகிறார்.

25இஸ்ரவேலின் கடைசி அரசன் ஓசெயா (17:1-41). இஸ்ரவேல் இப்பொழுது அசீரியாவின் ஆதிக்கத்தின்கீழ் வருகிறது. ஓசெயா கலகம் செய்து எகிப்தின் உதவியை நாடுகிறான். ஆனால் அவனுடைய ஆட்சியின் ஒன்பதாவது ஆண்டில், இஸ்ரவேலை அசீரியர்கள் கைப்பற்றி சிறைபிடித்து செல்கிறார்கள். இவ்வாறு இஸ்ரவேலின் பத்துக் கோத்திர ராஜ்யம் முடிவடைகிறது. ஏன்? “இஸ்ரவேல் புத்திரர் தங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தபடியால் இப்படி நேரிட்டது. . . . செய்யவேண்டாம் என்று யெகோவா தங்களுக்கு விலக்கியிருந்ததைச் செய்து கேவலமான விக்கிரகங்களைச் சேவித்துவந்தார்கள். . . . ஆகவே யெகோவா இஸ்ரவேலின்மேல் கடுங்கோபங்கொண்டு தமது முகத்திற்கெதிரே இராதபடி அவர்களை அகற்றினார்.” (17:​7, 12, 18, தி.மொ.) அந்தத் தேசத்தில் குடியிருக்க அசீரியர் கிழக்கிலிருந்து ஜனங்களை கொண்டு வருகின்றனர். இவர்கள் தங்கள் சொந்த தெய்வங்களை தொடர்ந்து வணங்குகிறபோதிலும், ‘யெகோவாவுக்குப் பயப்படுவோராக’ ஆகின்றனர்.​—17:​33, NW.

26யூதாவின் அரசன் எசேக்கியா (18:​1-20:21). எசேக்கியா, தன் முற்பிதாவாகிய தாவீதைப் போலவே எல்லாவற்றிலும் யெகோவாவின் பார்வையில் சரியானதையே செய்கிறார். பொய் வணக்கத்தை அவர் அடியோடு ஒழித்து மேடைகளையும் தகர்த்துப்போடுகிறார். மோசே செய்த வெண்கலச் சர்ப்பத்தையும் அவர் விட்டுவைக்கவில்லை. ஏனெனில் ஜனங்கள் இப்போது அதையும் வணங்குகிறார்கள். அசீரியாவின் அரசனான சனகெரிப் இப்பொழுது யூதாவின்மீது படையெடுத்து அரணான பட்டணங்கள் பலவற்றை கைப்பற்றுகிறான். எசேக்கியா பேரளவான கப்பம் கொடுத்து அவனைச் சமாதானப்படுத்த முயற்சி செய்கிறார். ஆனால் சனகெரிப் தன் தூதுவன் ரப்சாக்கே என்பவனை அனுப்புகிறான். இவன் எருசலேமின் மதில்கள் வரையாக வந்து, சரணடையும்படி அதிகாரத்துடன் கூறி, எல்லா ஜனங்களும் கேட்க யெகோவாவை ஏளனம் செய்கிறான். தீர்க்கதரிசியாகிய ஏசாயா சனகெரிப்புக்கு எதிரான தண்டனைத்தீர்ப்பின் செய்தியை அறிவித்து உண்மையுள்ள எசேக்கியாவுக்கு நம்பிக்கையூட்டுகிறார். “யெகோவா இப்படிச் சொல்லுகிறார் . . . பயப்பட வேண்டாம்.” (19:​6, தி.மொ.) சனகெரிப் தொடர்ந்து பயமுறுத்தி வருகிறான். எசேக்கியா யெகோவாவை நோக்கி, “இப்போதும் யெகோவாவே, எங்கள் கடவுளே, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சித்தருளும்; யெகோவாவாகிய நீர் ஒருவரே கடவுள் என்று பூமியின் ராஜ்யங்கள் எல்லாம் அறியும்படி செய்தருளும்” என்று மன்றாடுகிறார்.​—19:19, தி.மொ.

27இந்தத் தன்னலமற்ற வேண்டுகோளுக்கு யெகோவா பதிலளிக்கிறாரா? ‘யெகோவாவின் வைராக்கியம்’ அந்தச் சத்துருவை திரும்பிச் செல்ல வைக்கும் என்ற செய்தியை அவர் முதலாவதாக ஏசாயாவின் மூலம் அனுப்புகிறார். (19:​31, தி.மொ.) பின்பு, அதே இரவில், அசீரியரின் பாளையத்தில் 1,85,000 பேரை கொன்று குவிக்கும்படி அவர் தம்முடைய தூதனை அனுப்புகிறார். காலையில் ‘அவர்களெல்லாரும் செத்த பிரேதங்களாய்க் கிடக்கிறார்கள்.’ (19:35) தோல்வியடைந்த சனகெரிப் திரும்பிச் சென்று நினிவேயில் தங்குகிறான். அங்கே அவனுடைய தெய்வமான நிஸ்ரோக் மறுபடியும் ஒருமுறை அவனுக்கு பயனற்றதாக நிரூபிக்கிறது; எவ்வாறெனில், அவன் குனிந்து வணங்குகையிலேயே அவனுடைய சொந்த குமாரர்களே அவனை கொன்றுவிடுகின்றனர். இச்சம்பவம் ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுகிறது.​—19:​7, 37.

28எசேக்கியா நோய்வாய்ப்பட்டு மரணத்தை நெருங்குகிறார். ஆனால் யெகோவா மறுபடியுமாக அவருடைய ஜெபத்துக்குச் செவிகொடுக்கிறார். இதன் விளைவாக இன்னும் 15 ஆண்டுகளுக்கு அவருடைய வாழ்க்கையை கடவுள் நீடிக்க செய்கிறார். பாபிலோனின் அரசன் பரிசுகளுடன் தூதுவர்களை அனுப்புகிறான். எசேக்கியா தன் பொக்கிஷசாலையில் உள்ள அனைத்தையும் அவர்களுக்குக் காட்ட துணிகிறார். எசேக்கியாவினுடைய வீட்டிலுள்ள எல்லாம் ஒரு நாள் பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்படும் என்பதாக ஏசாயா தீர்க்கதரிசனம் உரைக்கிறார். எருசலேம் நகரத்துக்குள் தண்ணீர் கொண்டுவருவதற்காக சுரங்க வாய்க்காலை இவர் அமைக்கிறார். இதன் காரணமாகவும் தனது வல்லமையின் காரணமாகவும் பெரும் புகழ் பெற்ற எசேக்கியா பிறகு மரிக்கிறார்.

29யூதாவின் அரசர்களான மனாசே, ஆமோன், யோசியா (21:​1–23:30). மனாசே தன் தகப்பன் எசேக்கியாவுக்குப்பின் அரசனாகி, 55 ஆண்டுகள் ஆட்சி செய்கிறான். இவன் யெகோவாவின் பார்வையில் பொல்லாத காரியங்களை மிகவும் அதிகமாக செய்கிறான். பொய் வணக்கத்தின் மேடைகளை அவன் திரும்பவும் புதுப்பிக்கிறான். மேலுமாக பாகாலுக்கு மேடைகளைக் கட்டுகிறான். ஆகாப் செய்ததைப்போல் புனித கம்பத்தை உண்டுபண்ணுகிறான். யெகோவாவின் ஆலயத்தை விக்கிரக வணக்கத்தால் நிரப்புகிறான். சமாரியாவை அழித்ததுபோல எருசலேமையும் முற்றிலுமாக அழிக்கப் போவதாக யெகோவா முன்னறிவிக்கிறார். ஆம், ‘அதை அறவே துடைத்துத் தலைகீழாக அதைக் கவிழ்த்துப்போடுவேன்’ என்பதாக முன்னறிவிக்கிறார். மேலும் குற்றமற்ற இரத்தத்தையும் மனாசே “மிகப் பேரளவில்” சிந்துகிறான். (21:​13, 16, NW) இவனுக்கு பிறகு இவனுடைய குமாரன் ஆமோன் அரசனாகிறான். இவனும், சதிகாரரால் கொல்லப்படும் வரையில் இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்து பொல்லாங்கை நடப்பிக்கிறான்.

30ஜனங்கள் இப்பொழுது ஆமோனின் குமாரன் யோசியாவை அரசனாக்குகின்றனர். தன்னுடைய 31 ஆண்டுகால ஆட்சியின்போது, இவர் ‘தன் முற்பிதாவாகிய தாவீதின் வழிகளில் நடக்கிறார்.’ ஆகவே அழிவை நோக்கி சென்றுகொண்டிருந்த யூதாவை சிறிது காலம் காப்பாற்றுகிறார். (22:2, NW) யெகோவாவின் ஆலயத்தை இவர் பழுதுபார்க்க தொடங்குகிறார். அங்கே நியாயப்பிரமாண புத்தகத்தை பிரதான ஆசாரியன் கண்டுபிடிக்கிறார். யெகோவாவுக்கு கீழ்ப்படியாததால் அந்த ஜனத்தின்மீது அழிவு நிச்சயம் வரும் என்பதை இது உறுதிப்படுத்துகிறது. ஆனால் யோசியா உண்மையுள்ளவராக இருப்பதன் காரணமாக அவருடைய நாளில் அந்த அழிவு வராது என்பதாக யோசியாவுக்கு உறுதியளிக்கப்படுகிறது. அவர் யெகோவாவின் ஆலயத்தையும் தேசம் முழுவதையும் பேய் வணக்கத்திலிருந்து சுத்திகரிக்கிறார். பெத்தேல் வரையாக விக்கிரகங்களை உடைத்து நொறுக்கும் வேலையை விரிவாக்குகிறார்; 1 இராஜாக்கள் 13:​1, 2-ல் சொல்லப்பட்டுள்ள தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக யெரொபெயாமின் பலிபீடத்தை அழிக்கிறார். யெகோவாவுக்கு பஸ்காவை திரும்பவும் ஆசரிக்க ஏற்பாடு செய்கிறார். “அவனைப்போன்ற ராஜா அவனுக்குமுன் இருந்ததில்லை, மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி தன் முழு இருதயத்தோடும் தன் முழு ஆத்துமாவோடும் தன் முழு பலத்தோடும் அவன் யெகோவாவினிடம் திரும்பி அவரைப் பற்றிக்கொண்டான்.” (23:​25, தி.மொ.) இருப்பினும், மனாசேயின் பொல்லாங்குகளின் காரணமாக யெகோவாவின் கோபம் இன்னும் பற்றியெரிகிறது. மெகிதோவில் எகிப்தின் அரசனை எதிர்த்து போரிடுகையில் யோசியா மரிக்கிறார்.

31யூதாவின் அரசர்களான யோவாகாஸ், யோயாக்கீம், யோயாக்கீன் (23:​31–24:17). மூன்று மாத ஆட்சிக்குப் பின்பு, யோசியாவின் குமாரன் யோவாகாஸ் எகிப்தின் அரசனால் சிறைபிடித்து செல்லப்படுகிறான். இவனுடைய சகோதரன் எலியாக்கீம் ராஜாவாக பொறுப்பேற்கிறான்; இவனுடைய பெயர் யோயாக்கீம் என மாற்றப்படுகிறது. இவன் தன் முற்பிதாக்களின் தவறான போக்கை பின்பற்றுகிறான். பாபிலோனின் அரசனாகிய நேபுகாத்நேச்சாருக்கு இவன் கீழ்ப்பட்டிருக்கிறான். ஆனால் மூன்று ஆண்டுகளுக்குப் பின்பு நேபுகாத்நேச்சாருக்கு எதிராக கலகம் செய்கிறான். யோயாக்கீம் மரணம் அடைந்த பிறகு அவனுடைய குமாரன் யோயாக்கீன் ஆட்சிசெய்ய தொடங்குகிறான். நேபுகாத்நேச்சார், எருசலேமை முற்றுகையிட்டு அதை கைப்பற்றுகிறான். மேலும், ஏசாயாவின்மூலம் “யெகோவா சொல்லியிருந்தபடியே” யெகோவாவின் ஆலயத்தின் பொக்கிஷங்களை பாபிலோனுக்கு கொண்டுசெல்கிறான். (24:13; 20:​17, தி.மொ.) யோயாக்கீனும் அவனுடைய ஆயிரக்கணக்கான குடிமக்களும் பாபிலோனுக்கு நாடுகடத்தப்படுகின்றனர்.

32யூதாவின் கடைசி அரசன் சிதேக்கியா (24:​18–25:30). நேபுகாத்நேச்சார், யோயாக்கீனின் மாமனான மத்தனியாவை அரசனாக்கி அவனுடைய பெயரை சிதேக்கியா என்பதாக மாற்றுகிறான். இவன் எருசலேமில் 11 ஆண்டுகள் ஆட்சி செய்கிறான். யெகோவாவின் பார்வையில் பொல்லாததாய் இருக்கும் காரியங்களை இவனும் தொடர்ந்து செய்கிறான். பாபிலோனுக்கு எதிராக சிதேக்கியா கலகம் செய்கிறான். ஆகவே அவனுடைய ஆட்சியின் ஒன்பதாவது ஆண்டில், நேபுகாத்நேச்சாரும் அவனுடைய முழு இராணுவ படையும் எருசலேம் முழுவதையும் சுற்றி முற்றுகையிட்டு கொத்தளங்களை கட்டுகிறார்கள். 18 மாதங்களுக்கு பின்பு, இந்த நகரம் பஞ்சத்தால் பீடிக்கப்படுகிறது. அப்பொழுது அந்த மதில்கள் உடைக்கப்படுகின்றன. சிதேக்கியா தப்பியோட முயற்சி செய்கையில் பிடிக்கப்படுகிறான். அவனுடைய குமாரர்கள் அவன் கண்களுக்கு முன்பாக வெட்டப்படுகின்றனர், அவனும் குருடாக்கப்படுகிறான். அடுத்த மாதத்தில், யெகோவாவின் ஆலயமும் அரசனின் அரண்மனையும் உட்பட, அந்த நகரத்தின் முக்கியமான எல்லா வீடுகளும் எரிக்கப்படுகின்றன. நகரத்தின் மதில்கள் அனைத்தும் தரைமட்டமாக்கப்படுகின்றன. உயிர்தப்பிய பெரும்பான்மையோர் பாபிலோனுக்கு சிறைக்கைதிகளாக கொண்டு செல்லப்படுகின்றனர். யூதாவின் நாட்டுப்புறத்தில் மீந்துள்ள கொஞ்சநஞ்ச ஏழை எளியோர்களுக்கு கெதலியா அதிபதியாக நியமிக்கப்படுகிறான். எனினும், அவன் படுகொலை செய்யப்படுகிறான். மக்களோ எகிப்துக்கு தப்பியோடுகின்றனர். இவ்வாறு, பொ.ச.மு. 607-ன் ஏழாவது மாதத்திலிருந்து இந்தத் தேசம் முற்றிலும் பாழாய் கிடக்கிறது. இரண்டு இராஜாக்கள் புத்தகத்தின் கடைசி வார்த்தைகள், சிறையிருப்பின் 37-வது ஆண்டில் யோயாக்கீமுக்கு பாபிலோனின் அரசன் தயவு காட்டுவதைப் பற்றி சொல்லுகின்றன.

ஏன் பயனுள்ளது

33இஸ்ரவேல், யூதா ராஜ்யங்களின் அழிவுக்கேதுவான வீழ்ச்சியைப் பற்றிய தகவல் இப்புத்தகத்தில் அடங்கியிருக்கிறது. என்றபோதிலும், யெகோவாவுக்கும் அவருடைய நேர்மையான நியமங்களுக்கும் அன்பு காட்டிய நபர்களின்மீது யெகோவாவின் ஆசீர்வாதம் இருந்ததற்கு இரண்டு இராஜாக்கள் பல சிறப்பான உதாரணங்களைத் தருகிறது. சாறிபாத்திலிருந்த விதவையைப்போல், சூனேமியப் பெண், கடவுளுடைய தீர்க்கதரிசிக்கு உபசரிப்பை காட்டியதால் மிகுந்த ஆசீர்வாதத்தை பெற்றாள். (4:​8-17, 32-37) எலிசா, 20 அப்பங்களினால் நூறு பேருக்கு உணவளித்தபோது, எல்லா சமயத்திலும் தேவைகளை அளிப்பதற்கு இருக்கும் யெகோவாவின் திறமை காட்டப்பட்டது. பிற்பாடு இயேசு செய்த அற்புதங்களோடு இவை ஒத்திருக்கின்றன. (2 இரா. 4:​42-44; மத். 14:​16-21; மாற். 8:1-9) பாகால் வணக்கத்தாரின் அழிவைக் காண யெகூவுடன் இரதத்தில் செல்லும் பாக்கியத்தை யோனதாப் பெற்றார். எதனால்? வைராக்கியமுள்ள யெகூவை வெளிப்படையாக வாழ்த்துவதற்கு அவர் நம்பிக்கையோடு முன்வந்ததாலேயே. (2 இரா. 10:​15, 16) எசேக்கியாவும் யோசியாவும், மனத்தாழ்மையிலும் யெகோவாவின் பெயருக்கும் நியாயப்பிரமாணத்துக்கும் சரியான மதிப்பு கொடுப்பதிலும் சிறந்த முன்மாதிரிகள். (19:​14-19; 22:​11-13) இவர்கள் அனைவருமே நாம் பின்பற்றுவதற்கு மிகச் சிறந்த முன்மாதிரிகள்.

34பொறுப்பான தம்முடைய ஊழியர்களுக்கு அவமதிப்பு காட்டுவதை யெகோவா கண்டிக்காமல் விடுவதில்லை. யெகோவாவின் தீர்க்கதரிசியான எலிசாவை பிள்ளைகள் கேலி செய்தபோது அவர் உடனடியாக அவர்களை தண்டித்தார். (2:​23, 24) மேலும், யெகோவா குற்றமற்றவர்களின் இரத்தத்தை மதிக்கிறார். ஆகாபின் குடும்பத்தை குறித்ததில், பாகால் வணக்கத்தின் காரணமாக மட்டுமல்ல, அதோடு சேர்ந்த இரத்தஞ்சிந்துதலின் காரணமாகவும் அதன்மீது அவருடைய தண்டனைத்தீர்ப்பு கடுமையாக இருந்தது. இவ்வாறு “யெகோவாவின் சகல ஊழியரின் இரத்தப்பழியையும் யேசேபேலின் கையிலே” பழிவாங்கும்படி யெகூ அபிஷேகம் பண்ணப்பட்டார். யோராமுக்கு எதிராக தண்டனைத்தீர்ப்பு நிறைவேற்றப்பட்டது. ‘நாபோத்தின் இரத்தத்தின், மற்றும் அவனுடைய குமாரரின் இரத்தத்தின்’ காரணமாகவே இந்த விளைவு என்பதாக யெகோவா கூறியதை அச்சமயத்தில் யெகூ நினைவுபடுத்திக் கொண்டார். (9:​7, 26, தி.மொ.) அதேவிதமாக மனாசேயின் இரத்தப்பழியே யூதாவின் அழிவுக்கு முடிவாக வழிவகுத்தது. மனாசே பொய் வணக்கத்தில் ஈடுபட்டு பாவம் செய்ததோடு ‘எருசலேமை நாலு மூலைவரையும் இரத்தப்பழிகளால் நிரப்பினான்.’ பின்னால் மனாசே தன் கெட்ட போக்கிலிருந்து மனந்திரும்பியபோதிலும், இரத்தப்பழி நிலைத்திருந்தது. (2 நா. 33:​12, 13) யோசியா நல்லாட்சி செலுத்தினார்; விக்கிரக வணக்கம் முழுவதையும் அகற்றினார். இருந்தபோதிலும் மனாசேயின் ஆட்சியினால் விளைந்த சமுதாய இரத்தப்பழியை நீக்கிப்போட முடியவில்லை. பல ஆண்டுகளுக்கு பிறகு யெகோவா, எருசலேமுக்கு விரோதமாக நியாயத்தீர்ப்பை நிறைவேற்ற மற்ற தேசத்தவரை பயன்படுத்தினார். மனாசே ‘எருசலேமைக் குற்றமற்ற இரத்தத்தினால் நிரப்பினான்; இதன் காரணமாகவே தாம் மன்னிக்க மனமில்லாமல் இருப்பதாக’ யெகோவா கூறினார். (2 இரா. 21:16; 24:​4, தி.மொ.) பொ.ச. முதல் நூற்றாண்டிலிருந்த எருசலேமின் ஆசாரியர்கள், தீர்க்கதரிசிகளின் இரத்தத்தை சிந்தியவர்களுடைய குமாரர்களாக இருந்தனர். ஆகவே ‘பூமியின்மேல் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தப்பழியெல்லாம் அவர்கள்மேல் வரும்படியாக’ அந்த எருசலேம் அழிய வேண்டும் என்று இயேசு அறிவித்தார். (மத். 23:​29-36) இப்பொழுதுவரை சிந்தப்பட்டுவரும் குற்றமற்ற இரத்தத்திற்காக, முக்கியமாக “தேவவசனத்தினிமித்தம் . . . கொல்லப்பட்டவர்களுடைய” இரத்தத்திற்காக தாம் பழிவாங்கப் போவதாக கடவுள் இந்த உலகத்தை எச்சரிக்கிறார்.​—வெளி. 6:​9, 10.

35தம்முடைய தீர்க்கதரிசன நியாயத்தீர்ப்புகளின் நிறைவேற்றத்தை யெகோவா கண்டிப்பாக கொண்டு வருவார் என்ற உறுதியும் இரண்டு இராஜாக்களில் காட்டப்பட்டுள்ளது. எலியா, எலிசா, ஏசாயா போன்ற பிரசித்தி பெற்ற மூன்று தீர்க்கதரிசிகள் நம்முடைய கவனத்துக்கு கொண்டு வரப்படுகின்றனர். அவர்கள் ஒவ்வொருவருடைய தீர்க்கதரிசனங்களும் குறிப்பிடத்தக்க விதமாக நிறைவேற்றமடைந்தன. (2 இரா. 9:​36, 37; 10:​10, 17; 3:​14, 18, 24; 13:​18, 19, 25; 19:​20, 32-36; 20:​16, 17; 24:13) மலையில் மறுரூபமான சம்பவத்தில், தீர்க்கதரிசி மோசேயுடனும் பெரிய தீர்க்கதரிசியாகிய இயேசு கிறிஸ்துவுடனும் எலியா தோன்றினார். இதுவும் அவர் உண்மையான தீர்க்கதரிசி என்பதை உறுதிப்படுத்துகிறது. (மத். 17:​1-5) அந்த நிகழ்ச்சியின் சிறந்த மேன்மையை குறிப்பிடுபவராக பேதுரு பின்வருமாறு சொன்னார்: “தீர்க்கதரிசன வசனம் இதினால் நமக்கு அதிக உறுதியானது. பொழுது விடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருண்ட இடத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தை நீங்கள் கவனித்திருப்பது நலமாகும்.”​—2 பே. 1:​19, தி.மொ.

36பொய் மதத்தை பின்பற்றுபவர்களும் குற்றமற்ற இரத்தத்தை வேண்டுமென்றே சிந்துபவர்களும் முற்றிலும் அழிக்கப்படுவார்கள். இதையே அவர்களுக்கு எதிரான யெகோவாவின் தண்டனைத்தீர்ப்பாக இரண்டு இராஜாக்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள சம்பவங்கள் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. எனினும், “ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடு செய்த தமது உடன்படிக்கையினிமித்தம்” யெகோவா தம்முடைய ஜனத்துக்கு தயவும் இரக்கமும் காட்டினார். (2 இரா. 13:23) “தமது தாசனாகிய தாவீதினிமித்தமும்” கடவுள் அவர்களை பாதுகாத்தார். (8:​19, தி.மொ.) இப்போதும்கூட தம்மிடம் திரும்புவோருக்கும் கடவுள் அதே போன்ற இரக்கத்தை காட்டுவார். பைபிள் பதிவையும் வாக்குறுதிகளையும் நாம் மறுபார்வை செய்யும்போது, “தாவீதின் குமாரனான” வாக்குப்பண்ணப்பட்ட வித்தாகிய இயேசு கிறிஸ்துவின் ராஜ்யத்தை எப்பேர்ப்பட்ட ஆழ்ந்த நம்பிக்கையுடன் நாம் ஆவலோடு எதிர்பார்க்கிறோம். அங்கே இரத்தஞ்சிந்துதலும் அக்கிரமமும் இனிமேலும் இரா!​—மத். 1:1; ஏசா. 2:4; சங். 145:20.

[அடிக்குறிப்பு]

a வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கங்கள் 152, 325; தொ. 2, பக்கங்கள் 908, 1101.

[கேள்விகள்]

1. இரண்டு இராஜாக்களில் என்ன சரித்திரங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன, இவை எதை சரியென நிரூபிக்கின்றன?

2. இரண்டு இராஜாக்கள் யாரால் எழுதப்பட்டது, அது, ஏற்றுக்கொள்ளப்பட்ட அதிகாரப்பூர்வ பட்டியலைச் சேர்ந்ததை பற்றி என்ன சொல்லலாம், எந்தக் காலப்பகுதி இதில் அடங்கியுள்ளது?

3. தொல்பொருள் ஆராய்ச்சியின் குறிப்பிடத்தக்க என்ன கண்டுபிடிப்புகள் இரண்டு இராஜாக்களை ஆதரிக்கின்றன?

4. இரண்டு இராஜாக்கள் தேவாவியால் ஏவப்பட்ட வேதாகமத்தின் பாகம் என்பதை எது நிரூபிக்கிறது?

5. என்ன கண்டனத்தையும் மரணத் தீர்ப்பையும் அகசியாவிடம் எலியா கூறுகிறார், ஏன்?

6. எலியா என்ன சூழ்நிலைமைகளில் எலிசாவிடமிருந்து பிரிகிறார், “எலியாவின் ஆவி” எலிசாவின்மீது இருப்பது சீக்கிரத்தில் எவ்வாறு நிரூபிக்கப்படுகிறது?

7. யோசபாத்தையும் யோராமையும் யெகோவா ஏன் காப்பாற்றுகிறார்?

8. மேலும் என்ன அற்புதங்களை எலிசா நடப்பிக்கிறார்?

9. நாகமான் மற்றும் கோடரி சம்பந்தமாக என்ன அற்புதங்கள் நடப்பிக்கப்படுகின்றன?

10. யெகோவாவின் மேம்பட்ட படைகள் எவ்வாறு காட்டப்படுகின்றன, சீரியரை எலிசா எவ்வாறு அனுப்பிவைக்கிறார்?

11. சீரியரையும் பெனாதாத்தையும் குறித்த எலிசாவின் தீர்க்கதரிசனங்கள் எவ்வாறு நிறைவேறுகின்றன?

12. யோசபாத்தின் குமாரனாகிய யோராம் எப்படிப்பட்ட அரசன்?

13. யெகூ அபிஷேகம் செய்யப்பட்டதற்குப் பின் உடனடியாக என்ன அதிரடி நடவடிக்கைகளை தொடங்குகிறார்?

14. யேசபேலை பற்றிய எலியாவின் தீர்க்கதரிசனம் எவ்வாறு நிறைவேற்றமடைகிறது?

15. சமாரியாவுக்கு செல்லும் வழியில் என்ன வித்தியாசமான சந்திப்புகளை எதிர்பாராத விதத்தில் யெகூ எதிர்ப்படுகிறார்?

16. ஆகாபின் குடும்பத்துக்கும் பாகாலுக்கும் எதிராக யெகூவின் நடவடிக்கை எந்தளவுக்கு இருந்தது?

17. யெகூ எதில் தவறுகிறார், இஸ்ரவேலை யெகோவா எவ்வாறு தண்டிக்க தொடங்குகிறார்?

18. யூதாவில் அத்தாலியாளின் சதி எவ்வாறு குலைக்கப்படுகிறது, யோவாஸின் ஆட்சியில் குறிப்பிடத்தக்க அம்சம் என்ன?

19. (அ) இஸ்ரவேலில் யோவாகாஸ், யோவாஸ் ஆகியோரின் ஆட்சியின்போது எந்த பொய் வணக்கம் தொடர்கிறது? (ஆ) யெகோவாவின் தீர்க்கதரிசியாக எலிசாவின் வாழ்க்கை எவ்வாறு முடிவடைகிறது?

20. யூதாவில் அமத்சியாவின் ஆட்சியை விவரியுங்கள்.

21. இரண்டாம் யெரொபெயாமுடைய ஆட்சியின்போது இஸ்ரவேலில் என்ன நடக்கிறது?

22. யூதாவில் அசரியாவின் ஆட்சியை குறித்து என்ன சொல்லப்படுகிறது?

23. அசீரியர்களின் அச்சுறுத்துதல் எழும்பும்போது இஸ்ரவேல் எத்தகைய தீயசெயல்களால் வாதிக்கப்படுகிறது?

24. யோதாமுக்கு பிறகு யூதாவின் ஆகாஸ், வணக்கம் சம்பந்தமாக எவ்வாறு பாவம் செய்கிறான்?

25. எவ்வாறு இஸ்ரவேல் அடிமைத்தனத்திற்கு உட்படுகிறது, ஏன்?

26, 27. (அ) யூதாவின் எசேக்கியா யெகோவாவின் பார்வையில் எவ்வாறு சரியானதை செய்கிறார்? (ஆ) அசீரியரை திருப்பி அனுப்புமாறு எசேக்கியா செய்த ஜெபத்திற்கு யெகோவா எவ்வாறு பதிலளிக்கிறார்? (இ) ஏசாயா தீர்க்கதரிசனம் மேலுமாக எவ்வாறு நிறைவேறுகிறது?

28. எசேக்கியா பெரும் புகழ் பெறுவதற்கு காரணம் என்ன, ஆனால் அவர் எந்த விஷயத்தில் பாவம் செய்கிறார்?

29. என்ன விக்கிரகாராதனையை மனாசே ஏற்படுத்துகிறான், என்ன பேரழிவை யெகோவா முன்னறிவிக்கிறார், மனாசே மேலுமாக என்ன பாவம் செய்கிறான்?

30. ஏன், எவ்வாறு யோசியா தன் முழு இருதயத்தோடும் யெகோவாவிடம் திரும்புகிறார்?

31. யோசியாவின் மரணத்துக்குப் பின் என்ன பின்னடைவுகள் யூதாவுக்கு ஏற்படுகின்றன?

32. எருசலேமும் பாழாக்கப்படுவதற்கு வழிநடத்தும் அதிர்ச்சியூட்டுகிற சம்பவங்கள் யாவை?

33. நாம் பின்பற்றுவதற்கு இரண்டு இராஜாக்கள் புத்தகத்தில் என்ன சிறந்த முன்மாதிரிகள் உள்ளன?

34. பொறுப்புடைய ஊழியருக்கு மதிப்பு கொடுப்பதை குறித்தும் இரத்தப்பழியை குறித்தும் இரண்டு இராஜாக்கள் நமக்கு என்ன கற்பிக்கிறது?

35. (அ) எலியா, எலிசா, ஏசாயா ஆகியோர் உண்மையான தீர்க்கதரிசிகள் என்பது எவ்வாறு உறுதிசெய்யப்படுகிறது? (ஆ) எலியாவின் சம்பந்தமாக, தீர்க்கதரிசனத்தை பற்றி பேதுரு என்ன சொல்லுகிறார்?

36. யெகோவா தம்முடைய ஜனத்துக்கு ஏன் இரக்கம் காட்டினார், அந்த வித்தின் ராஜ்யத்தில் நம்முடைய நம்பிக்கை எவ்வாறு உறுதியாக்கப்படுகிறது?