Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் புத்தக எண் 10—2 சாமுவேல்

பைபிள் புத்தக எண் 10—2 சாமுவேல்

பைபிள் புத்தக எண் 10—2 சாமுவேல்

எழுத்தாளர்கள்: காத், நாத்தான்

எழுதப்பட்ட இடம்: இஸ்ரவேல்

எழுதி முடிக்கப்பட்டது: ஏ. பொ.ச.மு. 1040

காலப்பகுதி: பொ.ச.மு. 1077-ஏ. 1040

கில்போவாவில் இஸ்ரவேல் பெரும் தோல்வியை தழுவியது. வெற்றிவாகை சூடிய பெலிஸ்தர் தேசத்தை ஆக்கிரமித்தனர். இது இஸ்ரவேல் மக்களுக்கு மனக் கவலையை தந்தது. இஸ்ரவேலின் தலைவர்களும் மிகச் சிறந்த வாலிபரும் உயிரற்றுக் கிடந்தனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஈசாயின் குமாரனும், ‘யெகோவாவால் அபிஷேகம் பண்ணப்பட்ட’ இளைஞனுமான தாவீது தேசிய அளவில் முக்கிய நபராகிறார். (2 சா. 19:​21, தி.மொ.) இவ்வாறு சாமுவேலின் இரண்டாம் புத்தகம் தொடங்குகிறது, இதை யெகோவா மற்றும் தாவீதின் புத்தகம் என்று அழைத்தாலும் மிகையாகாது. இதிலுள்ள வரலாற்று சம்பவங்கள் செயல்துடிப்பு மிக்கவையாக இருக்கின்றன. படுதோல்வியிலிருந்து வெற்றிச்சிகரத்திற்கும், சண்டை சச்சரவால் பிரிவுற்ற ஜனத்தின் இன்னல்களிலிருந்து ஒன்றிணைந்த ராஜ்யத்தின் செழுமைக்கும், இளமை துடிப்பிலிருந்து வயோதிபத்தின் ஞானத்துக்கும் நம்முடைய கவனம் திருப்பப்படுகிறது. முழு இருதயத்தோடு யெகோவாவை பின்பற்ற முயற்சித்த தாவீதின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய விவரம் இதில் உள்ளது. a இப்பதிவை வாசிக்கும் ஒவ்வொருவரும் இருதயத்தை ஆராயும்படி தூண்டப்படுவர். இவ்வாறு சிருஷ்டிகருடன் தங்களுடைய சொந்த உறவையும் நிலைநிற்கையையும் பலப்படுத்திக்கொள்ள முடியும்.

2உண்மையில், இரண்டு சாமுவேலின் பதிவில் சாமுவேலின் பெயரைக்கூட காண முடியவில்லை. முதன்முதலில் இது ஒன்று சாமுவேலோடு ஒரே சுருளாக அல்லது புத்தகமாக இருந்ததால் இந்தப் பெயர் கொடுக்கப்பட்டிருக்கலாம் என தோன்றுகிறது. ஒன்று சாமுவேலின் பிற்பகுதியை எழுதி முடித்த தீர்க்கதரிசிகளாகிய நாத்தானும் காத்தும் இரண்டு சாமுவேலை முழுமையாக எழுதினர். (1 நா. 29:29, 30) இப்பணியை நிறைவேற்ற அவர்கள் நன்கு தகுதிபெற்றிருந்தனர். தாவீது இஸ்ரவேலில் தலைமறைவாக இருந்தபோது காத் அவரோடு இருந்தார். தாவீதின் 40 ஆண்டு கால ஆட்சியின் முடிவு சமயத்திலும் காத் அவரோடு நெருங்கிய கூட்டுறவு கொண்டிருந்தார். ஞானமற்றவராக இஸ்ரவேலரை இலக்கம் பார்த்ததற்காக தாவீதின்பேரில் யெகோவாவின் கோபத்தை அறிவிக்கும்படி காத் பயன்படுத்தப்பட்டார். (1 சா. 22:5; 2 சா. 24:​1-25) தீர்க்கதரிசியாகிய நாத்தான் தாவீதின் நெருங்கிய நண்பராக இருந்தார். இவர் காத் வாழ்ந்த காலத்திலும் அதற்கப்பாலும் தீர்க்கதரிசியாக செயல்பட்டு வந்தார். தாவீதோடு யெகோவா செய்த சிறப்புவாய்ந்த உடன்படிக்கையை, அதாவது நித்திய கால ராஜ்யத்துக்கான உடன்படிக்கையை தெரியப்படுத்தும் பாக்கியத்தை நாத்தான் பெற்றிருந்தார். பத்சேபாளோடு தாவீது செய்த வினைமையான பாவத்தை தைரியத்துடனும் தேவாவியின் ஏவுதலினாலும் சுட்டிக்காட்டி, அதற்கான தண்டனையைக் கூறியவரும் இவரே. (2 சா. 7:​1-17; 12:​1-15) நாத்தான் என்ற பெயரின் அர்த்தம் “[கடவுள்] கொடுத்திருக்கிறார்” என்பதாகும். காத் என்ற பெயரின் அர்த்தம் “நல்வாய்ப்பு” என்பதாகும். இரண்டாம் சாமுவேலில் உள்ள நன்மைபயக்கும் தகவலை தேவாவியால் ஏவப்பட்டு பதிவு செய்வதற்கு யெகோவா இவர்களை பயன்படுத்தினார். தற்பெருமையற்ற இந்தச் சரித்திராசிரியர்கள் தங்கள் புகழை பரப்ப விரும்பவில்லை, ஏனெனில் தங்களுடைய வம்சாவளியைப் பற்றியோ தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியோ எந்தத் தகவலும் அளிக்கவில்லை. எதிர்காலத்தில் யெகோவாவின் வணக்கத்தாருடைய நன்மைக்காக, கடவுளால் ஏவப்பட்ட பதிவை மாத்திரமே பாதுகாத்து வைக்கும்படி இவர்கள் விரும்பினர்.

3இஸ்ரவேலின் முதல் அரசனான சவுலின் மரணத்திலிருந்து, கிட்டத்தட்ட தாவீதின் 40 ஆண்டு ஆட்சியின் முடிவு வரையிலான பைபிள் சரித்திரத்தை இரண்டு சாமுவேல் திருத்தமாக அளிக்கிறது. இவ்வாறு பொ.ச.மு. 1077-லிருந்து ஏறக்குறைய பொ.ச.மு. 1040 வரையான காலப்பகுதி இதில் அடங்கியுள்ளது. இந்தப் புத்தகம் தாவீதின் மரணத்தைப் பதிவுசெய்யவில்லை. ஆகவே இது ஏறக்குறைய பொ.ச.மு. 1040-ல் அல்லது தாவீதினுடைய மரணத்துக்குச் சற்று முன்புதானே எழுதி முடிக்கப்பட்டது என்பதற்கு உறுதியான அத்தாட்சியாக இருக்கிறது.

4ஒன்று சாமுவேல் சம்பந்தமாக கொடுக்கப்பட்ட அதே காரணங்களினிமித்தம், இரண்டு சாமுவேல் புத்தகமும் அங்கீகரிக்கப்பட்ட பைபிள் புத்தகத் தொகுப்பின் பாகமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். இதன் நம்பகத்தன்மை சந்தேகத்திற்கு இடமில்லாதது. அரசன் தாவீதின் பாவங்களையும் குறைபாடுகளையுங்கூட மறைக்காத இதன் ஒளிவுமறைவற்ற தன்மைதானே சிறந்த சான்றாக இருக்கிறது.

5எனினும், இரண்டு சாமுவேலின் நம்பகத் தன்மைக்குரிய மிக உறுதியான அத்தாட்சி நிறைவேற்றப்பட்ட தீர்க்கதரிசனங்களே. முக்கியமாக தாவீதுடன் செய்யப்பட்ட ராஜ்ய உடன்படிக்கை சம்பந்தமான தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றமே இதற்கு உறுதியான அத்தாட்சி. கடவுள் தாவீதுக்குப் பின்வருமாறு வாக்கு கொடுத்தார்: “உன் வீடும், உன் ராஜ்யமும், என்றென்றைக்கும் உனக்கு முன்பாக ஸ்திரப்பட்டிருக்கும்; உன் ராஜாசனம் என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும்.” (7:16) யூதா ராஜ்யத்தின் கடைசிக் கட்டத்திலுங்கூட, தாவீதின் குடும்பத்துக்குக் கொடுக்கப்பட்ட இந்த வாக்குறுதி மாறாமல் இருந்தது. இதை எரேமியா பின்வரும் வார்த்தைகளில் குறிப்பிட்டார்: “யெகோவா இப்படிச் சொல்லுகிறார்: இஸ்ரவேல் வீட்டாரின் சிங்காசனத்தின்மேல் உட்காரும் ஒருவன் தாவீதுக்கு இல்லாமற் போவதில்லை.” (எரே. 33:17, தி.மொ.) இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறாமல் போகவில்லை. எவ்வாறெனில், யெகோவா “தாவீதின் குமாரனாகிய இயேசுகிறிஸ்து” பிற்பாடு யூதாவில் பிறக்கும்படி செய்தார். இதை பைபிள் தெளிவாக உறுதிப்படுத்துகிறது.​—மத். 1:1.

இரண்டு சாமுவேலின் பொருளடக்கம்

6தாவீதினுடைய ஆட்சியின் தொடக்கக்கால சம்பவங்கள் (1:​1–4:12). கில்போவா மலையில் சவுலின் மரணத்தைப் பின்தொடர்ந்து, போரிலிருந்து ஒரு அமலேக்கியன் தப்பியோடுகிறான். இவன் ஒரு செய்தியுடன் சிக்லாகில் தாவீதினிடம் விரைந்தோடி வருகிறான். தான் சவுலை கொன்றுவிட்டதாக கதைகட்டுவதன் மூலம் தாவீதின் தயவைப் பெறலாம் என நினைக்கிறான். பாராட்டுதலைப் பெறுவதற்குப் பதிலாக, இந்த அமலேக்கியன் மரணத்தையே பரிசாக பெறுகிறான். ஏனெனில் ‘யெகோவாவால் அபிஷேகம் பண்ணப்பட்டவரை’ கொன்றதாக சாட்சி சொன்னதால் தன்னைத்தானே கண்டனம் செய்துகொண்டான். (1:​16, தி.மொ.) புதிய அரசன் தாவீது, இப்பொழுது “வில்” என்ற ஒரு சோகமான பாட்டை இயற்றுகிறார். இதில் சவுலின் மரணத்தையும் யோனத்தானின் மரணத்தையும் குறித்து அவர் புலம்புகிறார். யோனத்தான்மீது தாவீது வைத்திருந்த அளவில்லா அன்பை இருதயத்தைத் தொடும் பின்வரும் முடிவான சொற்களில் அந்த சோககீதம் அழகாக வெளிப்படுத்துகிறது: “யோனத்தானே, எந்தன் உடன்பிறப்பே, நையுதே என் மனது உன்னை நினைந்துருகி, இனிமையேயாக இருந்தாயே நீ எனக்கு, அரிதே உனது நேசமதுதான் அரிதே, மாதர்தம் நேசத்திலும் அதுவே அரிதாம். மடிந்தாரே வல்லவர்கள்; அழிந்தனவே ஆயுதங்கள்.”​—1:​17, 18, 26, 27, தி.மொ.

7யெகோவாவின் கட்டளையின்பேரில், தாவீதும் அவருடைய மனிதரும் தங்கள் வீட்டாருடன் யூதாவின் பிராந்தியத்திலுள்ள எப்ரோனுக்கு செல்கின்றனர். இங்கே பொ.ச.மு. 1077-ல் தாவீதைத் தங்கள் அரசராக அபிஷேகம் செய்யும்படி அந்தக் கோத்திரத்தின் மூப்பர்கள் வருகின்றனர். தளபதி யோவாப் தாவீதின் ஆதரவாளர்களில் மிக அதிக முக்கியத்துவம் வாய்ந்தவராகிறார். இருப்பினும், அரசபதவிக்குப் போட்டியாளனாக, சவுலின் ஒரு குமாரனான இஸ்போசேத்தை, படைத்தலைவனாகிய அப்னேர் அபிஷேகம் செய்கிறான். இந்த இரண்டு படைகளுக்கிடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்படுகின்றன. யோவாபின் ஒரு சகோதரனை அப்னேர் கொல்கிறான். முடிவில், அப்னேர் கட்சிமாறி, தாவீதின் பாளையத்தைச் சேர்ந்துகொள்கிறான். இவன் சவுலின் குமாரத்தியாகிய மீகாளைத் தாவீதினிடம் கொண்டுசெல்கிறான். இவளுக்காக தாவீது வெகுநாட்களுக்கு முன்பாகவே திருமண ஒப்பந்த விலையைச் செலுத்தியிருந்தார். எனினும், தன் சகோதரன் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப் பழிவாங்குபவராக யோவாப், அப்னேரை கொன்று விடுகிறார். இதன் காரணமாக தாவீது வெகுவாய் துயரப்படுகிறார். இந்தக் கொலைக்கு தான் எவ்விதத்திலும் பொறுப்பல்ல என்பதாக குறிப்பிடுகிறார். இது நடந்து சிறிது காலத்திற்குள் இஸ்போசேத் “மத்தியானத்திலே, வெயில் நேரத்தில், படுக்கையின்மேல் படுத்திருக்கும்போது” கொலை செய்யப்படுகிறான்.​—4:​5, தி.மொ.

8தாவீது எருசலேமில் அரசராகிறார் (5:​1–6:23). தாவீது ஏற்கெனவே யூதாவில் அரசராக ஏழு ஆண்டுகளும் ஆறு மாதங்களும் ஆட்சி செய்திருக்கிறார். இப்பொழுதோ போட்டியற்ற அரசராகிறார். அந்தக் கோத்திரங்களின் பிரதிநிதிகள் அவரை இஸ்ரவேல் முழுவதன்மீதும் அரசராக அபிஷேகம் செய்கின்றனர். இப்போது அவர் மூன்றாம் முறையாக அபிஷேகம் செய்யப்படுகிறார் (பொ.ச.மு. 1070). முழு ராஜ்யத்தின் அரசராக தாவீது எடுக்கும் முதல் நடவடிக்கை, எருசலேமிலுள்ள சீயோன் கோட்டையை எபூசியரிடமிருந்து கைப்பற்றுவதாகும். அவர்கள் எதிர்பாராத முறையில் தண்ணீர் சுரங்கப்பாதை வழியாகச் சென்று கைப்பற்றுகிறார். பின்பு தாவீது எருசலேமை தனது தலைநகராக்குகிறார். சேனைகளின் யெகோவா தாவீதை ஆசீர்வதித்து, அவரை மேன்மேலும் சிறப்புடையவராக்குகிறார். தீருவின் செல்வம் மிகுந்த அரசன் ஈராமுங்கூட தாவீதுக்கு ஒரு வீட்டைக் கட்டுவதற்கு விலைமதிப்புள்ள கேதுரு மரங்களையும் வேலையாட்களையும் அனுப்புகிறான். தாவீதின் குடும்பம் பெருகுகிறது, யெகோவா அவருடைய ஆட்சியைச் செழித்தோங்கச் செய்கிறார். போர் வெறிகொண்ட பெலிஸ்தரோடு இன்னும் இரண்டு போர்கள் நடக்கின்றன. முதலாவதில் யெகோவா தாவீதுக்காக பாகால்பிராசீமில் சத்துருக்களை மேற்கொண்டு, அவருக்கு வெற்றியைக் கொடுக்கிறார். இரண்டாவது போரில், யெகோவா மற்றொரு அற்புதத்தை நடப்பிக்கிறார். பெலிஸ்தரின் படைகளை முறியடிக்க இஸ்ரவேலருக்கு முன்னால் செல்கிறார் என்பதைக் காட்ட, “பாகா மரங்களின் நுனிகளிலே . . . நடை சப்தத்தை” உண்டாக்குகிறார். (5:​24, தி.மொ.) யெகோவாவின் படைகளுக்கு மற்றுமொரு சிறப்பான வெற்றி!

9உடன்படிக்கைப் பெட்டியை பாலையூதாவிலிருந்து (கிரியாத் யாரீம்) எருசலேமுக்குக் கொண்டுவரும்படி தாவீது, 30,000 பேருடன் செல்கிறார். இன்னிசை வாத்தியங்களோடும் பெருமகிழ்ச்சியோடும் அதைக் கொண்டு வருகிறார்கள். அப்பெட்டி வைக்கப்பட்டிருந்த வண்டி திடீரெனத் தடுமாறுகிறது. அப்போது அதன் பக்கமாக நடந்துகொண்டிருக்கிற ஊசா அந்தப் பரிசுத்தப் பெட்டி அசையாதபடி தன் கையால் அதைப் பிடிக்கிறான். “அதன்பேரில் ஊசாவுக்கு எதிராக யெகோவாவின் கோபம் மூண்டது, அந்த அவமரியாதையான செயலுக்காக உண்மையான கடவுள் அவனை அங்கே அடித்து வீழ்த்தினார்.” (6:​7, NW) பெட்டி ஓபேத்ஏதோமின் வீட்டில் வைக்கப்படுகிறது. அடுத்த மூன்று மாதங்கள் யெகோவா ஓபேத்ஏதோமின் வீட்டாரை நிறைவாக ஆசீர்வதிக்கிறார். மூன்று மாதங்களுக்குப் பின்பு தாவீது, மீதி தூரம் சரியான முறையில் பெட்டியை கொண்டுவரும்படி செல்கிறார். மகிழ்ச்சி ஆரவாரத்தோடும், இன்னிசையோடும் ஆடல் பாடலோடும் பெட்டி தாவீதின் தலைநகருக்குக் கொண்டுவரப்படுகிறது. தாவீது யெகோவாவுக்கு முன்பாக நடனமாடி தன் மிகுந்த மகிழ்ச்சியைக் காட்டுகிறார். ஆனால் அவருடைய மனைவி மீகாளுக்கோ, அவர் நடந்துகொண்டது பிடிக்கவில்லை. “நான் யெகோவாவின் சமுகத்தில் ஆடிப்பாடுவேன்” என்பதாக தாவீது உறுதியுடன் கூறுகிறார். (6:​21, தி.மொ.) இதன் விளைவாக மீகாள் தன் மரணம் வரையில் பிள்ளையற்ற மலடியாகவே இருக்கிறாள். b

10தாவீதுடன் கடவுளுடைய உடன்படிக்கை (7:​1-29). நாம் இப்பொழுது, தாவீதினுடைய வாழ்க்கையில் நடைபெற்ற மிக முக்கியமான ஒரு சம்பவத்திற்கு வருகிறோம். இது பைபிளின் மையப் பொருளுடன் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கிறது. அந்த மையப் பொருள், வாக்குப்பண்ணப்பட்ட வித்தின் அதிகாரத்திலுள்ள ராஜ்யத்தால் யெகோவாவின் பெயர் பரிசுத்தப்படுவதே ஆகும். கடவுளுடைய பெட்டிக்காக ஓர் ஆலயத்தைக் கட்ட வேண்டுமென்ற தாவீதின் ஆவலால் இந்தச் சம்பவம் நிகழ்கிறது. கேதுரு மரங்களால் கட்டப்பட்ட அழகிய வீட்டில் தான் வாழ்கையில், யெகோவாவின் உடன்படிக்கை பெட்டிக்காக ஒரு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்ற தனது ஆவலை நாத்தானிடம் சொல்கிறார். இஸ்ரவேல் மீது தமக்கு பற்றுமாறா அன்பு இருப்பதை யெகோவா நாத்தானின் மூலம் தாவீதுக்கு மீண்டும் உறுதிப்படுத்துகிறார். எல்லா காலத்துக்கும் நிலைத்திருக்கப்போகும் ஒரு உடன்படிக்கையையும் தாவீதோடு செய்கிறார். எனினும், தாவீது அல்ல அவருடைய வித்தே யெகோவாவின் பெயருக்காக அந்த ஆலயத்தைக் கட்டுவான். மேலுமாக, யெகோவா பின்வரும் இந்த அன்பான வாக்கை அளிக்கிறார்: “உன் வீடும், உன் ராஜ்யமும், என்றென்றைக்கும் உனக்கு முன்பாக ஸ்திரப்பட்டிருக்கும்; உன் ராஜாசனம் என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும்.”​—7:16.

11இந்த ராஜ்ய உடன்படிக்கையின் மூலம் வெளிப்படுத்திக் காட்டப்பட்ட யெகோவாவின் நற்குணத்தால் தாவீதின் மனம் நன்றியால் பொங்குகிறது. அவருடைய பற்றுமாறா அன்பு அனைத்திற்காகவும் தாவீது தன் நன்றியறிதலை தெரிவிக்கிறார்: “உமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கு நிகரான ஜனம் பூமியில் உண்டோ? தனக்கு ஒரு ஜனமாயிருக்கவும் தனக்குப் பேர் உண்டாக்கிக்கொள்ளவும் ஒரு தெய்வம் தானே சென்று மீட்டுக்கொண்ட ஜனமுண்டோ? இந்தப் பெரிய காரியங்களை உங்களுக்குச் செய்துவந்தார்; . . . இந்தப் பயங்கர காரியங்களைச் செய்தீர். . . . யெகோவாவாகிய நீர்தாமே அவர்களுக்குக் கடவுளானீர்.” (7:​23, 24, தி.மொ.) யெகோவாவின் பெயர் பரிசுத்தப்படுவதற்காகவும் தனது வீடு அவருக்கு முன்பாக உறுதியாய் நிலைநாட்டப்படுவதற்காகவும் தாவீது ஊக்கமாக ஜெபிக்கிறார்.

12இஸ்ரவேலின் ஆட்சி எல்லையை தாவீது விரிவாக்குகிறார் (8:​1–10:19). இருப்பினும், தாவீதின் ஆட்சியில் அமைதி குலைக்கப்படுகிறது. இனியும் போர்கள் நேரிடவிருந்தன. பெலிஸ்தரையும், மோவாபியரையும், சோபாபியரையும், சீரியரையும், ஏதோமியரையும் தாவீது தோற்கடிக்கிறார். இவ்வாறு இஸ்ரவேலின் எல்லையை கடவுள் நியமித்த அளவுகள் வரையாக விரிவாக்குகிறார். (2 சா. 8:​1-5, 13-15; உபா. 11:24) பின்பு, யோனத்தான் நிமித்தமாக தனது பற்றுமாறா அன்பை காட்டும்படி, சவுலின் குடும்பத்தில் மீந்திருக்கிறவர்களிடத்தில் தனது கவனத்தைத் திருப்புகிறார். யோனத்தானுக்கு மேவிபோசேத் என்ற குமாரன் இருப்பதை சவுலின் ஊழியக்காரனாகிய சீபா தாவீதின் கவனத்துக்குக் கொண்டு வருகிறான். அவனுடைய கால்கள் முடமாக இருந்தன. உடனடியாக, சவுலினுடைய எல்லா பொருட்களும் மேவிபோசேத்தினிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதாக தாவீது உத்தரவிடுகிறார். சவுலுடைய நிலத்தைச் சீபாவும் அவனுடைய ஊழியக்காரரும் பயிரிட்டு மேவிபோசேத்தின் வீட்டாருக்கு உணவு அளிக்கும்படியும் கட்டளையிடுகிறார். இருந்தபோதிலும் மேவிபோசேத் தனது பந்தியில்தான் சாப்பிட வேண்டும் என்கிறார்.

13அம்மோனியரின் அரசன் மரிக்கையில், அவனுடைய குமாரன் ஆனூனுக்கு பற்றுமாறா அன்பு காட்டி ஆறுதல் வார்த்தை கூறுவதற்கு தாவீது தூதுவர்களை அனுப்புகிறார். ஆனால் தேசத்தை வேவுபார்க்கும்படி தாவீது ஆட்களை அனுப்பினதாக ஆனூனின் ஆலோசகர்கள் குற்றம் சுமத்துகின்றனர். ஆகவே அவர்கள் இந்த தூதுவர்களை அவமானப்படுத்தி, அரை நிர்வாணமாக அனுப்பிவிடுகின்றனர். இப்படிப்பட்ட அவமதிப்பான செயலால் தாவீது கடுமையாக கோபமடைகிறார். இதற்கு பழிக்குப்பழி வாங்குவதற்காக யோவாபை அவருடைய படையுடன் தாவீது அனுப்புகிறார். தன் படைகளைப் பகுதிகளாக பிரித்து, அவர் அம்மோனியரையும் அவர்களுக்கு உதவிசெய்ய வந்திருந்த சீரியரையும் எளிதில் முறியடிக்கிறார். சீரியர் தங்கள் படைகளை மறுபடியும் அணிவகுக்கின்றனர். தாவீதின் தலைமையில் யெகோவாவின் படைகள் மறுபடியும் வெற்றிபெறுகின்றன. எதிரிகள் 700 இரத வீரர்களையும் 40,000 குதிரை வீரர்களையும் இழக்கின்றனர். இது தாவீதின்மீது யெகோவாவின் தயவும் ஆசீர்வாதமும் இருப்பதற்கான மேலுமான அத்தாட்சியாகும்.

14தாவீது யெகோவாவுக்கு விரோதமாக பாவம் செய்கிறார் (11:​1–12:31). இதைப் பின்தொடர்ந்த இளவேனிற் பருவத்தின்போது ரப்பாவை முற்றுகையிடும்படி தாவீது யோவாபை மறுபடியும் அம்மோனுக்கு அனுப்புகிறார். அவரோ எருசலேமில் தங்கிவிடுகிறார். ஒரு நாள் மாலையில் தாவீது தன் மேல் மாடியிலிருந்து, குளித்துக்கொண்டிருக்கும் அழகிய பத்சேபாளை கவனிக்கிறார். இவள் ஏத்தியனான உரியாவின் மனைவி. அவளைத் தன் வீட்டுக்குக் கொண்டுவந்து, அவளோடு பாலுறவு கொள்கிறார். அவள் கர்ப்பமாகிறாள். தாவீது தனது தவறை மறைப்பதற்கு முயற்சிக்கிறார். எப்படியென்றால், ரப்பாவில் போர்செய்து கொண்டிருக்கும் உரியாவைத் திரும்பிவரச் செய்கிறார். உரியா களைப்பாற்றிக்கொள்ள வீட்டுக்குச் செல்லும்படி அனுப்புகிறார். எனினும், உரியா இதற்கு மறுப்பு தெரிவிக்கிறான். உடன்படிக்கை பெட்டியும் படைவீரரும் “கூடாரங்களில் தங்கி” இருக்கையில் தான் மாத்திரம் மகிழ்ந்து தன் மனைவியோடே உறவு கொள்ள மறுத்துவிடுகிறான். நம்பிக்கை இழந்த தாவீது, பின்வருமாறு எழுதப்பட்ட ஒரு கடிதத்துடன் உரியாவை யோவாபிடம் திரும்பிச்செல்லும்படி அனுப்புகிறார்: “மும்முரமாய் நடக்கிற போர்முகத்திலே நீங்கள் உரியாவை நிறுத்தி, அவன் வெட்டுண்டு சாகும்படிக்கு, அவனை விட்டுப் பின்வாங்குங்கள்.” (11:​11, 15) இவ்விதமாக உரியா இறந்துபோகிறான். பத்சேபாளின் துக்கக்காலம் முடிந்தபின்பு, தாவீது அவளை உடனடியாக தன் வீட்டுக்குக் கொண்டுவந்து அவளை தன்னுடைய மனைவியாக்கிக் கொள்கிறார். அவர்களுக்கு ஒரு குமாரன் பிறக்கிறான்.

15இது யெகோவாவின் பார்வையில் பொல்லாததாக இருக்கிறது. அவர் ஒரு நியாயத்தீர்ப்பு செய்தியுடன் தீர்க்கதரிசியாகிய நாத்தானை தாவீதிடம் அனுப்புகிறார். நாத்தான் ஒரு பணக்காரனையும், ஒரு ஏழையையும் பற்றி தாவீதிடம் சொல்கிறார். பணக்காரனுக்கு பல மந்தைகள் இருந்தன. ஆனால் அந்த ஏழைக்கோ ஒரு பெண் ஆட்டுக்குட்டி மாத்திரமே இருந்தது. அது அந்தக் குடும்பத்தில் செல்லப் பிராணியாகவும் ‘அவனுக்கு ஒரு மகளைப்போலும்’ இருந்தது. எனினும், ஒரு விருந்திற்காக அந்த பணக்காரன் தன் சொந்த மந்தைகளிலிருந்து ஒரு செம்மறியாட்டை எடுக்காமல், அந்த ஏழை மனிதனின் பெண் ஆட்டுக்குட்டியை எடுத்துக்கொண்டான். இதைக் கேட்ட தாவீது மிகவும் கோபமடைந்தவராக, “இந்தக் காரியத்தைச் செய்த மனுஷன் சாகவேவேண்டும், யெகோவாவின் ஜீவன்மேல் ஆணை” என்று கூறுகிறார். உடனடியாக நாத்தான் “நீயே அந்த மனுஷன்” என்கிறார். (12:​3, 5, 7, தி.மொ.) பின்பு அவர், தாவீதின் மனைவிகள் வேறொரு மனிதனால் எல்லாருக்கும் முன்பாக கற்பழிக்கப்படுவார்கள்; அவருடைய குடும்பத்துக்குள் ஏற்படும் போராட்டத்தால் தீராத தொல்லை ஏற்படும்; பத்சேபாளுக்குப் பிறக்கும் அவருடைய பிள்ளை சாகும் என்ற தீர்க்கதரிசன நியாயத்தீர்ப்பை அடுக்கடுக்காக அறிவிக்கிறார்.

16உண்மையான வருத்தத்தாலும் மனமாற்றத்தாலும் தாவீது: “நான் யெகோவாவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன்” என்று வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார். (12:​13, தி.மொ.) யெகோவாவின் வார்த்தையின்படியே, அந்த விபசாரத்தின் விளைவாக பிறந்த பிள்ளை ஏழு நாட்கள் நோய்ப்பட்டிருந்த பின்பு இறந்து விடுகிறது. (பின்னால் பத்சேபாளுக்கும் தாவீதுக்கும் மற்றொரு மகன் பிறக்கிறான்; இவனை சாலொமோன் என அவர்கள் அழைக்கின்றனர். இந்தப் பெயர் “சமாதானம்” என்று அர்த்தப்படும் மூலச்சொல்லிலிருந்து வருகிறது. எனினும், அவனை “யெகோவாவின் நேசமானவன்” என அர்த்தப்படும் யெதிதியா எனவும் அழைக்கும்படி நாத்தான் மூலமாக யெகோவா சொல்லி அனுப்புகிறார்.) தன்னைக் கதிகலங்க வைத்த அனுபவத்திற்குப் பின்பு, ரப்பாவுக்கு வரும்படி தாவீதை யோவாப் அழைக்கிறார். அங்கே முடிவான தாக்குதல் ஆயத்தமாக்கப்படுகிறது. அந்தப் பட்டணத்தின் நீர் தேக்கத்தை யோவாப் கைப்பற்றிவிட்டார். ஆகவே அந்தப் பட்டணத்தைக் கைப்பற்றும் பெருமை அரசனுக்கே சேரட்டும் என அவர் மரியாதையுடன் விட்டுக்கொடுக்கிறார்.

17தாவீதின் குடும்பத்தில் தொல்லைகள் (13:​1–18:33). தாவீதினுடைய குமாரர்களில் ஒருவனுடைய பெயர் அம்னோன். இவன் தனது ஒன்றுவிட்ட சகோதரன் அப்சலோமின் சகோதரியாகிய தாமாரிடம் மோகம் கொள்கிறான். இதன் விளைவாக தாவீதின் குடும்பத்துக்குள் தொல்லைகள் தொடங்குகின்றன. அம்னோன் நோய்ப்பட்டிருப்பதுபோல பாசாங்கு செய்கிறான். தன்னைக் கவனிப்பதற்கு அழகிய தாமாரை அனுப்ப வேண்டும் என்பதாக கேட்கிறான். அவன் அவளைக் கற்பழித்துவிட்டு, பிறகு அவளைக் கடுமையாக வெறுக்கிறான். ஆகவே மானத்தைப் பறிகொடுத்த நிலையில் அவளை அனுப்பிவிடுகிறான். அம்னோனை பழிவாங்குவதற்காக திட்டமிட்டு தக்க சமயத்துக்காக அப்சலோம் காத்திருக்கிறான். ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவன் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்கிறான். அதற்கு அம்னோனும் மற்ற எல்லா இளவரசர்களும் அழைக்கப்படுகின்றனர். அம்னோனின் இருதயம் திராட்ச மதுவால் களித்திருக்கிறது. இச்சமயத்தில் அப்சலோமின் கட்டளையின்பேரில், எதிர்பாராத நிலையில் அவன் திடீரென கொல்லப்படுகிறான்.

18அரசனின் கோபத்துக்குப் பயந்து, அப்சலோம் கேசூருக்கு ஓடிவிடுகிறான். அங்கே மூன்று ஆண்டுகள் ஏறக்குறைய நாடுகடத்தப்பட்டவனைப் போலவே வாழ்கிறான். இதற்கிடையில், தாவீதின் படைத்தலைவனான யோவாப், தாவீதுக்கும் அப்சலோமுக்கும் இடையே சமரசம் செய்து வைப்பதற்காக இரகசிய ஏற்பாடு செய்கிறார். அரசனிடம் நடிக்கும்படி தெக்கோவா ஊராளான ஞானமுள்ள ஒரு பெண்ணை ஏற்பாடு செய்கிறார். அவளுடைய வம்சத்தார் மூலம் பழிக்குப் பழி, நாடுகடத்தல், தண்டனை ஆகியவை வருவதுபோல ராஜாவுக்கு முன் பாசாங்கு செய்கிறாள். அரசன் நியாயத்தீர்ப்பைக் கூறுகையில், இந்தப் பெண் தான் வந்திருப்பதற்கான உண்மையான காரணத்தை வெளிப்படுத்துகிறாள். அரசனின் சொந்த மகன் அப்சலோம் கேசூரில் நாடுகடத்தப்பட்ட நிலையில் இருப்பதை அப்போது குறிப்பிடுகிறாள். இந்த நாடகத்தை யோவாப்தான் திட்டமிட்டு நடத்தியிருக்க வேண்டும் என்பதை தாவீது உணர்கிறார். எனவே தனது மகன் எருசலேமுக்குத் திரும்பிவரும்படி அனுமதி கொடுக்கிறார். அப்சலோமை நேரில் பார்க்க அரசன் ஒத்துக்கொள்வதற்கு இரண்டு ஆண்டுகள் எடுக்கின்றன.

19தாவீது பற்றுமாறா அன்பு காட்டியபோதிலும், அப்சலோம் தன் தகப்பனிடமிருந்து சிங்காசனத்தைப் பறித்துக்கொள்ளும்படி விரைவில் சதிசெய்கிறான். அப்சலோம் இஸ்ரவேலின் வீரதீரமான மனிதர் எல்லாரையும்விட அழகில் சிறந்து விளங்குகிறான். அவனுடைய பெருமையும் பதவி ஆசையும் அதிகரிக்க இதுவும் ஒரு காரணம். ஒவ்வொரு ஆண்டும் சிரைக்கப்படுகிற அவனுடைய அடர்த்தியான தலைமயிரின் எடையே 2.3 கிலோகிராம்! (2 சா. 14:​26, NW அடிக்குறிப்பு) பல்வேறு தந்திரமான சூழ்ச்சிமுறைகளால், அப்சலோம் இஸ்ரவேல் மனிதரின் இருதயங்களை தன் பக்கம் இழுக்க தொடங்குகிறான். முடிவில், இந்தச் சதித்திட்டம் வெட்ட வெளிச்சமாகிறது. எப்ரோனுக்குச் செல்வதற்குத் தன் தகப்பனின் அனுமதியைப் பெறுகிறான் அப்சலோம். அங்கே தன் கலகத்தனமான திட்டத்தை அறிவித்து, தாவீதுக்கு எதிராக புரட்சி செய்கிறான். இதில் கலந்துகொண்டு தனக்கு ஆதரவு தரும்படி இஸ்ரவேல் ஜனம் முழுவதையும் அழைக்கிறான். கலகக்கார மகனின் பக்கமாக பெரும் எண்ணிக்கையான மக்கள் சாய்கின்றனர். எனவே தனக்கு உண்மையாய் இருந்த ஒருசில ஆதரவாளர்களுடன் தாவீது எருசலேமிலிருந்து தப்பியோடுகிறார். இப்படிப்பட்டவர்களில் கித்தியனான ஈத்தாய் என்பவரும் ஒருவர். அவர் பின்வருமாறு கூறுகிறார்: “ராஜாவாகிய என் ஆண்டவன் எங்கே இருப்பாரோ அங்கேயே அடியேனும் இருப்பேன், செத்தாலும் பிழைத்தாலும் சரியே; யெகோவாவின் ஜீவன்மேலும் ராஜாவாகிய என் ஆண்டவனுடைய ஜீவன்மேலும் ஆணை.”​—15:​21, தி.மொ.

20எருசலேமிலிருந்து தப்பி ஓடுகையில், தாவீது தான் மிகவும் நம்பிக்கை வைத்திருந்த ஆலோசனைக்காரரில் ஒருவனான அகித்தோப்பேலின் துரோகத்தைப் பற்றி அறியவருகிறார். “யெகோவாவே, அகித்தோப்பேலின் ஆலோசனையை அவமாக்கிவிடும்” என்று ஜெபிக்கிறார். (15:​31, தி.மொ.) தாவீதுக்கு விசுவாசமான ஆசாரியர்களாய் இருக்கும் சாதோக்கும் அபியத்தாரும், அற்கியனாகிய ஊசாயும், அப்சலோமின் நடவடிக்கைகளைக் கவனித்து அறிவிக்கும்படி எருசலேமுக்குத் திரும்ப அனுப்பப்படுகின்றனர். இதற்கிடையில், வனாந்தரத்தில், மேவிபோசேத்தின் ஊழியனான சீபாவைத் தாவீது சந்திக்கிறார். அவன், அந்த ராஜ்யம் சவுலின் குடும்பத்துக்குத் திரும்ப வந்துசேருமென தன் எஜமான் இப்பொழுது எதிர்பார்ப்பதாக அறிவிக்கிறான். தாவீது செல்லும்போது சவுலின் குடும்பத்தைச் சேர்ந்த சீமேயி அவரைச் சபித்து, அவர்மீது கற்களை எறிகிறான். ஆனால் இச்செயலுக்கு பழிவாங்குவதற்காக துடிக்கும் தனது மனிதர்களை தாவீது தடுக்கிறார்.

21எருசலேமில், ராஜ்யத்தைப் பறித்துக்கொண்டவனான அப்சலோம், அகித்தோப்பேலின் ஆலோசனையின்பேரில், “சகல இஸ்ரவேலரின் கண்களுக்கு முன்பாக” தன் தகப்பனின் மறுமனையாட்டிகளிடம் பாலுறவு கொள்கிறான். இது நாத்தானின் தீர்க்கதரிசன நியாயத்தீர்ப்பின் நிறைவேற்றமாகும். (16:22; 12:11) மேலும் 12,000 ஆட்கள் உள்ள ஒரு படையுடன் வனாந்தரத்தில் தாவீதைத் துரத்திச் சென்று வீழ்த்தும்படி அகித்தோப்பேல் ஆலோசனை கூறுகிறான். எனினும், அப்சலோமின் நம்பிக்கையைப் பெற்றுக்கொண்ட ஊசாய், வேறொரு உபாயத்தை சிபாரிசு செய்கிறான். தாவீது ஜெபித்ததுபோல், அகித்தோப்பேலின் இந்த ஆலோசனை குலைத்துப்போடப்படுகிறது. யூதாஸைப் போல், ஏமாற்றமடைந்த அகித்தோப்பேல் வீட்டுக்குச் சென்று தூக்குப் போட்டுக்கொள்கிறான். அப்சலோமின் திட்டங்களை ஊசாய், ஆசாரியர்களான சாதோக்குக்கும் அபியத்தாருக்கும் இரகசியமாய் அறிவிக்கிறான். இவர்கள் வனாந்தரத்திலிருக்கும் தாவீதுக்கு இவற்றை தெரிவிக்கின்றனர்.

22இதனால் தாவீது யோர்தானைக் கடந்து மக்னாயீமிலிருக்கும் காட்டைப் போர்க்களமாக தெரிந்துகொள்கிறார். அங்கே தன் படைகளை அணிவரிசைப்படுத்தி, அப்சலோமைத் தயவாய் நடத்தும்படி அவர்களுக்குக் கட்டளையிடுகிறார். அந்தக் கலகக்காரர் படுதோல்வியை தழுவுகின்றனர். அடர்ந்த காட்டின் வழியே ஒரு கோவேறு கழுதையின்மேல் ஏறி அப்சலோம் தப்பித்துச் செல்கிறான். அவனுடைய தலை, ஓர் அடர்ந்த மரத்தின் தாழ்ந்த கிளைகளில் மாட்டிக்கொள்கிறது, அங்கே அவன் அந்தரத்திலே தொங்குகிறான். இந்த இக்கட்டான நிலையில் அவனை யோவாப் பார்க்கிறார். அரசனின் கட்டளையை கொஞ்சம்கூட மதிக்காமல் அவனைக் கொன்றுவிடுகிறார். தன் குமாரனின் மரணத்தை கேள்விப்பட்ட தாவீது ஆழ்ந்த துயரமடைகிறார். இது அவர் இவ்வாறு புலம்புவதிலிருந்து புலனாகிறது: “என் மகனாகிய அப்சலோமே என் மகனே, என் மகனாகிய அப்சலோமே, நான் உனக்குப்பதிலாகச் செத்தேனானால் நலமாயிருக்கும்; அப்சலோமே, என் மகனே, என் மகனே.”​—18:​33.

23தாவீதினுடைய ஆட்சியின் முடிவான சம்பவங்கள் (19:​1–24:25). தாவீது மனக்கசப்புடன் தொடர்ந்து துக்கிக்கிறார். அதன்பின், அரசனாக தனது உரிமையை திரும்ப ஏற்றுக்கொள்ளுமாறு யோவாப் அவரைத் துரிதப்படுத்துகிறார். தாவீது இப்பொழுது அமாசாவை யோவாபுக்குப் பதிலாக படைத்தலைவனாக நியமிக்கிறார். அவர் திரும்பி வருகையில், சீமேயி உட்பட, ஜனங்களால் வரவேற்கப்படுகிறார். தாவீது சீமேயியைக் கொல்லாமல் விடுகிறார். மேவிபோசேத்தும் தன் காரியத்தை எடுத்துச் சொல்ல வருகிறான். தாவீது அவனுக்குச் சீபாவுடன் சமமான சொத்துரிமையைக் கொடுக்கிறார். மறுபடியும் முழு இஸ்ரவேலும் யூதாவும் தாவீதின்கீழ் ஒன்றுபட்டிருக்கின்றன.

24இருப்பினும், இன்னும் அதிகத் தொல்லைகள் வரவிருக்கின்றன. பென்யமீனனாகிய சேபா, தன்னை அரசனென அறிவித்துக் கொள்கிறான். அநேகர் தாவீதைவிட்டு விலகுவதற்கு இவன் காரணமாகிறான். இந்தக் கலகத்தை அடக்குவதற்கு ஆட்களை சேர்க்கும்படி அமாசாவுக்கு கட்டளையிடுகிறார் தாவீது. இச்சமயத்தில் யோவாப் நம்பிக்கை துரோகம் செய்து அமாசாவை கொன்றுவிடுகிறார். பின்பு படைத்தலைவராக யோவாப் மீண்டும் பதவி ஏற்று, பெத்மாக்காவின் ஆபேல் பட்டணம் வரையாக சேபாவைப் பின்தொடர்ந்து அதை முற்றுகையிடுகிறார். அந்தப் பட்டணத்தில் ஞானமுள்ள ஒரு பெண் இருக்கிறாள். இவளுடைய ஆலோசனையை கேட்டு அப்பட்டணத்தில் வசிப்பவர்கள் சேபாவைக் கொல்கின்றனர். இதனால் யோவாப் திரும்பிச் சென்றுவிடுகிறார். சவுல் கிபியோனியரைக் கொன்றதாலும் அந்த இரத்தஞ்சிந்துதல் இன்னும் பழிவாங்கப்படாமல் இருந்ததாலும் இஸ்ரவேலில் மூன்று ஆண்டுகள் பஞ்சம் உண்டாகிறது. இந்த இரத்தப்பழியை நீக்குவதற்கு, சவுலின் வீட்டாரில் ஏழு குமாரர்கள் கொல்லப்படுகின்றனர். பின்னால், மறுபடியும் பெலிஸ்தரோடு யுத்தம் ஏற்படுகிறது. அப்போது தாவீது கொல்லப்படும் தறுவாயில், அவருடைய சகோதரியின் மகன் அபிசாயினால் காப்பாற்றப்படுகிறார். “இஸ்ரவேலின் விளக்கு அணைந்துபோகாதபடிக்கு” தாவீது இனிமேலும் போருக்குத் தங்களோடு வரக்கூடாது என்பதாக அவருடைய மனிதர் ஆணையிடுகின்றனர். (21:17) பின்பு மாபெரும் வீரர்களான அவருடைய மனிதரில் மூவர் பெலிஸ்த இராட்சதர்களை தீர்த்துக்கட்டுவதன் மூலம் சாதனை படைக்கின்றனர்.

25இந்தக் கட்டத்தில், யெகோவாவுக்கு தாவீது பாடின பாட்டை எழுத்தாளர் பதிவு செய்கிறார். இது 18-ம் சங்கீதத்துடன் ஒத்திருக்கிறது. தன்னுடைய “சகல சத்துருக்களின் கைக்கும் சவுலின் கைக்கும் நீங்கலாக்கி” விடுவித்ததற்கு நன்றியை தாவீது இதில் வெளிப்படுத்துகிறார். பெருமகிழ்ச்சியுடன் அவர் பின்வருமாறு அறிவிக்கிறார்: “யெகோவா என் கன்மலை, என் கோட்டை, என்னை விடுவிக்கிறவர்; தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு மகத்தான இரட்சிப்பை அளிக்கிறார்; தாம் அபிஷேகம்பண்ணின தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும் சதா காலங்களாய்க் கிருபை செய்கிறார்.” (22:​1, 2, 51, தி.மொ.) தாவீதின் கடைசி பாட்டு இதைப் பின்தொடருகிறது, அதில் அவர் பின்வருமாறு ஒப்புக்கொள்கிறார்: “யெகோவாவின் ஆவியே என் மூலமாகப் பேசினது, அவருடைய வார்த்தை என் நாவின்மேல் இருந்தது.”​—23:​2, NW.

26மீண்டும் சரித்திர பதிவுக்கு வருகிறோம். தாவீதின் மாவீரர்கள் வரிசையாக பட்டியலிடப்பட்டிருப்பதை காண்கிறோம், இவர்களில் மூவர் குறிப்பிடத்தக்கவர்கள். தாவீதின் சொந்த ஊராகிய பெத்லகேமில், பெலிஸ்தரின் புறக்காவற்படை ஸ்தாபிக்கப்படுகையில் நடக்கும் ஒரு சம்பவத்தில் இவர்கள் சம்பந்தப்படுகின்றனர். தனது ஆவலை தாவீது பின்வருமாறு வெளிப்படுத்துகிறார்: “பெத்லகேம் ஊர் வாசலண்டையிலிருக்கிற கிணற்றின் தண்ணீரிலே கொஞ்சம் ஒருவன் என் தாகத்திற்குக் கொண்டுவருவானேயானால் எவ்வளவோ சந்தோஷம்.” (23:​15, தி.மொ.) உடனே இந்த மூன்று வீரர்களும் பெலிஸ்த பாளையத்துக்குள் தைரியமாக செல்கின்றனர். அங்குள்ள கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து, அதைத் தாவீதிடம் கொண்டு வருகின்றனர். ஆனால் அந்தத் தண்ணீரைக் குடிக்க தாவீது மறுத்துவிடுகிறார். அதற்குப் பதிலாக, அவர் அதைத் தரையில் ஊற்றிவிட்டு பின்வருமாறு கூறுகிறார்: “யெகோவாவே, இவர்கள் பிராணனை எண்ணாமல் போய்வந்தார்கள், இந்தத் தண்ணீரைக் குடிப்பது அந்த மனிதரின் இரத்தத்தையே குடிப்பது போலாகும், இது எனக்குத் தூரமாயிருப்பதாக.” (23:​17, தி.மொ.) தண்ணீரை கொண்டு வருவதற்காக அவ்வீரர்கள் துணிந்து தங்கள் உயிரையே பணயம் வைத்தனர். ஆகவே தாவீதுக்கு அந்த தண்ணீர், அவர்களுடைய உயிராகிய இரத்தத்திற்குச் சமமாக இருக்கிறது. அடுத்தபடியாக, அவருடைய சேனையில் இருக்கும் 30 பலவான்களும் அவர்களுடைய வீரச்செயல்களும் பட்டியலிடப்படுகின்றன.

27முடிவாக, மக்கள் தொகையை கணக்கெடுப்பதன் மூலமாக தாவீது பாவம் செய்கிறார். இரக்கத்துக்காக கடவுளிடம் மன்றாடுகிறார். இருப்பினும், ஏழு ஆண்டுகள் பஞ்சம், மூன்று மாதங்கள் இராணுவத் தோல்விகள், அல்லது தேசத்தில் மூன்று நாட்கள் கொள்ளைநோய்​—இந்தத் தண்டனைகளில் ஏதாவதொன்றை தெரிந்துகொள்ளும்படி தாவீதுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. தாவீது பதிலளிப்பதாவது: “நாம் யெகோவாவின் கையில் விழுவோம்; அவருடைய இரக்கம் மகா பெரியது; நாம் மனிதர் கையில் விழவேண்டாம்.” (24:​14, தி.மொ.) முழு தேசத்தையே பாழாக்கும் கொள்ளைநோய் 70,000 பேரை வாரிக்கொண்டு போகிறது. காத்தின்மூலம் யெகோவா கொடுக்கும் கட்டளைகளின்படி தாவீது செயல்படுகிறார். அர்வனாவின் போரடிக்கும் களத்தை விலைக்கு வாங்கி, அங்கே தகன பலிகளையும் சமாதான பலிகளையும் யெகோவாவுக்கு செலுத்துகிறார். அப்போதுதான் வாதை நிறுத்தப்படுகிறது.

ஏன் பயனுள்ளது

28நவீனகால வாசகருக்குப் பயனுள்ள ஏராளமான விஷயங்களை இரண்டு சாமுவேலில் காணலாம்! நிஜவாழ்க்கையில் மனிதனுக்கு ஏற்படும் ஒவ்வொரு உணர்ச்சியும் மிகத் தத்ரூபமாக இங்கே சித்தரித்துக் காட்டப்பட்டுள்ளன. இவ்வாறு, பதவி ஆசை மற்றும் பழிவாங்குவது (3:​27-30), மற்றொருவரின் மணத்துணையை அடைய நாடும் தவறான இச்சை (11:​2-4, 15-17; 12:​9, 10), துரோகம் (15:​12, 31; 17:23), காம உணர்ச்சியில் மாத்திரமே ஆதாரங்கொண்ட அன்பு (13:​10-15, 28, 29), பதற்றமான தீர்ப்பு (16:​3, 4; 19:​25-30), மற்றொருவரின் பக்திக்குரிய செயல்களை அவமதிப்பது (6:​20-23) போன்றவற்றின் கேடுண்டாக்கும் விளைவுகளைப் பற்றி கடுமையான வார்த்தைகளில் நாம் எச்சரிக்கப்படுகிறோம்.

29எனினும், மிகச் சிறந்த பயனளிப்பது இரண்டு சாமுவேலிலுள்ள நல்ல பாடங்களே. நன்னடத்தைக்கும் நற்செயலுக்கும் கொடுக்கப்பட்டுள்ள அநேக சிறந்த முன்மாதிரிகளைப் பின்பற்றுவதால் பெரும்பயன் விளையும். பின்குறிப்பிட்டுள்ள காரியங்களில் தாவீது சிறந்த முன்மாதிரியாய் திகழ்ந்தார். அதாவது, கடவுளுக்கு தனிப்பட்ட பக்தியைக் கொடுத்தார் (7:22); கடவுளுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் இருந்தார் (7:18); யெகோவாவின் பெயரை உயர்த்தி மகிமைப்படுத்தினார் (7:​23, 26); துன்பத்தின் மத்தியிலும் சரியான மனநிலையை காட்டினார் (15:25); பாவத்திலிருந்து உள்ளப்பூர்வமாக மனந்திரும்புதலை காட்டினார் (12:13); கொடுத்த வாக்கை காப்பாற்றினார் (9:​1, 7); இக்கட்டின்போது சமநிலையைக் காத்துக்கொண்டார் (16:​11, 12); எப்போதும் யெகோவாவையே சார்ந்திருந்தார் (5:​12, 20); யெகோவாவின் ஏற்பாடுகளுக்கும் நியமிப்புகளுக்கும் ஆழ்ந்த மதிப்பு காட்டினார் (1:​11, 12). “[யெகோவாவின்] இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷன்” என தாவீது அழைக்கப்பட்டதில் ஆச்சரியமேதுமில்லை!​—1 சா. 13:14.

30இரண்டு சாமுவேலில் பைபிள் நியமங்கள் பல பொருத்திப் பயன்படுத்தப்பட்டுள்ளன. சமுதாயப் பொறுப்பைப் பற்றிய நியமங்கள் (2 சா. 3:29; 24:​11-15); நல்ல உள்நோக்கங்கள் கடவுளுடைய கட்டளைகளை மாற்றுவதில்லை (6:​6, 7); யெகோவாவின் தேவராஜ்ய ஏற்பாட்டில் தலைமை வகிப்பு மதிக்கப்பட வேண்டும் (12:28); இரத்தம் பரிசுத்தமானதாகக் கருதப்பட வேண்டும் (23:17); இரத்தப்பழிக்குப் பிராயச்சித்தம் தேவைப்படுகிறது (21:​1-6, 9, 14); ஞானமுள்ள ஒருவர், பலருக்கு அழிவு வராதபடி தடுக்க முடியும் (2 சா. 20:​21, 22; பிர. 9:15); “செத்தாலும் பிழைத்தாலும்” யெகோவாவின் அமைப்புக்கும் அதன் பிரதிநிதிகளுக்கும் உண்மைத் தவறாமையைக் காத்துவர வேண்டும் (2 சா. 15:​18-22). இவையனைத்தும் அவற்றுள் அடங்கியிருக்கின்றன.

31எல்லாவற்றிலும் மிக முக்கியமாக, “தாவீதின் குமாரனான” இயேசு கிறிஸ்துவை அரசராக கொண்டு கடவுள் ஸ்தாபிக்கும் ராஜ்யத்தை இரண்டு சாமுவேல் சுட்டிக்காட்டுகிறது. மேலும், அதைப் பற்றிய முற்காட்சிகளையும் அது அளிக்கிறது. (மத். 1:1) தாவீதினுடைய ராஜ்யம் நிரந்தரமாக இருப்பதைப் பற்றி யெகோவா அவருக்கு ஆணை (2 சா. 7:16) செய்திருந்தார். இது இயேசுவில் நிறைவேறுவதை அப்போஸ்தலர் 2:​29-36-ல் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. “நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்” (2 சா. 7:14) என்பதே அந்தத் தீர்க்கதரிசனம். அது, உண்மையில் இயேசுவையே முன்குறித்துக் காட்டியது என்பதை எபிரெயர் 1:​5 தெரியப்படுத்துகிறது. பரலோகத்திலிருந்து வந்த யெகோவாவின் குரலும் இதை உறுதிப்படுத்துகிறது: “இவர் என் குமாரன், மிகவும் நேசமானவர், இவரை நான் அங்கீகரித்திருக்கிறேன்.” (மத். 3:​17; 17:​5; NW) முடிவாக, தாவீதுடன் செய்த இந்த ராஜ்ய உடன்படிக்கை, இயேசுவைப் பற்றி மரியாளுக்குக் கூறின காபிரியேலின் பின்வரும் வார்த்தைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது: “இவர் பெரியவராயிருப்பார், மகா உன்னதமானவரின் குமாரன் எனப்படுவார்; அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை யெகோவா தேவன் அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின்மீது என்றென்றும் அரசாளுவார், அவருடைய ராஜ்யத்துக்கு முடிவில்லை.” (லூக். 1:​32, 33, NW) ராஜ்ய வித்தைப் பற்றிய வாக்குறுதியின் ஒவ்வொரு அம்சமும் படிப்படியாக நிறைவேறுவதைக் காண்கையில் எவ்வளவு மெய்சிலிர்க்க வைக்கிறது!

[அடிக்குறிப்புகள்]

a வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக். 745-7.

b வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 2, பக்கம் 373-4.

[கேள்விகள்]

1. என்ன சூழமைவில் இரண்டு சாமுவேல் தொடங்குகிறது, அது என்ன விவரம் அளிக்கிறது?

2. (அ) இப்புத்தகம் எவ்வாறு இரண்டு சாமுவேல் என அழைக்கப்படலாயிற்று? (ஆ) இதன் எழுத்தாளர்கள் யாவர், அவர்களுடைய தகுதிகள் யாவை, எந்தப் பதிவை மாத்திரமே பாதுகாத்து வைக்க அவர்கள் விரும்பினார்கள்?

3. இரண்டு சாமுவேல் உள்ளடக்கும் காலப்பகுதி எது, இது எப்போது எழுதி முடிக்கப்பட்டது?

4. என்ன காரணங்களால் இரண்டு சாமுவேல் புத்தகமும் பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலின் பாகமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்?

5. இரண்டு சாமுவேலை தேவாவியால் ஏவப்பட்ட புத்தகமாக ஏற்றுக்கொள்வதற்கு மிக முக்கியமான காரணம் என்ன?

6. சவுலும் யோனத்தானும் மரணமடைந்த செய்தியைக் கேட்டு தாவீது எவ்வாறு பிரதிபலிக்கிறார்?

7. வேறு என்ன சம்பவங்கள் தாவீதினுடைய ஆட்சியின் தொடக்கக் காலத்தில் நடக்கின்றன?

8. இஸ்ரவேல் முழுவதையும் ஆளும் தாவீதின் ஆட்சியை யெகோவா எவ்வாறு செழித்தோங்கச் செய்கிறார்?

9. பெட்டியை எருசலேமுக்குக் கொண்டுவரும்போது ஏற்பட்ட சம்பவங்களை விவரியுங்கள்.

10. யெகோவாவின் என்ன உடன்படிக்கையும் வாக்குறுதியும் அடுத்தபடியாக நம் கவனத்துக்கு வருகின்றன?

11. தாவீது நன்றியறிதலை எவ்வாறு ஜெபத்தில் வெளிப்படுத்துகிறார்?

12. தாவீது யார் யாருக்கு எதிராக போரிட்டார், சவுலின் வீட்டாருக்கு அவர் எப்படி தயவு காட்டுகிறார்?

13. மேலுமான என்ன வெற்றிகளின் மூலம் தாம் தாவீதோடு இருப்பதை யெகோவா நிரூபிக்கிறார்?

14. பத்சேபாள் விஷயத்தில் தாவீது என்னென்ன பாவங்களைச் செய்கிறார்?

15. தாவீதின் மீதான தீர்க்கதரிசன நியாயத்தீர்ப்பை நாத்தான் எவ்வாறு அறிவிக்கிறார்?

16. (அ) பத்சேபாளுக்குப் பிறந்த தாவீதின் இரண்டாம் குமாரனுடைய பெயர்களின் அர்த்தங்கள் யாவை? (ஆ) ரப்பாவைத் தாக்கியதால் முடிவில் என்ன நடந்தது?

17. என்ன குடும்பத் தொல்லைகள் தாவீதின் வீட்டாரைப் பாதிக்கத் தொடங்குகின்றன?

18. என்ன சூழ்ச்சிமுறையால் அப்சலோம் நாடுகடத்தப்பட்ட நிலையிலிருந்து திரும்பக் கொண்டுவரப்படுகிறான்?

19. என்ன சதித்திட்டம் இப்போது வெட்ட வெளிச்சமாகிறது, இதனால் தாவீதுக்கு என்ன ஏற்படுகிறது?

20, 21. (அ) தாவீது தப்பியோடும்போது என்ன சம்பவங்கள் நடக்கின்றன, நாத்தானின் தீர்க்கதரிசனம் எவ்வாறு நிறைவேறுகிறது? (ஆ) நம்பிக்கை துரோகியான அகித்தோப்பேலின் வாழ்க்கை எவ்வாறு முடிவுக்கு வருகிறது?

22. தாவீதின் வெற்றியுடன் என்ன துக்கமும் சேருகிறது?

23. தாவீது திரும்பவும் அரசராவதை என்ன ஏற்பாடுகள் குறித்துக் காட்டுகின்றன?

24. பென்யமீன் கோத்திரத்தை உட்படுத்தும் மேலுமான என்ன நிகழ்ச்சிகள் நடந்தேறுகின்றன?

25. அடுத்தபடியாக பதிவுசெய்யப்பட்ட தாவீதின் பாட்டுகளில் எது வெளிப்படுத்துகிறது?

26. தாவீதின் மாவீரர்களைக் குறித்து என்ன கூறப்பட்டிருக்கிறது, அவர்களுடைய உயிராகிய இரத்தத்துக்கு அவர் எவ்வாறு மதிப்பு காட்டுகிறார்?

27. முடிவாக தாவீது என்ன பாவம் செய்கிறார்? இதன் விளைவாக ஏற்பட்ட வாதை எவ்வாறு நிறுத்தப்படுகிறது?

28. கடுமையான என்ன எச்சரிக்கைகள் இரண்டு சாமுவேலில் உள்ளன?

29. நன்னடத்தைக்கும் நற்செயலுக்கும் என்ன சிறந்த முன்மாதிரிகள் இரண்டு சாமுவேலில் காணப்படுகின்றன?

30. இரண்டு சாமுவேலில் என்ன நியமங்கள் பொருத்திப் பயன்படுத்தப்பட்டு, விளக்கப்பட்டு இருக்கின்றன?

31. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளபடி, இரண்டு சாமுவேல் எவ்வாறு கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய முற்காட்சிகளை அளிக்கிறது?