Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் புத்தக எண் 11—1 இராஜாக்கள்

பைபிள் புத்தக எண் 11—1 இராஜாக்கள்

பைபிள் புத்தக எண் 11—1 இராஜாக்கள்

எழுத்தாளர்: எரேமியா

எழுதப்பட்ட இடம்: எருசலேம், யூதா

எழுதி முடிக்கப்பட்டது: பொ.ச.மு. 580

காலப்பகுதி: ஏ. பொ.ச.மு. 1040-911

தாவீதுக்கு கிடைத்த வெற்றிகள் இஸ்ரவேலின் ஆட்சி பரப்பை கடவுளால் கொடுக்கப்பட்ட எல்லை வரையாக, அதாவது வடக்கே ஐபிராத்து நதியிலிருந்து தெற்கே எகிப்தின் நதி வரையாக விரிவாக்கியிருந்தன. (2 சா. 8:3; 1 இரா. 4:21) தாவீது இறந்த பிறகு அவருக்கு பதிலாக அவருடைய குமாரன் சாலொமோன் பதவி ஏற்றார். இந்தச் சமயத்தில், “யூதாவும் இஸ்ரவேலும் கடற்கரை மணலத்தனை ஏராளமாயிருந்து, புசித்துக் குடித்து மகிழ்ந்துகொண்டிருந்தார்கள்.” (1 இரா. 4:20) சாலொமோன் மிகுந்த ஞானத்துடன் ஆட்சி செய்தார். அவருடைய ஞானத்தோடு ஒப்பிடுகையில் பூர்வ கிரேக்கர்களின் ஞானம் ஒன்றுமே இல்லை. யெகோவாவுக்காக மிக பிரமாண்டமான ஆலயத்தைக் கட்டினார். ஆனால் சாலொமோனும் பொய்க் கடவுட்களின் வணக்கத்தில் வீழ்ந்துபோனார். அவர் இறந்தபோது அந்த ராஜ்யம் இரண்டாக பிரிவுற்றது; இஸ்ரவேல் மற்றும் யூதா ராஜ்யங்கள் ஒன்றுக்கொன்று எதிரும் புதிருமாக இருந்தன. சாமுவேல் முன்னறிவித்தபடியே, ஒருவர் பின் ஒருவராக ஆட்சி செய்த பொல்லாத அரசர்கள் சீர்கேடான முறையில் நடந்துகொண்டு ஜனங்களுக்குப் பெருந்துன்பத்தை விளைவித்தனர். (1 சா. 8:​10-18) ஒன்று இராஜாக்களின் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளபடி, சாலொமோனின் மரணத்திற்குப் பின் யூதாவிலும் இஸ்ரவேலிலும் அரசாண்ட 14 ராஜாக்களில் 2 பேர் மாத்திரமே யெகோவாவின் பார்வையில் சரியானதை செய்தனர். அப்படியென்றால் இந்தப் பதிவு ‘கடவுளால் ஏவப்பட்டதும் பயனுள்ளதுமாக’ இருக்கிறதா? நிச்சயமாகவே அதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்புத்தகத்தில் உள்ள அறிவுரைகள், தீர்க்கதரிசனங்கள், மாதிரிகள் ஆகியவற்றிலிருந்தும், ‘முழு வேதாகமத்தின்’ மையப் பொருளாகிய ராஜ்யத்துடன் அதன் தொடர்பிலிருந்தும் இதை நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

2இராஜாக்களின் புத்தகம் ஆரம்பத்தில் ஒரே சுருளாக, அல்லது புத்தகமாக இருந்தது. இது, எபிரெயுவில் மிலாகிம் (Mela·khimʹ) (இராஜாக்கள்) என அழைக்கப்பட்டது. செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பாளர்கள் அதை பஸிலீயன் (Ba·si·leiʹon), “இராஜ்யங்கள்” என அழைத்தனர். முதன்முதலில் இவர்களே, வசதியைக் கருதி அதை இரண்டு சுருள்களாக பிரித்தனர். பின்னால் அவை மூன்றாம், நான்காம் அரசர்கள் என்று அழைக்கப்பட்டன. இப்பெயர்கள் கத்தோலிக்க பைபிள்களில் இந்நாள் வரை தொடர்ந்திருக்கின்றன. இருந்தபோதிலும், அவை முதலாம், இரண்டாம் இராஜாக்கள் என்றே பொதுவாக இப்போது அழைக்கப்படுகின்றன. முதலாம், இரண்டாம் சாமுவேல் புத்தகங்கள் வேறெந்த பூர்வ பதிவுகளையும் ஆதாரமாக எடுத்துக் கூறுவதில்லை. ஆனால் முதலாம் இரண்டாம் இராஜாக்களை தொகுத்தவர், ‘யூதாவுடைய ராஜாக்களின் நாளாகம புஸ்தகத்தை’ 15 தடவையும், ‘இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகம புஸ்தகத்தை’ 18 தடவையும் குறிப்பிடுகிறார்; “சாலொமோனுடைய நடபடி புஸ்தகத்”தைப் பற்றியும் குறிப்பிடுகிறார். (1 இரா. 15:7; 14:19; 11:41) மற்ற பூர்வ பதிவுகள் முற்றிலும் தொலைந்து போய்விட்டபோதிலும், தேவாவியால் ஏவப்பட்ட தொகுப்பு​—முதலாம், இரண்டாம் இராஜாக்கள் புத்தகங்களின் பயனுள்ள விவரம்​—நிலைத்திருக்கிறது.

3இராஜாக்களின் புத்தகங்களை எழுதியது யார்? இப்புத்தகங்கள் விசேஷமாக தீர்க்கதரிசிகளாகிய எலியா, எலிசாவின் வேலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. இதன் எழுத்தாளர் யெகோவாவின் தீர்க்கதரிசி என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. இப்புத்தகத்தின் மொழி, அமைப்பு, எழுத்துநடை ஆகியவை எரேமியா புத்தகத்தை எழுதிய அதே எழுத்தாளரே இதையும் எழுதியிருக்கலாம் என தெரிவிக்கின்றன. பல எபிரெய சொற்களும் சொற்றொடர்களும் இராஜாக்கள் புத்தகங்களிலும் எரேமியாவிலும் மாத்திரமே காணப்படுகின்றன. வேறெந்த பைபிள் புத்தகத்திலும் இவை காணப்படுவதில்லை. எனினும், இராஜாக்களின் புத்தகங்களை எரேமியா எழுதியிருந்தால், அவற்றில் அவரை பற்றி ஏன் ஒன்றுமே குறிப்பிடப்படவில்லை? இது அவசியம் இல்லை. ஏனெனில் எரேமியாவின் பெயர் தாங்கிய புத்தகத்தில் அவருடைய ஊழியம் ஏற்கெனவே விவரிக்கப்பட்டுள்ளது. மேலும், யெகோவாவையும் அவருடைய வணக்கத்தையும் மேன்மைப்படுத்துவதற்கே இராஜாக்களின் புத்தகங்கள் எழுதப்பட்டதே அல்லாமல் எரேமியாவின் மதிப்பை மேலும் கூட்டுவதற்கு அல்ல. உண்மையில், இராஜாக்களின் புத்தகங்களும் எரேமியாவும் பெரும்பாலும் ஒன்றையொன்று பூர்த்தி செய்பவையாக இருக்கின்றன. ஒரு புத்தகத்தில் விடுபட்டது மற்ற புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், ஒன்றுக்கொன்று இணையான பதிவுகளும் உள்ளன. இதற்கு 2 இராஜாக்கள் 24:​18–25:​30, எரேமியா 39:​1-10; 40:​7–41:10; 52:​1-34 ஆகியவற்றிலுள்ள வசனங்களை உதாரணமாக குறிப்பிடலாம். முதலாம், இரண்டாம் இராஜாக்கள் புத்தகங்களை எழுதியவர் எரேமியாதான் என்பதை யூத பாரம்பரியம் உறுதி செய்கிறது. அவர் எருசலேமிலேயே இந்த இரண்டு புத்தகங்களையும் தொகுக்க ஆரம்பித்தார் என்பதில் சந்தேகமில்லை. இரண்டாவது புத்தகம் பெரும்பாலும் பொ.ச.மு. 580-ல் எகிப்தில் எழுதி முடிக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. ஏனெனில் அந்த ஆண்டின் சம்பவங்களைத் தன்னுடைய பதிவின் இறுதியில் அவர் குறிப்பிடுகிறார். (2 இரா. 25:27) இரண்டு சாமுவேல் புத்தகத்தின் முடிவில் குறிப்பிடப்பட்டிருக்கும் இஸ்ரவேலின் சரித்திரத்தை ஒன்று இராஜாக்கள் புத்தகம் ஆரம்பமாக எடுத்துக்கொண்டு, யோசபாத் இறந்துபோன வருடமாகிய பொ.ச.மு. 911 வரை தொடர்கிறது.​—1 இரா. 22:50.

4பரிசுத்த வேதாகமத்தின் அதிகாரப்பூர்வ பட்டியலில் ஒன்று இராஜாக்கள் பொருத்தமாகவே இடம் பெறுகிறது. இது எல்லாராலும் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ளப்படுகிறது. மேலும், ஒன்று இராஜாக்களில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்களை எகிப்து, அசீரியா ஆகியவற்றின் சரித்திரம் உறுதிப்படுத்துகிறது. தொல்பொருள் ஆராய்ச்சியும் அந்தப் புத்தகத்திலுள்ள பல விஷயங்களை ஆதரிக்கிறது. உதாரணமாக, சாலொமோனின் ஆலயத்துக்கு தேவையான செம்பு பாத்திரங்களை, “யோர்தானுக்கு அடுத்த சமனான பூமியிலே, சுக்கோத்துக்கும் சர்தானுக்கும் நடுவே” ஈராம் வார்த்ததாக 1 இராஜாக்கள் 7:​45, 46-ல் நாம் வாசிக்கிறோம். பூர்வ சுக்கோத் இருந்த இடத்தில் தோண்டுகையில் வார்ப்பு வேலைகள் நடந்ததற்கான அத்தாட்சிகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். a மேலும், கார்னக்கிலுள்ள (பூர்வ தீபஸ்) கோயில் சுவற்றில் செதுக்கப்பட்டுள்ள ஓவியம், 1 இராஜாக்கள் 14:​25, 26-ல் குறிப்பிட்டுள்ள எகிப்திய அரசனாகிய ஷீஷான்க் (சீஷாக்) என்பவன் யூதாவை வென்றதைப் பெருமையாய் சித்தரித்துக் காட்டுகிறது. b

5பைபிளின் மற்ற எழுத்தாளர்களுடைய மேற்கோள்களும் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றங்களும் ஒன்று இராஜாக்களின் நம்பகத்தன்மையை ஆதரிக்கின்றன. எலியாவும் சரெப்தா ஊரின் விதவையும் சம்பந்தப்பட்ட சம்பவங்களைச் சரித்திரப்பூர்வ உண்மைகளாக இயேசு குறிப்பிட்டுப் பேசினார். (லூக். 4:​24-26) முழுக்காட்டுபவரான யோவானைப் பற்றி இயேசு குறிப்பிடுகையில், “வருகிறவனாகிய எலியா இவன்தான்” என கூறினார். (மத். 11:​13, 14) இங்கே இயேசு மல்கியாவின் தீர்க்கதரிசனத்தைக் குறிப்பிட்டார். மல்கியாவும் ஓர் எதிர்கால நாளைக் குறித்துப் பேசினார்: “இதோ, யெகோவாவின் பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்.” (மல். 4:​5, தி.மொ.) இயேசு, சாலொமோனையும் தென் தேசத்து ராணியையும் பற்றி இப்புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பதை குறிப்பிடுவதன் மூலமும் ஒன்று இராஜாக்கள் புத்தகம் பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலின் பாகம் என்பதற்கு மேலுமான சான்றளித்தார்.​—மத். 6:29; 12:42; 1 இராஜாக்கள் 10:​1-9-ஐ ஒப்பிடுக.

ஒன்று இராஜாக்களின் பொருளடக்கம்

6சாலொமோன் அரசராகிறார் (1:​1–2:46). தாவீதின் 40 ஆண்டு கால ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் அவருடைய மரணமும் நெருங்குகிறது. இந்த விஷயத்தோடுதான் ஒன்று இராஜாக்களின் இந்தப் பதிவு தொடங்குகிறது. படைத்தலைவர் யோவாப், ஆசாரியனாகிய அபியத்தார் ஆகியோரின் உதவியோடு தாவீதின் குமாரனாகிய அதோனியா அரியணையைக் கைப்பற்ற சதிசெய்கிறான். தீர்க்கதரிசியாகிய நாத்தான் இதைத் தாவீதுக்குத் தெரியப்படுத்துகிறார். தாவீதின் மரணத்திற்குப் பிறகு சாலொமோன் அரசராகும்படி அவர் ஏற்கெனவே நியமனம் செய்திருப்பதை தாவீதுக்கு மறைமுகமாய் நினைப்பூட்டுகிறார். அதோனியா அரசனாவதை சதிகாரர்கள் கொண்டாடுகிறபோதிலும், ஆசாரியனாகிய சாதோக் சாலொமோனை அரசராக அபிஷேகம் செய்வதற்கு தாவீது ஏற்பாடு செய்கிறார். சாலொமோன் தைரியமாயிருந்து தன்னை புருஷனாக நிரூபித்து தன் கடவுளாகிய யெகோவாவின் வழிகளில் நடக்க வேண்டுமென தாவீது இப்பொழுது அவருக்குக் கட்டளையிடுகிறார். அதன்பின் அவர் மரித்து “தாவீதின் நகரத்தில்” அடக்கம் செய்யப்படுகிறார். (2:10) காலப்போக்கில் அபியத்தாரை சாலொமோன் நாடுகடத்துகிறார். கலகம் செய்த அதோனியாவிற்கும் யோவாபிற்கும் மரண தண்டனை அளிக்கிறார். சீமேயியை கொலை செய்யாமல் விடுகிறார். ஆனால் தனக்காக செய்யப்பட்ட இந்த இரக்கமான ஏற்பாட்டுக்கு அவன் மதிப்பு கொடுக்காததால் அவனும் கொல்லப்படுகிறான். இப்போது ராஜ்யம் சாலொமோனின் அதிகாரத்தில் உறுதியாய் நிலைநாட்டப்படுகிறது.

7சாலொமோனின் ஞானமான ஆட்சி (3:1–4:34). சாலொமோன் எகிப்தின் ராஜாவோடு சம்பந்தம் வைத்து பார்வோனின் குமாரத்தியை மணம் செய்துகொள்கிறான். யெகோவாவின் ஜனங்களை பகுத்துணர்வோடு நியாயம் விசாரிக்க வேண்டும் என்பதற்காக கீழ்ப்படிதலுள்ள இருதயத்தை தரும்படி யெகோவாவிடம் ஜெபிக்கிறார். நீடித்த வாழ்க்கையையோ செல்வங்களையோ அவர் கேட்கவில்லை. ஆகவே யெகோவா அவருக்கு ஞானமும் பகுத்துணர்வுமுள்ள இருதயத்தையும் செல்வங்களையும் மகிமையையும்கூட கொடுப்பதாக வாக்குறுதி அளிக்கிறார். அவருடைய ஆட்சியின் ஆரம்ப காலத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வருகிறது. ஒரே பிள்ளையை இரண்டு பெண்கள் தங்களுடையது என உரிமை கொண்டாடுகின்றனர். இந்த வழக்கில் சாலொமோன் தனக்கிருக்கும் ஞானத்தை வெளிப்படுத்துகிறார். “உயிரோடிருக்கிற பிள்ளையை இரண்டாகப் பிளந்து” ஒவ்வொரு பெண்ணுக்கும் பாதியை கொடுக்கும்படி காவலர்களுக்கு சாலொமோன் கட்டளையிடுகிறார். (3:25) உடனடியாக உண்மையான தாய், பிள்ளையின் உயிருக்காக மன்றாடுகிறாள். அந்தப் பெண்ணிடமே பிள்ளையை கொடுத்துவிடும்படி சொல்கிறாள். இவ்வாறு சாலொமோன் உண்மையான தாயை அடையாளம் கண்டுகொள்கிறார். பெற்ற தாயிடம் அந்தப் பிள்ளை ஒப்படைக்கப்படுகிறது. சாலொமோனுக்கு கடவுள் கொடுத்த ஞானத்தால் முழு இஸ்ரவேலும் செழித்தோங்குகிறது. மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறது. அவருடைய ஞானமுள்ள வார்த்தைகளை கேட்பதற்குப் பல நாடுகளிலிருந்து மக்கள் வருகின்றனர்.

8சாலொமோனின் ஆலயம் (5:​1–10:29). தன் தகப்பனாகிய தாவீதிடம் யெகோவா சொன்ன பின்வரும் வார்த்தைகளை சாலொமோன் நினைவுபடுத்திக் கொள்கிறார்: “நான் உன் ஸ்தானத்தில் உன் சிங்காசனத்தின்மேல் வைக்கும் உன் குமாரனே என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டுவான்.” (5:5) ஆகவே சாலொமோன் இதற்காக ஆயத்தம் செய்கிறார். லீபனோனிலிருந்து கேதுரு, தேவதாரு மரங்களை தீருவின் அரசன் ஈராம் அனுப்புகிறான். திறமையான வேலையாட்களை அனுப்பியும் உதவி செய்கிறான். இவர்களுடன் (கட்டுமான பணிக்கென அமர்த்தப்பட்ட) சாலொமோனுடைய ஊழியர்களும் சேர்ந்து யெகோவாவுக்கு ஆலயம் கட்டுதற்கான வேலைகளை ஆரம்பிக்கின்றனர். இது சாலொமோனுடைய ஆட்சியின் நான்காம் ஆண்டு. இப்போது இஸ்ரவேலர் எகிப்திலிருந்து விடுதலையாகி 480 ஆண்டுகள் கடந்துவிட்டன. (6:1) ஆலயம் கட்டும் இடத்தில் சுத்திகளுக்கும் கோடாலிகளுக்கும் அல்லது எந்தவித இரும்புக் கருவிகளுக்கும் வேலையே இல்லை. ஏனெனில் எல்லா கற்களும் ஆலயம் கட்டுமிடத்திற்குக் கொண்டுவரப்படுவதற்கு முன்பாக, அவை வெட்டியெடுக்கப்படும் இடத்தில் ஏற்கெனவே சரியாக செதுக்கப்பட்டு கொண்டுவரப்பட்டன. ஆலயத்தின் உட்புறம் முழுவதும், முதலாவது கேதுரு மரத்தால் சுவர்களும் தேவதாரு மரத்தால் தரையும் மூடப்பட்டு, பொன் தகடுகளால் அழகாக வேயப்படுகின்றன. கேருபீன்களின் இரண்டு உருவங்கள் ஒலிவ மரங்களால் செய்யப்படுகின்றன. ஒவ்வொன்றும் பத்து முழம் (4.5 மீ) உயரம் இருந்தது. ஒரு இறக்கையின் முனையிலிருந்து மற்ற இறக்கையின் முனைக்கு இடைப்பட்ட அளவு பத்து முழம். இவை உட்புறத்திலுள்ள அறையில் வைக்கப்படுகின்றன. மற்ற கேருபீன்கள், பேரீச்ச மரங்களோடும் மலர்களோடுங்கூட, ஆலய சுவர்களில் செதுக்கப்படுகின்றன. ஆலயத்தைக் கட்டும்பணி ஏழு ஆண்டுகளுக்கும் அதிகமாகவே நீடிக்கிறது. இறுதியில் பிரமாண்டமான இந்த ஆலயம் கட்டி முடிக்கப்படுகிறது. தனக்கு ஒரு மாளிகை, லீபனோன் வனம் என்ற ஒரு மாளிகை, தூண்களைக் கொண்ட மண்டபம், சிங்காசனத்துக்குரிய மண்டபம், பார்வோன் குமாரத்திக்கு ஒரு மாளிகை என தனது கட்டுமான திட்டத்தை சாலொமோன் மேலும் தொடர்கிறார். யெகோவாவின் ஆலயத்தின் வாசல் மண்டபத்துக்காக இரண்டு பெரிய வெண்கலத் தூண்களையும் நிறுத்துகிறார். கூடுதலாக பிரகாரத்தில் வார்ப்பித்த கடல்தொட்டியையும், வெண்கல தள்ளுவண்டிகளையும், இவற்றோடுகூட வெண்கல தொட்டிகளையும் பொற்பாத்திரங்களையும் செய்கிறார். c

9இப்போது யெகோவாவின் உடன்படிக்கை பெட்டியை ஆசாரியர்கள் கொண்டுவருவதற்கான நேரம் வந்துவிட்டது. அதை உட்புற அறையாகிய மகா பரிசுத்த ஸ்தலத்தில் கேருபீன்களின் இறக்கைகளின்கீழ் வைக்கின்றனர். ஆசாரியர்கள் வெளியில் வருகையில், ‘யெகோவாவின் மகிமை யெகோவாவின் ஆலயத்தை நிரப்புகிறது’; ஆகவே ஆசாரியர்கள் அதற்கு மேலும் அங்கே ஊழியம் செய்ய முடிவதில்லை. (8:​11, தி.மொ.) சாலொமோன் இஸ்ரவேலின் சபையை ஆசீர்வதிக்கிறார். யெகோவாவையும் துதித்துப் போற்றுகிறார். முழங்காற்படியிட்டு வானத்தை நோக்கி தன் கைகளை விரித்து ஜெபம் செய்கிறார். வானாதி வானங்கள்கூட யெகோவாவைக் கொள்ள முடியாது, பூமியில் தான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம் என ஜெபத்தில் குறிப்பிடுகிறார். யெகோவாவுக்கு பயந்து இந்த ஆலயத்தை நோக்கி ஜெபிக்கிற அனைவருக்கும் கடவுள் செவிசாய்க்கும்படி ஜெபத்தில் மன்றாடுகிறார். ‘பூமியின் ஜனங்களெல்லாரும் உமது திருநாமத்தையறிந்து உமது ஜனமாகிய இஸ்ரவேலைப்போல உமக்குப் பயப்படும்படிக்கு,’ தூரதேசத்திலிருந்து வரும் அந்நியனுக்குங்கூட யெகோவா செவிகொடுக்கும்படி அவர் ஜெபத்தில் வேண்டுகிறார்.​—8:​43, தி.மொ.

10இதைத் தொடர்ந்து அடுத்த 14 நாட்கள் விருந்து நடைபெறுகிறது. 22,000 மாடுகளையும் 1,20,000 செம்மறியாடுகளையும் சாலொமோன் பலிசெலுத்துகிறார். யெகோவா தாம் ஜெபத்தைக் கேட்டதாகவும் தம்முடைய “பெயரை அங்கே வரையறையில்லா காலத்துக்கும்” வைப்பதன்மூலம் ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்தியதாகவும் சாலொமோனிடம் சொல்கிறார். இப்போது சாலொமோன், யெகோவாவுக்கு முன்பாக நேர்மையுள்ளவராக நடந்தால், அவருடைய ராஜ்யத்தின் சிங்காசனம் தொடர்ந்திருக்கும். எனினும், சாலொமோனும் அவருக்குப் பின்னால் அவருடைய குமாரர்களும் யெகோவாவை வணங்குவதை விட்டுவிட்டு மற்ற கடவுட்களை சேவித்தால்? இதற்கு யெகோவா பதிலளிக்கிறார்: “நான் இஸ்ரவேலுக்குக் கொடுத்த தேசத்திலே அவர்கள் இராதபடி அவர்களை நிர்மூலமாக்கி என் நாமம் விளங்க நான் பரிசுத்தமாக்கின இந்த ஆலயத்தைப் புறக்கணித்து என் சமுகம் அதில் இராதபடி செய்வேன்; அப்பொழுது இஸ்ரவேலர் சகல ஜனங்களுக்குள்ளும் பழமொழியும் பரியாசச் சொல்லும் ஆவார்கள். இந்த ஆலயமும் . . . பாழாகும்.”​—9:3, 7, 8, தி.மொ.

11யெகோவாவின் ஆலயத்தையும் ராஜாவின் மாளிகையையும் கட்டி முடிக்க சாலொமோனுக்கு 20 ஆண்டுகள் எடுக்கின்றன. இப்பொழுது அவர் தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட பகுதி முழுவதிலும் பல பட்டணங்களை கட்டுகிறார். தூர தேசங்களுடன் வாணிகத் தொடர்புகொள்வதற்கு கப்பல்களையும் உபயோகிக்கிறார். சாலொமோனுக்கு யெகோவா கொடுத்திருக்கிற இந்த மகா ஞானத்தைப் பற்றி சேபாவின் ராணி கேள்விப்படுகிறாள். சிக்கலான கேள்விகளால் அவரை சோதிக்கும்படி அவள் வருகிறாள். சாலொமோன் சொல்வதைக் கேட்டு, அவருடைய ஜனங்களின் செழுமையையும் மகிழ்ச்சியையும் கண்டு இவ்வாறு ஆச்சரியத்துடன் கூறுகிறாள்: “இவைகளில் பாதியாகிலும் எனக்கு அறிவிக்கப்படவில்லை.” (10:7) யெகோவா தொடர்ந்து இஸ்ரவேலை நேசித்ததால், சாலொமோன் ‘பூமியின் சகல ராஜாக்களைப் பார்க்கிலும், . . . ஐசுவரியத்திலும் ஞானத்திலும் சிறந்தவராகிறார்.’​—10:23.

12சாலொமோனின் உண்மையற்ற தன்மையும் மரணமும் (11:​1-43). யெகோவாவின் கட்டளைக்கு நேர்மாறாக, சாலொமோன் எழுநூறு மனைவிகளையும் முந்நூறு மறுமனையாட்டிகளையும் வைத்திருந்தார். இவர்களில் மற்ற தேசத்து பெண்களும் இருந்தனர். (உபா. 17:17) அவருடைய இருதயம் மற்ற கடவுட்களை வணங்கும்படி கவர்ந்திழுக்கப்படுகிறது. அவருடைய ராஜ்யம் அவரிடமிருந்து பறிக்கப்படும், ஆனால் அவருடைய நாளில் அல்ல, அவருடைய குமாரனின் நாளில் நடக்கும் என சாலொமோனிடம் யெகோவா சொல்கிறார். இருப்பினும், அந்த ராஜ்யத்தின் ஒரு பாகம், அதாவது யூதாவோடுகூட இன்னுமொரு கோத்திரம் சாலொமோனுடைய குமாரர்களால் ஆளப்படும். அருகிலுள்ள தேசங்களிலிருந்து சாலொமோனுக்கு எதிரிகளை கடவுள் எழுப்புகிறார். எப்பிராயீம் கோத்திரத்தானான யெரொபெயாமும் அரசனுக்கு எதிராக தன்னை உயர்த்துகிறான். அவன் இஸ்ரவேலின் பத்துக் கோத்திரங்களுக்கு அரசனாவான் என தீர்க்கதரிசியாகிய அகியா யெரொபெயாமுக்குச் சொல்கிறார். யெரொபெயாம் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எகிப்துக்கு ஓடிப்போகிறான். 40 ஆண்டுகள் ஆட்சிசெய்த பிறகு சாலொமோன் மரணமடைகிறார். பொ.ச.மு. 997-ல், அவருடைய குமாரன் ரெகொபெயாம் அரியணை ஏறுகிறார்.

13ராஜ்யம் பிரிக்கப்படுகிறது (12:​1–14:20). யெரொபெயாம் எகிப்திலிருந்து திரும்பி வருகிறார். சாலொமோன் தங்கள்மீது சுமத்தியிருந்த எல்லா பாரங்களையும் எளிதாக்கும்படி ரெகொபெயாமை கேட்பதற்கு ஜனங்களுடன் செல்கிறார். இஸ்ரவேலில் உள்ள முதியோர்களின் ஞானமான ஆலோசனையை ரெகொபெயாம் கேட்கவில்லை. மாறாக, வாலிபர்களுடைய பேச்சைக் கேட்டு கஷ்டங்களை இன்னும் அதிகமாக்குகிறார். இதனால், இஸ்ரவேல் அவரை எதிர்த்துப் புரட்சி செய்கிறது. வடக்கே உள்ள பத்துக் கோத்திரங்களுக்கு யெரொபெயாமை அரசராக்குகிறது. யூதாவும் பென்யமீனும் மாத்திரமே ரெகொபெயாமுக்கு மீந்திருக்கின்றன. இவர் கலகக்காரர்களை அடக்க ஒரு படையைத் திரட்டுகிறார். ஆனால் யெகோவாவின் கட்டளையின் பேரில் திரும்பிவிடுகிறார். யெரொபெயாம் சீகேமை கட்டி, அதை தனது தலைநகராக்குகிறார். இருப்பினும், அவர் இன்னும் பாதுகாப்பற்றவராகவே உணருகிறார். ஜனங்கள் யெகோவாவை வணங்குவதற்காக எருசலேமுக்குச் செல்வார்கள் என்பதாகவும் அப்போது அவர்கள் ரெகொபெயாமின் அதிகாரத்துக்குள் மறுபடியும் சென்றுவிடுவார்கள் என்பதாகவும் பயப்படுகிறார். இதைத் தடுப்பதற்காக இரண்டு பொன் கன்றுக்குட்டிகளைச் செய்கிறார். அவற்றில் ஒன்றை தாணிலும் மற்றொன்றை பெத்தேலிலும் வைக்கிறார். அந்த வணக்கத்தை வழிநடத்துவதற்கு ஆசாரியர்களை, லேவியின் கோத்திரத்திலிருந்து தெரிந்தெடுக்காமல், பொதுமக்கள் மத்தியிலிருந்து தெரிந்தெடுக்கிறார். d

14யெரொபெயாம் பெத்தேலிலுள்ள பலிபீடத்தில் பலிசெலுத்துகையிலேயே ஒரு தீர்க்கதரிசியை யெகோவா அனுப்புகிறார். தாவீதின் வம்சத்திலிருந்து யோசியா என்ற பெயருடைய ஓர் அரசரை எழுப்பப் போவதாகவும் அவர் இந்தப் பொய் வணக்கத்தின் பலிபீடத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பார் என்பதாகவும் அந்தத் தீர்க்கதரிசி வாயிலாக யெரொபெயாமை எச்சரிக்கிறார். அதற்கு அடையாளமாக அந்தப் பலிபீடம் உடனடியாக வெடித்துச் சிதறுகிறது. இந்த எச்சரிக்கும் செய்தியை அறிவிக்கச் செல்கையில் சாப்பிடவும் குடிக்கவும் கூடாது என யெகோவா அத்தீர்க்கதரிசிக்கு கட்டளையிட்டிருந்தார். இதற்கு அவர் கீழ்ப்படியாமல் போனதால் ஒரு சிங்கத்தால் கொல்லப்படுகிறார். இப்பொழுது துன்பம் யெரொபெயாமின் குடும்பத்தை வாதிக்கத் தொடங்குகிறது. யெகோவாவிடமிருந்து வரும் நியாயத்தீர்ப்பாக அவனுடைய பிள்ளை மரணமடைகிறது. யெரொபெயாம் இஸ்ரவேலில் பொய் தெய்வங்களை ஏற்படுத்தி பெரும் பாவத்தை செய்கிறான். இதனால், யெரொபெயாமின் குடும்பம் முற்றிலும் அழிக்கப்படும் என கடவுளுடைய தீர்க்கதரிசியாகிய அகியா முன்னறிவிக்கிறார். 22 ஆண்டுகள் ஆட்சி செய்த பின்பு யெரொபெயாம் மரிக்கிறான். அவனுடைய குமாரன் நாதாப் அரசனாகிறான்.

15யூதாவில்: ரெகொபெயாம், அபியாம், ஆசா (14:​21–15:24). இதற்கிடையில், ரெகொபெயாமின் ஆட்சியில், யூதாவும் விக்கிரக வணக்கத்தில் வீழ்ந்துபோகிறது. ஆம், யெகோவாவின் பார்வையில் யூதா பொல்லாப்பானதைச் செய்கிறது. எகிப்தின் அரசன் படையெடுத்து ஆலயத்தின் பொக்கிஷங்கள் பலவற்றை அள்ளிக்கொண்டு போகிறான். 17 ஆண்டுகள் ஆட்சிசெய்த பின்பு ரெகொபெயாம் இறந்து விடுகிறான். அவனுடைய குமாரன் அபியாம் இப்போது அரியணை ஏறுகிறான். இவனும் யெகோவாவுக்கு எதிராக தொடர்ந்து பாவம் செய்கிறான். மூன்று ஆண்டு கால ஆட்சிக்குப் பிறகு அவன் மரிக்கிறான். இவனுடைய குமாரன் ஆசா இப்பொழுது ஆட்சிப் பொறுப்பை ஏற்கிறார், தனது முன்னோர்களுக்கு நேர்மாறாக, இவர் யெகோவாவை முழு இருதயத்தோடு சேவிக்கிறார். தேசத்திலிருந்து அருவருப்பான விக்கிரகங்களை அகற்றுகிறார். இஸ்ரவேலுக்கும் யூதாவுக்குமிடையே இடைவிடாது போர் நடக்கிறது. ஆசா சீரியாவிடமிருந்து உதவியைப் பெறுகிறார். இஸ்ரவேலர்கள் பின்வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. ஆசா 41 ஆண்டுகள் ஆளுகிறார், அவரைப் பின்தொடர்ந்து அவருடைய குமாரன் யோசபாத் அரசனாகிறார்.

16இஸ்ரவேலில்: நாதாப், பாஷா, ஏலா, சிம்ரி, திப்னி, உம்ரி, ஆகாப் (15:​25–16:34). எப்பேர்ப்பட்ட பொல்லாத கூட்டம்! நாதாப் இரண்டு ஆண்டுகளே ஆளுகிறான். அதற்குப்பின் பாஷா அவனைப் படுகொலை செய்கிறான். பிறகு யெரொபெயாமின் வீட்டார் அனைவரையும் அழித்துப்போடுகிறான். இவன் பொய் வணக்கத்திலிருந்தும் யூதாவுடன் போர் செய்வதிலிருந்தும் ஓயவில்லை. யெகோவா, யெரொபெயாம் குடும்பத்துக்கு செய்ததுபோல் பாஷாவின் குடும்பத்தையும் அடியோடு அழிக்கப் போவதாக முன்னறிவிக்கிறார். பாஷாவின் 24 ஆண்டு ஆட்சிக்குப் பின்பு, அவனுடைய குமாரன் ஏலா அரசனாகிறான். இவன் இரண்டு ஆண்டுகளே ஆட்சி செய்கிறான். பிறகு தன் ஊழியக்காரனாகிய சிம்ரியால் கொலை செய்யப்படுகிறான். சிங்காசனத்தை கைப்பற்றிய சிம்ரி, உடனடியாக பாஷாவின் குடும்பத்தார் அனைவரையும் வெட்டிப் போடுகிறான். ஜனங்கள் இதை கேள்விப்படுகையில், படைத் தலைவனாகிய உம்ரியை அரசனாக்குகிறார்கள். ஜனங்களெல்லாம் உம்ரியோடு சேர்ந்துகொண்டு சிம்ரியின் தலைநகராகிய திர்சாவுக்கு விரோதமாக படையெடுக்கிறார்கள். எல்லாம் கைவிட்டுப் போய்விட்டதை அறிந்த சிம்ரி, அரமனையைத் கொளுத்திவிட்டு தானும் அதிலே மாண்டு போகிறான். இப்பொழுது திப்னி போட்டி அரசனாக ஆட்சி செய்வதற்கு முயற்சிக்கிறான். ஆனால் சிறிது காலத்திற்குப்பின் உம்ரியைப் பின்பற்றுவோர் திப்னியை கொன்று விடுகின்றனர்.

17உம்ரி சமாரியா மலையை விலைக்கு வாங்குகிறான். அங்கே சமாரியா நகரத்தை கட்டுகிறான். இவன் யெரொபெயாமினுடைய வழிகளை அச்சுப்பிசகாமல் அப்படியே பின்பற்றி, விக்கிரக வணக்கத்தால் யெகோவாவுக்கு கோபமூட்டுகிறான். உண்மையில், தனக்கு முன்னிருந்த மற்ற எல்லாரையும்விட படுமோசமானவனாக இருக்கிறான். 12 ஆண்டுகள் ஆட்சி செய்த பின்பு இவன் மரிக்கிறான், இவனுடைய குமாரன் ஆகாப் அரசனாகிறான். ஆகாப் சீதோனின் அரசனுடைய குமாரத்தியாகிய யேசபேலை திருமணம் செய்துகொள்கிறான். பின்பு சமாரியாவில் பாகாலுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டிவைக்கிறான். தனக்கு முன்னிருந்த எல்லாரையும் பார்க்கிலும் பொல்லாங்கில் இவன் மிஞ்சினவனாக இருக்கிறான். இச்சமயத்தில் பெத்தேல் ஊரானாகிய ஈயேல் எரிகோ பட்டணத்தை கட்டுகிறான். இதன் விளைவால் தன் முதற்பேறான குமாரனையும் தன் இளைய குமாரனையும் சாக கொடுக்கிறான். உண்மையான வணக்கத்திற்கு கொஞ்சமும் மதிப்பில்லாமல் போகிறது.

18இஸ்ரவேலில் எலியாவின் தீர்க்கதரிசன ஊழியம் (17:​1–22:40). யெகோவாவின் தூதுவர் ஒருவர் திடீரென காட்சியில் தோன்றுகிறார். இவர் திஸ்பியனாகிய எலியா. e இவர் அரசனாகிய ஆகாபிடம் அதிகாரத்துடன் அறிவிக்கும் ஆரம்ப செய்தி உண்மையில் திடுக்கிட செய்கிறது: “இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவின் சந்நிதியில் நிற்கிற நான் அவருடைய ஜீவன்மேல் ஆணையாகச் சொல்லுகிறதைக் கேள்; நான் சொன்னாலன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும்”! (17:​1, தி.மொ.) எலியா யெகோவாவுடைய கட்டளையின்படி, உடனடியாக யோர்தானுக்குக் கிழக்கே உள்ள ஒரு பள்ளத்தாக்கிற்கு செல்கிறார். இஸ்ரவேலை வறட்சி வாட்டியெடுக்கிறது. ஆனால் காகங்கள் எலியாவுக்கு உணவு கொண்டுவருகின்றன. அந்தப் பள்ளத்தாக்கின் நீரோடை வற்றியபோது, யெகோவா தம்முடைய தீர்க்கதரிசியை சீதோனிலுள்ள சாறிபாத்தில் வாழும்படி அனுப்புகிறார். ஒரு விதவை எலியாவுக்குத் தயவுகாட்டுகிறாள். ஆகவே அவளும் அவளுடைய குமாரனும் பசியால் சாகாதபடிக்கு, அவளிடம் இருக்கும் சிறிதளவான மாவும் எண்ணெய்யும் குறைந்துபோகாமல் இருக்கும்படி யெகோவா அற்புதமாக அவர்களை காப்பாற்றுகிறார். கொஞ்ச காலத்திற்கு பிறகு அந்த குமாரன் நோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிடுகிறான். ஆனால் எலியாவின் வேண்டுதலின்பேரில் யெகோவா அந்தப் பிள்ளையை திரும்ப உயிரடைய செய்கிறார். பின்பு, அந்த வறட்சி காலத்தின் மூன்றாவது ஆண்டில் யெகோவா எலியாவை மறுபடியும் ஆகாபிடம் அனுப்புகிறார். இஸ்ரவேலின்மீது ஆபத்தைக் கொண்டுவருபவன் என்பதாக ஆகாப் எலியாவைக் குற்றம் சாட்டுகிறான். ஆனால் எலியா தைரியமாக ஆகாபிடம், பாகால்களைப் பின்பற்றுவதால் “நீரும் உம்முடைய தகப்பன் வீட்டாருமே” அதற்குக் காரணம் என்று சொல்கிறார்.​—18:18.

19கர்மேல் மலையின்மீது பாகாலின் தீர்க்கதரிசிகள் யாவரையும் கூடிவரச் செய்யும்படி எலியா ஆகாபை அழைக்கிறார். இனிமேலும் இரண்டு எண்ணங்களால் குந்திக்குந்தி நடக்க முடியாது. யெகோவாவா பாகாலா என்பது நிரூபிக்கப்பட வேண்டிய விவாதம்! எல்லா ஜனங்களும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இப்போது பாகாலின் 450 பூஜாரிகள் ஒரு காளையை வெட்டி அதை பலிபீடத்தின்மீதுள்ள கட்டைகளின்மேல் வைக்கிறார்கள். அக்கினி இறங்கி அந்தப் பலியை எரித்துப்போடும்படி ஜெபிக்கின்றனர். காலையிலிருந்து மத்தியானம் வரையில் அவர்கள் பாகாலைக் கூப்பிடுகிறார்கள். ஆனால் எல்லாம் வீணே! எலியாவோ அவர்களை கிண்டல் செய்கிறார். அவர்கள் பெரும் கூச்சலிட்டு தங்களை கீறிக்கொள்கிறார்கள். ஆனால் பதில் இல்லை! அடுத்தபடியாக, அங்கிருந்தவர்களில் ஒரே தீர்க்கதரிசியாகிய எலியா யெகோவாவின் பெயரில் ஒரு பலிபீடத்தை கட்டுகிறார். பலிசெலுத்துவதற்குக் கட்டைகளையும் காளையையும் தயார் செய்கிறார். அந்தப் பலியையும் கட்டைகளையும் ஜனங்கள் மூன்று தடவை தண்ணீர் ஊற்றி ஊறவைக்கும்படி செய்கிறார். பின்பு அவர், “யெகோவாவே, எனக்குப் பதிலளியும், யெகோவாவாகிய நீரே உண்மையானக் கடவுள் என்று இந்த ஜனங்கள் அறியும்படிக்கு, எனக்குப் பதிலளியும்” என்று யெகோவாவிடம் ஜெபிக்கிறார். அப்போது வானத்திலிருந்து நெருப்பு திடீரென பாய்ந்து வருகிறது. கொழுந்துவிட்டு எரியும் அந்த நெருப்பு பலியையும், விறகுகளையும், பலிபீடக் கற்களையும், தூசியையும், தண்ணீரையும் விழுங்கி விடுகிறது. ஜனங்களெல்லாரும் இதைக் கண்டு உடனடியாக முகங்குப்புற விழுகின்றனர். “யெகோவாவே உண்மையான கடவுள்! யெகோவாவே உண்மையான கடவுள்!” என்று சொல்கின்றனர். (18:​37, 39, NW) பாகாலின் தீர்க்கதரிசிகளுக்கு மரணம்! அவர்களை தனிப்பட்ட முறையில் எலியாவே கொன்று போடுகிறார். ஆகவே ஒருவனும் தப்ப முடியவில்லை. பின்பு யெகோவா மழையை கொடுக்கிறார். ஒருவழியாக இஸ்ரவேலில் வறட்சி முடிவுக்கு வருகிறது.

20பாகாலை இழிவுபடுத்திய செய்தி யேசபேலின் காதுகளை எட்டுகிறது. ஆகவே அவள் எலியாவைக் கொல்வதற்கு முயலுகிறாள். பயத்தால் எலியா தனது வேலைக்காரனோடுகூட வனாந்தரத்துக்கு ஓடிப் போகிறார், யெகோவா அவரை ஓரேபுக்கு வழிநடத்துகிறார். அங்கே யெகோவா அவருக்குத் தோன்றுகிறார்​—பிரமிக்கத்தக்க விதமாக பெருங்காற்றிலோ பூமியதிர்ச்சியிலோ அக்கினியிலோ அல்ல, மாறாக “அமர்ந்த மெல்லிய சத்த”த்துடனேயே தோன்றுகிறார். (19:​11, 12) ஆசகேலை சீரியாவின் அரசனாகவும், யெகூவை இஸ்ரவேலின்மீது அரசனாகவும், எலிசாவை அவருடைய ஸ்தானத்தில் தீர்க்கதரிசியாகவும் அபிஷேகம் செய்யும்படி யெகோவா எலியாவிடம் சொல்கிறார். இஸ்ரவேலில் 7,000 பேர் பாகாலுக்கு முன்பாக முழங்காலிடவில்லை என்ற செய்தியைக் கூறி அவர் எலியாவை ஆறுதல்படுத்துகிறார். எலியா உடனடியாக சென்று எலிசாவை சந்திக்கிறார். தனது அதிகாரப்பூர்வமான ஊழிய உடையை எலிசாவிற்கு அணிவிப்பதன் மூலமாக அவரை அபிஷேகம் செய்கிறார். ஆகாப் இப்பொழுது சீரியர்கள்மீது இரண்டு வெற்றிகளை அடைகிறான். ஆனால் அவர்களுடைய அரசனைக் கொல்வதற்குப் பதிலாக அவனோடு உடன்படிக்கை செய்துகொண்டதற்காக யெகோவா அவனைக் கடிந்துகொள்கிறார். பின்பு நாபோத்தின் விவகாரம் வருகிறது. அவனுடைய திராட்சத் தோட்டத்தின்பேரில் ஆகாப் நாட்டம் கொள்கிறான். ஆகாப் அந்தத் திராட்சத் தோட்டத்தை பெறுவதற்காக, நாபோத் பொய்ச் சாட்சிகளால் குற்றம் சாட்டப்பட்டு கொல்லப்படும்படி யேசபேல் சதிசெய்கிறாள். மன்னிக்க முடியாத எத்தகைய மாபெரும் குற்றம்!

21மறுபடியும் எலியா வருகிறார். அவர் ஆகாபிடம், நாபோத் செத்த இடத்தில் நாய்கள் இவனுடைய இரத்தத்தையும் நக்கும் என்பதாகவும் யெரொபெயாம், பாஷா ஆகியோரின் குடும்பங்களைப்போல் இவனுடைய குடும்பமும் முற்றிலுமாக அழிக்கப்படும் என்பதாகவும் சொல்கிறார். யெஸ்ரயேலின் நிலப்பகுதியில் நாய்கள் யேசபேலை தின்னும். “ஆகாபைப்போன்ற துன்மார்க்கன் இல்லை. அவன் யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்யத் தன்னை விற்றுப்போட்டவன், அவனைத் தூண்டிவிட்டவள் அவன் மனைவியாகிய யேசபேல்.” (21:​25, தி.மொ.) எனினும், எலியாவின் வார்த்தைகளைக் கேட்டதால் ஆகாப் தன்னைத் தாழ்த்துகிறான். ஆகவே அந்தத் தீங்கு அவனுடைய நாட்களில் வராது; மாறாக அவனுடைய குமாரனின் நாட்களில் வருமென யெகோவா சொல்கிறார். ஆகாப் இப்பொழுது, சீரியாவுக்கு எதிராக போரிடுவதில், யூதாவின் அரசனாகிய யோசபாத்தை தன்னுடன் சேர்த்துக் கொள்கிறான். யெகோவாவின் தீர்க்கதரிசியாகிய மிகாயாவின் ஆலோசனைக்கு நேர்மாறாக அவர்கள் போரிட செல்கின்றனர். போரில் ஏற்பட்ட காயங்களால் ஆகாப் மரிக்கிறான். அவனுடைய இரதம் சமாரியாவின் குளத்தில் கழுவப்படுகிறது. அப்போது, எலியா தீர்க்கதரிசனம் உரைத்தபடியே, நாய்கள் அவனுடைய இரத்தத்தை நக்குகின்றன. அவனுடைய குமாரன் அகசியா அதன் பின் இஸ்ரவேலின் அரசனாகிறான்.

22யோசபாத் யூதாவில் அரசாளுகிறார் (22:​41-53). ஆகாபுடன் சேர்ந்து சீரியாவுக்கு எதிராக போரிட சென்ற யோசபாத், தன் தகப்பனாகிய ஆசாவைப்போல் யெகோவாவுக்கு உண்மையுள்ளவராக இருக்கிறார். ஆனால் பொய் வணக்கத்தின் மேடைகளை முழுமையாக அப்புறப்படுத்த தவறுகிறார். 25 ஆண்டுகள் ஆட்சி செய்த பின்பு அவர் மரிக்கிறார். அவருடைய குமாரன் யோராம் அரசனாகிறான். வடக்கே, இஸ்ரவேலில் அகசியா தன் தகப்பனின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, பாகால் வணக்கத்தால் யெகோவாவுக்கு கோபமூட்டுகிறான்.

ஏன் பயனுள்ளது

23ஒன்று இராஜாக்களில் பொதிந்துள்ள கடவுளுடைய போதனையிலிருந்து மிகுந்த பயனை அடையலாம். முதலாவது, ஜெபத்தைப் பற்றிய விஷயத்தை கவனியுங்கள். இது இந்தப் புத்தகத்தில் அடிக்கடி முதலிடம் பெறுகிறது. சாலொமோன் இஸ்ரவேலை ஆட்சி செய்யும் மிகப் பெரிய பொறுப்பை எதிர்ப்பட்டார். அப்போது, சிறு பிள்ளையைப்போல யெகோவாவிடம் மனத்தாழ்மையுடன் ஜெபித்தார். தெளிந்துணர்வுக்காகவும் கீழ்ப்படிதலுள்ள இருதயத்துக்காகவும் மாத்திரமே ஜெபித்தார். ஆனால் நிறைந்துவழியும் அளவில் ஞானத்தை அருளுவதோடுகூட, செல்வங்களையும் மகிமையையும் யெகோவா சாலொமோனுக்கு கொடுத்தார். (3:​7-9, 12-14) யெகோவாவின் சேவையில் ஞானத்திற்காகவும் வழிநடத்துதலுக்காகவும் மனத்தாழ்மையுடன் நாம் செய்யும் ஜெபங்கள் பதிலளிக்கப்படாமல் போவதில்லை என்ற உறுதி இன்று நமக்கு இருப்பதாக! (யாக். 1:5) ஆலய பிரதிஷ்டையின்போது சாலொமோன் செய்ததுபோல், யெகோவா அருளியிருக்கும் எல்லா நன்மைகளுக்காகவும் ஆழ்ந்த நன்றியுணர்வுடன் இருதயத்திலிருந்து ஊக்கமாய் நாம் எப்பொழுதும் ஜெபிப்போமாக! (1 இரா. 8:​22-53) சோதனையின்போதும் பேய் வணக்கத்தில் ஈடுபட்ட ஜனத்தை நேருக்குநேர் எதிர்ப்பட்டபோதும் எலியா செய்த ஜெபங்கள், யெகோவாவில் அவருக்கிருந்த முழுமையான, திட நம்பிக்கையை வெளிப்படுத்தின. அவ்வாறே நம்முடைய ஜெபங்களும் எப்போதும் இருப்பதாக! ஜெபத்தில் தம்மை தேடுவோரை யெகோவா அருமையாய் ஆசீர்வதிக்கிறார்.​—1 இரா. 17:​20-22; 18:​36-40; 1 யோ. 5:14.

24மேலும், யெகோவாவுக்கு முன்பாக தங்களைத் தாழ்த்தாதவர்களின் உதாரணங்கள் நமக்கு எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். எவ்வளவாய் ‘தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார்’! (1 பே. 5:​5) அதோனியாவை எடுத்துக்கொள்ளுங்கள், யெகோவாவின் தேவராஜ்ய நியமிப்பை புறக்கணிக்க முடியும் என்பதாக நினைத்தான் (1 இரா. 1:5; 2:​24, 25); சீமேயி, தனது எல்லைகளை தாண்டிச்சென்று, மறுபடியுமாக திரும்ப வந்துவிடலாமென எண்ணினான் (2:​37, 41-46); சாலொமோன், பிற்பட்ட ஆண்டுகளில் கடவுளுக்கு கீழ்ப்படியாமல் போனதால் யெகோவா அவருக்கு விரோதமாக எதிரிகளை எழுப்பினார் (11:​9-14, 23-26); இஸ்ரவேலின் அரசர்கள், பொய் மதத்தில் ஈடுபட்டது அழிவுக்கு வழிநடத்தியது (13:​33, 34; 14:​7-11; 16:​1-4). மேலும், ஆகாபை திரைமறைவிலிருந்து ஆட்டிப்படைத்த பொல்லாத, பேராசை பிடித்த சதிகாரியாக யேசபேல் இருந்தாள். இவளுடைய இழிவான மாதிரி, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பு தியத்தீரா சபைக்குக் கொடுக்கப்பட்ட எச்சரிப்பில் பின்வருமாறு பயன்படுத்தப்பட்டது: “ஆகிலும், உன்பேரில் எனக்குக் குறை உண்டு; என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய்.” (வெளி. 2:20) கண்காணிகள் சபைகளைச் சுத்தமாகவும் யேசபேலைப்போன்ற எல்லா செல்வாக்குகளிலிருந்து விலக்கி பாதுகாப்பாகவும் வைத்திருக்க வேண்டும்!​—அப்போஸ்தலர் 20:​28-30-ஐ ஒப்பிடுக.

25தீர்க்கதரிசனம் சொல்லும் யெகோவாவின் வல்லமை, ஒன்று இராஜாக்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள பல தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தில் தெளிவாக காட்டப்படுகிறது. உதாரணமாக, பெத்தேலிலிருந்த யெரொபெயாமின் பலிபீடத்தைப் பிளந்து போடப்போகிறவன் யோசியாதான் என்பதாக 300-க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்னால் அறிவிக்கப்பட்டது. கவனத்தைக் கவரும் இந்த முன்னறிவிப்பை யோசியா நிறைவேற்றினார்! (1 இரா. 13:​1-3; 2 இரா. 23:15) எனினும், தீர்க்கதரிசனங்களில் மிகவும் முதன்மையானவை, சாலொமோன் கட்டின யெகோவாவின் ஆலயம் சம்பந்தப்பட்டவையே. பொய்க் கடவுட்களிடமாக வழுவிப்போவது, இஸ்ரவேல் தேசம் முற்றிலுமாக அழிக்கப்படுவதிலேயே விளைவடையும்; மேலும் தம்முடைய பெயருக்காக அவர் பரிசுத்தமாக்கின அந்த ஆலயம் நிராகரிக்கப்படும் என்பதாக யெகோவா சாலொமோனுக்கு சொன்னார். (1 இரா. 9:​7, 8) இந்தத் தீர்க்கதரிசனம் எவ்வாறு நூறு சதவிகிதம் உண்மையாக நிரூபித்தது என்பதை 2 நாளாகமம் 36:​17-21-ல் நாம் வாசிக்கிறோம். மேலும், அதே இடத்தில் மகா ஏரோது பின்னால் கட்டின ஆலயமும், அதே காரணத்துக்காக அதேவிதமாக அழிக்கப்படும் என்பதாக இயேசு சொன்னார். (லூக். 21:6) இதுவுங்கூட எவ்வளவு உண்மையாக நிரூபித்தது! இந்தப் பேரழிவுகளையும் அவற்றிற்கான காரணத்தையும் நாம் நினைவில் வைக்க வேண்டும். மேலும் உண்மையான கடவுளுடைய வழிகளில் எப்போதும் நடப்பதற்கு அவை நமக்கு நினைப்பூட்ட வேண்டும்.

26சேபாவின் ராணி, தூர தேசத்திலிருந்து வந்தாள். யெகோவாவின் சிறப்புமிக்க ஆலயம் உட்பட, சாலொமோனின் ஞானத்தையும், அவருடைய ஜனத்தின் செழுமையையும், அவருடைய ராஜ்யத்தின் மகிமையையும் கண்டு வியப்படைந்தாள். எனினும், சாலொமோன்தானே யெகோவாவிடம் பின்வருமாறு அறிக்கையிட்டார்: “வானங்களும் வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே, நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்”! (1 இரா. 8:27; 10:​4-9) பல நூற்றாண்டுகளுக்கு பின்பு, கிறிஸ்து இயேசு, முக்கியமாக, யெகோவாவின் பெரிய ஆவிக்குரிய ஆலயத்தில் உண்மையான வணக்கத்தைத் திரும்ப நிலைநாட்டுவதன் சம்பந்தமாக, ஆவிக்குரிய ஓர் கட்டிட வேலையை நிறைவேற்றுவதற்கு வந்தார். (எபி. 8:​1-5; 9:​2-10, 23) சாலொமோனை பார்க்கிலும் பெரியவரான இவருக்கே, யெகோவாவின் பின்வரும் வாக்கு உண்மையாக பொருந்துகிறது: “இஸ்ரவேலின்மேலுள்ள உன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன்.” (1 இரா. 9:5; மத். 1:​1, 6, 7, 16; 12:42; லூக். 1:32) யெகோவாவின் ஆவிக்குரிய ஆலயத்தின் மகிமையைப் பற்றியும், கிறிஸ்து இயேசு ஆளும் யெகோவாவின் ராஜ்யத்தின் ஞானமான ஆட்சியில் வாழப் போகும் அனைவரும் அனுபவிக்கப் போகும் செழுமை, மகிழ்ச்சி, பேரானந்தம் ஆகியவற்றைப் பற்றியுமான உற்சாகமூட்டும் முன்காட்சியை ஒன்று இராஜாக்கள் அளிக்கிறது. உண்மையான வணக்கத்தின் முக்கியத்துவத்தையும், வித்தால் ஆளப்படும் ராஜ்யம் சம்பந்தமான யெகோவாவின் அருமையான ஏற்பாட்டையும் பற்றிய நம்முடைய மதித்துணர்வு தொடர்ந்து வளருகிறது!

[அடிக்குறிப்புகள்]

a தி இன்டர்நாஷனல் ஸ்டான்டர்ட் பைபிள் என்ஸைக்ளோப்பீடியா, தொ. 4, 1988, ஜி. டபிள்யு. பிரோமிலி என்பவரால் பதிப்பிக்கப்பட்டது, பக்கம் 648.

b வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கங்கள் 149, 952.

c வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கம் 750-1.

d வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கம் 947-8.

e வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கம் 949-50.

[கேள்விகள்]

1. (அ) இஸ்ரவேலின் பெரும் செல்வச் செழிப்பு எவ்வாறு அழிய ஆரம்பித்தது? (ஆ) என்றாலும் ஒன்று இராஜாக்கள் ‘கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’ என ஏன் சொல்லலாம்?

2. முதலாம் இரண்டாம் இராஜாக்கள் புத்தகங்களின் பதிவு எவ்வாறு இரண்டு சுருள்களானது, அவை எவ்வாறு தொகுக்கப்பட்டன?

3. (அ) சந்தேகத்திற்கிடமின்றி இராஜாக்களின் புத்தகங்களை எழுதியது யார், நீங்கள் ஏன் அவ்வாறு பதிலளிக்கிறீர்கள்? (ஆ) ஒன்று இராஜாக்கள் எப்போது எழுதி முடிக்கப்பட்டது, அதில் அடங்கியுள்ள காலப்பகுதி என்ன?

4. சரித்திரமும் தொல்பொருள் ஆராய்ச்சியும் ஒன்று இராஜாக்கள் புத்தகத்தை எவ்வாறு உறுதிசெய்கின்றன?

5. தேவாவியால் ஏவப்பட்ட எந்த அத்தாட்சி, ஒன்று இராஜாக்களின் நம்பகத்தன்மையை நிரூபிக்கிறது?

6. எப்படிப்பட்ட சூழ்நிலைமையில் சாலொமோன் சிங்காசனத்தில் ஏறுகிறார், அவர் எவ்வாறு ராஜ்யத்தில் உறுதியாக நிலைநாட்டப்படுகிறார்?

7. சாலொமோனின் என்ன ஜெபத்திற்கு யெகோவா பதிலளிக்கிறார், இஸ்ரவேலுக்கு இதனால் உண்டாகும் பலன் என்ன?

8. (அ) ஆலயத்தை சாலொமோன் எவ்வாறு கட்டுகிறார்? அதன் சிறப்பான அம்சங்கள் சிலவற்றை விவரியுங்கள். (ஆ) கூடுதலாக என்ன கட்டுமான பணிகளை அவர் நிறைவேற்றுகிறார்?

9. யெகோவாவின் எந்த மகிமையும் சாலொமோனின் எந்த ஜெபமும் உடன்படிக்கை பெட்டி உள்ளே கொண்டுவரப்படுவதை அடையாளப்படுத்தி காட்டின?

10. என்ன வாக்குறுதியின் மூலமாகவும் தீர்க்கதரிசன எச்சரிக்கையின் மூலமாகவும் சாலொமோனின் ஜெபத்திற்கு யெகோவா பதிலளிக்கிறார்?

11. சாலொமோன் எவ்வாறு ஐசுவரியமும் ஞானமும் மிகுந்தவராய் விளங்கினார்?

12. (அ) சாலொமோன் எதில் தவறுகிறார், புரட்சிக்கான என்ன விதைகள் முளைவிட ஆரம்பிக்கின்றன? (ஆ) அகியா என்ன தீர்க்கதரிசனம் உரைக்கிறார்?

13. ரெகொபெயாம் தன் ஆட்சியைத் தொடங்கும்போது எவ்வாறு ராஜ்யத்தில் பிரிவினை ஏற்படுகிறது, யெரொபெயாம் தன் அரச பதவியைப் பாதுகாக்க எவ்வாறு முயற்சி செய்கிறார்?

14. யெரொபெயாமின் குடும்பத்துக்கு எதிராக என்ன தீர்க்கதரிசன எச்சரிக்கை கொடுக்கப்படுகிறது, என்ன துன்பங்கள் தொடங்குகின்றன?

15. யூதாவை ஆண்ட அடுத்த மூன்று அரசர்களின் ஆட்சியின்போது என்ன சம்பவங்கள் நடைபெறுகின்றன?

16. என்ன கலவரமான நிகழ்ச்சிகள் இப்பொழுது இஸ்ரவேலை கலக்குகின்றன, ஏன்?

17. (அ) உம்ரியின் ஆட்சியில் கவனிக்கத்தக்க அம்சம் என்ன? (ஆ) ஆகாபின் ஆட்சியின்போது உண்மையான வணக்கம் ஏன் மிகவும் தாழ்ந்த நிலைக்கு செல்கிறது?

18. என்ன அதிகார அறிவிப்புடன் எலியா இஸ்ரவேலில் தனது தீர்க்கதரிசன ஊழியத்தைத் தொடங்குகிறார், இஸ்ரவேலின் இக்கட்டுகளுக்கு உண்மையான காரணத்தை அவர் எவ்வாறு வெட்டவெளிச்சமாக்குகிறார்?

19. கடவுள் யார் என்பதைப் பற்றிய விவாதம் எவ்வாறு முடிவு செய்யப்படுகிறது, யெகோவாவின் ஈடற்ற உன்னத அதிகாரம் எவ்வாறு நிரூபிக்கப்படுகிறது?

20. (அ) ஓரேபில் யெகோவா எலியாவுக்கு எவ்வாறு தோன்றுகிறார், என்ன கட்டளையையும் ஆறுதலையும் அவர் அளிக்கிறார்? (ஆ) ஆகாப் என்ன பாவத்தையும் குற்றத்தையும் செய்கிறான்?

21. (அ) ஆகாபின்மீதும் அவனுடைய குடும்பத்தின்மீதும், யேசபேலின்மீதும் என்ன தண்டனை தீர்ப்பை எலியா அறிவிக்கிறார்? (ஆ) ஆகாபின் மரணத்தின்போது என்ன தீர்க்கதரிசனம் நிறைவேறுகிறது?

22. யூதாவில் யோசபாத், இஸ்ரவேலில் அகசியா​—இவர்களுடைய ஆட்சியின் குறிப்பிடத்தக்கத் தன்மை என்ன?

23. ஜெபத்தைக் குறித்ததில் என்ன உறுதியையும் ஊக்கமூட்டுதலையும் ஒன்று இராஜாக்கள் அளிக்கிறது?

24. என்ன எச்சரிக்கையான உதாரணங்கள் ஒன்று இராஜாக்களில் கொடுக்கப்பட்டிருக்கின்றன, முக்கியமாக கண்காணிகள் ஏன் இவற்றிற்குக் கவனம் செலுத்த வேண்டும்?

25. ஒன்று இராஜாக்களின் என்ன தீர்க்கதரிசனங்கள் கவனிக்கத்தக்க விதமாக நிறைவேற்றம் அடைந்திருக்கின்றன, இவற்றை நினைவுபடுத்திக் கொள்வது இன்று நமக்கு எவ்வாறு உதவி செய்யலாம்?

26. யெகோவாவின் ஆலயத்தையும் ராஜ்யத்தையும் பற்றிய ஊக்கமூட்டும் என்ன முன்காட்சி, ஒன்று இராஜாக்களில் கொடுக்கப்பட்டுள்ளது?