Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் புத்தக எண் 14—2 நாளாகமம்

பைபிள் புத்தக எண் 14—2 நாளாகமம்

பைபிள் புத்தக எண் 14—2 நாளாகமம்

எழுத்தாளர்: எஸ்றா

எழுதப்பட்ட இடம்: எருசலேம் (?)

எழுதி முடிக்கப்பட்டது: ஏ. பொ.ச.மு. 460

காலப்பகுதி: பொ.ச.மு. 1037-537

ஒன்று, இரண்டு நாளாகம புத்தகங்கள் முதலில் ஒரே புத்தகமாக இருந்தன. ஆகவே பின்னணி, எழுத்தாளர், எழுதப்பட்ட காலம், அதிகாரப்பூர்வ பட்டியலின் பாகம், நம்பகத் தன்மை போன்றவற்றைப் பற்றி முந்தைய அதிகாரத்தில் அளிக்கப்பட்ட விவாதங்கள் இந்த இரண்டு புத்தகங்களுக்கும் பொருந்துகின்றன. அத்தாட்சியின்படி, எஸ்றா இரண்டு நாளாகமத்தை ஏறக்குறைய பொ.ச.மு. 460-ல் எழுதி முடித்தார். எழுதப்பட்ட இடம் பெரும்பாலும் எருசலேமாக இருக்கலாம். அழிந்துவிடும் ஆபத்தில் இருந்த சரித்திர விவரங்களை பாதுகாப்பதே எஸ்றாவின் நோக்கம். சரித்திர ஆசிரியராக தகவல்களை கண்டுபிடித்து நுட்ப விவரங்களை வகைப்படுத்தும் திறமை எஸ்றாவிடம் இருந்தது. இதோடு பரிசுத்த ஆவியின் உதவியும் அவருக்கு இருந்தது. இவை திருத்தமான, நிலையான ஒரு விவரப்பதிவை அளிக்க அவருக்கு உதவி செய்தன. தான் சரித்திரப்பூர்வ உண்மையாய் கருதியவற்றை எதிர்காலத்துக்காக எஸ்றா பாதுகாத்து வைத்தார். பல நூற்றாண்டுகளாக பதிவுசெய்யப்பட்டிருந்த பரிசுத்த எபிரெய புத்தகங்கள் முழுவதையும் ஒன்றாக தொகுப்பதும் அந்த சமயத்தில் தேவையாக இருந்தது. ஆகவே எஸ்றாவின் வேலை காலத்திற்கு ஏற்றதாக இருந்தது.

2தேவாவியால் ஏவப்பட்ட எஸ்றாவின் நாளாகமத்தால் அக்காலத்து யூதர்கள் அதிக பயனடைந்தனர். இது அவர்களுடைய போதனைக்காகவும் சகித்து நிலைத்திருக்க அவர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் எழுதப்பட்டது. வேதவசனங்களிலிருந்து வரும் ஆறுதலினால் அவர்கள் நம்பிக்கை அடைய முடியும். நாளாகம புத்தகத்தை பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலின் பாகமாக அவர்கள் ஏற்றுக்கொண்டனர். இது நம்பகமானது என்பதாகவும் அவர்கள் அறிந்திருந்தனர். ஏவப்பட்ட மற்ற புத்தகங்களையும், எஸ்றா குறிப்பிட்டிருக்கும் ஏராளமான உலக சரித்திரப் பதிவுகளையும் பயன்படுத்தி அவர்கள் இதை சரிபார்த்துக்கொள்ள முடியும். தேவாவியால் ஏவப்படாத உலக சரித்திர பதிவுகள் அழிந்துபோவதைக் குறித்து இவர்கள் கவலைப்படவில்லை; ஆனால் நாளாகமத்தையோ அவர்கள் கவனமாக பாதுகாத்தனர். செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பாளர்கள் நாளாகமத்தை எபிரெய பைபிளின் பாகமாக்கினர்.

3இயேசு கிறிஸ்துவும் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் எழுத்தாளர்களும் இதை நம்பகமானது, தேவாவியால் ஏவப்பட்டது என்பதாக ஏற்றுக்கொண்டனர். யெகோவாவின் தீர்க்கதரிசிகளையும் ஊழியர்களையும் எருசலேம் கொலை செய்ததாகவும் கல்லெறிந்ததாகவும் இயேசு வெளிப்படையாக கண்டனம் செய்தார். அச்சமயத்தில் 2 நாளாகமம் 24:​21-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள சம்பவங்களே அவருடைய மனதில் இருந்தது என்பதில் சந்தேகமேயில்லை. (மத். 23:35; 5:12; 2 நா. 36:16) ஆபிரகாமை “யெகோவாவின் சிநேகிதர்” என்பதாக யாக்கோபு குறிப்பிட்டார். 2 நாளாகமம் 20:​7-ல் உள்ள எஸ்றாவின் வார்த்தைகளை ஒருவேளை அவர் குறிப்பிட்டிருக்கலாம். (யாக். 2:​23, NW) தவறாமல் அப்படியே நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும் இந்த புத்தகத்தில் உள்ளன.​—2 நா. 20:​17, 24; 21:​14-19; 34:​23-28; 36:​17-20.

4தொல்பொருள் ஆராய்ச்சியுங்கூட இரண்டு நாளாகமத்தின் நம்பகத் தன்மைக்கு சான்றளிக்கிறது. பூர்வ பாபிலோன் இருந்த இடம் தோண்டப்பட்டபோது நேபுகாத்நேச்சாரின் ஆட்சி காலத்திற்குரிய களிமண் பலகைகள் கிடைத்தன. அவற்றில் ஒன்று, “யாக்கின், யாஹுத் தேசத்தின் அரசன்,” அதாவது, “யோயாக்கீன், யூதா தேசத்தின் அரசன்” என்பதாக வெளிப்படுத்துகிறது. a இது, நேபுகாத்நேச்சாருடைய ஆட்சியின் ஏழாவது ஆண்டில் யோயாக்கீன் பாபிலோனுக்கு சிறைபிடித்து செல்லப்பட்டதை பற்றிய பைபிள் விவரத்தோடு நன்றாக பொருந்துகிறது.

5இரண்டு நாளாகமத்தின் பதிவு, பொ.ச.மு. 1037-ல் சாலொமோனின் ஆட்சியில் தொடங்கி, எருசலேமில் யெகோவாவின் ஆலயத்தை கட்டுமாறு பொ.ச.மு. 537-ல் கோரேசு கட்டளை பிறப்பித்தது வரையாக யூதாவில் நடந்த சம்பவங்களை குறிப்பிடுகிறது. இந்த 500 ஆண்டுகால சரித்திரத்தில், பத்துக் கோத்திர ராஜ்யம், யூதாவின் விவகாரங்களில் தலையிடும்போது மாத்திரமே அதைப் பற்றிய விவரங்கள் குறிப்பிடப்படுகின்றன. பொ.ச.மு. 740-ல் அந்த வட ராஜ்யம் அழிக்கப்பட்டதையும் இப்புத்தகம் குறிப்பிடுவதில்லை. ஏன்? ஏனெனில் ஆசாரியனாகிய எஸ்றா, யெகோவாவின் வணக்கம் அதனுடைய சரியான இடத்தில், அதாவது எருசலேமிலுள்ள அவருடைய ஆலயத்தில் இருக்க வேண்டும் என்பதில் முக்கியமாய் ஆர்வம் காட்டினார். மேலும், யெகோவா உடன்படிக்கை செய்திருந்த தாவீதினுடைய வம்ச பரம்பரையின் மீதே முக்கிய கவனம் செலுத்தினார். ஏனென்றால் எஸ்றாவின் கவனம் உண்மை வணக்கத்தை ஆதரிப்பதிலும், தென் ராஜ்யமாகிய யூதாவிலிருந்து வரவிருக்கும் அந்த அதிபதியை எதிர்பார்ப்பதிலும்தான் ஒருமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.​—ஆதி. 49:10.

6எஸ்றா நம்பிக்கையூட்டும் நோக்குநிலையில் எடுத்துரைக்கிறார். இரண்டு நாளாகமத்தில் 36 அதிகாரங்கள் உள்ளன. இவற்றில் முதல் 9 சாலொமோனின் ஆட்சிக்கு ஒதுக்கப்படுகின்றன. இந்த 9 அதிகாரங்களில் 6 அதிகாரங்கள் யெகோவாவின் ஆலயத்திற்கான ஏற்பாடுகளுக்கும் பிரதிஷ்டைக்குமே முழுமையாக ஒதுக்கப்படுகின்றன. சாலொமோனுடைய தவறை இப்பதிவு குறிப்பிடவில்லை. மீந்துள்ள 27 அதிகாரங்களில் 14, யெகோவாவின் வணக்கத்துக்கு தனிப்பட்ட பக்தியை செலுத்திய தாவீதின் முன்மாதிரியை பின்பற்றின ஐந்து அரசர்களை குறிப்பிடுகிறது. ஆசா, யோசபாத், யோதாம், எசேக்கியா, யோசியா என்பவர்களே இந்த அரசர்கள். மற்ற 13 அதிகாரங்களிலுங்கூட, கெட்ட அரசர்களின் நல்ல குணங்களை எஸ்றா கவனமாக எடுத்துரைக்கிறார். உண்மையான வணக்கம் திரும்ப நிலைநாட்டப்படுவதோடும் பாதுகாக்கப்படுவதோடும் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை அவர் எல்லா சமயத்திலும் வலியுறுத்துகிறார். உற்சாகமளிக்கும் என்னே ஒரு புத்தகம்!

இரண்டு நாளாகமத்தின் பொருளடக்கம்

7சாலொமோனுடைய ஆட்சியின் மகிமை (1:​1–9:31). இரண்டு நாளாகமத்தின் ஆரம்பம், தாவீதின் குமாரனான சாலொமோன் அரசனாக அதிகமதிகமாய் அதிகாரம் பெறுவதை காட்டுகிறது. யெகோவா அவரோடிருந்து தொடர்ந்து ‘அவரை மிகவும் பெரியவராக்குகிறார்.’ கிபியோனில் யெகோவாவுக்கு பலிகளை சாலொமோன் செலுத்துகிறார். இரவில் யெகோவா சாலொமோனுக்கு தோன்றி, “நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள்” என்று சொல்லுகிறார். யெகோவாவின் ஜனத்தை சரியானபடி ஆளுவதற்கு தேவையான அறிவையும் ஞானத்தையும் கொடுக்கும்படி சாலொமோன் கேட்கிறார். இந்தத் தன்னலமற்ற வேண்டுகோளுக்காக, கடவுள் சாலொமோனுக்கு ஞானமும் அறிவும் மட்டுமல்லாமல், “உனக்கு முன் இருந்த ராஜாக்களுக்காகிலும் உனக்குப் பின் இருக்கும் ராஜாக்களுக்காகிலும் இல்லாத” ஐசுவரியத்தையும் செல்வங்களையும் கனத்தையுங்கூட வாரிவழங்குவதாக வாக்குறுதியளிக்கிறார். அந்த நகரத்துக்குள் செல்வம் மலைபோல குவிந்துகொண்டிருப்பதால் காலப்போக்கில் சாலொமோன் ‘வெள்ளியையும் பொன்னையும் எருசலேமில் கற்களை போல அதிகமாக்குகிறார்.’​—1:​1, 7, 12, 15.

8சாலொமோன் யெகோவாவின் ஆலயத்தைக் கட்டுவதற்காக வேலையாட்களை அமர்த்துகிறார். தீருவின் அரசன் ஈராம் மரங்களையும் கலைத்திறமையுள்ள வேலையாட்களையும் அனுப்பி வைத்து ஒத்துழைக்கிறான். ‘[சாலொமோனின்] அரசாட்சியின் நாலாம் வருஷத்தில்’ ஆலயத்தை கட்டும் பணி துவங்குகிறது. இந்த வேலை ஏழரை ஆண்டுகள் கழித்து பொ.ச.மு. 1027-ல் முடிக்கப்படுகிறது. (3:​2) ஆலயத்தின் முன்பாகத்தில் 120 முழ (53.4 மீ) உயரமுள்ள பெரிய புகுமுக மண்டபம் ஒன்று இருக்கிறது. இதில் இரண்டு மிகப் பெரிய தூண்கள் உள்ளன. ஒன்றின் பெயர் யாகீன், இதன் அர்த்தம் “[யெகோவா] உறுதியாய் ஸ்தாபிப்பாராக” என்பதாகும். மற்றொன்று போவாஸ் எனப் பெயரிடப்பட்டது. இதன் அர்த்தம் “பலத்தில்” என்பதாகும், இவை அந்த மண்டபத்துக்கு முன் நிற்கின்றன. (3:17) அந்த ஆலயம் சிறியதே. அது 60 முழ (26.7 மீ) நீளமும், 30 முழ (13.4 மீ) உயரமும், 20 முழ (8.9 மீ) அகலமுடையதாக இருக்கிறது. ஆனால் அதன் சுவர்களும் அறையின் உட்கூரையும் பொன்னால் மூடப்பட்டிருக்கின்றன. அதன் உட்புற அறையாகிய மகா பரிசுத்த ஸ்தலம் பொன்னால் மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த அறையின் ஒவ்வொரு புறத்திலும் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு பொன் கேருபீன்கள் இருக்கின்றன. இவற்றின் விரிந்த சிறகுகள் அறையின் மத்தியில் ஒன்றையொன்று தொடுகின்றன.

9உட்பிரகாரத்தில், 20 முழ (9 மீ) சதுரமும் 10 முழ (4.5 மீ) உயரமுமான மிகப் பெரிய வெண்கல பலிபீடம் ஒன்று உள்ளது. பிரகாரத்திலுள்ள கவனத்தை கவரும் மற்றொன்று கடல்தொட்டியாகும், மிகப் பெரிய இந்த வெண்கலத் தொட்டியை 12 வெண்கல காளைகள் சுமக்கின்றன. ஒவ்வொரு திசையையும் நோக்கிய வண்ணம் மும்மூன்று காளைகள் உள்ளன. இந்தக் கடலின் கொள்ளளவு “மூவாயிரங்குடம்” (66,000 லி) ஆகும். தங்களை கழுவிக்கொள்வதற்காக இதை ஆசாரியர்கள் பயன்படுத்துகின்றனர். (4:5) மேலும் அந்தப் பிரகாரத்தில் பத்து சிறிய வெண்கல கொப்பரைகளும் இருக்கின்றன. இவை அலங்கார வெண்கல வண்டிகளின்மீது வைக்கப்பட்டிருக்கின்றன. இதிலுள்ள தண்ணீரில் சர்வாங்க தகனபலிகளுக்கானவை அலசப்படுகின்றன. கடற்தொட்டியிலுள்ள தண்ணீரினால் இவை நிரப்பப்பட்டு தேவைப்படும் எல்லா இடங்களுக்கும் வண்டியில் தள்ளிக்கொண்டு செல்லப்படுகின்றன. இவற்றோடுகூட, பத்து பொன்விளக்குத் தண்டுகளும் பல்வேறு பாத்திரங்களும் இருக்கின்றன. ஆலயத்தில் வணக்கத்திற்காக பயன்படுத்தப்படும் இப்பாத்திரங்கள் சில பொன்னிலும் சில வெண்கலத்திலும் செய்யப்பட்டுள்ளன. b

10ஏழரை ஆண்டுகள் நீடித்த கட்டுமான பணிக்குப் பிறகு யெகோவாவின் ஆலயம் இறுதியில் கட்டி முடிக்கப்படுகிறது. (1 இரா. 6:​1, 38) ஆலயத்தின் பிரதிஷ்டை நாளில், யெகோவாவுடைய பிரசன்னத்தை குறிக்கும் அந்த அடையாளத்தை, மிகச் சிறப்பான இந்த கட்டிடத்தின் உட்புற அறைக்குள் கொண்டுவர வேண்டும். ஆசாரியர்கள் “யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டகத்தைக் கொண்டுவந்து ஆலயத்தின் மூலஸ்தானமாகிய மகா பரிசுத்த ஸ்தலத்திலே கேருபீன்களுடைய செட்டைகளின் கீழ் அதற்குரிய இடத்திலே” வைக்கிறார்கள். பிறகு என்ன நடக்கிறது? லேவிய பாடகர்களும் இசைக் கலைஞர்களும் ஒன்றுபட்ட பாட்டில் யெகோவாவைத் துதித்து அவருக்கு நன்றிசெலுத்துகின்றனர். அப்போது ஆலயம் மேகத்தால் நிரப்பப்படுகிறது, “யெகோவாவின் மகிமை” உண்மையான கடவுளின் ஆலயத்தை நிரப்புவதால் ஆசாரியர்களால் அங்கு ஊழியம் செய்ய முடியவில்லை. (2 நா. 5:​7, 13, 14, தி.மொ.) இவ்வாறு யெகோவா அந்த ஆலயத்திற்குத் தமது அங்கீகாரத்தையும் தம்முடைய பிரசன்னம் அங்கிருப்பதற்கான அடையாளத்தையும் காட்டுகிறார்.

11மூன்று முழ (1.3 மீ) உயரமுள்ள ஒரு வெண்கல மேடை இந்தச் சிறப்பு நிகழ்ச்சிக்காக கட்டப்பட்டிருக்கிறது. இது உட்பிரகாரத்தில் அந்தப் பெரிய வெண்கல பலிபீடத்துக்கு அருகில் வைக்கப்படுகிறது. உயரமான இந்த மேடையிலுள்ள சாலொமோனை, ஆலய பிரதிஷ்டைக்கு கூடிவந்துள்ள பெருந்திரளானவர்கள் காண முடிகிறது. மகிமையான அந்த மேகம் யெகோவாவின் பிரசன்னத்தை அர்த்தப்படுத்தியது. இந்த அற்புதமான வெளிக்காட்டுதலுக்கு பிறகு, சாலொமோன் கூட்டத்தினருக்கு முன்பாக முழங்காற்படியிட்டு இருதயத்தை கனிவிக்கும் விதத்தில் நன்றியோடு துதிசெலுத்தி ஜெபிக்கிறார். மன்னிப்புக்காகவும் ஆசீர்வாதத்துக்காகவும் மனத்தாழ்மையோடு விண்ணப்பங்களை ஏறெடுக்கிறார். முடிவில் அவர் பின்வருமாறு மன்றாடுகிறார்: “இப்போதும் என் தேவனே, இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் விண்ணப்பத்திற்கு உம்முடைய கண்கள் திறந்தவைகளும், உம்முடைய செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருப்பதாக. தேவனாகிய [“யெகோவாவே,” NW], நீர் அபிஷேகம்பண்ணினவனின் முகத்தைப் புறக்கணியாமல், உம்முடைய தாசனாகிய தாவீதுக்கு வாக்குத்தத்தம்பண்ணின கிருபைகளை நினைத்தருளும்.”​—6:​40, 42.

12சாலொமோனின் இந்த ஜெபத்துக்கு யெகோவா செவிசாய்க்கிறாரா? சாலொமோனுடைய ஜெபம் முடிந்த உடனடியாக வானங்களிலிருந்து அக்கினி கீழிறங்கிவந்து, தகனபலியையும் மற்ற பலிகளையும் பட்சித்துப்போடுகிறது. “யெகோவாவின் மகிமை” ஆலயத்தை நிரப்புகிறது. இதனால் ஜனங்களெல்லாரும் முகங்குப்புற விழுந்து பணிந்து “யெகோவா நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது” என்று அவருக்கு நன்றிசொல்கின்றனர். (7:​1, 3, தி.மொ.) பின்பு யெகோவாவுக்கு பெரும் பலி செலுத்தப்படுகிறது. பிரதிஷ்டை விருந்து ஒரு வாரம் நீடிக்கிறது. இதைத் தொடர்ந்து வந்த வாரம் முழுவதும் சேர்ப்புக்கால பண்டிகையும் வேலையிலிருந்து ஓய்ந்திருக்கும் ஓய்வுநாளும் கொண்டாடப்படுகின்றன. ஆவிக்குரிய வகையில் பலப்படுத்தும் இந்த மகிழ்ச்சியுள்ள 15 நாள் கொண்டாட்டத்துக்கு பின்பு, சாலொமோன் ஜனங்களை தங்கள் வீடுகளுக்கு சந்தோஷத்துடனும் நல்ல மனநிலையோடும் அனுப்புகிறார். (7:10) யெகோவாவுங்கூட மகிழ்ச்சியடைகிறார். சாலொமோனுடன் ராஜ்ய உடன்படிக்கையை அவர் திரும்பவும் உறுதிப்படுத்துகிறார், அதேசமயத்தில் கீழ்ப்படியாமையின் கொடிய விளைவுகளைப் பற்றியும் ராஜாவிடம் எச்சரிக்கிறார்.

13சாலொமோன் இப்பொழுது தனது நாடு முழுவதிலும் விரிவான கட்டுமான பணிகளை ஆரம்பிக்கிறார். தனக்காக ஒரு அரண்மனையையும், அரண்காப்புள்ள பட்டணங்களையும், சேமிப்பு பட்டணங்களையும், இரதங்களுக்கான பட்டணங்களையும், குதிரைவீரர்களுக்காக பட்டணங்களையும் கட்டுகிறார். தான் கட்ட விரும்புகிற எல்லாவற்றையும் அவர் கட்டுகிறார். யெகோவாவின் வணக்கத்தைப் பற்றி அரசரும் ஜனங்களும் கவனமுள்ளோராக இருப்பதால், இது மிகுந்த செழுமையும் சமாதானமும் மிக்க காலப்பகுதியாக உள்ளது. 1,900 கிலோமீட்டருக்கு அதிக தொலைதூரத்திலுள்ள சேபாவின் ராணியுங்கூட சாலொமோனின் செழுமையையும் ஞானத்தையும் பற்றி கேள்விப்படுகிறாள். தானே அவற்றை நேரில் பார்ப்பதற்காக நீண்ட, கடினமான பயணத்தை மேற்கொள்கிறாள். அவள் ஏமாற்றமடைகிறாளா? இல்லவே இல்லை. அவள் சொல்வதாவது: “நான் வந்து அதை என் கண்களால் காணுமட்டும் அவர்கள் வார்த்தைகளை நம்பவில்லை; உம்முடைய பெரிய ஞானத்தில் பாதியாகிலும் அவர்கள் எனக்கு அறிவிக்கவில்லை; நான் கேள்விப்பட்ட பிரஸ்தாபத்தைப் பார்க்கிலும் அதிகம் உண்டாயிருக்கிறது. உம்முடைய ஜனங்கள் பாக்கியவான்கள்; எப்போதும் உமக்கு முன்பாக நின்று, உம்முடைய ஞானத்தைக் கேட்கிற உம்முடைய ஊழியக்காரரும் பாக்கியவான்கள்.” (9:​6, 7) சாலொமோனைப் போல செல்வத்திலும் ஞானத்திலும் சிறந்து விளங்கிய அரசர் வேறு யாருமேயில்லை. அவர் எருசலேமில் 40 ஆண்டுகள் அரசாளுகிறார்.

14ரெகொபெயாம், அபியா என்போரின் ஆட்சி (10:​1–13:22). சாலொமோனின் குமாரன் ரெகொபெயாம் முரட்டுத்தனத்தோடு கொடுங்கோல் ஆட்சி செய்கிறான்; இதன் காரணமாக வடக்கிலிருக்கும் பத்துக் கோத்திரங்கள் பொ.ச.மு. 997-ல் யெரொபெயாமின் தலைமையில் கலகம் செய்கின்றன. எனினும், இந்த இரண்டு ராஜ்யங்களிலுள்ள ஆசாரியர்களும் லேவியர்களும், தேசப்பற்றுக்கு மேலாக ராஜ்ய உடன்படிக்கையிடம் தங்கள் பற்றுறுதியைக் காட்டுகின்றனர். ஆகவே அவர்கள் ரெகொபெயாமுடன் சேர்ந்து கொள்கின்றனர். ஆனால் விரைவிலேயே ரெகொபெயாம் யெகோவாவின் சட்டத்தை பின்பற்றுவதிலிருந்து பின்வாங்குகிறான். எகிப்தின் அரசனாகிய சீஷாக்கின் படைகள் எருசலேமுக்குள் நுழைகின்றன. யெகோவாவின் ஆலயத்திலுள்ள பொக்கிஷங்களையெல்லாம் அவன் வாரி எடுத்துக்கொண்டு செல்கிறான். மிகச் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட கட்டிடங்கள் 30 ஆண்டுகள் நிறைவடைவதற்குள் நாசமாக்கப்பட்டு மகிமையிழந்தது எவ்வளவு வருத்தகரமானது! காரணம்: அவர்கள் ‘யெகோவாவுக்கு விரோதமாக துரோகம் செய்தனர்.’ சரியான சமயத்தில் ரெகொபெயாம் தன்னை தாழ்த்துகிறான். ஆகவே யெகோவா அந்த ஜனத்தை முழுமையாக அழிக்கவில்லை.​—12:​2, தி.மொ.

15ரெகொபெயாமின் மரணத்தின்போது அவனுடைய 28 குமாரரில் ஒருவனான அபியா அரசனாக்கப்படுகிறான். அவனுடைய மூன்றாண்டு கால ஆட்சியின்போது வடக்கே இஸ்ரவேலோடு செய்த யுத்தத்தால் இரத்தம் பெருக்கெடுத்து ஓடுகிறது. யூதாவின் படையில் 4,00,000 வீரர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு எதிராக யெரொபெயாமின் தலைமையில் இரு மடங்கு, அதாவது 8,00,000 வீரர்களை கொண்ட படை நிற்கிறது. பின்தொடரும் பெரும் போர்களின்போது, இஸ்ரவேலரின் போர்வீரர்களின் எண்ணிக்கை பாதிக்கும் குறைவாக்கப்படுகிறது. மேலும் கன்றுக்குட்டி வணக்கத்தார் ஐந்து லட்சம் பேர் அழிக்கப்படுகின்றனர். யூதாவின் புத்திரர் “தங்கள் பிதாக்களின் கடவுளாகிய யெகோவாவின்மேல்” சார்ந்திருப்பதால் மேம்பட்டவர்களாய் வெற்றி சிறக்கின்றனர்.​—13:​18, தி.மொ.

16கடவுள் பயமுள்ள அரசன் ஆசா (14:​1–16:14). அபியாவுக்குப் பின் அவனுடைய குமாரன் ஆசா அரசராகிறார். உண்மையான வணக்கத்தை முன்னின்று நடத்துவதில் தலைசிறந்தவர் ஆசா. தேசத்திலிருந்து விக்கிரக வணக்கத்தை நீக்குவதற்கு தீவிர நடவடிக்கைகளை எடுக்கிறார். ஆனால், இதோ! பத்து லட்சம் வீரர்கள் அடங்கிய எத்தியோப்பியரின் மாபெரும் இராணுவப் படை யூதாவை அச்சுறுத்துகிறது. ஆசா பின்வருமாறு ஜெபிக்கிறார்: “எங்கள் தேவனாகிய [“யெகோவாவே,” NW] எங்களுக்குத் துணைநில்லும்; உம்மைச் சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்.” இந்த வேண்டுகோளுக்கு யெகோவா பதிலளிக்கிறாரா? ஆம், ஆசாவுக்கு மாபெரும் வெற்றியை கொடுப்பதன்மூலம் யெகோவா பதிலளிக்கிறார்.​—14:11.

17ஆசாவிடம் பின்வருமாறு சொல்லும்படி கடவுளின் ஆவி அசரியாவின்மீது வருகிறது: “நீங்கள் யெகோவாவோடிருப்பீர்களானால் அவர் உங்களோடிருப்பார்; நீங்கள் அவரைத் தேடுவீர்களானால் அவர் உங்களுக்கு வெளிப்படுவார்.” (15:​2, தி.மொ.) இந்த வார்த்தைகளினால் ஆசா அதிகமாக உற்சாகப்படுத்தப்படுகிறார். இதன் விளைவாக அவர் யூதாவில் வணக்கத்தை சீர்திருத்துகிறார். யெகோவாவைத் தேடாத எவனும் கொல்லப்படுவான் என்பதாக ஜனங்கள் உடன்படிக்கை செய்கின்றனர். காலப்போக்கில், இஸ்ரவேலின் அரசன் பாஷா, இஸ்ரவேலர் யூதாவுக்குள் செல்வதை தடுப்பதற்காக தடைகளை ஏற்படுத்துகிறான். இந்த சந்தர்ப்பத்தில் ஆசா, யெகோவாவிடம் உதவியை நாடவில்லை. மாறாக, சீரியாவின் அரசனான பென்னாதாத்துக்கு பொக்கிஷங்களை கொடுத்து, இஸ்ரவேலுக்கு எதிராக போர்செய்ய வரும்படி அழைப்புவிடுப்பதன் மூலம் பெரும் தவறு செய்கிறார். இதற்காக யெகோவா அவரைக் கண்டிக்கிறார். இருந்தபோதிலும் ஆசாவின் இருதயம் ‘அவருடைய நாட்களிலெல்லாம் உத்தமமாயிருக்கிறது.’ (15:17) தனது ஆட்சியின் 41-வது ஆண்டில் அவர் மரிக்கிறார்.

18யோசபாத்தின் நல்ல ஆட்சி (17:​1–20:37). ஆசாவின் குமாரன் யோசபாத் விக்கிரக வணக்கத்துக்கு எதிராக தொடர்ந்து போராடுகிறார். மேலும் யெகோவாவின் நியாயப்பிரமாண புத்தகத்திலிருந்து ஜனங்களுக்குக் கற்பிக்கும்படி போதகர்களை நியமித்து யூதாவின் பட்டணங்கள் முழுவதற்கும் அவர்களை அனுப்பி வைக்கிறார். இவ்வாறு விசேஷமான கல்விபுகட்டும் நடவடிக்கையை துவக்கி வைக்கிறார். மிகுந்த செழுமையும், சமாதானமும் பொங்கிவழியும் காலம் பின்தொடருகிறது. யோசபாத் தொடர்ந்து ‘முன்னேறிக்கொண்டும் மிக உயர்ந்த அளவுக்குப் பெரியவராகிக்கொண்டும் இருக்கிறார்.’ (17:​12, NW) ஆனால் பின்பு அவர் இஸ்ரவேலின் பொல்லாத அரசனாகிய ஆகாபுடன் சம்பந்தம் வைத்துக்கொள்கிறார். யெகோவாவின் தீர்க்கதரிசியாகிய மிகாயாவின் வார்த்தைக்கு செவிகொடுக்காமல், நாளுக்கு நாள் பலப்பட்டு வரும் சீரிய அதிகாரத்துக்கு எதிராக போர் செய்வதற்கு ஆகாபுக்கு உதவும்படி செல்கிறார். கீலேயாத்திலுள்ள ராமோத்தில் நடந்த யுத்தத்தின் விளைவு? அந்தப் போரில் இஸ்ரவேலின் அரசனாகிய ஆகாப் கொல்லப்படுகிறான். ஆனால் யோசபாத்தோ மயிரிழையில் உயிர்தப்புகிறார். பொல்லாத ஆகாபுடன் சென்றதற்காக யெகோவாவின் தீர்க்கதரிசியாகிய யெகூ யோசபாத்தை கடிந்துகொள்கிறார். அதன் பின்பு யோசபாத் தேசம் முழுவதிலும் நியாயாதிபதிகளை நியமிக்கிறார். கடவுளுக்கு பயந்து தங்களுடைய கடமைகளை நிறைவேற்றுமாறு அவர்களுக்கு கட்டளையிடுகிறார்.

19இப்பொழுது யோசபாத்தினுடைய ஆட்சியின் உச்சக்கட்டம் வருகிறது. மோவாப், அம்மோன், சேயீர் மலைத்தேசத்தார் ஆகியோரின் ஒன்றிணைந்த படைகள் பெரும் பலத்துடன் யூதாவுக்கு விரோதமாக வருகின்றன. எங்கேதி வனாந்தரத்தில் அவர்கள் பெருந்திரளாக கூடிவருகின்றனர். தேசம் பயத்தால் நடுங்குகிறது. யோசபாத்தும் யூதாவிலுள்ள அனைவரும், “அவர்கள் குழந்தைகளும் அவர்கள் மனைவிகளும் அவர்கள் குமாரருங்கூட” யெகோவாவுக்கு முன்பாக நின்று ஜெபத்தில் அவரைத் தேடுகின்றனர். யெகோவாவின் ஆவி லேவியனாகிய யகாசியேலின்மீது வருகிறது. கூடிவந்துள்ள அந்தத் திரள் கூட்டத்தை நோக்கி அவன் பின்வருமாறு சொல்லுகிறான்: “சகல யூதா கோத்திரத்தாரே, எருசலேமின் குடிகளே, யோசபாத் ராஜாவே, எல்லாரும் கவனியுங்கள்; யெகோவா சொல்வதைக் கேளுங்கள், நீங்கள் அந்த ஏராளமான கூட்டத்திற்குப் பயப்படவேண்டாம், கலங்கவேண்டாம்; இந்த யுத்தம் உங்களுடையதல்ல, கடவுளினுடையது. நாளைக்கு நீங்கள் அவர்களுக்கு விரோதமாய்ப் போங்கள்; . . . யெகோவா உங்களோடிருக்கிறார்.” மக்கள் அதிகாலையிலேயே எழுந்து விடுகின்றனர். லேவிய பாடகர்கள் முன்செல்ல, யூதா கோத்திரத்தார் அணிவகுத்து செல்கின்றனர். யோசபாத் அவர்களை பின்வருமாறு உற்சாகப்படுத்துகிறார்: “யெகோவாவில் நம்பிக்கையாயிருங்கள்; . . . அவருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள்; அப்பொழுது சித்திபெறுவீர்கள்.” பாடகர்கள் மகிழ்ச்சியுடன், “அவர் கிருபை என்றுமுள்ளது” என்று பாடி யெகோவாவை மிக உயர்வாய் துதிக்கின்றனர். (20:​13, 15-17, 20, 21, தி.மொ.) யெகோவா தம்முடைய பற்றுமாறா அன்பை அதிசயமான முறையில் வெளிப்படுத்துகிறார். படையெடுத்துவரும் எதிரிகள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டு அழிந்து போகும்படி யெகோவா செய்கிறார். பெரும் மகிழ்ச்சியுடன் வனாந்தரத்திலுள்ள காவற்கோபுரத்துக்கு வரும் யூதேயர் செத்தப் பிணங்களை மட்டுமே காண்கின்றனர். மெய்யாகவே, இந்த யுத்தம் கடவுளுடையது! தன்னுடைய 25 ஆண்டு ஆட்சியின் முடிவு வரையாக, யோசபாத் யெகோவாவுக்கு முன்பாக உண்மையுள்ளவராக தொடர்ந்து நடக்கிறார்.

20யோராம், அகசியா, அத்தாலியாள் போன்றவர்களின் கொடுங்கோல் ஆட்சி (21:​1–23:21). யோசபாத்தின் குமாரன் யோராம் தன் எல்லா சகோதரர்களையும் கொன்றுவிடுகிறான். ஆகவே இவனுடைய ஆரம்பமே தீமையாகத்தான் இருக்கிறது. எனினும், தாவீதுடன் செய்த உடன்படிக்கையின் காரணமாக யெகோவா அவனை விட்டுவைக்கிறார். ஏதோம் கலகம் செய்ய தொடங்குகிறது. எங்கிருந்தோ எலியா ஒரு கடிதத்தை அனுப்புகிறார். அதில், யோராமுடைய குடும்பத்தை யெகோவா பெரிய வாதையால் வாதிப்பார் என்பதாகவும் இதன் விளைவாக அவன் படுமோசமான மரணத்தை எதிர்ப்படுவான் என்பதாகவும் எச்சரிக்கிறார். (21:​12-15) இந்தத் தீர்க்கதரிசனத்திற்கு இசைவாக பெலிஸ்தரும் அரபியர்களும் எருசலேமின்மீது படையெடுத்து அதைக் கொள்ளையடிக்கின்றனர். எட்டு ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகு, அருவருப்பூட்டும் குடல் நோயிற்கு அரசன் பலியாகிறான்.

21யோராமுக்கு பிறகு அகசியா (யோவாகாஸ்) அரசனாகிறான். இவன் தப்பிப்பிழைத்திருக்கும் யோராமின் ஒரே குமாரன். ஆனால் தன் தாயாகிய அத்தாலியாளின் கெட்ட செல்வாக்கிற்கு ஆளாகிறான். இவள் ஆகாபுக்கும் யேசபேலுக்கும் பிறந்தவள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு ஆண்டிற்கு பிறகு, ஆகாபின் குடும்பத்தை அடியோடு அழித்த யெகூவின் நடவடிக்கையால் இவனுடைய ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. அப்போது, அத்தாலியாள் தன் பேரப்பிள்ளைகளை கொலைசெய்து சிங்காசனத்தை அபகரித்துக்கொள்கிறாள். இருந்தபோதிலும் அகசியாவின் குமாரரில் ஒருவன் தப்பிப்பிழைக்கிறான். அவன்தான் ஒரு வயது நிரம்பிய யோவாஸ். இவனுடைய அத்தையாகிய யோசேபியாத் யெகோவாவின் ஆலயத்தில் அவனை ஒளித்து வைக்கிறாள். அத்தாலியாள் ஆறு ஆண்டுகள் ஆட்சிசெய்கிறாள். யோசேபியாத்தின் கணவருடைய பெயர் யோய்தா. பிரதான ஆசாரியரான இவர் தைரியமாக, இளைஞனாகிய யோவாஸை ‘தாவீதின் குமாரரில்’ ஒருவனாகவும் அரசனாகவும் வெளிப்படையாக அறிவிக்கிறார். அத்தாலியாள் யெகோவாவின் ஆலயத்துக்கு வந்து தன் உடையை இரண்டாக கிழித்துக்கொண்டு “துரோகம் துரோகம்” என்று கத்துகிறாள். ஆனால் பயனில்லை. அவளை ஆலயத்துக்கு வெளியே தள்ளி கொல்லுமாறு யோய்தா கட்டளையிடுகிறார்.​—23:​3, 13-15.

22நல்ல ஆரம்பம்; ஆனால் தீய முடிவு​—யோவாஸ், அமத்சியா, உசியா என்போரின் ஆட்சி (24:​1–26:23). யோவாஸ் 40 ஆண்டுகள் ஆட்சி செய்கிறான். யோய்தா உயிரோடிருக்கும் வரையில் அவருடைய ஆலோசனையை கேட்டு நல்லவிதமாக நடந்துகொள்கிறான். அவன் சரியானதை செய்கிறான். யெகோவாவின் ஆலயத்தில் அக்கறையெடுத்து அதை பழுதும் பார்க்கிறான். எனினும், யோய்தா மரித்த பின்போ, நிலைமை தலைகீழாக மாறுகிறது. யெகோவாவின் வணக்கத்தை துறந்துவிட்டு, புனித கம்பங்களையும் விக்கிரகங்களையும் சேவிக்க ஆரம்பித்து விடுகிறான்; இதற்கு காரணம் யூதாவின் பிரபுக்களே. அரசனைக் கண்டிக்கும்படி யோய்தாவின் குமாரன் சகரியாவை கடவுளுடைய ஆவி ஏவுகிறது. ஆனால் யோவாஸ் அந்த தீர்க்கதரிசியை கல்லெறிந்து கொல்லுவதற்கு ஆட்களுக்குக் கட்டளையிடுகிறான். அதன்பின் சீக்கிரத்திலேயே சீரியரின் சிறிய இராணுவப் படை தாக்குகிறது. அதோடு ஒப்பிட யூதேயரின் படை மிகப் பெரிய படையே. இருந்தபோதிலும் எதிரியை யூதேயர்களால் தோற்கடிக்க முடியவில்லை. ஏனென்றால் அவர்கள் ‘தங்கள் பிதாக்களின் கடவுளாகிய யெகோவாவை விட்டுவிட்டனர்.’ (24:​24, தி.மொ.) இப்பொழுது யோவாஸின் ஊழியர்களே அவனுக்கு விரோதிகளாகி, அவனை தீர்த்துக்கட்டுகின்றனர்.

23அமத்சியா, தன் தகப்பனாகிய யோவாசுக்கு பிறகு அரசனாகிறான். இவனது 29 ஆண்டு கால ஆட்சியும் நன்றாகவே தொடங்குகிறது. எனினும் பின்னால், ஏதோமியரின் விக்கிரகங்களை எடுத்து வந்து அவற்றை வணங்குகிறான். இதன்மூலம் யெகோவாவின் தயவை இழந்துபோகிறான். “கடவுள் உம்மை அழிக்கத் தீர்மானித்திருக்கிறார்” என்று யெகோவாவின் தீர்க்கதரிசி அவனை எச்சரிக்கிறார். (25:​16, தி.மொ.) எனினும், அமத்சியா அகந்தையோடு வடக்கே இஸ்ரவேலுக்கு சவால் விடுகிறான். கடவுளுடைய வார்த்தை சொன்னபடியே, அவன் இஸ்ரவேலரிடம் படுதோல்வி அடைகிறான். இந்த தோல்விக்கு பிறகு, சதிகாரர்களால் அவன் கொல்லப்படுகிறான்.

24அமத்சியாவின் குமாரன் உசியா, தன் தகப்பனின் அடிச்சுவடுகளை அப்படியே பின்பற்றுகிறான். அவன் 52 ஆண்டுகள் ஆட்சி செலுத்துகிறான். இதில் பெரும்பான்மையான ஆண்டுகள் அவன் செம்மையாக ஆட்சி நடத்துகிறான், இராணுவத்தில் தனித்திறமை வாய்ந்தவனாகவும், கோபுரங்களைக் கட்டுபவனாகவும், ‘வேளாண்மைப் பிரியன்’ எனவும் புகழ்பெற்று விளங்குகிறான். (26:10) படைக்குப் போர் இயந்திரங்களை அளித்துப் பலப்படுத்துகிறான். எனினும், அவனுடைய பலமே அவனுக்கு பலவீனமாகிறது. அவன் கர்வமிக்கவனாக மாறுகிறான். யெகோவாவின் ஆலயத்தில் தூபங்காட்டும் ஆசாரியரின் வேலையை தானே செய்வதற்கு துணிகிறான். இதற்காக, யெகோவா அவனை குஷ்டரோகத்தால் தண்டிக்கிறார். இதன் விளைவாக, அவன், யெகோவாவின் ஆலயத்திலிருந்தும் அரண்மனையிலிருந்தும் தூர விலகி வாழ்கிறான். உசியாவின் குமாரனாகிய யோதாம், தனது தகப்பனின் ஸ்தானத்திலிருந்து ஜனங்களை நியாயம் விசாரிக்கிறார்.

25யெகோவாவை சேவிக்கும் யோதாம் (27:​1-9). யோதாம் தனது தகப்பனைப்போல் இல்லை. ஏனென்றால் இவர் ‘யெகோவாவின் ஆலயத்தில் துணிகரமாக நுழையவில்லை.’ அதற்கு மாறாக ‘யெகோவாவின் பார்வையில் சரியானதைத் தொடர்ந்து செய்கிறார்.’ (27:​2, NW) இவருடைய 16 ஆண்டு கால ஆட்சியில், மிகுதியான கட்டுமான பணிகளை மேற்கொள்கிறார். தனக்கு எதிராக அம்மோனியர் செய்த கலகத்தை வெற்றிகரமாக அடக்குகிறார்.

26பொல்லாத அரசன் ஆகாஸ் (28:​1-27). யூதேயாவை அரசாண்ட 21 அரசர்களில் பெரும் பொல்லாத அரசர்களும் இருந்தனர்; அவர்களில் யோதாமின் குமாரன் ஆகாஸும் ஒருவன். தன் சொந்த குமாரர்களையே புறமத தெய்வங்களுக்குத் தகன பலிகளாக செலுத்தும் அளவுக்குச் சென்றான்! இதன் விளைவாக யெகோவா அவனை கைவிடுகிறார். சீரியா, இஸ்ரவேல், ஏதோம், பெலிஸ்தா ஆகியவற்றின் படைகள் ஒன்றன்பின் ஒன்றாக யூதாவை கைப்பற்றுவதற்கு அனுமதிக்கிறார். ஆகாஸ் ‘யூதாவைச் சுயேச்சையாய்த் திரியவிட்டு யெகோவாவுக்கு விரோதமாக பச்சைத் துரோகியாகிறான்.’ ஆகவே யெகோவா யூதாவை தாழ்த்துகிறார். (28:​19, தி.மொ.) கேட்டிலிருந்து படுமோசமான கேட்டில் வீழ்ச்சியடைகிறான் ஆகாஸ். போரில் சீரியர் தன்னைவிட மேம்பட்டோராக நிரூபித்ததால் சீரியாவின் தெய்வங்களுக்கு ஆகாஸ் பலிசெலுத்துகிறான். யெகோவாவின் ஆலயத்தின் கதவுகளை அவன் மூடிவிடுகிறான். யெகோவாவின் வணக்கத்துக்கு பதிலாக புறமத தெய்வங்களின் வணக்கத்தை நிறுவுகிறான். சீக்கிரத்திலேயே 16 ஆண்டுகளுக்கு பின்பு ஆகாஸின் ஆட்சி முடிவடைகிறது.

27உண்மையுள்ள அரசன் எசேக்கியா (29:​1-32:33). ஆகாசின் குமாரனான எசேக்கியா எருசலேமில் 29 ஆண்டுகள் ஆட்சி செய்கிறார். யெகோவாவின் ஆலயத்தின் கதவுகளை மறுபடியும் திறந்து பழுதுபார்த்ததே இவர் மேற்கொண்ட முதல் நடவடிக்கை. பின்பு இவர், ஆசாரியர்களையும் லேவியர்களையும் கூடிவரும்படி செய்கிறார். யெகோவாவின் சேவைக்காக ஆலயத்தை சுத்தப்படுத்தவும் அதை பரிசுத்தப்படுத்தவும் கட்டளைகளை அவர்களுக்கு கொடுக்கிறார். யெகோவாவின் உக்கிர கோபத்தை தணிப்பதற்கு அவருடன் ஓர் உடன்படிக்கை செய்ய விரும்புவதாக அறிவிக்கிறார். யெகோவாவின் வணக்கம் மகத்தான முறையில் திரும்ப தொடங்கப்படுகிறது.

28மிகப் பெரிய பஸ்கா ஒன்று திட்டமிடப்படுகிறது. முதலாம் மாதத்தில் அதற்காக ஏற்பாடு செய்வதற்கு நேரமில்லை. ஆகவே நியாயப்பிரமாணத்தின் ஒரு ஏற்பாட்டை பயன்படுத்திக்கொண்டு, பஸ்காவை எசேக்கியாவினுடைய ஆட்சியின் முதலாம் ஆண்டின் இரண்டாவது மாதத்தில் ஆசரிக்கின்றனர். (2 நா. 30:​2, 3; எண். 9:​10, 11) யூதாவிலுள்ள அனைவரையும் விழாவில் கலந்துகொள்ளுமாறு அரசர் அழைப்புவிடுகிறார். இஸ்ரவேலர்களும் அழைக்கப்படுகின்றனர். எப்பிராயீம், மனாசே, செபுலோன் ஆகிய தேசத்தாரில் சிலர் அந்த அழைப்பை ஏளனம் செய்கின்றனர். இருந்தபோதிலும், மற்றவர்கள் தாழ்மையுடன் யூதாவிலுள்ள எல்லாரோடும் சேர்ந்து எருசலேமுக்கு வருகின்றனர். இந்த பஸ்காவிற்குப் பின், புளிப்பில்லா அப்பப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஏழு நாட்கள் நீடிக்கும் இந்த விழா கொண்டாட்டங்களில் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டோடுகிறது! நிச்சயமாகவே, சந்தோஷம் பொங்கும் விழாவாக இது இருக்கிறது. சபையார் அனைவரும் இந்தப் பண்டிகையை இன்னும் ஏழு நாட்களுக்கு கொண்டாடுகின்றனர். ‘எருசலேமில் மகா சந்தோஷம் உண்டாயிருக்கிறது; தாவீதின் குமாரனாகிய சாலொமோன் என்னும் இஸ்ரவேலுடைய ராஜாவின் நாட்கள் முதற்கொண்டு இப்படி எருசலேமில் நடந்ததில்லை.’ (2 நா. 30:26) ஆவிக்குரிய விதத்தில் திரும்பவும் நிலைநாட்டப்பட்டவர்களாக இந்த ஜனங்கள், யூதாவிலும் எருசலேமிலுள்ள விக்கிரகங்களை சுக்குநூறாக உடைத்து நொறுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். எசேக்கியா தனது பங்கில், லேவியர்களுக்காகவும் ஆலய சேவைகளுக்காகவும் பொருள்சம்பந்தமான நன்கொடைகளை கொடுக்கும்படி திரும்பவும் ஏற்பாடு செய்கிறார்.

29பின்பு அசீரியாவின் அரசனாகிய சனகெரிப் யூதாவுக்கு எதிராக படையெடுத்துவந்து எருசலேமை பயமுறுத்துகிறான். எசேக்கியா தைரியமாக அந்த நகரத்தின் பாதுகாப்பு கோட்டைகளை பழுதுபார்க்கிறார். பழிதூற்றும் எதிரிகளின் நிந்தனையான வார்த்தைகளை இவர் கண்டுகொள்ளவே இல்லை. யெகோவாவில் முழு நம்பிக்கையும் வைத்து, உதவிக்காக தொடர்ந்து ஜெபிக்கிறார். விசுவாசமுள்ள இந்த ஜெபத்திற்கு யெகோவா வியப்புண்டாக்கும் முறையில் பதிலளிக்கிறார். அவர் ‘ஒரு தூதனை அனுப்புகிறார்; அவன் அசீரிய ராஜாவின் பாளையத்திலுள்ள சகல பராக்கிரமசாலிகளையும் தலைவரையும் சேனாபதிகளையும் கொலைசெய்கிறான்.’ (32:​21) சனகெரிப் அவமானமடைந்தவனாய் வீட்டுக்கு திரும்புகிறான். அவனுக்கு உதவ அவனுடைய தெய்வங்களாலும் முடியவில்லை. ஏன் அப்படி சொல்கிறோம்? ஏனெனில், பின்னால் அத்தெய்வங்களின் பலிபீடத்திலேயே அவனுடைய குமாரர்களால் அவன் படுகொலை செய்யப்படுகிறான். (2 இரா. 19:7) யெகோவா அற்புதமாக எசேக்கியாவின் வாழ்க்கையை நீடிக்க செய்கிறார். அவருக்கு செல்வங்களும் மகிமையும் குவிகின்றன. அவருடைய மரணத்தின்போது யூதாவை சேர்ந்த அனைவரும் அவரை போற்றிப் புகழுகிறார்கள்.

30மனாசேயும் ஆமோனும் பொல்லாத ஆட்சியாளர்கள் (33:​1-25). எசேக்கியாவின் குமாரன் மனாசே தனது தாத்தாவாகிய ஆகாஸின் பொல்லாத வழிக்கு திரும்புகிறான். எசேக்கியாவின் ஆட்சியின்போது நிறைவேற்றப்பட்ட நல்ல காரியங்கள் எல்லாவற்றையும் அவன் ஒன்றுமில்லாமல் செய்கிறான். மேடைகளை கட்டி, புனித கம்பங்களை நாட்டுகிறான். தன் சொந்த குமாரர்களையுங்கூட பொய்த் தெய்வங்களுக்கு பலிசெலுத்துகிறான். முடிவில், அசீரியாவின் அரசனை யூதாவுக்கு எதிராக யெகோவா வரவழைக்கிறார். மனாசே சிறைக்கைதியாக பாபிலோனுக்கு கொண்டு செல்லப்படுகிறான். அங்கே தனது தவறுக்காக மனாசே மனஸ்தாபப்பட்டு மனந்திரும்புகிறான். அவனை மீண்டுமாக அரசனாக ஏற்படுத்துவதன்மூலம் யெகோவா தம் இரக்கம் வெளிக்காட்டுகிறார். மனாசே இச்சமயத்தில் பேய் வணக்கத்தை வேரோடு அழித்து, உண்மை வணக்கத்தை திரும்ப நிலைநாட்டுவதற்கு முயற்சி செய்கிறான். எனினும் மனோசேயின் 55 வருட நீண்ட கால ஆட்சி முடிவுக்கு வருகிறது. மனாசே இறந்த பிறகு அவனுடைய குமாரன் ஆமோன் அரியணையில் ஏறுகிறான். மறுபடியுமாக பொய் வணக்கத்திற்கு பொல்லாத வழியில் ஆமோன் ஆதரவளிக்கிறான். இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு, அவனுடைய ஊழியக்காரர்களே அவனை கொன்றுவிடுகின்றனர்.

31யோசியா, தைரியமிக்க அரசன் (34:​1–35:27). இளைஞனாகிய யோசியா ஆமோனின் குமாரனாவார். உண்மை வணக்கத்தைத் திரும்ப நிலைநாட்டுவதற்கு இவர் தைரியமாக முயற்சிக்கிறார். இவர் பாகால்களின் பலிபீடங்களையும் வார்ப்பு விக்கிரகங்களையும் உடைத்து நொறுக்குகிறார். யெகோவாவின் ஆலயத்தை பழுதுபார்க்கிறார். அங்கே ‘மோசே எழுதிய யெகோவாவின் நியாயப்பிரமாண புஸ்தகம்’ கண்டுபிடிக்கப்படுகிறது. சந்தேகமில்லாமல் அது மூலப் பிரதியாக இருக்கிறது. (34:​14, தி.மொ.) எனினும், ஏற்கெனவே நிகழ்ந்திருந்த உண்மையற்ற நடத்தையின் விளைவாக பேரழிவு அந்தத் தேசத்தின்மீது வரும் என்றும் ஆனால் அந்த அழிவு அவருடைய நாளில் வராது என்றும் நீதியில் பிரியமுள்ள யோசியாவிடம் சொல்லப்படுகிறது. தன்னுடைய ஆட்சியின் 18-வது ஆண்டில், தனிச்சிறப்புமிக்க பஸ்கா ஆசரிப்பை இவர் ஏற்பாடு செய்கிறார். ஆனால், 31 ஆண்டு கால ஆட்சிக்குப் பிறகு, ஐப்பிராத்துக்கு செல்லும் எகிப்திய படைகள் தனது தேசத்தின் வழியே கடந்து செல்வதை தடுக்க முயற்சிக்கிறார். இந்த வீணான முயற்சியில் யோசியா மரணமடைகிறார்.

32யோவாகாஸ், யோயாக்கீம், யோயாக்கீன், சிதேக்கியா ஆகியோரும் எருசலேமின் பாழ்க்கடிப்பும் (36:​1-23). கடைசி நான்கு யூதேய அரசர்களின் கொடுங்கோலான போக்கு இறுதியில் அந்த ஜனத்தை பேரழிவுக்கு விரைவில் வழிநடத்துகிறது. யோசியாவின் குமாரனான யோவாகாஸ் மூன்று மாதங்கள் மாத்திரமே ஆளுகை செய்கிறான். எகிப்தின் பார்வோன் நேகோ அவனை பதவியிலிருந்து நீக்குகிறான். அவன் ஸ்தானத்தில் அவனுடைய சகோதரன் எலியாக்கீம் நியமிக்கப்படுகிறான். இவனுடைய பெயர் யோயாக்கீம் என்பதாக மாற்றப்படுகிறது. இவனுடைய ஆட்சியின்போது புதிய உலக வல்லரசாகிய பாபிலோன் யூதாவை கீழ்ப்படுத்துகிறது. (2 இரா. 24:1) யோயாக்கீம் கலகம் செய்கையில், நேபுகாத்நேச்சார் இவனை தண்டிப்பதற்கு பொ.ச.மு. 618-ல் எருசலேமுக்கு வருகிறான். ஆனால் யோயாக்கீம், 11 ஆண்டுகள் ஆட்சிசெய்த பின்பு, அதே ஆண்டில் மரிக்கிறான். இவனுக்கு பதிலாக இவனுடைய 18 வயது குமாரன் யோயாக்கீன் அரசனாக நியமிக்கப்படுகிறான். இவனுடைய ஆட்சி மூன்று மாதங்களே நீடிக்கிறது. பின்பு, யோயாக்கீன் நேபுகாத்நேச்சாரிடம் சரணடைவதால் பாபிலோனுக்கு சிறைக்கைதியாக கொண்டு செல்லப்படுகிறான். யோயாக்கீனுடைய சிறிய தகப்பனாகிய சிதேக்கியா, யோசியாவின் மூன்றாவது குமாரனாவான். இப்போது சிதேக்கியாவை நேபுகாத்நேச்சார் சிங்காசனத்தில் ஏற்றுகிறான். 11 ஆண்டுகள் நீடித்த இவனுடைய ஆட்சியும் படுமோசமானதுதான். “யெகோவாவின் வார்த்தையைச் சொன்ன எரேமியா தீர்க்கதரிசிக்கு முன்பாகத் தன்னை தாழ்த்த” சிதேக்கியா மறுத்துவிடுகிறான். (2 நா. 36:​12, தி.மொ.) ஆசாரியர்களும் ஜனங்களும் கொஞ்சம்கூட உண்மைத்தன்மையை காட்டாமல் யெகோவாவினுடைய ஆலயத்தின் தூய்மையை கெடுக்கிறார்கள்.

33முடிவாக, பாபிலோனின் ஆதிக்கத்தின் கீழிருந்த சிதேக்கியா கலகம் செய்கிறான், இந்தச் சமயம் நேபுகாத்நேச்சார் துளியும் இரக்கம் காட்டவில்லை. யெகோவாவின் கோபம் பற்றியெரிவதால் உதவி கிடைக்கவில்லை. எருசலேம் கைப்பற்றப்படுகிறது; அதன் ஆலயம் கொள்ளையிடப்பட்டு எரிக்கப்படுகிறது; 18 மாத முற்றுகையில் தப்பிப்பிழைத்தவர்கள் பாபிலோனுக்கு சிறைக்கைதிகளாக கொண்டு செல்லப்படுகின்றனர். யூதா பாழாய் கிடக்கிறது. இவ்வாறு, “எரேமியாவின் வாயின்மூலம் சொன்ன யெகோவாவின் வார்த்தையை நிறைவேற்றுவதற்கு . . . எழுபது ஆண்டுகளை நிறைவேற்றுவதற்கு” பொ.ச.மு. 607-ல், இந்த அழிவு தொடங்குகிறது. (36:​21, தி.மொ.) பின்பு நாளாகமத்தின் எழுத்தாளர் சுமார் 70 ஆண்டுகால இடைவெளியைத் தாண்டி, பொ.ச.மு. 537-ல் கோரேசு விடுத்த சரித்திரப் பூர்வ கட்டளையை கடைசி இரண்டு வசனங்களில் பதிவு செய்கிறார். சிறைபிடிக்கப்பட்ட யூத கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்! எருசலேம் மறுபடியுமாக கட்டப்பட வேண்டும்!

ஏன் பயனுள்ளது

34பொ.ச.மு. 1037-537-ன் முக்கிய சம்பவங்கள் நிறைந்த காலப்பகுதிக்குரிய மற்ற அத்தாட்சிகளோடு இரண்டு நாளாகமம் வலிமைமிக்க அத்தாட்சியை கொடுக்கிறது. மேலும், மற்ற சரித்திரத் தொகுப்புகளில் இல்லாத மதிப்புள்ள கூடுதலான தகவல்களை இது கொடுக்கிறது. 2 நாளாகமம் 19, 20, 29-31 போன்ற அதிகாரங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். எஸ்றா தேர்ந்தெடுத்த தகவல் அந்த ஜனத்தின் சரித்திரத்தில் முக்கியமான, நிலையான அம்சங்களாகிய ஆசாரியத்துவத்தையும் அதன் சேவையையும், ஆலயம், ராஜ்ய உடன்படிக்கை போன்றவற்றையும் அறிவுறுத்தின. இது மேசியாவையும் அவருடைய ராஜ்யத்தையும் பற்றிய நம்பிக்கையில் அந்த ஜனத்தை ஒன்றுபடுத்துவதற்கு பயனுள்ளதாக இருந்தது.

35இரண்டு நாளாகமத்தின் கடைசி வசனங்கள் (36:​17-23) எரேமியா 25:​12-ன் நிறைவேற்றத்தினுடைய முடிவான நிரூபணத்தை கொடுக்கின்றன. அதோடுகூட, அந்தத் தேசம் முழுமையாக அழிக்கப்பட்டதிலிருந்து பொ.ச.மு. 537-ல் எருசலேமில் யெகோவாவின் வணக்கம் திரும்ப நிலைநாட்டப்படும் வரை அந்த முழுமையான 70 ஆண்டுகள் கணக்கெடுக்கப்பட வேண்டியதையும் காட்டுகின்றன. ஆகவே இந்த அழிவு பொ.ச.மு. 607-ல் தொடங்குகிறது. cஎரே. 29:10; 2 இரா. 25:​1-26; எஸ்றா 3:​1-6.

36கிறிஸ்தவர்களுக்கு இரண்டு நாளாகமத்தில் வல்லமைவாய்ந்த அறிவுரை இருக்கிறது. யூதாவின் அரசர்களில் பெரும்பாலானோர் ஆரம்பத்தில் நன்கு செயல்பட்டனர்; ஆனால் கொஞ்ச காலத்திற்கு பின்பு அவர்கள் பொல்லாத வழிகளுக்குள் வீழ்ந்துவிட்டனர். கடவுளுக்கு உண்மையாயிருப்பதன் பேரிலேயே வெற்றி சார்ந்துள்ளதை இந்த சரித்திரப் பதிவு மனதில் பதியுமாறு எவ்வளவு அழுத்தந்திருத்தமாய் விளக்கிக் காட்டுகிறது! ஆகையால், ‘கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாக’ இருக்கும்படி நாம் எச்சரிக்கப்படுகிறோம். (எபி. 10:39) உண்மையுள்ள எசேக்கியாவுங்கூட நோயிலிருந்து மீண்டும் சுகமடைந்ததால் பெருமையுள்ளவரானார். ஆனால் சீக்கிரத்தில் அவர் தன்னைத் தாழ்த்தியதால் மாத்திரமே யெகோவாவின் கோபத்தை தவிர்க்க முடிந்தது. இரண்டு நாளாகமம் யெகோவாவின் அருமையான பண்புகளை மேன்மைப்படுத்தி காட்டுகிறது. அவருடைய பெயரையும் உன்னத அரசதிகாரத்தையும் போற்றிப் புகழ்கிறது. இந்த முழு சரித்திரமும் யெகோவாவுக்கு தனிப்பட்ட பக்தியை செலுத்த வேண்டும் என்ற முக்கியமான கருத்தை மையமாக வைத்து அளிக்கப்படுகிறது. இப்புத்தகம் யூதாவின் அரச பரம்பரைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. ஆகவே உண்மை தவறாத “தாவீதின் குமாரன்” இயேசு கிறிஸ்துவின் நித்திய ராஜ்யத்தில் தூய்மையான வணக்கம் உயர்த்தப்படுவதை காணும் நம்முடைய எதிர்பார்ப்பை இது உறுதிப்படுத்துகிறது.​—மத். 1:1; அப். 15:​16, 17.

[அடிக்குறிப்புகள்]

a வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கம் 147.

b வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கங்கள் 750-1; தொ. 2, பக்கங்கள் 1076-8.

c வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கம் 463; தொ. 2, பக்கம் 326.

[கேள்விகள்]

1. நாளாகமத்தை எஸ்றா எப்போது எழுதி முடித்தார், என்ன நோக்கத்திற்காக?

2. நாளாகமத்தின் திருத்தமான தன்மையை ஏன் சந்தேகிக்க வேண்டிய அவசியம் இல்லை?

3. நாளாகமம் நம்பகமானது என்பதை மற்ற வேதவாக்கியங்கள் எவ்வாறு காட்டுகின்றன?

4. தொல்பொருள் ஆராய்ச்சியின் என்ன கண்டுபிடிப்பு, இரண்டு நாளாகமத்தின் நம்பகத் தன்மைக்கு சான்றளிக்கிறது?

5. இரண்டு நாளாகமத்தில் என்ன காலப்பகுதி அடங்கியுள்ளது, பத்துக் கோத்திர ராஜ்யத்தின் சரித்திரத்தைவிட யூதாவின் சரித்திரமே ஏன் முக்கியப்படுத்தி காட்டப்படுகிறது?

6. எவ்வகையில் இரண்டு நாளாகமம் நம்பிக்கையூட்டுவதாயும் உற்சாகமளிப்பதாகவும் இருக்கிறது?

7. யெகோவா எவ்வாறு சாலொமோனை ‘மிகவும் பெரியவராக்குகிறார்’?

8. ஆலயத்தில் வேலை எவ்வாறு முன்னேறுகிறது, அதன் கட்டுமான பணியின் சில நுட்ப விவரங்கள் யாவை?

9. பிரகாரத்தின் மற்றும் ஆலயத்தின் தட்டுமுட்டு சாமான்களையும் பாத்திரங்களையும் விவரித்துக் கூறுங்கள்.

10. உடன்படிக்கை பெட்டியை மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் கொண்டுவருகையில் என்ன நடக்கிறது?

11. சாலொமோன் என்ன ஜெபிக்கிறார், அவருடைய வேண்டுகோள் என்ன?

12. சாலொமோனுடைய ஜெபத்துக்கு யெகோவா எவ்வாறு பதிலளிக்கிறார், என்ன மகிழ்ச்சியான சூழமைவில் அந்த 15 நாள் கொண்டாட்டம் முடிவடைகிறது?

13. (அ) ஆலயம் கட்டப்பட்ட பிறகு என்ன கட்டுமான பணிகள் தொடர்கின்றன? (ஆ) சாலொமோனின் ராஜ்யத்தை பார்த்த சேபாவின் ராணி என்ன சொல்கிறாள்?

14. இஸ்ரவேல் ஏன் அவ்வளவு சீக்கிரத்தில் அதனுடைய மகிமையை இழக்கிறது?

15. ரெகொபெயாமின் மரணத்தை பின்தொடர்ந்து என்ன போர்கள் நடக்கின்றன, யூதா ஏன் இஸ்ரவேலுக்கு எதிராக மேம்பட்டதாக நிரூபிக்கிறது?

16. ஆசாவின் அவசரமான ஜெபத்துக்கு யெகோவா எவ்வாறு பதிலளிக்கிறார்?

17. யூதாவில் வணக்கத்தை சீர்திருத்த ஆசா எவ்வாறு உற்சாகப்படுத்தப்படுகிறார், ஆனால் எதற்காக அவர் கண்டிக்கப்படுகிறார்?

18. (அ) உண்மை வணக்கத்துக்காக யோசபாத் என்ன நடவடிக்கை எடுக்கிறார், அதன் பலன்கள் யாவை? (ஆ) அவர் வைத்துக்கொண்ட திருமண சம்பந்தம் எப்படி அவரை அழிவின் வாயிலுக்கே வழிநடத்துகிறது?

19. யோசபாத்தின் ஆட்சியினுடைய உச்சக்கட்டத்தில் நடந்த போர் கடவுளுடையது என்பதாக எவ்வாறு நிரூபிக்கப்படுகிறது?

20. யோராமின் ஆட்சியில் என்ன பேரழிவுகள் ஏற்படுகின்றன?

21. யூதாவில் அத்தாலியாளின் கொடுங்கோல் ஆட்சியின் விளைவாக என்ன கெட்ட காரியங்கள் ஏற்படுகின்றன, ஆனால் எவ்வாறு யோய்தா தாவீதின் சிங்காசனத்தை திரும்பவும் நிலைநாட்டுவதில் வெற்றி பெறுகிறார்?

22. யோவாஸின் ஆட்சி எவ்வாறு நன்றாக தொடங்கி தீமையில் முடிவடைகிறது?

23. என்ன உண்மையற்ற மாதிரியை அமத்சியா பின்பற்றுகிறான்?

24. உசியாவின் பலம் எவ்வாறு அவனுடைய பலவீனமாகிறது, இதன் விளைவு என்ன?

25. யோதாம் ஏன் வெற்றி சிறக்கிறார்?

26. முன்னொருபோதும் இல்லாதபடி ஆகாஸ் எந்தளவுக்கு பொல்லாப்புக்குள் வீழ்ந்துபோகிறான்?

27. எசேக்கியா எவ்வாறு யெகோவாவின் வணக்கத்துக்காக ஆர்வம் காட்டுகிறார்?

28. என்ன மிகப் பெரிய விழாவை எசேக்கியா எருசலேமில் கொண்டாடுகிறார், ஜனங்கள் தங்கள் மகிழ்ச்சியை எவ்வாறு வெளிப்படுத்துகின்றனர்?

29. தம்மில் அசைக்க முடியாத நம்பிக்கையை வைத்ததற்காக யெகோவா எவ்வாறு எசேக்கியாவுக்கு பலனளிக்கிறார்?

30. (அ) என்ன பொல்லாங்கை மீண்டும் மனாசே செய்கிறான், ஆனால் மனஸ்தாபப்பட்டு அவன் மனந்திருந்திய பிறகு என்ன நடக்கிறது? (ஆ) ஆமோனின் குறுகிய கால ஆட்சியில் என்ன நடக்கிறது?

31. யோசியாவின் தைரியமிக்க ஆட்சியின் முக்கியமான நிகழ்ச்சிகள் யாவை?

32. யூதாவின் கடைசி நான்கு அரசர்கள், எவ்வாறு அதை பேரழிவிற்கு வழிநடத்துகின்றனர்?

33. (அ) “யெகோவாவின் வார்த்தையை நிறைவேற்றுவதற்கு” 70 ஆண்டு கால பாழ்க்கடிப்பு எவ்வாறு தொடங்குகிறது? (ஆ) இரண்டு நாளாகமத்தின் கடைசி இரண்டு வசனங்களில் என்ன சரித்திரப் பூர்வ கட்டளை பதிவுசெய்யப்பட்டிருக்கிறது?

34. எஸ்றா தேர்ந்தெடுத்த தகவலில் எது அறிவுறுத்தப்படுகிறது, இது எவ்வாறு அந்த ஜனங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது?

35. இரண்டு நாளாகமத்தின் முடிவான வசனங்களில் முக்கியமான என்ன குறிப்புகள் நிரூபிக்கப்படுகின்றன?

36. (அ) இரண்டு நாளாகமத்தில் வல்லமைவாய்ந்த என்ன அறிவுரை அடங்கியுள்ளது? (ஆ) ராஜ்யத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை இது எவ்வாறு உறுதிப்படுத்துகிறது?