Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் புத்தக எண் 16—நெகேமியா

பைபிள் புத்தக எண் 16—நெகேமியா

பைபிள் புத்தக எண் 16—நெகேமியா

எழுத்தாளர்: நெகேமியா

எழுதப்பட்ட இடம்: எருசலேம்

எழுதி முடிக்கப்பட்டது: பொ.ச.மு. 443-க்கு பின்

காலப்பகுதி: பொ.ச.மு. 456-443-க்கு பின்

நெகேமியா, பெர்சிய அரசனாகிய அர்தசஷ்டாவின் (லாங்கிமானஸ்) ஊழியனாக இருந்த ஒரு யூதன். “யா ஆறுதல்படுத்துகிறார்” என்பதே இவருடைய பெயரின் அர்த்தம். இவர் அரசனுடைய பானப்பாத்திரக்காரன். இது அதிக நம்பிக்கைக்கும் கௌரவத்திற்கும் உரிய ஒரு பதவி. அரசன் மகிழ்ச்சியாகவும் தயவுசெய்ய ஆயத்தமாகவும் இருக்கும் சமயங்களில் அவரை அணுகுவதற்கு வாய்ப்பு அளித்ததால் அது மிகவும் விரும்பத்தக்க பதவியாகவும் இருக்கிறது. எனினும், சொந்த ‘மகிழ்ச்சி’ எதையும்விட எருசலேமை மேலானதாக கருதின உண்மை மனங்கொண்ட நாடுகடத்தப்பட்டோரில் நெகேமியாவும் ஒருவர். (சங். 137:5, 6) யெகோவாவின் வணக்கம் திரும்ப நிலைநாட்டப்படுவதே அவருடைய மனதில் அதிமுக்கியமாக இருந்ததே தவிர பதவியோ பொருள் செல்வமோ அல்ல.

2பொ.ச.மு. 456-ல் ‘சிறையிருப்பிலிருந்து விடுபட்டு’ எருசலேமுக்குத் திரும்பிய யூத மீதியானோர் செழித்தோங்கவில்லை. மிகவும் வருந்தத்தக்க நிலையில் இருந்தனர். (நெ. 1:3, NW) அந்த நகரத்தின் மதில் இடிந்து கிடந்தது. அந்த ஜனத்தைச் சுற்றியிருந்த எதிரிகளின் கண்களில் அவர்கள் கேவலமாக தோன்றினர். நெகேமியா மிகவும் துயரப்பட்டார். எனினும், எருசலேமின் மதிற்சுவரை சரிசெய்வதற்கான யெகோவாவின் குறிக்கப்பட்ட காலம் வந்துவிட்டது. எதிரிகள் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி எருசலேமும் அதன் பாதுகாப்பு மதில்களும் கட்டப்பட வேண்டும். ஏனென்றால் அது, மேசியா வரும் காலத்தைப் பற்றி தானியேலுக்கு யெகோவா கொடுத்த தீர்க்கதரிசனத்தோடு சம்பந்தப்பட்ட ஓர் அடையாளமாகும். (தானி. 9:24-27) ஆகவே, தெய்வீக சித்தத்தை நிறைவேற்ற உண்மையும் வைராக்கியமும் உள்ள நெகேமியாவை யெகோவா பயன்படுத்தி சம்பவங்களை வழிநடத்தினார்.

3அவருடைய பெயர் தாங்கிய இந்தப் புத்தகத்தின் எழுத்தாளர் நெகேமியாதான் என்பதில் சந்தேகமில்லை. “அகலியாவின் குமாரனாகிய நெகேமியாவின் நடபடிகள்” என்ற ஆரம்ப வார்த்தைகளும் இந்தப் புத்தகத்தில் தன்மை சுட்டுப்பெயர் பயன்படுத்தியிருப்பதும் இதைத் தெளிவாக நிரூபிக்கின்றன. (நெ. 1:1) தொடக்கத்தில் எஸ்றா, நெகேமியா புத்தகங்கள் ஒரே புத்தகமாக எஸ்றா என அழைக்கப்பட்டது. பிறகு யூதர்கள் இந்தப் புத்தகத்தை ஒன்றாம், இரண்டாம் எஸ்றா என்று பிரித்தனர். அதற்கும் பிறகு இரண்டு எஸ்றாவுக்கு நெகேமியா என்று பெயரிட்டனர். எஸ்றா புத்தகத்தின் முடிவான சம்பவங்களுக்கும் நெகேமியா புத்தகத்தின் ஆரம்ப சம்பவங்களுக்கும் இடையே ஏறக்குறைய 12 ஆண்டு கால இடைவெளி உள்ளது. அதற்கு பிறகு, பொ.ச.மு. 456-ன் முடிவிலிருந்து பொ.ச.மு. 443-க்கு பிறகு வரை நிகழ்ந்த சரித்திரம் இந்தப் புத்தகத்தில் அடங்கியுள்ளது.​—1:1; 5:14; 13:6.

4நெகேமியாவின் புத்தகம் தேவாவியால் ஏவப்பட்ட முழு வேதாகமத்தோடு இசைந்துள்ளது, சந்தேகமின்றி அதன் பாகமாகவும் இருக்கிறது. அந்நியரோடு திருமண உறவுகள் (உபா. 7:3; நெ. 10:30), கடன்கள் (லேவி. 25:35-38; உபா. 15:7-11; நெ. 5:2-11), கூடாரப் பண்டிகை (உபா. 31:10-13; நெ. 8:14-18) போன்ற நியாயப்பிரமாணத்தில் உள்ள அநேக குறிப்புகள் இதில் உள்ளன. மேலும், எருசலேம் “இடுக்கமான காலங்களில்,” அதாவது எதிர்ப்பின் மத்தியில், திரும்ப கட்டப்படும் என்று உரைக்கப்பட்ட தானியேல் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம் ஆரம்பமானதை இப்புத்தகம் குறிக்கிறது.​—தானி. 9:25.

5நெகேமியா எருசலேமின் மதிலை திரும்ப கட்டுவதற்காக பொ.ச.மு. 455-ல் அங்கு பிரயாணம் செய்தார் என்று கூறப்படுவதைப் பற்றியதென்ன? பொ.ச.மு. 475-ல் அர்தசஷ்டா அரியணை ஏறினான் எனவும் பொ.ச.மு. 474-ல் அவனுடைய ஆட்சியின் முதல் வருடம் ஆரம்பமானது எனவும் கிரேக்க, பெர்சிய, பாபிலோனிய மக்களின் நம்பத்தக்க சரித்திரப்பூர்வ அத்தாட்சிகள் காட்டுகின்றன. a ஆகவே, அவனுடைய ஆட்சியின் 20-வது ஆண்டு பொ.ச.மு. 455 ஆகும். நெகேமியா 2:1-8 சுட்டிக்காட்டுகிறபடி, அரசனின் பானப்பாத்திரக்காரனாகிய நெகேமியா, அந்த வருடத்தின் வசந்த காலமாகிய யூத மாதம் நிசானில் எருசலேமையும் அதன் மதிலையும் அதன் வாசல்களையும் திரும்ப புதுப்பித்து கட்டுவதற்கு அரசனிடம் அனுமதி பெற்றார். “எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவது முதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும்” 69 வார வருடங்கள் அல்லது 483 வருடங்கள் செல்லும் என தானியேல் தீர்க்கதரிசனம் உரைத்திருந்தார். பொ.ச. 29-ல் இயேசு அபிஷேகம் செய்யப்பட்டபோது இந்தத் தீர்க்கதரிசனம் துல்லியமாக நிறைவேறியது. இந்த வருடம் உலக சரித்திரத்தோடும் பைபிள் சரித்திரத்தோடும் ஒத்திருக்கும் ஒன்றாகும். b (தானி. 9:24-27; லூக். 3:1-3, 23) நெகேமியா புத்தகமும் லூக்கா புத்தகமும் தானியேல் தீர்க்கதரிசனத்தோடு அருமையாக ஒன்றிணைந்து, யெகோவா தேவனே உண்மையான தீர்க்கதரிசனத்தை உரைப்பவர், அவரே அதை நிறைவேற்றுகிறவர் என எவ்வளவு அழகாக காட்டுகின்றன! உண்மையிலேயே, நெகேமியா புத்தகம் ஏவப்பட்ட வேதாகமத்தின் ஒரு பாகமாகும்.

நெகேமியாவின் பொருளடக்கம்

6நெகேமியா எருசலேமுக்கு அனுப்பப்படுகிறார் (1:1–2:20). எருசலேமிலிருந்து சூசானுக்கு திரும்பிவந்த ஆனானி அறிவிக்கும் செய்தியைக் கேட்டு நெகேமியா மிகவும் மனவேதனைப்படுகிறார். அங்குள்ள யூதர்கள் அதிக நெருக்கடியில் இருப்பதையும் அதன் மதிற்சுவரும் வாசல்களும் உடைந்து கிடப்பதையுமே அவர் கேள்விப்படுகிறார். ஆகவே அவர் உபவாசித்து, ‘பரலோகத்தின் தேவனும், தம்மில் அன்புகூர்ந்து தம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனாகிய’ யெகோவாவை நோக்கி ஜெபிக்கிறார். (1:5) அவர் இஸ்ரவேலின் பாவங்களை அறிக்கையிட்டு, மோசேக்கு யெகோவா வாக்குக்கொடுத்தபடியே தம்முடைய பெயரினிமித்தம் தம்முடைய ஜனங்களை நினைவுகூரும்படி அவரிடம் வேண்டுதல் செய்கிறார். (உபா. 30:1-10) நெகேமியாவின் முகம் துக்கமாய் இருப்பதற்கான காரணத்தை அரசன் கேட்டபோது, எருசலேமின் நிலைமை பற்றி நெகேமியா அவரிடம் கூறி அந்நகரத்தையும் அதன் மதிலையும் திரும்ப கட்டுவதற்கு தான் திரும்பி செல்ல அனுமதி கேட்கிறார். அவருடைய வேண்டுகோளை அரசன் ஏற்றதால் அவர் உடனடியாக எருசலேமுக்கு கிளம்புகிறார். செய்ய வேண்டிய வேலையை அறிந்துகொள்வதற்காக நெகேமியா இரவு நேரத்தில் நகரத்தின் மதிலை பார்வையிடுகிறார். பிறகு தன் திட்டத்தை யூதர்களிடம் தெரியப்படுத்தி, இந்தக் காரியத்தில் கடவுளுடைய உதவி இருப்பதை உறுதிப்படுத்துகிறார். உடனே அவர்கள், “எழுந்து கட்டுவோம் வாருங்கள்” என்று சொல்கிறார்கள். (நெ. 2:18) வேலை தொடங்கியதை அருகிலிருந்த சமாரியரும் மற்றவர்களும் கேள்விப்பட்டபோது ஏளனம் செய்ய தொடங்குகின்றனர்.

7மதில் திரும்ப கட்டப்படுகிறது (3:1–6:19). ஐந்தாம் மாதம் மூன்றாம் தேதியிலே மதில் வேலை துவங்குகிறது. இந்த வேலையில் ஆசாரியர்கள், பிரபுக்கள், ஜனங்கள் ஆகிய அனைவரும் ஒன்றாக பங்குகொள்கின்றனர். நகர வாசல்களும் மதில்களும் விரைவில் சரிசெய்யப்படுகின்றன. அதைக் கண்ட ஓரோனியனான சன்பல்லாத், “அந்த அற்பமான யூதர் செய்கிறது என்ன, . . . ஒரு நாளிலே முடித்துப்போடுவார்களோ” என்று ஏளனம் செய்கிறான். அப்போது அம்மோனியனான தொபியாவும், “அவர்கள் கட்டினாலும் என்ன, ஒரு நரி ஏறிப்போனால் அவர்களுடைய கல் மதில் இடிந்துபோகும்” என்று கூறி கேலி செய்கிறான். (4:2, 3) அந்த மதில் பாதி உயரத்தை எட்டுகையில், கோபமூண்ட எதிரிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து எருசலேமுக்கு எதிராக போரிட சதிசெய்கின்றனர். ஆனால் நெகேமியா, “மகத்துவமும் பயங்கரமுமான ஆண்டவரை” மனதில் வைத்து தங்களுக்காகவும் தங்கள் குடும்பங்களுக்காகவும் போரிடும்படி யூதரை உற்சாகப்படுத்துகிறார். (4:14) இந்த பதட்ட நிலைமையை சமாளிப்பதற்காக வேலை மறுபடியும் ஒழுங்கமைக்கப்படுகிறது; சிலர் ஈட்டிகளுடன் காவல் செய்கையில் மற்றவர்கள் தங்கள் பட்டயங்களை இடுப்பில் கட்டியவர்களாக வேலை செய்கின்றனர்.

8எனினும், யூதர்கள் மத்தியிலும் பிரச்சினைகள் இருக்கின்றன. அவர்களில் சிலர், யெகோவாவை வணங்கும் தங்கள் உடன் வணக்கத்தாரிடமிருந்தே வட்டி வாங்குகின்றனர். இது நியாயப்பிரமாணத்திற்கு விரோதமானது. (யாத். 22:25) நெகேமியா பொருளாசையைக் குறித்து அறிவுரை கூறி இந்த நிலைமையை திருத்துகிறார், ஜனங்களும் அதை மனப்பூர்வமாய் ஏற்றுக்கொள்கிறார்கள். ஜனங்கள்மீது ஏற்கெனவே பல சுமைகள் இருப்பதால், பொ.ச.மு. 455 முதல் பொ.ச.மு. 443 வரை நெகேமியா அதிபதியாக இருந்த 12 ஆண்டுகளில் அதிபதிக்குரிய படியைக்கூட அவர் கேட்கவில்லை.

9கட்டட வேலையை தடுப்பதற்காக சத்துருக்கள் இப்போது அதிக தந்திரமான வழிகளை முயற்சி செய்கின்றனர். ஒன்றுகூடி பேசுவதற்காக அவர்கள் நெகேமியாவை அழைக்கின்றனர், அவரோ தான் செய்யும் பெரிய வேலையை விட்டுவிட்டு வரமுடியாது என பதிலளிக்கிறார். ஆகவே, நெகேமியா கலகம் செய்து யூதாவில் அரசனாக திட்டமிடுவதாக சன்பல்லாத் அவர்மீது குற்றஞ்சாட்டுகிறான். பிறகு, நெகேமியா தவறான முறையில் ஆலயத்திற்குள் ஒளிந்துகொள்ளும்படி பயமுறுத்துவதற்காக ஒரு யூதனுக்கு கூலிகொடுக்கிறான். நெகேமியாவோ பயப்படாமல், கடவுள் கொடுத்த வேலையை அமைதியுடனும் கீழ்ப்படிதலுடனும் செய்கிறார். “ஐம்பத்திரண்டு நாளைக்குள்ளே” அந்த மதில் கட்டி முடிக்கப்படுகிறது.​—நெ. 6:15.

10ஜனங்களுக்கு போதித்தல் (7:1–12:26). இஸ்ரவேலரில் பெரும்பான்மையர் தங்கள் கோத்திர சுதந்தரங்களின்படி நகரத்திற்கு புறம்பே வாழ்வதால் நகரத்திற்குள் மிகவும் சொற்பமான ஜனங்களும் வீடுகளுமே உள்ளன. வம்ச அட்டவணைப்படி ஜனங்களை பெயர்ப்பதிவு செய்வதற்காக பிரபுக்களையும் எல்லா ஜனங்களையும் கூடிவர செய்யும்படி நெகேமியாவை கடவுள் வழிநடத்துகிறார். இதைச் செய்ய பாபிலோனிலிருந்து திரும்பி வந்தவர்களின் விவரப் பதிவை அவர் ஆராய்கிறார். தண்ணீர் வாசலுக்கருகில் உள்ள பொதுவிடத்தில் எட்டு நாள் கூட்டம் ஒன்று நடைபெறுகிறது. எஸ்றா மரத்தால் செய்யப்பட்ட ஒரு மேடைமீது நின்று இந்த நிகழ்ச்சியை தொடங்குகிறார். அவர் யெகோவாவை மகிமைப்படுத்தி விடியற்காலை முதல் மதியம் வரை மோசேயின் நியாயப்பிரமாண புத்தகத்திலிருந்து வாசிக்கிறார். மற்ற லேவியர்களும் அவருக்கு திறம்பட்ட விதத்தில் உதவுகின்றனர். இவர்கள் ஜனங்களுக்கு நியாயப்பிரமாணத்தை விளக்கி, தொடர்ந்து “தேவனுடைய நியாயப்பிரமாணப் புஸ்தகத்தை தீர்க்கமாக வாசித்து, அர்த்தஞ்சொல்லி, வாசித்ததை அவர்களுக்கு விளங்கப்பண்ணினார்கள்.” (8:8) நெகேமியா ஜனங்களிடம் விருந்துண்டு களிகூரும்படியும், “கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன்” என்ற வார்த்தைகளின் வல்லமையை மதித்துணரும்படியும் உற்சாகப்படுத்துகிறார்.​—8:10.

11கூட்டத்தின் இரண்டாம் நாளில் நியாயப்பிரமாணத்திலிருந்து உட்பார்வை பெறுவதற்காக ஜனங்களின் தலைவர்கள் எஸ்றாவுடன் விசேஷ கூட்டத்திற்காக கூடிவருகின்றனர். இதே ஏழாம் மாதத்தில் ஆசரிக்க வேண்டிய கூடாரப் பண்டிகை பற்றி அவர்கள் அறிந்தவுடன், யெகோவாவின் இந்தப் பண்டிகைக்காக கூடாரங்களைப் போடுவதற்கு உடனடியாக ஏற்பாடு செய்கின்றனர். ஜனங்கள் ஏழு நாட்கள் கூடாரங்களில் வசித்து, நாள்தோறும் நியாயப்பிரமாணம் வாசிக்கப்படுவதைக் கேட்கையில் ‘மிகுந்த சந்தோஷமுண்டாகிறது.’ “முறைமையின்படியே” எட்டாம் நாளில் பயபக்தியான கூட்டம் ஒன்றை அவர்கள் நடத்துகின்றனர்.​—நெ. 8:17, 18; லேவி. 23:33-36.

12அதே மாதம் 24-ம் தேதியில் இஸ்ரவேல் புத்திரர் மறுபடியும் ஒன்றுகூடி, அந்நிய ஜாதியார் எல்லாரிடமிருந்தும் தங்களைப் பிரித்துக்கொள்ள ஆரம்பிக்கின்றனர். மறுபடியும் நியாயப்பிரமாணம் வாசிக்கப்படுவதைக் கேட்கின்றனர். பின்பு கடவுள் இஸ்ரவேலுடன் கொண்ட செயல்தொடர்புகளைப் பற்றி லேவியர்கள் சிலர் உள்ளத்தை ஆராயும் விதத்தில் எடுத்துரைப்பதையும் கேட்கின்றனர். இந்த மறுபார்வையின் பொருள் இதுவே: “நீங்கள் எழுந்திருந்து, அநாதியாய் என்றென்றைக்குமிருக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள் . . . எந்த ஸ்துதி ஸ்தோத்திரத்துக்கும் மேலான உம்முடைய மகிமையுள்ள நாமத்துக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.” (நெ. 9:5) அவர்கள் தங்கள் முற்பிதாக்களின் பாவங்களை அறிக்கையிட்டு, மனத்தாழ்மையுடன் யெகோவாவின் ஆசீர்வாதத்திற்காக வேண்டிக்கொள்கின்றனர். இதை ஒரு தீர்மானமாக எழுதி, ஜனத்தின் பிரதிநிதிகள் அதில் முத்திரையிடுகின்றனர். அந்தத் தேசத்தின் மக்களோடு திருமண சம்பந்தம் வைத்துக் கொள்ளாமல் இருப்பதற்கும், ஓய்வுநாட்களை ஆசரிப்பதற்கும், ஆலய சேவைக்கும் ஊழியக்காரருக்கும் தேவையானவற்றை கொடுப்பதற்கும் அவர்கள் அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர். எருசலேமின் மதில்களுக்குள் என்றைக்கும் குடியிருப்பதற்காக ஒவ்வொரு பத்து பேரில் ஒருவர் என்ற கணக்கில் சீட்டுப்போட்டு தெரிவுசெய்யப்படுகின்றனர்.

13மதில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது (12:27–13:3). புதிதாக கட்டப்பட்ட மதிலின் பிரதிஷ்டை சமயத்தில் சங்கீதமும் சந்தோஷமும் நிரம்பி வழிகின்றன. இப்போது மற்றொரு முறை சபையாக ஒன்றுகூடி வருகின்றனர். நன்றிகூறி பாடும் இரண்டு பெரும் பாடகர் குழுக்களும் பவனிகளும் மதில்மீது எதிரும் புதிருமாக செல்ல நெகேமியா ஏற்பாடு செய்கிறார். முடிவில் அவர்கள் யெகோவாவின் ஆலயத்தில் பலிகள் செலுத்துவதற்காக ஒன்றுசேர்வர். ஆலயத்தில் சேவிக்கும் ஆசாரியர்களையும் லேவியர்களையும் ஆதரிப்பதற்காக பொருளாதார நன்கொடைகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அவர்கள் மேலுமாக பைபிளைப் படிக்கும்போது, அம்மோனியரும் மோவாபியரும் சபைக்குள் வரக்கூடாது என்பதை அறிய வருகின்றனர். ஆகவே அவர்கள் பல தேசத்தாரான ஜனங்களை எல்லாம் இஸ்ரவேலிலிருந்து பிரிக்க தொடங்குகின்றனர்.

14அசுத்தத்தை நீக்குதல் (13:4-31). பாபிலோனில் சிறிது காலம் இருந்த பிறகு நெகேமியா எருசலேமுக்கு திரும்புகிறார். அப்போது யூதர்கள் மத்தியில் புதிய பிரச்சினைகள் எழும்பியிருப்பதைக் காண்கிறார். எவ்வளவு சீக்கிரத்தில் மாறுதல்கள் ஏற்பட்டுவிட்டன! பிரதான ஆசாரியனாகிய எலியாசிப், ஆலய பிரகாரத்திலேயே அம்மோனியனும் கடவுளுடைய எதிரிகளில் ஒருவனுமான தொபியாவிற்காக சாப்பாட்டு அறை ஒன்றை செய்து கொடுத்திருக்கிறார். நெகேமியா உடனே நடவடிக்கை எடுக்கிறார். அவர் தொபியாவின் சாமான்களை எல்லாம் அறையிலிருந்து வெளியே எறிந்துவிட்டு சாப்பாட்டு அறைகளை எல்லாம் சுத்தப்படுத்துகிறார். மேலும், லேவியருக்கு கொடுக்க வேண்டிய நன்கொடைகள் நிறுத்தப்பட்டுவிட்டதால் அவர்கள் வாழ்க்கை நடத்துவதற்காக எருசலேமுக்கு வெளியே சென்று வேலை செய்வதையும்கூட காண்கிறார். நகரத்தில் பண ஆசை மலிந்து கிடக்கிறது. ஓய்வுநாளை அவர்கள் ஆசரிப்பதில்லை. நெகேமியா அவர்களிடம், “நீங்களோவென்றால் ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறதினால், இஸ்ரவேலின் மேலிருக்கிற உக்கிரத்தை அதிகரிக்கப்பண்ணுகிறீர்கள்” என்கிறார். (13:18) ஓய்வுநாளில் வணிகர்கள் உள்ளே நுழைய முடியாதபடி நகர வாசல்களை பூட்டிவிடுகிறார். மதிலுக்கு வெளியே தங்கியவர்களிடம் அங்கிருந்து சென்றுவிடும்படி கட்டளையிடுகிறார். ஆனால் அதையும்விட மோசமான காரியம் ஒன்றுள்ளது, இதை மறுபடியும் செய்யமாட்டோம் என அவர்களே பயபக்தியுடன் ஒப்புக்கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் மறுபடியும் அந்நிய பெண்களை திருமணம் செய்து அழைத்து வந்திருந்தனர். இந்தக் கலப்பு திருமணத்தால் பிறந்த பிள்ளைகளுக்கு யூத மொழியே தெரியவில்லை. அந்நிய மனைவிகள் காரணமாகவே சாலொமோன் பாவம் செய்தார் என நெகேமியா அவர்களுக்கு நினைப்பூட்டுகிறார். இந்தப் பாவத்தை செய்ததற்காக பிரதான ஆசாரியனாகிய எலியாசிபின் பேரனை நெகேமியா துரத்திவிடுகிறார். c பின்பு ஆசாரியத்துவத்தையும் லேவியரின் ஊழியத்தையும் அவர் ஒழுங்குபடுத்தி அமைக்கிறார்.

15“என் தேவனே எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும்” என்ற எளிய, மனத்தாழ்மையான வேண்டுகோளுடன் நெகேமியா தன் புத்தகத்தை முடிக்கிறார்.​—13:31.

ஏன் பயனுள்ளது

16உண்மை வணக்கத்தை நேசிக்கும் அனைவருக்கும் நெகேமியாவின் தேவபக்தி ஒரு தூண்டுதலாக இருக்க வேண்டும். யெகோவாவின் ஜனங்கள் மத்தியில் ஒரு தாழ்மையான கண்காணியாய் சேவிப்பதற்காக அவர் விசேஷித்த ஒரு பதவியை கைவிட்டார். தனக்கு சேர வேண்டிய பொருளாதார உதவியையும்கூட ஏற்க மறுத்துவிட்டார், பொருளாசை ஒரு கண்ணி என வெளிப்படையாகவே கண்டனம் செய்தார். யெகோவாவின் வணக்கத்தில் அந்த முழு தேசமும் வைராக்கியமாக ஈடுபட்டு, அதைத் தொடர்ந்து காத்துவர வேண்டும் என நெகேமியா சிபாரிசு செய்தார். (5:14, 15; 13:10-13) தன்னலமற்ற குணம், விவேகம், சுறுசுறுப்பு, ஆபத்தின் மத்தியிலும் நீதிக்காக தைரியத்துடன் இருப்பது போன்றவற்றில் நெகேமியா நமக்கு ஒரு சிறந்த முன்மாதிரி. (4:14, 19, 20; 6:3, 15) கடவுளுக்கு பயப்படும் சரியான பயம் அவரிடம் இருந்தது, உடன் ஊழியர்களை விசுவாசத்தில் கட்டியெழுப்புவதிலும் ஆர்வம் காட்டினார். (13:14; 8:9) அவர் யெகோவாவின் சட்டத்தை ஊக்கத்துடன் பொருத்தினார். அதிலும் முக்கியமாய், உண்மை வணக்கத்தோடும், புறமதத்தினருடன் திருமண உறவுகள் வைத்துக்கொள்வது போன்ற புறமத செல்வாக்குகளை நீக்குவதோடும் சம்பந்தப்பட்ட சட்டங்களை தவறாமல் பின்பற்றினார்.​—13:8, 23-29.

17யெகோவாவின் சட்டத்தை நெகேமியா நன்றாக அறிந்து, அதை சரிவர பயன்படுத்தினார் என்பது இந்தப் புத்தகம் முழுவதிலும் தெளிவாக தெரிகிறது. உபாகமம் 30:1-4-ல் உள்ள யெகோவாவின் வாக்குறுதி காரணமாக கடவுளுடைய ஆசீர்வாதத்திற்காக அவர் ஜெபம் செய்கிறார். யெகோவா தனக்காக உண்மையாய் செயல்படுவார் என்ற முழு விசுவாசத்துடன் அவர் ஜெபிக்கிறார். (நெ. 1:8, 9) முன்பு எழுதப்பட்ட காரியங்களை யூதர்களுக்கு தெரிவிப்பதற்காக அவர் பல கூட்டங்களை ஏற்பாடு செய்தார். நெகேமியாவும் எஸ்றாவும் நியாயப்பிரமாணத்தை வாசிக்கையில் கடவுளுடைய வார்த்தையை ஜனங்களுக்கு தெளிவாக விளக்குவதிலும் அதைப் பொருத்திப் பயன்படுத்துவதிலும் ஊக்கம் தளரவில்லை.​—8:8, 13-16; 13:1-3.

18நெகேமியா யெகோவாவில் முழு நம்பிக்கை வைத்திருந்ததும் அவருடைய மனத்தாழ்மையான விண்ணப்பங்களும், கடவுள்மீது ஜெபசிந்தையுடன் சார்ந்திருக்கும் அதே போன்ற மனப்பான்மையை வளர்க்க நம்மை உந்துவிக்க வேண்டும். அவருடைய ஜெபங்கள் எப்படி கடவுளை மகிமைப்படுத்தின, அவருடைய ஜனங்களின் பாவங்களை உணர்த்திக் காட்டின, யெகோவாவின் நாமம் பரிசுத்தப்படுவதற்காக வேண்டின என்பவற்றை கவனியுங்கள். (1:4-11; 4:14; 6:14; 13:14, 29, 31) வைராக்கியமுள்ள இந்தக் கண்காணி கடவுளுடைய ஜனங்களுக்கு பலமளிப்பவராய் விளங்கினார்; இது, அவருடைய ஞானமான வழிநடத்துதலை உடனடியாக பின்பற்ற அவர்கள் தயாராயிருந்ததிலிருந்தும் அவரோடு கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் அவர்கள் கண்ட மகிழ்ச்சியிலிருந்தும் தெரிகிறது. எவ்வளவாய் தூண்டியெழுப்பும் முன்மாதிரி! எனினும், ஞானமுள்ள ஒரு கண்காணி இல்லையென்றால் பொருளாசை, ஊழல், விசுவாசதுரோகம் போன்றவை எவ்வளவு எளிதாக மக்களை பாதித்துவிடுகின்றன! இன்று கடவுளுடைய ஜனங்கள் மத்தியில் இருக்கும் எல்லா கண்காணிகளும் தங்கள் கிறிஸ்தவ சகோதரர்களுக்கு உதவுவதில் சுறுசுறுப்புடனும் விழிப்புடனும் வைராக்கியத்துடனும் இருக்க வேண்டும் என்பதையும், உண்மை வணக்கத்தின் பாதையில் அவர்களை வழிநடத்துவதில் புரிந்துகொள்ளுதலோடும் உறுதியோடும் இருக்க வேண்டும் என்பதையும் இது அருமையாக வலியுறுத்துகிறது.

19நெகேமியா கடவுளுடைய வார்த்தையில் முழு நம்பிக்கை வைத்திருந்தார். அவர் வேதவாக்கியங்களை மிகுந்த ஊக்கத்தோடு போதித்தார். அதுமட்டுமல்ல, திரும்ப நிலைநாட்டப்பட்ட கடவுளுடைய ஜனங்கள் மத்தியில் வம்சாவளிப்படியான சுதந்தர பாகங்களை தீர்மானிக்கவும், ஆசாரியர் மற்றும் லேவியரின் சேவையை தீர்மானிக்கவும் அவற்றைப் பயன்படுத்தினார். (நெ. 1:8; 11:1–12:26; யோசு. 14:1–21:45) இதனால் யூத மீதியானோருக்கு மிகுந்த உற்சாகம் கிடைத்திருக்கும். வித்துவைப் பற்றியும் அவருடைய ராஜ்யத்தில் பெரிய அளவில் மீண்டும் நிலைநாட்டப்படுவதைப் பற்றியும் முன்பே கொடுக்கப்பட்டிருந்த மகத்தான வாக்குறுதிகளில் அவர்களுடைய நம்பிக்கையை இது பலப்படுத்தியது. திரும்ப நிலைநாட்டப்படும் ராஜ்யத்தின் மீது கடவுளுடைய ஊழியர்களுக்கு இருக்கும் நம்பிக்கையே, ராஜ்ய அக்கறைகளுக்காக தைரியமாய் போராடவும் பூமி முழுவதிலும் உண்மை வணக்கத்தை அதிகரிப்பதில் சுறுசுறுப்பாய் ஈடுபடவும் அவர்களை உற்சாகப்படுத்துகிறது.

[அடிக்குறிப்புகள்]

a வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 2, பக்கங்கள் 613-16.

b வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 2, பக்கங்கள் 899-901.

c எலியாசிபின் பேரனுடைய பெயர் மனாசே என சில யூத சரித்திராசிரியர்கள் கூறுகின்றனர். அவன் தன் மாமனாராகிய சன்பல்லாத்துடன் சேர்ந்து கெரிசீம் மலையில் ஒரு ஆலயத்தைக் கட்டினான். அது பின்னர் சமாரியருடைய வணக்கத்தின் மையமானது. அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அதன் ஆசாரியனாக இருந்தான் எனவும் அவர்கள் சொல்கின்றனர். யோவான் 4:21-ல் இயேசு குறிப்பிட்ட மலை இந்தக் கெரிசீமே.​—எருசலேமிலுள்ள இரண்டாம் ஆலயம் (ஆங்கிலம்), 1908, டபிள்யூ. ஷா கால்டிகாட், பக்கங்கள் 252-5; த உவாட்ச்டவர், ஜூலை 15, 1960, பக்கங்கள் 425-6-ஐக் காண்க.

[கேள்விகள்]

1. நம்பிக்கைக்குரிய என்ன பதவியை நெகேமியா வகித்தார், அவர் மனதில் அதிமுக்கியமாக இருந்தது எது?

2. என்ன வருந்தத்தக்க நிலைமை நெகேமியாவிற்கு துக்கத்தை உண்டாக்கியது, ஆனால் குறிக்கப்பட்ட எந்தக் காலம் சமீபித்திருந்தது?

3. (அ) நெகேமியாவே இதை எழுதினார் என்பதை எது நிரூபிக்கிறது, அந்தப் புத்தகம் நெகேமியா என எவ்வாறு அழைக்கப்படலாயிற்று? (ஆ) எஸ்றா புத்தகத்திற்கும் இந்தப் புத்தகத்திற்கும் எத்தனை ஆண்டு கால இடைவெளி உள்ளது, நெகேமியா புத்தகத்தில் எத்தனை ஆண்டுகளின் சரித்திரம் அடங்கியுள்ளது?

4. நெகேமியா புத்தகம் எவ்வாறு முழு வேதாகமத்தோடும் இசைந்துள்ளது?

5. (அ) பொ.ச.மு. 475-ல் அர்தசஷ்டா அரியணை ஏறியதை எந்த அத்தாட்சிகள் ஆதரிக்கின்றன? (ஆ) அவனுடைய ஆட்சியின் 20-வது ஆண்டு எது? (இ) மேசியா பற்றிய தானியேல் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தோடு நெகேமியா புத்தகமும் லூக்கா புத்தகமும் எவ்வாறு ஒன்றிணைந்திருக்கின்றன?

6. (அ) என்ன செய்தியைக் கேட்டதும் நெகேமியா யெகோவாவிடம் ஜெபம் செய்ய தூண்டப்படுகிறார், என்ன வேண்டுகோளுக்கு அரசன் அனுமதி அளிக்கிறான்? (ஆ) நெகேமியாவின் திட்டத்திற்கு யூதர்கள் எவ்வாறு பிரதிபலிக்கின்றனர்?

7. வேலை எவ்வாறு முன்னேறுகிறது, என்ன நிலைமையின் காரணமாக திரும்ப ஒழுங்குபடுத்துவது தேவைப்படுகிறது?

8. யூதர்கள் மத்தியிலேயே நிலவும் பிரச்சினைகளை நெகேமியா எவ்வாறு கையாளுகிறார்?

9. (அ) கட்டட வேலையை நிறுத்துவதற்காக செய்யப்படும் சூழ்ச்சிகளை நெகேமியா எவ்வாறு சமாளிக்கிறார்? (ஆ) எவ்வளவு காலத்திற்குள் மதில் கட்டி முடிக்கப்படுகிறது?

10. (அ) ஜனங்கள் எங்கே குடியிருக்கிறார்கள், என்ன பெயர்ப்பதிவு நடைபெறுகிறது? (ஆ) இப்பொழுது என்ன கூட்டம் நடத்தப்படுகிறது, முதல் நாளின் நிகழ்ச்சிநிரல் என்ன?

11. இரண்டாம் நாளில் என்ன விசேஷமான கூட்டம் நடக்கிறது, அதற்கு கூடிவந்திருந்தவர்கள் எவ்வாறு களிகூருகின்றனர்?

12. (அ) அதே மாதத்தில் பின்னர் என்ன கூட்டம் நடத்தப்படுகிறது, அதன் பொருள் என்ன? (ஆ) என்ன தீர்மானம் ஏற்கப்படுகிறது? (இ) எருசலேமில் ஜனங்களைக் குடியேற்றுவதற்காக என்ன ஏற்பாடு செய்யப்படுகிறது?

13. மதிலின் பிரதிஷ்டை சமயத்தில் என்ன சபை கூடிவருதல் ஏற்பாடு செய்யப்படுகிறது, அதைத் தொடர்ந்து என்ன செய்கின்றனர்?

14. நெகேமியா இல்லாதபோது எழும்பிய பிரச்சினைகளையும் அவற்றை நீக்குவதற்கு அவர் எடுத்த நடவடிக்கைகளையும் விவரியுங்கள்.

15. நெகேமியா மனத்தாழ்மையோடு என்ன வேண்டுகிறார்?

16. மெய் வணக்கத்தை நேசிப்போர் யாவருக்கும் என்ன விதங்களில் நெகேமியா மிகச் சிறந்த முன்மாதிரி?

17. கடவுளுடைய சட்டத்தை அறிவதிலும் அதைப் பொருத்திப் பயன்படுத்துவதிலும் நெகேமியா எவ்வாறு முன்மாதிரியாக இருக்கிறார்?

18. நெகேமியா ஜெபசிந்தையோடு முன்னின்று வழிநடத்தியது இன்றுள்ள கண்காணிகளுக்கு என்ன பாடங்களை வலியுறுத்துகிறது?

19. (அ) ராஜ்ய வாக்குறுதிகளில் நம்பிக்கையை பலப்படுத்த நெகேமியா கடவுளுடைய வார்த்தையை எவ்வாறு பயன்படுத்தினார்? (ஆ) இன்று ராஜ்ய நம்பிக்கை கடவுளுடைய ஊழியர்களை எவ்வாறு உற்சாகப்படுத்துகிறது?