பைபிள் புத்தக எண் 18—யோபு
பைபிள் புத்தக எண் 18—யோபு
எழுத்தாளர்: மோசே
எழுதப்பட்ட இடம்: வனாந்தரம்
எழுதி முடிக்கப்பட்டது: ஏ. பொ.ச.மு. 1473
காலப்பகுதி: பொ.ச.மு. 1657-க்கும் 1473-க்கும் இடைப்பட்ட 140-க்கு அதிகமான ஆண்டுகள்
தேவாவியால் ஏவப்பட்ட வேதாகமத்தின் மிகப் பழமையான புத்தகங்களில் இதுவும் ஒன்று! இந்தப் புத்தகம் மிகவும் உயர்வாக மதிக்கப்படுகிறது. இதிலிருந்து அதிகமான மேற்கோள்கள் காட்டப்பட்டுள்ளன, என்றாலும் மனிதர்கள் இதை சரியாக புரிந்துகொள்ளவே இல்லை. இந்தப் புத்தகம் ஏன் எழுதப்பட்டது, இன்று இதனால் நமக்கு என்ன பயன்? யோபு என்ற பெயரின் அர்த்தத்தில் இதற்கான பதில் அடங்கியுள்ளது; “பகைமைக்கு இலக்கானவன்” என்பதே அந்த அர்த்தம். இந்தப் புத்தகம் இரண்டு முக்கிய கேள்விகளுக்கு பதிலளிக்கிறது: குற்றமற்றோர் ஏன் துன்பப்படுகின்றனர்? கடவுள் பூமியில் துன்மார்க்கத்தை ஏன் அனுமதிக்கிறார்? யோபுவின் துன்பத்தையும் அவருடைய சகிப்புத்தன்மையையும் பற்றிய பதிவு இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கிறது. யோபு கேட்டுக்கொண்டபடியே இவையெல்லாம் எழுதி வைக்கப்பட்டுள்ளன.—யோபு 19:23, 24.
2யோபு என்றாலே பொறுமையும் சகிப்புத்தன்மையும்தான் நினைவுக்கு வரும். ஆனால் யோபு என்ற பெயருடைய ஒரு நபர் உண்மையில் வாழ்ந்தாரா? உத்தமத்தைக் காத்த இந்த மிகச் சிறந்த முன்மாதிரியை சரித்திரத்தின் பக்கங்களிலிருந்து நீக்கிப்போட பிசாசு பல விதத்தில் முயற்சி செய்தபோதிலும் அவனால் முடியவில்லை. யோபு உண்மையில் வாழ்ந்த ஒரு நபரே! யெகோவா தம்முடைய சாட்சிகளாகிய நோவா, தானியேல் ஆகியோருடன் இவரையும் சேர்த்து குறிப்பிடுகிறார்; இவர்கள் இருந்ததை இயேசு கிறிஸ்துவும்கூட ஒப்புக்கொண்டார். (எசே. 14:14, 20; ஒப்பிடுக: மத்தேயு 24:15, 37.) பூர்வ எபிரெய மக்கள் யோபுவை உண்மையில் வாழ்ந்த ஒரு நபராகவே ஏற்றுக்கொண்டனர். கிறிஸ்தவ எழுத்தாளனாகிய யாக்கோபு, சகிப்புத்தன்மைக்கு முன்மாதிரியாக யோபுவைக் குறிப்பிடுகிறார். (யாக். 5:11) எப்படிப்பட்ட சூழ்நிலைமையிலும் உத்தமத்தைக் காத்துக்கொள்ள முடியும் என கடவுளை வணங்குவோருக்கு உறுதியான நம்பிக்கையளிக்க ஒரு நிஜ வாழ்க்கை முன்மாதிரியால் மட்டுமே முடியும். ஒரு கற்பனை கதாபாத்திரத்தால் அவ்வாறு செய்ய முடியாது. அதுமட்டுமல்ல, யோபு புத்தகத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள பேச்சுகள் வலிமையாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் இருப்பதுகூட அது உண்மையான நிகழ்ச்சியே என்பதற்கு சான்றளிக்கின்றன.
3பூர்வ எபிரெயர் இதைப் பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலில் சேர்க்க ஒருபோதும் தவறவில்லை என்பதே யோபு புத்தகம் நம்பத்தக்கது, தேவாவியால் ஏவப்பட்டது என்பதை நிரூபிக்கிறது. யோபு ஓர் இஸ்ரவேலனாக இல்லாதபோதிலும் அப்புத்தகம் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று. எசேக்கியேலும் யாக்கோபும் மட்டுமல்ல அப்போஸ்தலன் பவுலும்கூட இந்தப் புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறார். (யோபு 5:13; 1 கொ. 3:19) இப்புத்தகம், நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளுக்கு ஆச்சரியப்படத்தக்க அளவு இசைந்திருப்பதும் அது தேவாவியால் ஏவப்பட்டது என்பதற்கு வல்லமை வாய்ந்த அத்தாட்சியாகும். பூமியின் ஆதாரம் பற்றி பூர்வ மக்கள் மிகவும் விசித்திரமான எண்ணங்களைக் கொண்டிருந்தபோது, யெகோவா “பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார்” என்பதை எழுத்தாளர் எவ்வாறு அறிந்திருக்கக்கூடும்? (யோபு 26:7) ஒரு பெரிய கடலாமையின்மீது நிற்கும் யானைகள் பூமியைத் தாங்குகின்றன என்பதே பூமியின் ஆதாரம் பற்றி பூர்வ காலங்களில் நிலவிய ஒரு கருத்தாகும். ஆனால் இத்தகைய முட்டாள்தனத்தை யோபு புத்தகத்தில் பார்க்க முடியவில்லையே, ஏன்? ஏனென்றால், சிருஷ்டிகராகிய யெகோவாவே ஏவுதலால் இந்தச் சத்தியத்தை தெரிவித்தது தெளிவாக உள்ளது. பூமியும் அதன் அதிசயங்கள் பற்றிய விவரிப்புகளும், காட்டு மிருகங்கள், பறவைகள் ஆகியவை அவற்றின் இயற்கையான இருப்பிடங்களில் இருப்பது பற்றிய விவரிப்புகளும் மிகவும் துல்லியமாக இருப்பதால் யெகோவா தேவனே யோபு புத்தகத்தின் நூலாசிரியராகவும் அதை ஏவினவராகவும் இருக்க வேண்டும். a
4யோபு ஊத்ஸ் தேசத்தில் வாழ்ந்தார். புவியியல் வல்லுனர்கள் சிலர் கூறுகிறபடி இது, வட அரேபியாவில் ஏதோமியர் குடியிருந்த நாட்டிற்கு அருகிலும் ஆபிரகாமின் சந்ததியாருக்கு வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு கிழக்கேயும் இருந்தது. சபேயர் தெற்கிலும், கல்தேயர் கிழக்கிலும் இருந்தனர். (1:1, 3, 15, 17) ஆபிரகாம் மரித்து வெகு காலத்திற்கு பிறகே யோபு இந்தத் துன்பத்தை எதிர்ப்பட்டார். ஏனென்றால் அப்போது, ‘உத்தமனும் சன்மார்க்கனுமான . . . [யோபுவைப்போல] பூமியில் ஒருவனும் இல்லை.’ (1:8) இது, அசைக்க முடியாத விசுவாசம் உடையவராயிருந்த யோசேப்பின் மரணத்திற்கும் (பொ.ச.மு. 1657), மோசே ஒரு உத்தமராக நிலைநிற்கை எடுத்த சமயத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்ததாக தோன்றுகிறது. இஸ்ரவேலர் எகிப்தின் பேய் வணக்கத்தால் கறைப்பட்டிருந்த சமயத்தில் யோபு தூய்மையான வணக்கத்தில் சிறந்து விளங்கினார். மேலும், யோபு முதல் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பழக்கங்களும் கடவுள் யோபுவை உண்மை வணக்கத்தானாக ஏற்றுக்கொண்டதும் அது கோத்திரப் பிதாக்களின் காலத்தைச் சேர்ந்ததாகவே இருக்க வேண்டும் என்பதை குறிக்கிறது. ஏனெனில் பொ.ச.மு. 1513 முதற்கொண்டு நியாயப்பிரமாணத்திற்கு கீழிருந்த இஸ்ரவேலருடன் மட்டுமே கடவுள் செயல்தொடர்பு வைத்திருந்தார். (ஆமோ. 3:2; எபே. 2:12) இவ்வாறு யோபு நீண்டகாலம் வாழ்ந்ததன் காரணமாக, பொ.ச.மு. 1657-க்கும் மோசே மரணமடைந்த வருடமாகிய பொ.ச.மு. 1473-க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் நடந்த நிகழ்ச்சிகள் இந்தப் புத்தகத்தில் அடங்கியிருப்பதாக தோன்றுகிறது. யோபுவின் மரணத்திற்கு பிறகு, இஸ்ரவேலர் வனாந்தரத்தில் இருந்த சமயத்தில் மோசே இந்தப் புத்தகத்தை எழுதி முடித்தார்.—யோபு 1:8; 42:16, 17.
5மோசேதான் இதை எழுதினார் என ஏன் சொல்கிறோம்? ஏனென்றால், யூத மற்றும் ஆரம்பகால கிறிஸ்தவ வல்லுனர்கள் ரோ. 3:1, 2, தி.மொ.) மோசே முதிர் வயதான பிறகு ஊத்ஸுக்கு அருகிலிருந்த மீதியானில் 40 ஆண்டுகள் செலவிட்டார். யோபு புத்தகத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள நுட்பவிவரங்களை அங்கே அவர் பெற்றிருக்கலாம். பிறகு, இஸ்ரவேலர் 40 ஆண்டுகள் வனாந்தரத்தில் சுற்றி திரிந்தபோது யோபுவின் தாய்நாட்டுக்கு அருகில் சென்ற சமயத்தில் மோசே அந்தப் புத்தகத்தின் முடிவிலுள்ள விவரங்களை அறிந்து பதிவு செய்திருக்கலாம்.
வெகுகாலமாக அவ்வாறே நம்பினர். யோபு புத்தகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள உயிர்த்துடிப்பான எபிரெய செய்யுள் பாணி, அது மோசேயின் தாய்மொழியாகிய எபிரெயுவிலேயே முதலாவதாக இயற்றப்பட்டது என வெளிப்படுத்துகிறது. அது மற்றொரு மொழியிலிருந்து, உதாரணமாக அரபிய மொழியிலிருந்து மொழிபெயர்த்ததாக இருக்க முடியாது. மேலும், உரைநடையிலுள்ள பகுதிகள் பைபிளின் வேறு எந்தப் புத்தகத்தைப் பார்க்கிலும் ஐந்தாகம தொகுப்புடனேயே அதிகமாய் ஒத்திருக்கின்றன. இதன் எழுத்தாளர் மோசேயைப் போன்ற ஒரு இஸ்ரவேலனாக இருந்திருக்க வேண்டும், ஏனெனில் யூதர்களிடமே “கடவுளின் வாக்கியங்கள் நம்பி ஒப்புவிக்கப்பட்டன.” (6 த நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா சொல்கிறபடி யோபு புத்தகம், “உலகத்தின் தலைசிறந்த இலக்கியங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது.” b ஆனால் இது வெறும் ஓர் இலக்கிய படைப்பு மட்டுமல்ல. யெகோவாவின் வல்லமை, நீதி, ஞானம், அன்பு ஆகியவற்றை மேன்மைப்படுத்துவதில் பைபிளின் மற்ற புத்தகங்களைவிட யோபு புத்தகமே முதன்மையாக உள்ளது. சர்வலோகத்திற்கும் முன்பு உள்ள முக்கிய விவாதத்தை இது மிக தெளிவாக வெளிப்படுத்துகிறது. பைபிளின் மற்ற புத்தகங்களில், முக்கியமாக ஆதியாகமம், யாத்திராகமம், பிரசங்கி, லூக்கா, ரோமர் மற்றும் வெளிப்படுத்துதலில் சொல்லப்பட்டுள்ள அநேக காரியங்களை தெளிவாக புரிந்துகொள்ள உதவுகிறது. (யோபு 1:6-12; 2:1-7-ஐ ஆதியாகமம் 3:15; யாத்திராகமம் 9:16; லூக்கா 22:31, 32; ரோமர் 9:16-19; வெளிப்படுத்துதல் 12:9 உடன் ஒப்பிடுக. மேலும், யோபு 1:21; 24:15; 21:23-26; 28:28-ஐ பிரசங்கி 5:15; 8:11; 9:2, 3; 12:13 உடன் ஒப்பிடுக.) இது வாழ்க்கையின் அநேக கேள்விகளுக்கு பதிலளிக்கிறது. இது மெய்யாகவே கடவுளுடைய ஏவப்பட்ட வார்த்தையின் இன்றியமையாத பாகமாகும். மேலும் அதைப் பயனுள்ள முறையில் புரிந்துகொள்ளவும் அதிகம் உதவுகிறது.
யோபுவின் பொருளடக்கம்
7யோபு புத்தகத்திற்கு முகவுரை (1:1-5). “உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்த” யோபு என்ற மனிதனை இது நமக்கு அறிமுகப்படுத்துகிறது. ஏழு குமாரரும் மூன்று குமாரத்திகளும் உடைய யோபு மகிழ்ச்சியுடன் வாழ்கிறார். அவர் ஏராளமான நிலமும் கால்நடைகளும் உடைய பெரும் செல்வந்தர். அவருக்கு மிகுதியான வேலைக்காரர்கள் இருந்தனர். மேலும் ‘கிழக்கத்திப் புத்திரர் எல்லாரிலும் பெரியவராயிருந்தார்.’ (1:1, 3) இருந்தாலும், அவர் தன் செல்வத்தில் நம்பிக்கை வைக்காததால் பொருளாசை உள்ளவராக இல்லை. அவர் ஆவிக்குரிய விதத்திலும் செல்வந்தராக இருக்கிறார். நற்செயல்கள் நிறைந்தவராக, துன்பம் அல்லது துயரத்தில் இருக்கும் எவருக்கும் உதவிசெய்ய தயாராக அல்லது தேவையிலிருக்கும் ஒருவருக்கு அங்கியைக் கொடுக்க எல்லா சமயங்களிலும் மனமுள்ளவராக இருக்கிறார். (29:12-16; 31:19, 20) எல்லாரும் அவரை மதிக்கின்றனர். யோபு, மெய்யான கடவுளாகிய யெகோவாவை வணங்குகிறார். அவர் புறமத ஜனங்களைப் போல சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவற்றை வணங்கவில்லை; ஆனால் யெகோவாவுக்கு உண்மையுள்ளவராக, உத்தமத்தைக் காத்துக்கொண்டு, அவரோடு நெருங்கிய உறவை அனுபவித்து மகிழ்கிறார். (29:7, 21-25; 31:26, 27; 29:4) யோபு தன் குடும்பத்திற்கு ஆசாரியனாக சேவித்து, அவர்கள் ஒருவேளை பாவம் செய்திருக்கலாம் என்று அவர்களுக்காக தவறாமல் தகனபலிகளைச் செலுத்துகிறார்.
8சாத்தான் கடவுளிடம் சவால் விடுகிறான் (1:6–2:13). பரலோகத்தில் நிகழும் காரியங்களை நாம் பார்ப்பதற்கு உதவியாக காணக்கூடாமை என்ற திரை அதிசயமாய் விலகுகிறது. தேவபுத்திரரின் ஒரு கூட்டத்திற்கு யெகோவா தலைமை தாங்குகிறார். சாத்தானும் அவர்கள் மத்தியில் வருகிறான். யெகோவா தம்முடைய உண்மையுள்ள ஊழியனாகிய யோபுவைப் பற்றி குறிப்பிடுகிறார். சாத்தானோ யோபுவின் உத்தமத்தன்மைப் பற்றி சவால்விடுகிறான், பொருளாதார நன்மைகளுக்காகவே கடவுளைச் சேவிக்கிறார் என குற்றம் சாட்டுகிறான். இவற்றை நீக்கிவிடும்படி கடவுள் தன்னை அனுமதித்தால் யோபு தன் உத்தமத்தை விட்டுவிடுவார் என கூறுகிறான். யெகோவா இந்தச் சவாலை ஏற்கிறார். ஆனால் சாத்தான் யோபுவை தொடக்கூடாது என்ற நிபந்தனை வைக்கிறார்.
9கொஞ்சமும் எதிர்பாராத யோபுக்கு பல தீங்குகள் ஏற்பட தொடங்குகின்றன. சபேயரும் கல்தேயரும் திடீரென தாக்கி அவருடைய பெரும் செல்வங்களை கொள்ளையிடுகின்றனர். பெரும் புயல் ஒன்று அவருடைய குமாரரையும் குமாரத்திகளையும் கொன்றுவிடுகிறது. இந்தக் கடுமையான சோதனையிலும் யோபு கடவுளை தூஷிக்கவோ அவரிடமிருந்து விலகிச்செல்லவோ இல்லை. மாறாக அவர், “யெகோவா திருநாமம் துதிக்கப்படுக” என்று சொல்கிறார். (1:21, தி.மொ.) இந்தக் காரியத்தில் தோல்வியுற்று, பொய்யனாக நிரூபிக்கப்பட்ட சாத்தான் யெகோவாவுக்கு முன்பாக மறுபடியும் தோன்றுகிறான். “தோலுக்குப் பதிலாகத் தோலையும், தன் ஜீவனுக்குப் பதிலாகத் தனக்கு உண்டான எல்லாவற்றையும் மனுஷன் கொடுத்துவிடுவான்” என்று குற்றம் சாட்டுகிறான். (2:4) யோபுவின் உடலைத் தொட அனுமதிக்கப்பட்டால், கடவுளுடைய முகத்திற்கு எதிராக அவரைத் தூஷிக்கும்படி தன்னால் செய்ய முடியும் என சாத்தான் வாதிடுகிறான். யோபுவின் உயிரைப் போக்குவதைத் தவிர வேறு எதையும் செய்ய அனுமதி பெற்ற சாத்தான் யோபுவை பயங்கரமான ஒரு நோயால் தாக்குகிறான். அவருடைய மாம்சம் “பூச்சிகளினாலும் அடைபற்றின புழுதியினாலும் மூடப்பட்டிருக்கிறது.” அவருடைய மனைவியும் உறவினர்களும் வெறுக்கும்படியாக அவருடைய உடலும் சுவாசமும் நாற்றமடிக்கின்றன. (7:5; 19:13-20) யோபு தன் உத்தமத்தை விட்டுவிலகவில்லை என சுட்டிக்காட்டி அவருடைய மனைவி அவரிடம் பின்வருமாறு கூறுகிறாள்: “நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனை விடும்.” யோபு அவளைக் கடிந்துகொள்கிறார், அவர் “தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை.”—2:9, 10.
10சாத்தான் இப்போது யோபுக்கு “ஆறுதல் சொல்ல” மூன்று தோழர்களை அனுப்புகிறான். எலிப்பாஸ், பில்தாத், சோப்பார் என்பவர்களே அந்தத் தோழர்கள். யோபுவை தூரத்தில் பார்க்கையில் அவர்களுக்கு அடையாளம் தெரியவில்லை. ஆனால், அருகில் வந்த பிறகு சத்தமாய் தங்கள் குரல்களை எழுப்பி அழுது தங்கள் தலைகளில் தூசியைத் தூற்றிக்கொள்ள தொடங்குகின்றனர். பிறகு ஒரு வார்த்தையும் பேசாமல் அவர் முன் தரையில் உட்காருகின்றனர். இந்த மெளனமான ‘ஆறுதலில்’ ஏழு பகலும் இரவும் கழிகின்றன. கடைசியாக யோபு அந்த மெளனத்தைக் கலைத்து, 2:11.
தனக்கு ஆறுதல் சொல்ல வந்தவர்களோடு ஒரு நீண்ட விவாதத்தைத் தொடங்குகிறார்.—11முதல் சுற்று விவாதம் (3:1–14:22). இந்தக் கட்டத்திலிருந்து இந்நிகழ்ச்சி மேம்பட்ட எபிரெய செய்யுள் நடையில் உள்ளது. யோபு தான் பிறந்த நாளைச் சபித்து, தான் தொடர்ந்து வாழும்படி கடவுள் ஏன் அனுமதிக்கிறார் என யோசிக்கிறார்.
12எலிப்பாஸ் இதற்கு பதிலளிப்பவனாக, யோபுக்கு உத்தமத்தன்மை இல்லை என குற்றம் சாட்டுகிறான். நேர்மையானவர்கள் ஒருபோதும் அழிந்ததில்லை என அவன் கூறுகிறான். ஒரு நாள் இரவு தான் கண்ட தரிசனத்தை நினைவுகூருகிறான். அதில், கடவுளுக்கு தம் ஊழியர்மீது, அதிலும் வெறும் களிமண்ணும் பூமியின் தூசியுமாய் இருப்போர் மீது நம்பிக்கை இல்லை என்று ஒரு குரல் தன்னிடம் சொன்னதாக கூறுகிறான். சர்வவல்லமையுள்ள கடவுள் யோபுவுக்கு சிட்சை கொடுப்பதனாலேயே அவருக்கு துன்பம் ஏற்படுகிறது என்றும் குறிப்பிடுகிறான்.
13யோபு உணர்ச்சிப்பொங்க எலிப்பாஸுக்கு பதிலளிக்கிறார். துன்புறுத்துதலையும் துயரத்தையும் எதிர்ப்படும் எந்தச் சிருஷ்டியும் செய்வதுபோலவே அவரும் கதறுகிறார். மரணம் வந்தால் எவ்வளவு நிம்மதி! தனக்கு எதிராக சதிசெய்வதற்காக தன் தோழர்களைக் கடிந்துகொண்டு பின்வருமாறு மறுப்பு தெரிவிக்கிறார்: “எனக்கு உபதேசம்பண்ணுங்கள், நான் மவுனமாயிருப்பேன்; நான் எதிலே தவறினேனோ அதை எனக்குத் தெரியப்படுத்துங்கள்.” (6:24) ‘மனிதவர்க்கத்தை உற்றுநோக்குபவரான’ கடவுளுக்கு முன்பாக யோபு தன் சொந்த நீதிக்காக பரிந்து பேசுகிறார்.—7:20, NW.
14இப்போது பில்தாத் பேச ஆரம்பிக்கிறான். யோபுவின் குமாரர்கள் பாவம் செய்தார்கள் என்றும் யோபுவும்கூட நேர்மையுள்ளவர் அல்ல, அப்படி இருந்திருந்தால் கடவுள் அவருக்கு செவிகொடுத்திருப்பாரே என்றும் மறைமுகமாக குறிப்பிடுகிறான். முந்தின தலைமுறைகளை நோக்கும்படியும் தங்கள் முன்னோர் ஆராய்ந்த காரியங்களை வழிநடத்துதலுக்காக நோக்கும்படியும் யோபுக்கு போதிக்கிறான்.
15கடவுள் அநீதியுள்ளவர் அல்ல என யோபு பதிலளிக்கிறார். மேலும் அவர் மனிதனுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை, ஏனெனில் “ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.” (9:10) யோபு யெகோவாவோடு வழக்காடி ஜெயிக்க முடியாது. மாறாக கடவுளுடைய தயவிற்காக அவர் கெஞ்சி கேட்கத்தான் முடியும். எனினும், சரியானதைச் செய்ய நாடுவதில் ஏதாவது பயன் உண்டா? “சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் அவர் அழிக்கிறார்.” (9:22) பூமியில் நீதியுள்ள தீர்ப்பு இல்லை. கடவுளிடம்கூட தன் வழக்கில் தோற்றுவிடுவோமோ என யோபு பயப்படுகிறார். அவருக்கு ஒரு மத்தியஸ்தர் தேவை. தான் துன்பப்பட காரணமென்ன என்று கேட்டு தான் “களிமண்ணிலிருந்து” உண்டாக்கப்பட்டதை நினைவுகூரும்படி கடவுளிடம் கெஞ்சி கேட்கிறார். (10:9, NW) கடவுளுடைய கடந்த கால தயவுகளை நன்றியோடு நினைவுகூருகிறார். ஆனால், தன் மேல் தவறு இல்லை என்றாலும் தான் தொடர்ந்து விவாதித்தால் கடவுள் அதிகமாக கோபமே அடைவார் என கூறுகிறார். மரித்துவிட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்!
16இப்போது சோப்பார் விவாதத்தில் நுழைகிறான். வெறுமையான பேச்சுக்கு செவிகொடுக்க நாங்கள் என்ன பிள்ளைகளா? நீர் உண்மையில் சுத்தமானவர் என்று சொல்கிறீர், ஆனால் கடவுளே பேசினால் அவர் உம்முடைய குற்றத்தை வெளிப்படுத்துவார் என்பதுபோல அவன் பேசுகிறான். “தேவனுடைய அந்தரங்க ஞானத்தை நீர் ஆராய்ந்து அறியக்கூடுமோ?” என அவன் யோபுவிடம் கேட்கிறான். (11:7) அநியாயமான காரியங்களை அகற்றும்படி அவன் யோபுக்கு அறிவுரை கூறுகிறான், ஏனெனில் அவ்வாறு செய்பவர்களுக்கே ஆசீர்வாதங்கள் கிடைக்கும். மாறாக, “துன்மார்க்கருடைய கண்கள் பூத்துப்போ”கும் என்கிறான்.—11:20.
17“ஆம், நீங்களே ஞானமுள்ள ஜனங்கள்; உங்களுடனே ஞானம் சாகும்” என யோபு வெகு ஏளனத்துடன் கூறுகிறார். (12:2) அவரைப் பார்த்து மற்றவர்கள் சிரிக்கலாம், என்றாலும் அவர் தரம் குறைந்தவர் அல்ல. அவருடைய தோழர்கள் கடவுளின் படைப்புகளைக் கவனித்தாலே போதும் அவைகூட அவர்களுக்கு கற்பிக்கும். பலமும் நடைமுறை ஞானமும் கடவுளுக்கே உரியது. அவரே எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறார், “அவர் ஜாதிகளைப் பெருகவும் அழியவும் பண்ணுகிறார்.” (12:23) கடவுளுடன் தன் வழக்கை விவாதிப்பதில் யோபு இன்பம் காண்கிறார். ஆனால் அவருக்கு “ஆறுதல் சொல்ல” வந்த மூன்று பேரிடமோ, “நீங்கள் பொய்யைப் பிணைக்கிறவர்கள்; நீங்கள் எல்லாரும் காரியத்துக்குதவாத வைத்தியர்கள்” என்கிறார். (13:4) அவர்கள் மெளனமாயிருப்பதே ஞானமான காரியம்! தன் வழக்கு நியாயமானது என்ற நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தி, கடவுள் தனக்கு செவிகொடுக்கும்படி கேட்கிறார். “ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான்” என்ற கருத்திற்கு கவனம் செலுத்துகிறார். (14:1) மனிதன் ஒரு பூவை அல்லது நிழலைப்போல விரைவில் மறைந்துபோகிறான். அசுத்தமான ஒருவனிலிருந்து சுத்தமான ஒருவனைப் பிறப்பிக்க முடியுமோ? கடவுளுடைய கோபம் குறையும் வரையில் அவர் தன்னை ஷியோலில் மறைத்து வைக்கும்படி ஜெபிக்கையில் யோபு, “மனுஷன் செத்தபின் பிழைப்பானோ?” என்று கேட்கிறார். அவரே அதற்கு பதிலளிப்பவராய், “எனக்கு மாறுதல் எப்போது வருமென்று . . . நான் காத்திருக்கிறேன்” என்ற உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்.—14:13, 14.
18விவாதத்தின் இரண்டாம் சுற்று (15:1–21:34). எலிப்பாஸ் இரண்டாவது விவாதத்தைத் தொடங்குகையில் யோபுவின் அறிவை ஏளனம் செய்து, அவர் “தன் வயிற்றைக் கொண்டல்காற்றினால் நிரப்பி”னதாக கூறுகிறான். (15:2) யோபு ஒரு உத்தமர் என்ற உரிமைபாராட்டலை அவன் மறுபடியுமாக இழிவுபடுத்துகிறான். மரிக்கும் தன்மையுள்ள மனிதனோ பரலோகத்திலுள்ள தூதர்களோகூட யெகோவாவின் கண்களில் விசுவாசமுள்ளவர்களாக இருக்க முடியாது என்று கூறுகிறான். யோபு தன்னைக் கடவுளைவிட உயர்ந்தவர் என காட்ட முயற்சிப்பதாகவும் விசுவாசத்துரோகம், லஞ்சம் வாங்குதல், வஞ்சித்தல் போன்ற காரியங்களை செய்வதாகவும் மறைமுகமாக குற்றம் சாட்டுகிறான்.
19யோபுவின் தோழர்கள், ‘காற்றைப்போன்ற வார்த்தைகளால் அலட்டுண்டாக்குகிற தேற்றரவாளர்கள்’ என அவர் பதிலளிக்கிறார். (16:2, 3) அவர்கள் யோபுவின் நிலையில் இருந்தால் அவர் அவர்களை குற்றப்படுத்த மாட்டார். தன் நேர்மையை மெய்ப்பிக்க அவர் வெகுவாய் விரும்புகிறார். தன்னுடைய பதிவை வைத்திருந்து, தன் வழக்கை தீர்க்கப்போகிறவரான யெகோவாவையே அவர் நோக்கி இருக்கிறார். தன் தோழர்களுக்கு ஞானம் இல்லை என்பதை யோபு காண்கிறார். அவர்கள் எல்லா நம்பிக்கையையும் அற்றுப்போகப் பண்ணுகின்றனர். அவர்களுடைய “ஆறுதல்” இரவைப் பகல் என சொல்வதுபோல் உள்ளது. ‘ஷியோலுக்கு செல்வதே’ ஒரே நம்பிக்கை.—17:15, 16, NW.
20விவாதம் சூடு பிடிக்கிறது. யோபு தன் நண்பர்களைப் பகுத்துணர்வற்ற மிருகங்களுக்கு ஒப்பிட்டதாக நினைப்பதால் பில்தாத் 18:4) மற்றவர்களுக்கு ஒரு பாடமாக, யோபு பயங்கர கண்ணிக்குள் விழுவார் என எச்சரிக்கிறான். அவருக்கு பின் வாழ்வதற்கு சந்ததி இராது என்கிறான்.
இப்போது கோபமடைகிறான். “உமது நிமித்தம் பூமி பாழாய்ப் போகுமோ?” என அவன் யோபுவிடம் கேட்கிறான். (21யோபு பதிலளிப்பதாவது: “நீங்கள் எந்தமட்டும் என் ஆத்துமாவை வருத்தப்படுத்தி, வார்த்தைகளினால் என்னை நொறுக்குவீர்கள்?” (19:2) குடும்பத்தையும் நண்பர்களையும் அவர் இழந்துவிட்டார். அவருடைய மனைவியும் வீட்டாரும்கூட அவரை வெறுத்துவிட்டனர். அவரோ ‘தன் பல்லின் தோலுடன்’ மாத்திரமே தப்பியிருக்கிறார். (19:20) தன் சார்பாக இந்த விவாதத்தைத் தீர்க்க ஒரு மீட்பர் தோன்றுவார் என அவர் நம்புகிறார். அப்போதுதான் அவர் ‘தேவனைப் பார்ப்பார்.’—19:25, 26.
22யோபுவின் ‘கடிந்துகொள்ளுதலை’ கேட்க நேரிட்டதால் பில்தாதைப் போலவே சோப்பாரும் எரிச்சலடைகிறான். (20:3) யோபு செய்த பாவங்களின் விளைவாகவே அவர் துன்பப்படுகிறார் என அவன் மறுபடியும் சொல்கிறான். அக்கிரமக்காரரே எப்பொழுதும் கடவுளிடமிருந்து தண்டனையைப் பெறுகின்றனர். அவர்கள் செழுமையை அனுபவித்து மகிழ்ந்தாலும்கூட அவர்களுக்கு இளைப்பாறுதல் இல்லை என சோப்பார் கூறுகிறான்.
23கண்டனத்திற்குரிய விதத்தில் யோபு விவாதிக்கிறார்: கடவுள் அக்கிரமக்காரரை எப்போதுமே தண்டிக்கிறார் என்றால் அவர்கள் ஏன் சுகமாக வாழ்ந்து, முதுமையடைந்து, செல்வச்செழிப்பு பெறுகின்றனர்? தங்கள் வாழ்நாள் முழுவதும் அவர்கள் சந்தோஷமாக வாழ்கின்றனர். அவர்களுக்கு அடிக்கடி துன்பம் ஏற்படுவதில்லையே! செல்வந்தரும் ஏழைகளும் ஒன்றுபோலவே மரிக்கின்றனர். உண்மையில், துன்மார்க்கன் “நிர்வாகத்தோடும் சுகத்தோடும் வாழ்”ந்து மரிக்கிறான், நீதிமானோ பெரும்பாலும் “மனக்கிலேசத்தோடே” சாகிறான்.—21:23, 25.
24மூன்றாவது சுற்று விவாதம் (22:1–25:6). சர்வவல்லவருக்கு முன்பாக குற்றமற்றவனாக யோபு உரிமைபாராட்டுவதை ஏளனம் செய்யும் எலிப்பாஸ் மூர்க்கத்துடன் திரும்பவும் வார்த்தைகளால் தாக்குகிறான். யோபுமீது பொய்யான பழிகளை சுமத்துகிறான். அவர் தீமை செய்தார், ஏழைகளை சுரண்டினார், பசியாயிருந்தோருக்கு உணவு கொடுக்கவில்லை, விதவைகளையும் திக்கற்ற பிள்ளைகளையும் தவறாக நடத்தினார் என கூறுகிறான். யோபுவின் தனிப்பட்ட வாழ்க்கை, அவர் உரிமைபாராட்டும் அளவு தூய்மையாக இல்லை எனவும் அதனால்தான் யோபுக்கு இந்த மோசமான நிலை ஏற்பட்டது எனவும் எலிப்பாஸ் கூறுகிறான். ஆனால் “நீர் சர்வவல்லவரிடத்தில் மனந்திரும்பினால் . . . அவர் உமக்குச் செவிகொடுப்பார்” என எலிப்பாஸ் கூறுகிறான்.—22:23, 27.
25எலிப்பாஸின் மூர்க்கமான குற்றச்சாட்டு தவறு என யோபு பதிலளிக்கிறார். யோபுவின் நீதியுள்ள போக்கை கடவுளே அறிந்திருப்பதால் அவருக்கு முன்பாக தான் விசாரிக்கப்பட விரும்புவதாக கூறுகிறார். திக்கற்ற பிள்ளைகளையும் விதவைகளையும் ஏழைகளையும் ஒடுக்குகிற, கொலை, களவு, விபசாரம் போன்றவற்றை செய்கிற ஆட்களும் உள்ளனர். அவர்கள் சிறிதுகாலம் செழித்தோங்குவதாக தோன்றலாம், ஆனால் தங்கள் பலனை நிச்சயம் அடைவர். அவர்கள் முற்றிலுமாக அழிக்கப்படுவர். அப்படியிருக்க ‘என்னைப் பொய்யன் . . . ஆக்கத்தக்கவன் யார்?’ என யோபு சவால்விடுகிறார்.—24:25.
26இதற்கு பில்தாத் கூறும் எதிர்ப்பு சுருக்கமாக உள்ளது. கடவுளுக்கு முன்பாக ஒரு மனிதனும் சுத்தமாக இருக்க முடியாதென்ற தன் விவாதத்தை வலியுறுத்திக் கூறுகிறான். பேசுவதற்கு ஒன்றுமே இல்லாததால் சோப்பார் இந்த மூன்றாவது சுற்றில் பங்குகொள்வதில்லை.
27யோபுவின் முடிவான விவாதம் (26:1–31:40). யோபு தன் கடைசி பேச்சினால் தன் தோழர்களின் வாயை முற்றிலும் அடைத்துவிடுகிறார். (32:12, 15, 16) பெரும் ஏளனத்துடன் அவர் கூறுகிறார்: “சக்தியிலான் ஒருவனுக்கு நன்கு உதவுகின்றாயே! . . . விவேக மிலானுக்கு உன் ஆலோசனை அழகுதான்!” (26:2, 3, தி.மொ.) ஆனால், கடவுளுடைய பார்வையிலிருந்து ஷியோலும்கூட எதையுமே மறைக்க முடியாது. விண்வெளி, பூமி, மேகங்கள், சமுத்திரம், காற்று போன்றவற்றில் காணப்படும் கடவுளுடைய ஞானத்தை யோபு விவரிக்கிறார்; இவை எல்லாவற்றையும் மனிதன் கவனித்திருக்கிறான். ஆனாலும் இவை சர்வவல்லவருடைய வழிகளின் வெறும் ஓரம் மட்டுமே. இவை சர்வவல்லவரின் மகத்துவத்தைப் பற்றி வெறுமனே முணுமுணுக்கின்றன, அவ்வளவுதான்.
28தான் குற்றமற்றவர் என அவர் உறுதியாக நம்புவதால், “என் ஆவி பிரியுமட்டும் என் உத்தமத்தை என்னைவிட்டு விலக்கேன்” என்று கூறுகிறார். (27:5) இந்தத் தண்டனையைப் பெறுமளவுக்கு யோபு எந்தத் தவறையுமே செய்யவில்லை. அவர்களுடைய குற்றச்சாட்டுகளுக்கு எதிர்மாறாக, அக்கிரமக்காரர் சேமித்து வைத்த செல்வங்களை நீதிமான்கள் சுதந்தரித்து கொள்ளும்படி கடவுள் செய்வார். இவ்வாறு, உத்தமத்தைக் காத்துக்கொள்வோருக்கு பலனளிப்பார்.
29பூமியின் பொக்கிஷங்கள் (வெள்ளி, பொன், வெண்கலம்) எங்கிருந்து வருகின்றன என்று மனிதன் அறிவான், “இப்படியிருக்க, ஞானம் எங்கேயிருந்து வரும்”? (28:20) உயிருள்ளவர்கள் மத்தியில் அதைத் தேடியிருக்கிறான்; சமுத்திரத்திற்குள்ளும் சென்று பார்த்திருக்கிறான்; பொன்னையும் வெள்ளியையும் கொண்டு அதை வாங்க முடியாது. கடவுள் ஒருவரே ஞானத்தை அறிகிறவர். அவர், பூமி மற்றும் வானத்தின் கடையாந்தரங்களைக் காண்கிறார். காற்றையும் தண்ணீரையும் பகுத்தளிக்கிறார். மழையையும் புயல் மேகங்களையும் அடக்கியாளுகிறார். யோபு முடிவாக கூறுகிறார்: “இதோ! யெகோவாவுக்குப் பயப்படுவதே ஞானம், தீமையினின்று விலகுவதே பகுத்துணர்வு.”—28:28, NW.
30துன்பத்திற்குள்ளான யோபு இப்போது தன் வாழ்க்கை சரிதையைக் கூறுகிறார். கடவுளுடன் அவர் முன்பு அனுபவித்த நெருங்கிய உறவிற்குள் திரும்பவும் வர வேண்டும் என ஆவல் கொள்கிறார். அப்போது அந்தப் பட்டணத்தின் தலைவர்களும்கூட அவரை மதித்தனர். அவர் துன்பப்படுபவர்களைக் காப்பாற்றினார். குருடருக்கு கண்களாக சேவித்தார். அவருடைய ஆலோசனை நல்லதாக இருந்தது. அவருடைய வார்த்தைகளைக் கேட்க ஜனங்கள் காத்திருந்தனர். ஆனால் இப்பொழுதோ அந்தஸ்துள்ள நிலையிலிருந்து சிறியவர்களும்கூட அவரைப் பார்த்து சிரிக்கும் நிலைக்கு ஆளாகிவிட்டார். அவர்களுடைய தகப்பன்களோ அவருடைய மந்தையின் நாய்களோடு இருப்பதற்கும்கூட தகுதியற்றவர்களாக இருந்தனர். அவர்கள் அவர்மீது துப்பி அவரை எதிர்க்கின்றனர். இப்பொழுது அவருக்கு மிகப் பெரிய துன்பம் வந்தபோதிலும் அவர்கள் அவரை நிம்மதியாய் இருக்க விடுகிறதில்லை.
31தான் ஒப்புக்கொடுத்த ஒரு மனிதன் என்றும், யெகோவாவே தன்னை நியாயந்தீர்க்க வேண்டும் என்றும் யோபு கேட்கிறார். “சுமுத்திரையான தராசிலே தேவன் என்னை நிறுத்து, என் உத்தமத்தை அறிவாராக.” (31:6) யோபு தன் கடந்தகால செயல்களை ஆதரித்து வழக்காடுகிறார். அவர் விபசாரம் செய்யவும் இல்லை; மற்றவர்களுக்கு எதிராக சதி பண்ணவும் இல்லை. தேவையில் இருந்தவர்களுக்கு உதவிசெய்ய அவர் தவறவில்லை. அவர் செல்வந்தராக இருந்தபோதிலும் பொருட்செல்வத்தில் நம்பிக்கை வைக்கவில்லை. சூரியன், சந்திரன், நட்சத்திரங்களை அவர் வணங்கவில்லை; ஏனெனில் “இதுவும் நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படத்தக்க அக்கிரமமாயிருக்கும்; அதினால் உன்னதத்திலிருக்கிற தேவனை மறுதலிப்பேனே.” (31:28) தன் வாழ்க்கையின் உண்மையான பதிவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளைக் கூறும்படி தன் எதிராளிகளை அழைக்கிறார்.
32எலிகூ பேசுகிறார் (32:1–37:24). இதற்கிடையில், நாகோரின் குமாரனாகிய பூசின் சந்ததியைச் சேர்ந்த எலிகூ இந்த விவாதத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார். இவர் ஆபிரகாமின் தூரத்து உறவினர். வயதில் மூத்தவர்களுக்கு அதிக அறிவு இருக்கும் என அவர் உணர்ந்ததால் இதுவரை பேசாமல் இருந்தார். ஆனால், வயதல்ல கடவுளுடைய ஆவியே புரிந்துகொள்ளும் ஆற்றலைக் கொடுக்கிறது. யோபு, “தேவனைப் பார்க்கிலும் தன்னைத் தான் நீதிமானாக்கினதினிமித்தம்” அவர்மீது எலிகூவின் கோபம் மூளுகிறது. ஆனால் யோபுவின் மூன்று தோழர்களும், முற்றிலும் ஞானமற்றவர்களாக கடவுளைப் பொல்லாதவர் என கூறியதால் அவர்கள்மீது அவருடைய கோபம் இன்னும் அதிகரிக்கிறது. எலிகூவிற்குள் ‘வார்த்தைகள் நிறைந்திருக்கின்றன.’ பட்சபாதம் இல்லாமலும் “ஒரு மனுஷனுக்கும் இச்சகம் பேசாமலும்” இவற்றை வெளிப்படுத்திக் கூறும்படி கடவுளுடைய ஆவி அவரை ஏவுகிறது.—யோபு 32:2, 3, 18-22; ஆதி. 22:20, 21.
33கடவுளே தன் சிருஷ்டிகர் என ஒப்புக்கொண்டு எலிகூ நேர்மையாக பேசுகிறார். யோபு, கடவுளை உண்மையுள்ளவர் என நிரூபிப்பதைவிட தன் மேல் எந்தக் குற்றமும் இல்லையென நிரூபிப்பதிலேயே அதிக அக்கறை காட்டினார் என்று குறிப்பிடுகிறார். கடவுள் தம்முடைய செயல்களுக்கு விளக்கமளிக்க வேண்டியதில்லை. ஆகவே அவர் யோபுவின் எல்லா வார்த்தைகளுக்கும் பதில் சொல்ல தேவை இல்லை. அப்படியிருந்தும் யோபு கடவுளுக்கு எதிராக வாதிட்டார். ஆனாலும், யோபு மரணத்தை நெருங்குகையில் கடவுள் அவரிடம் தயவு காண்பிக்கிறார். ஒரு தூதனை அனுப்பி பின்வருமாறு கூறுகிறார்: “அவன் படுகுழியில் இறங்காதபடிக்கு: நீர் அவனை இரட்சியும்; மீட்கும் பொருளை நான் கண்டுபிடித்தேன் . . . அப்பொழுது அவன் மாம்சம் வாலிபத்தில் இருந்ததைப் பார்க்கிலும் ஆரோக்கியமடையும்; தன் வாலவயது நாட்களுக்குத் திரும்புவான்.” (யோபு 33:24, 25) நீதிமான் நிச்சயம் நல்ல நிலைக்குத் திரும்புவான்!
34ஞானிகளே கேளுங்கள் என்று எலிகூ அழைக்கிறார். உத்தமத்தைக் காப்பதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்று சொன்னதற்காக அவர் யோபுவை கடிந்துகொள்கிறார்: “ஆகையால் புத்திமான்களே, எனக்குச் செவிகொடுங்கள்; அக்கிரமம் தேவனுக்கும், அநீதி சர்வவல்லவருக்கும் தூரமாயிருக்கிறது. மனுஷனுடைய செய்கைக்குத்தக்கதை அவனுக்குச் சரிக்கட்”டுகிறார். (34:10, 11) அவரால் ஜீவ சுவாசத்தை நீக்க முடியும்; அப்போது மாம்சமான யாவும் மரிக்கும். கடவுள் பட்சபாதமில்லாமல் நியாயந்தீர்க்கிறார். யோபு தன் சொந்த நீதியையே முதன்மைப்படுத்தி வந்தார். அவர் “அறிவில்லாமல்” துணிச்சலாக பேசினார். ஆனாலும் வேண்டுமென்றே அவ்வாறு செய்யவில்லை. கடவுள் அவரிடம் நீடிய பொறுமையைக் காண்பித்தார். (34:34) கடவுளை நியாயமுள்ளவரென நிரூபிப்பதற்காக சொல்லப்பட வேண்டிய அநேக காரியங்கள் உள்ளன. கடவுள் நீதிமான்களைக் கண்டித்தாலும் அவர்கள் மேலிருந்து தம்முடைய கண்களை விலக்கமாட்டார். “அவர் துன்மார்க்கரைப் பிழைக்க ஒட்டாதிருக்கிறார்; சிறுமையானவர்களின் நியாயத்தை விசாரிக்கிறார்.” (36:6) கடவுளே உன்னத போதகராக இருப்பதால் யோபு அவருடைய நடவடிக்கையை மேன்மைப்படுத்த வேண்டும்.
35அப்போது ஒரு புயல் உருவாகிக்கொண்டிருக்கிறது. பிரமிப்பூட்டும் இந்தச் சூழமைவில், கடவுளின் மகத்துவமான காரியங்களைப் பற்றியும் இயற்கை சக்திகளை அவர் அடக்கியாளுவதைப் பற்றியும் எலிகூ பேசுகிறார். “தரித்துநின்று தேவனுடைய ஆச்சரியமான கிரியைகளைத் தியானித்துப் பாரும்” என்று அவர் யோபுவிடம் கூறுகிறார். (37:14) பொன்னொளி போன்ற கடவுளுடைய மகிமையையும் பிரமிப்பூட்டும் கண்ணியத்தையும் கவனியுங்கள். அவற்றை மனிதனால் கண்டுபிடிக்கவே முடியாது. “அவர் வல்லமையிலும் நியாயத்திலும் பெருத்தவர்; அவர் மகா நீதிபரர்; அவர் ஒடுக்கமாட்டார்.” “தங்கள் எண்ணத்தில் ஞானிகளாயிருக்கிற” ஆட்களை அல்ல; மாறாக அவருக்கு பயப்படுகிறவர்களையே யெகோவா கவனித்துக் கொள்கிறார்.—37:23, 24.
36யெகோவா யோபுக்கு பதிலளிக்கிறார் (38:1–42:6). கடவுள் தன்னிடம் பேசும்படி யோபு ஆரம்பத்தில் கேட்டார். இப்பொழுது யெகோவா புயல் காற்றிலிருந்து மாட்சிமை பொருந்தியவராக பதிலளிக்கிறார். அவர் யோபுவிடம் வரிசையாக பல கேள்விகளைக் கேட்கிறார். அந்தக் கேள்விகள், மனிதனின் சிறுமையையும் கடவுளின் மேன்மையையும் வெளிக்காட்டும் நடைமுறை உதாரணங்களாகும். “நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? . . . அதின் கோடிக்கல்லை வைத்தவர் யார்? அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே.” (38:4, 6, 7) அந்தச் சமயத்தில் யோபு இன்னும் பிறக்கக்கூட இல்லை! பூமியின் சமுத்திரம், அதன் உடையாகிய மேகம், விடியல், மரண வாசல்கள், ஒளி, இருள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, யோபுவால் பதிலளிக்க முடியாத அநேக கேள்விகளை யெகோவா வரிசையாக கேட்கிறார். “நீ அதை அறியும்படி அப்போது பிறந்திருந்தாயோ? உன் நாட்களின் தொகை அவ்வளவு பெரிதோ”? (38:21) அதுமட்டுமா, பனி மற்றும் கல்மழையின் பண்டகசாலைகள், புயல் காற்று, மழை, பனித்துளி, பனிக்கட்டி, உறைபனி, வானத்திலுள்ள வல்லமைமிக்க நட்சத்திர கூட்டங்கள், மின்னல்கள், மேக அடுக்குகள், விலங்குகள், பறவைகள் போன்றவற்றைப் பற்றியென்ன?
37யோபு மனத்தாழ்மையுடன் பின்வருமாறு ஒப்புக்கொள்கிறார்: “இதோ, நான் நீசன்; நான் உமக்கு என்ன மறு உத்தரவு சொல்லுவேன்; என் கையினால் என் வாயைப் பொத்திக்கொள்ளுகிறேன்.” (40:4) யோபு அந்த விவாதத்தை எதிர்ப்படும்படி யெகோவா கட்டளையிடுகிறார். அவருடைய இயற்கை படைப்புகளில் காணப்படும் மேன்மையையும், ஈடற்ற தன்மையையும், பலத்தையும் உயர்த்திக் காட்டும் வரிசையான பல கேள்விகளை அவர் மறுபடியும் கேட்கிறார். பிகேமோத்தும் லிவியாதானும்கூட யோபுவைவிட அதிக வல்லமை வாய்ந்தவை! இப்போது யோபு முற்றிலும் தாழ்த்தப்பட்டவராக தன் நோக்குநிலை தவறு என கூறி, தான் அறிவில்லாமல் பேசியதாக ஒப்புக்கொள்கிறார். வெறுமனே மற்றவர்கள் சொல்ல கேட்டதினால் அல்ல, மாறாக பகுத்துணர்வுடன் அவர் இப்பொழுது கடவுளைக் காண்கிறார். ஆகவே தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டு “தூளிலும் சாம்பலிலும்” இருந்து மனஸ்தாபப்படுகிறார்.—42:6.
38யெகோவாவின் நியாயத்தீர்ப்பும் ஆசீர்வாதமும் (42:7-17). எலிப்பாஸும் அவனுடைய இரண்டு தோழர்களும் தம்மைப் பற்றிய உண்மையைப் பேசவில்லை என்பதற்காக யெகோவா அவர்கள் மேல் குற்றம் சாட்டுகிறார். அவர்கள் பலிகளைச் செலுத்தி யோபு அவர்களுக்காக ஜெபிக்கும்படி கேட்க வேண்டும். யெகோவா அதற்கு பிறகு, யோபுவின் துயரமான நிலைமையை மாற்றி இரட்டிப்பான அளவு அவரை ஆசீர்வதிக்கிறார். அவருடைய சகோதரரும், சகோதரிகளும், முன்னாள் நண்பர்களும் பரிசுகளுடன் அவரைத் தேடி வருகின்றனர். முன்னர் இருந்ததைவிட இரட்டிப்பான செம்மறியாடுகள், ஒட்டகங்கள், கால்நடைகள், பெண் கழுதைகள் (NW) ஆகியவற்றால் ஆசீர்வதிக்கப்படுகிறார். அவருக்கு மறுபடியும் பத்து பிள்ளைகள் பிறக்கின்றனர், அவருடைய மூன்று குமாரத்திகளைப் போன்ற அழகுள்ளவர்கள் வேறு யாருமே இல்லை. அவருடைய வாழ்நாளோடு இன்னும் 140 ஆண்டுகள் அற்புதகரமாக சேர்க்கப்படுகின்றன. ஆகவே, அவர் தன் சந்ததியின் நான்கு தலைமுறைகளைக் காண்கிறார். அவர் “நெடுநாளிருந்து, பூரண வயதுள்ளவனாய்” மரிக்கிறார்.—42:17.
ஏன் பயனுள்ளது
39யோபு புத்தகம் யெகோவாவை மேன்மைப்படுத்தி, அளவிட முடியாத அவருடைய ஞானத்திற்கும் வல்லமைக்கும் சாட்சிபகருகிறது. (12:12, 13; 37:23) இந்த ஒரே புத்தகத்தில், கடவுள் சர்வவல்லவர் என 31 தடவை குறிப்பிடப்படுகிறார். வேதாகமத்தின் மற்ற பகுதிகள் எல்லாவற்றிலும் இருப்பதைப் பார்க்கிலும் இது மிகவும் அதிகமாகும். இந்தப் புத்தகம் அவருடைய நித்தியத்துவத்தையும் மேன்மையான ஸ்தானத்தையும் (10:5; 36:4, 22, 26; 40:2; 42:2), அவருடைய நீதி, அன்புள்ள தயவு, இரக்கம் போன்றவற்றையும்கூட (36:5-7; 10:12; 42:12) மிக உயர்வாக புகழுகிறது. மனிதனுடைய இரட்சிப்பைக் காட்டிலும் யெகோவா நியாயநிரூபணம் செய்யப்படுவதையே முக்கியமாக வலியுறுத்துகிறது. (33:12; 34:10, 12; 35:2; 36:24; 40:8) இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா யோபுவிற்கும் கடவுள் என காட்டப்படுகிறார்.
40யோபு புத்தகத்திலுள்ள விவரம் கடவுளின் படைப்பு செயலை மேம்படுத்தி விளக்குகிறது. (38:4–39:30; 40:15, 19; 41:1; 35:10) மனிதன் தூசியிலிருந்து உண்டாக்கப்பட்டான் அங்கேயே திரும்பவும் போகிறான் என்ற ஆதியாகம பதிவிற்கு இசைவாக உள்ளது. (யோபு 10:8, 9; ஆதி. 2:7; 3:19) “மீட்பர்,” “மீட்கும்பொருள்,” ‘செத்தப்பின் பிழைப்பது’ ஆகிய பதங்கள் இதில் வருகின்றன. இவ்வாறு கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் முக்கியத்துவம் வாய்ந்த போதகங்கள் பற்றிய முற்காட்சியை அளிக்கிறது. (யோபு 19:25; 33:24; 14:13, 14) தீர்க்கதரிசிகளும் கிறிஸ்தவ எழுத்தாளர்களும் இந்தப் புத்தகத்திலுள்ள கூற்றுகள் பலவற்றை எடுத்துக் குறிப்பிடுகின்றனர் அல்லது அவற்றிற்கு இணையானவற்றை கூறுகின்றனர். உதாரணமாக, இவற்றை ஒப்பிடுக: யோபு 7:17—சங்கீதம் 8:4; யோபு 9:24—1 யோவான் 5:19; யோபு 10:8—சங்கீதம் 119:73; யோபு 12:25—உபாகமம் 28:29; யோபு 24:23—நீதிமொழிகள் 15:3; யோபு 26:8—நீதிமொழிகள் 30:4; யோபு 28:12, 13, 15-19—நீதிமொழிகள் 3:13-15; யோபு 39:30—மத்தேயு 24:28. c
41வாழ்க்கை நடத்துவதற்கான யெகோவாவின் நீதியுள்ள தராதரங்கள் பல பகுதிகளில் குறிப்பிடப்படுகின்றன. பொருளாசை (யோபு 31:24, 25), விக்கிரகாராதனை (31:26-28), விபசாரம் (31:9-12), பிறர் துன்பம் கண்டு மகிழ்வது (31:29), அநீதி, பட்சபாதம் (31:13; 32:21), சுயநலம் (31:16-21), நேர்மையின்மை, பொய் சொல்லுதல் (31:5) போன்றவற்றை இந்தப் புத்தகம் வன்மையாக கண்டனம் செய்கிறது. இவற்றைப் பழக்கமாக செய்யும் ஒருவர் கடவுளுடைய தயவையும் நித்திய ஜீவனையும் பெற முடியாது என்றும் காட்டுகிறது. ஆழ்ந்த மரியாதை, பணிவு, தைரியம், துணிவு, கடவுளை மேன்மைப்படுத்துவது போன்ற அருமையான குணங்களுக்கு எலிகூ சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறார். (32:2, 6, 7, 9, 10, 18-20; 33:6, 33) யோபு தலைமை தாங்கிய விதம், அவருடைய குடும்பத்தை கவனித்துக் கொண்டது, அவருடைய உபசரிக்கும் தன்மை ஆகியவையும் நல்ல பாடமாக அமைகின்றன. (1:5; 2:9, 10; 31:32) என்றாலும், உத்தமத்தைக் காத்துக்கொண்டு, பொறுமையாய் சகித்திருந்ததற்கே யோபு பெயர் பெற்றிருக்கிறார். இவ்வாறு எல்லா காலங்களிலும், முக்கியமாய் விசுவாசத்தை சோதிக்கும் இக்காலங்களிலும் கடவுளுடைய ஊழியர்களுக்கு விசுவாசத்தைப் பலப்படுத்தும் அருமையான முன்மாதிரியாக சேவிக்கிறார். “யோபின் பொறுமையைக் [“சகிப்புத்தன்மையைக்,” NW] குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே.”—யாக். 5:11.
42யோபு, இராஜ்ய வாக்குறுதிகள் கொடுக்கப்பட்ட ஆபிரகாமின் வித்தில் ஒருவர் அல்ல. என்றபோதிலும் அவருடைய உத்தமத்தைப் பற்றிய இந்தப் பதிவு, யெகோவாவின் ராஜ்ய நோக்கங்கள் பற்றி தெளிவாக புரிந்துகொள்ள உதவுகிறது. கடவுளுக்கும் சாத்தானுக்கும் இடையேயுள்ள அடிப்படையான விவாதத்தை வெளிப்படுத்துவதால் இந்தப் புத்தகம் தெய்வீக பதிவின் ஓர் இன்றியமையாத பாகமாகும். மனிதன், சர்வலோக பேரரசராக யெகோவாவிடம் உத்தமத்தைக் காத்துக்கொள்வானா என்பதே அந்த விவாதம். இந்தப் பூமியும் மனிதனும் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன்பே படைக்கப்பட்ட தூதர்களும் இதைக் கவனிக்கின்றனர் என இது காட்டுகிறது. அதோடு, இந்தப் பூமியிலும் இந்த விவாதம் எப்படி முடியும் என்பதிலும் அவர்கள் அதிக அக்கறை கொண்டுள்ளனர் என்றும் காட்டுகிறது. (யோபு 1:6-12; 2:1-5; 38:6, 7) இந்த விவாதம் யோபுவின் நாளுக்கு முன்பே இருந்தது எனவும் சாத்தான் உண்மையான ஓர் ஆவி ஆள் எனவும் காட்டுகிறது. இந்தப் புத்தகத்தை மோசே எழுதியிருந்தார் என்றால், பைபிளின் எபிரெய வாக்கியத்தில் ஹாஸ்சேட்டன் (has·Sa·tanʹ) என்ற இந்தச் சொற்றொடர் இந்த இடத்தில்தான் முதன்முதலில் உபயோகிக்கப்படுகிறது. இது ‘அந்தப் பழைய பாம்பை’ அடையாளம் காணவும் உதவுகிறது. (யோபு 1:6, NW அடிக்குறிப்பு; வெளி. 12:9) மனிதவர்க்கம் எதிர்ப்படும் துன்பம், நோய், மரணம் போன்றவற்றிற்கு கடவுள் காரணரல்ல எனவும் இந்தப் புத்தகம் நிரூபிக்கிறது. அதேசமயம், அக்கிரமமும் அக்கிரமக்காரரும் தொடரும்படி அனுமதிக்கப்படுகையில், நீதிமான்கள் ஏன் துன்புறுத்தப்படுகின்றனர் என்பதையும் விளக்குகிறது. இந்த விவாதத்திற்கு முடிவுகட்ட யெகோவா அதிகமாக விரும்புகிறார் என்றும் காட்டுகிறது.
43கடவுளுடைய ராஜ்யத்தில் வாழ விரும்பும் யாவரும் தங்கள் உத்தமத்தைக் காத்துக்கொண்டு, அதன் மூலம் ‘குற்றஞ்சாட்டுகிறவனான’ சாத்தானுக்கு பதிலளிக்க வேண்டிய காலம் இதுவே. (வெளி. 12:10, 11) ‘திகைக்க வைக்கும் துன்பங்கள்’ மத்தியிலும், உத்தமத்தைக் காப்போர் கடவுளுடைய பெயர் பரிசுத்தப்படுவதற்காகவும் அவருடைய ராஜ்யம் வந்து சாத்தானையும் பரிகாசம் பண்ணும் அவனுடைய வித்தையும் அழித்துப் போடுவதற்காகவும் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும். அது கடவுளுடைய ‘கலகத்திற்கும் யுத்தத்திற்குமான’ நாள். அதற்கு பிறகு, யோபு நம்பிக்கையோடு எதிர்பார்த்த விடுதலையும் ஆசீர்வாதங்களும் உண்டாயிருக்கும்.—1 பே. 4:12; மத். 6:9, 10; யோபு 38:23; 14:13-15.
[அடிக்குறிப்புகள்]
a வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கங்கள் 280-1, 663, 668, 1166; தொ. 2, பக்கங்கள் 562-3.
b 1987, தொ. 6, பக்கம் 562.
c வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 2, பக்கம் 83.
[கேள்விகள்]
1. யோபு என்ற பெயரின் அர்த்தம் என்ன, என்ன கேள்விகளுக்கு அந்தப் புத்தகம் பதிலளிக்கிறது?
2. யோபு மெய்யான ஓர் ஆள் என்பதை எது நிரூபிக்கிறது?
3. யோபு புத்தகம் தேவாவியால் ஏவப்பட்டது என்பதற்கு என்ன அத்தாட்சி உள்ளது?
4. இந்த சம்பவம் எங்கே எப்போது நடந்தது, யோபு புத்தகம் எப்போது எழுதி முடிக்கப்பட்டது?
5. யோபு புத்தகத்தை மோசே எழுதினார் என எது காட்டுகிறது?
6. யோபு புத்தகம் எந்த வழிகளில் தலைசிறந்த ஓர் இலக்கிய படைப்பைக் காட்டிலும் மேம்பட்டுள்ளது?
7. இந்தப் புத்தகத்தின் ஆரம்பத்தில் யோபு என்ன நிலையில் இருக்கிறார்?
8. (அ) சாத்தான் யோபுவின் உத்தமத்திற்கு எதிராக ஏன் சவால் விடுகிறான்? (ஆ) யெகோவா இந்தச் சவாலை எவ்வாறு ஏற்கிறார்?
9. (அ) என்ன கடுமையான சோதனைகள் யோபுக்கு நேரிடுகின்றன? (ஆ) அவர் உத்தமத்தோடு இருந்தார் என எது நிரூபிக்கிறது?
10. என்ன மெளன ‘ஆறுதலை’ சாத்தான் அளிக்கிறான்?
11-13. யோபு விவாதத்தை எவ்வாறு ஆரம்பிக்கிறார், எலிப்பாஸ் என்ன குற்றம் சாட்டுகிறான், யோபுவின் உணர்ச்சிப்பொங்கும் பதில் என்ன?
14, 15. பில்தாதின் விவாதம் என்ன, கடவுளுடன் தன் வழக்கில் தோற்றுவிடுவோமோ என யோபு ஏன் பயப்படுகிறார்?
16, 17. (அ) என்ன தற்பெருமையான அறிவுரையை சோப்பார் கொடுக்கிறான்? (ஆ) யோபு தனக்கு ‘ஆறுதல் சொல்வோரை’ எவ்வாறு மதிப்பிடுகிறார், என்ன உறுதியான நம்பிக்கை அவருக்கு இருக்கிறது?
18, 19. (அ) என்ன ஏளனத்துடன் எலிப்பாஸ் இந்தத் விவாதத்தின் இரண்டாவது சுற்றை ஆரம்பிக்கிறான்? (ஆ) யோபு தன் தோழர்களின் ‘ஆறுதலை’ எவ்வாறு கருதுகிறார், எதற்காக அவர் யெகோவாவை நோக்கியிருக்கிறார்?
20, 21. பில்தாத் என்ன கோபத்தை வெளிப்படுத்துகிறான், யோபு எதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார், தான் எதில் நம்பிக்கை வைத்திருப்பதாக யோபு காட்டுகிறார்?
22, 23. (அ) சோப்பார் ஏன் எரிச்சலடைகிறான், யோபு செய்ததாக கூறும் பாவங்கள் பற்றி அவன் என்ன சொல்கிறான்? (ஆ) யோபுவின் கண்டனத்திற்குரிய பதில் என்ன?
24, 25. (அ) சுயநீதிமானான எலிப்பாஸ், யோபுமீது என்ன பொய்யான குற்றச்சாட்டை சுமத்துகிறான்? (ஆ) அதற்கு பதில் சொல்பவராக யோபு, என்ன விவாதத்தையும் சவாலையும் முன்வைக்கிறார்?
26. பில்தாதும் சோப்பாரும் மேலும் என்ன சொல்கின்றனர்?
27. யோபு, சர்வவல்லவரின் மகத்துவத்தை எவ்வாறு உயர்த்திப் பேசுகிறார்?
28. உத்தமத்தைப் பற்றி என்ன வெளிப்படையான கூற்றை யோபு கூறுகிறார்?
29. யோபு ஞானத்தை எவ்வாறு விவரிக்கிறார்?
30. ஆரம்பத்திலிருந்த என்ன நிலைக்கு திரும்ப வரும்படி யோபு ஆவல் கொள்கிறார், ஆனால் அவருடைய தற்போதைய நிலை என்ன?
31. யாருடைய தீர்ப்பில் தனக்கு நம்பிக்கை இருப்பதாக யோபு கூறுகிறார், தன் வாழ்க்கையின் உண்மையான பதிவைப் பற்றி அவர் என்ன சொல்கிறார்?
32. (அ) இப்போது பேசுவது யார்? (ஆ) யோபுமீதும் அவருடைய தோழர்கள்மீதும் எலிகூவின் கோபம் ஏன் பற்றியெரிகிறது, பேசும்படி அவரை ஏவுவது எது?
33. யோபு எதில் தவறுசெய்திருக்கிறார், எனினும் கடவுள் அவருக்கு என்ன தயவு காட்டுவார்?
34. (அ) எலிகூ மேலுமாக எவ்வாறு கடிந்துகொள்கிறார்? (ஆ) தன் சுயநீதியை மேன்மைப்படுத்துவதற்கு பதிலாக யோபு என்ன செய்ய வேண்டும்?
35. (அ) யோபு எதற்கு கவனம் செலுத்த வேண்டும்? (ஆ) யெகோவா யாருக்கு தயவு காட்டுவார்?
36. என்ன உதாரணத்துடனும், வரிசையான என்ன கேள்விகளுடனும் யெகோவாவே இப்பொழுது யோபுக்கு கற்பிக்கிறார்?
37. கூடுதலான என்ன கேள்விகள் யோபுவை தாழ்த்துகின்றன, எதை ஒப்புக்கொண்டு செய்யும்படி தூண்டப்படுகிறார்?
38. (அ) எலிப்பாஸ் மற்றும் அவனுடைய தோழர்களிடம் யெகோவா என்ன சொல்லி முடிக்கிறார்? (ஆ) யோபுமீது அவர் என்ன தயவையும் ஆசீர்வாதத்தையும் பொழிகிறார்?
39. யோபு புத்தகம் என்னென்ன வழிகளில் யெகோவாவை மேன்மைப்படுத்தி, உயர்த்திப் பேசுகிறது?
40. (அ) யோபு புத்தகம் கடவுளின் படைப்புகளை எவ்வாறு மேம்படுத்தி விளக்குகிறது? (ஆ) இது, கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் போதகங்களுக்கு எவ்வாறு ஒரு முன்காட்சியை அளித்து, அவற்றோடு இசைந்துள்ளது?
41. (அ) தேவாட்சிக்குரிய என்ன தராதரங்கள் யோபு புத்தகத்தில் வலியுறுத்தப்படுகின்றன? (ஆ) கடவுளுடைய ஊழியனாகிய யோபு எந்த விதத்தில் இன்று நமக்கு மிகச் சிறந்த முன்மாதிரியாக இருக்கிறார்?
42. என்ன அடிப்படையான ராஜ்ய விவாதம் யோபு புத்தகத்தில் தெளிவாக்கப்படுகிறது, இந்த விவாதத்தின் அக்கறையைத் தூண்டும் என்ன அம்சங்கள் இதில் விளக்கப்படுகின்றன?
43. யோபு புத்தகத்திலுள்ள தெய்வீக வெளிப்படுத்துதல்களுக்கு இசைவாக, கடவுளுடைய ராஜ்ய ஆசீர்வாதங்களைப் பெற விரும்பும் யாவரும் என்ன போக்கை இப்பொழுது பின்பற்ற வேண்டும்?