Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் புத்தக எண் 2—யாத்திராகமம்

பைபிள் புத்தக எண் 2—யாத்திராகமம்

பைபிள் புத்தக எண் 2—யாத்திராகமம்

எழுத்தாளர்: மோசே

எழுதப்பட்ட இடம்: வனாந்தரம்

எழுதி முடிக்கப்பட்டது: பொ.ச.மு. 1512

காலப்பகுதி: பொ.ச.மு. 1657-1512

1. (அ) யாத்திராகமத்தின் தனிச்சிறப்பு அம்சங்கள் யாவை? (ஆ) யாத்திராகமத்துக்கு என்ன பெயர்கள் வழங்கப்பட்டிருக்கின்றன, இது எந்த விவரப்பதிவின் தொடர்ச்சி?

 யெகோவா தம்முடைய பெயர் தரித்த ஜனத்தை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்தபோது நடப்பித்த மகத்தான அடையாளங்களையும் அற்புதங்களையும் பற்றிய ஆர்வத்தைத் தூண்டும் விவரங்கள்; இஸ்ரவேலை தம்முடைய விசேஷித்த உடைமையைப் போல “ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய்” ஒழுங்குபடுத்தியது; தேவாட்சிக்கு உட்பட்ட தேசமாக இஸ்ரவேல் சரித்திரத்தின் ஆரம்பம்​—இவையே பைபிள் புத்தகமாகிய யாத்திராகமத்தின் தனிச்சிறப்பு அம்சங்கள். (யாத். 19:6) இது, எபிரெயுவில் உவீல்லே ஷெமாஹத் (Weʼelʹleh shemohthʹ) என அழைக்கப்படுகிறது. இதன் அர்த்தம் “இப்போது அந்தப் பெயர்களானவை” என்பதாகும். அல்லது வெறுமனே ஷெமாஹத் என்றும் அழைக்கப்படும், இது “பெயர்கள்” என பொருள்படும். இந்த எபிரெய வார்த்தைகள் அந்தப் புத்தகத்தில் முதலில் வரும் வார்த்தைகளாகும். இதன் தற்கால பெயர் கிரேக்க செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பிலிருந்து வருகிறது. அங்கே இது ஈக்சோடாஸ் (Eʹxo·dos) என அழைக்கப்படுகிறது. அது எக்சொடஸ் (Exodus) என லத்தீன் வடிவமாக்கப்பட்டுள்ளது, “வெளிச்செல்லுதல்” அல்லது “புறப்படுதல்” என்பது இதன் பொருள். ஆதியாகம விவரப்பதிவின் தொடர்ச்சியே யாத்திராகமம் என்பதை பின்வரும் விஷயங்கள் காட்டுகின்றன: “இப்போது” (NW) (சொல்லர்த்தமாக சொன்னால், “மேலும்”) என்ற வார்த்தையோடு ஆரம்பமாகிறது. அதோடு, ஆதியாகமம் 46:​8-27-ல் உள்ள யாக்கோபின் குமாரர்களுடைய பெயர் பட்டியலை மீண்டும் குறிப்பிடுகிறது.

2 யெகோவா என்ற கடவுளுடைய மகத்தான பெயரை மகிமையோடும் பரிசுத்தத் தன்மையோடும் மிகச் சிறப்பாக யாத்திராகமம் வெளிப்படுத்துகிறது. தம்முடைய பெயரின் ஆழமான அர்த்தத்தை தெளிவுபடுத்தியபோது, மோசேயிடம் கடவுள் சொன்னார்: “நான் என்னவாக நிரூபிப்பேனோ அவ்வாறே நிரூபிப்பேன்.” மேலும், இஸ்ரவேலரிடம் இவ்வாறு சொல்லும்படி அவர் மோசேக்கு கட்டளையிட்டார்: “நிரூபிப்பேன் [எபிரெயுவில்: אהיה, யெஹ்யா (ʼEh·yehʹ); ஹாயா (ha·yahʹ) என்ற எபிரெய வினைச்சொல்லிலிருந்து வந்தது] என்பவர் என்னை உங்களிடத்திற்கு அனுப்பினார்.” யெகோவா (אטיח, YHWH, ய்ஹ்வ்ஹ்) என்ற பெயர் “ஆகும்” என பொருள்படும் எபிரெய வினைச்சொல் ஹாவா (ha·wahʹ) என்பதிலிருந்து வருகிறது. “அவர் ஆகும்படி செய்கிறார்” (“He Causes to Become”) என அர்த்தப்படுத்துகிறது. நிச்சயமாகவே, யெகோவா தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலின் சார்பாக நடப்பித்த வல்லமைவாய்ந்த, பயங்கரமான செயல்கள், அவர் பெயரை சிறப்பித்து, மிகுந்த மகிமையால் அலங்கரித்தன. இவ்வாறு அது, ‘தலைமுறை தலைமுறையாக’ நினைவுகூரத்தக்க, நித்திய காலமும் உயர்வாக போற்றி புகழத்தக்க உன்னத பெயரானது. இந்தப் பெயரோடு சம்பந்தப்பட்ட அதிசயமான சரித்திரத்தை அறிவதும், “நானே யெகோவா” என்று அறிவிக்கிற ஒரே உண்மையான கடவுளை வணங்குவதும் எல்லாவற்றை பார்க்கிலும் மிக அதிக பயனுள்ளது. aயாத். 3:​14, 15, NW; 6:​6, தி.மொ.

3மோசே யாத்திராகமத்தின் எழுத்தாளர். இப்புத்தகம் ஐந்தாகமத்தின் (Pentateuch) இரண்டாம் தொகுதி என்பதிலிருந்து இது புலனாகிறது. யெகோவாவின் வழிநடத்துதலின்கீழ் மோசே பதிவு செய்த மூன்று சந்தர்ப்பங்களை இந்தப் புத்தகமே குறிப்பிடுகிறது. (17:14; 24:4; 34:27) இயேசுவும் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் எழுத்தாளர்களும் யாத்திராகமத்தை 100-க்கும் மேற்பட்ட தடவை மேற்கோள் காட்டுகின்றனர் அல்லது குறிப்பிடுகின்றனர் என பைபிள் கல்விமான்களாகிய வெஸ்ட்காட் என்பவரும் ஹார்ட் என்பவரும் சொல்கின்றனர். உதாரணமாக, “மோசே நியாயப்பிரமாணத்தை உங்களுக்குக் கொடுக்கவில்லையா?” என இயேசு சொன்னார். யாத்திராகமம் சீனாய் வனாந்தரத்தில் பொ.ச.மு. 1512-ல் எழுதப்பட்டது. அப்போது, இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து விடுதலையாகி ஒரு வருடம் கடந்துவிட்டது. 145 வருட காலப்பகுதியில், அதாவது பொ.ச.மு. 1657-ல் யோசேப்பு இறந்தது முதல் பொ.ச.மு. 1512-ல் யெகோவாவின் வணக்கத்திற்காக ஆசரிப்புக் கூடாரம் கட்டப்பட்ட சமயம் வரையில் நடைபெற்ற சம்பவங்கள் இப்புத்தகத்தில் உள்ளன.​—யோவா. 7:19; யாத். 1:6; 40:17.

4யாத்திராகமத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள சம்பவங்கள் ஏறக்குறைய 3,500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவை. ஆகவே, இந்தப் பதிவுகள் துல்லியமாக இருப்பதைக் காட்டும் தொல்பொருள் அத்தாட்சிகளும் மற்ற அத்தாட்சிகளும் ஏராளமாக இருப்பது ஆச்சரியத்திற்குரிய விஷயமே. எகிப்திய பெயர்கள் யாத்திராகமத்தில் திருத்தமாக பயன்படுத்தப்பட்டுள்ளன. அதில் குறிப்பிடப்பட்டுள்ள பட்டப் பெயர்கள் எகிப்திய கல்வெட்டுகளோடு ஒத்திருக்கின்றன. எகிப்தியர்கள் அந்நியர்களை தங்கள் தேசத்தில் தங்க அனுமதித்தாலும் அவர்களோடு ஒட்டி உறவாடவில்லை என்பதை தொல்பொருள் ஆராய்ச்சி காட்டுகிறது. நைல் நதி நீராடுவதற்கு பயன்படுத்தப்பட்டதாகவும் ஆராய்ச்சி காட்டுகிறது. பார்வோனின் குமாரத்தி அங்கே குளித்ததை இது நினைப்பூட்டுகிறது. வைக்கோலை பயன்படுத்தியும் பயன்படுத்தாமலும் செய்யப்பட்ட செங்கற்கள் அங்கே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும், எகிப்து செழிப்பாக இருந்த காலத்தில் மந்திரவாதிகள் அங்கு பிரபலமாக இருந்ததும் தெரியவந்துள்ளது.​—யாத். 8:22; 2:5; 5:​6, 7, 18; 7:11.

5போரில் பார்வோன்களே முன்நின்று இரதவீரர்களை வழிநடத்தியதை நினைவுச் சின்னங்கள் காட்டுகின்றன. மோசேயின் நாளிலிருந்த பார்வோன் இந்த வழக்கத்தை பின்பற்றியதை யாத்திராகமம் குறிப்பிடுகிறது. அவனுக்கு எப்பேர்ப்பட்ட தலைகுனிவு! ஆனால் எகிப்தில் இஸ்ரவேலர் தற்காலிகமாக தங்கியிருந்ததைப் பற்றியும் அத்தேசத்திற்கு ஏற்பட்ட பேரழிவை பற்றியும் பூர்வ எகிப்திய பதிவுகளில் ஏன் எந்தக் குறிப்பும் இல்லை? எகிப்தில் புதிய அரச வம்சம் ஆட்சிக்கு வருகையில், களங்கம் ஏற்படுத்தும் முந்தைய பதிவுகள் எல்லாவற்றையும் அழித்துப்போடுவது வழக்கம் என்பதை தொல்பொருள் ஆராய்ச்சி காட்டியுள்ளது. இழிவுபடுத்திய தோல்விகளை அவர்கள் ஒருபோதும் பதிவு செய்யவில்லை. எகிப்தின் தெய்வங்களுக்கு​—நைல் தெய்வம், தவளை தெய்வம், சூரிய தெய்வம் போன்றவற்றிற்கு​—ஏற்பட்ட பலத்த அடி, இந்தப் பொய் தெய்வங்களுக்கு அவகீர்த்தியை கொண்டுவந்தது. யெகோவாவை ஈடற்ற உன்னத பேரரசராக காட்டியது. செருக்குமிகுந்த ஒரு தேசத்தின் வரலாற்று பக்கங்களில் இவை பொருத்தமாக இருக்காது.​—14:​7-10; 15:4. b

6எத்திரோவினிடம் மோசே 40 ஆண்டுகள் மேய்ப்பராக வேலை செய்தார். அதனால், அந்த வாழ்க்கைச் சூழல்களும், அப்பகுதியில் தண்ணீரும் உணவும் கிடைக்கும் இடங்களும் அவருக்கு நன்கு பரிச்சயமாகிவிட்டன. இதனால் இஸ்ரவேலரை வழிநடத்துவதற்கு நன்கு தகுதிபெற்றவரானார். அவர்கள் பயணம் செய்த சரியான வழியை இன்று துல்லியமாக கண்டுபிடிக்க முடியாது. ஏனெனில் இந்தப் பதிவில் சொல்லப்பட்டுள்ள இடங்களை திட்டவட்டமாக அறிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், சீனாய் தீபகற்பத்தில் முதன்முதல் பாளையமிறங்கின இடங்களில் ஒன்றுதான் மாரா. இது, தற்கால சூயஸுக்கு 80 கிலோமீட்டர் தென்-தென்கிழக்கே அமைந்துள்ள ஈன் ஹவாராவுடன் பொதுவாக அடையாளம் காட்டப்படுகிறது. இரண்டாவதாக பாளையமிறங்கின இடம் ஏலிம், சூயஸுக்கு ஏறக்குறைய 88 கிலோமீட்டர் தென்கிழக்கே உள்ள வாடி கரான்டல் என்பதுடன் பாரம்பரியமாக அடையாளம் காட்டப்படுகிறது. அக்கறையை தூண்டும் விஷயம் என்னவென்றால், இந்த இடம் தாவரங்களும் பேரீச்ச மரங்களும் (palms) இருக்கும் தண்ணீருள்ள ஓர் இடமாக இன்று அறியப்பட்டிருக்கிறது. ‘பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பேரீச்ச மரங்களும் இருந்த’ இடம் என பைபிளில் குறிப்பிட்ட ஏலிமை இது நினைவுபடுத்துகிறது. c என்றபோதிலும், மோசே எழுதிய இந்த விவரப்பதிவின் நம்பகத்தன்மை, இஸ்ரவேலர் பயணம் செய்த வழியிலிருந்த பல்வேறு இடங்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்துவதன் பேரில் சார்ந்தில்லை.​—15:​23, 27.

7சீனாய்க்கு எதிரான சமவெளிகளில் ஆசரிப்பு கூடாரம் கட்டப்பட்டதைப் பற்றிய விவரம் அந்த இடத்துக்குரிய சூழல்களோடு பொருந்துகிறது. கல்விமான் ஒருவர் குறிப்பிட்டார்: “உருவத்திலும் கட்டமைப்பிலும் பொருள்களிலும் ஆசரிப்புக் கூடாரம் முற்றிலும் வனாந்தரத்திற்கு உரியதாக இருக்கிறது. இதைக் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட மரம் அங்கே ஏராளமாக காணப்படுகிறது. d பெயர்கள், பழக்க வழக்கங்கள், மதம், இடங்கள், புவியியல், அல்லது பொருட்கள் ஆகிய எந்தத் துறையிலும் குவிந்துள்ள அத்தாட்சிகள், யாத்திராகம புத்தகம் ஏவப்பட்டு எழுதப்பட்டதை உறுதிப்படுத்துகின்றன. இந்தப் புத்தகம் இப்போது ஏறக்குறைய 3,500 ஆண்டுகள் பழமையானது.

8பைபிளின் மற்ற எழுத்தாளர்களும் யாத்திராகமத்தை அடிக்கடி குறிப்பிட்டு, அதன் தீர்க்கதரிசன சிறப்பம்சத்தையும் மதிப்பையும் காட்டினர். 900-க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு பிறகு, எரேமியா இவ்வாறு எழுதினார்: “மகத்துவமும் வல்லமையுமுள்ள கடவுள், சேனைகளின் யெகோவா என்னும் திருநாமமுடையவர்,” தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலை “அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலத்த கரத்தினாலும் நீட்டிய புயத்தினாலும் மகா பயங்கரத்தினாலும்” எகிப்திலிருந்து கொண்டுவந்தார். (எரே. 32:​18-21, தி.மொ.) 1,500-க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு பிறகு, ஸ்தேவான் தியாகியாக மரித்தார். அவருடைய மரணத்திற்கு வழிநடத்திய உணர்ச்சிப்பூர்வமான சாட்சியில் பெரும்பாலானவற்றிற்கு யாத்திராகமத்தில் உள்ள தகவலையே ஆதாரமாக கூறினார். (அப். 7:​17-44) மோசேயின் வாழ்க்கையை விசுவாசத்தின் ஓர் உதாரணமாக எபிரெயர் 11:​23-29 குறிப்பிடுகிறது. இன்று நமக்காக முன்மாதிரிகளையும் எச்சரிக்கைகளையும் குறிப்பிடுகையில் யாத்திராகமத்திலிருந்து பவுல் அடிக்கடி மேற்கோள் காட்டுகிறார். (அப். 13:17; 1 கொ. 10:​1-4, 11, 12; 2 கொ. 3:​7-16) இவை யாவும், பைபிளின் பாகங்கள் ஒன்றோடொன்று ஒத்திசைந்து, ஒவ்வொரு பகுதியும் பயனுள்ள முறையில் யெகோவாவின் நோக்கத்தை எவ்வாறு வெளிப்படுத்துகின்றன என்பதை மதித்துணர நமக்கு உதவுகின்றன.

யாத்திராகமத்தின் பொருளடக்கம்

9நினைவுகூருவதற்குரிய தம்முடைய சொந்த பெயரை வலியுறுத்தி, மோசேயை யெகோவா நியமிக்கிறார் (1:​1–4:31). எகிப்துக்கு வந்த இஸ்ரவேல் புத்திரரின் பெயர்களை குறிப்பிட்ட பின்பு, யாத்திராகமம் யோசேப்பின் மரணத்தை பதிவு செய்கிறது. காலப்போக்கில் எகிப்தில் ஒரு புதிய அரசன் எழும்புகிறான். இஸ்ரவேலர் தொடர்ந்து ‘மிகுதியாக பலுகி, ஏராளமாய் பெருகி பலப்படுவதை’ அவன் பார்க்கையில், அவர்களை வெகுவாக ஒடுக்குகிறான், பலவந்தமாக வேலை வாங்குகிறான். மேலும் புதிதாய் பிறந்த ஆண் பிள்ளைகள் அனைவரையும் கொலை செய்ய கட்டளையிட்டு இஸ்ரவேலில் ஆண் வர்க்கத்தை குறைக்கவும் முயற்சிக்கிறான். (1:7) இப்படிப்பட்ட சூழ்நிலைமைகளில் இஸ்ரவேலனாகிய லேவி கோத்திரத்தானுக்கு மூன்றாவது பிள்ளையாக ஒரு குமாரன் பிறக்கிறான். குழந்தைக்கு மூன்று மாதமாகையில், அவனுடைய தாய் அவனை ஒரு நாணல் பெட்டியில் வைத்து நைல் நதியின் கரையோரத்தில் நாணல்களுக்குள் மறைத்து வைக்கிறாள். இவனை பார்வோனின் குமாரத்தி கண்டெடுக்கிறாள். குழந்தையை விரும்பி தத்தெடுக்கிறாள். அவனுடைய சொந்த தாயே அவனுக்கு பாலூட்டும் தாதியாகிறாள். இதனால் அவன் இஸ்ரவேல் வீட்டில் வளருகிறான். பின்னால் அவன் பார்வோனின் அரண்மனைக்கு கொண்டுவரப்படுகிறான். அவனுக்கு மோசே என பெயரிடப்படுகிறது. “வெளியில் எடுக்கப்பட்டவன் [அதாவது, தண்ணீரிலிருந்து காப்பாற்றப்பட்டவன்]” என்பது இப்பெயரின் அர்த்தம்.​—யாத். 2:10; அப். 7:​17-22.

10சக இஸ்ரவேலரின் நலத்தில் மோசே அக்கறை காண்பிக்கிறார். இஸ்ரவேலன் ஒருவனை மோசமாக நடத்திய எகிப்தியனை கொலை செய்கிறார். இதனால் அவர் தப்பியோட வேண்டியதாகிறது, இவ்வாறு மீதியான் தேசத்துக்குள் வருகிறார். அங்கே, மீதியானின் ஆசாரியனாகிய எத்திரோவின் குமாரத்தி சிப்போராளை மணம் செய்கிறார். அதன்பின் கெர்சோம், எலியேசர் என்ற இரண்டு குமாரருக்கு மோசே தகப்பனாகிறார். வனாந்தரத்தில் 40 ஆண்டுகளை செலவிடுகிறார். பிறகு, 80-வது வயதில், யெகோவா தமது பெயரைப் பரிசுத்தப்படுத்துவதில் ஒரு விசேஷித்த சேவைக்காக அவரை நியமிக்கிறார். ஒரு நாள் “தேவ பர்வதமாகிய” ஓரேபுக்கு அருகில் எத்திரோவின் மந்தையை மேய்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது ஒரு முட்புதர் கொழுந்துவிட்டு எரிவதையும் ஆனால் கருகிப்போகாமல் இருப்பதையும் மோசே காண்கிறார். அதை ஆராய அருகில் செல்லும்போது, யெகோவாவின் தூதர் அவரை பெயர் சொல்லி அழைக்கிறார். கடவுள் தம்முடைய ஜனங்களாகிய ‘இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து’ அழைத்து வர சித்தமாயிருப்பதை அவரிடம் சொல்கிறார். (யாத். 3:​1, 10) இஸ்ரவேலை எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்வதில் மோசே யெகோவாவின் கருவியாக பயன்படுத்தப்படுவார்.​—அப். 7:​23-35.

11இஸ்ரவேல் புத்திரருக்குக் கடவுளை எவ்வாறு அடையாளம் காட்டுவது என மோசே கேட்கிறார். இங்குதான் முதல் முறையாக யெகோவா தம்முடைய பெயரின் உட்பொருளை தெரிவிக்கிறார். அதை தம்முடைய தனிப்பட்ட நோக்கத்துடன் இணைத்து, நினைவுகூருதலுக்குரிய ஒன்றாக நிலைநாட்டுகிறார். “இஸ்ரவேல் புத்திரருக்கு நீ சொல்ல வேண்டியது இதுவே, ‘நிரூபிப்பேன் என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார் . . . ஆபிரகாமின் கடவுளும், ஈசாக்கின் கடவுளும், யாக்கோபின் கடவுளுமான உங்கள் முற்பிதாக்களின் கடவுளாகிய யெகோவா என்னை உங்களிடம் அனுப்பினார்.’” யெகோவா என்ற அவருடைய பெயர், அதை தரித்த ஜனத்திற்காக தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றமடைய செய்கிறவராக அவரை அடையாளம் காட்டுகிறது. ஆபிரகாமின் சந்ததியாரான இந்த ஜனத்துக்கு, அவர்களுடைய முற்பிதாக்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணிய தேசத்தை, அதாவது “பாலும் தேனும் ஓடுகிற ஒரு தேசத்தை” அவர் கொடுப்பார்.​—யாத். 3:​14, 15, 17, NW.

12இஸ்ரவேலரை விடுதலை செய்ய எகிப்தின் அரசன் அனுமதிக்க மாட்டான் என்று மோசேயிடம் யெகோவா சொல்கிறார். ஆனால் முதலாவது தமது அதிசயமான செயல்களால் எகிப்தை தாக்க வேண்டும் என்றும் அவர் மோசேயிடம் விளக்குகிறார். மோசேயின் சார்பாக பேசுவதற்கு அவருடைய சகோதரனாகிய ஆரோனை நியமிக்கிறார். இருவரும் யெகோவாவின் பெயரில் வந்திருப்பதை இஸ்ரவேலர் நம்புவதற்கு மூன்று அடையாளங்களை பெறுகிறார்கள். எகிப்துக்குப் போகும் வழியில், குடும்பத்தில் மரணத்தைத் தவிர்ப்பதற்கு மோசேயின் குமாரன் விருத்தசேதனம் செய்யப்பட வேண்டியதாகிறது. இது கடவுளின் கட்டளைகளை மோசேக்கு நினைப்பூட்டுகிறது. (ஆதி. 17:14) மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் புத்திரரின் மூப்பர்களை அழைக்கிறார்கள். அவர்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்து வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்குக் கொண்டு செல்லப்போகும் யெகோவாவின் நோக்கத்தைத் தெரிவிக்கின்றனர். இருவரும் அடையாளங்களை காட்டுவதால் ஜனங்களிடம் நம்பிக்கை பிறக்கிறது.

13எகிப்தின்மீது வந்த வாதைகள் (5:​1–10:29). மோசேயும் ஆரோனும் இப்பொழுது பார்வோனிடம் செல்கின்றனர். “என் ஜனங்களைப் போகவிடு” என்று இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா சொல்கிறார் என அறிவிக்கின்றனர். அகந்தையுள்ள பார்வோன் ஏளனமாக கேட்கிறான்: “யெகோவா யார்? நான் ஏன் அவர் சொல்லுக்குச் செவிகொடுத்து இஸ்ரவேலைப் போகவிட வேண்டும்? நான் அந்த யெகோவாவை அறியேன்; நான் இஸ்ரவேலைப் போக விடுவதில்லை.” (5:​1, 2, தி.மொ.) இஸ்ரவேலரை விடுதலை செய்யாமல், மிகக் கடினமான வேலையை அவர்கள்மீது சுமத்துகிறான். இருப்பினும், விடுதலையைப் பற்றிய தம்முடைய வாக்குறுதிகளை யெகோவா திரும்பவும் கூறி, தம்முடைய பெயர் பரிசுத்தமாக்கப்படுவதோடு மறுபடியும் இணைத்துப் பேசுகிறார்: “நானே யெகோவா . . . உங்களுக்குக் கடவுளாயிருப்பேன் . . . நானே யெகோவா.”​—6:​6-8, தி.மொ.

14மோசேயின் கட்டளைப்படி, பார்வோன் முன்பு ஆரோன் தன்னுடைய கோலை கீழே போடுகிறார்; அது பெரிய பாம்பாக மாறுகிறது. எகிப்தின் மந்திரவாத பூஜாரிகளும் இதையே செய்கின்றனர். மந்திரவாதிகளுடைய பாம்புகளை ஆரோனின் பெரிய பாம்பு விழுங்கிவிடுகிறது. இருந்தாலும், பார்வோனின் இதயம் இன்னும் பிடிவாதமாகிறது. யெகோவா இப்பொழுது ஒன்றன்பின் ஒன்றாக பத்து கொடிய வாதைகளை எகிப்தின்மீது கொண்டுவருகிறார். முதலில், நைல் நதியும் எகிப்தின் தண்ணீர் அனைத்தும் இரத்தமாக மாறுகிறது. பின்பு தவளைகளின் வாதை. இந்த இரண்டு வாதைகளையும் அந்த மந்திரவாத பூஜாரிகளும் செய்கின்றனர். ஆனால் மூன்றாவது வாதையை, அதாவது மனிதர்மீதும் மிருகங்களின்மீதும் கொசுக்கள் வரச்செய்ததை அவர்களால் செய்ய முடியவில்லை. இது “கடவுளின் விரல்” என்று அந்தப் பூஜாரிகள் உணருகின்றனர். இருப்பினும், இஸ்ரவேலை பார்வோன் அனுப்ப மறுக்கிறான்.​—8:19, தி.மொ.

15முதல் மூன்று வாதைகள் எகிப்தியரையும் இஸ்ரவேலரையும் தாக்குகின்றன. ஆனால் நான்காவது வாதை முதற்கொண்டு எகிப்தியர் மாத்திரமே தாக்கப்படுகின்றனர். யெகோவாவின் பாதுகாப்பில் இஸ்ரவேலர் தனித்து தெரிகின்றனர். நான்காவது வாதை திரளாய் மொய்க்கும் பெரிய ஈக்களின் உருவில் வருகிறது. பின்பு எகிப்தின் கால்நடைகள் அனைத்தும் கொள்ளை நோயால் பாதிக்கப்படுகின்றன. இதன்பின் மனிதரின்மீதும் மிருகங்களின்மீதும் கொப்பளங்கள் உண்டாகின்றன. ஆகவே மந்திரவாத பூசாரிகளும்கூட மோசேக்கு முன்பாக நிற்க முடியவில்லை. பார்வோனின் இருதயம் மறுபடியும் பிடிவாதமுள்ளதாக ஆவதற்கு யெகோவா அனுமதிக்கிறார். மோசேயின் மூலம் அவனுக்கு பின்வருமாறு அறிவிக்கிறார்: “ஆயினும் என் வல்லமையை உனக்குக் காண்பிக்கும் பொருட்டும் என் நாமம் பூமியிலெங்கும் பிரஸ்தாபமாகும் பொருட்டும், உன்னை நிலைநிறுத்தி வைத்தேன்.” (9:​16, தி.மொ.) பின்பு மோசே அடுத்த வாதையை பார்வோனுக்கு அறிவிக்கிறார்: “மிகவும் கொடிய கல்மழை.” பார்வோனின் ஊழியக்காரர்களில் சிலர் யெகோவாவின் வார்த்தைக்குப் பயந்து, கீழ்ப்படிவதை பைபிள் இங்கே முதல் தடவையாக பதிவு செய்கிறது. எட்டாவது, ஒன்பதாவது வாதைகள்​—வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு மற்றும் கும்மிருட்டு​—விரைவில் ஒன்றன்பின் ஒன்றாக தொடருகின்றன. பிடிவாதமுள்ள பார்வோனோ கோபத்தால் கொதித்தெழுகிறான். மறுபடியும் தன்னை சந்திக்க முயற்சித்தால் மோசேக்கு மரணம்தான் என மிரட்டுகிறான்.​—9:​18.

16பஸ்காவும் முதற்பேறானோரை கொல்வதும் (11:​1–13:16). யெகோவா இப்பொழுது அறிவிக்கிறார், “இன்னும் ஒரு வாதையைப் பார்வோன்மேலும் எகிப்தின்மேலும் வரப்பண்ணுவேன்”​—அதுதான் முதற்பேறானோரின் மரணம். (11:1) ஆபிப் மாதம் இஸ்ரவேலுக்கு முதல் மாதமாயிருக்கும்படி யெகோவா கட்டளையிடுகிறார். 10-ம் நாளில் ஒரு வயது நிரம்பிய, பழுதற்ற செம்மறியாட்டு அல்லது வெள்ளாட்டு கடாவை தேர்ந்தெடுக்க வேண்டும். 14-ம் நாளில், அவர்கள் அதைக் கொல்ல வேண்டும். அன்று மாலை அந்த மிருகத்தின் இரத்தத்தை அவர்கள் வாசல் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளிக்க வேண்டும். பின்பு அந்த வீட்டுக்குள் தங்கியிருந்து, அந்த ஆட்டை நெருப்பில் சுட்டு சாப்பிட வேண்டும். அதனுடைய எலும்புகள் ஒன்றையும் முறிக்கக் கூடாது. அந்த வீட்டில் புளித்தமாவு எதுவும் இருக்கக் கூடாது. அவர்கள் அணிவகுத்துச் செல்ல தயாராக உடை உடுத்திக்கொண்டு அவசரமாக சாப்பிட வேண்டும். தலைமுறைகள்தோறும் அந்தப் பஸ்காவை ஒரு நினைவுகூருதலாக, யெகோவாவுக்கு ஒரு பண்டிகையாக அனுசரிக்க வேண்டும். இதை தொடர்ந்து ஏழு நாட்கள் புளிப்பில்லாத அப்பப் பண்டிகையை கொண்டாட வேண்டும். இந்தப் பண்டிகைகளின் உட்கருத்து அனைத்தையும் அவர்களுடைய பிள்ளைகளுக்கு முழுமையாக போதிக்க வேண்டும். (பின்னால், யெகோவா இந்தப் பண்டிகைகள் சம்பந்தமாக கூடுதலான போதனைகளை கொடுக்கிறார். இஸ்ரவேலைச் சேர்ந்த மனிதரிலும் மிருகங்களிலும் எல்லா முதற்பேறான ஆண்களும் தமக்குப் பரிசுத்தமாக்கப்பட வேண்டும் என அப்போது கட்டளையிடுகிறார்.)

17யெகோவாவின் கட்டளையின்படியே இஸ்ரவேலர் செய்கின்றனர். பின்பு அழிவு தாக்குகிறது! நள்ளிரவில் எகிப்தின் முதற்பேறானோர் யாவரையும் யெகோவா கொலை செய்கிறார். அதேசமயம் இஸ்ரவேலின் முதற்பேறானோரை கடந்து சென்று அவர்களை விடுவிக்கிறார். ‘என் ஜனத்தைவிட்டுப் புறப்பட்டுப் போங்கள்’ என்று பார்வோன் அலறுகிறான். ‘சீக்கிரமாக இந்த இடத்தை காலிசெய்யுங்கள்’ என எகிப்தியர்களும் அவர்களை மிகவும் அவசரப்படுத்துகிறார்கள். (12:​31, 33, தி.மொ.) இஸ்ரவேலர் வெறுங்கையோடு கிளம்பவில்லை. வெள்ளி மற்றும் பொன்னாலான பொருட்களையும் உடைகளையும் எகிப்தியரிடமிருந்து கேட்டு வாங்குகின்றனர். ஏதோ போருக்கு அணிவகுத்து செல்வதுபோல எகிப்திலிருந்து வெளியேறுகின்றனர். பலவான்களாகிய ஆண்கள் 6,00,000 பேரும், அவர்களுடைய குடும்பத்தினரும் இஸ்ரவேல் அல்லாத திரளான ஜனங்களும் செல்கின்றனர். ஏராளமான கால்நடைகளும் அவர்களோடு செல்கின்றன. இது, ஆபிரகாம் கானான் தேசத்துக்குள் செல்வதற்காக ஐப்பிராத்தைக் கடந்ததிலிருந்து 430 ஆண்டுகளின் முடிவைக் குறிக்கிறது. இது நிச்சயமாகவே நினைவில் வைக்கவேண்டிய ஓர் இரவு.​—யாத். 12:​40, NW இரண்டாவது அடிக்குறிப்பு; கலா. 3:17.

18செங்கடலில் பரிசுத்தப்படும் யெகோவாவின் பெயர் (13:​17–15:21). இஸ்ரவேலை சுக்கோத் வழியாக, பகலில் மேக ஸ்தம்பத்தாலும் இரவில் அக்கினி ஸ்தம்பத்தாலும் வழிநடத்துகிறார். மறுபடியும் பார்வோன் பிடிவாதம் கொள்கிறான். சிறந்த போர் இரதங்களுடன் அவர்களை துரத்திச் செல்கிறான். செங்கடல் அருகில் அவர்களை மடக்கி, சிக்கவைத்துவிட்டதாக தப்புக்கணக்கு போடுகிறான். ஜனங்களை திரும்பவும் மோசே திடப்படுத்துகிறார்: “பயப்படாதிருங்கள். உறுதியாக நின்று, இன்று யெகோவா உங்களுக்காக செய்யப்போகிற இரட்சிப்பை பாருங்கள்.” (14:​13, NW) அப்பொழுது யெகோவா, அந்தக் கடலை இரண்டாக பிளந்து, இஸ்ரவேலர்களுக்கு தப்பிச்செல்லும் வழியை உண்டாக்குகிறார். அந்த வழியாக மோசே அவர்களை கிழக்குக் கரையோரத்திற்கு பத்திரமாய் வழிநடத்துகிறார். பார்வோனின் பலத்தப் படைகள் இஸ்ரவேலர்களை விரட்டிக்கொண்டு வேகமாக பாய்ந்து வருகின்றன, ஆனால் பிளந்துசென்ற தண்ணீர் மீண்டும் வந்து அவர்களை மூழ்கடித்ததே மிச்சம். யெகோவாவின் பெயர் எவ்வளவு மகத்தான அளவில் பரிசுத்தப்படுத்தப்பட்டது! அவரில் மகிழ்வதற்கு எப்பேர்ப்பட்ட மகத்தான காரணம்! அந்த மகிழ்ச்சி பைபிளின் முதலாவதான மாபெரும் வெற்றிப் பாடலில் வெளிப்படுத்தப்படுகிறது: “யெகோவாவைப் பாடுவேன்; அவர் மகத்துவம் மகா உன்னதமானது; குதிரையையும் வீரனையும் கடலினுள்ளே போட்டுவிட்டார். யெகோவா என் பலம், என் கீதம், அவர் எனக்கு இரட்சிப்பானவர்; . . . யெகோவா சதாகாலங்களாகிய என்றென்றைக்கும் அரசாட்சி செய்வார்.”​—15:​1, 2, 18, தி.மொ.

19சீனாயில் யெகோவா நியாயப்பிரமாண உடன்படிக்கை செய்கிறார் (15:​22-34:35). சங்கிலித் தொடர் போன்ற நிகழ்ச்சிகளுக்கு பிறகு, யெகோவாவின் வழிநடத்துதலின்படி இஸ்ரவேலர்கள் மெய் கடவுளின் மலையாகிய சீனாயை நோக்கி பயணப்படுகின்றனர். மாராவில் கசப்பான தண்ணீரைக் குறித்து ஜனங்கள் முறுமுறுக்கின்றனர். அப்போது, யெகோவா அந்த தண்ணீரை இனிக்கச் செய்கிறார். இறைச்சியும் அப்பமும் இல்லாததைப் பற்றி அவர்கள் மறுபடியும் முறுமுறுக்க ஆரம்பிக்கின்றனர். ஆகவே மாலையில் காடையையும், காலையில் பனிபோன்ற இனிப்பான மன்னாவையும் தருகிறார். அடுத்த 40 ஆண்டுகளாக இஸ்ரவேலருக்கு இந்த மன்னாவே உணவாக இருக்கும். மேலும், சரித்திரத்தில் முதன் முறையாக, இளைப்பாறும் நாள் அல்லது ஓய்வுநாள் ஆசரிப்பைப் பற்றி யெகோவா கட்டளையிடுகிறார். ஆறாம் நாளில் இஸ்ரவேலர் இரண்டு மடங்கு மன்னாவை சேகரித்து வைத்துக்கொள்ளும்படி சொல்கிறார். ஏழாம் நாளில் அதை அவர் தருவதில்லை. ரெவிதீமிலும் அவர்களுக்கு தண்ணீரை அளிக்கிறார். அவர்கள் சார்பாக அமலேக்கியருக்கு எதிராக போரிடுகிறார். அமலேக்கு முற்றிலுமாக அழிக்கப்படும் என்ற தம்முடைய நியாயத்தீர்ப்பை மோசே பதிவுசெய்யும்படி செய்கிறார்.

20மோசேயின் மாமனுடைய பெயர் எத்திரோ. இவர் மோசேயினுடைய மனைவியையும் இரண்டு குமாரர்களையும் அவரிடம் கொண்டுவருகிறார். இப்போது இஸ்ரவேல் இன்னும் நன்கு ஒழுங்கமைக்கப்பட வேண்டியிருக்கிறது. இதற்கு எத்திரோ நடைமுறையான நல்ல ஆலோசனைகளை வழங்குகிறார். முழு பாரத்தையும் தனிமனிதராக சுமக்க வேண்டாம் என மோசேயிடம் ஆலோசனை சொல்கிறார். ஜனங்களை நியாயம் விசாரிக்க தேவபயமுள்ள திறமையான ஆட்களை ஆயிரம் பேருக்கு, நூறுபேருக்கு, ஐம்பது பேருக்கு, பத்துப் பேருக்கு என அதிபதிகளாக நியமிக்கும்படி அவர் கூறுகிறார். இதற்கு மோசே செவிகொடுக்கிறார். இப்போது கடினமான வழக்குகள் மாத்திரமே மோசேயிடம் விசாரணைக்கு வருகின்றன.

21பயணம் தொடங்கி மூன்று மாதங்களுக்குள் இஸ்ரவேல் ஜனம் சீனாய் வனாந்தரத்தில் பாளையமிறங்குகிறது. யெகோவா இங்கே வாக்குறுதி அளிக்கிறார்: “இப்பொழுது நீங்கள் என் சொல்லை உள்ளபடி கேட்டு என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால் சகல ஜாதிகளிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது. நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாயிருப்பீர்கள்.” ஜனங்கள் பின்வருமாறு உறுதியளிக்கிறார்கள்: “யெகோவா சொன்னவைகளையெல்லாம் செய்வோம்.” (19:​5, 6, 8, தி.மொ.) முதல் இரு நாட்கள் இஸ்ரவேல் சுத்திகரிக்கப்பட்ட பின்பு, மூன்றாம் நாளில் யெகோவா மலையின்மீது இறங்குகிறார். அதன் காரணமாக அந்த மலை புகைந்து அதிருகிறது.

22யெகோவா அப்பொழுது பத்து வார்த்தைகளை அல்லது பத்துக் கட்டளைகளை கொடுக்கிறார். இவை யெகோவாவுக்கு தனிப்பட்ட பக்தியை வலியுறுத்துகின்றன. அதேசமயத்தில் வேறு கடவுட்களை வைத்திருப்பதையும், உருவ வழிபாட்டையும், யெகோவாவின் பெயரை மதிப்பற்ற முறையில் பயன்படுத்துவதையும் தடைசெய்கின்றன. ஆறு நாட்கள் வேலை செய்யவும், யெகோவாவுக்கு ஓய்வுநாளை கைக்கொள்ளவும், தகப்பனையும் தாயையும் கனம்பண்ணவும் இஸ்ரவேலர் கட்டளையிடப்படுகின்றனர். கொலை, விபச்சாரம், திருட்டு, பொய்ச் சாட்சி, இச்சை ஆகியவற்றிற்கு எதிரான சட்டங்களோடு இந்தப் பத்து கட்டளைகள் பூர்த்தியாகின்றன. பின்பு யெகோவா, நியாயவிசாரணை சட்டங்களையும் அந்தப் புதிய தேசத்திற்கு பல அறிவுரைகளையும் கொடுக்கிறார். அடிமைத்தனம், வலியப் போய் தாக்குதல், காயங்கள், இழப்பை ஈடுசெய்தல், களவு, நெருப்பால் சேதம், பொய் வணக்கம், கற்பழிப்பு, விதவைகளையும் திக்கற்றப் பிள்ளைகளையும் ஒடுக்குதல், கடன்கள் மற்றும் இதுபோன்ற அநேக விஷயங்கள் இதில் அடங்குகின்றன. ஓய்வுநாள் சட்டங்கள் கொடுக்கப்படுகின்றன, யெகோவாவின் வணக்கத்துக்காக மூன்று வருடாந்தர பண்டிகைகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. பின்பு யெகோவாவின் வார்த்தைகளை மோசே எழுதுகிறார், பலிகள் செலுத்தப்பட்டு, பாதியளவான இரத்தம் பலிபீடத்தின்மீது தெளிக்கப்படுகிறது. உடன்படிக்கையின் புத்தகம் ஜனங்களுக்கு வாசிக்கப்படுகிறது. கீழ்ப்படிய விரும்புகிறோம் என அவர்கள் மறுபடியும் உறுதியளிக்கின்றனர். பின்பு, மீதியான இரத்தம் அந்தப் புத்தகத்தின்மீதும் எல்லா ஜனங்கள்மீதும் தெளிக்கப்படுகிறது. இவ்வாறு யெகோவா மத்தியஸ்தராகிய மோசேயின் மூலம் இஸ்ரவேல் ஜனத்தோடு நியாயப்பிரமாண உடன்படிக்கை செய்கிறார்.​—எபி. 9:​19, 20.

23யெகோவாவிடம் நியாயப்பிரமாணத்தைப் பெற்றுக்கொள்வதற்கு மோசே மலையில் ஏறிச்செல்கிறார். 40 நாட்கள் இரவும் பகலும் பல அறிவுரைகளை பெறுகிறார். ஆசரிப்புக் கூடாரத்திற்கான பொருட்கள், அதற்குள் வைக்க வேண்டிய தட்டுமுட்டு சாமான்களை பற்றிய நுட்ப விவரங்கள், ஆசரிப்புக் கூடாரம் பற்றிய நுணுக்கமான விவரங்கள், ஆரோனின் தலைப்பாகையில், “பரிசுத்தம் யெகோவாவுக்கு உரியது” என பொறிக்கப்பட்ட தூய்மையான பொற்பட்டை உட்பட, ஆசாரியர்களின் உடைகளுக்கான குறிப்புகளுமே அவை. ஆசாரியத்துவ பதவியேற்பும் அதன் சேவையும் நுட்ப விவரமாக கொடுக்கப்படுகின்றன. ஓய்வுநாள் இஸ்ரவேல் புத்திரருக்கும் யெகோவாவுக்கும் இடையில் “வரையறையில்லா காலத்துக்கும்” ஓர் அடையாளமாக இருக்கும் என மோசே நினைப்பூட்டப்படுகிறார். பின்பு ‘கடவுளின் விரலால்’ எழுதப்பட்ட இரண்டு சாட்சி-பலகைகளை மோசே பெற்றுக்கொள்கிறார்.​—யாத். 28:​36; 31:​17, 18; NW.

24இதற்கிடையில் ஜனங்கள் பொறுமையிழந்து விடுகின்றனர். தங்களை வழிநடத்த ஒரு கடவுளை உண்டாக்கும்படி ஆரோனை அவர்கள் கேட்கின்றனர். மக்களின் இந்த வேண்டுகோளுக்கு ஆரோன் இணங்கி, ஒரு பொன் கன்றுக்குட்டியை உருவாக்குகிறார். “யெகோவாவுக்கு உற்சவம்” என்று அவர் அழைத்த பண்டிகையை ஜனங்கள் கொண்டாடி அதை வணங்குகின்றனர். (32:​5, தி.மொ.) இஸ்ரவேல் ஜனத்தை அடியோடு அழித்துவிடப் போவதாக யெகோவா சொல்கிறார். மோசேக்கும் கோபம் பற்றியெரிந்ததால் அந்தப் பலகைகளை எறிந்து உடைத்துவிடுகிறார். அதேசமயம் அவர்களுக்காக பரிந்தும் பேசுகிறார். லேவியின் குமாரர் இப்பொழுது தூய்மையான வணக்கத்தின் சார்பாக நிலைநிற்கை எடுக்கின்றனர். அந்தக் களியாட்டக்காரர் 3,000 பேரை அவர்கள் கொன்றுபோடுகின்றனர். யெகோவாவும் அவர்களை வாதிக்கிறார். ஜனத்தை தொடர்ந்து வழிநடத்திச் செல்ல கடவுளிடம் மோசே மன்றாடி வேண்டிக்கொள்கிறார். பின்பு தமது மகிமையை கணநேரம் காணலாம் என மோசேயிடம் கடவுள் கூறுகிறார். இரண்டு பலகைகளை செதுக்கும்படியும் கட்டளையிடுகிறார். அவற்றில் யெகோவா அந்தப் பத்து வார்த்தைகளை மறுபடியும் எழுதுவார். மோசே இரண்டாவது தடவை மலைமீது செல்கிறபோது, கடவுள் தாம் கடந்துசெல்கையில், யெகோவா என்ற தமது பெயரை மோசேக்கு கூறுகிறார்: “யெகோவா, யெகோவா . . . உருக்கமும் இரக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் சத்தியமுமுள்ள கடவுள்; ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்.” (34:​6, 7, தி.மொ.) பின்பு அவர் தம்முடைய உடன்படிக்கையின் நிபந்தனைகளைக் கூறுகிறார், மோசே அதை எழுதி வைக்கிறார், அதுதான் இன்று நமக்கு யாத்திராகமத்தில் இருக்கிறது. சீனாய் மலையிலிருந்து மோசே இறங்கி வருகிறபோது, யெகோவாவின் மகிமை வெளிப்படுத்தப்பட்டதால் அவருடைய முகம் ஒளி வீசுகிறது. இதனால் அவர் தன் முகத்தின்மீது ஒரு முக்காடு போட்டுக்கொள்கிறார்.​—2 கொ. 3:​7-11.

25ஆசரிப்புக் கூடாரம் கட்டப்படுகிறது (35:​1–40:38). பின்பு மோசே இஸ்ரவேல் ஜனத்தை ஒன்றாக அழைத்து யெகோவாவின் வார்த்தைகளைச் சொல்கிறார். ஆசரிப்புக் கூடாரத்துக்காக காணிக்கை கொடுக்கும் சிலாக்கியம் மனமுவந்தோருக்கு இருக்கிறது. அதோடு, ஞான இருதயமுள்ளோருக்கு அதில் வேலைசெய்யும் சிலாக்கியமும் இருக்கிறது என்று கூறுகிறார். சீக்கிரத்தில் மோசேயினிடம்: “யெகோவா செய்யக் கட்டளையிட்ட வேலைக்கு வேண்டிய அளவுக்குமேலாக அதிகமான பொருள்களை ஜனங்கள் கொண்டுவருகிறார்களே” என சொல்லப்படுகிறது. (36:​5, தி.மொ.) யெகோவாவின் ஆவியால் நிரப்பப்பட்ட வேலையாளர்கள் மோசேயின் வழிநடத்துதலால் ஆசரிப்புக் கூடாரத்தையும் அதன் தட்டுமுட்டுப் பொருட்களையும் ஆசாரியர்களுக்கான எல்லா அங்கிகளையும் செய்ய ஆரம்பிக்கின்றனர். எகிப்தைவிட்டு வந்த ஓர் ஆண்டுக்குப் பின், சீனாய் மலைக்கு எதிரான சமவெளியில் ஆசரிப்புக் கூடாரம் கட்டி முடிக்கப்படுகிறது. தரிசன கூடாரத்தைத் தம்முடைய மேகத்தால் மூடுவதாலும் ஆசரிப்புக் கூடாரத்தைத் தம்முடைய மகிமையால் நிரப்புவதாலும் யெகோவா தம்முடைய அங்கீகாரத்தைத் தெரிவிக்கிறார். இவ்வாறு மகிமை நிரப்பப்பட்டதால் கூடாரத்துக்குள் மோசே பிரவேசிக்க முடிகிறதில்லை. அவர்கள் பயணம் செய்கிறபோதெல்லாம் பகலில் இதே மேகமும் இரவில் அக்கினியும் இஸ்ரவேலுக்கு யெகோவாவின் வழிநடத்துதலை குறிக்கின்றன. இப்பொழுது பொ.ச.மு. 1512. இஸ்ரவேலின் சார்பாக நடப்பிக்கப்பட்ட யெகோவாவின் அதிசயமான செயல்களால் அவருடைய பெயர் மகிமையாக பரிசுத்தப்படுத்தப்பட்டது. இத்துடன் யாத்திராகமத்தின் பதிவு முடிகிறது.

ஏன் பயனுள்ளது

26யெகோவாவை மகா விடுவிப்பாளராகவும் ஒழுங்கமைப்பாளராகவும் தம்முடைய சிறப்பான நோக்கங்களை நிறைவேற்றுபவராகவும் யாத்திராகமம் ஒப்பற்ற முறையில் வெளிப்படுத்துகிறது, அவரில் நம் விசுவாசத்தை நிலைநாட்டுகிறது. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் யாத்திராகமத்தை அநேக முறை மேற்கோள் காட்டுவதை படிக்கையில் இந்த விசுவாசம் அதிகரிக்கிறது. கிரேக்க வேதாகமம் நியாயப்பிரமாணத்தின் பல அம்சங்களின் நிறைவேற்றங்களையும், உயிர்த்தெழுதலின் நிச்சயத்தையும், தம்முடைய ஜனத்தை ஆதரித்து வழிநடத்துவதற்கான யெகோவாவின் ஏற்பாட்டையும், கிறிஸ்தவ நிவாரண பணிக்குரிய மாதிரிகளையும், பெற்றோருக்கு அன்பாதரவு கொடுப்பதன்பேரில் அறிவுரையையும், ஜீவனடைவதற்கு வேண்டிய தேவைகளையும், நீதிக்குரிய தண்டனைகளை எவ்வாறு கருதுவது என்பதையும் காட்டுகிறது. முடிவில் நியாயப்பிரமாணம், கடவுளுக்கும் சக மனிதனுக்கும் அன்பு காட்டுகிற இரண்டு கட்டளைகளாக சுருக்கி உரைக்கப்பட்டது.​—மத். 22:32யாத். 4:5; யோவா. 6:​31-35 மற்றும் 2 கொ. 8:15யாத். 16:​4, 18; மத். 15:​4 மற்றும் எபே. 6:​2யாத். 20:12; மத். 5:​26, 38, 39யாத் 21:24; மத். 22:​37-40.

27எபிரெயர் 11:​23-29-ல் மோசே மற்றும் அவருடைய பெற்றோரின் விசுவாசத்தைப் பற்றி நாம் வாசிக்கிறோம். விசுவாசத்தால் அவர் எகிப்தைவிட்டு வெளியேறினார், விசுவாசத்தால் அவர் பஸ்காவை ஆசரித்தார், விசுவாசத்தால் அவர் இஸ்ரவேலரை செங்கடலின் வழியாக நடத்திச் சென்றார். இஸ்ரவேலர் மோசேக்குள் முழுக்காட்டப்பட்டு, ஆவிக்குரிய உணவை உண்டு ஆவிக்குரிய பானத்தைப் பருகினார்கள். ஆவிக்குரிய கற்பாறையை அல்லது கிறிஸ்துவை அவர்கள் ஆவலோடு எதிர்பார்த்தார்கள். என்றாலும், அவர்கள் கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெறவில்லை. ஏனெனில் அவர்கள் கடவுளைப் பரீட்சை பார்த்து விக்கிரகாராதனைக்காரரும், வேசித்தனக்காரரும், முறுமுறுப்போருமானார்கள். இது இன்று கிறிஸ்தவர்களுக்கு ஒரு பாடமாக இருப்பதாய் பவுல் விளக்குகிறார்: “இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது; உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது. இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.”​—1 கொ. 10:​1-12; எபி. 3:​7-13.

28யாத்திராகமத்தின் ஆவிக்குரிய ஆழ்ந்த உட்பொருளில் பெரும்பான்மையானது, அதன் தீர்க்கதரிசன பொருத்தத்தோடுகூட, பவுலின் எழுத்துக்களில், முக்கியமாய் எபிரெயர் 9-ம் 10-ம் அதிகாரங்களில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. “நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல், அவைகளின் நிழலாய் மாத்திரம் இருக்கிறபடியால், வருஷந்தோறும் இடைவிடாமல் செலுத்தப்பட்டுவருகிற ஒரேவிதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்த வருகிறவர்களை ஒருக்காலும் பூரணப்படுத்தமாட்டாது.” (எபி. 10:​1) ஆகையால், நிழலை அறிந்துகொள்வதிலும் அதன் மெய்மையை புரிந்துகொள்வதிலும் நாம் ஆர்வமுள்ளோராக இருக்கிறோம். கிறிஸ்து “பாவங்களுக்காக என்றென்றைக்குமான ஒரே பலியைச் செலுத்தி”னார். அவர் “தேவ ஆட்டுக்குட்டி” என விவரிக்கப்படுகிறார். மாதிரியில் இருந்தது போலவே இந்த “ஆட்டுக்குட்டி”யின் ஓர் எலும்பும் முறிக்கப்படவில்லை. அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே. ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.”​—எபி. 10:12; யோவா. 1:​29 மற்றும் 19:​36​—யாத். 12:46; 1 கொ. 5:​7, 8யாத். 23:15.

29மோசே நியாயப்பிரமாணத்தின் மத்தியஸ்தராக இருந்ததுபோல், இயேசு புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தரானார். இந்த உடன்படிக்கைகளுக்கு இடையே உள்ள மாறுபாடும் அப்போஸ்தலன் பவுலால் தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது, கழுமரத்தில் அறையப்பட்ட இயேசுவின் மரணத்தால், ‘கையினால் எழுதப்பட்ட கட்டளைகளைக் கொண்ட படிவம்’ வழியில் இராதபடி எடுத்துப்போடப்பட்டது என பேசுகிறார். உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு பிரதான ஆசாரியராக, ‘பரிசுத்த ஸ்தலத்திலும், மனிதனால் அல்ல, யெகோவாவால் கட்டப்பட்ட மெய்யான கூடாரத்திலும் பொது ஊழியம் செய்கிறவராக’ இருக்கிறார். மோசேக்குக் கொடுக்கப்பட்ட மாதிரியின்படி, நியாயப்பிரமாணத்தின்கீழ் ஆசாரியர்கள் ‘மாதிரி பிரதிநிதித்துவமும் பரலோகக் காரியங்களின் ஒரு நிழலுமானதில் பரிசுத்த சேவை’ செய்தார்கள். “ஆனால் இப்பொழுது இயேசு மேலும் மிகச் சிறந்த பொதுச் சேவையை பெற்றிருக்கிறார், இவ்வாறு மேம்பட்ட ஓர் உடன்படிக்கையின் மத்தியஸ்தராகவும் இருக்கிறார். இது மேம்பட்ட வாக்குத்தத்தங்களின் மீது சட்டப்பூர்வமாய் நிலைநாட்டப்பட்டிருக்கிறது.” அந்தப் பழைய உடன்படிக்கை வழக்கற்றுப் போயிற்று மற்றும் மரணத்தை வழங்கும் சட்டத்தொகுப்பாக ஒழிக்கப்பட்டது. இதைப் புரிந்துகொள்ளாத அந்த யூதர்கள் தங்கள் உணர்வுகள் மழுங்கியோராக விவரிக்கப்படுகின்றனர். ஆனால் ஆவிக்குரிய இஸ்ரவேலர் ஒரு புதிய உடன்படிக்கையின்கீழ் வந்திருக்கின்றனர் என்பதை மதித்துணரும் விசுவாசிகள், அதன் ஊழியர்களாகப் போதிய தகுதிபெற்றிருப்போராய் “முக்காடு நீக்கப்பட்ட முகங்களுடன் யெகோவாவின் மகிமையைக் கண்ணாடிகள்போல் பிரதிபலிக்கக்”கூடும். சுத்திகரிக்கப்பட்ட மனச்சாட்சியுடன் இவர்கள் சொந்தமாய் “துதியின் பலியை, அதாவது, அவருடைய பெயருக்குச் செய்யும் வெளிப்படையான அறிவிப்பாகிய உதடுகளின் கனியைச்” செலுத்துவோராக இருக்கின்றனர்.​—கொலோ. 2:​14; எபி. 8:​1-6, 13; 2 கொ. 3:​6-18; எபி. 13:​15; NW; யாத். 34:​27-35.

30யாத்திராகமம் யெகோவாவின் பெயரையும் அரசாட்சியையும் உயர்த்திப் பேசுகிறது. அதோடு, ஆவிக்குரிய இஸ்ரவேலராகிய கிறிஸ்தவ ஜனத்தின் மகிமையான விடுதலையை முன்குறிப்பிட்டுக் காட்டுகிறது, இவர்களுக்குப் பின்வருமாறு சொல்லப்பட்டிருக்கிறது: “நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள். முன்னே நீங்கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை, இப்பொழுதோ அவருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள்.” யெகோவா தம்முடைய பெயரை மகிமைப்படுத்துவதற்கு ஆவிக்குரிய இஸ்ரவேலை கூட்டிச்சேர்ப்பதில் தம் வல்லமையைக் காட்டினார். பூர்வ எகிப்தில் தம்முடைய ஜனத்தின் சார்பாக அவர் காட்டிய அற்புதமான வல்லமைக்கு இது சற்றும் குறைவுபடவில்லை. தம்முடைய வல்லமையைக் காட்டுவதற்கும் தம்முடைய பெயர் அறிவிக்கப்படுவதற்கும் பார்வோனை உயிரோடிருக்க வைத்தார். ஆனால், அதைப் பார்க்கிலும் மிகப் பெரிதான ஒரு சாட்சியத்தை தம்முடைய கிறிஸ்தவ சாட்சிகளின்மூலம் யெகோவா நிறைவேற்றவிருந்தார். அதற்கு ஒரு முன்நிழலாக இதைக் குறிப்பிட்டார்.​—1 பே. 2:​9, 10; ரோ. 9:17; வெளி. 12:17.

31இவ்வாறு, மோசேயின்கீழ் அமைக்கப்பட்ட அந்த ஜனம் எதிர்காலத்தில் கிறிஸ்துவின்கீழ் ஒரு புதிய ஜனம் அமைக்கப்படுவதை முன்குறிப்பிட்டது. அதுமட்டுமன்றி, ஒருபோதும் அசைக்கப்படமாட்டாத ஒரு ராஜ்யத்தையும் முன்குறிப்பிட்டதென்று வேதாகமத்திலிருந்து நாம் சொல்லலாம். இதனால், நாம் “தேவபயத்தோடும் பக்தியோடும் கடவுளுக்குப் பரிசுத்த சேவை செய்யும்படி” ஊக்குவிக்கப்படுகிறோம். யெகோவாவின் பிரசன்னம் வனாந்தரத்தில் ஆசரிப்புக் கூடாரத்தை மூடினது. அதுபோல், அவர் தமக்குப் பயப்படுவோருடன் நித்தியகாலமாக இருப்பாரென வாக்குக்கொடுக்கிறார்: “இதோ மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இரு[ப்பார்] . . . இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது.” யாத்திராகமம் நிச்சயமாகவே பைபிள் பதிவில் இன்றியமையாத, நன்மைபயக்குகிற ஒரு பாகம்.​—யாத். 19:​16-19எபி. 12:​18-29, NW; யாத். 40:34வெளி. 21:​3, 5.

[அடிக்குறிப்புகள்]

a யாத்திராகமம் 3:​14, NW அடிக்குறிப்பு; வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 2, பக்கம் 12.

b வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கங்கள் 532, 535; தொல்பொருள் ஆராய்ச்சியும் பைபிள் சரித்திரமும் (ஆங்கிலம்) 1964, ஜே. பி. ஃப்ரீ, பக்கம் 98.

c வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கங்கள் 540-1.

d எக்சொடஸ், 1874, எஃப். சி. குக், பக்கம் 247.

[கேள்விகள்]

2. யெகோவா என்ற பெயரை பற்றி யாத்திராகமம் என்ன வெளிப்படுத்துகிறது?

3. (அ) யாத்திராகமத்தின் எழுத்தாளர் மோசே என நமக்கு எப்படி தெரியும்? (ஆ) யாத்திராகமம் எப்பொழுது எழுதப்பட்டது, எந்தக் காலப்பகுதியை அது உள்ளடக்குகிறது?

4, 5. தொல்பொருள் ஆராய்ச்சியின் என்ன அத்தாட்சி யாத்திராகம விவரத்தை ஆதரிக்கிறது?

6. பூர்வத்தில் இஸ்ரவேலர் பாளையமிறங்கியதாக எந்த இடங்கள் பொதுவாக அடையாளம் காட்டப்படுகின்றன?

7. ஆசரிப்புக் கூடாரம் கட்டப்பட்டது உட்பட, வேறு என்ன அத்தாட்சிகள் யாத்திராகமத்தை தேவாவியால் ஏவப்பட்டதென உறுதிப்படுத்துகின்றன?

8. தேவாவியால் ஏவப்பட்டதும் பயனுள்ளதுமான யாத்திராகமம், பைபிளின் மற்ற புத்தகங்களோடு எவ்வாறு இசைந்துள்ளது?

9. எந்தச் சூழ்நிலைமைகளில் மோசே பிறந்து வளர்கிறார்?

10. மோசே விசேஷித்த சேவைக்காக நியமிக்கப்படுவதற்கு என்ன சம்பவங்கள் வழிநடத்துகின்றன?

11. என்ன விசேஷ அர்த்தத்தில் யெகோவா இப்பொழுது தம்முடைய பெயரை அறிவிக்கிறார்?

12. இஸ்ரவேலரை விடுதலை செய்வது சம்பந்தமாக யெகோவா மோசேக்கு எதை விளக்குகிறார், ஜனங்கள் அந்த அடையாளங்களை எவ்வாறு ஏற்கின்றனர்?

13. பார்வோனை மோசே முதன் முறையாக சந்தித்ததன் விளைவு என்ன?

14. “கடவுளின் விரல்” என்பதை உணர வேண்டிய நிலை எகிப்தியர்களுக்கு எவ்வாறு உண்டானது?

15. எந்த வாதைகள் எகிப்தியரை மாத்திரம் தாக்குகின்றன, என்ன காரணத்திற்காக பார்வோனை யெகோவா அழிக்கவில்லை?

16. பஸ்கா, புளிப்பில்லா அப்பப் பண்டிகை சம்பந்தமாக யெகோவா என்ன கட்டளையிடுகிறார்?

17. என்ன சம்பவங்களால் இது நினைவுகூர வேண்டிய இரவாக முக்கியத்துவம் பெறுகிறது?

18. செங்கடலில் யெகோவாவின் பெயர் எவ்வளவு மகத்தான விதத்தில் பரிசுத்தப்படுத்தப்பட்டது?

19. சீனாயை நோக்கிச் செல்லும் பயணத்தில் என்ன சம்பவங்கள் நடக்கின்றன?

20. என்ன சிறந்த ஒழுங்கமைப்பு அமலுக்கு வருகிறது?

21. அடுத்தபடியாக யெகோவா என்ன வாக்குறுதி அளிக்கிறார், ஆனால் என்ன நிபந்தனையின்பேரில்?

22. (அ) அந்தப் பத்து வார்த்தைகளில் என்ன கட்டளைகள் அடங்கியிருக்கின்றன? (ஆ) வேறு என்ன நியாயவிசாரணை சட்டங்கள் இஸ்ரவேலுக்கு கொடுக்கப்படுகின்றன, இந்த ஜனங்கள் எவ்வாறு நியாயப்பிரமாண உடன்படிக்கைக்குள் வருகிறார்கள்?

23. மலையில் என்ன கட்டளைகளை மோசேக்கு யெகோவா கொடுக்கிறார்?

24. (அ) ஜனங்கள் என்ன பாவம் செய்கிறார்கள், அதன் விளைவு என்ன? (ஆ) அடுத்தபடியாக, யெகோவா தம்முடைய பெயரையும் மகிமையையும் மோசேக்கு எவ்வாறு வெளிப்படுத்துகிறார்?

25. ஆசரிப்புக் கூடாரத்தையும் யெகோவாவின் மகிமை மேலுமாக வெளிப்படுத்தப்படுவதையும் பற்றி பதிவு என்ன கூறுகிறது?

26. (அ) யாத்திராகமம் யெகோவாவில் விசுவாசத்தை எவ்வாறு நிலைநாட்டுகிறது? (ஆ) கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் யாத்திராகமத்திலிருந்து மேற்கோள்கள் காட்டப்படுவது நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு அதிகரிக்கச் செய்கிறது?

27. யாத்திராகமத்திலுள்ள சரித்திரப் பதிவு கிறிஸ்தவர்களுக்கு எவ்வகையில் நன்மை பயக்குகிறது?

28. நியாயப்பிரமாணத்தின் நிழல்களும் பஸ்கா ஆட்டுக்குட்டியும் எவ்வாறு நிறைவேற்றம் அடைந்திருக்கின்றன?

29. (அ) நியாயப்பிரமாண உடன்படிக்கைக்கும் புதிய உடன்படிக்கைக்கும் உள்ள வேறுபாட்டைக் காட்டுங்கள். (ஆ) என்ன பலிகளை ஆவிக்குரிய இஸ்ரவேலர் இப்பொழுது கடவுளுக்குச் செலுத்துகின்றனர்?

30. இஸ்ரவேல் ஜனம் விடுதலை செய்யப்பட்டதும் எகிப்தில் யெகோவாவின் பெயர் மகிமைப்படுத்தப்பட்டதும் எதற்கு முன்நிழலாக இருந்தன?

31. ஒரு ராஜ்யத்தையும் யெகோவாவின் பிரசன்னத்தையும் பற்றி யாத்திராகமம் நிழலாக குறிப்பிடுவது என்ன?