Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் புத்தக எண் 21—பிரசங்கி

பைபிள் புத்தக எண் 21—பிரசங்கி

பைபிள் புத்தக எண் 21—பிரசங்கி

எழுத்தாளர்: சாலொமோன்

எழுதப்பட்ட இடம்: எருசலேம்

எழுதி முடிக்கப்பட்டது: பொ.ச.மு. 1000-த்துக்கு முன்

பிரசங்கி புத்தகம் உயர்ந்த நோக்கத்துக்காக எழுதப்பட்டது. யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருந்த ஜனத்தின் அதிபதிதான் சாலொமோன்; அந்த ஜனம் தங்களுடைய ஒப்புக்கொடுத்தலுக்கு ஏற்ப உண்மைத்தன்மையோடு ஒன்றுபட்டிருப்பதை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு இவருக்கு இருந்தது. இதை பிரசங்கி புத்தகத்தின் ஞானமான அறிவுரையின் வாயிலாக நிறைவேற்ற விரும்பினார்.

2பிரசங்கி 1:​1-ல் (NW) “கூட்டிச்சேர்ப்பவர்” என்று தன்னை குறிப்பிடுகிறார். இதற்கான எபிரெய வார்த்தை கொஹேலெத் (Qo·heʹleth) என்பதாகும். இப்பெயரே எபிரெய பைபிளில் இப்புத்தகத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ளது. எக்லெஸியாஸ்டிஸ் (Ek·kle·si·a·stesʹ) என்ற தலைப்பை கிரேக்க செப்டுவஜின்ட் கொடுக்கிறது, இதன் அர்த்தம் “எக்லெஸியாவின் (சபையின்; கூட்டத்தின்) உறுப்பினர்” என்பதாகும். இதிலிருந்தே எக்லெஸியாஸ்டிஸ் என்ற ஆங்கில பெயர் வருகிறது. ஆனால் கொஹேலெத் என்பதை “கூட்டிச்சேர்ப்பவர்” என மொழிபெயர்ப்பது அதிகப் பொருத்தமாகும். இது, சாலொமோனுக்கும் மிகப் பொருத்தமான சிறப்புப் பெயர். இப்புத்தகத்தை சாலொமோன் எழுதுவதற்கான நோக்கத்தையும் இது தெரிவிக்கிறது.

3என்ன கருத்தில் சாலொமோன் ராஜா கூட்டிச்சேர்ப்பவர், அவர் எதற்காக கூட்டிச்சேர்த்தார்? தன்னுடைய ஜனமாகிய இஸ்ரவேலரையும் அவர்களோடு தற்காலிகமாக தங்கியிருந்த நண்பர்களையும் கூட்டிச்சேர்த்தார். இவர்கள் அனைவரையும் யெகோவா தேவனுடைய வணக்கத்திற்கு கூட்டிச்சேர்த்தார். முன்பு எருசலேமில் யெகோவாவின் ஆலயத்தைக் கட்டியிருந்தார். அதை பிரதிஷ்டை செய்யும்போது கடவுளின் வணக்கத்துக்காக அவர்கள் எல்லாரையும் கூடிவரும்படி அழைத்தார் அல்லது கூட்டிச்சேர்த்தார். (1 இரா. 8:1) இப்போது பிரசங்கி புத்தகத்தின் மூலம் தன்னுடைய ஜனத்தை இவ்வுலகத்தின் வீணான, பயனற்ற செயல்களைவிட்டு தூரமாக விலக்கி, பயனுள்ள செயல்களுக்குக் கூட்டிச்சேர்க்க விரும்பினார்.​—பிர. 12:​8-10.

4சாலொமோன் என திட்டவட்டமாக பெயர் குறிப்பிடப்படாதபோதிலும், அவரே எழுத்தாளர் என்பதற்கு பல பகுதிகள் பலமான சான்றளிக்கின்றன. பிரசங்கி தன்னை “தாவீதின் குமாரன்” என்றும் “எருசலேமில் இஸ்ரவேலருக்கு ராஜாவாயிருந்”தவர் என்றும் அறிமுகப்படுத்துகிறார். இது அரசனாகிய சாலொமோனுக்கு மட்டுமே பொருந்தும். ஏனெனில் எருசலேமில் அவருக்குப் பின் பதவிக்கு வந்தவர்கள் யூதாவை மட்டுமே அரசாண்டனர். மேலும், பிரசங்கி இவ்வாறு எழுதுகிறார்: “எனக்குமுன் எருசலேமிலிருந்த எல்லாரைப் பார்க்கிலும் ஞானமடைந்து தேறினேன், என் மனம் மிகுந்த ஞானத்தையும் அறிவையும் கண்டறிந்தது.” (1:​1, 12, 16) இது சாலொமோனுக்குப் பொருந்துகிறது. “பல நீதிமொழிகளை ஒழுங்காக வரிசைப்படுத்தி அமைப்பதற்கு அவர் ஆழ்ந்து சிந்தித்து தீர ஆராய்ச்சி செய்தார்” என பிரசங்கி 12:9 (NW) நமக்குச் சொல்கிறது. சாலொமோன் ராஜா 3,000 நீதிமொழிகளை உரைத்தார். (1 இரா. 4:32) அவர் செய்த கட்டிடத் திட்டம்; திராட்சத் தோட்டங்கள், தோட்டங்கள், சிங்காரவனங்கள்; நீர்ப்பாசன திட்டம்; வேலைக்காரரும் வேலைக்காரிகளுக்குமான ஏற்பாடு; வெள்ளியையும் பொன்னையும் சேகரித்தல் என இந்த எழுத்தாளருடைய அநேக சாதனைகளை பிரசங்கி 2:​4-9 சொல்கிறது. இவை யாவும் சாலொமோனுடைய விஷயத்தில் உண்மையாக இருந்தன. சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனின் ஞானத்தையும் செழுமையையும் கண்டபோது: “இவைகளில் பாதியாகிலும் எனக்கு அறிவிக்கப்படவில்லை” என்று சொன்னாள்.​—1 இரா. 10:7.

5பிரசங்கி “எருசலேமில்” அரசராக இருந்தார் என இப்புத்தகம் சொல்கிறது. ஆகவே இந்தப் புத்தகம் எருசலேமில் எழுதப்பட்டிருக்க வேண்டும். சாலொமோனின் 40 ஆண்டு கால ஆட்சியின் மத்திப ஆண்டுகளில் எழுதப்பட்டிருக்க வேண்டும். அதாவது இப்புத்தகத்தில் அவர் செய்ததாக குறிப்பிடும் பல திட்டங்களுக்குப் பின்பு, ஆனால் விக்கிரகாராதனைக்குள் வீழ்வதற்கு முன்பு அவர் இதை எழுதியிருக்க வேண்டும். ஆகவே இப்புத்தகம் எழுதப்பட்டது பொ.ச.மு. 1000 ஆண்டுக்கு முன்பாக இருக்க வேண்டும். அதற்குள் இந்த உலகத்திலுள்ள வேலைகளையும் பொருள் சம்பாத்தியங்களைப் பெறுவதற்கான அதன் கடுமையான முயற்சியையும் பற்றிய அறிவை நன்கு பெற்றிருந்திருப்பார். அந்தச் சமயத்தில் கடவுளுடைய தயவு பெற்றவராகவும் அவருடைய ஏவுதலுக்கு உகந்தவராகவும் இருந்திருப்பார்.

6பிரசங்கி ‘கடவுளால் ஏவப்பட்டது’ என்று நாம் எப்படி நிச்சயமாக நம்பலாம்? இப்புத்தகத்தில் கடவுளுடைய பெயராகிய யெகோவா குறிப்பிடப்படாததால், இது ஏவப்பட்டு எழுதப்பட்டது என்பதை சிலர் சந்தேகிக்கலாம். ஆனால், அது கடவுளுடைய மெய் வணக்கத்தை நிச்சயமாகவே ஆதரிக்கிறது. மேலும் ஹா-எலோஹிம் (ha·ʼElo·himʹ) “உண்மையான கடவுள்” (NW) என்ற சொற்றொடரை திரும்பத் திரும்ப பயன்படுத்துகிறது. பிரசங்கியிலிருந்து எடுக்கப்பட்ட நேரடியான மேற்கோள்கள் பைபிளின் மற்ற புத்தகங்களில் இல்லை என்பதால் மற்றொரு எதிர்ப்பும் எழும்பலாம். எனினும், இந்தப் புத்தகத்திலுள்ள போதகங்களும் நியமங்களும் வேதாகமத்தின் மற்ற பாகங்களோடு முழுமையாக ஒத்திருக்கின்றன. கிளார்க் என்பவரின் கமென்டரி, தொகுதி III, பக்கம் 799 இவ்வாறு கூறுகிறது: “கொஹேலெத், அல்லது எக்லெஸியாஸ்டிஸ் [பிரசங்கி], சர்வவல்லவருடைய ஏவுதலினால் எழுதப்பட்டது என்பதை யூத, கிறிஸ்தவ சர்ச் ஆகிய இரண்டும் எப்பொழுதும் ஏற்றிருக்கின்றன; பரிசுத்த பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலின் பாகமாகவும் கருதப்பட்டது.”

7உலக ஞானிகளாகிய “திறனாய்வாளர்கள்,” பிரசங்கி புத்தகத்தின் மொழிநடையும் அதன் தத்துவமும் இன்னும் பின்னான காலத்துக்குரியது என கூறுகின்றனர். ஆகவே இப்புத்தகம் சாலொமோனால் எழுதப்படவும் இல்லை, ‘முழு வேதாகமத்தின்’ உண்மையான பாகமும் இல்லை என வாதாடியிருக்கின்றனர். அவர் சர்வதேச வாணிகம், தொழில் துறை ஆகியவற்றை அதிகமதிகமாக முன்னேற்றுவித்தார்; தன் நாட்டிற்கு விஜயம் செய்த பிற நாட்டு முக்கிய பிரமுகர்களின் மூலமும் வேறு வழிகளிலும் வெளி உலகத்தோடு தொடர்பு வைத்திருந்தார். இப்படி பல வழிகளில் அவர் ஏராளமான தகவலை சேகரித்திருப்பார் என்பதை அவர்கள் மறந்துவிடுகின்றனர். (1 இரா. 4:​30, 34; 9:​26-28; 10:​1, 23, 24) எஃப். சி. குக் என்பவர் பைபிள் கமென்டரி, தொகுதி IV, பக்கம் 622-ல் பின்வருமாறு எழுதுகிறார்: “இந்த மாபெரும் எபிரெய அரசன் அன்றாடம் செய்துவந்த காரியங்களையும் தேர்ந்தெடுத்த இலக்குகளையும் பார்த்தால், அவர் சாதாரண எபிரெய வாழ்க்கை வாழ்ந்ததாகவே தெரியவில்லை. எபிரெய கருத்துக்களுக்கும் மொழிக்கும் அப்பாற்பட்டவற்றை அவர் அறிந்திருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.”

8எனினும், பிரசங்கி அதிகாரப்பூர்வ பைபிள் பட்டியலைச் சேர்ந்தது என்பதை விவாதிக்க பைபிள் சாராத ஆதாரங்கள் உண்மையில் தேவைப்படுகின்றனவா? அந்தப் புத்தகத்தைத்தானே ஆராய்வது அதிலுள்ள விஷயங்களோடு ஒத்திருப்பது மட்டுமல்ல, வேதாகமத்தின் மீதிபாகத்தோடு அது ஒத்திருப்பதையும் வெளிப்படுத்துகிறது. அது நிச்சயமாகவே பைபிளின் ஒரு பாகம்.

பிரசங்கியின் பொருளடக்கம்

9மனிதனின் பயனற்ற வாழ்க்கை முறை (1:​1–3:22). ஆரம்ப வார்த்தைகள் இப்புத்தகத்தின் மையப் பொருளை தொனிக்கச் செய்கின்றன: “மாயை, மாயை, எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான்.” மனிதவர்க்கத்தின் கடும் முயற்சியிலும் உழைப்பிலுமுள்ள லாபம் என்ன? சந்ததிகள் வருகின்றன, போகின்றன. இயற்கை சுழற்சிகள் பூமியில் திரும்பத் திரும்ப நிகழ்கின்றன. “சூரியனுக்குக் கீழே நூதனமானது ஒன்றுமில்லை.” (1:​2, 3, 9) மனிதரின் அழிவுக்குரிய வேலைகள் சம்பந்தமாக ஞானத்தைத் தேடி ஆராய்ந்தறிய பிரசங்கி தன் இருதயத்தை ஒருமுகப்படுத்தினார். ஆனால் ஞானத்திலும், பெரிய முதலீடுகளிலும், சாதனைகளிலும், கடின உழைப்பிலும், சாப்பிடுவதிலும், குடிப்பதிலும் எல்லாம் “மாயையே, காற்றை வேட்டையாடுவதே” என காண்கிறார். பொருளை நாடித்தொடரும் வாழ்க்கையை, துன்பமிக்க வாழ்க்கையை அவர் ‘வெறுத்தார்.’​—1:14; 2:​11, 17, தி.மொ.

10ஒவ்வொன்றுக்கும் ஒரு காலம் உண்டு; ஆம், கடவுள் “சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்.” பூமியில் தம்முடைய சிருஷ்டிகள் வாழ்க்கையை மகிழ்ச்சியோடு அனுபவிக்கும்படி அவர் விரும்புகிறார். “மகிழ்ச்சியாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மை செய்வதுமேயல்லாமல், வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன். அன்றியும் மனுஷர் யாவரும் புசித்துக் குடித்துத் தங்கள் சகலப் பிரயாசத்தின் பலனையும் அநுபவிப்பது தேவனுடைய அநுக்கிரகம்.” ஆனால் ஐயோ! பாவமுள்ள மனிதகுலம் ஒரு மிருகத்தைப் போன்ற முடிவையே எதிர்ப்படுகிறது: “இவைகள் சாகிறது போலவே அவர்களும் சாகிறார்கள்; ஜீவன்களுக்கெல்லாம் சுவாசம் ஒன்றே; மிருகத்தைப் பார்க்கிலும் மனுஷன் மேன்மையுள்ளவன் அல்ல; எல்லாம் மாயையே.”​—3:​1, 11-13, 19.

11கடவுள் பயமுள்ளவர்களுக்கு ஞானமான அறிவுரை (4:​1–7:29). இறந்தவர்களை சாலொமோன் பாராட்டுகிறார். ஏனெனில் அவர்கள் ‘சூரியனுக்குக் கீழே செய்யப்படும் கொடுமைகள்’ எல்லாவற்றிலுமிருந்து விடுதலையானவர்கள். பின்பு அவர் வீணான, துயரத்தில் முடிவடையும் செயல்களை விவரிக்கிறார். “ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்,” “முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது” என ஞானமாக அறிவுரை கூறுகிறார். (4:​1, 2, 9, 12) கடவுளுடைய ஜனத்தைக் கூட்டிச்சேர்ப்பது சம்பந்தமாக அவர் நல்ல அறிவுரையைக் கொடுக்கிறார்: “நீ தேவாலயத்துக்குப் போகும்போது உன் நடையைக் காத்துக்கொள்; . . . செவிகொடுக்கச் சேர்வதே நலம்.” கடவுளுக்கு முன்பாக பதற்றமாய்ப் பேசாதிருங்கள்; உங்கள் “வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக,” நீங்கள் கடவுளுக்குப் பொருத்தனை செய்திருந்தால் அதை செலுத்துங்கள். “நீ தேவனுக்குப் பயந்திரு.” ஏழைகள் ஒடுக்கப்படுகையில், “உயர்ந்தவன்மேல் உயர்ந்தவன் காவலாளியாயிருக்கிறான்; அவர்கள்மேல் உயர்ந்தவரும் ஒருவருண்டு” என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். சாதாரண வேலைக்காரன் நிம்மதியாக தூங்குவான். பணக்காரனோ பெரும் கவலைகளால் தூக்கமின்றி தவிப்பான். எனினும், அவன் இந்த உலகத்துக்குள் நிர்வாணமாக வந்தான். கடினமாக உழைத்திருந்தாலும் இந்த உலகத்திலிருந்து ஒன்றையும் அவன் எடுத்துச் செல்ல முடியாது என அவர் குறிப்பிடுகிறார்.​—5:​1, 2, 4, 7, 8, 12, 15.

12ஒரு மனிதன் செல்வங்களையும் மகிமையையும் பெறலாம். ஆனால், அவன் நன்மையானதைக் காணாமல் ‘இரண்டாயிரம் வருஷங்கள்’ வாழ்ந்து என்ன பயன்? “களிப்பு வீட்டிலே” மூடருடன் தோழமை கொள்வதைவிட ஜீவன், மரணம் போன்ற முக்கியமான விஷயங்களை இருதயத்தில் சிந்திப்பது மேம்பட்டது; ஆம், ஞானியின் கடிந்துகொள்ளுதலை பெற்றுக்கொள்வது சிறந்தது. ஏனெனில், “மூடனின் நகைப்பு பானையின்கீழ் எரிகிற முள்ளுகளின் படபடப்பைப் போலிருக்”கிறது. ஞானம் பயனுள்ளது. “ஞானம் கேடகம், திரவியமும் [“பணம்,” பொ.மொ.] கேடகம்; ஞானம் தன்னை உடையவர்களுக்கு ஜீவனைத் தரும்; இதுவே அறிவின் மேன்மை.” அப்படியெனில், மனிதனின் வழி ஏன் கடும் துயரத்தில் முடிவடைகிறது? “தேவன் மனுஷனைச் செம்மையானவனாக உண்டாக்கினார்; அவர்களோ அநேக உபாய தந்திரங்களைத் தேடிக்கொண்டார்கள்.”​—6:6; 7:​4, 6, 12, 29.

13எல்லாருக்கும் ஒரே முடிவு (8:​1–9:12). “ராஜாவின் கட்டளையைக் கைக்கொண்டு நட” என பிரசங்கி அறிவுரை கூறுகிறார்; கெட்ட செயலுக்கு ஏற்ற தண்டனை விரைவாய் நிறைவேற்றப்படாததால் “மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது” என்று அவர் குறிப்பிடுகிறார். (8:​2, 11) அவர்தாமே மகிழ்ச்சியாக இருப்பதை ஆதரிக்கிறார். ஆனால் மற்றொரு கடும்துயரமான காரியம் உண்டு! எல்லா வகையான ஆட்களும் ஒரே வழியிலேயே, அதாவது மரணத்துக்கே செல்கின்றனர்! உயிருள்ளோர் தாங்கள் மரிப்பார்கள் என்ற உணர்வுள்ளோராக இருக்கின்றனர். “மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; . . . செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.”​—9:​5, 10.

14நடைமுறையான ஞானமும் மனிதனின் கடமையும் (9:​13–12:14). “பல உயர் பதவிகளில் . . . மூடத்தனம்” போன்ற துயரமுண்டாக்கும் மற்ற காரியங்களைப் பற்றியும் பிரசங்கி பேசுகிறார். மேலும், நடைமுறையான ஞானத்துக்குரிய பல நீதிமொழிகளையும் குறித்து வைக்கிறார். உண்மையான ஞானத்துக்குச் செவிகொடுக்கவில்லையெனில் “இளவயதும் வாலிபமும் மாயையே” என்கிறார் பிரசங்கி. அவர் மேலும் கூறுகிறார்: “நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை.” இல்லையெனில், முதிர்வயது ஒருவரை பூமியின் தூசிக்கே திரும்பச் செய்யும். இதை உணர்த்தும்விதத்தில் “மாயை மாயை, எல்லாம் மாயை” என்கிறார் பிரசங்கி. பிரசங்கி ஜனங்களுக்கு அறிவைத் தொடர்ந்து போதித்தார். ஏனெனில் “ஞானிகளின் வாக்கியங்கள் தாற்றுக்கோல்கள்போல” சரியான செயல்களைச் செய்ய தூண்டும். ஆனால் உலகப்பிரகாரமான ஞானத்தைக் குறித்து அவர் பின்வருமாறு எச்சரிக்கிறார்: “அநேகம் புஸ்தகங்களை உண்டுபண்ணுகிறதற்கு முடிவில்லை; அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு.” பிரசங்கி பின்பு இந்தப் புத்தகத்தை அதன் மகத்தான உச்சக்கட்டத்துக் கொண்டுவந்து, மாயையையும் ஞானத்தையும் பற்றி தான் விவாதித்த எல்லாவற்றையும் பின்வருமாறு தொகுத்துக் கூறுகிறார்: “காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. ஒவ்வொரு கிரியையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்.”​—10:6; 11:​1, 10; 12:​1, 8-14.

ஏன் பயனுள்ளது

15எதிர்மறையான, நம்பிக்கையற்ற மனநிலையை உருவாக்கும் புத்தகமாக சிறிதேனும் இல்லாமல், பிரசங்கி கடவுளுடைய ஞானத்தின் ஒளிமிகுந்த மணிக்கற்கள் நிறைந்ததாக உள்ளது. மாயை என தான் பெயரிடும் பல சாதனைகளைக் கணக்கிடுகையில், எருசலேமில் மொரியா மலைமீது யெகோவாவின் ஆலயத்தைக் கட்டியதையோ, யெகோவாவின் தூய்மையான வணக்கத்தையோ சாலொமோன் சேர்க்கவில்லை. கடவுளின் அன்பளிப்பாகிய உயிரை அவர் மாயை என்பதாக விவரிக்கிறதில்லை. ஆனால், அதனுடைய நோக்கம் மனிதன் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் நன்மை செய்வதற்குமே என காட்டுகிறார். (3:​12, 13; 5:​18-20; 8:15) கடவுளைப் புறக்கணிப்பவையே தீங்கான ஈடுபாடுகளாகும். ஒரு தகப்பன் தன் குமாரனுக்காக செல்வத்தைச் சேமித்து வைக்கலாம். ஆனால் ஒரு திடீர் விபத்து முழுவதையும் அழித்துவிடுகிறது. அவனுக்கு எதுவும் மீந்திருப்பதில்லை. அதைப் பார்க்கிலும் ஆவிக்குரிய செல்வங்களாகிய நிலைத்திருக்கும் ஒரு சுதந்தரத்தை அளிப்பது மிக மேம்பட்டதாயிருக்கும். ஏராளமாக இருந்தும் அதை அனுபவிக்க முடியாமலிருப்பது துயரமானது. உலகப்பிரகாரமாக செல்வந்தராயிருக்கும் யாவரும் தங்கள் கையில் எதுவும் இல்லாமல் மரணத்தில் ‘போகையில்’ தீங்கு அவர்களை மேற்கொள்கிறது.​—5:13-15; 6:​1, 2.

16மத்தேயு 12:​42-ல் கிறிஸ்து இயேசு தம்மை “சாலொமோனிலும் பெரியவர்” என குறிப்பிட்டார். சாலொமோன் இயேசுவைப் படமாக குறித்ததால், கொஹேலெத் புத்தகத்திலுள்ள சாலொமோனின் வார்த்தைகள் இயேசுவின் போதகங்களுக்கு ஒத்திசைந்திருப்பதாக நாம் காண்கிறோமா? பல ஒத்திசைவுகளை நாம் காண்கிறோம்! உதாரணமாக, இயேசு, “என் பிதா இதுவரைக்கும் கிரியைசெய்துவருகிறார், நானும் கிரியைசெய்துவருகிறேன்” என்று சொல்வதில் கடவுளுடைய வேலையின் விரிவான எல்லையை வலியுறுத்தினார். (யோவா. 5:​17) சாலொமோனும் கடவுளுடைய வேலைகளைக் குறிப்பிடுகிறார்: “கடவுளின் எல்லாச் செயல்களையும் பற்றி இதை அறிந்தேன்; சூரியன் கீழ் செய்யப்படுகிறவற்றை மனுஷன் ஆராய்ந்தறிய முடியாது, மனுஷன் எவ்வளவு பிரயாசப்பட்டுத் தேடினாலும் அதைக் கண்டுபிடிக்க முடியாது, அதை அறியலாம் என்று ஞானியொருவன் எண்ணினாலும் அவனும் அதை ஆராய்ந்துகொள்ள முடியாது என்பதே.”​—பிர. 8:​17, தி.மொ.

17உண்மையான வணக்கத்தார் ஒன்றுகூடும்படி இயேசுவும் சாலொமோனும் ஊக்கப்படுத்தினர். (மத். 18:20; பிர. 4:​9-12; 5:1) ‘இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவின்’ பேரிலும் ‘ஜாதிகளுக்குக் குறிக்கப்பட்ட காலங்களின்’ பேரிலும் இயேசு குறிப்புகள் தந்தார். “ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு” என்ற சாலொமோனின் கூற்றுக்கு அவை ஒத்திசைவாக உள்ளன.​—மத். 24:3; லூக். 21:​24; NW; பிர. 3:1.

18எல்லாவற்றிற்கும் மேலாக, பொருளாசையின் படுகுழிகளைக் குறித்து எச்சரிப்பதில் இயேசுவும் அவருடைய சீஷர்களும் சாலொமோனோடு சேர்ந்துகொள்கின்றனர். ஞானமே உண்மையான பாதுகாப்பு. ஏனெனில் அது “தன்னை உடையவற்கு உயிர் தரும்” என்று சாலொமோன் சொல்லுகிறார். “முதாலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக்கொடுக்கப்படும்” என்று இயேசு சொல்லுகிறார். (பிர. 7:​12, தி.மொ.; மத். 6:33) பிரசங்கி 5:​10-ல் பின்வருமாறு எழுதப்பட்டிருக்கிறது: “பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை; இதுவும் மாயையே.” 1 தீமோத்தேயு 6:​6-19-ல் “பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது” என்று பவுல் கொடுக்கும் அறிவுரை இதற்கு வெகுவாய் ஒத்துள்ளது. பைபிள் போதனையின் மற்ற குறிப்புகளின்பேரிலும் ஒத்திசைவுள்ள பகுதிகள் காணப்படுகின்றன.​—பிர. 3:17அப். 17:31; பிர. 4:1யாக். 5:4; பிர. 5:​1, 2யாக். 1:19; பிர. 6:12யாக். 4:14; பிர. 7:20ரோ. 3:23; பிர. 8:17ரோ. 11:33.

19ஞானியாகிய அரசன் சாலொமோனின் சந்ததியில் வந்த, கடவுளுடைய நேச குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் ராஜ்ய ஆளுகை, புதிய பூமிக்குரிய ஒரு சமுதாயத்தை நிலைநாட்டும். (வெளி. 21:​1-5) சாலொமோன் தனது மாதிரி ராஜ்யத்தில் தன் குடிமக்களின் வழிநடத்துதலுக்காக எழுதியது இது. கிறிஸ்து இயேசுவின்கீழ் கடவுளுடைய ராஜ்யத்தில் தங்கள் நம்பிக்கையை இப்பொழுது வைக்கும் எல்லாருக்கும் இது மிகவும் ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது. அந்த ஆட்சியில் மனிதவர்க்கத்தினர், பிரசங்கி குறிப்பிட்ட அதே ஞானமான நியமங்களைக் கடைப்பிடித்து வாழ்ந்து கடவுளுடைய அன்பளிப்பாகிய மகிழ்ச்சியுள்ள வாழ்க்கையில் நித்தியமாக களிகூருவர். கடவுளுடைய ராஜ்யத்தில் வாழ்க்கையின் மகிழ்ச்சியான அம்சங்களை முழுமையாக அனுபவிக்க யெகோவாவின் வணக்கத்தில் கூட்டிச்சேர்க்கப்படுவதற்கு இதுவே காலம்.​—பிர. 3:​12, 13; 12:​13, 14.

[கேள்விகள்]

1. என்ன உயர்ந்த நோக்கத்துக்காக பிரசங்கி எழுதப்பட்டது?

2. பிரசங்கியின் எபிரெயப் பெயரில் இந்த நோக்கம் எவ்வாறு வெளிப்படுகிறது, இவ்வாறு கிரேக்க, ஆங்கில பெயர்களைப் பார்க்கிலும் இது எவ்வாறு அதிக பொருத்தமாகிறது?

3. என்ன கருத்தில் சாலொமோன் கூட்டிச்சேர்ப்பவராக இருந்தார்?

4. சாலொமோனே இதன் எழுத்தாளர் என்பதாக எவ்வாறு உறுதிப்படுத்தப்படுகிறது?

5. பிரசங்கி எங்கே, எப்போது எழுதப்பட்டிருக்க வேண்டும்?

6. பிரசங்கி தேவாவியால் ஏவப்பட்டது சம்பந்தமாக என்ன எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன, ஆனால் இவை தவறு என்பதாக எவ்வாறு வாதிடலாம்?

7. பிரசங்கி புத்தகத்தை எழுதுவதற்கு சாலொமோனின் பின்னணி சிறந்த முறையில் அவரை எவ்வாறு தகுதியாக்கியது?

8. பிரசங்கி, பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலை சேர்ந்தது என்பதற்கு மிக உறுதியான விவாதம் என்ன?

9. மனிதக் குமாரரின் ஈடுபாடுகளைக் குறித்து பிரசங்கி என்ன காண்கிறார்?

10. கடவுளுடைய அனுக்கிரகம் என்ன, ஆனால் பாவமுள்ள மனிதனுக்கு என்ன முடிவு ஏற்படுகிறது?

11. கடவுள் பயமுள்ள மனிதனுக்கு ஞானமான என்ன அறிவுரையை பிரசங்கி கொடுக்கிறார்?

12. வாழ்க்கையின் முக்கியமான விஷயங்களின்பேரிலும், பணத்திற்கு மேலாக ஞானத்தின் மேம்பட்ட பயனின்பேரிலும் என்ன அறிவுரை கொடுக்கப்படுகிறது?

13. பிரசங்கி என்ன அறிவுரையையும் கருத்தையும் தெரிவிக்கிறார், மனிதன் செல்லும் இடத்தைக் குறித்து என்ன சொல்கிறார்?

14. (அ) என்ன நடைமுறையான ஞானத்தை பிரசங்கி அறிவுறுத்துகிறார்? (ஆ) காரியத்தின் கடைத்தொகை என்ன?

15. கடுந்துயரமான ஈடுபாடுகளையும் பயனுள்ள காரியங்களையும் சாலொமோன் எவ்வாறு வேறுபடுத்திக் காட்டுகிறார்?

16. எவ்வாறு கொஹேலெத் அல்லது பிரசங்கி, இயேசுவின் போதகங்களோடு ஒத்திசைந்திருக்கிறது?

17. இயேசு மற்றும் சாலொமோனின் வார்த்தைகளில் என்ன ஒத்திசைவு காணப்படுகிறது?

18. என்ன எச்சரிக்கைகள் கொடுப்பதில் இயேசுவும் அவருடைய சீஷர்களும் சாலொமோனோடு சேர்ந்துகொள்கின்றனர்?

19. என்ன மகிழ்ச்சியான எதிர்பார்ப்புடன் இன்று நாம் யெகோவாவின் வணக்கத்தில் கூடிவரலாம்?