Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் புத்தக எண் 22—உன்னதப்பாட்டு

பைபிள் புத்தக எண் 22—உன்னதப்பாட்டு

பைபிள் புத்தக எண் 22—உன்னதப்பாட்டு

எழுத்தாளர்: சாலொமோன்

எழுதப்பட்ட இடம்: எருசலேம்

எழுதி முடிக்கப்பட்டது: ஏ. பொ.ச.மு. 1020

“இந்த சிறப்பான பாடல் இஸ்ரவேலுக்குக் கொடுக்கப்பட்ட அந்த நாளைக் காண முழு உலகமும் தகுதி பெறவில்லை.” இவ்வாறே, பொது சகாப்தத்தின் முதல் நூற்றாண்டில் வாழ்ந்த யூத “ரபீ” அக்கிபா, சாலொமோனின் உன்னதப்பாட்டை போற்றினார். a இந்தப் புத்தகத்தின் தலைப்பு அதன் தொடக்க வார்த்தைகளாகிய “சாலோமோன் பாடின உன்னதப்பாட்டு” என்பதன் சுருக்கமாகும். வார்த்தைக்கு-வார்த்தையுள்ள எபிரெய பதிப்பின்படி “பாட்டுகளுக்கெல்லாம் பாட்டு” என அழைக்கப்படுவது, சிறப்பின் உயர்நிலையை குறிக்கிறது. எல்லாவற்றிற்கும் உயர்வான வானங்களைக் குறிக்கும் “வானாதி வானங்கள்” என்ற சொற்றொடரைப் போல இது உள்ளது. (உபா. 10:14) இது பல்வேறு பாடல்களின் ஒரு தொகுப்பு அல்ல, ஆனால் ஒரே பாடல். “பரிபூரணத்தில் நிகரற்று விளங்கும் ஒரு பாடல், மனித சரித்திரத்தில் எழுதப்பட்ட எதைக் காட்டிலும் மிகச் சிறந்த படைப்பு.” b

2இந்தப் பாடலின் அறிமுகத்தில் குறிப்பிட்டிருக்கிறபடி எருசலேமின் அரசரான சாலொமோனே இதை இயற்றியவர். எபிரெய கவிதைக்கு இலக்கணமாக திகழும் மிகச் சிறந்த இந்த அழகிய பாடலை எழுதுவதற்கு அவர் எல்லா விதத்திலும் தகுதிபெற்றிருந்தார். (1 இரா. 4:32) இது நாட்டுப்புற வாழ்க்கைக்குரிய ஒரு கவிதை. கருத்தாழமிக்க இது, அழகை மிகவும் அருமையாக வருணிக்கிறது. கிழக்கத்திய சூழமைவைக் கண்முன் காட்சிப்படுத்திப் பார்க்கும் வாசகர் இதை இன்னும் அதிகமாக பாராட்டுவார். (உன். 4:​11, 13; 5:11; 7:4) இது இயற்றப்பட்ட சந்தர்ப்பம் தனித்தன்மை வாய்ந்ததாகும். சாலொமோன் ஞானத்தில் பெரும் சிறப்புற்றவராகவும், அதிகாரத்தில் பலம் படைத்தவராகவும், தன் செல்வ சிறப்பின் மேன்மையில் கவர்ந்திழுப்பவராகவும் இருந்தார். சேபா நாட்டின் ராணியே வியந்து போற்றுமளவுக்கு சிறந்து விளங்கினார். ஆனால் இந்த மகா ராஜனால், தான் காதல் கொண்ட ஓர் எளிய நாட்டுப்புற பெண்ணை கவர முடியவில்லை. மேய்ப்பனான இளைஞனிடம் அவள் கொண்டிருந்த அசைக்க முடியாத அன்பின் காரணமாக அரசனுக்கு தோல்விதான் மிஞ்சியது. ஆகவே, இந்தப் புத்தகம், சாலொமோனுடைய காதல் தோல்வியின் சோக கீதம் என்பதாக சரியாக அழைக்கப்படலாம். பிற்காலங்களில் வரும் பைபிள் வாசகரின் நன்மைக்காக இந்தப் பாடலை இயற்றும்படி யெகோவா தேவன் அவரை ஏவினார். இதை அவர் எருசலேமில் இயற்றினார். ஆலயம் கட்டிமுடித்து சில ஆண்டுகள் சென்றபின்பு, ஏறக்குறைய பொ.ச.மு. 1020-ல் இது எழுதப்பட்டிருக்கலாம். இதை எழுதின காலத்திற்குள்ளாக, சாலொமோனுக்கு ‘ராஜஸ்திரீகள் அறுபதுபேரும், மறுமனையாட்டிகள் எண்பதுபேரும்’ இருந்தார்கள். இதோடு ஒப்பிட அவருடைய ஆட்சியின் முடிவில் அவருக்கு “எழுநூறு மனையாட்டிகளும், முந்நூறு மறுமனையாட்டிகளும் இருந்தார்கள்.”​—உன். 6:8; 1 இரா. 11:3.

3சாலொமோனின் உன்னதப்பாட்டு பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலை சேர்ந்ததாக பூர்வ காலங்களில் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பொது சகாப்தத்திற்கு வெகு காலத்துக்கு முன்பாகவே, எபிரெய புத்தகத் தொகுப்பின் ஒரு முக்கிய, ஏவப்பட்ட பகுதியாக இது கருதப்பட்டது. கிரேக்க செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பிலும் இது இருந்தது. ஜொஸிபஸினுடைய பரிசுத்த புத்தகங்களின் பட்டியலில் இதுவும் சேர்க்கப்பட்டிருந்தது. ஆகையால், பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலை சேர்ந்ததென நிரூபிக்கும் எபிரெய வேதாகமத்தின் மற்ற புத்தகங்களுக்கு பொதுவாக இருக்கும் அதே சான்றுதான் இதற்கும் பொருந்துகிறது.

4எனினும், அதில் கடவுள் என்ற சொல் குறிப்பிடப்படாததைக் காரணம் காட்டி சிலர், அது பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலை சேர்ந்ததுதானா என்பதாக சந்தேகிக்கின்றனர். “கடவுள்” என்ற சொல் அங்கிருப்பது மாத்திரமே அதை பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலை சேர்ந்ததாக ஆக்கிவிடாது. அவ்வாறே கடவுளை குறிப்பிடாதது இந்தப் புத்தகத்தைத் தகுதியற்றதாக ஆக்காது. 8-ம் அதிகாரம், 6-ம் வசனத்தில் (NW) கடவுளுடைய பெயர் சுருக்கம் தோன்றுகிறது, அங்கே அன்பு “யாவின் தீக்கொழுந்து” என சொல்லப்பட்டுள்ளது. “வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே” என இயேசு கிறிஸ்து அங்கீகரிக்கும் விதத்தில் குறிப்பிட்ட அந்த புத்தகத்தின் ஒரு பாகம்தான் இது என்பதில் சந்தேகமில்லை. (யோவா. 5:​39) மேலும், பரஸ்பர அன்பின் மிகச் சிறந்த தன்மையை, ஆவிக்குரிய கருத்தில் கிறிஸ்துவுக்கும் அவருடைய ‘மணவாட்டிக்கும்’ இடையில் நிலவுவதைப் போன்ற அன்பை, இப்புத்தகம் வல்லமைவாய்ந்த முறையில் வருணிக்கிறது. இது, சாலொமோனின் உன்னதப்பாட்டுக்கு, பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலில் அதற்கே உரித்தான இடத்தைத் திட்டமாக தீர்மானிக்கிறது.​—வெளி. 19:​7, 8; 21:9.

சாலொமோனின் உன்னதப்பாட்டின் பொருளடக்கம்

5இந்தப் புத்தகத்தில், ஒன்றன்பின் ஒன்றாக தொடரும் உரையாடல்களைக் காண்கிறோம். பேசுபவர்கள் இடையிடையே மாறிக்கொண்டே இருக்கின்றனர். எருசலேமின் அரசரான சாலொமோன், ஒரு மேய்ப்பன், அவனுடைய மிக நேசமான சூலமியப் பெண், அவளுடைய சகோதரர்கள், அரசவை பெண்கள் (‘எருசலேமின் குமாரத்திகள்’), எருசலேமின் பெண்கள் (‘சீயோன் குமாரத்திகள்’)​—இவர்களே இப்புத்தகத்தின் உரையாடலில் கலந்துகொள்பவர்கள். (உன். 1:​5-7; 3:​5, 11) இவர்கள் தங்களைக் குறித்து சொல்வதிலிருந்து, அல்லது இவர்களிடம் சொல்லப்படுவதிலிருந்து அடையாளம் கண்டுகொள்ளப்படுகின்றனர். இந்த நாடகம் சூனேம், அல்லது சூலேமுக்கு அருகில் அரங்கேறுகிறது. அங்கே சாலொமோன் தன் அரசவையில் உள்ளவர்களோடு கூடாரமடித்துத் தங்கியுள்ளார். மனதை கனிய வைக்கும் ஒரு பொருளை இது தெரிவிக்கிறது​—சூனேம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு நாட்டுப்புற பெண் தன் மேய்ப்பத் தோழனிடம் கொண்டுள்ள அன்பு.

6சூலமியப் பெண் சாலொமோனுடைய முகாமில் (1:​1-14). அரசனின் கூடாரத்திற்கு இந்தப் பெண் அழைத்து வரப்படுகிறாள். ஆனால் அவள், மேய்ப்பனாகிய தன் நேசரைக் காண்பதற்கு மாத்திரமே ஆவலாயிருக்கிறாள். தன் நேசருக்காக ஏங்குபவளாக, அவர் அங்கிருப்பதுபோல் சப்தமாக பேசுகிறாள். அரசனின் பணிப் பெண்களான ‘எருசலேமின் குமாரத்திகள்,’ சூலமியப் பெண்ணின் கருநிறத்தின் காரணமாக அவளை விநோதமாக பார்க்கின்றனர். அவள், தன் சகோதரரின் திராட்சத் தோட்டங்களைக் கவனித்து வந்ததால் வெயிலில் கருத்துப்போனதாக விளக்குகிறாள். பின்பு விடுதலை பெற்றவளைப்போல் தனது நேசரிடம் சப்தமாக பேசுகிறாள். அவரைத் தான் எங்கே காணலாமென கேட்கிறாள். அரசவை பெண்கள் அவளை வெளியே சென்று மேய்ப்பர்களின் கூடாரங்களுக்கருகே அவளுடைய மந்தையை மேய்க்கும்படி கூறுகின்றனர்.

7சாலொமோன் முன்வருகிறார். அவளைப் போகவிட அவருக்கு மனமில்லை. அவளுடைய அழகை அவர் புகழ்ந்து, “வெள்ளிப் பொட்டுகளுள்ள பொன் ஆபரணங்க”ளால் அவளை அலங்கரிப்பதாக வாக்குறுதியளிக்கிறார். அவர் நெருங்கி வருவதை சூலமியப் பெண் எதிர்க்கிறாள். தன்னுடைய அன்பு தனது இனிய நேசருக்கு மட்டுமே என்பதாக சாலொமோனுக்கு உணர்த்துகிறாள்.​—1:11.

8அந்த மேய்ப்பனான நேசரின் வருகை (1:​15–2:2). சூலமியப் பெண்ணின் நேசர் சாலொமோனுடைய பாளையத்திற்கு சென்று அவளை உற்சாகப்படுத்துகிறார். தன் அன்பை அவளுக்கு உறுதியளிக்கிறார். சூலமியப் பெண் தன் அன்பரின் பக்கத்திலேயே இருப்பதற்கும், அவரோடு வெளியே வயல்களிலும் காடுகளிலும் வசிக்கையில் கிடைக்கும் சாதாரண இன்பத்திற்கும் ஏங்குகிறாள்.

9சூலமியப் பெண் பணிவடக்கமுள்ளவள். “நான் கரையோர சமவெளியின் வெறும் குங்குமப்பூ” என அவள் சொல்கிறாள். அவளுடைய மேய்ப்ப நேசர் அவளை ஒப்பற்றவளாக கருதி, பின்வருமாறு கூறுகிறார்: “முள்ளுகளுக்குள்ளே லீலிபுஷ்பம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரத்திகளுக்குள்ளே எனக்குப் பிரியமானவளும் இருக்கிறாள்.”​—2:​1, NW, 2.

10அவள் தன் மேய்ப்பனுக்காக ஏங்குகிறாள் (2:​3–3:5). தன் நேசரிடமிருந்து மறுபடியும் பிரிக்கப்பட்டவளாக, இந்தச் சூலமியப் பெண் அவரை மற்ற எல்லாருக்கும் மேலாக உயர்வாய் கருதுவதை தெரிவிக்கிறாள். மேலும், தனக்கு விருப்பமில்லாத ஒருவர்மேல், தேவையில்லாத அன்பை தூண்டுவிக்க முயற்சி செய்யக் கூடாது என்ற தன் நேசரின் ஆணையின்கீழ் எருசலேம் குமாரத்திகள் இருப்பதாக அவள் கூறுகிறாள். தன்னுடைய அழைப்புக்குத் தன் மேய்ப்பன் பதிலளித்ததையும், வசந்த காலத்தில் குன்றுகளுக்கு வரும்படி தன்னை அழைத்த சமயத்தையும் அவள் நினைவுகூருகிறாள். மலைகளின்மீது அவர், மகிழ்ச்சியில் துள்ளி குதித்து ஏறுவதைக் காண்கிறாள். அவர்: “என் பிரியமே! என் ரூபவதியே! நீ எழுந்துவா” என்று அழைப்பதை அவள் கேட்கிறாள். எனினும், அவளுடைய உறுதியான தன்மையைப்பற்றி அவளுடைய சகோதரர்கள் நிச்சயமாயில்லை. ஆகவே அவர்கள் கோபமடைந்து திராட்சத் தோட்டங்களை அவள் காவல்காக்கும்படி செய்கிறார்கள். “என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவள்” என அவள் கூறி, தன்னருகில் விரைந்து வரும்படி அவரிடம் மன்றாடுகிறாள்.​—2:​13, 16.

11சாலொமோனின் பாளையத்தில் தான் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டிருப்பதை சூலமியப் பெண் விவரிக்கிறாள். இரவில் தன் படுக்கையில், தன் மேய்ப்பனுக்காக அவள் ஏங்குகிறாள். மறுபடியுமாக எருசலேம் குமாரத்திகளிடம், வேண்டாத அன்பைத் தன்னில் எழுப்பக்கூடாது என்ற ஆணைக்கு அவர்கள் உட்படுத்தப்பட்டிருப்பதை அவர்களுக்கு நினைப்பூட்டுகிறாள்.

12எருசலேமில் சூலமியப் பெண் (3:​6–5:1). அரசருக்குரிய பகட்டாரவாரத்துடன் சாலொமோன் எருசலேமுக்குத் திரும்புகிறார், அவருடைய ஊர்வலத்தை மக்கள் வியந்து பாராட்டுகின்றனர். இந்த நெருக்கடியான நேரத்தில், அந்த மேய்ப்ப நேசர் சூலமியப் பெண்ணை கைவிடவில்லை. முக்காடு போட்டிருக்கும் தனது காதலியை அவர் பின்தொடர்ந்து சந்திக்கிறார். தனக்கு மிகவும் நேசமானவளை அன்பு மிகுந்த கனிவான சொற்களால் பலப்படுத்துகிறார். விடுதலையாகி இந்த நகரத்தை விட்டு வெளிச்செல்ல விரும்புவதாக அவரிடம் சொல்கிறாள் அவள். அப்போது அவர் மகிழ்ச்சிக் கடலில் தத்தளித்து, பின்வருமாறு சொல்கிறார்: “என் பிரியமே! நீ பூரண ரூபவதி.” (4:7) அவளுடைய கடைக்கண் பார்வையே அவருடைய இருதயத்தை படபடக்க வைக்கிறது. அவளுடைய பேரன்பின் சொற்கள் திராட்ச மதுவைவிட மேம்பட்டதாக உள்ளன, அவளுடைய நறுமணம் லீபனோனின் வாசனைக்கு ஒப்பாய் இருக்கிறது, அவளுடைய தோல் மாதுளம் பழத் தோட்டம் போல் உள்ளது. தன் அன்பானவரை ‘அவருடைய தோட்டத்துக்குள்’ வரும்படி அழைக்கிறாள் அந்தப் பெண், அவர் அதற்கு ஒப்புக்கொள்கிறார். எருசலேமின் சிநேகப்பான்மையான பெண்கள் பின்வருமாறு அவர்களை ஊக்குவிக்கிறார்கள்: “தோழர்களே, சாப்பிடுங்கள்! பேரன்பின் வெளிப்படுத்துதல்களால் குடித்து, வெறித்தவர்களாகுங்கள்!”​—4:16; 5:​1, NW.

13அந்தப் பெண்ணின் கனவு (5:​2–6:3). சூலமியப் பெண் அந்த அரசவை பெண்களிடம் ஒரு கனவை சொல்கிறாள். அதில் கதவு தட்டப்படும் சத்தத்தை கேட்கிறாள். அவளுடைய அன்பரே வெளியில் இருக்கிறார். தன்னை உள்ளே வரவிடும்படி கெஞ்சுகிறார். ஆனால் அவளோ படுத்திருக்கிறாள். கடைசியாக கதவைத் திறக்கும்படி அவள் எழுகையில், அவர் இருளுக்குள் மறைந்துவிடுகிறார். அவரைத் தேடி அவள் வெளியே செல்கிறாள், ஆனால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. காவற்காரர் அவளை மோசமாக நடத்துகின்றனர். அரசவை பெண்களிடம், தனது நேசரைக் கண்டால், தான் காதல் நோயால் வாடுவதாக அவரிடம் சொல்வதற்கு அவர்கள் கடமைப்பட்டவர்களென கூறுகிறாள். அவரை அவ்வளவு விசேஷித்தவராக ஆக்குவது என்ன என்பதாக அவர்கள் அவளிடம் கேட்கின்றனர். அவரைப் பற்றி மிகச் சிறப்பாக விவரிப்பவளாக, “வெண்மையும் சிவப்புமானவர்; பதினாயிரம்பேர்களில் சிறந்தவர்” என்று சொல்கிறாள். (5:10) அரசவை பெண்கள், அவர் இருக்கும் இடத்தைப் பற்றி அவளிடம் கேட்கின்றனர். அவர் தோட்டங்களில் மேய்ப்பதற்கு சென்றிருப்பதாக அவள் சொல்கிறாள்.

14சாலொமோனின் முடிவான முயற்சிகள் (6:​4–8:4). அரசன் சாலொமோன் சூலமியப் பெண்ணை அணுகுகிறார். அவள் எவ்வளவு அழகாக இருக்கிறாளென அவளுக்கு மறுபடியும் சொல்கிறார். மேலும் ‘ராஜஸ்திரீகள் அறுபதுபேரையும், மறுமனையாட்டிகள் எண்பதுபேரையும்’ பார்க்கிலும் அதிக அழகானவள் என்கிறார். ஆனால் அவளோ அவரை புறக்கணிக்கிறாள். (6:8) ஓர் அலுவல் காரணமாக சாலொமோனின் பாளையத்திற்கு அருகே அவள் வரும்படியாகிவிட்டது. ‘நீங்கள் என்னில் என்னத்தைப் பார்க்கிறீர்கள்?’ என்று அவள் கேட்கிறாள். உள்ளங்கால்களிலிருந்து உச்சந்தலைவரை அவளுடைய அழகை வருணிப்பதற்கு சாலொமோன் இந்தக் கபடமற்ற கேள்வியை பயன்படுத்திக்கொள்கிறார். ஆனால் அந்தப் பெண் அவருடைய வசியமான பேச்சிற்கெல்லாம் மசிந்து கொடுக்கவில்லை. தன் மேய்ப்பன்மீது தனக்குள்ள முழுமையான பற்றை அவள் தைரியமாக அறிவித்து, அவரை சப்தமிட்டு கூப்பிடுகிறாள். தன்னுடைய விருப்பத்துக்கு எதிராக தன்னில் நேசத்தை எழுப்ப வேண்டாமென்ற ஆணையின்கீழ் எருசலேமின் குமாரத்திகள் இருப்பதை மூன்றாம் தடவையாக அவர்களுக்கு நினைப்பூட்டுகிறாள். சாலொமோன் அவளை வீட்டுக்கு அனுப்பிவிடுகிறார். சூலமியப் பெண்ணை தன் காதல் வலையில் சிக்கவைப்பதில் அவர் தோல்வியடைகிறார்.

15சூலமியப் பெண் திரும்புகிறாள் (8:​5-14). தங்களது சகோதரி திரும்பி வருவதை அவளுடைய சகோதரர்கள் காண்கின்றனர். ஆனால் அவள் தனிமையாக இல்லை. “தன் நேசர்மேல் சார்ந்துகொண்டு” வருகிறாள். தன் நேசரை ஆப்பிள் மரத்தின்கீழ் (NW) சந்தித்ததை நினைவுபடுத்தி, தங்களுடைய காதலை யாராலும் பிரிக்க முடியாது என்பதாக அறிவிக்கிறாள். அவள் “சிறிய சகோதரி”யாக இருப்பதால் அவளுடைய சகோதரர்கள் கவலைப்படுகிறார்கள் என்பதை அவர்களுடைய வார்த்தைகள் குறிப்பிடுகின்றன. ஆனால் தான் முதிர்ச்சியும் உறுதியுமுள்ள பெண்ணாக நிரூபித்திருப்பதாக இவள் தெரிவிக்கிறாள். (8:8) அவளுடைய சகோதரர்கள் இப்பொழுது அவள் திருமணம் செய்துகொள்ளும்படி அனுமதியளிப்பார்களாக. அரசன் சாலொமோன் தன் செல்வத்தை வைத்துக்கொள்ளட்டும்! இவள் தன் ஒரே திராட்சத் தோட்டத்தோடு மனத்திருப்தியாக இருக்கிறாள், ஏனெனில் தன்னிடத்தில் மட்டுமே அன்பாயுள்ள ஒருவரை அவள் நேசிக்கிறாள். அவளுடைய விஷயத்தில் இந்த அன்பு மரணத்தைப்போல் பலத்ததாக உள்ளது. அதன் சுடர்கள் ‘யாவின் தீக்கொழுந்தைப்போல்’ உள்ளது. ‘ஷியோலைப்போல்’ உறுதியான பற்றில் விடாப்பிடியாய் இருப்பதால், அவளுக்கு வெற்றி கிடைக்கிறது. மகிமையான உச்சக்கட்டமாக, அவள் தன் மேய்ப்ப நேசருடன் இணைகிறாள்.​—8:​5, 6, NW.

ஏன் பயனுள்ளது

16கடவுளுடைய மனிதனுக்கு இன்று நன்மையளிக்கும் என்ன பாடங்கள் இந்த அன்பான பாடலில் கற்பிக்கப்படுகின்றன? உண்மையாயிருத்தல், பற்றுறுதி, கடவுளுடைய நியமங்களுக்கு உத்தமத்தைக் காத்தல் போன்றவை தெளிவாக காட்டப்படுகின்றன. உண்மையான நேசர் காண்பிக்கும் மாசற்ற, கபடமற்ற அன்பின் அழகை இந்தப் பாடல் கற்பிக்கிறது. உண்மையான அன்பை வெல்ல முடியாது, அழிக்க முடியாது, விலைக்கு வாங்க முடியாது என்பதாக அது போதிக்கிறது. கிறிஸ்தவ இளைஞர்களும், கணவன் மனைவிமார்களும்கூட, சோதனைகள் எழும்பும்போதும், தவறு செய்ய கவர்ந்திழுக்கப்படும் போதும் உத்தமத்தைக் காக்கும் இந்தப் பொருத்தமான முன்மாதிரியிலிருந்து பயனடையலாம்.

17ஆனால், தேவனுடைய ஆவியால் ஏவப்பட்ட இந்தப் பாடல் கிறிஸ்தவ சபை முழுவதற்கும் மிக அதிக பயனுள்ளது. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் இதை தேவாவியால் ஏவப்பட்ட வேதவாக்கியங்களின் பாகமாக ஒப்புக்கொண்டனர். அவர்களில் ஒருவர் எழுதினார்: “தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.” (ரோ. 15:​4.) தேவ ஆவியால் ஏவப்பட்ட இதே எழுத்தாளரான பவுல், கிறிஸ்தவ சபைக்குப் பின்வருமாறு எழுதியபோது இந்த சூலமியப் பெண் தன் மேய்ப்பனுக்குக் கொண்டிருந்த தனிப்பட்ட அன்பை மனதில் கொண்டிருந்திருக்கலாம்: “நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காகத் தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன்.” மேலும் சபையின்மீதுள்ள கிறிஸ்துவின் அன்பு, மனைவியிடம் கணவனுக்குள்ள அன்பைப் போன்றது என பவுல் எழுதினார். (2 கொ. 11:2; எபே. 5:​23-27) இயேசு கிறிஸ்து அவர்களுக்கு நல்ல மேய்ப்பராக மட்டுமல்ல அவர்களுடைய அரசராகவும் இருக்கிறார். தம்மை பின்பற்றும் அபிஷேகம் செய்யப்பட்டவர்களை பரலோகங்களில் தம்மைக் ‘கலியாணம்’ செய்யும் விவரிக்க முடியாத மகிழ்ச்சியை ஏற்கும்படி அழைக்கிறார்.​—வெளி. 19:9; யோவா. 10:11.

18கிறிஸ்து இயேசுவைப் பின்பற்றும் அபிஷேகம் செய்யப்பட்ட இவர்கள் நிச்சயமாகவே இந்தச் சூலமியப் பெண்ணின் முன்மாதிரியிலிருந்து அதிக பயனடையலாம். அவர்களும்கூட இந்த உலகப் பொருளாசையால் கவர்ந்து இழுக்கப்படாமல், தங்கள் அன்பில் பற்றுறுதியுள்ளோராக இருக்க வேண்டும். அதோடு, பரிசைப் பெறும்வரை தங்கள் உத்தமத்தில் தவறாதபடி சமநிலையைக் காத்துவர வேண்டும். மேலான காரியங்களில் அவர்கள் தங்கள் மனதை ஊன்ற வைத்து ‘ராஜ்யத்தை முதலாவதாகத் தேடுகின்றனர்.’ தங்கள் மேய்ப்பராகிய இயேசு கிறிஸ்துவின் நேசத்தை மனதார ஏற்றுக்கொள்கின்றனர். இந்த அன்பானவர், காணப்படாதவராக இருந்தபோதிலும் அவர்களுக்கு மிக அருகில் இருக்கிறார். தைரியமாக உலகத்தை வெற்றிகொள்ளும்படி அவர்களை அழைக்கிறார் என்று அறிவதில் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றனர். ‘யாவின் தீக்கொழுந்தைப்போல்’ அணைக்க முடியாத உறுதியான அன்பு தங்கள் மேய்ப்பரும் அரசருமானவரிடம் இருப்பதால், அவர்கள் நிச்சயமாகவே வெற்றி சிறந்து, மகிமையான பரலோக ராஜ்யத்தில் உடன்சுதந்தரவாளிகளாக அவரோடு சேர்க்கப்படுவார்கள். இவ்வாறு யாவின் பெயர் பரிசுத்தப்படும்!​—மத். 6:33; யோவா. 16:33.

[அடிக்குறிப்புகள்]

a யூத மிஷ்னா (யாடாயிம் 3:5).

b கிளார்க்கின் கமென்டரி, தொ. III, பக்கம் 841.

[கேள்விகள்]

1. என்ன வகையில் இது “பாட்டுகளுக்கெல்லாம் பாட்டு”?

2. (அ) சாலொமோனின் உன்னதப்பாட்டை இயற்றியவர் யார், அவருடைய தகுதிகள் யாவை, காதல் தோல்வியின் சோக கீதம் என்பதாக இந்தப் புத்தகம் ஏன் அழைக்கப்படலாம்? (ஆ) இந்தப் புத்தகம் எங்கே எழுதப்பட்டது, எப்போது?

3. சாலொமோனின் உன்னதப்பாட்டு பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலை சேர்ந்தது என்பதை நிரூபிக்க என்ன சான்று உள்ளது?

4. (அ) “கடவுள்” என்ற சொல் குறிப்பிடப்படாதிருப்பது, சாலொமோனின் உன்னதப்பாட்டை பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலை சேர்ந்தது அல்ல என்பதாக மெய்ப்பிக்கிறதா? (ஆ) பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலில் அதற்குள்ள தனிப்பட்ட இடத்தை எது திட்டமாய்த் தீர்மானிக்கிறது?

5. (அ) இந்த நாடகத்திலுள்ள கதாபாத்திரங்கள் எவ்வாறு அடையாளம் கண்டுகொள்ளப்படுகின்றனர்? (ஆ) மனதை கனியவைக்கும் என்ன பொருள் தெரிவிக்கப்படுகிறது?

6. அந்தப் பெண்ணுக்கும் சாலொமோனின் முகாமிலுள்ள அரசவை பணிப்பெண்களுக்கும் இடையே என்ன உரையாடல் நடக்கிறது?

7. நெருங்கி வருவதற்கு சாலொமோன் என்ன செய்கிறார், ஆனால் அதன் பலன் என்ன?

8. அந்தப் பெண்ணின் நேசர் அவளை எவ்வாறு உற்சாகப்படுத்துகிறார், அவள் எதற்காக ஏங்குகிறாள்?

9. சூலமியப் பெண்ணும் அவளுடைய நேசரும் அவளுடைய அழகை எவ்வாறு மதிப்பிடுகின்றனர்?

10. தன் அன்பைக்குறித்து அந்தப் பெண் எதை நினைவுபடுத்துகிறாள்?

11. என்ன ஆணையைக் குறித்து எருசலேமின் குமாரத்திகளிடம் மறுபடியுமாக சூலமியப் பெண் நினைப்பூட்டுகிறாள்?

12. சாலொமோன் அந்தப் பெண்ணை எருசலேமுக்குக் கொண்டு சென்றிருக்கையில் அவளுக்கு மேலுமான என்ன உற்சாகத்தை அவளுடைய நேசர் கொடுக்கிறார்?

13. அந்தப் பெண் என்ன கனவு காண்கிறாள், அரசவை பெண்களிடம் தன் நேசரை அவள் எவ்வாறு விவரிக்கிறாள்?

14. உபாயங்கள் அனைத்தையும் பயன்படுத்திய போதிலும், சாலொமோன் எவ்வாறு தன் காதல் முயற்சியில் தோல்வியடைகிறார்?

15. (அ) என்ன வேண்டுகோளுடன் அவள் தன் சகோதரரிடம் திரும்புகிறாள்? (ஆ) தனிப்பட்ட பற்றுறுதி எவ்வாறு வெற்றி சிறக்கிறது?

16. என்ன விலைமதியா பாடங்கள் இந்தப் பாடலில் கற்பிக்கப்படுகின்றன?

17. (அ) இந்தப் பாடல் கிறிஸ்தவ சபையின் போதனைக்காக எழுதப்பட்டிருப்பதாக பவுல் எவ்வாறு காட்டுகிறார்? (ஆ) கொரிந்தியருக்கும் எபேசியருக்கும் எழுதும்போது பவுல் ஏன் இதை மனதில் வைத்திருந்திருக்கலாம்? (இ) யோவான் தேவாவியால் ஏவப்பட்டு எழுதிய எழுத்துக்களோடு ஆர்வத்தை தூண்டும் என்ன ஒப்புமைகள் செய்யப்படலாம்?

18. கிறிஸ்து இயேசுவைப் பின்பற்றும் அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் இந்தச் சூலமியப் பெண்ணின் முன்மாதிரியிலிருந்து எவ்வாறு பயனடையலாம்?