பைபிள் புத்தக எண் 24—எரேமியா
பைபிள் புத்தக எண் 24—எரேமியா
எழுத்தாளர்: எரேமியா
எழுதப்பட்ட இடங்கள்: யூதா, எகிப்து
எழுதி முடிக்கப்பட்டது: பொ.ச.மு. 580
காலப்பகுதி: பொ.ச.மு. 647-580
தீர்க்கதரிசியாகிய எரேமியா கலவரம் நிறைந்த ஆபத்தான காலங்களில் வாழ்ந்தார். யூதாவின் அரசரான, தேவபயமுள்ள யோசியாவினுடைய ஆட்சியின் 13-வது ஆண்டில், அதாவது பொ.ச.மு. 647-ல் யெகோவா அவரை ஊழியத்திற்காக நியமித்தார். கடவுளுடைய ஆலயம் பழுதுபார்க்கப்பட்டபோது யெகோவாவின் நியாயப்பிரமாண புத்தகம் கண்டுபிடிக்கப்பட்டு, அரசனுக்கு வாசிக்கப்பட்டது. இதை செயல்படுத்த அவர் கடினமாக உழைத்தார். ஆனாலும் மக்கள் விக்கிரகாராதனையை தற்காலிகமாக விட்டுவிடும்படி மட்டுமே செய்ய அவரால் முடிந்தது. 55 ஆண்டுகள் ஆட்சிசெய்த யோசியாவின் தாத்தாவான மனாசேயும், 2 ஆண்டுகள் மாத்திரமே ஆட்சியிலிருந்து, கொலை செய்யப்பட்ட அவருடைய தகப்பன் ஆமோனும் பொல்லாதவர்களாக இருந்தனர். அசுத்தமான காம களியாட்டங்களிலும் கொடூரமான சடங்காச்சாரங்களிலும் ஈடுபடும்படி ஜனங்களை அவர்கள் உற்சாகப்படுத்தி இருந்தார்கள். ஆகவே ஜனங்கள் “வானராக்கினிக்குத்” தூபம் காட்டுவதிலும் பேய்த் தெய்வங்களுக்கு நர பலிகளைச் செலுத்துவதிலும் பழக்கப்பட்டிருந்தார்கள். குற்றமற்ற இரத்தத்தால் மனாசே எருசலேமை நிரப்பியிருந்தான்.—எரே. 1:2; 44:19; 2 இரா. 21:6, 16, 19-23; 23:26, 27.
2எரேமியாவின் வேலை கடினமானது. யூதாவும் எருசலேமும் பாழாக்கப்படும்; யெகோவாவின் பிரமாண்டமான ஆலயம் எரிக்கப்படும்; அவருடைய ஜனம் சிறைப்படுத்தப்படும்; நம்பமுடியாத இந்த பேரழிவுகளை யெகோவாவின் தீர்க்கதரிசியாக முன்னறிவிப்பதே எரேமியாவின் வேலை. கெட்ட அரசர்களாகிய யோவாகாஸ், யோயாக்கீம், யோயாக்கீன் (எகொனியா), சிதேக்கியா ஆகியோரின் ஆட்சி காலத்தில் 40 ஆண்டுகள் அவர் எருசலேமில் தீர்க்கதரிசனம் உரைக்க வேண்டும். (எரே. 1:2, 3) பின்பு, சிறைபடுத்தப்பட்டிருந்த யூதர்களின் விக்கிரகாராதனை சம்பந்தமாக அவர் எகிப்தில் தீர்க்கதரிசனம் சொல்ல வேண்டியிருந்தது. அவருடைய புத்தகம் பொ.ச.மு. 580-ல் எழுதி முடிக்கப்பட்டது. இவ்வாறு எரேமியாவில் அடங்கியுள்ள முக்கியமான காலப்பகுதி 67 ஆண்டுகளாகும்.—52:31.
3எபிரெயுவில் இந்தத் தீர்க்கதரிசியின் பெயரும் அவருடைய புத்தகத்தின் பெயரும் யிர்மீயா (Yir·meyahʹ) அல்லது யிர்மீயாஹு (Yir·meyaʹhu) என்பதாகும். இதன் அர்த்தம், “யெகோவா உயர்த்துகிறார்; அல்லது, யெகோவா தளர்த்துகிறார் [பெரும்பாலும் கருப்பையிலிருந்து]” என்பதாக இருக்கலாம். எபிரெய வேதாகமத்தின் பெயர்ப் பட்டியல் எல்லாவற்றிலும் இந்தப் புத்தகம் இருக்கிறது. ஆகவே இப்புத்தகம் பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலை சேர்ந்ததாக பொதுவாக ஏற்கப்படுகிறது. எரேமியாவின் வாழ்நாளிலேயே இந்தத் தீர்க்கதரிசனங்களில் பல வியக்கத்தக்க முறையில் நிறைவேற்றமடைந்தன. இதன் நம்பகத் தன்மைக்கு இது முழுமையான சான்று அளிக்கிறது. மேலும், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் பல தடவை எரேமியாவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. (மத். 2:17, 18; 16:14; 27:9, 10) எரேமியா புத்தகத்தை இயேசு படித்திருந்தார். அவர் ஆலயத்தைச் சுத்திகரித்தபோது, எரேமியா 7:11-ன் மொழிநடையை ஏசாயா 56:7-ன் மொழிநடையோடு இணைத்ததிலிருந்து இது தெரிகிறது. (மாற். 11:17; லூக். 19:46) இயேசுவின் துணிவையும் தைரியத்தையும் பார்த்த சிலர் அவரை எரேமியா என்பதாகவும் நினைத்தார்கள். (மத். 16:13, 14) புதிய உடன்படிக்கையை பற்றிய எரேமியாவின் தீர்க்கதரிசனத்தை (எரே. 31:31-34) பவுல் எபிரெயர் 8:8-12-லும் 10:16, 17-லும் குறிப்பிடுகிறார். “பெருமைபாராட்டுகிறவன் யெகோவாவில் பெருமைபாராட்டக்கடவன்” என்று சொல்லும்போது பவுல் எரேமியா 9:24-ஐ மேற்கோள் காட்டுகிறார். (1 கொ. 1:31, NW) பாபிலோனின் வீழ்ச்சியைப் பற்றிய எரேமியாவின் உதாரணம் (எரே. 51:63, 64), வெளிப்படுத்துதல் 18:21-ல் மேலுமதிக வலிமையோடு பயன்படுத்தப்பட்டுள்ளது.
4தொல்பொருள் ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகளும் எரேமியாவிலுள்ள பதிவை ஆதரிக்கின்றன. உதாரணமாக, பொ.ச.மு. 617-ல் நேபுகாத்நேச்சார் (நெபுகத்ரேஸர்) எருசலேமை கைப்பற்றியதையும், அரசனை (யோயாக்கீனை) கைதுசெய்து தனது இஷ்டப்படி ஒருவனை (சிதேக்கியாவை) அரசனாக நியமித்ததையும் பாபிலோனிய வரலாறு சொல்கிறது.—24:1; 29:1, 2; 37:1. a
5மோசேயை தவிர பூர்வ தீர்க்கதரிசிகளில் வேறு யாரை காட்டிலும் எரேமியாவின் வாழ்க்கை வரலாற்றே நம்மிடம் முழுமையாக உள்ளது. எரேமியா தன்னையும் தனது உணர்ச்சிகளையும் அதிகமாக வெளிப்படுத்துகிறார். இவை அவருடைய துணிவையும் தைரியத்தையும் அதோடுகூட அவருடைய மனத்தாழ்மையையும் மென்மையான மனதையும் காட்டுகின்றன. அவர் ஒரு தீர்க்கதரிசியாக மட்டுமல்ல. ஆசாரியராகவும் வேதவாக்கியங்களைத் தொகுப்பவராகவும் திருத்தமான வரலாற்று ஆசிரியராகவும் இருந்தார். இவர் ஆனதோத் ஊரிலிருந்த ஆசாரியரான இல்க்கியாவின் குமாரன். இந்த ஆனதோத் ‘பென்யமீன் தேசத்தில்’ எருசலேமின் வடக்கேயிருந்த நாட்டில் அமைந்திருந்த ஆசாரியருக்குரிய ஒரு பட்டணம். (1:1) எரேமியாவின் எழுத்துநடை தெளிவாகவும், நேரடியாகவும், எளிதில் புரிந்துகொள்ளும்படியாகவும் இருக்கிறது. உவமைகளும் தத்ரூபமான விவரிப்புகளும் இதில் நிறைந்துள்ளன. மேலும் இந்தப் புத்தகத்தில் உரைநடையும் செய்யுள்நடையும் கலந்து உள்ளன.
எரேமியாவின் பொருளடக்கம்
6இப்புத்தகத்தில் உள்ள தகவல் காலவரிசையின்படி அல்ல,
பொருளுக்கேற்றபடி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. ஆகவே இப்பதிவில் காலத்தையும் சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் குறித்ததில் பல வித்தியாசங்களை காண முடிகிறது. முடிவாக, எருசலேமும் யூதாவும் பாழாக்கப்பட்டதை 52-ம் அதிகாரம் நுணுக்கமாக விவரிக்கிறது. இது பெரும்பான்மையான தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தை காட்டுகிறது. அதுமட்டுமல்லாமல், பின்தொடரும் புலம்பல் புத்தகத்துக்கு ஏற்ற சூழமைவையும் அளிக்கிறது.7யெகோவா எரேமியாவை நியமிக்கிறார் (1:1-19). எரேமியா எதற்காக நியமிக்கப்பட்டார்? அவர் ஒரு தீர்க்கதரிசியாக வேண்டும் என்று விரும்பியதன் காரணமாகவா? அல்லது அவர் ஆசாரிய குடும்பத்திலிருந்து வந்ததன் காரணமாகவா? யெகோவாவே இதற்கு பதிலளிக்கிறார்: “நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன்.” இது யெகோவாவின் நியமிப்பு. இதை ஏற்றுக்கொள்ள எரேமியா விரும்புகிறாரா? மனத்தாழ்மையுடன் நான் “சிறுபிள்ளையாயிருக்கிறேன்” என்று சொல்கிறார். யெகோவா அவருக்கு இவ்வாறு மீண்டும் நம்பிக்கையூட்டுகிறார்: “இதோ, என் வார்த்தைகளை உன் வாயிலே வைக்கிறேன். பார், பிடுங்கவும், இடிக்கவும், அழிக்கவும், கவிழ்க்கவும், கட்டவும், நாட்டவும் உன்னை நான் இன்றையதினம் ஜாதிகளின்மேலும் ராஜ்யங்களின்மேலும் ஏற்படுத்தினேன்.” எரேமியா பயப்படக்கூடாது. ‘அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று யெகோவா சொல்லுகிறார்.’—1:5, 6, 9, 10, 19, NW.
8எருசலேம், உண்மையற்ற மனைவி (2:1–6:30). யெகோவாவின் வார்த்தை என்ன செய்தியை எரேமியாவுக்குத் தருகிறது? ஆரம்பத்தில் கொண்டிருந்த அன்பை எருசலேம் மறந்துவிட்டாள். ஜீவத் தண்ணீரின் ஊற்றாகிய யெகோவாவைவிட்டு விலகி, அன்னிய தெய்வங்களுடன் வேசித்தனம் செய்திருக்கிறாள். அருமையான சிவப்பு திராட்சக்கொடியிலிருந்து, அவள் “காட்டுத் திராட்சச் செடியின் ஆகாத கொடிகளாய்” மாறிவிட்டாள். (2:21) குற்றமற்ற ஏழை ஆத்துமாக்களின் இரத்தத்தால் அவளுடைய ஆடைகள் நனைந்துள்ளன. வேசியாகிய இஸ்ரவேலுங்கூட யூதாவைவிட அதிக நீதியுள்ளவளாக நிரூபித்திருக்கிறாள். துரோகிகளான இந்தக் குமாரர்கள் திரும்புமாறு கடவுள் அழைக்கிறார். ஏனெனில் கடவுளே அவர்களை உடைமையாக்கிக் கொண்ட கணவர். ஆனால் அவர்கள் துரோகம் செய்த மனைவியைப்போல் இருந்திருக்கின்றனர். அவர்கள் தங்கள் அருவருப்புகளை நீக்கி, தங்கள் இருதயங்களை விருத்தசேதனம் செய்தால் திரும்பலாம். “சீயோனை நோக்கி ஓர் சமிக்கையை எழுப்புங்கள்,” ஏனெனில் வடக்கிலிருந்து தீமையை யெகோவா கொண்டுவருவார். (4:6, NW) தரைமட்டமாகிறது! எல்லாமே தரைமட்டமாகிறது! புதரிலிருந்து வெளிவரும் சிங்கத்தைப்போலவும், வனாந்தரத்திலே வீசும் தீக்காற்றைப்போலவும், பெரும்புயல் காற்றைப்போன்ற இரதங்களோடும் யெகோவாவின் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுபவர் வருவார்.
9எருசலேமை சுற்றிப்பாருங்கள். அங்கே நீங்கள் எதை பார்க்கிறீர்கள்? அக்கிரமங்களையும் உண்மையற்ற தன்மையையுமே அல்லவா! அந்த ஜனங்கள் யெகோவாவை மறுதலித்துவிட்டனர். எரேமியாவின் வாயிலுள்ள கடவுளின் வார்த்தை நெருப்பாகி, கட்டைகளை எரிப்பதுபோல் அவர்களை எரித்துவிட வேண்டும். அன்னிய தெய்வத்தை வணங்குவதற்காக அவர்கள் யெகோவாவை விட்டு விலகினார்கள். அதேபோல, அயல்நாட்டில் அன்னியர்களை சேவிக்கும்படி கடவுள் அவர்களை செய்விப்பார். எதற்கும் இணங்காத பிடிவாதமுள்ள மக்கள்! கண்கள் இருந்தும் அவர்களால் காண முடியாது, காதுகள் இருந்தும் கேட்க முடியாது. எவ்வளவு பயங்கரம்! தீர்க்கதரிசிகளும் ஆசாரியர்களும் உண்மையில் பொய்த் தீர்க்கதரிசனம் சொல்கின்றனர். “இப்படியிருப்பது என் ஜனத்துக்குப் பிரியமாயிருக்கிறது” என்கிறார் யெகோவா. (5:31) பேரழிவு வடக்கிலிருந்து நெருங்குகிறது. எனினும் ‘அவர்களில் சிறியோர் முதல் பெரியோர் வரைக்கும் ஒவ்வொருவரும் அநியாய லாபம் தேடிக்கொண்டிருக்கின்றனர்.’ “சமாதானமில்லாதிருந்தும், சமாதானம், சமாதானம் என்று சொல்”கின்றனர். (6:13, 14, தி.மொ.) ஆனால் அழிக்கிறவர் திடீரென வருவார். யெகோவா எரேமியாவை அவர்களுக்குள் உலோகத்தை பரிசோதிப்பவராக நியமித்தார். ஆனால் அங்கு கழிவையும் தள்ளுபடியான வெள்ளியையும் தவிர வேறு எதுவுமில்லை. அவர்கள் முழுமையாக கெட்டிருக்கின்றனர்.
10ஆலயமும் பாதுகாப்பானதல்ல என்ற எச்சரிக்கை (7:1–10:25). யெகோவாவின் வார்த்தையை எரேமியா கேட்கிறார். அவர் ஆலய வாசலில் அதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். ஆலயத்தில் உள்ளே நுழைபவர்களிடம் அவர் இவ்வாறு சத்தமாக சொல்வதை கேளுங்கள்: “யெகோவாவின் ஆலயத்தைப்பற்றி பெருமைபாராட்டிக்கொள்கிறீர்கள், ஆனால் நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? தகப்பனற்ற பிள்ளைகளையும் விதவைகளையும் ஒடுக்கி, குற்றமற்ற இரத்தத்தைச் சிந்தி, மற்ற தெய்வங்களை வணங்கி, திருடி, கொலை செய்து, விபசாரம் செய்து, பொய் ஆணையிட்டு, பாகாலுக்குப் பலிகளைச் செலுத்துகிறீர்கள்! பாசாங்குக்காரரே! யெகோவாவின் வீட்டை நீங்கள் வெறும் ‘கள்ளர் குகையாக்கினீர்கள்.’ சீலோவுக்கு யெகோவா செய்ததை நினைத்து கொள்ளுங்கள். யூதாவே, உங்கள் ஆலயத்துக்கும் அதையே அவர் செய்வார். மேலும் வடக்கே எப்பிராயீமை (இஸ்ரவேலை) அவர் வெளியே தள்ளிப்போட்டதுபோல் உங்களையும் வெளியே தள்ளிப்போடுவார்.”—எரே. 7:4-11, NW; 1 சா. 2:12-14; 3:11-14; 4:12-22.
11இனிமேலும் யூதாவுக்காக விண்ணப்பம் செய்வதில் பிரயோஜனம் இல்லை. அந்த ஜனங்கள் “வானராக்கினிக்கு” பலிசெலுத்துவதற்காக பணியாரங்களைக்கூட செய்துகொண்டிருக்கின்றனரே! மெய்யாகவே, “தங்கள் கடவுளாகிய யெகோவாவின் சொல்லை கேளாமலும் சிட்சையை ஏற்றுக்கொள்ளாமலும் இருக்கிற ஜாதி இதுதான்; உண்மை அழிந்துவிட்டது.” (எரே. 7:18, 28, தி.மொ.) யெகோவாவின் ஆலயத்தில் அருவருப்பானவைகளை யூதா வைத்திருக்கிறது. தனது குமாரரையும் குமாரத்திகளையும் இன்னோம் பள்ளத்தாக்கிலுள்ள தோப்பேத்தின் மேடைகளின்மீது தகனித்தது. இதோ! அது “சங்காரப் பள்ளத்தாக்கென்று” அழைக்கப்படும். அவர்களுடைய பிணங்கள் பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் இரையாகும். (7:32) யூதாவிலும் எருசலேமிலும் களிப்பும் மகிழ்ச்சியும் ஓய்ந்து போக வேண்டும்.
12சமாதானத்தையும் சௌக்கியத்தையும் அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இதோ, திகில்! அவர்களுடைய பிடிவாதத்தின் விளைவு இதுதான்: சிதறடிக்கப்படுதல், சங்காரம், புலம்பல். ‘யெகோவாவே ஜீவனுள்ள கடவுள், நித்திய ராஜா.’ வானங்களையும் பூமியையும் உண்டாக்காத தெய்வங்களிடம் உயிர் இல்லை. அவை மாயமானவை, ஏளனத்துக்குரிய வேலைப்பாடுகள், அவை அழிந்துபோகும். (10:10-15, தி.மொ.) பூமியிலிருப்பவர்களை யெகோவா வீசியெறிவார். கேளுங்கள்! வடதேசத்திலிருந்து வரும் பெரும் கொந்தளிப்பு, யூதாவின் பட்டணங்களை பாழாக்கிவிடும். ‘தன் வழியை நடத்துவது பூமிக்குரிய மனிதனின் வசத்தில் இல்லை’ என்று இத்தீர்க்கதரிசி ஒப்புக்கொள்கிறார். தான் ஒன்றுக்குமே உதவாமல் அழிக்கப்படாதவாறு தன்னைத் திருத்தும்படி விண்ணப்பம் செய்கிறார்.—10:23, தி.மொ.
13உடன்படிக்கையை மீறுவோர் சபிக்கப்படுகின்றனர் (11:1–12:17). யெகோவாவுடன் செய்த உடன்படிக்கையை யூதா மீறியது. ஆகவே உதவிக்கான அதன் கூக்குரல் பயனற்றது. யூதாவுக்காக எரேமியா ஜெபிக்கக்கூடாது. ஏனெனில், ஒரு காலத்தில் பசுமையாயிருந்த இந்த ஒலிவ மரத்திற்கு யெகோவா ‘தீ வைக்கிறார்.’ (11:16, NW) எரேமியாவோடு ஆனதோத்தில் வாழ்ந்த சக குடிமக்கள் அவரைக் கொலை செய்வதற்கு சதிசெய்கின்றனர். இந்தத் தீர்க்கதரிசி பலத்துக்காகவும் உதவிக்காகவும் யெகோவாவை நோக்குகிறார். ஆனதோத்தை பழிவாங்குவதாக யெகோவா வாக்குறுதியளிக்கிறார். ‘பொல்லாதவர்களின் வழி வாய்ப்பதேன்?’ என எரேமியா கேட்கிறார். ‘கீழ்ப்படியாத அந்த ஜனத்தை நான் வேரோடு அழிப்பேன்’ என்று யெகோவா அவருக்கு உறுதியளிக்கிறார்.—12:1, 17, NW.
14சீர்திருத்தப்பட முடியாத எருசலேம் தண்டனை பெறுகிறது. (13:1–15:21). எரேமியா, தன் அரையில் சணல் கச்சையை கட்டிக்கொள்ளும்படியும் பின்பு அதை ஐப்பிராத்து நதிக்கருகில் ஒரு பாறைவெடிப்பில் ஒளித்து வைக்கும்படியும் யெகோவா கட்டளையிட்டதை விவரிக்கிறார். அதை தோண்டியெடுக்க எரேமியா வந்தபோது, அது மக்கி “ஒன்றுக்கும் உதவாமற்போயிற்று.” இவ்வாறு, “யூதாவின் பெருமையையும் எருசலேமின் மிகுந்த பெருமையையும்” அழிவுக்கு கொண்டுவரும் தமது தீர்மானத்தை யெகோவா உதாரணத்தைக்கொண்டு விளக்கினார். (13:7, 9) திராட்சமது நிரம்பிய பெரிய ஜாடிகளைப்போல், குடிபோதையில் உள்ள அவர்களை ஒன்றாக மோதியடிப்பார். “எத்தியோப்பியன் தன் தோலையும், சிவிங்கி தன் புள்ளிகளையும் மாற்றக்கூடுமோ?” (13:23) அதேவிதமாக, எருசலேமை மாற்ற முடியாது. எரேமியா இந்த ஜனங்களுக்காக ஜெபிக்கக் கூடாது. அவர்களுக்காக பரிந்துபேசும்படி மோசேயும் சாமுவேலும் யெகோவாவுக்கு முன்பாக நின்றாலும், அவர் செவிகொடுக்க மாட்டார். ஏனெனில் எருசலேமை அழிப்பதற்கு அவர் தீர்மானித்திருக்கிறார். எரேமியாவை நிந்திப்பவர்களுக்கு எதிராக யெகோவா அவரை பலப்படுத்துகிறார். யெகோவாவின் வார்த்தைகளை எரேமியா கண்டெடுத்து உட்கொள்கிறார். இது ‘சந்தோஷமும் இருதயத்துக்கு மகிழ்ச்சியும்’ கொண்டுவருகிறது. (15:16) இது வீணாக கேலிசெய்து பேசுவதற்கான சமயமல்ல. மாறாக யெகோவாவில் நம்பிக்கை வைத்திருப்பதற்கான காலம். அவர் எரேமியாவை அந்த ஜனத்துக்கு எதிராக வலிமையான செப்பு அலங்கமாக்குவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்.
15மீனவர்களையும் வேடர்களையும் யெகோவா அனுப்புவார் (16:1–17:27). வரவிருக்கும் பாழ்க்கடிப்பின் காரணமாக, யெகோவா எரேமியாவுக்கு பின்வருமாறு கட்டளையிடுகிறார்: “நீ பெண்தேடி விவாகம் செய்துகொள்ளவேண்டாம், இவ்விடத்தில் உனக்குக் குமாரரும் குமாரத்திகளும் இருக்கவேண்டாம்.” (16:2, தி.மொ.) இது துக்கத்தோடு புலம்புவதற்கோ மக்களோடு விருந்துண்பதற்கோ காலமல்ல. ஏனெனில் யெகோவா அவர்களை தேசத்திலிருந்து வீசியெறியப் போகிறார். பின்பு ‘அவர்களைப் பிடிக்க மீனவர்களையும் அவர்களை வேட்டையாட வேடர்களையும்’ அனுப்புவதாகவும் யெகோவா வாக்குறுதியளிக்கிறார். இந்த எல்லாவற்றையும் அவர் நிறைவேற்றுவதால், “[அவருடைய] பெயர் யெகோவா என்று அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.” (16:16, 21, NW) யூதாவின் பாவம் ஜனங்களின் இருதயத்தில் இரும்பு எழுத்தாணியால், ஆம், வைரத்தின் கூர்நுனியால் எழுதப்பட்டுள்ளது. “இருதயமே எல்லாவற்றிலும் வஞ்சனையுள்ளது, மிகவும் கெட்டுப்போனது,” ஆனால் யெகோவா இருதயத்தை ஆராய முடியும். ஒருவரும் அவரை ஏமாற்ற முடியாது. விசுவாசதுரோகம் செய்வோர், “ஜீவதண்ணீர் ஊற்றாகிய யெகோவாவைவிட்டு விலகி” சென்றுவிட்டனர். (17:9, 13, தி.மொ.) யூதா ஓய்வுநாளை பரிசுத்தம் செய்யாவிட்டால் யெகோவா அதன் வாசல்களையும் கோபுரங்களையும் தீக்கிரையாக்கிவிடுவார்.
16குயவனும் களிமண்ணும் (18:1–19:15). குயவனின் வீட்டுக்கு செல்லும்படி யெகோவா எரேமியாவுக்கு கட்டளையிடுகிறார். அங்கே குயவன் சரியாக அமையாத மட்பாண்டத்தைத் தனது விருப்பத்தின்படி மற்றொரு பானையாகத் திரும்ப வனைகிறதை அவர் கவனிக்கிறார். அப்போது யெகோவா, நொறுக்குவதற்கு அல்லது கட்டியெழுப்புவதற்கு வல்லமையுடையவராக தாம் இஸ்ரவேல் வீட்டாருக்குக் குயவராக இருப்பதாக கூறுகிறார். அடுத்தபடியாக, குயவனின் மட்கலசம் ஒன்றை இன்னோம் பள்ளத்தாக்குக்கு எடுத்து செல்லும்படி கூறுகிறார். மக்கள் தங்கள் குமாரரை பாகாலுக்கு முழு தகனபலிகளாக தகனித்து குற்றமற்ற இரத்தத்தால் அந்த இடத்தை நிரப்பியதால் யெகோவாவிடமிருந்து வரும் தீங்கை அறிவிக்கும்படி எரேமியாவிடம் சொல்கிறார். பின்பு, யெகோவா எருசலேமையும் யூதாவின் ஜனங்களையும் நொறுக்கப்போவதை அடையாளம் காட்ட, எரேமியா அந்த மட்கலசத்தை உடைக்க வேண்டும்.
17துன்புறுத்துதலின்கீழும் விட்டுக்கொடுப்பதில்லை (20:1-18). எரேமியாவின் தைரியமான பிரசங்க வேலையால் ஆலய பிரதான விசாரிப்புக்காரனாகிய பஸ்கூர் எரிச்சலடைகிறான். ஆகவே அவன் எரேமியாவை ஓர் இரவுக்கு தொழுமரத்தில் பூட்டி வைக்கிறான். எரேமியா விடுதலை செய்யப்பட்டபோது, பஸ்கூர் சிறைபிடிக்கப்பட்டு பாபிலோனில் மரிக்கப்போவதை அவர் முன்னறிவிக்கிறார். தனக்கு எதிரான நகைப்பினாலும் பரியாசத்தினாலும் எரேமியா கவலைப்படுகிறார். ஆகவே யெகோவாவின் வார்த்தைகளைப் பற்றி இனிமேல் பேசாமல் இருந்துவிடலாம் என்பதாக நினைக்கிறார். எனினும், அவரால் மெளனமாயிருக்க முடியவில்லை. யெகோவாவின் வார்த்தை ‘அவருடைய எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல் அவருடைய இருதயத்தில் இருக்கிறது,’ ஆகவே அவர் பேசும்படி வற்புறுத்தப்படுகிறார். தான் பிறந்த நாளை சபிக்கிறபோதிலும்: “யெகோவாவைப் பாடுங்கள், யெகோவாவைத் துதியுங்கள்; அவர் எளியவனுடைய ஆத்துமாவைத் தீயோர் கைக்குத் தப்புவிக்கிறாரே” என்று சத்தமிட்டு கூறுகிறார்.—20:9, 13, தி.மொ.
18ஆட்சியாளர்களுக்கு எதிராக யெகோவாவின் உக்கிர கோபம் (21:1–22:30). சிதேக்கியாவினுடைய ஒரு கேள்விக்கு எரேமியா பதிலளிக்கிறார். அப்போது, அந்த நகரத்துக்கு எதிராக யெகோவாவின் உக்கிர கோபத்தை அவனுக்கு தெரிவிக்கிறார்: பாபிலோனின் அரசன் அதற்கு எதிராக முற்றுகை போடுவான்; அது கொள்ளைநோயாலும், பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், நெருப்பாலும் அழிக்கப்படும். சல்லூம் (யோவாகாஸ்) சிறையிருப்பிலேயே இறந்துபோவான்; யோயாக்கீம் கழுதையைப்போல புதைக்கப்படுவான்; அவனுடைய குமாரன் எகொனியா (யோயாக்கீன்) யூதாவிலிருந்து வெளியேற்றப்பட்டு பாபிலோனில் இறந்துபோவான்.
23:1–24:10). கள்ள மேய்ப்பர்கள் இருந்த இடத்தில் உண்மையான மேய்ப்பர்களையும் தாவீதின் அடிமரத்திலிருந்து ‘நீதியுள்ள தளிரை’ (பொ.மொ.) தாம் தோன்றச் செய்வதாக யெகோவா வாக்குறுதியளிக்கிறார். இந்த தளிர் “இராஜாவாக அரசாண்டு சித்திபெறுவார், பூமியிலே நியாயத்தையும் நீதியையும் செய்வார்.” இவருடைய பெயர்? “யெகோவா நமது நீதி என்பதுவே அவருக்குத் தரிக்கப்படும் நாமம்.” சிதறடிக்கப்பட்ட மீதியானோரை அவர் கூட்டிச்சேர்ப்பார். (23:5, 6, தி.மொ.) அந்த தீர்க்கதரிசிகள் யெகோவாவை நேசிக்கிறவர்களாக இருந்திருந்தால், மக்கள் செவிகொடுத்து தங்கள் கெட்ட வழியிலிருந்து திரும்பும்படி செய்திருப்பார்கள். அதற்கு பதிலாக, ‘தங்கள் பொய்களினால் என் ஜனத்தை தவறிப்போக செய்கிறார்கள்’ என்று யெகோவா சொல்லுகிறார். (23:22, 32, தி.மொ.) ‘இதோ! அத்திப்பழங்களுள்ள இரண்டு கூடைகள்.’ உண்மையுள்ள மீதிபேர் கடவுளுடைய தயவில் தங்கள் தேசத்துக்கு திரும்பப்போவதையும் மற்றொரு வகுப்பார் அழிக்கப்பட போவதையும் சித்தரித்து காட்டுவதற்கு நல்லவையும் கெட்டவையுமான அந்த அத்தி பழங்களை எரேமியா பயன்படுத்துகிறார்.—24:1, தி.மொ., 5, 8-10.
19‘நீதியுள்ள தளிரில்’ நம்பிக்கை (20தேசங்களோடு யெகோவாவின் விவாதம் (25:1-38). 45-49 அதிகாரங்களில் மிகவும் விவரமாக பதிவுசெய்யப்பட்டிருக்கும் நியாயத்தீர்ப்புகளின் சுருக்கம்தான் இந்த அதிகாரம். மூன்று இணையான தீர்க்கதரிசனங்களால், பூமியிலுள்ள எல்லா தேசங்களுக்கும் பேரழிவை யெகோவா இப்பொழுது அறிவிக்கிறார். முதலாவதாக, யூதாவையும் அதை சுற்றியுள்ள தேசங்களையும் அழிப்பதற்கு நேபுகாத்நேச்சார் யெகோவாவின் ஊழியனாக அடையாளம் காட்டப்படுகிறான். “இந்த ஜாதிகளோ, எழுபது வருஷமாகப் பாபிலோன் ராஜாவைச் சேவிப்பார்கள்.” பின்பு பாபிலோன் அழிக்கப்படுவதற்கான காலம் வரும், அது ‘நித்திய பாழிடமாகும்.’—25:1-14.
21இரண்டாவது தீர்க்கதரிசனம் யெகோவாவின் உக்கிர மதுபான பாத்திரத்தை பற்றியதாகும். தேசங்களிடம் இந்தப் பாத்திரத்தை எரேமியா கொண்டு செல்ல வேண்டும், ‘அவர்கள் குடித்து, பைத்தியம் பிடித்தவர்களைப்போல் தள்ளாட’ வேண்டும். ஏனெனில் யெகோவா அவர்கள்மீது அழிவை நிறைவேற்றப் போகிறார். முதலாவதாக, எருசலேமும் யூதாவும்! பின்பு, எகிப்து, பெலிஸ்தியா, ஏதோம், தீரு, அருகிலும் தொலைவிலுமுள்ள தேசங்கள், மேலும், ‘பூமியின்மீதிலுள்ள சகல தேசத்து ராஜ்யங்களும்’ அதைக் குடிக்க வேண்டும். “சேசாக்கு என்கிற ராஜாவும் அவர்களுக்குப் பிற்பாடு குடிப்பான்.” அவர்கள் ‘குடித்து, வெறித்து, வாந்தி எடுத்து விழுவார்கள்.’ ஒருவரும் தப்புவதில்லை.—25:15-29.
22மூன்றாவது தீர்க்கதரிசனத்தில், எரேமியா சிறப்பான செய்யுள்நடையின் உயர்மட்டத்திற்கே செல்கிறார். “யெகோவா உயரத்திலிருந்து கெர்ச்சித்து . . . பூமியில் குடியிருக்கும் எல்லாருக்கும் விரோதமாக . . . ஆர்ப்பரிப்பார்.” ஆரவாரம், பேரழிவு, சூறாவளி! அந்நாளில் “பூமியின் ஒருமுனைதுவக்கி மறுமுனைமட்டும் யெகோவாவினால் கொல்லப்பட்டவர்கள் கிடப்பார்கள்.” அவர்களுக்காக புலம்பலும் இல்லை, அவர்கள் அடக்கம் செய்யப்படுவதுமில்லை. அவர்கள் தரையில் எருவாகிவிடுவார்கள். கள்ள மேய்ப்பர்கள், தங்கள் மந்தையில் புகழ்பெற்றவர்களோடு கொல்லப்படுவார்கள். அவர்கள் தப்பவே முடியாது. அவர்கள் அலறுவதை கேளுங்கள்! ‘தம்முடைய கடுமையான கோபத்தின் காரணமாக’ அவர்களுடைய ‘மேய்ச்சலை யெகோவா பாழாக்குகிறார்.’—25:30-38, தி.மொ.
23எரேமியா சரியென நிரூபிக்கப்படுகிறார் (26:1–28:17). அதிபதிகளும் ஜனங்களும் எரேமியாவை கொல்வதற்கு சதிசெய்கின்றனர். எரேமியா அதற்கெதிராக வாதாடுகிறார். அவர் பேசியது யெகோவாவின் வார்த்தையே. எரேமியாவை அவர்கள் கொன்றால், குற்றமற்ற ஒரு மனிதனை கொன்ற பழி அவர்களை சாரும். தீர்ப்பு: குற்றமற்றவர். மூப்பர்கள் எரேமியாவின் வழக்கை விசாரிக்கையில் தீர்க்கதரிசிகளாகிய மீகாவையும் உரியாவையும் முன்னோடிகளாக குறிப்பிடுகின்றனர். எரேமியா கயிறுகளையும் நுகங்களையும் செய்து, அவற்றை தன் கழுத்தில் பூட்டிக்கொள்ளும்படி யெகோவா சொல்கிறார். பின்பு சுற்றிலுமுள்ள தேசங்கள் பாபிலோனின் மூன்று தலைமுறையான அரசர்களை சேவிக்க வேண்டும் என்பதற்கு அடையாளங்களாக, அவற்றை அவர்களுக்கு அனுப்பும்படியும் அவர் கட்டளையிடுகிறார். பொய்த் தீர்க்கதரிசிகளில் ஒருவனாகிய அனனியா, எரேமியாவை எதிர்க்கிறான். பாபிலோனின் நுகம் இரண்டு ஆண்டுகளுக்குள் முறிக்கப்படும் என்பதாக அவன் கூறுகிறான். இதை அந்த மர நுகத்தை முறிப்பதன் மூலமாக சித்தரித்து காட்டுகிறான். யெகோவா, தமது தீர்க்கதரிசனத்தை வலியுறுத்துவதற்காக, இரும்பு நுகங்களை உண்டாக்கும்படி எரேமியாவிற்கு சொல்கிறார். அனனியா அந்த ஆண்டில் சாகவேண்டும் என்பதை முன்னறிவிக்கும்படியும் சொல்கிறார். அனனியா சாகிறான்.
24பாபிலோனில் நாடுகடத்தப்பட்டவர்களுக்கு ஆறுதல் (29:1–31:40). எகொனியாவுடன் (யோயாக்கீனுடன்) பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டவர்களுக்கு எரேமியா எழுதுகிறார்: அங்கே குடியிருங்கள், ஏனெனில் யெகோவா உங்களை மீட்பதற்கு முன்பாக 70 ஆண்டுகள் சிறையிருப்பில் கடக்க வேண்டும். அவர்கள் திரும்பி வருவதை ஒரு புத்தகத்தில் பின்வருமாறு எழுதும்படி யெகோவா எரேமியாவுக்கு கட்டளையிடுகிறார்: யெகோவா அவர்களுடைய நுகத்தை முறிப்பார், அவர்கள் நிச்சயமாகவே “தங்கள் கடவுளாகிய யெகோவாவையும், நான் [யெகோவா] அவர்களுக்கு எழுப்பப்போகிற தங்கள் ராஜாவாகிய தாவீதையுமே சேவிப்பார்கள்.” (30:9, தி.மொ.) ராகேல் அழக்கூடாது. ஏனெனில் அவளுடைய குமாரர்கள் “சத்துருவின் தேசத்திலிருந்து திரும்பிவருவார்கள்.” (31:16) இப்பொழுது யெகோவா திரும்பவும் நம்பிக்கையூட்டும் அறிவிப்பை செய்கிறார்! யூதாவோடும் இஸ்ரவேல் வீட்டாரோடும் அவர் புதிய உடன்படிக்கையை செய்வார். அவர்கள் மீறிய உடன்படிக்கையைப் பார்க்கிலும் இது அதிக மேம்பட்டது! யெகோவா தம்முடைய சட்டத்தை அவர்களுடைய இருதயத்தின் ஆழத்தில் எழுதுவார். “நான் அவர்கள் கடவுளாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்.” சிறியவரிலிருந்து பெரியவர் வரை, எல்லாரும் யெகோவாவை அறிவார்கள், அவர்கள் அக்கிரமத்தை அவர் மன்னிப்பார். (31:31-34) அவர்களுடைய நகரம் யெகோவாவுக்கு பரிசுத்தமாக மீண்டும் கட்டப்படும்.
25யெகோவா தாவீதுடன் செய்த உடன்படிக்கை நிச்சயமாயுள்ளது (32:1–34:22). எருசலேமை நேபுகாத்நேச்சார் கடைசியாக முற்றுகையிடும்போது, எரேமியா சிறையில் அடைபட்டிருக்கிறார். எனினும், எரேமியா ஆனதோத்தில் வயலை வாங்கி அதன் கிரயப் பத்திரங்களை ஒரு மண்பாண்டத்தில் வைக்கிறார். யெகோவா இஸ்ரவேலை நிச்சயமாக திரும்ப நிலைநாட்டுவார் என்பதற்கு ஓர் அடையாளமாக இது இருக்கிறது. யெகோவாவின் வார்த்தை இப்பொழுது நற்செய்தியை கொண்டுவருகிறது: யூதாவும் எருசலேமும் மறுபடியும் களிகூரும், யெகோவா தாவீதுடன் செய்த உடன்படிக்கையை நிறைவேற்றுவார். ஆனால், சிதேக்கியாவே, பாபிலோன் அரசன் இந்த நகரத்தை எரித்துவிடுகையில் நீர்தாமே பாபிலோனுக்கு சிறைபிடித்து கொண்டு செல்லப்படுவீர் என்பதே உமக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை. அடிமைகளை விடுதலை செய்வதற்கு ஒப்புக்கொண்டு, ஆனால் அந்த உடன்படிக்கையை மீறிய முதலாளிகளுக்கு ஐயோ!
26ரேகாபுக்கு யெகோவாவின் வாக்கு (35:1-19). அரசனாகிய யோயாக்கீமின் நாட்களில், யெகோவா எரேமியாவை ரேகாபியரிடம் அனுப்புகிறார். பாபிலோனியர் முதல் தடவை வந்தபோது இவர்கள் எருசலேமில் அடைக்கலம் புகுந்தனர். அவர்கள் குடிப்பதற்கு எரேமியா திராட்ச மதுபானத்தை கொடுக்கிறார். தங்களுடைய முற்பிதாவாகிய யோனதாப் 250-க்கும் அதிக ஆண்டுகளுக்கு முன்பாக கொடுத்த கட்டளையின் காரணமாக அவர்கள் அதை குடிக்க மறுத்துவிடுகின்றனர். யூதாவின் உண்மையற்ற போக்கிலிருந்து இது நிச்சயமாகவே முற்றிலும் வேறுபட்டது! யெகோவா அவர்களுக்கு இவ்வாறு வாக்குறுதியளிக்கிறார்: “சகல நாட்களிலும் எனக்கு முன்பாக நிற்கத்தக்க புருஷன் ரேகாபின் குமாரனாகிய யோனதாபுக்கு இல்லாமற்போவதில்லை.”—35:19.
27எரேமியா புத்தகத்தை மீண்டும் எழுதுகிறார் (36:1-32). அந்நாள் வரையாக எரேமியா சொன்ன எல்லா தீர்க்கதரிசனங்களையும் பதிவுசெய்யும்படி யெகோவா அவருக்கு கட்டளையிடுகிறார். எரேமியா இவற்றை சொல்ல, பாருக் எழுதுகிறார். பின்பு பாருக் உபவாச நாளின்போது யெகோவாவின் ஆலயத்தில் அவற்றை சத்தமாக வாசிக்கிறார். அரசன் யோயாக்கீம் அந்த சுருளை கொண்டுவர சொல்கிறான். அதில் ஒரு பகுதி வாசிக்கப்படுவதை கேட்ட அரசன் கோபத்தில் அதை கிழித்து நெருப்பில் எறிகிறான். எரேமியாவையும் பாருக்கையும் கைதுசெய்யும்படி கட்டளையிடுகிறான். ஆனால் யெகோவா அவர்களை மறைத்து வைத்து, அதே வார்த்தைகளை மறுபடியும் ஒரு சுருளில் எழுதும்படி எரேமியாவிடம் சொல்கிறார்.
28எருசலேமின் கடைசி நாட்கள் (37:1–39:18). இப்பதிவு சிதேக்கியாவின் ஆட்சிக்கு மீண்டும் கவனத்தை திருப்புகிறது. யூதாவுக்காக யெகோவாவிடம் விண்ணப்பிக்கும்படி அரசன் எரேமியாவை கேட்கிறான். எருசலேம் அழிக்கப்படுவது நிச்சயம் என்பதாக குறிப்பிட்டு, தீர்க்கதரிசி விண்ணப்பிக்க மறுக்கிறார். எரேமியா ஆனதோத்துக்கு செல்ல முயற்சிக்கிறார். ஆனால் அதற்கு முன் பிடிக்கப்பட்டு, அடிக்கப்பட்டு, பல நாட்கள் சிறையிலடைக்கப்படுகிறார். பின்பு சிதேக்கியா எரேமியாவை அழைக்கிறான். யெகோவாவிடமிருந்து வார்த்தை உண்டா? நிச்சயமாகவே உள்ளது! “பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவீர்”! (37:17) தண்டனை தீர்ப்பைப் பற்றியே எரேமியா தொடர்ந்து தீர்க்கதரிசனம் சொன்னதால் பிரபுக்கள் கோபமடைகின்றனர். ஆகவே தண்ணீரற்று சேறாயிருக்கும் ஒரு துரவுக்குள் அவரை போடுகிறார்கள். அப்போது அரண்மனையில் பிரதானியாயிருக்கும் எத்தியோப்பியன் எபெத்மெலேக்கு தயவோடு அவருக்காக பரிந்துபேசுகிறார். இவ்வாறு எரேமியா மரணமடைவதிலிருந்து மீட்கப்படுகிறார். இருந்தபோதிலும் காவற்சாலையின் முற்றத்தில் அவர் தடுப்புக் காவலில் வைக்கப்படுகிறார். மறுபடியுமாக சிதேக்கியா எரேமியாவை தன்னிடம் வரவழைக்கிறான். எனினும் அவனுக்கு இதுதான் சொல்லப்படுகிறது: ‘பாபிலோனிய அரசனிடம் சரணடையும் அல்லது சிறையிருப்பையும் எருசலேமின் அழிவையும் எதிர்ப்படும்!’—38:17, 18.
29எருசலேமின் முற்றுகை 18 மாதங்கள் நீடிக்கிறது. பின்பு சிதேக்கியாவின் 11-வது ஆண்டில் நகரத்தின் மதில்கள் உடைக்கப்படுகின்றன. அரசன் தனது படைகளுடன் தப்பி ஓடுகிறான். இருந்தபோதிலும் அவன் பிடிக்கப்படுகிறான். அவனுடைய குமாரர்களும் பிரபுக்களும் அவனுக்கு முன்பாக கொல்லப்படுகின்றனர். அவன் குருடாக்கப்படுகிறான். மேலும் பாபிலோனுக்கு விலங்கிடப்பட்டு கொண்டு செல்லப்படுகிறான். நகரம் எரிக்கப்பட்டு பாழாக்கப்படுகிறது. ஒருசில ஏழைகளைத் தவிர எல்லாரும் பாபிலோனுக்கு நாடுகடத்தப்படுகின்றனர். நேபுகாத்நேச்சாருடைய கட்டளையால் எரேமியா காவற்சாலையின் முற்றத்திலிருந்து விடுதலை செய்யப்படுகிறார். ஆனால் தனது விடுதலைக்கு முன்பாக எபெத்மெலேக்கிடம் ஒன்றை சொல்கிறார். அதாவது எபெத்மெலேக்கு ‘யெகோவாவில் நம்பிக்கை வைத்ததால்’ அவரை அழிவிலிருந்து தப்புவிக்கப்போவதாக கடவுள் வாக்குறுதி அளித்திருக்கிறார் என எரேமியா சொல்கிறார்.—39:18, தி.மொ.
30மிஸ்பாவிலும் எகிப்திலும் முடிவான சம்பவங்கள் (40:1–44:30). எரேமியா மிஸ்பாவில் கெதலியாவுடன் தங்குகிறார். பாபிலோனியர் கெதலியாவை மீந்திருக்கும் ஜனங்களுக்கு அதிபதியாக ஏற்படுத்துகின்றனர். இரண்டு மாதங்களுக்கு பின்பு கெதலியா கொலை செய்யப்படுகிறார். எரேமியாவின் ஆலோசனையை மக்கள் கேட்கின்றனர், அவர் கடவுளுடைய வார்த்தையை அவர்களுக்கு சொல்கிறார்: ‘யெகோவா உங்களை இந்தத் தேசத்திலிருந்து பிடுங்கிப்போடமாட்டார். பாபிலோன் அரசனை கண்டு பயப்படாதீர்கள். எனினும், நீங்கள் எகிப்துக்குச் செல்வீர்களானால், சாவீர்கள்!’ ஆனால் அவர்கள் எகிப்துக்கே செல்கின்றனர், எரேமியாவையும் பாருக்கையும் தங்களோடு கொண்டுசெல்கின்றனர். எகிப்தில் தக்பானேஸில் எரேமியா, யெகோவாவின் தண்டனை தீர்ப்பை தெரிவிக்கிறார்: பாபிலோனின் அரசன் எகிப்தில் தன் சிங்காசனத்தை ஏற்படுத்துவான். இஸ்ரவேலர் எகிப்தின் தெய்வங்களை வணங்குவதும் “வானராக்கினிக்கு” திரும்பவும் பலிசெலுத்துவதும் பயனற்றதே. விக்கிரக வணக்கத்தின் காரணமாக யெகோவா எருசலேமைப் பாழாக்கியதை அவர்கள் மறந்துவிட்டார்களா? எகிப்து தேசத்தில் யெகோவா அவர்கள்மீது தீங்கை வரப்பண்ணுவார், அவர்கள் யூதாவுக்கு திரும்புவதில்லை. இதற்கு அடையாளமாக, பார்வோனாகிய ஒப்பிராவையே அவனுடைய எதிரிகளிடம் யெகோவா ஒப்படைக்கிறார்.
31பாருக்கின் பங்கு (45:1-5). தண்டனை தீர்ப்புக்குரிய தீர்க்கதரிசனங்களை எரேமியா திரும்பத்திரும்ப கூறுவதை கேட்ட பாருக் துயரமடைகிறார். அவர் தனக்காக “பெரிய காரியங்களைத் தேடு”வதற்குப் பதிலாக கட்டுவதும் இடிப்பதுமான யெகோவாவின் ஊழியத்தையே முதலாவதாக சிந்திக்கும்படி சொல்லப்படுகிறார். (45:5) அவர் அந்த எல்லா தீங்கிலிருந்தும் காப்பாற்றப்படுவார்.
32தேசங்களுக்கு எதிராக யெகோவாவின் பட்டயம் (46:1–49:39). கர்கேமிசிலும் மற்ற இடங்களிலும் எகிப்தின்மீது பாபிலோன் பெற்ற வெற்றிகளை எரேமியா சொல்கிறார். தேசங்கள் அழிக்கப்பட்டாலும், யாக்கோபு நிலைத்திருக்கும். ஆனால் தண்டிக்கப்படாமல் விடப்படாது. பெலிஸ்தியா, அகந்தையுள்ள மோவாப், பெருமைபிடித்த அம்மோன், ஏதோம், தமஸ்கு, கேதார், காத்சோர் ஆகிய இவை அனைத்திற்கும் எதிராக “யெகோவாவின் பட்டயம்” வரும். (47:6, தி.மொ.) ஏலாமின் வில் முறிக்கப்படும்.
50:1–51:64). பாபிலோனை குறித்து யெகோவா இவ்வாறு பேசுகிறார்: தேசங்களுக்குள்ளே சொல்லுங்கள். ஒன்றையும் மறைக்க வேண்டாம். பாபிலோன் பிடிபட்டது, அதன் தெய்வங்கள் வெட்கப்பட செய்யப்பட்டன. அதிலிருந்து வெளியே தப்பியோடுங்கள். பூமி முழுவதிலுமிருந்த தேசங்களை நொறுக்கிய இந்த சம்மட்டியே இப்போது முறிக்கப்பட்டது. “கர்வமே,” சிறையாக்கின இஸ்ரவேலையும் யூதாவையும் ஒடுக்கினவனே, சேனைகளின் யெகோவாவே அவர்களை திரும்ப கொள்பவர் என்பதை அறிந்துகொள். பாபிலோன் ஊளையிடும் மிருகங்கள் நடமாடும் இடமாகும். “சோதோமையும் கொமோராவையும் . . . கடவுள் கவிழ்த்துப்போட்டது போலாகும், . . . அதில் ஒரு மனுப்புத்திரனும் தங்குவதில்லை.” (50:31, 40, தி.மொ.) பாபிலோன் யெகோவாவின் கையில் பொற்பாத்திரத்தைப்போல் தேசங்களை குடிக்கச் செய்வதாக இருந்தது, ஆனால் திடீரென்று வீழ்ந்துவிட்டது, இவ்வாறு அதுதானேயும் உடைக்கப்பட்டது. ஜனங்களே, அதன்பேரில் அலறுங்கள். அதை முற்றிலும் அழிப்பதற்கு மேதிய அரசர்களின் ஆவியை யெகோவா எழுப்பியிருக்கிறார். பாபிலோனின் பராக்கிரமசாலிகள் போரிடாமல் நின்றுவிட்டனர். அவர்கள் பெண்களைப்போல் ஆகிவிட்டனர். பாபிலோன் குமாரத்தி போரடிக்கும் களத்தைப்போல் மிதிக்கப்படுவாள். “அவர்கள் என்றைக்கும் விழிக்காத நித்திரை அடைவார்கள்.” கடல் பாபிலோன்மீது புரண்டுவந்து தனது திரளான அலைகளால் அதை மூடிவிட்டது. “என் ஜனங்களே, நீங்கள் அதின் நடுவிலிருந்து புறப்படுங்கள்; யெகோவாவின் உக்கிரகோபத்தினின்று ஒவ்வொருவனும் தன் உயிரை விடுவித்துக் காத்துக்கொள்க.” (51:39, 45, தி.மொ.) பாபிலோனிலிருந்து வரும் கூக்குரலையும், இடிந்துவிழும் பெரும் ஓசையையும் கேளுங்கள்! பாபிலோனின் போராயுதங்கள் நொறுக்கப்பட வேண்டும். ஏனெனில் யெகோவா பதில்செய்யும் கடவுள். அவர் நிச்சயமாக பழிவாங்குவார்.
33பாபிலோனுக்கு எதிராக யெகோவாவின் பட்டயம் (34எரேமியா செராயாவுக்கு கட்டளையிடுகிறார்: ‘நீ பாபிலோனுக்குப் போய் அதற்கு எதிரான இந்த தீர்க்கதரிசன வார்த்தைகளை சத்தமாக வாசி. பின்பு இந்த புத்தகத்துடன் ஒரு கல்லை கட்டி, ஐப்பிராத்தின் நடுவில் எறிந்துவிடு. “இப்படியே பாபிலோன் முழுகிப்போகும், நான் அதின்மேல் வரப்பண்ணும் தீங்கினால் எழுந்திருக்கமாட்டாமல் இளைத்து விழுவார்கள் என்றார் என்று சொல்வாயாக.”’—51:61-64.
35எருசலேமின் வீழ்ச்சியைப் பற்றிய பதிவு (52:1-34). இந்த விவரம் 2 இராஜாக்கள் 24:18-20; 25:1-21, 27-30-ல் கொடுக்கப்பட்டுள்ள பதிவோடு ஏறக்குறைய முழுமையாக ஒத்திருக்கிறது.
ஏன் பயனுள்ளது
36தேவாவியால் ஏவப்பட்ட இந்த தீர்க்கதரிசனம் முற்றிலும் கட்டியெழுப்புவதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. இத்தீர்க்கதரிசியின் தைரியமான முன்மாதிரியை பாருங்கள். பிரபலமல்லாத ஒரு செய்தியைத் தேவபக்தியற்ற மக்களுக்கு வெளிப்படையாக அறிவிப்பதில் அவர் தைரியமாக இருந்தார். பொல்லாதவர்களோடு தோழமையை வெறுத்தார். யெகோவாவின் செய்தியின் அவசரத்தன்மையை அவர் மதித்துணர்ந்து, யெகோவாவின் ஊழியத்துக்கு முழு இருதயத்துடன் தன்னை ஒப்புவித்தார். அதைவிட்டு ஒருபோதும் அவர் விலகவில்லை. கடவுளுடைய வார்த்தை தன் எலும்புகளில் அடைபட்டு எரிகிற நெருப்பைப்போல் இருந்ததாக கண்டார். மேலும் அது அவருடைய இருதயத்தின் சந்தோஷமும் மகிழ்ச்சியுமாயிருந்தது. (எரே. 15:16-20; 20:8-13) அவரைப்போல் நாமும் யெகோவாவின் வார்த்தைக்கு வைராக்கியம் காண்பிப்போமாக! எரேமியாவுக்கு பாருக் செய்ததுபோல் நாமும் கடவுளுடைய ஊழியர்களுக்கு உண்மைதவறாத ஆதரவை அளிப்போமாக. ரேகாபியரின் உள்ளப்பூர்வமான கீழ்ப்படிதலும் நமக்கு சிறந்த முன்மாதிரி. அவ்வாறே, துன்புறுத்தப்பட்ட தீர்க்கதரிசிக்கு காட்டின எபெத்மெலேக்கின் அன்பான ஆதரவும் நமக்கு முன்மாதிரி.—36:8-19, 32; 35:1-19; 38:7-13; 39:15-18.
37எரேமியாவுக்குக் கொடுக்கப்பட்ட யெகோவாவின் வார்த்தை பிரமிக்கத்தக்க முறையில் அவ்வளவு திருத்தமாக நிறைவேற்றமடைந்தது. இது நிச்சயமாகவே, தீர்க்கதரிசனம் உரைப்பதில் யெகோவாவிற்கு இருக்கும் வல்லமையில் விசுவாசத்தை பலப்படுத்துகிறது. உதாரணமாக, எரேமியாவின் வாழ்நாளிலேயே நிறைவேறிய தீர்க்கதரிசனங்களை எடுத்துக்கொள்ளுங்கள்: சிதேக்கியா சிறைபிடித்து கொண்டுசெல்லப்பட்டது; எருசலேம் அழிக்கப்பட்டது (21:3-10; 39:6-9); அரசன் சல்லூம் (யோவாகாஸ்) சிங்காசனத்திலிருந்து நீக்கப்பட்டு, சிறையில் மரித்தது (எரே. 22:11, 12; 2 இரா. 23:30-34; 2 நா. 36:1-4); அரசன் எகொனியாவை (யோயாக்கீனை) பாபிலோனுக்கு சிறைக்கைதியாக கொண்டுசென்றது (எரே. 22:24-27; 2 இரா. 24:15, 16); பொய் தீர்க்கதரிசியாகிய அனனியா ஒரு வருடத்திற்குள் மரித்தது (எரே. 28:16, 17). யெகோவா முன்னறிவித்தபடியே இந்த எல்லா தீர்க்கதரிசனங்களும் இன்னும் அதிகமானவையும் நிறைவேறின. பிற்காலத்தில் வந்த தீர்க்கதரிசிகளும் யெகோவாவின் ஊழியர்களும்கூட எரேமியாவின் தீர்க்கதரிசனத்தை அதிகாரப்பூர்வமானதும் பயனுள்ளதுமாக கருதினர். உதாரணமாக, எருசலேமின் பாழ்க்கடிப்பு 70 ஆண்டுகள் நீடிக்க வேண்டுமென்பதை எரேமியாவின் எழுத்துக்களிலிருந்து தானியேல் கண்டறிந்தார். மேலும் அந்த 70 ஆண்டுகளின் முடிவில் எரேமியாவின் வார்த்தைகளின் நிறைவேற்றத்தை எஸ்றா கவனத்துக்கு கொண்டுவந்தார்.—தானி. 9:2; 2 நா. 36:20, 21; எஸ்றா 1:1; எரே. 25:11, 12; 29:10.
38இயேசு தம்முடைய சீஷர்களுடன் கர்த்தருடைய இராப்போஜன ஆசரிப்பை ஸ்தாபித்தபோது, புதிய உடன்படிக்கை சம்பந்தமாக எரேமியாவினுடைய தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தை குறிப்பிட்டார். இவ்வாறு, அவர் ‘தன் இரத்தத்தினாலாகும் புதிய உடன்படிக்கையை’ குறிப்பிட்டார். இதன்மூலம் அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன, யெகோவாவின் ஆவிக்குரிய மக்களாக கூட்டப்பட்டனர். (லூக். 22:20; எரே. 31:31-34) ஆவியால் பிறப்பிக்கப்பட்டவர்களே புதிய உடன்படிக்கைக்குள் கொண்டு வரப்பட்டவர்கள். இவர்களையே, கிறிஸ்து தம்மோடு பரலோகங்களில் ஆட்சி செய்யும்படி ராஜ்யத்துக்குரிய உடன்படிக்கைக்குள் ஏற்கிறார். (லூக். 22:29; வெளி. 5:9, 10; 20:6) எரேமியாவின் தீர்க்கதரிசனத்தில் இந்த ராஜ்யம் பல தடவை குறிப்பிடப்படுகிறது. உண்மையற்ற எருசலேமுக்கு எதிரான எல்லா கண்டன அறிவிப்புகளுக்கு மத்தியிலும் நம்பிக்கைக்குரிய இந்த செய்தியை எரேமியா குறிப்பிட்டார்: “இதோ நாட்கள் வரும்—இது யெகோவாவின் திருவாக்கு—அப்பொழுது தாவீதுக்கு நீதிமுளை ஒன்றை எழும்பப்பண்ணுவேன்; அவர் இராஜாவாக அரசாண்டு சித்திபெறுவார், பூமியிலே நியாயத்தையும் நீதியையும் செய்வார்.” ஆம், “யெகோவா நமது நீதி” என்றழைக்கப்படும் ஓர் அரசர் எழுப்பப்படுவார்.—எரே. 23:5, 6, தி.மொ.
39திரும்ப நிலைநாட்டப்படுவதைப் பற்றி எரேமியா மறுபடியுமாக பேசுகிறார்: “தங்கள் கடவுளாகிய யெகோவாவையும், நான் 30:9, தி.மொ.) முடிவாக, இஸ்ரவேலையும் யூதாவையும் குறித்து யெகோவா பேசியிருக்கிற நல்வார்த்தையை அவர் சொல்கிறார். தாவீதின் வித்தை பெருக செய்யவும் “அவன் சிங்காசனத்தில் அரசாளும் குமாரன்” இருக்கும்படியும் “அந்நாட்களிலும் அக்காலத்திலும் தாவீதுக்கு நீதிமுளையை [யெகோவா] முளைக்கப்பண்ணு[வார்].” (33:15, 21, தி.மொ.) பாபிலோனிலிருந்து மீதிபேர் நிச்சயமாகவே திரும்பிவந்ததுபோல், இந்த நீதியான ‘முளையின்’ ராஜ்யம் பூமி முழுவதிலும் நியாயத்தையும் நீதியையும் நிறைவேற்றும்.—லூக். 1:32.
அவர்களுக்கு எழுப்பப்போகிற தங்கள் ராஜாவாகிய தாவீதையுமே சேவிப்பார்கள்.” ([அடிக்குறிப்பு]
a வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 2, பக்கங்கள் 326, 480.
[கேள்விகள்]
1. எப்போது, யாரால் எரேமியா ஊழியத்திற்காக நியமிக்கப்பட்டார்?
2. எரேமியாவின் வேலை என்ன, எந்த முக்கியமான காலப்பகுதியில் அவர் தீர்க்கதரிசனம் உரைத்தார்?
3. (அ) எரேமியா புத்தகம் அதிகாரப்பூர்வ பட்டியலை சேர்ந்தது என்பதும் அதன் நம்பகத் தன்மையும் எவ்வாறு எபிரெய காலங்களில் ஸ்தாபிக்கப்பட்டன? (ஆ) கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் மேலுமான என்ன ஆதாரம் காணப்படுகிறது?
4. தொல்பொருள் ஆராய்ச்சி இந்த பதிவை எவ்வாறு ஆதரிக்கிறது?
5. (அ) எரேமியாவை பற்றி என்ன தகவல் இருக்கிறது? (ஆ) அவருடைய எழுத்துநடையை குறித்து என்ன சொல்லப்படலாம்?
6. இப்புத்தகத்திலுள்ள விஷயங்கள் எவ்வாறு ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றன?
7. எரேமியா எவ்வாறு தீர்க்கதரிசியானார், யெகோவா அவருக்கு எவ்வாறு நம்பிக்கையூட்டுகிறார்?
8. (அ) எருசலேம் எதில் உண்மையற்றதாக இருந்திருக்கிறது? (ஆ) யெகோவா எவ்வாறு பேரழிவை கொண்டுவருவார்?
9. (அ) பிடிவாதமுள்ள எருசலேமுக்கு எரேமியா சொல்வது என்ன? (ஆ) சமாதானம் என்ற அவர்களுடைய கூக்குரல்களின் பயன் என்ன?
10. சீலோவுக்கும் எப்பிராயீமுக்கும் ஏற்பட்ட அதே அழிவை எருசலேம் ஏன் அனுபவிக்க வேண்டும்?
11. யூதாவுக்காக விண்ணப்பம் செய்வது இனிமேலும் ஏன் பிரயோஜனமாக இருக்காது?
12. யூதாவுக்கும் அது தெரிந்துகொண்ட தெய்வங்களுக்கும் சமாதானத்துக்கு பதிலாக என்ன ஏற்படவிருக்கிறது?
13. யூதாவுக்காக எரேமியா ஏன் விண்ணப்பம் செய்யக்கூடாது, ஆபத்தான சமயத்தில் யெகோவா எவ்வாறு எரேமியாவை பலப்படுத்துகிறார்?
14. (அ) சீர்திருத்தப்பட முடியாத எருசலேமிற்கு எதிரான நியாயத்தீர்ப்பு மாற்ற முடியாது என்பதை என்ன உதாரணங்களால் யெகோவா தெரிவிக்கிறார்? (ஆ) யெகோவாவின் வார்த்தைகளை எரேமியா உட்கொள்வதன் பலன் என்ன?
15. (அ) காலங்கள் எத்தகைய அவசரத்தன்மை வாய்ந்தவையாக இருக்கின்றன, என்ன கட்டளைகளால் யெகோவா இதை அறிவுறுத்துகிறார்? (ஆ) ஜனங்கள் எவ்வாறு யெகோவாவின் பெயரை அறிந்துகொள்வார்கள், அவர்களுடைய பாவம் ஏன் அவரை ஏமாற்ற முடியாது?
16. குயவனையும் அவனுடைய மட்பாண்டங்களையும் பயன்படுத்தி யெகோவா எதை விளக்குகிறார்?
17. கடினமான என்ன அனுபவம் எரேமியாவுக்கு ஏற்படுகிறது, ஆனால் இது அவரை மெளனமாக்குகிறதா?
18. எதைக் குறித்து எரேமியா சிதேக்கியாவுக்கு தெரிவிக்கிறார்?
19. “நீதியுள்ள தளிர்” சம்பந்தமாக எரேமியா என்ன தீர்க்கதரிசனம் உரைக்கிறார், அத்திப் பழங்களுள்ள இரண்டு கூடைகளால் எது சித்தரித்து காட்டப்படுகிறது?
20. யெகோவா எவ்வாறு பாபிலோனை தம்முடைய ஊழியனாக பயன்படுத்துகிறார், ஆனால், அதனுடைய முடிவு என்னவாக இருக்கும்?
21. யெகோவாவின் உக்கிர கோபத்தின் பாத்திரத்திலிருந்து யார் குடிக்க வேண்டும், அதன் விளைவு என்ன?
22. யெகோவாவின் கடும் கோபம் எந்த பேரழிவில் வெளிப்படுத்தப்படும்?
23. (அ) எரேமியாவுக்கு எதிராக என்ன சதி திட்டம் தீட்டப்படுகிறது, அதற்கெதிராக அவர் எவ்வாறு வாதாடுகிறார், அவரை குற்றமற்றவர் என்று தீர்ப்பதில் எந்த முன்னோடிகள் குறிப்பிடப்படுகின்றனர்? (ஆ) எதிர்காலத்தில் பாபிலோனுக்கு அடிமைப்படவிருப்பதை எரேமியா எவ்வாறு நடித்து காட்டுகிறார், அனனியாவை பற்றிய என்ன தீர்க்கதரிசனம் நிறைவேறுகிறது?
24. (அ) பாபிலோனிற்கு நாடுகடத்தப்பட்டோருக்கு எரேமியா என்ன செய்தியை அனுப்புகிறார்? (ஆ) யெகோவா யாருடன் புதிய உடன்படிக்கை செய்வார், இது எவ்வாறு முந்தைய உடன்படிக்கையை பார்க்கிலும் மேம்பட்டதாக நிரூபிக்கும்?
25. இஸ்ரவேல் திரும்ப நிலைநாட்டப்படுவதன் நிச்சயம் எவ்வாறு வலியுறுத்தப்படுகிறது, யெகோவாவின் வார்த்தை என்ன செய்தியை கொண்டுவருகிறது?
26. ரேகாபியருக்கு யெகோவா என்ன வாக்குறுதியளிக்கிறார், ஏன்?
27. தீர்க்கதரிசனங்களை எரேமியா மீண்டுமாக எழுதுவதற்கு காரணம் என்ன?
28. (அ) என்ன தீர்க்கதரிசனங்களை எரேமியா தொடர்ந்து உரைக்கிறார்? (ஆ) எபெத்மெலேக்கின் நடத்தை எவ்வாறு பிரபுக்களுடையதிலிருந்து வித்தியாசப்படுகிறது?
29. எருசலேமுக்கு இப்போது என்ன அழிவு ஏற்படுகிறது, ஆனால் எரேமியாவுக்கும் எபெத்மெலேவுக்கும் என்ன சம்பவிக்கிறது?
30. மீதமுள்ள மக்கள் எவ்வாறு எரேமியாவின் அறிவுரைக்கு செவிகொடுக்க தவறுகின்றனர், என்ன தண்டனை தீர்ப்பை எகிப்தில் எரேமியா தெரிவிக்கிறார்?
31. பாருக்குக்கு என்ன உறுதியளிக்கப்படுகிறது?
32. “யெகோவாவின் பட்டயம்” யார் யாருக்கு எதிராக வரும்?
33. (அ) பொற்பாத்திரமாகிய பாபிலோனுக்கு என்ன ஏற்படும்? (ஆ) ஆகையால், கடவுளுடைய மக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும்?
34. பாபிலோனின் வீழ்ச்சியை என்ன அடையாளம் சித்தரித்துக் காட்டுகிறது?
35. என்ன பதிவு இப்போது பின்தொடருகிறது?
36. (அ) தைரியத்தோடு வைராக்கியமாக இருந்ததன் மூலம் எரேமியா எவ்வாறு நமக்கு முன்மாதிரியாக இருக்கிறார்? (ஆ) என்ன வழிகளில் பாருக், ரேகாபியர், எபெத்மெலேக்கு ஆகியோர் நமக்கு சிறந்த முன்மாதிரிகளாக இருக்கின்றனர்?
37. எரேமியா புத்தகத்தை சிந்திப்பது யெகோவாவின் தீர்க்கதரிசன வல்லமையில் விசுவாசத்தை எவ்வாறு பலப்படுத்துகிறது?
38. (அ) இயேசு குறிப்பிட்ட என்ன உடன்படிக்கையும்கூட எரேமியாவின் தீர்க்கதரிசனத்தில் சிறப்பித்து காட்டப்படுகிறது? (ஆ) என்ன ராஜ்ய நம்பிக்கை அறிவிக்கப்படுகிறது?
39. எரேமியா முன்னறிவித்தபடி பாபிலோனிலிருந்து மீதிபேர் திரும்பிவந்தது எதற்கு உறுதியளிக்கிறது?