Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் புத்தக எண் 25—புலம்பல்

பைபிள் புத்தக எண் 25—புலம்பல்

பைபிள் புத்தக எண் 25—புலம்பல்

எழுத்தாளர்: எரேமியா

எழுதப்பட்ட இடம்: எருசலேமுக்கு அருகில்

எழுதி முடிக்கப்பட்டது: பொ.ச.மு. 607

ஏவப்பட்ட வேதவாக்கியங்களின் பாகமான இப்புத்தகத்திற்கு இந்தப் பெயர் பொருத்தமானதே. ஏனென்றால், பொ.ச.மு. 607-ல் கடவுளுடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனத்தின் சரித்திரத்தில் பேரழிவுக்குரிய ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அப்போது பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சார் எருசலேமை அழித்துப் போட்டார். அதற்காக ஆழ்ந்த துயரத்தை வெளிப்படுத்தும் ஒரு புலம்பலே இப்புத்தகம். எபிரெயுவில் இந்தப் புத்தகம் அதன் முதல் வார்த்தையாகிய எஹ்கா! (ʼEh·khahʹ!) என்பதன் அடிப்படையில் பெயரிடப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் ‘எவ்வாறு!’ என்பதாகும். கிரேக்க செப்டுவஜின்டை மொழிபெயர்த்தவர்கள் இந்தப் புத்தகத்தை த்ரீனாய் (Threʹnoi) என்று அழைத்தனர். இதன் அர்த்தம் “துயரப்பாடல்கள்; புலம்பல்கள்” என்பதாகும். பாபிலோனிய டால்முட், க்வினோஹ்த் (Qi·nohthʹ) என்ற பதத்தைப் பயன்படுத்துகிறது. இதன் அர்த்தம் “துயரப்பாடல்கள்; ஒப்பாரிகள்” என்பதாகும். லத்தீனில் எழுதிய ஜெரோம் இதற்கு லாமென்டேஷனெஸ் (Lamentationes) என பெயரிட்டார். இதிலிருந்தே ஆங்கில பெயர் லாமென்டேஷன்ஸ் வந்தது.

2புலம்பல் புத்தகமானது தற்கால பைபிள்களில் எரேமியாவிற்கு அடுத்து உள்ளது. எபிரெய பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலிலோ இது பொதுவாக ஹேகியோக்ராஃபா அல்லது எழுத்துக்கள் என்பதோடு காணப்படுகிறது. எழுத்துக்கள் என்ற இந்தப் பகுதியில் சாலொமோனின் உன்னதப்பாட்டு, ரூத், பிரசங்கி, எஸ்தர், புலம்பல் ஆகிய ஐந்து மெகில்லோத் ([Meghil·lohthʹ] சுருள்கள்) என்று அறியப்படும் சிறு தொகுதியும் அடங்கும். தற்கால எபிரெய பைபிள்கள் சிலவற்றில் இது ரூத்துக்கும் பிரசங்கிக்கும் அல்லது எஸ்தருக்கும் பிரசங்கிக்கும் இடையில் உள்ளது. ஆனால் பூர்வ பிரதிகளில், இன்று நம்முடைய பைபிளில் இருப்பதுபோலவே எரேமியாவுக்கு பின் இருந்ததாக சொல்லப்படுகிறது.

3இந்தப் புத்தகத்தை எழுதியவரின் பெயர் இதில் காணப்படுவதில்லை. எனினும், எரேமியாவே இதை எழுதினார் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. கிரேக்க செப்டுவஜின்டில் இந்தப் புத்தகத்திற்கு பின்வரும் முன்னுரை உள்ளது: “இவ்வாறாக, இஸ்ரவேல் சிறைபிடித்து செல்லப்பட்டு எருசலேம் பாழாக்கப்பட்ட பின்பு, எரேமியா உட்கார்ந்து அழுது எருசலேமைப் பற்றி புலம்பி சொன்னதாவது.” இந்த வார்த்தைகள் போலியானவை என ஜெரோம் கருதியதால் தன் மொழிபெயர்ப்பில் இதைச் சேர்க்காமல் விட்டுவிட்டார். என்றாலும், எரேமியாவே புலம்பலை எழுதினார் என்பதை யூதர்கள் காலங்காலமாக ஏற்றுக்கொண்டிருந்தனர். மேலும் சிரியாக் மொழிபெயர்ப்பு, லத்தீன் வல்கேட், யோனத்தானின் டார்கம், பாபிலோனிய டால்முட், இன்னும் மற்றவையும்கூட இதை ஆதரிக்கின்றன.

4சில விமர்சகர்கள், புலம்பல் புத்தகத்தை எரேமியா எழுதவில்லை என நிரூபிக்க முயற்சி செய்துள்ளனர். எனினும், பரிசுத்த பைபிளின் விளக்கவுரை என்ற ஆங்கில புத்தகம், எரேமியாவே இதை எழுதினார் என்பதற்கு அத்தாட்சியாக இவ்வாறு குறிப்பிடுகிறது: “2-ம் 4-ம் அதிகாரங்களிலுள்ள எருசலேமின் தத்ரூபமான விவரிப்புகளை வாசிக்கையில் அது கண்கண்ட சாட்சி எழுதியவையே என்பது தெளிவாய் தெரிகிறது. அவ்வாறே அந்தச் செய்யுட்கள் முழுவதிலும் காணப்படும் ஆழ்ந்த இரக்கமும் தீர்க்கதரிசன அம்சமும் அவருக்கே சொந்தமானவை. அதோடு அவற்றின் எழுத்துநடையும் சொல்நயமும் கருத்துகளும்கூட எரேமியாவிற்கே உரியவை. a புலம்பலிலும் எரேமியாவிலும் காணப்படும் அநேக சொற்றொடர்கள் ஒரேவிதமாக உள்ளன. உதாரணமாக, துயரம் மிகுந்த ‘கண்கள் நீராய் (கண்ணீர்) சொரிகின்றன’ என்பது, (புல. 1:16; 2:11; 3:48, 50; எரே. 9:1; 13:17; 14:17) தீர்க்கதரிசிகளும் ஆசாரியர்களும் செய்த ஊழல் காரணமாக அவர்களிடம் வெறுப்பைக் காண்பிப்பது போன்றவை. (புல. 2:14; 4:13, 14; எரே. 2:34; 5:30, 31; 14:13, 14) எரேமியா 8:18-22-லும் 14:17, 18-லும் உள்ள பகுதிகள், புலம்பலில் காணப்படும் துயர்மிகுந்த எழுத்துநடையில் எரேமியாவால் நிச்சயம் எழுத முடிந்திருக்கும் என்பதைக் காட்டுகின்றன.

5பொ.ச.மு. 607-ல் எருசலேம் வீழ்ச்சியடைந்த உடனேயே இது எழுதப்பட்டிருக்க வேண்டும் என பொதுவாக நம்பப்படுகிறது. நகரம் முற்றுகை செய்யப்பட்டு, எரித்து போடப்பட்டதன் கொடூரம் எரேமியாவின் மனதில் இன்னும் பசுமையாகவே இருந்தது. அவருடைய கடுந்துயரமும் தெளிவாக விளக்கப்படுகிறது. துயரத்தின் எந்தவொரு அம்சமும் ஒரே இடத்தில் முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை. ஆனால் ஒவ்வொன்றும் பல செய்யுட்களில் மறுபடியும் மறுபடியுமாக வருகிறதென்று ஒரு கருத்துரையாளர் குறிப்பிடுகிறார். பின்பு அவர் சொல்வதாவது: “இந்த உள்ளக் கொந்தளிப்பு, . . . அண்மையில் நடந்த சம்பவங்களையும் ஏற்பட்ட உணர்ச்சிகளையுமே இப்புத்தகம் விவரிக்கிறது என்பதற்கு மிக உறுதியான சான்றளிக்கிறது.” b

6புலம்பல் புத்தகம் அமைக்கப்பட்டிருக்கும் முறை பைபிள் அறிஞருக்கு மிகுந்த அக்கறைக்குரியது. இதில் ஐந்து அதிகாரங்கள், அதாவது ஐந்து உணர்ச்சிப் பாடல்கள் உள்ளன. முதல் நான்கும் அகரவரிசை (acrostic) முறையில் எழுதப்பட்டுள்ளன. அதாவது, அவற்றின் ஒவ்வொரு வசனமும் எபிரெய மொழியின் 22 எழுத்துக்கள் ஒவ்வொன்றோடும் தொடங்குகிறது. மூன்றாம் அதிகாரத்திலோ 66 வசனங்கள் உள்ளன; ஆகவே மும்மூன்று வசனங்கள் ஒரே எழுத்தில் தொடங்குகின்றன. ஐந்தாவது செய்யுளில் 22 வசனங்கள் இருக்கிறபோதிலும் அது அகரவரிசை முறையில் இல்லை.

7நேபுகாத்நேச்சார் எருசலேமை முற்றுகையிட்டு, கைப்பற்றி, அழித்துப்போட்டதைக் குறித்த கடும் துயரத்தை புலம்பல் புத்தகம் வெளிப்படுத்துகிறது. உள்ளத்தைக் கனிய வைக்கும் விதத்தில் உணர்ச்சிகளை தத்ரூபமாக எழுத்தில் வடித்திருப்பதில் வேறு எந்த இலக்கியமும் இதற்கு நிகரல்ல. எரேமியா தான் கண்ட பாழ்க்கடிப்பு, கடுந்துயரம், குழப்பம் ஆகியவற்றிற்காக ஆழ்ந்த துக்கத்தை வெளிப்படுத்துகிறார். பஞ்சமும் பட்டயமும் திகிலுண்டாக்கும் மற்ற காரியங்களும் அந்த நகரத்திற்கு பயங்கர துன்பத்தைக் கொண்டுவந்தன. இவை எல்லாம், அந்த ஜனங்களும் தீர்க்கதரிசிகளும் ஆசாரியர்களும் செய்த பாவங்களின் காரணமாக கடவுளிடமிருந்து வந்த நேரடியான தண்டனையே. எனினும், அவர்கள் தொடர்ந்து யெகோவா மீதே நம்பிக்கையும் விசுவாசமும் வைக்கின்றனர்; திரும்ப நிலைநாட்டும்படியும் அவரிடமே விண்ணப்பிக்கின்றனர்.

புலம்பலின் பொருளடக்கம்

8“ஐயோ! ஜனம்பெருத்த நகரி தனிமையாக உட்கார்ந்திருக்கிறாளே!” இவ்வாறு முதலாவது செய்யுள் அதன் புலம்பலை தொடங்குகிறது. சீயோன் குமாரத்தி ஒரு ராஜகுமாரியாக இருந்தாள். ஆனால் அவளுடைய நேசர்கள் அவளைக் கைவிட்டனர், அவளுடைய ஜனங்கள் நாடுகடத்தப்பட்டனர். அவளுடைய வாசல்கள் பாழாய் கிடக்கின்றன. அவளுடைய மிகுதியான மீறுதல்களினிமித்தம் யெகோவா அவளைத் தண்டித்தார். அவளுடைய சீர்சிறப்பை அவள் இழந்துவிட்டாள். அவளுடைய வீழ்ச்சியைக் கண்டு அவளுடைய பகைஞர்கள் நகைத்தனர். அவள் அதிசயமான முறையில் வீழ்ந்துபோனாள், ஆறுதலளிப்போர் ஒருவரும் இல்லை. அவளிடம் மீந்துள்ள ஜனங்கள் பசியாயிருக்கின்றனர். “எனக்கு வந்துற்ற துயர்போல வேறேதும் துயர் உண்டோ”? (பொ.மொ.) என (பெண்ணாக உருவகப்படுத்தப்பட்ட எருசலேம்) கேட்கிறாள். அவள் தன் கைகளை விரித்து இவ்வாறு சொல்கிறாள்: “கர்த்தர் நீதிபரர்; அவருடைய வாக்குக்கு விரோதமாய் நான் எழும்பினேன்.” (1:1, 12, 18) யெகோவா அவளுக்கு செய்ததுபோலவே, அவள் துயரத்தைக் கண்டு களிகூரும் சத்துருக்களுக்கும் தீங்கைக் கொண்டுவரும்படி அவரை நோக்கி விண்ணப்பிக்கிறாள்.

9“ஐயோ! ஆண்டவர் தமது கோபத்தில் சீயோன் குமாரத்தியை மந்தாரத்தினால் மூடினார்.” (2:1) இஸ்ரவேலின் மேன்மையை தரையில் விழத்தள்ளியவர் யெகோவாவே என இரண்டாவது செய்யுள் காட்டுகிறது. பண்டிகையும் ஓய்வுநாளும் மறந்துபோகும்படி செய்ததும் அவரே, தம்முடைய பலிபீடத்தையும் பரிசுத்த ஸ்தலத்தையும்கூட தள்ளிவிட்டவரும் அவரே. ஐயோ, துயரார்ந்த காட்சிகள் எருசலேமில் நிறைந்துள்ளன! எரேமியா உணர்ச்சிபொங்க கூறுகிறார்: “என் ஜனமாகிய குமாரத்தியின் நொறுங்குதலினிமித்தம் கண்ணீர் சொரிகிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது; என் குடல்கள் கொதிக்கிறது; என் ஈரல் இளகித் தரையிலே வடிகிறது.” (2:11) எருசலேமின் குமாரத்தியை அவர் எதோடு ஒப்பிடுவார்? சீயோன் குமாரத்தியை அவர் எவ்வாறு ஆறுதல்படுத்துவார்? அவளுடைய சொந்த தீர்க்கதரிசிகளே பயனற்றவர்களாக, அவளுடைய தேவையைப் பூர்த்தி செய்யாதவர்களாக இருந்தனர். இப்போது வழிப்போக்கர்கள் அவளைப் பார்த்து ஏளனமாய் நகைத்து, “நிறையழகும் பூமி முழுதுக்கும் மகிழ்ச்சியுமான நகரிதுதானோ”? என்கிறார்கள். (2:15, தி.மொ.) அவளுடைய சத்துருக்கள் தங்கள் வாயைத் திறந்து, விசிலடித்து, தங்கள் பற்களைக் கடித்து, ‘அவளை விழுங்குவதற்காக நாங்கள் காத்திருந்த நாள் இதுவே’ என்கிறார்கள். அவளுடைய பிள்ளைகள் பசி மயக்கத்தால் சுருண்டு விழுகின்றனர், பெண்கள் தாங்கள் பெற்ற குழந்தைகளைத் தின்கின்றனர். வீதிகளில் பிணங்கள் நிறைந்து கிடக்கின்றன. “கர்த்தருடைய கோபத்தின் நாளிலே தப்பினவனும் மீதியானவனுமில்லை.”​—2:16, 22.

10அறுபத்தாறு வசனங்கள் அடங்கிய மூன்றாவது செய்யுள், கடவுளுடைய இரக்கத்தில் சீயோனுக்கு இருக்கும் நம்பிக்கையை வலியுறுத்துகிறது. பல உருவகங்களை உபயோகித்து, சிறையிருப்பையும் பாழ்க்கடிப்பையும் கொண்டுவந்தது யெகோவாவே என தீர்க்கதரிசி கூறுகிறார். கசப்புற்ற நிலையிலுள்ள எரேமியா தன் தவிப்பை நினைவுகூரும்படி யெகோவாவிடம் கேட்டு, அவருடைய பற்றுமாறா அன்பிலும் இரக்கத்திலும் தனக்குள்ள விசுவாசத்தை வெளிப்படுத்துகிறார். அடுத்தடுத்ததாக வரும் மூன்று வசனங்கள் யெகோவாவிடமிருந்து வரும் இரட்சிப்புக்காக காத்திருப்பதே மிகவும் சிறந்தது என காட்டுகின்றன. அந்த வசனங்களில், அவர் “நல்லவர்” என ஒரு முறையும் “நல்லது” என இரண்டு முறையும் வருகிறது. (3:25-27) யெகோவா துயரத்தை உண்டுபண்ணினார், எனினும் அவர் இரக்கத்தையும் காட்டுவார். ஆனால் இப்பொழுதோ, செய்த கலகத்தை அறிக்கையிட்ட போதிலும் யெகோவா மன்னிக்கவில்லை; தம்முடைய ஜனத்தின் ஜெபங்கள் தம்மை வந்தடையாதபடி செய்து அவர்களைக் ‘குப்பையும் அருவருப்புமாக்கினார்.’ (3:45) சத்துருக்கள் தன்னை ஒரு பறவையைப்போல் வேட்டையாடினார்கள் என தீர்க்கதரிசி மனங்கசந்து கண்ணீருடன் நினைவுகூருகிறார். எனினும், குழியில் இருந்த அவரிடம் யெகோவா அணுகி “பயப்படாதே” என்றார். சத்துருவின் நிந்தனைக்குப் பதிலளிக்கும்படி அவர் யெகோவாவிடம் கேட்கிறார்: “கோபமாய் அவர்களைப் பின்தொடர்ந்து கர்த்தருடைய வானங்களின் கீழ் இராதபடிக்கு அவர்களை அழித்துவிடுவீர்.”​—3:57, 66.

11“பொன், ஐயோ, மங்கினதே, பசும்பொன்னும் மாறினதே.” (4:1, தி.மொ.) நான்காவது செய்யுள், யெகோவாவுடைய ஆலயத்தின் மகிமை மங்கிப்போனதை குறித்து புலம்புகிறது. அதன் கற்கள் வீதிகளில் சிதறிக் கிடக்கின்றன. சீயோனின் அருமையான குமாரர்கள் மண்பாண்டங்களைப் போல் மதிப்பற்றவர்கள் ஆகிவிட்டனர். தண்ணீரோ அப்பமோ இல்லை, செல்வச்செழிப்பில் வளர்ந்தவர்கள் ‘குப்பைமேடுகளை அணைத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.’ (4:5) சோதோமின் பாவத்திற்கு கிடைத்த தண்டனையைவிட இது பெரியது. ‘உறைந்த மழையைப் பார்க்கிலும் சுத்தமும், பாலைப் பார்க்கிலும் வெண்மையுமாக’ இருந்த நசரேயர் “கரியிலும் கறுத்துப்” போய், வாடிவதங்கி கிடக்கிறார்கள். (4:7, 8) பஞ்சத்தின் கொடுமையால் பெண்கள் தாங்கள் பெற்ற பிள்ளைகளை வேகவைத்து தின்கிறார்களே! இந்தப் பஞ்சத்தில் பரிதவித்து சாவதைப் பார்க்கிலும் பட்டயத்தால் மரித்திருந்தால் நலமாயிருக்குமே! யெகோவா தம்முடைய உக்கிர கோபத்தை ஊற்றினார். நம்பமுடியாதது நடந்துவிட்டது; எதிரி எருசலேமின் வாசல்களுக்குள் வந்துவிட்டான்! ஏன்? நீதியான இரத்தத்தைச் சிந்தின “அதின் தீர்க்கதரிசிகளின் பாவங்களினாலும், அதின் ஆசாரியர்களின் அக்கிரமங்களினாலும்” இப்படி ஆயிற்று. (4:13) யெகோவாவின் முகம் அவர்களுக்கு விரோதமாக இருக்கிறது. எனினும், சீயோன் குமாரத்தியின் அக்கிரமம் முடிவுக்கு வந்துவிட்டது, அவள் மறுபடியும் சிறைபட்டு போகமாட்டாள். ஏதோம் குமாரத்தியே, யெகோவாவின் கசப்பான பாத்திரத்திலிருந்து குடிப்பதற்கு இப்பொழுது உனக்கு சமயம் வந்துவிட்டது!

12ஐந்தாவது செய்யுள், திக்கற்ற தம்முடைய ஜனங்களை நினைவுகூரும்படி யெகோவாவிடம் கேட்கும் விண்ணப்பத்தோடு தொடங்குகிறது. இதில் எருசலேமின் குடிகள் பேசுவதைப்போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய முற்பிதாக்கள் பாவம் செய்தார்கள், பிதாக்களின் அக்கிரமங்களை ஜனங்கள் இப்பொழுது சுமக்க வேண்டியதாயிற்று. வேலைக்காரர்கள் அவர்களை ஆளுகின்றனர், பசியின் கொடுமையால் அவர்கள் வதைக்கப்படுகின்றனர். அவர்களுடைய இருதயத்தின் களிகூருதல் நின்றுபோயிற்று, அவர்களுடைய நடனம் துக்கமாக மாறிவிட்டது. அவர்கள் இருதயத்தில் வேதனையுருகின்றனர். மனத்தாழ்மையோடு அவர்கள் யெகோவாவைப் பற்றி பின்வருமாறு சொல்கிறார்கள்: “கர்த்தாவே, நீர் என்றென்றைக்கும் இருக்கிறீர்; உம்முடைய சிங்காசனம் தலைமுறை தலைமுறையாக நிலைநிற்கும்.” அவரை நோக்கி இவ்வாறு கதறுகிறார்கள்: “கர்த்தாவே, எங்களை உம்மிடத்தில் திருப்பிக்கொள்ளும், அப்பொழுது திரும்புவோம்; பூர்வ காலத்திலிருந்ததுபோல எங்கள் நாட்களைப் புதியவைகளாக்கும். எங்களை முற்றிலும் வெறுத்துவிடுவீரோ? எங்கள் பேரில் கடுங்கோபமாயிருக்கிறீரே!”​—5:19-22.

ஏன் பயனுள்ளது

13கடவுள் மீது எரேமியா வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கையை புலம்பல் புத்தகம் வெளிப்படுத்துகிறது. எந்த மனிதனாலும் ஆறுதல் அளிக்க முடியாத ஆழ்ந்த துக்கத்திலும் படுதோல்வியிலும் வெம்பிக்கொண்டிருந்த இந்தத் தீர்க்கதரிசி, சர்வலோகத்தின் உன்னத கடவுளாகிய யெகோவாவிடமிருந்து இரட்சிப்பு வருமென்று எதிர்பார்க்கிறார். புலம்பல் புத்தகம், உண்மை வணக்கத்தார் அனைவர் மத்தியிலும் கீழ்ப்படிதலையும் உத்தமத்தையும் தூண்டுவிக்க வேண்டும். அதே சமயத்தில் கடவுளுடைய உன்னத பெயரையும், அது அர்த்தப்படுத்துபவற்றையும் மதிக்காதவர்களுக்கு பயங்கரமான எச்சரிக்கையும் கொடுக்கிறது. பாழாக்கப்பட்ட வேறு எந்த நகரத்திற்காகவும், உள்ளத்தை கனிய வைக்கும் இத்தகைய துயர்மிக்க வார்த்தைகளில் புலம்பப்பட்டதாக சரித்திரத்தில் பதிவு இல்லை. வணங்கா கழுத்துடையோராக, மனந்திரும்பாமல் தொடர்ந்து கலகம் செய்வோரை கடவுள் எவ்வாறு கடுமையாய் தண்டிப்பார் என்பதை விவரிப்பதால் இது நிச்சயமாகவே நன்மை பயக்குகிறது.

14கடவுளுடைய பல எச்சரிக்கைகளும் தீர்க்கதரிசனங்களும் நிறைவேற்றமடைந்ததைக் காட்டுவதாலும் புலம்பல் புத்தகம் பயனுள்ளது. (புல. 1:2எரே. 30:14; புல. 2:15எரே. 18:16; புல. 2:17லேவி. 26:17; புல. 2:20உபா. 28:53) மேலும், உபாகமம் 28:63-65-ன் நிறைவேற்றத்திற்கான தெளிவான அத்தாட்சியைப் புலம்பல் புத்தகத்தில் பார்க்கிறோம். அதோடு, பரிசுத்த வேதாகமத்தின் மற்ற பாகங்களிலிருந்து எடுக்கப்பட்ட பல மேற்கோள்களும் இந்தப் புத்தகத்தில் உள்ளன. (புல. 2:15சங். 48:2; புல. 3:24சங். 119:57) புலம்பல் 1:5-ம் 3:42-ம் கூறுவதுபோல ஜனங்களின் சொந்த மீறுதல்கள் காரணமாகவே அழிவு வந்தது என்பதை தானியேல் 9:5-14 உறுதிப்படுத்துகிறது.

15எருசலேமின் பரிதாப நிலை உண்மையில் இதயத்தை ரணமாக்குகிறது! இருந்தாலும், யெகோவா பற்றுமாறா அன்பையும் இரக்கத்தையும் காட்டுவார், அவர் சீயோனை நினைவுகூர்ந்து அதைத் திரும்ப நிலைநாட்டுவார் என்ற நம்பிக்கையைப் புலம்பல் அளிக்கிறது. (புல. 3:31, 32; 4:22) தாவீதும் சாலொமோனும் எருசலேமில் அரசர்களாக ஆட்சி செய்தபோது இருந்த பூர்வ நாட்களைப்போல் ‘நாட்கள் புதிதாகும்’ என்ற நம்பிக்கையை இது வெளிப்படுத்துகிறது. நித்திய ராஜ்யத்திற்காக யெகோவா தாவீதுடன் செய்த உடன்படிக்கை எதிர்காலத்தில் நிறைவேறப்போகிறது! ஆகவே, “அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்.” யெகோவாவை நேசிப்போர் மத்தியில் அவருடைய இரக்கங்கள் தொடர்ந்து நிலைத்திருக்கும். அவருடைய நீதியுள்ள ராஜ்ய ஆட்சியில் உயிர்வாழும் ஒவ்வொரு ஜீவனும் நன்றியுணர்ச்சியுடன், “யெகோவாவே என் பங்கு” என்று கூறும்.​—5:21; 3:22-24, தி.மொ.

[அடிக்குறிப்புகள்]

a 1952, ஜே. ஆர். டுமெல்லோ என்பவரால் பதிப்பிக்கப்பட்டது, பக்கம் 483.

b புலம்பல் புத்தகத்தில் ஆராய்ச்சிகள் (ஆங்கிலம்), 1954, நார்மன் கே. கோட்வால்ட், பக்கம் 31.

[கேள்விகள்]

1. புலம்பல் புத்தகத்திற்கு இந்தப் பெயர் ஏன் பொருத்தமானது?

2. புலம்பல் எவ்வாறு தொகுக்கப்பட்டு பைபிளில் சேர்க்கப்பட்டுள்ளது?

3, 4. எரேமியாவே இதை எழுதினார் என்பதற்கு என்ன அத்தாட்சி உள்ளது?

5. இது எழுதப்பட்ட காலத்தை முடிவு செய்ய என்ன நியாயவிவாதம் உதவுகிறது?

6. புலம்பலின் எழுத்துநடை மற்றும் அமைப்பு முறையில் எது ஆர்வத்திற்குரியது?

7. என்ன துயரத்தை எரேமியா வெளிப்படுத்துகிறார், ஆனாலும் என்ன நம்பிக்கை உள்ளது?

8. முதல் செய்யுளில் என்ன பாழ்க்கடிப்பு விவரிக்கப்படுகிறது, ஆனால் பெண்ணாக உருவகப்படுத்தப்பட்ட எருசலேம் என்ன கூறுகிறாள்?

9. (அ) எருசலேமின் மீது அழிவைக் கொண்டு வந்தது யார்? (ஆ) அவள்மீது குவிக்கப்பட்ட ஏளன சொற்களையும் அந்நகரிலுள்ள பயங்கர நிலைமைகளையும் எரேமியா எவ்வாறு விவரிக்கிறார்?

10. நம்பிக்கைக்கு ஆதாரமாக, கடவுளின் என்ன பண்புகளை எரேமியா குறிப்பிடுகிறார்?

11. யெகோவாவின் உக்கிர கோபம் சீயோன் மீது எந்த விதங்களில் ஊற்றப்பட்டது, ஏன்?

12. ஐந்தாவது செய்யுளில் மனத்தாழ்மையான என்ன விண்ணப்பம் செய்யப்படுகிறது?

13. புலம்பல் என்ன நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது, எனினும் கடவுளின் தண்டனையை விவரிப்பதால் இது ஏன் நன்மை பயக்குகிறது?

14. கடவுளுடைய என்ன எச்சரிக்கைகளும் தீர்க்கதரிசனங்களும் நிறைவேற்றமடைந்ததைப் புலம்பல் காட்டுகிறது, தேவாவியால் ஏவப்பட்ட மற்ற பகுதிகளோடு இந்தப் புத்தகம் எவ்வாறு ஒத்திருக்கிறது?

15. எதிர்காலத்தில் என்ன ‘புதிதாகும் நாட்கள்’ வரும் என புலம்பல் குறிப்பிடுகிறது?