Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் புத்தக எண் 26—எசேக்கியேல்

பைபிள் புத்தக எண் 26—எசேக்கியேல்

பைபிள் புத்தக எண் 26—எசேக்கியேல்

எழுத்தாளர்: எசேக்கியேல்

எழுதப்பட்ட இடம்: பாபிலோன்

எழுதி முடிக்கப்பட்டது: ஏ. பொ.ச.மு. 591

காலப்பகுதி: பொ.ச.மு. 613-ஏ. 591

யூதாவின் அரசன் யோயாக்கீன் பொ.ச.மு. 617-ம் ஆண்டில் நேபுகாத்நேச்சாரிடம் சரணடைந்து எருசலேமை அவனிடம் ஒப்படைத்தான். தேசத்தின் முதன்மையான ஆட்களையும் யெகோவாவின் ஆலயத்திலும் அரசனின் அரண்மனையிலும் இருந்த எல்லா பொக்கிஷங்களையும் நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்கு கொண்டுசென்றான். சிறைபிடித்து செல்லப்பட்டவர்களுள் அரசனின் குடும்பத்தார், பிரபுக்கள், வீரரான பராக்கிரமசாலிகள், தச்சர், கொல்லர், பூசி என்ற ஆசாரியனின் குமாரனாகிய எசேக்கியேல் ஆகியோரும் இருந்தனர். (2 இரா. 24:11-17; எசே. 1:1-3) நாடுகடத்தப்பட்ட இந்த இஸ்ரவேலரின் இதயங்கள் துக்கத்தால் பாரமடைந்திருந்தன. குன்றுகளும் நீரூற்றுகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்த தேசத்திலிருந்து பரந்த சமவெளிகள் உடைய ஒரு தேசத்திற்கு அவர்கள் வந்து சேர்ந்தனர், அந்தப் பயணத்தால் மிகவும் சோர்வுற்றிருந்தனர். பலத்த பேரரசாக இருந்த பாபிலோனில் ஓடிய கேபார் நதியருகில் இப்போது அவர்கள் வாழ்ந்தனர். வினோதமான பழக்க வழக்கங்கள் உடைய புறமத வணக்கத்தார் அவர்களைச் சுற்றிலும் வாழ்ந்து வந்தனர். இஸ்ரவேலர் சொந்தமாக வீடுகளைக் கட்டி குடியிருக்கவும் வேலைக்காரர்களை வைத்திருக்கவும் வியாபாரத்தில் ஈடுபடவும் நேபுகாத்நேச்சார் அனுமதித்தான். (எசே. 8:1; எரே. 29:5-7; எஸ்றா 2:65) அவர்கள் சுறுசுறுப்பாக உழைத்தால் செல்வச்செழிப்பை அனுபவிக்கலாம். பொருளாசை, பாபிலோனிய மதம் போன்ற இப்படிப்பட்ட கண்ணிகளுக்குள் அவர்கள் விழுந்துவிடுவார்களா? மனந்திரும்பாமல் தொடர்ந்து யெகோவாவுக்கு எதிராக கலகம் செய்வார்களா? நாடுகடத்தப்பட்டதை அவரிடமிருந்து கிடைத்த சிட்சையாக ஏற்றுக்கொள்வார்களா? நாடுகடத்தப்பட்டிருந்த தேசத்தில் புதிய சோதனைகளை அவர்கள் எதிர்ப்படவிருந்தார்கள்.

2எருசலேமின் அழிவுக்கு வழிநடத்தின இந்த நெருக்கடியான ஆண்டுகளின்போதும்கூட, இஸ்ரவேலர்கள் மத்தியில் தமக்காக ஒரு தீர்க்கதரிசி சேவிக்கும்படி யெகோவா பார்த்துக்கொண்டார். எரேமியா எருசலேமில் இருந்தார், தானியேல் பாபிலோன் அரசவையில் இருந்தார், எசேக்கியேல் பாபிலோனியாவில் நாடுகடத்தப்பட்டிருந்த யூதருக்கு தீர்க்கதரிசியாக சேவித்தார். எசேக்கியேல் ஆசாரியராகவும் தீர்க்கதரிசியாகவும் இருந்தார். இந்தத் தனிச்சிறப்பு, எரேமியாவுக்கும் பிறகு சகரியாவுக்கும் மட்டுமே கிடைத்தது. (எசே. 1:3) இப்புத்தகம் முழுவதிலும் அவர் 90-க்கும் அதிகமான தடவை “மனுஷகுமாரன்” (தி.மொ.) என்று அழைக்கப்படுகிறார். இது, அவருடைய தீர்க்கதரிசனத்தை ஆராய்கையில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குறிப்பு ஆகும். ஏனென்றால், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் இயேசுவும் ஏறக்குறைய 80 தடவை “மனுஷகுமாரன்” என்று அழைக்கப்படுகிறார். (எசே. 2:1; மத். 8:20) எசேக்கியேல் (எபிரெயுவில், யெச்சேஸ்குவேல் [Yechez·qeʼlʹ]) என்ற அவருடைய பெயருக்கு “கடவுள் பலப்படுத்துகிறார்” என்று அர்த்தம். யோயாக்கீன் நாடுகடத்தப்பட்ட ஐந்தாம் ஆண்டில், அதாவது பொ.ச.மு. 613-ல் தீர்க்கதரிசியாக சேவிக்கும்படி யெகோவா எசேக்கியேலை நியமித்தார். நாடுகடத்தப்பட்ட 27-வது ஆண்டில், அதாவது 22 வருடங்களுக்கு பிறகு அவர் தன் ஊழியத்தைத் தொடர்ந்து செய்வதாக வாசிக்கிறோம். (எசே. 1:1, 2; 29:17) அவர் திருமணம் ஆனவர். ஆனால், நேபுகாத்நேச்சார் எருசலேம்மீது கடைசி முற்றுகையை தொடங்கின நாளிலேயே அவருடைய மனைவி மரித்துவிட்டாள். (24:2, 18) எசேக்கியேல் மரித்த தேதியும் விதமும் அறியப்படாமல் உள்ளன.

3எசேக்கியேல் என்ற இந்தப் புத்தகத்தை எசேக்கியேல் தீர்க்கதரிசிதான் எழுதினார் என்பதிலும் வேதாகமத்தின் அதிகாரப்பூர்வ பட்டியலில் இது இடம்பெறுகிறது என்பதிலும் எந்த கருத்துவேறுபாடும் இல்லை. எஸ்றாவின் நாட்களிலிருந்த அதிகாரப்பூர்வ பட்டியலில் இது சேர்க்கப்பட்டிருந்தது. மேலும் பூர்வ கிறிஸ்தவ காலங்களின் புத்தகப் பட்டியல்களில், முக்கியமாக ஆரிகெனின் அதிகாரப்பூர்வ பட்டியலிலும் இது காணப்படுகிறது. இப்புத்தகத்திலுள்ள அடையாள மொழியும் எரேமியாவிலும் வெளிப்படுத்துதலிலும் உள்ள அடையாள மொழிகளும் வெகுவாக ஒத்திருக்கின்றன. இதுவும்கூட இதன் நம்பகத் தன்மைக்கு ஓர் அத்தாட்சி.​—எசே. 24:2-12எரே. 1:13-15; எசே. 23:1-49எரே. 3:6-11; எசே. 18:2-4எரே. 31:29, 30; எசே. 1:5, 10வெளி. 4:6, 7; எசே. 5:17வெளி. 6:8; எசே. 9:4வெளி. 7:3; எசே. 2:9; 3:1வெளி. 10:2, 8-10; எசே. 23:22, 25, 26வெளி. 17:16; 18:8; எசே. 27:30, 36வெளி. 18:9, 17-19; எசே. 37:27வெளி. 21:3; எசே. 48:30-34வெளி. 21:12, 13; எசே. 47:1, 7, 12வெளி. 22:1, 2.

4தீரு, எகிப்து, ஏதோம் போன்ற அக்கம்பக்கத்து தேசங்களுக்கு விரோதமாக எசேக்கியேல் தீர்க்கதரிசனம் உரைத்திருந்தார். இவை அனைத்தும் வியப்பூட்டும் வண்ணம் நிறைவேறியதும் இப்புத்தகத்தின் நம்பகத் தன்மைக்கு மேலுமான நிரூபணமாகும். உதாரணமாக, தீரு பாழாகும் என்று எசேக்கியேல் தீர்க்கதரிசனம் உரைத்தார். நேபுகாத்நேச்சார் 13 ஆண்டுகள் முற்றுகையிட்டு அந்த நகரத்தைப் பிடித்தபோது இது ஓரளவு நிறைவேறியது. (எசே. 26:2-21) என்றாலும் அது முழுமையாக அழிக்கப்படவில்லை. ஆனால், அது முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டும் என்பதே யெகோவாவின் நியாயத்தீர்ப்பு. எசேக்கியேல் மூலம் அவர் இவ்வாறு முன்னறிவித்திருந்தார்: “அதின் மண்ணும் அதில் இராதபடிக்கு விளக்கிப்போட்டு, அதை வெறும் பாறையாக்கிவிடுவேன். . . . உன் கல்லுகளையும் உன் மரங்களையும் உன் மண்ணையும் கடலின் நடுவிலே போட்டுவிடுவார்கள்.” (26:4, 12) இவை எல்லாம் 250-க்கும் அதிகமான வருடங்களுக்கு பிறகு மகா அலெக்ஸாந்தர், அந்த தீவு நகரமாகிய தீருவிற்கு எதிராக போரிட்டபோது நிறைவேறின. அலெக்ஸாந்தரின் போர்வீரர்கள், பாழாக்கப்பட்டிருந்த முக்கிய நகர்ப்புறத்தின் இடிபாடுகளை சுரண்டி எடுத்து கடலுக்குள் போட்டு அந்தத் தீவு நகரத்தை அடைவதற்காக 800 மீட்டர் நீளமுள்ள பாதையை அமைத்தனர். பின்னர், மிக சிக்கலான முற்றுகை தந்திரங்களை உபயோகித்து 46 மீட்டர் உயரமுள்ள மதில்மீது ஏறி பொ.ச.மு. 332-ல் அந்த நகரத்தைக் கைப்பற்றினர். அப்போது ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர், இன்னும் அதிகமானோர் அடிமைகளாக விற்கப்பட்டனர். எசேக்கியேல் முன்னறிவித்தபடியே, தீரு ‘வெறும் பாறையாகி வலைகளை விரித்து உலர்த்தும் இடமாயிற்று.’ (26:14, தி.மொ.) a எசேக்கியேல் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக, வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் மறுபுறத்தில் இருந்த நம்பிக்கைதுரோக ஏதோமியரும் முற்றிலுமாக அழிக்கப்பட்டனர். (25:12, 13; 35:2-9) b மேலும், எருசலேமின் அழிவையும் இஸ்ரவேல் திரும்ப நிலைநாட்டப்படுவதையும் பற்றிய எசேக்கியேலின் தீர்க்கதரிசனங்களும் துல்லியமாக நிறைவேறின.​—17:12-21; 36:7-14.

5எசேக்கியேல் ஒரு தீர்க்கதரிசியாக தன் ஊழியத்தை ஆரம்பித்த ஆண்டுகளில், உண்மையற்ற எருசலேமுக்கு எதிராக நிச்சயமாய் நிறைவேறவிருந்த கடவுளின் நியாயத்தீர்ப்புகளை அறிவித்தார். அதோடு, நாடுகடத்தப்பட்டிருந்தவர்கள் விக்கிரகாராதனையைக் குறித்து எச்சரிக்கையாய் இருக்கும்படியும் கூறினார். (14:1-8; 17:12-21) சிறைப்பட்ட யூதர்கள் உண்மையிலேயே மனந்திரும்பியதற்கான எந்த அத்தாட்சியையும் வெளிக்காட்டவில்லை. அவர்கள் மத்தியில் பொறுப்பில் இருந்தவர்கள் எசேக்கியேலிடம் அறிவுரை கேட்பதைப் பழக்கமாக்கியிருந்தனர். ஆனால் எசேக்கியேல் மூலமாக யெகோவா அறிவித்த செய்திகளுக்கு அவர்கள் எந்தக் கவனமும் செலுத்தவில்லை. மாறாக, விக்கிரகாராதனை, பொருளாசைக்குரிய காரியங்கள் போன்றவற்றிலேயே தொடர்ந்து ஈடுபட்டனர். அவர்களுடைய ஆலயம், பரிசுத்த நகரம், அரச பரம்பரை ஆகியவை அழிக்கப்பட்டது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. ஆனாலும் சொற்ப எண்ணிக்கையினரே அதனால் மனத்தாழ்மையை வளர்த்துக்கொண்டு மனந்திரும்பினர்.​—சங். 137:1-9.

6பிற்பட்ட ஆண்டுகளில் எசேக்கியேல் உரைத்த தீர்க்கதரிசனங்கள் திரும்ப நிலைநாட்டப்படும் நம்பிக்கையை வலியுறுத்தின. மேலும், யூதாவின் வீழ்ச்சியைக் கண்டு சந்தோஷப்பட்ட அக்கம்பக்கத்து தேசங்களையும் அவை கண்டனம் செய்தன. அவற்றின் வீழ்ச்சியும் அதோடுகூட இஸ்ரவேல் திரும்ப நிலைநாட்டப்படுவதும் அவர்களுடைய கண்களுக்கு முன்பாக யெகோவாவைப் பரிசுத்தப்படுத்தும். சுருக்கமாக சொன்னால், அந்தச் சிறையிருப்பும் திரும்ப நிலைநாட்டப்படுதலும் இந்த நோக்கத்திற்காகவே: ‘நானே யெகோவா என்பதை யூதரும் புற தேசத்தாரும் அறிந்துகொள்ள வேண்டும்.’ (எசே. 39:7, 22, NW) யெகோவாவின் பெயர் இவ்விதமாக பரிசுத்தமாக்கப்படுவதே இப்புத்தகம் முழுவதிலும் மேம்படுத்திக் காட்டப்படுகிறது. “நானே யெகோவா என்று நீங்கள் [அல்லது, அவர்கள்] அறிந்துகொள்ள வேண்டும்” என்ற இந்தச் சொற்றொடர் 60-க்கும் அதிகமான தடவை அதில் தோன்றுகிறது.​—6:7, NW, அடிக்குறிப்பு.

எசேக்கியேலின் பொருளடக்கம்

7இந்தப் புத்தகம் இயல்பாகவே மூன்று பகுதிகளாக பிரிகிறது. 1 முதல் 24 அதிகாரங்கள் அடங்கிய முதல் பகுதியில் எருசலேமிற்கு அழிவு நிச்சயம் என்ற எச்சரிக்கைகள் அடங்கியுள்ளன. 25 முதல் 32 அதிகாரங்கள் அடங்கிய இரண்டாவது பகுதியில் பல புறமத தேசங்களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்புக்குரிய தீர்க்கதரிசனங்கள் உள்ளன. 33 முதல் 48 அதிகாரங்கள் உள்ள கடைசி பகுதியில் திரும்ப நிலைநாட்டப்படுவது பற்றிய தீர்க்கதரிசனங்கள் அடங்கியுள்ளன; ஒரு புதிய ஆலயத்தையும் பரிசுத்த நகரத்தையும் பற்றிய தரிசனத்தோடு அந்தப் பகுதி முடிவடைகிறது. இந்தத் தீர்க்கதரிசனங்கள் பெரும்பாலும் காலவரிசைப்படியும் பொருளுக்கேற்பவும் அமைக்கப்பட்டுள்ளன.

8யெகோவா எசேக்கியேலைக் காவற்காரனாக நியமிக்கிறார் (1:1–3:27). பொ.ச.மு. 613-ல் எசேக்கியேல் தன் முதல் தரிசனத்தில், வடக்கிலிருந்து பெரும் புயல்காற்றும், அதோடுகூட பெரிய மேகமும் ஜுவாலிக்கும் அக்கினியும் வருவதைக் காண்கிறார். அதிலிருந்து சிறகுகளையுடைய நான்கு ஜீவன்கள் வெளிவருகின்றன. அவற்றிற்கு மனிதன், சிங்கம், காளை, கழுகு ஆகிய முகங்கள் உள்ளன. அவற்றின் தோற்றம் எரிகிற தழலைப்போல் உள்ளது. பயங்கர உயரமுள்ள, விளிம்புகள் முழுவதும் கண்கள் நிறைந்த சக்கரத்திற்குள் சக்கரம் இருப்பது போன்ற அமைப்புகள் அவை ஒவ்வொன்றின் அருகிலும் உள்ளன. அவை எந்தத் திசையில் சென்றாலும் ஒற்றுமையுடன் செல்கின்றன. அந்த ஜீவன்களின் தலைகளுக்கு மேல் மண்டலம் போன்ற ஒன்று விரிந்துள்ளது. இந்த மண்டலவிரிவின் மேலே ஒரு சிங்காசனம் உள்ளது, அதில் ‘யெகோவாவினுடைய மகிமையின் தோற்றத்திற்கு’ ஒப்பான ஒன்று உள்ளது.​—1:28, தி.மொ.

9முகங்குப்புற விழுந்துகிடந்த எசேக்கியேலை நோக்கி, “மனுஷகுமாரனே, உன் காலூன்றி நில்” என்று யெகோவா கூறுகிறார். பின்பு அவர் எசேக்கியேலை இஸ்ரவேலுக்கும் சுற்றிலுமுள்ள கலகக்கார தேசங்களுக்கும் தீர்க்கதரிசியாக நியமிக்கிறார். அவர்கள் செவிகொடுக்கிறார்களோ இல்லையோ அது முக்கியமல்ல. கர்த்தராகிய யெகோவாவின் ஒரு தீர்க்கதரிசி தங்கள் மத்தியில் இருந்தார் என்றாவது அவர்கள் அறிந்துகொள்வார்கள். எசேக்கியேல் ஒரு புத்தகச் சுருளை சாப்பிடும்படி யெகோவா செய்கிறார். அது அவருடைய வாயில் தேனைப்போல் இனிப்பாகிறது. “மனுஷகுமாரனே, உன்னை இஸ்ரவேல் வீட்டாருக்குக் காவலாளனாக வைத்தேன்” என்று அவர் எசேக்கியேலிடம் கூறுகிறார். (2:1; 3:17, தி.மொ.) இந்த எச்சரிக்கையை எசேக்கியேல் உண்மையுடன் தெரிவிக்க வேண்டும் அல்லது அவர் மரித்துவிடுவார்.

10எருசலேமின் முற்றுகையை நடித்துக் காட்டுதல் (4:1–7:27). ஒரு செங்கல் மீது எருசலேமின் படத்தைச் செதுக்கும்படி யெகோவா எசேக்கியேலிடம் சொல்கிறார். அதை முற்றுகையிடுவதைப் போல அவர் நடித்துக்காட்ட வேண்டும், இது இஸ்ரவேலுக்கு ஓர் அடையாளமாக இருக்கும். இதை வலியுறுத்த, அவர் அந்தச் செங்கலுக்கு முன்பாக 390 நாட்கள் இடது பக்கமாயும் 40 நாட்கள் வலது பக்கமாயும் படுக்க வேண்டும். அந்தச் சமயத்தில் அவர் குறைவாகவே சாப்பிட வேண்டும். சமைப்பதற்கான எரிபொருளை மாற்றும்படி எசேக்கியேல் யெகோவாவிடம் கெஞ்சிக் கேட்கிறார். இதிலிருந்து அவர் இந்தக் காட்சிகளை உண்மையிலேயே நடித்துக் காட்டினார் என்பது தெளிவாக உள்ளது.​—4:9-15.

11அந்த முற்றுகையின் முடிவு மிகவும் பயங்கரமாய் இருக்கும் என்பதை வருணிக்கும்படி எசேக்கியேல் தன் தலைமுடியையும் தாடியையும் சிரைத்துக்கொள்ளும்படி யெகோவா கூறுகிறார். முடியில் மூன்றிலொரு பங்கை அவர் எரிக்க வேண்டும், மூன்றிலொரு பங்கை பட்டயத்தால் துண்டுதுண்டாக வெட்ட வேண்டும், மூன்றிலொரு பங்கை காற்றில் சிதறும்படி தூவிவிட வேண்டும். இவ்வாறு முற்றுகையின் முடிவில், எருசலேமின் குடிமக்களில் சிலர் பஞ்சத்தாலும் கொள்ளைநோயாலும் பட்டயத்தாலும் சாவார்கள்; மீதிபேரோ தேசங்களுக்குள்ளே சிதறடிக்கப்படுவார்கள். யெகோவா எருசலேமை பாழாக்குவார். ஏன்? அதன் படுமோசமான வெறுக்கத்தக்க விக்கிரகாராதனையின் பொல்லாப்பு காரணமாகவே. செல்வத்தால் எந்த விடுதலையும் கிடைக்காது. யெகோவாவுடைய கோபத்தின் நாளிலே எருசலேமின் ஜனங்கள் தங்கள் வெள்ளியைத் தெருக்களில் எறிந்துவிடுவார்கள். அப்போது, “நானே யெகோவா என்று அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.”​—7:27, NW.

12விசுவாசதுரோக எருசலேமைப் பற்றிய எசேக்கியேலின் தரிசனம் (8:1–11:25). இப்போது பொ.ச.மு. 612. ஒரு தரிசனத்தில் எசேக்கியேல், தொலைவிலிருக்கும் எருசலேமுக்கு கொண்டு செல்லப்படுகிறார். அங்கே யெகோவாவின் ஆலயத்தில் அருவருக்கத்தக்க காரியங்கள் நடப்பதை அவர் பார்க்கிறார். ஆலய பிரகாரத்தில், யெகோவாவுக்கு எரிச்சலூட்டுகிற, வெறுக்கத்தக்க ஒரு சின்னம் உள்ளது. எசேக்கியேல் சுவரிலே துளையிட்டு உள்ளே செல்கிறார். அங்கே 70 மூப்பர்கள் சுவரில் செதுக்கப்பட்டுள்ள அருவருக்கத்தக்க மிருகங்கள் மற்றும் அருவருப்பான விக்கிரகங்களின் சித்திரங்களுக்கு முன்பாக விழுந்து வணங்குவதை அவர் பார்க்கிறார். “யெகோவா எங்களைப் பார்க்கிறதில்லை, யெகோவா தேசத்தைக் கைவிட்டார்” என அவர்கள் சாக்குப்போக்கு சொல்கிறார்கள். (8:12, தி.மொ.) வடக்கு வாசலில் இருக்கும் பெண்கள் புறமத தெய்வமாகிய தம்மூசுக்காக அழுகிறார்கள். இது மட்டுமா! ஆலயத்தின் வாசலிலேயே 25 ஆண்கள், ஆலயத்திற்கு தங்கள் முதுகைக் காட்டிக்கொண்டு சூரியனை வணங்குகின்றனர். அவர்கள் யெகோவாவை அவருடைய முகத்துக்கு முன்பாகவே நிந்திக்கின்றனர். அவர் நிச்சயமாக தம்முடைய உக்கிர கோபத்தில் நடவடிக்கை எடுப்பார்!

13இதோ பாருங்கள்! ஆறு ஆண்கள் தங்கள் கைகளில் தகர்க்கும் ஆயுதங்களுடன் வருகின்றனர். அவர்கள் மத்தியில் ஏழாவதாக ஒருவன் சணல்நூல் அங்கி தரித்து, கணக்கனுடைய மைக்கூட்டுடன் வருகிறான். சணல்நூல் அங்கி தரித்த இந்த மனிதனிடம் யெகோவா பேசுகிறார். அவன் நகரத்தின் நடுவிலே சென்று அதன் மத்தியில் செய்யப்படுகிற அருவருப்பான காரியங்கள் நிமித்தமாக பெருமூச்சுவிட்டு புலம்புகிற மனிதரின் நெற்றிகளில் ஓர் அடையாளத்தைப் போடும்படி சொல்கிறார். அடுத்ததாக அந்த ஆறு பேரிடமும், அவனைப் பின்தொடர்ந்து சென்று அடையாளம் போடப்படாத “முதியோரையும், வாலிபரையும், கன்னிகைகளையும், குழந்தைகளையும், ஸ்திரீகளையும்” தப்பவிடாமல் கொல்லும்படி கூறுகிறார். ஆலயத்திற்கு முன்னாலிருந்த மூப்பர்களிடமிருந்தே அவர்கள் தொடங்குகின்றனர். சணல்நூல் அங்கி தரித்தவன், “நீர் எனக்குக் கட்டளையிட்டபடியே செய்தேன்” என்று அறிக்கை செய்கிறான்.​—9:6, 11.

14கேருபீன்களுக்கு மேலாக எழும்பிய யெகோவாவின் மகிமையை எசேக்கியேல் மறுபடியும் காண்கிறார். ஒரு கேருபீன், சக்கரங்களுக்கு இடையிலிருந்து அக்கினி தழல்களை எடுத்து நீட்டுகிறார். சணல்நூல் அங்கி தரித்த மனிதன் அவற்றை எடுத்து நகரத்தின் மீது இறைக்கிறான். இஸ்ரவேலில் சிதறடிக்கப்பட்டவர்களை யெகோவா திரும்ப கூட்டிச்சேர்த்து அவர்களுக்கு புதிய ஆவியை அருளுவதாக வாக்குக் கொடுக்கிறார். ஆனால் எருசலேமிலுள்ள அந்தப் பொல்லாத பொய் வணக்கத்தாரைப் பற்றி என்ன? “அவர்கள் வழிகளின்படியே அவர்கள் தலைகளின்மேல் வரப்பண்ணுவேன்” என்று யெகோவா சொல்கிறார். (11:21, தி.மொ.) யெகோவாவின் மகிமை அந்த நகரத்திலிருந்து மேலெழும்புகிறது. அந்தத் தரிசனத்தை நாடுகடத்தப்பட்டிருந்த ஜனங்களிடம் எசேக்கியேல் கூறுகிறார்.

15எருசலேமைக் குறித்து பாபிலோனில் உரைக்கப்பட்ட கூடுதலான தீர்க்கதரிசனங்கள் (12:1–19:14). எசேக்கியேல் மற்றொரு அடையாளப்பூர்வ காட்சியை நடித்துக் காட்டுகிறார். பகல் நேரத்தின்போது, நாடுகடத்தப்படுகையில் எடுத்துச் செல்வதுபோல் அவர் தன் வீட்டிலிருந்து சாமான்களை வெளியே கொண்டு வருகிறார். பின்பு இரவு நேரத்தில் தன் முகத்தை மூடிக்கொண்டு நகரத்தின் மதிலில் ஒரு துவாரத்தின் வழியாக வெளியே செல்கிறார். இது ஓர் அடையாளம் என அவர் விளக்கி, “சிறைப்பட்டு அந்நிய தேசத்துக்குப் போவார்கள்” என்று கூறுகிறார். (12:11, தி.மொ.) தங்கள் சொந்த இச்சைகளின்படியே நடக்கிற அந்தத் தீர்க்கதரிசிகள் எவ்வளவு பெரிய முட்டாள்கள்! சமாதானம் இல்லாதிருந்தும் “சமாதானமென்று” அவர்கள் கூறுகிறார்கள். (13:10) நோவா, தானியேல், யோபு போன்றோர் எருசலேமில் இருந்தாலும்கூட அவர்கள் தங்களைத் தவிர வேறு ஒருவரையும் தப்புவிக்க முடியாது.

16அந்த நகரம் பயனற்ற ஒரு திராட்சை செடியைப்போல் உள்ளது. அதன் மரத்தை உபயோகித்து கம்பங்கள் செய்ய முடியாது, ஒரு சிறிய முளைக்கூட செய்ய முடியாதே! அது இரண்டு முனைகளிலும் எரிக்கப்பட்டு நடுவில் கருகிப்போய் உள்ளது, ஆகவே முற்றிலும் பயனற்றது. எருசலேம் எவ்வளவு உண்மையற்றதும் பயனற்றதுமாகிவிட்டது! கானானியரின் தேசத்தில் பிறந்து, கைவிடப்பட்ட ஒரு குழந்தையாக கிடக்கையில் யெகோவா அவளைத் தூக்கியெடுத்தார். அவர் அவளை வளர்த்து அவளோடு ஒரு திருமண உடன்படிக்கை செய்தார். அவளை அழகுள்ளவளாக்கி, “அரச பதவிக்குத் தகுதி”யாக்கினார். (16:13, NW) ஆனால் அவளோ தன்னைக் கடந்து சென்ற தேசங்களிடமாக கவனத்தைத் திருப்பி ஒரு வேசியானாள். அவர்களுடைய சிலைகளை வணங்கி தன் குமாரர்களை அக்கினியில் எரித்தாள். அவளுடைய கள்ளக் காதலர்களாகிய இந்தத் தேசங்களாலேயே அவளுக்கு அழிவு வரும். சோதோமும் சமாரியாவுமாகிய இவளுடைய சகோதரிகளைப் பார்க்கிலும் இவள் மோசமானவள். இருந்தபோதிலும், இரக்கமுள்ள கடவுளாகிய யெகோவா அவளுக்காக பிராயச்சித்தம் செய்து தம்முடைய உடன்படிக்கையின்படி அவளைத் திரும்ப நிலைநாட்டுவார்.

17யெகோவா இந்தத் தீர்க்கதரிசிக்கு ஒரு விடுகதையைக் கூறி பின்பு அதன் அர்த்தத்தையும் விளக்குகிறார். எருசலேம் எகிப்தின் உதவியை நாடியது எவ்வளவு பயனற்றது என்பதை இது சித்தரித்து காட்டுகிறது. ஒரு பெரிய கழுகு (நேபுகாத்நேச்சார்) வந்து உயரமான கேதுருவின் நுனிக்கிளையைப் (யோயாக்கீனை) பறித்து, அவனைப் பாபிலோனுக்கு கொண்டுசெல்கிறது. அந்த இடத்தில் அவனுக்கு பதிலாக ஒரு திராட்சை செடியை (சிதேக்கியாவை) நாட்டுகிறது. இந்தத் திராட்சை செடியோ தன் கிளைகளை மற்றொரு கழுகினிடமாக (எகிப்திடமாக) திருப்புகிறது. ஆனால் அது வெற்றி பெறுகிறதா? இல்லை, அது வேரோடு பிடுங்கப்படுகிறது! யெகோவாவே அந்தக் கேதுருவின் உயர்ந்த நுனிக் கிளையிலிருந்து இளம் கொழுந்து ஒன்றைப் பறித்து அதை உயர்ந்த, உன்னதமான ஒரு மலையில் நடுவார். அங்கே அது பெரும் கம்பீரமான கேதுருவாக வளரும். “சகலவித பட்சிஜாதிகளும்” தங்குவதற்கு இடமளிக்கும். யெகோவாவே இதைச் செய்தார் என எல்லாரும் அறிந்துகொள்ள வேண்டும்.​—17:23, 24.

18நாடுகடத்தப்பட்ட யூதர்கள், “பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின” என்ற பழமொழியை உபயோகித்ததற்காக யெகோவா அவர்களைக் கண்டனம் செய்கிறார். மாறாக “பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்.” (18:2, 4) நீதிமானோ தொடர்ந்து உயிர் வாழ்வான். துன்மார்க்கன் மரிப்பதைக்கூட யெகோவா விரும்புகிறதில்லை. அவன் தன் பொல்லாத வழிகளைவிட்டு திரும்பி பிழைப்பதைக் காணவே அவர் மிகவும் விரும்புகிறார். எகிப்தும் பாபிலோனும், யூதாவின் அரசர்களை இளம் சிங்கங்களைப் போல கண்ணி வைத்து பிடித்தன. ஆனால், அவர்களுடைய குரல் ‘இனி இஸ்ரவேலின் பர்வதங்களின்மேல் கேட்கப்படாது.’​—19:9.

19எருசலேமுக்கு எதிராக கண்டன அறிவிப்புகள் (20:1–23:49). இப்போது வருடம் பொ.ச.மு. 611. நாடுகடத்தப்பட்டவர்கள் மத்தியிலுள்ள மூப்பர்கள் யெகோவாவிடம் விசாரிப்பதற்காக மறுபடியும் எசேக்கியேலிடம் வருகின்றனர். அப்போது, இஸ்ரவேலின் கலகம் மற்றும் இழிவான விக்கிரக வணக்கம் பற்றிய நீண்ட சரித்திரத்தைக் கேட்கின்றனர். மேலும், அதற்கு எதிராக தண்டனைத் தீர்ப்பை நிறைவேற்றுவதற்காக யெகோவா ஒரு பட்டயத்தை ஏற்பாடு செய்திருப்பதையும் எசேக்கியேல் அவர்களிடம் கூறுகிறார். கடவுள் எருசலேமைக் “கவிழ்ப்பேன், கவிழ்ப்பேன், கவிழ்ப்பேன்” என்று கூறுகிறார். ஆனாலும் ஓர் அருமையான நம்பிக்கை உள்ளது! யெகோவா அந்த அரசதிகாரத்தை (“கிரீடத்தை”) “சட்டப்பூர்வ உரிமை” உடையவர் வரும் வரைக்கும் வைத்திருந்து அவருக்கே அதைக் கொடுப்பார். (21:26, 27, NW) ‘இரத்தஞ்சிந்தின நகரமாகிய’ எருசலேமில் செய்யப்படுகிற அருவருப்பான காரியங்களை எசேக்கியேல் திரும்ப கூறுகிறார். இஸ்ரவேல் வம்சம் ‘களிம்பைப்’ போலாயிற்று. அது எருசலேமுக்குள் கூட்டிச் சேர்க்கப்பட்டு சூளையில் உருக்குவதுபோல் அங்கே உருக்கப்பட போகிறது. (22:2, 18) இரண்டு சகோதரிகளைப் பற்றிய உவமையினால் சமாரியா (இஸ்ரவேல்) மற்றும் யூதாவின் உண்மையற்ற தன்மை விளக்கப்படுகிறது. அகோலாள் எனப்படும் சமாரியா அசீரியரிடம் வேசித்தனம் பண்ணி, தன் காதலர்களால் அழிக்கப்படுகிறாள். அகோலிபாள் எனப்படும் யூதா அதிலிருந்து ஒரு பாடத்தைக் கற்பதற்கு மாறாக அவளைப் பார்க்கிலும் மோசமாக நடந்து, முதலாவதாக அசீரியாவிடமும் பின்பு பாபிலோனிடமும் வேசித்தனம் பண்ணுகிறாள். அவள் முழுமையாக அழிக்கப்படுவாள். அப்போது, ‘சர்வலோக பேரரசரான கர்த்தராகிய யெகோவா நானே என்று ஜனங்களே நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.’​—23:49, NW.

20எருசலேமின் கடைசி முற்றுகை தொடங்குகிறது (24:1-27). இது பொ.ச.மு. 609. இந்தப் பத்தாம் மாதத்தின் பத்தாம் நாளிலே பாபிலோனின் அரசன் எருசலேமை முற்றுகையிட்டுள்ளான் என்று யெகோவா எசேக்கியேலுக்கு அறிவிக்கிறார். மதில் சூழப்பட்ட அந்த நகரத்தை அகன்ற வாயுடைய சமைக்கும் பானைக்கு அவர் ஒப்பிடுகிறார்; அதன் விசேஷித்த குடிமக்களே அதற்குள் இருக்கும் மாம்சம். அதைச் சூடாக்குங்கள்! எருசலேமின் அருவருக்கத்தக்க விக்கிரக வணக்கத்தின் அசுத்தத்தை எல்லாம் கொதிக்க வைத்து வெளியேற்றுங்கள்! அதே நாளில் எசேக்கியேலின் மனைவி மரிக்கிறாள்; ஆனால் யெகோவாவுக்கு கீழ்ப்படிபவராக அந்தத் தீர்க்கதரிசி துக்கம் கொண்டாடவில்லை. எருசலேமின் அழிவைக் கண்டு ஜனங்கள் துக்கம் கொண்டாடக்கூடாது என்பதற்கு இது ஓர் அடையாளம். ஏனெனில், யெகோவா யார் என்பதை அவர்கள் அறிவதற்காக அவரிடமிருந்தே வந்த ஓர் தண்டனைத் தீர்ப்பே இது. “அவர்களுடைய அலங்காரத்தின் மகிழ்ச்சி”யாக இருந்தது அழிக்கப்பட்டதை அறிவிக்க ஒருவனை யெகோவா தப்பிவரச் செய்வார். அவன் வந்துசேரும்வரை நாடுகடத்தப்பட்டவர்களிடம் எசேக்கியேல் மேலும் ஒன்றும் பேசக்கூடாது.​—24:25.

21தேசங்களுக்கு எதிரான தீர்க்கதரிசனங்கள் (25:1–32:32). எருசலேமின் வீழ்ச்சியைக் கண்டு சுற்றிலுமுள்ள தேசங்கள் களிகூர்ந்து, அதை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தி யூதாவின் கடவுளை நிந்திப்பார்கள் என்று யெகோவா முன்னறிவிக்கிறார். ஆனால் அவர்களுக்கும் தண்டனை நிச்சயம் உண்டு! அம்மோனும் மோவாபும் கிழக்கத்தியரிடம் ஒப்படைக்கப்படும். ஏதோம் முற்றிலும் பாழாக்கப்படும், பெலிஸ்தியரும் பயங்கரமான முறையில் பழிவாங்கப்படுவார்கள். “நான் அவர்களிடம் பழிவாங்கும்போது நானே யெகோவா என்று [அவர்கள் அனைவரும்] அறிந்து”கொள்ள வேண்டும் என்று யெகோவா சொல்கிறார்.​—25:17, தி.மொ.

22பிறகு தீருவை தனிப்பட்ட விதமாக குறிப்பிடுகிறார். தன் வளமான வியாபாரத்தால் பெருமிதம் கொண்டு கடலின் மத்தியில் அழகிய கப்பலைப்போல அமர்ந்திருக்கிறாள். ஆனால் சீக்கிரத்திலே அவள் தண்ணீரின் ஆழத்தில் உடைபட்டு கிடப்பாள். ‘நான் தேவன்’ என்று அதன் தலைவன் பெருமைபாராட்டுகிறான். (28:9) தீரு அரசனைப் பற்றி ஒரு புலம்பலை யெகோவா தம்முடைய தீர்க்கதரிசியின் மூலம் அறிவிக்கிறார்: அபிஷேகம் செய்யப்பட்ட அழகிய கேருபாக அவன் கடவுளின் தோட்டமாகிய ஏதேனில் இருந்தான்; ஆனால் அசுத்தமான அவனை யெகோவா தம்முடைய பர்வதத்திலிருந்து வெளியேற்றுவார்; அவன் நடுவிலிருந்து எழும் அக்கினியால் அவன் அழிக்கப்படுவான். ஏளனமாய் இகழும் சீதோன் மீதும் அழிவைக் கொண்டுவருவதன் மூலம் தாம் பரிசுத்தப்படுவார் என யெகோவா சொல்கிறார்.

23இப்பொழுது எகிப்திற்கும் அதன் பார்வோனுக்கும் விரோதமாக தன் முகத்தைத் திருப்பி அவர்களுக்கு எதிராக தீர்க்கதரிசனம் உரைக்கும்படி யெகோவா எசேக்கியேலிடம் கூறுகிறார். “என் [நைல்] நதி என்னுடையது, நான் அதை எனக்காக உண்டுபண்ணினேன்” என்று பார்வோன் தற்பெருமை பேசுகிறான். (29:3) பார்வோனும் அவனை நம்புகிற எகிப்தியரும்கூட யெகோவாவே கடவுள் என்று அறிந்துகொள்ள வேண்டும். அத்தேசம் 40 ஆண்டுகள் பாழாய் கிடக்கையில் இதை அவர்கள் கற்றுக்கொள்வார்கள். இங்கே, பொ.ச.மு. 591-ல் தனக்கு வெளிப்படுத்தப்பட்ட சில தகவல்களை எசேக்கியேல் இடையில் சேர்க்கிறார். நேபுகாத்நேச்சார் தீருவை முறியடித்து யெகோவாவுக்கு சேவை செய்ததற்கு கூலியாக அவர் அவனுக்கு எகிப்தை கொடுப்பார். (தீரு மக்கள் தங்கள் பெரும்பான்மையான செல்வத்துடன் தீவு நகரத்திற்கு தப்பியோடிவிட்டதால் தீருவில் நேபுகாத்நேச்சார் வெகு சொற்பமான கொள்ளைப் பொருட்களையே பெற முடிந்தது.) நேபுகாத்நேச்சார் எகிப்தின் பெருமையைக் கெடுப்பான் என்று எசேக்கியேல் ஒரு புலம்பலில் தெரிவிக்கிறார். அதன் மூலம் “நானே யெகோவா என்று அவர்களும் அறிந்துகொள்ள வேண்டும்.”​—32:15, NW.

24நாடுகடத்தப்பட்டோருக்கு காவற்காரன்; திரும்ப நிலைநாட்டப்படுதல் முன்னறிவிக்கப்படுகிறது (33:1–37:28). காவற்காரனாக எசேக்கியேலின் பொறுப்பை யெகோவா அவருக்கு திரும்ப நினைப்பூட்டுகிறார். “ஆண்டவருடைய வழி செம்மையானதல்ல” என்று ஜனங்கள் சொல்கிறார்கள். ஆகவே அவர்களுடைய வழியே தவறானது என்பதை எசேக்கியேல் அவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். (33:17) இப்போது பொ.ச.மு. 607-ன் பத்தாவது மாதத்தின் ஐந்தாம் தேதி. c எருசலேமிலிருந்து தப்பிவந்த ஒருவன் “நகரம் அழிக்கப்பட்டது” என்று தீர்க்கதரிசியிடம் கூறுகிறான். (33:21) இப்போதுதான் எசேக்கியேலால் நாடுகடத்தப்பட்டவர்களிடம் திரும்பவும் பேச முடியும். அவர், யூதாவை விடுவிப்பதைப் பற்றி அவர்கள் நினைப்பதெல்லாம் வீணே என்று சொல்கிறார். யெகோவாவின் வார்த்தையைக் கேட்பதற்காக அவர்கள் எசேக்கியேலிடம் வருகிறார்கள். என்றபோதிலும், அவர் அவர்களுக்கு வெறும் காதல் பாட்டுகளைப் பாடுபவன் போலவும் இனிய குரலுடன் கீதவாத்தியத்தை நன்றாய் வாசிப்பவன் போலவும் தோன்றுகிறார். அவர்கள் கொஞ்சம்கூட கவனம் செலுத்துகிறதில்லை. எனினும் அது நிறைவேறுகையில், தங்கள் மத்தியில் ஒரு தீர்க்கதரிசி இருந்தார் என அறிந்துகொள்வார்கள். மந்தையைக் கைவிட்டுவிட்டு, தங்கள் வயிற்றை நிரப்பிக்கொள்ளும் கள்ள மேய்ப்பர்களை எசேக்கியேல் கண்டனம் செய்கிறார். பரிபூரண மேய்ப்பராகிய யெகோவா, சிதறடிக்கப்பட்ட அந்தச் செம்மறியாடுகளைக் கூட்டிச் சேர்த்து இஸ்ரவேல் மலைகளின்மீது செழுமையான மேய்ச்சலுக்காக அவர்களைக் கொண்டுவருவார். அங்கே அவர்கள் மீது ஒரே மேய்ப்பனை, ‘தம்முடைய தாசனாகிய தாவீதையே’ எழும்பச் செய்வார். (34:23) யெகோவாவே அவர்களுடைய கடவுளாவார். அவர் ஒரு சமாதான உடன்படிக்கை செய்து அவர்கள்மீது ஆசீர்வாதத்தின் மழையைப் பொழிவார்.

25சேயீர் மலை (ஏதோம்) பாழ்க்கடிக்கப்படும் என எசேக்கியேல் மறுபடியும் தீர்க்கதரிசனம் உரைக்கிறார். ஆனாலும், இஸ்ரவேலின் பாழாக்கப்பட்ட இடங்கள் திரும்ப கட்டப்படும். ஏனெனில் யெகோவா தம்முடைய பரிசுத்த பெயரின் காரணமாக இரக்கம் காண்பிப்பார், தேசங்களுக்கு முன்பாக தம்முடைய பெயரை பரிசுத்தப்படுத்துவார். அவர் தம்முடைய ஜனங்களுக்கு புதிய இருதயத்தையும் புதிய ஆவியையும் கொடுப்பார். அவர்களுடைய தேசம் மறுபடியும் ‘ஏதேன் தோட்டத்தைப் போலாகும்.’ (36:35) உலர்ந்த எலும்புகள் நிறைந்த பள்ளத்தாக்கை ஒரு தரிசனத்தில் எசேக்கியேல் இப்போது காண்கிறார். இது இஸ்ரவேலை அடையாளமாக காட்டுகிறது. அந்த எலும்புகளைப் பார்த்து எசேக்கியேல் தீர்க்கதரிசனம் உரைக்கிறார். அவை அற்புதமாய் மாம்சமும் சுவாசமும் உயிரும் பெறுகின்றன. அதைப்போலவே பாபிலோனின் சிறையிருப்பு எனும் கல்லறைகளைத் திறந்து இஸ்ரவேலை அதன் தேசத்தில் யெகோவா திரும்ப நிலைநாட்டுவார். இஸ்ரவேலின் கோத்திரத்தாராகிய யூதாவையும் எப்பிராயீமையும் குறித்துக்காட்டும் இரண்டு கோல்களை எசேக்கியேல் எடுக்கிறார். அவருடைய கையில் அவை ஒரே கோலாகின்றன. இவ்வாறு, யெகோவா இஸ்ரவேலைத் திரும்ப நிலைநாட்டும்போது தம்முடைய தாசனாகிய ‘தாவீதின்’ கீழ் அவர்கள் ஒரு சமாதான உடன்படிக்கையில் ஒன்றாக இணைக்கப்படுவார்கள்.​—37:24.

26திரும்ப நிலைநாட்டப்பட்ட இஸ்ரவேலை மாகோகின் கோகு தாக்குகிறான் (38:1–39:29). அப்போது வேறொரு பக்கத்திலிருந்து படையெடுப்பு வரும்! யெகோவாவின் திரும்ப நிலைநாட்டப்பட்ட ஜனங்கள் மிகுதியான சமாதானத்தையும் செழுமையையும் அனுபவிப்பர். அது மாகோகின் கோகுவுடைய கவனத்தைக் கவருவதால் அவன் தீவிர ஆத்திரத்துடன் அவர்களைத் தாக்குவான். அவர்களை விழுங்கிவிடுவதற்காக அவன் வேகமாக பாய்ந்து வருவான். அப்போது யெகோவா தமது உக்கிர கோபத்தில் சீறியெழுவார். ஒவ்வொருவனுடைய பட்டயத்தையும் அவனவனுடைய சகோதரனுக்கு விரோதமாக திருப்புவார். பெருமழையையும், கல்மழையையும், அக்கினியையும், கந்தகத்தையும், கொள்ளைநோயையும் இரத்தம் சிந்துதலையும் அவர்கள் மீது கொண்டுவருவார். அப்போது யெகோவாவே “இஸ்ரவேலின் பரிசுத்தர்” என்று அறிந்துகொண்டவர்களாக அவர்கள் அழிவார்கள். (39:7, தி.மொ.) பின்னர் அவருடைய ஜனங்கள், சத்துருக்களின் நொறுக்கப்பட்ட போர் கருவிகளை விறகாக உபயோகித்து எரிப்பார்கள்; மரித்தவர்களின் எலும்புகளைக் “கோகின் ஜனத்திரள் பள்ளத்தாக்கு” என்பதிலே புதைப்பார்கள். (39:11, தி.மொ.) பிணம் தின்னும் பறவைகளும் மிருகங்களும் கொல்லப்பட்டவர்களின் மாம்சத்தைத் தின்று அவர்களுடைய இரத்தத்தைக் குடிக்கும். அது முதற்கொண்டு இஸ்ரவேல் பயப்படுத்துவாரில்லாமல் பாதுகாப்பாய் குடியிருக்கும். யெகோவா தம்முடைய ஆவியை அவர்கள் மீது ஊற்றுவார்.

27ஆலயம் பற்றி எசேக்கியேல் கண்ட தரிசனம் (40:1–48:35). இப்போது பொ.ச.மு. 593-ம் ஆண்டுக்கு வருகிறோம். சாலொமோனின் ஆலயம் அழிக்கப்பட்டு 14 ஆண்டுகள் ஆகிவிட்டன. நாடுகடத்தப்பட்டவர்கள் மத்தியிலிருந்த மனந்திரும்பினவர்களுக்கு ஊக்கமூட்டுதலும் நம்பிக்கையும் இப்போது தேவைப்பட்டன. யெகோவா எசேக்கியேலை ஒரு தரிசனத்தில் இஸ்ரவேல் தேசத்துக்கு கொண்டுசென்று மிக உயரமான ஒரு மலைமீது அவரை நிறுத்துகிறார். அங்கு ஓர் ஆலயம் இருப்பதையும் ‘தெற்காக ஒரு நகரம் கட்டப்பட்டிருப்பதையும்’ அவர் தரிசனத்தில் காண்கிறார். “நீ காண்பதையெல்லாம் இஸ்ரவேல் வம்சத்தாருக்குத் தெரிவி” என ஒரு தேவதூதன் அவரிடம் கட்டளையிடுகிறார். (40:2, 4) பின்பு, அந்த ஆலயம் மற்றும் அதன் பிரகாரங்களின் எல்லா நுட்ப விவரங்களையும் அவர் எசேக்கியேலுக்கு காட்டுகிறார். அதன் மதில்கள், வாசல்கள், காவல் அறைகள், சாப்பாட்டு அறைகள், ஆலயம், அதன் பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம் ஆகியவற்றை அவர் அளக்கிறார். பிறகு எசேக்கியேலைக் கிழக்கு வாசலுக்கு கூட்டிச்செல்கிறார். அப்போது, “இதோ, இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை கீழ்த்திசையிலிருந்து வந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்தின் இரைச்சலைப்போல் இருந்தது; அவருடைய மகிமையினால் பூமி பிரகாசித்தது.” (43:2) அந்த வீடு (அல்லது ஆலயம்); பலிபீடமும் அதன் பலிகளும்; ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் அதிபதிக்குமான உரிமைகளும் கடமைகளும்; தேசத்தைப் பகிர்ந்தளிப்பது ஆகியவற்றைப் பற்றி இந்தத் தேவதூதர் எசேக்கியேலுக்கு முழுமையாக போதிக்கிறார்.

28அந்தத் தேவதூதன் எசேக்கியேலை மறுபடியும் ஆலயத்தின் வாசலுக்கு அழைத்து வருகிறார். அங்கே, அந்த ஆலய வாசற்படியிலிருந்து தண்ணீர் புறப்பட்டு கிழக்கு நோக்கி பலிபீடத்தின் தென்புறமாய் ஓடுவதைத் தீர்க்கதரிசி காண்கிறார். அது சிறு தாரையாக ஆரம்பித்து பெரும் நதியாக ஆகும் வரை பெருகிக்கொண்டே போகிறது. பின்பு அது சவக்கடலுக்கு சென்று சேர்கிறது. அங்கே மரித்திருந்த மீன்கள் உயிரடைகின்றன, மீன்பிடிக்கும் தொழில் செழித்தோங்குகிறது. அந்த நதியின் இருபுறங்களிலும் உள்ள மரங்கள் ஜனங்களுக்கு உணவையும் ஆரோக்கியத்தையும் அளிக்கின்றன. பின்பு இந்தத் தரிசனம், 12 கோத்திரங்களின் சுதந்தரங்களையும் பட்டியலிடுகிறது; அங்கு தங்கியிருக்கும் அன்னியர்களும் அதிபதியும்கூட இதில் சேர்க்கப்படுகின்றனர். மேலும், தெற்கேயுள்ள அந்தப் பரிசுத்த நகரத்தை அது விவரிக்கிறது; அந்நகரின் 12 கதவுகளுக்கும் இஸ்ரவேல் கோத்திரங்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இனி இந்த நகரம், “யெகோவாதாமே அங்கிருக்கிறார்” என்ற மகிமைவாய்ந்த பெயரால் அழைக்கப்படும்.​—48:35, NW.

ஏன் பயனுள்ளது

29யெகோவா எசேக்கியேலிடம் தெரிவித்த அறிவிப்புகள், தரிசனங்கள், வாக்குறுதிகள் எல்லாவற்றையுமே நாடுகடத்தப்பட்டிருந்த யூதர்களிடம் அவர் உண்மையுடன் கூறினார். பலர் அந்தத் தீர்க்கதரிசியைக் கேலிசெய்து ஏளனமாக பேசினபோதிலும் சிலர் நம்பினர். இவர்கள் வெகுவாய் பயனடைந்தனர். திரும்ப நிலைநாட்டுதல் பற்றிய வாக்குறுதிகள் அவர்களைப் பலப்படுத்தின. சிறைப்படுத்தி செல்லப்பட்ட மற்ற தேசத்தாரைப் போலில்லாமல் யூதர்கள் தங்களைச் சிறைப்படுத்திய தேசத்தாரோடு ஒன்றாக கலந்துவிடவில்லை; மாறாக ஒரு தனிப்பட்ட தேசமாக தங்கள் அடையாளத்தைக் காத்துக்கொண்டனர். யெகோவா முன்னறிவித்தபடியே, பொ.ச.மு. 537-ல் மீதியான சிலரைத் திரும்ப நிலைநாட்டினார். (எசே. 28:25, 26; 39:21-28; எஸ்றா 2:1; 3:1) அவர்கள் யெகோவாவின் ஆலயத்தைத் திரும்பக் கட்டி உண்மையான வணக்கத்தை மீண்டும் நிலைநாட்டினர்.

30எசேக்கியேல் புத்தகத்தில் காணப்படும் நியமங்கள் இன்று நமக்கும் மதிப்புமிக்கவை. விசுவாச துரோகம், விக்கிரக வணக்கம் ஆகியவற்றோடு கலகமும் சேரும்போது யெகோவாவின் தயவை நாம் நிச்சயம் இழந்துபோவோம். (எசே. 6:1-7; 12:2-4, 11-16) ஒவ்வொருவருடைய பாவத்திற்கும் அவரவரே பதிலளிக்க வேண்டும். ஆனால் தவறான போக்கைவிட்டு திரும்புகிறவனை யெகோவா மன்னிப்பார். அவன் இரக்கம் பெற்று தொடர்ந்து வாழ்வான். (18:20-22) கடவுளுடைய ஊழியர்கள் எசேக்கியேலைப் போல் உண்மையுள்ள காவற்காரராக சேவிக்க வேண்டும். நம் நியமிப்பு கடினமாக இருந்தாலும் நாம் கேலிசெய்து நிந்திக்கப்பட்டாலும்கூட உண்மையாய் இருக்க வேண்டும். எச்சரிப்பின் செய்தியை பொல்லாதவர்களிடம் தவறாமல் அறிவிக்க வேண்டும், இல்லையென்றால் அவர்களுடைய இரத்தப்பழி நம்மீது வந்துசேரும். (3:17; 33:1-9) கடவுளுடைய ஜனங்களின் மேய்ப்பர்கள் மந்தையைக் கவனிக்க வேண்டிய பெரும் பொறுப்பைப் பெற்றிருக்கின்றனர்.​—34:2-10.

31எசேக்கியேல் புத்தகத்தில், மேசியாவைப் பற்றிய தீர்க்கதரிசனங்களே அதிக குறிப்பிடத்தக்கவை ஆகும். அவரே தாவீதின் சிங்காசனத்திற்கு “சட்டப்பூர்வ உரிமை உடையவர்,” (NW) அவருக்கே அது கொடுக்கப்படும் என்று அது குறிப்பிடுகிறது. அவர் இரண்டு இடங்களில் “என் தாசனாகிய தாவீது” எனவும் “மேய்ப்பன்,” “ராஜா,” “அதிபதி” எனவும் அழைக்கப்படுகிறார். (21:27; 34:23, 24; 37:24, 25) தாவீது மரித்து வெகு காலம் ஆகிவிட்டிருந்ததது. எனவே, தாவீதிற்கு குமாரனும் அவருக்குக் கர்த்தராகவும் இருக்கப்போகிறவரைக் குறித்தே எசேக்கியேல் இங்கு பேசுகிறார் என்பது தெளிவாகிறது. (சங். 110:1; மத். 22:42-45) யெகோவா உன்னதத்தில் ஓர் இளம் கிளையை நடுவார் என ஏசாயா கூறியதைப் போலவே எசேக்கியேலும் கூறுகிறார்.​—எசே. 17:22-24; ஏசா. 11:1-3.

32ஆலயம் பற்றி எசேக்கியேல் கண்ட தரிசனத்தை “எருசலேமாகிய பரிசுத்த நகரம்” பற்றிய வெளிப்படுத்துதல் தரிசனத்தோடு ஒப்பிட்டு பார்ப்பது ஆர்வத்தைத் தூண்டுகிறது. (வெளி. 21:10) அவற்றின் மத்தியில் சில வேறுபாடுகள் இருப்பது உண்மையே. உதாரணமாக, எசேக்கியேல் கண்ட ஆலயம் தனித்தும் நகரத்திற்கு வடக்கேயும் உள்ளது. மாறாக, யெகோவாவே வெளிப்படுத்துதலில் வரும் நகரத்தின் ஆலயமாக இருக்கிறார். எனினும், இரண்டிலும் ஜீவநதி புறப்பட்டு ஓடுகிறது, மாதந்தோறும் கனிகளையும் ஆரோக்கியமடைய உதவும் இலைகளையும் கொண்ட மரங்கள் இருக்கின்றன. மேலும், யெகோவாவின் மகிமை அங்கே தங்கியுள்ளது. யெகோவாவின் அரசதிகாரத்தையும் தமக்கு பரிசுத்த சேவை செய்வோரை மீட்பதற்கான அவருடைய ஏற்பாட்டையும் நன்றியோடு மதித்துணர இந்த ஒவ்வொரு தரிசனமும் நமக்கு பெரிதும் உதவுகின்றன.​—எசே. 43:4, 5வெளி. 21:11; எசே. 47:1, 8, 9, 12வெளி. 22:1-3.

33யெகோவா பரிசுத்தர் என்பதை எசேக்கியேல் புத்தகம் வலியுறுத்துகிறது. யெகோவாவின் பெயர் பரிசுத்தப்படுவதே வேறு எதைக் காட்டிலும் அதிக முக்கியமானது என்று அது காண்பிக்கிறது. “‘நான் நிச்சயமாகவே என் மகத்தான பெயரைப் பரிசுத்தப்படுத்துவேன், . . . நானே யெகோவா என்று தேசங்கள் அறிந்துகொள்ள வேண்டும்’ என்று ஈடற்ற பேரரசராகிய யெகோவா உரைக்கிறார்.” தீர்க்கதரிசனம் காட்டுகிறபடி, மாகோகின் கோகு உட்பட அந்தப் பெயரை நிந்திக்கிற அனைவரையும் அழிப்பதன் மூலம் அவர் தம்முடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துவார். ஆகவே ஏற்கத்தக்க வணக்கத்திற்கான யெகோவாவுடைய தகுதிகளைக் கடைப்பிடித்து இப்பொழுதே தங்கள் வாழ்க்கையில் அவரைப் பரிசுத்தப்படுத்துவோர் யாவரும் ஞானமுள்ளவர்கள். அவருடைய ஆலயத்திலிருந்து ஓடிவரும் நதியின் மூலம் இவர்கள் ஆரோக்கியத்தையும் நித்திய ஜீவனையும் அடைவார்கள். ஒப்பற்ற மகிமையும் மேன்மையான அழகும் நிறைந்த அந்த நகரம், “யெகோவாவே அங்கிருக்கிறார்” என்று அழைக்கப்படும்!​—எசே. 36:23; 38:16; 48:35, NW.

[அடிக்குறிப்புகள்]

a வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 2, பக்கங்கள் 531, 1136.

b வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கங்கள் 681-2.

c எருசலேமிலிருந்து தப்பிவந்தவன் 12-வது ஆண்டில் வந்துசேர்ந்தான் என மாசோரெட்டிக் மூலவாக்கியம் சொல்கிறது. மற்ற கையெழுத்துப் பிரதிகளோ “பதினோராவது ஆண்டு” என்று கூறுகின்றன. லாம்சா, மொஃபட் மொழிபெயர்ப்புகளிலும் அன் அமெரிக்கன் மொழிபெயர்ப்பு என்பதிலும்கூட பதினோராவது ஆண்டு என்றே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

[கேள்விகள்]

1. பாபிலோனில் நாடுகடத்தப்பட்டவர்களின் சூழ்நிலைமைகள் எப்படி இருந்தன, என்ன புதிய சோதனைகளை அவர்கள் எதிர்ப்பட்டனர்?

2. (அ) எருசலேமின் அழிவுக்கு முற்பட்ட நெருக்கடியான ஆண்டுகளின்போது எந்த மூன்று தீர்க்கதரிசிகள் முதன்மையானோராக இருந்தனர்? (ஆ) தனிச்சிறப்புமிக்க விதத்தில் எசேக்கியேல் எவ்வாறு அழைக்கப்படுகிறார், அவருடைய பெயரின் அர்த்தம் என்ன? (இ) எந்த ஆண்டுகளின்போது எசேக்கியேல் தீர்க்கதரிசனம் உரைத்தார், அவருடைய வாழ்க்கை மற்றும் மரணம் பற்றி என்ன அறியப்பட்டுள்ளது?

3. எசேக்கியேல்தான் இதை எழுதினார் என்பதைப் பற்றியும் இப்புத்தகத்தின் நம்பகத் தன்மை, பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலில் இது இடம் பெறுவது பற்றியும் என்ன சொல்லப்படலாம்?

4. எசேக்கியேலின் தீர்க்கதரிசனங்கள் என்ன வியப்பூட்டும் நிறைவேற்றங்களைக் கண்டன?

5. எசேக்கியேலின் ஆரம்பகால தீர்க்கதரிசனங்களுக்கு யூதர்கள் எவ்வாறு பிரதிபலித்தனர்?

6. எசேக்கியேலின் பிற்கால தீர்க்கதரிசனங்கள் எதை வலியுறுத்தின, யெகோவாவின் பெயர் பரிசுத்தப்படுவது எவ்வாறு மேம்படுத்திக் காட்டப்படுகிறது?

7. எசேக்கியேலின் புத்தகம் எந்த மூன்று பகுதிகளாக இயல்பாகவே பிரிகிறது?

8. எசேக்கியேல் தன்னுடைய முதல் தரிசனத்தில் எதைப் பார்க்கிறார்?

9. எசேக்கியேலின் நியமிப்பில் என்ன உட்பட்டுள்ளது?

10. இஸ்ரவேலுக்கு அடையாளமாக எசேக்கியேல் எதை நடித்துக் காட்டுகிறார்?

11. (அ) முற்றுகையின் முடிவு மிகவும் பயங்கரமாய் இருக்கும் என்பதை எசேக்கியேல் எவ்வாறு வருணிக்கிறார்? (ஆ) ஏன் விடுதலை கிடைக்காது?

12. விசுவாசதுரோக எருசலேம் பற்றிய தரிசனத்தில் அருவருக்கத்தக்க என்ன காரியங்களை எசேக்கியேல் பார்க்கிறார்?

13. சணல்நூல் அங்கி தரித்த மனிதனும் ஆயுதங்களை வைத்திருக்கும் ஆறு பேரும் என்ன கட்டளைகளை நிறைவேற்றுகின்றனர்?

14. யெகோவாவின் மகிமையையும் அவருடைய நியாயத்தீர்ப்புகளையும் பற்றி இந்தத் தரிசனம் முடிவாக எதைக் காட்டுகிறது?

15. எருசலேமின் குடிமக்கள் நிச்சயமாய் சிறைப்பட்டு போவார்கள் என்பதைக் கூடுதலான என்ன அடையாளத்தின் மூலம் எசேக்கியேல் விளக்குகிறார்?

16. எருசலேம் பயனற்றது என்பது எவ்வாறு சித்தரிக்கப்படுகிறது, எனினும் அது ஏன் திரும்ப நிலைநாட்டப்படும்?

17. கழுகு, திராட்சை செடி பற்றிய விடுகதை மூலம் யெகோவா எதை விளக்குகிறார்?

18. (அ) நாடுகடத்தப்பட்ட யூதர்களைக் கண்டனம் செய்கையில் என்ன நியமங்களை யெகோவா கூறுகிறார்? (ஆ) யூதாவின் அரசர்களுக்கு என்ன நியாயத்தீர்ப்பு காத்திருக்கிறது?

19. (அ) அழிவு ஏற்பட்டபோதிலும் என்ன நம்பிக்கையை எசேக்கியேல் தெரிவிக்கிறார்? (ஆ) இஸ்ரவேல் மற்றும் யூதாவின் உண்மையற்ற தன்மையையும் அதன் விளைவையும் அவர் எவ்வாறு உவமையால் விளக்குகிறார்?

20. முற்றுகையிடப்பட்ட எருசலேம் எதற்கு ஒப்பிடப்படுகிறது, அதன்பேரில் தம்முடைய நியாயத்தீர்ப்பைப் பற்றி என்ன வல்லமை வாய்ந்த அடையாளத்தை யெகோவா கொடுக்கிறார்?

21. யெகோவாவையும் அவருடைய பழிவாங்குதலையும் தேசங்கள் எவ்வாறு அறிந்துகொள்ள வேண்டும்?

22. தீரு எவ்வாறு தனிப்பட்ட விதமாக குறிப்பிடப்படுகிறது, சீதோன் சம்பந்தமாக யெகோவா எவ்வாறு பரிசுத்தப்படுவார்?

23. எகிப்து எதை அறிந்துகொள்ள வேண்டும், இது எவ்வாறு நிறைவேறும்?

24. (அ) காவற்காரனாக எசேக்கியேலின் பொறுப்பு என்ன? (ஆ) எருசலேம் வீழ்ந்ததைப் பற்றிய செய்தியைப் பெற்ற பிறகு, நாடுகடத்தப்பட்டவர்களிடம் என்ன செய்தியை எசேக்கியேல் அறிவிக்கிறார்? (இ) 34-ம் அதிகாரத்தில் என்ன ஆசீர்வாதம் பற்றிய வாக்கு சிறப்பித்துக் காட்டப்படுகிறது?

25. (அ) யெகோவா ஏன், எவ்வாறு அந்தத் தேசத்தை ஏதேன் போலாக்குவார்? (ஆ) உலர்ந்த எலும்புகள் மற்றும் இரண்டு கோல்கள் பற்றிய தரிசனங்கள் எதை விளக்குகின்றன?

26. மாகோகின் கோகு ஏன் தாக்குகிறான், அதன் முடிவு என்ன?

27. தரிசனத்தில் இஸ்ரவேல் தேசத்திற்கு கொண்டு செல்லப்படுகையில் எசேக்கியேல் என்ன காண்கிறார், கடவுளுடைய மகிமை எவ்வாறு தோன்றுகிறது?

28. ஆலயத்திலிருந்து ஓடும் நதியைப் பற்றி எசேக்கியேலின் தரிசனம் என்ன காட்டுகிறது, நகரத்தையும் அதன் பெயரையும் குறித்து என்ன வெளிப்படுத்தப்படுகிறது?

29. நாடுகடத்தப்பட்ட யூதர்கள் எசேக்கியேலின் தீர்க்கதரிசனத்தால் எவ்வாறு பயனடைந்தனர்?

30. எசேக்கியேலில் காணப்படும் என்ன நியமங்கள் இன்று நமக்கும் மதிப்புமிக்கவை?

31. எசேக்கியேலின் என்ன தீர்க்கதரிசனங்கள் மேசியாவின் வருகை பற்றி முன்னறிவிக்கின்றன?

32. ஆலயம் பற்றி எசேக்கியேல் கண்ட தரிசனத்தையும் “பரிசுத்த நகரம்” பற்றிய வெளிப்படுத்துதலின் தரிசனத்தையும் ஒப்பிடும்போது எவ்வாறுள்ளது?

33. எசேக்கியேல் புத்தகம் எதை வலியுறுத்துகிறது, இப்பொழுதே யெகோவாவைத் தங்கள் வாழ்க்கையில் பரிசுத்தப்படுத்துவோருக்கு என்ன பலன்?