Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் புத்தக எண் 27—தானியேல்

பைபிள் புத்தக எண் 27—தானியேல்

பைபிள் புத்தக எண் 27—தானியேல்

எழுத்தாளர்: தானியேல்

எழுதப்பட்ட இடம்: பாபிலோன்

எழுதி முடிக்கப்பட்டது: ஏ. பொ.ச.மு. 536

காலப்பகுதி: பொ.ச.மு. 618-ஏ. 536

நம்முடைய நாளில் பூமியின் தேசங்கள் எல்லாம் அழிவின் விளிம்பில் நிற்கின்றன. இந்தச் சமயத்தில், பெரும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்க்கதரிசன செய்திகளை தானியேல் புத்தகம் நம் கவனத்திற்கு கொண்டுவருகிறது. பைபிள் புத்தகங்களாகிய சாமுவேல், இராஜாக்கள், நாளாகமங்கள் ஆகியவை கடவுளுடைய ராஜ்யத்திற்கு அடையாளமாயிருந்த ராஜ்யம் (தாவீதின் அரச வம்சம்) பற்றிய சரித்திர பதிவுகளை அளிக்கின்றன. இவை கண்கண்ட சாட்சிகளின் பதிவுகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டவை. மாறாக தானியேல் புத்தகமோ உலக தேசங்களின் மேல் கவனத்தை ஊன்ற வைக்கிறது. மேலும் தானியேலின் காலத்திலிருந்து “கடைசி நாட்கள்” வரை, அதிகாரத்தைக் கைப்பற்ற பெரும் அரச வம்சங்களிடையே தொடர்ந்து நிகழும் போராட்டத்தை காட்சிகளாக அளிக்கிறது. இது, முன்னதாகவே எழுதி வைக்கப்பட்ட உலக சரித்திரம். கவனத்தைக் கவரும் உச்சக்கட்டமாக, “கடைசி நாட்களில்” நிகழவிருப்பதை இது சுட்டிக்காட்டுகிறது. “உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்[து],” முடிவில் “மனுஷகுமாரனுடைய சாயலான” மேசியாவும் பிரபுவுமாகிய கிறிஸ்து இயேசுவுக்கு அதைக் கொடுக்கிறார் என்பதை நேபுகாத்நேச்சாரைப் போலவே, இன்றைய தேசங்களும் கடினமான முறையில் கற்றுக்கொள்ள வேண்டும். (தானி. 12:4; 10:14; 4:25; 7:13, 14; 9:25; யோவா. 3:13-16) தேவாவியால் ஏவப்பட்ட புத்தகமாகிய தானியேலின் தீர்க்கதரிசன நிறைவேற்றங்களுக்கு கூர்ந்து கவனம் செலுத்துங்கள். அப்போதுதான், தீர்க்கதரிசனம் உரைக்க யெகோவாவுக்கு இருக்கும் வல்லமையையும் தம்முடைய ஜனங்களுக்கு பாதுகாப்பையும் ஆசீர்வாதத்தையும் அளிப்பதற்கான அவருடைய வாக்குறுதிகளையும் நாம் இன்னும் முழுமையாக மதித்துணருவோம்.​—2 பே. 1:19.

2இந்தப் புத்தகத்தை எழுதியவரின் பெயரே இதற்கு கொடுக்கப்பட்டுள்ளது. “தானியேல்” (எபிரெயுவில் தானியீல் [Da·ni·yeʼlʹ]) என்பதற்கு “கடவுளே என் நியாயாதிபதி” என்று அர்த்தம். அதே காலத்தில் வாழ்ந்த எசேக்கியேல், நோவாவுடனும் யோபுவுடனும் தானியேலின் பெயரைக் குறிப்பிடுவதால் அவர் உண்மையிலேயே வாழ்ந்தவர் என உறுதிசெய்கிறார். (எசே. 14:14, 20; 28:3) தானியேல் புத்தகம், “யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் அரசாண்ட மூன்றாம் வருஷத்திலே” எழுத ஆரம்பிக்கப்பட்டது என்று அவர் குறிப்பிடுகிறார். இது யோயாக்கீம் நேபுகாத்நேச்சாருக்கு கப்பம் கட்டும் அரசனாக சேவித்த மூன்றாம் ஆண்டாகிய பொ.ச.மு. 618 ஆகும். a தானியேலின் தரிசனங்கள் கோரேசின் மூன்றாம் ஆண்டாகிய ஏறக்குறைய பொ.ச.மு. 536 வரை தொடர்ந்தன. (தானி. 1:1; 2:1; 10:1, 4) தானியேல் தன் வாழ்க்கையின் ஆரம்ப காலங்களில் கடவுளுடைய ராஜ்யமான யூதாவில் வாழ்ந்தார். பின்னர் பருவ வயது அரச குமாரனாக ராஜ வம்சத்தைச் சேர்ந்த யூதேய தோழர்களுடன் பாபிலோனுக்கு கொண்டுசெல்லப்பட்டார்; பைபிள் சரித்திரத்தின் மூன்றாம் உலக வல்லரசான பாபிலோனின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் தன் வாழ்க்கையில் கண்டார். அதற்கு பிறகு நான்காம் உலக வல்லரசான மேதிய-பெர்சியாவின் காலத்திலும் அங்கு அரசாங்க அதிகாரியாக தொடர்ந்து சேவித்தார். ஆகவே, எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்கள் நிகழ்ந்த காலப்பகுதியில் தானியேல் வாழ்ந்திருக்கிறார்! அவர் ஏறக்குறைய நூறு வயதுவரை வாழ்ந்திருக்க வேண்டும்.

3தானியேல் புத்தகம், தேவாவியால் ஏவப்பட்ட வேதாகமத்தின் யூத புத்தகப் பட்டியலில் எப்போதும் இடம் பெற்றிருந்தது. சவக்கடல் சுருள்களில் கிடைத்த பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலின் மற்ற புத்தகங்களோடுகூட தானியேல் புத்தகத்தின் பகுதிகளும் காணப்பட்டன. அவற்றில் சில பொ.ச.மு. முதல் நூற்றாண்டின் முதல் பகுதியைச் சேர்ந்தவை. எனினும், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் காணப்படும் இப்புத்தகத்தின் மேற்கோள்களே இதன் நம்பகத் தன்மைக்கு அதிமுக்கியமான அத்தாட்சி. ‘இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவு’ பற்றிய தமது தீர்க்கதரிசனத்தில் இயேசு தானியேலை பெயர் சொல்லி குறிப்பிடுகிறார்; அதில் இந்தப் புத்தகத்திலிருந்து பல மேற்கோள்களையும் எடுத்துக் கூறுகிறார்.​—மத். 24:3; இவற்றையும் காண்க: தானி. 9:27; 11:31; மேலும் 12:11மத். 24:15-ம் மாற்கு 13:14-ம்; தானி. 12:1மத். 24:21; தானி. 7:13, 14மத். 24:30.

4பைபிள் விமர்சகர்கள் சிலர் தானியேல் புத்தகத்தின் சரித்திரப்பூர்வ தன்மை பற்றி கேள்வி எழுப்பியுள்ளனர். என்றபோதிலும், பல ஆண்டுகளாக செய்யப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சிகள் அவர்களுடைய கருத்துக்கள் முற்றிலும் பொய் என நிரூபித்துள்ளன. உதாரணமாக, நபோனிடஸ் அரசனாயிருந்ததாக சொல்லப்பட்ட சமயத்தில் பெல்ஷாத்சார் பாபிலோனில் அரசனாக இருந்தார் என தானியேல் கூறியதை விமர்சகர்கள் ஏளனமாக பேசினர். (தானி. 5:1) ஆனால் தொல்பொருள் ஆராய்ச்சியானது, பெல்ஷாத்சார் உண்மையில் வாழ்ந்தவரே என்றும் பாபிலோனிய பேரரசின் கடைசி ஆண்டுகளில் அவரும் நபோனிடஸும் உடன் ஆட்சியாளர்களாக இருந்தனர் என்றும் எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி இப்போது நிரூபித்துள்ளது. உதாரணமாக, “நபோனிடஸின் வசன விவரம்” என அழைக்கப்படும் ஆப்புவடிவ எழுத்துக்கள் கொண்ட ஓர் பூர்வீக ஏடு, பெல்ஷாத்சார் பாபிலோனில் அரசனாக அதிகாரம் செலுத்தியதை உறுதிப்படுத்துகிறது. அதோடு அவரும் நபோனிடஸும் எவ்வாறு உடன் அரசர்களானார்கள் எனவும் அது விளக்குகிறது. b பெல்ஷாத்சார் அரசனுக்குரிய கடமைகளை நிறைவேற்றினார் என்பதை மற்ற ஆப்புவடிவ எழுத்து அத்தாட்சிகளும் ஆதரிக்கின்றன. நபோனிடஸின் 12-வது ஆண்டு என தேதியிடப்பட்ட ஒரு களிமண் பலகையில் அரசனாகிய நபோனிடஸின் பெயரிலும் அரச குமாரனாகிய பெல்ஷாத்சாரின் பெயரிலும் செய்யப்பட்ட ஒரு ஆணை அடங்கியுள்ளது. இவ்வாறு பெல்ஷாத்சார் தன் தகப்பனுடன் சம அந்தஸ்தைப் பெற்றிருந்தார் என அது காட்டுகிறது. c அதோடு, சுவரில் எழுதப்பட்ட கையெழுத்தின் அர்த்தத்தைக் கூறினால் பெல்ஷாத்சார் தானியேலை “ராஜ்யத்திலே மூன்றாம் அதிபதியாய்” ஆக்குவதாக ஏன் கூறினார் என்பதைப் புரிந்துகொள்ளவும் இது நமக்கு உதவுகிறது. நபோனிடஸே முதல் ஆட்சியாளர், பெல்ஷாத்சார் இரண்டாவது, எனவே தானியேல் மூன்றாவது ஆட்சியாளராக அறிவிக்கப்படுவார். (5:16, 29) ஓர் ஆராய்ச்சியாளர் இவ்வாறு கூறுகிறார்: “பெல்ஷாத்சாரைக் குறிப்பிடும் ஆப்புவடிவ எழுத்துக்கள், அவர் வகித்த ஸ்தானத்தைப் பற்றிய ஏராளமான தகவலை அளித்திருப்பதால் சரித்திரத்தில் அவருடைய இடம் சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாகியுள்ளது. பெல்ஷாத்சார் பதவியிலும் கீர்த்தியிலும் நபோனிடஸுக்கு சமமாக இருந்தார் என காட்டும் ஏடுகள் பல உள்ளன. கடைசி நியோ-பாபிலோனிய அரசாட்சியின் பெரும்பகுதியில் இரட்டை ஆட்சி நடந்தது உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளது. நபோனிடஸ், அரேபியாவில் தீமாவிலிருந்த தன் அரசவையிலிருந்து எல்லையற்ற அதிகாரம் செலுத்தினார். அதே சமயம் பெல்ஷாத்சார் பாபிலோனை மையமாக கொண்டு தாய்நாட்டில் உடன் அரசராக ஆட்சி செய்தார். பெல்ஷாத்சார் தாழ்ந்த நிலையிலிருந்த ஓர் அரச பிரதிநிதி அல்ல என்பது தெளிவாக உள்ளது; அவரிடம் ‘அரசதிகாரம்’ ஒப்படைக்கப்பட்டிருந்தது.” d

5அக்கினி சூளை (அதி. 3) பற்றிய தானியேலின் விவரத்தை ஒரு கற்பனைக்கதை என கூறி ஒதுக்கித்தள்ள சிலர் முயன்றிருக்கின்றனர். ஆனால் பழைய பாபிலோனிய கடிதம் ஒன்றின் ஒரு பகுதி இவ்வாறு சொல்கிறது: “உன் தலைவர் ரிம்-சின் கூறுகிறார்: அவன் அந்த அடிமை பையனை அடுப்பிற்குள் எறிந்ததால், நீ அடிமையை சூளைக்குள் எறிந்துவிடு.” ஜி. ஆர். டிரைவர் இதைக் குறிப்பிடுபவராய், இந்தத் தண்டனை “மூன்று பரிசுத்த மனிதரின் கதையில் காணப்படுகிறது (தானி. III 6, 15, 19-27)” என கூறியது அக்கறைக்குரியது. e

6யூதர்கள் தானியேல் புத்தகத்தைத் தீர்க்கதரிசிகளோடு அல்ல, மற்ற எழுத்துக்களுடன் சேர்த்தனர். மறுபட்சத்தில், தமிழ் பைபிளோ கிரேக்க செப்டுவஜின்ட், லத்தீன் வல்கேட் ஆகியவற்றின் புத்தக பட்டியலைப் போல தானியேலை பெரிய மற்றும் சிறிய தீர்க்கதரிசிகளுக்கு இடையில் வைக்கிறது. இந்தப் புத்தகத்தில் உண்மையில் இரண்டு பகுதிகள் உள்ளன. அதிகாரங்கள் 1 முதல் 6 அடங்கியதே முதல் பகுதி. இது பொ.ச.மு. 617 முதல் பொ.ச.மு. 538 வரை அரசாங்க சேவையில் இருக்கையில் தானியேலுக்கும் அவருடைய தோழர்களுக்கும் ஏற்பட்ட அனுபவங்களைக் கால வரிசைப்படி கொடுக்கிறது. (தானி. 1:1, 21) 7 முதல் 12 அதிகாரங்கள் அடங்கிய இரண்டாவது பகுதியை தானியேலே பதிவுசெய்வதாக ஒருமையில் எழுதியுள்ளார். மேலும் ஏறக்குறைய பொ.ச.மு. 553-லிருந்து ஏறக்குறைய பொ.ச.மு. 536 வரை அவர் கண்ட தரிசனங்களையும் தேவதூதரின் சந்திப்புகளையும் அதில் விவரிக்கிறார். f (7:2, 28; 8:2; 9:2; 12:5, 7, 8) இந்த இரண்டு பகுதிகளும் இணைந்தே ஒத்திசைவான ஒரே புத்தகமாகிய தானியேல் ஆகின்றன.

தானியேலின் பொருளடக்கம்

7அரசாங்க சேவைக்கு ஆயத்தம் (1:1-21). பொ.ச.மு. 617-ல் சிறைப்படுத்தப்பட்ட யூதர்களுடன் தானியேல் பாபிலோனுக்கு வருகிறார். எருசலேமின் ஆலயத்திலிருந்து எடுத்து வந்த பரிசுத்த பாத்திரங்கள் புறமத பண்டக சாலைக்குள் சேமித்து வைக்கப்படுகின்றன. அரசனின் அரண்மனையில் மூன்று ஆண்டு பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்ட அரச வம்சத்தைச் சேர்ந்த யூத வாலிபரில் தானியேலும் அவருடைய மூன்று எபிரெய தோழர்களும் இருக்கின்றனர். அரசனின் புறமத இன்சுவை உணவுகளாலும் திராட்சை மதுவாலும் தன்னைத் தீட்டுப்படுத்திக் கொள்ளக்கூடாது என தன் இருதயத்தில் தீர்மானித்திருந்த தானியேல் பத்து நாட்கள் தனக்கு மரக்கறி உணவளித்து சோதித்துப் பார்க்கும்படி ஆலோசனை கூறுகிறார். இந்தச் சோதனை தானியேலுக்கும் அவருடைய தோழர்களுக்கும் சாதகமாக அமைகிறது, கடவுள் அவர்களுக்கு அறிவையும் ஞானத்தையும் கொடுக்கிறார். அந்த நாலு பேரும் தனக்கு ஆலோசனைக்காரராக சேவிக்கும்படி நேபுகாத்நேச்சார் நியமிக்கிறார். முதலாம் அதிகாரத்தின் மற்ற வசனங்கள் எழுதப்பட்டு வெகு காலத்திற்கு பிறகே அதன் கடைசி வசனம் சேர்க்கப்பட்டிருக்கலாம். இது, நாடுகடத்தப்பட்டு ஏறக்குறைய 80 ஆண்டுகளுக்கு பிறகும், அதாவது ஏறக்குறைய பொ.ச.மு. 538 வரை தானியேல் அரச சேவையில் இருந்தார் என காட்டுகிறது.

8பயங்கர சிலை பற்றிய சொப்பனம் (2:1-49). தன் அரசாட்சியின் இரண்டாம் ஆண்டில் (பொ.ச.மு. 607-ல் எருசலேம் அழிக்கப்பட்ட சமயத்திலிருந்து இரண்டாம் ஆண்டாக இருக்கலாம்) நேபுகாத்நேச்சார் ஒரு சொப்பனத்தால் கலக்கமடைகிறார். மந்திரவித்தை செய்யும் அவனுடைய சாஸ்திரிகளால் அந்தச் சொப்பனத்தையும் அதன் அர்த்தத்தையும் வெளிப்படுத்த முடியவில்லை. அவர் அவர்களுக்கு அதிகமான வெகுமதிகளைக் கொடுப்பதாக கூறுகிறார். ஆனால் அவர்களோ, அரசன் கேட்கும் காரியத்தை தெய்வங்களைத் தவிர வேறு எவரும் தெரிவிக்க முடியாது என மறுப்பு தெரிவிக்கின்றனர். அரசன் மிகுந்த கோபமடைந்து ஞானிகள் யாவரையும் கொல்லும்படி கட்டளையிடுகிறார். அந்த நான்கு எபிரெயர்களும் இந்தக் கட்டளையில் உட்பட்டிருப்பதால் தானியேல் அந்தச் சொப்பனத்தை வெளிப்படுத்த கால அவகாசம் கேட்கிறார். தானியேலும் அவருடைய தோழர்களும் வழிநடத்துதலுக்காக யெகோவாவிடம் ஜெபிக்கின்றனர். யெகோவா அந்தச் சொப்பனத்தையும் அதன் அர்த்தத்தையும் தானியேலுக்கு வெளிப்படுத்துகிறார். அப்போது தானியேல் அரசனிடம் இவ்வாறு கூறுகிறார்: “மறைபொருள்களை வெளிப்படுத்துகிற பரலோகத்திலிருக்கிற தேவன் கடைசிநாட்களில் சம்பவிப்பதை ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்குத் தெரிவித்திருக்கிறார்.” (2:28) தானியேல் அந்தச் சொப்பனத்தை விவரிக்கிறார். அது ஒரு பெரிய சிலையைப் பற்றியது. அந்தச் சிலையின் தலை பொன்னாலானது, அதன் மார்பும் புயங்களும் வெள்ளியாலானவை, அதன் வயிறும் தொடைகளும் செம்பாலானவை, அதன் கால்கள் இரும்பாலானவை, பாதங்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாக இருந்தன. ஒரு கல் அந்தச் சிலையை மோதி நொறுக்கிவிட்டு பூமி முழுவதையும் நிரப்பும் ஒரு பெரிய மலையாகிறது. இதன் அர்த்தம் என்ன? பாபிலோனின் அரசனே பொன்னாலான அந்தத் தலை என தானியேல் தெரிவிக்கிறார். அவருடைய ராஜ்யத்திற்கு பிறகு இரண்டாவது, மூன்றாவது, நான்காவது ராஜ்யங்கள் எழும்பும். முடிவில், “பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; . . . அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.” (2:44) நன்றியும் மதித்துணர்வும் நிறைந்த அரசன் தானியேலின் கடவுளை ‘தேவர்களுக்கு தேவன்’ என உயர்வாக புகழ்கிறார். தானியேலை “பாபிலோன் மாகாணம் முழுதுக்கும் அதிபதியாகவும், பாபிலோனிலுள்ள சகல ஞானிகளின் மேலும் பிரதான அதிகாரியாகவும்” நியமிக்கிறார். தானியேலின் மூன்று தோழர்களும் அந்த ராஜ்யத்தில் நிர்வாகிகளாக நியமிக்கப்படுகின்றனர்.​—2:47, 48.

9மூன்று எபிரெயர்கள் அக்கினி சூளையிலிருந்து தப்புகின்றனர் (3:1-30). நேபுகாத்நேச்சார் 60 முழ (88 அடி) உயரமான ஒரு பிரமாண்டமான பொற்சிலையை நிறுத்தி, அதன் பிரதிஷ்டைக்காக அந்தப் பேரரசின் அதிபதிகள் எல்லாம் கூடிவரும்படி கட்டளையிடுகிறார். விசேஷித்த கீதவாக்கியம் தொனிக்கையில் எல்லாரும் தாழ விழுந்து அந்தச் சிலையை வணங்க வேண்டும். அவ்வாறு செய்ய தவறும் எவரும் எரிகிற அக்கினி சூளையில் எறியப்படுவார்கள். தானியேலின் மூன்று தோழர்களாகிய சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோர் அதைச் செய்ய தவறுகின்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது. கடுங்கோபம் கொண்ட அரசனுக்கு முன்பாக அவர்கள் கொண்டுவரப்படுகின்றனர். அவர்களோ தைரியத்துடன் இவ்வாறு கூறுகின்றனர்: “நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; . . . நாங்கள் . . . நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை.” (3:17, 18) கடுங்கோபமூண்ட அரசன், அந்தச் சூளையை வழக்கமாக இருப்பதைப் பார்க்கிலும் ஏழு மடங்கு அதிகமாய் சூடாக்கவும் அந்த மூன்று எபிரெயரையும் கட்டி அதற்குள் எறியும்படியும் கட்டளையிடுகிறான். இவ்வாறு செய்கையில் அவர்களைக் கட்டி எறிகிறவர்களை அந்த அக்கினி ஜுவாலை பொசுக்கிவிடுகிறது. நேபுகாத்நேச்சார் திகிலடைகிறார். அந்தச் சூளையில் அவன் பார்ப்பது என்ன? அந்த அக்கினியின் மத்தியில் நான்கு மனிதர் சேதமில்லாமல் உலாவுகிறார்கள், “நாலாம் ஆளின் சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது.” (3:25) அக்கினியிலிருந்து வெளியே வரும்படி அரசன் அந்த மூன்று எபிரெயர்களையும் அழைக்கிறான். அவர்கள் நெருப்பினால் கருகிப்போகாமல், நெருப்பின் மணம்கூட தங்கள்மீது வீசாதவர்களாய் வெளியே வருகின்றனர்! உண்மை வணக்கத்தின் சார்பாக இவர்கள் எடுத்த தைரியமான நிலைநிற்கையின் காரணமாக நேபுகாத்நேச்சார் தன் பேரரசு முழுவதிலும் உள்ள யூதருக்கு வணக்க சுயாதீனத்தை அளிக்கிறார்.

10“ஏழு காலங்கள்” பற்றிய சொப்பனம் (4:1-37). நேபுகாத்நேச்சார் தாழ்த்தப்பட்ட பிறகு எழுதிவைத்த பாபிலோனின் அரசாங்க ஆவணம் ஒன்றைப் பார்த்து தானியேல் இச்சொப்பனத்தை எழுதினார். முதலாவதாக, மகா உன்னத கடவுளின் வல்லமையையும் ராஜ்யத்தையும் அவர் ஒப்புக்கொள்கிறார். பிறகு, திகிலுண்டாக்கின ஒரு சொப்பனத்தையும் அது எவ்வாறு தன்னில் நிறைவேறியது என்பதையும் விளக்குகிறார். வானபரியந்தம் உயர்ந்து நின்று, மாம்சமான யாவற்றிற்கும் நிழலையும் உணவையும் அளித்த ஒரு மரத்தை அவர் கண்டார். ஒரு காவலாளன் உரத்த சத்தமிட்டு: ‘இந்த விருட்சத்தை வெட்டிப்போடுங்கள். இரும்பையும் வெண்கலத்தையும் கொண்டு இதன் அடிமரத்தை விலங்கிடுங்கள். ஏழு காலங்கள் அதன் மீது கடந்துசெல்லட்டும்; இவ்வாறு உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகை செய்கிறார் என்றும் மனுஷரில் மிக தாழ்ந்தவரை அதன் மீது ஏற்படுத்தி வைக்கிறார் என்றும் அறியப்படும்.’ (4:14-17) தானியேல் இந்தச் சொப்பனத்தின் அர்த்தத்தை விளக்கி, அந்த மரம் நேபுகாத்நேச்சாரைக் குறித்தது என அறிவித்தார். இந்தத் தீர்க்கதரிசன சொப்பனம் சீக்கிரத்திலேயே நிறைவேற்றம் அடைந்தது. அரசன் தன்னைப் பற்றி மிகவும் பெருமையாக பேசிக்கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று மூளைக்கோளாறால் பாதிக்கப்பட்டார்; ஏழு ஆண்டுகள் காட்டில் மிருகத்தைப் போல வாழ்ந்தார். அதன் பிறகு அவருடைய புத்தி திரும்பியது, யெகோவாவின் உன்னத அரசதிகாரத்தை ஒப்புக்கொண்டார்.

11பெல்ஷாத்சாரின் விருந்து, கையெழுத்து விளக்கப்படுகிறது (5:1-31). அது அக்டோபர் 5, பொ.ச.மு. 539. அன்று இரவுதான் பயங்கரமான ஒரு நிகழ்ச்சி நடந்தது. நபோனிடஸின் குமாரனான அரசன் பெல்ஷாத்சார் பாபிலோனில் உடன் அரசனாக ஆட்சி புரிந்த சமயம் தன் பிரபுக்களில் ஆயிரம்பேருக்கு ஒரு பெரிய விருந்து வைக்கிறார். அரசன் திராட்சை மதுவின் போதையில், யெகோவாவின் ஆலயத்திலிருந்து எடுத்து வந்த பரிசுத்த பொன் வெள்ளி பாத்திரங்களைக் கொண்டுவரும்படி கட்டளையிடுகிறார். மட்டுமீறிய குடிவெறியில் பெல்ஷாத்சாரும் அவருடைய விருந்தினரும் அவற்றிலிருந்து குடித்து, தங்கள் புறமத தெய்வங்களைப் புகழுகிறார்கள். உடனடியாக ஒரு கை தோன்றி, மறைபொருளான ஒரு செய்தியைச் சுவற்றில் எழுதுகிறது. அரசன் திகிலடைகிறார். அவருடைய ஞானிகளால் அந்த எழுத்துக்களை விளக்க முடியவில்லை. கடைசியாக தானியேலை அழைக்கின்றனர். அவர் அந்த எழுத்துக்களை வாசித்து அவற்றை விளக்கினால் ராஜ்யத்தில் அவரை மூன்றாம் அதிபதியாக்குவதாக அரசன் கூறுகிறார். ஆனால் தானியேல் தனக்கு அந்தப் பரிசுகள் வேண்டாம் என கூறுகிறார். பின்பு அந்த எழுத்துக்களையும் அவற்றின் அர்த்தத்தையும் தெரிவிக்கிறார்: “மெனே, மெனே, தெக்கேல், உப்பார்சின். . . . தேவன் உன் ராஜ்யத்தை மட்டிட்டு, அதற்கு முடிவுண்டாக்கினார். . . . நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக் காணப்பட்டாய். . . . உன் ராஜ்யம் பிரிக்கப்பட்டு, மேதியருக்கும் பெர்சியருக்கும் கொடுக்கப்பட்டது.” (5:25-28) அதே இரவில் பெல்ஷாத்சார் கொல்லப்பட்டு, மேதியனாகிய தரியு ராஜ்யத்தைப் பெறுகிறார்.

12சிங்க கெபியில் தானியேல் (6:1-28). தரியுவின் அரசாங்கத்திலுள்ள உயர் அதிகாரிகள் தானியேலுக்கு எதிராக தீங்குசெய்யும்படி சதித்திட்டம் தீட்டுகின்றனர். அதாவது, 30 நாட்களுக்கு அரசனைத் தவிர வேறு எந்தக் கடவுளிடமோ மனிதனிடமோ விண்ணப்பம் செய்யக்கூடாது என்ற ஒரு சட்டத்தை அரசனே பிறப்பிக்கும்படி அவர்கள் செய்கின்றனர். இதற்கு கீழ்ப்படியாத எவரும் சிங்கங்களின் கெபியில் போடப்படுவார்கள். தானியேல் தன் வணக்கத்தைப் பாதிக்கும் இந்தச் சட்டத்திற்கு கீழ்ப்படிய மறுத்து யெகோவாவை நோக்கி ஜெபிக்கிறார். அவர் சிங்கங்களின் கெபிக்குள் போடப்படுகிறார். யெகோவாவின் தூதன் சிங்கங்களின் வாயை அற்புதகரமாக அடைத்துவிடுகிறார். அடுத்த நாள் காலையில் தானியேலுக்கு எந்தத் தீங்கும் நேரிடாமல் இருப்பதைக் கண்டு தரியு அரசன் மகிழ்ச்சியடைகிறார். சத்துருக்கள் இப்போது சிங்கங்களுக்கு இரையாகின்றனர். தானியேலின் கடவுளே “ஜீவனுள்ள தேவன்” ஆதலால் அவருக்குப் பயப்படும்படி அரசன் ஒரு கட்டளை பிறப்பிக்கிறான். (6:26) தானியேல், கோரேசுவின் ஆட்சிகாலம் வரை தொடர்ந்து அரசாங்க சேவையில் சிறந்து விளங்கினார்.

13மிருகங்கள் பற்றிய தரிசனங்கள் (7:1–8:27). நாம் மறுபடியும் ‘பெல்ஷாத்சாரின் முதலாம் வருஷத்திற்கு’ வருகிறோம். இவருடைய ஆட்சி பொ.ச.மு. 553-ல் தொடங்கியிருக்க வேண்டும். தானியேல் ஒரு சொப்பனத்தைப் பெறுகிறார், இதை அரமிய மொழியில் பதிவு செய்கிறார். g பெரிதும் பயங்கரமுமான நான்கு மிருகங்கள் ஒவ்வொன்றும் வரிசையாக தோன்றுவதைக் காண்கிறார். நான்காவது மிருகம் அசாதாரண பலமுள்ளது, அதன் மற்ற கொம்புகளுக்குள் ஒரு சிறிய கொம்பு எழும்பி ‘பெருமையானவைகளைப் பேசுகிறது.’ (7:8) நீண்ட ஆயுளுள்ளவர் தோன்றி தம் ஆசனத்தில் அமருகிறார். “ஆயிரமாயிரம் பேர்” அவருக்கு சேவை செய்கிறார்கள். “மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர்” அவருக்கு முன்பாக வருகிறார். “சகல ஜனங்களும் ஜாதியாரும் பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரிகமும் கொடுக்கப்ப”டுகின்றன. (7:10, 13, 14) பின்பு தானியேல் அந்த நான்கு மிருகங்கள் பற்றிய தரிசனத்தின் விளக்கத்தைப் பெறுகிறார். அவை நான்கு ராஜாக்களை அல்லது ராஜ்யங்களைக் குறிக்கின்றன. அந்த நான்காவது மிருகத்தின் பத்து கொம்புகள் மத்தியிலிருந்து ஒரு சிறிய கொம்பு எழும்புகிறது. அது பலமடைந்து பரிசுத்தவான்களோடு போரிடுகிறது. எனினும் பரலோக நியாய சங்கம் தலையிட்டு, “வானத்தின் கீழெங்குமுள்ள ராஜ்யங்களின் ராஜரிகமும் ஆளுகையும் மகத்துவமும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்களாகிய ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்”படி செய்கிறது.​—7:27.

14இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தானியேல் மற்றொரு தரிசனத்தைக் கண்டு அதை எபிரெயுவில் பதிவுசெய்கிறார். பாபிலோன் வீழ்ச்சியடைவதற்கு வெகு காலத்திற்கு முன்பே இதைப் பெறுகிறார். இரு கண்களுக்கு நடுவே பெரிய கொம்பை உடைய ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பார்க்கிறார். அது இரண்டு கொம்புகள் உடைய பெருமைக்கொண்ட ஓர் செம்மறியாட்டுக்கடாவுடன் போராடி அதை மேற்கொள்கிறது. அந்த வெள்ளாட்டுக்கடாவின் பெரிய கொம்பு முறிந்துபோகிறது, பிறகு நான்கு சிறிய கொம்புகள் எழும்புகின்றன. இவற்றில் ஒன்றிலிருந்து மற்றொரு சிறிய கொம்பு எழும்பி வானங்களின் சேனைக்கு எதிராகவே சவால் விடுகிறது. பரிசுத்த ஸ்தலம் அதற்குரிய “சரியான நிலைமைக்கு” கொண்டுவரப்படும் வரை 2,300 நாட்கள் செல்லும் என முன்னறிவிக்கப்படுகிறது. (8:14, தி.மொ.) காபிரியேல் இந்தத் தரிசனத்தைத் தானியேலுக்கு விளக்குகிறார். அந்த செம்மறியாட்டுக்கடா மேதிய பெர்சிய அரசர்களைக் குறிக்கிறது. அந்த வெள்ளாட்டுக்கடா கிரேக்க தேசத்தின் அரசன், இவருடைய ராஜ்யம் நான்காக பிரிக்கப்படும். பின்னால், மூர்க்க முகமுள்ள ஓர் அரசன் “அதிபதிகளுக்கு அதிபதியாயிருக்கிறவருக்கு விரோதமாய்” எழும்புவான். இந்தத் தரிசனம் நிறைவேற “இன்னும் அநேகநாள் செல்லும்” ஆதலால், தற்போதைக்கு தானியேல் இதை இரகசியமாய் வைக்க வேண்டும்.​—8:25, 26.

15பிரபுவாகிய மேசியா பற்றிய முன்னறிவிப்பு (9:1-27). “மேதிய குலத்தானாகிய . . . தரியு ராஜ்யபாரம் பண்ணுகிற முதலாம் வருஷத்திலே” எரேமியா தீர்க்கதரிசனத்தை தானியேல் ஆராய்ந்து பார்க்கிறார். எருசலேம் 70 வருடங்கள் பாழாய் கிடக்கும் என முன்னறிவிக்கப்பட்டது முடியப் போகிறது என்பதைக் கண்டுணருகிறார். பிறகு தன்னுடைய பாவங்களையும் இஸ்ரவேலின் பாவங்களையும் அறிக்கையிட்டு யெகோவாவிடம் ஜெபிக்கிறார். (தானி. 9:1-4; எரே. 29:10) காபிரியேல் தூதன் தோன்றி, “மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், பாவங்களைத் தொலைக்கிறதற்கும், அக்கிரமத்தை நிவிர்த்தி பண்ணுகிறதற்கும், . . . எழுபது வாரங்கள்” செல்லும் என அறிவிக்கிறார். அந்த 69 வாரங்களின் முடிவில் பிரபுவாகிய மேசியா தோன்றி பிறகு சங்கரிக்கப்படுவார். அந்த 70-வது வாரத்தின் முடிவு வரை பலருக்காக அந்த உடன்படிக்கை செல்லத்தக்கதாக இருக்கும். முடிவில், பாழ்க்கடிப்பும் முழுமையான அழிவும் உண்டாகும்.​—தானி. 9:24-27.

16வடக்கிற்கு எதிராக தெற்கு, மிகாவேல் எழும்புகிறார் (10:1–12:13). இது ‘கோரேசு அரசாண்ட மூன்றாம் வருஷம்,’ ஆகவே ஏறக்குறைய பொ.ச.மு. 536. யூதர்கள் எருசலேமுக்கு திரும்பி வந்து கொஞ்ச காலம்தான் ஆகியிருந்தது. மூன்று வார உபவாசத்திற்கு பின் தானியேல் இதெக்கேல் நதியின் ஆற்றங்கரையில் இருக்கிறார். (தானி. 10:1, 4; ஆதி. 2:14) ஒரு தேவதூதர் தோன்றி தான் தானியேலிடம் வருவதைப் ‘பெர்சியாவின் அதிபதி’ எதிர்த்தான், ஆனால் “பிரதான அதிபதிகளில் ஒருவனாகிய மிகாவேல்” தனக்கு உதவி செய்தார் என்பதையும் விளக்கி கூறுகிறார். இப்போது அவர் ‘கடைசிநாட்களுக்குரிய’ ஒரு தரிசனத்தைத் தானியேலிடம் விவரிக்கிறார்.​—தானி. 10:13, 14.

17கவனத்தைக் கவர்ந்திழுக்கும் இந்தத் தரிசனம், பெர்சிய அரச வம்சத்தைப் பற்றியும் கிரீஸோடு நிகழவிருக்கும் போராட்டம் பற்றியும் பேசுவதோடு ஆரம்பமாகிறது. பரந்த ராஜ்யத்தின்மீது அதிகாரம் செலுத்தும் வல்லமை வாய்ந்த ஓர் அரசன் எழும்புவான். ஆனால் அவனுடைய ராஜ்யம் நான்கு பாகங்களாக பிரிக்கப்படும். முடிவில் வடதிசை ராஜா, தென்றிசை ராஜா என்ற ராஜாக்களின் இரண்டு நீண்ட வரிசைகள் தோன்றும். அவர்கள் மத்தியில் பகைமை நிலவும். அவர்கள் அதிகாரத்திற்காக போராடுகையில் மாறிமாறி வெற்றிபெறுவார்கள். திருத்த முடியாத இந்த மோசமான ராஜாக்கள் ஒரே மேசையில் அமர்ந்திருந்தும் தொடர்ந்து பொய் பேசுவார்கள். “குறித்த காலத்திலே” போர் மறுபடியும் தொடங்கும். கடவுளுடைய பரிசுத்த ஸ்தலம் பரிசுத்த குலைச்சலாக்கப்படும், மேலும் ‘பாழாக்கும் அருவருப்பு’ அதன் இடத்தில் வைக்கப்படும். (11:29-31) வடதிசை ராஜா தேவாதி தேவனுக்கு விரோதமாக ஆச்சரியமான காரியங்களைப் பேசி அரண்களின் தேவனுக்கு மகிமை செலுத்துவான். “முடிவுகாலத்திலோவென்றால்” தென்றிசை ராஜா வடதிசை ராஜாவுடன் முட்டுக்கு நிற்பான். வடதிசை ராஜா பல தேசங்கள்மீது பிரவாகித்து கடந்துபோய் “சிங்காரமான தேசத்திலும்” பிரவேசிப்பான். கிழக்கிலும் வடக்கிலுமிருந்து வரும் செய்திகளால் கலக்கமடைந்து, மகா உக்கிரத்தோடு புறப்பட்டு “சமுத்திரங்களுக்கு இடையிலுள்ள சிங்காரமான பரிசுத்த பர்வதத்தண்டையிலே தன் அரமனையாகிய கூடாரங்களைப் போடுவான்.” ஆகவே “அவனுக்கு ஒத்தாசை பண்ணுவாரில்லாமல், அவன் முடிவடைவான்.”​—11:40, 41, 45.

18இந்த மகத்தான தரிசனம் இன்னும் முடியவில்லை. மிகாவேல் ‘கடவுளுடைய ஜனத்தின் புத்திரருக்காக’ நிற்பவராய் காணப்படுகிறார். மனித சரித்திரத்தில் முன்னொருபோதும் இருந்திராத “ஆபத்துக்காலம்” உண்டாகும், ஆனால் புத்தகத்தில் பெயர் எழுதப்பட்டிருப்போர் தப்புவர். தூசியிலிருக்கும் பலர் நித்திய ஜீவனைப் பெற எழுந்திருப்பார்கள், “ஞானவான்கள் ஆகாய மண்டலத்தின் ஒளியைப்போல . . . பிரகாசிப்பார்கள்.” இவர்கள் பலரை நீதிக்கு உட்படுத்துவார்கள். தானியேல் “முடிவு காலமட்டும்” இந்தப் புத்தகத்தை முத்திரை போட வேண்டும். “இந்த ஆச்சரியமானவைகளின் முடிவு வர எவ்வளவு காலம் செல்லும்”? அந்தத் தூதன் மூன்றரை காலங்கள், 1,290 நாட்கள், 1,335 நாட்கள் கொண்ட காலப்பகுதிகளைக் குறிப்பிட்டு, ‘ஞானவான்கள் மட்டுமே உணர்ந்துகொள்ளுவார்கள்’ என்று சொல்லுகிறார். இப்படிப்பட்டவர்கள் எவ்வளவு சந்தோஷமுள்ளவர்கள்! முடிவாக, தானியேல் இளைப்பாறிக்கொண்டிருந்து “நாட்களின் முடிவிலே” தன் சுதந்தர வீதத்திற்கு எழுந்திருப்பார் என்ற நம்பிக்கையூட்டும் வாக்குறுதியை அந்தத் தூதன் அளிக்கிறார்.​—12:1, 3, 4, 6, 10, 13.

ஏன் பயனுள்ளது

19இந்தச் சாத்தானிய உலகத்திலே உத்தமத்தைக் காத்துக்கொள்ள தீர்மானித்திருக்கும் யாவரும் தானியேலும் அவருடைய மூன்று தோழர்களும் வைத்த சிறந்த முன்மாதிரியைச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. எவ்வளவு கொடிய பயமுறுத்துதல் வந்தபோதிலும் அவர்கள் கடவுளுடைய நியமங்களின்படி தொடர்ந்து வாழ்ந்தனர். அவர்களுடைய உயிர் ஆபத்தில் இருந்தபோது தானியேல் ‘யோசனையுடனும் புத்தியுடனும்’ அரசனின் மேலான அதிகாரத்தை மதிப்பவராகவும் செயல்பட்டார். (2:14-16) அவர்கள் வற்புறுத்தப்பட்டபோதோ, அந்த மூன்று எபிரெயரும் விக்கிரக வணக்கத்தில் ஈடுபடுவதற்கு பதிலாக எரிகிற அக்கினி சூளையில் மரிப்பதே மேல் என நினைத்தனர். அதேபோல, தானியேலும் யெகோவாவிடம் ஜெபிக்கும் தன் சிலாக்கியத்தை விட்டுக்கொடுப்பதற்கு பதிலாக சிங்கங்களின் கெபியையே மேலானது என தெரிவு செய்தார். இந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் யெகோவா அவர்களைக் காப்பாற்றினார். (3:4-6, 16-18, 27; 6:10, 11, 23) ஜெப சிந்தையோடு யெகோவா தேவன்மீது சார்ந்திருப்பதில் தானியேல் மிகச் சிறந்த முன்மாதிரி வைக்கிறார்.​—2:19-23; 9:3-23; 10:12.

20தானியேலின் தரிசனங்களை மறுபடியும் ஆராய்வது ஆர்வத்தைத் தூண்டுவதாயும் விசுவாசத்தைப் பலப்படுத்துவதாயும் இருக்கிறது. முதலாவதாக, உலக வல்லரசுகள் பற்றிய அந்த நான்கு தரிசனங்களைக் கவனியுங்கள்: (1அந்தப் பயங்கர சிலை பற்றிய தரிசனம். பொன்னாலான அதன் தலை, நேபுகாத்நேச்சாரோடு ஆரம்பிக்கும் பாபிலோனிய அரசர்களின் வம்சாவளியைக் குறிக்கிறது. அதற்கு பிறகு, அந்தச் சிலையின் மற்ற பாகங்களால் சித்தரிக்கப்படும் வேறே மூன்று ராஜ்யங்கள் எழும்புகின்றன. இந்த ராஜ்யங்களையே அந்தக் “கல்” நொறுக்கிப்போடுகிறது. அந்தக் கல்லோ ‘என்றென்றும் அழியாத ஒரு ராஜ்யமாகிய’ கடவுளுடைய ராஜ்யம் ஆகிறது. (2:31-45) (2தானியேல் கண்ட தரிசனங்கள் இதைத் தொடர்கின்றன. இவற்றில் முதலாவது, ‘நாலு ராஜாக்களைக்’ குறிக்கும் நான்கு மிருகங்களைப் பற்றியது. இவை ஒரு சிங்கம், ஒரு கரடி, நான்கு தலைகளை உடைய ஒரு சிறுத்தை (NW), பெரிய இருப்புப் பற்களையும் பத்துக் கொம்புகளையும் பின்னால் இன்னுமொரு சிறிய கொம்பையும் பெறும் ஒரு மிருகம் ஆகியவை. (7:1-8, 17-28) (3அடுத்ததாக செம்மறியாட்டுக்கடா (மேதிய-பெர்சியா), வெள்ளாட்டுக்கடா (கிரீஸ்), சிறிய கொம்பு ஆகியவைப் பற்றிய தரிசனம். (8:1-27) (4கடைசியாக, தென்றிசை ராஜாவையும் வடதிசை ராஜாவையும் பற்றிய தரிசனம். பொ.ச.மு. 323-ல் அலெக்ஸாந்தரின் மரணத்திற்கு பிறகு, அவருடைய கிரேக்க பேரரசின் எகிப்திய, செலூக்கிய பிரிவுகளுக்கிடையில் உண்டான போட்டியை தானியேல் 11:5-19 திருத்தமாக விவரிக்கிறது. 20-ம் வசனத்திலிருந்து, ஒன்றன்பின் ஒன்றாக எந்தெந்த தேசங்கள் வடதிசை ராஜாவாகவும் தென்றிசை ராஜாவாகவும் இருக்கும் என்பதை இந்தத் தீர்க்கதரிசனம் விளக்குகிறது. இயேசு தம்முடைய வந்திருத்தலின் அடையாளம் பற்றிய தீர்க்கதரிசனத்தில் “பாழாக்கும் அருவருப்பை” பற்றி குறிப்பிட்டார். (11:31) இந்த இரண்டு ராஜாக்கள் மத்தியில் நிகழும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போராட்டம் “இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவு” வரை தொடரும் என்பதை இது காட்டுகிறது. (மத். 24:3, NW) அது “யாதொரு ஜாதியாரும் தோன்றினது முதல் அக்காலமட்டும் உண்டாயிராத ஆபத்துக்கால”மாய் இருக்கும். அப்போது, தேவபக்தியற்ற தேசங்களை நீக்கி கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்திற்கு சமாதானத்தைக் கொண்டுவரும்படி மிகாவேல் எழும்பி நிற்பார் என இந்தத் தீர்க்கதரிசனம் உறுதிகூறுகிறது. இது எவ்வளவு ஆறுதலளிக்கிறது!​—தானி. 11:20–12:1.

21பின்பு, “எழுபது வாரங்கள்” பற்றிய தானியேலின் தீர்க்கதரிசனமும் ஆர்வத்திற்குரியது. 69 வாரங்களுக்கு பிறகு “பிரபுவாகிய மேசியா” தோன்றுவார். குறிப்பிடத்தக்க விதமாக, அர்தசஷ்டா தன் 20-வது ஆண்டில் எருசலேமைத் திரும்ப எடுப்பித்து கட்டுவதற்கான ‘கட்டளையை வெளிப்படுத்தினார்’; எருசலேமில் நெகேமியா அதைச் செயல்படுத்தினார். அப்போதிலிருந்து 483 ஆண்டுகளுக்கு (69 X 7 ஆண்டுகள்) பிறகு, நசரேயனாகிய இயேசு யோர்தான் நதியில் முழுக்காட்டப்பட்டார்; பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டு கிறிஸ்து அல்லது மேசியா (அதாவது, அபிஷேகம் செய்யப்பட்டவர்) ஆனார். h அது பொ.ச. 29-ம் ஆண்டில் நிகழ்ந்தது. அதற்கு பிறகு தானியேல் முன்னறிவித்தபடியே, பொ.ச. 70-ல் எருசலேம் பாழாக்கப்பட்டபோது அந்த “நிர்மூலம்” ஏற்பட்டது.​—தானி. 9:24-27; லூக். 3:21-23; 21:20.

22வெட்டப்பட்ட மரம் பற்றிய நேபுகாத்நேச்சாரின் சொப்பனத்தைத் தானியேல் நான்காம் அதிகாரத்தில் பதிவு செய்கிறார். அதில் தன் சாதனைகளைக் குறித்து பெருமைபாராட்டி தன் சொந்த பலத்தில் நம்பிக்கைக் கொண்டிருந்த அரசனை யெகோவா தேவன் தாழ்த்தினார் என்று வாசிக்கிறோம். “உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகை செய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறாரென்பதை” உணரும் வரையில் வெளியின் மிருகத்தைப் போல அவர் வாழ்ந்தார். (தானி. 4:32) இன்று நாமும் நேபுகாத்நேச்சாரைப் போல நம்முடைய சாதனைகளைப் பற்றியே பெருமையடித்து கொண்டு மனிதரின் வல்லமையில் நம்முடைய நம்பிக்கையை வைக்கிறோமா? அல்லது கடவுளே மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகிறார் என்பதை ஞானமாய் ஏற்றுக்கொண்டு அவருடைய ராஜ்யத்தில் நம்முடைய நம்பிக்கையை வைக்கிறோமா? நேபுகாத்நேச்சாரைப் போல் செய்தால் கடவுளுடைய தண்டனைக்கு ஆளாவோம்.

23தானியேல் புத்தகம் முழுவதிலும், ராஜ்ய நம்பிக்கையானது விசுவாசத்தைத் தூண்டும் விதத்தில் வலியுறுத்தப்படுகிறது! யெகோவா தேவனே ஈடற்ற உன்னத பேரரசர்; ஒருபோதும் அழியாத, மற்ற எல்லா ராஜ்யங்களையும் நொறுக்கிப்போடுகிற ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்துவார் என அது காட்டுகிறது. (2:19-23, 44; 4:25) புறமத அரசர்களாகிய நேபுகாத்நேச்சாரும் தரியுவும்கூட யெகோவாவின் உன்னத அதிகாரத்தைக் கட்டாயமாக ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. (3:28, 29; 4:2, 3, 37; 6:25-27) ராஜ்யம் பற்றிய விவாதத்திற்கு தீர்ப்பளித்து, ‘மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவருக்கு,’ “சகல ஜனங்களும் ஜாதியாரும் பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி அவருக்கு [நித்திய] கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரிகமும் கொடுக்”கும் நீண்ட ஆயுளுள்ளவர் யெகோவாவே என அவரை உயர்த்தி மகிமைப்படுத்துகிறது. ‘உன்னதமானவருடைய பரிசுத்தவான்களே’ ‘மனுஷகுமாரனாகிய’ கிறிஸ்து இயேசுவுடன் இந்த ராஜ்யத்தில் பங்குகொள்கிறார்கள். (தானி. 7:13, 14, 18, 22; மத். 24:30; வெளி. 14:14) அவரே பெரிய அதிபதியாகிய மிகாவேல். இந்தப் பழைய உலகத்தின் ராஜ்யங்களை எல்லாம் நொறுக்கி அழிக்கும்படி அவர் தம்முடைய ராஜ்ய வல்லமையைச் செலுத்துவார். (தானி. 12:1; 2:44; மத். 24:3, 21; வெளி. 12:7-10) இந்தத் தீர்க்கதரிசனங்களையும் தரிசனங்களையும் புரிந்துகொள்வது நீதியை நேசிப்போரைத் தூண்ட வேண்டும்; கடவுளுடைய ராஜ்ய நோக்கங்கள் பற்றிய ‘ஆச்சரியமானவைகளைக்’ கண்டுபிடிப்பதற்காக அவருடைய வார்த்தையை அலசி ஆராயும்படியும் ஊக்குவிக்க வேண்டும். இவை எல்லாம், ஏவப்பட்டதும் பயனுள்ளதுமான தானியேல் புத்தகத்தில் நமக்காக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.​—தானி. 12:2, 3, 6.

[அடிக்குறிப்புகள்]

a வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கம் 1269.

b வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கம் 283.

c தொல்பொருள் ஆராய்ச்சியும் பைபிளும் (ஆங்கிலம்), 1949, ஜார்ஜ் ஏ. பார்ட்டன், பக்கம் 483.

d தி யேல் ஓரியென்டல் சீரீஸ் · ரிசர்ச்சஸ், தொ. XV, 1929.

e Archiv für Orientforschung, தொ. 18, 1957-58, பக்கம் 129.

f பெல்ஷாத்சார், நபோனிடஸின் மூன்றாம் ஆண்டு முதற்கொண்டு உடன் அரசராக ஆள தொடங்கினார் என தோன்றுகிறது. நபோனிடஸ் தன் ஆட்சியை பொ.ச.மு. 556-ல் தொடங்கியதாக நம்பப்படுவதால் அவருடைய ஆட்சியின் மூன்றாம் வருஷமும் ‘பெல்ஷாத்சாரின் முதலாம் வருஷமும்’ பொ.ச.மு. 553 ஆக இருந்ததென தெரிகிறது.​—தானியேல் 7:1; வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கம் 283; தொ. 2, பக்கம் 457-ஐக் காண்க.

g தானியேல் 2:4ஆ முதல் 7:28 வரை அரமிய மொழியில் எழுதப்பட்டிருக்க, இப்புத்தகத்தின் மீதி பாகமெல்லாம் எபிரெயுவில் எழுதப்பட்டுள்ளது.

h நெகேமியா 2:1-8; இதையும் காண்க: வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 2, பக்கங்கள் 899-901.

[கேள்விகள்]

1. தானியேலில் என்ன வகையான சரித்திரம் அடங்கியுள்ளது, அது எதை சிறப்பித்துக் காட்டுகிறது?

2. தானியேல் உண்மையில் வாழ்ந்தவர் என்பதை எது உறுதிசெய்கிறது, எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த காலப்பகுதியில் அவர் தீர்க்கதரிசனம் உரைத்தார்?

3. தானியேல் புத்தகம் அதிகாரப்பூர்வ பட்டியலை சேர்ந்ததாய் இருப்பதையும் அதன் நம்பகத் தன்மையையும் எது நிரூபிக்கிறது?

4, 5. தானியேல் புத்தகம் பற்றிய விமர்சகர்களின் கருத்துக்களை தொல்பொருள் ஆராய்ச்சி எவ்வாறு பொய் என நிரூபித்துள்ளது?

6. தானியேல் புத்தகத்தில் என்ன இரண்டு பகுதிகள் உள்ளன?

7. தானியேலும் அவருடைய தோழர்களும் எவ்வாறு பாபிலோனிய அரசாங்க சேவைக்கு வந்தனர்?

8. என்ன சொப்பனத்தையும் அர்த்தத்தையும் கடவுள் தானியேலுக்கு வெளிப்படுத்துகிறார், நேபுகாத்நேச்சார் தன் மதித்துணர்வை எவ்வாறு காட்டுகிறார்?

9. அந்த மூன்று எபிரெயர்களும் விக்கிரக வணக்கத்திற்கு எதிராக உறுதியாய் நின்றதன் விளைவு என்ன?

10. “ஏழு காலங்கள்” பற்றிய என்ன பயங்கர சொப்பனம் நேபுகாத்நேச்சாருக்கு உண்டாயிற்று, அது அவரில் நிறைவேறியதா?

11. எந்த மட்டுக்குமீறிய சூழ்நிலையின்போது பயங்கரமான அந்தக் கையெழுத்தைப் பெல்ஷாத்சார் காண்கிறார், தானியேல் அதற்கு என்ன அர்த்தம் கூறுகிறார், அது எவ்வாறு நிறைவேறியது?

12. தானியேலுக்கு எதிரான சதித்திட்டம் எவ்வாறு குலைக்கப்படுகிறது, அதற்கு பிறகு என்ன கட்டளையை தரியு பிறப்பிக்கிறார்?

13. தன் சொப்பனத்தில், நான்கு மிருகங்களையும் ராஜ்ய ஆட்சியையும் பற்றிய என்ன தரிசனத்தை தானியேல் காண்கிறார்?

14. வெள்ளாட்டுக்கடாவையும் இரண்டு கொம்புகளுள்ள செம்மறியாட்டுக்கடாவையும் பற்றிய என்ன தரிசனம் தானியேலுக்கு உண்டாகிறது, காபிரியேல் இதை எவ்வாறு விளக்குகிறார்?

15. தானியேல் யெகோவாவிடம் ஜெபிக்கும்படி தூண்டுவது எது, “எழுபது வாரங்கள்” பற்றி காபிரியேல் இப்பொழுது என்ன தெரிவிக்கிறார்?

16. என்ன சூழ்நிலைமைகளில் ஒரு தூதன் தானியேலுக்கு மறுபடியும் தோன்றுகிறார்?

17. வடதிசை ராஜாவையும் தென்றிசை ராஜாவையும் பற்றிய என்ன தீர்க்கதரிசன சரித்திரத்தைத் தானியேல் இப்போது பதிவு செய்கிறார்?

18. மிகாவேல் ‘கடவுளுடைய ஜனத்தின் புத்திரருக்காக’ நிற்கையில் என்ன சம்பவிக்கிறது?

19. உத்தமத்தைக் காப்பதற்கும் ஜெப சிந்தையோடு யெகோவாவில் சார்ந்திருப்பதற்கும் என்ன சிறந்த முன்மாதிரிகள் தானியேல் புத்தகத்தில் உள்ளன?

20. உலக வல்லரசுகள் பற்றி என்ன நான்கு தரிசனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இவற்றை இன்று சிந்திப்பது ஏன் விசுவாசத்தைப் பலப்படுத்துவதாய் உள்ளது?

21. “ஏழு வாரங்கள்” பற்றிய தானியேலின் தீர்க்கதரிசனம் எவ்வாறு குறிப்பிடத்தக்க நிறைவேற்றத்தைக் கண்டது?

22. நேபுகாத்நேச்சார் தாழ்த்தப்பட்டதிலிருந்து என்ன பாடத்தை நாம் கற்கிறோம்?

23. (அ) தானியேல் புத்தகம் முழுவதிலும் ராஜ்ய நம்பிக்கை எவ்வாறு வலியுறுத்தப்படுகிறது? (ஆ) இந்தத் தீர்க்கதரிசன புத்தகம் என்ன செய்யும்படி நம்மை தூண்ட வேண்டும்?