Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் புத்தக எண் 29—யோவேல்

பைபிள் புத்தக எண் 29—யோவேல்

பைபிள் புத்தக எண் 29—யோவேல்

எழுத்தாளர்: யோவேல்

எழுதப்பட்ட இடம்: யூதா

எழுதி முடிக்கப்பட்டது: ஏ. பொ.ச.மு. 820 (?)

அலையலையாய் திரண்டு வரும் பூச்சிகள் தேசத்தைப் பாழாக்குகின்றன. அவற்றிற்கு முன்னே செல்லும் அக்கினியும் அவற்றைப் பின்தொடரும் தீக்கொழுந்தும் இன்னும் முழுமையாய் அழித்துப்போடுகின்றன. எங்கும் பஞ்சம் நிலவுகிறது. சூரியன் இருளாகவும் சந்திரன் இரத்தமாகவும் மாறுகின்றன, ஏனெனில் யெகோவாவின் பெரிதும் பயங்கரமுமான நாள் சமீபித்திருக்கிறது. அரிவாளை நீட்டி அழிவுக்காக தேசங்களைக் கூட்டிச்சேர்க்கும்படி அவர் கட்டளையிடுகிறார். எனினும், சிலர் ‘பத்திரமாய் தப்புவர்.’ (யோவே. 2:32, NW) உணர்ச்சியைக் கிளறும் இந்தச் சம்பவங்களை ஆழ்ந்து சிந்திப்பது யோவேலின் தீர்க்கதரிசனத்தை ஆர்வம் மிகுந்ததாகவும் வெகு பயனுள்ளதாகவும் ஆக்குகின்றன.

2இந்தப் புத்தகம், “பெத்துவேலின் குமாரனாகிய யோவேலுக்கு உண்டான கர்த்தருடைய வசனம்” என்று ஆரம்பமாகிறது. யோவேலைப் பற்றி இந்தத் தகவலைத் தவிர வேறு எதையும் பைபிள் நமக்கு சொல்கிறதில்லை. தீர்க்கதரிசன செய்திக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது, அதன் எழுத்தாளருக்கு அல்ல. “யோவேல்” (எபிரெயுவில், யோஹ்யேல் [Yoh·ʼelʹ]) என்ற இந்தப் பெயர் “யெகோவாவே கடவுள்” என்று அர்த்தப்படுத்துவதாக தோன்றுகிறது. எருசலேம், அதன் ஆலயம், ஆலய சேவையின் நுட்ப விவரங்கள் ஆகியவற்றை யோவேல் நன்றாக அறிந்திருந்ததானது அவர் இப்புத்தகத்தை எருசலேமிலிருந்து அல்லது யூதாவிலிருந்து எழுதியிருக்க வேண்டும் என காட்டுகின்றன.​—யோவே. 1:1, 9, 13, 14; 2:1, 15, 16, 32.

3யோவேல் புத்தகம் எப்போது எழுதப்பட்டது? இதை உறுதியாக கூற முடியாது. ஆனால், பொ.ச.மு. 800-க்கு முன்பிருந்து ஏறக்குறைய பொ.ச.மு. 400-க்கு இடைப்பட்ட பல்வேறு காலப்பகுதிகளைக் கல்விமான்கள் குறிப்பிடுகின்றனர். யெகோவா, யோசபாத்தின் பள்ளத்தாக்கிலே தேசங்களை நியாயம் தீர்ப்பார் என்று கூறப்பட்டிருப்பதால் யூதாவின் அரசன் யோசபாத்தின் சார்பாக யெகோவா மாபெரும் வெற்றி பெற்ற சில காலத்திற்கு பின் யோவேல் தன் தீர்க்கதரிசனத்தை எழுதியிருக்க வேண்டும் என குறிப்பதாக தோன்றுகிறது. ஆகவே, இது பொ.ச.மு. 936-ல் யோசபாத் அரசனான பிறகே எழுதப்பட்டிருக்க வேண்டும். (யோவே. 3:2, 12; 2 நா. 20:22-26) மேலும் ஆமோஸ் தீர்க்கதரிசி, யோவேல் புத்தகத்திலிருந்தே மேற்கோள் காட்டியிருக்கலாம். அப்படியென்றால் யோவேலின் தீர்க்கதரிசனம், பொ.ச.மு. 829-க்கும் 804-க்கும் இடைப்பட்ட காலத்தில் தீர்க்கதரிசனம் உரைக்க தொடங்கின ஆமோஸுக்கு முன்பாகவே எழுதப்பட்டிருக்க வேண்டும். (யோவே. 3:16; ஆமோ. 1:2) எபிரெய வேதாகமத்தின் அதிகாரப்பூர்வ பட்டியலில் இந்தப் புத்தகம் ஓசியாவுக்கும் ஆமோஸுக்கும் இடையில் இருப்பதும் இது முன்பாகவே எழுதப்பட்டதைக் குறிக்கலாம். ஆகவே, யோவேல் தீர்க்கதரிசனம் ஏறத்தாழ பொ.ச.மு. 820-ல் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றே கூறப்படுகிறது.

4இந்தத் தீர்க்கதரிசனத்திலிருந்து மேற்கோள்களும் மற்ற குறிப்புகளும் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் காணப்படுவதால் இதன் நம்பகத் தன்மை நிரூபிக்கப்படுகிறது. பெந்தெகொஸ்தே நாளில் ‘தீர்க்கதரிசியாகிய யோவேலை’ குறிப்பிட்டு அவருடைய தீர்க்கதரிசனங்களில் ஒன்றை பேதுரு பொருத்தினார். பவுல் அதே தீர்க்கதரிசனத்தை மேற்கோள் காட்டி அது யூதர்களிடத்திலும் யூதரல்லாதவர்களிடத்திலும் நிறைவேறியதை விளக்கினார். (யோவே. 2:28-32; அப். 2:16-21; ரோ. 10:13) அண்டை தேசங்களுக்கு எதிரான யோவேலின் தீர்க்கதரிசனங்கள் எல்லாம் நிறைவேறின. மாபெரும் நகரமான தீருவை நேபுகாத்நேச்சார் முற்றுகையிட்டார். பிறகு மகா அலெக்ஸாந்தர் அந்தத் தீவு நகரத்தை முழுமையாக அழித்துப்போட்டார். அதைப் போலவே பெலிஸ்தியாவும் அழிந்தது. ஏதோமும் வனாந்தரமாயிற்று. (யோவே. 3:4, 19) யோவேல் புத்தகம் பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலைச் சேர்ந்தது என்பதை யூதர்கள் ஒருபோதும் சந்தேகிக்கவில்லை. மேலும், சிறிய தீர்க்கதரிசிகள் என அழைக்கப்படுபவற்றில் இந்தப் புத்தகத்தை இரண்டாவதாக வைத்தனர்.

5யோவேலின் எழுத்துநடை தெள்ளத்தெளிவாகவும் உணர்ச்சிமிக்கதாகவும் உள்ளது. வலியுறுத்துவதற்காக மீண்டும் மீண்டும் கூறுகிறார், கவனத்தைக் கவரும் உவமைகளைப் பயன்படுத்துகிறார். வெட்டுக்கிளிகள் ஒரு தேசமாக, ஒரு ஜனமாக, ஒரு சேனையாக வருணிக்கப்படுகின்றன. அவற்றின் பற்கள் சிங்கங்களின் பற்களைப் போலவும் அவற்றின் தோற்றம் குதிரைகளைப் போலவும், அவற்றின் இரைச்சல் போருக்கு அணிவகுத்து செல்லும் இரதங்களின் இரைச்சல் போலவும் உள்ளது. வெட்டுக்கிளி கட்டுப்பாடு பற்றிய ஒரு புத்தகம் பின்வருமாறு கூறுவதாக தி இன்டெர்பிரட்டர்ஸ் பைபிள் மேற்கோள் காட்டுகிறது: “வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு பற்றி யோவேல் விவரிக்கும் அளவுக்கு நுட்பமான விதத்தில் இதுவரை வேறு யாருமே விவரித்ததில்லை. a யெகோவாவின் திகிலூட்டும் நாளைப் பற்றி யோவேல் தீர்க்கதரிசனம் உரைக்கையில் கவனித்துக் கேளுங்கள்.

யோவேலின் பொருளடக்கம்

6பூச்சிகளின் படையெடுப்பு தேசத்தைப் பாழாக்குகிறது; யெகோவாவின் நாள் சமீபம் (1:1–2:11). பேரழிவுக்குரிய பயங்கரமான தரிசனத்தை யோவேல் காண்கிறார்! கம்பளிப் பூச்சிகள், வெட்டுக்கிளிகள், சிறகற்ற ஊரும் வெட்டுக்கிளிகள், கரப்பான் பூச்சிகள் ஆகியவை தேசத்தை கடுமையாய் தாக்குகின்றன. திராட்சைச் செடிகளும் அத்திமரங்களும் மொட்டையாகிவிட்டன, தேசம் எங்கும் பட்டினி தலைவிரித்தாடுகிறது. யெகோவாவின் ஆலயத்தில் தானிய பலிகளும் இல்லை, பான பலிகளும் இல்லை. ஆசாரியர்களும் கடவுளுடைய ஊழியக்காரர்களும் மனந்திரும்ப வேண்டுமென யோவேல் எச்சரிக்கிறார். அவர் சத்தமிட்டு கூறுகிறார், “அந்த நாளினிமித்தம் ஐயோ! கர்த்தருடைய நாள் சமீபமாயிருக்கிறது; அது சங்காரம்போல சர்வவல்லவரிடத்திலிருந்து வருகிறது.” (1:15) மிருகங்கள் தவித்துத் திரிகின்றன. மேய்ச்சல் நிலங்களும் மரங்களும் அக்கினி ஜுவாலையால் பொசுங்கிவிட்டன, வனாந்தரம் தீயினால் கருகிவிட்டது.

7எச்சரிப்பு ஒலியை எழுப்புங்கள்! “சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், என் பரிசுத்த பர்வதத்திலே எச்சரிப்பின் சத்தமிடுங்கள்.” (2:1) இருளும் அந்தகாரமுமான யெகோவாவின் நாள் சமீபம். இதோ! ஏராளமான, பலத்த ஒரு ஜனக்கூட்டம் வருகிறது. ஏதேனைப் போன்ற தேசத்தை அது பாழான வனாந்தரம் போல் ஆக்குகிறது. எதுவும் மிச்சமீதி இருப்பதில்லை. குதிரைகளைப் போலவும் மலைகளில் ஓடும் இரதங்களைப் போன்ற இரைச்சலுடனும் அது ஓடுகிறது. போருக்காக அணிவகுத்த ஜனத்தைப் போல் அவை நகரத்திற்குள் பாய்கின்றன, மதில்கள் மீது ஏறுகின்றன, பலகணிகள் வழியாய் வீடுகளுக்குள் நுழைகின்றன. தேசம் நடுநடுங்குகிறது, வானம் அதிருகிறது. இந்த ஏராளமான இராணுவ சேனையை யெகோவாவே முன்னின்று நடத்துகிறார். “யெகோவாவின் நாள் பெரிது, மகா பயங்கரமானது; அதைச் சகிப்பவன் யார்?”​—2:11, தி.மொ.

8யெகோவாவிடம் திரும்புங்கள்; ஆவி ஊற்றப்படும் (2:12-32). ஆனால் இந்தப் படையெடுப்பை தடுக்க ஒரு வழி உள்ளது. யெகோவா அறிவுரை கூறுகிறார்: “உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்கள் . . . நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்.” (2:12, 13) ஜனங்கள் பயபக்தியான ஒரு கூட்டத்திற்காக கூடிவரும்படி எக்காளத்தை ஊதுங்கள். அவர்கள் அவரிடம் திரும்பினால், “யெகோவா தமது தேசத்தைப்பற்றி வைராக்கியங்கொண்டு தமது ஜனத்துக்கு இரக்கங்காட்டுவார்.’’ (2:18, தி.மொ.) ஆசீர்வாதங்களும் மன்னிப்பும் கிடைக்கும், படையெடுத்து வந்தவன் திருப்பி அனுப்பப்படுவான். அது, பயப்படுவதற்கு மாறாக மகிழ்ந்து களிகூருவதற்கான காலமாயிருக்கும், ஏனெனில் பழங்களும் தானியமும் புது திராட்சை மதுவும் எண்ணெய்யும் நிறைந்திருக்கும். யெகோவாவின் பெரும் இராணுவ சேனையான வெட்டுக்கிளிகள் எத்தனை வருடங்களின் விளைவை அழித்துப்போட்டதோ அதற்காக அவரே ஈடு செய்வார். அவருடைய வாக்கு இதுவே: “நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்.” (2:26) இஸ்ரவேலிலே யெகோவா ஒருவரே தேவன் என அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.

9“அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள். ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன்” என யெகோவா சொல்லுகிறார். யெகோவாவின் நாள் வருவதற்கு முன்பு சூரியனிலும் சந்திரனிலும் திகிலூட்டும் அடையாளங்கள் காணப்படும். இருந்தாலும் சிலர் தப்பிப்பிழைப்பார்கள். “அப்பொழுது யெகோவாவின் நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் ரட்சிக்கப்படுவான்.”​—2:28-32, தி.மொ.

10“யோசபாத்தின் பள்ளத்தாக்கிலே” தேசங்கள் நியாயந்தீர்க்கப்படும் (3:1-21). யூதாவிலும் எருசலேமிலுமிருந்து சிறைப்பட்டு போனவர்களை யெகோவா திரும்ப கொண்டுவருவார். தேசங்கள் கூட்டிச் சேர்க்கப்படும்; யெகோவாவின் ஜனங்களை நிந்தித்து அடிமைப்படுத்திய தீரு, சீதோன், பெலிஸ்தியா ஆகிய தேசங்கள் கடுமையாய் தண்டிக்கப்படும். யெகோவா தேசங்களுக்கு எதிராக சவால்விடுவதை கவனியுங்கள்: “யுத்தத்துக்கு ஆயத்தம்பண்ணுங்கள், பராக்கிரமசாலிகளை எழுப்புங்கள்; யுத்தவீரர் எல்லாரும் சேர்ந்து ஏறிவரக்கடவர்கள்”! (3:9) அவர்கள் தங்கள் மண்வெட்டிகளைப் பட்டயங்களாக அடித்துக்கொண்டு, (“யெகோவா நியாயாதிபதியாக இருக்கிறார்” என அர்த்தப்படும்) யோசபாத்தின் பள்ளத்தாக்குக்கு வரட்டும். யெகோவாவின் கட்டளை கணீரென்று தொனிக்கிறது: “பயிர் முதிர்ந்தது, அரிவாளை நீட்டி அறுங்கள், . . . ஆலையின் தொட்டிகள் வழிந்தோடுகிறது; அவர்களுடைய பாதகம் பெரியது. நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே ஜனங்கள் திரள்திரளாய் இருக்கிறார்கள்; நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே கர்த்தரின் நாள் சமீபமாயிருக்கிறது.” (3:13, 14) சூரியனும் சந்திரனும் இருளடைகின்றன. யெகோவா சீயோனிலிருந்து கெர்ச்சித்து, வானத்தையும் பூமியையும் அதிர செய்கிறார்; ஆனால் தம் சொந்த ஜனங்களுக்கோ அடைக்கலமும் அரணான கோட்டையுமாக இருக்கிறார். அவரே தங்கள் கடவுளாகிய யெகோவா என அவர்கள் அறிய வேண்டும்.

11“அக்காலத்தில்” பரதீஸில் இருப்பதைப் போல மிகவும் ஏராளம் காணப்படும்! (3:18) மலைகளில் திராட்சரசம் பொழியும், குன்றுகளிலிருந்து பாலாய் ஓடும், ஓடைகளில் தண்ணீர் மிகுதியாய் கரைபுரண்டு ஓடும். புத்துயிரளிக்கும் ஒரு நீரூற்று யெகோவாவின் ஆலயத்திலிருந்து புறப்பட்டு ஓடும். யூதாவில் குற்றமற்ற இரத்தத்தை சிந்தின எகிப்தும் ஏதோமும் பயனற்ற பாழ்நிலங்களாகும். ஆனால் யூதாவும் எருசலேமும் வரையறையில்லா காலத்திற்கு குடியேற்றப்படும், “கர்த்தர் சீயோனிலே வாசமாயிருப்பார்.”​—3:21.

ஏன் பயனுள்ளது

12யோவேலை அழிவின் தீர்க்கதரிசி என சிலர் கூறியுள்ளனர். எனினும், கடவுளுடைய சொந்த ஜனத்தின் நோக்குநிலையிலிருந்து காண்கையில் மகிமையான விடுதலையின் நற்செய்தியை அவர் அறிவிக்கிறார். ரோமர் 10:13-ல் அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு கூறியபோது இதை வலியுறுத்தினார்: “ஏனெனில் ‘யெகோவாவின் பெயரில் கூப்பிடுகிற ஒவ்வொருவனும் இரட்சிக்கப்படுவான்.’” (யோவே. 2:32, NW) பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாளில் யோவேல் தீர்க்கதரிசனம் கவனத்தைக் கவரும் ஒரு நிறைவேற்றத்தைக் கண்டது. அப்போது, யோவேல் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாகவே கடவுளுடைய ஆவி கிறிஸ்துவின் சீஷர்கள் மீது ஊற்றப்பட்டது என பேதுரு தேவாவியால் ஏவப்பட்டு விவரித்தார். (அப். 2:1-21; யோவே. 2:28, 29, 32) “யெகோவாவின் பெயரில் கூப்பிடுகிற ஒவ்வொருவனும் இரட்சிக்கப்படுவான்” என்று பேதுரு கூறியபோது யோவேலுடைய வார்த்தையின் தீர்க்கதரிசன முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.​—அப். 2:21, 39, 40, NW.

13யோவேல் விவரித்த வெட்டுக்கிளி வாதையும் வெளிப்படுத்துதல் 9-ம் அதிகாரத்தில் முன்னுரைக்கப்பட்டுள்ள வாதையும் கவனிக்கத்தக்க விதத்தில் ஒத்திருக்கின்றன. மறுபடியுமாக சூரியன் இருளடைகிறது. அந்த வெட்டுக்கிளிகள் போருக்கு தயாராக உள்ள குதிரைகளைப் போல் உள்ளன; அவை இரதங்களின் இரைச்சல் போன்ற சத்தத்தை உண்டாக்குகின்றன. அவற்றின் பற்கள் சிங்கங்களின் பற்களைப்போல் உள்ளன. (யோவே. 2:4, 5, 10; 1:6; வெளி. 9:2, 7-9) சூரியன் இருளடைவதைப் பற்றி கூறும் யோவேல் 2:31-ல் உள்ள யோவேலின் தீர்க்கதரிசனம், ஏசாயா 13:9, 10-லும் வெளிப்படுத்துதல் 6:12-17-லும் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளோடு ஒத்திருக்கின்றன. மேலும் இயேசு, மனுஷ குமாரனாக வல்லமையிலும் மிகுந்த மகிமையிலும் வரும்போது இந்தத் தீர்க்கதரிசனம் உண்மையில் நிறைவேறும் என்பதை மத்தேயு 24:29, 30 வசனங்களும் சுட்டிக்காட்டுகின்றன. “கர்த்தருடைய நாள் பெரிதும் மகா பயங்கரமுமாயிருக்கும்” என யோவேல் 2:11-ல் கூறப்படும் வார்த்தைகளே மல்கியா 4:5-ல் குறிப்பிடப்படுவதாக தோன்றுகிறது. ‘இருளும் அந்தகாரமுமான நாளைப்’ பற்றிய இதேபோன்ற விவரிப்புகள் யோவேல் 2:2-லும் செப்பனியா 1:14, 15-லும்கூட காணப்படுகின்றன.

14கடவுளுடைய கோபாக்கினையின் “மகா நாள்” வரவிருப்பதாக வெளிப்படுத்துதலிலுள்ள தீர்க்கதரிசனம் கூறுகிறது. (வெளி. 6:17) யோவேலும்கூட அந்தக் காலத்தைப் பற்றி தீர்க்கதரிசனம் உரைத்து, அந்த மாபெரும் “கர்த்தருடைய நாள்” தேசங்களின் மீது வரும்போது பாதுகாப்புக்காகவும் விடுதலைக்காகவும் அவரை நோக்கி கூப்பிடுகிறவர்கள் ‘இரட்சிக்கப்படுவார்கள்’ என்று கூறுகிறார். ‘கர்த்தர் தமது ஜனத்துக்கு அடைக்கலமாக’ இருப்பார். ஏதேனில் இருந்ததைப் போன்ற செழுமை திரும்ப நிலைநாட்டப்படும்: “அக்காலத்தில் பர்வதங்கள் திராட்சரசத்தைப் பொழியும், மலைகள் பாலாய் ஓடும், யூதாவின் ஆறுகள் எல்லாம் பிரவாகித்து ஓடும்; ஒரு ஊற்று கர்த்தருடைய ஆலயத்திலிருந்து புறப்பட்டு” செல்லும். யோவேல், திரும்ப நிலைநாட்டுதல் பற்றிய இந்த மகிழ்ச்சி மிகுந்த வாக்குறுதிகளைக் கூறுகையில் யெகோவா தேவனின் சர்வலோக பேரரசுரிமையையும் மகிமைப்படுத்துகிறார். அதோடு, கடவுளுடைய மிகுந்த இரக்கத்தின் காரணமாக நேர்மை இருதயமுள்ளோரிடம் இந்த வேண்டுகோளை விடுக்கிறார்: “உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்.” தேவாவியால் ஏவப்பட்ட இந்த வேண்டுகோளுக்கு செவிகொடுப்போர் அனைவரும் நித்திய நன்மைகளை அடைவர்.​—யோவே. 2:1, 32; 3:16, 18; 2:13.

[அடிக்குறிப்பு]

a 1956, தொ. VI, பக்கம் 733.

[கேள்விகள்]

1. யோவேல் தீர்க்கதரிசனத்தில் உணர்ச்சியைக் கிளறும் என்ன சம்பவங்கள் உள்ளன?

2. யோவேலையும் அவர் தீர்க்கதரிசனம் உரைத்த சூழ்நிலைமைகளையும் பற்றி நாம் என்ன அறிகிறோம்?

3. யோவேல் புத்தகம் ஏறக்குறைய பொ.ச.மு. 820-ல் எழுதப்பட்டிருக்கலாம் என்பதற்கு என்ன காரணங்கள் உள்ளன?

4. யோவேலின் நம்பகத் தன்மைக்கு என்ன நிரூபணங்கள் உள்ளன?

5. யோவேல் தீர்க்கதரிசனம் எந்த விதத்தில் உணர்ச்சிமிக்கதாகவும் உள்ளது?

6. என்ன பயங்கரமான தரிசனத்தை யோவேல் முதலாவதாக காண்கிறார்?

7. படையெடுத்து வரும் யெகோவாவின் இராணுவ சேனை எவ்வாறு விவரிக்கப்படுகிறது?

8. (அ) பூச்சிகளின் படையெடுப்பை எவ்வாறு மட்டுமே தடுக்க முடியும்? (ஆ) எதற்கு இழப்பீடு செய்வதாக யெகோவா வாக்குறுதி அளிக்கிறார்?

9. இருதயத்தைத் தூண்டியெழுப்பும் என்ன தீர்க்கதரிசனம் பின்தொடருகிறது?

10. யோசபாத்தின் பள்ளத்தாக்கில் என்ன நடக்க போகிறது?

11. யெகோவாவிடமிருந்து வரப்போகிற ஆசீர்வாதங்களை யோவேல் எவ்வாறு விவரிக்கிறார்?

12. யோவேல் தீர்க்கதரிசனத்தின் முக்கியத்துவத்தை பெந்தெகொஸ்தே நாளின்போது பேதுரு எவ்வாறு வலியுறுத்தினார்?

13. (அ) யோவேலுக்கும் வெளிப்படுத்துதலுக்கும் கவனிக்கத்தக்க என்ன ஒப்புமைகள் உள்ளன? (ஆ) யோவேலோடு ஒத்திருக்கும் மற்ற தீர்க்கதரிசனங்கள் யாவை?

14. யோவேலிலுள்ள என்ன பகுதிகள் யெகோவாவின் பேரரசுரிமையையும் அவருடைய அன்புள்ள தயவையும் மகிமைப்படுத்துகின்றன?