Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் புத்தக எண் 31—ஒபதியா

பைபிள் புத்தக எண் 31—ஒபதியா

பைபிள் புத்தக எண் 31—ஒபதியா

எழுத்தாளர்: ஒபதியா

எழுதி முடிக்கப்பட்டது: ஏ. பொ.ச.மு. 607

எபிரெய வேதாகமத்தில் மிகவும் சிறிய புத்தகமான ஒபதியாவில் 21 வசனங்கள் மட்டுமே உள்ளன. ஒரு தேசம் அழிந்துபோவதில் விளைவடைந்த கடவுளுடைய நியாயத்தீர்ப்பு இதில் அடங்கியுள்ளது. அதேசமயம், கடைசியில் கடவுளுடைய ராஜ்யமே வெற்றிபெறும் எனவும் இது முன்னறிவிக்கிறது. “ஒபதியாவின் தரிசனம்” என்பதே இதன் ஆரம்ப வார்த்தைகள். அவர் எப்போது, எங்கே பிறந்தார், எந்தக் கோத்திரத்தை சேர்ந்தவர், அவருடைய வாழ்க்கையின் விவரங்கள் போன்ற எதுவும் சொல்லப்படவில்லை. இந்தத் தீர்க்கதரிசியைப் பற்றிய விவரம் முக்கியமல்ல, மாறாக செய்தியே முக்கியமானது. ஏனெனில் ஒபதியாவே கூறுகிறபடி அது ‘யெகோவாவினிடமிருந்து வரும் ஓர் அறிவிப்பு.’​—NW.

2இந்த அறிவிப்பு முக்கியமாய் ஏதோமிடம் கவனத்தை திருப்புகிறது. சவக்கடலுக்கு தெற்கிலிருந்து அராபா வழியாக நீண்டிருக்கும் ஏதோம் தேசம் உயர்ந்த மலைகளையும் ஆழமான பள்ளத்தாக்குகளையும் உடைய கரடுமுரடான ஒரு நாடு. இது சேயீர் மலை என்றும் அழைக்கப்படுகிறது. அராபாவுக்கு கிழக்கேயுள்ள மலைத்தொடர், சில இடங்களில் 1,700 மீட்டர் உயரத்தை எட்டுகிறது. தேமான் மாகாணத்தின் மக்கள் ஞானத்திற்கும் தைரியத்திற்கும் பெயர் பெற்றவர்கள். ஏதோம் தேசத்தின் புவியியல் அமைப்பே அதற்கு இயற்கையான பாதுகாப்பை அளித்தது. அதனால் அதில் குடியிருந்தவர்கள் பாதுகாப்பாகவும் பெருமையாகவும் உணர்ந்தனர். a

3ஏதோமியர், யாக்கோபின் சகோதரனான ஏசாவின் சந்ததியார். பின்னர் யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்பட்டது; எனவே ஏதோமியர் இஸ்ரவேலருக்கு நெருங்கிய உறவினர் ஆவர். அவர்கள் அவ்வளவு நெருக்கமானவர்களாக இருந்ததால் ‘சகோதரர்’ என்றே அழைக்கப்பட்டனர். (உபா. 23:7) எனினும் ஏதோம், எந்த விதத்திலும் ஒரு சகோதரனைப்போல நடந்துகொள்ளவே இல்லை. இஸ்ரவேலர் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசிப்பதற்கு கொஞ்சம் முன்பு, மோசே ஏதோம் அரசனிடம் ஆளனுப்பி அவனுடைய தேசத்தின் வழியாக சமாதானமாய் கடந்து செல்வதற்கு அனுமதி கேட்டார். ஆனால் ஏதோமியர் பகைமையோடு நேரடியாக மறுத்தது மட்டுமல்லாமல், ஒரு படையைத் திரட்டி அவர்களை எதிர்க்க தயாரானார்கள். (எண். 20:14-21) தாவீது அவர்களை வென்று கீழ்ப்படுத்தியிருந்தார், என்றபோதிலும், பின்னர் யோசபாத்தின் நாட்களில் அவர்கள் அம்மோனோடும் மோவாபோடும் சேர்ந்துகொண்டு யூதாவுக்கு எதிராக சதிசெய்தனர். யோசபாத்தின் குமாரனாகிய அரசன் யோராமுக்கு எதிராகவும் கலகம் செய்தனர். காத்சாவிலும் தீருவிலுமிருந்து சிறைப்பட்ட இஸ்ரவேலரைத் தங்கள் பொறுப்பில் வைத்திருந்தனர்; மேலும் அரசன் ஆகாஸின் நாட்களில் யூதாவைத் தாக்கி இன்னும் அநேகரை சிறைபிடித்து சென்றனர்.​—2 நா. 20:1, 2, 22, 23; 2 இரா. 8:20-22; ஆமோ. 1:6, 9; 2 நா. 28:17.

4பொ.ச.மு. 607-ல் பாபிலோனிய சேனைகளால் எருசலேம் பாழாக்கப்பட்டபோது இந்தப் பகைமை அதன் உச்சக்கட்டத்தை எட்டியது. இஸ்ரவேலர் அழிக்கப்படுகையில் ஏதோமியர் பேசாமல் பார்த்துக்கொண்டிருந்தனர். அதுமட்டுமல்ல அவர்களை முழுமையாக பாழாக்கும்படியும் பாபிலோனியரைத் தூண்டினர். “அதை இடித்துப்போடுங்கள், அஸ்திபாரமட்டும் இடித்துப்போடுங்கள்” என்று கத்தினர். (சங். 137:7) கொள்ளைப் பொருட்களைப் பங்குபோட்டபோது அவர்களும் அதில் ஒரு பங்கைப் பெற்றனர். மேலும் யூதேயாவிலிருந்து தப்பியோட முயற்சி செய்தவர்களை வழிமறித்து, அவர்களைச் சத்துருக்களிடம் ஒப்படைத்தனர். எருசலேமின் அழிவின்போது நடந்த இந்த வன்முறையின் காரணமாகவே ஒபதியா ஏதோமுக்கு எதிராக கண்டன தீர்ப்பை உரைத்தார் என தோன்றுகிறது. மேலும் ஏதோமின் இந்த வெறுக்கத்தக்க நடத்தை நன்றாக நினைவில் இருந்தபோதே இது எழுதப்பட்டிருக்க வேண்டும். (ஒப. 11, 14) நேபுகாத்நேச்சார், எருசலேமை அழித்த பிறகு ஐந்து ஆண்டுகளுக்குள் ஏதோமையும் கைப்பற்றி கொள்ளையிட்டதால், இந்தப் புத்தகம் அதற்கு முன்னரே எழுதப்பட்டிருக்க வேண்டும். பெரும்பாலும் பொ.ச.மு. 607-ல் எழுதப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

5ஏதோமுக்கு எதிரான ஒபதியாவின் தீர்க்கதரிசனம் முற்றுமுழுக்க நிறைவேறியது! அதன் உச்சக்கட்டத்தை எட்டி, அந்தத் தீர்க்கதரிசனம் இவ்வாறு சொல்கிறது: “ஏசா வம்சத்தாரோ வைக்கோல் துரும்பாயிருப்பார்கள்; அவர்கள் இவர்களைக் கொளுத்தி, ஏசாவின் வம்சத்தில் மீதியிராதபடி இவர்களைப் பட்சிப்பார்கள்; கர்த்தர் இதைச் சொன்னார்.” (வச. 18) ஏதோம் பட்டயத்தின் உதவியால் வாழ்ந்து பட்டயத்தாலேயே மரித்தது, அதனுடைய சந்ததி பற்றிய எந்தத் தடயமும் மீந்தில்லை. இவ்வாறு இந்தப் பதிவு நம்பத்தக்கது, உண்மையானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. உண்மையான தீர்க்கதரிசிக்குரிய எல்லா நற்சான்றுகளும் ஒபதியாவுக்கு இருந்தன: அவர் யெகோவாவின் பெயரில் பேசினார், அவருடைய தீர்க்கதரிசனம் யெகோவாவை மகிமைப்படுத்தியது, அவை நிறைவேறின என்பதை சரித்திரம் பிறகு நிரூபித்தது. அவருடைய பெயரின் அர்த்தம் “யெகோவாவின் ஊழியன்” என்பது மிகவும் பொருத்தமே.

ஒபதியாவின் பொருளடக்கம்

6ஏதோமுக்கு எதிரான நியாயத்தீர்ப்பு (வச. 1-16). யெகோவா கட்டளையிட்டதால் ஒபதியா தன் தரிசனத்தைத் தெரிவிக்கிறார். ஏதோமுக்கு எதிராக போர் செய்வதற்காக தேசங்கள் எல்லாம் ஒன்றுகூடிவரும்படி அழைப்பு கொடுக்கிறார். “எழும்புங்கள், அதற்கு விரோதமாக யுத்தம்பண்ண எழும்புவோம் வாருங்கள்” என்று கடவுள் கட்டளையிடுகிறார். பின்பு, ஏதோமை நோக்கி பேசுபவராய் அதன் நிலையை மதிப்பிடுகிறார். தேசங்களுக்குள் ஏதோம் மிகவும் சிறிய, வெறுக்கத்தக்க ஒரு தேசம், எனினும் அது அகந்தைமிக்கது. அது உயர்ந்த மலைகளுக்கு மேல் அமர்ந்திருப்பதால் பாதுகாப்பாக உணருகிறது, ஒருவரும் தன்னைக் கீழே தள்ளிவிட முடியாது என்று நினைக்கிறது. இருப்பினும் அது கழுகைப்போல் மிகவும் உயரத்தில் வாழ்ந்தாலும், நட்சத்திரங்கள் மத்தியில் தன் கூட்டைக் கட்டினாலும் அங்கிருந்து அதை கீழே தள்ளிவிடுவதாக யெகோவா அறிவிக்கிறார். அவள் நிச்சயம் தண்டிக்கப்படுவாள்.​—வச. 1.

7அவளுக்கு என்ன நேரிடப் போகிறது? திருடர்கள் ஏதோமைக் கொள்ளையடித்தால் தங்களுக்கு வேண்டியதை மட்டுமே எடுத்துச் செல்வார்கள். திராட்சைப் பழங்களை அறுக்கிறவர்கள்கூட சில பழங்களை விட்டுவிடுவார்கள். ஆனால் இதைப் பார்க்கிலும் மோசமான ஒன்று ஏசாவின் புத்திரருக்கு நேரிடப் போகிறது. அவர்களுடைய பொக்கிஷங்கள் முற்றிலுமாக கொள்ளையடிக்கப்படும். ஏதோமுடன் உடன்படிக்கை செய்தவர்களே அதை அழிப்பார்கள். முன்பு அதனுடன் நெருங்கிய நட்பு வைத்திருந்தவர்கள் பகுத்தறிவு இல்லாத தேசத்தைப் போல அதைக் கண்ணியில் பிடிப்பார்கள். அதற்குத் தீங்கு ஏற்படும் நாளில், ஞானத்திற்கு பெயர்பெற்ற அதன் மனிதராலும் வீரத்திற்கு பெயர்பெற்ற அதன் போர்வீரர்களாலும்கூட அதற்கு உதவமுடியாது.

8ஆனால் அதற்கு இவ்வளவு கடுமையான தண்டனை கிடைக்க காரணம் என்ன? ஏதோமின் புத்திரர், தங்கள் சகோதரராகிய யாக்கோபின் புத்திரருக்கு செய்த வன்முறையின் காரணமாகவே! எருசலேம் வீழ்ந்தபோது அவர்கள் களிகூர்ந்தனர், எதிரிகளோடு சேர்ந்து கொள்ளைப் பொருளை பகிர்ந்துகொண்டனர். ஒபதியா அந்த இழிந்த செயல்களைக் கண்கூடாக காண்பதுபோல் ஏதோமுக்கு எதிராக கடுமையான கண்டன தீர்ப்பை அறிவிக்கிறார்: உன் சகோதரனின் கஷ்டத்தைக் கண்டு நீ களிகூரக்கூடாது. அங்கிருந்து தப்பியோடியவர்களைத் தடுத்து அவர்களைச் சத்துருவிடம் ஒப்படைக்கக்கூடாது. யெகோவா நியாயந்தீர்க்கும் நாள் சமீபித்திருக்கிறது, நீ கணக்கு கொடுத்தே ஆகவேண்டும். நீ செய்த விதமாகவே உனக்கும் செய்யப்படும்.

9யாக்கோபின் வீட்டார் திரும்ப நிலைநாட்டப்படுவர் (வச. 17-21). இதற்கு மாறாக, யாக்கோபின் வீட்டார் திரும்ப நிலைநாட்டப்படுவர். சீயோன் மலைக்கு ஆட்கள் திரும்பி வருவார்கள். நெருப்பு வைக்கோலை எரிப்பதுபோல் அவர்கள் ஏசாவின் வீட்டாரை எரித்துப்போடுவார்கள். தெற்கேயுள்ள தேசமான தென்தேசத்தையும் (நெகெப்), ஏசாவின் மலையையும் சமனான தேசத்தையும் (ஷெபெல்லா) அவர்கள் கைப்பற்றுவார்கள். வடக்கே எப்பிராயீம் தேசத்தையும் சமாரியாவையும், சர்பாத் வரையான பிரதேசத்தையும் சொந்தமாக்கிக் கொள்வார்கள். கிழக்கே கீலேயாத்தின் பிராந்தியத்தைக் கைப்பற்றுவார்கள். அகந்தையுள்ள ஏதோம் இனிமேலும் இராது. யாக்கோபு திரும்ப நிலைநாட்டப்படும், “அரசதிகாரம் யெகோவாவுடையதாக வேண்டும்.”​—வச. 21, NW.

ஏன் பயனுள்ளது

10ஏதோமுக்கு எதிரான இந்த நியாயத்தீர்ப்பு செய்தி நிச்சயம் நிறைவேறும் என்பதை உறுதிசெய்யும் வண்ணம் மற்ற தீர்க்கதரிசிகள் மூலமாகவும், யெகோவா இதே போன்ற அறிவிப்புகளைச் செய்தார். அவற்றுள் சில பின்வரும் இடங்களில் உள்ளன: யோவேல் 3:19; ஆமோஸ் 1:11, 12; ஏசாயா 34:5-7; எரேமியா 49:7-22; எசேக்கியேல் 25:12-14; 35:2-15. ஆரம்பத்தில் கூறப்பட்ட நியாயத்தீர்ப்புகள் கடந்த காலங்களில் ஏதோம் செய்த பகைமைக்குரிய செயல்களைக் குறிப்பதாக தோன்றுகிறது. பின்னர் கூறப்பட்டவையோ பாபிலோனியர் எருசலேமைக் கைப்பற்றினபோது, ஏதோம் செய்த மன்னிக்க முடியாத தவறுகளைக் குறிப்பதாக தோன்றுகிறது. இவற்றைப் பற்றியே ஒபதியா குறிப்பிட்டார். முன்னறிவிக்கப்பட்ட தீங்குகள் ஏதோம்மீது நிறைவேறியதை நாம் ஆராய்ந்து பார்த்தால் யெகோவாவின் தீர்க்கதரிசன வல்லமையில் நம் விசுவாசம் பலப்படும். மேலும், யெகோவா தாம் கூறின நோக்கத்தை எப்பொழுதும் நிறைவேற்றுகிற கடவுள் என அவரில் நம் நம்பிக்கையையும் வளர்க்கும்.​—ஏசா. 46:9-11.

11ஏதோமோடு “உடன்படிக்கை செய்த எல்லா மனுஷரும்” அதனோடு “சமாதானமாயிருந்த” ஆட்களுமே அதை மோசம்போக்குவார்கள் என ஒபதியா முன்னறிவித்தார். (ஒப. 7) பாபிலோன் ஏதோமுடன் செய்த சமாதானம் நீண்ட காலம் நிலைக்கவில்லை. பொ.ச.மு. ஆறாம் நூற்றாண்டில், அரசன் நபோனிடஸின் பாபிலோனிய சேனைகள் ஏதோமை கைப்பற்றின. b இருப்பினும், அந்தத் தேசத்தின்மீது நபோனிடஸ் படையெடுத்து ஒரு நூற்றாண்டுக்குப் பிறகும், நம்பிக்கையிழக்காத ஏதோம் மறுபடியும் தலைதூக்கிவிடலாம் என நம்பியது. இதைக் குறித்து மல்கியா 1:4 இவ்வாறு அறிவிக்கிறது: “ஏதோமியர்: நாம் எளிமைப்பட்டோம்: ஆனாலும் பாழானவைகளைத் திரும்பக் கட்டுவோம் என்று சொல்லுகிறார்கள்; அதற்குக் கர்த்தர்: அவர்கள் கட்டுவார்கள், நான் இடிப்பேன் . . . என்கிறார்.” மீண்டும் தலைதூக்குவதற்காக ஏதோம் முயற்சி செய்தபோதும் பொ.ச.மு. நான்காம் நூற்றாண்டிற்குள் நபேத்தியர்கள் அந்தத் தேசம் முழுவதிலும் குடியேறிவிட்டனர். தங்கள் தேசத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஏதோமியர் யூதேயாவின் தென் பகுதியில் வசித்தனர், அது இதூமியா என அழைக்கப்படலாயிற்று. சேயீர் தேசத்தை அவர்களால் திரும்ப கைப்பற்ற முடியவே இல்லை.

12ஜொஸிபஸ் கூறுகிறபடி, பொ.ச.மு. இரண்டாம் நூற்றாண்டில் யூத அரசனான முதலாம் ஜான் ஹிர்கனஸ் மீந்திருந்த ஏதோமியரைக் கீழ்ப்படுத்தி விருத்தசேதனம் செய்யும்படி அவர்களை வற்புறுத்தினார். இவ்வாறு அவர்கள் யூதர்களோடு மெல்ல மெல்ல ஒன்றாக கலந்துவிட்டனர், ஒரு யூத அதிபதியின் அதிகாரத்தின்கீழ் வாழ்ந்து வந்தனர். ரோமர்கள் பொ.ச. 70-ல் எருசலேமை அழித்தபோது அவர்களுடைய பெயர் சரித்திரத்திலிருந்து மறைந்துபோயிற்று. c “நீ முற்றிலும் சங்கரிக்கப்பட்டுப்போவாய் . . . ஏசாவின் வம்சத்தில் மீதியிரா[து]” என்று ஒபதியா முன்னறிவித்தபடியே இது நடந்தது.​—ஒப. 10, 18.

13ஏதோமின் பாழ்க்கடிப்புக்கு நேர்மாறாக, யூதர்கள் பொ.ச.மு. 537-ல், தேசாதிபதியாகிய செருபாபேலின் கீழ் தங்கள் தேசத்தில் திரும்ப நிலைநாட்டப்பட்டார்கள். அவர்கள் எருசலேமில் ஆலயத்தை திரும்பக் கட்டி, தேசத்தில் உறுதியாய் நிலைநாட்டப்பட்டார்கள்.

14அகந்தையும் தற்பெருமையும் அழிவுக்கே வழிநடத்தும் என்பது எவ்வளவு தெளிவாயுள்ளது! அகந்தையுடன் தங்களை உயர்த்திக்கொண்டு, கடவுளுடைய ஊழியர்களுக்கு வரும் துன்பத்தைக் கண்டு இரக்கமற்ற விதத்தில் மகிழ்வோர் யாவரும் ஏதோமுக்கு ஏற்பட்ட கதியிலிருந்து கற்றுக்கொள்ளட்டும். ஒபதியா செய்ததைப் போலவே, ‘அரசதிகாரம் யெகோவாவுடையதாக வேண்டும்’ என அவர்கள் ஒப்புக்கொள்ளட்டும். யெகோவாவுக்கும் அவருடைய ஜனங்களுக்கும் எதிராக போரிடுவோர் நித்தியத்திற்கும் முற்றிலும் அறுப்புண்டு போவர். ஆனால் யெகோவாவின் மகத்துவமான ராஜ்யமும் நித்திய அரசதிகாரமும் என்றென்றுமாக நியாய நிரூபணம் செய்யப்பட்டு நிலைத்திருக்கும்!​—வச. 21, NW.

[அடிக்குறிப்புகள்]

a வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கம் 679.

b வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கம் 682.

c ஜூயிஷ் ஆண்டிக்விட்டீஸ், XIII, 257, 258 (ix, 1); XV, 253, 254 (vii, 9).

[கேள்விகள்]

1. செய்தி அறிவிப்பவர் அல்ல, செய்தியே முக்கியமானது என எது காட்டுகிறது?

2. ஒபதியாவின் தீர்க்கதரிசனம் எந்தத் தேசத்தின்மீது கவனத்தை ஒருமுகப்படுத்துகிறது, அதில் குடியிருந்தவர்கள் பாதுகாப்பாய் உணர காரணம் என்ன?

3. ஏதோமியர் இஸ்ரவேலரிடம் சகோதரரைப்போல் நடந்துகொண்டனரா?

4. (அ) என்ன வெறுக்கத்தக்க நடத்தை காரணமாக ஒபதியா ஏதோமைக் கண்டித்தார்? (ஆ) இது பெரும்பாலும் பொ.ச.மு. 607-ல் எழுதப்பட்டிருக்கலாம் என்பதற்கு என்ன அத்தாட்சி உள்ளது?

5. (அ) ஒபதியாவின் பதிவு நம்பத்தக்கதும் உண்மையானதும் என எது நிரூபிக்கிறது? (ஆ) ஒபதியா உண்மையான ஒரு தீர்க்கதரிசி என்று ஏன் சொல்லலாம், அவருடைய பெயர் ஏன் பொருத்தமாயுள்ளது?

6. யெகோவா ஏதோமைக் குறித்து எவ்வாறு பேசுகிறார், அவர் அதை எங்கிருந்து கீழே தள்ளிவிடுவார்?

7. ஏதோம் எவ்வளவு முழுமையாக கொள்ளையடிக்கப்படும்?

8. ஏதோமின் தண்டனை ஏன் அவ்வளவு கடுமையாக உள்ளது?

9. யார் திரும்ப நிலைநாட்டப்படுவதாக முன்னறிவிக்கப்படுகிறது?

10. ஏதோமின் அழிவைப் பற்றி வேறு எந்தத் தீர்க்கதரிசனங்கள் முன்னறிவித்தன, ஒபதியாவின் தீர்க்கதரிசனத்தோடுகூட இவற்றையும் கவனிப்பது ஏன் நன்மை பயக்கும்?

11, 12. (அ) ஏதோமோடு “சமாதானமாயிருந்த”வர்கள் எவ்வாறு அவளை மோசம்போக்கினார்கள்? (ஆ) ஏதோம் எவ்வாறு படிப்படியாய் “முற்றிலும் சங்கரிக்கப்பட்[டது]”?

13. ஏதோமியருக்கு நேர்மாறாக யூதர்களுக்கு என்ன நேரிட்டது?

14. (அ) ஏதோமின் அழிவில் என்ன எச்சரிக்கையைக் காண முடிகிறது? (ஆ) ஒபதியாவைப் போல அனைவரும் எதை ஒப்புக்கொள்ள வேண்டும், ஏன்?