Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் புத்தக எண் 32—யோனா

பைபிள் புத்தக எண் 32—யோனா

பைபிள் புத்தக எண் 32—யோனா

எழுத்தாளர்: யோனா

எழுதி முடிக்கப்பட்டது: ஏ. பொ.ச.மு. 844

யோனா தீர்க்கதரிசி, பொ.ச.மு. ஒன்பதாம் நூற்றாண்டிலேயே அயல்நாடு சென்ற மிஷனரி ஆவார்! யெகோவாவிடமிருந்து வந்த நியமிப்பை அவர் எவ்வாறு கருதினார்? இதனால் அவருக்கு என்ன புதிய அனுபவங்கள் ஏற்பட்டன? அவருக்கு நியமிக்கப்பட்ட இடத்திலிருந்த ஜனங்கள் அவருடைய செய்தியை ஏற்றுக்கொண்டனரா? அவருடைய பிரசங்கிப்பு எவ்வளவு வெற்றிகரமாயிருந்தது? யோனா புத்தகத்தின் விவரமான பதிவு இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கிறது. யெகோவா தெரிந்துகொண்ட ஜனம் அவருடைய உடன்படிக்கையை மீறி, புறமத விக்கிரகாராதனைக்குள் வீழ்ந்துபோன ஒரு காலத்தில் இது எழுதப்பட்டது. கடவுளுடைய இரக்கம் ஒரு குறிப்பிட்ட தேசத்திற்கு மட்டுமே உரியதல்ல, ஏன் இஸ்ரவேலுக்கு மாத்திரமேகூட மட்டுப்பட்டில்லை என இந்தத் தீர்க்கதரிசன பதிவு காட்டுகிறது. மேலும், அபூரண மனிதரில் அடிக்கடி காணப்படுகிற இரக்கமின்மை, பொறுமையின்மை, விசுவாச குறைவு போன்றவற்றிற்கு நேர்மாறாக, யெகோவாவின் மகா இரக்கத்தையும் அன்புள்ள தயவையும் இது மேம்படுத்தி காட்டுகிறது.

2யோனா என்ற பெயருக்கு (எபிரெயுவில் யோஹ்னாஹ் [Yoh·nahʹ]) “புறா” என்று அர்த்தம். அவர் செபுலோன் பிராந்தியத்தில் அமைந்த கலிலேயாவில் உள்ள காத்தேப்பேரில் வாழ்ந்த அமித்தாய் என்னும் தீர்க்கதரிசியின் குமாரன். இஸ்ரவேலின் அரசனான யெரொபெயாம், யோனாவின் மூலம் யெகோவா கூறிய வார்த்தையின்படியே அந்தத் தேசத்தின் எல்லையை விரிவாக்கினார் என 2 இராஜாக்கள் 14:23-25 கூறுகிறது. எனவே ஏறக்குறைய பொ.ச.மு. 844-ல் யோனா தீர்க்கதரிசனம் உரைத்திருக்க வேண்டும். ஏனென்றால் அந்த ஆண்டில்தான் அரசனாகிய இரண்டாம் யெரொபெயாம் இஸ்ரவேலில் ஆட்சிசெய்ய தொடங்கினார். மேலும் அந்தச் சமயம், நினிவேயை தலைநகராக கொண்ட அசீரியா இஸ்ரவேல்மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்ததற்கு பல ஆண்டுகளுக்கு முன்பாகும்.

3யோனாவின் முழு விவரப்பதிவும் நம்பகமானது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ‘நம் விசுவாசத்தை பூரணப்படுத்துகிறவராகிய இயேசு,’ யோனா மெய்யான ஓர் ஆள் என குறிப்பிட்டார். மேலும் யோனா புத்தகத்திலுள்ள இரண்டு தீர்க்கதரிசன சம்பவங்களுக்கு தேவாவியால் ஏவப்பட்ட விளக்கத்தையும் கொடுத்தார். இவ்வாறு இந்தப் புத்தகம் உண்மையான தீர்க்கதரிசனம் அடங்கியதென காட்டினார். (எபி. 12:2, NW; மத். 12:39-41; 16:4; லூக். 11:29-32) யூதர்களின் வேதாகம அதிகாரப்பூர்வ பட்டியலில் யோனாவின் புத்தகம் எப்போதுமே இடம் பெற்றிருந்தது; அதைச் சரித்திரப்பூர்வமானது என்றும் அவர்கள் கருதினர். யோனா தன் தவறுகளையும் பலவீனங்களையும் பூசிமெழுகாமல் அவற்றை நேர்மையோடு விவரித்திருப்பதும் இந்தப் பதிவு உண்மையானது என்பதை உறுதிசெய்கிறது.

4யோனாவை விழுங்கின அந்தப் ‘பெரிய மீனைப்’ பற்றியென்ன? அது என்ன வகையான மீனாக இருந்திருக்கும் என்பதைக் குறித்து அதிகமான ஊகிப்பு இருந்திருக்கிறது. ஸ்பர்ம் வேல் என்ற திமிங்கிலம் ஒரு முழு மனிதனை சுலபமாக விழுங்கிவிடும். அதைப் போலவே பெரிய வெண் சுறாவும்கூட விழுங்கிவிடும். என்றாலும், “யோனாவை விழுங்கும்படி ஒரு பெரிய மீனைக் கர்த்தர் ஆயத்தப்படுத்தியிருந்தார்” என்று மட்டுமே பைபிள் கூறுகிறது. (யோனா 1:17) என்ன வகையான மீன் என்பது குறிப்பிடப்படவில்லை. அது திமிங்கிலமா, வெண் சுறாவா அல்லது அடையாளம் காணப்படாத வேறு ஏதோ கடல் உயிரினமா என்பதை உறுதியாக கூற முடியாது. a அது ‘ஒரு பெரிய மீன்’ என்ற பைபிள் பதிவே நமக்கு போதுமானது.

யோனாவின் பொருளடக்கம்

5யோனா நினிவே செல்ல நியமிக்கப்படுகிறார் ஆனால் ஓடிப்போகிறார் (1:1-16). “அமித்தாயின் குமாரனாகிய யோனாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்: நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி; அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார்.” (1:1, 2) இந்த நியமிப்பை யோனா விரும்பினாரா? கொஞ்சம்கூட விரும்பவில்லை! ஆகவே எதிர் திசையிலுள்ள தர்ஷீசுக்கு கப்பலேறி ஓடிப்போகிறார். அது ஸ்பெய்னாக இருக்கலாம் என கருதப்படுகிறது. யோனா செல்லும் கப்பல் பெரும் புயல் ஒன்றில் மாட்டிக்கொள்கிறது. மாலுமிகள் பயமடைந்து, “அவனவன் தன்தன் தேவனை நோக்கி” உதவிக்காக வேண்டுகின்றனர். யோனாவோ கப்பலின் கீழ்த்தட்டில் தூங்குகிறார். (1:5) யோனாவை எழுப்பின பின்பு அந்த ஆபத்தான நிலைமைக்கு யார் காரணம் என கண்டுபிடிக்க முயலுபவர்களாய் அவர்கள் சீட்டுப்போடுகிறார்கள். சீட்டு யோனாவின் பேருக்கு விழுகிறது. அப்போதுதான் யோனா, தான் யெகோவாவை வணங்குகிற ஓர் எபிரெயன் என்றும் கடவுள் தனக்கு கொடுத்த வேலையைவிட்டு ஓடிப்போவதாகவும் அவர்களிடம் தெரிவிக்கிறார். மேலும் தன்னைக் கடலுக்குள் தூக்கியெறியும்படியும் அவர்களிடம் கூறுகிறார். கப்பலைக் கரைக்கு செலுத்த அவர்கள் கடினமாக முயற்சித்தும் பயனற்று போகவே, கடைசியாக யோனாவைக் கடலுக்குள் எறிந்துவிடுகின்றனர். அப்போது கடலின் கொந்தளிப்பு நின்றுவிடுகிறது.

6‘ஒரு பெரிய மீனால்’ விழுங்கப்படுதல் (1:17–2:10). “யோனாவை விழுங்கும்படி ஒரு பெரிய மீனைக் கர்த்தர் ஆயத்தப்படுத்தியிருந்தார்; அந்த மீன் வயிற்றிலே யோனா இராப்பகல் மூன்றுநாள் இருந்தான்.” (1:17) அந்த மீனின் வயிற்றுக்குள்ளிருந்து அவர் யெகோவாவிடம் ஊக்கமாய் ஜெபிக்கிறார். “ஷியோலின் வயிற்றிலிருந்து” அவர் உதவிக்காக மன்றாடி, தன்னுடைய பொருத்தனையை நிறைவேற்றுவதாக கூறுகிறார், ஏனெனில் “இரட்சிப்பு யெகோவாவுக்கே உரியது.” (2:2, 9, NW) யெகோவா கட்டளை கொடுத்ததால் அந்த மீன் யோனாவை உலர்ந்த தரையில் கக்கிவிடுகிறது.

7நினிவேயில் பிரசங்கித்தல் (3:1–4:11). யெகோவா யோனாவுக்கு கொடுத்த கட்டளையை மீண்டும் கூறுகிறார். இப்போது யோனா தன் நியமிப்பை தட்டிக்கழிக்காமல் நினிவேக்கு செல்கிறார். அந்த நகரத்தின் வீதிகளில் நடந்துசென்று, “இன்னும் நாற்பதுநாள் உண்டு, அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப்போம்” என்று கூறுகிறார். (3:4) அவருடைய பிரசங்க வேலை பயன்தருகிறது. நினிவே முழுவதிலும் உள்ள ஜனங்கள் மனந்திரும்பி கடவுளில் நம்பிக்கை வைக்கின்றனர். மனிதனும் மிருகமும் உபவாசமிருந்து இரட்டுடுத்த வேண்டுமென்று அரசன் அறிவிக்கிறான். இரக்கமுள்ளவராய் யெகோவா அந்த நகரத்தை அழிக்காமல் விடுகிறார்.

8இதை யோனாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. யெகோவா இரக்கம் காட்டுவாரென்று ஆரம்பத்திலிருந்தே தான் அறிந்திருந்ததாகவும் அதனால்தான் தர்ஷீசுக்கு ஓடிப்போனதாகவும் அவர் யெகோவாவிடம் கூறுகிறார். தான் மரித்துப்போனால் நலமாயிருக்கும் என கூறுகிறார். முற்றிலும் மனக்கசப்படைந்த யோனா அந்த நகரத்திற்கு கிழக்கே கூடாரமிட்டு, என்ன நடக்கப்போகிறது என்பதைப் பார்க்க காத்திருக்கிறார். சிடுசிடுப்பாக இருந்த தம்முடைய தீர்க்கதரிசிக்கு நிழல் தருவதற்காக ஒரு சுரைக்காய் செடி (NW) வளரும்படி யெகோவா செய்கிறார். இதனால் யோனாவுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி சீக்கிரத்தில் கரைந்து போனது. அடுத்த நாள் காலையில் அந்தச் செடியை அரித்துப்போடும்படி ஒரு பூச்சியை யெகோவா அனுப்புகிறார். ஆகவே அதன் பாதுகாப்பான நிழல் நீங்கிவிடுகிறது. மாறாக வறட்சியான கீழ்க்காற்றும் கொதிக்கும் சூரியனும் யோனாவை வாட்டுகின்றன. மறுபடியும், தான் மரித்துப்போனால் நலமாயிருக்கும் என யோனா எண்ணுகிறார். சுயநீதியுடன் தான் கோபப்படுவது நியாயம் என கூறுகிறார். அவருடைய முரணான எண்ணத்தை யெகோவா குறிப்பிட்டு காட்டுகிறார்: ஒரு சுரைக்காய் செடிக்காக யோனா வருத்தமடைந்தார், ஆனால் அந்தப் பெரிய நகரமாகிய நினிவேக்கு யெகோவா இரக்கம் காட்டியதால் யோனா கோபமடைந்தார்.

ஏன் பயனுள்ளது

9யோனாவின் நடத்தையும் அதன் விளைவும் நமக்கு ஓர் எச்சரிக்கை. அவர், கடவுள் தனக்கு ஆதரவளிப்பார் என்ற முழு நம்பிக்கையுடன் அந்த வேலையில் ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால் கடவுள் கொடுத்த வேலையை விட்டுவிட்டு ஓடிப்போனார். (யோனா 1:3; லூக். 9:62; நீதி. 14:26; ஏசா. 6:8) அவர் தவறான திசையில் சென்றபோது நம்பிக்கையற்ற மனப்பான்மையைக் காட்டினார். அதனால்தான் அவர், ‘பரலோகத்தின் கடவுளாகிய யெகோவாவை’ வணங்குபவர் என அந்த மாலுமிகளிடம் தன்னை ஒளிவுமறைவின்றி அடையாளம் காட்டவில்லை. அவர் தன் தைரியத்தை இழந்திருந்தார். (யோனா 1:7-9; எபே. 6:19, 20) யோனா சுயநலமுள்ளவராக இருந்தார், அதனால் யெகோவா நினிவேக்கு காட்டின இரக்கம் தன்னை நேரடியாக அவமதித்ததாக உணர்ந்தார். கடைசியில் இப்படித்தான் நடக்கும் என தான் ஆரம்பத்திலேயே அறிந்திருந்ததால் தன்னை ஒரு தீர்க்கதரிசியாக ஏன் அனுப்ப வேண்டும் என யெகோவாவிடம் கேட்டு தான் செய்ததை நியாயப்படுத்த முயன்றார். இவ்வாறு மரியாதையற்ற, குறைகாணும் மனப்பான்மை காட்டியதற்காக அவர் கண்டிக்கப்பட்டார். ஆகவே அவருக்கு ஏற்பட்ட அனுபவத்திலிருந்து நாம் பயனடைந்து, யெகோவா இரக்கம் காட்டுவதை அல்லது அவர் காரியங்களைச் செய்யும் முறையில் குற்றம் காண்பதை தவிர்க்க வேண்டும்.​—யோனா 4:1-4, 7-9; பிலி. 2:13, 14; 1 கொ. 10:10.

10யோனா புத்தகம் மற்ற எல்லாவற்றையும்விட யெகோவாவின் மகத்தான குணங்களாகிய பற்றுமாறா அன்பையும் இரக்கத்தையுமே வலியுறுத்திக் காட்டுகிறது. வரவிருக்கும் அழிவைப் பற்றி எச்சரிக்க யெகோவா தம்முடைய தீர்க்கதரிசியை அனுப்பியதால் அவர் நினிவேக்கு அன்புள்ள தயவைக் காட்டினார். மேலும் அங்குள்ளவர்கள் மனந்திரும்பியபோது இரக்கம் காட்ட தயாராக இருந்தார். இதன் காரணமாகவே, ஏறக்குறைய பொ.ச.மு. 632-ல் மேதியராலும் பாபிலோனியராலும் அழிக்கப்படும் வரை 200-க்கும் அதிகமான ஆண்டுகள் நினிவே நிலைத்திருந்தது. கொந்தளிக்கும் கடலிலிருந்து யோனாவைக் காப்பாற்றி, “அவனை அவனுடைய மனமடிவுக்கு நீங்கலாக்க” சுரைக்காய் செடியை அளித்தபோதும் அவர் யோனாவிடம் இரக்கத்தைக் காண்பித்தார். யோனாவுக்கு நிழல்கொடுத்த ஒரு செடியை கொடுத்து பின்னர் அதை அழித்தபோது, யெகோவா தம்முடைய சொந்த விருப்பத்தின்படி இரக்கத்தையும் அன்புள்ள தயவையும் காட்டுவார் என்பதை யோனாவுக்கு தெரியப்படுத்தினார்.​—யோனா 1:2; 3:2-4, 10; 2:10; 4:6, 10, 11.

11இயேசு மதத் தலைவர்களிடம், ‘யோனா தீர்க்கதரிசியின் அடையாளம்’ தவிர அவர்களுக்கு வேறு அடையாளம் கொடுக்கப்பட மாட்டாது என கூறியதை மத்தேயு 12:38-41-ல் வாசிக்கிறோம். மூன்று பகலும் மூன்று இரவும் ‘ஷியோலின் வயிற்றில்’ இருந்த பின்பு, யோனா நினிவேக்கு சென்று பிரசங்கித்தார். இவ்வாறு நினிவே மக்களுக்கு ஓர் ‘அடையாளம்’ ஆனார். (யோனா 1:17; 2:2, NW; 3:1-4) அவ்வாறே, இயேசுவும் மூன்று நாட்களின் பகுதிகள் பிரேதக்குழியில் இருந்த பின்பு உயிர்த்தெழுப்பப்பட்டார். அவருடைய சீஷர்கள் அந்தச் சம்பவத்தின் அத்தாட்சியை யாவரறிய அறிவித்தபோது இயேசு அந்தச் சந்ததிக்கு ஓர் அடையாளம் ஆனார். காலத்தை அளவிடும் யூத முறைமையின்படியும் இயேசுவின் விஷயத்தில் நிறைவேற்றமடைந்த உண்மைகளின் அடிப்படையிலும் பார்த்தால், “இராப் பகல் மூன்று நாள்” என்பது மூன்று முழு நாட்களுக்கும் குறைவான காலமாகவும்கூட இருக்கலாம். b

12இதே சந்தர்ப்பத்தில், இயேசு தம்முடைய ஊழியத்தின்போது யூதர்கள் காண்பித்த இருதய கடினத்தையும் முழுமையான புறக்கணிப்பையும் நினிவே பட்டணத்தாரின் மனந்திரும்புதலோடு ஒப்பிட்டு பேசினார். அப்போது, “யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள்” என்று கூறினார். (மத்தேயு 16:4-ஐயும் லூக்கா 11:30, 32-ஐயும் காண்க.) “யோனாவிலும் பெரியவர்” என இயேசு கூறியபோது எதை அர்த்தப்படுத்தினார்? எல்லாரிலும் மிகப் பெரிய தீர்க்கதரிசியாக தம்மை பற்றியே அவர் குறிப்பிட்டார். “மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது” என்று பிரசங்கிக்கும்படி யெகோவாவே அவரை அனுப்பினார். (மத். 4:17) இருந்தபோதிலும், அந்தச் சந்ததியில் பெரும்பான்மையான யூதர்கள் ‘யோனா தீர்க்கதரிசியின் அடையாளத்தைப்’ புறக்கணித்தார்கள். இன்று எவ்வாறுள்ளது? யெகோவாவின் எச்சரிக்கை செய்திக்கு பெரும்பான்மையர் செவிகொடுப்பதில்லை. என்றபோதிலும், உலகமெங்கும் உள்ள பல ஆயிரக்கணக்கானோருக்கு ‘மனுஷகுமாரனாகிய’ இயேசு முதலாவது பிரசங்கித்த கடவுளுடைய ராஜ்யம் பற்றிய நற்செய்தியைக் கேட்கும் மகிமையான வாய்ப்பு உள்ளது. இவர்கள், யோனாவின் பிரசங்கிப்பால் ஆசீர்வதிக்கப்பட்ட மனந்திரும்பின நினிவே பட்டணத்தாரைப்போல் நீண்ட நாட்கள் வாழ்வதற்காக யெகோவா செய்திருக்கும் நிறைவான மற்றும் இரக்கமான ஏற்பாட்டில் பங்குகொள்ளலாம். ஏனெனில் மெய்யாகவே “இரட்சிப்பு யெகோவாவுக்கே உரியது.”​—யோனா 2:9, NW.

[அடிக்குறிப்புகள்]

a வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 2, பக்கங்கள் 99-100.

b வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கம் 593.

[கேள்விகள்]

1. யோனா புத்தகம் என்ன கேள்விகளுக்கு பதிலளிக்கிறது, இது யெகோவாவின் இரக்கத்தைக் குறித்து என்ன காட்டுகிறது?

2. யோனாவைப் பற்றி நாம் என்ன அறிகிறோம், அவர் எந்த ஆண்டில் தீர்க்கதரிசனம் உரைத்திருக்கலாம்?

3. யோனாவின் விவரப்பதிவு நம்பகமானது என எது நிரூபிக்கிறது?

4. என்ன வகையான மீன் யோனாவை விழுங்கியிருக்கலாம், எனினும் எந்தத் தகவல் நமக்கு போதுமானது?

5. யோனா நியமிப்பைப் பெற்றபோது எவ்வாறு பிரதிபலித்தார், அதன் விளைவென்ன?

6. அந்தப் ‘பெரிய மீனின் வயிற்றில்’ யோனாவிற்கு ஏற்பட்ட அனுபவம் என்ன?

7. நினிவேயில் யோனாவின் பிரசங்கம் எவ்வளவு பயன்தருகிறது?

8. யெகோவா அந்தப் பட்டணத்தார் மேல் இரக்கம் காட்டியபோது யோனாவின் பிரதிபலிப்பு என்ன, இந்தத் தீர்க்கதரிசியின் முரணான எண்ணத்தை யெகோவா எவ்வாறு வெளிப்படுத்தி காட்டினார்?

9. யோனாவின் என்ன மனப்பான்மையும் நடத்தையும் நமக்கு ஓர் எச்சரிக்கை?

10. யெகோவாவின் அன்புள்ள தயவும் இரக்கமும் யோனா புத்தகத்தில் எவ்வாறு சித்தரித்து காட்டப்படுகின்றன?

11. ‘யோனா தீர்க்கதரிசியின் அடையாளம்’ என்ன?

12. (அ) இயேசு, நினிவே பட்டணத்தாரையும் தம்முடைய சந்ததியாரான யூதரையும் பற்றி வேறு என்ன சொல்கிறார்? (ஆ) “யோனாவிலும் பெரியவர்” எவ்வாறு தோன்றினார், யெகோவாவின் ராஜ்யத்தோடும் இரட்சிப்போடும் அவருக்கு என்ன சம்பந்தம்?