Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் புத்தக எண் 33—மீகா

பைபிள் புத்தக எண் 33—மீகா

பைபிள் புத்தக எண் 33—மீகா

எழுத்தாளர்: மீகா

எழுதப்பட்ட இடம்: யூதா

எழுதி முடிக்கப்பட்டது: பொ.ச.மு. 717-க்கு முன்

காலப்பகுதி: ஏ. பொ.ச.மு. 777-717

முதிர்ச்சியுள்ள ஒருவரை, பல ஆண்டுகள் யெகோவாவை உண்மையுடன் சேவித்த ஒருவரைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். அவர் வாழ்ந்த தேசத்தில் ஆட்சி செய்தவர்களிடம், “நன்மையை வெறுத்து, தீமையை விரும்பி . . . என் ஜனத்தின் சதையைத் தின்று அவர்கள்மேல் இருக்கிற அவர்களுடைய தோலை உரி”க்கிறவர்களே என தைரியத்தோடு கூறிய மனிதனைப் பற்றி சிந்தித்து பாருங்கள். யெகோவாவுடைய ஆவியின் உதவியால் வல்லமைவாய்ந்த செய்திகளைக் கூறி, அதற்கான எல்லா மதிப்பையும் அவருக்கே கொடுத்த மனத்தாழ்மையுள்ள ஒரு மனிதனைப் பற்றி யோசித்து பாருங்கள். அப்படிப்பட்ட ஒருவரை அறிந்துகொள்ள நீங்கள் விரும்பமாட்டீர்களா? அவரிடம் கேட்டால் எவ்வளவு ஏராளமான தகவலையும் அருமையான ஆலோசனையையும் நமக்கு கொடுப்பார்! மீகா தீர்க்கதரிசி அத்தகைய ஒரு மனிதனே. அவருடைய பெயரை தாங்கிய புத்தகத்தில் அவருடைய அருமையான அறிவுரை நமக்காக பொதிந்துகிடக்கிறது.​—மீ. 3:2, 3, 8.

2தீர்க்கதரிசிகள் பலரின் விஷயத்தில் உண்மையாக இருந்தது போலவே, மீகாவின் புத்தகத்தில் அவரைப் பற்றிய விவரங்கள் அதிகம் இல்லை. ஏனென்றால் செய்தியே முக்கியமாக இருக்கிறது. மீகா என்ற பெயர் மிகாவேல் (“கடவுளைப் போன்றவர் யார்?” என்று அர்த்தம்) அல்லது மிகாயா (“யெகோவாவைப் போன்றவர் யார்?” என்று அர்த்தம்) என்பதன் சுருக்கமாகும். இவர் யோதாம், ஆகாஸ், எசேக்கியா ஆகியோரின் ஆட்சி காலத்தில் (பொ.ச.மு. 777-717) ஒரு தீர்க்கதரிசியாக சேவித்தார். இவ்வாறு அவர் தீர்க்கதரிசிகளாகிய ஏசாயாவும் ஓசியாவும் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவராவார். (ஏசா. 1:1; ஓசி. 1:1) அவர் குறிப்பாக எத்தனை வருடங்கள் தீர்க்கதரிசியாக சேவித்தார் என்பதை திட்டவட்டமாக சொல்ல முடியாது, என்றாலும் குறைந்தது 60 ஆண்டுகளாவது இருக்கும். சமாரியாவின் பாழ்க்கடிப்பைப் பற்றிய அவருடைய தீர்க்கதரிசனங்கள் பொ.ச.மு. 740-ல் அந்த நகரம் அழிக்கப்படுவதற்கு முன்பு உரைக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் அந்த முழு புத்தகமும் எசேக்கியாவின் ஆட்சி முடிவதற்கு அதாவது பொ.ச.மு. 717-க்கு முன்பு எழுதி முடிக்கப்பட்டிருக்க வேண்டும். (மீ. 1:1) எருசலேமுக்கு தென்மேற்கே அமைந்த செழுமையான சமவெளியில் உள்ள மொரேசா என்ற கிராமத்தைச் சேர்ந்த மீகா ஒரு நாட்டுப்புற தீர்க்கதரிசி. அவருடைய செய்திகளின் முக்கிய குறிப்பை உணர்த்த அவர் பயன்படுத்திய உதாரணங்களிலிருந்து கிராமத்து வாழ்க்கை பற்றி அவர் நன்றாக அறிந்திருந்தார் என்பது தெளிவாகிறது.​—2:12; 4:12, 13; 6:15; 7:1, 4, 14.

3மீகா வாழ்ந்த காலம் ஆபத்தானது, அதேசமயம் முக்கியமானதும்கூட. இஸ்ரவேல், யூதா ராஜ்யங்கள் அழியப்போகின்றன என்பதை அப்போது நிகழ்ந்த சம்பவங்கள் முன்னறிவித்தன. இஸ்ரவேலில் ஒழுக்கக்கேடும் விக்கிரக வணக்கமும் முற்றிவிட்டதால் அந்தத் தேசம் அசீரியர்களால் அழிக்கப்பட்டது. இந்த அழிவு மீகா வாழ்ந்த காலப்பகுதியிலேயே ஏற்பட்டிருக்க வேண்டும். யூதா, யோதாமின் ஆட்சியில் சரியானதை செய்தது, பிறகு ஆகாஸின் கலகத்தனமான ஆட்சியின்போது இஸ்ரவேலின் அக்கிரமத்தைப் பின்பற்றியது, பின்னர் எசேக்கியாவின் ஆட்சியில் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பினது. யெகோவா தம் ஜனத்தின்மீது கொண்டுவரப்போகும் அழிவைப் பற்றி கண்டிப்பாய் எச்சரிக்க மீகாவை அவர்களிடம் அனுப்பினார். மீகாவின் தீர்க்கதரிசனங்கள், ஏசாயா மற்றும் ஓசியாவின் தீர்க்கதரிசனங்களை உறுதிப்படுத்துகின்றன.​—2 இரா. 15:32–20:21; 2 நா. அதிகாரங்கள் 27-32; ஏசா. 7:17; ஓசி. 8:8; 2 கொ. 13:1.

4மீகா புத்தகத்தின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்த ஏராளமான அத்தாட்சிகள் உள்ளன. யூதர்கள், எபிரெய வேதாகம புத்தகங்களின் அதிகாரப்பூர்வ பட்டியலின் பாகமாக இதை எப்போதும் ஏற்றிருந்தனர். மீகா கூறிய வார்த்தைகளையே எரேமியா 26:18, 19 மேற்கோள் காட்டுகிறது: “சீயோன் வயல்வெளியைப்போல உழப்பட்டு, எருசலேம் மண்மேடுகளாய்ப்போம்.” (மீ. 3:12) பொ.ச.மு. 607-ல் பாபிலோனின் அரசன் ‘பாழ்க்கடிப்பை உண்டாக்கும்படி’ எருசலேமை தரைமட்டமாக்கியபோது இந்தத் தீர்க்கதரிசனம் முழுமையாக நிறைவேறியது. (2 நா. 36:19, NW) அதைப்போலவே, சமாரியா “வெளியான மண்மேடு” ஆகும் என்ற தீர்க்கதரிசனமும் முற்றிலுமாக நிறைவேறியது. (மீ. 1:6, 7) பொ.ச.மு. 740-ல் அசீரியர்கள் இஸ்ரவேலின் வட ராஜ்யத்தை சிறைபிடித்தபோது சமாரியாவைப் பாழாக்கினர். (2 இரா. 17:5, 6) பிறகு பொ.ச.மு. நான்காம் நூற்றாண்டில் மகா அலெக்ஸாந்தர் அதைக் கைப்பற்றினார். பொ.ச.மு. இரண்டாம் நூற்றாண்டில் முதலாம் ஜான் ஹிர்கனஸின் தலைமையில் யூதர்களால் இது பாழாக்கப்பட்டது. சமாரியாவின் இந்தக் கடைசி அழிவைக் குறித்து த நியூ வெஸ்ட்மினிஸ்டர் டிக்ஷ்னரி ஆஃப் த பைபிள், 1970, பக்கம் 822 இவ்வாறு கூறுகிறது: “அதை வென்றவர்கள், அந்தக் குன்றில் அரணான ஒரு பட்டணம் இருந்தது என்ற சுவடே தெரியாமல் போகும்படி எல்லா அத்தாட்சிகளையும் அழித்துப்போட்டனர்.”

5மீகா தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றங்களை ஆதரிக்கும் ஏராளமான தொல்பொருள் அத்தாட்சிகளும் உள்ளன. அசீரியர்கள் சமாரியாவை அழித்தது பற்றிய விவரங்கள் அசீரிய பதிவேடுகளில் காணப்படுகின்றன. உதாரணமாக, “நான் சமாரியாவை (சா-மெ-ரி-னா-வை) முற்றுகையிட்டு கைப்பற்றினேன்” என்று அசீரிய அரசன் சர்கோன் பெருமைபாராட்டினான். a எனினும், அவனுக்கு முன்னிருந்த அரசன் ஐந்தாம் சல்மனாசாரே அதை முழுமையாக கைப்பற்றியிருக்க வேண்டும். சல்மனாசாரைக் குறித்து பாபிலோனிய பதிவேடு ஒன்று இவ்வாறு கூறுகிறது: “அவன் சமாரியாவை பாழாக்கினான். b மீகா முன்னறிவித்தபடியே, எசேக்கியா ஆட்சி செய்தபோது யூதாவின்மீது படையெடுத்தது பற்றி சனகெரிப் விவரமாக பதிவுசெய்திருக்கிறான். (மீ. 1:6, 9; 2 இரா. 18:13) லாகீஸைக் கைப்பற்றியதை சித்தரிக்கும் ஒரு பெரிய ஓவியத்தை நினிவேயில் உள்ள தன் அரண்மனை சுவரில் வரைந்திருக்கிறான். ஒரு உருளையில் அவன் எழுதியிருப்பதாவது: “அவனுடைய பலத்த பட்டணங்களில் 46-ஐ முற்றுகையிட்டேன் . . . (அவற்றிலிருந்து) 2,00,150 ஆட்களை வெளியே துரத்திவிட்டேன் . . . அவனுடைய ராஜாங்க வீடாகிய எருசலேமிலேயே, கூண்டில் அடைப்பட்ட கிளிபோல அவனை சிறைப்படுத்தினேன்.” எசேக்கியா செலுத்தின கப்பத்தை அவன் பட்டியலிட்டாலும் அந்தத் தொகையை மிகைப்படுத்தியே கூறுகிறான். ஆனால் தன்னுடைய சேனைக்கு ஏற்பட்ட பேரழிவைப் பற்றி அவன் ஒன்றுமே குறிப்பிடவில்லை. c2 இரா. 18:14-16; 19:35.

6இந்தப் புத்தகம் தேவாவியால் ஏவப்பட்டது என்பதை எந்தச் சந்தேகத்திற்கும் இடமின்றி நிரூபிக்கும் ஒன்றுள்ளது. அதுவே மேசியாவின் பிறப்பிடத்தை முன்னறிவிக்கும் மீகா 5:2-ல் உள்ள தலைசிறந்த தீர்க்கதரிசனம். (மத். 2:4-6) மேலும் இதிலுள்ள கூற்றுகளுக்கு ஒத்த கூற்றுகளை கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்திலும் காண முடிகிறது.​—மீ. 7:6, 20; மத். 10:35, 36; லூக். 1:72, 73.

7மீகா, யூதேய நாட்டுப்புறத்தைச் சேர்ந்தவர். என்றாலும் எழுத்தாற்றலில் அவர் குறைவுபட்டவர் அல்ல. கடவுளுடைய வார்த்தையிலுள்ள மிகச் சிறந்த சொற்றொடர்களில் சில அவருடைய புத்தகத்தில்தான் காணப்படுகின்றன. 6-ம் அதிகாரம் கருத்தைக் கவரும் உரையாடல் முறையில் எழுதப்பட்டுள்ளது. அவர் சபிக்கிறார், திடீரென்று ஆசீர்வதிக்கிறார், பிறகு மறுபடியும் சபிக்கிறார். இவ்வாறு மீகா ஒரு குறிப்பிலிருந்து மற்றொன்றிற்கு திடீர் திடீரென்று மாறுவதால் அவை வாசகரின் கவனத்தைக் கவருகின்றன. (மீ. 2:10, 12; 3:1, 12; 4:1) இப்புத்தகத்தில் உவமையணி தாராளமாக உபயோகிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக யெகோவா நடந்துசெல்கையில், “மெழுகு அக்கினிக்கு முன்பாக உருகுகிறதுபோலவும், மலைகளிலிருந்து பாயுந் தண்ணீர் தரையைப் பிளக்கிறது போலவும், பர்வதங்கள் அவர் கீழே உருகி, பள்ளத்தாக்குகள் பிளந்துபோகும்” என்று வாசிக்கிறோம்.​—1:4; இதையும் காண்க: 7:17.

8இந்தப் புத்தகத்தை மூன்று பகுதிகளாக பிரிக்கலாம். ஒவ்வொரு பகுதியும் “கேளுங்கள்” என்று ஆரம்பித்து, அதில் கண்டனங்களும், தண்டனை பற்றிய எச்சரிக்கைகளும், ஆசீர்வாதங்கள் பற்றிய வாக்குறுதிகளும் அடங்கியுள்ளன.

மீகாவின் பொருளடக்கம்

9பகுதி 1 (1:1–2:13). சமாரியாவின் உருவ வழிபாடு காரணமாக அதைத் தண்டிப்பதற்காக யெகோவா தம்முடைய ஆலயத்திலிருந்து புறப்படுகிறார். அவர் அதை ‘வெளியான மண்மேடாக்கி,’ “அதின் கற்களைப் பள்ளத்தாக்கிலே புரண்டு விழப்பண்”ணுவார். அப்போது அதன் சொரூபங்களை நொறுக்கிப்போடுவார். அதற்கு இனி சுகப்படுத்துதல் கிடையாது. யூதாவும்கூட குற்றமுள்ளது, அதனால் படைகள் “எருசலேமின் வாசல்வரை” வந்துவிடும். தீங்கான காரியங்களைத் திட்டம் பண்ணுவோர் கண்டனம் செய்யப்படுகின்றனர், “நாம் முற்றிலும் பாழானோம்” என்று அவர்கள் புலம்புவர்!​—1:6, 12; 2:4.

10திடீரென்று யெகோவாவின் இரக்கத்திற்கு கவனம் செலுத்துகிறார். யெகோவாவின் பெயரில் அந்தத் தீர்க்கதரிசி பின்வருமாறு அறிவிக்கிறார்: “யாக்கோபின் ஜனங்களே, உங்களெல்லாரையும் நான் நிச்சயமாய்க் கூட்டுவேன். . . . அவர்களை ஏகக்கூட்டமாக்குவேன், தன் தொழுவத்துக்குள்ளே சேர்ந்த மந்தைக்குச் சமானமாய் ஜனத்திரளினாலே இரைச்சல் உண்டாகும்.”​—2:12.

11பகுதி 2 (3:1–5:15). மீகா தொடர்ந்து கூறுகிறார்: “யாக்கோபின் தலைவர்களே, இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகளே” கேளுங்கள். “நன்மையை வெறுத்து, தீமையை விரும்பி” ஜனங்களை ஒடுக்கும் இவர்களுக்கு எதிராக கடுமையான கண்டனத்தைக் கூறுகிறார். அவர்கள் ஜனங்களின் ‘எலும்புகளை முறித்து . . . துண்டித்தார்கள்.’ (3:1-3) உண்மையான வழிநடத்துதலைக் கொடுக்காமல், கடவுளுடைய ஜனங்களை வழிவிலக செய்யும் பொய் தீர்க்கதரிசிகளும் அவர்களுடன் கண்டிக்கப்படுகின்றனர். இப்படிப்பட்ட செய்தியை அறிவிக்க மனித தைரியம் மட்டுமே போதாது! ஆனால் மீகா உறுதியான நம்பிக்கையுடன் பின்வருமாறு கூறுகிறார்: “நானோ, யாக்கோபுக்கு அவன் மீறுதலையும், இஸ்ரவேலுக்கு அவன் பாவத்தையும் அறிவிக்கும்படி, கர்த்தருடைய ஆவி அருளிய பலத்தினாலும், நியாயத்தினாலும், பராக்கிரமத்தினாலும் நிரப்பப்பட்டிருக்கிறேன்.” (3:8) இரத்தப்பழி உடைய அதிபதிகளை அவர் இவ்வாறு கண்டனம் செய்வது கடுமையான உச்சக்கட்டத்தை அடைகிறது: “அதின் தலைவர்கள் பரிதானத்துக்கு நியாயந்தீர்க்கிறார்கள்; அதின் ஆசாரியர்கள் கூலிக்கு உபதேசிக்கிறார்கள்; அதின் தீர்க்கதரிசிகள் பணத்துக்குக் குறிசொல்லுகிறார்கள்.” (3:11) ஆகையால் சீயோன் வயல்வெளியைப் போல உழப்பட்டு, எருசலேம் பாழடைந்த வெறும் மண்மேடாகும்.

12மறுபடியும் இந்தத் தீர்க்கதரிசனம் திடீரென்று “கடைசி நாட்க”ளுக்கு கவனம் செலுத்துகிறது. அப்போது யெகோவாவின் பர்வதத்தில் அவருடைய வணக்கம் திரும்ப நிலைநாட்டப்படும் என்பதைப் பற்றிய மனதைக் கனிவிக்கும் மகத்தான ஒரு விவரிப்பை அளிக்கிறது. (4:1) யெகோவாவின் வழிகளைக் கற்றுக்கொள்ள பல தேசத்தார் முன் வருவர். ஏனெனில் சீயோனிலிருந்தும் எருசலேமிலிருந்தும், அவருடைய சட்டமும் வார்த்தையும் வெளிப்படும். அவர்கள் இனிமேலும் யுத்தத்தைக் கற்கமாட்டார்கள், மாறாக ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் திராட்சைச் செடியின் கீழும் அத்திமரத்தின் கீழும் உட்காருவார்கள். அவர்கள் பயப்பட வேண்டிய அவசியமே இருக்காது. ஜனங்கள் அவரவர் தங்கள் கடவுட்களைப் பின்பற்றட்டும், உண்மை வணக்கத்தாரோ தங்கள் கடவுளாகிய யெகோவாவின் பெயரில் நடப்பார்கள். அவரே அவர்கள்மீது அரசராக என்றென்றும் ஆளுவார். ஆனாலும், சீயோன் முதலில் பாபிலோனுக்கு சிறைப்பட்டு செல்ல வேண்டும். அதற்கு பிறகு அது திரும்ப நிலைநாட்டப்படும்போதுதான் யெகோவா அதன் சத்துருக்களை நொறுக்கிப்போடுவார்.

13இஸ்ரவேலை ஆளப்போகிறவர் பெத்லகேம் எப்பிராத்தாவிலிருந்து வருவார் என மீகா இப்போது முன்னறிவிக்கிறார். “அவருடைய புறப்படுதல் அநாதிநாட்களாகிய பூர்வத்தினுடையது.” அவர் “கர்த்தருடைய பலத்தோடு” மேய்ப்பராக ஆட்சி செய்து, இஸ்ரவேலில் மாத்திரம் அல்ல, “பூமியின் எல்லைகள் பரியந்தமும்” மகத்துவமானவராக இருப்பார். (5:2, 4) படையெடுத்து வரும் அசீரியனுடைய வெற்றி தற்காலிகமானதே. ஏனெனில் அவன் திருப்பி அனுப்பப்படுவான், அவனுடைய சொந்த தேசமும் பாழாக்கப்படும். “யாக்கோபிலே மீதியானவர்கள்” ஜனங்களுக்குள் “கர்த்தராலே வருகிற பனியைப்போலவும்” தேசங்கள் மத்தியிலே தைரியத்தில் சிங்கத்தைப் போலவும் இருப்பார்கள். (5:7) யெகோவா பொய் வணக்கத்தை வேரோடு பிடிங்கிப்போட்டு, கீழ்ப்படியாத தேசங்களைப் பழிவாங்குவார்.

14பகுதி 3 (6:1–7:20). கவனத்தைக் கவரும் நீதிமன்ற காட்சி ஒன்று இப்போது உரையாடல் முறையில் அளிக்கப்படுகிறது. யெகோவாவுக்கு இஸ்ரவேலோடு ‘சட்டப்பூர்வ வழக்கு ஒன்றுள்ளது,’ அதற்கு சாட்சிகளாக இருக்கும்படி குன்றுகளையும் மலைகளையும் அழைக்கிறார். (6:1, NW) தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளைக் கூறும்படி இஸ்ரவேலை அழைத்து, அவர்களுக்காக தாம் செய்த நீதியுள்ள செயல்களைக் கூறுகிறார். பூமியில் வாழும் மனிதனிடம் யெகோவா எதை எதிர்பார்க்கிறார்? ஏராளமான மிருக பலிகளை அல்ல; மாறாக, “நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, . . . தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை”யே கேட்கிறார். (6:8) ஆனால் இவற்றை இஸ்ரவேலில் பார்க்கவே முடிவதில்லை. நீதிக்கும் இரக்கத்திற்கும் பதிலாக “கள்ளத்தராசும்,” கொடுமையும், பொய்யும், கபடமுமே நிறைந்துள்ளன. (6:11) அவர்கள் கடவுளோடு மனத்தாழ்மையுடன் நடப்பதற்கு பதிலாக, சமாரியாவில் ஆட்சி செய்த உம்ரி மற்றும் ஆகாபின் பொல்லாத ஆலோசனைகளையும் உருவ வழிபாட்டையுமே பின்பற்றுகிறார்கள்.

15இந்தத் தீர்க்கதரிசி தன் ஜனத்தின் ஒழுக்கங்கெட்ட நிலையைக் குறித்து மிகவும் வருந்துகிறார். அவர்களில் அதிக “செம்மையானவன் நெரிஞ்சிலைப் பார்க்கக் கடுங்கூர்மையானவன்.” (7:4) நெருங்கிய நண்பர்கள் மத்தியிலும் குடும்ப அங்கத்தினர் மத்தியிலும்கூட நம்பிக்கைத்துரோகம் நிலவுகிறது. ஆனாலும் மீகா சோர்ந்துவிடவில்லை. “நானோவென்றால் கர்த்தரை நோக்கிக்கொண்டு, என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்பேன்; என் தேவன் என்னைக் கேட்டருளுவார்.” (7:7) யெகோவா தம்முடைய ஜனத்தை தண்டிப்பதைக் கண்டு களிகூர வேண்டாம் என மீகா மற்றவர்களை எச்சரிக்கிறார், ஏனெனில் அவர்களுக்கு விடுதலை நிச்சயம் உண்டு. யெகோவா தம்முடைய ஜனத்தை மேய்த்து, போஷித்து அவர்களுக்கு “அதிசயங்களை” காட்டுவார். அதைக் கண்டு தேசங்கள் பயப்படுவார்கள். (7:15) மீகா தன் புத்தகத்தை முடிக்கையில் யெகோவாவின் அருமையான அன்புள்ள தயவுக்காக அவரைத் துதிக்கிறார். இவ்வாறு தன் பெயரின் அர்த்தத்திற்கு ஏற்றவாறே செயல்படுகிறார். உண்மையில், ‘யெகோவாவுக்கு ஒப்பான கடவுள் யார்?’​—7:18, NW.

ஏன் பயனுள்ளது

16ஏறக்குறைய 2,700 ஆண்டுகளுக்கு முன்பு மீகா உரைத்த தீர்க்கதரிசனம் ‘கடிந்துகொள்ளுதலுக்கு பயனுள்ளதாக இருந்தது.’ ஏனெனில் யூத அரசனாகிய எசேக்கியா, மீகாவின் செய்தியைக் கேட்டு அந்த ஜனங்கள் மனந்திரும்பும்படியும் மத அடிப்படையில் சீர்திருந்தும்படியும் வழிநடத்தினார். (மீ. 3:9-12; எரே. 26:18, 19; ஒப்பிடுக: 2 இராஜாக்கள் 18:1-4) ஆவியால் ஏவப்பட்ட இந்தத் தீர்க்கதரிசனம் இன்று இன்னும் அதிக பயனுள்ளது. கடவுளை வணங்குவதாக உரிமைபாராட்டிக் கொள்பவர்களே, பொய் மதம், உருவ வழிபாடு, பொய் சொல்லுதல், வன்முறை ஆகியவற்றிற்கு எதிரான மீகாவின் தெளிவான எச்சரிக்கைகளுக்கு செவிகொடுங்கள்! (மீ. 1:2; 3:1; 6:1) இந்த எச்சரிக்கைகளை, 1 கொரிந்தியர் 6:9-11-ல் பவுல் மீண்டும் வலியுறுத்துகிறார். உண்மை கிறிஸ்தவர்கள் சுத்தமாக கழுவப்பட்டிருக்கிறார்கள் என்றும் இத்தகைய செயல்களைப் பழக்கமாக செய்பவர்கள் கடவுளுடைய ராஜ்யத்திற்குள் நுழைய முடியாது என்றும் கூறுகிறார். மனிதன், நீதியிலும் தயவிலும் மனத்தாழ்மையிலும் யெகோவாவோடு நடக்க வேண்டும் என்பதையே அவர் நம்மிடம் எதிர்பார்க்கிறார் என மீகா 6:8 எளிய விதத்திலும் தெளிவாகவும் கூறுகிறது.

17‘ஒருவனுடைய சத்துருக்கள் அவன் வீட்டாரே’ என்று சொல்லுமளவுக்கு பிளவுபட்டிருந்த ஜனங்களிடம் மீகா தன் செய்தியை அறிவித்தார். உண்மை கிறிஸ்தவர்களும் அநேகமாக இதேபோன்ற சூழ்நிலைமைகளில்தான் பிரசங்கிக்க வேண்டியிருக்கிறது. சிலர் தங்கள் சொந்த குடும்பத்தினராலேயே காட்டிக்கொடுக்கப்படுகின்றனர், துன்புறுத்துதலையும்கூட சந்திக்கின்றனர். என்றாலும், அவர்கள் எப்போதும் ‘தங்கள் இரட்சிப்பின் தேவனாகிய’ யெகோவாவை நோக்கி பொறுமையோடு காத்திருக்கின்றனர். (மீ. 7:6, 7; மத். 10:21, 35-39) துன்புறுத்தப்படுகையில் அல்லது கடினமான நியமிப்பைப் பெறுகையில் நாம் தைரியத்துடன் யெகோவா மீது சார்ந்திருக்க வேண்டும். அப்போது மீகாவைப்போல, அவருடைய செய்தியை அறிவிக்க “கர்த்தருடைய ஆவி அருளிய பலத்தினா[ல்]” நிரப்பப்படுவோம். “யாக்கோபிலே மீதியானவர்கள்” மத்தியில் இத்தகைய தைரியம் காணப்படும் என்று மீகா தீர்க்கதரிசனம் உரைத்தார். இவர்கள் ‘பாலசிங்கத்தைப் போல ஜாதிகளுக்குள் அநேக ஜனங்களின் நடுவிலே இருப்பார்கள்.’ அதேசமயம் யெகோவாவிடமிருந்து வரும் புத்துயிரளிக்கும் பனியையும் மழையையும் போல இருப்பார்கள். முதல் நூற்றாண்டில் கிறிஸ்தவ சபையின் பாகமான ‘இஸ்ரவேலில் (யாக்கோபில்) மீந்தவர்கள்’ மத்தியில் இந்தப் பண்புகள் நிறையவே காணப்பட்டன.​—மீ. 3:8; 5:7, 8; ரோ. 9:27; 11:5, 26.

18மீகா தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக இயேசு பெத்லகேமில் பிறந்தது இந்தப் புத்தகம் கடவுளால் ஏவப்பட்டது என்பதை உறுதி செய்வது மட்டுமல்ல, அந்த வசனத்தின் சூழமைவிற்கும் விளக்கம் தருகிறது. அதாவது, கிறிஸ்து இயேசுவின் அதிகாரத்தின்கீழ் கடவுளுடைய ராஜ்யம் வரப்போகிறது என்பதற்கான தீர்க்கதரிசனமாகவும் அது உள்ளது. பெத்லகேமிலிருந்து (அப்பத்தின் வீட்டிலிருந்து) தோன்றுகிறவர் இயேசுவே. அவருடைய பலியில் விசுவாசம் வைக்கும் யாவருக்கும் ஜீவனளிக்கும் நன்மைகளைக் கொடுப்பவரும் அவரே. ‘கர்த்தருடைய பலத்தில் மேய்ப்பவரும்’ அவரே. அவர் மேன்மையானவராகி திரும்ப நிலைநாட்டப்பட்டு, ஒன்றுசேர்க்கப்பட்ட கடவுளுடைய மந்தை மத்தியில் பூமியின் எல்லைகள் வரை சமாதானத்தைக் கட்டளையிடுகிறார்.​—மீ. 5:2, 4; 2:12; யோவா. 6:33-40.

19‘கடைசி நாட்கள்’ பற்றிய மீகாவின் தீர்க்கதரிசனத்திலும் மிகுந்த உற்சாகம் கிடைக்கிறது. அப்போது “எல்லா ஜாதிகளும்” யெகோவாவிடமிருந்து போதனையை நாடுவார்கள். “அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அறிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஒரு ஜாதிக்கு விரோதமாய் மறுஜாதி பட்டயம் எடுப்பதில்லை; இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை. அவனவன் தன்தன் திராட்சச் செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்; சேனைகளுடைய கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று.” அவர்கள் பொய் வணக்கத்தை முற்றிலுமாக விட்டுவிட்டு பின்வருமாறு கூறுவதில் மீகாவுடன் சேர்ந்துகொள்கின்றனர்: “நாங்களும் எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நடப்போம்.” மீகா தீர்க்கதரிசனம், இப்பேர்ப்பட்ட பெரும் முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்கள் பற்றிய முன்காட்சியை அளிப்பதால் நம் விசுவாசத்தை ஊட்டி வளர்க்கிறது. யெகோவாவே ஈடற்ற உன்னத பேரரசரும் ராஜாவும் என மகிமைப்படுத்துவதாலும் இப்புத்தகம் முக்கியத்துவம் வாய்ந்தது. “அவர்கள் பேரில் கர்த்தர் சீயோன் பர்வதத்திலே இதுமுதல் என்றென்றைக்கும் ராஜாவாயிருப்பார்” என்ற வார்த்தைகள் எவ்வளவு கிளர்ச்சியூட்டுகின்றன!​—மீ. 4:1-7; 1 தீ. 1:17.

[அடிக்குறிப்புகள்]

a ஏன்ஷியன்ட் நியர் ஈஸ்டர்ன் டெக்ஸ்ட்ஸ், ஜேம்ஸ் பி. பிரிட்சார்டு என்பவரால் பதிப்பிக்கப்பட்டது, 1974, பக்கம் 284.

b அசீரிய மற்றும் பாபிலோனிய பதிவேடுகள், (ஆங்கிலம்) எ. கே. க்ரேசன், 1975, பக்கம் 73.

c ஏன்ஷியன்ட் நியர் ஈஸ்டர்ன் டெக்ஸ்ட்ஸ், 1974, பக்கம் 288; வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 2, பக்கங்கள் 894-5.

[கேள்விகள்]

1. மீகா எப்படிப்பட்ட மனிதராக இருந்தார்?

2. மீகாவையும் அவர் தீர்க்கதரிசனம் உரைத்த காலப்பகுதியையும் பற்றி என்ன அறிந்திருக்கிறோம்?

3. எப்படிப்பட்ட முக்கியமான காலத்தில் மீகா சேவித்தார், யெகோவா ஏன் அவரைத் தீர்க்கதரிசியாக நியமித்தார்?

4. மீகா புத்தகத்தின் நம்பகத் தன்மையை எது நிரூபிக்கிறது?

5. மீகா உரைத்த தீர்க்கதரிசனங்கள் நிறைவேறின என்பதை தொல்பொருள் ஆராய்ச்சி எவ்வாறு நிரூபிக்கிறது?

6. மீகா புத்தகம் ஆவியால் ஏவப்பட்டது என்பதை எந்தச் சந்தேகத்திற்கும் இடமின்றி நிரூபிப்பது எது?

7. மீகாவின் எழுத்தாற்றலைப் பற்றி என்ன சொல்லப்படலாம்?

8. மீகா புத்தகத்தின் மூன்று பகுதிகள் ஒவ்வொன்றிலும் என்ன அடங்கியுள்ளது?

9. சமாரியாவுக்கும் யூதாவுக்கும் எதிராக என்ன தண்டனை தீர்ப்புகள் அறிவிக்கப்படுகின்றன?

10. யெகோவாவின் இரக்கத்திற்கு எவ்வாறு கவனம் செலுத்தப்படுகிறது?

11. (அ) யாக்கோபு மற்றும் இஸ்ரவேலின் அரசர்களுக்கு எதிராக என்ன கண்டன அறிவிப்பு கொடுக்கப்படுகிறது? (ஆ) மீகா தன் தைரியத்தின் ஊற்றுமூலத்தை எவ்வாறு ஒப்புக்கொள்ளுகிறார்?

12. ‘கடைசி நாட்களுக்கு’ என்ன மகத்தான தீர்க்கதரிசனம் கொடுக்கப்படுகிறது?

13. பெத்லகேமிலிருந்து எத்தகைய அரசர் வருவார், “யாக்கோபிலே மீதியானவர்கள்” எதைப்போல் ஆவார்கள்?

14. (அ) என்ன உவமையோடு மீகா புத்தகத்தின் மூன்றாம் பகுதி ஆரம்பிக்கிறது? (ஆ) யெகோவா எதிர்பார்க்கும் என்ன தகுதிகளை நிறைவேற்ற இஸ்ரவேலர்கள் தவறினர்?

15. (அ) எதைக் குறித்து இந்தத் தீர்க்கதரிசி வருந்துகிறார்? (ஆ) மீகா புத்தகம் என்ன பொருத்தமான முடிவுரையோடு முடிகிறது?

16. (அ) மீகா தீர்க்கதரிசனம் எசேக்கியாவின் நாளில் எவ்வாறு பயனுள்ளதாக நிரூபித்தது? (ஆ) நம் நாளுக்கு என்ன வல்லமைவாய்ந்த அறிவுரைகள் அதில் அடங்கியுள்ளன?

17. துன்புறுத்துதல் மற்றும் இக்கட்டின்கீழும் கடவுளைச் சேவிப்போருக்கு என்ன உற்சாகமூட்டுதலை மீகா அளிக்கிறார்?

18. மீகாவின் எந்தத் தீர்க்கதரிசனம் கிறிஸ்து இயேசுவின் மூலமான கடவுளுடைய ராஜ்ய ஆட்சியுடன் இணைகிறது?

19. (அ) “கடைசி நாட்களில்” வாழ்வோருக்கு விசுவாசத்தை வளர்க்கும் என்ன ஊக்கமூட்டுதல் அளிக்கப்படுகிறது? (ஆ) யெகோவாவின் அரசதிகாரத்தை மீகா எவ்வாறு உயர்த்திப் பேசுகிறார்?