Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் புத்தக எண் 34—நாகூம்

பைபிள் புத்தக எண் 34—நாகூம்

பைபிள் புத்தக எண் 34—நாகூம்

எழுத்தாளர்: நாகூம்

எழுதப்பட்ட இடம்: யூதா

எழுதி முடிக்கப்பட்டது: பொ.ச.மு. 632-க்கு முன்

“நினிவேக்கு எதிரான கண்டன அறிவிப்பு.” (நாகூ. 1:1, NW) அச்சந்தரும் இந்த வார்த்தைகளோடு நாகூம் தீர்க்கதரிசனம் உரைக்க ஆரம்பிக்கிறார். ஆனால் அவர் ஏன் அழிவிற்குரிய இந்த அறிவிப்பை செய்தார்? பூர்வ நினிவே பற்றி என்ன அறியப்பட்டுள்ளது? ‘இரத்தப்பழிகளின் நகரம்’ என்ற இரண்டே வார்த்தைகளில் அதன் சரித்திரத்தை நாகூம் கூறுகிறார். (3:1) வட ஈராக்கில் உள்ள தற்கால நகரமாகிய மோசுலுக்கு எதிரே, டைகிரீஸ் நதியின் கிழக்கு கரையில் அமைந்த இரண்டு மண்மேடுகளே பூர்வ நினிவே இருந்த இடத்தைக் குறிக்கின்றன. அதில் மதில்களும் அகழிகளும் நிறைந்திருந்ததால் பலத்த பாதுகாப்புமிக்க பட்டணமாக இருந்தது. பிற்காலத்தில் அசீரிய பேரரசின் தலைநகரமாகவும் சேவித்தது. எனினும், இந்த நகரம் நிம்ரோதின் நாட்களில் உருவானது. அவன், “யெகோவாவுக்கு விரோதமான பலத்த வேட்டைக்காரன் . . . இவன் அசீரியாவிற்குள் சென்று நினிவேயைக் கட்டினான்.” (ஆதி. 10:9-11, NW) இவ்வாறு நினிவேயின் ஆரம்பமே மோசமானதாக இருந்தது. சர்கோன், சனகெரிப், எசரத்தோன் மேலும் அசீரிய பேரரசின் முடிவு காலத்தில் ஆண்ட அஷுர்பானிப்பால் ஆகியோரின் ஆட்சி காலத்தில் இது அதிக புகழ்பெற்றது. போர்கள், நாடுகளைக் கைப்பற்றுதல் ஆகியவை மூலம் கிடைத்த கொள்ளைப்பொருட்களால் அது செல்வசெழிப்பு உள்ள நாடானது. மேலும் சிறைபிடித்த ஏராளமான கைதிகளை கொடூரமாக, மனிதத்தன்மையற்ற விதத்தில் நடத்தியதற்கு அதன் அரசர்கள் பேர்பெற்றிருந்தனர். a சி. டபிள்யு. செரம் என்பவர் தெய்வங்கள், பிரேதக்குழிகள், புலவர்கள் (1954) என்ற தன் ஆங்கில புத்தகத்தின் 266-ம் பக்கத்தில் பின்வருமாறு கூறுகிறார்: “நினிவே என்று சொன்னாலே கொலை, கொள்ளை, ஒடுக்குதல், பலவீனரைத் தாக்குதல், போர், சகல விதமான சரீர கொடுமை, மரண பயத்தால் மக்களை ஆட்டிப்படைத்த கொலைவெறி பிடித்த ஆட்சியாளர்களின் வம்சாவளி போன்றவைதான் மக்களின் மனதிற்கு வரும். அவர்களையும்விட கொடூரமான எதிரிகளே அவர்களை வென்று கைப்பற்றினார்கள்.”

2நினிவேயின் மதத்தைப் பற்றியென்ன? அதில் ஏராளமான தெய்வங்கள் வணங்கப்பட்டன, அவற்றில் பல பாபிலோனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. அதன் அரசர்கள் அழிக்கவும் சங்கரிக்கவும் புறப்படுகையில் உதவிக்காக இந்தத் தெய்வங்களிடம் வேண்டுதல் செய்தனர். கொள்ளைப்பொருட்களில் ஏராளமானவற்றை பெறவேண்டும் என்ற பேராசைகொண்ட பூசாரிகள் அதன் போர் நடவடிக்கைகளைத் தூண்டிவிட்டனர். பூர்வ நகரங்கள் (1886, பக்கம் 25) என்ற தன் ஆங்கில புத்தகத்தில் டபிள்யு. பி. ரைட் பின்வருமாறு கூறுகிறார்: “அவர்கள் பலத்தை தெய்வமாக வணங்கினார்கள். பெரிய கற்சிலைகளிடம்தான் ஜெபம் செய்வார்கள். மாபெரும் பாதங்களுடைய சிங்கங்கள் மற்றும் காளைகள், கழுகின் சிறகுகள், மனித தலைகள் போன்றவை பலம், தைரியம், வெற்றி ஆகியவற்றின் சின்னங்களாக இருந்தன. போரிடுவதே அந்தத் தேசத்தின் தொழில். அதன் பூசாரிகள் எப்போதும் போரைத் தூண்டிவிட்டனர். மற்றவர்களுக்கு பங்கிடுவதற்கு முன்பு தங்களுக்கே முதலாவது ஒரு சதவீதம் பிரித்துக் கொண்டதால் கொள்ளைப் பொருட்களிலிருந்து அவர்களுக்கு அதிக பங்கு கிடைத்தது. ஏனெனில் இந்தக் கொள்ளைக்கார இனத்தவர் மட்டுமீறிய பக்தியுடையோர்.”

3நாகூமின் தீர்க்கதரிசனம் சிறியதாக இருந்தாலும் அக்கறைக்குரியது. “எல்கோசானாகிய நாகூமின் தரிசனப் புஸ்தகம்” என முதல் வசனம் கூறுவதே இந்தத் தீர்க்கதரிசி பற்றி நாம் அறிந்த விஷயமாகும். அவருடைய பெயரின் (எபிரெயுவில் நேகம் [Na·chumʹ]) அர்த்தம் “ஆறுதலளிப்பவன்.” அவருடைய செய்தி நினிவேக்கு எந்த விதத்திலும் ஆறுதலளிப்பதாக இல்லை. ஆனால் கடவுளுடைய உண்மை வணக்கத்தாருக்கோ அது எளிதில் விட்டுக்கொடுக்காத, பலத்த சத்துருவிடமிருந்து நிச்சயமான, நிலையான விடுதலையைக் குறித்தது. நாகூம் தன் சொந்த ஜனத்தின் பாவங்களைக் குறிப்பிடாதிருப்பதும் ஆறுதலளிக்கிறது. எல்கோசா இருந்த இடத்தை நிச்சயமாய் அறிய முடியாது என்றாலும் இந்தத் தீர்க்கதரிசனம் யூதாவில் எழுதப்பட்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது. (நாகூ. 1:15) நினிவே வீழ்ச்சியடையும் என நாகூம் தீர்க்கதரிசனம் உரைத்தார், அது பொ.ச.மு. 632-ல் சம்பவித்தது. இதற்கு சிறிது காலத்திற்கு முன்பு நடந்த நோ-அம்மோனின் (எகிப்திலுள்ள தீபஸ்) வீழ்ச்சிக்கு இதை ஒப்பிட்டார். (3:8) ஆகவே, இந்தக் காலப்பகுதியில்தான் நாகூம் தன் தீர்க்கதரிசனத்தை எழுதியிருக்க வேண்டும்.

4இந்தப் புத்தகத்தின் எழுத்துநடையும் தனித்தன்மை வாய்ந்தது. தேவையற்ற வார்த்தைகள் எதுவும் இதில் இல்லை. அதன் ஆற்றலும், மெய்ம்மையும் அது தேவாவியால் ஏவப்பட்ட புத்தகங்களின் ஒரு பாகம் என்று நிரூபிக்கின்றன. விவரமான, உணர்ச்சிப்பூர்வமான, நாடகபாணியான மொழி, மதிப்புமிக்க சொற்கள், தெளிவான வர்ணனை, மனதைக் கவரும் சொல்நடை ஆகியவற்றை உபயோகிப்பதிலும் நாகூம் சிறந்து விளங்குகிறார். (1:2-8, 12-14; 2:4, 12; 3:1-5, 13-15, 18, 19) முதல் அதிகாரத்தின் பெரும்பகுதி அகரவரிசை செய்யுள் (acrostic poem) நடையில் இருப்பதாக தோன்றுகிறது. (1:8, NW அடிக்குறிப்பு) ஒரே பொருளைப் பற்றி பேசுவதால் நாகூமின் எழுத்துநடை இன்னும் சிறப்படைகிறது. இஸ்ரவேலின் நம்பிக்கைதுரோக எதிரியை அவர் அறவே வெறுக்கிறார். நினிவேயின் அழிவுதான் அவர் கண்முன் நின்றது.

5நாகூம் தீர்க்கதரிசனம் துல்லியமாக நிறைவேறியதே அதன் நம்பகத் தன்மையை நிரூபிக்கிறது. நாகூமின் நாளில், அசீரிய உலக வல்லரசின் அகந்தை வாய்ந்த தலைநகர் ‘ஆறுகளின் மதகுகளில்’ திறக்கப்பட்டு அதன் அரண்மனை கரைந்துபோய், அது ‘வெறுமையும், வெட்டவெளியும், பாழுமாகும்’ என்று யெகோவாவின் தீர்க்கதரிசியை தவிர வேறு யாரால் அவ்வளவு தைரியத்துடன் முன்னறிவித்திருக்க முடியும்? (2:6-10) இதைப் பின்தொடர்ந்த சம்பவங்கள், இந்தத் தீர்க்கதரிசனம் நிச்சயமாகவே கடவுளால் ஏவப்பட்டது என்று காட்டின. மேதியரும் பாபிலோனியரும் நினிவேயைக் கைப்பற்றியதைப் பாபிலோனிய அரசன் நெபோபொலேசாரின் பதிவேடுகள் பின்வருமாறு விவரிக்கின்றன: “[அவர்கள்] நகரத்தை பாழாக்கப்பட்ட குன்றுகளாகவும் [குப்பைக்கூளங்களாகவும் . . . ஆக்கினார்கள் . . . ].” b நினிவே அவ்வளவு முழுமையாக அழிக்கப்பட்டதால் பல நூற்றாண்டுகளாக அது இருந்த இடம்கூட தெரியாமல் இருந்தது. இதை வைத்துக்கொண்டு குறைகாண்போர் சிலர், நினிவே ஒருபோதும் இருந்திருக்க முடியாதென்று சொல்லி பைபிளை ஏளனம் செய்தனர்.

6எனினும், நினிவே இருந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டு 19-ம் நூற்றாண்டில் அங்கே ஆராய்ச்சிகள் தொடங்கப்பட்டன. இதுவும் நாகூமின் நம்பகத் தன்மைக்கு கூடுதலான அத்தாட்சியைக் கொடுக்கிறது. அதை முழுமையாக தோண்டியெடுக்க வேண்டுமென்றால் பல லட்சக்கணக்கான டன் மண்ணை நீக்க வேண்டியிருக்கும் என மதிப்பிடப்பட்டது. நினிவேயில் என்ன தோண்டியெடுக்கப்பட்டது? நாகூம் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தை ஆதரிக்கும் அநேக காரியங்கள் கிடைத்தன! உதாரணமாக, அங்கு கிடைத்த நினைவுச் சின்னங்களும் கல்வெட்டுகளும் அதன் கொடூரத்திற்கு சாட்சி பகருகின்றன. சிறகுகளுள்ள காளைகள் மற்றும் சிங்கங்களின் பெரும் சிலைகளின் பகுதிகளும் உள்ளன. நாகூம் அதைச் “சிங்கங்களின் வாசஸ்தலம்” என்று கூறியதில் ஆச்சரியம் எதுவும் உண்டோ?​—2:11. c

7யூதர்கள், நாகூம் புத்தகத்தை தேவாவியால் ஏவப்பட்ட வேதவாக்கியங்களின் பாகமாக ஏற்றுக்கொண்டதே இது பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலை சேர்ந்தது என்பதைக் காட்டுகிறது. இது பைபிளின் மற்ற பாகங்களோடு முற்றிலும் இசைந்துள்ளது. இந்தத் தீர்க்கதரிசனம் யெகோவாவின் பெயரில் உரைக்கப்பட்டுள்ளது, அவருடைய பண்புகளுக்கும் ஈடற்ற அதிகாரத்திற்கும் அருமையான சாட்சி பகருகிறது.

நாகூமின் பொருளடக்கம்

8நினிவேக்கு எதிரான யெகோவாவின் அறிவிப்பு (1:1-15). “யெகோவா தனிப்பட்ட பக்தியை வற்புறுத்துகிற கடவுள் மேலும் பழிவாங்குகிறவர்” என்ற வார்த்தைகளுடன் ‘நினிவேக்கு எதிரான அறிவிப்பை’ இந்தத் தீர்க்கதரிசி ஆரம்பிக்கிறார். (1:1, 2, NW) யெகோவா கோபிப்பதற்கு தாமதிக்கிறவர் என்றபோதிலும் காற்றையும் புயலையும் உபயோகித்து அவர் பழிவாங்குவதை இப்போது வந்து பாருங்கள். மலைகள் அதிருகின்றன, குன்றுகள் கரைகின்றன, பூமி குலுங்குகிறது. அவருடைய உக்கிர கோபத்தின் வெப்பத்தை யாரால் சகிக்க முடியும்? இருப்பினும், யெகோவாவை அடைக்கலமாக தேடுகிறவர்களுக்கு அவர் பாதுகாப்பான கோட்டை. ஆனால் நினிவே நிச்சயம் அழிக்கப்படும். அது புரண்டுவரும் வெள்ளத்தால் சர்வசங்காரம் செய்யப்படும், “இடுக்கம் மறுபடியும் உண்டாகாது.” (1:9) யெகோவா அதன் பெயரையும் அதன் தெய்வங்களையும் நிர்மூலமாக்குவார். அவர் அதற்கு சமாதி கட்டுவார். இதற்கு நேர்மாறாக, யூதாவிற்கோ நற்செய்தி உள்ளது! அது என்ன? சமாதானத்தை அறிவிக்கும் ஒருவன், அவர்கள் தங்கள் பண்டிகைகளை ஆசரித்து தங்கள் பொருத்தனைகளை செலுத்தும்படி அவர்களிடம் கூறுகிறான். ஏனெனில் சத்துருவாகிய “துஷ்டன்” அழிவுக்கு நியமிக்கப்பட்டுள்ளான், “அவன் முழுவதும் சங்கரிக்கப்படுவான்.”​—1:15

9நினிவேயின் அழிவு பற்றிய முன்காட்சி (2:1–3:19). வரவிருக்கும் சிதறடிக்கிறவனுக்கு எதிராக தன்னை பலப்படுத்திக்கொள்ளும்படி நாகூம் நினிவேயிடம் ஏளனமாக சவால்விடுகிறார். யெகோவா, ‘யாக்கோபு மற்றும் இஸ்ரவேலின் மகிமையான’ தம்முடையவர்களை திரும்ப கூட்டிச்சேர்ப்பார். அவருடைய பராக்கிரமசாலிகளின் கேடயத்தையும் சிகப்பு நிற ஆடையையும், ‘அவர் ஆயத்தமாகும் நாளிலே அவருடைய போர் இரதத்தின்’ அக்கினிமயமான இரும்பு அலகுகளையும் பாருங்கள்! போர் ரதங்கள் ‘தெருக்களில் கடகடவென்று ஓடி, மின்னல்களைப்போல் வேகமாய்ப் பறக்கின்றன.’ (2:2-4) இப்போது அந்தப் போரின் தீர்க்கதரிசன காட்சியைக் காண்கிறோம். நினிவே பட்டணத்தார் தட்டுத்தடுமாறி மதிலைக் காக்க விரைந்தோடுகின்றனர், ஆனால் ஒரு பிரயோஜனமும் இல்லை. நதியோர வாசல்கள் திறக்கின்றன, அரண்மனை கரைந்துபோகிறது, தாதிமார்கள் அழுது தங்கள் மார்பில் அடித்துக்கொள்கிறார்கள். தப்பியோடும் ஆட்களை நிற்கும்படி கட்டளையிட்டும் ஒருவரும் திரும்பிக்கூட பார்ப்பதில்லை. நகரம் கொள்ளையிடப்பட்டு பாழாக்கப்படுகிறது. இதயங்கள் உருகுகின்றன. சிங்கங்களின் கெபி எங்கே போனது? சிங்கம் தன் குட்டிகளுக்காக கெபியில் இரையை நிரப்பினது, ஆனால் யெகோவா அறிவிக்கிறார்: “இதோ நான் உனக்கு விரோதமாக” இருக்கிறேன். (2:13) யெகோவா, நினிவேயின் போர் கருவிகளை எரித்து, ஒரு பட்டயத்தால் அதன் இளம் சிங்கங்களை அழித்து, அதன் இரையை பூமியிலிருந்து அற்றுப்போகப்பண்ணுவார்.

10“இரத்தப்பழிகளின் நகரத்திற்கு ஐயோ! அது வஞ்சகத்தினாலும் கொடுமையினாலும் நிறைந்திருக்கிறது.” அங்கே சவுக்கின் ஓசையும் சக்கரம் உருண்டோடும் சப்தமும் கேட்கிறதா? பாய்ந்தோடும் குதிரை, விரைந்தோடும் இரதங்கள், குதிரையில் அமர்ந்த வீரன், துலங்கும் பட்டயம், மினுமினுக்கும் ஈட்டி, இவற்றிற்கு பின் ஏராளமான பிரேதங்களையும் பார்க்க முடிகிறதா? “பிணங்களுக்குத் தொகையில்லை.” (3:1, 3) ஏன்? ஏனெனில் அது தேசங்களை தன் வேசித்தனத்தினாலும் குடும்பங்களை தன் சூனியத்தினாலும் கண்ணியில் சிக்க வைத்தது. “இதோ, நான் உனக்கு விரோதமாக” இருக்கிறேன் என யெகோவா இரண்டாவது முறையாக அறிவிக்கிறார். (3:5) நினிவே ஒரு வேசியாக வெளிப்படுத்தப்பட்டு முழுமையாக அழிக்கப்படும். நோ-அம்மோனை (தீபஸை) அசீரியா சிறைப்பிடித்து சென்றதைப் போலவே இதற்கும் நேரிடும். அதன் கோட்டைகள் பழுத்த அத்திப்பழங்களைப் போல் உள்ளன, “அவைகள் குலுக்கப்பட்டால் அவைகளின் பழம் தின்கிறவன் வாயிலே விழும்.” (3:12) அதன் போர்வீரர்கள் பெண்களைப் போன்றவர்கள். அக்கினியிலிருந்தும் பட்டயத்திலிருந்தும் நினிவேயை எதுவும் காப்பாற்ற முடியாது. சூரியன் பிரகாசிக்கும்போது பறந்தோடும் வெட்டுக்கிளிகளைப் போல் அதன் காவலாளர்கள் ஓடிப்போவார்கள், அதன் ஜனங்களும் சிதறடிக்கப்படுவார்கள். அசீரியாவின் அரசன் தனக்கு ஆறுதல் இல்லை என்றும் இந்தப் பேரழிவிற்கு சுகப்படுத்துதல் இல்லை என்றும் அறிந்துகொள்வான். அசீரியா செய்த தீமையால் எல்லாரும் துன்பப்பட்டதால் இந்தச் செய்தியைக் கேட்போர் யாவரும் கைக்கொட்டி மகிழ்வார்கள்.

ஏன் பயனுள்ளது

11நாகூமின் தீர்க்கதரிசனம் சில அடிப்படையான பைபிள் நியமங்களை விளக்குகிறது. பத்துக் கற்பனைகளில் இரண்டாவதைக் கடவுள் கொடுத்ததற்கான காரணத்தை இந்தத் தரிசனத்தின் ஆரம்ப வார்த்தைகள் திரும்ப கூறுகின்றன: “யெகோவா தனிப்பட்ட பக்தியை வற்புறுத்துகிற கடவுள்.” பிறகு அவர் நிச்சயமாக ‘தம்முடைய சத்துருக்களுக்கு பிரதிபலன்’ அளிப்பார் என்பதைத் தெரியப்படுத்துகிறார். அசீரியாவின் கொடூரமான அகந்தையும் புறமத தெய்வங்களும் அதை யெகோவாவுடைய நியாயத்தீர்ப்பிலிருந்து காப்பாற்ற முடியவில்லை. அதைப்போலவே, யெகோவா ஏற்ற காலத்தில் பொல்லாதவர்களை நியாயந்தீர்ப்பார் என்பதிலும் நாம் நிச்சயமாக இருக்கலாம். “கர்த்தர் நீடிய சாந்தமும், மிகுந்த வல்லமையுமுள்ளவர்; அவர்களை ஆக்கினையில்லாமல் தப்புவிக்கமாட்டார்.” இவ்வாறு பலத்த அசீரியாவை யெகோவா முழுமையாக அழித்தார் என்ற பின்னணியில் அவருடைய நீதியும் ஈடற்ற அதிகாரமும் மேன்மைப்படுத்தப்படுகின்றன. அறிவித்தபடியே நினிவே ‘வெறுமையும் வெளியும் பாழும்’ ஆயிற்று!​—1:2, 3, NW; 2:10.

12நினிவே ‘முழுவதும் சங்கரிக்கப்படும்.’ மாறாக ‘இஸ்ரவேல் மற்றும் யாக்கோபின் மகிமையோ’ திரும்ப நிலைநாட்டப்படும் என நாகூம் அறிவிக்கிறார். யெகோவா தம்முடைய ஜனத்திற்கு மகிழ்ச்சிக்குரிய நற்செய்தியையும் அறிவிக்கிறார்: “இதோ, சமாதானத்தைக் கூறுகிற சுவிசேஷகனுடைய கால்கள் மலைகளின்மேல் வருகிறது.” சமாதானத்தின் இந்த செய்திகள் கடவுளுடைய ராஜ்யத்தோடு சம்பந்தப்பட்டுள்ளன. இது நமக்கு எப்படி தெரியும்? ஏசாயா இதே வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறார், ஆனால் இவற்றோடு பின்வரும் வார்த்தைகளையும் சேர்ப்பதனால் நமக்கு தெரிகிறது: “இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல்” வருகின்றன. (நாகூ. 1:15; 2:2; ஏசா. 52:7) அப்போஸ்தலன் பவுல், ரோமர் 10:15-ல் நற்செய்தியை அறிவிக்கும் கிறிஸ்தவ பிரசங்கிகளாக யெகோவா அனுப்புவோருக்கு இந்த வார்த்தைகளைப் பொருத்துகிறார். இவர்கள் “ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை” யாவரறிய அறிவிக்கிறார்கள். (மத். 24:14, NW) தன் பெயரின் அர்த்தத்திற்கு இசைவாக நாகூம், கடவுளுடைய ராஜ்யத்துடன் வரும் சமாதானத்தையும் இரட்சிப்பையும் தேடுவோர் யாவருக்கும் மிகுந்த ஆறுதலை அளிக்கிறார். ‘யெகோவா நல்லவர், அவரில் அடைக்கலம் தேடுவோருக்கு துன்பத்தின் நாளிலே பாதுகாப்பான கோட்டை’ என்பதை இவர்கள் அனைவரும் நிச்சயம் உணருவார்கள்.​—நாகூ. 1:7, NW.

[அடிக்குறிப்புகள்]

a வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கம் 201.

b ஏன்ஷியன்ட் நியர் ஈஸ்டர்ன் டெக்ஸ்ட்ஸ், ஜே. பி. பிரிட்சார்டு என்பவரால் பதிப்பிக்கப்பட்டது, 1974, பக்கம் 305; அடைப்புக்குறிகள் அவர்களுடையது; வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கம் 958.

c வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கம் 955.

[கேள்விகள்]

1. பூர்வ நினிவேயைப் பற்றி என்ன அறியப்பட்டுள்ளது?

2. நினிவேயின் மதம் எப்படிப்பட்டது?

3. (அ) எந்தவிதத்தில் நாகூம் என்ற பெயரின் அர்த்தம் பொருத்தமாயுள்ளது? (ஆ) நாகூம் தீர்க்கதரிசனம் எந்தக் காலப்பகுதியைச் சேர்ந்தது?

4. நாகூம் புத்தகத்தில் என்ன எழுத்துநடை காணப்படுகிறது?

5. நாகூம் தீர்க்கதரிசனத்தின் நம்பகத் தன்மையை எது நிரூபிக்கிறது?

6. நாகூமின் நம்பகத் தன்மையை நிரூபிக்கும் எவை பூர்வ நினிவே இருந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன?

7. நாகூம் புத்தகம் பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலைச் சேர்ந்தது என்பதை எது ஆதரிக்கிறது?

8. நினிவேக்கு எதிராக என்ன நியாயத்தீர்ப்பு அறிவிக்கப்படுகிறது, ஆனால் யூதாவுக்கு அறிவிக்கப்படும் நற்செய்தி என்ன?

9. நினிவேயின் தோல்வியைப் பற்றி என்ன தீர்க்கதரிசன காட்சியை நாம் காண்கிறோம்?

10. நினிவே என்னவென்று வெளிப்படுத்தப்படுகிறது, அதன் முடிவு எவ்வாறு விவரிக்கப்படுகிறது?

11. என்ன அடிப்படையான பைபிள் நியமங்கள் நாகூமில் விளக்கப்படுகின்றன?

12. என்ன திரும்பநிலைநாட்டுதலை நாகூம் அறிவிக்கிறார், இவருடைய தீர்க்கதரிசனத்தை எவ்வாறு ராஜ்ய நம்பிக்கையோடு இணைக்கலாம்?