Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் புத்தக எண் 35—ஆபகூக்

பைபிள் புத்தக எண் 35—ஆபகூக்

பைபிள் புத்தக எண் 35—ஆபகூக்

எழுத்தாளர்: ஆபகூக்

எழுதப்பட்ட இடம்: யூதா

எழுதி முடிக்கப்பட்டது: ஏ. பொ.ச.மு. 628(?)

எபிரெய வேதாகமத்தின் சிறிய தீர்க்கதரிசிகள் என்று அழைக்கப்படுவோரில் ஆபகூக் மற்றொருவர். எனினும், கடவுளால் ஏவப்பட்ட அவருடைய தரிசனமும் அறிவிப்பும் கடவுளுடைய ஜனங்களுக்கு குறைந்த முக்கியத்துவம் உடையவை அல்ல. அவருடைய தீர்க்கதரிசனம் ஊக்கமூட்டி, பலப்படுத்துகிறது. நெருக்கடியான காலத்தில் கடவுளுடைய ஊழியர்களைத் தாங்குகிறது. யெகோவா தேவனே சர்வலோக பேரரசர், விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்ற இந்த மேன்மைவாய்ந்த இரண்டு சத்தியங்களை இப்புத்தகம் அறிவுறுத்துகிறது. கடவுளுடைய ஊழியர்களை எதிர்ப்பவர்களுக்கும், அவருடைய ஜனங்களாயிருப்பதாக பாசாங்கு செய்பவர்களுக்கும் எச்சரிக்கையாகவும் இந்தப் புத்தகம் சேவிக்கிறது. எல்லா துதிபாடல்களுக்கும் தகுதிவாய்ந்தவராகிய யெகோவாவில் உறுதியான விசுவாசம் வைப்பதற்கு இது நல்ல முன்மாதிரியை வைக்கிறது.

2ஆபகூக் புத்தகம் பின்வரும் வார்த்தைகளோடு ஆரம்பிக்கிறது: “ஆபகூக் என்னும் தீர்க்கதரிசிக்குத் தரிசனமாக வந்த கடினவாக்கு.” (ஆப. 1:1, தி.மொ.) “ஆர்வமிகுந்த தழுவல்” என்று அர்த்தப்படும் பெயரையுடைய இந்த ஆபகூக் (எபிரெயுவில், காவக்கூக் [Chavaq·quqʹ]) தீர்க்கதரிசி யார்? ஆபகூக்கின் வம்சாவளி, கோத்திரம், வாழ்க்கை சூழ்நிலைகள், மரணம் ஆகியவற்றை குறித்து எந்தத் தகவலும் கொடுக்கப்படவில்லை. இவர் ஆலயத்தில் இருந்த லேவிய இசைப்பாடகரில் ஒருவரா என்பதை உறுதியாக கூறமுடியாது. ஆனால், “இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம்” என இந்தப் புத்தகத்தின் முடிவில் காணப்படும் குறிப்பிலிருந்து ஒருவேளை அவர் பாடகராக இருந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.

3ஆபகூக் தன்னுடைய தீர்க்கதரிசனத்தை எப்போது உரைத்தார்? மேலே சொல்லப்பட்ட குறிப்பும், “கர்த்தரோவென்றால், தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்” என்ற வார்த்தைகளும் எருசலேம் ஆலயம் இன்னும் அழிக்கப்படவில்லை என்பதை தெரிவிக்கின்றன. (2:20) இதையும் இந்தத் தீர்க்கதரிசனத்தின் செய்தியையும் சேர்த்து பார்க்கும்போது இது பொ.ச.மு. 607-ல் எருசலேம் அழிக்கப்படுவதற்கு சிறிது காலத்திற்கு முன்பு கொடுக்கப்பட்டது என தெரிகிறது. ஆனால் எத்தனை வருடங்களுக்கு முன்பாக? பொ.ச.மு. 659-629 வரை ஆட்சிசெய்த கடவுள் பயமுள்ள அரசன் யோசியாவின் காலத்திற்கு பிறகுதான் இருக்க வேண்டும். இதற்கான ஒரு குறிப்பை இந்தத் தீர்க்கதரிசனத்திலேயே காண முடிகிறது. இது முன்னறிவிக்கும் ஒரு செயலை யூதாவிலுள்ள ஜனங்களிடம் சொன்னாலும்கூட அவர்கள் நம்ப மாட்டார்கள். அது என்ன செயல்? உண்மையற்ற யூதாவை தண்டிப்பதற்காக கடவுள் கல்தேயரை (பாபிலோனியரை) எழுப்புவார் என்பதே. (1:5, 6) விக்கிரக வணக்கத்தில் ஈடுபட்ட அரசன் யோயாக்கீமுடைய ஆட்சியின் ஆரம்ப காலப்பகுதிக்கு இது மிகவும் பொருந்துகிறது. ஏனென்றால் அப்போதுதான் அவநம்பிக்கையும் அநீதியும் யூதாவில் மலிந்து கிடந்தன. பார்வோன் நேகோ யோயாக்கீமை சிங்காசனத்தில் அமர்த்தினான், தேசமும் எகிப்தின் செல்வாக்கின்கீழ் இருந்தது. இத்தகைய சூழ்நிலைமைகள் இருந்ததால் பாபிலோன் படையெடுத்து வருவதற்கு சாத்தியமே இல்லை என ஜனங்கள் நினைத்தனர். ஆனால் பொ.ச.மு. 625-ல் கார்க்கெமிஷ் போரில் நேபுகாத்நேச்சார் பார்வோன் நேகோவை தோற்கடித்து, எகிப்தின் அதிகாரத்தை முடிவுக்கு கொண்டுவந்தார். ஆகையால் இந்தச் சம்பவத்திற்கு முன்பாக இத்தீர்க்கதரிசனம் கூறப்பட்டிருக்க வேண்டும். ஆகவே (பொ.ச.மு. 628-ல் தொடங்கின) யோயாக்கீம் ஆட்சியின் ஆரம்பத்திலேயே இத்தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு ஆபகூக்கும் எரேமியாவும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்களாகின்றனர்.

4இந்தப் புத்தகம் கடவுளால் ஏவப்பட்டதென்று நாம் எவ்வாறு நிச்சயமாய் இருக்கலாம்? ஆபகூக் புத்தகம் பைபிளின் அதிகாரப்பூர்வ தொகுப்பைச் சேர்ந்தது என்பதை எபிரெய வேதாகமத்தின் பூர்வீக புத்தக பட்டியல்கள் உறுதிசெய்கின்றன. அந்தப் பட்டியல்களில் இந்தப் புத்தகத்தின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனாலும் ‘பன்னிரண்டு சிறிய தீர்க்கதரிசிகள்’ என அவை குறிப்பிடும்போது இதுவும் அதில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும், ஏனெனில் ஆபகூக் இல்லாமல் 12 புத்தகங்கள் முழுமைபெறா. இந்தத் தீர்க்கதரிசனத்தை தேவாவியால் ஏவப்பட்ட வேதாகமத்தின் பாகமாகவே அப்போஸ்தலன் பவுல் ஒப்புக்கொண்டார். அவர் ஆபகூக் 1:5-ஐ நேரடியாக மேற்கோள் காட்டி “தீர்க்கதரிசிகளின் புஸ்தகத்திலே . . . சொல்லியிருக்கிற” ஒன்றாக குறிப்பிட்டார். (அப். 13:40, 41) அவருடைய நிருபங்களில் இந்தப் புத்தகத்திலிருந்து பல குறிப்புகளை எடுத்துக் கூறினார். யூதாவுக்கும் பாபிலோனுக்கும் எதிராக ஆபகூக் உரைத்தவை நிறைவேற்றம் அடைந்ததே அவர் யெகோவாவின் உண்மையான ஒரு தீர்க்கதரிசி என்பதை நிரூபிக்கின்றன. அவர், யெகோவாவின் பெயரிலும் அவருடைய மகிமைக்காகவுமே பேசினார்.

5ஆபகூக் புத்தகத்தில் மூன்று அதிகாரங்கள் உள்ளன. முதல் இரண்டு அதிகாரங்கள், எழுத்தாளருக்கும் யெகோவாவுக்கு இடையில் நிகழும் உரையாடல் பாணியில் உள்ளன. அவை கல்தேயரின் பலத்தையும், தன்னுடையது அல்லாததை பெருக்கி, தன் வீட்டிற்கு பொல்லாத ஆதாயத்தை தேடி, இரத்தப்பழிகளாலே பட்டணத்தைக் கட்டி, செதுக்கப்பட்ட சிலையை வணங்கும் பாபிலோனிய ஜனத்திற்கு வரப்போகிற துயரத்தையும் கூறுகின்றன. மூன்றாவது அதிகாரம் போரின் நாளில் யெகோவாவின் மகத்துவத்தைப் பற்றி கூறுகிறது. அதன் விலாவாரியான எழுத்துநடையின் வல்லமையிலும் உணர்ச்சித்துடிப்பிலும் இதற்கு நிகரே இல்லை. இந்த அதிகாரம் புலம்பல் பாணியில் செய்யப்படும் ஒரு ஜெபமாகும். மேலும் இது, “எபிரெய செய்யுட்களிலேயே மிகவும் நேர்த்தியான, சிறப்பான ஒன்று” என அழைக்கப்படுகிறது. a

ஆபகூக்கின் பொருளடக்கம்

6தீர்க்கதரிசி யெகோவாவை நோக்கி கூப்பிடுகிறார் (1:1–2:1). யூதாவின் உண்மையற்றத் தன்மை ஆபகூக்கின் மனதில் பல கேள்விகளை எழுப்புகிறது. “கர்த்தாவே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் கேளாமலிருக்கிறீரே!” என்று கேட்கிறார். “கொள்ளையும் கொடுமையும் எனக்கு எதிரே நிற்கிறது.” (1:2, 3) நியாயப்பிரமாணம் பலனற்றதாகிறது, துன்மார்க்கன் நீதிமானை வளைந்துகொள்கிறான், நியாயம் புரட்டப்படுகிறது. இதன் காரணமாக ஆச்சரியத்தை உண்டுபண்ணும் ஒரு செயலை யெகோவா நடப்பிப்பார். அது ‘விவரிக்கப்பட்டாலும் விசுவாசியாத ஒரு கிரியை.’ அவர் “கல்தேயரென்னும் . . . ஜாதியாரை எழுப்பு”கிறார்! இந்தக் கொடிய ஜனம் விரைந்து வருவதைப் பற்றி யெகோவா அளிக்கும் தரிசனம் திகிலூட்டுகிறது. அது முற்றுமுழுக்க கொடுமை செய்து, “மணலத்தனை ஜனங்களை” கைதிகளாக கொண்டுசெல்லும். (1:5, 6, 9) அரசர்களும் அதிகாரிகளும் உட்பட யாருமே அதன் வழியில் நிற்க முடியாது, ஏனெனில் அவர்கள் எல்லாரையும் பார்த்து அது ஏளனமாய் சிரிக்கிறது. அரணான எல்லா இடத்தையும் அது கைப்பற்றுகிறது. இதெல்லாம் ‘பரிசுத்தராகிய’ யெகோவாவிடமிருந்து வரும் நியாயத்தீர்ப்பும் கடிந்துகொள்ளுதலுமே. (1:12) கடவுள் பேசுவதைக் கேட்பதற்காக ஆபகூக் காத்திருக்கிறார்.

7ஐந்து “ஐயோக்கள்” பற்றிய தரிசனம் (2:2-20). “நீ தரிசனத்தை எழுதி . . . பலகைகளிலே தீர்க்கமாக வரை” என்று யெகோவா பதிலளிக்கிறார். அது தாமதிப்பதாக தோன்றினாலும் தவறாமல் நிறைவேறும். “தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்” என்ற வார்த்தைகளால் யெகோவா ஆபகூக்கை ஆறுதல்படுத்துகிறார். (2:2, 4) தற்பெருமையுள்ள இந்தச் சத்துரு தேசங்களையும் ஜனங்களையும் தொடர்ந்து சேர்த்துக்கொண்டாலும் தன் இலக்கை அடையமாட்டான். இந்த ஜனங்களே ஐந்து ஆபத்துக்கள் பற்றிய பழமொழியை அவனுக்கு விரோதமாய் கூறுவார்கள்:

8“தன்னுடையதல்லாததைத் தனக்காகச் சேர்த்துக்கொள்ளுகிறவனுக்கு ஐயோ.” கடைசியில் அவனையே கொள்ளையிடுவார்கள். ‘அவன் சிந்தின மனுஷ ரத்தத்தினிமித்தமும் செய்த கொடுமையினிமித்தமும்’ முழுமையாக கொள்ளையடிக்கப்படுவான். (2:6, 8) “தன் வீட்டுக்குப் பொல்லாத ஆதாயத்தைத் தேடுகிறவனுக்கு ஐயோ!” அவன் பல தேசத்தாரை அழித்துப்போட்டதால் அவனுடைய வீட்டின் கற்களும் மர உத்திரங்களும் சத்தமிடும். (2:9) “இரத்தப்பழிகளாலே பட்டணத்தைக் கட்[டுகிறவனுக்கு] ஐயோ!” அவனுடைய ஜனங்கள் கடினமாக உழைத்தாலும் அது அக்கினிக்கு இரையாகவும் விருதாவாகவும் போகும் என யெகோவா அறிவிக்கிறார். “சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தருடைய மகிமையை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.”​—2:12, 14.

9கோபத்திலே ‘தன் தோழருக்குக் குடிக்கக்கொடுத்து . . . அவர்களுடைய நிர்வாணங்களைப் பார்க்கும்படிக்கு, அவர்களை வெறிக்கப்பண்ணுகிறவனுக்கு ஐயோ.’ யெகோவா தம்முடைய வலது கரத்திலிருக்கும் பாத்திரத்திலிருந்து அவனுக்கு குடிக்க கொடுப்பார். அவன் ‘சிந்தின மனுஷ ரத்தத்தினிமித்தமும் . . . தேசத்திற்கு செய்த கொடுமையினிமித்தமும்’ மகிமைக்கு பதிலாக அவமானத்தை அவனுக்கு கொடுப்பார். செதுக்கப்பட்ட சிலையை உண்டுபண்ணுகிறவனுக்கு அது என்ன பயனைக் கொடுக்கும்? பயனற்ற இந்தத் தெய்வங்கள் பேச முடியாதவை அல்லவா? (2:15, 17) “மரத்தைப்பார்த்து விழியென்றும், ஊமையான கல்லைப்பார்த்து எழும்பு என்றும் சொல்லுகிறவனுக்கு ஐயோ! அது போதிக்குமோ?” உயிரற்ற இந்தத் தெய்வங்களுக்கு நேர்மாறாக, “கர்த்தரோவென்றால், தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; பூமியெல்லாம் அவருக்கு முன்பாக மெளனமாயிருக்கக்கடவது.”​—2:​19, 20.

10போரின் நாளில் யெகோவா (3:1-19). பயபக்தியான விண்ணப்பத்தில் ஆபகூக், யெகோவாவின் திகிலூட்டும் செயலை திரும்ப நினைவுபடுத்துகிறார். யெகோவா தோன்றினபோது “அவருடைய மகிமை வானங்களை மூடிக்கொண்டது; அவர் துதியினால் பூமி நிறைந்தது.” (3:3) அவருடைய பிரகாசம் ஒளியைப் போலிருந்தது, கொள்ளைநோய் அவருக்கு முன்பாக சென்றது. அவர் நின்று பூமியைக் குலுக்கினார், அதனால் தேசங்கள் திடுக்கிட்டு, நித்திய மலைகள் நொறுங்கிப்போயின. வல்லமை வாய்ந்த போர்வீரனைப்போல் யெகோவா தயாராயிருந்த வில்லுடனும் இரட்சிப்பின் இரதங்களுடனும் சவாரி செய்தார். மலைகளும் தண்ணீர் நிறைந்த ஆழமும் இரைந்தன. சூரியனும் சந்திரனும் அசையாமல் நின்றன. அவர் பூமியில் நடந்துசென்று, கோபத்தில் தேசங்களைப் போரடித்தபோது அவருடைய அம்புகள் ஒளிவீசின. அவருடைய ஈட்டி மினுமினுத்தது. தம்முடைய ஜனம் மற்றும் தம்முடைய அபிஷேகம் பண்ணப்பட்டவனின் இரட்சிப்புக்காக பொல்லாதவர்களின் அஸ்திவாரத்தைக் “கழுத்தளவாக” திறந்துபோடவும் அவர் சென்றார்.​—3:13.

11யெகோவாவின் முந்நாளைய செயல் மற்றும் உலகை அசைவிக்கும் வரப்போகிற அவருடைய நடவடிக்கையின் வல்லமை பற்றிய இந்தத் தரிசனத்தைக் கண்டு தீர்க்கதரிசி திகைத்துப் போகிறார். “நான் கேட்கவே என் உள்ளம் நடுங்குகின்றது, அந்தச் சத்தத்தினால் என் உதடுகள் துடிக்கின்றன; என் எலும்புகள் உக்கிப்போகின்றன; நிற்கும் இடத்தே நான் நடுங்குகிறேன்; எங்களை நெருக்கும் ஜனத்திற்கு வரும் உபத்திரவநாளை நினைத்து நான் பேசாதமர்ந்திருக்க வேண்டுமே.” (3:​16, தி.மொ.) அப்போது அத்தி மரம் துளிர்விடாமலும் திராட்சைச் செடிகளில் பழம் உண்டாகாமலும் தொழுவத்தில் மந்தை இல்லாமலும் போகலாம். இப்பேர்ப்பட்ட மோசமான காலங்கள் வரவிருந்தாலும் அவர் யெகோவாவில் களிகூர்ந்து தன் இரட்சிப்பின் தேவனில் மகிழ்ச்சியாயிருக்க தீர்மானித்திருக்கிறார். “ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்; அவர் என் கால்களை மான்கால்களைப் போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார்” என்ற வார்த்தைகளோடு சந்தோஷமான தன் பாட்டை முடிக்கிறார்.​—3:19.

ஏன் பயனுள்ளது

12ஆபகூக்கின் தீர்க்கதரிசனம் போதிப்பதற்கு பயனுள்ளது என்பதை மதித்துணர்ந்த அப்போஸ்தலன் பவுல், 2-ம் அதிகாரம் 4-ம் வசனத்தை மூன்று சந்தர்ப்பங்களில் மேற்கோள் காட்டி பேசுகிறார். இந்த நற்செய்தி விசுவாசமுள்ள யாவருக்கும் இரட்சிப்புக்கான கடவுளுடைய வல்லமை என்பதை ரோமிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு அறிவுறுத்துகையில் பவுல் பின்வருமாறு எழுதினார்: “விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது.” பவுல் கலாத்தியருக்கு எழுதுகையில் விசுவாசத்தினாலேயே ஆசீர்வாதம் வருகிறதென்ற குறிப்பை அறிவுறுத்தினார்: “நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில், விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே.” கிறிஸ்தவர்கள் ஜீவனுள்ள, ஆத்துமாவைப் பாதுகாக்கும் விசுவாசத்தைக் காட்ட வேண்டுமென்று பவுல் எபிரெயருக்கு எழுதியபோது யெகோவா ஆபகூக்கிடம் சொன்ன வார்த்தைகளை மறுபடியுமாக குறிப்பிட்டார். எனினும், “விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்” என்ற ஆபகூக்கின் வார்த்தைகளை மட்டுமே அவர் மேற்கோள் காட்டவில்லை. கூடுதலாக கிரேக்க செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பின் பிரகாரம், “பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது” என்றும் கூறுகிறார். பிறகு, “நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம்” என்று கூறி முடிக்கிறார்.​—ரோ. 1:17; கலா. 3:11; எபி. 10:38, 39.

13கிறிஸ்தவர்களுக்கு இன்று அதிகளவான பலம் தேவைப்படுவதால் ஆபகூக் தீர்க்கதரிசனம் அதிக பயனுள்ளது. கடவுள் மீது சார்ந்திருக்க அது கற்பிக்கிறது. கடவுளுடைய நியாயத்தீர்ப்புகளைப் பற்றி மற்றவர்களுக்கு எச்சரிக்கவும் அது பயனுள்ளது. ஆற்றல் வாய்ந்த எச்சரிப்பு பாடத்தையும் அது அளிக்கிறது: கடவுளுடைய நியாயத்தீர்ப்புகள் தாமதிப்பதாக நினைக்காதீர்கள், “அது நிச்சயமாய் வரும்.” (ஆப. 2:3) யூதா பாபிலோனால் அழிக்கப்படுமென்ற தீர்க்கதரிசனம் தவறாமல் நிறைவேறியது. பொ.ச.மு. 539-ல் மேதியரும் பெர்சியரும் பாபிலோனை வீழ்த்தியதால் அது கைப்பற்றப்படும் என்ற தீர்க்கதரிசனமும் தவறாமல் நிறைவேறியது. கடவுளுடைய வார்த்தைகளை நம்புவதற்கு எத்தகைய ஓர் எச்சரிப்பு! ஆகவே, விசுவாசமற்றவர்களாக இருக்க வேண்டாமென தன் நாட்களிலிருந்த யூதர்களை எச்சரிக்கையில் ஆபகூக்கிலிருந்து மேற்கோள் காட்டுவதை அப்போஸ்தலன் பவுல் பயனுள்ளதாக கண்டார்: “தீர்க்கதரிசிகளின் புஸ்தகத்திலே: அசட்டைக்காரரே, பாருங்கள், பிரமித்து அழிந்துபோங்கள்! உங்கள் நாட்களில் ஒரு கிரியையை நான் நடப்பிப்பேன், ஒருவன் அதை உங்களுக்கு விவரித்துச் சொன்னாலும் நீங்கள் விசுவாசிக்க மாட்டீர்கள் என்று சொல்லியிருக்கிறபடி, உங்களுக்கு நேரிடாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.” (அப். 13:40, 41; ஆப. 1:5, LXX) எருசலேமின் அழிவைப் பற்றி இயேசு எச்சரித்ததை விசுவாசமற்ற யூதர்கள் நம்பாததைப் போலவே அவர்கள் பவுலுக்கும் செவிகொடுக்கவில்லை. ஆகவே, பொ.ச. 70-ல் ரோம சேனைகள் எருசலேமை அழித்தபோது அவர்களுடைய விசுவாசமற்ற தன்மையின் விளைவுகளை அறுவடை செய்தனர்.​—லூக். 19:41-44.

14அவ்வாறே இன்றும் கிறிஸ்தவர்கள் கொடுமை நிறைந்த உலகத்தில் வாழ்கின்றனர். ஆகையால், உறுதியான விசுவாசத்தைக் காத்துக்கொள்ள ஆபகூக் தீர்க்கதரிசனம் அவர்களை உந்துவிக்கிறது. மற்றவர்களுக்கு கற்பிக்கவும், பொல்லாதவர்களைக் கடவுள் அழிப்பாரா என உலகமுழுவதிலும் உள்ள மக்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளிக்கவும் இது அவர்களுக்கு உதவுகிறது. இந்தத் தீர்க்கதரிசன வார்த்தைகளை மறுபடியும் கவனியுங்கள்: “அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை.” (ஆப. 2:3) இந்தப் பூமியில் என்ன குழப்பங்கள் நேரிட்டாலும் ராஜ்யத்தை சுதந்தரிக்கப்போகிற அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோர், கடந்தகாலத்தில் யெகோவா பழிவாங்கியதைப் பற்றிய ஆபகூக்கின் வார்த்தைகளை நினைவுபடுத்திக் கொள்கின்றனர்: “உமது ஜனத்தின் இரட்சிப்புக்காகவும் நீர் அபிஷேகம் பண்ணுவித்தவனின் இரட்சிப்புக்காகவுமே நீர் புறப்பட்டீர்.” (3:13) யெகோவாவே பூர்வத்திலிருந்து அவர்களுடைய ‘பரிசுத்தர்.’ அநீதிமான்களைத் தண்டித்து, தம்முடைய அன்பில் தழுவிக்கொள்வோருக்கு ஜீவனை அளிக்கும் “கன்மலை.” நீதியை நேசிப்போர் யாவரும் பின்வருமாறு கூறி அவருடைய ராஜ்யத்திலும் பேரரசுரிமையிலும் களிகூரலாம்: “நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன். ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்.”​—1:12; 3:18, 19.

[அடிக்குறிப்பு]

a பன்னிரண்டு சிறிய தீர்க்கதரிசிகளின் புத்தகம் (ஆங்கிலம்), 1868, ஈ. ஹென்டர்சன், பக்கம் 285.

[கேள்விகள்]

1. மேன்மைவாய்ந்த என்ன சத்தியங்கள் ஆபகூக் தீர்க்கதரிசனத்தில் அறிவுறுத்தப்படுகின்றன?

2. எழுத்தாளரான ஆபகூக்கைப் பற்றி என்ன தகவல் கொடுக்கப்பட்டுள்ளது?

3. யூதாவைப் பாதித்த என்ன சூழ்நிலைமைகள் ஆபகூக் புத்தகம் எழுதப்பட்ட காலப்பகுதியை அறிய உதவுகின்றன?

4. ஆபகூக் புத்தகம் கடவுளால் ஏவப்பட்டது என்பதை எது நிரூபிக்கிறது?

5. ஆபகூக்கின் பொருளடக்கத்தை சுருக்கமாக கூறுங்கள்.

6. யூதாவிலுள்ள நிலைமை என்ன, ஆதலால் என்ன ஆச்சரியமூட்டும் செயலை யெகோவா நடப்பிப்பார்?

7. யெகோவா ஆபகூக்கை எவ்வாறு ஆறுதல்படுத்துகிறார்?

8, 9. தரிசனத்தின் ஐந்து “ஐயோக்களும்” என்ன வகையான ஆட்களுக்கு எதிராக கூறப்படுகின்றன?

10. போரின் நாளில் யெகோவா தோன்றும்போது திகிலூட்டும் என்ன செயல் நிகழ்கிறது?

11. இந்தத் தரிசனம் ஆபகூக்கை எவ்வாறு பாதிக்கிறது, ஆனால் அவருடைய தீர்மானம் என்ன?

12. ஆபகூக் 2:4-ஐ நன்மை பயக்கும் என்ன வழிகளில் பவுல் பொருத்தினார்?

13. யூதாவுக்கும் பாபிலோனுக்கும் எதிரான ஆபகூக்கின் தீர்க்கதரிசனங்கள் துல்லியமாக நிறைவேறியது, கடவுளுடைய நியாயத்தீர்ப்புகளைப் பற்றிய எதை அறிவுறுத்துகிறது?

14. (அ) பலமான விசுவாசத்தைக் காத்துக்கொள்ள ஆபகூக்கின் தீர்க்கதரிசனம் இன்று கிறிஸ்தவர்களை எவ்வாறு உந்துவிக்கிறது? (ஆ) தீர்க்கதரிசனத்தில் கூறியுள்ளபடி நீதியை நேசிப்போர் என்ன மகிழ்ச்சியான நம்பிக்கையை கொண்டிருக்கலாம்?