பைபிள் புத்தக எண் 36—செப்பனியா
பைபிள் புத்தக எண் 36—செப்பனியா
எழுத்தாளர்: செப்பனியா
எழுதப்பட்ட இடம்: யூதா
எழுதி முடிக்கப்பட்டது: பொ.ச.மு. 648-க்கு முன்
யூதா அரசன் யோசியாவுடைய ஆட்சியின் ஆரம்ப காலத்தில் (பொ.ச.மு. 659-629) பாகால் வணக்கம் தலைவிரித்தாடியது. இந்த அசுத்தமான வணக்கத்தை “அந்நிய தெய்வங்களின் பூசாரிகள்” தலைமைதாங்கி நடத்தினர். அப்போது தீர்க்கதரிசி செப்பனியா அறிவித்த இந்தச் செய்தி எருசலேமின் ஜனங்களைத் திடுக்கிட செய்திருக்கும். செப்பனியா, யூத அரசனாகிய எசேக்கியாவின் சந்ததியில் வந்த அரச வம்சத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம். என்றாலும் அந்தத் தேசத்தில் நிலவிய நிலைமைகளை அவர் கடுமையாய் விமர்சித்தார். (செப். 1:1, 4, NW) அவர் அறிவித்த செய்தி அழிவுக்குரிய ஒன்றே. கடவுளுடைய ஜனங்கள் கீழ்ப்படியாதவர்களாக ஆகிவிட்டதால் யெகோவாவால் மட்டுமே அவர்களைத் தூய்மையான வணக்கத்திற்கு திரும்ப நிலைநாட்டி ஆசீர்வதிக்க முடியும். அப்போது அவர்கள், “பூமியிலுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் . . . கீர்த்தியும் புகழ்ச்சியுமாக” ஆக முடியும். (3:20) கடவுளுடைய பாதுகாப்பு இருந்தால் மாத்திரமே ஒருவர் “கர்த்தருடைய கோபத்தின் நாளிலே மறைக்கப்ப[ட]” முடியும் என செப்பனியா குறிப்பிட்டு காட்டினார். (2:3) “யெகோவா மறைத்தார் (பொக்கிஷமாக வைத்தார்)” என அர்த்தப்படும் ட்செஃபான்யா (எபிரெயுவில், Tsephan·yahʹ) என்ற அவருடைய பெயர் எவ்வளவு பொருத்தமாயிருக்கிறது!
2செப்பனியாவின் முயற்சியால் நல்ல பலன்கள் கிடைத்தன. எட்டு வயதில் சிங்காசனத்தில் அமர்ந்த அரசன் யோசியா, தன் ஆட்சியின் 12-வது ஆண்டில் ‘யூதாவையும் எருசலேமையும் சுத்திகரிக்க’ தொடங்கினார். பொய் வணக்கத்தை அடியோடு அழித்து, ‘கர்த்தரின் ஆலயத்தைப் பழுதுபார்த்து,’ பஸ்கா ஆசரிப்பை திரும்ப தொடங்கி வைத்தார். (2 நா. அதி. 34, 35) எனினும், அரசன் யோசியாவின் சீர்திருத்தங்கள் தற்காலிகமாகவே இருந்தன. ஏனெனில் அவருக்கு பிறகு அவருடைய மூன்று குமாரரும் பேரன்களில் ஒருவனும் ஒருவர்பின் ஒருவராக ஆட்சி செய்தனர். இவர்கள் எல்லாருமே “கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்”தனர். (2 நா. 36:1-12) இவை யாவும் செப்பனியா கூறிய வார்த்தைகளின் நிறைவேற்றமாக இருந்தன: “நான் அதிபதிகளையும் ராஜகுமாரரையும் . . . கொடுமையினாலும் வஞ்சகத்தினாலும் தங்கள் எஜமான்களின் வீடுகளை நிரப்புகிற யாவரையும் . . . தண்டிப்பேன்.”—செப். 1:8, 9.
3“செப்பனியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம்” யோசியாவின் 12-ம் ஆண்டாகிய பொ.ச.மு. 648-க்கு முன்பே ஏற்பட்டது என்றே தோன்றுகிறது. அவர் யூதாவிலிருந்து பேசுவதாக முதலாம் வசனம் குறிப்பிடுகிறது. அதுமட்டுமல்ல, எருசலேமின் சுற்று வட்டாரங்களையும் பழக்கவழக்கங்களையும் பற்றி விவரமாக அறிந்திருந்ததும் அவர் யூதாவில்தான் இருந்தார் என தெரிவிக்கின்றன. இந்தப் புத்தகத்தில் அடங்கியுள்ள செய்தி திகிலூட்டுவதாகவும் அதேசமயம் ஆறுதலளிப்பதாகவும் உள்ளது. இதன் பெரும்பகுதி, வெகு சீக்கிரத்தில் வரவிருக்கிற அச்சமேற்படுத்தும் நாளாகிய யெகோவாவின் நாளிலேயே கவனத்தை ஊன்றவைக்கிறது. ஆனால் அதேசமயம், “கர்த்தருடைய நாமத்தின்மேல் நம்பிக்கையாயிரு”க்கும் மனத்தாழ்மையுள்ள ஒரு ஜனத்தை யெகோவா திரும்ப நிலைநாட்டுவார் என்றும் அது முன்னறிவிக்கிறது.—1:1, 7-18; 3:12.
4இந்தத் தீர்க்கதரிசன புத்தகத்தின் நம்பகத் தன்மையை சந்தேகிக்கவே முடியாது. எருசலேமின் அழிவைப் பற்றி செப்பனியா முன்னறிவித்து 40-க்கும் அதிகமான வருடங்களுக்கு பிறகு பொ.ச.மு. 607-ல் அது அழிக்கப்பட்டது. இதை உலகப்பிரகாரமான சரித்திரம் நிரூபிப்பது மட்டுமல்ல, செப்பனியா முன்னறிவித்தபடியே இது துல்லியமாக நிறைவேறியது என்பதை பைபிளும் நிரூபிக்கிறது. எருசலேமின் அழிவிற்கு சிறிது காலத்திற்கு பின் எரேமியா புலம்பல் புத்தகத்தை எழுதினார். அவர் கண்ணால் கண்ட பயங்கரங்கள் அவருடைய மனதில் பசுமையாய் இருந்தபோதே அவற்றை விவரித்து எழுதினார். அதன் பல பகுதிகளை ஒப்பிட்டு பார்க்கும்போது செப்பனியாவின் செய்தி உண்மையில் “கடவுளால் ஏவப்பட்டது” என்பது தெளிவாகிறது. ‘கர்த்தருடைய உக்கிரகோபம் அவர்கள் மேல் இறங்கு முன்’ மனந்திரும்ப வேண்டிய அவசியத்தைக் குறித்து செப்பனியா எச்சரிக்கிறார். எரேமியாவோ, ‘கர்த்தர் . . . தமது உக்கிரகோபத்தை ஊற்றினார்’ என்று சொல்கையில் ஏற்கெனவே நடந்து முடிந்த ஒன்றைக் குறிப்பிடுகிறார். (செப். 2:1; புல. 4:11) ‘மனுஷர் . . . குருடரைப்போல் நடக்கும்படி நான் அவர்களை வருத்தப்படுத்துவேன்; அவர்கள் இரத்தம் புழுதியைப்போல் சொரியப்படும்’ என செப்பனியா முன்னுரைத்தார். (செப். 1:17) இதை நடந்துமுடிந்த ஒன்றாக எரேமியா பேசுகிறார்: ‘குருடர்போல வீதிகளில் அலைந்து, . . . இரத்தத்தால் கறைப்பட்டிருந்தார்கள்.’—புல. 4:14; இவற்றையும் ஒப்பிடுக: செப்பனியா 1:13—புலம்பல் 5:2; செப்பனியா 2:8, 10—புலம்பல் 1:9, 16 மற்றும் 3:61, 62.
5கடவுளுடைய உதவியோடு செப்பனியா முன்னறிவித்தபடியே மோவாப், அம்மோன், அதன் தலைநகர் நினிவேயுடன் அசீரியா ஆகிய புறமத தேசங்கள் அழிக்கப்பட்டதையும் சரித்திரம் நிரூபிக்கிறது. தீர்க்கதரிசி நாகூம் நினிவேயின் அழிவை முன்னறிவித்தபடியே (நாகூ. 1:1; 2:10) செப்பனியாவும், யெகோவா “நினிவேயைப் பாழும் வனாந்தரத்துக்கொத்த வறட்சியுமான ஸ்தலமாக்குவார்” என்று அறிவித்தார். (செப். 2:13) இந்த அழிவு அவ்வளவு முழுமையாக இருந்ததால் சுமார் 200 ஆண்டுகளுக்குள்ளாகவே சரித்திராசிரியன் ஹெரோடோடஸ் டைகிரீஸ் நதியைப் பற்றி கூறுகையில், “ஒரு காலத்தில் நினிவே பட்டணம் இதற்கருகில் இருந்தது” என்று எழுதினார். a சுமார் பொ.ச. 150-ல் கிரேக்க எழுத்தாளர் லூசியன், “இப்போது அதன் தடயம் கொஞ்சம்கூட மீந்தில்லை” என்று எழுதினார். b த நியூ வெஸ்ட்மினிஸ்டர் டிக்ஷ்னரி ஆஃப் த பைபிள் (1970), 669-ம் பக்கத்தில் இவ்வாறு கூறுகிறது: “டைகிரீஸ் நதி திடீரென்று எழுச்சி அடைந்தது” படையெடுத்து வந்த சேனைகளுக்கு “அதிக உதவியாக இருந்தது. நகர மதிலின் பெரும்பகுதி வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதால் அந்த இடத்தைத் தாக்குவது மிகவும் எளிதாகிவிட்டது. . . . நினிவே அவ்வளவு முழுமையாக அழிக்கப்பட்டதால் அது கிரேக்க மற்றும் ரோம காலங்களில் ஒரு கற்பனைக்கதை போலாகிவிட்டது. எனினும் அந்த நகரத்தின் ஒரு பகுதி குப்பைக்கூளங்களின் கீழ் புதைந்து கிடந்தது.” முன்னுரைத்தபடியே மோவாபும்கூட அழிக்கப்பட்டது என அதே புத்தகம் 627-ம் பக்கத்தில் கூறுகிறது: “நேபுகாத்நேச்சார் மோவாபியரை வென்று கீழ்ப்படுத்தினான்.” அம்மோன் கீழ்ப்படுத்தப்பட்டதைக் குறித்து ஜொஸிபஸ் அறிவிக்கிறார். c கடைசியில் மோவாபியரும் அம்மோனியரும் ஒரு ஜனமாக இல்லாமல் அழிந்துபோனார்கள்.
6செப்பனியா, தேவாவியால் ஏவப்பட்ட பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலைச் சேர்ந்தது என்பதை யூதர்கள் எப்போதுமே ஒப்புக்கொண்டனர். யெகோவாவின் பெயரில் கூறப்பட்ட அதன் அறிவிப்புகள் துல்லியமாய் நிறைவேறின. இவ்வாறு அவருடைய பேரரசுரிமை நியாயநிரூபணம் செய்யப்படுகிறது.
செப்பனியாவின் பொருளடக்கம்
7யெகோவாவின் நாள் சமீபம் (1:1-18). அழிவு பற்றிய ஓர் அறிவிப்புடன் இந்தப் புத்தகம் தொடங்குகிறது. “தேசத்தில் உண்டானதை எல்லாம் முற்றிலும் வாரிக்கொள்ளுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.” (1:2) மனிதனோ மிருகமோ எதுவுமே தப்புவதில்லை. பாகால் வணக்கத்தார், அன்னிய தெய்வ பூசாரிகள், கூரை உச்சியில் வானசேனையை வணங்குவோர், யெகோவாவின் வணக்கத்தை மல்காமின் வணக்கத்தோடு இணைப்போர், யெகோவாவை விட்டு பின்வாங்குவோர், அவரைத் தேட மனமில்லாதோர் அனைவரும் அழிய வேண்டும். “கர்த்தராகிய ஆண்டவருக்கு முன்பாக மெளனமாயிருங்கள்; கர்த்தருடைய நாள் சமீபித்திருக்கிறது” என அந்தத் தீர்க்கதரிசி கட்டளையிடுகிறார். (1:7) யெகோவாவே ஒரு பலியை ஆயத்தம் செய்திருக்கிறார். அதிபதிகள், கொடுமையுள்ளவர்கள், வஞ்சகர்கள், அசட்டையான மனப்பான்மை உடையவர்கள் ஆகிய எல்லாரும் பிரிக்கப்படுவர். அவர்களுடைய செல்வமும் உடைமைகளும் ஒன்றுமில்லாமல் அழிக்கப்படும். யெகோவாவின் மகா நாள் சமீபித்துள்ளது! “அந்த நாள் உக்கிரத்தின் நாள்; அது இக்கட்டும் இடுக்கமுமான நாள்; அது அழிவும் பாழ்க்கடிப்புமான நாள்; அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்.” யெகோவாவுக்கு விரோதமாக பாவம் செய்பவர்களின் இரத்தம் புழுதியைப்போல் கொட்டப்படும். “கர்த்தருடைய உக்கிரத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களைத் தப்புவிக்க மாட்டாது.” அவருடைய வைராக்கியத்தின் அக்கினி முழு பூமியையும் அழிக்கும்.—1:15, 18.
8யெகோவாவைத் தேடுங்கள்; தேசங்கள் அழிக்கப்படும் (2:1-15). அந்த நாள் பதரைப்போல் கடந்துசெல்வதற்கு முன்பாக, சாந்தகுணமுள்ளவர்களே ‘யெகோவாவைத் தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்,’ அப்பொழுது ஒருவேளை “கர்த்தருடைய கோபத்தின் நாளிலே மறைக்கப்படுவீர்கள்.” (2:3) யெகோவா தொடர்ந்து பேசுகிறார், பெலிஸ்தரின் தேசத்திற்கு ஐயோ என்று அறிவிக்கிறார். அந்தத் தேசம் பிறகு “யூதா வம்சத்தாரில் மீதியானவர்களின் வசமாகும்.” அகந்தையுள்ள மோவாபும் அம்மோனும் சோதோமையும் கொமோராவையும் போல் பாழாக்கப்படும். ஏனெனில் “அவர்கள் சேனைகளுடைய கர்த்தரின் ஜனத்துக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டி அவர்களை நிந்தித்”தார்கள். அவர்களுடைய தெய்வங்களும் அவர்களோடு சேர்ந்து அழிந்துபோகும். (2:7, 10) யெகோவாவின் ‘பட்டயம்’ எத்தியோப்பியரையும் கொல்லும். நினிவேயை தலைநகரமாக கொண்ட வடக்கே உள்ள அசீரியாவைப் பற்றியென்ன? அது பாழான வனாந்தரமும் காட்டு மிருகங்கள் வாழுமிடமும் ஆகும். ஆம், “அதின் வழியாய்ப்போகிறவன் எவனும் ஈசல் போட்[டு]” ஆச்சரியப்படும் ஒன்றாக அது ஆகிவிடும்.—2:12, 15.
9கலகக்கார எருசலேமிடம் கணக்கு கேட்கப்படுகிறது; மனத்தாழ்மையுள்ள மீதியானோர் ஆசீர்வதிக்கப்படுகின்றனர் (3:1-20). கலகத்தனமுள்ள, ஒடுக்குகிற நகரமாகிய எருசலேமுக்கும்கூட அழிவு வரும்! “கெர்ச்சிக்கிற சிங்கங்கள்” போன்ற அதன் அதிபதிகளும் ‘வஞ்சகமுள்ள’ அதன் தீர்க்கதரிசிகளும் தங்கள் கடவுளாகிய யெகோவாவில் நம்பிக்கை வைக்கவில்லை. அவர் நிச்சயமாய் கணக்கு கேட்பார். அதில் குடியிருப்பவர்கள் யெகோவாவுக்கு பயந்து அவருடைய கடிந்துகொள்ளுதலை ஏற்பார்களா? இல்லை, ஏனெனில் அவர்கள் “தங்கள் கிரியைகளையெல்லாம் கேடாக்கினார்கள்.” (3:3, 4, 7) தேசங்களைக் கூட்டிச்சேர்த்து அவர்கள்மீது தம்முடைய உக்கிர கோபம் முழுவதையும் ஊற்ற வேண்டும் என்பதே யெகோவாவின் நியாயத்தீர்ப்பாகும். மேலும் பூமி முழுவதும் அவருடைய வைராக்கியத்தின் அக்கினியால் எரிந்துபோகும். ஆனாலும் அதிசயமான ஒரு வாக்குறுதியைக் கொடுக்கிறார்! “அவர்கள் எல்லாரும் யெகோவாவின் பெயரின்பேரில் கூப்பிடும்படியும், ஒரே கருத்தாய் அவரைச் சேவிக்கும்படியும் தூய்மையான மொழிக்கு மாறும் ஒரு மாற்றத்தை ஜனங்களுக்கு கொடுப்”பார். (3:9, NW) அகந்தையோடு களித்திருப்போர் அகற்றப்படுவர். நீதியைச் செய்யும் மனத்தாழ்மையுள்ள மீதியானோர் யெகோவாவின் பெயரில் அடைக்கலத்தைக் கண்டடைவர். மகிழ்ச்சியின் சத்தமும், ஆர்ப்பரிப்பும், களிகூருதலும், சந்தோஷ ஆரவாரமும் சீயோனில் ஏற்படுகிறது, ஏனெனில் இஸ்ரவேலின் அரசராகிய யெகோவா அவர்கள் மத்தியில் இருக்கிறார். பயப்படுவதற்கோ சோம்பலாய் இருப்பதற்கோ இது சமயமல்ல; ஏனெனில் யெகோவா அவர்களைக் காப்பாற்றி, தம்முடைய அன்பிலும் மகிழ்ச்சியிலும் அவர்கள்பேரில் களிகூருவார். “உங்கள் கண்காண நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பும்போது, பூமியிலுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.”—3:20.
ஏன் பயனுள்ளது
10அரசன் யோசியா, செப்பனியாவின் எச்சரிக்கை செய்திக்கு செவிகொடுத்து அதிலிருந்து வெகுவாய் பயனடைந்தார். மத சீர்திருத்தத்திற்குரிய மாபெரும் நடவடிக்கையை எடுத்தார். யெகோவாவின் ஆலயம் அசட்டையாக விடப்பட்டிருந்த சமயத்தில் காணாமல்போன நியாயப்பிரமாண புத்தகமும் அப்போது கிடைத்தது. கீழ்ப்படியாமையின் விளைவுகள் என்ன என்று இந்தப் புத்தகத்திலிருந்து வாசிக்கப்பட்டதைக் கேட்டபோது யோசியா மிகுந்த துக்கமடைந்தார். செப்பனியா தீர்க்கதரிசனம் உரைத்துக்கொண்டிருந்ததை மற்றொரு சாட்சியாகிய மோசே ஏற்கெனவே உறுதிப்படுத்தியிருந்தார் என்பதை இந்தப் புத்தகம் நிரூபித்தது. உடனே யோசியா கடவுளுக்கு முன்பாக தன்னைத் தாழ்த்தினார். இதன் காரணமாக, முன்னறிவிக்கப்பட்ட அழிவு அவருடைய காலத்தில் வராதென்று யெகோவா அவருக்கு வாக்குறுதி அளித்தார். (உபா., அதி. 28-30; 2 இரா. 22:8-20) அந்த நாடு அப்போதைக்கு அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டது! ஆனால் அதிக நாட்களுக்கு அல்ல, ஏனெனில் யோசியாவின் குமாரர்கள் அவர் வைத்த நல்ல முன்மாதிரியைப் பின்பற்றவில்லை. ஆனாலும் யோசியாவும் அவருடைய ஜனங்களும், “செப்பனியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசன”த்திற்கு கவனம் செலுத்தியதால் வெகுவாய் பயனடைந்தனர்.—செப். 1:1.
11கடவுளுடைய மிகப் பெரிய தீர்க்கதரிசியாகிய இயேசு கிறிஸ்து பிரசித்தி பெற்ற தம்முடைய மலைப்பிரசங்கத்தில், செப்பனியா 2-ம் அதிகாரம், 3-ம் வசனத்திலுள்ள பின்வரும் வார்த்தைகளை நினைப்பூட்டும் வண்ணம் பேசினார்: “பூமியில் மனத்தாழ்மையுள்ளவர்களே நீங்கள் எல்லாரும் யெகோவாவைத் தேடுங்கள் . . . நீதியைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்.” இதன் மூலம் செப்பனியா, கடவுளுடைய உண்மையான ஒரு தீர்க்கதரிசி என்பதை அவர் ஆதரித்தார். இயேசுவின் அறிவுரை என்ன? “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்” என்பதே. (மத். 6:33) கடவுளுடைய ராஜ்யத்தை முதலாவதாக தேடுவோர், செப்பனியா எச்சரித்த அசட்டை மனப்பான்மைக்கு எதிராக தங்களைக் காத்துக்கொள்ள வேண்டும். “கர்த்தரை விட்டுப் பின்வாங்குகிறவர்களையும், கர்த்தரைத் தேடாமலும், அவரைக்குறித்து விசாரியாமலுமிருக்கிறவர்களையும்,” “கர்த்தர் நன்மை செய்வதும் இல்லை தீமைசெய்வதும் இல்லையென்று தங்கள் இருதயத்தில் சொல்லுகிறவர்க”ளையும் பற்றி அவர் கூறினார். (செப். 1:6, 12) எபிரெயருக்கு எழுதின நிருபத்தில் பவுல், வரவிருக்கும் நியாயத்தீர்ப்பு நாளைக் குறித்து பேசி பின்வாங்குவதற்கு எதிராக எச்சரித்தார். அவர் மேலும் கூறியதாவது: “நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம்.” (எபி. 10:30, 37-39) விலகிப்போகிறவர்களுக்கோ மதித்துணர்வற்றவர்களுக்கோ அல்ல, மனத்தாழ்மையுடனும் ஊக்கத்துடனும் யெகோவாவை விசுவாசத்தோடு தேடுவோருக்கே இந்தத் தீர்க்கதரிசி பின்வருமாறு கூறுகிறார்: “அப்போது ஒருவேளை கர்த்தருடைய கோபத்தின் நாளிலே மறைக்கப்படுவீர்கள்.” ஏன் “ஒருவேளை”? ஏனெனில் முடிவான இரட்சிப்பு அந்தத் தனி நபரின் நடத்தையைச் சார்ந்துள்ளது. (மத். 24:13) மேலும் நாம் கடவுளுடைய இரக்கத்தை தவறாக உபயோகிக்க முடியாது என்பதையும் இது நினைப்பூட்டுகிறது. எதிர்பார்க்காதவர்கள்மீது அந்த நாள் திடீரென்று வரும் என்பதையும் செப்பனியாவின் தீர்க்கதரிசனம் உறுதிசெய்கிறது.—செப். 2:3, தி.மொ.; 1:14, 15; 3:8.
12அப்படியென்றால், யெகோவாவுக்கு விரோதமாக பாவம் செய்வோருக்கு அழிவையும் ஆனால் மனந்திரும்புதலோடு “யெகோவாவைத் தேடு”வோருக்கு மகிழ்ச்சியான ஆசீர்வாதங்களையும் முன்னறிவிக்கும் ஒரு செய்தி இதில் அடங்கியுள்ளது. மனந்திரும்பின இவர்கள் தைரியங்கொள்ளலாம் ஏனெனில், “இஸ்ரவேலின் ராஜாவாகிய யெகோவா உன் நடுவிலே இருக்கிறார்” என்று செப்பனியா சொல்கிறார். சீயோன் பயப்படுவதற்கோ சோம்பலாய் இருப்பதற்கோ இது சமயமல்ல. மாறாக இது யெகோவாவில் நம்பிக்கை வைப்பதற்கான காலம். “அவர் பராக்கிரமமுள்ளவர், இரட்சிக்கிறவர்; அவர் உன்னைப் பற்றி சந்தோஷமாய் மகிழ்ந்திருப்பார், தமது அன்பினாலே மெளனமாயிருப்பார், அவர் உன்னைப் பற்றி மகிழ்ந்து களிப்பார்.” அவருடைய அன்புள்ள பாதுகாப்பையும் நித்திய ஆசீர்வாதத்தையும் எதிர்பார்த்து, ‘அவருடைய ராஜ்யத்தை முதலாவதாக தேடுபவர்கள்’ மகிழ்ச்சியுள்ளவர்கள்!—3:15-17, தி.மொ.
[அடிக்குறிப்புகள்]
a மெக்ளின்டாக், ஸ்ட்ராங்ஸ் ஆகியோரின் ஸைக்ளோப்பீடியா, 1981 மறுபதிப்பு, தொ. VII, பக்கம் 112.
b லூசியன், எ. எம். ஹார்மன் மொழிபெயர்த்தது, 1968, தொ. II, பக். 443.
c ஜூயிஷ் ஆண்டிக்விட்டீஸ், X, 181, 182 (ix, 7).
[கேள்விகள்]
1. (அ) செப்பனியாவின் செய்தி ஏன் அவருடைய காலத்திற்கு பொருத்தமாயிருந்தது? (ஆ) அவருடைய பெயரின் அர்த்தம் எவ்வாறு அந்தச் சூழ்நிலைமைக்கு பொருந்தியது?
2. செப்பனியாவின் முயற்சிகள் எவ்வாறு பலன் தந்தன, ஆனால் இது ஏன் தற்காலிகமாகவே இருந்தது?
3. எப்போது, எங்கே செப்பனியா தீர்க்கதரிசனம் உரைத்தார், என்ன இரண்டு வகையான செய்தி இந்தப் புத்தகத்தில் அடங்கியுள்ளது?
4. செப்பனியா புத்தகம் நம்பகமானதாகவும் கடவுளால் ஏவப்பட்டதாகவும் இருப்பதை எது நிரூபிக்கிறது?
5. செப்பனியாவின் தீர்க்கதரிசனம் துல்லியமாய் நிறைவேறியதை சரித்திரம் எவ்வாறு காட்டுகிறது?
6. பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலில் செப்பனியா ஏன் சரியான இடத்தை ஏற்கிறது?
7. யெகோவாவின் மகா நாள் அவருடைய சத்துருக்களுக்கு எதைக் குறிக்கும்?
8. (அ) எவ்வாறு பாதுகாப்பைக் கண்டடையலாம்? (ஆ) தேசங்களுக்கு எதிராக என்ன நியாயத்தீர்ப்புகள் அறிவிக்கப்படுகின்றன?
9. (அ) எருசலேமுக்கு ஏன் அழிவு வரும், தேசங்கள்மீது யெகோவாவின் நியாயத்தீர்ப்பு என்ன? (ஆ) என்ன மகிழ்ச்சிதரும் செய்தியோடு இந்தத் தீர்க்கதரிசனம் முடிகிறது?
10. அரசன் யோசியாவின் நாட்களில் செப்பனியாவின் தீர்க்கதரிசனம் எதற்கு பயனுள்ளதாக இருந்தது?
11. (அ) நல்ல அறிவுரையைக் கொடுப்பதில் செப்பனியா புத்தகம் எவ்வாறு மலைப்பிரசங்கத்தோடும் எபிரெயருக்கு எழுதின பவுலின் நிருபத்தோடும் பொருத்தமாய் இருக்கிறது? (ஆ) “ஒருவேளை . . . மறைக்கப்படுவீர்கள்” என செப்பனியா ஏன் சொல்லுகிறார்?
12. ‘யெகோவாவைத் தேடுவோர்’ தைரியமாக இருப்பதற்கு என்ன ஆதாரத்தை செப்பனியா அளிக்கிறார்?