Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் புத்தக எண் 37—ஆகாய்

பைபிள் புத்தக எண் 37—ஆகாய்

பைபிள் புத்தக எண் 37—ஆகாய்

எழுத்தாளர்: ஆகாய்

எழுதப்பட்ட இடம்: எருசலேம்

எழுதி முடிக்கப்பட்டது: பொ.ச.மு. 520

காலப்பகுதி: 112 நாட்கள் (பொ.ச.மு. 520)

அவருடைய பெயர் ஆகாய். அவர் ஒரு தீர்க்கதரிசியும் ‘கர்த்தருடைய தூதனும்’ ஆவார்; ஆனால் அவருடைய ஆரம்பத்தைப் பற்றியென்ன? (ஆகா. 1:13) அவர் யார்? சிறிய தீர்க்கதரிசிகள் என்று அழைக்கப்படுபவர்களில் ஆகாய் பத்தாவது நபர். மேலும் பொ.ச.மு. 537-ல் யூதர்கள் தாய்நாட்டிற்கு திரும்பிய பிறகு தீர்க்கதரிசிகளாக சேவித்த மூன்று பேரில் இவரே முதலாவதானவர்; மற்ற இருவர் சகரியாவும் மல்கியாவும் ஆவர். ஆகாயின் பெயர் (எபிரெயுவில், சாகாய் [Chag·gaiʹ]) “பண்டிகை [நாளில் பிறந்தவர்]” என அர்த்தப்படுகிறது. அவர் ஒரு பண்டிகை நாளில் பிறந்திருக்கலாம் என இது காட்டுகிறது.

2யூத பாரம்பரியம் கூறுகிறபடி, ஆகாய் பாபிலோனில் பிறந்து செருபாபேலுடனும் பிரதான ஆசாரியனாகிய யோசுவாவுடனும் எருசலேமுக்கு திரும்பி வந்தார் என்ற முடிவுக்கு வருவது நியாயமானதே. ஆகாய் சகரியாவோடு சேர்ந்து தீர்க்கதரிசியாக சேவித்தார். ஆலய கட்டுமான வேலையைத் திரும்ப துவக்கும்படி சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவர்களை இவர்கள் இருவருமாய் சேர்ந்து உற்சாகப்படுத்துவதை எஸ்றா 5:1-லும் 6:14-லும் வாசிக்கிறோம். ஆகாய் இரண்டு வழிகளில் யெகோவாவின் தீர்க்கதரிசியாக சேவித்தார். எப்படியென்றால், யூதர்கள் கடவுளிடமான தங்கள் கடமைகளை நிறைவேற்றும்படி அறிவுரை கூறினார்; அத்துடன், சகல தேசங்களும் அசைக்கப்படும் என்பதையும் மற்ற காரியங்களையும் முன்னறிவித்தார்.​—ஆகா. 2:6, 7.

3யெகோவா ஏன் ஆகாயை அனுப்பினார்? காரணம் இதுவே: யெகோவாவின் ஆலயத்தைத் திரும்ப கட்டுவதற்காக யூதர்களை தங்கள் தாய்நாட்டிற்கு திரும்பிச் செல்ல அனுமதிக்கும் ஒரு கட்டளையை பொ.ச.மு. 537-ல் கோரேசு பிறப்பித்திருந்தார். ஆனால், இப்போதோ வருடம் பொ.ச.மு. 520; எனினும் ஆலயம் இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை. இந்தச் சமயத்தின்போது வேலையைத் தடைசெய்த எதிரிகளைக் கண்டு யூதர்கள் பயந்துவிட்டனர். அதுமட்டுமன்றி, அவர்களுக்கும் ஆர்வமில்லாமல் போய்விட்டது; அத்துடன் பொருளாசையும் சேர்ந்துகொண்டதால் தாங்கள் திரும்பி வந்த நோக்கத்தையே அவர்கள் மறந்துவிட்டார்கள்.​—எஸ்றா 1:1-4; 3:10-13; 4:1-24; ஆகா. 1:4.

4பதிவு காட்டுகிறபடி, (பொ.ச.மு. 536-ல்) ஆலயத்தின் அஸ்திவாரம் போடப்பட்ட உடன், “அந்தத் தேசத்து ஜனங்கள் யூதா ஜனத்தின் கைகளைத் தளரப்பண்ணி, கட்டாதபடிக்கு அவர்களைச் சங்கடப்படுத்தி, . . . அவர்கள் யோசனையை அவத்தமாக்கும்படி அவர்களுக்கு விரோதமாய் ஆலோசனைக்காரருக்குக் கைக்கூலி கட்டினார்கள்.” (எஸ்றா 4:4, 5) கடைசியாக, பொ.ச.மு. 522-ல் யூதரல்லாத இந்த எதிரிகள் ஆலய வேலையை செய்ய முடியாதபடி ஓர் அதிகாரப்பூர்வ தடையுத்தரவைப் போடும்படி செய்தனர். பெர்சிய அரசனாகிய தரியு ஹிஸ்டாஸ்பிஸ் ஆட்சிசெய்த இரண்டாம் வருடத்தில், அதாவது பொ.ச.மு. 520-ல் ஆகாய் தீர்க்கதரிசனம் உரைக்க தொடங்கினார். இதனால் உற்சாகம் பெற்ற யூதர்கள் ஆலயத்தை கட்டும் வேலையைத் திரும்ப தொடங்கினார்கள். அப்போது இந்த வேலையை நிறுத்த கட்டளையிடும்படி அருகிலிருந்த தேசாதிபதிகள் தரியுவுக்கு ஒரு கடிதத்தை அனுப்பினார்கள்; தரியுவோ கோரேசின் கட்டளையையே புதுப்பித்து யூதர்களை ஆதரித்தார்.

5ஆகாய் தீர்க்கதரிசனம் எபிரெய வேதாகமத்தின் அதிகாரப்பூர்வ பட்டியலைச் சேர்ந்தது என்பதைப் பற்றி யூதர்கள் மத்தியில் எந்தச் சந்தேகமும் இருந்ததில்லை. மேலும் எஸ்றா 5:1-லும் 6:14-லும் அவர் “இஸ்ரவேல் தேவனின் நாமத்திலே” தீர்க்கதரிசனம் உரைத்ததாக கூறப்படுவதாலும் இது ஆதரிக்கப்படுகிறது. அவருடைய தீர்க்கதரிசனம் ‘கடவுளால் ஏவப்பட்ட முழு வேதாகமத்தின்’ பாகம் என்பதை எபிரெயர் 12:26-ல் பவுல் அதை மேற்கோள் காட்டுவதும் நிரூபிக்கிறது: “இன்னும் ஒருதரம் நான் பூமியை மாத்திரமல்ல, வானத்தையும் அசையப்பண்ணுவேன் என்று இப்பொழுது வாக்குத்தத்தஞ் செய்திருக்கிறார்.”​—ஆகா. 2:6.

6ஆகாய் தீர்க்கதரிசனத்தில், 112 நாள் காலப்பகுதியில் கொடுக்கப்பட்ட நான்கு செய்திகள் அடங்கியுள்ளன. அவருடைய எழுத்துநடை எளிமையானது, நேரடியானது. குறிப்பிடத்தக்க வகையில் அவர் யெகோவாவின் பெயருக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் கவனிக்கத்தக்கது. எப்படியென்றால், 38 வசனங்கள் அடங்கிய அவருடைய புத்தகத்தில் 35 தடவை யெகோவாவின் பெயரைக் குறிப்பிடுகிறார். அதில் 14 தடவை “சேனைகளுடைய யெகோவா” (NW) என்ற தொடர் வருகிறது. யெகோவாவிடமிருந்தே அவருடைய செய்தி வருகிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை: “யெகோவாவின் தூதனாகிய ஆகாய், யெகோவா தூதனுப்பிக் கட்டளையிட்டபடியே ஜனங்களிடம் பேசி, நான் உங்களோடே இருக்கிறேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான்.”​—1:13, தி.மொ.

7கடவுளுடைய ஜனத்தின் சரித்திரத்தில் முக்கியமான ஒரு காலம் அது. அப்போது ஆகாயின் ஊழியம் அதிக பயனுள்ளதாக இருந்தது. ஒரு தீர்க்கதரிசியாக தன் வேலையைச் செய்வதில் அவர் சளைக்கவும் இல்லை, யூதரிடம் செய்தியை அறிவிக்கையில் அவர் மழுப்பவும் இல்லை. காலந்தாழ்த்தாமல் காரியத்தில் உடனடியாக ஈடுபட வேண்டிய சமயம் இதுவே என அவர் நேரடியாகவே யூதர்களிடம் கூறினார். அவர்கள் யெகோவாவிடமிருந்து ஆசீர்வாதத்தைப் பெற விரும்பினால், அவருடைய ஆலயத்தைத் திரும்ப கட்டி தூய்மையான வணக்கத்தை திரும்ப நிலைநாட்ட வேண்டும். ஆகாய் உரைத்த செய்தியின் முக்கிய குறிப்பு இதுவே: ஒருவர் யெகோவாவுடைய ஆசீர்வாதத்தைப் பெற விரும்பினால் அவர் உண்மையான கடவுளை சேவிக்க வேண்டும், யெகோவா கட்டளையிடுகிற வேலையைச் செய்ய வேண்டும்.

ஆகாயின் பொருளடக்கம்

8முதல் செய்தி (1:1-15). இந்தச் செய்தி, ஜனங்களும் கேட்கும்படியாக தேசாதிபதி செருபாபேலிடமும் பிரதான ஆசாரியன் யோசுவாவிடமும் கூறப்படுகிறது. “கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கு ஏற்றகாலம் இன்னும் வரவில்லை” என அந்த ஜனங்கள் சொல்லி வந்தனர். இருதயத்தை ஊடுருவும் இந்தக் கேள்வியை ஆகாய் மூலம் யெகோவா கேட்கிறார்: “இந்த வீடு பாழாய்க் கிடக்கும்போது, நீங்கள் மச்சுப்பாவப்பட்ட உங்கள் வீடுகளில் குடியிருக்கும்படியான காலம் இதுவோ?” (1:2, 4) அவர்கள் பொருள் சம்பந்தமாக அதிகம் விதைத்தும் உணவு, பானம், உடை போன்ற விஷயங்களில் அவர்கள் அதிகத்தை அறுவடை செய்யவில்லை. “உங்கள் வழிகளைச் சிந்தித்துப் பாருங்கள்” என்று யெகோவா அறிவுரை கூறுகிறார். (1:7) யெகோவா மகிமைப்படும்படி மரங்களைக் கொண்டுவந்து ஆலயத்தைக் கட்டுவதற்கு இதுவே சமயம். யெகோவாவின் ஆலயம் பாழாய் கிடக்கையில் யூதர்கள் தங்கள் சொந்த வீடுகளை அலங்கரிப்பதிலேயே கருத்தாயிருந்தனர். ஆகவேதான் யெகோவா, மனிதனையும் அவன் உழைப்பையும் ஆசீர்வதியாமல் வானத்தின் பனியையும் அமோக விளைச்சலையும் தடுத்து வைத்திருந்தார்.

9ஆகாய் தீர்க்கதரிசனம் உரைத்தது வீண்போகவில்லை. இப்போது அவர்கள் புரிந்துகொள்கின்றனர்! அதிபதிகளும் ஜனங்களும் ‘தங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்துக்கு செவிகொடுக்க’ தொடங்குகின்றனர். மனிதனுக்கு பயப்படுவதைவிட்டு யெகோவாவுக்கு பயப்படுகின்றனர். “நான் உங்களோடே இருக்கிறேன்” என்று யெகோவா தம்முடைய தூதனாகிய ஆகாய் மூலம் உறுதியளிக்கிறார். (1:12, 13) யெகோவாவே அதிபதியின் ஆவியையும், பிரதான ஆசாரியனின் ஆவியையும், தம்முடைய ஜனத்தில் மீதியானோரின் ஆவியையும் எழுப்புகிறார். ஆகாய் தீர்க்கதரிசனம் உரைக்க ஆரம்பித்து 23 நாட்களே ஆன பிறகும் பெர்சிய அரசாங்கத்தின் தடையுத்தரவின் மத்தியிலும் அவர்கள் வேலையை தொடங்குகின்றனர்.

10இரண்டாவது செய்தி (2:1-9). கட்டட வேலை திரும்ப ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதம்கூட ஆகவில்லை. இப்போது ஆகாய் தேவாவியால் ஏவப்பட்ட தன் இரண்டாவது செய்தியை உரைக்கிறார். இது செருபாபேலையும் யோசுவாவையும் ஜனத்தில் மீந்திருப்போரையும் நோக்கி கூறப்படுகிறது. சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த யூதர்களில் சிலர் சாலொமோன் கட்டின முந்தின ஆலயத்தைக் கண்டிருந்தனர். அதோடு ஒப்பிட இந்த ஆலயம் ஒன்றுமேயில்லை என இவர்கள் உணர்ந்திருக்கலாம். ஆனால் சேனைகளின் யெகோவா சொல்வது என்ன? ‘திடன்கொள்ளுங்கள், வேலையை நடத்துங்கள்; நான் உங்களுடனே இருக்கிறேன்.’ (2:4) அவர்களோடு செய்த உடன்படிக்கையை யெகோவா நினைப்பூட்டி, பயப்பட வேண்டாம் என அவர்களிடம் சொல்கிறார். சகல தேசங்களையும் அசைவித்து அவற்றிலிருந்து விரும்பத்தக்கவற்றை கூட்டிச்சேர்த்து, தம்முடைய ஆலயத்தை மகிமையால் நிரப்புவதாக வாக்குறுதி கொடுத்து அவர்களைப் பலப்படுத்துகிறார். முந்தின ஆலயத்தின் மகிமையைக் காட்டிலும் இந்தப் பிற்பட்ட ஆலயத்தின் மகிமை அதிகமாயிருக்கும், இந்த இடத்தில் அவர் சமாதானத்தையும் கட்டளையிடுவார்.

11மூன்றாவது செய்தி (2:10-19). இரண்டு மாதமும் மூன்று நாட்களும் கழித்து ஆகாய் ஆசாரியர்களை நோக்கி பேசுகிறார். தான் கூறுவதை மனதில் பதிய வைப்பதற்காக அவர் ஓர் உருவகக்கதையை கூறுகிறார். பரிசுத்த மாம்சத்தைச் சுமந்துசெல்லும் ஓர் ஆசாரியன் மற்ற எந்த உணவையாவது தொட்டால் அது பரிசுத்தமாகுமா? இல்லை என்பதே பதில். அசுத்தமான ஒன்றை, அதாவது ஒரு பிணத்தைத் தொடுகிறவன் அதனால் அசுத்தமாவானா? ஆம் என்பதே பதில். பிறகு, ஆகாய் அந்த உருவகக்கதையை பொருத்துகிறார். அந்நாட்டின் ஜனங்கள் தூய்மையான வணக்கத்தை அசட்டை செய்ததால் அசுத்தமாய் இருக்கின்றனர். அவர்கள் எதை செலுத்தினாலும் அது யெகோவா தேவனுக்கு அசுத்தமாகவே தெரிகிறது. இதன் காரணமாகவே யெகோவா அவர்களுடைய உழைப்பை ஆசீர்வதிக்கவில்லை. அதோடு அவர்கள்மீது பொசுக்கும் வெப்பத்தையும், விஷப்பனியையும், கல்மழையையும் அனுப்பினார். அவர்கள் தங்கள் வழிகளை மாற்றிக் கொள்வார்களாக. அப்போது யெகோவா அவர்களை ஆசீர்வதிப்பார்.

12நான்காவது செய்தி (2:20-23). மூன்றாவது செய்தியைக் கூறிய அதே நாளில் இந்தச் செய்தியைச் சொல்கிறார், ஆனால் இதை செருபாபேலிடம் கூறுகிறார். மறுபடியுமாக யெகோவா, “வானத்தையும் பூமியையும் அசையப்பண்”ணுவதாக கூறுகிறார். ஆனால் இந்த முறை தேசங்களின் ராஜ்யங்களை முழுமையாக அழிப்பதோடு இதை சம்பந்தப்படுத்தி பேசுகிறார். அநேகர் கொல்லப்படுவர், “அவரவர் தங்கள் தங்கள் சகோதரனின் பட்டயத்தினாலே விழுவார்கள்.” (2:21, 22) யெகோவா செருபாபேல்மீது தயவு காட்டுவார் என்ற உறுதியை அளித்து ஆகாய் தன் தீர்க்கதரிசனத்தை முடிக்கிறார்.

ஏன் பயனுள்ளது

13ஆகாய் மூலமாக யெகோவா அறிவித்த நான்கு செய்திகளும் அன்றைய யூதர்களுக்கு பயனுள்ளவையாக இருந்தன. அவர்கள் உடனடியாக வேலையில் ஈடுபடும்படி தூண்டப்பட்டனர். ஆகவே, நாலரை ஆண்டுகளுக்குள் அந்த ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது, இது இஸ்ரவேலில் உண்மையான வணக்கத்தை முன்னேற்றுவித்தது. (எஸ்றா 6:14, 15) வைராக்கியமான அவர்களுடைய நடவடிக்கையை யெகோவா ஆசீர்வதித்தார். ஆலயம் கட்டப்பட்ட இந்தச் சமயத்தில்தான் பெர்சிய அரசன் தரியு அரசாங்க பதிவுகளை ஆராய்ந்து பார்த்து, கோரேசின் கட்டளையை திரும்ப உறுதிசெய்தார். அவருடைய அதிகாரப்பூர்வ ஆதரவுடன் ஆலய வேலை முடிக்கப்பட்டது.​—எஸ்றா 6:1-13.

14நம்முடைய நாளுக்கு பொருந்தும் ஞானமான ஆலோசனையும் இந்தத் தீர்க்கதரிசனத்தில் அடங்கியுள்ளது. எவ்வாறு? முக்கியமாக, ஒருவர் தன்னுடைய சொந்த அக்கறைகளைவிட கடவுளுடைய வணக்கத்தையே முதலாவது வைக்க வேண்டும் என்பதை இது வலியுறுத்துகிறது. (ஆகா. 1:2-8; மத். 6:33) மேலும் சுயநலம் கேடுள்ளது, பொருளாசையை நாடித்தொடருவது வீண், யெகோவா கொடுக்கும் சமாதானமும் ஆசீர்வாதமுமே ஐசுவரியத்தைத் தரும் போன்ற விஷயங்களை வலியுறுத்துகிறது. (ஆகா. 1:9-11; 2:9; நீதி. 10:22) அதுமட்டுமல்ல, ஒருவர் கடவுளுடைய ஊழியத்தை செய்கிறார் என்பதாலேயே அவர் சுத்தமாகிவிடமாட்டார். மாறாக, அந்த ஊழியம் புனிதமாகவும், முழு ஆத்துமாவோடும், அசுத்தமான நடத்தையால் களங்கப்படாமலும் இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது. (ஆகா. 2:10-14; கொலோ. 3:24; ரோ. 6:19) கடவுளுடைய ஊழியர்கள் ‘முந்தின நாட்களைப்’ பின்னோக்கிப் பார்த்து நம்பிக்கையற்ற மனப்பான்மையை வளர்க்காமல், ‘தங்கள் வழிகளில் தங்கள் இருதயத்தை ஊன்றவைத்து,’ யெகோவாவுக்கு மகிமை கொண்டுவரும்படி முன்னேறிச் செல்ல வேண்டும். அப்போது யெகோவா அவர்களோடு இருப்பார்.​—ஆகா. 2:3, 4; 1:7, 8, 13, NW; பிலி. 3:13, 14; ரோ. 8:31.

15யூதர்கள் ஆலய வேலையில் சுறுசுறுப்பாய் ஈடுபடத் தொடங்கின உடனே யெகோவா அவர்களுக்கு தயவு காண்பித்தார், அவர்கள் செழித்தோங்கினார்கள். தடைகள் எல்லாம் ஒழிந்துபோயின. அந்த வேலை சீக்கிரத்திலேயே செய்து முடிக்கப்பட்டது. பயப்படாமல், வைராக்கியத்துடன் யெகோவாவுக்கு ஊழியம் செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். தைரியத்துடன் விசுவாசத்தைக் காட்டினால், இக்கட்டுகளை எல்லாம், அவை மெய்யாக இருந்தாலும் சரி கற்பனையாக இருந்தாலும் சரி வென்றுவிடலாம். “யெகோவாவுடைய வார்த்தை”க்கு கீழ்ப்படிவதால் நல்ல பலன் கிடைக்கும்.​—ஆகா. 1: 1, NW.

16யெகோவா, ‘வானத்தையும் பூமியையும் அசையப்பண்ணுவார்’ என்ற தீர்க்கதரிசனத்தைப் பற்றியென்ன? ஆகாய் 2:6-ன் பொருத்தத்தை அப்போஸ்தலன் பவுல் பின்வரும் வார்த்தைகளில் கூறுகிறார்: “இன்னும் ஒருதரம் நான் பூமியை மாத்திரமல்ல, வானத்தையும் அசையப்பண்ணுவேன் என்று இப்பொழுது [தேவன்] வாக்குத்தத்தஞ் செய்திருக்கிறார். இன்னும் ஒருதரம் என்கிற சொல்லானது அசையாதவைகள் நிலைத்திருக்கத்தக்கதாக, அசைவுள்ளவைகள் உண்டாக்கப்பட்டவைகள்போல மாறிப்போம் என்பதைக் குறிக்கிறது. ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம். நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே.” (எபி. 12:26-29) “ராஜ்யங்களின் சிங்காசனத்தைக் கவிழ்த்து, ஜாதிகளுடைய ராஜ்யங்களின் பெலத்தை அழித்து”ப்போடுவதற்காகவே இவ்வாறு அசைவிக்கப்படுகிறது என ஆகாய் காட்டுகிறார். (ஆகா. 2:21, 22) இந்தத் தீர்க்கதரிசனத்தை மேற்கோள் காட்டுகையில் பவுல், “அசைவில்லாத” கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி பேசுகிறார். இந்த ராஜ்ய நம்பிக்கையை சிந்தனையில் வைத்து, நாம் ‘திடன்கொண்டு உழைத்து’ கடவுளுக்கு பரிசுத்த சேவை செய்வோமாக. மேலும், பூமியின் தேசங்களை யெகோவா கவிழ்ப்பதற்கு முன்பாக அருமையான ஒன்று அசைவிக்கப்பட்டு தப்பிப்பிழைப்பதற்காக அவற்றைவிட்டு வெளிவரவேண்டும்: “சகல ஜாதியாரையும் அசையப்பண்ணுவேன், சகல ஜாதியாரின் அருமையானவைகளும் வரும்; இந்த ஆலயத்திலே மகிமை நிறையப்பண்ணுவேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.”​—2:4, 7, தி.மொ.

[கேள்விகள்]

1, 2. ஆகாய் தீர்க்கதரிசி பற்றி என்ன தகவல் கொடுக்கப்பட்டுள்ளது, அவருடைய இரட்டிப்பான செய்தி என்ன?

3. சிறையிருப்பிலிருந்து விடுதலையாகி திரும்பி வந்ததன் நோக்கத்தைக் குறித்த எதை யூதர்கள் மறந்துவிட்டனர்?

4. ஆலய வேலையைத் தடைசெய்தது எது, ஆனால் ஆகாய் தீர்க்கதரிசனம் உரைக்கத் தொடங்கியபோது என்ன காரியங்கள் நடந்தன?

5. ஆகாய் புத்தகம் பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலைச் சேர்ந்ததென்று எது நிரூபிக்கிறது?

6. ஆகாயின் தீர்க்கதரிசனத்தில் அடங்கியுள்ளது என்ன, யெகோவாவின் பெயருக்கு என்ன முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

7. யூதர்கள் என்ன செய்யும்படி ஆகாய் அவர்களை உற்சாகப்படுத்தினார், அவர் உரைத்த செய்தியின் முக்கிய குறிப்பென்ன?

8. பொருளாதார விதத்தில் யெகோவா ஏன் அந்த யூதர்களை ஆசீர்வதிக்கவில்லை?

9. வேலையில் ஈடுபடும்படி யூதர்களை யெகோவா எவ்வாறு எழுப்புகிறார்?

10. தாங்கள் கட்டும் ஆலயத்தைப் பற்றி சில யூதர்கள் எவ்வாறு உணர்கின்றனர், ஆனால் யெகோவா என்ன வாக்குறுதி அளிக்கிறார்?

11. (அ) ஆசாரியர்கள் அசட்டையாயிருந்ததை என்ன உருவகக்கதையைக் கொண்டு ஆகாய் குறிப்பிடுகிறார்? (ஆ) அதன் விளைவு என்ன?

12. என்ன முடிவான செய்தியை ஆகாய் செருபாபேலிடம் அறிவிக்கிறார்?

13. ஆகாய் தீர்க்கதரிசனம் உரைத்ததால் உடனடியாக கிடைத்த பலன் என்ன?

14. நம் நாளுக்குப் பொருந்தும் ஞானமான என்ன ஆலோசனையை ஆகாய் அளிக்கிறார்?

15. வைராக்கியத்துடன் கீழ்ப்படிவதால் வரும் பலன்கள் பற்றி ஆகாய் புத்தகம் என்ன காட்டுகிறது?

16. ராஜ்ய நம்பிக்கையோடு ஆகாய் தீர்க்கதரிசனம் எவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளது, இன்று எந்தச் சேவை செய்ய அது நம்மைத் தூண்ட வேண்டும்?