Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் புத்தக எண் 4—எண்ணாகமம்

பைபிள் புத்தக எண் 4—எண்ணாகமம்

பைபிள் புத்தக எண் 4—எண்ணாகமம்

எழுத்தாளர்: மோசே

எழுதப்பட்ட இடம்: வனாந்தரமும் மோவாபின் சமவெளிகளும்

எழுதி முடிக்கப்பட்டது: பொ.ச.மு. 1473

காலப்பகுதி: பொ.ச.மு. 1512-1473

இஸ்ரவேலரின் வனாந்தர பயணத்தின் சம்பவங்கள் நம்முடைய நன்மைக்காக பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. a அப்போஸ்தலன் பவுல் சொன்னார்: “அவர்கள் இச்சித்ததுபோல நாமும் பொல்லாங்கானவைகளை இச்சியாதபடிக்கு, இவைகள் நமக்குத் திருஷ்டாந்தங்களாயிருக்கிறது.” (1 கொ. 10:​6) யெகோவாவின் பெயரைப் பரிசுத்தப்படுத்துவது, எல்லா சூழ்நிலைமைகளிலும் அவருக்குக் கீழ்ப்படிவது, அவருடைய பிரதிநிதிகளுக்கு மதிப்புக் காட்டுவது​—இவற்றின் பேரிலேயே தப்பிப்பிழைப்பது சார்ந்திருக்கிறது என்பதை எண்ணாகமத்திலுள்ள தெளிவான பதிவு நம் மனதில் ஆழப் பதியவைக்கிறது. கடவுளுடைய தயவு அவருடைய ஜனத்தின் எந்த நற்குணத்தினாலோ தகுதியினாலோ அல்ல, மாறாக அவருடைய மிகுந்த இரக்கத்தினாலும் தகுதியற்றத் தயவினாலுமே கிடைக்கிறது.

2முதல் நான்கு அதிகாரங்களிலும் 26-ம் அதிகாரத்திலும் பதிவு செய்திருக்கிறபடி, எண்ணாகமம் என்ற இந்தப் பெயர், முதலாவது சீனாய் மலையருகிலும் பின்னால் மோவாபின் சமவெளிகளிலும் ஜனங்கள் எண்ணப்பட்டதைக் குறிப்பிடுகிறது. இந்தப் பெயர் லத்தீன் வல்கேட்டில் உள்ள நூமரி (Numeri) என்ற தலைப்பிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. இது, கிரேக்க செப்டுவஜின்டில் உள்ள அரித்மாய் (A·rith·moiʹ) என்பதன் அடிப்படையில் தோன்றியது. எனினும், யூதர்கள் இந்தப் புத்தகத்தை பெமித்பார் (Bemidh·barʹ) என அதிகப் பொருத்தமாய் அழைக்கின்றனர்; இதன் அர்த்தம், “வனாந்தரத்தில்” என்பதாகும். மித்பார் (midh·barʹ) என்ற எபிரெயச் சொல், நகரங்களும் பட்டணங்களும் இல்லாத ஒரு திறந்த வெளியை குறிப்பிடுகிறது. கானானுக்குத் தெற்கேயும் கிழக்கேயும் இருந்த வனாந்தரத்தில் எண்ணாகமங்களின் சம்பவங்கள் நடைபெற்றன.

3ஆதியாகமத்திலிருந்து உபாகமம் வரையான ஐந்து புத்தகங்கள் அடங்கிய ஆரம்பகால தொகுப்பின் பாகமே எண்ணாகமம் என தெரிகிறது. “மேலும்” (NW) என்ற இடைச் சொல்லைக்கொண்டு தொடங்கும் இதன் முதல் வசனம், இது முந்தைய பதிவின் தொடர்ச்சியென காட்டுகிறது. ஆகவே இது, முந்தின பதிவுகளின் எழுத்தாளரான மோசேயால் எழுதப்பட்டிருக்க வேண்டும். மேலும் ‘மோசே எழுதி வைத்தார்’ என்று இந்தப் புத்தகமே சொல்கிறது. “யெகோவா மோசேயைக் கொண்டு இஸ்ரவேல் புத்திரருக்கு விதித்த கட்டளைகளும் தீர்ப்புகளும் இவைகளே” என முடிவிலும் சொல்வது தெளிவான அத்தாட்சி.​—எண். 33:2; 36:13, தி.மொ.

4இஸ்ரவேலர் எகிப்திலிருந்து விடுதலையாகி ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது. அவர்கள் புறப்பட்ட பின்பு இரண்டாம் வருடத்தின் இரண்டாம் மாதத்திலிருந்து இந்த விவரத்தைத் தொடங்கி, அடுத்த 38 ஆண்டுகளும் ஒன்பது மாதங்களுமான பொ.ச.மு. 1512-லிருந்து 1473 வரையான காலப்பகுதியை எண்ணாகமம் தன்னில் அடக்குகிறது. (எண். 1:1; உபா. 1:4) எண்ணாகமம் 7:​1-88-லும் 9:​1-15-லும் கூறப்பட்டுள்ள சம்பவங்கள் இந்தக் காலப்பகுதிக்குள் பொருந்துவதில்லை. என்றாலும், அவை பின்னணி தகவல்களாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்தப் புத்தகத்தின் ஆரம்பப்பகுதியில் குறிப்பிட்டுள்ளவை சந்தேகமில்லாமல் அந்தச் சம்பவங்கள் நடைபெறுகையில் எழுதப்பட்டவை. ஆனால் வனாந்தரத்தில் 40-வது ஆண்டின் முடிவு வரை, அதாவது பொ.ச.மு. 1473-ம் ஆண்டின் தொடக்கப்பகுதி வரையில் மோசே எண்ணாகமத்தை எழுதி முடித்திருக்க முடியாதென தெரிகிறது.

5இந்த விவரத்தின் நம்பகத் தன்மையைப் பற்றி எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது. அவர்கள் பயணப்பட்ட வறண்ட நிலம், “பயங்கரமான பெரிய வனாந்தர வழி”யாக இருந்ததாக மோசே கூறினார். இன்றும்கூட அப்பிரதேசத்தில் இங்கும் அங்குமாக குடியிருப்போர் புல்வெளியையும் தண்ணீரையும் சதா தேடியலைகிறார்கள். (உபா. 1:19) மேலும், அந்த ஜனத்தின் பாளையத்தைப் பற்றிய விளக்கமான கட்டளைகளும், அணிவகுப்பின் ஒழுங்கும், முகாம் நடவடிக்கைகளுக்கான எக்காள அறிவிப்புகளும் அந்தப் பதிவு நிச்சயமாகவே “வனாந்தரத்தில்” எழுதப்பட்டதென சாட்சி பகருகின்றன.​—எண். 1:1.

6‘பட்டணங்கள் அரணிப்பானவைகள், மிகவும் பெரியவைகள்’ என வேவுகாரர்கள் கானானுக்குள் சென்று திரும்பிவந்தபோது அறிவித்தனர். திகிலூட்டிய இந்த அறிக்கையும்கூட தொல்பொருள் ஆராய்ச்சியால் உண்மை என நிரூபிக்கப்படுகிறது. (13:28) அக்காலத்தில் கானானியர், அந்நாட்டினூடே பல இடங்களில், வடக்கே யெஸ்ரயேல் பள்ளத்தாக்கிலிருந்து தெற்கே கேரார் வரையில் பரவியிருந்தனர். மேலும், தொடர்ச்சியான அரண்களினால் தங்கள் ஆதிக்கத்தை வலுப்படுத்தி இருந்தார்களென நவீனகால கண்டுபிடிப்புகள் காட்டியிருக்கின்றன. அந்த நகரங்கள் அரண்களால் வலுப்படுத்தப்பட்டிருந்தது மட்டுமல்லாமல், அவை பொதுவாக குன்றுகளின் உச்சிகளில் கட்டப்பட்டிருந்தன. கோபுரங்கள் அவற்றின் மதில்களுக்கு மேலாக எழும்பி நின்றன. தலைமுறை தலைமுறையாக சமதளமான எகிப்து தேசத்தில் வாழ்ந்த இஸ்ரவேலரை போன்ற ஜனங்களை இவை கவர்ந்திழுத்தன.

7உலக ஜனத்தார் தங்கள் தோல்விகளை மறைத்து தங்கள் வெற்றிகளை மிகைப்படுத்திக் காட்டுவார்கள். ஆனால் சரித்திர உண்மை காட்டுகிறபடியே, இஸ்ரவேலர் அமலேக்கியராலும் கானானியராலும் முற்றிலும் முறியடிக்கப்பட்டார்கள் என எண்ணாகம பதிவு நேர்மையுடன் கூறுகிறது. (14:45) அந்த ஜனங்கள் விசுவாசமற்றவர்களாகவும் கடவுளை மதியாதவர்களாகவும் நடந்துகொண்டார்கள் என அது நேரடியாக அறிவிக்கிறது. (14:11) கடவுளுடைய தீர்க்கதரிசியாகிய மோசே அந்த ஜனத்தின், தன் உடன் பிறந்தாரின் மக்கள், மற்றும் தன் சொந்த சகோதர சகோதரியின் பாவங்களையே ஒளிவுமறைவின்றி சொல்வது குறிப்பிடத்தக்கது. தன்னையும்கூட அவர் விட்டுவைக்கவில்லை. மேரிபாவில் தண்ணீர் அளிக்கப்பட்டபோது தான் யெகோவாவை மகிமைப்படுத்த தவறியதையும், அதனால் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்குள் பிரவேசிக்கும் பாக்கியத்தை இழந்ததையும் பற்றி அவர் சொல்கிறார்.​—3:4; 12:​1-15; 20:​7-13.

8அதிலுள்ள கிட்டத்தட்ட எல்லா முக்கிய சம்பவங்களும் மற்ற பல நுட்பவிவரங்களும், பைபிளின் மற்ற எழுத்தாளர்களால் நேரடியாக எடுத்துக் குறிப்பிடப்படுகின்றன. கடவுளால் ஏவப்பட்டவையும் பயனுள்ளவையுமான வேதாகமத்தின் உண்மையான பாகம் என்பதையே அந்த விவரப்பதிவு காட்டுகிறது. இந்த எழுத்தாளர்களில் பலர் அவற்றின் உட்பொருளையும் முக்கியப்படுத்திக் காட்டுகின்றனர். உதாரணமாக, இயேசுவைப்போலவே, யோசுவா (யோசு. 4:12; 14:2), எரேமியா (2 இரா. 18:4), நெகேமியா (நெ. 9:​19-22), ஆசாப் (சங். 78:​14-41), தாவீது (சங். 95:​7-11), ஏசாயா (ஏசா. 48:21), எசேக்கியேல் (எசே. 20:​13-24), ஓசியா (ஓசி. 9:10), ஆமோஸ் (ஆமோ. 5:25), மீகா (மீ. 6:5), ஸ்தேவானின் பேச்சைப் பதிவு செய்த லூக்கா (அப். 7:36), பவுல் (1 கொ. 10:​1-11), பேதுரு (2 பே. 2:​15, 16), யூதா (யூ. 11), மற்றும் பெர்கமு சபைக்கு இயேசு சொன்னவற்றை பதிவுசெய்த யோவான் (வெளி. 2:14) ஆகிய அனைவரும் எண்ணாகம பதிவை குறிப்பிட்டு காட்டுகின்றனர்.​—யோவா. 3:14, 15ஆ.

9அப்படியென்றால் எண்ணாகமம் புத்தகத்தின் நோக்கம்தான் என்ன? நிச்சயமாகவே இது வெறும் சரித்திரப் பதிவாக மட்டுமல்ல, அதைவிட அதிக மதிப்புடையது. யெகோவா ஒழுங்கின் கடவுள்; மேலும் தம்முடைய படைப்புகள் தமக்கு தனிப்பட்ட பக்தியை கொடுக்கும்படி எதிர்பார்க்கிறார் என்பதையும் எண்ணாகமம் வலியுறுத்துகிறது. இப்புத்தகத்தில் இஸ்ரவேலர் எண்ணப்படுவதையும், புடமிடப்படுவதையும் புடைத்தெடுக்கப்படுவதையும் பற்றிய பதிவுகள் இருக்கின்றன. மேலும் அந்த ஜனத்தின் கீழ்ப்படியாத கலகத்தனமான போக்கு, யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதற்கான அவசியத்தை வலியுறுத்த பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பதிவுகளை வாசிக்கையில் இவை அனைத்தும் வாசகரின் மனதில் தெளிவுடன் ஆழமாக பதிகிறது.

10வரவிருந்த சந்ததிகளின் நன்மைக்காக இந்தப் பதிவு பாதுகாத்து வைக்கப்பட்டது. இதைத்தான் ஆசாப் இப்படிச் சொன்னார்: “அந்தப் பிள்ளைகளும் கடவுள்மேல் தங்கள் நம்பிக்கையை வைத்துக் கடவுள் செயல்களை மறவாமல் அவர் கற்பனைகளைக் கைக்கொள்ள வேண்டுமென்றும் இருதயத்தைச் செவ்வைப்படுத்தாமலும் தங்கள் ஆவியினால் கடவுளை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளாமலுமிருந்த முரட்டாட்டமும் கலகமுமுள்ள சந்ததியாராகிய தங்கள் பிதாக்களுக்கு அவர்கள் ஒப்பாகாதிருக்க வேண்டுமென்றும் இவைகளைக் கட்டளையிட்டார்.” (சங். 78:​7, 8, தி.மொ.) எண்ணாகமத்தின் சம்பவங்கள் மறுபடியும் மறுபடியுமாக சங்கீதங்களில் எடுத்துக் கூறப்பட்டன. இவை யூதரின் பரிசுத்தப் பாட்டுகளாக இருந்தன, ஆகவே அந்த ஜனத்தின் நன்மைக்காக அடிக்கடி திரும்பத் திரும்ப கூறப்பட்டன.​—சங். 78, 95, 105, 106, 135, 136.

எண்ணாகமத்தின் பொருளடக்கம்

11எண்ணாகமத்தை மூன்று பகுதிகளாக பிரிக்கலாம். இதில் முதல் பகுதியானது 10-ம் அதிகாரம், 10-ம் வசனம் வரையாகும். இஸ்ரவேலர் சீனாய் மலையில் தங்கியிருக்கும்போது நடைபெற்ற சம்பவங்கள் இதில் அடங்கியுள்ளன. அடுத்த பகுதி, 21-ம் அதிகாரத்தோடு முடிகிறது. அடுத்த 38 ஆண்டுகளும் ஓரிரண்டு மாதங்களுமான காலப்பகுதியில் நடந்தவற்றைக் கூறுகிறது. அவர்கள் வனாந்தரத்தில் இருந்த சமயம் முதல் மோவாப் சமவெளிகளுக்கு வந்து சேரும் சமயம் வரை இதில் அடங்கும். கடைசி பகுதி, 36-ம் அதிகாரம் வரை செல்கிறது. இஸ்ரவேலர் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்குள் பிரவேசிப்பதற்காக தயாராகிக்கொண்டிருந்த சமயத்தில் மோவாப் சமவெளிகளில் நடந்தவற்றை இப்பகுதி குறிப்பிடுகிறது.

12சீனாய் மலையில் நடந்த சம்பவங்கள் (1:​1–10:10). இஸ்ரவேலர் சீனாயின் மலைப் பகுதிகளில் ஏறக்குறைய ஓர் ஆண்டு ஏற்கெனவே வாழ்ந்திருக்கின்றனர். இங்கே அவர்கள் நெருக்கமாக பிணைக்கப்பட்ட ஓர் அமைப்பாக ஏற்படுத்தப்பட்டிருக்கின்றனர். யெகோவாவின் கட்டளையின்பேரில், 20-ம் அதற்கு மேற்பட்ட வயதினருமான எல்லா ஆண்களின் தொகை இப்போது கணக்கெடுக்கப்படுகிறது. மனாசேயில் 32,200 பேர் முதல் யூதாவில் 74,600 பேர் வரை கோத்திரத்திற்கு கோத்திரம் எண்ணிக்கை வேறுபடுகிறது. ஆகவே, இஸ்ரவேலின் படையில் சேருவதற்கு மொத்தம் 6,03,550 தகுதிபெற்ற ஆண்கள் இருக்கின்றனர். லேவியரையும் பெண்களையும் பிள்ளைகளையும் சேர்த்தால் முப்பது லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையான மக்கள் அடங்கிய ஒரு முகாமாக அது இருக்கலாம். ஆசரிப்புக்கூடாரம், லேவியரோடுகூட, பாளையத்திற்கு நடுவில் அமைக்கப்பட்டிருக்கிறது. மற்ற இஸ்ரவேலர்கள் அதன் ஒவ்வொரு பக்கத்திலும் தங்களுக்கு நியமிக்கப்பட்ட இடங்களில், மும்மூன்று கோத்திரப் பிரிவுகளாக தங்கியிருக்கின்றனர். பாளையம் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பயணப்படுகையில் அவரவருக்குரிய அணிவகுப்பு வரிசையைக் குறித்து அவர்கள் திட்டவட்டமான கட்டளைகளைப் பெற்றிருக்கின்றனர். யெகோவா கட்டளைகளைக் கொடுக்கிறார், பதிவு இவ்வாறு சொல்கிறது: “யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் இஸ்ரவேல் புத்திரர் செய்தார்கள்.” (2:​34, தி.மொ.) அவர்கள் யெகோவாவுக்குக் கீழ்ப்படிகிறார்கள், மேலும், கடவுளுடைய காணக்கூடிய பிரதிநிதியாகிய மோசேக்கு மதிப்புக் காட்டுகிறார்கள்.

13பின்பு, இஸ்ரவேலில் முதற்பேறானோருக்கு ஈடாக லேவியர்கள் யெகோவாவின் சேவைக்குத் தனியே ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். கெர்சோன், கோகாத், மெராரி​—இவர்கள் லேவியின் மூன்று குமாரர்கள். இந்தப் பரம்பரை வழியின்படி, லேவியர்கள் மூன்று தொகுதிகளாக பிரிக்கப்படுகின்றனர். இந்தப் பிரிவின் அடிப்படையில், முகாமில் அவரவருக்குரிய இடங்களும் ஊழிய பொறுப்புகளும் தீர்மானிக்கப்படுகின்றன. முப்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தை ஒவ்வொரு இடத்திற்கும் சுமந்துகொண்டு செல்லும் கடுமையான வேலையைச் செய்ய வேண்டும். 25 வயதை தாண்டியவர்கள் எளிதான வேலைகளைச் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. (தாவீதின் காலத்தில் இது 20 வயதாக குறைக்கப்பட்டது.)​1 நா. 23:​24-32; எஸ்றா 3:8.

14பாளையத்தைச் சுத்தமாக வைப்பதற்காக அநேக கட்டளைகள் கொடுக்கப்படுகின்றன. அவை: நோயுற்றவர்களை புறம்பே விலக்கி வைத்தல்; துரோகத்திற்கு பிராயச்சித்தம் செய்தல்; மனைவியின் நடத்தையை சந்தேகிக்கும் வழக்குகளைத் தீர்மானித்தல்; யெகோவாவுக்கு நசரேயராக வாழும்படி தங்களை ஒப்புக்கொடுத்தவர்களின் விஷயத்தில் சரியான நடத்தையை நிச்சயப்படுத்துதல் ஆகியவையே. அந்த ஜனங்கள் தங்கள் கடவுளின் பெயரை தாங்கியிருக்க வேண்டியிருப்பதால், அவருடைய கட்டளைகளுக்கு இசைவாக நடக்க வேண்டும்.

15முந்தின மாதம் நடந்த சம்பவங்களின் சில நுட்பவிவரங்களை மோசே கொடுக்கிறார். (எண். 7:​1, 10; யாத். 40:17) பின், பலிபீடம் பிரதிஷ்டை செய்யப்பட்ட சமயத்திலிருந்து 12 நாட்களடங்கிய ஒரு காலப்பகுதியில் ஜனங்களின் 12 பிரபுக்கள் காணிக்கைகளாக அளித்த பொருட்களைப் பற்றி மோசே அடுத்தபடியாக சொல்கிறார். இதில் போட்டியோ சுயமகிமையைத் தேடுதலோ இல்லை; ஒவ்வொருவரும் மற்றவர்கள் என்ன அளித்தார்களோ அதையே அளித்தார்கள். இந்தப் பிரபுக்களுக்கு மேலாக, மோசேக்கும் மேலாக, யெகோவா தேவன் இருக்கிறார், அவரே மோசேக்குக் கட்டளைகளைக் கொடுக்கிறார் என்பதை எல்லாரும் மனதில் வைக்க வேண்டும். யெகோவாவிடம் கொண்டுள்ள தங்கள் உறவை அவர்கள் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. யெகோவா அவர்களை எகிப்திலிருந்து அதிசயமாய் விடுதலை செய்ததை பஸ்கா அவர்களுக்கு நினைப்பூட்ட வேண்டும். குறிக்கப்பட்ட காலத்தில், அதாவது எகிப்தைவிட்டுப் புறப்பட்டு ஓர் ஆண்டுக்குப் பின்பு, இங்கே இந்த வனாந்தரத்தில் அவர்கள் அப்பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.

16எகிப்தைவிட்டு வெளியேற இஸ்ரவேலரை வழிநடத்தியது போலவே, அவர்களுடைய பயணங்களிலும் யெகோவா அவர்களை தொடர்ந்து வழிநடத்துகிறார். உடன்படிக்கைப் பெட்டியிருந்த ஆசரிப்புக் கூடாரத்தை பகலில் மேகம் மூடும், இரவில் அங்கே அக்கினி ஸ்தம்பம் தெரியும். அந்த மேகம் நகர்ந்து செல்லும்போது அந்த ஜனமும் அதே திசையில் செல்கிறது. அது ஆசரிப்புக் கூடாரத்தின்மேல் நிலைத்து நிற்கையில், அந்த ஜனமும் அங்கே பாளையமிறங்கித் தங்குகிறது. சில நாட்களோ ஒரு மாதமோ அல்லது அதற்கும் நீடித்த காலமோ இருக்கலாம். ஏனெனில் அந்த விவரம் நமக்கு சொல்வதாவது: “யெகோவாவின் கட்டளைப்படியே பாளையமிறங்குவார்கள்; யெகோவாவின் கட்டளைப்படியே பிரயாணமாவார்கள்; யெகோவா மோசேயைக்கொண்டு சொல்லியிருந்தபடியே யெகோவா கட்டளையிட்டவைகளைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.” (எண். 9:​23, தி.மொ.) சீனாயிலிருந்து புறப்பட வேண்டிய சமயம் நெருங்குகையில், ஜனங்களை ஒன்றுகூடிவரச் செய்வதற்கும் வனாந்தர பயணத்தில் பாளையங்களின் பல்வேறு பிரிவுகளை வழிநடத்துவதற்கும் எக்காள தொனிகள் ஒலிக்கும்படி செய்யப்படுகின்றன.

17வனாந்தரத்தில் நடக்கும் சம்பவங்கள் (10:​11–21:35). கடைசியாக, இரண்டாம் மாதத்தின் 20-ம் நாளில், ஆசரிப்புக் கூடாரத்தின் மேலிருந்த மேகத்தை யெகோவா எழுப்புகிறார். இவ்வாறு சீனாய் பிரதேசத்திலிருந்து இஸ்ரவேல் ஜனம் புறப்படும்படியான அடையாளத்தைக் கொடுக்கிறார். யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியை அவர்கள் மத்தியில் சுமந்துகொண்டு, வடக்கே ஏறக்குறைய 240 கிலோமீட்டர் தூரத்திலுள்ள காதேஸ்பர்னேயாவை நோக்கி அவர்கள் செல்கின்றனர். பகலில் அவர்கள் செல்கையில், யெகோவாவின் மேகம் அவர்களுக்கு மேலாக செல்கிறது. உடன்படிக்கைப் பெட்டியை வெளியில் கொண்டுசெல்லும் ஒவ்வொரு சமயத்திலும், யெகோவா எழும்பி தம்முடைய சத்துருக்களைச் சிதறடிக்குமாறு மோசே ஜெபிக்கிறார். அது தங்கும் ஒவ்வொரு சமயத்திலும், “பல்லாயிரவராகிய இஸ்ரவேலரிடம், யெகோவாவே, திரும்புவீராக” என ஜெபிக்கிறார்.​—10:​36, தி.மொ.

18எனினும், பாளையத்தில் பிரச்சினை எழும்புகிறது. காதேஸ்பர்னேயாவை நோக்கி வடக்கே செய்த பயணத்தின்போது, குறைந்தது மூன்று சந்தர்ப்பங்களில் ஜனங்கள் குறைகூறி முறுமுறுக்கின்றனர். முதல் கலகத்தை அடக்குவதற்கு, ஜனங்களில் சிலரை எரித்துப்போடும்படி யெகோவா அக்கினியை அனுப்புகிறார். பின்பு அவர்களோடு வந்த “அந்நிய கூட்டத்தார்,” எகிப்தில் கிடைத்த மீன், வெள்ளரிக்காய், தர்பூசணி, லீக், வெங்காயம், வெள்ளைப்பூண்டு எதுவும் இல்லை, வெறும் மன்னாவை சாப்பிட வேண்டியிருக்கிறது என ஏங்கித் தவிக்கும்படி இஸ்ரவேலைத் தூண்டி விடுகின்றனர். (11:​4, தி.மொ.) மோசே அவ்வளவு அதிக மனவேதனையடைவதால், இந்த ஜனங்களைப் பார்த்துக்கொள்வதைப் பார்க்கிலும் தன்னை கொன்றுவிடுமாறு யெகோவாவை கேட்கிறார். கரிசனையுடன் யெகோவா, மோசேயிடம் இருக்கும் ஆவியில் கொஞ்சம் எடுத்து 70 மூப்பர்கள் மீது வைக்கிறார். இவர்கள் அந்தப் பாளையத்தில் தீர்க்கதரிசிகளாக மோசேக்கு உதவி செய்கின்றனர். பின்பு இறைச்சி ஏராளமாக கிடைக்கிறது. முன்னொரு சமயம் நடந்ததுபோல், யெகோவா அனுப்பும் காற்று சமுத்திரத்திலிருந்து காடைகளை அடித்துக் கொண்டுவந்து சேர்க்கிறது. ஜனங்கள் பேராசையுடன் வாரிச்சென்று தன்னலத்துடன் குவித்துவைக்கின்றனர். அந்த ஜனங்களுக்கு எதிராக யெகோவாவின் கோபம் பற்றியெரிகிறது. அவர்களுடைய சுயநலமான பேராசையின் விளைவாக பலர் கொல்லப்படுகின்றனர்.​—யாத். 16:​2, 3, 13.

19பிரச்சினைகள் தொடருகின்றன. மிரியாமும் ஆரோனும், தங்கள் இளைய சகோதரனாகிய மோசேயை யெகோவாவின் பிரதிநிதியாக தகுந்த விதத்தில் நோக்கவில்லை. சமீபத்தில் பாளையத்துக்குள் வந்திருக்கிற மோசேயின் மனைவி சம்பந்தமாக அவர்மீது குற்றம் கண்டுபிடிக்கின்றனர். ‘மோசே பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவராயிருந்தார்.’ இருந்தபோதிலும், மோசேயைக் காட்டிலும் அதிக அதிகாரம் வேண்டுமென அவர்கள் கேட்கின்றனர். (எண். 12:3) யெகோவாதாமே அந்தக் காரியத்தைத் தீர்த்து வைக்கிறார். மோசே விசேஷ ஸ்தானத்தில் இருப்பதை அறியச் செய்கிறார். மிரியாமை குஷ்டரோகத்தால் தாக்குகிறார். அவளே குறைகூறுதலை பெரும்பாலும் தூண்டியிருக்கலாம். மோசே அவளுக்காக மன்றாடி விண்ணப்பித்ததால் மாத்திரமே பிற்பாடு சுகப்படுத்தப்படுகிறாள்.

20இஸ்ரவேலர் காதேஸுக்கு வந்து சேர்ந்து, வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்குள் பிரவேசிப்பதற்கான இடத்தில் பாளையமிறங்குகிறார்கள். தேசத்தை வேவுபார்ப்பதற்கு வேவுகாரர்களை அனுப்பும்படி யெகோவா இப்போது மோசேக்குக் கட்டளையிடுகிறார். அவர்கள் தெற்கிலிருந்து பிரவேசித்து, 40 நாட்களில் நூற்றுக்கணக்கான மைல் நடந்து, வடக்கே “ஆமாத்துக்குப் போகிற வழி” வரையாக செல்கிறார்கள். (13:21) கானானின் செழுமையான கனிகள் சிலவற்றுடன் அவர்கள் திரும்பிவருகிறார்கள். அந்த வேவுகாரரில் பத்துபேர், அவ்வளவு பலத்த ஒரு ஜனத்துக்கும் பெரும் அரணான நகரங்களுக்கும் எதிராக படையெடுத்துச் செல்வது மதியீனமாயிருக்கும் என விசுவாசமற்று விவாதிக்கின்றனர். நம்பிக்கையூட்டும் அறிக்கையால் அந்தக் கூட்டத்தை அமைதிப்படுத்த காலேபு முயற்சி செய்கிறார், ஆனால் முடியவில்லை. அந்தக் கலகக்கார வேவுகாரர், அந்தத் தேசம் “தன் குடிகளைப் பட்சிக்கிற தேசம்” என்றும், “நாங்கள் அதிலே கண்ட ஜனங்கள் எல்லாரும் மிகவும் பெரிய ஆட்கள்” என்றும் கூறி, இஸ்ரவேலரை திகிலடையச் செய்கின்றனர். கலகத்தனமான முறுமுறுப்புகள் அந்தப் பாளையத்தில் காட்டுத்தீ போல பரவுகின்றன. யோசுவாவும் காலேபும், “யெகோவா நம்மோடே இருக்கிறார்; அவர்களுக்குப் பயப்பட வேண்டாம்” என மன்றாடுகிறார்கள். (13:32; 14:​9, தி.மொ.) எனினும், அந்த ஜனக்கூட்டம் அவர்களைக் கல்லெறிந்து கொல்லுவதற்கு திட்டமிடுகிறது.

21அப்போது யெகோவா நேரடியாக தலையிட்டு மோசேயினிடம் பின்வருமாறு சொல்கிறார்: “எதுவரைக்கும் இந்த ஜனங்கள் என்னை அலட்சியம் செய்வார்கள்? அவர்கள் நடுவில் நான் செய்த சகல அடையாளங்களையும் அவர்கள் கண்டும் எதுவரைக்கும் என்னை நம்பாதிருப்பார்கள்?” (14:​11, தி.மொ.) யெகோவாவின் பெயரும் புகழும் இதில் உட்பட்டிருப்பதால் அந்த ஜனத்தை அழிக்க வேண்டாமென மோசே அவரிடம் கெஞ்சி கேட்கிறார். ஆகவே யெகோவா, ஜனங்களுக்குள் 20-ம் அதற்கு மேற்பட்ட வயதினருமான பெயர்ப்பதிவு செய்யப்பட்ட யாவரும் மரிக்கும் வரையில் இஸ்ரவேலர் வனாந்தரத்தில் தொடர்ந்து அலைந்து திரிய வேண்டும் என தீர்ப்பளிக்கிறார். பெயர்ப்பதிவு செய்யப்பட்ட ஆண்களில் காலேபும் யோசுவாவும் மாத்திரமே வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள். அந்த ஜனங்கள் வீணாகவே தங்கள் சொந்த முயற்சியால் போக துணிகிறார்கள். இதன் விளைவாக அவர்களை அமலேக்கியரும் கானானியரும் படுதோல்வி அடையச் செய்கின்றனர். யெகோவாவையும் அவருடைய உண்மைத்தவறாத பிரதிநிதிகளையும் அவமதித்ததற்காக எத்தகைய பெரும் இழப்பை அந்த ஜனங்கள் அனுபவிக்கின்றனர்!

22மெய்யாகவே, கீழ்ப்படிதலின் சம்பந்தமாக அவர்கள் கற்றுக்கொள்வதற்கு அதிகம் உள்ளது. பொருத்தமாகவே, யெகோவா இந்தத் தேவையை முக்கியப்படுத்தி அவர்களுக்கு கூடுதலான சட்டங்களைக் கொடுக்கிறார். வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்குள் அவர்கள் வருகையில், தவறுகளுக்காக பிராயச்சித்தம் செய்ய வேண்டுமெனவும், ஆனால் வேண்டுமென்றே கீழ்ப்படியாதிருப்போர் கண்டிப்பாக கொல்லப்பட வேண்டுமெனவும் அவர்களுக்குத் தெரிவிக்கிறார். இவ்வாறு, ஒரு மனிதன் ஓய்வுநாள் சட்டத்தை மீறி விறகு பொறுக்கிக் கொண்டிருப்பதைக் காண்கையில், “அந்த மனிதன் நிச்சயமாய்க் கொலை செய்யப்பட வேண்டும்” என்று யெகோவா கட்டளையிடுகிறார். (15:35) யெகோவாவின் கட்டளைகளையும் அவற்றிற்குக் கீழ்ப்படிவதன் முக்கியத்துவத்தையும் நினைப்பூட்டுவதற்காக, ஜனங்கள் தங்கள் வஸ்திரங்களின் ஓரங்களில் தொங்கல்களை அணிய வேண்டுமென யெகோவா கட்டளையிடுகிறார்.

23இருப்பினும், மறுபடியும் கலகம் உண்டாகிறது. கோராகும், தாத்தானும், அபிராமும், சபையாரில் பேர்பெற்றோரான 250 ஆண்களும் மோசே மற்றும் ஆரோனுடைய அதிகாரத்தை எதிர்க்கின்றனர். மோசே அந்தக் கலகக்காரரிடம் பின்வருமாறு கூறி, அந்த விவாதத்தை யெகோவாவுக்கு முன் வைக்கிறார்: ‘தூபகலசங்களை எடுத்துக்கொண்டு யெகோவாவின் சந்நிதியில் தூபவர்க்கம் இடுங்கள், யெகோவாவே தெரிந்தெடுக்கட்டும்.’ (16:​6, 7, தி.மொ.) இப்பொழுது யெகோவாவின் மகிமை சபை முழுவதற்கும் முன்பாக தோன்றுகிறது. உடனடியாக அவர் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுகிறார். பூமி பிளந்து கோராகு, தாத்தான், அபிராமின் குடும்பங்களை முழுமையாக விழுங்கிப்போடும்படி செய்கிறார். மேலும் தூபவர்க்கத்தைச் செலுத்திக்கொண்டிருந்த கோராகு உட்பட, அந்த 250 ஆண்களையும் எரித்துப்போடும்படி அக்கினியை அனுப்புகிறார். இச்சம்பவம் நடந்த அடுத்த நாளில்தானே, யெகோவா எடுத்த இந்த நடவடிக்கைக்காக ஜனங்கள் மோசேயையும் ஆரோனையும் கண்டனம் செய்யத் தொடங்குகின்றனர். மறுபடியும் யெகோவா வாதையை அனுப்பி, முறுமுறுத்த 14,700 பேரை அழிக்கிறார்.

24இந்தச் சம்பவங்களின் காரணமாக ஒவ்வொரு கோத்திரமும் தமக்கு முன்பாக ஒரு கோலை வைக்க வேண்டும் என யெகோவா கட்டளையிடுகிறார். லேவியின் கோத்திரத்துக்கு ஆரோனின் பெயரையுடைய ஒரு கோலை வைக்க வேண்டும். ஆசாரியத்துவத்துக்கு யெகோவா தெரிந்துகொண்ட நபர் ஆரோனே என்பதாக அடுத்த நாளில் காட்டப்படுகிறது, எவ்வாறெனில் அவருடைய கோல் மட்டுமே முழுமையாக துளிர்விட்டுப் பூப்பூத்து வாதுமைப் பழங்களைக் கொண்டிருக்கிறது. இது, “அந்தக் கலகக்காரருக்கு அடையாளமாக” உடன்படிக்கைப் பெட்டியில் பாதுகாத்து வைக்கப்பட வேண்டும். (எண். 17:​10, தி.மொ.; எபி. 9:4) தசமபாகங்களைக் கொண்டு ஆசாரியத்துவத்தை ஆதரிப்பதையும், சிவப்பு கிடாரியின் சாம்பல் கலந்த சுத்திகரிப்பு நீரை உபயோகிப்பதையும் குறித்து மேலுமான கட்டளைகள் கொடுக்கப்படுகிறது. அதன் பின்பு, இந்த விவரம் காதேசுக்கு நம் கவனத்தைத் திருப்புகிறது. இங்கே மிரியாம் மரித்து அடக்கம் செய்யப்படுகிறாள்.

25தண்ணீர் இல்லாததால், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் வாயிலில் மறுபடியும் இந்தக் கூட்டம் மோசேயுடன் வாக்குவாதம் பண்ணுகிறது. தம்மோடு வாக்குவாதம் பண்ணுவதாக யெகோவா இதை கருதுகிறார். அவர் தம்முடைய மகிமையில் தோன்றி, மோசே தன் கோலை எடுத்து கன்மலையிலிருந்து தண்ணீர் வரச் செய்யும்படி கட்டளையிடுகிறார். மோசேயும் ஆரோனும் இப்போது யெகோவாவை மகிமைப்படுத்துகிறார்களா? மாறாக, மோசே கோபத்தில் அந்தக் கன்மலையை இரண்டு தடவை அடிக்கிறார். குடிப்பதற்கு அந்த ஜனங்களுக்கும் அவர்களுடைய மிருகங்களுக்கும் தண்ணீர் கிடைக்கிறது, ஆனால் மோசேயும் ஆரோனும் அதற்குரிய மதிப்பை யெகோவாவுக்குக் கொடுக்கத் தவறுகின்றனர். அந்தக் கடுமையான வனாந்தரப் பயணம் ஏறக்குறைய முடிந்துவிட்ட போதிலும், அவர்கள் இருவரும் யெகோவாவின் கோபத்துக்கு ஆளாகிறார்கள். வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்குள் அவர்கள் பிரவேசிக்கப்போவதில்லை என்பதாக சொல்லப்படுகிறார்கள். பின்னால் ஆரோன் ஓர் என்னும் மலையில் மரிக்கிறார். அவருடைய குமாரன் எலெயாசார் பிரதான ஆசாரியனின் கடமைகளை ஏற்கிறார்.

26இஸ்ரவேலர் கிழக்கே திரும்பி ஏதோம் தேசத்தின் வழியாக செல்ல உத்தரவு கேட்கின்றனர், ஆனால் மறுத்துத் தடுக்கப்படுகின்றனர். வேறுவழியாக ஏதோமை சுற்றி நீண்ட பயணம் செல்கையில், அந்த ஜனங்கள் கடவுளுக்கும் மோசேக்கும் எதிராக முறுமுறுத்து மறுபடியும் தொந்தரவுக்குள்ளாகின்றனர். மன்னாவினால் சலிப்புறுகின்றனர், தாகத்தால் தவிக்கின்றனர். அவர்களுடைய கலகத்தனத்தின் காரணமாக யெகோவா அவர்களுக்குள் விஷப் பாம்புகளை அனுப்புகிறார், ஆகவே பலர் சாகின்றனர். கடைசியாக, மோசே விண்ணப்பம் செய்கிறபோது, ஒரு கொள்ளிவாய் சர்ப்பத்தின் உருவத்தை செம்பினால் உண்டாக்கி அதை ஓர் கம்பத்தில் தூக்கிவைக்கும்படி மோசேக்கு யெகோவா கட்டளையிடுகிறார். சர்ப்பத்தால் கடிபட்டவர்கள் அந்த செம்பு சர்ப்பத்தை நோக்கிப் பார்க்கையில் உயிர் பிழைக்கின்றனர். வடக்கே பயணப்படுகையில், எதிர்த்துப் போரிட வரும் எமோரியரின் அரசன் சீகோனாலும், பாசானின் அரசன் ஓக் என்பவனாலும் தடை செய்யப்படுகிறார்கள். இஸ்ரவேலர் இவர்கள் இருவரையும் போரில் தோற்கடித்து, பிளவு பள்ளத்தாக்கின் கிழக்கேயிருந்த அவர்களுடைய பிராந்தியங்களில் குடியேறுகிறார்கள்.

27மோவாபின் சமவெளிகளில் நடந்த சம்பவங்கள் (22:​1–36:13). கானானுக்குள் பிரவேசிப்பதை எதிர்பார்த்தவர்களாக இஸ்ரவேலர் மோவாபின் வனாந்தர சமவெளிகளில் இப்பொழுது ஆவலுடன் கூடுகின்றனர். இது சவக்கடலுக்கு வடக்கேயும், யோர்தானுக்குக் கிழக்கேயும், எரிகோவுக்கு மறுபுறமும் உள்ளது. இந்த மிகப் பரந்த பாளையம் தங்களுக்கு முன்பாக பரவியிருப்பதைக் கண்டு, மோவாபியர் திகிலடைகின்றனர். அவர்களுடைய அரசனாகிய பாலாக் மீதியானியரோடு கலந்துபேசி, இஸ்ரவேலின்மீது சாபத்தைக் கொண்டுவர மாந்திரீகத்தைப் பயன்படுத்தும்படி பிலேயாமை வரவழைக்கிறான். கடவுள் பிலேயாமிடம், “நீ அவர்களோடே போகவேண்டாம்” என்று நேரடியாக சொல்லுகிறபோதிலும், அவன் போக விரும்புகிறான். (22:12) வெகுமானம் பெற ஆசைப்படுகிறான். முடிவில் அவன் தனது பயணத்தை துவக்குகிறான். ஆனால் தேவதூதனால் தடுத்து நிறுத்தப்படுகிறான், அவனுடைய சொந்த பெண்-கழுதை அற்புதமாய் பேசி அவனை கண்டிக்கிறது. கடைசியாக பிலேயாம் இஸ்ரவேலைப் பற்றி சொல்லத் தொடங்குகையில், கடவுளுடைய ஆவி அவனை ஏவுகிறது. ஆகவே, அவன் நான்கு தடவையும் கடவுளுடைய ஜனங்களுக்கு ஆசீர்வாதங்களை மாத்திரமே தீர்க்கதரிசனமாக உரைக்கிறான். யாக்கோபிலிருந்து ஒரு நட்சத்திரம் உதிக்கும், இஸ்ரவேலிலிருந்து ஒரு செங்கோல் எழும்பி எதிரிகளை அழிக்கும் எனவும் முன்னறிவிக்கிறான்.

28தான் இஸ்ரவேலை சபிக்கத் தவறியது பாலாக்கைக் கோபமடைய செய்துவிட்டதால், பிலேயாம் இப்பொழுது அந்த அரசனின் தயவைத் தேடுகிறான். பாகால் வணக்கத்தின் ஒழுக்கங்கெட்ட சடங்குகளில் பங்குகொள்ளும்படி இஸ்ரவேலரின் ஆண்களை வசீகரித்து சிக்கவைப்பதற்கு மோவாபியர் தங்கள் சொந்த பெண்களைப் பயன்படுத்தும்படி ஆலோசனை கூறுகிறான். (31:​15, 16) இங்கே, வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் எல்லையில்தானே, இஸ்ரவேலர் படுமோசமான ஒழுக்கக்கேட்டிலும் பொய்த் தெய்வங்களின் வணக்கத்திலும் சிக்குண்டு விழுகின்றனர். யெகோவாவின் கோபம் வாதையால் வெளிப்படுகிறது. தவறு செய்தவர்களை உடனடியாக தண்டிக்கும்படி மோசே கட்டளையிடுகிறார். ஒரு பிரபுவின் குமாரன் மீதியானிய பெண் ஒருத்தியை பாளையத்துக்குள்ளேயே தன் கூடாரத்துக்குள் கொண்டுவருவதைப் பிரதான ஆசாரியரின் குமாரன் பினெகாஸ் பார்க்கிறார். அவர்களுக்குப் பின்சென்று, அந்தப் பெண்ணை அவளுடைய பிறப்புறுப்பில் குத்தி, அவர்களைக் கொன்றுபோடுகிறார். அப்பொழுது அந்த வாதை நிறுத்தப்படுகிறது. ஆனால் 24,000 பேர் அந்த வாதையால் ஏற்கெனவே மாண்டுபோய்விட்டனர்.

29ஏறக்குறைய 39 ஆண்டுகளுக்கு முன்னால் சீனாய் மலையில் செய்ததுபோல், மறுபடியும் ஜனத்தொகையைக் கணக்கிடும்படி மோசேக்கும் எலெயாசாருக்கும் யெகோவா இப்போது கட்டளையிடுகிறார். அவர்களுடைய எண்ணிக்கையில் அதிகரிப்பு இல்லையென முடிவான கணக்கு காட்டுகிறது. மாறாக, பெயர்ப்பதிவு செய்யப்பட்ட ஆண்களில் 1,820 பேர் குறைவாக இருந்தனர். படை சேவைக்காக சீனாய் மலையில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்களில், யோசுவாவையும் காலேபையும் தவிர, ஒருவரும் மீந்தில்லை. யெகோவா குறிப்பிட்டபடி, அவர்களெல்லாரும் வனாந்தரத்தில் இறந்துவிட்டனர். அடுத்தபடியாக, வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை பங்கிட்டு சுதந்தரிப்பதைக் குறித்து யெகோவா கட்டளைகளைக் கொடுக்கிறார். மேரிபாவின் தண்ணீருக்கு அருகில் மோசே யெகோவாவை மகிமைப்படுத்தத் தவறியதால் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்குள் பிரவேசிப்பதில்லை என அவர் திரும்பக் கூறுகிறார். (20:13; 27:​14, NW அடிக்குறிப்புகள்) மோசேக்குப் பின் பொறுப்பேற்பவராக யோசுவா நியமிக்கப்படுகிறார்.

30பலிகள், பண்டிகைகள் பற்றிய தம்முடைய சட்டங்களின் அவசியத்தையும் பொருத்தனைகளின் முக்கியத்துவத்தையும் அடுத்தபடியாக மோசேயின்மூலம் யெகோவா நினைப்பூட்டுகிறார். மேலும், பியோரின் பாகால் வணக்கத்தில் இஸ்ரவேலை ஈடுபட வைத்ததற்காக மீதியானியரை பழித்தீர்க்கும்படியும் மோசேயிடம் சொல்கிறார். பிலேயாமோடுகூட, மீதியானிய ஆண்கள் யாவரும் போரில் கொல்லப்படுகின்றனர். கன்னிப் பெண்கள் மாத்திரமே கொல்லாமல் விடப்படுகின்றனர். 32,000 பேர் சிறைபிடித்துக் கொண்டுவரப்படுகின்றனர். 8,08,000 மிருகங்கள் உட்பட ஏராளமான கொள்ளைப் பொருட்கள் எடுத்துவரப்படுகின்றன. போரில் இஸ்ரவேலன் ஒருவன்கூட காணாமல் போனதாக அறிவிக்கப்படவில்லை. ஆடுமாடுகளை வளர்க்கும் ரூபன் புத்திரரும் காத் புத்திரரும், யோர்தானின் கிழக்கேயுள்ள பிராந்தியத்தில் தங்கும்படி கேட்கின்றனர். வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை கைப்பற்றுவதற்கு அவர்கள் உதவிசெய்ய ஒப்புக்கொண்ட பின்பு, அந்த வேண்டுகோள் அனுமதிக்கப்படுகிறது. ஆகவே, இந்த இரண்டு கோத்திரங்களுக்கும், அவர்களோடுகூட மனாசேயின் பாதி கோத்திரத்துக்கும் இந்தச் செழிப்பான மேட்டுச் சமவெளி கொடுக்கப்படுகிறது.

31அந்த 40 ஆண்டு பயணத்தில் அவர்கள் பாளையமிறங்கின இடங்களைத் திரும்பக் குறிப்பிட்ட பின்பு, யெகோவாவுக்குக் கீழ்ப்படிய வேண்டிய அவசியத்தின்பேரில் இந்தப் பதிவு மறுபடியும் கவனத்தை ஊன்றவைக்கிறது. கடவுள் அவர்களுக்கு அந்தத் தேசத்தைக் கொடுக்கிறார். ஆனால் அவர்கள், கடவுளுடைய தண்டனையை நிறைவேற்றுபவர்களாக அந்த ஒழுக்கங்கெட்ட, பேய் வணக்கத்தாரான குடிமக்களைத் துரத்திவிட்டு, அவர்களுடைய விக்கிரக வணக்க மதத்தை தடயமின்றி அழித்தொழிக்க வேண்டும். கடவுள் கொடுத்த அவர்களுடைய தேசத்தின் எல்லைகளைப் பற்றிய நுட்பவிவரம் கூறப்படுகிறது. இது சீட்டுப்போட்டு அவர்களுக்குள் பிரித்துக் கொடுக்கப்பட வேண்டியுள்ளது. கோத்திர சுதந்தரம் இராத லேவியருக்கு 48 பட்டணங்கள் அவற்றின் மேய்ச்சல் நிலங்களோடு கொடுக்கப்பட வேண்டும், இவற்றில் 6, எதேச்சையாக கொலை செய்தவனுக்கு அடைக்கலப் பட்டணங்களாக இருக்க வேண்டும். பிராந்தியம் அந்தந்த கோத்திரத்துக்குள்ளேயே நிலைத்திருக்க வேண்டும், மணம் செய்வதால் மற்றொரு கோத்திரத்துக்கு ஒருபோதும் மாற்றப்படக்கூடாது. ஆண் சுதந்தரவாளி இல்லையெனில், சுதந்தரத்தைப் பெறும் குமாரத்திகள்—உதாரணமாக செலோப்பியாத்தின் குமாரத்திகள்​—தங்கள் சொந்த கோத்திரத்துக்குள் மணம் செய்ய வேண்டும். (27:​1-11; 36:​1-11) மோசேயின் மூலமாக கொடுத்த யெகோவாவின் இந்தக் கட்டளைகளுடனும், இஸ்ரவேல் புத்திரர் கடைசியாக வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்குள் பிரவேசிப்பதற்கான நிலையில் இருப்பதோடும் எண்ணாகமம் முடிகிறது.

ஏன் பயனுள்ளது

32இயேசு பல்வேறு சந்தர்ப்பங்களில் எண்ணாகமத்தைக் குறிப்பிட்டு பேசினார். அவருடைய அப்போஸ்தலரும் பைபிள் எழுத்தாளர்களான மற்றவர்களும் அதன் பதிவு எவ்வளவு கருத்துமிக்கதாகவும் நன்மையளிப்பதாகவும் இருக்கிறதென தெளிவாக காட்டுகிறார்கள். இயேசுவின் உண்மையுள்ள சேவையை எண்ணாகமத்தில் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ள மோசேயின் சேவைக்கு அப்போஸ்தலன் பவுல் ஒப்பிட்டார். (எபி. 3:​1-6) மிருக பலிகளிலும் எண்ணாகமம் 19:​2-9-ல் சொல்லப்பட்டுள்ளபடி இளம் சிவப்பு கிடாரியின் சாம்பலை தெளிப்பதிலும், கிறிஸ்துவினுடைய பலியின்மூலம் மிக அதிக மதிப்புவாய்ந்த சுத்திகரிப்பு நிகழப்போவது முன்நிழலாக காட்டப்படுவதை நாம் மறுபடியும் காண்கிறோம்.​—எபி. 9:​13, 14.

33இவ்வாறே, வனாந்தரத்தில் கன்மலையிலிருந்து தண்ணீர் வரச் செய்தது நமக்கு மிகுந்த அர்த்தமுள்ள ஒன்று என பவுல் பின்வருமாறு குறிப்பிட்டுக் காட்டினார்: “அவர்கள் தங்களைப் பின்தொடர்ந்த ஆவிக்குரிய கற்பாறையிலிருந்து பருகுவது வழக்கமாயிருந்தது, அந்தக் கற்பாறை கிறிஸ்துவைக் குறித்தது.” (1 கொ. 10:​4, NW; எண். 20:​7-11) பொருத்தமாக, கிறிஸ்துதாமே பின்வருமாறு சொன்னார்: “நான் கொடுக்குந் தண்ணீரில் குடிக்கிறவனோ ஒருகாலும் தாகமடையான். நான் அவனுக்குக் கொடுக்குந் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவனுக்கேதுவாக ஊறுகிற நீரூற்றாகும்.”​—யோவா. 4:14, தி.மொ.

34இயேசுவின் மூலமாக கடவுள் செய்துகொண்டிருந்த அந்த அதிசயமான ஏற்பாட்டை முன்னிழலாக குறித்த, எண்ணாகமத்தில் பதிவுசெய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியை, இயேசுவும் நேரடியாக எடுத்துக் குறிப்பிட்டார். அவர் சொன்னதாவது: “சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும், தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்பட வேண்டும்.”​—யோவா. 3:​14, 15; எண். 21:​8, 9.

35இஸ்ரவேலர் ஏன் 40 ஆண்டுகள் வனாந்தரத்தில் சுற்றித்திரியும்படி தீர்ப்பளிக்கப்பட்டார்கள்? விசுவாச குறைவினாலேயே. இந்தக் குறிப்பின்பேரில் அப்போஸ்தலன் பவுல் பின்வரும் வல்லமைவாய்ந்த அறிவுரையைக் கொடுத்தார்: “சகோதரரே, ஜீவனுள்ள கடவுளை விட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடி பாருங்கள். . . . நாடோறும் ஒருவருக்கொருவர் புத்தி சொல்லுங்கள்.” கீழ்ப்படியாமையின் காரணமாகவும் அவிசுவாசத்தின் காரணமாகவும் அந்த இஸ்ரவேலர் வனாந்தரத்தில் இறந்துபோனார்கள். “ஆகையால், எவனும் கீழ்ப்படியாமையைக் காண்பிக்கும் அந்தத் திருஷ்டாந்தப்படி விழுந்துபோகாதிருக்க நாம் இந்த [கடவுளின்] இளைப்பாறுதலில் பிரவேசிக்க விடாமுயற்சியாயிருப்போமாக.” (எபி. 3:​7–4:​11, தி.மொ.; எண். 13:​25–14:38) வெகுமானம் பெறுவதற்கான பிலேயாமின் பேராசையையும், யெகோவாவின் ஊழியனாகிய மோசேக்கு எதிரான கோராகின் கலகத்தனமான பேச்சையும் குறிப்பிட்டு, பரிசுத்தக் காரியங்களைப் பற்றி அவதூறாய்ப் பேசும் தேவபக்தியற்ற மனிதருக்கு எதிராக யூதா எச்சரித்தார். (யூ. 11; எண். 22:​7, 8, 22; 26:​9, 10) “அநீதத்தின் கூலியை விரும்பி”யவன் என்பதாக பேதுருவும் பிலேயாமை குறிப்பிட்டார். மேலும் மகிமைப்படுத்தப்பட்ட இயேசுவும் யோவானின் மூலம் கொடுத்தத் தம்முடைய வெளிப்படுத்துதலில், ‘விக்கிரகாராதனையும் வேசித்தனமும் செய்வதற்கு ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர் முன்பாகப் போட்டவன்’ என பிலேயாமை குறிப்பிட்டார். நிச்சயமாகவே இன்று கிறிஸ்தவ சபை அத்தகைய பரிசுத்தமற்றவர்களுக்கு எதிராக எச்சரிக்கப்பட வேண்டும்.​—2 பே. 2:​12-16; வெளி. 2:14.

36கொரிந்திய சபையில் ஒழுக்கக்கேடு தலைதூக்கியபோது, பவுல், குறிப்பாக எண்ணாகமத்தை எடுத்துக்காட்டி, ‘பொல்லாங்கானவைகளை இச்சிப்பதைப்’ பற்றி எழுதினார். அவர் பின்வருமாறு அறிவுரை கூறினார்: “அவர்களில் சிலர் வேசித்தனம்பண்ணி, ஒரே நாளில் இருபத்துமூவாயிரம்பேர் விழுந்துபோனார்கள்; அதுபோல நாமும் வேசித்தனம்பண்ணாதிருப்போமாக.” (1 கொ. 10:​6, 8; எண். 25:​1-9; 31:16) b கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்ததால் துன்பம் வந்தது என்பதாகவும், யெகோவா அருளின மன்னாவால் சலிப்படைந்து விட்டதாகவும் ஜனங்கள் முறையிட்ட சமயத்தைப் பற்றியதென்ன? இதைக் குறித்து பவுல் கூறுவதாவது: “அவர்களில் சிலர் ஆண்டவரைச் [“யெகோவாவை,” NW] சோதித்துப் பார்த்துப் பாம்புகளால் அழிக்கப்பட்டார்கள். அதுபோல் நாமும் ஆண்டவரைச் சோதித்துப் பாராதிருப்போமாக.” (1 கொ. 10:​9, தி.மொ.; எண். 21:​5, 6) பின்பு பவுல் தொடர்ந்து சொல்வதாவது: “அவர்களில் சிலர் முறுமுறுத்துச் சங்காரக்காரனால்தானே அழிக்கப்பட்டதுபோல், முறுமுறுப்போராயும் இராதீர்கள்.” யெகோவாவுக்கும், அவருடைய பிரதிநிதிகளுக்கும், அவருடைய ஏற்பாடுகளுக்கும் எதிராக முறுமுறுத்ததன் விளைவாக இஸ்ரவேலர் அனுபவித்தவை எவ்வளவு கசப்பான அனுபவங்களாக இருந்தன! “முன்மாதிரிகளாக அவர்களுக்கு தொடர்ந்து நடந்துகொண்டிருந்த” இந்தக் காரியங்கள், நாம் யெகோவாவை முழு விசுவாசத்துடன் தொடர்ந்து சேவிக்கும்படி, இன்று நம்மெல்லாருக்கும் தெளிவான எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.​—1 கொ. 10:​10, 11, NW; எண். 14:​2, 36, 37; 16:​1-3, 41; 17:​5, 10.

37பைபிளின் மற்ற பகுதிகள் பலவற்றை மேலும் நன்றாய்ப் புரிந்துகொள்வதற்கேதுவான பின்னணியையும் எண்ணாகமம் அளிக்கிறது.​—எண். 28:​9, 10மத். 12:5; எண். 15:38மத். 23:5; எண். 6:​2-4லூக். 1:15; எண். 4:3லூக். 3:23; எண். 18:311 கொ. 9:​13, 14; எண். 18:26எபி. 7:​5-9; எண். 17:​8-10எபி. 9:4.

38எண்ணாகமத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பது நிச்சயமாகவே கடவுளால் ஏவப்பட்டது. மேலும் யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதும், அவர் தம்முடைய ஜனங்களுக்குள் கண்காணிகளாக நியமித்திருப்பவர்களுக்கு மதிப்பு காட்டுவதும் முக்கியம் என கற்பிப்பதில் இது பயனுள்ளதாயிருக்கிறது. தவறுசெய்தலை, உதாரணத்தைக்கொண்டு கண்டிக்கிறது. மேலும் தீர்க்கதரிசன உட்பொருளையுடைய சம்பவங்களைக்கொண்டு இது, யெகோவா இன்று தம்முடைய ஜனங்களுக்கு அளித்திருக்கிற இரட்சகரும் தலைவருமிடமாக நம் கவனத்தைத் திருப்புகிறது. மத்தியஸ்தராகவும் பிரதான ஆசாரியராகவும் யெகோவா நியமித்துள்ள இயேசு கிறிஸ்துவின் அதிகாரத்தில் அவரது நீதியுள்ள ராஜ்யம் நிலைநாட்டப்படுவதை விவரிக்கும் பதிவில் இது இன்றியமையாத, அறிவொளியூட்டும் பாகம் வகிக்கிறது.

[அடிக்குறிப்புகள்]

a வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கங்கள் 540-2.

b வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கம் 233.

[கேள்விகள்]

1. எண்ணாகமத்தின் சம்பவங்கள் ஏன் பதிவுசெய்யப்பட்டன, அவை நம் மனதில் எதை பதிய வைக்கின்றன?

2. எண்ணாகமம் என்ற பெயர் எதைக் குறிப்பிடுகிறது, ஆனால், அதிகப் பொருத்தமான என்ன பெயரை யூதர்கள் இந்தப் புத்தகத்துக்குக் கொடுத்தனர்?

3. எண்ணாகமத்தை மோசே எழுதினார் என்பதை எது நிரூபிக்கிறது?

4. எண்ணாகமம் எவ்வளவு காலப்பகுதி அடங்கியது, இந்தப் புத்தகம் எப்போது எழுதி முடிக்கப்பட்டது?

5. எண்ணாகமத்தின் நம்பகத் தன்மைக்கு என்ன அம்சங்கள் சாட்சி பகருகின்றன?

6. தொல்பொருள் கண்டுபிடிப்புகள் எண்ணாகமத்தை எவ்வாறு ஆதரிக்கின்றன?

7. எண்ணாகம பதிவு நேர்மையானது என எப்படி சொல்ல முடியும்?

8. எண்ணாகமம் தேவாவியால் ஏவப்பட்டது என்பதற்கு மற்ற பைபிள் எழுத்தாளர்கள் எவ்வாறு சாட்சி பகருகின்றனர்?

9. யெகோவாவைக் குறித்து எண்ணாகமம் எதை வலியுறுத்துகிறது?

10. யாருடைய நன்மைக்காக எண்ணாகமம் பாதுகாத்து வைக்கப்பட்டது, ஏன்?

11. எண்ணாகமத்தின் பொருளடக்கத்தை என்ன மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்?

12. சீனாயில் இஸ்ரவேலின் முகாம் எவ்வளவு பெரிதாக இருக்கிறது, அந்த முகாம் எவ்வாறு ஒழுங்கமைக்கப்படுகிறது?

13. என்ன ஒழுங்கின்படி லேவியர்கள் சேவைக்கு நியமிக்கப்பட்டார்கள்?

14. பாளையம் சுத்தமாயிருப்பதற்கு என்ன கட்டளைகள் கொடுக்கப்படுகின்றன?

15. (அ) பலிபீடத்தின் பிரதிஷ்டை சம்பந்தமாக, என்ன காணிக்கைகள் செலுத்தப்பட்டன? (ஆ) என்ன உறவை இஸ்ரவேலர் நினைவில் வைக்க வேண்டும், பஸ்கா எதை அவர்களுக்கு நினைப்பூட்ட வேண்டும்?

16. யெகோவா அந்த ஜனத்தை எவ்வாறு வழிநடத்துகிறார், என்ன எக்காள தொனிகள் ஒலிக்கும்படி செய்யப்படுகின்றன?

17. இஸ்ரவேலர் பயணித்த முறையை விவரியுங்கள்.

18. காதேஸ்பர்னேயாவுக்குப் போகும் வழியில் என்ன முறுமுறுத்தல் தொடங்குகிறது, பாளையத்தில் தேவராஜ்ய முறையை யெகோவா எவ்வாறு சற்று மாற்றுகிறார்?

19. குறைகாணும் மிரியாமையும் ஆரோனையும் யெகோவா எவ்வாறு கையாளுகிறார்?

20, 21. என்ன சம்பவங்கள், இஸ்ரவேலர் 40 ஆண்டுகள் வனாந்தரத்தில் அலைந்துதிரிய வேண்டுமென்று யெகோவா தீர்ப்பளிக்கும்படி செய்கின்றன?

22. கீழ்ப்படிய வேண்டியதன் முக்கியத்துவம் என்ன வழிகளில் வலியுறுத்தப்படுகிறது?

23. கோராகு, தாத்தான், அபிராம் ஆகியோரின் கலகத்தின் விளைவென்ன?

24. கலகத்தை முடிவுக்கு கொண்டுவர என்ன அடையாளத்தை யெகோவா நடப்பிக்கிறார்?

25. எவ்வாறு மோசேயும் ஆரோனும் யெகோவாவை மகிமைப்படுத்தத் தவறுகின்றனர், அதன் விளைவென்ன?

26. வேறுவழியாக ஏதோமை சுற்றிச் சென்றபோது நடந்த சம்பவங்கள் யாவை?

27. பிலேயாம் சம்பந்தப்பட்டதில் பாலாக்கின் திட்டங்களை யெகோவா எவ்வாறு முறியடிக்கிறார்?

28. பிலேயாமின் ஆலோசனையின்பேரில் எந்த வஞ்சகமான கண்ணி இஸ்ரவேலரின்மீது கொண்டுவரப்படுகிறது, ஆனால் வாதை எவ்வாறு நிறுத்தப்படுகிறது?

29. (அ) 40-ம் ஆண்டின் முடிவில் எடுக்கப்பட்ட ஜனத்தொகை கணக்கு வெளிப்படுத்துவது என்ன? (ஆ) வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்குள் பிரவேசிப்பதற்கு இப்போது என்ன ஏற்பாடு செய்யப்படுகிறது?

30. மீதியானியர் எவ்வாறு பழிதீர்க்கப்படுகின்றனர், யோர்தானுக்குக் கிழக்கே உள்ள பிராந்தியம் யாருக்கு கொடுக்கப்படுகிறது?

31. (அ) தேசத்துக்குள் பிரவேசிக்கையில், இஸ்ரவேலர் எவ்வாறு தொடர்ந்து கீழ்ப்படிதலை காட்ட வேண்டும்? (ஆ) கோத்திர சுதந்தரங்களைக் குறித்து என்ன கட்டளைகள் கொடுக்கப்படுகின்றன?

32. என்ன முறைகளில் இயேசுவும் அவருடைய பலியும் எண்ணாகமத்தில் மாதிரியாக காட்டப்படுகின்றன?

33. வனாந்தரத்தில் தண்ணீர் வரச் செய்தது இன்று ஏன் நமக்கு அக்கறைக்குரியதாக உள்ளது?

34. அந்த வெண்கல சர்ப்பம் தீர்க்கதரிசன உட்பொருளை உடையதாக இருந்ததை இயேசு எவ்வாறு காட்டினார்?

35. (அ) வனாந்தரத்தில் இஸ்ரவேலரின் காரியத்தில் விளக்கிக் காட்டப்படுகிறபடி, எதற்கு எதிராக கிறிஸ்தவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், ஏன்? (ஆ) யூதாவும் பேதுருவும் தங்கள் கடிதங்களில், பேராசை மற்றும் கலகத்தின் என்ன உதாரணங்களை குறிப்பிடுகின்றனர்?

36. பொல்லாங்கான எந்தப் பழக்கங்களுக்கு எதிராக பவுல் எச்சரித்தார், இன்று நாம் எவ்வாறு அவருடைய அறிவுரையால் பயனடையலாம்?

37. பைபிளின் மற்ற பகுதிகளைப் புரிந்துகொள்ள எவ்வாறு எண்ணாகமம் நமக்கு உதவிசெய்கிறது என்பதை விளக்கிக் காட்டுங்கள்.

38. என்ன குறிப்பிட்ட வழிகளில் எண்ணாகமம் பயனுள்ளது, எதனிடம் நம்முடைய கவனத்தை திருப்புகிறது?