பைபிள் புத்தக எண் 42—லூக்கா
பைபிள் புத்தக எண் 42—லூக்கா
எழுத்தாளர்: லூக்கா
எழுதப்பட்ட இடம்: செசரியா
எழுதி முடிக்கப்பட்டது: ஏ. பொ.ச. 56-58
காலப்பகுதி: பொ.ச.மு. 3-பொ.ச. 33
லூக்கா சுவிசேஷத்தின் எழுத்தாளர் அறிவுத் திறன்மிக்கவர், கனிவானவர். இச்சிறப்பு பண்புகளோடு கடவுளுடைய ஆவியின் வழிநடத்துதலும் சேர்ந்து, திருத்தமான, அன்பும் கனிவுமிக்க விவரப்பதிவை எழுத அவருக்கு உதவியது. தன் பதிவை ஆரம்பிக்கையில் அவர் சொல்வதாவது, “அவற்றையெல்லாம் ஆரம்பமுதல் திட்டமாய் [“துல்லியமாக,” NW] ஆராய்ச்சி செய்திருக்கிற நானும், . . . அவைகளை ஒழுங்காய் [“கிரமப்படி,” NW] உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று.” அவர் நுட்பவிவரமாய் ஆராய்ந்து எழுதிய இந்தப் படைப்பு அந்த கூற்றை உண்மையென முழுமையாய் நிரூபிக்கிறது.—லூக். 1:3, 4, தி.மொ.
2இந்தப் பதிவில் லூக்காவின் பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை; எனினும் அவரே எழுத்தாளரென பூர்வ ஆதாரங்கள் ஒப்புக்கொள்கின்றன. மியூராடோரியன் சுருள்களின் பாகங்களில் (ஏ. பொ.ச. 170) இந்தச் சுவிசேஷம் லூக்காவினுடையது என சொல்லப்பட்டிருக்கிறது; ஐரீனியஸ், அலெக்ஸாண்டிரியாவின் கிளெமென்ட் போன்ற இரண்டாம் நூற்றாண்டு எழுத்தாளர்களும் இதை அவ்வாறே ஏற்றுக்கொண்டனர். மற்ற பைபிள் புத்தகங்களிலுள்ள அத்தாட்சியும் அதை லூக்கா எழுதியதாகவே உறுதியாய் குறிப்பிடுகிறது. கொலோசெயர் 4:14-ல் பவுல், “பிரியமான வைத்தியனாகிய லூக்கா” என அவரைக் குறிப்பிடுகிறார். அவருடைய படைப்பு, மருத்துவரைப் போன்ற கற்றறிந்த ஒருவரிடமிருந்து எதிர்பார்க்கும் புலமை வாய்ந்ததாயும் தரமிக்கதாயும் உள்ளது. அவர் மிகச் சிறந்த மொழிநடையையும் விரிவான சொற்தொகுதியையும் பயன்படுத்தியிருக்கிறார்; இது, மற்ற மூன்று எழுத்தாளர்களுடைய ஒட்டுமொத்தமான சொற்தொகுதியைவிட அதிகமாகும். இதுவே முக்கிய தகவல்களை மிக கவனமாகவும் விரிவாகவும் அவர் எழுதுவதைச் சாத்தியமாக்குகிறது. கெட்ட குமாரனைப் பற்றிய லூக்காவின் விவரிப்பு இதுவரை எழுதப்பட்ட எந்த சிறுகதையைக் காட்டிலும் மிகச் சிறந்ததென சிலர் கருதுகின்றனர்.
3லூக்கா 300-க்கும் மேற்பட்ட மருத்துவ பதங்களை பயன்படுத்துகிறார். இவற்றிற்கு அவர் மருத்துவ விளக்கத்தையும் அளிக்கிறார். கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் மற்ற எழுத்தாளர்கள் (ஒருவேளை மருத்துவ பதங்களை உபயோகித்திருந்தாலும்) கொடுக்காத மருத்துவ விளக்கத்தை அவர் கொடுக்கிறார். a குஷ்டரோகத்தைப் பற்றி அவர் குறிப்பிடுவதை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளுங்கள். லூக்கா மற்றவர்களைப் போல ஒரே பதத்தை எப்பொழுதும் பயன்படுத்துகிறதில்லை. அவர்களைப் பொருத்தவரை குஷ்டரோகம் குஷ்டரோகம்தான்; ஆனால் மருத்துவருக்கோ, குஷ்டரோகத்துக்குரிய படிப்படியான ஒவ்வொரு நிலையும் தெரியும். உதாரணம்: “குஷ்டரோகம் நிறைந்த ஒரு மனுஷன்” என்று லூக்கா குறிப்பிடுகிறார். லாசரு, “பருக்கள் நிறைந்தவனாய்” இருந்தான் என்கிறார். பேதுருவின் மாமியார் ‘கடும் ஜுரமாய்க்’ கிடந்தாள் என்று சுவிசேஷ எழுத்தாளர்களில் வேறு எவரும் சொல்கிறதில்லை. (5:12; 16:20; 4:38) பேதுரு பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் காதை வெட்டிவிட்டதாக மாத்திரமே மற்ற மூவரும் நமக்குச் சொல்கின்றனர். ஆனால், லூக்காவோ அப்படி வெட்டப்பட்டவனுடைய காதை இயேசு சுகப்படுத்தியதையும் குறிப்பிடுகிறார். (22:51) “பதினெட்டு வருஷமாய்ப் பலவீனப்படுத்தும் ஆவியைக்கொண்ட ஒரு ஸ்திரீ அங்கேயிருந்தாள்; அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாயிருந்தாள்” என்று சொல்வது மருத்துவருக்கே உரிய நடையாய் உள்ளது. “அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி” என்று, ஒருவனுக்குச் சமாரியன் செய்த முதலுதவியை குறித்து சொல்லப்படுகிறது; இந்தளவு நுட்பவிவரத்தை, “பிரியமான வைத்தியனாகிய லூக்கா”வைத் தவிர வேறு யார் பதிவுசெய்திருக்க முடியும்?—13:11; 10:34.
4லூக்கா தன் சுவிசேஷத்தை எப்போது எழுதினார்? அப்போஸ்தலருடைய நடபடிகளை எழுதினவர்தான் (லூக்காதான்) “முதலாம் பிரபந்த”மாகிய இந்தச் சுவிசேஷத்தையும் ஏற்கெனவே தொகுத்ததாக அப்போஸ்தலர் 1:2 குறிப்பிடுகிறது. பவுல் இராயனுக்கு மனுசெய்து, பதிலுக்குக் காத்திருந்த சமயத்தில், லூக்கா பவுலுடன் ரோமில் இருந்தார்; அப்போது, ஏறக்குறைய பொ.ச. 61-ல் அப்போஸ்தலர் நடபடிகளை பெரும்பாலும் அவர் எழுதியிருக்கலாம். எனவே இந்தச் சுவிசேஷத்தை செசரியாவில் இருக்கையில் ஏறக்குறைய பொ.ச. 56-58-ல் ஒருவேளை லூக்கா எழுதியிருக்கலாம். அதாவது, பவுலின் மூன்றாவது மிஷனரி பயணத்தின் முடிவில் அவருடன் பிலிப்பியிலிருந்து திரும்பிவந்த பின்னர் எழுதியிருக்கலாம். அப்போது பவுல், மேல் முறையீட்டிற்காக ரோமுக்குக் கொண்டுசெல்லப்படும் முன்பாக செசரியாவின் சிறையில் இரண்டு ஆண்டுகள் காத்திருந்தார். லூக்கா அங்கே பலஸ்தீனாவில் இருந்தது, இயேசுவின் வாழ்க்கையையும் ஊழியத்தையும் பற்றி ‘எல்லாவற்றையும் ஆரம்பமுதல் துல்லியமாக ஆராய்ச்சி செய்வதற்கு’ வாய்ப்பளித்தது. எனவே, லூக்காவின் விவரப்பதிவு மாற்குவின் சுவிசேஷத்துக்கு முந்தி எழுதப்பட்டதாக தோன்றுகிறது.
5லூக்கா பன்னிருவரில் ஒருவர் அல்ல, இயேசுவின் மரணம் வரை விசுவாசியும் அல்ல; ஆகவே, தான் எழுதிய சம்பவங்கள் அனைத்திற்கும் அவர் நிச்சயமாகவே கண்கண்ட சாட்சியும் அல்ல. எனினும், அவர் மிஷனரி ஊழியத்தில் பவுலுடைய நெருங்கிய கூட்டாளி. (2 தீ. 4:11; பிலே. 24) ஆகவே, அவருடைய எழுத்தில் பவுலின் செல்வாக்கு தெரிவது நியாயமானதே. லூக்கா 22:19, 20-லும் 1 கொரிந்தியர் 11:23-25-லும் உள்ள கர்த்தருடைய இராப்போஜனத்தைப் பற்றிய விவரங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் இது புரியும். லூக்கா அதிக தகவலைப் பெறுவதற்கு, மத்தேயுவின் சுவிசேஷத்தை ஆராய்ந்து பார்த்திருக்கலாம். ‘எல்லாவற்றையும் துல்லியமாக ஆராய்பவராக’ அவர், இயேசுவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களுக்குக் கண்கண்ட சாட்சியாய் இருந்த பலரையும் நேரில் பேட்டி கண்டிருக்கலாம். அதாவது, அப்போது உயிரோடிருந்த சீஷர்களையும் ஒருவேளை இயேசுவின் தாயாகிய மரியாள் உட்பட பலரையும் கேட்டிருக்கலாம். இப்படி நம்பத்தக்க நுணுக்க விவரங்களைத் திரட்டுவதில் அவருக்குக் கிடைத்த எந்த வாய்ப்பையும் நழுவவிட்டிருக்க மாட்டாரென்று உறுதியாயிருக்கலாம்.
6இந்த எழுத்தாளர்கள், ஒருவர் எழுதியதையே மற்றொருவர் திரும்ப திரும்ப எழுதுகிறதில்லை; அல்லது இந்த இன்றியமையாத பைபிள் பதிவுக்கு அத்தாட்சிகள் பல அளிப்பதற்கு மாத்திரமே இதை அவர்கள் எழுதுகிறதில்லை என்பது இந்த நான்கு சுவிசேஷங்களையும் ஆராய்கையில் மிகத் தெளிவாகிறது. லூக்காவின் விவரப்பதிவு, அதன் எழுத்து நடையில் மிகத் தனித்தன்மை வாய்ந்தது. மொத்தத்தில், அவருடைய சுவிசேஷத்தில் 59 சதவீதம் தனிப்பட அவருக்கே உரிய எழுத்துநடையில் உள்ளது. குறைந்தது ஆறு பிரத்தியேக அற்புதங்களை விவரிக்கிறார். மற்ற சுவிசேஷங்களில் குறிப்பிடப்படாத, 12-க்கும் அதிகமான உவமைகளையும் அவர் பதிவுசெய்கிறார். தன் சுவிசேஷத்தில் மூன்றிலொரு பாகத்தை நிகழ்ச்சிகளைத் தொகுத்துரைப்பதற்கும் மூன்றில் இரண்டு பாகங்களை சொற்பொழிவுக்கும் ஒதுக்கிவைக்கிறார். நான்கு சுவிசேஷங்களிலும் இவருடையது பெரியது. முக்கியமாய் மத்தேயு யூதருக்காக எழுதினார், மாற்கு யூதரல்லாத ரோமர்களுக்காக எழுதினார். லூக்காவின் சுவிசேஷம், ‘மகா கனம்பொருந்திய தெயோப்பிலுவுக்கு’ எழுதப்பட்டுள்ளது; மேலும் அவர் மூலமாய் யூதருக்கும் யூதரல்லாதவர்களுக்கும் அளிக்கப்படுகிறது. (லூக். 1:1, 3, 4) யூதருக்காக எழுதிய மத்தேயுவைப்போல் இயேசுவின் வம்சாவளி பட்டியலை ஆபிரகாமோடு நிறுத்திக்கொள்ளவில்லை. மாறாக, “ஆதாம், கடவுளின் குமாரன்” என்பது வரை கொண்டுசெல்லுகிறார். இவ்வாறு அவருடைய பதிவு அனைத்து மக்களையும் கவர்கிறது. இயேசு “புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளி”யாக இருப்பார் என்ற சிமியோனின் தீர்க்கதரிசன வார்த்தைகளை அவர் வலியுறுத்திக் காட்டுகிறார்; “மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள்” என்றும் சொல்கிறார்.—3:38, தி.மொ.; 2:29-32; 3:5.
7நிகழ்ச்சிகளைத் தொகுத்துரைப்பதில் லூக்கா முதன்மையானவராய் திகழ்கிறார்; அவர் எழுதிய விவரங்கள் வரிசைக் கிரமமாகவும் திருத்தமானவையாகவும் உள்ளன. லூக்காவின் எழுத்துக்களில் காணப்படும் திருத்தமான தன்மையும் உள்ளதை அப்படியே எடுத்துரைக்கும் பண்பும் அதன் நம்பகத்தன்மைக்கு உறுதியாய் சான்றளிக்கின்றன. சட்ட எழுத்தாளர் ஒருவர் ஒருமுறை குறிப்பிட்டதாவது: “காதல் கதைகளும் கட்டுக்கதைகளும் பொய் சாட்சியமும், அவற்றோடு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை ஏதோ ஒரு ஊரில் ஏதோ ஒரு சமயத்தில் நடந்ததாய் தெளிவற்று குறிப்பிடுகின்றன; இவ்வாறு, நன்கு வழக்காடுவதற்கு ‘நேரத்தையும் இடத்தையும் சரியாக கொடுக்க வேண்டும்’ என வழக்கறிஞர்களான நாங்கள் கற்றுக்கொண்ட முதல் சட்டத்தையே அவை மீறிவிடுகின்றன. அப்படியிருக்கையில், பைபிளோ, சம்பந்தப்பட்ட தேதியையும் இடத்தையும் மிகத் துல்லியமாய் நமக்குக் கொடுக்கிறது.” b இதற்குச் சான்றாக அவர் லூக்கா 3:1, 2-ஐக் குறிப்பிட்டார்: “திபேரியுராயன் ராஜ்யபாரம் பண்ணின பதினைந்தாம் வருஷத்திலே, பொந்தியுபிலாத்து யூதேயாவுக்குத் தேசாதிபதியாயும், ஏரோது காற்பங்கு தேசமாகிய கலிலேயாவுக்கு அதிபதியாயும், அவன் சகோதரனாகிய பிலிப்பு காற்பங்கு தேசமாகிய இத்துரேயாவுக்கும் திராகொனித்தி நாட்டிற்கும் அதிபதியாயும், லிசானியா காற்பங்கு தேசமாகிய அபிலேனேக்கு அதிபதியாயும், அன்னாவும் காய்பாவும் பிரதான ஆசாரியராயும் இருந்த காலத்தில் வனாந்தரத்திலே சகரியாவின் குமாரனாகிய யோவானுக்குத் தேவனுடைய வார்த்தை உண்டாயிற்று.” காலத்தையும் இடத்தையும் பற்றி அவர் தெள்ளத்தெளிவாக குறிப்பிடுகிறார். யோவானும் இயேசுவும் தங்கள் ஊழியத்தை எப்போது தொடங்கினார்கள் என்பதை திட்டமாய் உறுதிசெய்ய குறைந்தது ஏழு அரசு அதிகாரிகளின் பெயர்களையாவது லூக்கா இங்கே குறிப்பிடுகிறார்.
8லூக்கா 2:1, 2-ல் (தி.மொ.) இயேசு பிறந்த காலத்தை உறுதிசெய்ய இரண்டு விஷயங்களை இவ்வாறு லூக்கா நமக்களிக்கிறார்: “அந்நாட்களில் உலகமெங்கும் ஜனத்தொகைக் கணக்குப் பார்க்க வேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது. சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இது முதலாம் கணக்காகப் பதிவுசெய்யப்பட்டது.” இந்தச் சமயத்திலேயே யோசேப்பும் மரியாளும் பதிவுசெய்வதற்காக பெத்லகேமுக்குச் சென்றனர், அவர்கள் அங்கிருக்கையில் இயேசு பிறந்தார். c லூக்காவைப் பற்றி உரையாசிரியர் ஒருவர் இவ்வாறு சொல்வதை நாம் ஒப்புக்கொள்ளாமல் இருக்க முடியாது: “லூக்கா எந்தவொரு சரித்திர நிகழ்ச்சியையும் துருவி ஆராயும் பண்புள்ளவர். அதனால்தான் அவர் எதை பதிவுசெய்தாலும், துளிகூட பிழையே இருப்பதில்லை.” d ஆகவே, ‘ஆரம்பமுதல் துல்லியமாக ஆராய்ச்சி செய்ததாக’ லூக்கா சொல்வது உண்மையே.
9எபிரெய வேதாகமத்திலுள்ள தீர்க்கதரிசனங்கள் இயேசு கிறிஸ்துவில் இம்மியும் பிசகாமல் நிறைவேற்றமடைந்ததையும் லூக்கா குறிப்பிடுகிறார். இது சம்பந்தமாக இயேசு சொன்ன ஏவப்பட்ட வார்த்தைகளை சாட்சியமாக அவர் மேற்கோள் காட்டுகிறார். (24:27, 44) மேலும், எதிர்காலத்தைப் பற்றி இயேசு சொன்ன தீர்க்கதரிசனங்களையும் அவர் திருத்தமாய் பதிவுசெய்கிறார். இவற்றில் பல, முன்னறிவிக்கப்பட்ட விதமாகவே துல்லியமாக குறிப்பிடத்தக்க முறையில் ஏற்கெனவே நிறைவேற்றம் அடைந்திருக்கின்றன. உதாரணமாக, இயேசு முன்னறிவித்தபடியே, எருசலேம் கூர்முனைகளுள்ள கம்பங்கள் சுற்றிலும் நடப்பட்டு முற்றுகையிடப்பட்டது, அதன்பின் பொ.ச. 70-ல் முற்றிலும் அழிக்கப்பட்டது. (லூக். 19:43, 44, NW; 21:20-24; மத். 24:2) இந்தக் கம்பங்களைப் பெற ஏறக்குறைய 16 கிலோமீட்டர் தூரத்திற்கு சுற்றுப்புறத்திலிருந்த மரங்களெல்லாம் வெட்டப்பட்டன என்றும், அந்த முற்றுகை அடைப்பு ஏறக்குறைய 8 கிலோமீட்டர் நீளமிருந்தது என்றும், பல பெண்களும் பிள்ளைகளும் பஞ்சத்தால் மாண்டனர் என்றும், 10,00,000-க்கும் அதிகமான யூதர்கள் உயிரிழக்க, 97,000 பேர் சிறைபிடித்து செல்லப்பட்டனர் என்றும், ரோம படையுடன் வந்த கண்கண்ட சாட்சியான உலக சரித்திராசிரியர் ஃப்ளேவியஸ் ஜொஸிஃபஸ் உறுதிப்படுத்துகிறார். ரோமிலுள்ள டைட்டஸின் வளைவில், எருசலேமின் ஆலயத்தில் கொள்ளையடித்தப் பொருட்களை ரோமர்கள் தங்களது வெற்றி ஊர்வலத்தில் எடுத்துச் செல்வதை சித்தரிக்கும் ஓவியத்தை இன்றும் காணலாம். e லூக்கா பதிவுசெய்துள்ள, ஏவப்பட்ட மற்ற தீர்க்கதரிசனங்களும் அவ்வாறே அட்சரம் பிசகாமல் நிறைவேறுமென்று நிச்சயமாயிருக்கலாம்.
லூக்காவின் பொருளடக்கம்
10லூக்காவின் அறிமுகம் (1:1-4). லூக்கா, தான் எல்லாவற்றையும் ஆரம்பமுதல் திட்டமாய் ஆராய்ந்ததாகவும் “கனம்பொருந்திய தெயோப்பிலு” இவை “முழு நிச்சயமே என்பதை . . . முற்றும் அறிந்துகொள்ள வேண்டுமென்று” அவற்றை கிரமமாக எழுதத் தீர்மானித்ததாகவும் குறிப்பிடுகிறார்.—1:1, 3, 4, தி.மொ.
1:5–2:52). வயதான ஆசாரியராகிய சகரியாவுக்கு ஒரு குமாரன் பிறப்பான், அவனுக்கு யோவான் என பெயரிட வேண்டுமென்ற மகிழ்ச்சி பொங்கும் செய்தியுடன் தேவதூதன் ஒருவர் அவருக்கு முன் தோன்றுகிறார். ஆனால் அந்தக் குமாரன் பிறக்கும் வரையில், சகரியா ஊமையாகிறார். அவருடைய மனைவியாகிய எலிசபெத்து, ‘வயதுசென்றவள்’; என்றபோதிலும், தூதன் சொன்னபடியே அவள் கர்ப்பவதியாகிறாள். ஏறக்குறைய ஆறு மாதங்களுக்குப் பின், காபிரியேல் தூதன் மரியாள் முன் தோன்றுகிறார்; அவள் “மகா உன்னதமானவருடைய வல்லமை”யினால் கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பெயரிட வேண்டும் என சொல்கிறார். எலிசபெத்தைக் காண செல்கிற மரியாள், சந்தோஷமாய் வாழ்த்துகிறாள். பின்னர், மிகுந்த மகிழ்ச்சியுடன், ‘என் ஆத்துமா யெகோவாவை மகிமைப்படுத்துகிறது, என் ஆவி என் ரட்சகராகிய கடவுளைக் குறித்து மகிழ்ச்சி பொங்காமல் இருக்க முடிகிறதில்லை’ என்கிறாள். யெகோவாவின் பரிசுத்த பெயரைக் குறித்தும் அவருக்குப் பயப்படுவோரிடம் அவர் காட்டும் மிகுந்த இரக்கத்தைக் குறித்தும் பேசுகிறாள். யோவான் பிறக்கையில் சகரியா மீண்டும் பேசும் சக்தியைப் பெறுகிறார்; கடவுளுடைய இரக்கத்தை அறிவிக்கிறார், யெகோவாவின் வழியை ஆயத்தம் செய்யப்போகிற தீர்க்கதரிசியென யோவானைக் குறித்து பேசுகிறார்.—1:7, 35, 46, 47, NW.
11இயேசுவினுடைய வாழ்க்கையின் ஆரம்ப காலம் (12உரிய காலத்தில், பெத்லகேமில் இயேசு பிறக்கிறார். இரவில் தங்கள் மந்தையைக் காத்துவரும் மேய்ப்பர்களுக்கு, ‘பெரும் மகிழ்ச்சிக்குரிய நற்செய்தியை’ தேவதூதன் அறிவிக்கிறார். குழந்தைக்கு நியாயப்பிரமாணத்தின்படி விருத்தசேதனம் செய்யப்படுகிறது. அதன்பின், இயேசுவின் பெற்றோர் ‘அவரை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுக்க’ ஆலயத்திற்கு செல்கின்றனர். அங்கே, வயதான சிமியோனும் தீர்க்கதரிசினியாகிய அன்னாளும் பிள்ளையைக் குறித்துப் பேசுகின்றனர். நாசரேத்தில் அவர் ‘தொடர்ந்து வளர்ந்து, பலப்பட்டும் வருகிறார், தொடர்ந்து ஞானத்தால் நிரப்பப்படுகிறார், கடவுளுடைய தயவு அவருக்கு இருக்கிறது.’ (2:10, 22, 40, NW) 12 வயதில், நாசரேத்திலிருந்து எருசலேமுக்கு வந்த இயேசு, தம் புரிந்துகொள்ளுதலாலும் பதில்களாலும் போதகர்களை வியப்பில் ஆழ்த்துகிறார்.
13ஊழியத்துக்காக ஆயத்தம் (3:1–4:13). திபேரியு ராயனுடைய ஆட்சியின் 15-வது ஆண்டில், சகரியாவின் குமாரனாகிய யோவானுக்கு கடவுளுடைய வார்த்தை உண்டாகிறது. அந்த அறிவிப்புக்கு இணங்க செயல்பட ஆரம்பிக்கிறார். அவர், ‘இரட்சிப்புக்குரிய கடவுளுடைய வழியை’ மனிதர் யாவரும் காணும்படி, ‘பாவமன்னிப்புக்காக மனந்திரும்புதலின் அடையாளமான முழுக்காட்டுதலைக் குறித்து பிரசங்கித்துக்கொண்டு’ செல்கிறார். (3:3, 6, NW) முழுக்காட்டுதல் பெற யோர்தானுக்கு ஜனங்கள் வருகையில் இயேசுவும் வந்து முழுக்காட்டுதல் பெறுகிறார்; அவர் ஜெபிக்கையில் பரிசுத்த ஆவி அவர்மீது இறங்குகிறது, அவருடைய பிதா பரலோகத்திலிருந்து அவரை அங்கீகரிக்கிறார். இயேசு கிறிஸ்துவுக்கு இப்போது ஏறக்குறைய 30 வயது. (லூக்கா அவருடைய வம்சாவளி பட்டியலை அளிக்கிறார்.) அவருடைய முழுக்காட்டுதலுக்குப் பின், ஆவியின் வழிநடத்துதலால் இயேசு வனாந்தரத்தில் 40 நாட்களைக் கழிக்கிறார். இங்கே இயேசுவை சோதித்த பிசாசு வெற்றியடையாமல், மற்றொரு “சமயம் வாய்க்கும்வரை” விட்டுச் செல்கிறான்.—4:13, தி.மொ., அடிக்குறிப்பு.
14இயேசுவின் ஆரம்ப கால ஊழியம்—பெரும்பாலும் கலிலேயாவில் (4:14–9:62). இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்தின் ஜெபாலயத்தில் ஏசாயா 61:1, 2-ன் தீர்க்கதரிசனத்தை வாசித்து தமக்குப் பொருத்திக் காட்டுகிறார்; இவ்வாறு தம் ஊழிய பொறுப்பை தெளிவுபடுத்துகிறார்: “யெகோவாவின் ஆவி என்மீதுள்ளது, ஏனெனில் தரித்திரருக்கு நற்செய்தியை அறிவிக்கும்படி அவர் என்னை அபிஷேகம் செய்தார்; சிறைப்பட்டோர் விடுதலை அடைவதையும் குருடர் பார்வை அடைவதையும் பிரசங்கிக்கவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும், யெகோவாவின் ஏற்கத்தக்க ஆண்டைப் பிரசங்கிக்கவும் அவர் என்னை அனுப்பினார்.” (4:18, 19, NW) ஆரம்பத்தில் அவருடைய பேச்சில் மனதைப் பறிகொடுத்த ஜனங்கள் பின்னர் கோபப்படுகின்றனர். அவர்கள் அவரைக் கொல்லவும் முயலுகின்றனர். ஆகவே அவர் கப்பர்நகூமுக்குச் செல்கிறார், அங்கே பலரைச் சுகப்படுத்துகிறார். அவரைப் பின்தொடர்ந்த ஜனக்கூட்டம் அவரைத் தங்களுடனேயே தங்க வைக்க முயலுகிறது. ஆனால் அவரோ, “நான் மற்ற ஊர்களிலும் கடவுளின் ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டேனென்று” சொல்கிறார். (4:43, தி.மொ.) யூதேயாவின் ஜெபாலயங்களில் பிரசங்கிக்க செல்கிறார்.
15கலிலேயாவில் (பேதுரு என்றும் அழைக்கப்பட்ட) சீமோனும் யாக்கோபும் யோவானும் எக்கச்சக்கமான மீன்களைப் பிடிக்கும்படி இயேசு அற்புதம் செய்கிறார். சீமோனிடம், “இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய்” என்று சொல்கிறார். ஆகவே அவர்கள் தங்களுக்குரிய எல்லாவற்றையும் விட்டு அவரைப் பின்பற்றுகிறார்கள். இயேசு தொடர்ந்து ஜெபிக்கவும் போதிக்கவும் செய்கிறார். ‘பிணியாளிகளைக் குணமாக்கும்படி கர்த்தரின் [“யெகோவாவின்,” NW] வல்லமை அவரில் விளங்குகிறது.’ (5:10, 17, தி.மொ.) இழிவாய்க் கருதப்பட்ட வரிவசூலிப்பவராகிய லேவியை (மத்தேயுவை) தம் சீஷனாகும்படி அழைக்கிறார். மத்தேயு பெரிய விருந்தளித்து இயேசுவை கௌரவிக்கிறார்; அதற்கு “அநேக ஆயக்காரரும்” வந்திருக்கிறார்கள். (5:29) பரிசேயர்களிடம் எதிர்ப்பட்ட பல எதிர்ப்புகளுக்கு வித்திட்ட முதல் சந்தர்ப்பம் இதுவே; எரிச்சலடைந்தவர்களாய் அவருக்குத் தீங்குசெய்யவும் அவருக்கெதிராய் சதிசெய்யவும் முனைகின்றனர்.
16ஒருமுறை இரவு முழுவதும் கடவுளிடம் ஜெபித்த பின்பு, இயேசு தம் சீஷர்களிலிருந்து 12 பேரை அப்போஸ்தலராக தெரிந்தெடுக்கிறார். மேலும் அநேகரை சுகப்படுத்துகிறார். பின்பு லூக்கா 6:20-49-ல் பதிவாகியுள்ள பிரசங்கத்தைக் கொடுக்கிறார். இது மத்தேயு புத்தகத்தில் 5-7 அதிகாரங்களிலுள்ள மலைப் பிரசங்கத்தின் சுருக்கம். “தரித்திரராகிய நீங்கள் பாக்கியவான்கள்; தேவனுடைய ராஜ்யம் உங்களுடையது. ஐசுவரியவான்களாகிய உங்களுக்கு ஐயோ; உங்கள் ஆறுதலை நீங்கள் அடைந்து தீர்ந்தது” என்று சொல்கையில் இயேசு இருசாராருக்கும் இடையேயுள்ள வேறுபாட்டைக் குறிப்பிட்டுக் காட்டுகிறார். (6:20, 24) பகைவர்களிடம் அன்பு காட்டுங்கள், இரக்கமுள்ளவர்களாய் இருங்கள், தானம் பண்ணும் பழக்கமுள்ளவர்களாய் இருங்கள், இருதயத்தின் நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை வெளிக்காட்டுங்கள் என தமக்குச் செவிசாய்த்தவர்களிடம் அறிவுரை கூறுகிறார்.
17இயேசு கப்பர்நகூமுக்குத் திரும்புகிறார்; அங்கே, நோய்வாய்ப்பட்ட தன் வேலைக்காரனை சுகப்படுத்தும்படி சேனைத்தலைவர் ஒருவர் கேட்கிறார். இயேசு தன் வீட்டுக்கு வர தான் தகுதியற்றவன் என நினைத்து, சுகமடையும்படி அவர் இருக்கும் இடத்திலிருந்தே “ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும்”படி கேட்கிறார். அப்படியே அந்த வேலைக்காரன் சுகமடைகிறான். “இஸ்ரவேலருக்குள்ளும் 7:7, 9) இறந்த ஒருவனை அவர் முதல் தடவையாக உயிரோடு எழுப்புகிறார்; அவன் நாயீன் ஊரைச் சேர்ந்த விதவையின் ஒரே மகன். அவள்மேல் “மனதுருகி” அவனை உயிர்த்தெழுப்புகிறார். (7:13) இயேசுவைப் பற்றிய செய்தி யூதேயா முழுவதும் காட்டுத்தீ போல பரவுகிறது. அப்போது, சிறைச்சாலையிலிருந்த முழுக்காட்டுபவரான யோவான், “வருகிறவர் நீர்தானா?” என அறிவதற்கு அவரிடம் ஆட்களை அனுப்புகிறார். அதற்கு இயேசு, “நீங்கள் போய், கண்டவைகளையும் கேட்டவைகளையும் யோவானுக்கு அறிவியுங்கள்; குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள், தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது. என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான்” என்கிறார்.—7:19, 22, 23.
நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று இயேசு சொல்கிறார். (18பன்னிருவர் உடன் செல்ல இயேசு “பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் பிரயாணம்பண்ணி, தேவனுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை பிரசங்கி”க்கிறார். விதைக்கிறவனைப் பற்றிய உவமையைச் சொல்கிறார். “ஆதலால் நீங்கள் கேட்கிற விதத்தைக் குறித்துக் கவனியுங்கள்; உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், இல்லாதவனெவனோ அவன் தனக்குண்டென்று நினைக்கிறதும் அவனிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படும்” என சொல்லி அந்த உரையாடலை முடிக்கிறார். (8:1, 18) இயேசு தொடர்ந்து அதிசயமான செயல்களையும் அற்புதங்களையும் நடப்பிக்கிறார். மேலும் அந்தப் பன்னிருவருக்கும் பிசாசுகளின்மீது அதிகாரத்தையும் நோய்களைச் சுகப்படுத்தும் வல்லமையையும் தந்து, “தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவும், பிணியாளிகளைச் சொஸ்தமாக்கவும்” அவர்களை அனுப்புகிறார். ஐயாயிரம் பேருக்கு அற்புதமாக உணவளிக்கிறார். இயேசு மலைமீதிருக்கையில் மறுரூபமாகிறார். மறுநாள், சீஷர்களால் சுகப்படுத்த முடியாத பிசாசு பிடித்த பையன் ஒருவனைச் சுகப்படுத்துகிறார். தம்மைப் பின்பற்ற விரும்புவோருக்கு இந்த முன்னெச்சரிக்கையை விடுக்கிறார்: “நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை.” கடவுளின் ராஜ்யத்துக்குத் தகுதிபெற ஒருவன், கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப் பார்க்கக் கூடாது.—9:2, 58.
19இயேசுவின் பிற்கால யூதேய ஊழியம் (10:1–13:21). இயேசு வேறு 70 பேரை “அறுப்பு” வேலைக்கு அனுப்புகிறார்; தங்கள் ஊழியத்தின் வெற்றியில் அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். அவர் பிரசங்கிக்கையில் ஒருவன், தன்னை நீதிமானாக காட்டிக் கொள்ள, “எனக்கு அயலான் யார்?” என்று இயேசுவைக் கேட்கிறான். அவனுக்கு பதிலளிக்கும் விதத்தில், அயலான்மீது அன்பு காண்பிக்கும் சமாரியனைப் பற்றிய உவமையை இயேசு சொல்கிறார். கள்ளர்களால் அடிக்கப்பட்டு குற்றுயிராகப் பாதையருகில் கிடக்கிறான் ஒருவன்; அவ்வழியே சென்ற ஓர் ஆசாரியனும் லேவியனும் அதைக் கண்டும் காணாததுபோல் கடந்து செல்கின்றனர். இழிவானவனாய் கருதப்பட்ட சமாரியன் மட்டுமே, கனிவாக அவனுடைய காயங்களைக் கட்டி, தான் ஏறிவந்த மிருகத்தின்மீது அவனை ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைக் கவனித்துக்கொள்ள பணம் கொடுக்கிறான். ஆம், “அவனுக்கு இரக்கஞ்செய்தவனே” அவனுடைய அயலானாகிறான்.—10:2, 29, 37, தி.மொ.
20மார்த்தாளின் வீடு. வீட்டுவேலைகளைப் பற்றி அளவுக்குமீறி கவலைப்படும் மார்த்தாளை இயேசு மென்மையாய் கண்டிக்கிறார். மரியாள் தம் அருகே உட்கார்ந்து செவிசாய்ப்பதால் மேம்பட்ட பாகத்தைத் தெரிந்துகொண்டாள் என அவளைப் பாராட்டுகிறார். தம் சீஷருக்கு ஜெபிப்பது எப்படி என கற்பிப்பதோடு, விடாமல் ஜெபிப்பதற்கான அவசியத்தையும் கற்பிக்கிறார்: “தொடர்ந்து கேட்டுக்கொண்டிருங்கள், அது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தொடர்ந்து தேடிக்கொண்டிருங்கள், கண்டடைவீர்கள்.” பின்னர் அவர் பிசாசுகளைத் துரத்தி “கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு அதைக் கைக்கொள்வோர்” மகிழ்ச்சியுள்ளவர்கள் என்று சொல்கிறார். போஜனப் பந்தியில் நியாயப்பிரமாணத்தின்பேரில் பரிசேயர்களுடன் கருத்து முரண்பாடு ஏற்படுகிறது. “அறிவின் திறவுகோலை” எடுத்துவிட்டதற்காக அவர்கள்மீது சாபங்களை அறிவிக்கிறார்.—11:9, 28, 52, NW.
21அவர் மறுபடியும் ஜனத்தாருடன் இருக்கையில், “ஆஸ்தியைப் பாகம்பிரித்து என் வீதத்தை எனக்குத் தரும்படி என் சகோதரனுக்குக் கட்டளையிட வேண்டும்” என்று ஒருவன் இயேசுவை வற்புறுத்துகிறான். இயேசு அந்தப் பிரச்சினையின் மூலக்காரணத்தைக் குறிப்பிட்டு: “எவ்வித பொருளாசைக்கும் இடங்கொடாதபடி எச்சரிக்கையாயிருக்கப் பாருங்கள். ஒருவனுடைய ஜீவன் அவனுடைய செல்வப் பெருக்கத்திலில்லை” என்று சொல்கிறார். இதற்கு ஓர் உவமையைச் சொல்கிறார்: ஒரு செல்வந்தன் தன் களஞ்சியங்களைப் பெரிதாகக் கட்டும்படி அவற்றை இடித்தான்; ஆனால், அவனோ அதே இரவில் மரித்ததால் தன் செல்வத்தை மற்றவர்களுக்கு விட்டுச் செல்கிறான். எனவே இயேசு சுருக்கமாய் இந்தக் குறிப்பைச் சொல்கிறார்: “தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான்.” கடவுளுடைய ராஜ்யத்தை முதலாவது தேடும்படி தம் சீஷர்களை வலியுறுத்திய பின்பு, இயேசு அவர்களிடம் சொல்கிறதாவது: “பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்.” 18 ஆண்டுகளாக சுகவீனமுள்ள ஸ்திரீ ஒருத்தியை ஓய்வுநாளில் சுகப்படுத்தியதால் அவரிடம் வலுச்சண்டைக்கு வருகின்றனர், அவரோ அவர்களை வெட்கமடைய செய்கிறார்.—12:13, 15, தி.மொ., 21, 32.
22இயேசுவின் பிற்கால ஊழியம்—பெரும்பாலும் பெரேயாவில் (13:22–19:27). தமக்குச் செவிசாய்ப்போரிடம் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி பேசுகையில் விளக்கமான உவமைகளை இயேசு பயன்படுத்துகிறார். முதன்மையான இடத்தையும் கௌரவத்தையும் தேடுவோர் வெட்கமடைய செய்யப்படுவர் என்று காட்டுகிறார். விருந்துக்கு அழைக்கிறவன் திரும்ப பதில் செய்ய முடியாத ஏழைகளை அழைக்க வேண்டும்; அப்போது அவன் அகமகிழ்வான், மேலும், ‘நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் அவனுக்குப் பதில் செய்யப்படும்.’ அடுத்தபடியாக, பெரும் இரவு விருந்தை ஏற்பாடு செய்யும் மனிதனைப் பற்றிய உவமை வருகிறது. அழைக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் ஏதாவது சாக்குப்போக்குகளைச் சொல்கின்றனர்: ஒருவன் நிலத்தை வாங்கியிருக்கிறான், மற்றவன் சில எருதுகளை வாங்கியிருக்கிறான், வேறொருவன் அப்போதுதான் திருமணம் செய்திருக்கிறான். கோபமடைந்த வீட்டுக்காரர் வெளியே ஆள் அனுப்பி, “ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும்” அழைத்து வரச் செய்கிறார். உண்மையில் அழைக்கப்பட்டவர்களில் ஒருவரும் தன் விருந்தை ‘ருசி’க்கப் போவதில்லை என்கிறார். (14:14, 21, 24) காணாமற்போன ஆட்டை கண்டுபிடிப்பதைப் பற்றிய உவமையைச் சொல்லி, “மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்கிறார். (15:7) காணாமற்போன ஒரு வெள்ளிக்காசைக் [“டிராக்மாவை,” NW] கண்டுபிடிக்கும்படி தன் வீட்டைப் பெருக்குகிற பெண்ணைப் பற்றிய உவமையும் அதே குறிப்பை வலியுறுத்துகிறது. f
23பின்பு, தன் தகப்பனிடம் சொத்தைப் பிரித்துக் கொடுக்கும்படி கேட்டு வாங்கிச் சென்று “துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி” விரயமாக்கிய ஊதாரி மகனைப் பற்றி இயேசு சொல்கிறார். அந்த மகன் கடும் துன்பத்தை அனுபவிக்கையில் புத்தி தெளிவடைந்தான். தன் தகப்பனின் இரக்கத்தில் நம்பிக்கை வைத்து வீடு திரும்பினான். அவனுடைய தகப்பன், மனதுருகி, “ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்.” உடுத்துவதற்கு சிறப்பான உடை அளிக்கப்பட்டு, தடபுடலான விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டது. “அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள்.” ஆனால் மூத்த சகோதரன் அதை எதிர்த்தான். தயவுடன் அவனுடைய தகப்பன், “மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது. உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்க வேண்டுமே” என்று சொல்லி அவனை சமாதானப்படுத்தினார்.—15:13, 20, 24, 31, 32.
24அநீதியுள்ள உக்கிராணக்காரனைப் பற்றிய உவமையை சொல்கிறார். அதைக் கேட்கையில், பண ஆசை மிக்க பரிசேயர் இயேசுவின் போதகத்தை பரிகசிக்கின்றனர். ஆனால் இயேசு அவர்களை நோக்கி: “நீங்கள் மனுஷர் முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது” என்கிறார். (16:15) கடவுளின் ஆசி உள்ளவர்களுக்கும் கண்டனத் தீர்ப்பைப் பெற்றவர்களுக்கும் இடையே எந்தளவு பெரும் பிளவு இருக்கிறது என்பதை ஐசுவரியவானையும் லாசருவையும் பற்றிய உவமையில் காட்டுகிறார். இடறலடைய காரணங்கள் இருக்குமென்று இயேசு தம் சீஷர்களை எச்சரிக்கிறார்; ஆனால் “அவைகள் எவனால் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!” ‘மனுஷகுமாரன் வெளிப்படும் நாளில்’ வரவிருக்கிற இக்கட்டுகளைக் குறித்து பேசுகிறார். “லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள்” என்று அவர்களுக்குச் சொல்கிறார். (17:1, 30, 32) “தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்க”ளைக் கடவுள் நிச்சயம் கைவிடமாட்டார் என்பதை ஓர் உவமையின் மூலம் உறுதிப்படுத்துகிறார். (18:7) பின்பு, மற்றொரு உவமையில், சுய நீதிமான்களைக் கடிந்துகொள்கிறார். ஆலயத்தில் ஜெபிக்கிற ஒரு பரிசேயன், தான் மற்றவர்களைப்போல் இராததனால் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறான். ஆனால், வரிவசூலிப்பவன் ஒருவன் தூரத்தில் நின்று வானத்தை அண்ணாந்து பார்க்கவும் துணியாமல், “தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்” என்று ஜெபிக்கிறான். இதைப் பற்றி இயேசுவின் கருத்து என்ன? வரிவசூலிப்பவன் அந்தப் பரிசேயனைப் பார்க்கிலும் அதிக நீதியுள்ளவன் எனக் கூறுகிறார், “ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.” (18:13, 14) எரிகோவில் வரிவசூலிப்பவனாகிய சகேயு இயேசுவுக்கு விருந்தளிக்கிறான். பத்து ராத்தல்களைப் பற்றிய உவமையைச் சொல்கிறார். ஒப்படைக்கப்பட்ட பொறுப்புக்களை உண்மையோடு நிறைவேற்றுவதனால் வரும் பலனையும் அவற்றை சரிவர செய்யாமல் ஒளித்துவைப்பதனால் வரும் பாதிப்பையும் ஒப்பிட்டுக் காட்டுகிறார்.
25எருசலேமிலும் அதைச் சுற்றிலும் கடைசி ஊழியம் (19:28–23:25). இயேசு கழுதைக்குட்டியின் மீதேறி எருசலேமுக்குள் செல்கிறார். “யெகோவாவின் பெயரில் அரசராக வருகிறவர்” என்று திரளான சீஷர்கள் அவரை வாழ்த்துகின்றனர். பரிசேயர்களோ அவருடைய சீஷர்களை அதட்டும்படி இயேசுவிடம் சொல்கின்றனர். “இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும்” என்று இயேசு பதிலளிக்கிறார். (19:38 NW, 40) எருசலேமின் அழிவைப் பற்றிய முக்கியமான தீர்க்கதரிசனத்தை அவர் கூறுகிறார். அது கூர்முனையுள்ள கம்பங்களால் சுற்றிலும் முற்றுகையிடப்படும், பெரும் இக்கட்டுக்குள்ளாகும், அதன் பிள்ளைகள் தரையில் மோதியடிக்கப்படுவர், கல்லின் மேல் கல் இராதபடி அழிக்கப்படும். ஆலயத்தில் இயேசு ஜனங்களுக்குப் போதித்து, நற்செய்தியை அறிவிக்கிறார். பிரதான ஆசாரியர்களும், வேதபாரகரும், சதுசேயரும் கேட்கும் தந்திரமான கேள்விகளுக்குத் திறம்பட்ட உவமைகளாலும் விவாதங்களாலும் பதிலளிக்கிறார். முடிவு காலத்திற்கான மாபெரும் அடையாளத்தைப் பற்றிய வல்லமைவாய்ந்த வர்ணனையை இயேசு கொடுக்கிறார்; எருசலேம் சேனைகளால் சூழப்படவிருப்பதை மறுபடியும் குறிப்பிடுகிறார். நிகழப்போகும் சம்பவங்களைப் பற்றிய பயத்தால் மனிதர்கள் சோர்ந்துபோவார்கள், ஆனால் அவை சம்பவிக்கையில், அவரைப் பின்பற்றுவோர், ‘தங்கள் மீட்பு சமீபித்திருப்பதால், நிமிர்ந்துபார்த்து தங்கள் தலைகளை உயர்த்த வேண்டும்’; சம்பவிக்கவிருப்பதிலிருந்து தப்பித்து வெற்றிபெற அவர்கள் தொடர்ந்து விழித்திருக்க வேண்டும்.—21:28.
26இப்போது நைசான் 14, பொ.ச. 33. இயேசு பஸ்காவை ஆசரித்த பின்பு தம் உண்மையுள்ள அப்போஸ்தலர்களுடன் ‘புதிய உடன்படிக்கையை’ ஏற்படுத்துகிறார். அடையாள அர்த்தமுள்ள போஜனத்தோடு சம்பந்தப்படுத்தி, தம்மை நினைவுகூரும் விதத்தில் அதை ஆசரிக்க கட்டளையிடுகிறார். மேலும், “ஒரு ராஜ்யத்துக்காக என் பிதா என்னுடன் ஓர் உடன்படிக்கை செய்திருப்பது போலவே, நான் உங்களுடன் ஓர் உடன்படிக்கை செய்கிறேன்” என்றும் அவர்களிடம் சொல்கிறார். (22:20, 29, NW) அதே இரவில், இயேசு ஒலிவ மலையில் ஜெபிக்கையில் ‘வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்துகிறார். அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடு தொடர்ந்து ஜெபிக்கிறார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுகிறது.’ இயேசுவைக் கைதுசெய்ய காட்டிக்கொடுப்பவனாகிய யூதாஸ் கலகக்கூட்டத்தை அழைத்து வருகையில் பதட்டம் இன்னும் அதிகரிக்கிறது. “ஆண்டவரே, பட்டயத்தினாலே வெட்டுவோமா”? என்று சீஷர்கள் சத்தமிடுகின்றனர். அவர்களில் ஒருவர் பிரதான ஆசாரியனின் வேலைக்காரனுடைய காதை வெட்டி விடுகிறார். ஆனால் இயேசு அவர்களைக் கண்டிக்கிறார், காயப்பட்ட அந்த மனிதனைச் சுகப்படுத்துகிறார்.—22:43, 44, 49.
27விசாரணைக்காக பிரதான ஆசாரியனின் வீட்டுக்கு இயேசு விரைவில் அழைத்துச் செல்லப்படுகிறார். இரவில் குளிர்காய்ந்து கொண்டிருந்த கூட்டத்தோடு பேதுருவும் சேர்ந்துகொள்கிறார். இயேசுவைப் பின்பற்றுவோரில் அவரும் ஒருவரென மூன்று சந்தர்ப்பங்களில் சொல்லப்படுகையில், அந்த மூன்று தடவையும் இல்லவே இல்லையென மறுக்கிறார். பின்பு சேவல் கூவுகிறது. இயேசு திரும்பி பேதுருவை பார்க்கிறார். இதே விஷயத்தை அவர் முன்னறிவித்தது பேதுருவின் நினைவுக்கு வருகிறது, வெளியே சென்று மனங்கசந்து அழுகிறார். ஆலோசனை சங்கத்துக்கும், பின்பு பிலாத்துவிடத்துக்கும் இயேசு அழைத்துச் செல்லப்படுகிறார். வரிகளைச் செலுத்த வேண்டாமென தடுத்து, “தன்னைக் கிறிஸ்து என்னப்பட்ட ராஜாவென்று” சொல்லி அவர் ஜனங்களுக்குள் கலகமுண்டாக்குவதாய் குற்றம் சாட்டப்படுகிறார். இயேசு கலிலேயரென அறிந்த பிலாத்து, அந்தச் சமயத்தில் எருசலேமிற்கு வந்த ஏரோதுவிடம் அவரை அனுப்புகிறான். ஏரோதும் அவனுடைய சேவகரும் இயேசுவைப் பரியாசம் செய்து, வெறிபிடித்த 23:2, 25.
கலகக்காரர்கள் முன் விசாரிக்கும்படி திரும்ப அனுப்பிவிடுகின்றனர். பிலாத்து, ‘இயேசுவை அவர்கள் இஷ்டத்துக்கு ஒப்புக்கொடுக்கிறான்.’—28இயேசுவின் மரணம், உயிர்த்தெழுதல், பரலோகத்துக்கு செல்தல் (23:26–24:53). இரு குற்றவாளிகளுக்கிடையே இயேசு கழுமரத்தில் அறையப்பட்டிருக்கிறார். ஒருவன் அவரைப் பரியாசம் செய்கிறான், மற்றவன் விசுவாசத்தைக் காட்டுகிறான். இயேசு தம் ராஜ்யத்தில் வரும்போது தன்னை நினைவுகூரும்படி கேட்கிறான். “மெய்யாகவே இன்று நான் உனக்குச் சொல்கிறேன், நீ என்னுடன் பரதீஸில் இருப்பாய்” என்று இயேசு சொல்கிறார். (23:43, NW) பின்பு அசாதாரண விதத்தில் இருள் சூழ்கிறது, ஆலயத்தில் பரிசுத்த ஸ்தலத்தின் திரை நடுவில் இரண்டாக கிழிகிறது. “பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்” என்று இயேசு சத்தமாய்ச் சொல்கிறார். அப்போது அவர் மரிக்கிறார். அவருடைய உடல் கழுமரத்திலிருந்து இறக்கப்பட்டு கற்பாறையில் வெட்டப்பட்ட ஒரு கல்லறையில் வைக்கப்படுகிறது. வாரத்தின் முதலாம் நாளில், கலிலேயாவிலிருந்து அவருடன் வந்த பெண்கள் கல்லறைக்குச் செல்கின்றனர்; ஆனால் இயேசுவின் உடலோ அங்கில்லை. அவர் முன்னறிவித்தபடியே மூன்றாம் நாளில் உயிர்த்தெழுப்பப்பட்டார்!—23:46.
29எம்மாவுக்குச் செல்லும் வழியில் இயேசு தம் சீஷர்கள் இருவரை சந்திக்கிறார்; அவர்களோ அவரை அடையாளம் கண்டுகொள்வதில்லை. அவர் தம் பாடுகளைக் குறித்துப் பேசி வேதவாக்கியங்களை விளக்கிக் காட்டுகிறார். திடீரென்று அவர்கள் அவரை யாரென அடையாளம் கண்டுகொள்கின்றனர், ஆனால் அவரோ மறைந்துவிடுகிறார். இப்போது அவர்கள், “வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா”? என்று சொல்லிக்கொள்கின்றனர். மற்ற சீஷர்களுக்கு இதை அறிவிக்க அவர்கள் எருசலேமுக்கு விரைகின்றனர். இதைக் குறித்து அவர்கள் பேசுகையிலேயே, இயேசு அவர்கள் மத்தியில் தோன்றுகிறார். பெரும் மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அடைந்த அவர்களால் நம்ப முடிகிறதில்லை. பின்பு நடந்தேறின அனைத்தின் உட்பொருளையும் வேதவாக்கியங்களிலிருந்து முழுமையாக ‘அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதைத் திறக்கிறார்.’ இயேசு பரலோகத்துக்கு ஏறிச் செல்லும் விவரிப்புடன் லூக்கா தன் சுவிசேஷத்தை முடிக்கிறார்.—24:32, 45.
ஏன் பயனுள்ளது
30“லூக்கா எழுதின” இந்த நற்செய்தி கடவுளுடைய வார்த்தையில் ஒருவருடைய நம்பிக்கையை அதிகரித்து, விசுவாசத்தை பலப்படுத்துகிறது. இது உலகத்திலிருந்து வரும் பிரச்சினைகளை எதிர்த்து சமாளிக்கவும் உதவுகிறது. எபிரெய வேதாகமத்தில் சொல்லப்பட்டவை அப்படியே நிறைவேறினதற்கு பல உதாரணங்களை லூக்கா அளிக்கிறார். இயேசு தம் ஊழியப் பொறுப்பை ஏசாயாவின் புத்தகத்திலிருந்து திட்டவட்டமான வார்த்தைகளால் எடுத்துரைக்கிறார். அதையே லூக்கா இந்தப் புத்தகத்தின் மையப்பொருளாக பயன்படுத்துவதாய் தோன்றுகிறது. (லூக். 4:17-19; ஏசா. 61:1, 2) இயேசு தீர்க்கதரிசிகளை மேற்கோள் காட்டும் சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்று. பிசாசின் மூன்று சோதனைகளுக்கு மறுப்பு தெரிவிக்கையில் நியாயப்பிரமாணத்திலிருந்தும் அவர் மேற்கோள் காட்டுகிறார். மேலும், “கிறிஸ்து தாவீதின் குமாரனென்று எப்படிச் சொல்லுகிறார்கள்?” என்று தம் எதிரிகளை அவர் கேட்டபோது சங்கீதத்திலிருந்தும் மேற்கோள் காட்டினார். எபிரெய வேதாகமத்தின் வேறு பல மேற்கோள்களும் லூக்காவின் பதிவில் உள்ளன.—லூக். 4:4, 8, 12; 20:41-44; உபா. 8:3; 6:13, 16; சங். 110:1.
31சகரியா 9:9-ல் முன்னறிவித்தபடி இயேசு ஒரு கழுதைக்குட்டியின் மீதேறி எருசலேமுக்குள் பவனி வந்தபோது, திரளான ஜனங்கள் அவருக்கு ஆரவார வரவேற்பளித்தனர். இவ்வாறு அவர் சங்கீதம் 118:26-ஐ நிறைவேற்றினார். (லூக். 19:35-38) ஒரு சந்தர்ப்பத்தில் இயேசுவின் நிந்தனையான மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் பற்றி எபிரெய வேதாகமத்தில் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்ட ஆறு குறிப்புகளை லூக்கா இரண்டே வசனங்களில் சொல்லிவிடுகிறார். (லூக். 18:32, 33; சங். 22:7; ஏசா. 50:6; 53:5-7; யோனா 1:17) கடைசியாக, தம் உயிர்த்தெழுதலுக்குப் பின்பு, எபிரெய வேதாகமத்தின் முக்கியத்துவத்தை சீஷரின் மனதில் இயேசு பதியவைக்கிறார். “அவர்களை நோக்கி: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேற வேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே என்றார். அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்[தார்].” (லூக். 24:44, 45) இயேசு கிறிஸ்துவின் ஆரம்ப கால சீஷர்கள் எபிரெய வேதாகமத்தின் நிறைவேற்றங்களுக்கு அதிக கவனம் செலுத்தினார்கள். அதனால், வசனங்களின் பேரில் தெளிவான புரிந்துகொள்ளுதலையும் உறுதியான விசுவாசத்தையும் பெற்றனர். அதைப் போலவே, லூக்காவும் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் மற்ற எழுத்தாளர்களும் வெகு திருத்தமாய் விளக்கிய எபிரெய வேதாகமத்தின் நிறைவேற்றங்களுக்கு நாம் கவனம் செலுத்தினால், அதே நன்மைகளை அடையலாம்.
32லூக்கா தன் பதிவு முழுவதிலும், தன் வாசகரின் கவனத்தைக் கடவுளுடைய ராஜ்யத்திடம் திருப்புகிறார். இந்தப் புத்தகத்தின் தொடக்கத்தில், மரியாள் பெறவிருக்கும் பிள்ளை “யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது” என்று தேவதூதன் அறிவிப்பதாக சொல்கிறார். முடிவான அதிகாரங்களில், இயேசு அப்போஸ்தலரோடு ராஜ்ய உடன்படிக்கை செய்வதைப் பற்றி சொல்கிறார். இவ்வாறு ஆரம்பம் முதல் முடிவு வரை ராஜ்ய நம்பிக்கையை லூக்கா வலியுறுத்திக் காட்டுகிறார். (1:33; 22:28, 29) இயேசு ராஜ்ய பிரசங்க ஊழியத்தை முன்நின்று நடத்துவதையும், அதற்காக 12 அப்போஸ்தலரையும் பின்பு 70 பேரையும் அனுப்புவதையும் அவர் காட்டுகிறார். (4:43; 9:1, 2; 10:1, 8, 9) ராஜ்யத்துக்குள் பிரவேசிக்க ஒருமனப்பட்ட பக்தி தேவையென இயேசுவின் பின்வரும் வார்த்தைகள் வலியுறுத்துகின்றன: “மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும்; நீ போய், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கி,” மேலும், “கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல.”—9:60, 62.
33ஜெபத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி லூக்கா அறிவுறுத்துகிறார். இதற்கு அவருடைய சுவிசேஷம் பெயர்பெற்றது. சகரியா ஆலயத்துக்குள் இருக்கையில் ஜனத்தார் ஜெபித்ததைப் பற்றியும், பிள்ளை வேண்டுமென்ற விண்ணப்பங்களுக்குப் பலனாய் முழுக்காட்டுபவராகிய யோவான் பிறந்ததைப் பற்றியும், தீர்க்கதரிசினியாகிய அன்னாள் இரவும் பகலும் ஜெபித்ததைப் பற்றியும் சொல்லப்படுகிறது. இயேசு தம் முழுக்காட்டுதலின்போது ஜெபித்ததையும், பன்னிருவரைத் தெரிந்தெடுப்பதற்கு முன் இரவு முழுவதும் ஜெபித்ததையும், மறுரூபமாகையில் ஜெபித்ததையும் அது விவரிக்கிறது. ‘சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபிக்க’ இயேசு தம் சீஷர்களுக்கு அறிவுரை கூறுகிறார்; ஒரு நியாயாதிபதி தனக்கு நியாயம் வழங்கும்வரை விடாது தொடர்ந்து விண்ணப்பித்து 1:10, 13; 2:37; 3:21; 6:12; 9:28, 29; 18:1-8; 11:1; 22:39-46; 23:46) லூக்கா தன்னுடைய சுவிசேஷத்தை எழுதிய நாளில் மட்டுமல்ல, இன்றும், கடவுளுடைய சித்தத்தைச் செய்யும் யாவரையும் பலப்படுத்துவதற்கு ஜெபம் இன்றியமையாத ஓர் ஏற்பாடு.
வந்த ஒரு விதவையைப் பற்றிய உவமையைச் சொல்லி இதை விளக்குகிறார். ஜெபிக்க கற்றுக்கொடுக்கும்படி சீஷர்கள் இயேசுவைக் கேட்டதைப் பற்றியும், ஒலிவ மலையில் இயேசு ஜெபிக்கையில் தேவதூதன் இயேசுவைப் பலப்படுத்தியதைப் பற்றியும் லூக்கா மாத்திரமே குறிப்பிடுகிறார்; மேலும், “பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்” என்ற இயேசுவின் கடைசி ஜெபத்தின் வார்த்தைகளையும் அவர் மட்டுமே பதிவுசெய்கிறார். (34கூர்ந்தாராயும் மனதும் தங்குதடையின்றி விளக்கமாக எழுதும் திறமையும் பெற்ற லூக்கா, இயேசுவின் போதகத்தை கனிவோடும் உயிர்த்துடிப்போடும் அளிக்கிறார். பலவீனர், ஒடுக்கப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோரிடம் இயேசு அன்பையும், தயவையும், இரக்கத்தையும், பரிவையும் காட்டினார். அதற்கு முற்றிலும் மாறாக, வேதபாரகரும் பரிசேயரும் அன்பற்ற, வெறும் சம்பிரதாயமான, குறுகிய நோக்குடைய, பாசாங்குத்தன மதத்தைப் பின்பற்றினர். (4:18; 18:9) ஏழைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும், குருடருக்கும், நொறுக்கப்பட்டோருக்கும் இயேசு எப்போதும் ஊக்கமூட்டுதலையும் உதவியையும் அளிக்கிறார்; இவ்வாறு ‘தம்முடைய அடிச்சுவடுகளைக் கவனமாய்ப் பின்தொடர’ நாடுவோருக்கு அவர் மிகச் சிறந்த முன்மாதிரியாகிறார்.—1 பே. 2:21, NW.
35பரிபூரணரும், அற்புதம் நடப்பிப்பவருமான கடவுளுடைய குமாரன், தம் சீஷர்களுக்கும் நேர்மை மனமுள்ள எல்லாருக்கும் அன்புடன் கரிசனை காட்டினார். அதைப் போலவே, நாமும் “நமது கடவுளுடைய உருக்கமான இரக்கத்தினிமித்தம்” நம் ஊழியத்தை அன்புடன் செய்ய மனமார முயற்சிசெய்ய வேண்டும். (லூக். 1:78, தி.மொ.) இவ்வாறு ‘லூக்கா எழுதின’ நற்செய்தி நிச்சயமாகவே அதிக பயனுள்ளதாயும் உதவியளிப்பதாயும் உள்ளது. “பிரியமான வைத்தியனாகிய” லூக்கா எழுதின விவரங்கள் திருத்தமாகவும், கட்டியெழுப்புவதாகவும், ஊக்குவிப்பதாகவும் இருக்கின்றன; ‘இரட்சிப்புக்குரிய கடவுளின் வழியாகிய’ இயேசு கிறிஸ்துவின் அதிகாரத்திலுள்ள ராஜ்யமே இரட்சிப்பை அளிக்கும் என்றும் வலியுறுத்துகின்றன. இப்படிப்பட்ட ஒரு பதிவை எழுதும்படி லூக்காவை ஏவியதற்காக நாம் உண்மையாகவே யெகோவாவுக்கு நன்றி செலுத்தலாம்.—கொலோ. 4:14; லூக். 3:6.
[அடிக்குறிப்புகள்]
a லூக்காவின் மருத்துவ மொழிநடை (ஆங்கிலம்), 1954, டபிள்யூ. கே. ஹோபர்ட், பக்கங்கள் xi-xxviii.
b வழக்கறிஞர் பைபிளை ஆராய்கிறார், (ஆங்கிலம்) 1943, ஐ. ஹெச். லின்டன், பக்கம் 38.
c வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 2, பக்கங்கள் 766-7.
d நவீன கண்டுபிடிப்பும் பைபிளும், (ஆங்கிலம்) 1955, எ. ரெண்டல் ஷார்ட், பக்கம் 211.
e யூதப் போர், (ஆங்கிலம்) V, 491-515, 523 (xii, 1-4); VI, 420 (ix, 3); வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 2, பக்கங்கள் 751-2-ஐயும் காண்க.
f ஒரு டிராக்மா என்பது ஏறக்குறைய 3.4 கிராம் எடையுள்ள ஒரு கிரேக்க வெள்ளிக் காசு.
[கேள்விகள்]
1. லூக்கா என்ன வகையான சுவிசேஷத்தை எழுதினார்?
2, 3. வைத்தியனாகிய லூக்காவே இந்தச் சுவிசேஷத்தின் எழுத்தாளர் என்பதற்கு பைபிள் சார்ந்த, பைபிள் சாராத என்ன அத்தாட்சிகள் உள்ளன?
4. லூக்கா புத்தகம் எப்போது எழுதப்பட்டிருக்கலாம், என்ன சூழ்நிலைமைகள் இந்தக் கருத்தை ஆதரிக்கின்றன?
5. லூக்கா என்னென்ன தகவல் மூலங்களிலிருந்து இயேசுவின் வாழ்க்கைச் சம்பவங்களைத் ‘துல்லியமாக ஆராய்ந்திருக்கலாம்’?
6. லூக்காவின் சுவிசேஷம் எந்தளவுக்கு அவருக்கே உரிய தனித்தன்மை வாய்ந்தது, அதை அவர் யாருக்கு எழுதினார்? ஏன் அவ்வாறு பதிலளிக்கிறீர்கள்?
7. லூக்காவின் சுவிசேஷத்தினுடைய நம்பகத் தன்மைக்கு எது உறுதியாய் சான்றளிக்கிறது?
8. இயேசுவின் பிறப்பு காலத்தை லூக்கா எவ்வாறு ‘துல்லியமாக’ குறிப்பிடுகிறார்?
9. லூக்கா பதிவுசெய்த இயேசுவின் எந்தத் தீர்க்கதரிசனம் பொ.ச. 70-ல் குறிப்பிடத்தக்க முறையில் நிறைவேறியது?
10. லூக்கா என்ன செய்ய முற்பட்டார்?
11. லூக்கா முதல் அதிகாரத்தில் மகிழ்ச்சிமிக்க என்ன சம்பவங்கள் விவரிக்கப்படுகின்றன?
12. இயேசுவின் பிறப்பையும் இளம் பருவத்தையும் குறித்து என்ன சொல்லப்பட்டிருக்கிறது?
13. யோவான் என்ன பிரசங்கிக்கிறார், இயேசுவின் முழுக்காட்டுதலின்போதும் அதற்குப் பின்னும் என்ன சம்பவிக்கின்றன?
14. இயேசு தம் ஊழிய பொறுப்பைக் குறித்து எங்கே தெளிவாகக் கூறுகிறார், அது என்ன, அவருக்குச் செவிசாய்ப்போர் எவ்வாறு பிரதிபலிக்கின்றனர்?
15. பேதுரு, யாக்கோபு, யோவான், மத்தேயு—இவர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை விவரியுங்கள்.
16. (அ) எதற்குப்பின் இயேசு 12 அப்போஸ்தலரைத் தெரிந்தெடுக்கிறார்? (ஆ) மலைப் பிரசங்கத்தைப் பற்றிய பதிவில் என்ன குறிப்புகளை லூக்கா வலியுறுத்துகிறார்?
17. (அ) அடுத்தபடியாக இயேசு என்ன அற்புதங்களை நடப்பிக்கிறார்? (ஆ) இயேசு மேசியாவா என்பதை வினவ முழுக்காட்டுபவரான யோவான் அனுப்பியவர்களுக்கு இயேசு எவ்வாறு பதிலளிக்கிறார்?
18. என்ன உவமைகள், செயல்கள், அறிவுரைகளுடன் ராஜ்ய பிரசங்கிப்பு தொடருகிறது?
19. அயலானை உண்மையாய் நேசிப்பதை இயேசு எவ்வாறு விளக்கிக் காட்டுகிறார்?
20. (அ) மார்த்தாளிடமும் மரியாளிடமும் இயேசு என்ன குறிப்பை அறிவுறுத்துகிறார்? (ஆ) ஜெபத்தின் பேரில் எதை வலியுறுத்துகிறார்?
21. பொருளாசைக்கு எதிராக என்ன எச்சரிக்கையை இயேசு கொடுக்கிறார், என்ன செய்யும்படி தம் சீஷர்களை அவர் ஊக்குவிக்கிறார்?
22. என்ன தெளிவான உவமைகளைப் பயன்படுத்தி இயேசு ராஜ்யத்தைப் பற்றி போதிக்கிறார்?
23. ஊதாரி மகனின் உவமையில் எது சித்தரித்துக் காட்டப்படுகிறது?
24. ஐசுவரியவான், லாசரு, மற்றும் பரிசேயன், ஆயக்காரன் பற்றிய உவமைகளில் இயேசு என்ன சத்தியங்களை அறிவுறுத்துகிறார்?
25. இயேசு தம் ஊழியத்தின் கடைசி கட்டத்தில் எவ்வாறு பிரவேசிக்கிறார், என்ன தீர்க்கதரிசன எச்சரிக்கைகளைக் கொடுக்கிறார்?
26. (அ) என்ன உடன்படிக்கைகளை இயேசு அறிமுகப்படுத்துகிறார், அவற்றை எதோடு அவர் சம்பந்தப்படுத்துகிறார்? (ஆ) வியாகுலப்படுகையில் இயேசு எவ்வாறு பலப்படுத்தப்படுகிறார், தாம் கைதுசெய்யப்படுகிற சமயத்தில் எதைக் கண்டிக்கிறார்?
27. (அ) பேதுரு எதில் தவறுகிறார்? (ஆ) இயேசுவுக்கு எதிராக என்ன குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன, எந்த சூழ்நிலைமைகளின்கீழ் அவர் விசாரணை செய்யப்பட்டு தீர்ப்பளிக்கப்படுகிறார்?
28. (அ) தம்மீது விசுவாசம் வைத்த அந்தக் கள்ளனுக்கு இயேசு என்ன வாக்குறுதியளிக்கிறார்? (ஆ) இயேசுவின் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் சம்பந்தமாக லூக்கா என்ன பதிவுசெய்கிறார்?
29. என்ன மகிழ்ச்சிமிக்க விவரத்துடன் லூக்காவின் சுவிசேஷம் முடிகிறது?
30, 31. (அ) எபிரெய வேதாகமம் கடவுளால் ஏவப்பட்டது என்பதற்கு லூக்கா எப்படி உறுதியளிக்கிறார்? (ஆ) இதை ஆதரிப்பதற்கு இயேசுவின் என்ன வார்த்தைகளை லூக்கா மேற்கோள் காட்டுகிறார்?
32. லூக்காவின் விவரம் ராஜ்யத்தை எவ்வாறு வலியுறுத்திக் காட்டுகிறது, இந்த ராஜ்யத்திடமாக நம் மனப்பான்மை எப்படி இருக்க வேண்டும்?
33. ஜெபத்தை வலியுறுத்தி லூக்கா பதிவு செய்தவற்றிற்கு உதாரணங்களைக் கொடுங்கள். இதிலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்?
34. கிறிஸ்தவர்களுக்குச் சிறந்த முன்மாதிரியாக இயேசுவின் என்ன பண்புகளை லூக்கா வலியுறுத்துகிறார்?
35. லூக்காவின் சுவிசேஷத்தை யெகோவா அருளினதற்கு நாம் ஏன் உண்மையிலேயே நன்றி செலுத்தலாம்?