Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் புத்தக எண் 43—யோவான்

பைபிள் புத்தக எண் 43—யோவான்

பைபிள் புத்தக எண் 43—யோவான்

எழுத்தாளர்: அப்போஸ்தலன் யோவான்

எழுதப்பட்ட இடம்: எபேசு அல்லது அருகில்

எழுதி முடிக்கப்பட்டது: ஏ. பொ.ச. 98

காலப்பகுதி: முகவுரைக்குப் பின், பொ.ச. 29-33

மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய சுவிசேஷங்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக எங்கும் பரவலாக வாசிக்கப்பட்டு வந்தன. அவை, மனிதர்கள் பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எழுதிய புத்தகங்களாக முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களால் பெரிதும் மதிக்கப்பட்டன. அச்சமயம், முதல் நூற்றாண்டு முடியவிருந்தது, இயேசுவுடன் இருந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துவந்தது. எனவே சொல்லப்பட வேண்டிய விஷயம் இன்னும் ஏதாவது இருக்கிறதா என்ற கேள்வி எழுந்திருக்கலாம். இயேசுவின் ஊழியம் சம்பந்தப்பட்ட மதிப்புமிக்க தகவல்களை தன் நினைவிலிருந்து நுணுக்கமாக எழுத்தில் வடிக்க இன்னும் யாராவது இருந்தார்களா? ஆம், ஒருவர் இருந்தார். வயதான யோவானே அவர். இயேசுவுடன் இருந்த நெருக்கமான கூட்டுறவால் அவர் வெகுவாய் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தார். முழுக்காட்டுபவரான யோவான், தேவ ஆட்டுக்குட்டியை தன் சீஷர்களுக்கு முதலில் அறிமுகப்படுத்துகையில் இந்த யோவானும் அங்கிருந்தார். மேலும், முழுமையாக ஊழியத்தில் ஈடுபட தம்மோடு வரும்படி கர்த்தர் முதன்முதல் அழைத்த நால்வரில் இவரும் ஒருவர் எனவும் கருதப்படுகிறது. (யோவா. 1:35-39; மாற். 1:​16-20) இவர் இயேசுவின் ஊழியகாலம் முழுவதிலும் அவருடன் நெருங்கிய கூட்டுறவு வைத்திருந்தார். மேலும், கடைசி பஸ்காவின்போது இயேசுவின் மார்பில் சாய்ந்தபடி உட்கார்ந்திருந்தவரும், “இயேசு அன்புகூர்ந்த” சீஷரும் இவரே. (யோவா. 13:23; மத். 17:1; மாற். 5:37; 14:33) இயேசு மரத்தில் அறையப்பட்ட கடுந்துயரமான அச்சம்பவத்தின்போது அவர் அங்கிருந்தார். அங்கே இயேசு தம்மைப் பெற்றெடுத்த தாயைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை இவரிடமே ஒப்படைத்தார். மேலும் இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டார் என்ற செய்தியைக் கேட்டதும் உண்மையை அறிய பேதுருவையும் முந்திக்கொண்டு கல்லறைக்கு ஓடியவரும் இவரே.​—யோவா. 19:​26, 27; 20:​2-4.

2யோவான் ஏறக்குறைய 70 ஆண்டுகள் தளராது ஊழியத்தில் ஈடுபட்டார். அதனால், அனுபவத்தையும் மனப்பக்குவத்தையும் அடைந்தார். அநேக தரிசனங்களைப் பெற்றார்; சமீபத்தில் பத்மு தீவில் தனிமையில் சிறைப்பட்டிருந்ததால் தியானத்தில் அதிக நேரத்தை செலவிட்டார். எனவே, யோவான் தன் இருதயத்தில் நெடுங்காலமாய் பாதுகாத்து வந்த விஷயங்களை எழுதுவதற்கு தகுந்தவரானார். ஜீவனளிக்கும் அந்த மதிப்புமிக்க கருத்துக்களை நினைவுபடுத்தி புத்தகமாக எழுத பரிசுத்த ஆவி இப்போது அவருடைய மனதை தூண்டியது. அதைப் படிக்கும் வாசகர் ஒவ்வொருவரும், ‘இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று விசுவாசிக்கவும், விசுவாசிப்பதால் அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையவும்’ முடியும்.​—20:31.

3யோவானே இந்தப் புத்தகத்தை எழுதியதாக இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்த கிறிஸ்தவர்கள் ஒப்புக்கொண்டனர். மேலும், எந்த கேள்விக்கும் இடமின்றி, ஏவப்பட்ட வேதாகம பட்டியலின் முக்கிய பாகமாகவும் இந்த புத்தகத்தைக் கருதினர். இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் மூன்றாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இருந்த அலெக்ஸாண்டிரியாவின் கிளெமென்ட், ஐரீனியஸ், டெர்ட்டுல்லியன், ஆரிகென் ஆகியோர் இப்புத்தகத்தை யோவான் எழுதியதாக உறுதியளிக்கின்றனர். மேலும், யோவானே எழுத்தாளர் என்பதற்கு இந்தப் புத்தகத்திலேயே அநேக அத்தாட்சிகள் காணப்படுகின்றன. தெளிவாகவே, இந்த எழுத்தாளர் ஒரு யூதர்; யூதரின் பழக்கவழக்கங்களைப் பற்றியும் அவர்களுடைய தேசத்தைப் பற்றியும் நன்கு அறிந்திருந்தார். (2:6; 4:5; 5:2; 10:​22, 23) இயேசுவுடன் அன்னியோன்னியமாக இருந்த சந்தர்ப்பங்களை இப்பதிவு விவரிக்கிறது. ஆகவே இதன் எழுத்தாளர் ஒரு அப்போஸ்தலர் மட்டுமல்ல, குறிப்பாக பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியவர்களில் ஒருவராக இருக்க வேண்டும் என காட்டுகிறது. ஏனெனில் இவர்களே முக்கியமான சில சந்தர்ப்பங்களில் இயேசுவுடன் சென்ற அவருடைய நெருங்கிய கூட்டாளிகள். (மத். 17:1; மாற். 5:37; 14:33) இம்மூவரில் (செபெதேயுவின் குமாரனாகிய) யாக்கோபு எழுதியிருக்க முடியாது. ஏனெனில், இந்தப் புத்தகம் எழுதப்படுவதற்கு வெகுகாலத்துக்கு முன்பே அவர் கொல்லப்பட்டார். முதலாம் ஏரோது அகிரிப்பாவால் ஏறக்குறைய பொ.ச. 44-ல் இரத்த சாட்சியாய் மரித்தார். (அப். 12:2) பேதுருவும் எழுதியிருக்க முடியாது. ஏனெனில், யோவான் 21:​20-24-ல் எழுத்தாளரோடு இருந்ததாக அவர் குறிப்பிடப்படுகிறார்.

4அப்போஸ்தலன் யோவானின் பெயர் இதில் எங்கும் குறிப்பிடப்படவில்லை; ஆனால், முடிவான வசனங்களில், இந்த எழுத்தாளர் “இயேசு அன்புகூர்ந்த” சீஷன் என குறிப்பிடப்படுகிறார். இதுவும் இதைப்போன்ற சொற்றொடர்களும் இந்தப் பதிவில் பல தடவை பயன்படுத்தப்படுகின்றன. யோவானைப் பற்றி இயேசு இவ்வாறு சொன்னதாய் குறிப்பிடுகிறார்: “நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால், உனக்கென்ன”? (யோவா. 21:​20, 22, தி.மொ.) இந்த சீஷன் பேதுருவுக்கும் மற்ற அப்போஸ்தலருக்கும் பின் நெடுங்காலம் வாழ்வாரென இது குறிப்பாய் சுட்டிக்காட்டுகிறது. இதெல்லாம் அப்போஸ்தலன் யோவானுக்குப் பொருந்துகிறது. இயேசுவின் வருகையைப் பற்றிய வெளிப்படுத்துதலின் தரிசனத்தைப் யோவான் பெற்ற பின்பு, அந்தக் குறிப்பிடத்தக்க தீர்க்கதரிசனத்தை இந்த வார்த்தைகளுடன் முடிப்பது ஆர்வத்திற்குரியதாய் உள்ளது: “ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.”​—வெளி. 22:20.

5யோவானின் பதிவு இந்த விஷயத்தைப் பற்றி திட்டவட்டமான எந்தத் தகவலையும் கொடுக்கிறதில்லை. என்றபோதிலும், நாடுகடத்தப்பட்டிருந்த யோவான் பத்மு தீவிலிருந்து திரும்பிவந்த பின்பே தன் சுவிசேஷத்தை எழுதினதாய் பொதுவாக நம்பப்படுகிறது. (வெளி. 1:9) ரோமப் பேரரசன் நெர்வா என்பவருக்கு முன் அரசனாக இருந்தவர் டொமிஷியன். இவருடைய ஆட்சியின் முடிவுகாலத்தில் பலர் நாடுகடத்தப்பட்டனர். இவர்களில் பலரைப் பேரரசன் நெர்வா, பொ.ச. 96-98-ல் திரும்ப அழைத்தான். யோவான் சுமார் பொ.ச. 98-ல் தன்னுடைய சுவிசேஷத்தை எழுதிய பின்பு, பேரரசன் டிராஜனின் ஆட்சியின் மூன்றாம் ஆண்டான பொ.ச. 100-ல் எபேசுவில் அமைதியாய் உயிர்நீத்ததாக நம்பப்படுகிறது.

6எபேசுவில் அல்லது அதன் சுற்றுவட்டாரத்தில் இது எழுதப்பட்டிருக்கலாம் என ஐரீனியஸ் சொல்வதாய் சரித்திராசிரியன் யூஸிபியஸ் (ஏ. பொ.ச. 260-342) மேற்கோள் காட்டி குறிப்பிடுகிறதாவது: “கர்த்தரின் சீஷனும், அவருடைய மார்பில் சாய்ந்திருந்தவருமான யோவானே, ஆசியாவிலுள்ள எபேசுவில் இருக்கையில் இந்தச் சுவிசேஷத்தை அளித்தார். a இயேசுவின் எதிரிகளைப் பற்றி குறிப்பிடப்படும் பல இடங்களில் “பரிசேயர்கள்,” “பிரதான ஆசாரியர்கள்,” போன்ற வார்த்தைகளுக்குப் பதிலாக “யூதர்கள்” என பொதுப்படையாக குறிப்பிடப்படுவதால் இந்தப் புத்தகம் பலஸ்தீனாவுக்கு வெளியில் எழுதப்பட்டதென்பது தெரிகிறது. (யோவா. 1:19; 12:9) மேலும், கலிலேயாக் கடல், அதன் ரோமப் பெயரான திபேரியாக்கடல் என குறிப்பிடப்படுகிறது. (6:1; 21:1) யூதரல்லாத வாசகர்களுக்காக யூத பண்டிகைகளைப் பற்றி குறிப்பிடுகையில் உதவியளிக்கும் விளக்கங்களை யோவான் கொடுக்கிறார். (6:4; 7:2; 11:55) அவர் நாடுகடத்தப்பட்ட இடமாகிய பத்மு, எபேசுவுக்கு அருகில் இருந்தது. எபேசு சபையுடனும் ஆசியா மைனரிலிருந்த மற்ற சபைகளுடனும் அவர் பழக்கப்பட்டிருந்தது வெளிப்படுத்துதல் 2-ம் 3-ம் அதிகாரங்களில் குறிப்பிடப்படுகிறது.

7இந்த 20-வது நூற்றாண்டில் முக்கிய கையெழுத்துப் பிரதிகள் கண்டுபிடிக்கப்பட்டன; இவை யோவான் சுவிசேஷத்தின் நம்பகத் தன்மைக்கு சான்றளிக்கின்றன. அவற்றில் ஒன்று எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட யோவான் சுவிசேஷத்தின் ஒரு பாகம். இது இப்போது பப்பைரஸ் ரைலண்ட்ஸ் 457 (P52) என்றறியப்படுகிறது. இதில் யோவான் 18:​31-33, 37, 38-ன் பகுதி அடங்கியுள்ளது; இது இங்கிலாந்து, மான்செஸ்டரிலுள்ள ஜான் ரைலண்ட்ஸ் நூலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. b இப்புத்தகத்தை முதல் நூற்றாண்டின் முடிவில் யோவான் எழுதியதாக பொதுவாக நம்பப்படுகிறது. காலம்சென்ற சர் ஃபிரெட்ரிக் கெனியன் அதைக் குறித்து கருத்துத் தெரிவித்தார். பைபிளும் தற்கால புலமையும் (ஆங்கிலம்), 1949, என்ற புத்தகத்தில், பக்கம் 21-ல் அவர் சொன்னதாவது: “எகிப்து மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தச் சுவிசேஷத்தின் கையெழுத்துப் பிரதி சிறியதுதான். என்றபோதிலும், அது கண்டெடுக்கப்பட்ட எகிப்தில் ஏறக்குறைய கி.பி. 130-150-ன்போது இந்த சுவிசேஷம் பரவியதை நிரூபிக்க இது போதுமானதாக உள்ளது. எழுதப்பட்ட இடத்திலிருந்து இந்தப் புத்தகம் மிகக் குறைந்த காலப்பகுதியிலேயே எங்கும் பரவியதாக எடுத்துக்கொண்டாலும், இது எழுதி முடிக்கப்பட்ட தேதிக்கும், பொதுவாக ஒப்புக்கொள்ளப்படும் தேதிக்கும் வித்தியாசம் அதிகமில்லை. அதாவது, முதல் நூற்றாண்டின் கடைசி பத்தாண்டில் எழுதப்பட்டதாக நம்பப்படும் பாரம்பரியத்தின் மெய்ம்மையை சந்தேகிப்பதற்கு இனி எந்தக் காரணமும் இல்லை.”

8யோவான் சுவிசேஷத்தின் தொடக்கம் தனிச்சிறப்பு மிக்கது. ‘வார்த்தை’ யாரென்பதை அது வெளிப்படுத்துகிறது. அவர் “ஆதியிலே தேவனோடிருந்தார்,” அவர் மூலமாகவே எல்லாம் உண்டாக்கப்பட்டன என்கிறது. (1:2) பிதாவுக்கும் குமாரனுக்கும் இடையே உள்ள ஒப்பற்ற உறவை யோவான் தெரியப்படுத்துகிறார். அதன்பின்பு, இயேசுவின் செயல்களையும் போதனைகளையும் மிகத் திறம்பட்ட விதத்தில் வருணிக்கத் தொடங்குகிறார். முக்கியமாய் கடவுளுடைய மகத்தான ஏற்பாட்டில் எல்லாவற்றையும் ஐக்கியப்படுத்தும் நெருங்கிய அன்பின் நோக்குநிலையிலிருந்து அதைச் செய்கிறார். பூமியில் இயேசுவின் வாழ்க்கை பற்றிய இந்த விவரத்தில் பொ.ச. 29-33 வரையான காலப்பகுதி அடங்கியுள்ளது. மேலும் இயேசு தம் ஊழிய காலத்தில் ஆசரித்த நான்கு பஸ்கா பண்டிகைகளையும் அது கவனமாக குறிப்பிடுகிறது. இவ்வாறு அவருடைய ஊழியம் மூன்றரை ஆண்டுகள் நீடித்தது என்பதை நிரூபிக்க ஆதாரத்தையும் அளிக்கிறது. இவற்றில் மூன்றை பஸ்கா பண்டிகை என்றே நேரடியாக குறிப்பிடுகிறது. (2:13; 6:4; 12:1; 13:1) ஒன்று மட்டும் “யூதருடைய பண்டிகை” என குறிப்பிடப்படுகிறது. ஆனால் “அறுப்புக்காலம் வருகிறதற்கு இன்னும் நாலுமாதம் செல்லும்” என்று இயேசு சொன்னதற்குச் சிறிது காலத்துக்குப் பின் வருவதை சூழமைவு சுட்டிக்காட்டுகிறது. எனவே, யூதருடைய பண்டிகை என்பது அறுப்பின் தொடக்கத்தில் நடைபெறும் பஸ்காதான் என்பது தெளிவாகிறது.​—4:35; 5:1. c

9“யோவான் எழுதின” சுவிசேஷம் கூடுதலான தகவல் அளிக்கிறது; மற்ற மூன்று சுவிசேஷங்களில் குறிப்பிடப்படாத 92 சதவீத புதிய தகவல்கள் இதில் அடங்கியுள்ளன. இருப்பினும், யோவான் இவ்வார்த்தைகளுடன் தன் புத்தகத்தை முடிக்கிறார்: “இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன்.”​—21:25.

யோவானின் பொருளடக்கம்

10முகவுரை: “அந்த வார்த்தை”யை அறிமுகப்படுத்துதல் (1:​1-18). அழகிய, எளிய முறையில், ஆதியிலே “அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது” என்றும், உயிர் அவர் மூலமாகவே உண்டாயிற்று என்றும், அவர் “மனுஷருக்கு ஒளியா”னார் என்றும், (முழுக்காட்டுபவரான) யோவான் அவரைப் பற்றி சாட்சி பகர்ந்தாரென்றும் யோவான் கூறுகிறார். (1:​1, 4) “ஒளி,” உலகத்தில் இருந்தார், ஆனால் உலகமோ அவரை அறியவில்லை. அவரை ஏற்றுக்கொண்டவர்கள், கடவுளால் பிறந்தவர்களாக கடவுளின் பிள்ளைகளானார்கள்; நியாயப்பிரமாணம் மோசேயின் மூலம் கொடுக்கப்பட்டது போலவே, ‘தகுதியற்ற தயவும் சத்தியமும் இயேசு கிறிஸ்துவின் மூலம் வந்தது.’​—1:​17, NW.

11“தேவ ஆட்டுக்குட்டி”யை அறிமுகப்படுத்துதல் (1:​19-51). முழுக்காட்டுபவரான யோவான், தான் கிறிஸ்துவல்லவென்று அறிவிக்கிறார். ஆனால் தனக்குப் பின் ஒருவர் வரவிருக்கிறார், அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கும் தான் தகுதியுள்ளவன் அல்ல என கூறுகிறார். அடுத்த நாள், இயேசு அவரிடம் வருகிறபோது, “உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்று அவரை யோவான் அடையாளம் காட்டுகிறார். (1:​27, 29) அடுத்தபடியாக, தன் சீஷர்கள் இருவருக்கு இயேசுவை அறிமுகப்படுத்தி வைக்கிறார்; இவர்களில் ஒருவரான அந்திரேயா, தன் சகோதரன் பேதுருவை இயேசுவினிடம் அழைத்து வருகிறார். பிலிப்புவும் நாத்தான்வேலும்கூட இயேசுவை ‘தேவனுடைய குமாரன், இஸ்ரவேலின் ராஜா’ என ஏற்றுக்கொள்கின்றனர்.​—1:49.

12இயேசுவின் அற்புதங்கள் அவர் “கடவுளின் பரிசுத்தர்” என்று நிரூபிக்கின்றன (2:​1–6:71). கலிலேயாவிலுள்ள கானாவில் நடந்த ஒரு கலியாண விருந்தின்போது தண்ணீரை முதல்தர திராட்சமதுவாக இயேசு மாற்றுகிறார்; இதுவே அவர் நடப்பித்த முதல் அற்புதம். இது ‘அவருடைய அடையாளங்களுக்கு ஆரம்பமாக இருக்கிறது. . . . அவருடைய சீஷர் அவரில் நம்பிக்கை வைக்கிறார்கள்.’ (2:​11, தி.மொ.) இயேசு பஸ்கா பண்டிகைக்கு எருசலேமுக்குச் செல்கிறார். ஆலயத்தில் விற்பவர்களையும் காசு மாற்றுவோரையும் கண்டு மிகுந்த கோபப்பட்டு, சவுக்கை எடுத்து ஆவேசத்துடன் அவர்களை அங்கிருந்து வெளியேற்றுகிறார். அப்போது சீஷர்கள், “உமது வீட்டைப் பற்றிய வைராக்கியம் என்னைப் பட்சித்துவிடும்” என்ற தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமே அதுவென அறிந்துகொள்கின்றனர். (யோவா. 2:​17, தி.மொ.; சங். 69:9) தம் சரீரமாகிய ஆலயம் இடிக்கப்பட்டு மூன்று நாட்களுக்குள் மீண்டும் எழுப்பப்படும் என முன்னறிவிக்கிறார்.

13பயம் நிறைந்த நிக்கொதேமு இரவில் இயேசுவிடம் வருகிறார். இயேசு கடவுளால் அனுப்பப்பட்டவர் என்று ஒப்புக்கொள்கிறார். தேவனுடைய ராஜ்யத்துக்குள் பிரவேசிப்பதற்கு ஒருவன் தண்ணீரிலும் ஆவியிலும் பிறக்க வேண்டுமென்று இயேசு அவருக்குச் சொல்கிறார். ஜீவனடைய வேண்டுமென்றால் பரலோகத்திலிருந்து வந்த மனுஷகுமாரனில் விசுவாசம் வைக்க வேண்டும். “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” (யோவா. 3:16) உலகத்துக்கு வந்திருக்கிற இந்த ஒளி இருளுக்கு எதிரானது, “சத்தியத்தின்படி செய்கிறவனோ, . . . ஒளியினிடத்தில் வருகிறான்” என்று இயேசு கூறிமுடிக்கிறார். முழுக்காட்டுபவரான யோவான் அப்போது யூதேயாவில் இயேசுவின் நடவடிக்கையைப் பற்றி அறிகிறார்; தான் கிறிஸ்துவல்ல என்று அறிவித்து, “மணவாளனுடைய தோழனோ, . . . மணவாளனுடைய சத்தத்தைக்குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்” என்று சொல்கிறார். (3:​21, 29) இயேசு இப்பொழுது பெருகவும் யோவான் சிறுகவும் வேண்டும்.

14இயேசு மறுபடியுமாக கலிலேயாவுக்குப் பயணப்படுகிறார். போகும் வழியில், புழுதி படிந்தும், ‘பிரயாணத்தினால் களைப்படைந்தும்’ சீகாரிலுள்ள யாக்கோபின் கிணற்றண்டையில் இளைப்பாற உட்காருகிறார்; அவருடைய சீஷர்கள் உணவு வாங்க நகரத்திற்குச் சென்றிருக்கின்றனர். (4:​6, தி.மொ.) அது நண்பகல், ஆறாம் மணிநேரம். சமாரிய ஸ்திரீ ஒருத்தி தண்ணீர் மொள்ள வருகிறாள்; இயேசு அவளிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்கிறார். அவர் களைப்படைந்து இருந்தபோதிலும், கடவுளை “ஆவியோடும் உண்மையோடும்” தொழுதுகொள்வோருக்கு புத்துணர்ச்சி அளித்து நித்திய ஜீவனை தரும் மெய்யான ‘தண்ணீரைப்’ பற்றி அவளிடம் பேசத் தொடங்குகிறார். சீஷர்கள் திரும்பிவந்து சாப்பிடும்படி அவரைத் துரிதப்படுத்துகின்றனர்; அவரோ, “என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது” என்று சொல்கிறார். மேலும் இரண்டு நாட்கள் அந்தப் பிராந்தியத்தில் செலவிடுகிறார்; இதனால் சமாரியர் பலர் இவர் ‘மெய்யாகவே உலக ரட்சகர்’ என நம்புகின்றனர். (4:​24, 34, 42) கலிலேயாவிலுள்ள கானாவுக்குப் போகிறார். அங்கே, அதிபதி ஒருவனின் மகனை, அவனருகில் செல்லாமலே சுகப்படுத்துகிறார்.

15யூதரின் பண்டிகைக்காக இயேசு மறுபடியும் எருசலேமுக்குச் செல்கிறார். நோயுற்ற ஒருவனை ஓய்வுநாளில் சுகப்படுத்துகிறார்; இதனால் கடுமையாக குற்றஞ்சாட்டப்படுகிறார். இயேசு, “என் பிதா இதுவரைக்கும் வேலைசெய்து வருகிறார், நானும் வேலைசெய்து வருகிறேன்” என்று பதிலளிக்கிறார். (5:​17, தி.மொ.) ஓய்வுநாளை மீறியது மட்டுமல்லாமல் தம்மை கடவுளுக்குச் சமமாக்கி தேவதூஷணம் சொன்னார் என இயேசுவின்மீது குற்றஞ்சாட்டி யூதத் தலைவர்கள் இப்பொழுது வாதிடுகின்றனர். குமாரன் சுயமாய் எதையும் செய்ய முடியாது, பிதாவையே முற்றிலும் சார்ந்திருக்கிறார் என்று இயேசு பதிலளிக்கிறார். ஞாபகார்த்தப் ‘பிரேதக் குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்டு’ உயிர்த்தெழுவார்கள் என்ற அதிசயமான செய்தியைக் கூறுகிறார். ஆனால் விசுவாசமற்ற அந்தக் கூட்டத்தாரிடம், “தேவனாலே மாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்?” என்று இயேசு கேட்கிறார்.​—5:​28, 29, 44.

16ஐந்து அப்பங்களையும் இரண்டு சிறிய மீன்களையும் வைத்து 5,000 ஆண்களுக்கு இயேசு அற்புதமாய் உணவளிக்கிறார். உடனே அவரைப் பிடித்து அரசராக்கும்படி ஜனங்கள் சிந்திக்கிறார்கள். ஆனால் அவரோ அவர்களைவிட்டு விலகி மலைக்குச் சென்றுவிடுகிறார். ‘அழிந்துபோகிற போஜனத்தை’ நாடுவதற்காக பின்னர் அவர்களை கடிந்துகொள்கிறார். “நித்தியஜீவனுக்கென்று நிலைக்கிற போஜனத்திற்காகவே” உழைக்க வேண்டும் என்கிறார். குமாரன் என தம்மை விசுவாசிப்பது ஜீவ அப்பத்தில் பங்குகொள்வதைக் குறிக்கிறது என்கிறார். “மனுஷ குமாரன் மாம்சத்தை நீங்கள் புசித்து அவர் இரத்தத்தைப் பானம் பண்ணினாலொழிய நீங்கள் உங்களுக்குள் ஜீவனுடையவர்களல்ல” என்றும் சொல்கிறார். அவருடைய சீஷரில் பலர் இதனால் மனத்தாங்கலடைந்து அவரை விட்டுச் சென்றுவிடுகின்றனர். இயேசு அந்தப் பன்னிருவரை நோக்கி, “நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ” என்று கேட்கிறார். “ஆண்டவரே, யாரிடம் போவோம், நித்திய ஜீவவசனங்கள் உம்மிடம் உண்டே; நீர் கடவுளின் பரிசுத்தர் என்றும் நாங்கள் நம்பி அறிந்திருக்கிறோம்” என்று பேதுரு பதிலளிக்கிறார். (6:​27, 53, 67-69, தி.மொ.) எனினும், யூதாஸ் தம்மை காட்டிக்கொடுப்பான் என்பதை அறிந்தவராக இயேசு, அவர்களில் ஒருவன் பழிதூற்றுபவன் என்று கூறுகிறார்.

17அந்த “ஒளி” இருளுக்கு முரண்படுகிறது (7:​1–12:50). கூடாரப் பண்டிகைக்காக இயேசு இரகசியமாய் எருசலேமுக்குச் செல்கிறார், பண்டிகை பாதி நடந்துகொண்டிருக்கையில் அவர் இருப்பது தெரிய வருகிறது. ஆலயத்தில் எல்லாருக்கும் முன்பாக போதிக்கிறார். அவர் உண்மையில் கிறிஸ்துதானா என்பதைப் பற்றி ஜனங்கள் விவாதிக்கின்றனர். “நான் என் சுயமாய் வரவில்லை, என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர், . . . அவர் என்னை அனுப்பியிருக்கி”றார் என்று இயேசு அவர்களிடம் சொல்கிறார். மற்றொரு சந்தர்ப்பத்தில், “ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்” என்று கூட்டத்தாரிடம் சத்தமாய் சொல்கிறார். இயேசுவைக் கைதுசெய்து வரும்படி அனுப்பப்பட்ட சேவகர்கள் அவரை கைதுசெய்யாமல் திரும்புகின்றனர். “அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை” என்று ஆசாரியரிடம் அறிவிக்கின்றனர். கொதித்தெழுந்த பரிசேயர்கள், அதிகாரிகளிலொருவரும் நம்புகிறதுமில்லை, கலிலேயாவிலிருந்து எந்தத் தீர்க்கதரிசியும் வரப்போவதில்லை என்று அவர்களுக்குப் பதிலளிக்கின்றனர்.​—7:​28, 29, 37, 46.

18மற்றொரு சமயம், பேசிக்கொண்டிருக்கையில், “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்” என்று இயேசு சொல்கிறார். பொய் சாட்சிக்காரர், முறைதவறிப் பிறந்தவர், சமாரியன், பேய்ப்பிடித்தவர் என கெட்ட நோக்கத்துடன் குற்றம் சாட்டப்படுகையில், “என்னை நானே மகிமைப்படுத்தினால் அந்த மகிமை வீணாயிருக்கும், என் பிதா என்னை மகிமைப்படுத்துகிறவர்” என்று மனவுறுதியுடன் பதிலளிக்கிறார். “ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்” என்று சொல்கையில், யூதர்கள் அவரைக் கொல்ல மற்றொரு முறை முயலுகின்றனர், ஆனால் முயற்சி பலனளிப்பதில்லை. (8:​12, 54, 58) ஏமாற்றம் அடைந்தவர்களாய் அவர்கள், இயேசுவால் அற்புதமாய் பார்வையடைந்த ஒருவனைக் கேள்வி கேட்டு, புறம்பே தள்ளிவிடுகின்றனர்.

19மறுபடியுமாக இயேசு யூதரிடம் பேசுகிறார்; மந்தையிலுள்ள செம்மறியாடுகளைப் பெயர் சொல்லி அழைத்து, அவை ‘ஜீவனை அபரிமிதமாய்ப் பெறுவதற்காக’ தன் ஜீவனை ஒப்புக்கொடுக்கும் நல்ல மேய்ப்பனைப் பற்றி சொல்கிறார். “இத்தொழுவத்திற்குரியவைகளல்லாத வேறே ஆடுகளும் எனக்குண்டு; அவைகளையும் நான் நடத்திக்கொண்டு வரவேண்டும், அவைகள் என் குரலைக் கேட்கும்; அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்” என்று சொல்கிறார். (10:​10, 16, தி.மொ.) இந்தச் செம்மறியாடுகளைத் தம் பிதாவின் கைகளிலிருந்து பறித்துக்கொள்ள யாராலும் முடியாது என்று அவர் யூதரிடம் சொல்கிறார்; மேலும் தாமும் தம்முடைய பிதாவும் ஒன்றே என்கிறார். அவரைக் கல்லெறிந்து கொல்ல அவர்கள் மறுபடியும் முயல்கிறார்கள். தேவதூஷணம் சொல்வதாக அவர்கள் சாட்டிய குற்றத்திற்குப் பதிலளிக்கிறார்; பூமியில் வல்லமைவாய்ந்த சிலரைத் “தேவர்கள்” என சங்கீதப் புத்தகம் குறிப்பிடுவதை அவர்களுக்கு சுட்டிக்காட்டி, தாமோ தம்மைக் கடவுளுடைய குமாரன் என்றே குறிப்பிட்டதாக கூறுகிறார். (சங். 82:6) தம்முடைய செயல்களையாவது நம்பும்படி ஊக்குவிக்கிறார்.​—யோவா. 10:34.

20மரியாள், மார்த்தாள் என்பவர்களின் சகோதரன் லாசரு உடல்நலமின்றி இருப்பதாக எருசலேமுக்கு அருகே உள்ள பெத்தானியாவிலிருந்து செய்தி வருகிறது. இயேசு அங்கு செல்வதற்குள் லாசரு மரித்து, அடக்கம் செய்யப்பட்டு ஏற்கெனவே நான்கு நாட்களாகிவிடுகின்றன. லாசருவை மீண்டும் உயிரடையச் செய்யும் அதிசயிக்கத்தக்க மாபெரும் அற்புதத்தை இயேசு நடப்பிக்கிறார். இதைக் கண்டு பலர் இயேசுவில் விசுவாசம் வைக்கின்றனர். இதனால் ஆலோசனை சங்கத்தின் கூட்டம் அவசரமாய் கூட்டப்படுகிறது. அதில், அந்த ஜனத்துக்காக மரிக்க இயேசு தீர்க்கப்பட்டிருக்கிறாரென தீர்க்கதரிசனம் உரைக்கும்படி பிரதான ஆசாரியனாகிய காய்பா தூண்டப்படுகிறான். இயேசுவைக் கொல்ல பிரதான ஆசாரியர்களும் பரிசேயரும் ஆலோசனை செய்கின்றனர். ஆனால், இயேசுவோ பொது இடங்களில் வராமல் தற்காலிகமாய் மறைவாக இருக்கிறார்.

21பஸ்காவுக்கு ஆறு நாட்களுக்கு முன்பு, எருசலேமுக்குப் போகும் வழியில் இயேசு பெத்தானியாவுக்கு மீண்டும் வருகிறார்; லாசரு வீட்டார் அவரை உபசரிக்கின்றனர். பின்பு, ஓய்வுநாளுக்கு அடுத்த நாளாகிய நிசான் 9-ம் தேதி, அவர் கழுதைக்குட்டியின் மீது ஏறி, பெருங்கூட்டத்தினர் ஆர்ப்பரிக்க எருசலேமுக்குள் பிரவேசிக்கிறார். பரிசேயர்கள் ஒருவரையொருவர் நோக்கி, “பாருங்கள், நீங்கள் செய்கிறதெல்லாம் வீண்; இதோ, உலகம் அவன் பிறகே போய்விட்டதே” என்று சொல்லிக் கொள்கிறார்கள். கோதுமை மணியின் உவமையை தமக்கு ஒப்பிட்டுப் பேசுகிறார்; நித்திய ஜீவனுக்காக பலனை விளைவிக்கும்படி தாம் மரணத்தில் நடப்பட வேண்டுமென்று இயேசு குறிப்பாய்த் தெரிவிக்கிறார். பிதா தம் பெயரை மகிமைப்படுத்தும்படி அவரைக் கேட்கிறார், பரலோகத்திலிருந்து ஒரு குரல், “மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன்” என்று சொல்வது கேட்கப்படுகிறது. இருளைத் தவிர்த்து வெளிச்சத்தில் நடந்து “வெளிச்சத்தின் பிள்ளைகளா”கும்படி இயேசு தமக்குச் செவிசாய்ப்போரை ஊக்குவிக்கிறார். இருளின் வலிமை தம்மை நெருங்குகையில், ‘உலகத்தில் வெளிச்சமாக வந்திருக்கிற’ தம்மில் விசுவாசம் வைக்கும்படி வெளிப்படையாய் வலியுறுத்துகிறார்.​—12:​19, 28, 36, 46, தி.மொ.

22உண்மையுள்ள அப்போஸ்தலருக்கு இயேசுவின் பிரியாவிடை அறிவுரை (13:​1–16:33). பன்னிருவரோடு பஸ்காவை ஆசரிக்கையில், இயேசு எழுந்து தம் மேலங்கியைக் கழற்றிவிட்டு, ஒரு துவாலையையும் பாத்திரத்தையும் எடுத்து வந்து தம் சீஷர்களின் பாதங்களைக் கழுவத் தொடங்குகிறார். பேதுரு மறுக்கிறார், ஆனால் அவருடைய பாதமும் கழுவப்பட வேண்டுமென இயேசு சொல்கிறார். தம்முடைய மனத்தாழ்மையின் முன்மாதிரியைப் பின்பற்றும்படி சீஷருக்கு இயேசு அறிவுரை கூறுகிறார், ஏனெனில் “ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல.” தம்மைக் காட்டிக்கொடுக்கப் போகிறவனைப் பற்றிக் குறிப்பிட்ட பின்னர் யூதாஸை அனுப்பிவிடுகிறார். யூதாஸ் வெளியேறிய பிறகு, இயேசு மற்றவர்களுடன் மிகவும் அன்னியோன்னியமாக பேச தொடங்குகிறார். “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்தது போலவே நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.”​—13:​16, 34, 35.

23இந்த இக்கட்டான நேரத்தில் இயேசு தம்மைப் பின்பற்றுவோருக்கு ஆறுதலை அளிக்கும் அருமையான வார்த்தைகளைப் பேசுகிறார். அவர்கள் கடவுளிலும் தம்மிலும் விசுவாசம் வைக்க வேண்டும் என்கிறார். தம் பிதாவின் வீட்டில், பல வாசஸ்தலங்கள் உண்டு என்றும், அவர் மறுபடியும் வந்து அவர்களைத் தம் வீட்டில் ஏற்றுக்கொள்வார் என்றும் குறிப்பிடுகிறார். “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” என்று இயேசு சொல்கிறார். விசுவாசத்தால் அவர்கள் தம்மைப் பார்க்கிலும் பெரிய செயல்களைச் செய்வார்கள் என்றும், தம் பெயரில் அவர்கள் கேட்பது எதுவோ அதை, தம் பிதா மகிமைப்படும்படி அருளுவார் என்றும் அவர்களுக்கு ஆறுதலாக சொல்கிறார். அவர் மற்றொரு உதவியை, ‘சத்திய ஆவியை’ வாக்குறுதி அளிக்கிறார். அது எல்லா காரியங்களையும் அவர்களுக்குப் போதித்து தாம் அவர்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் அவர்களுக்கு நினைவுபடுத்தும் என்கிறார். தாம் பிதாவிடம் போவதைக் குறித்து அவர்கள் களிகூர வேண்டும், ஏனெனில், ‘பிதா தம்மைக் காட்டிலும் பெரியவராயிருக்கிறார்’ என்று இயேசு சொல்கிறார்.​—14:​6, 17, 28.

24இயேசு தம்மை மெய்யான திராட்சச் செடியாகவும் தம்முடைய பிதாவைப் பயிரிடுகிறவராகவும் பேசுகிறார். தம்முடன் ஐக்கியத்தில் நிலைத்திருக்கும்படி அவர்களை ஊக்குவித்து, “நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்” என்று சொல்கிறார். (15:8) அவர்களுடைய மகிழ்ச்சி எவ்வாறு முழுமையாகும்? அவர்களை அவர் நேசித்ததைப்போல அவர்களும் ஒருவரையொருவர் நேசிப்பதன் மூலமே. சிநேகிதர் என்று அவர்களை அழைக்கிறார். எத்தகைய மதிப்புமிக்க உறவுமுறை! இந்த உலகம் அவரைப் பகைத்ததைப்போல அவர்களையும் பகைக்கும், அவர்களையும் துன்புறுத்தும்; எனினும், தம்மைப் பற்றி சாட்சி பகரவும் தம் சீஷர் அனைவரையும் சத்தியத்துக்குள் வழிநடத்தவும் உதவி செய்யும் ஆவியை இயேசு அனுப்புவார். அவர்களை மறுபடியும் அவர் காண்கையில், தற்போதைய துக்கம் மகிழ்ச்சியாக மாறும், அவர்களுடைய சந்தோஷத்தை ஒருவனும் அவர்களிடமிருந்து பறிக்க முடியாது. அவருடைய வார்த்தைகள் ஆறுதலளிப்பவையாய் உள்ளன: “நீங்கள் என்னை நேசித்து நான் கடவுளிடமிருந்து வந்தேனென்று நம்பியிருக்கிறபடியினால் பிதாதாமே உங்களை நேசிக்கிறார்.” அவர்கள் சிதறடிக்கப்படுவார்கள், ஆனால், இயேசு சொல்கிறதாவது: “என்னில் உங்களுக்குச் சமாதானம் இருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவமுண்டு, ஆனாலும் தைரியமாயிருங்கள், நான் உலகத்தை ஜெயித்தேன்.”​—16:​27, 33, தி.மொ.

25இயேசு தம் சீஷருக்காக செய்யும் ஜெபம் (17:​1-26). ஜெபத்தில் இயேசு தம் பிதாவிடம் ஒப்புக்கொள்கிறதாவது: “ஒரே உண்மையான கடவுளாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் பற்றிய அறிவை அவர்கள் பெற்றுவருவதே நித்திய ஜீவனைக் குறிக்கிறது.” பூமியில் தமக்கு நியமிக்கப்பட்ட வேலையைச் செய்து முடித்துவிட்டதால், உலகம் உண்டாவதற்கு முன்பு தமக்கிருந்த மகிமையின்படியே தம் பிதாவுக்கருகில் மகிமைப்படுத்தும்படி இயேசு இப்போது கேட்கிறார். அவர் தம் பிதாவின் பெயரைத் தம் சீஷர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார், பிதாவின் ‘பெயரினிமித்தம்’ அவர்களைக் காத்துவரும்படி அவரைக் கேட்கிறார். அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படியல்ல, ஆனால் பொல்லாங்கனிடமிருந்து காக்கும்படியும் தம் சத்திய வார்த்தையால் அவர்களைப் பரிசுத்தப்படுத்தும்படியுமே அவர் பிதாவைக் கேட்கிறார். இந்தச் சீஷர்களின் வார்த்தையைக் கேட்டு விசுவாசம் வைப்போருக்காகவும் இயேசு இவ்வாறு ஜெபிக்கிறார்: “பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.” இவர்களும்கூட தம் பரலோக மகிமையில் தம்முடன் பங்குகொள்வதைச் சாத்தியமாக்கும்படி அவர் கேட்கிறார்; ஏனெனில், பிதாவின் அன்பு அவர்களில் நிலைக்கும்படி, அவருடைய பெயரை அவர்களுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார்.​—17:​3, 11, NW, 21.

26கிறிஸ்து விசாரணை செய்யப்பட்டு கழுமரத்தில் அறையப்படுகிறார் (18:​1–19:42). இயேசுவும் அவருடைய சீஷரும் கெதரோன் பள்ளத்தாக்குக்கு அப்பாலுள்ள ஒரு தோட்டத்துக்கு இப்போது செல்கின்றனர். இங்கேதான் யூதாஸ் போர்ச் சேவகர் கூட்டத்தாருடன் வந்து இயேசுவைக் காட்டிக்கொடுக்கிறான். அவர் எதிர்க்காமல் சாந்தமாய் இருக்கிறார். எனினும், பேதுரு பட்டயத்தை உருவி தாக்குகிறார்; “பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம்பண்ணாதிருப்பேனோ” என்று சொல்லி இயேசு அவரைக் கடிந்துகொள்கிறார். (18:11) அப்போது இயேசு கட்டப்பட்ட நிலையில், பிரதான ஆசாரியனாகிய காய்பாவின் மாமனான அன்னாவிடம் அழைத்துச் செல்லப்படுகிறார். யோவானும் பேதுருவும் அவர் பின்னாலேயே செல்கிறார்கள். யோவான் பிரதான ஆசாரியனின் அரமனை முற்றத்துக்குள் செல்ல அனுமதி பெறுகிறார்; அங்கே கிறிஸ்துவை பேதுரு மூன்று தடவை மறுதலிக்கிறார். முதலாவது அன்னாவால் விசாரிக்கப்பட்ட இயேசு, பின்பு காய்பாவுக்கு முன்பாக அழைத்துச் செல்லப்படுகிறார். அதன்பின் இயேசு, ரோம தேசாதிபதியாகிய பிலாத்துவுக்கு முன்பாகக் கொண்டு வரப்படுகிறார். அவருக்கு மரண தண்டனை அளிக்கும்படி யூதர்கள் கூச்சலிடுகின்றனர்.

27“நீ ராஜாவோ” என்ற பிலாத்துவின் கேள்விக்கு இயேசு, “நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக் குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்” என்கிறார். (18:37) இயேசுவுக்கு எதிரான அத்தாட்சி எதையும் காணாத பிலாத்து, பஸ்கா பண்டிகையின்போது ஒரு கைதியை விடுதலை செய்யும் வழக்கத்தின்படி, அவரை விடுதலைசெய்ய முன்வருகிறான். ஆனால் யூதர்கள் அவருக்குப் பதிலாக கள்ளனான பரபாசை விடுதலை செய்யும்படி கோஷமிடுகின்றனர். இயேசுவை பிலாத்து வாரால் அடிக்கும்படி செய்து, மீண்டும் அவரை விடுவிக்க முயலுகிறான். ஆனால் யூதர்கள், ‘அவனைக் கழுவிலறையும்! கழுவிலறையும்! . . . ஏனெனில் அவன் தன்னைக் கடவுளுடைய குமாரனாக்கிக்கொண்டான்’ என்று கத்துகின்றனர். அவரைக் கழுமரத்தில் அறையும்படி ஒப்புக்கொடுக்க தனக்கு அதிகாரம் இருக்கிறதென்று இயேசுவிடம் பிலாத்து சொல்கையில், ‘பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்பட்டிருந்தால் தவிர எனக்கு எதிராக உமக்கு எந்த அதிகாரமுமே இராது’ என்று இயேசு பதிலளிக்கிறார். மறுபடியுமாக யூதர், ‘அவனை அகற்றும்! அவனை அகற்றும்! அவனைக் கழுவிலறையும்! . . . இராயனல்லாமல் எங்களுக்கு வேறே அரசர் இல்லை’ என்று கத்துகின்றனர். இதனால், அவரைக் கழுமரத்தில் அறையும்படி பிலாத்து ஒப்புவிக்கிறான்.​—19:​6, 7, 11, 15, NW.

28“எபிரெயு பாஷையிலே கொல்கொதா எனப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்கு” இயேசு கொண்டு செல்லப்படுகிறார். அங்கு அவர் வேறு இருவருக்கு நடுவே கழுமரத்தில் அறையப்படுகிறார். அவருடைய தலைக்கு மேலே, எல்லாரும் பார்த்து படிக்கும்படி, “நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா” என்று எபிரெயுவிலும் லத்தீனிலும் கிரேக்கிலும் எழுதி பிலாத்து தொங்கவிடுகிறார். (19:​17, 19) இயேசு தம் தாயை கவனிக்கும் பொறுப்பை யோவானிடம் ஒப்படைக்கிறார். காடியைப் பெற்றபின்பு, “அது நிறைவேற்றப்பட்டாயிற்று!” என்று சொல்கிறார். பின்பு தம் தலையைச் சாய்த்து உயிர்துறக்கிறார். (19:​30, NW) தண்டனையை நிறைவேற்றிய போர் சேவகர்கள், தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றமாக, அவருடைய அங்கியை எடுத்துக்கொள்வதற்காக தங்களுக்குள் சீட்டு போடுகின்றனர், அவருடைய கால்களை முறிக்காமல் விடுகின்றனர், அவருடைய விலாவை ஈட்டியால் குத்துகின்றனர். (யோவா. 19:​24, 32-37; சங். 22:18; 34:20; 22:17; சக. 12:10) பின்னர், அரிமத்தியா ஊரானான யோசேப்பும் நிக்கொதேமுவும் அடக்கம் செய்வதற்காக அவருடைய உடலை தயார்படுத்தி அருகிலிருக்கும் புதிய கல்லறை ஒன்றில் வைக்கின்றனர்.

29உயிர்த்தெழுப்பப்பட்ட கிறிஸ்து காட்சியளிக்கிறார் (20:​1–21:25). கிறிஸ்துவைப் பற்றிய யோவானின் விவரப் பதிவு அவர் உயிர்த்தெழுந்த மகிழ்ச்சியளிக்கும் விஷயத்துடன் முடிவடைகிறது. வெறுமையாய் இருந்த கல்லறையை மகதலேனா மரியாள் காண்கிறாள், பேதுருவும் மற்ற சீஷனும் (யோவானும்) அங்கே ஓடுகின்றனர்; ஆனால் உடலையும் தலையையும் சுற்றியிருந்த துணிகளை மட்டுமே அங்கே காண்கின்றனர். இன்னும் கல்லறைக்கு அருகிலேயே மரியாள் இருக்கையில், இரண்டு தூதர்களிடம் பேசுகிறாள். பின்னர், தோட்டக்காரர் என்று அவள் நினைத்த ஒருவரிடம் பேசுகிறாள். அவர் “மரியாளே”! என்று அழைக்கையில் உடனடியாக இயேசு என அவரை அடையாளம் கண்டுகொள்கிறாள். அடுத்தபடியாக, பூட்டிய அறைக்குள் இருந்த தம் சீஷர்களுக்கு இயேசு காட்சியளிக்கிறார். பரிசுத்த ஆவியின் மூலம் அவர்கள் பெறவிருக்கிற வல்லமையைப் பற்றி சொல்கிறார். அப்போது அங்கு இராத தோமா அதை நம்ப மறுக்கிறார். ஆனால் எட்டு நாட்களுக்குப் பின் இயேசு மீண்டும் தோன்றி அவர் நம்புவதற்கு நிரூபணம் அளிக்கிறார். அப்போது தோமா, “என் ஆண்டவரே! என் தேவனே!” என்று ஆச்சரியத்தால் கூறுகிறார். (20:​16, 28) பல நாட்களுக்குப் பின்பு, திபேரியா கடற்கரையில், இயேசு தம் சீஷர்களை மறுபடியும் சந்திக்கிறார்; அவர்கள் மீன்களைப் பிடிக்கும்படி அற்புதம் நிகழ்த்துகிறார், பின்பு அவர்களோடு காலை உணவு உண்கிறார். அதன்பின் பேதுருவிடம் அவர் தம்மை நேசிக்கிறாரா என மூன்று தடவை கேட்கிறார். நேசிப்பதாக பேதுரு உறுதியளிக்கையில் இயேசு, “என் ஆட்டுக்குட்டிகளைப் போஷிப்பாயாக,” “என் ஆடுகளை மேய்ப்பாயாக,” “என் ஆடுகளைப் போஷிப்பாயாக” என்று வலியுறுத்திச் சொல்கிறார். பின்பு என்ன வகையான மரணத்தில் பேதுரு கடவுளை மகிமைப்படுத்துவாரென்று முன்னறிவிக்கிறார். யோவானைப் பற்றி பேதுரு கேட்கையில், “நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால், உனக்கென்ன” என்று இயேசு பதிலளிக்கிறார்.​—21:​15-17, 22, தி.மொ.

ஏன் பயனுள்ளது

30“யோவான் எழுதின” இந்த சுவிசேஷம் ஒளிவுமறைவின்றி பேசுகிறது; கிறிஸ்துவாகிய அந்த ‘வார்த்தையை’ அன்னியோன்னியமாக, இருதயத்தைக் கனிவிக்கும் விதமாக வருணிப்பதால் நம்ப வைப்பதாய் இருக்கிறது. அதனால், கடவுளுடைய அபிஷேகம் செய்யப்பட்ட குமாரனின் போதகத்தையும் செயல்களையும் பற்றிய தெளிவான காட்சியை நமக்கு அளிக்கிறது. யோவான் தேர்ந்தெடுத்துள்ள சொற்களும் அவரது எழுத்துநடையும் எளிமையாக இருக்கிறது. அவரைக் “கல்வியறியாத சாமான்ய”ராக காட்டுகிறது. இருந்தபோதிலும், அவர் தகவல்களை தெரிவிக்கும் பாங்கில் உறுதி வெளிப்படுகிறது. (அப். 4:​13, தி.மொ.) பிதாவுக்கும் குமாரனுக்கும் இடையிலுள்ள அன்னியோன்ய அன்பையும், இவர்களோடு அன்னியோன்னியமாக இருந்தால் வரக்கூடிய ஆசீர்வாதமான, அன்புள்ள உறவையும் வருணிப்பதில் யோவானின் சுவிசேஷமே எல்லாவற்றையும் மிஞ்சி நிற்கிறது. அன்பை குறிக்கும் சொற்களை மற்ற மூன்று சுவிசேஷங்களும் சேர்த்து பயன்படுத்துவதைப் பார்க்கிலும் அடிக்கடி யோவான் பயன்படுத்துகிறார்.

31ஆரம்பத்தில் அந்த வார்த்தைக்கும் பிதாவாகிய கடவுளுக்கும் இடையே எத்தகைய மகிமையான உறவு நிலவி வந்தது! கடவுளுடைய அருளால் “அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள் தங்கியது, அவருடைய மகிமையைப் பார்த்துக்கொண்டிருந்தோம்; அது பிதாவுக்கு இருக்கும் ஒரேபேறானவருடைய மகிமையைப் போன்றது; அவர் கிருபையும் சத்தியமும் நிறைந்தவர்.” (யோவா. 1:​14, தி.மொ.) பின்பு, பிதாவின் சித்தத்திற்கு முழுமையாய் கீழ்ப்படிந்து அவருக்கு அடிபணிந்திருக்கும் உறவை யோவானின் பதிவு முழுவதிலும் இயேசு வலியுறுத்துகிறார். (4:34; 5:​19, 30; 7:16; 10:​29, 30; 11:​41, 42; 12:​27, 49, 50; 14:10) இந்த நெருங்கிய உறவை அவர் வெளிப்படுத்துவது, யோவான் 17-ம் அதிகாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள உள்ளத்தைக் கனிவிக்கும் ஜெபத்தில் மகிமையான உச்சக்கட்டத்தை எட்டுகிறது. பூமியில் செய்யும்படி பிதா தம்மிடம் ஒப்படைத்த வேலையை தாம் செய்து முடித்ததை பிதாவுக்கு இயேசு அறிவிக்கிறார். மேலும் அவர் சொல்வதாவது: “பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்.”​—17:5.

32இயேசு தம் சீஷர்களுடன் வைத்திருந்த உறவைப் பற்றியென்ன? இவர்களுக்கும் மனிதவர்க்கம் முழுவதற்கும் கடவுளுடைய ஆசீர்வாதங்களை அளிக்கும் ஒரே வழியாக அவர் வகித்த பாகம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்திருக்கிறது. (14:​13, 14; 15:16; 16:​23, 24) அவர், “தேவ ஆட்டுக்குட்டி,” “ஜீவ அப்பம்,” “உலகத்திற்கு ஒளி,” “நல்ல மேய்ப்பன்,” ‘உயிர்த்தெழுதலும் ஜீவனும்,’ ‘வழியும் சத்தியமும் ஜீவனும்,’ “மெய்யான திராட்சச்செடி” என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறார். (1:29; 6:35; 8:12; 10:11; 11:25; 14:6; 15:1) “மெய்யான திராட்சச்செடி” என்ற இந்த உவமையால்தானே இயேசு, தம்மை உண்மையாய் பின்பற்றுவோருக்கும் தமக்கும் இடையில் மாத்திரமல்லாமல் அவர்களுக்கும் பிதாவுக்கும் இடையேயும் நிலவி வருகிற அற்புதமான ஐக்கியத்தைத் தெரியப்படுத்துகிறார். மிகுதியான கனிகளைக் கொடுப்பதன் மூலம் அவர்கள் தம் பிதாவை மகிமைப்படுத்துவார்கள். “பிதா என்னில் அன்புகூர்ந்ததுபோல நானும் உங்களில் அன்புகூர்ந்தேன்; என் அன்பில் நிலைத்திருங்கள்” என்று இயேசு அறிவுரை கூறுகிறார்.​—15:​9, தி.மொ.

33நேசிக்கப்பட்ட இவர்களும், ‘இவர்களுடைய வார்த்தையினால் தம்மை விசுவாசிக்கிறவர்களும்,’ சத்திய வார்த்தையால் பரிசுத்தப்படுத்தப்பட்டு, தம் பிதாவுடனும் தம்முடனும் ஒன்றாயிருக்க எவ்வளவு ஊக்கமாய் அவர் யெகோவாவிடம் ஜெபிக்கிறார்! நிச்சயமாகவே, இயேசுவினுடைய ஊழியத்தின் முழு நோக்கமும் தம் பிதாவிடம் செய்த ஜெபத்தின் இந்த முடிவான வார்த்தைகளில் வெகு அழகாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது: “நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்திலிருக்கும்படிக்கும், நானும் அவர்களிலிருக்கும்படிக்கும், உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; இன்னமும் தெரியப்படுத்துவேன்.”​—17:​20, 26.

34இயேசு தம் சீஷரை இந்த உலகத்தில் விட்டுச் செல்லவிருந்தபோதிலும், அவர்களைச் “சத்திய ஆவி”யின் உதவி இல்லாமல் விட்டுச்செல்லப் போவதில்லை. மேலும், இந்த உலகத்துடன் அவர்களுடைய தொடர்பைக் குறித்ததில் காலத்துக்கேற்ற அறிவுரையை கொடுத்து, ‘ஒளியின் பிள்ளைகளாக’ எவ்வாறு ஆவது என்பதை காட்டினார். (14:​16, 17; 3:​19-21; 12:36) “நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்று இயேசு சொன்னார். மாறாக, இருளின் பிள்ளைகளுக்கு அவர் சொன்னதாவது: “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; . . . சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை.” அவ்வாறெனில், சத்தியத்தில் எப்பொழுதும் உறுதியாய் நிலைத்திருக்கவும், “பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்”ளவும், இயேசுவின் இவ்வார்த்தைகளில் பலப்படவும் தீர்மானமாய் இருப்போமாக: “தைரியமாயிருங்கள், நான் உலகத்தை ஜெயித்தேன்.”​—8:​31, 32, 44; 4:23; 16:​33, தி.மொ.

35இவை அனைத்தும் கடவுளுடைய ராஜ்யத்தோடும் சம்பந்தப்பட்டிருக்கின்றன. “என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல” என இயேசு விசாரிக்கப்படுகையில் சாட்சிபகர்ந்தார். பின்பு, “நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான்” என பிலாத்துவின் கேள்விக்குப் பதிலளித்தார். (18:​36, 37) அவருக்கு செவிசாய்த்து “மறுபடியும் பிற”ப்போர் நிச்சயமாகவே மகிழ்ச்சியுள்ளவர்கள். அவர்கள் “தேவனுடைய ராஜ்யத்தில்” அரசரோடு ‘பிரவேசிப்பார்கள்.’ மேய்ப்பராகிய இந்த அரசருக்கு செவிசாய்த்து ஜீவனடையும் ‘மற்ற செம்மறியாடுகளும்’ மகிழ்ச்சியுள்ளவர்கள். யோவானின் சுவிசேஷத்திற்காக நன்றியோடிருப்பதற்கு நிச்சயமாகவே காரணம் உள்ளது. ஏனெனில், ‘இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும்’ இது எழுதப்பட்டது.​—3:​3, 5; 10:​16, NW; 20:31.

[அடிக்குறிப்புகள்]

a தி எக்லெஸியாஸ்டிக்கல் ஹிஸ்டரி, யூஸிபியஸ், V, VIII, 4.

b வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கம் 323.

c வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 2, பக்கங்கள் 57-8.

[கேள்விகள்]

1. இயேசுவுக்கும் யோவானுக்கும் இடையே நிலவிய நெருங்கிய உறவைக் குறித்து வேதாகமம் என்ன சொல்கிறது?

2. யோவான் தன் சுவிசேஷத்தை எழுத எவ்வாறு தகுதிபெற்றார் மற்றும் தூண்டப்பட்டார், என்ன நோக்கத்துக்காக எழுதினார்?

3, 4. (அ) இந்த சுவிசேஷத்தின் நம்பகத் தன்மைக்கும் (ஆ) யோவானே இதன் எழுத்தாளர் என்பதற்கும் பைபிள் சார்ந்த மற்றும் பைபிள் சாராத அத்தாட்சிகள் யாவை?

5. யோவான் தன் சுவிசேஷத்தை எப்போது எழுதியதாக நம்பப்படுகிறது?

6. யோவானின் சுவிசேஷம் பலஸ்தீனாவுக்கு வெளியே, எபேசுவில் அல்லது அதற்கருகில் எழுதப்பட்டதை என்ன அத்தாட்சி சுட்டிக்காட்டுகிறது?

7. பப்பைரஸ் ரைலண்ட்ஸ் 457 எவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்தது?

8. (அ) யோவான் சுவிசேஷத்தினுடைய அறிமுகத்தின் தனிச்சிறப்பு என்ன? (ஆ) இயேசுவின் ஊழியம் மூன்றரை ஆண்டுகள் நீடித்ததற்கு என்ன நிரூபணத்தை அது அளிக்கிறது?

9. யோவானின் சுவிசேஷம் நிறைவானதாக இருக்கிறதென்று எது காட்டுகிறது, எனினும் அது இயேசுவின் ஊழியத்தினுடைய விவரங்கள் அனைத்தையும் தருகிறதா?

10. “அந்த வார்த்தை”யைப் பற்றி யோவான் என்ன சொல்கிறார்?

11. முழுக்காட்டுபவரான யோவான் இயேசுவை எப்படி அடையாளம் காட்டுகிறார், யோவானின் சீஷர்கள் இயேசுவை யாரென ஏற்கின்றனர்?

12. (அ) இயேசுவின் முதல் அற்புதம் எது? (ஆ) தம் ஊழியக்காலத்தில் முதல் பஸ்காவின்போது எருசலேமில் இருக்கையில் அவர் என்ன செய்கிறார்?

13. (அ) ஜீவனடைவதற்கு எது அவசியமென இயேசு காட்டுகிறார்? (ஆ) முழுக்காட்டுபவராகிய யோவான், இயேசுவோடு தன்னை ஒப்பிட்டு என்ன சொல்கிறார்?

14. சீகாரில் சமாரிய ஸ்திரீக்கு இயேசு எதை விளக்கிக் கூறுகிறார், அங்கே அவர் பிரசங்கித்ததிலிருந்து என்ன பலன்கள் கிடைக்கின்றன?

15. எருசலேமில் இயேசுவுக்கு எதிராக என்ன குற்றச்சாட்டுகள் குவிகின்றன, ஆனால் தம்மீது குற்றம் சாட்டுவோருக்கு அவர் எவ்வாறு பதிலளிக்கிறார்?

16. (அ) உணவையும் உயிரையும் பற்றி இயேசு என்ன கற்பிக்கிறார்? (ஆ) அப்போஸ்தலரின் திடநம்பிக்கையை பேதுரு எவ்வாறு அறிவிக்கிறார்?

17. கூடாரப் பண்டிகையின்போது ஆலயத்தில் இயேசுவின் போதகம் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது?

18. இயேசுவுக்கு விரோதமாக என்ன எதிர்ப்பை யூதர் கிளப்புகின்றனர், அவர் எவ்வாறு பதிலளிக்கிறார்?

19. (அ) தம் பிதாவுடனான உறவைக் குறித்தும் தம் செம்மறியாடுகளிடமான அக்கறையைக் குறித்தும் இயேசு என்ன சொல்கிறார்? (ஆ) தம்மைக் கொல்லப் போவதாக பயமுறுத்திய அந்த யூதருக்கு எவ்வாறு பதிலளிக்கிறார்?

20. (அ) என்ன மாபெரும் அற்புதத்தை இயேசு அடுத்தபடியாக நிகழ்த்துகிறார்? (ஆ) இது எதற்கு வழிநடத்துகிறது?

21. (அ) இயேசு எருசலேமுக்குள் பிரவேசிக்கையில் ஜனங்களும் பரிசேயரும் எவ்வாறு பிரதிபலிக்கின்றனர்? (ஆ) இயேசு தம் மரணத்தையும் அதன் நோக்கத்தையும் குறித்து என்ன உவமையைக் கொடுக்கிறார், தமக்குச் செவிசாய்ப்போரை என்ன செய்யும்படி ஊக்குவிக்கிறார்?

22. பஸ்கா போஜனத்தின்போது இயேசு என்ன முன்மாதிரி வைக்கிறார், என்ன புதிய கட்டளையைக் கொடுக்கிறார்?

23. ஆறுதலளிப்பவராக, என்ன நம்பிக்கையையும் எந்த உதவியையும் பற்றி இயேசு குறிப்பிடுகிறார்?

24. தம்முடனும் தம் பிதாவுடனும் அப்போஸ்தலருக்கு இருக்கும் உறவைப் பற்றி இயேசு எப்படி கலந்தாலோசிக்கிறார், அவர்களுக்கு என்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும்?

25. (அ) இயேசு ஜெபத்தில் தம் பிதாவிடம் எதை ஒப்புக்கொள்கிறார்? (ஆ) தம்மையும், தம்முடைய சீஷர்களையும், அவர்களுடைய வார்த்தையை விசுவாசிப்பவர்களையும் குறித்து என்ன வேண்டிக்கொள்கிறார்?

26. இயேசு கைதுசெய்யப்படுவதையும் விசாரிக்கப்படுவதையும் குறித்து பதிவு என்ன சொல்கிறது?

27. (அ) ஆட்சியுரிமை, அதிகாரம் சம்பந்தமாக என்ன கேள்விகளை பிலாத்து கேட்கிறான், இயேசு எவ்வாறு பதிலளிக்கிறார்? (ஆ) ஆட்சியாளராக யாரை யூதர்கள் விரும்புகின்றனர்?

28. கொல்கொதாவில் என்ன நடக்கிறது, என்ன தீர்க்கதரிசனங்கள் அங்கே நிறைவேறுகின்றன?

29. (அ) உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு எவ்வாறு தம் சீஷர்கள் முன் தோன்றுகிறார்? (ஆ) பேதுருவிடம் கடைசியாக என்ன குறிப்புகளை இயேசு சொல்கிறார்?

30. யோவான் எவ்வாறு அன்பு எனும் பண்பை தனிப்பட வலியுறுத்துகிறார்?

31. யோவானின் சுவிசேஷம் முழுவதிலும் என்ன உறவு வலியுறுத்தப்படுகிறது, அது எவ்வாறு உச்சக்கட்டத்தை எட்டுகிறது?

32. தம் சீஷர்களுடன் தமக்குள்ள உறவையும், மனிதவர்க்கத்துக்கு ஜீவனுக்குரிய ஆசீர்வாதங்களை அளிக்கும் அந்த ஒரே வழி தாம்தான் என்பதையும் என்ன வார்த்தைகளால் இயேசு சுட்டிக்காட்டுகிறார்?

33. தம் ஊழியத்தின் என்ன நோக்கத்தை இயேசு ஜெபத்தில் வெளிப்படுத்துகிறார்?

34. உலகத்தை ஜெயிப்பது எப்படி என்பதன்பேரில் பயன்தரும் என்ன அறிவுரையை இயேசு கொடுத்தார்?

35. (அ) கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி இயேசு என்ன சாட்சியத்தைக் கொடுக்கிறார்? (ஆ) யோவானின் சுவிசேஷம் ஏன் மகிழ்ச்சிக்கும் நன்றியறிதலுக்கும் காரணத்தை அளிக்கிறது?