பைபிள் புத்தக எண் 44 அப்போஸ்தலர்
பைபிள் புத்தக எண் 44 அப்போஸ்தலர்
எழுத்தாளர்: லூக்கா
எழுதப்பட்ட இடம்: ரோம்
எழுதி முடிக்கப்பட்டது: ஏ. பொ.ச. 61
காலப்பகுதி: பொ.ச. 33-ஏ. 61
தேவாவியின் உதவியால் எழுதப்பட்ட வேதாகமத்தின் 42-வது புத்தகம் லூக்கா. அதில், இயேசுவையும் அவரைப் பின்பற்றினவர்களையும் பற்றிய வாழ்க்கை வரலாறு, நடவடிக்கை, ஊழியம் ஆகியவற்றை இயேசு பரலோகத்துக்கு ஏறிச் செல்லும் காலம் வரை லூக்கா விவரிக்கிறார். வேதாகமத்தின் 44-வது புத்தகம் அப்போஸ்தலருடைய நடபடிகள். இந்தச் சரித்திரப் பதிவு, பரிசுத்த ஆவியின் செயல்பாட்டினால் சபை ஸ்தாபிக்கப்பட்டதை விளக்கி, ஆரம்பகால கிறிஸ்தவத்தின் வரலாற்றை தொடர்ந்து விவரிக்கிறது. மேலும், முதலாவது யூதருக்கும், பின்பு சகல தேசத்தாருக்கும் சாட்சிகொடுத்தல் விஸ்தரிக்கப்பட்டதையும் விவரிக்கிறது. முதல் 12 அதிகாரங்களில் பெரும்பாலும் பேதுருவின் நடவடிக்கைகள் விவரிக்கப்படுகின்றன. மீதமுள்ள 16 அதிகாரங்களில் பவுலின் நடவடிக்கைகள் அடங்கியுள்ளன. பவுலின் நெருங்கிய நண்பராகிய லூக்கா, அவர் மேற்கொண்ட பல பயணங்களில் உடன் சென்றார்.
2இந்தப் புத்தகம் தெயோப்பிலுவுக்கு எழுதப்படுகிறது. அவர், “மகா கனம்பொருந்திய”வர் என குறிப்பிடப்படுகிறார். இதற்குக் காரணம், அவர் ஏதோ பொறுப்பான பதவி வகித்திருக்கலாம் அல்லது வெறுமனே மரியாதையை வெளிப்படுத்தும் சொற்றொடராக அது இருக்கலாம். (லூக். 1:1) இந்தப் புத்தகம், கிறிஸ்தவ சபை நிறுவப்பட்டதையும் அதன் வளர்ச்சியையும் பற்றிய திருத்தமான சரித்திரப் பதிவை அளிக்கிறது. இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின் அவர் தம்முடைய சீஷருக்கு காட்சியளித்த சந்தர்ப்பங்களைப் பற்றிய குறிப்போடு தொடங்குகிறது. அதாவது, பொ.ச. 33-லிருந்து ஏறக்குறைய 61 வரையான காலப்பகுதியில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களை இது பதிவுசெய்கிறது. இவ்வாறு மொத்தமாய் ஏறக்குறைய 28 ஆண்டு கால சம்பவங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
3பூர்வ காலங்கள் முதற்கொண்டே லூக்கா சுவிசேஷத்தின் எழுத்தாளரே அப்போஸ்தலருடைய நடபடிகளையும் எழுதினார் என ஒப்புக்கொள்ளப்பட்டது. இரண்டு புத்தகங்களும் தெயோப்பிலுக்கு
எழுதப்பட்டிருக்கின்றன. லூக்கா சுவிசேஷத்தின் முடிவில் குறிப்பிட்ட சம்பவங்களையே மீண்டும் அப்போஸ்தலருடைய நடபடிகளின் ஆரம்ப வசனங்களில் எழுத்தாளர் குறிப்பிடுகிறார்; இதன் மூலம் இந்த இரண்டு விவரப்பதிவுகளையும் இணைத்து, அவற்றின் எழுத்தாளர் ஒருவரே என்பதை லூக்கா தெளிவாக காட்டுகிறார். அப்போஸ்தலனாகிய பவுலோடு ரோமில் கழித்த இரண்டாண்டு காலப்பகுதியின் முடிவில், அதாவது ஏறக்குறைய பொ.ச. 61-ல், அப்போஸ்தலருடைய நடபடிகளை லூக்கா எழுதிமுடித்தாரென தெரிகிறது. ஏனெனில், அந்த ஆண்டு வரை நடந்த சம்பவங்கள் அப்பதிவில் காணப்படுவதால், அதற்கு முன்பாகவே அது எழுதி முடிக்கப்பட வாய்ப்பில்லை. மேலும் பவுல் இராயனுக்கு செய்த மேல் முறையீட்டிற்கு அளிக்கப்பட்ட தீர்ப்பைப் பற்றி குறிப்பிடப்படவில்லை. எனவே, அந்த ஆண்டில்தானே அது எழுதிமுடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை குறிப்பாய் சுட்டிக்காட்டுகிறது.4பூர்வ காலம் முதற்கொண்டே அப்போஸ்தலருடைய நடபடிகள் அதிகாரப்பூர்வ பட்டியலின் பாகமாய் பைபிள் கல்விமான்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. இந்தப் புத்தகத்தின் பகுதிகள், இன்றிருக்கும் கிரேக்க வேதாகமத்தின் பழம்பெரும் பப்பைரஸ் கையெழுத்துப் பிரதிகள் சிலவற்றில் காணப்படுகின்றன. முக்கியமாய், பொ.ச. மூன்றாம் நான்காம் நூற்றாண்டின் மிச்சிகன் எண் 1571 (P38)-லும் மூன்றாம் நூற்றாண்டின் செஸ்டர் பியட்டி எண் 1 (P45)-லும் இருப்பது குறிப்பிடத்தக்கது. தேவாவியால் ஏவப்பட்ட மற்ற வேதாகம புத்தகங்களோடுகூட அப்போஸ்தலருடைய நடபடிகளும் எல்லாரும் வாசிப்பதற்குக் கிடைத்ததால் அது ஆரம்ப கால அதிகாரப்பூர்வ பட்டியலின் பாகமாக இருந்தது என்பதை இவ்விரண்டு கையெழுத்துப் பிரதிகளும் சுட்டிக்காட்டுகின்றன. லூக்கா சுவிசேஷத்தில் நாம் ஏற்கெனவே கவனித்த அதன் குறிப்பிடத்தக்க திருத்தமான தன்மை, அப்போஸ்தலருடைய நடபடிகளிலும் வெளிப்படுகிறது. சர் வில்லியம் எம். ராம்ஸே, அப்போஸ்தலர் புத்தக எழுத்தாளரை “முதல்தர சரித்திராசிரியரில் ஒருவராக” சான்றளிக்கிறார். மேலும் இது எதை அர்த்தப்படுத்துகிறதென்று அவர் பின்வருமாறு விளக்குகிறார்: “வாய்மையே தலைசிறந்த சரித்திராசிரியனின் முதன்மையான, முக்கிய பண்பு. அவர் சொல்வது நம்பகமானதாக இருக்க வேண்டும்.” a
5லூக்காவின் பதிவுகளை தனிச் சிறப்புமிக்கதாக்குவது அதன் திருத்தமான அறிக்கையே. இதை விளக்குவதற்கு, பிரிட்டிஷ் போர்க் கப்பல்களின் தலைவர் எட்வின் ஸ்மித் என்பவருடைய வார்த்தைகளை மேற்கோளாக காட்டுகிறோம். இவர், முதல் உலகப் போரின்போது மத்தியதரைக் கடலில் சிறு படை ஒன்றை நடத்தி சென்றவர். த ரடர் பத்திரிகையின் மார்ச் 1947-ம் பிரதியில் அவர் பின்வருமாறு எழுதினார்: “கப்பல்களின் பின்பகுதியில் பொருத்தப்பட்ட சுழலும் ஒரு சுக்கானால் தற்கால கப்பல்கள் திசை திருப்பப்படுகின்றன. ஆனால் பண்டைய கப்பல்களோ அவ்வாறு செலுத்தப்படவில்லை. மாறாக, அக்கப்பல்களின் பின்பகுதியில் பக்கத்திற்கு ஒன்றாக பொருத்தப்பட்ட இரண்டு பெரிய துடுப்புகளால் அல்லது நீள்தண்டுகளால் செலுத்தப்பட்டன. எனவேதான் புனித லூக்கா அவற்றைப் பன்மையில் குறிப்பிடுகிறார். [அப். 27:40] . . . இந்தக் கப்பல், நல்ல துறைமுகத்தைவிட்டுப் புறப்பட்டது முதல் மெலித்தா கடற்கரையை எட்டியது வரை அதன் பயணப் பாதை விவரிக்கப்படுகிறது. புனித லூக்கா விவரிக்கும் அந்த முழு பயணத்தைப் பற்றிய ஒவ்வொரு குறிப்பும் வெகு திருத்தமானதாகவும் நம்பகமானதாகவும் இருப்பதை பைபிள் சாராத மற்றும் பைபிள் சார்ந்த அத்தாட்சிகள் உறுதிசெய்கின்றன. மேலும் அந்தக் கப்பல் கடலில் பயணித்த காலத்தைக் குறித்த அவருடைய குறிப்புகள் அது பயணித்த தூரத்துடன் ஒத்துப்போகிறது. கடைசியாக அவர் போய்ச்சேர்ந்த இடத்தைப் பற்றிய அவருடைய விவரிப்பு அந்த இடத்தோடு முற்றிலும் ஒத்திருக்கிறது. இவையாவும், விவரிக்கப்பட்ட அந்தக் கடற்பயணத்தில் லூக்காவும் இருந்தார் என்றும், அவர் கூர்ந்து கவனித்தவற்றையும் அவர் சொன்னவற்றையும் முழுக்க முழுக்க நம்பலாம் என்றும் காட்டுகின்றன.” b
6தொல்பொருளாராய்ச்சி கண்டுபிடிப்புகளும் லூக்கா எழுதிய பதிவின் திருத்தமான தன்மைக்கு சான்றளிக்கின்றன. உதாரணமாக, எபேசுவில் தோண்டியெடுக்கப்பட்ட அர்த்தெமியின் [“தியானாளின்,” UV] கோவிலும் அதோடு, அப்போஸ்தலன் பவுலுக்கு எதிராக எபேசியர் அமளி செய்த இடமாகிய பண்டைய அரங்கசாலையும் இதற்கு முக்கிய சான்று. (அப். 19:27-41, தி.மொ.) ‘பட்டணத்து அதிகாரிகள்’ என்ற பட்டப்பெயரை தெசலோனிக்கே அதிகாரிகளைக் குறிப்பிட லூக்கா பயன்படுத்தியது திருத்தமானதே என்பதை உறுதிசெய்யும் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. (17:6, 8) புபிலியுவை மெலித்தா தீவின் “தலைவர்” என லூக்கா குறிப்பிட்டது முற்றிலும் சரியானதுதான் என்பதை இரண்டு மெலித்தா எழுத்துப் பொறிப்புகள் காட்டுகின்றன.—28:7, பொ.மொ. c
7பேதுரு, ஸ்தேவான், கொர்நேலியு, தெர்த்துல்லு, பவுல் உட்பட இன்னும் அநேகர் கொடுத்த பல்வேறு சொற்பொழிவுகளை லூக்கா பதிவு செய்தார்; இவையெல்லாம் நடையிலும் தொகுப்பிலும் ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன. வெவ்வேறு கூட்டத்தார் முன்பாக பவுல் ஆற்றிய சொற்பொழிவுகள், சந்தர்ப்பத்துக்கு ஏற்ப நடையில் மாறுபட்டன. லூக்கா தான் கேட்டவற்றை அல்லது மற்ற கண்கண்ட சாட்சிகள் தனக்கு அறிவித்தவற்றை மட்டுமே பதிவு செய்தாரென்று இது தெளிவாக சுட்டிக் காட்டுகிறது. லூக்கா நிச்சயமாகவே புனைக்கதை எழுத்தாளர் அல்ல.
8லூக்காவின் சொந்த வாழ்க்கையைப் பற்றி அறியப்பட்டிருப்பது வெகு கொஞ்சம்தான். லூக்கா அப்போஸ்தலர்களில் ஒருவர் அல்ல, ஆனால் அப்போஸ்தலர்களோடு கூட்டுறவு வைத்திருந்தார். (லூக். 1:1-4) அப்போஸ்தலனாகிய பவுல் மூன்று சந்தர்ப்பங்களில் லூக்காவின் பெயரைக் குறிப்பிடுகிறார். (கொலோ. 4:10, 14; 2 தீ. 4:11; பிலே. 24) சில ஆண்டுகள் அவர் பவுலை விட்டு பிரியா உற்ற நண்பராய் இருந்தார்; ஆகவே, பவுல் அவரை “பிரியமான வைத்தியனாகிய லூக்கா” என்று அழைத்தார். இந்தப் பதிவில் “அவர்கள்,” “நாங்கள்” என்ற பதங்கள் மாறிமாறி உபயோகிக்கப்படுகின்றன. இது, பவுலின் இரண்டாவது மிஷனரி பயணத்தின்போது லூக்கா அவருடன் துரோவாவில் இருந்தார் என்றும், பவுல் திரும்பிவரும் வரையில் சில ஆண்டுகள் பிலிப்பியில் தங்கியிருந்திருக்கலாம் என்றும், பின்னர் விசாரணைக்காக ரோமுக்கு பவுல் அழைத்துச் செல்லப்பட்டபோது இவரும் உடன் சென்றார் என்றும் காட்டுகிறது.—அப். 16:8, 10; 17:1; 20:4-6; 28:16.
அப்போஸ்தலருடைய நடபடிகளின் பொருளடக்கம்
9பெந்தெகொஸ்தே வரையில் நடந்தவை (1:1-26). ஆர்வமிக்க தம் சீஷர்கள் பரிசுத்த ஆவியில் முழுக்காட்டப்படுவார்கள் என்று உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு அவர்களிடம் சொல்லும் குறிப்போடு இந்த இரண்டாவது விவரப்பதிவை லூக்கா தொடங்குகிறார். அந்தச் சமயத்திலா ராஜ்யம் திரும்ப நிலைநாட்டப்படும்? இல்லை. ஆனால் அவர்கள் புதுப்பலமடைந்து, “பூமியின் கடைசிபரியந்தமும்” சாட்சிகளாவார்கள். இயேசு மேலே எடுத்துக்கொள்ளப்படுகையில் அவர்களுடைய கண்களிலிருந்து மறைகிறார்; அப்போது வெண் உடை தரித்த இருவர், “உங்களிடத்திலிருந்து வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசு எவ்விதமாக வானத்துக்குள் போகக் கண்டீர்களோ அவ்விதமாகவே வருவார்” என்று அவர்களிடம் சொல்கின்றனர்.—1:8, 11, தி.மொ.
10மறக்க முடியாத அந்தப் பெந்தெகொஸ்தே நாள் (2:1-42). சீஷர்கள் எல்லாரும் எருசலேமில் கூடியிருக்கின்றனர். திடீரென்று பலத்த காற்று வீசுவது போன்ற இரைச்சல் அந்த வீட்டை நிரப்புகிறது. அக்கினி நாவுகளைப் போன்றவை கூடியிருப்போர்மீது வந்திறங்குகின்றன. அவர்கள் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு, “தேவனுடைய மகத்துவங்களைப்” பற்றி பற்பல மொழிகளில் பேசத் தொடங்குகின்றனர். (2:11) பார்க்க வந்தோர் திகைத்துப் போகின்றனர். பேதுரு எழுந்து நின்று பேசுகிறார். அப்போது ஆவி ஊற்றப்பட்டதானது, யோவேல் தீர்க்கதரிசனத்தை (2:28-32) நிறைவு செய்தது என்று விளக்குகிறார். மேலும், உயிர்த்தெழுப்பப்பட்டு கடவுளுடைய வலது பாரிசத்துக்கு உயர்த்தப்பட்டிருக்கிற இயேசு கிறிஸ்து, ‘அவர்கள் இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார்’ என்றும் விளக்குகிறார். இதைக் கேட்டு உள்ளம் உறுத்தப்பட்டவர்களாய், ஏறக்குறைய 3,000 பேர் கடவுளுடைய வார்த்தையை ஏற்று முழுக்காட்டுதல் பெறுகின்றனர்.—2:33.
11விரிவான சாட்சி கொடுத்தல் (2:43–5:42). இரட்சிப்பை நாடுவோரை தினம் தினம் யெகோவா தொடர்ந்து சேர்த்து வருகிறார். பிறந்தது முதல் சப்பாணியாய் இருக்கும் ஒருவனை பேதுருவும் யோவானும் ஆலயத்துக்கு வெளியே பார்க்கின்றனர். “நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவின் பெயரில், நட!” என்று பேதுரு கட்டளையிடுகிறார்; உடனடியாக அவன், ‘நடக்கிறான், குதிக்கிறான், கடவுளைத் துதிக்கவும்’ தொடங்குகிறான். பின்பு பேதுரு, “யெகோவாவின் சமூகத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் வரு”ம்படிக்கு மனஸ்தாபப்பட்டு மனந்திரும்பும்படி ஜனங்களிடம் கூறுகிறார். இயேசுவின் உயிர்த்தெழுதலைப் பற்றி பேதுருவும் யோவானும் போதிப்பதைக் கேட்டு எரிச்சலடைந்த மதத் தலைவர்கள் அவர்களை கைதுசெய்கின்றனர், ஆனால் விசுவாசிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஆண்கள் மட்டுமே சுமார் 5,000 பேர் இருக்கின்றனர்.—3:6, 8, 19, NW.
12அடுத்த நாள், பேதுருவும் யோவானும் யூத அதிபதிகளுக்கு முன்பு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். இயேசு கிறிஸ்துவின் மூலமே இரட்சிப்பு உண்டாகிறதென்று பேதுரு தைரியமாய் சாட்சி கொடுக்கிறார். தங்கள் போதக வேலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்படி கட்டளை பிறந்தபோது, பேதுருவும் யோவானும் சேர்ந்து, “தேவனுக்குச் செவிகொடுக்கிறதைப் பார்க்கிலும் உச்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்கு முன்பாக நியாயமாயிருக்குமோ என்று நீங்களே நிதானித்துப் பாருங்கள். நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக் கூடாதே” என்று பதிலளிக்கின்றனர். (4:19, 20) அவர்கள் விடுவிக்கப்படுகின்றனர்; சீஷரெல்லாரும் தொடர்ந்து கடவுளுடைய வார்த்தையைத் தைரியமாய் அறிவிக்கின்றனர். சூழ்நிலைமைகளின் காரணமாக, அவர்கள் தங்கள் பொருளுடைமைகளைப் பொதுவுடைமையாக்கி தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கின்றனர். எனினும், அனனியா என்பவனும் அவனுடைய மனைவி சப்பீராளும், தங்களுக்குரியதில் கொஞ்சத்தை விற்றனர்; விற்ற முழுத் தொகையையும் கொடுப்பதாக காட்டிக்கொண்டாலும் அந்தக் கிரயத்தில் கொஞ்சத்தை இரகசியமாய் தங்கள் வசம் வைத்துக்கொள்கின்றனர். பேதுரு அவர்கள் செய்ததை வெட்டவெளிச்சமாக்குகிறார், அவர்கள் கடவுளுக்கும் பரிசுத்த ஆவிக்கும் விரோதமாய் பொய் சொல்லி நடித்ததினால் இறந்துவிடுகின்றனர்.
13மறுபடியும் கொதித்தெழுந்த மதத் தலைவர்கள், அப்போஸ்தலரைச் சிறையில் தள்ளுகின்றனர்; ஆனால் இந்தச் சமயத்தில் யெகோவாவின் தூதன் அவர்களை விடுவிக்கிறார். மறுநாள் அவர்கள் ஆலோசனை சங்கத்துக்கு மீண்டும் அழைத்து வரப்படுகிறார்கள். ‘எருசலேமைத் தங்கள் போதகத்தினால் நிரப்பிவிட்டதாக’ குற்றம் சாட்டப்படுகின்றனர். “மனிதரைப் பார்க்கிலும் அரசராகிய கடவுளுக்கே நாங்கள் கீழ்ப்படிய வேண்டும்” (NW) என்று அவர்கள் பதிலளிக்கின்றனர். அடிக்கப்பட்டு பயமுறுத்தப்பட்ட போதிலும், அவர்கள் பிரசங்கிப்பதை நிறுத்திவிடுகிறதில்லை. மாறாக, ‘தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்து வருகிறார்கள்.’—5:28, 29, 42.
14ஸ்தேவான் இரத்த சாட்சியாய் இறத்தல் (6:1–8:1அ). உணவைப் பகிர்ந்தளிக்க பரிசுத்த ஆவியால் நியமிக்கப்பட்ட ஏழு பேரில் ஸ்தேவானும் ஒருவர். மிகுந்த தைரியத்தோடு சத்தியத்துக்கு அவர் சாட்சி பகருகிறார். விசுவாசத்தை ஆதரிப்பதில் அவர் அதிக வைராக்கியம் காட்டியதால் அவருடைய எதிரிகள் கோபமடைகின்றனர். தேவதூஷண குற்றஞ்சாட்டி, அவர்மீது பழிசுமத்தி, ஆலோசனை சங்கத்துக்கு முன்பாக அவரைக் கொண்டுவருகின்றனர். ஸ்தேவான் தன் சார்பாக வழக்காடி பேசுகையில், முதலாவதாக இஸ்ரவேலரிடம் யெகோவா காட்டிய நீடிய பொறுமையைப் பற்றி குறிப்பிடுகிறார். பின்பு கொஞ்சமும் பயமில்லாமல் இப்படி கடுமையாக பேசுகிறார்: ‘வணங்காக் கழுத்துள்ளவர்களே, பரிசுத்த ஆவிக்கு எப்பொழுதும் எதிர்த்து நிற்கிறீர்கள். தேவதூதரைக்கொண்டு நீங்கள் நியாயப்பிரமாணத்தைப் பெற்றிருந்தும், அதைக் கைக்கொள்ளாமற்போனீர்கள்.’ (7:51-53) இதை அவர்களால் தாங்க முடிவதில்லை. அவர்மீது பாய்ந்து, அவரை நகரத்துக்குப் புறம்பாக தள்ளிச் சென்று, கல்லெறிந்து கொல்கின்றனர். அதற்கு உடந்தையாக சவுலும் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
15துன்புறுத்துதல்களும் சவுலின் மதமாற்றமும் (8:1ஆ–9:30). எருசலேம் சபைக்கு எதிராக அன்று தொடங்குகிற துன்புறுத்துதல், அப்போஸ்தலரைத் தவிர மற்றெல்லாரையும் தேசமுழுவதிலும் நாலாபுறமும் சிதறிப்போகச் செய்கிறது. பிலிப்பு சமாரியாவுக்குச் செல்கிறார், அங்கே கடவுளுடைய வார்த்தையைப் பலர் ஏற்கின்றனர். ‘அப்போஸ்தலர் கைகளை வைப்பதினால்’ இந்த விசுவாசிகள் பரிசுத்த ஆவியைப் பெறும்படி, எருசலேமிலிருந்து பேதுருவும் யோவானும் அங்கு அனுப்பப்படுகின்றனர். (8:18) பின்பு, தெற்கே எருசலேமிலிருந்து காசாவுக்குப் போகும் பாதைக்குச் செல்லும்படியான கட்டளையை தூதனிடமிருந்து பிலிப்பு பெறுகிறார். அங்கே எத்தியோப்பியாவின் அரசவை அதிகாரி ஒருவர் தன் இரதத்தில் ஏசாயாவின் புத்தகத்தை வாசிப்பதைக் காண்கிறார். அந்தத் தீர்க்கதரிசனத்தின் அர்த்தத்தை பிலிப்பு அவருக்குத் தெளிவுபடுத்தியபின் அவருக்கு முழுக்காட்டுதல் தருகிறார்.
16இதற்கிடையில் சவுல், “இன்னுங் கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலைசெய்யும்படி சீறி” எழுகிறார்; தமஸ்குவில் ‘இந்த மார்க்கத்தை’ பின்பற்றுவோரைக் கைது செய்ய புறப்படுகிறார். திடீரென்று வானத்திலிருந்து ஒளி அவரைச் சுற்றிப் பிரகாசிக்கிறது, அவர் குருடாகி தரையில் விழுகிறார். வானத்திலிருந்து வந்த சத்தம், “நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே” என்று அவரிடம் சொல்கிறது. தமஸ்குவில் மூன்று நாட்களை செலவிட்ட பின்பு, அனனியா என்ற பெயருடைய சீஷன் அவருக்குப் போதிக்கிறார். சவுல் பார்வையடைகிறார், முழுக்காட்டப்படுகிறார், பரிசுத்த ஆவியால் நிரப்பப்படுகிறார். இவ்வாறு இவர் நற்செய்தியின் ஆர்வமிக்க, தகுதிவாய்ந்த போதகராகிறார். (9:1, 2, 5) வியக்கத்தக்க விதத்தில் சம்பவங்கள் திசை மாறுகின்றன; மற்றவர்களைத் துன்புறுத்தியவர் துன்புறுத்துதலுக்கு ஆளாகிறார். முதலாவது தமஸ்குவிலிருந்தும் பின்பு எருசலேமிலிருந்தும் தன் உயிரைக் காக்க தப்பியோட வேண்டியிருக்கிறது.
17விருத்தசேதனம் செய்யப்படாத புறஜாதியாருக்கு நற்செய்தி 9:31–12:25). சபை இப்போது ‘சமாதான காலப்பகுதிக்குள் பிரவேசித்து, கட்டியெழுப்பப்படுகிறது; யெகோவாவின் பயத்திலும் பரிசுத்த ஆவியின் ஆறுதலிலும் அது நடக்கையில், தொடர்ந்து பெருகிக்கொண்டிருக்கிறது.’ (9:31, NW) யோப்பாவில் பிரியத்திற்குரிய தபீத்தாளை (தொற்காளை) பேதுரு உயிர்த்தெழுப்புகிறார். இங்கிருக்கையில்தான் அவர் செசரியாவுக்குச் செல்லும்படியான அழைப்பைப் பெறுகிறார். அங்கே அவருக்காக கொர்நேலியு என்ற பெயருடைய படைத் தலைவர் ஒருவர் காத்திருக்கிறார். கொர்நெலியுவுக்கும் அவருடைய வீட்டாருக்கும் அவர் பிரசங்கிக்கிறார்; அவர்கள் விசுவாசிக்கையில் பரிசுத்த ஆவி அவர்கள்மீது ஊற்றப்படுகிறது. ‘தேவன் பட்சபாதமுள்ளவரல்ல, எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன்’ என்பதை அறிந்து பேதுரு அவர்களை முழுக்காட்டுகிறார்; இவர்களே, முதன்முதலாக மதம் மாறிய விருத்தசேதனம் செய்யப்படாத புறஜாதியார். பின்னர், இந்தப் புதிய வளர்ச்சியைப் பற்றி எருசலேமிலிருக்கும் சகோதரர்களுக்குப் பேதுரு விளக்குகிறார். அதை அறிகையில் அவர்கள் கடவுளை மகிமைப்படுத்துகிறார்கள்.—10:34, 35.
அறிவிக்கப்படுகிறது (18நற்செய்தி தொடர்ந்து காட்டுத் தீபோல் பரவுகையில், பர்னபாவும் சவுலும் அந்தியோகியாவில் பெரும் கூட்டத்தாருக்குப் போதிக்கின்றனர்; ‘முதன்முதலாக அந்தியோகியாவிலே சீஷர்கள் தேவ அருளால் கிறிஸ்தவர்களென்று அழைக்கப்படுகின்றனர்.’ (11:26, NW) மீண்டும் ஒருமுறை துன்புறுத்துதல் தலைதூக்குகிறது. முதலாம் ஏரோது அகிரிப்பா, யோவானின் சகோதரனான யாக்கோபைப் பட்டயத்திற்கு பலியாக்குகிறான். பேதுருவையும் சிறையில் தள்ளுகிறான்; ஆனால் மீண்டும் யெகோவாவின் தூதன் பேதுருவை விடுவிக்கிறார். துஷ்ட ஏரோதுக்கு வருகிறது பெரும் கேடு! கடவுளை மகிமைப்படுத்த தவறியதால், அவன் புழுபுழுத்து சாகிறான். மறுபட்சத்தில், ‘யெகோவாவின் வார்த்தை தொடர்ந்து பெருகிக்கொண்டும் பரவிக்கொண்டும் வருகிறது.’—12:24, NW.
19பர்னபாவுடன் பவுலின் முதல் மிஷனரி பயணம் (13:1–14:28). d பர்னபாவும் ‘பவுல் என்னப்பட்ட சவுலும்’ பரிசுத்த ஆவியால் பிரித்துவிடப்பட்டு அந்தியோகியாவிலிருந்து அனுப்பப்படுகின்றனர். (13:9) சீப்புரு தீவில், செர்கியுபவுல் என்ற அதிபதி உட்பட, பலர் விசுவாசிகளாகின்றனர். ஆசியா மைனரின் முக்கியப் பகுதியில், ஆறு அல்லது அதற்கும் மேற்பட்ட பட்டணங்களில் பிரசங்கித்து வருகின்றனர். செல்லுமிடமெல்லாம், நற்செய்தியை சந்தோஷத்தோடு மனமார ஏற்போருக்கும், வணங்கா கழுத்துள்ள எதிரிகளுக்கும் இடையில் வித்தியாசம் தெளிவாக தெரிகிறது. இந்த எதிரிகள் யெகோவாவின் செய்தியைப் பிரசங்கிப்போருக்கு எதிராக கல்லெறிய கலகக்காரர்களைத் தூண்டிவிடுகின்றனர். புதிதாய் நிறுவப்பட்ட சபைகளில் மூப்பர்களை ஏற்படுத்தியபின், பவுலும் பர்னபாவும் சீரியாவின் அந்தியோகியாவுக்குத் திரும்புகின்றனர்.
20விருத்தசேதன விவாதத்துக்கு முடிவுகட்டுதல் (15:1-35). யூதரல்லாத அநேகர் சபை அங்கத்தினராகியிருப்பதால், அவர்களும் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டுமா என்ற கேள்வி எழும்புகிறது. பவுலும் பர்னபாவும் இந்த விவாதத்தை எருசலேமிலுள்ள அப்போஸ்தலர் மற்றும் மூப்பர்களின் கவனத்துக்கு கொண்டு வருகின்றனர். அங்கு சீஷராகிய யாக்கோபின் தலைமையில், இது குறித்து தீர்மானம் ஒருமனதாய் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அத்தீர்மானத்தை, முறைப்படி கடிதத்தின்மூலம் அனுப்ப அவர் ஏற்பாடு செய்கிறார்: “அவசியமானவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள்மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்த ஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது. விக்கிரகங்களுக்குப் பலியிட்டவைகளுக்கும் இரத்தத்திற்கும் நெருக்குண்டு செத்ததற்கும் வேசித்தனத்திற்கும் விலகியிருக்க வேண்டுமென்பதே அவசியமானது.” (15:28, 29, தி.மொ.) இந்தக் கடிதம் அளித்த ஊக்கம் அந்தியோகியாவிலுள்ள சகோதரரை சந்தோஷப்படுத்துகிறது.
21பவுலின் இரண்டாவது பயணத்துடன் ஊழியம் விரிவடைகிறது (15:36–18:22). e “சில நாளைக்குப்பின்பு” பர்னபாவும் மாற்கும் சீப்புருவுக்குச் செல்ல கப்பலேறுகின்றனர்; பவுலும் சீலாவுமோ சீரியா, ஆசியா மைனர் வழியாக பயணப்படுகின்றனர். (15:36) வாலிபனான தீமோத்தேயு லீஸ்திராவில் பவுலோடு பயணத்தில் சேர்ந்துகொள்கிறார்; அவர்கள் ஈஜியன் கரையோரமாய் துரோவாவுக்குச் செல்கின்றனர். இங்கே பவுல் ஒரு தரிசனம் காண்கிறார்; அதில் ஒருவன், ‘நீர் மக்கெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவிசெய்ய வேண்டும்’ என்று தன்னிடம் கெஞ்சுவதைப் பார்க்கிறார். (16:9) லூக்காவும் பவுலோடு பயணத்தில் சேர்ந்துகொள்கிறார்; அவர்கள், மக்கெதோனியாவின் முக்கிய பட்டணமாகிய பிலிப்பிக்குச் செல்ல கப்பலேறுகின்றனர். அங்கே பவுலும் சீலாவும் சிறையில் அடைக்கப்படுகின்றனர். இது அந்தச் சிறைச்சாலையின் காவற்காரன் விசுவாசியாகி முழுக்காட்டப்படுவதில் விளைவடைகிறது. விடுதலைசெய்யப்பட்ட பின்பு, அவர்கள் தெசலோனிக்கே பட்டணத்துக்குச் செல்கின்றனர். அங்கே பொறாமை பிடித்த யூதர்கள் கலகக்காரர்களை இவர்களுக்கு விரோதமாகத் தூண்டிவிடுகின்றனர். ஆகவே இரவில் சகோதரர்கள் பவுலையும் சீலாவையும் பெரோயாவுக்கு அனுப்பிவிடுகின்றனர். இங்கிருந்த யூதர்கள் தாங்கள் கற்றுக்கொண்டவைகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு, “மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்”ப்பதன் மூலம் பெருந்தன்மை மிக்கவர்களாய் நிரூபிக்கின்றனர். (17:11) லூக்காவைப் பிலிப்பியில் விட்டுவந்ததைப்போல் சீலாவையும் தீமோத்தேயுவையும் இந்தப் புதிய சபையில் விட்டுவிட்டு, பவுல் தெற்கே அத்தேனே பட்டணத்துக்குப் பயணப்படுகிறார்.
22விக்கிரகங்கள் நிறைந்த இந்தப் பட்டணத்தில், தற்பெருமைமிக்க எப்பிக்கூரரும் ஸ்தோயிக்கரும் பவுலை “வாயாடி” என்றும் ‘அந்நிய தேவதைகளை அறிவிக்கிறவன்’ என்றும் ஏளனம் செய்கின்றனர்; அவரை அரியோப்பாகஸ் அல்லது மார்ஸ் மேடை எனப்படுவதற்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கு பவுல் அருமையாய் சொற்பொழிவாற்றுகிறார். “வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிற”வரும், மரித்தோரிலிருந்து தாம் உயிர்த்தெழுப்பினவரை உபயோகித்து நீதியாய் நியாயந்தீர்ப்பதாய் உறுதியளித்தவருமான உண்மை கடவுளைத் தேடுவது அவசியம் என வாதாடுகிறார். உயிர்த்தெழுதல் பற்றி குறிப்பிட்டது, அவருடைய பேச்சைக் கேட்டவர்களுக்குள் பிரிவை ஏற்படுத்துகிறது, ஆனாலும் சிலர் விசுவாசிகளாகின்றனர்.—17:18, 24.
23அடுத்தபடியாக, ஆக்கில்லாவுடனும் பிரிஸ்கில்லாளுடனும் பவுல் கொரிந்துவில் தங்குகிறார்; அவர்களுடன் சேர்ந்து கூடாரத் தொழிலில் ஈடுபடுகிறார். அவருடைய பிரசங்கிப்புக்கு எதிர்ப்பு வருகிறது. எனவே அவர் ஜெபாலயத்திற்கு அருகிலிருந்த தித்தியு யுஸ்துவின் வீட்டில் கூட்டங்களை நடத்தும் கட்டாயத்திற்கு உள்ளாகிறார். ஜெப ஆலயத் தலைவனாகிய கிறிஸ்பு விசுவாசியாகிறார். கொரிந்துவில் பவுல் 18 மாதங்களைக் கழிக்கிறார். பின், ஆக்கில்லாவுடனும் பிரிஸ்கில்லாளுடனும் எபேசுவுக்குச் செல்கிறார். அங்கே அவர்களை விட்டுவிட்டு, சீரியாவிலுள்ள அந்தியோகியாவை நோக்கி தன் பயணத்தைத் தொடர்கிறார்; அதோடு தன் இரண்டாவது மிஷனரி பயணத்தை முடிக்கிறார்.
24பவுல் சபைகளைத் திரும்பவும் சந்திக்கிறார், மூன்றாவது பயணம் 18:23–21:26). f அப்பொல்லோ என்ற பெயருடைய யூதன், எகிப்தின் அலெக்சந்திரியாவிலிருந்து எபேசுவுக்கு வருகிறார். அங்கே, ஜெபாலயத்தில் இயேசுவைப் பற்றி தைரியமாய்ப் பேசுகிறார்; ஆனால் அவர் கொரிந்துவுக்குச் செல்வதற்கு முன்பாக அவருடைய போதகத்தில் திருத்தங்கள் செய்வது அவசியமென ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் காண்கின்றனர். பவுல் இப்போது தன் மூன்றாவது பயணத்தைத் தொடர்கிறார். கொஞ்ச நாட்கள் கழித்து எபேசுவுக்கு வருகிறார். இங்கே விசுவாசிகள் யோவானின் முழுக்காட்டுதலை மட்டுமே பெற்றிருப்பதை அறிகிறார். எனவே, இயேசுவின் பெயரில் முழுக்காட்டப்படுவதன் அவசியத்தைப் பவுல் விளக்குகிறார். பின்பு அவர், ஏறக்குறைய 12 நபர்களுக்கு முழுக்காட்டுதல் கொடுக்கிறார்; அவர் தன் கைகளை அவர்கள்மீது வைக்கிறார், அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெறுகிறார்கள்.
(25பவுல் எபேசுவில் மூன்று ஆண்டுகள் தங்குகிறார்; அப்போது, ‘யெகோவாவின் வார்த்தை தொடர்ந்து வளர்ந்துகொண்டும் வல்லமைவாய்ந்த முறையில் பரவிக்கொண்டும் வருகிறது.’ அந்தப் பட்டணத்தாரில் பலர் தாங்கள் வணங்கி வந்த தேவதையான அர்த்தெமியின் வணக்கத்தை விட்டு விலகுகின்றனர். (19:20, NW) சிறு வெள்ளிக் கோவில்களைச் செய்து பிழைப்பு நடத்தும் தட்டான்கள் தங்கள் தொழிலுக்கு நஷ்டம் நேரிடக்கூடுமென்று கோபப்பட்டு, அந்தப் பட்டணத்தில் பெரும் கலகத்தைத் தூண்டிவிடுகின்றனர்; அந்தக் கலகக் கும்பலைக் கலைக்கப் பல மணிநேரம் எடுக்கிறது. உடனடியாக பவுல், மக்கெதோனியாவுக்கும் கிரேக்குவுக்கும் பயணப்படுகிறார்; போகும் வழியில் விசுவாசிகளைச் சந்திக்கவும் தவறவில்லை.
26மக்கெதோனியாவின் வழியாய்த் திரும்புவதற்கு முன்பு பவுல் கிரீஸில் மூன்று மாதங்கள் தங்குகிறார்; அங்கே லூக்கா மீண்டும் அவரோடு பயணத்தில் சேர்ந்துகொள்கிறார். அவர்கள் துரோவாவுக்குச் செல்கின்றனர்; இங்கே, பவுல் இரவில் நெடுநேரம் வரை பேச்சு கொடுக்கையில், வாலிபன் ஒருவன் தூக்க மயக்கத்தால் மூன்றாவது மாடி ஜன்னலிலிருந்து கீழே விழுந்து செத்துவிடுகிறான். ஆனால் பவுல் அவனை மீண்டும் உயிரடையச் செய்கிறார். அடுத்த நாள் பவுலும் அவருடன் பயணிப்பவர்களும் எருசலேமுக்குச் செல்லும் வழியில் மிலேத்துவுக்கு செல்கின்றனர். எபேசுவிலிருந்து வரும் மூப்பர்களைச் சந்திக்கும்படி அங்கு பவுல் தங்குகிறார். அவர்கள் இனி தன்னை காணமாட்டார்களென்று அவர்களுக்கு அறிவிக்கிறார். அப்படியென்றால், அவர்கள் கடவுளின் மந்தையை முன்னின்று நடத்திச்செல்வது எந்தளவு அவசரத்தன்மையானது! இம்மந்தைமீதே ‘பரிசுத்த ஆவி அவர்களைக் கண்காணிகளாக வைத்திருக்கிறது.’ அவர்களுக்குத் தன் முன்மாதிரியை நினைப்பூட்டி, விழித்திருக்கும்படியும், சகோதரருக்காக தங்களையே தியாகம் செய்ய தயாராக இருக்கும்படியும் அறிவுரை கூறுகிறார். (20:28) எருசலேமுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்ட போதிலும், பவுல் வழியை மாற்றிக் கொள்வதில்லை. அவருடைய தோழர்களோ “யெகோவாவின் சித்தம் ஆகக்கடவது” என்று சொல்லி இணங்கிப் போகின்றனர். (21:14, NW) புறதேசத்தாருக்குள் செய்த ஊழியத்தில் கடவுள் அளித்த பலன்களைக் குறித்து யாக்கோபுக்கும் மூப்பர்களுக்கும் பவுல் அறிவிக்கிறபோது மிகுந்த மகிழ்ச்சியுண்டாகிறது.
27பவுல் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறார் (21:27–26:32). பவுல் எருசலேமிலுள்ள ஆலயத்திற்கு வருகிறார். ஆனால், அவருக்கு அங்கே காத்திருப்பதோ பகைமையோடுகூடிய வரவேற்பே. ஆசியாவிலிருந்து வந்த யூதர்கள், அந்தப் பட்டணத்தார் அனைவரையும் அவருக்கு எதிராக கிளப்பிவிடுகின்றனர்; தக்க சமயத்தில் அவரை ரோம போர்வீரர்கள் அவர்கள் கைக்குத் தப்புவிக்கின்றனர்.
28எதற்கு இந்தப் பெரும் கூச்சல்? யார் இந்தப் பவுல்? அவர் செய்த குற்றமென்ன? திகைப்புற்ற சேனாதிபதி பதில்களை அறிய விரும்புகிறார். தன்னுடைய ரோம குடியுரிமையை சமயோசிதமாக பயன்படுத்தி பவுல் அந்தச் சாட்டை அடிக்குத் தப்புகிறார்; பின்னர் ஆலோசனை சங்கத்துக்கு முன் கொண்டுவரப்படுகிறார். பரிசேயரும் சதுசேயரும் எதிரும் புதிருமாக நிற்கும் விசாரணை மன்றமல்லவோ அது! ஆகையால் பவுல் உயிர்த்தெழுதல் பற்றிய கேள்வியை எழுப்புகிறார்; அவர்கள் தங்களுக்குள்ளேயே பிரிந்து நிற்கும் நிலையை உருவாக்குகிறார். அந்த இரு பிரிவினருக்கிடையே விவாதம் முற்றுகையில், பவுலை அடித்து நொறுக்குவதற்கு முன்பு, ரோம போர்ச்சேவகர்கள் அவரை அந்த ஆலோசனை சங்கத்தை விட்டே இழுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. மெய்க்காவலர் படையுடன் அவரை இரகசியமாய் இரவோடு இரவாக செசரியாவிலுள்ள தேசாதிபதி பேலிக்ஸினிடம் அனுப்புகின்றனர்.
29பவுலுக்கு எதிராக ராஜதுரோக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. ஆகவே இதற்குப் பதிலளிக்கும் விதமாக, பேலிக்ஸுக்கு முன்பாக அவர் திறம்பட்ட முறையில் வழக்காடுகிறார். ஆனால், பவுலை விடுதலை செய்வதற்கு லஞ்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பேலிக்ஸ் விடுதலையை ஒத்திப் போடுகிறான். இரண்டு ஆண்டுகள் கடந்தோடுகின்றன. பொர்க்கியு பெஸ்து, பேலிக்ஸுக்குப் பின் தேசாதிபதியாகிறான்; புதிய விசாரணை நடத்த கட்டளை பிறக்கிறது. மறுபடியும், கடும் குற்றச்சாட்டுகள் வந்து குவிகின்றன. மீண்டும் தான் நிரபராதி என பவுல் தெரிவிக்கிறார். ஆனால் யூதருடைய ஆதரவை பெறுவதற்காக, எருசலேமில் இன்னுமொரு விசாரணையை நடத்தும்படி பெஸ்து ஆலோசனை கூறுகிறார். ஆகவே பவுல், “நான் இராயனிடம் மனுசெய்கிறேன்!” என்று சொல்கிறார். (25:11, NW) காலம் உருண்டோடுகிறது. முடிவில், இரண்டாம் ஏரோது அகிரிப்பா ராஜா, பெஸ்துவைக் காண வருகிறார்; பவுல் மறுபடியுமாக நியாயவிசாரணைக்கு அழைத்து வரப்படுகிறார். பவுலுடைய சாட்சியம் அந்தளவு வலிமைமிக்கதாகவும் நம்பவைப்பதாகவும் இருப்பதால் அகிரிப்பா அவரிடம், “நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கப்பண்ணுகிறாய்” என்று சொல்கிறார். (26:28) அவ்வாறே பவுல் குற்றமற்றவர் என்பதை அகிரிப்பா தெரிந்துகொள்கிறார்; அவர் இராயனுக்கு மனு செய்திராவிட்டால் விடுதலை செய்யப்படலாம் என்றும் அறிகிறார்.
30பவுல் ரோமுக்குச் செல்கிறார் (27:1–28:31, தி.மொ.). g கைதியாகிய பவுலும் மற்றவர்களும் ரோமுக்கு கொண்டு செல்லப்படும் பயணத்தின் முதல் கட்டமாக ஒரு படகில் செல்கின்றனர். எதிர் காற்று மிகப் பலமாய் வீசுவதால், தொடர்ந்து செல்வது தாமதமாகிறது. மீறா துறைமுகத்தில் அவர்கள் கப்பல் மாறுகிறார்கள். கிரேத்தாவிலுள்ள நல்ல துறைமுகத்தை அடைகையில், பனிக்காலம் முடியும் வரை அங்கேயே தங்கும் ஆலோசனையைப் பவுல் கொடுக்கிறார்; ஆனால் பெரும்பாலோர் பயணத்தைத் தொடரும்படி வற்புறுத்துகின்றனர். அவர்கள் சிறிது தூரம் கடலில் பயணிப்பதற்குள் கடும் புயல்காற்று அவர்களைத் தாக்கி பயங்கரமாக அலைக்கழிக்கிறது. இரண்டு வாரங்களுக்குப் பின் அவர்களுடைய கப்பல் ஒருவழியாக மெலித்தா கரைக்கருகில் ஆழமற்ற மணல்திட்டில் மோதி சின்னாபின்னமாகிறது. பவுல் ஏற்கெனவே உறுதியளித்தபடி உண்மையிலேயே, கப்பலிலிருக்கும் 276 பேரில் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை! மெலித்தா தீவார் மிகுந்த மனிதாபிமானம் காட்டுகின்றனர். அங்கு தங்கியிருந்த காலத்தில், கடவுளுடைய ஆவியின் அற்புத வல்லமையால், அவர்களில் பலரை பவுல் சுகப்படுத்துகிறார்.
31அடுத்த இளவேனிற்காலத்தில் பவுல் ரோமை அடைகிறார்; சாலை மார்க்கமாக வந்த சகோதரர்கள் அவரை சந்திக்கின்றனர். பவுல் அவர்களைக் கண்டதும், “கடவுளுக்கு நன்றிசெலுத்தித் தைரியமடை”கிறார். பவுல் இன்னும் கைதிதான், ஆனாலும், தான் வாடகைக்கு 28:15, 31, தி.மொ.
எடுத்த வீட்டில், காவலுக்கு ஒரு போர்ச்சேவகனோடு தங்கியிருக்க அனுமதிக்கப்படுகிறார். தன்னிடம் வருகிற யாவரையும் பவுல் தயவாய் ஏற்று, “மிகுந்த தைரியத்தோடு தடையில்லாமல் கடவுளின் ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கித்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றியவைகளை உபதேசித்துகொண்டிருந்தா[ர்]” என்று விவரிப்பதோடு லூக்கா தன் பதிவை முடிக்கிறார்.—ஏன் பயனுள்ளது
32எபிரெய வேதாகமத்தின் நம்பகத் தன்மையையும், அது தேவாவியால் ஏவப்பட்டதென்பதையும் உறுதிப்படுத்துவதில் சுவிசேஷங்களின் சாட்சியத்தோடு கூடுதல் சாட்சியத்தை அப்போஸ்தலருடைய நடபடிகளின் புத்தகம் அளிக்கிறது. பெந்தெகொஸ்தே நெருங்குகையில், பேதுரு, “யூதாசைக் குறித்துப் பரிசுத்த ஆவி தாவீதின் வாக்கினால் முன் சொன்ன” இரண்டு தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தை குறிப்பிட்டார். (அப். 1:16, 20; சங். 69:25; 109:8) மேலும் பேதுரு, பெந்தெகொஸ்தே அன்று ஆச்சரியத்தில் திகைத்துநின்ற ஜனத்தாரிடம், “தீர்க்கதரிசியாகிய யோவேலின் மூலமாய் உரைக்கப்பட்டதே இது” என்று கூறி, தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தை அவர்கள் உண்மையில் கண்ணாரக் கண்டார்கள் என்றார்.—அப். 2:16-21, தி.மொ.; யோவே. 2:28-32; மேலும் அப்போஸ்தலர் 2:25-28, 34, 35-ஐ சங்கீதம் 16:8-11-உடனும் சங்கீதம் 110:1-உடனும் ஒப்பிடுக.
33ஆலயத்துக்கு வெளியிலிருந்த மற்றொரு கூட்டத்தாரை நம்பவைக்க, பேதுரு மறுபடியும் எபிரெய வேதாகமத்தை குறிப்பிட்டார்; முதலாவதாக மோசே கூறியதை மேற்கோள் காட்டிய பின்பு, “சாமுவேல் முதல் சகல தீர்க்கதரிசிகளும், பின்வந்தவர்களில் எத்தனைபேர் தீர்க்கதரிசனம் உரைத்தார்களோ அத்தனைபேரும், இந்த நாட்களையே அறிவித்தார்கள்” என்று கூறினார். பின்னர், அவர்கள் வேண்டாமென தள்ளின அந்தக் கல்லாகிய கிறிஸ்துவே “மூலைக்குத் தலைக்கல்லா”னார் என்று ஆலோசனை சங்கத்தில் பேதுரு குறிப்பிடுகையில் சங்கீதம் 118:22-ஐ மேற்கோள் காட்டினார். (அப். 3:22-24, தி.மொ.; 4:11) ஏசாயா 53:7, 8-ன் தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறியது என்று எத்தியோப்பிய அரசவை அதிகாரிக்கு பிலிப்பு விளக்கிக் காட்டினார். சரியான புரிந்துகொள்ளுதலைப் பெற்றபோது அவர் முழுக்காட்டும்படி தாழ்மையோடு வேண்டினார். (அப். 8:28-35, NW) அவ்வாறே, இயேசுவைப் பற்றி கொர்நேலியுவிடம் பேசிய பேதுரு, “தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள்” என்று சாட்சி பகர்ந்தார். (10:43) விருத்தசேதனம் பற்றிய விவாதம் எழுந்தபோது, யாக்கோபு தன் தீர்மானத்தைச் சொல்லி, ‘எழுதியிருக்கிறபடியே’ “அதற்குத் தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளும் ஒத்திருக்கின்றன” என்று ஆதரித்துப் பேசினார். (15:15-18, தி.மொ.) அப்போஸ்தலன் பவுலும் அதே ஆதாரங்களின்பேரில் பேசினார். (26:22, 23; 28:23, 25-27) எபிரெய வேதாகமத்தை கடவுளுடைய வார்த்தையின் பாகமாக சீஷர்களும் அவர்களுக்குச் செவிசாய்த்தவர்களும் உடனடியாக ஏற்றுக்கொண்டது, அந்த வேதாகமம் தேவாவியால் ஏவப்பட்டது என்பதற்கு அங்கீகார முத்திரையைப் பதிக்கிறது.
34கிறிஸ்தவ சபை ஸ்தாபிக்கப்பட்டதையும், பரிசுத்த ஆவியின் வல்லமையால் அது வேர்விட்டு வளர்ந்ததையும் சுட்டிக்காட்டுவதில் அப்போஸ்தலருடைய நடபடிகள் மிகவும் பயனுள்ளதாய் இருக்கிறது. உயிர்த்துடிப்புள்ள இந்தப் பதிவு முழுவதிலும், நற்செய்தி விரிவடைவதில் கடவுளுடைய ஆசீர்வாதங்களையும், பூர்வ கிறிஸ்தவர்கள் காட்டிய தைரியத்தையும் பெற்ற மகிழ்ச்சியையும், துன்புறுத்துதலை எதிர்ப்படுகையில் இணங்கிவிடாமல் அவர்கள் உறுதியாய் நிலைத்திருந்ததையும் காண்கிறோம். மேலும், அயல் நாட்டு சேவையில் மக்கெதோனியாவுக்கு செல்வதற்கான அழைப்பை மனமார ஏற்று முன்மாதிரி வைத்த பவுலைப் போன்று சேவை செய்ய அவர்கள் காட்டிய விருப்பத்தையும் இதில் நாம் காண்கிறோம். (4:13, 31; 15:3; 5:28, 29; 8:4; 13:2-4; 16:9, 10) இன்றும் கிறிஸ்தவ சபை அதே மாதிரிதான் இருக்கிறது. எவ்வாறெனில், பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலில், “தேவனுடைய மகத்துவங்களை” அறிவித்து வருகையில், அன்பிலும், ஒற்றுமையிலும், நோக்கத்திலும் அது ஐக்கியப்பட்டிருக்கிறது.—2:11, 17, 45; 4:34, 35; 11:27-30; 12:25.
35கடவுளுடைய ராஜ்யத்தை யாவரறிய அறிவிக்கும் கிறிஸ்தவ ஊழியத்தை எவ்வாறு நிறைவேற்ற வேண்டுமென்பதை அப்போஸ்தலருடைய நடபடிகளின் புத்தகம் காட்டுகிறது. இதற்கு பவுல் சிறந்த முன்மாதிரியாய் திகழ்ந்தார். அவர் இவ்வாறு கூறினார்: “பிரயோஜனமானவைகளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்துவைக்காமல் பகிரங்கமாகவும் வீடுவீடாகவும் உங்களுக்கு உபதேசித்து அறிவித்தேன்.” பின்பு அவர் தொடர்ந்து, ‘நான் . . . முற்றுமுழுக்க சாட்சி கூறினேன்’ என்கிறார். ‘முற்றுமுழுக்க சாட்சி கூறுவது’ என்ற இந்தப் பொருள் இந்தப் புத்தகம் முழுவதிலும் இழையோடுவது நம் கவனத்தைக் கவருகிறது. மேலும் முடிவான பத்திகளில் இது மனதில் ஆழ பதியும் விதத்தில் காட்டப்படுகிறது. பவுல் சிறைக்கட்டுகளில் இருந்தபோதிலும், தன் பிரசங்கிப்புக்கும் போதிப்புக்கும் காட்டும் இருதயப்பூர்வமான ஈடுபாடு இவ்வார்த்தைகளில் காட்டப்படுகிறது: “அவர் காலைதொடங்கி மாலை வரைக்கும் மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலுமிருந்து இயேசுவைப் பற்றி அவர்களுக்குப் போதித்துத் திடச்சாட்சி [“முற்றுமுழுக்க சாட்சி,” NW] கூறிக் கடவுளின் ராஜ்யத்தைக் குறித்து விவரித்துப் பேசினார்.” ராஜ்ய ஊழியத்தில் நாமும் அதைப்போல் முழு இருதயத்தோடு ஈடுபடுவோமாக!—20:20, 21, தி.மொ.; 28:23, NW; 2:40; 5:42; 26:22.
36எபேசுவிலிருந்து வந்த கண்காணிகளுக்கு பவுல் கொடுத்த பேச்சு இன்று கண்காணிகளுக்கு பயன்மிக்க நடைமுறையான அறிவுரைகளைக் கொடுக்கிறது. இவர்கள் பரிசுத்த ஆவியால் நியமிக்கப்பட்டவர்கள். ஆதலால், ‘தங்களுக்கும் மந்தை முழுவதற்கும் கவனம் செலுத்தி,’ மந்தையை கனிவாய் மேய்த்து, ஒடுக்கும் ஓநாய்களுக்கு எதிராக பாதுகாக்க வேண்டியது மிகவும் முக்கியம். இப்பொறுப்பு அவ்வளவு எளிதானதல்ல! கண்காணிகள் விழிப்புள்ளவர்களாய் இருந்து கடவுளின் தகுதியற்ற தயவுக்குரிய வார்த்தையில் முதலாவது தங்களைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். பலவீனருக்கு உதவ உழைக்கையில், “‘பெற்றுக்கொள்வதில் இருப்பதைப் பார்க்கிலும் கொடுப்பதிலேயே அதிக மகிழ்ச்சி’ என்று சொன்ன இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை மனக்கண் முன் எப்போதும் நிறுத்திக் கொள்ள வேண்டும்.”—20:17-35, NW.
37பவுலின் மற்ற சொற்பொழிவுகளும் பைபிள் நியமங்களை தெளிவாக எடுத்துக்காட்டின. உதாரணமாக, அரியோப்பாகஸில் ஸ்தோயிக்கருக்காகவும் எப்பிக்கூரருக்காகவும் சொற்பொழிவாற்றியபோது சிறப்பாக விவாதம் செய்தார். முதலாவதாக, அந்தப் பலிபீடத்தின் மீது பொறிக்கப்பட்டிருந்த “அறியப்படாத தேவனுக்கு” என்ற எழுத்துக்களைச் சுட்டிக்காட்டினார்; மெய்யான ஒரே கடவுள், வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவர், ஒரே மனிதனிலிருந்து சகல ஜனங்களையும் உண்டாக்கினவர், “நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்ல” என்பதை விளக்கும் தன் நியாயவிவாதத்திற்கு அதை அஸ்திவாரமாக வைத்துக் கொண்டார். பின்பு, அவர்கள் உயிரற்ற பொன், வெள்ளி, அல்லது கல் போன்ற விக்கிரக கடவுட்களால் படைக்கப்பட்டார்கள் என நினைப்பது எவ்வளவு அறிவீனம் 17:22-34.
என்பதைக் காட்ட “நாம் அவருடைய சந்ததியார்” என்று கூறிய அவர்களுடைய கவிஞரின் வார்த்தைகளையே மேற்கோளாகக் குறிப்பிடுகிறார். இவ்வாறு பவுல் ஜீவனுள்ள கடவுளின் அரசதிகாரத்தைச் சாதுரியத்துடன் நிலைநாட்டுகிறார். தன் பேச்சின் முடிவில்தான் உயிர்த்தெழுதலைப் பற்றிய விவாதத்தை எழுப்புகிறார். அப்போதுங்கூட கிறிஸ்துவின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. ஒரே மெய் கடவுளின் ஈடற்ற உன்னத அரசாட்சியை தெளிவாக எடுத்துக்கூறி அவர்கள் புரிந்துகொள்ள உதவினார், அதன் பலன், சிலர் விசுவாசிகளானார்கள்.—38“வேதாகமம் முழுவதையும்” தொடர்ந்து, ஊக்கமாய்ப் படிக்க அப்போஸ்தலருடைய நடபடிகளின் புத்தகம் நம்மை தூண்டுகிறது. பவுல் பெரோயாவில் முதலாவது பிரசங்கித்தபோது, அங்கிருந்த யூதர்கள் “மனோவாஞ்சையாய்த் திருவசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியம் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களையாராய்ந்து பார்த்துவந்த”தனால் “பெருந்தன்மையுடையவர்கள்” என்று பாராட்டப்பட்டனர். (17:11, தி.மொ.) அன்று போல் இன்றும், யெகோவாவின் ஆவி நிலவும் சபையோடு சேர்ந்து ஆர்வத்துடன் வேதாகமத்தை ஆராய்ந்தால், நம்பிக்கையும் விசுவாசமும் உறுதியாகும் பாக்கியம் கிடைக்கும். இத்தகைய படிப்பால் ஒருவர், கடவுளுடைய நியமங்களைத் தெளிவாக புரிந்துகொள்ள ஆரம்பிக்கலாம். இந்த நியமங்கள் சிலவற்றைப் பற்றிய சிறந்த குறிப்பு அப்போஸ்தலர் 15:28-ல் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அதில், எருசலேமிலிருந்த அப்போஸ்தலரும் மூப்பருமான சகோதரர்கள் அடங்கிய ஆளும் குழு, ஆவிக்குரிய இஸ்ரவேலுக்கு விருத்தசேதனம் தேவையல்லவென்றும், ஆனால் விக்கிரக வணக்கத்துக்கும், இரத்தத்துக்கும், வேசித்தனத்துக்கும் முற்றிலும் விலகியிருக்க வேண்டுமென்றும் திட்டமாய் தெரிவித்தது.
39அந்த ஆரம்பகால சீஷர்கள் ஏவப்பட்ட வேதாகமத்தை உண்மையில் படித்து, தேவைப்படுகையில் அதிலிருந்து மேற்கோள் காட்டினர், பின்பற்றவும் செய்தனர். கொடிய துன்புறுத்துதல்களை எதிர்கொள்ள திருத்தமான அறிவினாலும் கடவுளுடைய ஆவியினாலும் அவர்கள் பலப்படுத்தப்பட்டனர். அவர்களை எதிர்த்த அதிகாரிகளிடம் பேதுருவும் யோவானும், “கடவுளுக்குச் செவிகொடுப்பதிலும் உங்களுக்குச் செவிகொடுப்பது கடவுளுக்குமுன் நியாயமாகுமோ, நிதானியுங்கள். கண்டவைகளையுங் கேட்டவைகளையும் பேசாமலிருக்க எங்களால் முடியாது” என்று தைரியமாய்ச் சொன்னார்கள்; உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் எல்லாருக்கும் சிறந்த மாதிரியை வைத்தார்கள். இயேசுவின் பெயரை உபயோகித்து இனியும் போதகம் செய்யக்கூடாதென்று அவர்களுக்கு “கண்டிப்பாய்க் கட்டளையிட்”டிருந்த ஆலோசனை சங்கத்திற்கு மீண்டும் அழைத்து வரப்பட்டார்கள்; அப்போது, “மனிதரைப் பார்க்கிலும் அரசராகிய கடவுளுக்கே நாங்கள் கீழ்ப்படிய வேண்டும்” என்று திட்டவட்டமாய்க் கூறினார்கள். இப்படி தைரியமாய் சொன்னது, அந்த அதிகாரிகளுக்குச் சிறந்த சாட்சியாய் அமைந்தது. மேலும் பிரபல நியாயசாஸ்திரியாகிய கமாலியேல் வணக்க சுதந்திரம் சம்பந்தமாக பிரபல கூற்றை உரைப்பதற்கு வழிநடத்தியது. இது அப்போஸ்தலர்களின் விடுதலைக்கும் அடிகோலியது.—4:19, 20, தி.மொ.; 5:28, 29, NW, 34, 35, 38, 39.
40பைபிள் முழுவதிலும் பொன் இழைபோல் சிறப்பாய்த் தொடரும் யெகோவாவின் ராஜ்யத்தைப் பற்றிய அவருடைய மகிமையான நோக்கம், அப்போஸ்தலருடைய நடபடிகளின் புத்தகத்தில் அதிக முதன்மை பெற்று திகழ்கிறது. ஆரம்பத்திலேயே, இயேசு தாம் பரலோகத்துக்கு செல்வதற்கு முன் செலவழித்த 40 நாட்களின்போது ‘தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசுவதாக’ குறிப்பிடப்படுகிறது. ராஜ்யத்தைத் திரும்ப நிலைநாட்டுவது பற்றி சீஷர்கள் கேட்ட கேள்விக்கு இயேசு பதிலளித்தார்; அப்போது, முதலாவதாக, பூமியின் எல்லைகள் வரை தம் சாட்சிகளாக அவர்கள் இருக்க வேண்டுமென்று குறிப்பிட்டார். (1:3, 6, 8) எருசலேமில் தொடங்கி, தணியாத தைரியத்துடன் சீஷர்கள் ராஜ்யத்தை பிரசங்கித்தார்கள். துன்புறுத்துதல் அலை, ஸ்தேவான் கல்லெறிந்து கொல்லப்படுவதற்கும், சீஷர்கள் பலர் புதிய பிராந்தியங்களுக்குச் சிதறடிக்கப்படுவதற்கும் வழிநடத்தியது. (7:59, 60) பிலிப்பு, சமாரியாவில் வெற்றிகரமாய் ‘கடவுளின் ராஜ்யத்தை நற்செய்தியாக’ அறிவித்தாரென்றும், பவுலும் அவருடைய கூட்டாளிகளும் ஆசியா, கொரிந்து, எபேசு, ரோம் ஆகிய தேசங்களில் ‘ராஜ்யத்தை’ அறிவித்தார்கள் என்றும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் எல்லாரும் யெகோவாவின் மீதும் பலப்படுத்தும் அவருடைய ஆவியின் மீதும் எப்போதும் சார்ந்திருந்ததில் தலைசிறந்த முன்மாதிரி வைத்தார்கள். (8:5, 12, தி.மொ.; 14:5-7, 21, 22; 18:1, 4; 19:1, 8; 20:25; 28:30, 31) ஆரம்பகால கிறிஸ்தவர்களுடைய தளரா ஆர்வத்தாலும் தைரியத்தினாலும் யெகோவா அவர்களுடைய முயற்சிகளை வெகுவாய் ஆசீர்வதித்தார்; அதைக் காணும் நாமும், “கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றி முழுமையாய் சாட்சி பகருவ”தில் உண்மையுள்ளோராய் இருக்க அருமையான ஊக்குவிப்பைப் பெறுகிறோம்.—28:23, NW.
[அடிக்குறிப்புகள்]
a புனித பவுல் பயணி, (ஆங்கிலம்) 1895, பக்கம் 4.
b ஜூலை 22, 1947 ஆங்கில விழித்தெழு! பத்திரிகையில், பக்கங்கள் 22-3-ல் மேற்கோள் காட்டப்பட்டன; ஏப்ரல் 8, 1971 ஆங்கில விழித்தெழு!, பக்கங்கள் 27-8-ஐயும் பாருங்கள்.
c வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கங்கள் 153-4, 734-5; தொ. 2, பக்கம் 748.
d வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 2, பக்கம் 747.
e வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 2, பக்கம் 747.
f வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 2, பக்கம் 747.
g வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 2, பக்கம் 750.
[கேள்விகள்]
1, 2. (அ) அப்போஸ்தலருடைய நடபடிகளில் என்ன சரித்திரப்பூர்வ சம்பவங்களும் செயல்களும் விவரிக்கப்பட்டிருக்கின்றன? (ஆ) இந்தப் புத்தகத்திலுள்ள சம்பவங்களின் காலப்பகுதி எது?
3. அப்போஸ்தலருடைய நடபடிகளின் எழுத்தாளர் யார், அது எப்போது எழுதி முடிக்கப்பட்டது?
4. அப்போஸ்தலருடைய நடபடிகள் பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலின் பாகமாகவும் நம்பகமானதாகவும் இருக்கிறதென்று எது நிரூபிக்கிறது?
5. லூக்காவின் திருத்தமான அறிக்கைக்கு ஒரு உதாரணம் கொடுங்கள்.
6. தொல்பொருளாராய்ச்சி கண்டுபிடிப்புகள் அப்போஸ்தலருடைய நடபடிகளின் திருத்தமான தன்மையை உறுதிசெய்வதை என்ன உதாரணங்கள் காட்டுகின்றன?
7. பதிவுசெய்யப்பட்ட சொற்பொழிவுகள், அப்போஸ்தலரின் பதிவு உண்மை சம்பவங்கள் அடங்கியதென எவ்வாறு காட்டுகின்றன?
8. லூக்காவைக் குறித்தும் பவுலுடன் அவருடைய நட்புறவை குறித்தும் வேதவாக்கியங்கள் நமக்கு என்ன சொல்கின்றன?
9. இயேசு பரலோகத்துக்கு செல்லும்போது அவருடைய சீஷரிடம் என்ன சொல்லப்பட்டது?
10. (அ) பெந்தெகொஸ்தே நாளின் மறக்க முடியாத சம்பவங்கள் யாவை? (ஆ) பேதுரு என்ன விளக்கமளிக்கிறார், அதனால் விளைந்த பலன் என்ன?
11. பிரசங்க ஊழியத்தை யெகோவா எவ்வாறு ஆசீர்வதிக்கிறார்?
12. (அ) பிரசங்கிப்பதை நிறுத்தும்படி கட்டளை பிறந்தபோது சீஷர்கள் என்ன சொல்கின்றனர்? (ஆ) அனனியாவும் சப்பீராளும் எதற்காக தண்டிக்கப்படுகின்றனர்?
13. அப்போஸ்தலர்மீது என்ன குற்றம் சாட்டப்படுகிறது, அவர்கள் எவ்வாறு பதிலளிக்கின்றனர், அவர்கள் தொடர்ந்து என்ன செய்கின்றனர்?
14. ஸ்தேவான் எவ்வாறு இரத்த சாட்சியாக இறக்கிறார்?
15. துன்புறுத்துதலின் விளைவு என்ன, பிலிப்புக்குக் கிடைத்த பிரசங்க அனுபவம் என்ன?
16. சவுலின் மதமாற்றம் எவ்வாறு ஏற்படுகிறது?
17. விருத்தசேதனம் செய்யப்படாத புறஜாதியாருக்கு நற்செய்தி எவ்வாறு அறிவிக்கப்படுகிறது?
18. (அ) அந்தியோகியாவில் அடுத்து என்ன நடக்கிறது? (ஆ) என்ன துன்புறுத்துதல் தொடங்குகிறது, ஆனால் அதன் நோக்கம் நிறைவேறுகிறதா?
19. பவுலின் முதல் மிஷனரி பயணம் எந்தளவு விரிவானது, என்ன நிறைவேற்றப்படுகிறது?
20. விருத்தசேதனத்தைப் பற்றிய விவாதம் எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது?
21. (அ) பவுலின் இரண்டாவது மிஷனரி பயணத்தில் அவருடன் சென்றவர்கள் யார்? (ஆ) மக்கெதோனியாவுக்கு செல்ல எந்தச் சம்பவங்கள் வழிநடத்துகின்றன?
22. அரியோப்பாகஸில் பவுலுடைய திறம்பட்ட சொற்பொழிவின் விளைவு என்ன?
23. கொரிந்துவில் செய்யப்பட்ட ஊழியத்தின் பலன் என்ன?
24, 25. (அ) பவுல் தன் மூன்றாவது பயணத்தைத் தொடங்கும் சமயத்தில், எபேசுவில் என்ன நடக்கிறது? (ஆ) பவுல் தங்கியிருந்த மூன்று ஆண்டுகளின் முடிவில் என்ன கலகம் ஏற்படுகிறது?
26. (அ) துரோவாவில் என்ன அற்புதத்தைப் பவுல் நடப்பிக்கிறார்? (ஆ) எபேசுவிலிருந்து வந்த கண்காணிகளுக்கு என்ன அறிவுரை கொடுக்கிறார்?
27. ஆலயத்தில் பவுல் என்ன விதமான வரவேற்பைப் பெறுகிறார்?
28. (அ) ஆலோசனை சங்கத்துக்கு முன்பாக என்ன கேள்வியைப் பவுல் கேட்கிறார், அதன் விளைவென்ன? (ஆ) பின்பு அவர் எங்கே அனுப்பப்படுகிறார்?
29. ராஜ துரோகக் குற்றம் சாட்டப்பட்ட பவுல் தொடர்ந்து என்ன விசாரணைகளுக்கு ஆளாகிறார், என்ன மேல் முறையீடு செய்கிறார்?
30. மெலித்தா வரையாக பவுலின் கடற்பயணத்தில் என்ன அனுபவங்கள் கிடைக்கின்றன?
31. ரோமில் பவுலுக்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கிறது, அங்கே எதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிறார்?
32. பெந்தெகொஸ்தேக்கு முன்பும் பெந்தெகொஸ்தே அன்றும் பேதுரு, எபிரெய வேதாகமத்தின் நம்பகத் தன்மைக்கு எவ்வாறு சாட்சிபகர்ந்தார்?
33. எபிரெய வேதாகமம் ஏவப்பட்டு எழுதப்பட்டது என்பதை பேதுரு, பிலிப்பு, யாக்கோபு, பவுல் ஆகியோர் எவ்வாறு காட்டினார்கள்?
34. கிறிஸ்தவ சபையைக் குறித்து அப்போஸ்தலருடைய நடபடிகள் வெளிப்படுத்துவதென்ன, இன்று இது எவ்விதத்திலாவது வேறுபடுகிறதா?
35. சாட்சி கொடுக்கப்பட வேண்டிய விதத்தை அப்போஸ்தலருடைய நடபடிகள் எவ்வாறு காட்டுகின்றன, ஊழியத்தில் காட்ட வேண்டிய என்ன பண்பு அறிவுறுத்தப்படுகிறது?
36. பவுலின் நடைமுறை பயன்மிக்க என்ன அறிவுரை இன்று கண்காணிகளுக்கு சிறந்த விதத்தில் பொருந்துகிறது?
37. அரியோப்பாகஸில் பவுல், சாதுரியமான என்ன விவாதத்தால் தன் குறிப்பை உணர்த்தினார்?
38. அப்போஸ்தலருடைய நடபடிகள் ஊக்குவிக்கிறபடி பைபிளைப் படிக்கையில் என்ன ஆசீர்வாதங்கள் உண்டாகும்?
39. (அ) துன்புறுத்துதல்களை எதிர்ப்படுவதற்கு சீஷர்கள் எவ்வாறு பலப்படுத்தப்பட்டனர்? (ஆ) அவர்கள் தைரியமாய் என்ன சாட்சி கொடுத்தார்கள்? அது பயனளித்ததா?
40. ராஜ்யத்தைப் பற்றி முழுமையாய் சாட்சிபகர அப்போஸ்தலருடைய நடபடிகள் என்ன ஊக்குவிப்பை நமக்கு அளிக்கிறது?