Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் புத்தக எண் 45—ரோமர்

பைபிள் புத்தக எண் 45—ரோமர்

பைபிள் புத்தக எண் 45—ரோமர்

எழுத்தாளர்: பவுல்

எழுதப்பட்ட இடம்: கொரிந்து

எழுதி முடிக்கப்பட்டது: ஏ. பொ.ச. 56

ஒரு காலத்தில் யூதக் கிறிஸ்தவர்களைக் கடுமையாய் துன்புறுத்திய பவுல், கிறிஸ்துவின் வைராக்கியமான அப்போஸ்தலராக மாறி, யூதரல்லாதவர்களுக்குப் பிரசங்கித்தார். இதைத்தான் அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகத்தில் பார்த்தோம். பரிசேயனாய் இருந்து இப்போது கடவுளுடைய உண்மையுள்ள ஊழியராய் மாறின இவரை பைபிளின் 14 புத்தகங்களை எழுதும்படி பரிசுத்த ஆவி ஏவினது; அவற்றில் முதலாவதே ரோமர் புத்தகம். ரோமர் புத்தகத்தை பவுல் எழுதி முடிப்பதற்குள், ஏற்கெனவே இரண்டு நெடுந்தூர பிரசங்க பயணங்களை வெற்றிகரமாய் முடித்துவிட்டார், மூன்றாவது பயணமும் முடியும் தறுவாயில் இருந்தது. இதற்குள்ளாக, ஏவப்பட்ட வேறு ஐந்து கடிதங்களையும் எழுதியிருந்தார்: தெசலோனிக்கேயருக்கு எழுதிய முதலாம் இரண்டாம் நிருபங்கள், கலாத்தியர், கொரிந்தியருக்கு எழுதின முதலாம் இரண்டாம் நிருபங்கள். எனினும், தற்போது நம் கைகளிலுள்ள பைபிள்களில் ரோமர் மற்ற எல்லா கடிதங்களுக்கும் முன்பு வருவது பொருத்தமாய் உள்ளது. ஏனெனில் பவுல் பிரசங்கித்த யூதர், யூதரல்லாதவர்கள் ஆகிய இரு சாராருக்குமான புதிய சமத்துவத்தை இது விரிவாய் விவாதிக்கிறது. தம்முடைய ஜனத்துடன் கடவுள் செயல்பட்டுவந்த விதத்தில் ஏற்பட்ட திருப்புகட்டத்தை விளக்குகிறது. அதோடு, இந்த நற்செய்தி யூதரல்லாதவர்களுக்கும் அறிவிக்கப்படுமென்று ஏவப்பட்ட எபிரெய வேதாகமம் வெகு காலத்துக்கு முன்பே அறிவித்ததையும் சுட்டிக் காட்டுகிறது.

2தெர்தியுவை காரியதரிசியாக உபயோகித்து, பவுல் விறுவிறுப்பான விவாதத்தையும் வியக்க வைக்கும் எண்ணிக்கையில் எபிரெய வேதாகம மேற்கோள்களையும் சேர்த்து, கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் முக்கிய புத்தகங்களில் ஒன்றை படைக்கிறார். முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபைகளில் யூதருக்கும் கிரேக்கருக்கும் இடையே எழும்பிய பிரச்சினைகளைப் பிரத்தியேகமான விதத்தில், அழகிய மொழிநடையில் விவாதிக்கிறார். யூதர் ஆபிரகாமின் சந்ததியார் என்பதால் அவர்களுக்கு முன்னுரிமை இருந்ததா? பூர்வ பழக்கவழக்கங்களை விடாது கடைப்பிடித்து வந்த பலவீனமான யூத சகோதரர்கள் இருந்தனர்; அப்படிப்பட்டவர்களை மோசேயின் நியாயப்பிரமாணத்தின் கட்டுகளிலிருந்து விடுபட்ட அனுபவம் வாய்ந்த கிறிஸ்தவர்கள் தங்கள் சுதந்திரத்தைப் பயன்படுத்தி இடறலடையச் செய்ய உரிமை இருந்ததா? யூதரும் யூதரல்லாதவர்களும் கடவுளுக்கு முன்பாக சமமானவர்கள் என்றும், ஒருவர் மோசேயின் நியாயப்பிரமாணத்தினால் அல்ல, இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதினாலும் கடவுளுடைய தகுதியற்ற தயவினாலுமே நீதியுள்ளவராய் ஆகிறார் என்றும் இந்த நிருபத்தில் பவுல் உறுதிப்படுத்தினார். அதேசமயத்தில், கிறிஸ்தவர்கள் பல்வேறு அதிகாரங்களுக்குத் தகுந்த கீழ்ப்படிதலைக் காட்ட வேண்டுமென்று கடவுள் கட்டளையிடுகிறார்.

3ரோம சபை பிறந்தது எவ்வாறு? ரோமில் கணிசமான எண்ணிக்கையில் யூத சமுதாயத்தினர் இருந்தனர். பொ.ச.மு. 63-ல் பாம்ப்பே எருசலேமைக் கைப்பற்றின காலத்திலிருந்தே அவ்வாறு இருந்தது. அந்த யூதர்களில் சிலர் பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தேயின்போது எருசலேமில் இருந்தனர் என்றும், அங்கே நற்செய்தி பிரசங்கிக்கப்படுவதைக் கேட்டனர் என்றும் அப்போஸ்தலர் 2:​10-ல் திட்டமாய் கூறப்பட்டுள்ளது. மதம் மாறியவர்கள், அப்போஸ்தலர்களிடமிருந்து கற்றுக்கொள்வதற்காக எருசலேமில் தற்காலிகமாக தங்கினர்; பின்னர் ரோமைச் சேர்ந்தவர்கள் மீண்டும் ரோமிற்கே திரும்பினர் என்பதில் சந்தேகமில்லை. எருசலேமில் துன்புறுத்துதல் தொடங்கிய சமயத்தில் ஒருவேளை சிலர் அவ்வாறு திரும்பியிருக்கலாம். (அப். 2:​41-47; 8:​1, 4) மேலும், அந்நாளின் மக்கள் பயணப் பிரியராய் இருந்தனர். ரோம சபையின் அங்கத்தினர்கள் பலரை பவுல் நன்கு அறிந்திருந்ததற்கு இதுவும் காரணமாய் இருந்திருக்கலாம். இவர்களில் சிலர், பவுலுடைய பிரசங்கிப்பின் பலனாக கிரீஸிலோ ஆசியாவிலோ நற்செய்தியைக் கேட்டிருக்கலாம்.

4இந்தச் சபையைப் பற்றிய நம்பகமான முதல் தகவல் பவுலின் கடிதத்திலேயே காணப்படுகிறது. யூதரிலிருந்தும் யூதரல்லாதவர்களிலிருந்தும் கிறிஸ்தவர்களானவர்கள் அந்தச் சபையில் இருந்தனர். அதுமட்டுமல்ல, அவர்கள் காட்டிய ஆர்வம் பாராட்டுக்குரியதாய் இருந்தது என்பதும் இதிலிருந்து தெள்ளத் தெளிவாகிறது. “உங்கள் விசுவாசம் உலகமெங்கும் பிரசித்தமாகிற[து],” “உங்கள் கீழ்ப்படிதல் யாவருக்கும் தெரியவந்திருக்கிறது” என்று அவர்களுக்குச் சொல்கிறார். (ரோ. 1:8; 16:19) கிலவுதியுராயனின் ஆட்சி காலத்தில் (பொ.ச. 41-54), யூதர்கள் ரோமிலிருந்து துரத்தப்பட்டனர் என்று இரண்டாம் நூற்றாண்டின் எழுத்தாளர் சூட்டோனியஸ் அறிவிக்கிறார். எனினும், ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் ரோமில் இருந்ததாய் சொல்லப்படுவதால், அவர்கள் பின்னர் அங்கு திரும்பி வந்தது தெரிகிறது. யூதர்களான அவர்களை கொரிந்துவில் பவுல் சந்தித்திருந்தார். கிலவுதியுராயன் கட்டளை பிறப்பித்ததைத் தொடர்ந்து அவர்கள் ரோமிலிருந்து வெளியேறியிருந்தனர், ஆனால் பவுல் அங்கிருந்த சபைக்கு கடிதம் எழுதின சமயத்தில் அவர்கள் ரோமுக்குத் திரும்பியிருந்தனர்.​—அப். 18:2; ரோ. 16:3.

5இந்த நிருபத்தின் நம்பகத்தன்மை பலமாய் உறுதிப்படுத்தப்படுகிறது. அதன் ஆரம்ப வார்த்தைகளின்படி அது, “இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரனும், அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனு[மாகிய] . . . பவுல், ரோமாபுரியிலுள்ள தேவப்பிரியரும் பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களுமாகிய அனைவருக்கும்” எழுதியது. (ரோ. 1:​1, 7) அதற்குரிய பைபிள் சாராத சான்றாதாரம், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தை ஆதரிப்பவற்றிலேயே மிகப் பழமையான ஒன்று. இது எழுதப்பட்டு பெரும்பாலும் ஆறு முதல் எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர், இதிலுள்ளவற்றைப் போன்ற அநேக சொற்றொடர்களை பேதுரு தான் எழுதிய முதல் நிருபத்தில் பயன்படுத்துகிறார்; ஆகவே அவர் ரோமர் புத்தகத்தின் பிரதி ஒன்றை ஏற்கெனவே கண்டிருக்க வேண்டுமென்பது பைபிள் கல்விமான்கள் பலரது எண்ணம். பவுலின் படைப்புகளில் ஒன்றே ரோமர் புத்தகம் என தெள்ளத் தெளிவாய் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது; அதோடு ரோமின் கிளெமென்ட், சிமிர்னாவின் பாலிக்கார்ப், அந்தியோகியாவின் இக்னேஷியஸ் ஆகியோரும் அதை ஆதரித்தனர். இவர்களெல்லாரும் பொ.ச. முதல் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவர்கள்.

6ரோமருக்கு எழுதிய இந்தப் புத்தகமும் பவுலின் வேறு எட்டு நிருபங்களும் செஸ்டர் பியட்டி பப்பைரஸ் எண் 2 (P46) எனப்படும் கையெழுத்துப்பிரதிகளின் தொகுப்பில் காணப்படுகின்றன. இந்தப் பூர்வ கையெழுத்துப்பிரதி தொகுப்பைக் குறித்து, சர் ஃபிரெட்ரிக் கெனியன் இவ்வாறு எழுதினார்: “பவுலுடைய நிருபங்கள் அடங்கிய ஏறக்குறைய முழுமையான கையெழுத்துப்பிரதி ஒன்று நம் கைவசம் உள்ளது; இது, பெரும்பாலும் மூன்றாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எழுதப்பட்டதாக கருதப்படுகிறது. a செஸ்டர் பியட்டி கிரேக்க பைபிளின் பப்பைரஸ் கையெழுத்துப் பிரதிகள், வெகு பிரபலமான சினியாட்டிக் கையெழுத்துப் பிரதியையும் வாடிகன் கையெழுத்துப் பிரதி எண் 1209-ஐயும் பார்க்கிலும் பழமையானவை; இவை இரண்டும் பொ.ச. நான்காம் நூற்றாண்டுக்குரியவை. இவற்றிலும் ரோமருக்கு எழுதின புத்தகம் உள்ளது.

7எப்போது, எங்கே ரோமர் எழுதப்பட்டது? இந்த நிருபம் கிரீஸில் பெரும்பாலும் கொரிந்துவிலிருந்து எழுதப்பட்டதென்பதில் பைபிள் உரையாசிரியர்களுக்கு இடையே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. பவுல் தன் மூன்றாவது மிஷனரி பயணம் முடியும் தறுவாயில் சில மாதங்களை அங்கே கழித்தபோது எழுதியிருக்கலாம். பைபிள் சார்ந்த அத்தாட்சி கொரிந்துவை ஆதரிக்கிறது. அந்தச் சபையின் ஓர் அங்கத்தினராயிருந்த காயுவின் வீட்டிலிருந்து பவுல் இந்த நிருபத்தை எழுதினார். மேலும், அருகிலிருந்த கொரிந்துவின் துறைமுகப்பட்டணமாகிய கெங்கிரேயாவிலுள்ள சபையைச் சேர்ந்த பெபேயாளை சிபாரிசு செய்கிறார். பெபேயாளே இந்த நிருபத்தை ரோமுக்குக் கொண்டு சென்றதாய் தோன்றுகிறது. (ரோ. 16:​1, 23; 1 கொ. 1:15) ரோமர் 15:23-ல் (NW) “இந்த வட்டாரங்களில் நான் பிரசங்கிக்காத இடமே இனி இல்லை” என்று பவுல் எழுதினார். பிறகு, தன் மிஷனரி ஊழியத்தை மேற்கே, ஸ்பானியாவின் பக்கம் விரிவாக்க எண்ணமிருப்பதை அதற்கடுத்த வசனத்தில் தெரிவிக்கிறார். பொ.ச. 56-ன் தொடக்கத்தில், அதாவது தன் மூன்றாவது பயணம் முடிவடையும் தறுவாயில் இருந்ததால்தான், அவரால் இவ்வாறு எழுத முடிந்தது.

ரோமரின் பொருளடக்கம்

8யூதர்களிடமாகவும் யூதரல்லாதவர்களிடமாகவும் கடவுளின் பாரபட்சமற்ற நிலை (1:​1–2:29). தேவாவியின் உதவியால் பவுல் ரோமருக்கு என்ன சொல்கிறார்? தன் ஆரம்ப வார்த்தைகளில் அவர், ‘விசுவாசத்தின் மூலமான கீழ்ப்படிதலை’ யூதரல்லாதவருக்குப் போதிக்க கிறிஸ்துவால் தெரிந்துகொள்ளப்பட்ட அப்போஸ்தலன் என தன்னை அடையாளம் காட்டுகிறார். ரோமிலுள்ள பரிசுத்தவான்களைக் காணவும் அவர்களோடு ‘உற்சாகத்தை பரிமாறிக்கொண்டு’ மகிழ்வதற்குமான தன் விருப்பத்தை அவர் வெளிப்படுத்துகிறார். மேலும், “விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு . . . தேவபெலனாயிருக்கிற” நற்செய்தியை அவர்களுக்குள் அறிவிப்பதற்குமான தன் மிகுந்த ஆவலையும் வெளிப்படுத்துகிறார். பூர்வத்தில் எழுதப்பட்டிருந்தபடியே, நீதிமான் “விசுவாசத்தினாலே” பிழைப்பான். (1:​5, 12, NW, 16, 17) யூதரும் கிரேக்கருமான இரு சாராருமே கடவுளுடைய கோபத்திற்கு ஆளாகியிருப்பதைக் காட்டுகிறார். மனிதன் தேவபக்தியற்றிருப்பது மன்னிக்கப்பட முடியாதது, ஏனெனில் கடவுளின் ‘காணப்படாத பண்புகள் உலகத்தின் படைப்பு முதற்கொண்டு தெளிவாகக் காணப்படுகின்றன.’ (1:​20, NW) ஆனால், தேசத்தார் அறிவீனமாய் சிருஷ்டிகளை தெய்வங்களாக்கி பூஜிக்கின்றனர். எனினும், யூதர்கள் பிறதேசத்தாரை மோசமாய் நியாயந்தீர்க்கக் கூடாது, ஏனெனில் அவர்களும் பாவிகளே. இரு சாராரும் தங்களுடைய செயல்களுக்கேற்ப நியாயம் தீர்க்கப்படுவர், மாம்சப்பிரகாரமான விருத்தசேதனத்தால் அல்ல. ஏனெனில் கடவுள் பட்சபாதமுள்ளவர் அல்ல. “உள்ளத்திலே யூதனானவனே யூதன்; . . . இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்.”​—2:29.

9விசுவாசத்தினால் எல்லாரும் நீதிமான்களாக தீர்க்கப்படுகிறார்கள் (3:​1–4:25). “இப்படியானால், யூதனுடைய மேன்மை என்ன?” அது குறிப்பிடத்தக்கது, ஏனெனில் யூதரிடமே கடவுளுடைய பரிசுத்த வாக்கியங்கள் ஒப்படைக்கப்பட்டன. எனினும், “யூதர் கிரேக்கர் யாவரும் பாவத்திற்குட்பட்டவர்க[ள்],” கடவுளுடைய பார்வையில் ஒருவரும் “நீதிமான்” அல்ல. இந்தக் குறிப்பை நிரூபிப்பதற்கு எபிரெய வேதாகமத்திலிருந்து ஏழு மேற்கோள்கள் காட்டப்படுகின்றன. (ரோ. 3:​1, 9-18; சங். 14:​1-3; 5:9; 140:3; 10:7; நீதி. 1:16; ஏசா. 59:​7, 8; சங். 36:1) நியாயப்பிரமாணம் மனிதனின் பாவத்தன்மையை படம்பிடித்துக் காட்டுகிறது; ஆகவே “மாம்சமான எவனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே . . . நீதிமானாகத் தீர்க்கப்படுவதில்லை.” எனினும், கடவுளின் தகுதியற்ற தயவாலும் மீட்பின் கிரயமளிக்கும் விடுதலையாலும் மட்டுமே யூதரும் கிரேக்கருமான இரு தரப்பினரும் ‘நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமான்களாகத் தீர்க்கப்படுகிறார்கள்.’ (ரோ. 3:​20, 28, தி.மொ.) இந்த விவாதத்தை ஆதரிக்க ஆபிரகாமின் முன்மாதிரியை குறிப்பிட்டு பவுல் பேசுகிறார். ஆபிரகாம் செயல்களாலோ விருத்தசேதனத்தினாலோ அல்ல, நமக்கு முன்மாதிரியாய் திகழும் அவருடைய விசுவாசத்தினாலேயே நீதிமானாக எண்ணப்பட்டார். இவ்வாறு ஆபிரகாம் யூதருக்கு மட்டுமல்ல, “விசுவாசிக்கிற யாவருக்கும்” தகப்பனானார்.​—4:11.

10இனிமேலும் பாவத்திற்கல்ல, கிறிஸ்துவின் மூலம் நீதிக்கே அடிமைகள் (5:​1–6:23). ஒரே மனிதனாகிய ஆதாமினால், பாவம் உலகத்துக்குள் பிரவேசித்தது, பாவம் மரணத்திற்கு வழிநடத்தியது, “எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால் மரணம் எல்லாருக்கும் பரவினது.” (5:​12, தி.மொ.) ஆதாமிலிருந்து மோசே வரை மரணம் அரசனாக ஆளுகை செய்தது. மோசேயின் மூலம் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டபோது, பாவம் பெருகினது, மரணமும் தன் ஆளுகையைத் தொடர்ந்தது. ஆனால் இப்போது, கடவுளின் தகுதியற்ற தயவு வெகு அதிகமாய்ப் பெருகுகிறது; மேலும் கிறிஸ்துவின் கீழ்ப்படிதலினால் பலர் நித்திய ஜீவனுக்கென்று நீதிமான்களாக தீர்க்கப்படுகின்றனர். எனினும், பாவங்களைச் செய்வதற்கு இது யாருக்கும் அனுமதி கொடுப்பதில்லை. கிறிஸ்துவுக்குள் முழுக்காட்டப்பட்டவர்கள் பாவத்துக்கு மரித்தவர்களாக வேண்டும். அவர்களுடைய பழைய ஆள்தன்மை கழுமரத்தில் அறையப்படுகிறது, அவர்கள் கடவுளுக்கென்று பிழைத்திருக்கிறார்கள். அவர்களை ஆளுகை செய்ய பாவத்திற்கு இனிமேலும் அதிகாரமில்லை. அவர்கள் பரிசுத்தத்தின் அடிப்படையில் நீதிக்கு அடிமைகளாகிறார்கள். “பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.”​—6:23.

11கிறிஸ்துவுக்கு இசைவாய் நியாயப்பிரமாணத்துக்கு மரித்து, ஆவியால் பிழைத்திருத்தல் (7:​1–8:39). யூத கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் பலியால் நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களாக்கப்பட்டதையும் கிறிஸ்துவினுடையவர்களாய் கடவுளுக்குக் கனிகொடுக்க விடுதலை பெற்றிருந்ததையும் பவுல் சுட்டிக்காட்டுகிறார். இதற்கு மனைவியைப் பற்றிய உதாரணத்தைப் பயன்படுத்துகிறார். அவள் தன் கணவன் உயிரோடிருக்குமளவும் அவனுக்குக் கட்டுப்பட்டிருக்கிறாள், ஆனால் அவன் மரிக்கையில், மற்றொருவனை மணம் செய்வதற்கு விடுதலையாகிறாள். அந்தப் பரிசுத்த நியாயப்பிரமாணம் பாவத்தை மிகவும் தெளிவாய் காட்டிற்று, பாவம் மரணத்திற்கு வழிநடத்தியது. பாவம், நம் உடலில் குடியிருந்து, நம் நல்நோக்கங்களுக்கு எதிராய் போர் செய்கிறது. “நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்.” இவ்வாறு “நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது” என சொல்கிறார் பவுல்.​—7:​19, 20.

12இந்தப் பரிதாபமான நிலையிலிருந்து எது மனிதனை காப்பாற்ற முடியும்? கிறிஸ்துவுக்குரியவர்களைக் கடவுள் தம் ஆவியால் உயிர்ப்பிக்க முடியும்! அவர்கள் குமாரராய் புத்திரசுவிகாரம் செய்யப்பட்டிருக்கின்றனர், நீதிமான்களென தீர்க்கப்பட்டிருக்கின்றனர், கடவுளின் சுதந்தரவாளிகளாகவும் கிறிஸ்துவோடு உடன் சுதந்தரவாளிகளாகவும் மகிமையான நிலையைப் பெற்றிருக்கின்றனர். பவுல் அவர்களுக்கு சொல்வதாவது: “தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்?” ஒருவனுமில்லை! வெற்றிக் களிப்புடன் இவ்வாறு கூறுகிறார்: “நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.”​—8:​31, 36, 37-39.

13விசுவாசத்தினாலும் கடவுளுடைய இரக்கத்தினாலும் “இஸ்ரவேலர்” இரட்சிக்கப்படுகின்றனர் (9:​1–10:21). பவுல் தன் உடன் தோழரான இஸ்ரவேலருக்காக ‘பெருந்துக்கத்தை’ வெளிக்காட்டுகிறார்; ஆனால் மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலர் அனைவரும் உண்மையில் “இஸ்ரவேலர்” அல்லரென்று உணர்ந்துகொள்கிறார். ஏனெனில் கடவுள் தாம் விரும்புகிற எவரையும் குமாரராகத் தெரிவுசெய்யும் அதிகாரம் பெற்றிருக்கிறார். கடவுள் பார்வோனைக் கையாண்ட முறையாலும் குயவனைப் பற்றிய உவமையாலும் விளக்கப்படுகிறபடி, அது “விரும்புகிறவனாலுமல்ல ஓடுகிறவனாலுமல்ல இரங்குகிற கடவுளாலேயாகும்.” (9:​1, 6, 16, தி.மொ.) வெகு காலத்திற்கு முன்பு ஓசியா முன்னறிவித்தபடி, “அவர் யூதரிலிருந்து மாத்திரமல்ல, புறஜாதிகளிலுமிருந்து” குமாரரை அழைக்கிறார். (ஓசி. 2:23) இஸ்ரவேலர், “விசுவாசத்தினால் அல்ல, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினால்” கடவுளுடைய தயவைப் பெற நாடியதாலும், “இடறுதற்கான கற்பாறை”யாகிய கிறிஸ்துவின்மீது தடுமாறினதாலும் தகுதியிழந்து போயினர். (ரோ. 9:​24, 32, 33, தி.மொ.) அவர்களுக்குக் ‘கடவுள்பேரில் வைராக்கியம்’ இருந்தது, ஆனால் அது ‘திருத்தமான அறிவின்படியானதல்ல.’ நீதியை விசுவாசிப்போருக்கு கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாக இருக்கிறார். மேலும் இரட்சிப்பு பெறுவதற்கு, “இயேசுவே கர்த்தர்” என்று யாவரறிய அறிவித்து, ‘கடவுள் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார்’ என்று விசுவாசிக்க வேண்டும். (10:​2, 9, NW) இரட்சிப்படையும்படி சகல தேசத்தாரும் கேட்கவும், விசுவாசிக்கவும், யெகோவாவின் பெயரில் கூப்பிடவும் வேண்டி பிரசங்கிப்போர் அனுப்பப்படுகின்றனர்.

14ஒலிவ மரத்தைப் பற்றிய உவமை (11:​1-36). தகுதியற்ற தயவின் காரணமாக, மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலரில் சொற்ப எண்ணிக்கையானோர் தெரிந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்; ஆனால் பெரும்பான்மையர் இடறிவிழுந்தது, “புறஜாதியாரின் இரட்சிப்புக்காயிற்று.” (11:​11, தி.மொ.) பவுல், இங்கு ஒலிவ மரத்தின் உவமையைப் பயன்படுத்தினார்; அதில், மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலர் விசுவாசத்தில் குறைவுபட்டதால் அவர்களுடைய இடத்தில் யூதரல்லாதவர்கள் எவ்வாறு ஒட்ட வைக்கப்பட்டனரென்று விளக்குகிறார். இருப்பினும், இஸ்ரவேல் நீக்கப்பட்டதைக் குறித்து யூதரல்லாதவர்கள் சந்தோஷப்படக் கூடாது; ஏனெனில் உண்மையற்றுப்போன சொந்த கிளைகளையே கடவுள் விட்டு வைக்கவில்லை என்றால், புறஜாதியாருக்குள் இருந்து எடுத்து ஒட்ட வைக்கப்பட்ட காட்டொலிவக் கிளைகளை தப்பவிடமாட்டாரே.

15மனம் மாறுதல்; மேலான அதிகாரங்கள் (12:​1–13:14). உங்கள் சரீரங்களை ஜீவபலியாக கடவுளுக்குச் சமர்ப்பிக்கும்படி பவுல் அறிவுரை கூறுகிறார். இனிமேலும் ‘இந்தக் காரிய ஒழுங்குமுறையின் பாணியை பின்தொடர்ந்து போகாமல்,’ ‘உங்கள் மனதை மாற்றுவதனால் மறுரூபமாகுங்கள்.’ அகந்தையை விட்டொழியுங்கள். மனித சரீரத்தைப் போலவே, கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில், பல வேலைகளை செய்யும் உறுப்புகள் இருந்தாலும் அவை ஒற்றுமையாய் செயல்படுகின்றன. ஒருவருக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள். பழிவாங்குதலை யெகோவாவிடம் விட்டுவிடுங்கள். “தீமையை நன்மையினாலே” வெல்லுங்கள்.​—12:​2, NW, 21.

16மேலான அதிகாரங்களுக்கு கீழ்ப்படிந்திருங்கள்; அது கடவுளின் ஏற்பாடு. ஓயாமல் நன்மைசெய்யுங்கள், ஒருவருக்கொருவர் அன்பில் மாத்திரமே கடன்படுங்கள். வேறு எதிலும் எவருக்கும் கடன்படாதிருங்கள். இரட்சிப்பு சமீபித்திருக்கிறது, ஆகையால் ‘அந்தகாரத்தின் கிரியைகளைத் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளுங்கள்.’ (13:12) மாம்ச இச்சைகளின்படி நடவாமல், நல்நடத்தை உள்ளவர்களாயிருங்கள்.

17நியாயந்தீர்க்காமல் எல்லாரையும் பாரபட்சமின்றி ஏற்றுக்கொள்ளுங்கள் (14:​1–15:33). பலவீனமான விசுவாசத்தின் காரணமாக சில உணவு பதார்த்தங்களைத் தவிர்ப்போரை அல்லது பண்டிகை நாட்களை அனுசரிப்போரைப் பொறுத்துக் கொள்ளுங்கள். உங்கள் சகோதரனுக்கு நீங்கள் அல்ல நீதிபதி; புசிப்பதாலும் குடிப்பதாலும் நீங்கள் அவனை இடறலடையச் செய்யாதீர்கள், ஏனெனில் கடவுளே எல்லாரையும் நியாயந்தீர்க்கும் ‘நீதிபதி.’ சமாதானத்தை நாடுங்கள், உற்சாகமூட்டும் செயல்களையே செய்யுங்கள், மற்றவர்களின் பலவீனங்களைப் பொறுத்துக்கொள்ளுங்கள்.

18“முன் எழுதப்பட்டவைகளெல்லாம் நமக்குப் போதனையாகவே எழுதப்பட்டன” என்று அப்போஸ்தலன் எழுதுகிறார். மேலும், கடவுளுடைய வாக்குறுதிகள் யூதரல்லாதவர்களிடமும் நிறைவேறும் என்று தேவாவியால் ஏவப்பட்ட தீர்க்கதரிசிகள் வெகு காலத்திற்கு முன்பே முன்னறிவித்ததற்குக் கடைசி ஆதாரமாக, இன்னும் நான்கு எபிரெய வேதவசனங்களை மேற்கோள் காட்டுகிறார். (ரோ. 15:​4, தி.மொ., 9-12; சங். 18:49; உபா. 32:43; சங். 117:1; ஏசா. 11:​1, 10) “ஆதலால், தேவனுக்கு மகிமையுண்டாக, கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல, நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று பவுல் அறிவுரை கூறுகிறார். (ரோ. 15:7) ‘கடவுளுடைய நற்செய்தியின் பரிசுத்த ஊழியத்தில் ஈடுபட்டு,’ யூதரல்லாதவருக்கு ஊழியக்காரனாய் தன்னை விளங்கச் செய்த கடவுளின் தகுதியற்ற தயவுக்காக பவுல் நன்றியை வெளிப்படுத்துகிறார். அவர் “மற்றொருவன் அஸ்திபாரத்தின்மேல் கட்டாமல்,” புதிய பிராந்தியங்களில் காலடி பதிக்கவே எப்போதும் விரும்புகிறார். இதோடு அவர் ஊழியம் முடிந்துவிடுகிறதில்லை, ஏனெனில், எருசலேமுக்கு நன்கொடைகளைக் கொண்டுசென்ற பின்பு, தொலைதூர ஸ்பானியாவுக்குச் செல்லும் இன்னுமொரு நீண்ட பிரசங்க பயணத்துக்குத் திட்டமிடுகிறார். மேலும், செல்லும் வழியில், ரோமிலிருக்கும் தன் ஆவிக்குரிய சகோதரருக்கு “கிறிஸ்துவின் சம்பூரண ஆசீர்வாதத்”தைக் கொண்டு செல்லவும் திட்டமிடுகிறார்.​—15:​16, NW, 20, 29, தி.மொ.

19முடிவான வாழ்த்துக்கள் (16:​1-27). பெயர் குறிப்பிட்டு ரோம சபையிலிருந்த 26 அங்கத்தினர்களுக்கும் மற்றவர்களுக்கும் பவுல் தன் வாழ்த்துக்களை தெரிவிக்கிறார். பிரிவினை உண்டாக்குவோரைத் தவிர்க்கவும், “நன்மைக்கு ஞானிகளும் தீமைக்குப் பேதைகளுமாயிருக்கவேண்டுமென்று[ம்]” அறிவுரை கூறுகிறார். எல்லாமே “இயேசு கிறிஸ்துவின் மூலமாய் என்றென்றைக்கும்” கடவுளின் மகிமைக்குத்தான். “ஆமென்.”​—16:​19, 27.

ஏன் பயனுள்ளது

20“காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமையும் தெய்வத்துவமும் படைக்கப்பட்டவைகளின் மூலமாய் உலக சிருஷ்டிப்பு முதற்கொண்டு கவனிக்கிறவர்களுக்குத் தெளிவாய்க் காணப்படும்” என்று குறிப்பிடுவதன் மூலம் கடவுளில் நம்பிக்கை வைப்பதற்கு நியாயமான ஆதாரத்தை ரோமர் புத்தகம் அளிக்கிறது. ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, தொடர்ந்து அவருடைய நீதியை வலியுறுத்தி, அவருடைய மிகுந்த இரக்கத்தையும் தகுதியற்ற தயவையும் தெரியப்படுத்துகிறது. சொந்த கிளைகள் வெட்டப்படுகையில் காட்டொலிவக் கிளைகள் ஒட்ட வைக்கப்படுகிற ஒலிவ மரத்தின் உவமையால் வெகு அழகாக இது நம் கவனத்துக்குக் கொண்டு வரப்படுகிறது. கடவுளின் கண்டிப்பையும் இரக்கத்தையும் குறித்து சிந்தனையில் மூழ்கிய பவுல் வியந்து கூறுகிறதாவது: “ஆ! கடவுளின் ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவு பெரிது! அவர் நியாயத்தீர்ப்புகள் புத்திக்கெட்டாதவைகள், அவர் வழிகள் ஆராய்ச்சிக்கெட்டாதவைகள்.”​—1:20; 11:​33; தி.மொ.

21இவ்விதமாக, கடவுளுடைய பரிசுத்த இரகசியத்தின் கூடுதல் விவரங்களை ரோமர் புத்தகம் அளிக்கிறது. கிறிஸ்தவ சபையில், யூதனுக்கும் புறஜாதியானுக்கும் இடையே இனியும் வேறுபாடு இல்லை, எல்லாரும் இயேசு கிறிஸ்துவின் மூலம் யெகோவாவின் தகுதியற்ற தயவில் பயனடையலாம். “கடவுளிடத்தில் பட்சபாதமில்லை.” “உள்ளந்தரங்கத்தில் யூதனானவனே யூதன்; எழுத்தின்படியல்ல ஆவியின்படி இருதயத்தில் செய்யப்படும் விருத்தசேதனமே விருத்தசேதனம்.” “யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்கும் ஆண்டவர் ஒருவரே. அவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னர்.” செயல்கள் அல்ல, விசுவாசமே இவர்களெல்லாரையும் நீதிமான்களாக்குகிறது.​—2:​11, 29; 10:​12; தி.மொ.; 3:28.

22ரோமிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு இந்த நிருபத்தில் எழுதின நடைமுறையான அறிவுரை எந்தளவுக்கு பயனுள்ளதாய் இருந்ததோ அதேயளவு இன்றைய கிறிஸ்தவர்களுக்கும் அது பயனுள்ளது. இவர்களும் கடவுளிடமிருந்து பிரிந்திருக்கும் இந்த உலகத்திலிருந்து பிரச்சினைகளை எதிர்ப்படுகின்றனர். சபைக்கு வெளியே இருப்பவர்கள் உட்பட “எல்லா மனுஷரோடும் சமாதானமாயிரு”க்கும்படி கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை கூறப்படுகிறது. ஒவ்வொருவரும் ‘மேலான அதிகாரங்களுக்கு அடங்கியிருக்க’ வேண்டும், ஏனெனில் இவை கடவுளுடைய ஏற்பாடு; மேலும் சட்டத்துக்குக் கீழ்ப்படிவோர் அல்ல, கெட்ட செயல்களைச் செய்வோரே இவற்றிற்குப் பயப்படுவார்கள். கிறிஸ்தவர்கள் தண்டனைக்குப் பயந்துகொண்டல்ல, கிறிஸ்தவ மனசாட்சியின் காரணமாகவும் சட்டத்துக்குக் கீழ்ப்படிந்து அடங்கியிருக்க வேண்டும். ஆகவே அவர்கள் தங்கள் வரிகளையும் தீர்வைகளையும் செலுத்த வேண்டும், தங்கள் கடமைகளை செய்து முடிக்க வேண்டும், “ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல்,” வேறெதிலும் யாருக்கும் கடன்படாதிருக்க வேண்டும். அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேற்றமாயிருக்கும்.​—12:​17-21; 13:​1-10.

23யாவரறிய சாட்சி கொடுப்பதைப் பற்றியும் பவுல் வலியுறுத்துகிறார். நீதிக்கான விசுவாசம் ஒருவனின் இதயத்திலிருந்தாலும் இரட்சிப்புக்காக வாயினாலே அறிக்கை செய்கிறான். “யெகோவாவின் பெயரின்பேரில் கூப்பிடுகிற ஒவ்வொருவனும் இரட்சிக்கப்படுவான்.” ஆனால் இது நிறைவேற, பிரசங்கிப்போர் “நற்காரியங்களைப் பற்றிய நற்செய்தியை” யாவரறிய அறிவிப்பது அவசியம். அவர்கள் அறிவிப்பது, ‘குடியிருக்கப்பட்ட பூமியின் கடையாந்தரங்கள் வரையிலும்’ இப்பொழுது ஒலிக்கிறது; இப்படி பிரசங்கிப்பவர்களில் நாமும் ஒருவர் என்றால் சந்தோஷம் நமக்கு சொந்தமாகும்! (10:​13, 15, 18; NW) இந்தப் பிரசங்க ஊழியத்திற்கு தயாராகும் விதமாக, பவுலைப்போல் நாமும், ஏவப்பட்ட வேதவாக்கியங்களை நன்கு அறிந்துகொள்ள முயலுவோமாக. பவுல், இந்த ஒரே பகுதியில் (10:​11-21) எபிரெய வேதாகமத்திலிருந்து ஏகப்பட்ட மேற்கோள்களை எடுத்துக் குறிப்பிடுகிறார். (ஏசா. 28:16; யோவே. 2:32; ஏசா. 52:7; 53:1; சங். 19:4; உபா. 32:21; ஏசா. 65:​1, 2) பின்வருமாறு அவர் சொல்வது வெகு பொருத்தமானதே: “வேதவாக்கியங்களின் மூலமாயுண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் எதிர்நோக்கும் நம்பிக்கையை நாம் அடையும்படி முன் எழுதப்பட்டவைகளெல்லாம் நமக்குப் போதனையாகவே எழுதப்பட்டன.”​—ரோ. 15:​4, தி.மொ.

24கிறிஸ்தவ சபைக்குள் நிலவும் உறவு சம்பந்தமாக மிகவும் நடைமுறையான அறிவுரை கொடுக்கப்பட்டுள்ளது. தேசிய, இன அல்லது சமுதாய சூழல் ஒருகாலத்தில் என்னவாக இருந்திருந்தாலும், இப்போது அனைவரும் “தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்த”த்திற்கு இசைய கடவுளுக்குப் பரிசுத்த சேவை செய்ய தங்கள் மனதை மாற்றிக்கொள்ள வேண்டும். (11:​17-22; 12:​1, 2) ரோமர் 12:​3-16-ல் பதிவாகியுள்ள பவுலின் அறிவுரையில் எத்தகைய நியாயத்தன்மையை காண முடிகிறது! கிறிஸ்தவ சபையிலுள்ள ஒவ்வொருவருக்குள்ளும் ஆர்வத்தையும், மனத்தாழ்மையையும், கனிவான பாசத்தையும் ஊட்டி வளர்க்க மிகச் சிறந்த அறிவுரை இதிலிருப்பது உண்மையே. முடிவான அதிகாரங்களில், பிரிவினைக்கு வித்திடுவோரைக் கண்டறிந்து அவர்களிடமிருந்து விலகியிருக்க தேவையான திட்டவட்டமான அறிவுரையைக் கொடுக்கிறார். ஆனால் அதேசமயம், சபையில் நல்ல கூட்டுறவுகள் பிறப்பிக்கும் பரஸ்பர மகிழ்ச்சியையும் புத்துணர்ச்சியையும் பற்றி குறிப்பிடுகிறார்.​—16:​17-19; 15:​7, 32, தி.மொ.

25கிறிஸ்தவர்களாக ஒருவரோடு ஒருவர் சமாதானமாக நடந்துகொள்வதற்கு கவனம் செலுத்த வேண்டும். “தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.” (14:17) இந்த நீதி, சமாதானம், சந்தோஷம் ஆகியவை முக்கியமாக பரலோக ராஜ்யத்தில் “கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரராக” இருப்போருக்கு உரிய பங்கு; இவர்கள் பரலோக ராஜ்யத்தில் அவருடனேகூட ‘மகிமைப்படுத்தப்பட’விருக்கின்றனர். மேலும், “சமாதானம் அருளும் கடவுள் சீக்கிரத்தில் சாத்தானை உங்கள் பாதங்களின்கீழ் நசுக்கிப்போடுவார்” என்று கூறுகையில், ஏதேனில் கொடுக்கப்பட்ட ராஜ்ய வாக்குறுதியின் நிறைவேற்றத்தைக் குறிப்பிடுவதில் ரோமர் புத்தகம் ஒரு படி மேலே செல்வதைக் கவனியுங்கள். (ரோ. 8:17; 16:20; ஆதி. 3:15) முக்கியமான இந்த சத்தியங்களை விசுவாசிக்கையில், எப்போதும் மகிழ்ச்சியையும் சமாதானத்தையும் முழுமையாய் அனுபவித்து, நம்பிக்கையில் பெருகுவோமாக. இந்த ராஜ்ய வித்தோடு சேர்ந்து வெற்றிவாகை சூடுவோராய் இருக்க நாம் தீர்மானித்திருப்போமாக. ஏனெனில் மேலே வானத்திலோ கீழே பூமியிலோ, “வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்”பது நமது அசைக்க முடியாத நம்பிக்கை.​—ரோ. 8:39; 15:13.

[அடிக்குறிப்பு]

a நம்முடைய பைபிளும் பூர்வ கையெழுத்துப்பிரதிகளும், (ஆங்கிலம்) 1958, பக்கம் 188.

[கேள்விகள்]

1. ரோமருக்கு எழுதிய தன் நிருபத்தில் பவுல் எதைக் குறித்து விவாதிக்கிறார்?

2. (அ) ரோமர் புத்தகத்தில் என்ன பிரச்சினைகளைப் பவுல் விவாதிக்கிறார்? (ஆ) இந்த நிருபத்தில் எது உறுதிப்படுத்தப்படுகிறது?

3. ரோமில் சபை பிறந்தது எவ்வாறு, பவுல் அங்கிருந்த பலரை நன்கு அறிந்திருந்ததற்குக் காரணம் என்னவாக இருக்கலாம்?

4. (அ) அந்தப் பட்டணத்திலிருந்த சபையைப் பற்றிய என்ன தகவலை ரோமர் புத்தகம் அளிக்கிறது? (ஆ) ரோமில் ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் இருந்தது எதைக் காட்டுகிறது?

5. ரோமர் புத்தகத்தின் நம்பகத்தன்மையை என்ன உண்மைகள் உறுதிப்படுத்துகின்றன?

6. ரோமர் அதிகாரப்பூர்வ பட்டியலின் பாகம் என்பதற்குப் பூர்வ பப்பைரஸ் ஒன்று எவ்வாறு சாட்சி பகருகிறது?

7. ரோமர் எழுதப்பட்ட இடத்தையும் காலப் பகுதியையும் குறித்ததில் என்ன அத்தாட்சி உள்ளது?

8. (அ) பவுல் தன் ஊழியப் பொறுப்பைக் குறித்து என்ன சொல்கிறார்? (ஆ) யூதரும் கிரேக்கருமாகிய இரு சாராருமே கடவுளுடைய கோபத்திற்கு ஆளாகியிருப்பதை அவர் எவ்வாறு காட்டுகிறார்?

9. (அ) யூதர்கள் எதில் மேம்பட்டவர்கள், எனினும் எல்லாரும் பாவத்துக்குட்பட்டிருப்பதைக் காட்ட பவுல் என்ன வேதவசனங்களைக் குறிப்பிடுகிறார்? (ஆ) அப்படியானால், ஒருவன் எவ்வாறு நீதிமானாய் தீர்க்கப்படுவான், எந்த முன்மாதிரி இந்த விவாதத்தை ஆதரிக்கிறது?

10. (அ) மரணம் அரசனாக எவ்வாறு ஆளுகை செய்கிறது? (ஆ) கிறிஸ்துவின் கீழ்ப்படிதலின் மூலம் கிடைத்த பலன் என்ன, ஆனால் பாவத்தைக் குறித்து என்ன எச்சரிக்கை அளிக்கப்பட்டிருக்கிறது?

11. (அ) நியாயப்பிரமாணத்திலிருந்து யூத கிறிஸ்தவர்கள் விடுதலையாவதைப் பவுல் எவ்வாறு உதாரணத்தால் விளக்குகிறார்? (ஆ) நியாயப்பிரமாணம் எதை மிகவும் தெளிவாக்கியது, ஆகவே எவற்றோடு கிறிஸ்தவன் போராட வேண்டும்?

12. எவ்வாறு சிலர் கிறிஸ்துவோடு உடன் சுதந்தரவாளிகள் ஆகின்றனர், எதில் இவர்கள் முற்றிலும் ஜெயங்கொண்டிருக்கின்றனர்?

13. (அ) தீர்க்கதரிசனத்தின்படி, கடவுளின் உண்மையான இஸ்ரவேலில் யாரும் சேர்க்கப்படுகின்றனர், இது கடவுளுடைய எந்த நியமத்தின்படி? (ஆ) மாம்சப்பிரகாரமான இஸ்ரவேல் ஏன் தகுதியிழந்து போயினர், ஆனால் இரட்சிப்புக்கு எது தேவை?

14. ஒலிவ மரத்தின் உவமையால் பவுல் எதை விளக்குகிறார்?

15. கடவுளுக்கு ஜீவபலிகளைச் செலுத்துவதில் உட்பட்டிருப்பது என்ன?

16. அதிகாரங்களிடமும் மற்றவர்களிடமும் கிறிஸ்தவர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்?

17. நியாயந்தீர்ப்பதையும் பலவீனரை உற்சாகப்படுத்துவதையும் குறித்து என்ன அறிவுரை கொடுக்கப்படுகிறது?

18. (அ) யூதரல்லாதவர்களைக் கடவுள் ஏற்பதைக் காட்ட என்ன மேற்கோள்களைப் பவுல் குறிப்பிடுகிறார்? (ஆ) கடவுளுடைய தகுதியற்ற தயவால் பவுல் எவ்வாறு நன்மையடைந்தார்?

19. என்ன வாழ்த்துரைகளோடும் அறிவுரையோடும் இந்த நிருபம் முடிகிறது?

20. (அ) கடவுளில் நம்பிக்கை வைப்பதற்கு, என்ன நியாயமான காரணத்தை ரோமர் அளிக்கிறது? (ஆ) கடவுளுடைய நீதியும் இரக்கமும் எவ்வாறு சித்தரித்துக் காட்டப்படுகின்றன, வியப்பால் என்ன சொல்லும்படி இது பவுலைத் தூண்டுகிறது?

21. கடவுளுடைய பரிசுத்த இரகசியத்தைக் குறித்து கூடுதல் விவரங்களை ரோமர் எவ்வாறு அளிக்கிறது?

22. சபைக்கு வெளியே உள்ளவர்களோடு இருக்கும் உறவைக் குறித்து நடைமுறையான என்ன அறிவுரையை ரோமர் கொடுக்கிறது?

23. யாவரறிய அறிக்கை செய்வதன் முக்கியத்துவத்தைப் பவுல் எவ்வாறு அறிவுறுத்துகிறார், ஊழியத்துக்கு தயாரிப்பதைக் குறித்ததில் என்ன முன்மாதிரியை வைக்கிறார்?

24. சபைக்குள் ஆர்வத்தையும் மகிழ்ச்சியுள்ள உறவுகளையும் உருவாக்கும் நோக்கத்துடன் என்ன அறிவுரையைப் பவுல் கொடுக்கிறார்?

25. (அ) கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய என்ன சரியான நோக்கையும் கூடுதலான புரிந்துகொள்ளுதலையும் ரோமர் நமக்கு அளிக்கிறது? (ஆ) ரோமர் புத்தகத்தை ஆராய்வது என்ன வழிகளில் நமக்கு பயனளிக்கும்?