Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் புத்தக எண் 46—1 கொரிந்தியர்

பைபிள் புத்தக எண் 46—1 கொரிந்தியர்

பைபிள் புத்தக எண் 46—1 கொரிந்தியர்

எழுத்தாளர்: பவுல்

எழுதப்பட்ட இடம்: எபேசு

எழுதி முடிக்கப்பட்டது: ஏ. பொ.ச. 55

கொரிந்து “புகழ்பெற்ற, சிற்றின்ப கேளிக்கை நிறைந்த நகரம், அங்கே கிழக்கத்திய மேற்கத்திய தீயொழுக்கங்கள் ஒன்றர கலந்திருந்தன.” a பொலோபொனெஸுக்கும் கிரீஸ் கண்டத்துக்கும் இடையிலுள்ள ஒடுக்கமான பூசந்தியில் கொரிந்து அமைந்திருந்தது; கண்டத்திற்குச் செல்லும் தரைவழி மார்க்கத்தில் முக்கிய நகரமாக இது ஆதிக்கம் செலுத்தி வந்தது. அப்போஸ்தலன் பவுலின் நாட்களில், அதன் ஜனத்தொகை ஏறக்குறைய 4,00,000. ரோம், அலெக்ஸாண்டிரியா, சீரியாவின் அந்தியோகியா ஆகியவற்றில் மாத்திரமே இதைப் பார்க்கிலும் மிகுந்த ஜனத்தார் குடியிருந்தனர். கொரிந்துவுக்குக் கிழக்கே ஈஜியன் கடலும் மேற்கே கொரிந்து வளைகுடாவும் அயோனியன் கடலும் இருந்தன. ஆகவே கெங்கிரேயா, லீக்கேயம் என்னும் இரண்டு துறைமுகப் பட்டணங்களுடன், அகாயா மாகாணத்தின் தலைநகராகிய கொரிந்து, வாணிக சம்பந்தமாய் முக்கியமான இடத்தைப் பிடித்திருந்தது. இது கிரேக்க கல்விக்கும் மைய ஸ்தலமாயிருந்தது. “அதன் செல்வம், யாவரறியும் அளவுக்கு அதிக பெயர்பெற்றதாயிருந்தது; அவ்வாறே அதன் குடிகளின் தீயொழுக்கமும் வரம்புமீறிய ஊதாரித்தனமும் நன்கறியப்பட்டிருந்தன b என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதன் புறமதப் பழக்கவழக்கங்களில் (ரோம வீனஸுக்கு சமமான) அஃப்ரோடைட் என்ற காதல் தேவதை வணக்கமும் இருந்தது. கொரிந்திய வணக்க முறை மட்டுக்குமீறிய சிற்றின்ப வாழ்க்கையை தோற்றுவித்தது.

2ரோம உலகின் முன்னேற்றப் பாதையில் வெற்றிநடை போட்ட, ஆனால் அதே நேரத்தில் ஒழுக்கப்பிரகாரமாய் சீர்குலைந்திருந்த இந்த மாநகரத்திற்கு சுமார் பொ.ச. 50-ல் பவுல் பயணப்பட்டார். அங்கே அவர் தங்கியிருந்த 18 மாத காலத்தில், கிறிஸ்தவ சபை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது. (அப். 18:​1-11) கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை இந்த விசுவாசிகளிடம் முதலாவதாக அறிவிக்க சென்ற பவுலுக்கு அவர்களிடம் எப்பேர்ப்பட்ட அன்பு! அவர்களிடம் தனக்கிருந்த ஆவிக்குரிய பந்தத்தை நினைவுகூர்ந்து இந்த நிருபத்தில் அவர் கூறியதாவது: “கிறிஸ்துவுக்குள் பதினாயிரம் உபாத்தியாயர்கள் உங்களுக்கு இருந்தாலும், தகப்பன்மார் அநேகர் உங்களுக்கு இல்லையே; கிறிஸ்து இயேசுவுக்குள் சுவிசேஷத்தினால் நான் உங்களைப் பெற்றேன்.”​—1 கொ. 4:15.

3அவர்களுடைய ஆவிக்குரிய நலனில் பவுலுக்கிருந்த ஆழ்ந்த அக்கறையே, அவரது மூன்றாவது மிஷனரி பயணத்தின்போது கொரிந்திய கிறிஸ்தவர்களுக்குத் தன் முதல் நிருபத்தை எழுதும்படி அவரைத் தூண்டியது. அவர் கொரிந்துவிலிருந்து பயணப்பட்டு இப்போது சில ஆண்டுகள் ஆகியிருந்தன. ஏறக்குறைய பொ.ச. 55-ல் பவுல் எபேசுவில் இருந்தார். அனுபவமற்ற புதிய சபையாய் இருந்த கொரிந்துவிலிருந்து அவர் ஒரு கடிதத்தைப் பெற்றிருந்தது தெரிகிறது; அதற்குப் பதில் எழுத கடமைப்பட்டிருந்தார். மேலும், தன் மன அமைதியைக் குலைக்கும் செய்திகளையும் பவுல் கேள்விப்பட்டிருந்தார். (7:1; 1:11; 5:1; 11:18) இவை அந்தளவு அதிக மனத்துயரத்தை உண்டுபண்ணியதால், தன் நிருபத்தில் 7-ம் அதிகாரத்தை தொடங்கும் வரையில் அவர்களிடமிருந்து கடிதத்தைத் தான் பெற்றிருந்ததைப் பற்றி பவுல் குறிப்பிடக்கூட இல்லை. முக்கியமாய் அவர் கேள்விப்பட்டிருந்த செய்திகளே, கொரிந்துவிலிருந்த தன் உடன் கிறிஸ்தவர்களுக்கு பதில் எழுதும்படி பவுலை தூண்டுவித்தது.

4ஆனால் கொரிந்தியருக்கு எழுதிய முதல் நிருபத்தைப் பவுல் எபேசுவிலிருந்து எழுதினார் என்பது நமக்கு எப்படித் தெரியும்? ஒரு விஷயம் என்னவென்றால், இந்த நிருபத்தை வாழ்த்துக்களோடு முடிக்கையில், ஆக்கில்லா, பிரிஸ்காளின் (பிரிஸ்கில்லாளின்) வாழ்த்துக்களையும் அப்போஸ்தலன் சேர்த்துக்கொள்கிறார். (16:​19, தி.மொ.) அவர்கள் ஏற்கெனவே கொரிந்துவிலிருந்து எபேசுக்கு மாறிச் சென்றிருந்ததை அப்போஸ்தலர் 18:​18, 19 குறிப்பிடுகிறது. ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் அங்கே வசித்து வந்ததாலும், பவுல் ஒன்று கொரிந்தியரின் முடிவான வாழ்த்துக்களில் அவர்களுடைய வாழ்த்துக்களை சேர்த்திருந்ததாலும், அந்த நிருபத்தை அவர் எபேசுவில் தங்கியிருக்கையிலேயே எழுதியிருக்க வேண்டும். எனினும், துளியும் சந்தேகத்திற்கு இடமளிக்காத ஒரு குறிப்பானது, 1 கொரிந்தியர் 16:​8-லுள்ள பவுலின் இந்தக் கூற்றாகும்: ‘ஆகிலும் பெந்தெகொஸ்தே பண்டிகை வரைக்கும் எபேசு பட்டணத்தில் இருப்பேன்.’ ஆகவே, ஒன்று கொரிந்தியரை பவுல் எபேசுவிலிருந்தே எழுதினார்; பெரும்பாலும் அவர் அங்கே தங்கியிருந்த காலப்பகுதி முடியும் சமயத்தில் எழுதியிருக்கலாம்.

5ஒன்று மற்றும் இரண்டு கொரிந்தியரின் நம்பகத் தன்மை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் இந்த நிருபங்களைப் பவுல் எழுதியதாக குறிப்பிட்டு அவற்றை அதிகாரப்பூர்வ பட்டியலின் பாகமாக ஏற்று, தங்கள் புத்தகத் தொகுப்புகளில் அவற்றிற்கு இடமளித்தனர். உண்மையில், ஏறக்குறைய பொ.ச. 95-ல் ரோமிலிருந்து கொரிந்துவுக்கு எழுதப்பட்ட முதலாம் கிளெமென்ட் என்றழைக்கப்பட்ட ஒரு கடிதத்தில் ஒன்று கொரிந்தியர் புத்தகம் மறைமுகமாய் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும், குறைந்தபட்சம் ஆறு தடவையாவது மேற்கோளாக காட்டப்பட்டிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. இந்த எழுத்தாளர் இந்தக் கடிதத்தைப் பெறுவோரை, “ஆசீர்வதிக்கப்பட்ட அப்போஸ்தலனாகிய பவுலின் நிருபத்தை ஏற்கும்”படி ஊக்குவித்தபோது ஒன்று கொரிந்தியரை குறிப்பிட்டதாகவே தெரிகிறது. c ஒன்று கொரிந்தியர் புத்தகம், ஜஸ்டின் மார்ட்டிர், அதெனாகொரஸ், ஐரீனியஸ், டெர்ட்டுல்லியன் ஆகியோராலும் நேரடியாகவே மேற்கோள் காட்டப்பட்டது. கொரிந்தியருக்கு எழுதப்பட்ட முதலாம் இரண்டாம் நிருபங்கள் உட்பட, பவுலின் நிருபங்களின் ஒரு தொகுப்பு, “முதல் நூற்றாண்டின் கடைசி பத்தாண்டுகளில் தொகுத்தமைத்துப் பிரசுரிக்கப்பட்டது” என்பதற்கு உறுதியான அத்தாட்சியுள்ளது. d

6கொரிந்தியருக்கு எழுதிய பவுலின் முதல் நிருபம் அந்தக் கொரிந்திய சபைக்குள் நோட்டம்விட நமக்கு வாய்ப்பளிக்கிறது. எதிர்த்து சமாளிக்க வேண்டிய பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டிய சந்தேகங்களும் இந்தக் கிறிஸ்தவர்களுக்கு இருந்தன. சபைக்குள் பிரிவினைகள் இருந்தன, ஏனெனில் சிலர் மனிதரைப் பின்பற்றி வந்தனர். மிக மோசமான ஒழுக்கக்கேடு ஒன்று நிகழ்ந்திருந்தது. சிலர் மத சம்பந்தமாய்ப் பிரிவுற்ற குடும்பங்களில் வாழ்ந்து வந்தனர். அவிசுவாசியான தங்கள் மணத்துணைவரோடு வாழ்க்கையைத் தொடருவதா அல்லது பிரிந்துசெல்வதா? விக்கிரகங்களுக்குப் பலிசெலுத்தப்பட்ட மாம்சத்தைச் சாப்பிடுவதைப் பற்றியதென்ன? அவர்கள் அதை சாப்பிடலாமா? கர்த்தருடைய இராப்போஜன ஆசரிப்பு உட்பட, தங்கள் கூட்டங்களை நடத்துவதைக் குறித்ததிலும் கொரிந்தியருக்கு அறிவுரை தேவைப்பட்டது. சபையில் பெண்களின் ஸ்தானம் என்ன? அந்த சபையில் உயிர்த்தெழுதலை மறுதலிப்போரும் இருந்தனர். ஏகப்பட்ட பிரச்சினைகள். எனினும் முக்கியமாக, கொரிந்தியர்களை மீண்டும் ஆவிக்குரிய நிலைக்கு கொண்டு வருவதிலேயே அப்போஸ்தலன் ஆர்வம் காட்டினார்.

7சபைக்குள் இருந்த நிலைமைகளும், சபைக்கு வெளியே இருந்த நிலைமைகளும், அதாவது அந்நகரத்தின் செல்வச்செழிப்பும் ஒழுக்கக்கேடும் தற்காலத்திற்கு ஒத்திருக்கின்றன; எனவே ஏவுதலின்கீழ் பவுல் எழுதிய மதிப்புவாய்ந்த அறிவுரை நம் கவனத்தைக் கவருகிறது. பவுல் சொன்னது நம் நாளுக்கு முழுக்க முழுக்க பொருந்தும். ஆதலால், அவருடைய பிரியமான கொரிந்திய சகோதர சகோதரிகளுக்கு எழுதிய முதல் நிருபத்திற்கு கருத்தூன்றி கவனம் செலுத்துவது நிச்சயமாகவே நன்மை பயக்கும். அந்தக் காலப் பகுதியில் நிலவிய மனப்பான்மையையும் அந்த இடத்தையும் இப்போது சற்று நினைவுபடுத்திப் பாருங்கள். கொரிந்துவிலிருந்த தன் உடன் விசுவாசிகளுக்கு பவுல் எழுதிய, மனதை ஊடுருவும், தூண்டுவிக்கும் ஏவப்பட்ட வார்த்தைகளை இப்போது ஆராயலாம். அப்படி செய்கையில், கொரிந்திய கிறிஸ்தவர்களைப் போலவே இந்த வார்த்தைகளை ஆழமாக சிந்தித்துப் பாருங்கள்.

ஒன்று கொரிந்தியரின் பொருளடக்கம்

8பிரிவினையைப் பவுல் வெட்டவெளிச்சமாக்கி, ஒற்றுமையாயிருக்க அறிவுரை கூறுகிறார் (1:​1–4:21). கொரிந்தியர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதாக பவுல் விரும்புகிறார். ஆனால் அவர்களுக்குள் இருந்த பிரிவினைகளையும் கருத்து வேறுபாட்டையும் பற்றி என்ன? “கிறிஸ்து பிரிந்திருக்கிறாரா?” (1:13) தாங்கள் பவுலின் பெயரால் முழுக்காட்டப்பட்டார்களென்று அவர்கள் சொல்ல முடியாதபடி, அவர்களில் வெகு சிலரையே தான் முழுக்காட்டியதற்காக அப்போஸ்தலன் நன்றியுள்ளவராக இருக்கிறார். கழுமரத்தில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பற்றியே பவுல் பிரசங்கிக்கிறார். இது யூதர்கள் இடறுவதற்கு காரணமாகவும் புறஜாதியாருக்கு மடமையாகவும் உள்ளது. ஆனால் ஞானிகளையும் பலவான்களையும் வெட்கப்படுத்தும்படி மடமையும் பலவீனமுமானவற்றை கடவுள் தெரிந்துகொண்டார். ஆகவே உயர்ந்த பேச்சுநடையைப் பவுல் பயன்படுத்துகிறதில்லை. அந்தச் சகோதரர்கள் தன் பேச்சில் கடவுளுடைய ஆவியையும் வல்லமையையும் உணரும்படியே பேசினார். ஏனெனில் அவர்கள் மனிதனின் ஞானத்தைக் கண்டு விசுவாசியாமல் கடவுளுடைய வல்லமையை உணர்ந்து விசுவாசிக்க வேண்டும் என விரும்பினார். கடவுளுடைய ஆவியால் வெளிப்படுத்தப்பட்ட காரியங்களையே தாங்கள் பேசுவதாகவும், ‘அந்த ஆவி எல்லா காரியங்களுக்குள்ளும், கடவுளுடைய ஆழமான காரியங்களையுங்கூட ஆராய்கிறது’ என்றும் பவுல் சொல்கிறார். சாதாரண மனிதன் இவற்றைப் புரிந்துகொள்ள முடியாது. ஆவிக்குரிய மனிதனால் மாத்திரமே இவற்றைப் புரிந்துகொள்ள முடியும்.​—2:​10, NW.

9அப்பொல்லோ, பவுல் என சிலர் மனிதரைப் பின்பற்றுகிறார்கள். ஆனால் இவர்கள் யார்? கொரிந்தியர் விசுவாசிகளாவதற்கு உதவிய ஊழியக்காரர்களே. நடுவோரும் நீர்ப்பாய்ச்சுவோரும் ஒன்றுமில்லை, ஏனெனில் “தேவனே விளையச் செய்தார்,” இவர்கள் அவருடைய ‘உடன்வேலையாட்களே.’ யாருடைய வேலைகள் நிலைத்திருக்கும் என்பதை அக்கினி பரீட்சை நிரூபிக்கும். கடவுளுடைய ஆவி அவர்களிடம் வாசம் செய்வதால், “நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்கள்” என்று பவுல் சொல்கிறார். “இவ்வுலகத்தின் ஞானம் கடவுள் பார்வையில் பேதமையாம்.” ஆகவே, ஒருவரும் எந்த மனிதனையும் குறித்து பெருமை பாராட்டக்கூடாது; ஏனெனில் உண்மையில் சகலமும் கடவுளுக்குரியவை.​—3:​6, 9, 16, 19, தி.மொ.

10பவுலும் அப்பொல்லோவும் கடவுளுடைய பரிசுத்த இரகசியங்களின் தாழ்மையான உக்கிராணக்காரரே; மேலும் உக்கிராணக்காரர் உண்மையுள்ளோராய் இருக்க வேண்டும். பெருமை பாராட்டுவதற்குக் கொரிந்துவிலுள்ள சகோதரர் யார், அவர்களுக்குள்ளவற்றில் அவர்கள் பெற்றுக்கொள்ளாதது எது? அவர்கள் ஐசுவரியவான்களாகி, அரசர்களாக ஆளத் தொடங்கி, அவ்வளவு அதிக விவேகமும் பலமும் பெற்றுவிட்டனரா? தூதருக்கும் மனிதருக்கும் காட்சிப் பொருளாக ஆகியிருக்கும் அப்போஸ்தலர்கள் மட்டும் இன்னமும் பேதமையராகவும் பலவீனராகவும் வேண்டாதவர்களாகவும் இருக்கிறார்களா? கிறிஸ்துவின் சம்பந்தமாய்த் தன் வழிமுறைகளை நினைப்பூட்டி, தன்னுடைய மாதிரியைப் பின்பற்ற அவர்களுக்கு உதவ தீமோத்தேயுவை பவுல் அனுப்புகிறார். யெகோவாவுக்குச் சித்தமானால், பவுல் தானே சீக்கிரமாய் அவர்களிடத்தில் வந்து, இறுமாப்பாயிருப்போரின் பேச்சை மாத்திரமல்ல, அவர்களுடைய பலத்தையும் அறிந்துகொள்வார்.

11சபையை சுத்தமாக வைப்பதைப் பற்றி (5:​1–6:20). திடுக்கிட வைக்கும் ஒழுக்கக்கேட்டு சம்பவம் ஒன்று கொரிந்தியருக்குள் நடந்தது அறிவிக்கப்பட்டது! ஒருவன் தன் தகப்பனின் மனைவியை தனக்குரியவளாக ஆக்கிக்கொண்டிருக்கிறான். அவனைச் சாத்தானிடம் ஒப்புவிக்க வேண்டும், ஏனெனில் கொஞ்சம் புளித்தமாவு பிசைந்த மாவு முழுவதையும் புளிக்க வைக்கிறது. சகோதரன் என்று அழைக்கப்படுபவன் பொல்லாதவனாயிருக்கையில் அப்படிப்பட்ட எவனோடும் கூட்டுறவு கொள்ளாமல் அவர்கள் விலகியிருக்க வேண்டும்.

12கொரிந்தியர் தங்களுக்கு இடையேயான பிரச்சினையைத் தீர்க்க நீதிமன்றம் வரை செல்கின்றனர்! ஏமாற்றப்பட்டதைப் பொறுத்துக்கொள்வது அதைப் பார்க்கிலும் நல்லதல்லவா? இந்த உலகத்தையும் தேவதூதர்களையும் நியாயந்தீர்க்கப் போகிற அவர்கள் மத்தியில், இப்போது சகோதரர்களுக்கிடையே எழும்பும் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க ஒருவரும் இல்லையா? அதற்கும் மேலாக, அவர்கள் சுத்தமுள்ளவர்களாய் இருக்க வேண்டும், ஏனெனில் வேசிமார்க்கத்தார், விக்கிரகாராதனைக்காரர் போன்றவர்கள் கடவுளுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்க மாட்டார்கள். அவர்களில் சிலர் அப்படிப்பட்டவர்களாய் இருந்தனர், ஆனால் அவர்கள் கழுவப்பட்டு சுத்தமும் பரிசுத்தமும் உள்ளவர்களானார்கள். “வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்” என்று பவுல் சொல்கிறார். ‘கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; உங்கள் சரீரத்தினால் தேவனை மகிமைப்படுத்துங்கள்.’​—6:​18, 20.

13மணம் செய்யாதிருப்பதன்பேரிலும் மணவாழ்க்கையின்பேரிலும் அறிவுரை (7:​1-40). திருமணம் சம்பந்தப்பட்ட ஒரு கேள்விக்கு பவுல் பதிலளிக்கிறார். வேசித்தனம் பரவலாக நிகழ்வதால், ஓர் ஆண் அல்லது பெண் மணம் செய்துகொள்வது நல்லது; தம்பதிகள் ஒருவருக்கொருவர் கணவன் மனைவியருக்குரிய மணக்கடமைகளை செலுத்த வேண்டும். மணமாகாதவர்களும் விதவைகளும், பவுலைப்போல் மணம் செய்யாதிருப்பதே நல்லது; ஆனால் அவர்களுக்கு தன்னடக்கம் இல்லையெனில், அவர்கள் மணம் செய்துகொள்ளலாம். அப்படி மணம் செய்துகொண்டால், அவர்கள் ஒன்றாக நிலைத்திருக்க வேண்டும். ஒருவருடைய மணத்துணை அவிசுவாசியாக இருந்தாலும், விசுவாசி பிரிந்து செல்லக்கூடாது, இவ்வகையில் அவர் அவிசுவாசியான மணத்துணையை ஆதாயப்படுத்திக் கொள்ளலாம். விருத்தசேதனத்தையும் அடிமைத்தனத்தையும் குறித்ததில், ஒவ்வொருவரும் தங்களுக்குரிய நிலையில் தொடர்ந்து நிலைத்திருப்பதில் திருப்தி காண வேண்டும். மணமானவரைக் குறித்ததிலோ, அவர் இரு மனமுள்ளவர்; ஏனெனில், அவர் தன் மணத்துணையைப் பிரியப்படுத்த விரும்புகிறார், மணமாகாதவரோ கர்த்தருக்குரிய காரியங்களுக்கு மாத்திரமே கவலைப்படுகிறார். மணம் செய்துகொள்கிறவர்கள் பாவம் செய்கிறதில்லை, ஆனால் மணம் செய்யாதவர்கள் ‘மேம்பட்டதைச் செய்கிறார்கள்.’​—7:​38, NW.

14எல்லாவற்றையும் நற்செய்தியினிமித்தம் செய்தல் (8:​1-9:27). விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவைப் பற்றி என்ன? விக்கிரகமானது ஒன்றுமில்லை! உலகத்தில் பல “தேவர்களும்,” “கர்த்தாக்களும்” உள்ளனர், ஆனால் கிறிஸ்தவர்களுக்கோ ‘பிதாவாகிய ஒரே தேவனும்,’ “இயேசு கிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும்” மாத்திரமே உள்ளனர். (8:​5, 6) ஆனால் விக்கிரகத்துக்குப் பலியிடப்பட்ட மாம்சத்தை நீங்கள் சாப்பிடுவதைப் பார்ப்பவன் இடறலடையலாம். இத்தகைய சூழ்நிலைமைகளில், சகோதரன் இடறலடையாதபடிக்கு அதற்கு விலகியிருக்க பவுல் அறிவுரை கூறுகிறார்.

15ஊழியத்தினிமித்தம் பவுல், பலவற்றை தனக்கு வேண்டாமென மறுத்துவிடுகிறார். ஓர் அப்போஸ்தலனாக, “சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டா”க்கிக் கொள்ள அவருக்கு உரிமை இருக்கிறது, ஆனால் அவர் அவ்வாறு செய்வதில்லை. எனினும், பிரசங்கிப்பது தன்மீது விழுந்த கடமையாய் கருதுகிறார்; உண்மையில், “நான் பிரசங்கியாதிருந்தால் எனக்கு ஐயோ” என்று அவர் சொல்கிறார். ஆகையால் எல்லாருக்கும் தன்னை அடிமையாக்கியிருக்கிறார், “எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு” தன்னை “எல்லாருக்கும் எல்லாமா”க்கியிருக்கிறார். ‘சுவிசேஷத்தினிமித்தமே’ எல்லாவற்றையும் செய்கிறார். பந்தயத்தில் ஜெயிக்கவும் அழிவில்லாத கிரீடத்தைப் பெறவும், அவர் தன் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறார். மற்றவர்களுக்குப் பிரசங்கித்த பின்பு, தானே “ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு” அவ்வாறு செய்கிறார்.​—9:​14, 16, 19, 22, 23, 27.

16பொல்லாதவற்றிற்கு எதிராக எச்சரிக்கை (10:​1-33). ‘முற்பிதாக்களைப்’ பற்றி என்ன? இவர்கள் மேகத்தின் கீழிருந்தனர், மோசேக்குள் முழுக்காட்டப்பட்டனர். அவர்களில் பெரும்பான்மையர் கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெறவில்லை, வனாந்தரத்தில் மாண்டனர். ஏன்? அவர்கள் பொல்லாதவற்றை விரும்பினர். கிறிஸ்தவர்கள் இதிலிருக்கும் எச்சரிக்கையை ஏற்று விக்கிரகாராதனையிலிருந்தும் வேசித்தனத்திலிருந்தும், யெகோவாவைப் பரீட்சை பார்ப்பதிலிருந்தும், முறுமுறுப்பதிலிருந்தும் விலகியிருக்க வேண்டும். நிற்பதாக எண்ணுகிறவன் விழாதபடி கவனமாயிருக்க வேண்டும். சோதனை வரும், ஆனால் தம் ஊழியர்கள் தாங்கிக் கொள்வதற்கு மிஞ்சி சோதிக்கப்படுவதற்குக் கடவுள் இடங்கொடுக்க மாட்டார்; அவர்கள் தாங்கிக் கொள்ளத்தக்கதாக வழியையும் உண்டாக்குவார். “ஆகையால் . . . விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள்” என்று பவுல் எழுதுகிறார். (10:​1, NW, 14) நாம் யெகோவாவின் பந்தியிலும் பேய்களின் பந்தியிலும் பங்கெடுக்க முடியாது. எனினும், ஒரு வீட்டில் நீங்கள் சாப்பிடுகையில் அந்த மாம்சம் எங்கிருந்து வந்ததென்பதைக் குறித்து கேள்வி கேட்காதீர்கள். எனினும், அது விக்கிரகங்களுக்குப் பலியிடப்பட்டதென்று எவராவது உங்களுக்குச் சொன்னால், சொன்னவரின் மனசாட்சியினிமித்தம் அதைச் சாப்பிடுவதைத் தவிருங்கள். “எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்” என்று பவுல் எழுதுகிறார்.​—10:31.

17தலைமைத்துவம்; கர்த்தரின் இராப்போஜனம் (11:1-34). “நான் கிறிஸ்துவைப்போல நடக்கிறபடியே நீங்களும் என்னைப்போல் நடக்கிறவர்களாகுங்கள்” என்று பவுல் அறிவிக்கிறார். பின்பு தலைமைத்துவம் பற்றிய கடவுளுடைய நியமத்தைக் குறிப்பிடுகிறார்: பெண்ணுக்குத் தலையாயிருப்பவன் ஆண், ஆணுக்குத் தலையாயிருப்பவர் கிறிஸ்து, கிறிஸ்துவுக்குத் தலையாயிருப்பவர் கடவுள். ஆகையால், சபையில் ஒரு பெண் ஜெபிக்கையில் அல்லது தீர்க்கதரிசனம் சொல்கையில் தன் தலைமீது “அதிகார சின்ன”த்தை அணிந்திருக்க வேண்டும். பவுலால் கொரிந்தியரை பாராட்ட முடியாது; காரணம், அவர்கள் கூடிவருகையில் அவர்களுக்குள் பிரிவினைகள் இருந்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், அவர்களால் கர்த்தருடைய இராப்போஜனத்தில் எவ்வாறு தகுதியான முறையில் பங்கெடுக்க முடியும்? இயேசு தம் மரணத்தின் நினைவு ஆசரிப்பைத் தொடங்கி வைக்கையில் நடந்தவற்றை அவர் மீண்டும் சொல்கிறார். அந்தச் “சரீரம்” இன்னதென்று நிதானித்து அறியாமல் தனக்குத் தானே ஆக்கினைத்தீர்ப்பை வருவித்துக் கொள்ளாதபடிக்கு, அதில் பங்கெடுப்பதற்கு முன்பு ஒவ்வொருவரும் தன்னையே சோதித்தறிய வேண்டும்.​—11:​1, 10, தி.மொ. அடிக்குறிப்பு, 29.

18ஆவிக்குரிய வரங்கள்; அன்பும் அதை நாடித்தொடருதலும் (12:​1–14:40). எத்தனை எத்தனையோ ஆவிக்குரிய வரங்கள் இருக்கின்றன, எனினும் ஆவி ஒன்றே; எத்தனை எத்தனையோ ஊழியங்களும் செயல்களும் இருக்கின்றன, எனினும் ஒரு கர்த்தரும் ஒரு கடவுளுமே இருக்கின்றனர். அவ்வாறே, மனித உடலைப் போலவே, கிறிஸ்துவின் ஒன்றிணைந்த ஒரே சரீரத்தில் பல உறுப்புகள் இருக்கின்றன, ஒவ்வொரு உறுப்புக்கும் மற்றதன் உதவி தேவை. கடவுள் தம்முடைய விருப்பப்படியே அந்தச் சரீரத்தில் ஒவ்வொரு உறுப்பையும் ஏற்படுத்தியிருக்கிறார், செய்வதற்கு அததற்குரிய வேலையும் உள்ளது, ஆகவே ‘சரீரத்தில் பிரிவினை இருக்கக்கூடாது.’ (12:25) ஆவிக்குரிய வரங்களை உடையோர் அன்பற்றவர்களாய் இருந்தால் எதற்கும் பிரயோஜனமற்றவர்கள். அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது, பொறாமை கொள்ளாது, இறுமாப்பாயிராது. சத்தியத்தில் மாத்திரமே சந்தோஷப்படும். “அன்பு ஒருக்காலும் ஒழியாது.” (13:8) தீர்க்கதரிசனம் சொல்லுவது, அந்நிய மொழிகள் பேசுவது போன்ற ஆவிக்குரிய வரங்கள் இல்லாமல் போகும், ஆனால் விசுவாசம், நம்பிக்கை, அன்பு ஆகியவை நிலைத்திருக்கும். இவற்றில் அன்பே பெரியது.

19“அன்பை நாடுங்கள்” என்று பவுல் அறிவுரை கூறுகிறார். சபையைக் கட்டியெழுப்புவதற்கு ஆவிக்குரிய வரங்களை அன்புடன் பயன்படுத்த வேண்டும். இதனிமித்தமே, அந்நிய மொழிகளில் பேசுவதற்கு மேலாக தீர்க்கதரிசனம் சொல்லுதலுக்கே முக்கியத்தும் கொடுக்க வேண்டும். மற்றவர்களுக்குப் போதிக்கையில் அறியாத மொழியில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுவதைப் பார்க்கிலும் புரிந்துகொள்ளும் விதத்தில் ஐந்து வார்த்தைகளைப் பேசுவதையே விரும்புவதாக சொல்கிறார். அந்நிய மொழிகள் அவிசுவாசிகளுக்கே அடையாளம், தீர்க்கதரிசனம் சொல்லுதல் விசுவாசிகளுக்கு அடையாளம். இந்தக் காரியங்களைப் புரிந்துகொள்வதில் அவர்கள் ‘குழந்தைகளாக’ இருக்கக்கூடாது. பெண்களைக் குறித்ததில், சபையில் அவர்கள் அடங்கியிருக்க வேண்டும். “சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது.”​—14:​1, 20, 40.

20உயிர்த்தெழுதல் நம்பிக்கை பற்றிய நிச்சயம் (15:​1–16:24). உயிர்த்தெழுப்பப்பட்ட கிறிஸ்து, கேபாவுக்கும், பன்னிருவருக்கும், ஒரே சமயத்தில் 500-க்கும் மேற்பட்ட சகோதரருக்கும், யாக்கோபுக்கும், அப்போஸ்தலர் அனைவருக்கும், கடைசியாக பவுலுக்கும் தரிசனமானார். “கிறிஸ்து எழுப்பப்படவில்லையென்றால் எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா” என்று பவுல் எழுதுகிறார். (15:​14, தி.மொ.) ஒவ்வொருவரும் அவரவர் வரிசையில் எழுப்பப்படுகின்றனர், கிறிஸ்து முதற்பலனானவர், அதற்குப் பின்பு அவருடைய வந்திருத்தலின்போது அவருக்குரியவர்கள் எழுப்பப்படுவார்கள். எல்லா சத்துருக்களும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தப்பட்ட பின்பு, முடிவில் ராஜ்யத்தை அவர் தம்முடைய பிதாவிடம் ஒப்புவிக்கிறார். கடைசி சத்துருவாகிய மரணமும்கூட ஒன்றுமில்லாமல் ஆக்கப்படும். உயிர்த்தெழுதல் இல்லையெனில் பவுல் தொடர்ந்து மரணத்துக்கு ஏதுவான ஆபத்துக்களை எதிர்ப்படுவதால் அவருக்கென்ன பயன்?

21ஆனால் மரித்தோர் எவ்வாறு எழுப்பப்படுவர்? ஒரு செடி வளருவதற்கு, விதைக்கப்பட்ட தானியம் சாக வேண்டும். மரித்தோர் உயிர்த்தெழுதலும் அதைப் போன்றதே. “ஜென்மசரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும். . . . மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது.” (15:​44, 50) பவுல் பரிசுத்த இரகசியம் ஒன்றைச் சொல்கிறார்: எல்லாரும் மரண நித்திரையை ருசிக்கப் போவதில்லை. ஆனால் கடைசி எக்காளத்தின்போது, கண்ணிமைப் பொழுதில் அவர்கள் மாற்றப்படுவார்கள். இப்படி அழிவுள்ளது அழியாமையைத் தரித்துக்கொள்கையில், மரணம் என்றென்றுமாக விழுங்கப்படும். “மரணமே, உன் ஜெயம் எங்கே? மரணமே, உன் கொடுக்கு எங்கே?” “நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நமக்கு ஜெயங்கொடுக்கிற கடவுளுக்கு ஸ்தோத்திரம்” என்று பவுல் இருதயப்பூர்வமாய் போற்றுகிறார்!​—15:​55, 57, தி.மொ.

22இறுதியாக பவுல், தேவையிலிருக்கும் சகோதரருக்கு உதவும் விதத்தில் நன்கொடைகளைச் சரியான முறையில் சேர்த்து எருசலேமுக்கு அனுப்புவதைப் பற்றி அறிவுரை கொடுக்கிறார். மக்கெதோனியா வழியாய் அவர்களிடம் தான் வரவிருப்பதைச் சொல்லிவிட்டு, தீமோத்தேயுவும் அப்பொல்லோவுங்கூட வரலாம் என்று குறிப்பிடுகிறார். “விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புருஷராயிருங்கள், திடன்கொள்ளுங்கள். உங்கள் காரியங்களெல்லாம் அன்போடே செய்யப்படக்கடவது” என்று பவுல் புத்திமதி கூறுகிறார். (16:​13, 14) ஆசியாவிலுள்ள சபைகளிலிருந்து வாழ்த்துக்களை அனுப்புகிறார், பின்பு தன் கையாலேயே கடைசி வாழ்த்துக்களை எழுதி அன்பைத் தெரிவிக்கிறார்.

ஏன் பயனுள்ளது

23அப்போஸ்தலன் பவுலின் இந்த நிருபம் எபிரெய வேதாகமத்தை நன்கு புரிந்துகொள்ள பெரிதும் உதவுகிறது, அதிலிருந்து அநேக மேற்கோள்களை காட்டுகிறது. பத்தாவது அதிகாரத்தில், மோசேயின் வழிநடத்துதலின்கீழ் இஸ்ரவேலர் ஆவிக்குரிய கன்மலையிலிருந்து குடித்தார்களென்றும், அந்தக் கன்மலை கிறிஸ்துவை அர்த்தப்படுத்துகிறதென்றும் பவுல் குறிப்பிட்டுக் காட்டுகிறார். (1 கொ. 10:4; எண். 20:11) மோசேயின் வழிநடத்துதலின்கீழ் இஸ்ரவேலர் தீய காரியங்களை விரும்பியதால் விளைந்த அழிவுக்கேதுவான பாதிப்புகளை எச்சரிக்கைக்குரிய மாதிரிகளாக தொடர்ந்து குறிப்பிட்டு அவர் சொல்கிறதாவது: ‘இந்தக் காரியங்கள் மாதிரிகளாக அவர்களுக்கு நிகழ்ந்துகொண்டிருந்தன. இந்தக் காரிய ஒழுங்குமுறையினுடைய முடிவின் சமீபத்தில் இருக்கிற நமக்கு ஓர் எச்சரிக்கையாக அவை எழுதப்பட்டும் இருக்கின்றன.’ நாம் விழுந்துவிட மாட்டோம் என்று எண்ணி, ஒருபோதும் தன்னம்பிக்கையோடு இருக்கக்கூடாது! (1 கொ. 10:​11, 12, NW; எண். 14:2; 21:5; 25:9) நியாயப்பிரமாணத்திலிருந்து இன்னொரு உதாரணத்தையும் குறிப்பிடுகிறார். கர்த்தருடைய இராப்போஜனத்தில் பங்குகொள்வோர் யெகோவாவின் பந்தியில் தகுதியான முறையில் பங்குகொள்ள வேண்டும் என்பதைக் காட்டுவதற்கு இஸ்ரவேலில் செலுத்தப்பட்ட சமாதான பலிகளைக் குறிப்பிடுகிறார். பின்பு, கறிக்கடையில் விற்கப்படும் எல்லாவற்றையும் சாப்பிடுவது சரியென்ற தன் விவாதத்தை ஆதரிப்பதற்கு சங்கீதம் 24:​1-லிருந்து மேற்கோள் காண்பித்து, “பூமியும் அதன் நிறைவும் . . . யெகோவாவினுடையவை” என்று சொல்கிறார்.​—1 கொ. 10:​18, 21, 26, NW; யாத். 32:6; லேவி. 7:​11-15.

24“தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைக”ளின் மேன்மையையும், இந்த உலக “ஞானிகளுடைய சிந்தனைக”ளின் பயனற்ற தன்மையையும் விளக்குவதற்கு, பவுல் மறுபடியுமாக எபிரெய வேதாகமத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறார். (1 கொ. 2:​9; 3:20; ஏசா. 64:4; சங். 94:11) தவறுசெய்தவனை சபையிலிருந்து நீக்குவதன் சம்பந்தமாக ஐந்தாம் அதிகாரத்தில் தான் கொடுத்த அறிவுரைகளுக்கு அதிகாரப்பூர்வ ஆதாரமளிப்பவராய், ‘தீமையானதை உன் நடுவிலிருந்து அகற்றிவிட வேண்டும்’ என்ற யெகோவாவின் சட்டத்தை மேற்கோள் காட்டுகிறார். (உபா. 17:​7, தி.மொ.) ஊழியத்தினால் தன் பிழைப்புக்கு வழி செய்துகொள்ள தனக்கு உரிமை இருப்பதைக் குறித்து பேசுகையில், பவுல் மீண்டும் மோசேயின் நியாயப்பிரமாணத்திடம் கவனத்தைத் திருப்புகிறார். போரடிக்கும் விலங்குகளின் வாயைக் கட்டக்கூடாதென்றும் ஆலய சேவையிலிருக்கும் லேவியர்கள் பலிபீடத்திலிருந்து தங்கள் பங்கைப் பெற வேண்டுமென்றும் அது சொன்னதைக் காண்பிக்கிறார்.​—1 கொ. 9:​8-14; உபா. 25:4; 18:1.

25பவுல் ஏவுதலால் கொரிந்தியருக்கு எழுதிய முதல் நிருபத்தின் போதனையிலிருந்து எவ்வளவு நன்மைகளை நாம் பெற்றிருக்கிறோம்! பிரிவினைகளுக்கும் மனிதரைப் பின்பற்றுவதற்கும் எதிரான அறிவுரையின் பேரில் தியானியுங்கள். (அதிகாரங்கள் 1-4) ஒழுக்கக்கேடு சம்பந்தப்பட்ட சம்பவம் ஒன்று தலைதூக்கியதையும், சபைக்குள் ஒழுக்கமும் சுத்தமும் தேவை என்பதை பவுல் எவ்வாறு அறிவுறுத்தினார் என்பதையும் நினைவுபடுத்திப் பாருங்கள். (அதிகாரங்கள் 5, 6) மணமாகாத நிலை, திருமணம், மணவிலக்கு ஆகியவை சம்பந்தமாக ஏவப்பட்டு எழுதப்பட்ட அவருடைய அறிவுரைக்குக் கவனம் செலுத்துங்கள். (அதிகாரம் 7) விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவுகளைப் பற்றியும், அதோடு மற்றவர்களை இடறலடையச் செய்யாமலும், விக்கிரகாராதனைக்குள் வீழ்ந்துவிடாமலும் காத்துக்கொள்வதன் தேவையைப் பற்றியும் பவுல் கலந்தாலோசிப்பதைச் சிந்தித்துப் பாருங்கள். (அதிகாரங்கள் 8-10) தகுந்த கீழ்ப்படிதல் சம்பந்தமான புத்திமதி, ஆவிக்குரிய வரங்களைப் பற்றிய குறிப்பு, என்றும் நிலைத்திருக்கும் அழியாத குணமாகிய அன்பின் மேன்மையைப் பற்றிய மிக நடைமுறையான கலந்தாலோசிப்பு ஆகியவற்றிற்கும்கூட மீண்டும் கவனம் திருப்பப்பட்டது. கிறிஸ்தவ கூட்டங்களில் நிலவ வேண்டிய ஒழுங்கை அப்போஸ்தலன் எவ்வளவு நன்றாய் அறிவுறுத்தினார்! (அதிகாரங்கள் 11-14) ஏவுதலினால் உயிர்த்தெழுதலை ஆதரித்து எவ்வளவு அற்புதமாய் எழுதியிருக்கிறார்! (அதிகாரம் 15) இவையாவும் இன்னுமனேக விஷயங்களும் நம் மனக்கண் முன் வந்திருக்கின்றன; நம் நாளைய கிறிஸ்தவர்களுக்கு இவை பெரும் பயன்மிக்கவை!

26இந்த நிருபம் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய அருமையான பைபிள் பொருளை சிறந்த முறையில் மேலும் நன்கு புரிந்துகொள்ள நமக்கு உதவுகிறது. அநீதியுள்ளவர்கள் ராஜ்யத்துக்குள் பிரவேசிப்பதில்லை என்ற கடும் எச்சரிக்கையைக் கொடுக்கிறது. ஒருவனை தகுதியற்றவனாக்கும் தீய செயல்கள் பலவற்றை வரிசையாய் குறிப்பிடுகிறது. (1 கொ. 6:​9, 10) ஆனால் எல்லாவற்றிலும் மிக முக்கியமாக, உயிர்த்தெழுதலுக்கும் கடவுளுடைய ராஜ்யத்துக்கும் இடையே உள்ள சம்பந்தத்தை விளக்குகிறது. உயிர்த்தெழுதலின் “முதற்பலனானவ”ராகிய கிறிஸ்து, ‘எல்லா சத்துருக்களையும் கடவுள் அவருடைய பாதத்தின் கீழ்ப் போடும்வரைக்கும் அரசாள’ வேண்டும் என்று காட்டுகிறது. பின்பு மரணம் உட்பட, எல்லா சத்துருக்களையும் அவர் கீழ்ப்படுத்திய பின், ‘கடவுளே எல்லாருக்கும் எல்லாமுமாயிருப்பதற்காக,’ ‘ராஜ்யத்தைத் தம்முடைய கடவுளும் பிதாவுமானவரிடம் ஒப்புவிக்கிறார்.’ கடைசியாக, ஏதேனில் கொடுக்கப்பட்ட ராஜ்ய வாக்குறுதியின் நிறைவேற்றமாக, கிறிஸ்து, உயிர்த்தெழுப்பப்பட்ட தம்முடைய ஆவிக்குரிய சகோதரரோடுகூட சாத்தானின் தலையை முழுமையாக நசுக்கிப் போடுகிறார். பரலோக ராஜ்யத்தில் கிறிஸ்து இயேசுவுடன் அழியாமையைப் பகிர்ந்துகொள்ள இருப்பவர்களின் உயிர்த்தெழுதல் எதிர்பார்ப்பு நிச்சயமாகவே மகத்தானது. உயிர்த்தெழுதல் நம்பிக்கையின் ஆதாரத்தின்பேரிலேயே பவுல் பின்வருமாறு அறிவுரை கூறுகிறார்: “ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, ஆண்டவருக்குள் உங்கள் உழைப்பு விருதாவாயிராதென்றறிந்து நீங்கள் ஆண்டவரின் வேலையில் எப்பொழுதும் பெருகி உறுதியுள்ளவர்களும் அசையாதவர்களுமாகுங்கள்.”​—1 கொ. 15:​20-28, 58, தி.மொ.; ஆதி. 3:15; ரோ. 16:20.

[அடிக்குறிப்புகள்]

a ஹாலியின் பைபிள் கைப்புத்தகம் (ஆங்கிலம்), 1988, ஹெச். ஹெச். ஹாலி, பக்கம் 593.

b ஸ்மித்தின் பைபிள் அகராதி (ஆங்கிலம்), 1863, தொ. 1, பக்கம் 353.

c தி இன்டெர்பிரெட்டர்ஸ் பைபிள், தொ. 10, 1953, பக்கம் 13.

d தி இன்டெர்பிரெட்டர்ஸ் பைபிள், தொ. 9, 1954, பக்கம் 356.

[கேள்விகள்]

1. பவுலின் நாட்களில் கொரிந்து எப்படிப்பட்ட பட்டணமாக இருந்தது?

2. கொரிந்திய சபை எவ்வாறு ஸ்தாபிக்கப்பட்டது, ஆகவே பவுலுடன் எப்படிப்பட்ட பிணைப்பு அதற்கு இருந்தது?

3. கொரிந்தியருக்கு தன் முதல் நிருபத்தை எழுத பவுலைத் தூண்டியது எது?

4. ஒன்று கொரிந்தியரை எபேசுவிலிருந்து பவுல் எழுதினார் என்று எது நிரூபிக்கிறது?

5. கொரிந்தியருக்கு எழுதிய நிருபங்களின் நம்பகத் தன்மையை எது உறுதிப்படுத்துகிறது?

6. கொரிந்திய சபையில் என்ன பிரச்சினைகள் நிலவின, பவுல் முக்கியமாய் எதில் ஆர்வம் காட்டினார்?

7. ஒன்று கொரிந்தியரை என்ன மனப்பான்மையோடு நாம் ஆராய வேண்டும், ஏன்?

8. (அ) சபையில் பிரிவினையின் மடமையை பவுல் எவ்வாறு வெட்டவெளிச்சமாக்குகிறார்? (ஆ) கடவுளுடைய காரியங்களைப் புரிந்துகொள்வதற்கு எது அவசியமென பவுல் காட்டுகிறார்?

9. மனிதரில் ஒருவரும் பெருமை பாராட்டக்கூடாது என்பதை எந்த விவாதத்தின் மூலம் பவுல் காட்டுகிறார்?

10. கொரிந்தியரின் பெருமை பாராட்டல் ஏன் சரியற்றது, நிலைமையைச் சரிப்படுத்துவதற்கு என்ன படிகளை பவுல் எடுக்கிறார்?

11. என்ன ஒழுக்கக்கேடு நடந்திருந்தது, அதைக் குறித்து என்ன செய்ய வேண்டும், ஏன்?

12. (அ) பிரச்சினையைத் தீர்க்க நீதிமன்றம் வரை செல்வதைப் பற்றிய பவுலின் விவாதம் என்ன? (ஆ) “வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்” என்று பவுல் ஏன் சொல்கிறார்?

13. (அ) மணம் செய்துகொள்ளும்படி சிலருக்கு பவுல் ஏன் அறிவுரை கூறுகிறார்? ஆனால் மணம் செய்துகொண்டால், அவர்கள் என்ன செய்ய வேண்டும்? (ஆ) மணமாகாதவன் எவ்வாறு ‘மேம்பட்டதைச் செய்கிறான்’?

14. ‘தேவர்களையும்,’ ‘கர்த்தாக்களையும்’ பற்றி பவுல் என்ன சொல்கிறார், எனினும் விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவுக்கு விலகியிருப்பது எப்போது ஞானமானது?

15. ஊழியத்தில் பவுல் எவ்வாறு தன்னை நடத்திக்கொள்கிறார்?

16. (அ) ‘முற்பிதாக்களிடமிருந்து’ என்ன எச்சரிக்கையைக் கிறிஸ்தவர்கள் ஏற்க வேண்டும்? (ஆ) விக்கிரகாராதனையின் விஷயத்தில் எவ்வாறு கிறிஸ்தவர்கள் எல்லாவற்றையும் கடவுளுடைய மகிமைக்கென்று செய்யலாம்?

17. (அ) தலைமைத்துவம் சம்பந்தமாக என்ன நியமத்தைப் பவுல் குறிப்பிடுகிறார்? (ஆ) சபையிலுள்ள பிரிவினையை கர்த்தருடைய இராப்போஜனத்தோடு பவுல் எவ்வாறு இணைக்கிறார்?

18. (அ) எத்தனை எத்தனையோ வரங்களும் ஊழியங்களும் இருந்தாலும், சரீரத்தில் ஏன் பிரிவினை இருக்கக்கூடாது? (ஆ) அன்பு ஏன் எல்லாவற்றிலும் பிரதானமானது?

19. சபையைக் கட்டியெழுப்புவதற்கும் காரியங்கள் ஒழுங்காய் கிரமப்படி நடப்பதற்கும் பவுல் என்ன அறிவுரை கொடுக்கிறார்?

20. (அ) கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறித்து என்ன அத்தாட்சியைப் பவுல் அளிக்கிறார்? (ஆ) என்ன வரிசைமுறையில் உயிர்த்தெழுதல் நடைபெறும், எந்தச் சத்துருக்கள் கீழ்ப்படுத்தப்பட வேண்டும்?

21. (அ) கடவுளுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்போர் எவ்வாறு உயிர்த்தெழுப்பப்படுகின்றனர்? (ஆ) என்ன பரிசுத்த இரகசியத்தைப் பவுல் வெளிப்படுத்துகிறார், மரணத்தின்மேல் வெற்றியைப் பற்றி அவர் என்ன சொல்கிறார்?

22. என்ன முடிவான அறிவுரையையும் ஊக்குவிப்பையும் பவுல் கொடுக்கிறார்?

23. (அ) தவறான இச்சை, தன்னம்பிக்கை ஆகியவற்றின் அழிவுக்கேதுவான பாதிப்புகளைப் பவுல் எவ்வாறு சித்தரித்துக் காட்டுகிறார்? (ஆ) கர்த்தருடைய இராப்போஜனம், தகுந்த உணவுகள் சம்பந்தமாக அறிவுரை கொடுப்பதில் எந்த அதிகாரத்துவத்தைப் பவுல் குறிப்பிடுகிறார்?

24. தன் விவாதங்களை ஆதரிப்பதில் எபிரெய வேதாகமத்திலிருந்து வேறு என்ன சான்றுகளைப் பவுல் குறிப்பிடுகிறார்?

25. ஒன்று கொரிந்தியரில் அடங்கிய நன்மை பயக்கும் போதனையின் முக்கியமான குறிப்புகள் சில யாவை?

26. (அ) உயிர்த்தெழுப்பப்பட்ட கிறிஸ்து அரசராக ஆளுகையில், நெடுங்காலத்துக்கு முன்பு முன்னறிவிக்கப்பட்ட என்ன வேலையை நிறைவேற்றுகிறார்? (ஆ) உயிர்த்தெழுதல் நம்பிக்கையின் ஆதாரத்தின்பேரில், என்ன பலமான ஊக்கமூட்டுதலை பவுல் கொடுக்கிறார்?