Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் புத்தக எண் 48—கலாத்தியர்

பைபிள் புத்தக எண் 48—கலாத்தியர்

பைபிள் புத்தக எண் 48—கலாத்தியர்

எழுத்தாளர்: பவுல்

எழுதப்பட்ட இடம்: கொரிந்து அல்லது சீரியா அந்தியோகியா

எழுதி முடிக்கப்பட்டது: ஏ. பொ.ச. 50-52

கலாத்திய சபைகளுக்கு என குறிப்பிட்டு கலாத்தியர் 1:​2-ல் பவுல் எழுதுகையில் அவை, பிசீதியா நாட்டு அந்தியோகியா, இக்கோனியா, லீஸ்திரா, தெர்பை ஆகியவற்றை உட்படுத்துவது தெரிகிறது. இச்சபைகள் வெவ்வேறு மாவட்டங்களில் இருந்தாலும் எல்லாம் ரோம மாகாணத்துக்குள் இருந்தன. இந்தப் பிரதேசத்தின் வழியாக பவுலும் பர்னபாவும் மேற்கொண்ட முதல் மிஷனரி பயணத்தைப் பற்றி அப்போஸ்தலர் 13-ம் 14-ம் அதிகாரங்கள் குறிப்பிடுகின்றன; இதுவே கலாத்திய சபைகள் ஸ்தாபிக்கப்படுவதற்கு வழிநடத்தியது. இச்சபைகளில் யூதரும் யூதரல்லாதவர்களும் இருந்தனர்; கெல்ட்டிய இனத்தவர்கள் அல்லது கால் நாட்டினரும் அங்கிருந்தனர் என்பதில் சந்தேகமில்லை. இது ஏறக்குறைய பொ.ச. 46-ல் பவுல் எருசலேமுக்குச் சென்று சிறிது காலத்துக்குப் பின்பாகும்.​—அப். 12:25.

2பொ.ச. 49-ல், பவுல் தன் இரண்டாவது மிஷனரி பயணத்தை சீலாவோடு சேர்ந்து கலாத்திய பிராந்தியத்தில் தொடங்கினார். இது ‘சபைகள் விசுவாசத்தில் ஸ்திரப்பட்டு, நாளுக்குநாள் பெருகுவதில்’ விளைவடைந்தது. (அப். 16:5; 15:​40, 41; 16:​1, 2) எனினும், விரைவிலேயே கள்ளப் போதகர்களாகிய யூத மதவாதிகள் வந்தனர். விருத்தசேதனம் செய்வதும் மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்வதும் உண்மை கிறிஸ்தவத்திற்கு முக்கியமானது என கலாத்திய சபைகளிலிருந்த சிலரை நம்ப வைத்தனர். இதற்கிடையில் பவுல் தன் பயணத்தில், மீசியா, மக்கெதோனியா, கிரீஸ் ஆகியவற்றைக் கடந்து, முடிவில் கொரிந்துவை வந்தடைந்தார். அங்கே சகோதரர்களுடன் 18 மாதங்களுக்கும் மேல் தங்கினார். பின்பு, பொ.ச. 52-ல், எபேசு வழியாக, தான் புறப்பட்ட இடமாகிய சீரியாவின் அந்தியோகியாவுக்கு அதே ஆண்டிலேயே திரும்பினார்.​—அப். 16:​8, 11, 12; 17:15; 18:​1, 11, 18-22.

3எங்கே, எப்போது இந்த நிருபத்தை கலாத்தியருக்கு பவுல் எழுதினார்? யூத மதவாதிகளின் நடவடிக்கையைப் பற்றிய செய்தி அவருடைய காதை எட்டிய உடனேயே இதை அவர் எழுதினார் என்பதில் சந்தேகமில்லை. இது கொரிந்து, எபேசு, அல்லது சீரியாவின் அந்தியோகியாவாக இருக்கலாம். பொ.ச. 50-52-ல், அவர் 18 மாத காலம் கொரிந்துவில் தங்கியபோது இருக்கலாம். ஏனெனில், கலாத்தியாவிலிருந்து தகவல் அங்கு வந்தெட்ட அவ்வளவு காலம் தேவைப்பட்டது. எபேசுவில் எழுதியிருக்க முடியாது, ஏனெனில் திரும்பி வருகையில் கொஞ்ச நாட்களே அங்கே தங்கினார். எனினும், தான் புறப்பட்ட இடமாகிய சீரியாவின் அந்தியோகியாவில் “சிலகாலம் தங்கி”னார்; பெரும்பாலும் பொ.ச. 52-ன் கோடை காலமாக அது இருக்கலாம். இந்த நகரத்துக்கும் ஆசியா மைனருக்கும் இடையே சிறந்த போக்குவரத்து வசதியிருந்தது. அதனால், யூத மதவாதிகளைப் பற்றிய அறிக்கையை அவர் அங்கு பெற்றிருக்கலாம்; இந்தச் சமயத்தில் சீரியாவின் அந்தியோகியாவிலிருந்து கலாத்தியருக்குத் தன் நிருபத்தை எழுதியிருக்கலாம்.​—அப். 18:23.

4“மனுஷராலுமல்ல, மனுஷன் மூலமாயுமல்ல, இயேசு கிறிஸ்துவினாலும், . . . பிதாவாகிய தேவனாலும், அப்போஸ்தலனாயிரு”ந்தவர் என பவுலை இந்த நிருபம் விவரிக்கிறது. மேலும் பவுலின் வாழ்க்கையையும் அப்போஸ்தலத்துவத்தையும் பற்றிய பல உண்மை நிகழ்ச்சிகளையும் இது வெளிப்படுத்துகிறது. அப்போஸ்தலராக அவர் எருசலேமிலிருந்த அப்போஸ்தலர்களோடு ஒத்திசைந்து செயல்பட்டார் என்பதற்கு இது நிரூபணமாய் இருக்கிறது. மேலும் மற்றொரு அப்போஸ்தலனாகிய பேதுருவைத் திருத்துவதிலும் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தினாரென்றும் காட்டுகிறது.​—கலா. 1:1, 13-24; 2:​1-14.

5கலாத்தியரின் நம்பகத் தன்மையையும் அது பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலைச் சேர்ந்தது என்பதையும் என்ன உண்மைகள் மெய்ப்பிக்கின்றன? ஐரீனியஸ், அலெக்ஸாண்டிரியாவின் கிளெமென்ட், டெர்ட்டுல்லியன், ஆரிகென் ஆகியோரின் புத்தகங்களில் இதன் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், பின்வரும் முக்கியமான பைபிள் கையெழுத்துப்பிரதிகளின் தொகுப்பில் இது உள்ளது: சினியாட்டிக், அலெக்ஸாண்ட்ரின், வாடிகன் எண் 1209, இஃப்ரேமி சிரி ரெஸ்க்ரிப்டஸ் கையெழுத்துப்பிரதி, பெஸி கையெழுத்துப்பிரதி, செஸ்டர் பியட்டி பப்பைரஸ் எண் 2 (P46). மேலும், இது கிரேக்க வேதாகமத்தின் மற்ற புத்தகங்களோடு மட்டுமல்லாமல், அது அடிக்கடி மேற்கோள் காட்டும் எபிரெய வேதாகமத்தோடும் முழுமையாய் ஒத்திசைந்துள்ளது.

6“கலாத்தியா நாட்டிலுள்ள சபைகளுக்கு” பவுல் எழுதின நிருபம் உறுதியும் கண்டிப்பும் மிக்கது. அவர் தன்னை (1உண்மையான அப்போஸ்தலன் என்றும் (இந்த உண்மைக்குப் புறம்பாக அவருக்கு அவப்பெயர் சூட்ட யூத மதவாதிகள் நாடினர்) (2நியாயப்பிரமாணத்தின் செயல்களால் அல்ல, கிறிஸ்து இயேசுவின் மீதுள்ள நம்பிக்கையின் மூலமே நீதியுள்ளோராகத் தீர்க்கப்படுவர் என்றும், அதனால் விருத்தசேதனம் கிறிஸ்தவர்களுக்கு அவசியமில்லை என்றும் அதில் நிரூபிக்கிறார். வழக்கமாக தன் நிருபங்களை எழுதுவதற்கு ஒரு காரியதரிசியை உபயோகிக்கும் பவுல், கலாத்தியருக்கு எழுதிய நிருபத்தை ‘பெரிய எழுத்துக்களால் தன் கையாலேயே’ எழுதினார். (6:​11, தி.மொ.) இந்தப் புத்தகத்திலிருந்த விஷயங்கள், பவுலுக்கும் கலாத்தியருக்கும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை. இயேசு கிறிஸ்துவின் மூலம் உண்மை கிறிஸ்தவர்கள் பெற்ற சுயாதீனத்திற்கான மதித்துணர்வை இப்புத்தகம் வலியுறுத்துகிறது.

கலாத்தியரின் பொருளடக்கம்

7பவுல் தன் அப்போஸ்தலத்துவத்தின் சார்பாக வாதாடுகிறார் (1:​1–2:14). முதலில் கலாத்தியாவிலுள்ள சபைகளுக்கு பவுல் வாழ்த்துதல் தெரிவிக்கிறார்; பின்பு, அவர்கள் இவ்வளவு சீக்கிரத்தில் வேறொரு நற்செய்தியை ஏற்க மனம் சாய்ந்ததைக் குறித்து ஆச்சரியப்படுகிறார். உறுதியாக இவ்வாறு கூறுகிறார்: “நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.” அவர்களிடம் அவர் பிரசங்கித்த நற்செய்தி மனிதனிலிருந்து தோன்றியதல்ல. மனிதனால் அவருக்குக் கற்பிக்கப்பட்டதுமல்ல, “இயேசு கிறிஸ்துவே அதை . . . வெளிப்படுத்தினார்.” ஒரு காலத்தில் யூத மதத்தை வைராக்கியத்தோடு பின்பற்றின பவுல், கடவுளின் சபையைத் துன்புறுத்தி வந்தார். ஆனால் பின்னர், கடவுள் தம்முடைய குமாரனைப் பற்றிய நற்செய்தியை தேசத்தாருக்கு அறிவிப்பதற்கு தகுதியற்ற தயவினால் அவரை அழைத்தார். அவர் மதம் மாறியபின் மூன்று ஆண்டுகள் கழித்தே எருசலேமுக்குச் சென்றார். அப்போது, அப்போஸ்தலர்களில் பேதுருவையும், கர்த்தரின் சகோதரனான யாக்கோபையும் மட்டுமே அவர் கண்டார். யூதேயாவின் சபைகளில் இருந்தவர்கள் அவரைப்பற்றி கேள்விப்பட்டிருந்தனர்; அவர் நிமித்தமாக அவர்கள் ‘தேவனை மகிமைப்படுத்தின’ போதிலும் நேரில் அவரை பார்த்து பழகினதில்லை.​—1:​8, 12, 24.

8பதினான்கு ஆண்டுகளுக்குப் பின் பவுல் மறுபடியும் எருசலேமுக்கு சென்று தான் பிரசங்கித்து வந்த நற்செய்தியைக் குறித்து விளக்கினார். அவருடைய தோழராகிய தீத்து, கிரேக்கராக இருந்தபோதிலும், விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. விருத்தசேதனம் செய்யப்பட்டவர்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிக்கும் பொறுப்பு பேதுருவுக்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது. அதைப்போல், விருத்தசேதனம் செய்யப்படாதவர்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிக்கும் பொறுப்போ பவுலுக்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது. அதை, யாக்கோபும் கேபாவும் யோவானும் புரிந்துகொண்டனர்; எனவே, தாங்கள்தாமே விருத்தசேதனம் செய்யப்பட்டவர்களுக்குப் பிரசங்கிக்கவும் பவுலும் பர்னபாவும் புறஜாதியாரிடம் செல்லவும் ஒருமனதாய் ஒப்புதலளித்தனர். கேபா, அந்தியோகியாவுக்கு வருகிறார். அங்கே, விருத்தசேதனம் செய்யப்பட்டவர்களுக்குப் பயந்து, “சுவிசேஷத்தின் சத்தியத்திற்கேற்றபடி” சரியாய் நடக்க தவறினார்; அப்போது பவுல், அவர்களெல்லாருக்கும் முன்பாக அவரை கடிந்துகொண்டார்.​—2:14.

9நியாயப்பிரமாணத்தின்படி அல்ல, விசுவாசத்தினாலேயே நீதிமான்களாய் தீர்க்கப்படுவது (2:​15–3:29). “கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலேயன்றி நியாயப்பிரமாணக் கிரியைகளினால் மனுஷன் நீதிமானாகத் தீர்க்கப்படுவதில்லையென்று” யூதர்களாகிய நாம் அறிந்திருக்கிறோமென பவுல் விவாதிக்கிறார். யூதனானவன் இப்பொழுது கிறிஸ்துவுடன் ஐக்கியத்தில் வாழ்கிறான், கடவுளுடைய சித்தத்தைச் செய்ய விசுவாசத்தினால் பிழைத்திருக்கிறான். “நீதி நியாயப்பிரமாணத்தினால் வருவதானால் கிறிஸ்து மரித்தது வீணாயிற்றே.”​—2:​16, 21, தி.மொ.

10விசுவாசத்தினால் ஆவியைப் பெற துவங்கிய கலாத்தியர், நியாயப்பிரமாணத்தின் கிரியைகளால் கடவுளை வெற்றிகரமாக சேவிக்கலாம் என நம்பும் அளவுக்குப் புத்தியில்லாதவர்களா? விசுவாசத்தோடு கேட்பதே முக்கியமானது. ஆபிரகாம் “யெகோவாவில் விசுவாசம் வைத்தார், அது அவருக்கு நீதியாக எண்ணப்பட்டது.” இப்போது, கடவுளுடைய வாக்குறுதியின்படி, ‘விசுவாசத்தைக் கடைப்பிடிக்கிறவர்கள் விசுவாசமுள்ள ஆபிரகாமுடன் ஆசீர்வதிக்கப்படுகின்றனர்.’ கழுமரத்தில் கிறிஸ்து மரித்ததினால் நியாயப்பிரமாணத்தின் சாபத்திலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். கிறிஸ்துவே ஆபிரகாமின் வித்து; 430 ஆண்டுகளுக்குப் பின்னால் தோன்றிய நியாயப்பிரமாணம் அந்த வித்துவைப் பற்றிய வாக்குறுதியை நீக்கிவிடவில்லை. அப்படியானால், நியாயப்பிரமாணத்தின் நோக்கம் என்ன? “நாம் விசுவாசத்தினால் நீதிமான்களாகத் தீர்க்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடம் வழிநடத்துகிற உபாத்தியாக” இருந்தது. இப்போதோ, நாம் இனிமேலும் உபாத்தியாருக்குக் கட்டுப்பட்டு இல்லை, யூதனுக்கும் கிரேக்கனுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை, ஏனெனில் எல்லாரும் கிறிஸ்து இயேசுவுடன் ஐக்கியத்தில் ஒன்றுபட்டிருக்கிறோம்; அனைவரும் “ஆபிரகாமின் சந்ததியார்தான், வாக்குத்தத்தத்தின்படி சுதந்தரருமாம்.”​—3:​6, 9, NW, 24, 29, தி.மொ.

11கிறிஸ்தவ சுயாதீனத்தில் உறுதியாய் நிலைத்திருங்கள் (4:​1–6:18). நியாயப்பிரமாணத்தின்கீழ் இருந்தவர்களை விடுவிக்க கடவுள் தம்முடைய குமாரனை அனுப்பினார்; அவர்கள் “புத்திரசுவிகாரத்தைப் பெற்றுக்கொள்ளும்படி”க்கு அப்படி செய்தார். (4:​5, தி.மொ.) ஆகவே பலனற்ற, அற்பமான அடிப்படை போதனைகளின் அடிமைத்தனத்துக்கு ஏன் மீண்டும் திரும்ப வேண்டும்? கலாத்தியர் இப்போது நாட்களையும் மாதங்களையும் காலங்களையும் ஆண்டுகளையும் பார்க்கிறார்கள்; எனவே அவர்களுக்கான தன்னுடைய பிரயாசம் வீணாகிவிட்டதோ என பவுல் பயப்படுகிறார். பவுல் அவர்களை முதல் முறை சந்திக்க வந்தபோது, அவர்கள் அவரைத் தேவதூதனைப்போல் ஏற்றுக் கொண்டனர். அவர் சத்தியத்தை அவர்களுக்கு சொல்வதால் இப்போது அவர்களுடைய சத்துருவாகிவிட்டாரா? நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டிருக்க விரும்புவோர் நியாயப்பிரமாணம் சொல்வதைக் கேட்பார்களாக: ஆபிரகாம் இரண்டு குமாரர்களை இரண்டு ஸ்திரீகளிடமிருந்து பெற்றார். அதில் ஒருத்தி அடிமைப் பெண் ஆகார்; இவள் மோசேயின் நியாயப்பிரமாண உடன்படிக்கையால் யெகோவாவுக்குக் கட்டுப்பட்ட சரீரப்பிரகாரமான இஸ்ரவேலருக்கு ஒப்பாயிருக்கிறாள். இந்த உடன்படிக்கை அடிமைத்தனத்துக்குரிய பிள்ளைகளையே பிறப்பிக்கிறது. சுயாதீன ஸ்திரீயாகிய சாராள், மேலான எருசலேமுக்கு ஒப்பாயிருக்கிறாள். அவள் “சுயாதீனமுள்ளவள், அவளே நம்மெல்லாருக்கும் தாய்” என்று பவுல் சொல்கிறார். “வேதவாக்கியம் சொல்லுகிறதென்ன?” என்று பவுல் கேட்கிறார். இதுவே: “அடிமையானவளின் மகன் சுயாதீனமுள்ளவளுடைய மகனோடே சுதந்தரவாளியாவதேயில்லை.” நாம் அடிமைப் பெண்ணின் பிள்ளைகள் அல்ல, “சுயாதீனமுள்ளவளின் பிள்ளைகளே.”​—4:​30, 31, தி.மொ.

12விருத்தசேதனமோ விருத்தசேதனமில்லாமையோ அது எதையும் அர்த்தப்படுத்துவதில்லை, அன்பினால் செயல்படுகிற விசுவாசமே பயனுள்ளது என பவுல் விளக்குகிறார். “உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக” என்பதில் நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறுகிறது. ஆவியில் தொடர்ந்து நடங்கள், ஏனெனில், “ஆவியினால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல.” மாம்சத்தின் கிரியைகளைக் குறித்ததில், “இப்படிப்பட்டவைகளைச் செய்துவருகிறவர்கள் கடவுளின் ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று” பவுல் முன்கூட்டியே எச்சரிக்கிறார். இதற்கு முற்றிலும் எதிரான ஆவியின் கனிகளை அவர் விவரிக்கிறார்; அவற்றிற்கு எதிராக எந்தப் பிரமாணமுமில்லை என சொல்வதோடு, “நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம்,” வீண் புகழ்ச்சியையும் பொறாமையையும் விலக்கக்கடவோம் என்றும் குறிப்பிடுகிறார்.​—5:​14, 18, 21, தி.மொ., 25.

13அறியாமல் ஒருவன் ஏதோ தவறு செய்துவிட்டால், ஆவிக்குரிய தகுதிபெற்றவர்கள் அவனைச் “சாந்தமுள்ள ஆவியோடு” திரும்ப சீர்பொருத்த வேண்டும். கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் பாரங்களைச் சுமப்பதன் மூலம் கிறிஸ்துவின் பிரமாணத்தை நிறைவேற்றுகின்றனர்; ஆனால் அவரவர் கிரியையை நிரூபிப்பதற்கு அவரவர் சுமைகளை சுமக்க வேண்டும். ஒருவன் தான் விதைக்கிறபடியே, மாம்சத்திலிருந்து அழிவையோ ஆவியிலிருந்து நித்திய ஜீவனையோ அறுப்பான். கலாத்தியர் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டுமென்பவர்கள், மனிதரைப் பிரியப்படுத்துவதற்கும் துன்புறுத்துதலைத் தவிர்ப்பதற்குமே அவ்வாறு வலியுறுத்துகின்றனர். விருத்தசேதனமோ விருத்தசேதனமில்லாமையோ அல்ல, புது சிருஷ்டியே முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த பிரமாணத்திற்கேற்ப ஒழுங்காய் நடப்போரின்மீதும், “கடவுளின் இஸ்ரவே”ல்மீதும் சமாதானம் நிலவும், இரக்கமும் கிடைக்கும்.​—6:​1, 16, தி.மொ.

ஏன் பயனுள்ளது

14ஒருகாலத்தில் மூர்க்கமாய் துன்புறுத்தி வந்த பவுல், புறஜாதிகளுக்கு பிரசங்கிக்கும் அப்போஸ்தலராகவும், தன் சகோதரரின் நலனுக்காக போராட எப்போதும் தயாராயிருப்பவராகவும் மாறினதை கலாத்தியருக்கு எழுதின நிருபம் வெளிப்படுத்துகிறது. (1:​13-16, 23; 5:​7-12) கண்காணியானவர் பிரச்சினைகளை விரைவாய் கையாள வேண்டும், பொய் புரட்டல்களை நியாயமான முறையிலும் வேதாகமத்தை உபயோகித்தும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்றும் பவுல் தன் முன்மாதிரியால் சுட்டிக்காட்டினார்.​—1:​6-9; 3:​1-6.

15கிறிஸ்துவில் தங்கள் சுயாதீனத்தைத் தெளிவாக நிலைநாட்டுவதற்கும், நற்செய்தியைப் புரட்டுவோரை நம்பாதிருப்பதற்கும் இந்த நிருபம் கலாத்தியாவிலிருந்த சபைகளுக்கு அதிக பயனுள்ளதாய் இருந்தது. விசுவாசத்தினால் ஒருவன் நீதிமானாக அறிவிக்கப்படுகிறான் என்பதையும், இரட்சிப்படைவதற்கு விருத்தசேதனம் இனிமேலும் தேவையில்லை என்பதையும் அது தெளிவாகக் காட்டினது. (2:16; 3:8; 5:6) அத்தகைய சரீரப்பிரகாரமான வேறுபாடுகளை விலக்கினதால், அது யூதனையும் யூதரல்லாதவனையும் ஒரே சபையில் ஐக்கியப்படுத்தியது. நியாயப்பிரமாணத்திலிருந்து கிடைத்த விடுதலையை மாம்ச இச்சைகளுக்கு சாக்காக பயன்படுத்தக் கூடாது. ஏனெனில், “உன்னிடத்தில் நீ அன்பு கூருவதுபோல அயலானிடத்திலும் அன்புகூர வேண்டும்” என்ற இந்த நியமம் மாறவில்லை; இன்றும் அது கிறிஸ்தவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறது.​—5:​14, தி.மொ.

16கோட்பாட்டுக்குரிய பல குறிப்புகளின்பேரில் பவுலின் நிருபம் கலாத்தியருக்கு உதவியாக இருந்தது. உந்துவிக்கும் உதாரணங்களை எபிரெய வேதாகமத்திலிருந்து எடுத்துக் குறிப்பிட்டது. ஏசாயா 54:​1-6-க்கு அது ஏவப்பட்ட விளக்கத்தைக் கொடுத்து, ‘மேலான எருசலேமை’ யெகோவாவின் ஸ்திரீ என அடையாளம் காட்டியது. ஆகாரையும் சாராளையும் பற்றிய ‘அடையாளக் குறிப்பான அர்த்தத்தை’ விளக்கி, கடவுளுடைய வாக்குறுதிகளின் சுதந்தரவாளிகள் கிறிஸ்துவால் சுயாதீனராக்கப்பட்டவர்கள், நியாயப்பிரமாணத்தின் அடிமைத்தனத்தில் நிலைத்திருப்போர் அல்ல என காட்டினது. (கலா. 4:​21-26; ஆதி. 16:​1-4, 15; 21:​1-3, 8-13) ஆபிரகாமிய உடன்படிக்கையை, நியாயப்பிரமாண உடன்படிக்கை ரத்துசெய்யாமல், அதோடு சேர்த்துக்கொள்ளப்பட்டதை இது தெளிவாக விளக்கினது. மேலும் இந்த இரண்டு உடன்படிக்கைகளும் ஏற்படுத்தப்பட்டதற்கு இடையே உள்ள காலப்பகுதி 430 ஆண்டுகள் எனவும் இது குறிப்பிட்டது. இது பைபிள் காலக்கணக்கில் முக்கியமாயுள்ளது. (கலா. 3:​17, 18, 23, 24) இந்தக் காரியங்களின் பதிவு இன்று கிறிஸ்தவ விசுவாசத்தைக் கட்டியெழுப்புவதற்கு பாதுகாக்கப்பட்டிருக்கிறது.

17அதிமுக்கியமாக, தீர்க்கதரிசிகள் அனைவரும் எதிர்நோக்கியிருந்த ராஜ்ய வித்தை கலாத்தியர் புத்தகம் வெகு தெளிவாக அடையாளம் காட்டுகிறது. ‘ஆபிரகாமுக்கும் அவருடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள் பண்ணப்பட்டன; . . . அந்தச் சந்ததி கிறிஸ்துவே.’ கிறிஸ்து இயேசுவில் விசுவாசம் வைப்பதன்மூலம் கடவுளுடைய குமாரராகிறவர்கள் இந்த வித்துக்குள் புத்திரசுவிகாரம் பெற்றவர்களாய் காட்டப்படுகின்றனர். “நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறீர்கள்.” (3:​16, 29) கலாத்தியரில் காணப்படும் இந்தச் சிறந்த அறிவுரைக்கு ராஜ்ய சுதந்தரவாளிகளும் அவர்களோடு சேர்ந்து உழைப்போரும் கவனம் செலுத்த வேண்டும்: ‘கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள்.’ ‘நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருங்கள்; தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.’ ‘யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தாருக்கும், நன்மைசெய்யுங்கள்.’​—5:1; 6:9, 10.

18கடைசியாக, மாம்சத்தின் கிரியைகளில் பழக்கமாய் ஈடுபடுபவர்கள், “தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை” என்ற உறுதியான எச்சரிக்கை கொடுக்கப்படுகிறது. அவ்வாறெனில், எல்லாரும், உலகப்பிரகாரமான அசுத்தத்தையும் சண்டை சச்சரவுகளையும் விட்டு முற்றிலும் விலகி, “அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” ஆகிய ஆவியின் கனிகளைப் பிறப்பிப்பதில் தங்கள் இருதயத்தை ஊன்ற வைப்பார்களாக.​—5:​19-23.

[கேள்விகள்]

1. கலாத்தியர் எந்தெந்த சபைகளுக்காக எழுதப்பட்டிருக்கிறது, அவை எவ்வாறு, எப்போது ஸ்தாபிக்கப்பட்டன?

2. (அ) கலாத்தியாவில் பவுலின் இரண்டாவது பயணத்தால் கிடைத்த பலன் என்ன, ஆனால் அதைத் தொடர்ந்து என்ன நடந்தது? (ஆ) இதற்கிடையில், பவுல் எவ்வாறு தன் பயணத்தைத் தொடர்ந்தார்?

3. எங்கே, எப்போது கலாத்தியர் எழுதப்பட்டிருக்கலாம்?

4. பவுலின் அப்போஸ்தலத்துவத்தைக் குறித்து கலாத்தியர் என்ன வெளிப்படுத்துகிறது?

5. கலாத்தியரின் நம்பகத் தன்மையையும் அது பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலைச் சேர்ந்ததென்பதையும் எந்த உண்மைகள் மெய்ப்பிக்கின்றன?

6. (அ) என்ன இரண்டு குறிப்புகளைக் கலாத்தியருக்கு எழுதின நிருபம் நிரூபிக்கிறது? (ஆ) இந்த நிருபம் எழுதப்பட்டதைக் குறித்ததில் எது வழக்கத்துக்கு மாறாக இருந்தது, இது எதை வலியுறுத்துகிறது?

7, 8. (அ) நற்செய்தியைக் குறித்து பவுல் என்ன விவாதிக்கிறார்? (ஆ) விருத்தசேதனம் செய்யப்படாதவர்களுக்கு அப்போஸ்தலன் என பவுல் எவ்வாறு உறுதிசெய்யப்பட்டார், கேபாவின் சம்பந்தமாக தன் அதிகாரத்தை அவர் எவ்வாறு மெய்ப்பித்துக் காட்டினார்?

9. எதன் அடிப்படையில் கிறிஸ்தவன் நீதிமானாக தீர்க்கப்படுகிறான்?

10. கடவுளுடைய ஆசீர்வாதத்தைப் பெற எது முக்கியமானதாய் கருதப்படுகிறது, ஆகவே நியாயப்பிரமாணத்தின் நோக்கம் என்ன?

11. (அ) எந்த விடுதலையை கலாத்தியர் பொருட்படுத்துவதில்லை? (ஆ) கிறிஸ்தவ சுயாதீனத்தைப் பவுல் எவ்வாறு சித்தரிக்கிறார்?

12. (அ) இப்போது கலாத்தியர் எதற்கேற்ப நடக்க வேண்டும்? (ஆ) என்ன முக்கியமான வேறுபாட்டைப் பவுல் குறிப்பிடுகிறார்?

13. கிறிஸ்துவின் பிரமாணம் எவ்வாறு நிறைவேற்றப்படுகிறது, எது முக்கிய அக்கறைக்குரியது?

14. என்ன முன்மாதிரியைப் பவுல் கண்காணிகளுக்கு வைக்கிறார்?

15. இந்த நிருபம் கலாத்திய சபைகளுக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருந்தது, எந்த வழிகாட்டும் குறிப்பை இன்று கிறிஸ்தவர்களுக்கு அளிக்கிறது?

16. எபிரெய வேதாகமத்திலுள்ள விசுவாசத்தைக் கட்டியெழுப்பும் என்ன விளக்கங்கள் கலாத்தியரில் காணப்படுகின்றன?

17. (அ) கலாத்தியர் எதை முக்கியமாய் அடையாளம் காட்டுகிறது? (ஆ) ராஜ்ய சுதந்தரவாளிகளுக்கும் அவர்களோடு சேர்ந்து உழைப்போருக்கும் என்ன சிறந்த அறிவுரை கொடுக்கப்படுகிறது?

18. எந்த உறுதியான எச்சரிக்கையும் அறிவுரையும் கலாத்தியரில் கொடுக்கப்பட்டுள்ளன?