Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் புத்தக எண் 50—பிலிப்பியர்

பைபிள் புத்தக எண் 50—பிலிப்பியர்

பைபிள் புத்தக எண் 50—பிலிப்பியர்

எழுத்தாளர்: பவுல்

எழுதப்பட்ட இடம்: ரோம்

எழுதி முடிக்கப்பட்டது: ஏ. பொ.ச. 60-61

நற்செய்தியை மக்கெதோனியாவில் அறிவிக்கும்படியான அழைப்பை அப்போஸ்தலன் பவுல் தரிசனத்தில் பெற்றார்; அவரும் அவருடைய தோழர்களான லூக்கா, சீலா, இளைஞனான தீமோத்தேயு ஆகியோரும் உடனடியாக அந்த அழைப்பிற்கு கீழ்ப்படிந்தனர். ஆசியா மைனரிலுள்ள துரோவாவிலிருந்து நெயாப்போலிக்கு அவர்கள் கப்பலில் சென்றனர். அங்கிருந்து ஏறக்குறைய 15 கிலோமீட்டர் தொலைவில் உள்நாட்டுக்குள் அமைந்திருந்த பிலிப்பிக்கு மலைப்பாதையில் உடனடியாக பயணப்பட்டனர். அது, ‘மக்கெதோனியா தேசத்து நாடுகளில் ஒன்றிற்குத் தலையானது’ என லூக்கா விவரித்திருக்கிறார். (அப். 16:​12) பொ.ச.மு. 356-ல் இந்த நகரத்தை மக்கெதோனியாவின் அரசன் இரண்டாம் பிலிப்பு (மகா அலெக்ஸாந்தரின் தகப்பன்) கைப்பற்றினார்; பின்பு இந்த நகரத்திற்கு பிலிப்பி என பெயரிடப்பட்டது. பின்னால் இதை ரோமர் கைப்பற்றினர். அதிகாரத்தை பலப்படுத்திக் கொள்ள ஆக்டேவியனுக்கு உதவிய மிக முக்கியமான போர்கள் பொ.ச.மு. 42-ல் இந்த இடத்தில் நடந்தன. இவரே பின்னர் அகஸ்து இராயன் என அழைக்கப்பட்டார். தன் வெற்றியின் நினைவாக, பிலிப்பியை இவர் ரோம குடியேற்றத்திற்கு உரியதாக்கினார்.

2புதிதாக ஒரு நகரத்துக்கு பிரசங்கிக்க செல்கையில், யூதர்களுக்கு முதலாவது பிரசங்கிப்பது பவுலின் வழக்கமாயிருந்தது. எனினும், ஏறக்குறைய பொ.ச. 50-ல் முதன் முதலாக அவர் பிலிப்பிக்கு வந்துசேர்ந்தபோது யூதர்கள் வெகு சிலரே இருப்பதைக் கண்டார். அங்கு ஒருவேளை ஜெபாலயம் இல்லாமல் இருந்திருக்கலாம். எனவே ஜெபிப்பதற்காக அவர்கள் அந்தப் பட்டணத்துக்கு வெளியே ஓர் ஆற்றோரத்தில் கூடுவது வழக்கமாய் இருந்தது. பவுலின் பிரசங்கிப்பு விரைவில் பலன்தந்தது. அங்கு லீதியாள் என்னும் பெண்மணி முதலாவது சத்தியத்தை ஏற்று மதம் மாறினாள். இவள் ஏற்கெனவே யூத மதத்துக்கு மாறினவள், வியாபாரம் செய்துவந்தாள். கிறிஸ்துவைப் பற்றிய சத்தியத்தை இவள் உடனடியாக ஏற்றதோடு, அந்தப் பயணிகளைத் தன் வீட்டில் தங்கும்படி வற்புறுத்தினாள்: ‘அவள் எங்களை வரும்படி செய்தாள்’ என்று லூக்கா எழுதுகிறார். எனினும், விரைவில் எதிர்ப்பு தலைதூக்கியது. பவுலும் சீலாவும் தடிகளால் அடிக்கப்பட்டு, சிறையிலிடப்பட்டனர். அவர்கள் சிறையில் இருக்கையில், பூமியதிர்ச்சி உண்டானது, சிறைச்சாலைக்காரனும் அவனுடைய குடும்பத்தாரும் பவுலுக்கும் சீலாவுக்கும் செவிசாய்த்து, விசுவாசிகளானார்கள். அடுத்த நாள் பவுலும் சீலாவும் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர். அந்த நகரத்தைவிட்டு செல்வதற்கு முன்பாக அவர்கள் லீதியாளின் வீட்டிலுள்ள சகோதரர்களை சந்தித்து அவர்களை உற்சாகப்படுத்தினர். அந்தப் பிலிப்பி சபை புதியதாக ஸ்தாபிக்கப்பட்டபோது எதிர்ப்பட்ட உபத்திரவங்களின் மங்காத நினைவுகளை மனதில் சுமந்தவராக பவுல் அங்கிருந்து சென்றார்.​—அப். 16:​9-40.

3சில ஆண்டுகளுக்குப் பின், தன் மூன்றாவது மிஷனரி பயணத்தின்போது, பவுல் மறுபடியுமாகப் பிலிப்பி சபைக்கு செல்ல முடிந்தது. அந்தச் சபை ஸ்தாபிக்கப்பட்டு ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்குப் பின்னரே இந்த நிருபத்தை அவர் எழுதினார். பிலிப்பியிலிருந்த சகோதரர்கள் காட்டிய நெகிழ வைக்கும் அன்பு, ஏவப்பட்ட இந்த நிருபத்தை அவர்களுக்கு எழுதும்படி பவுலைத் தூண்டியது. இது நேசத்திற்குரிய அந்த சபையின் பெயரிலேயே பரிசுத்த வேதவாக்கியங்களில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கிறது.

4இதன் முதல் வசனத்தில் குறிப்பிடப்பட்டபடி, பவுல்தான் இந்த நிருபத்தை எழுதினார் என்பதை பைபிள் உரையாசிரியர்கள் பொதுவாக ஒப்புக்கொள்கின்றனர். இதற்கு நல்ல காரணங்கள் உண்டு. அதைப் பவுல்தான் அவர்களுக்கு எழுதியிருந்தாரென்று, பாலிக்கார்ப் (பொ.ச. 69?-155?) பிலிப்பியருக்கு எழுதின தன் கடிதத்தில் குறிப்பிடுகிறார். இந்த நிருபம் பவுலினிடமிருந்து வந்ததாக இக்னேஷியஸ், ஐரீனியஸ், டெர்ட்டுல்லியன், அலெக்ஸாண்டிரியாவின் கிளெமென்ட் போன்ற ஆரம்ப கால பைபிள் உரையாசிரியர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். பொ.ச. இரண்டாம் நூற்றாண்டின் மியூராடோரியன் சுருள்களிலும், ஆரம்ப கால பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியல்கள் அனைத்திலும் இது குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் ஏறக்குறைய பொ.ச. 200-ஐச் சேர்ந்ததாக கருதப்படும் செஸ்டர் பியட்டி பப்பைரஸ் எண் 2 (P46)-ல் பவுலின் மற்ற எட்டு நிருபங்களுடன் இதுவும் காணப்படுகிறது.

5இது எழுதப்பட்ட இடத்தையும் தேதியையும் ஓரளவு நிச்சயமாய் நிரூபிக்க முடியும். இது எழுதப்பட்ட சமயத்தில், ரோமப் பேரரசனுடைய மெய்க்காவலனின் பொறுப்பில் பவுல் கைதியாக இருந்தார். அங்கு அவர் இருந்த இடத்தில் கிறிஸ்தவ நடவடிக்கை தீவிரமடைந்திருந்தது. இராயனுடைய வீட்டாரில் உண்மையுள்ளோரின் வாழ்த்துதல்களைத் தெரிவிப்பதோடு தன் நிருபத்தை முடிக்கிறார். இப்படி இவ்விஷயங்கள் அனைத்தும் இந்த நிருபம் ரோமிலிருந்து வந்ததை சுட்டிக் காட்டுகின்றன.​—பிலி. 1:​7, 13, 14; 4:22; அப். 28:​30, 31.

6ஆனால் இந்த நிருபம் எப்போது எழுதப்பட்டது? கிறிஸ்தவராக அவருடைய சிறையிருப்பைப் பற்றிய செய்தியும் அதற்கான காரணங்களும் ரோமப் பேரரசனின் காவலருக்கும் மற்ற பலருக்கும்கூட பரவியிருந்தது; எனவே பவுல் ஏற்கெனவே ரோமில் ஓரளவு காலம் இருந்ததாய் தோன்றுகிறது. மேலும், எப்பாப்பிரோதீத்து பவுலுக்கு ஒரு அன்பளிப்போடு பிலிப்பியிலிருந்து (ஏறக்குறைய 1,000 கிலோமீட்டர் தூரத்திலிருந்து) ரோமிற்கு வந்தார். ஆனால், அங்கு வந்ததும் அவர் நோய்வாய்ப்பட்டார் என்ற செய்தி மீண்டும் பிலிப்பியை சென்றெட்டியது. இச்செய்தியைக் கேட்டு பிலிப்பி சகோதரர்கள் துக்கித்த செய்தி மறுபடியும் ரோமை வந்தெட்டியது. இவையனைத்தும் நடந்தேற போதிய காலப்பகுதி இருந்தது. (பிலி. 2:​25-30; 4:18) ரோமில் பவுலின் முதல் சிறையிருப்பு காலம் ஏறக்குறைய பொ.ச. 59-61 ஆக இருப்பதால், அவர் இந்த நிருபத்தை ரோமுக்கு வந்தப்பின் ஓர் ஆண்டு அல்லது அதற்கும் சற்றுப்பின் ஏறக்குறைய பொ.ச. 60 அல்லது 61-ல் பெரும்பாலும் எழுதியிருக்கலாம்.

7சத்திய வார்த்தையினால் பிலிப்பியில் இந்தப் பிள்ளைகளைப் பெறுவதில் பவுல் கர்ப்ப வேதனைகளை அனுபவித்தார். பவுலின் பல பயணங்களின் போதும் இக்கட்டுகளின் போதும் தேவைப்பட்டவற்றை நன்கொடையாக அளித்து பிலிப்பியர் பாசத்தைப் பொழிந்து தங்கள் தயாள குணத்தை வெளிக்காட்டினர். மக்கெதோனியாவில் மேற்கொண்ட ஆரம்ப மிஷனரி வேலைகளில் யெகோவாவின் ஆசீர்வாதங்களின் அறிகுறியும் தென்பட்டன. இவை அனைத்தும், பவுலுக்கும் பிலிப்பிய சகோதரர்களுக்குமிடையே உறுதியான பரஸ்பர பந்தத்தை உருவாக்கின. இப்போது அவர்கள் அனுப்பிய தயவான நன்கொடையும், எப்பாப்பிரோதீத்துவைப் பற்றி அவர்கள் கவலையுடன் விசாரித்ததும், ரோமில் நற்செய்தி பரவியதைப் பற்றி அவர்கள் அறிய விரும்பியதும் சேர்ந்து அன்பும் பாசமுமுள்ள கட்டியெழுப்பும் ஒரு நிருபத்தை அவர்களுக்கு எழுதும்படி பவுலைத் தூண்டின.

பிலிப்பியரின் பொருளடக்கம்

8நற்செய்தியின் சார்பாக வழக்காடுவதும் அதன் முன்னேற்றமும் (1:​1-30). பவுலும் தீமோத்தேயுவும் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர். “முதல் நாளிலிருந்து இந்தக் கணநேரம் வரையில்” நற்செய்தியின் சார்பாக பிலிப்பியர் அளித்த அனைத்து நன்கொடைகளுக்காகவும் கடவுளுக்கு பவுல் நன்றி செலுத்துகிறார். அவர்கள் தங்கள் நல்ல வேலையை இறுதிவரை தொடர்வார்களென்று நம்பிக்கையாயிருக்கிறார். ஏனெனில், ‘நற்செய்திக்காக வழக்காடி சட்டப்பூர்வமாய் நிலைநாட்டுவது’ உட்பட, அவர்கள் பவுலோடு கடவுளின் தகுதியற்ற தயவைப் பெறும் பங்காளிகளாகவும் இருக்கின்றனர். பாசத்தில் அவர்கள்மீது ஏக்கங்கொண்டு அவர் சொல்கிறதாவது: ‘உங்கள் அன்பு இன்னும் அதிகமதிகமாய்ப் பெருகும்படியும் . . . அதிமுக்கியமான காரியங்களை நீங்கள் நிச்சயப்படுத்திக் கொள்ளும்படியும் . . . இதற்காகவே நான் தொடர்ந்து ஜெபித்து வருகிறேன்.’ (1:​5, 7, 9, 10, NW) தன் சிறையிருப்பு “சுவிசேஷ பிரபல்யத்திற்கு ஏதுவாயினவென்று” அவர்கள் அறிய விரும்புகிறார். எப்படியெனில், அவர் சிறையில் இருந்தது அனைவருக்கும் தெரியவந்தது, அதோடு சகோதரர் கடவுளுடைய வார்த்தையைப் பயமில்லாமல் பேச ஊக்குவிப்பை அளித்தது. இப்பொழுது மரித்தாலும் பவுலுக்கு நல்லதுதான்; இருந்தபோதிலும், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் மகிழ்ச்சிக்காகவும் அவர் உயிருடனிருப்பது அதிக அவசியமென்று அறிந்திருக்கிறார். நற்செய்திக்குத் தகுதியான முறையில் நடந்துகொள்ள அவர்களுக்கு அறிவுரை கொடுக்கிறார். தான் அவர்களிடம் வந்தாலும்சரி வராவிட்டாலும்சரி, அவர்கள் தங்களை ‘எதிர்க்கிறவர்கள் நிமித்தம் ஒன்றிலும் மிரளாதவர்களாய்’ ஒற்றுமையுடன் போராடுகிறார்கள் என்ற செய்தியை கேட்க விரும்புகிறார்.​—1:​12, 27, தி.மொ.

9கிறிஸ்துவினுடையதைப் போன்ற அதே மனப்பான்மையைக் காத்துவருதல் (2:​1-30). பிலிப்பியர் ‘அவரவர் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவதன்’ மூலம் மனத்தாழ்மையுடன் இருக்க பவுல் ஊக்குவிக்கிறார். கிறிஸ்து இயேசுவின் மனப்பான்மையே அவர்களுக்கும் இருக்க வேண்டும். அவர் கடவுளுடைய ரூபத்தில் இருந்தபோதிலும் மனிதனாகும்படி தம்மைத்தாமே வெறுமையாக்கி, கீழ்ப்படிதலுடன் மரணபரியந்தம் தம்மை தாழ்த்தினார். ஆகவே கடவுள் அவரை உயர்த்தி மற்ற எல்லா பெயருக்கும் மேலான பெயரை அவருக்குக் கொடுத்திருக்கிறார். பவுல் அவர்களுக்கு இவ்வாறு அறிவுரை கூறுகிறார்: “அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.” “எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள்.” உறுதியாய் “ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்”டிருங்கள். (2:​4, 12, 14, 16) தீமோத்தேயுவை அவர்களிடம் அனுப்ப நினைக்கிறார்; தானும் சீக்கிரத்தில் அவர்களைக் காண நிச்சயம் வருவாரென்று நம்புகிறார். தற்போது, அவர்கள் மீண்டும் சந்தோஷப்பட, நோயிலிருந்து திரும்ப சுகமடைந்திருக்கிற எப்பாப்பிரோதீத்துவை அவர்களிடம் அனுப்புகிறார்.

10“இலக்கை நோக்கித் தொடரு”தல் (3:​1–4:23). ‘உண்மையான விருத்தசேதனமுள்ளோராகிய நாம், நாய்களுக்கும், முடமாக்குபவர்களுக்கும் எச்சரிக்கையாயிருக்க வேண்டும்’ என்று பவுல் சொல்கிறார். மாம்ச பிரகாரமாக நம்பிக்கை வைப்பதற்கு எல்லாரையும்விட பவுலுக்கே அதிக காரணம் உள்ளது. விருத்தசேதனம் செய்யப்பட்ட ஒரு யூதனாகவும் பரிசேயனாகவும் அவர் பெற்ற தகுதி அதை நிரூபிக்கிறது. எனினும் இந்த எல்லாவற்றையும் அவர் ‘தன் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மையினிமித்தம்’ நஷ்டமென்று எண்ணியிருக்கிறார். விசுவாசத்தினால் வரும் நீதியின்மூலம், ‘மரித்தோரிலிருந்து முந்தின உயிர்த்தெழுதலை அடையும்படி’ நம்பிக்கை வைத்திருக்கிறார். (3:​2, 3, 8, 11, NW) ஆகையால், “பின்னானவைகளை மறந்து முன்னானவைகளைப் பார்த்துத் தாவியோடிக் கிறிஸ்து இயேசுவுக்குள் கடவுள் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளைப் பெறுவதற்கு இலக்கை நோக்கித் தொடருகிறேன்” (தி.மொ.) என்று பவுல் சொல்கிறார். அனுபவசாலிகள் அனைவரும் அதே மனப்பான்மையோடு இருப்பார்களாக. தங்கள் வயிறே தெய்வமென இருப்போரும் உள்ளனர்; அவர்களுடைய மனம் உலகப்பிரகாரமானவற்றின் மீதே நிலைத்துள்ளது, எனவே அவர்கள் முடிவு அழிவுதான். ஆனால் “நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது” என்று பவுல் உறுதியாய் சொல்கிறார்.​—3:​13, 14, 20.

11‘ஆண்டவருக்குள் சந்தோஷமாயிருங்கள்; . . . உங்கள் பொறுமை எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. உண்மையுள்ளவைகளெவைகளோ ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ நீதியுள்ளவைகளெவைகளோ தூயவைகளெவைகளோ அன்புக்குரியவைகளெவைகளோ நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ புண்ணியம் எதுவோ புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள். நீங்கள் என்னிடங் கற்றும் பெற்றும் கேட்டுங் கண்டுமிருக்கிறவைகளெவைகளோ அவைகளையே செய்துவாருங்கள்; அப்பொழுது சமாதானத்தின் கடவுள் உங்களோடிருப்பார்’ என்று பவுல் அறிவுரை கூறுகிறார். (4:​4-9, தி.மொ.) ‘தன்னைப் பலப்படுத்துகிறவருக்குள்’ எல்லாவற்றையும் செய்ய தனக்கு வல்லமை இருப்பினும், பிலிப்பியர் தன்னிடம் காட்டும் தயாள குணத்தை நினைத்து பவுல் மிகவும் சந்தோஷப்படுகிறார். அவர்களுடைய நன்கொடைக்காக அவர்களுக்கு மனமார நன்றி தெரிவிக்கிறார். மக்கெதோனியாவில் நற்செய்தியை அவர் அறிவிக்க தொடங்கியதிலிருந்து, அவர்கள் கொடுப்பதில் மேம்பட்டிருக்கின்றனர். அதற்குப் பலனாக கடவுள் ‘தம்முடைய ஐசுவரியத்தின்படி அவர்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.’ (4:​13, 19) இராயனுடைய வீட்டார் உட்பட, பரிசுத்தவான்கள் எல்லாருடைய வாழ்த்துக்களை அவர் அனுப்புகிறார்.

ஏன் பயனுள்ளது

12இந்தப் பிலிப்பியர் புத்தகம் நமக்கு எவ்வளவு பயனுள்ளது! யெகோவாவின் அங்கீகாரத்தைப் பெறவும், பிலிப்பிய சபைக்கு கிடைத்த பவுலின் பாராட்டுதலைப் போன்றே கிறிஸ்தவ கண்காணிகளிடமிருந்து பாராட்டுதலைப் பெறவும் நிச்சயம் விரும்புகிறோம். பிலிப்பியரின் முன்மாதிரியையும் பவுலின் அன்புள்ள புத்திமதியையும் பின்பற்றினால் அதை நாமும் பெறுவோம். பிலிப்பியரைப்போல் நாம் தயாள குணத்தைக் காட்ட வேண்டும்; நம் சகோதரர்கள் கஷ்டப்படும்போது அவர்களுக்கு உதவ மனமுள்ளோராக இருக்க வேண்டும், மேலும் நற்செய்தியின் சார்பாக வழக்காடி அதைச் சட்டப்பூர்வமாய் நிலைநாட்டுவதில் பங்குகொள்ள வேண்டும். (1:​3-7) நாம் தொடர்ந்து “ஒரே ஆவியிலே உறுதியாய் நின்று, ஒரே ஆத்துமாவினாலே சுவிசேஷத்தின் விசுவாசத்திற்காகக் கூடப்போராடி,” கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவில் “சுடர்களைப்போலப்” பிரகாசிக்க வேண்டும். இவற்றை நாம் செய்கையிலும், அதிக கவனம் செலுத்த வேண்டியவற்றைக் குறித்து எப்போதும் சிந்திக்கையிலும், அப்போஸ்தலனாகிய பவுலுக்கு மகிழ்ச்சியின் கிரீடமாய் இருந்த பிலிப்பியரைப் போல, நாமும் சகோதரர்களின் மகிழ்ச்சிக்குரியோர் ஆகலாம்.​—1:27; 2:14; 4:​1, 8.

13‘நீங்கள் ஒன்றுபோல் என்னைப் பார்த்து நடவுங்கள்’ என்று பவுல் சொல்கிறார். எந்த விதத்தில் அவரைப் பார்த்து பின்பற்றுவது? ஒரு வழியானது எல்லா சூழ்நிலைமைகளிலும் தன்னிறைவு உள்ளோராய் இருப்பதாகும். பவுல் நிறைவில் இருந்தபோதும் சரி குறைவில் இருந்தபோதும் சரி, குறைகூறாமல் அந்தச் சூழ்நிலைமைகளுக்கு ஏற்ப தன்னை வைத்துக்கொள்ள கற்றிருந்தார். கடவுளுடைய ஊழியத்தை ஆர்வத்தோடும் சந்தோஷத்தோடும் தொடருவதற்காக அதைக் கற்றிருந்தார். உண்மையுள்ள சகோதரர்களுக்கு கனிவான பாசத்தைக் காட்டுவதில் எல்லாரும் பவுலைப்போல் இருக்க வேண்டும். தீமோத்தேயு, எப்பாப்பிரோதீத்து ஆகியோரின் ஊழியத்தைக் குறித்து எந்தளவு பாசம் பொங்க அவர் பேசினார்! தன் பிலிப்பிய சகோதரர்களுடன் எந்தளவு நெருங்கிய உறவை அவர் அனுபவித்தார்! அவர்களை “எனக்குப் பிரியமும் வாஞ்சையுமான சகோதரரே, எனக்குச் சந்தோஷமும் கிரீடமுமானவர்களே” எனக் குறிப்பிட்டாரே!​—3:​17, தி.மொ. அடிக்குறிப்பு; 4:​1, தி.மொ., 11, 12; 2:​19-30.

14வேறு எவ்விதமாகவும் பவுலின் மாதிரியைப் பின்பற்றலாம்? “இலக்கை நோக்கித் தொடரு”வதில் பின்பற்றலாமே! ‘முக்கிய அக்கறைக்குரிய காரியங்களின்’ பேரில் தங்கள் மனதை ஊன்றவைப்போர் அனைவரும், வானத்திலும் பூமியிலுமுள்ள யெகோவாவின் அதிசயமான ஏற்பாட்டில் முக்கியமாய் ஆர்வம் காட்டுகின்றனர். அங்கே ‘பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசு கிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்.’ பிலிப்பியரில் காணப்படும் இந்தச் சிறந்த அறிவுரை, கடவுளுடைய ராஜ்யத்தின் சம்பந்தமாக நித்திய ஜீவனடையும் நம்பிக்கையுள்ள அனைவரும் அந்த இலக்கை நோக்கித் தொடர தூண்டுகிறது. எனினும், பிலிப்பியருக்கான இந்த நிருபம், தங்கள் ‘குடியிருப்பு பரலோகத்தில்’ இருப்போருக்காகவே முக்கியமாக எழுதப்படுகிறது. அவர்கள், கிறிஸ்துவின் ‘மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்தப்படுவதற்கு’ ஆவலாய்க் காத்திருக்கின்றனர். இவர்கள் எல்லாரும், “பின்னானவைகளை மறந்து முன்னானவைகளைப் பார்த்துத் தாவியோடி,” பரலோக ராஜ்யத்தில் தங்கள் மகிமையான சுதந்தரமாகிய “பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெறுவதற்கு இலக்கை நோக்கித் தொடரு”வதில் பவுலின் மாதிரியைப் பின்பற்றுவார்களாக!​—4:8; 2:​10, 11; 3:​13, 14, 20, 21, தி.மொ.

[கேள்விகள்]

1. (அ) நற்செய்தியை பிலிப்பியர் எவ்வாறு கேள்விப்பட்டனர்? (ஆ) பிலிப்பி நகரத்தைப் பற்றிய என்ன சரித்திர சூழமைவு ஆர்வத்திற்குரியது?

2. பிலிப்பியில் தன் பிரசங்கிப்பில் பவுல் என்ன முன்னேற்றம் செய்தார், அங்கே சபை தொடங்கப்பட்டதோடு என்ன சம்பவங்கள் நிகழ்ந்தன?

3. பின்னர் பிலிப்பிய சபையோடு பவுலுக்கு என்ன தொடர்புகள் இருந்தன?

4. பிலிப்பியரின் எழுத்தாளரை எது அடையாளம் காட்டுகிறது, இந்த நிருபத்தின் நம்பகத் தன்மையை எது நிரூபிக்கிறது?

5. இப்புத்தகம் ரோமிலிருந்து எழுதப்பட்டது என்பதை எது குறிப்பிடுகிறது?

6. பிலிப்பியர் எழுதப்பட்ட காலத்தை ஆதரிக்கும் என்ன அத்தாட்சி உள்ளது?

7. (அ) பிலிப்பியருக்கும் பவுலுக்குமிடையே எப்படிப்பட்ட அன்பிணைப்பு இருந்து வந்தது, அவர்களுக்கு எழுதும்படி எது அவரைத் தூண்டியது? (ஆ) பிலிப்பியர் எப்படிப்பட்ட நிருபம்?

8. (அ) பிலிப்பிய சகோதரர்கள்பேரில் தன் நம்பிக்கையையும் பாசத்தையும் பவுல் எவ்வாறு வெளிப்படுத்துகிறார்? (ஆ) தன் சிறைக்கட்டுகளைக் குறித்து பவுல் என்ன சொல்கிறார், என்ன அறிவுரையைக் கொடுக்கிறார்?

9. பிலிப்பியர் எவ்வாறு கிறிஸ்துவின் மனப்பான்மையைக் காத்துக்கொள்ளலாம்?

10. பவுல் எவ்வாறு இலக்கை நோக்கி தொடர்ந்திருக்கிறார், மற்றவர்களுக்கு அவர் என்ன அறிவுரை கூறுகிறார்?

11. (அ) என்ன காரியங்களைச் சிந்திக்கவும் செய்யவும் வேண்டும்? (ஆ) பிலிப்பியரின் தயாள குணத்தைக் குறித்து பவுல் என்ன சொல்கிறார்?

12. பிலிப்பியிலிருந்த சகோதரர்களைப்போல், இன்று நாம் எவ்வாறு கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற்று, நம் சகோதரர்களின் மகிழ்ச்சிக்குரியோராய் ஆகலாம்?

13. என்ன விதங்களில் நாம் ஒன்றுபட்டவர்களாய் பவுலின் மாதிரியைப் பின்பற்றலாம்?

14. பிலிப்பியருக்கு எழுதின இந்த நிருபம், வாழ்க்கையின் இலக்கைக் குறித்தும் ராஜ்யத்தைக் குறித்தும் என்ன சிறந்த அறிவுரையைக் கொடுக்கிறது, இந்த நிருபம் முக்கியமாய் யாருக்கு எழுதப்பட்டிருக்கிறது?