Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் புத்தக எண் 51—கொலோசெயர்

பைபிள் புத்தக எண் 51—கொலோசெயர்

பைபிள் புத்தக எண் 51—கொலோசெயர்

எழுத்தாளர்: பவுல்

எழுதப்பட்ட இடம்: ரோம்

எழுதி முடிக்கப்பட்டது: ஏ. பொ.ச. 60-61

எபேசுவிலிருந்து புறப்பட்ட இருவர் ஆசியா மைனர் வழியாக மியான்டர் நதியோரமாய் கிழக்கு நோக்கி பயணப்பட்டனர். பிரிகியா நாட்டிலுள்ள லீக்கஸ் எனப்பட்ட கிளைநதியை அடைந்தபோது, மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்கின் வழியாக நதி போகும் பாதையிலேயே செல்லும்படி அவர்கள் தென்கிழக்கு பக்கம் திரும்பினர். செழுமையான பச்சைப் பசேல் என்ற மேய்ச்சல் நிலங்களில், கூட்டம் கூட்டமாக செம்மறியாட்டு மந்தைகளின் அழகிய காட்சி அவர்களுக்கு தென்பட்டது. (கம்பளி பொருட்கள் அந்தப் பிராந்தியத்துக்கு முக்கிய வருவாய் அளித்தன. a) அந்தப் பள்ளத்தாக்கு வழியாக சென்ற இந்தப் பயணிகள் வலதுபுறத்தில் செல்வ செழிப்பான லவோதிக்கேயா நகரத்தைக் கடந்தனர்; அந்த மாகாணத்தில் ரோம நிர்வாகத்தின் மையமாய் அது திகழ்ந்தது. இடதுபுறம், நதிக்கு அப்பால் அவர்கள் ஹயராப்போலிஸைக் காண முடிந்தது. இது அதன் கோவில்களுக்கும் வெந்நீர் ஊற்றுகளுக்கும் புகழ்பெற்று விளங்கியது. இந்த இரண்டு நகரங்களிலும், அந்தப் பள்ளத்தாக்குக்கு ஏறக்குறைய பதினாறு கிலோமீட்டருக்கு அப்பாலிருந்த சிறிய பட்டணமாகிய கொலோசெயிலும்கூட கிறிஸ்தவ சபைகள் இருந்தன.

2அந்தப் பயணிகள் செல்லவிருந்த இடம் கொலோசெ. அவர்கள் இருவரும் கிறிஸ்தவர்கள். அவர்களில் ஒருவர் கொலோசெயைச் சேர்ந்தவர், ஆகையால் அந்தப் பிராந்தியம் அவருக்கு பழக்கப்பட்ட ஒன்று. அவருடைய பெயர் ஒநேசிமு. இவர், அங்கேயிருந்த சபையின் அங்கத்தினராய் இருக்கும் தன் எஜமானரிடம் திரும்பிச் செல்லும் ஓர் அடிமை. ஒநேசிமுவுடன் செல்பவர் தீகிக்கு. இவர் அடிமை அல்ல, சுயாதீனர். இவர்கள் இருவரும் அப்போஸ்தலனாகிய பவுலினிடமிருந்து வரும் தூதுவர்கள். ‘கிறிஸ்துவுக்குள் உண்மையுள்ளவர்களாயிருக்கிற சகோதரருக்கு’ என முகவரியிட்டு அவர் எழுதிய ஒரு நிருபத்தை அவர்கள் கொண்டு செல்கின்றனர். நமக்குத் தெரிந்த வரையில், பவுல் கொலோசெயிக்கு செல்லவேயில்லை. யூதரல்லாதவர்களே பெரும்பாலும் இந்தச் சபையில் இருந்தனர்; ஒருவேளை எப்பாப்பிராவால் இந்தச் சபை ஸ்தாபிக்கப்பட்டிருக்கலாம். அவர்களுடன் சேவை செய்துவந்த அவர், இப்போது பவுலுடன் ரோமில் இருந்தார்.​—கொலோ. 1:​2, தி.மொ., 7; 4:12.

3இந்த நிருபத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் உள்ள வார்த்தைகளில் அப்போஸ்தலன் பவுல் குறிப்பிடுகிறபடி, அவரே இதன் எழுத்தாளர். (1:1; 4:18) சிறைச்சாலையிலிருந்து இதை எழுதினாரென்று அவருடைய முடிவுரையே காட்டுகிறது. ரோமில் முதல் தடவையாக பொ.ச. 59-61-ல் சிறைப்பட்டிருந்த காலப்பகுதியில் அதை எழுதியிருக்கலாம். அந்தக் காலப்பகுதியில் அவர் உற்சாகத்தை அளிக்கும் பல நிருபங்களை எழுதினார். பிலேமோனுக்கு எழுதின நிருபத்தோடுகூட கொலோசெயருக்கு எழுதின இந்த நிருபமும் அனுப்பப்பட்டது. (கொலோ. 4:​7-9; பிலே. 10, 23) எபேசியருக்கு நிருபம் எழுதிய சமயத்திலேயே இதையும் பவுல் எழுதியதாக தோன்றுகிறது; காரணம் அதில் காணப்படும் பல கருத்துக்களும் சொற்றொடர்களும் ஒரே மாதிரி இருக்கின்றன.

4கொலோசெயருக்கு எழுதின நிருபத்தின் நம்பகத் தன்மையைச் சந்தேகிப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. ஏறக்குறைய பொ.ச. 200-ன் செஸ்டர் பியட்டி பப்பைரஸ் எண் 2 (P46)-ல் பவுலின் நிருபங்களோடு இதுவும் காணப்படுவதால் ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் இதைப் பவுலின் நிருபங்களில் ஒன்றாக ஏற்றுக்கொண்டனர் என்பது தெளிவாகிறது. அதோடு, பவுலின் மற்ற நிருபங்களின் நம்பகத் தன்மைக்குச் சான்றளிக்கும் அதே ஆரம்ப கால கல்விமான்கள் இதையும் மெய் என நிரூபிக்கின்றனர்.

5கொலோசெயருக்கு நிருபத்தை எழுதும்படி பவுலை எது தூண்டியது? ஒநேசிமு கொலோசெயிக்குத் திரும்பிச் செல்ல இருந்தது ஒரு காரணம். எப்பாப்பிரா சமீபத்தில்தான் பவுலிடம் வந்தார், கொலோசெயின் நிலைமைகளைப் பற்றி அவர் கொடுத்த அறிக்கை, அந்த நிருபத்தை எழுதுவதற்கு மேலுமொரு காரணத்தை அளித்ததில் சந்தேகமில்லை. (கொலோ. 1:​7, 8; 4:12) குறிப்பிட்ட ஓர் ஆபத்து அங்கிருந்த கிறிஸ்தவ சபையை அச்சுறுத்தி வந்தது. அந்நாளின் மதங்கள் சிதைவுறும் நிலையில் இருந்தன; பழைய மதக் கருத்துக்களை ஒன்றிணைப்பதால் புதிய மதங்கள் தொடர்ந்து உருவாகி வந்தன. துறவறம், ஆவியுலகத் தொடர்பு, விக்கிரகாராதனை சார்ந்த மூடநம்பிக்கை ஆகியவை உட்பட்ட புறமத தத்துவக் கோட்பாடுகளும் இருந்தன. இவற்றோடு, உணவுகளைத் தவிர்ப்பதும், நாட்களை அனுசரிப்பதுமான யூதப் பழக்கங்களும் அந்தச் சபையிலிருந்த சிலரைப் பாதித்திருக்கலாம். பிரச்சினை என்னவாயினும், எப்பாப்பிரா பவுலைக் காணும்படி ரோமுக்கு இவ்வளவு நீண்ட தூரம் பயணப்பட்டு வந்ததற்குப் போதிய காரணம் இருந்ததாய் தோன்றுகிறது. எனினும், பொதுவில் முழு சபையுமே உடனடியாக ஆபத்திற்குள்ளாகும் நிலையில் இல்லை; அவர்கள் காட்டிய அன்பையும் உறுதியையும் பற்றிய எப்பாப்பிராவின் ஊக்கமூட்டும் அறிக்கை இதை காட்டுகிறது. இந்த அறிக்கையைக் கேட்டதாலேயே பவுல் இந்த நிருபத்தைக் கொலோசெய சபைக்கு எழுதினார்; அதில் திருத்தமான அறிவையும் சுத்தமான வணக்கத்தையும் உறுதியாய் ஆதரித்து பேசினார். புறமதத் தத்துவத்திற்கும், தூதர் வணக்கத்துக்கும், யூதப் பாரம்பரியங்களுக்கும் மேலாக கடவுள் கொடுத்த கிறிஸ்துவின் மேன்மையை இது வலியுறுத்தினது.

கொலோசெயரின் பொருளடக்கம்

6சபையின் தலையாகிய கிறிஸ்துவில் விசுவாசம் வையுங்கள் (1:​1–2:12). தீமோத்தேயுவுடன் சேர்ந்து பவுல் வாழ்த்துக்களை தெரிவித்த பின், கிறிஸ்துவில் கொலோசெயர் வைத்திருக்கும் விசுவாசத்துக்காகவும் அவர்கள் காட்டும் அன்புக்காகவும் பவுல் நன்றி செலுத்துகிறார். எப்பாப்பிரா அவர்களிடம் நற்செய்தியைப் பிரசங்கித்ததால் கடவுளின் தகுதியற்றத் தயவை அவர்கள் கற்றனர். அவர்களைப் பற்றிய அறிக்கையை பவுல் கேட்டது முதல், அவர்கள் “யெகோவாவுக்கு உகந்தவர்களாய் நடக்கும்படி . . . எல்லா ஞானத்திலும் ஆவிக்குரிய தெளிந்துணர்விலும் அவருடைய சித்தத்தைப் பற்றிய திருத்தமான அறிவால்” நிரப்பப்படவும் “முழுமையாய்ச் சகித்திருந்து, மகிழ்ச்சியோடு நீடிய பொறுமையுடனிருக்கவும்” இடைவிடாமல் ஜெபித்து வருகிறார். (1:​9-11, NW) பிதா அவர்களை விடுவித்து, “தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்குள்” கொண்டுவந்தார். அவர், காண முடியாத கடவுளின் ரூபமாயிருக்கிறார். அவர் மூலமும் அவருக்காகவும் எல்லாமும் படைக்கப்பட்டிருக்கின்றன. அவரே சபையின் தலைவரும் மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவருமானவர். இயேசுவின் இரத்தத்தால் எல்லாவற்றையும் தம்முடன் மறுபடியும் ஒப்புரவாக்கிக் கொள்வதை நல்லது என கடவுள் கண்டார். ஆம், ‘விசுவாசத்தில் தொடர்ந்து நிலைத்திருக்கும்’ பட்சத்தில், கடவுளிடமிருந்து தூர விலகியிருந்த கொலோசெயர் உட்பட அனைவரையும் ஒப்புரவாக்கிக்கொள்ள விரும்பினார்.​—1:​13, 23, தி.மொ.

7கிறிஸ்துவின் ஊழியராக, பவுல் சபைக்காக கிறிஸ்துவின் பாடுகளில் குறைவானதை நிறைவேற்றுவதில் மகிழ்கிறார். ‘கடவுள் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்த இப்பொழுது பிரியங்கொண்டிருக்கிற மகிமையான ஐசுவரியங்களின் பரிசுத்த இரகசியத்தைப்’ பற்றிய கடவுளின் வார்த்தையை அவர்களுக்காக முழுமையாய் பிரசங்கிப்பதற்காகவே ஊழியர் ஆனார். ‘கிறிஸ்துவையே நாங்கள் அறிவிக்கிறோம், . . . எந்த மனிதரும் கிறிஸ்து இயேசுவுக்குள் முழுமையாக ஐக்கியப்பட்டிருக்கும்படி எல்லா ஞானத்திலும் புத்திசொல்லி உபதேசம் பண்ணுகிறோம்’ என்று பவுல் சொல்கிறார்.​—1:​26-28, NW.

8கொலோசெயர், லவோதிக்கேயர், இன்னும் மற்றவர்களினிமித்தம் பவுல் போராடுகிறார். அவர்களுக்கு ஆறுதல் அளிக்கவும் அன்பில் ஒன்றிணைக்கவுமே அவர் அவ்வாறு பாடுபடுகிறார். இது ‘கடவுளுடைய பரிசுத்த இரகசியத்தை, அதாவது கிறிஸ்துவைப் பற்றிய திருத்தமான அறிவை அவர்கள் அடைய வேண்டுமென்ற நோக்கத்துடனேயாகும். அவரில் ஞானம் மற்றும் அறிவின் எல்லா பொக்கிஷங்களும் கவனமாய் மறைந்திருக்கின்றன.’ சாமர்த்தியமான விவாதங்களால் அவர்கள் ஏமாற்றப்படுவதைக் காண அவர் விரும்பவில்லை. அதற்கு மாறாக, தொடர்ந்து அவர்கள் கிறிஸ்துவுடன் ஐக்கியப்பட்டவர்களாய் நடந்து, ‘அவரில் வேரூன்றினவர்களாகவும் கட்டப்பட்டவர்களாகவும் விசுவாசத்தில் உறுதிப்பட்டவர்களாகவும்’ இருக்க வேண்டும். இப்போது பவுல் எச்சரிக்கிறார்: ‘தத்துவசாஸ்திரம் மாயமான வஞ்சகம் இவற்றினால் ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டுபோகாதபடி எச்சரிக்கையாயிருங்கள்; அவை மனுஷரின் பாரம்பரிய முறை.’​—2:​2, 3, 7, 8, தி.மொ.

9மாம்சக் கிரியைகளுக்கு மரித்து, கிறிஸ்துவுக்குப் பிழைத்திருங்கள் (2:​13–3:17). அவர்கள் தங்கள் மீறுதல்களுக்கும் விருத்தசேதனமில்லாமைக்கும் மரித்தவர்களாய் இருந்தபோதிலும், கடவுள் அவர்களைக் கிறிஸ்துவுடன்கூட உயிர்ப்பித்திருக்கிறார். யூதருக்கு எதிராயிருந்த நியாயப்பிரமாண சட்டத்தைக் குலைத்துப்போட்டார். ஆகையால், நியாயப்பிரமாணத்தை அல்லது அதன் ஆசரிப்புகளைக் குறித்து ‘ஒருவனும் அவர்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக.’ அவை கிறிஸ்துவைப் பற்றிய மெய்ம்மையின் நிழலாகவே இருக்கின்றன. மேலும், இந்த உலகத்தின் பாலபோதனைகளுக்கு அவர்கள் கிறிஸ்துவுடன்கூட மரித்திருந்தால், மனிதரின் கட்டளைகளுக்கும் போதனைகளுக்கும் இசைய, “தொடாதே, ருசிபாராதே, தீண்டாதே” என்னும் விதிகளுக்கு ஏன் கீழ்ப்படிகின்றனர்? மாம்ச இச்சைகளை எதிர்த்துப் போராடுவதில், சுயமாய் உருவாக்கப்பட்ட பகட்டான வணக்கம், பாசாங்குத்தனமான தாழ்மை, கடும் சரீர ஒடுக்கம் ஆகியவை பயனற்றவை.​—2:​16, 21.

10மாறாக, பவுல் அறிவுரை கூறுவதாவது: ‘கிறிஸ்து கடவுளின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திற்கேற்ற மேலான காரியங்களையே தொடர்ந்து நாடுங்கள். உங்கள் மனதை, பூமியிலுள்ளவற்றின் மீதல்ல, மேலானவற்றின் மீதே ஊன்ற வையுங்கள்.’ பழைய ஆள்தன்மையைக் களைந்துவிட்டு திருத்தமான அறிவினால் புதிய ஆள்தன்மையைத் தரித்துக்கொள்வதன் மூலம் இதைச் செய்யலாம். இது யூதருக்கும் கிரேக்கருக்குமிடையே எந்தவித சரீரப்பிரகாரமான வேறுபாட்டையும் உண்டுபண்ணுகிறதில்லை; ஏனெனில் ‘கிறிஸ்துவே எல்லாமுமாக எல்லாரிலும் இருக்கிறார்.’ இது, ‘கடவுளுடைய தெரிந்துகொள்ளப்பட்டவர்களாக,’ கனிவான அன்போடுகூட இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் உடுத்திக் கொள்வதைக் குறிக்கிறது. அப்போஸ்தலன் சொல்கிறார்: ‘யெகோவா உங்களுக்குத் தாராளமாய் மன்னித்ததுபோல், நீங்களும் அதையே செய்யுங்கள். ஆனால், இவை எல்லாவற்றோடும்கூட அன்பினால் உங்களை உடுத்திக்கொள்ளுங்கள், ஏனெனில் அதுவே ஒற்றுமையின் பரிபூரணக் கட்டு.’ வார்த்தையினாலோ செயலினாலோ எப்படி இருந்தாலும் எல்லாமுமே, ‘கர்த்தராகிய இயேசுவின் பெயரில், அவர் மூலமாய்ப் பிதாவாகிய கடவுளுக்கு நன்றிசெலுத்துதலோடு’ செய்யப்பட வேண்டும்.​—3:​1, 2, 11-14, 17, NW.

11மற்றவர்களுடனான உறவுகள் (3:​18–4:18). குடும்ப உறவுகளைக் குறித்ததில், மனைவிகள் தங்களது கணவர்களுக்கு அடங்கியிருப்பார்களாக; கணவர்கள் தங்கள் மனைவிகளை நேசிப்பார்களாக. பிள்ளைகள் பெற்றோருக்குக் கீழ்ப்படிவார்களாக; தகப்பன்மார் தங்கள் பிள்ளைகளை எரிச்சல்படுத்தாதிருப்பார்களாக. யெகோவாவுக்கான பயத்தில் அடிமைகள் தங்கள் எஜமானருக்குக் கீழ்ப்படிய வேண்டும், எஜமானர்கள் தங்கள் அடிமைகளிடம் நியாயமாய் நடந்துகொள்ள வேண்டும். எல்லாரும் ஜெபத்தில் நிலைத்திருந்து, சத்தியத்தில் இல்லாதவர்களோடு ஞானமாய் நடந்துகொள்வார்களாக. கடவுளின் ராஜ்யத்துக்காக உழைக்கும் பவுலையும் அவருடைய உடன் ஊழியர்களையும் பற்றி தீகிக்கும் ஒநேசிமுவும் நேரில் அவர்களுக்குத் தெரிவிப்பார்கள். அவர்கள் கொலோசெக்கு வாழ்த்துக்களை அனுப்புகிறார்கள். அதில், லவோதிக்கேயாவிலுள்ள சகோதரர்களுக்கும் பவுல் வாழ்த்துக்களை தெரிவிக்கிறார். அவர் அனுப்பும் நிருபங்களை பரிமாற்றம் செய்துகொண்டு வாசிக்கும்படியும் சொல்கிறார். முடிவான வாழ்த்துக்களை பவுல் தானே கைப்பட எழுதுகிறார்: “என் சிறைக் கட்டுகளை மனதில் தொடர்ந்து வைத்திருங்கள். தகுதியற்ற தயவு உங்களோடிருப்பதாக.”​—4:​18, NW.

ஏன் பயனுள்ளது

12ரோமிலிருந்து இரண்டு சகோதரர்கள் வந்திருக்கும் செய்தி கொலோசெயிலுள்ள சகோதரர்கள் மத்தியில் எவ்வளவு விரைவாய் பரவியிருக்கும் என்பதை நாம் சற்று கற்பனை செய்து பார்க்கலாம். பவுலின் நிருபம் வாசிக்கப்படுவதைக் கேட்க அவர்கள் மிகுந்த ஆவலுடன் இருந்திருக்கலாம்; அதற்காக அவர்கள் ஒருவேளை பிலேமோனின் வீட்டில் கூடிவந்திருக்கலாம். (பிலே. 2) கிறிஸ்துவின் சரியான ஸ்தானம், திருத்தமான அறிவுக்கான தேவை ஆகியவற்றின்பேரில் எத்தகைய புத்துணர்ச்சியூட்டும் சத்தியங்களை அது அளித்தது! மனிதரின் தத்துவங்களையும் யூதப் பாரம்பரியங்களையும் வைக்க வேண்டிய இடத்தை எவ்வளவு தெளிவாய் குறிப்பிட்டு, சமாதானத்தையும் கிறிஸ்துவின் வார்த்தையையும் மேன்மைப்படுத்தியது! கண்காணிகள், கணவர்கள், மனைவிகள், தகப்பன்கள், பிள்ளைகள், எஜமானர்கள், அடிமைகள் என சபையிலிருந்த எல்லாருடைய மனதுக்கும் இதயத்துக்கும் தேவையான போஷாக்கு இதில் அடங்கியிருந்தது. பிலேமோனும் ஒநேசிமுவும் மறுபடியும் எஜமான், அடிமை உறவுக்குள் வருவதால் அவர்களுக்குத் தேவையான நல்லறிவுரை நிச்சயமாகவே அதில் இருந்தது. சரியான கோட்பாட்டில் மந்தையைத் திரும்ப நிலைநாட்டுவதற்குத் தேவையான என்னே சிறந்த வழிநடத்துதல் கண்காணிகளுக்கு அதில் கொடுக்கப்பட்டது! யெகோவாவுக்கு முழு ஆத்துமாவோடு சேவை செய்ய தங்களுக்குக் கிடைத்த பாக்கியத்திற்கு கொலோசெயர் காட்ட வேண்டிய போற்றுதலை பவுலின் வார்த்தைகள் எந்தளவு அதிகரித்தன! இந்த உலகின் அடிமைப்படுத்தும் சிந்தனைகளிலிருந்தும் பழக்கவழக்கங்களிலிருந்தும் விடுதலையாவதன்பேரில் கொலோசெயருக்குக் கொடுக்கப்பட்ட உற்சாகமூட்டும் அறிவுரை, இன்றைய சபைக்கும் நடைமுறை பயனுள்ள செய்தியாக நிலைத்திருக்கிறது.​—கொலோ. 1:9-11, 17, 18; 2:8; 3:​15, 16, 18-25; 4:1.

13கிறிஸ்தவ ஊழியருக்குரிய அருமையான அறிவுரை கொலோசெயர் 4:​6-ல் குறிப்பிடப்பட்டுள்ளது: “அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.” சத்தியத்தின் கிருபை பொருந்திய வார்த்தைகள் நேர்மை இதயமுள்ளவர்களின் பசியார்வத்தை தூண்டி, நிலையான நன்மையை அவர்களுக்கு அளிக்கும். மேலும், போற்றுதல் மிகுதியால் ஒரு கிறிஸ்தவர் இருதயப்பூர்வமாய் விழிப்புடன் ஜெபிக்கையில் அது யெகோவாவிடமிருந்து நிறைவான ஆசீர்வாதங்களைப் பெற்றுத் தரும்: “ஜெபத்தில் தரித்திருங்கள்; நன்றியறிதலோடு அதில் விழித்திருங்கள்.” கிறிஸ்தவ கூட்டுறவில் எத்தகைய மகிழ்ச்சியும் கட்டியெழுப்பும் உத்வேகமும் கிடைக்கிறது! “உங்கள் இருதயங்களில் யெகோவாவுக்குப் பாடிக்கொண்டு,” “ஒருவருக்கொருவர் தொடர்ந்து கற்பித்தும் அறிவுரை கூறிக்கொண்டும் இருங்கள்” என்று பவுல் சொல்கிறார். (4:​2, தி.மொ.; 3:​16, NW) கொலோசெயருக்கு எழுதின இந்த நிருபத்தை நீங்கள் இன்னும் முழுமையாய் ஆராய்கையில் பயனுள்ளதும், நடைமுறையானதும் போதனைக்குரியதுமான இன்னும் பல மணிக்கற்களைக் காண்பீர்கள்.

14நியாயப்பிரமாணத்திற்கு இசைவான ஆசரிப்புகள், “வரவிருக்கும் காரியங்களின் முன்நிழலாக இருக்கின்றன, மெய்ம்மையோ கிறிஸ்துவுக்குரியது” என்று இந்த நிருபம் சொல்கிறது. (2:​17, NW) கிறிஸ்துவைப் பற்றிய இந்த மெய்ம்மையே கொலோசெயரில் சிறப்பித்துக் காட்டப்படுகிறது. கிறிஸ்துவுடன் ஐக்கியப்பட்டிருப்போருக்கு பரலோகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள அந்த மகிமையான நம்பிக்கையை இந்த நிருபம் அடிக்கடி சுட்டிக்காட்டுகிறது. (1:​5, 27; 3:4) இருளின் அதிகாரத்திலிருந்து தங்களை ஏற்கெனவே பிதா விடுதலையாக்கி, “தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்குள்” ஸ்தாபித்திருப்பதற்கு இத்தகையோர் பெரும் நன்றியுள்ளோராய் இருக்கலாம். இவ்வாறு, “கடவுளின் தற்சுரூபமும் சர்வ சிருஷ்டிக்கும் முதற்பேறுமானவ”ருக்கு அவர்கள் கீழ்ப்பட்டிருக்கின்றனர். ஏனெனில் “அவரில் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோக பூலோகங்களிலுள்ளவைகளும், காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளும், சிங்காசனங்களோ கர்த்தத்துவங்களோ துரைத்தனங்களோ அதிகாரங்களோ யாவும், அவரைக்கொண்டு . . . சிருஷ்டிக்கப்பட்டன.” இவர், கடவுளுடைய ராஜ்யத்தில் நீதியாய் ஆட்சி செய்ய விசேஷித்த விதத்தில் தகுதிபெற்றிருக்கிறார். இதனால் பவுல், அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்குப் பின்வருமாறு அறிவுரை கூறுகிறார்: “நீங்கள் கிறிஸ்துவோடு எழுப்பப்பட்டதுண்டானால் கிறிஸ்து கடவுளின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்.”​—1:​12-16; 3:​1, தி.மொ.

[அடிக்குறிப்பு]

a த நியூ வெஸ்ட்மினிஸ்டர் டிக்ஷ்னரி ஆஃப் த பைபிள், (ஆங்கிலம்), 1970, பக்கம் 181.

[கேள்விகள்]

1. கொலோசெ பட்டணம் எங்கிருந்தது?

2. (அ) பவுல் கொலோசெயிக்கு அனுப்பின இரண்டு தூதுவர்கள் யாவர்? (ஆ) கொலோசெய சபையைக் குறித்து என்ன அறியப்பட்டிருக்கிறது?

3. கொலொசெயருக்கு எழுதின நிருபமே அதன் எழுத்தாளரையும், அது எழுதப்பட்ட காலத்தையும், இடத்தையும் குறித்து என்ன சொல்கிறது?

4. கொலோசெயரின் மெய்ம்மைக்கு எது சாட்சி பகருகிறது?

5. (அ) கொலோசெயருக்கு எழுதும்படி எது பவுலைத் தூண்டியது? (ஆ) இந்த நிருபம் எதை வலியுறுத்துகிறது?

6. (அ) கொலோசெயருக்காக பவுல் என்ன ஜெபம் செய்கிறார்? (ஆ) சபை சம்பந்தப்பட்டதில் இயேசுவின் ஸ்தானத்தையும் ஊழியத்தையும் குறித்து பவுல் என்ன கலந்தாலோசிக்கிறார்?

7. பவுல் என்ன பிரசங்கிக்கிறார், என்ன நோக்கத்துக்காக?

8. தன் சகோதரர்களுக்காக பவுல் ஏன் போராடுகிறார்?

9. எப்படிப்பட்ட வணக்கத்துக்கு எதிராக பவுல் எச்சரிக்கிறார், கொலோசெயர் ஏன் நியாயப்பிரமாணத்துக்குத் தங்களைக் கீழ்ப்படுத்தக்கூடாது?

10. ஒருவர் எவ்வாறு மேலானவற்றை தொடர்ந்து நாடி, புதிய ஆள்தன்மையைத் தரித்துக்கொள்ளலாம்?

11. (அ) குடும்ப உறவுகளையும் மற்ற உறவுகளையும் பற்றி என்ன அறிவுரை கொடுக்கப்பட்டுள்ளது? (ஆ) முடிவாக என்ன வாழ்த்துக்கள் கூறப்படுகின்றன?

12. கொலோசெயருக்கு எழுதின பவுலின் நிருபம் புத்துயிரூட்டும் என்ன சத்தியங்களை அளிக்கிறது, இதனால் சபைக்கு என்ன நன்மை?

13. கிருபை பொருந்திய வார்த்தைகளையும், ஜெபத்தையும், கிறிஸ்தவ கூட்டுறவையும் குறித்து பவுல் என்ன அறிவுரை கொடுக்கிறார்?

14. (அ) கொலோசெயருக்கு எழுதின நிருபத்தில் என்ன மெய்ம்மை சிறப்பித்துக் காட்டப்படுகிறது? (ஆ) ராஜ்ய நம்பிக்கை எவ்வாறு வலியுறுத்தப்படுகிறது?