Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் புத்தக எண் 52—1 தெசலோனிக்கேயர்

பைபிள் புத்தக எண் 52—1 தெசலோனிக்கேயர்

பைபிள் புத்தக எண் 52—1 தெசலோனிக்கேயர்

எழுத்தாளர்: பவுல்

எழுதப்பட்ட இடம்: கொரிந்து

எழுதி முடிக்கப்பட்டது: ஏ. பொ.ச. 50

அப்போஸ்தலன் பவுல் தன்னுடைய இரண்டாவது மிஷனரி பயணத்தை ஏறக்குறைய பொ.ச. 50-ல் மேற்கொண்டார். அப்போது மக்கெதோனியா பட்டணமாகிய தெசலோனிக்கேயுக்குச் சென்று அங்கே ஒரு கிறிஸ்தவ சபையை ஸ்தாபித்தார். அடுத்த வருடத்தில் அவர் சில்வானுடனும் (அப்போஸ்தலர் புத்தகத்தில் சீலா என்பவர்) தீமோத்தேயுவுடனும் கொரிந்துவில் தங்கியிருந்தார். அச்சமயம் தெசலோனிக்கேயருக்கு ஒரு கடிதத்தை எழுதினார். அவர்களுக்கு ஆறுதல் அளித்து விசுவாசத்தில் உறுதிப்படுத்தவே இந்த முதல் நிருபத்தை எழுதினார். இது பெரும்பாலும் பொ.ச. 50-ன் இறுதியாக இருக்கலாம். பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலின் பாகமாகும் தனிச்சிறப்பை பவுலின் கடிதங்களில் ஒருவேளை இந்தப் புத்தகமே முதன் முதலாக பெற்றிருக்கலாம்; அதில், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் முதல் புத்தகமாகிய மத்தேயு சுவிசேஷத்திற்கு அடுத்ததாக இடம்பெற்றிருக்க வேண்டும்.

2இந்த நிருபத்தின் நம்பகத் தன்மையையும் நேர்மையையும் ஆதரிக்கும் அத்தாட்சிகள் ஏராளமாக இருக்கின்றன. இந்தப் புத்தகத்தை எழுதியதற்கு அத்தாட்சியாக பவுல் தன்னுடைய பெயரைக் குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் புத்தகம் தேவாவியால் ஏவப்பட்ட வேதவசனங்களின் மீதிபாகத்தோடு ஒத்திசைந்துள்ளது. (1 தெ. 1:​1; 2:18) தேவாவியால் ஏவப்பட்ட புத்தகங்களின் பழமையான பெயர் பட்டியல்கள் பலவற்றில் இந்த நிருபத்தின் பெயர் காணப்படுகிறது; அவற்றில் மியூராடோரியன் பிரதியும் ஒன்று. a பூர்வ கிறிஸ்தவ எழுத்தாளர் பலர், ஒன்று தெசலோனிக்கேயர் புத்தகத்தை மேற்கோள்களாகவோ மறைமுகமாகவோ குறிப்பிட்டிருக்கின்றனர்; ஐரீனியஸ் (பொ.ச. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்) இந்தப் புத்தகத்தின் பெயரை குறிப்பிடுகிறார். செஸ்டர் பியட்டி பப்பைரஸ் எண் 2 (P46) என்பது சில பைபிள் புத்தகங்களின் தொகுப்பு; இது ஏறக்குறைய பொ.ச. 200-க்குரியது; ஒன்று தெசலோனிக்கேயர் புத்தகம் இதில் இருக்கிறது. அதேபோல இப்போது பெல்ஜியத்திலுள்ள கென்ட்டில் இருக்கும் மூன்றாம் நூற்றாண்டுக்குரிய மற்றொரு பப்பைரஸில் (P30), முதலாம் இரண்டாம் தெசலோனிக்கேயரின் சில பகுதிகள் உள்ளன. b

3தெசலோனிக்கே சபையின் சரித்திரத்தை, அதாவது இந்த நிருபம் எழுதப்படுவதற்கு முன்பான சரித்திரத்தை சுருக்கமாக கவனிப்பது நல்லது; அந்த நகரத்திலிருந்த சகோதரரைக் குறித்து பவுல் மிகவும் கவலைப்பட்டது ஏன் என தெரிந்துகொள்ள உதவும். தொடக்கத்திலிருந்தே, இந்தச் சபை கடும் துன்புறுத்துதலையும் எதிர்ப்பையும் அனுபவித்தது. அப்போஸ்தலர் 17-ம் அதிகாரத்தில் பவுலும் சீலாவும் தெசலோனிக்கேயுக்கு வந்து சேர்ந்ததைப் பற்றி லூக்கா அறிவிக்கிறார்; “அங்கே யூதருக்கு ஒரு ஜெபஆலயம் இருந்தது.” தொடர்ந்து வந்த மூன்று ஓய்வுநாட்களின்போது பவுல் அவர்களுக்குப் பிரசங்கித்து வேத வசனங்களிலிருந்து உண்மைகளை எடுத்துக்கூறினார். இதற்கும் அதிகமான காலம் அங்கே தங்கினார் என்பதற்கான குறிப்புகளும் இருக்கின்றன. எவ்வாறெனில், அவர் தனக்கென்று ஒரு தொழிலை ஏற்படுத்திக்கொண்டது மட்டுமல்லாமல் ஒரு சபையையும் ஸ்தாபித்து ஒழுங்குபடுத்தினார். ஆகவே அதிக காலம் இருந்திருப்பார்.​—அப். 17:1; 1 தெ. 2:9; 1:​6, 7.

4தெசலோனிக்கேயில் அப்போஸ்தலன் பிரசங்கித்ததால் ஏற்பட்ட நல்ல விளைவைப் பற்றி அப்போஸ்தலர் 17:​4-7-ல் (தி.மொ.) விளக்கமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பவுலின் கிறிஸ்தவ ஊழியம் நற்பயன் தந்தது; அதைக் கண்டு பொறாமைப்பட்ட யூதர்கள் ஒரு கலகக்கூட்டத்தைச் சேர்த்துக்கொண்டு பட்டணத்தில் அமளி உண்டாக்கினர். யாசோனின் வீட்டைத் தாக்கி, அவரையும் மற்ற சகோதரரையும் இழுத்துச் சென்றனர். அவர்களை பட்டணத்து அதிகாரிகளிடம் கொண்டுபோய், “உலகத்தைக் குழப்புகிறவர்கள் இங்கேயும் வந்திருக்கிறார்கள். இவர்களை யாசோன் வரவேற்றுக்கொண்டான். இவர்களெல்லாரும் இயேசு என்னும் வேறொருவனை ராஜா என்று சொல்லி, ராயனுடைய கட்டளைகளுக்கு விரோதமாய் நடக்கிறார்களென்று” கூக்குரலிட்டனர். யாசோனும் மற்றவர்களும் விடுவிக்கப்படுவதற்கு முன்பாக பிணையத்தொகை அளிக்கும்படி வற்புறுத்தப்பட்டனர். அங்கிருந்த சகோதரர்கள், பவுலையும் சீலாவையும் அந்த இரவே பெரோயாவுக்கு அனுப்பிவிட்டார்கள். அவர்களது பாதுகாப்புக்காகவும் சபையிலிருந்த சகோதரர்களின் பாதுகாப்புக்காகவும் இப்படிச் செய்தார்கள். ஆனால் தெசலோனிக்கேயில் இருந்த சபை இப்போது நல்லவிதமாக ஸ்தாபிக்கப்பட்டது.

5வெறிபிடித்த யூதர்கள் பவுலை பின்தொடர்ந்து பெரோயாவிற்கு வந்தனர்; அங்கே அவர் பிரசங்கிப்பதை நிறுத்தும்படி பயமுறுத்தினர். பின்பு அவர் கிரீஸிலுள்ள அத்தேனே பட்டணத்துக்குச் சென்றார். எனினும் தெசலோனிக்கேயிலிருந்த தன் சகோதரர்கள் உபத்திரவத்தை எவ்வாறு சகிக்கிறார்கள் என்பதை அறிய ஆவலாக இருந்தார். அவர்களிடம் திரும்பி வருவதற்கு இருமுறை பவுல் முயற்சித்தார். ஆனால் ‘சாத்தான் அவரை தடுத்துவிட்டான்.’ (1 தெ. 2:​17, 18, தி.மொ.) விசுவாசத்தில் ‘குழந்தையாக’ இருந்த அந்த சபையைப் பற்றி பவுல் அதிக கவலை அடைந்தார்; அந்த சபையார் அனுபவித்த உபத்திரவத்தையும் அறிந்திருந்தார். எனவே, சகோதரர்களுக்கு ஆறுதலளிக்கவும் விசுவாசத்தை இன்னும் உறுதியுடன் காத்துக்கொள்வதற்கு உதவுவதற்கும் தீமோத்தேயுவை தெசலோனிக்கேயுக்கு அனுப்பினார். தீமோத்தேயு அவருடைய இருதயத்தை மகிழ்விக்கும் செய்தியுடன் திரும்பிவந்தார்; அவர்கள் பயங்கரமான துன்புறுத்தலை அனுபவித்தபோதிலும் உறுதியுடன் உத்தமத்தைக் காத்துவருகின்றனர் என்பதே அந்தச் செய்தி. அதைக் கேட்டு பவுல் பூரிப்படைந்தார். மக்கெதோனியா மற்றும் அகாயா முழுவதிலுமிருந்த விசுவாசிகளுக்கு அவர்களுடைய உறுதியான நிலைநிற்கை இதற்குள் ஒரு முன்மாதிரியாகிவிட்டது. (1:​6-8; 3:​1-7) அவர்கள் உண்மையுடன் சகித்து நிலைத்திருந்ததற்காக யெகோவா தேவனுக்கு பவுல் நன்றி கூறினார். ஆனால், ‘குழந்தைப்’ பருவத்தைக் கடந்து முதிர்ச்சி அடைவதற்காக அந்தச் சபை வளரும்போது வழிநடத்துதலும் அறிவுரையும் தேவை என்பதையும் உணர்ந்தார். இதன் காரணமாக, பவுல் கொரிந்துவில் இருக்கும்போது தெசலோனிக்கேயருக்குத் தன் முதல் நிருபத்தை எழுதினார். அப்போது தீமோத்தேயுவும் சில்வானும் அவருடன் இருந்தனர்.

ஒன்று தெசலோனிக்கேயர் பொருளடக்கம்

6மற்ற விசுவாசிகளுக்கு தெசலோனிக்கேயர் நல்ல முன்மாதிரி (1:​1-10). தெசலோனிக்கேயரை போற்றுவதற்கு பவுலுக்கு ஏராளமான காரணங்கள் இருந்தன. எனவே அவர்களின் உண்மையுள்ள ஊழியத்துக்காகவும், அன்பான உழைப்புக்காகவும், நம்பிக்கையில் சகித்து நிலைத்திருப்பதற்காகவும் அவர்களைப் புகழ்ந்து தன் கடிதத்தை ஆரம்பிக்கிறார். அவர்களுக்கு நற்செய்தி வெறுமனே ஒரு பிரசங்கமாக கொடுக்கப்படவில்லை, ஆனால் அதிக ‘வல்லமையோடும் பூரண நிச்சயத்தோடும்’ அறிவிக்கப்பட்டது. இதைப் பின்பற்றி தெசலோனிக்கேயர் “பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தோடே” வார்த்தையை ஏற்றுக்கொண்டனர். இதன் மூலம் மக்கெதோனியாவிலும் அகாயாவிலும், அவற்றிற்கு அப்பாலும் இருந்த விசுவாசிகள் எல்லாருக்கும் நல்ல முன்மாதிரியாக இருந்தனர். அவர்கள் விக்கிரகங்களை முற்றிலுமாக நிராகரித்துவிட்டு ‘ஜீவனுள்ள மெய்யான கடவுளைச் சேவிப்பதற்கும், வானங்களிலிருந்து அவருடைய குமாரன் வருவதற்கும் காத்திருந்தனர்.’​—1:​5, 6, 9, 10, தி.மொ.

7தெசலோனிக்கேயரிடம் பவுலுக்கு இருந்த அன்பான கரிசனை (2:​1–3:13). பவுலும் அவருடைய தோழர்களும் பிலிப்பியில் கேவலமாக நடத்தப்பட்டபோதிலும், அவர்கள் தைரியத்தை ஒன்றுதிரட்டி தெசலோனிக்கேயில் பிரசங்கிப்பதற்கு சென்றனர். மனிதரைப் பிரியப்படுத்துவதற்காக, அல்லது முகஸ்துதி செய்வதற்காக, அல்லது மனிதரிடமிருந்து புகழைத் தேடுவதற்காக அவர்கள் இந்த ஊழியத்தில் ஈடுபடவில்லை. அதற்கு பதில், “பாலூட்டும் தாயானவள் தன் பிள்ளைகளைப் பேணுகிறதுபோல் நாங்கள் உங்கள் நடுவில் சாதுவாய் நடந்துகொண்டோம். நாங்கள் உங்கள்மேல் வாஞ்சையாயிருந்து கடவுளின் சுவிசேஷத்தை மாத்திரமல்ல, நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர்களானபடியினாலே எங்கள் ஜீவனையும் உங்களுக்குக் கொடுப்பது எங்களுக்குப் பிரிய”மாயிருந்தது என்று பவுல் சொல்கிறார். (2:​7, 8, தி.மொ.) தம்முடைய ராஜ்யத்துக்கும் மகிமைக்கும் அவர்களை அழைப்பவராகிய கடவுளுக்கு உகந்தவர்களாய் அந்த சபையார் தொடர்ந்து நடக்க வேண்டும் என்பதே இவர்களது விருப்பம். எனவே, ஒரு தகப்பன் தன் பிள்ளைகளுக்கு புத்தி சொல்வதுபோல இவர்கள் தெசலோனிக்கேயருக்கு தொடர்ந்து புத்தி சொல்லி வந்தனர்.

8தேவவசனமாகிய’ நற்செய்தியை, அவர்கள் ஆவலோடு உடனடியாக ஏற்றுக்கொண்டதற்காக பவுல் அவர்களைப் போற்றுகிறார். அவர்கள் மட்டுமே தங்கள் நாட்டு ஜனங்களால் துன்புறுத்தப்படுபவர்கள் அல்ல, ஏனெனில் யூதேயாவில் முதன் முதலில் விசுவாசிகளானவர்கள், யூதரால் துன்புறுத்தப்பட்டனர். பவுல் அவர்கள் நலனில் அக்கறைகொண்டு இரண்டு சந்தர்ப்பங்களில் அவர்களை நேரில் சந்திக்க விரும்பினார்; ஆனால் சாத்தானால் தடைசெய்யப்பட்டார். தெசலோனிக்கேய சகோதரர்கள் பவுலுக்கும் அவருடன் சேர்ந்து வேலை செய்தவர்களுக்கும் மகிழ்ச்சியின் கிரீடமாகவும், “மகிமையும் சந்தோஷமுமாயிருக்கி”றார்கள். (2:​13, 20) அவர்களைப் பற்றிய எந்த செய்தியையும் கேட்காததால் பவுல் வேதனையடைந்தார்; எனவே தீமோத்தேயுவைத் தெசலோனிக்கேயுக்கு அனுப்பினார். அவர்களுடைய விசுவாசத்தை உறுதியாக்கவும் அவர்களுக்கு ஆறுதலளிக்கவும் தீமோத்தேயுவை அனுப்பினார். அவர்கள் ஆவிக்குரிய முறையில் செழுமையாக இருக்கிறார்கள் என்பதையும் அவர்களுடைய அன்பையும் பற்றிய நற்செய்தியுடனும் தீமோத்தேயு இப்போதுதான் திரும்பி வந்திருந்தார். இது அப்போஸ்தலனுக்கு ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. பவுல் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறார்; கர்த்தர் அவர்களுக்கு அதிகரிப்பைத் தந்து ஒருவருக்கொருவர் அன்பில் பெருகும்படி வேண்டுகிறார். அவர்களுடைய இருதயங்கள் கர்த்தரின் வந்திருத்தலின்போது பிதாவாகிய கடவுளுக்கு முன்பாக “குற்றமற்றவைகளாய்ப் பரிசுத்தத்தில்” இருக்கும்படியும் ஜெபிக்கிறார்.​—3:​13, தி.மொ.

9பரிசுத்தமாகவும் கனத்துடனும் சேவித்தல் (4:​1-12). தெசலோனிக்கேயர் கடவுளுக்குப் பிரியமான முறையில் நடக்கிறார்கள் என்பதற்காக பவுல் சந்தோஷமாக அவர்களை போற்றுகிறார். அவ்வாறே இன்னும் சிறப்பாய் நடந்துகொள்ளும்படி அறிவுரை கூறுகிறார். ஒவ்வொருவரும் “மோக இச்சைக்குட்படாமல் . . . அவனவன் தன் தன் சரீர பாண்டத்தைப் பரிசுத்தத்திலும் கனத்திலும் ஆள அறிந்துகொள்ள” வேண்டும். இந்த விஷயத்தில் ஒருவனும் தன் சகோதரனின் உரிமைகளை மதிக்காமல் வரம்புமீறி சென்று வஞ்சிக்கக் கூடாது. ஏனெனில் கடவுள் அவர்களை “அசுத்தத்திற்கல்ல பரிசுத்தமாவதற்கே அழைத்திருக்கிறார். ஆகையால் அசட்டைபண்ணுகிறவன் மனுஷனையல்ல, . . . கடவுளையே அசட்டைபண்ணுகிறான்.” (4:​4, 5, 7, 8, தி.மொ.) தெசலோனிக்கேய சகோதரர்கள் ஒருவருக்கொருவர் அன்பு காட்டுவதால் பவுல் அவர்களைப் போற்றுகிறார்; இதை இன்னும் நிறைவாக செய்துவரும்படியும், அமைதலாக வாழ்வதற்கும் புத்தி சொல்கிறார். அவர்கள் தங்களுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்தும்படியும் தங்கள் கைகளால் கடினமாக உழைப்பதை குறிக்கோளாக்கும்படியும் அறிவுரை கூறுகிறார். ஏனெனில் ‘புறம்பேயிருக்கிறவர்களுக்கு’ முன்பாக அவர்கள் யோக்கியமாய் நடந்துகொள்ள வேண்டும்.​—4:12.

10உயிர்த்தெழுதல் நம்பிக்கை (4:​13-18). மரணத்தில் தூங்குவோரைக் குறித்து நம்பிக்கையற்றவர்களைப் போல் சகோதரர்கள் துக்கிக்கக்கூடாது. இயேசு மரணமடைந்து மறுபடியும் உயிர்த்தெழுந்தாரென்று அவர்கள் விசுவாசித்தால், மரணத்தில் தூங்கிக்கொண்டிருப்பவர்களை இயேசுவின் மூலமாய் கடவுள் எழுப்புவார் என்பதையும் நம்ப வேண்டும். கர்த்தரின் வந்திருத்தலின்போது, அவர் கட்டளையிடும் தொனியுடன் வானத்திலிருந்து இறங்குவார். அப்போது “கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.” பின்பு உயிரோடிருப்போர் கர்த்தருடன் எப்போதும் இருக்கும்படி, “கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் . . . ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்ப”டுவர்.​—4:​16, 17.

11யெகோவாவின் நாள் நெருங்கிவருகையில் விழித்திருத்தல் (5:​1-28). ‘இரவில் திருடன் வருகிறவண்ணமே யெகோவாவின் நாள் வரும்.’ (NW) “சமாதானமும் சவுக்கியமும்” உண்டென்று ஜனங்கள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அழிவு திடீரென அவர்கள்மீது வரும். ஆகையால் தெசலோனிக்கேயர், ‘வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாய்’ விழித்திருக்க வேண்டியது அவசியம்; ஜாக்கிரதையுள்ளவர்களாக, “விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிரு”ப்பது அவசியம். (5:​2, NW, 3, 5, 8) இது, அவர்கள் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்து கட்டியெழுப்புவதற்குரிய காலம். கடினமாய் உழைத்து முன்நின்று நடத்துவோரை எல்லாரும் ‘மிக உயர்வாகக் கருதி அன்பு’ காட்ட வேண்டும். மறுபட்சத்தில், ஒழுங்கற்றவர்களுக்கு புத்தி சொல்ல வேண்டும், பலவீனரைத் தாங்க வேண்டும், அனைவரிடத்திலும் நீடிய பொறுமையோடு நடந்துகொள்ள வேண்டும். “உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்ய நாடுங்கள்” என்று பவுல் எழுதுகிறார்.​—5:​13, 15.

12கடைசியாக, முக்கியமான அநேக விஷயங்களைக் குறித்து பவுல் அறிவுரை கூறுகிறார்: ‘எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள், இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், எல்லாவற்றிற்காகவும் நன்றி செலுத்துங்கள். உற்சாகமான ஆவியை எப்போதும் காத்துக்கொள்ளுங்கள். தீர்க்கதரிசனமுரைத்தலுக்கு மதிப்பளியுங்கள். எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள். எவ்வகையான பொல்லாங்கையும் விட்டு விலகுங்கள்.’ (5:​16-22, NW) பின்பு சமாதானத்தின் கடவுள் அவர்களை முற்றிலும் பரிசுத்தமாக்கும்படி வேண்டுகிறார். அவர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வந்திருத்தலின்போது ஆவியிலும் ஆத்துமாவிலும் சரீரத்திலும் குற்றமற்றவர்களாய் நிலைத்திருக்கும்படியும் ஜெபிக்கிறார். சகோதரர்கள் எல்லாருக்கும் இந்த நிருபத்தை வாசித்துக் காட்ட வேண்டும் என்று குறிப்பிட்டு ஊக்கமூட்டும் அன்பான வார்த்தைகளுடன் கடிதத்தை முடிக்கிறார்.

ஏன் பயனுள்ளது

13தன் சகோதரரிடம் இருந்த அன்பான கரிசனையை இந்தக் கடிதத்தில் பவுல் வெளிப்படுத்தினார். அவரும் அவரோடு வந்த உடன் ஊழியர்களும் உருக்கமான பாசம் காட்டுவதில் சிறந்த முன்மாதிரி வைத்தார்கள். அவர்கள் தெசலோனிக்கேயிலிருந்த நேசமான சகோதரருக்குக் கடவுளின் நற்செய்தியை மட்டுமல்லாமல், ஜீவனையும் கொடுக்க தயாராயிருந்தார்கள். எல்லா கண்காணிகளும் தங்கள் சபையில் இருக்கும் அங்கத்தினரிடம் அத்தகைய அன்பான பந்தத்தை வளர்த்துக்கொள்ள முயற்சிப்பார்களாக! இப்படிப்பட்ட அன்பை வெளிக்காட்டும்போது மற்றவர்களிடம் அன்புகாட்டும்படி அது எல்லாரையும் தூண்டுவிக்கும். இதைக் குறித்து பவுல் சொன்னார்: “நாங்கள் உங்களிடத்தில் வைத்திருக்கிற அன்புக்கொப்பாய், நீங்களும் ஒருவரிடத்தில் ஒருவர் வைக்கும் அன்பிலும் மற்றெல்லா மனுஷரிடத்தில் வைக்கும் அன்பிலும் கர்த்தர் உங்களைப் பெருகவும் நிலைத்தோங்கவும் செய்”வாராக. கடவுளுடைய ஜனங்கள் மத்தியில் மனப்பூர்வமாய் காட்டப்படும் இப்படிப்பட்ட அன்பு எல்லாரையும் கட்டியெழுப்புகிறது. “கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வரும்போது, நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ள” இருதயங்களை காத்துக்கொள்ள இது உதவுகிறது. துன்மார்க்கமும் ஒழுக்கக்கேடும் நிறைந்த உலகத்திலிருந்து கிறிஸ்தவர்களை தனியே பிரித்து வைத்து, பரிசுத்தத்திலும் தூய்மையிலும் நடந்து கடவுளைப் பிரியப்படுத்த அவர்களுக்கு உதவுகிறது.​—3:​12, 13; 2:8; 4:​1-8.

14கிறிஸ்தவ சபையில் சாதுரியமாக அன்புள்ள அறிவுரையைக் கொடுப்பது எப்படி? இதற்கான சிறந்த மாதிரியை இந்த நிருபம் அளிக்கிறது. தெசலோனிக்கேய சகோதரர்கள் வைராக்கியத்தோடும், உண்மையோடும் இருந்தனர்; இருந்தபோதிலும், சில விஷயங்களை திருத்திக்கொள்ள வேண்டியதாயும் இருந்தது. அவர்களை ஒவ்வொரு முறையும் பவுல் திருத்துவதற்கு முன்பு, சகோதரரின் நற்பண்புகளை புகழ்கிறார். உதாரணமாக, ஒழுக்க சம்பந்தமான அசுத்தத்திற்கு எதிராக எச்சரிக்கிறார்; அதை சொல்வதற்கு முன்பு கடவுளைப் பிரியப்படுத்தும் முறையில் அவர்கள் நடப்பதைப் போற்றுகிறார். அதில் ‘இன்னும் அதிகமாய்ப் பெருகும்படி’ சொல்லிவிட்டு அதன்பின் ஒவ்வொருவரும் தன் சரீர பாண்டத்தைப் பரிசுத்தத்திலும் கனத்திலும் காத்து வரும்படி புத்திமதி கூறி ஊக்குவிக்கிறார். இன்னொரு உதாரணத்தில் அவர்களிடையே நிலவும் சகோதர அன்பை புகழ்கிறார்; பின்பு இதில் ‘அதிகமாய்ப் பெருக’ வேண்டும் என்று குறிப்பிடுகிறார். இப்படி போற்றியதற்கு பிறகு, ஒவ்வொருவரும் மற்றவர் விஷயத்தில் தலையிடாமல் தங்கள் வேலையை கவனித்துக்கொண்டு புறம்பே இருப்போருக்கு முன்பு யோக்கியமான வாழ்க்கை நடத்துபவராக இருக்கும்படியும் அவர்களுக்கு புத்திமதி கூறுகிறார். “உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்ய நாடுங்கள்” என்று பவுல் சகோதரரை சாதுரியமாய் ஏவுகிறார்.​—4:​1-7, 9-12; 5:15.

15நான்கு சந்தர்ப்பங்களில் இயேசு கிறிஸ்துவின் ‘வந்திருத்தலை’ பவுல் குறிப்பிடுகிறார். தெசலோனிக்கேயில் புதிதாக மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு இந்தப் போதகத்தில் அதிக ஆர்வம் இருந்திருக்க வேண்டும். பவுல் அவர்களுடைய நகரத்தில் இருந்தபோது கிறிஸ்துவால் ஆளப்படும் கடவுளின் ராஜ்யத்தைப் பற்றி தைரியமாய்ப் பிரசங்கித்தார். ஏனெனில், “இவர்களெல்லாரும் இயேசு என்னும் வேறொருவனை ராஜா என்று சொல்லி ராயனின் கட்டளைகளுக்கு விரோதமாய் நடக்கிறார்கள்” என்பதாக பவுலையும் அவருடைய தோழர்களையும் குற்றப்படுத்தியதிலிருந்து இது தெரிய வருகிறது. (அப். 17:​7, தி.மொ.; 1 தெ. 2:19; 3:13; 4:15; 5:23) தெசலோனிக்கேய சகோதரர்கள் ராஜ்யத்தின்மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தனர். மேலும் கடவுளிடம் விசுவாசம் வைத்து, “அவர் மரித்தோரிலிருந்தெழுப்பின . . . அவருடைய குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து” வந்து தங்களை வரவிருக்கும் கோபாக்கினையிலிருந்து விடுவிப்பார் என்று காத்திருந்தனர். அவ்வாறே, இன்று கடவுளுடைய ராஜ்யத்தில் நம்பிக்கை வைத்திருக்கும் யாவரும் ஒன்று தெசலோனிக்கேயரில் குறிப்பிடப்பட்டிருக்கும் நல்ல ஆலோசனைகளுக்கு செவிசாய்க்க வேண்டும். உறுதியான குற்றமற்ற இருதயத்தோடு அன்பில் பெருகுவது அவசியம். ‘தம்முடைய ராஜ்யத்திற்கும் மகிமைக்கும் அவர்களை அழைக்கிற தேவனுக்குப் பாத்திரராய் தொடர்ந்து நடந்துகொள்ள’ வேண்டும்.​—1 தெ. 1:​8, 10; 3:​12, 13, தி.மொ.; 2:11.

[அடிக்குறிப்புகள்]

a “கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் முதன்மையான பூர்வ புத்தகப் பெயர் பட்டியல்கள்” என்ற அட்டவணையில் பக்கம் 303-ஐப் பாருங்கள்.

b புதிய ஏற்பாட்டின் மூலவாக்கியம், (ஆங்கிலம்) கர்ட், பார்பரா ஆலன்ட் என்பவர்கள் எழுதியது. இ. எஃப். ரோட்ஸ் என்பவர் மொழிபெயர்த்தது. 1987, பக்கங்கள் 97, 99.

[கேள்விகள்]

1. (அ) ஒன்று தெசலோனிக்கேயர் ஏன் எழுதப்பட்டது? (ஆ) எப்போது எழுதப்பட்டது, இந்த நிருபத்திற்கு இருக்கும் தனிச்சிறப்பு என்ன?

2. ஒன்று தெசலோனிக்கேயரை எழுதியது யார் என்பதற்கும் இதன் நம்பகத் தன்மைக்கும் என்ன அத்தாட்சி இருக்கிறது?

3, 4. தெசலோனிக்கேயில் பவுலுடைய ஆரம்ப ஊழியத்தின் வெற்றியால் ஏற்பட்ட விளைவு என்ன?

5. தெசலோனிக்கே சபையின்மீது தனக்கிருந்த கவலையையும் கரிசனையையும் பவுல் எவ்வாறு காட்டினார்?

6. எதற்காக பவுல் தெசலோனிக்கேயரைப் போற்றுகிறார்?

7. தெசலோனிக்கேயரின் மத்தியில் இருந்தபோது என்ன மனப்பான்மையைப் பவுலும் அவருடைய தோழர்களும் காட்டினர், என்ன செய்யும்படி புத்தி சொன்னார்கள்?

8. தெசலோனிக்கேயர் எவ்வாறு பவுலின் மகிழ்ச்சிக்கு காரணராயினர், அவர்களுக்காக அவர் என்ன ஜெபிக்கிறார்?

9. பரிசுத்தத்தைப் பற்றியும் ஒருவருக்கொருவர் அன்புகாட்டுவதைப் பற்றியும் பவுல் என்ன அறிவுரை கொடுக்கிறார்?

10. மரணத்தில் தூங்குவோரை குறித்து சகோதரர்களிடம் என்ன மனப்பான்மை இருக்க வேண்டும்?

11. தெசலோனிக்கேயர் ஏன் விழித்திருக்க வேண்டும், அவர்கள் எதை செய்துகொண்டிருக்க வேண்டும்?

12. என்ன முக்கியமான விஷயங்களைப் பற்றி பவுல் கடைசியாக அறிவுரை கொடுக்கிறார், தெசலோனிக்கேயருக்கு எழுதின தன் நிருபத்தை எவ்வாறு முடிக்கிறார்?

13. எந்த விஷயத்தில் பவுலும் அவருடைய தோழர்களும் சிறந்த முன்மாதிரிகளானார்கள், அவ்வாறு மனப்பூர்வமாக அன்பு காட்டியதால் சபையில் என்ன நிலைமை ஏற்பட்டது?

14. ஒன்று தெசலோனிக்கேயர் எவ்வகையில் சாதுரியமான, அன்புள்ள அறிவுரையின் மிகச் சிறந்த முன்மாதிரி?

15. பவுல் தெசலோனிக்கேயில் இருந்தபோது, ராஜ்ய நம்பிக்கையை ஆர்வத்தோடு பிரசங்கித்தார் என்பதை எது காட்டுகிறது, இதன் சம்பந்தமாக என்ன சிறந்த அறிவுரை அளித்தார்?