Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் புத்தக எண் 53—2 தெசலோனிக்கேயர்

பைபிள் புத்தக எண் 53—2 தெசலோனிக்கேயர்

பைபிள் புத்தக எண் 53—2 தெசலோனிக்கேயர்

எழுத்தாளர்: பவுல்

எழுதப்பட்ட இடம்: கொரிந்து

எழுதி முடிக்கப்பட்டது: ஏ. பொ.ச. 51

அப்போஸ்தலன் பவுல் தெசலோனிக்கேயருக்கு இரண்டாம் கடிதத்தை எழுதினார்; முதல் நிருபம் எழுதி முடித்த சிறிது காலத்திற்குள்ளேயே இரண்டாம் நிருபமும் எழுதப்பட்டது. இதுவும் கொரிந்துவிலிருந்தே எழுதப்பட்டதென்றும் அறிந்திருக்கிறோம். இந்தக் கடிதத்திலும் சில்வானும் தீமோத்தேயும் பவுலுடன் சேர்ந்து தெசலோனிக்கேயிலிருந்த சபைக்கு வாழ்த்துதல் சொல்கின்றனர். அவர்கள் பூர்வ கிறிஸ்தவ சபையின் பயண ஊழியர்களாக இருந்தனர். இச்சமயம் மூவரும் கொரிந்துவில் ஒன்றாக கூடியிருந்தனர். அதன்பின் மறுபடியும் அதுபோல் ஒன்றுகூடினார்கள் என்பதற்கு எந்தப் பதிவும் இல்லை. (2 தெ. 1:1; அப். 18:​5, 18) பவுல் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த விஷயத்தையும் அதை அவர் கலந்தாராய்ந்த விதத்தையும் கவனிக்கும்போது அதில் அவசரத்தன்மை புலப்படுகிறது. அந்த சபையை உடனடியாக திருத்த வேண்டியதன் அவசியம் அதில் வெளிப்படுகிறது.

2ஒன்று தெசலோனிக்கேயர் கடிதத்தைப் போலவே, இந்த நிருபமும் நம்பத்தக்கது என்பதற்கு சான்றுகள் உள்ளன. பலர் இதை மேற்கோள் காட்டுகின்றனர்; அவர்களில் ஐரீனியஸ் (பொ.ச. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்), ஜஸ்டின் மார்ட்டிர் (இவரும் இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்) உட்பட, மற்ற பூர்வ எழுத்தாளர்களும் அடங்குவர். ‘அக்கிரம [பாவ] மனுஷனைப்’ பற்றி ஜஸ்டின் மார்ட்டிர் எழுதியிருக்கிறார்; இதிலிருந்து 2 தெசலோனிக்கேயர் 2:​3-ஐ அவர் குறிப்பிடுகிறார் என்பது தெளிவாக தெரிகிறது. ஒன்று தெசலோனிக்கேயர் காணப்படுகிற அதே ஆரம்ப கால புத்தகப் பெயர் பட்டியல்களில் இதுவும் காணப்படுகிறது. இப்போது இது செஸ்டர் பியட்டி பப்பைரஸ் எண் 2 (P46)-ல் காணப்படவில்லை; ஆனால், ஒன்று தெசலோனிக்கேயருக்குப் பின் காணாமற்போயிருக்கும் ஏழு தாள்களில் முதல் இரண்டில் நிச்சயமாக இது இருந்திருக்க வேண்டும்.

3இந்த நிருபத்தின் நோக்கம் என்ன? சபையில் பின்வரும் பிரச்சினைகள் இருந்தன என்பதை பவுல் தெசலோனிக்கேயருக்கு அளித்த அறிவுரையிலிருந்து தெரிந்துகொள்கிறோம். சிலர் கர்த்தரின் வந்திருத்தல் சீக்கிரத்தில் நிகழப் போகிறது என்று அடித்துக்கூறினர். இத்தகைய கற்பனை கதையைக் கட்டிவிட்டதோடு மட்டுமின்றி மற்றவர்களிடமும் இதைக் கூறி சபையில் அவர்கள் ஏற்படுத்திய கலவரம் கொஞ்சநஞ்சமல்ல. சிலர் வேலைசெய்யாமல் இருப்பதற்கு இதை ஒரு சாக்காக பயன்படுத்தினர் என்றும் தெரிகிறது. (2 தெ. 3:11) தன்னுடைய முதல் நிருபத்தில் கர்த்தரின் வந்திருத்தலைப் பற்றிய குறிப்புகளை பவுல் எழுதியிருந்தார். அந்தக் கடிதம் வாசிக்கப்பட்டதைக் கேட்டபோது இவர்கள் பவுலின் வார்த்தைகளைப் புரட்டி, தாங்களாகவே சில அர்த்தங்களை கொடுத்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. பவுலிடமிருந்து வந்ததாக தவறாக சொல்லப்பட்ட கடிதத்தில் ‘யெகோவாவின் நாள் வந்துவிட்டது’ என குறிப்பிட்டிருப்பதாகவும் சொல்லியிருக்க வாய்ப்பிருக்கிறது.​—2:​1, 2, NW.

4சபையில் இப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டிருக்கிறது என்ற செய்தி பவுலுக்குக் கிடைத்திருக்க வேண்டும். அவருடைய முதல் நிருபத்தை அந்தச் சபைக்கு எடுத்து சென்றவர் இந்தத் தகவலை சொல்லியிருக்கலாம். ஆகையால் அவர் பாசம் வைத்திருந்த சகோதரர்களின் எண்ணத்தை திருத்த மிக ஆவலாய் இருந்திருப்பார். எனவே, பொ.ச. 51-ம் ஆண்டில் பவுல் கொரிந்துவிலிருந்தபோது ஒரு நிருபத்தைத் தெசலோனிக்கேயிலிருந்த சபைக்கு அனுப்பினார்; அப்போது அவருடைய இரண்டு தோழர்களும் அங்கேதான் இருந்தனர். கிறிஸ்துவின் வந்திருத்தலைப் பற்றிய தவறான எண்ணத்தை திருத்தி, சத்தியத்தில் உறுதியாய் நிலைநிற்க வேண்டும் என்ற அன்பான ஊக்கமூட்டுதலை பவுல் கொடுக்கிறார்.

இரண்டு தெசலோனிக்கேயர் பொருளடக்கம்

5கர்த்தராகிய இயேசு வெளிப்படுவது (1:​1-12). தெசலோனிக்கேயருடைய விசுவாசத்தில் ஏற்பட்டிருந்த முன்னேற்றத்திற்காகவும் அவர்களுடைய அன்பிற்காகவும் பவுலும் அவருடைய தோழர்களும் கடவுளுக்கு நன்றி செலுத்துகின்றனர். அவர்கள் துன்புறுத்துதலின்போது சகிப்புத்தன்மையையும் விசுவாசத்தையும் காட்டினர். ராஜ்யத்துக்குப் பாத்திரவான்களாக கடவுளால் நியாயம் தீர்க்கப்படுவதற்கான நிரூபணமாகும் இது. சபையை துன்புறுத்துவோருக்கு துன்புறுத்தலையே கடவுள் அளிப்பார், துன்புறுத்தலை அனுபவிப்போருக்கோ இளைப்பாறுதலை அளிப்பார். “கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடு, . . . வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும். அந்நாளிலே தம்முடைய பரிசுத்தவான்களில் மகிமைப்படத்தக்கவராயும் . . . அவர் வரும்போது” இவை நிறைவேறும். (1:​8, 9) பவுலும் அவருடைய தோழர்களும் தெசலோனிக்கேயருக்காக எப்போதும் ஜெபிக்கின்றனர். கடவுள் தம்முடைய அழைப்புக்குப் பாத்திரவான்களாக அவர்களை கருதுவதற்கும், கர்த்தராகிய இயேசுவின் பெயர் அவர்களில் மகிமையடையவும், அவர்கள் இயேசுவுடன் ஐக்கியத்தில் மகிமைப்படுவதற்காகவும் ஜெபிக்கின்றனர்.

6இயேசுவின் வருகைக்கு முன்பாக விசுவாசதுரோகம் வரவேண்டும் (2:​1-12). யெகோவாவின் நாள் இதோ வந்துவிட்டது என்ற செய்தியைக் கேட்டு சகோதரர்கள் உணர்ச்சிவசப்படக்கூடாது. “விசுவாசதுரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் [“அக்கிரம மனுஷன்,” தி.மொ.] வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.” அதை “தடைசெய்கிறது இன்னதென்று” அவர்கள் இப்போது அறிந்துள்ளனர். ஆனால் இந்த அக்கிரமத்தின் இரகசியம் ஏற்கெனவே செயல்படுகிறது. இந்தத் தடை “நீக்கப்படும்போது, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்; அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் பிரசன்னத்தினாலே நாசம்பண்ணுவார்.” அந்த அக்கிரமக்காரன் வந்திருப்பது சாத்தானின் செயலின்படி வல்லமை வாய்ந்த கிரியைகளோடும் வஞ்சகத்தோடும் இருக்கும். சத்தியத்துக்குரிய அன்பை ஏற்காதவர்கள் பொய்யை விசுவாசிப்பதற்காக பிழை அவர்களிடம் கிரியை செய்ய கடவுள் அனுமதிக்கிறார்.​—2:​3, 6, 8.

7விசுவாசத்தில் உறுதியாய் நில்லுங்கள் (2:​13–3:18). பவுல் தொடர்ந்து சொல்வதாவது: ‘யெகோவாவால் நேசிக்கப்படுகிற சகோதரரே, கடவுள் உங்களை ஆவியால் பரிசுத்தப்படுத்துவதாலும், சத்தியத்தில் உங்களுக்கிருக்கும் விசுவாசத்தாலும், இரட்சிப்புக்காக தொடக்கத்திலிருந்தே உங்களை தெரிந்துகொண்டதாலும் உங்களுக்காக கடவுளுக்கு எப்போதும் நன்றிசெலுத்த கடமைப்பட்டிருக்கிறோம்.’ இந்த நோக்கத்துடன் நற்செய்தி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. ஆகையால், இயேசு கிறிஸ்துவும், அவர்களுக்கு நித்திய ஆறுதலையும் நம்பிக்கையையும் அன்புடன் அளித்த பிதாவும் ‘எல்லா நற்செய்கையிலும் நல்வார்த்தையிலும் அவர்களை ஸ்திரப்படுத்துவதற்கு’ விரும்புகின்றனர். ஆகவே, அந்தச் சகோதரர், உறுதியாக நின்று, தங்களுக்குக் கற்பிக்கப்பட்ட முறைமைகளை பின்பற்ற வேண்டும். (2:​13, 17, NW) ‘யெகோவாவின் வார்த்தை தொடர்ந்து விரைவாகப் பரவி மகிமைப்படுவதற்கு’ அவர்கள் ஜெபிக்கும்படி பவுல் கேட்கிறார். (3:​1, NW) உண்மையுள்ளவராகிய கர்த்தர் அவர்களை ஸ்திரப்படுத்தி தீயோனுக்கு விலக்கிக் காத்துக்கொள்வார். கடவுளின் அன்பிலும் கிறிஸ்துவின் சகிப்புத்தன்மையிலும் அவர்கள் தொடர்ந்து நடக்க கர்த்தர் உதவ வேண்டுமென பவுல் ஜெபிக்கிறார்.

8கண்டிப்பான அறிவுரை பின்தொடருகிறது: “சகோதரரே, எங்களிடத்தில் ஏற்றுக்கொண்ட முறைமையின்படி நடவாமல், ஒழுங்கற்று நடக்கிற எந்தச் சகோதரனையும் நீங்கள் விட்டு விலகவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, உங்களுக்குக் கட்டளையிடுகிறோம்.” (3:6) அவர்களுக்கு பாரமாக இருக்கக்கூடாது என்பதற்காக பவுலும் அவருடைய மிஷனரி தோழர்களும் இரவும் பகலும் உழைத்தனர். இப்படிப்பட்ட நல்ல முன்மாதிரிகளாக நடந்துகொண்டதால்தான் அந்த அப்போஸ்தலன் பின்வருமாறு நினைப்பூட்டுகிறார்: ‘ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாது.’ ஆனால், ஒழுங்கற்ற சிலர் வேலைசெய்யாமலும் அனாவசியமாய் அடுத்தவர் விஷயத்தில் தலையிட்டுக்கொண்டும் இருப்பதை கேள்விப்படுகிறார். இவர்கள் உழைத்து சாப்பிட வேண்டும்.​—2 தெ. 3:10; 1 தெ. 4:11.

9சரியானதைச் செய்வதை சகோதரர்கள் நிறுத்திவிடக்கூடாது. அவர்களில் ஒருவன் பவுலின் கடிதத்துக்கு கீழ்ப்படியவில்லை என்றால் சபை அவனைக் குறித்துவைக்க வேண்டும். அவனோடு கூட்டுறவு கொள்ளாமல் இருப்பதால் அவன் வெட்கமடைய வேண்டும். அதே சமயத்தில் ஒரு சகோதரனாக அவனுக்குப் புத்திசொல்ல வேண்டும். சமாதானத்தின் கர்த்தர்தாமே “எப்பொழுதும் சகலவிதத்திலும்” அவர்களுக்குச் சமாதானத்தைத் தரும்படி பவுல் ஜெபம் செய்து, வாழ்த்துதல் தெரிவித்து, அந்த நிருபத்தை அவரே எழுதி முடிக்கிறார்.​—2 தெ. 3:16.

ஏன் பயனுள்ளது

10தேவாவியால் ஏவப்பட்டு தெசலோனிக்கேயருக்கு எழுதப்பட்ட இந்தச் சுருக்கமான நிருபம் கிறிஸ்தவ சத்தியத்தின் பல அம்சங்களை பற்றி பேசுகிறது. ஆழ்ந்து ஆராய்வதற்கு இவை யாவும் பயனுள்ளவை. இந்தக் கடிதத்தில் வரும் அடிப்படை போதகங்களையும் நியமங்களையும் கவனியுங்கள்: யெகோவா இரட்சிப்பின் கடவுள், சத்தியத்தில் விசுவாசம் வைப்பவர்களை ஆவியினால் பரிசுத்தப்படுத்துகிறார் (2:13); ஒரு கிறிஸ்தவன் கடவுளுடைய ராஜ்யத்துக்குப் பாத்திரவானாக கருதப்பட வேண்டும் என்றால் துன்பங்களை சகித்துக்கொள்ள வேண்டும் (1:​4, 5); கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வந்திருத்தலின்போது கிறிஸ்தவர்கள் அவரோடு கூட்டிச் சேர்க்கப்படுவார்கள் (2:1); நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்கள்மீது யெகோவா நீதியுள்ள ஆக்கினைத்தீர்ப்பைக் கொண்டுவருவார் (1:​5-8); அழைக்கப்பட்டவர்கள், கடவுளுடைய தகுதியற்ற தயவுக்கேற்ப, கிறிஸ்து இயேசுவுடன் ஐக்கியத்தில் மகிமைப்படுத்தப்படுவர் (1:12); அவர்கள் நற்செய்தியை பிரசங்கிப்பதன் மூலம் அழைக்கப்படுகின்றனர் (2:14); விசுவாசம் இன்றியமையாத ஒரு தேவை (1:​3, 4, 10, 11; 2:13; 3:2); ஊழியத்தில் நிலைத்திருப்பதற்காக வேலைசெய்வது அவசியம்; ஒருவன் வேலை செய்யாவிட்டால் சோம்பேறியாகி அநாவசியமான விஷயங்களில் தலையிட ஆரம்பிப்பான் (3:​8-12); கடவுளை நேசிப்பது சகித்திருப்பதோடு சம்பந்தப்பட்டிருக்கிறது (3:5). தேவாவியால் ஏவப்பட்ட ஒரு சுருக்கமான நிருபத்தில் விசுவாசத்தை உறுதியாக்கும் எவ்வளவு அருமையான விஷயங்கள் இருக்கின்றன!

11தெசலோனிக்கேயிலிருந்த சகோதரரின் ஆவிக்குரிய நலத்துக்கும், சபையின் ஐக்கியத்துக்கும் செழுமைக்கும் ஆழ்ந்த அக்கறையை இந்த நிருபத்தில் பவுல் வெளிப்படுத்தினார். “அக்கிரம மனுஷன்” முதலில் வெளிப்பட்டு, “கடவுளின் ஆலயத்தில் உட்கார்ந்து தன்னையே கடவுளென்று காண்பி”ப்பதும் நிறைவேற வேண்டுமென்பதை எடுத்துக் காண்பித்தார்; யெகோவாவின் நாள் வரும் காலத்தைப் பற்றி அவர்களுக்கிருந்த கருத்தை சரிசெய்தார். எனினும், உரிய காலத்தில் கர்த்தராகிய இயேசு, ‘தம்முடைய பரிசுத்தவான்களில் மகிமைப்படத்தக்கவராயும், . . . விசுவாசிக்கிறவர்களெல்லாரிடத்திலும் ஆச்சரியப்படத்தக்கவராயும்’ ஜுவாலித்து எரிகிற அக்கினியில் பழிவாங்குபவராக வானத்திலிருந்து வெளிப்படுவார். ஆகவே, ‘தேவனுடைய ராஜ்யத்துக்குப் பாத்திரராக எண்ணப்படுவோர்’ இது நிறைவேறும் என்பதில் முழு நிச்சயத்துடன் இருக்கலாம்.​—2:​3, 4, தி.மொ.; 1:​5, 8, 9.

[கேள்விகள்]

1. இரண்டாம் தெசலோனிக்கேயர் எழுதப்பட்ட காலத்தையும் இடத்தையும் எது குறிப்பிட்டுக் காட்டுகிறது, இந்த நிருபத்தை எழுதுவதற்கான காரணம் என்ன?

2. இரண்டாம் தெசலோனிக்கேயரின் நம்பகத் தன்மைக்கு எது சான்றளிக்கிறது?

3, 4. (அ) தெசலோனிக்கேயர் சபையில் என்ன பிரச்சினை எழும்பியிருந்தது? (ஆ) இந்த நிருபம் எப்போது எங்கிருந்து எழுதப்பட்டது, இந்த நிருபத்தின் மூலம் பவுல் என்ன செய்ய விரும்பினார்?

5. எதற்காகப் பவுலும் அவருடைய தோழர்களும் கடவுளுக்கு நன்றி செலுத்துகின்றனர், என்ன உறுதியளிக்கின்றனர், எவ்வாறு ஜெபிக்கின்றனர்?

6. யெகோவாவின் நாளுக்கு முன்பாக வரவேண்டியது என்ன, அது எவ்வாறு வரும்?

7. எவ்வாறு சகோதரர் உறுதியுடன் நின்று தீயோனுக்கு எதிராக பாதுகாப்பை அடைவார்கள்?

8. என்ன கண்டிப்பான அறிவுரை கொடுக்கப்படுகிறது, பவுலும் அவருடைய நண்பர்களும் எப்படிப்பட்ட முன்மாதிரியை வைத்தனர்?

9. சரியானதைச் செய்வதைப் பற்றியும் கீழ்ப்படியாதவரை வெட்கத்துக்குட்படுத்துவதை பற்றியும் பவுல் என்ன சொல்கிறார், தன் நிருபத்தை எவ்வாறு முடிக்கிறார்?

10. இரண்டாம் தெசலோனிக்கேயரில் அடங்கியுள்ள அடிப்படையான சில போதகங்களும் நியமங்களும் யாவை?

11. ராஜ்யம் சம்பந்தமாக என்ன முக்கியமான தகவலும் உறுதியும் அளிக்கப்படுகின்றன?