Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் புத்தக எண் 54—1 தீமோத்தேயு

பைபிள் புத்தக எண் 54—1 தீமோத்தேயு

பைபிள் புத்தக எண் 54—1 தீமோத்தேயு

எழுத்தாளர்: பவுல்

எழுதப்பட்ட இடம்: மக்கெதோனியா

எழுதி முடிக்கப்பட்டது: ஏ. பொ.ச. 61-64

இராயனுக்கு பவுல் மேல்முறையீடு செய்து தீர்ப்புக்காக ரோமில் காத்திருந்தார் என்பதோடு அப்போஸ்தலர் புத்தகத்தை லூக்கா முடிக்கிறார். பவுல் வாடகை வீட்டில் தங்கி அங்கு வந்த எல்லாரிடமும் “தைரியத்துடனே தடையில்லாமல்” கடவுளுடைய ராஜ்யத்தை பிரசங்கித்ததாக பதிவு காட்டுகிறது. (அப். 28:​30, 31) ஆனால் தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் நிருபத்தில், “நான் பாதகன்போலக் கட்டப்பட்டு, துன்பத்தை அநுபவிக்கிறேன்” என்றும் சீக்கிரத்தில் தான் மரிக்க நேரிடும் என்றும் பவுல் குறிப்பிடுகிறார். (2 தீ. 2:9; 4:​6-8, தி.மொ.) எத்தகைய மாற்றம்! முதல் சந்தர்ப்பத்தில் மதிப்புக்குரிய கைதியாக நடத்தப்பட்டார்; இரண்டாவது சந்தர்ப்பத்தில் பாதகனாக நடத்தப்பட்டார். லூக்கா பொ.ச. 61-ல் பவுலின் நிலைமையை விளக்குகிறார்; அச்சமயம் பவுல் ரோமில் இரண்டு ஆண்டுகள் கைதியாக இருந்தார். அந்த நிலைமைக்கும் தன்னுடைய மரணத்திற்கு சிறிது காலத்துக்கு முன்பு தீமோத்தேயுவுக்கு எழுதிய கடிதத்திற்கும் இடையே என்ன நடந்தது?

2தீமோத்தேயுவிற்கும் தீத்துவிற்கும் பவுல் நிருபங்கள் எழுதினார். அவை எழுதப்பட்ட காலத்தை அப்போஸ்தலர் புத்தகத்தில் குறிப்பிட்ட காலத்தோடு பொருத்துவதில் சிக்கல் இருந்தது. ஆகவே அவற்றை கூர்ந்து கவனித்த பைபிள் உரையாசிரியர்கள் இராயனுக்கு செய்த மேல்முறையீடு வெற்றி அடைந்து கிட்டத்தட்ட பொ.ச. 61-ல் பவுல் விடுதலை செய்யப்பட்டார் என்ற முடிவுக்கு வந்தனர். த நியூ வெஸ்ட்மினிஸ்டர் டிக்ஷ்னரி ஆஃப் த பைபிள் சொல்கிறது: “[பவுல் இரண்டு ஆண்டுகள் சிறையிருப்புக்குப் பின் விடுதலை செய்யப்பட்டார் என்ற] இந்த கருத்தை அப்போஸ்தலர் புத்தகத்தின் முடிவான வசனம் ஆதரிக்கிறது; விவரிக்கப்பட்ட அந்தச் சிறையிருப்பு அப்போஸ்தலனின் மரணத்தில் முடிவடைந்தது என்று ஊகிப்பதைவிட இந்தக் கருத்துதான் சரியாக பொருந்துகிறது. பவுலுடைய ஊழியத்தை ஒருவரும் தடைசெய்யவில்லை என்ற உண்மையை லூக்கா அழுத்திக் கூறுகிறார்; இதன் மூலம் அவருடைய ஊழியத்தின் முடிவு நெருங்கவில்லை என்ற எண்ணத்தையே கொடுக்கிறார். a அப்படியென்றால் அவர் ரோமில் முதல் சிறையிருப்பிலிருந்து விடுதலையானதற்கும் கடைசி சிறையிருப்புக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், அல்லது ஏறக்குறைய பொ.ச. 61-64-ல் ஒன்று தீமோத்தேயு எழுதப்பட்டது.

3சிறையிலிருந்து விடுதலையானதும் தீமோத்தேயு மற்றும் தீத்துவுடன் பவுல் மிஷனரி ஊழியத்தை தொடர்ந்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. சிலர் கருத்து தெரிவிப்பதற்கு இணங்க பவுல் ஸ்பானியா தேசத்துக்கு சென்றாரா இல்லையா என்பது தெரியவில்லை. பவுல் “மேற்கு கடைக்கோடிக்கு” வந்தார் என்று ரோமின் கிளெமென்ட் (ஏ. பொ.ச. 95) எழுதினார், இது ஸ்பானியாவையும் உள்ளடக்கியிருக்கலாம். b

4பவுல் எங்கிருந்து தீமோத்தேயுவுக்குத் தன் முதல் நிருபத்தை எழுதினார்? எபேசுவில் சபை காரியங்கள் சிலவற்றை கவனிப்பதற்காக தீமோத்தேயுவை அனுப்பிவிட்டு பவுல் மக்கெதோனியாவுக்குச் சென்றாரென ஒன்று தீமோத்தேயு 1:​4 காட்டுகிறது. இங்கிருந்தே எபேசுவிலிருந்த தீமோத்தேயுவுக்கு இந்த நிருபத்தை எழுதினாரென தோன்றுகிறது.

5தீமோத்தேயுவுக்கு எழுதிய இந்த இரண்டு நிருபங்களும், பவுல் எழுதியதாகவும் தேவாவியால் ஏவப்பட்ட வேதாகமத்தின் பாகமாயிருப்பதாகவும் பூர்வ காலங்கள் முதற்கொண்டே ஏற்றுக்கொள்ளப்பட்டன. பாலிக்கார்ப், இக்னேஷியஸ், ரோமின் கிளெமென்ட் உட்பட பூர்வ கிறிஸ்தவ எழுத்தாளர்கள் இதை ஒப்புக்கொள்கின்றனர். இந்த நிருபங்கள் பவுலுடையதே என்பதாக முதல் சில நூற்றாண்டுகளுக்குரிய புத்தகப் பெயர் பட்டியல்களில் காணப்படுகிறது. ஒரு நிபுணர் எழுதியதாவது: “பு[திய] [ற்பாட்டு] புத்தகங்கள் சிலவற்றிற்குதான் இதற்கு இருப்பதைவிட அதிக சான்றுகள் இருக்கின்றன . . . ஆகவே பூர்வ சர்ச்சில் இந்தப் புத்தகத்திற்கு பலத்த சான்று இருக்கிறது; இதன் நம்பகத் தன்மையை கேள்வி கேட்பவர்கள் இப்படிப்பட்ட அத்தாட்சிகளை ஏற்காமல் புதிதாக புனைகிறார்கள் என்றே கருத வேண்டும்.” c

6சபையை ஒழுங்கமைத்து நடத்துவதற்குரிய வழிமுறைகள் சிலவற்றை தெளிவாக்குவதற்காக பவுல் இந்த முதல் நிருபத்தை தீமோத்தேயுக்கு எழுதினார். மேலும் தீமோத்தேயு பொய் போதகங்களைக் குறித்து எச்சரிக்கையாக இருந்து, அப்படிப்பட்ட ‘பொய் ஞானத்தை’ எதிர்ப்பதற்கு சகோதரர்களை பலப்படுத்த வேண்டிய அவசியமும் இருந்தது. (1 தீ. 6:20) வாணிகத்திற்கு பேர்போன நகரமாகிய எபேசு பொருளாசையையும் “பண ஆசை”யையும் தூண்டிவிடும்; ஆகவே இதைப் பற்றியும் அறிவுரை கொடுப்பது காலத்திற்கு ஏற்றதாயிருக்கும். (6:10) ஊழியத்தில் பயன்படுத்துவதற்கு ஏற்ற நல்ல அனுபவமும் பயிற்சியும் தீமோத்தேயுவுக்கு இருந்தது. அவருடைய தந்தை கிரேக்க நாட்டைச் சேர்ந்தவர், தாயோ கடவுள் பயமுள்ள யூத பெண். தீமோத்தேயு கிறிஸ்தவத்தை எப்போது முதன் முதலாக கேள்விப்பட்டார் என்று திட்டமாக தெரியவில்லை. தன் இரண்டாவது மிஷனரி பயணத்தின்போது, பொ.ச. 49-ன் முடிவில், அல்லது பொ.ச. 50-ன் தொடக்கத்தில் பவுல் லீஸ்திராவுக்குச் சென்றிருக்க வேண்டும்; அப்போது தீமோத்தேயு (பதினெட்டு வயதிலிருந்து இருபத்தைந்து வயதிற்குள்ளாக இருந்திருக்கலாம்) ‘லீஸ்திராவிலும் இக்கோனியாவிலுமுள்ள சகோதரராலே நற்சாட்சி பெற்றிருந்தார்.’ ஆகவே தன்னோடும் சீலாவோடும் தீமோத்தேயு பயணம் செய்வதற்கு பவுல் ஏற்பாடு செய்தார். (அப். 16:​1-3) தீமோத்தேயுவைப் பற்றி அப்போஸ்தலர் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதோடு பவுலின் 14 கடிதங்களில் 11-ல் அவர் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பவுல் அவரிடம் தகப்பனைப் போன்ற பாசத்தைக் காட்டினார். பல சந்தர்ப்பங்களில் வெவ்வேறு சபைகளுக்குச் சென்று சேவிக்கும்படி அவரை நியமித்தார். இதிலிருந்து தீமோத்தேயு மிஷனரி ஊழியத்தை நல்லவிதமாக செய்திருந்தார் என்பதும், முக்கியமான பொறுப்புகளைக் கையாள தகுதிபெற்றிருந்தார் என்பதும் தெளிவாகிறது.​—1 தீ. 1:2; 5:23; 1 தெ. 3:2; பிலி. 2:19.

ஒன்று தீமோத்தேயுவின் பொருளடக்கம்

7நல்மனச்சாட்சியுடன் கூடிய விசுவாசத்தோடு இருக்க அறிவுரை (1:​1-20). ‘விசுவாசத்தில் உத்தம குமாரன்’ என்று பவுல் தீமோத்தேயுவை வாழ்த்தி, எபேசுவில் தொடர்ந்திருக்கும்படி ஊக்கப்படுத்துகிறார். ‘வேற்றுமையான உபதேசத்தைப்’ போதிப்போரை அவர் திருத்த வேண்டும். அத்தகைய உபதேசம், விசுவாசத்தை அளிப்பதற்குப் பதிலாக பயனற்ற கேள்விகளுக்கே வழிநடத்துகிறது. இந்தக் கட்டளையின் நோக்கமானது, “சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே” என்று பவுல் கூறுகிறார். “இவைகளைச் சிலர் நோக்காமல் வீண்பேச்சுக்கு இடங்கொடுத்து விலகிப்போனார்கள்” என்றும் சொல்கிறார்.​—1:​2, 3, 5, 6.

8ஒருசமயம், பவுல் தூஷிப்பவராகவும் துன்புறுத்துபவராகவும் இருந்தார்; எனினும், கர்த்தரின் தகுதியற்ற தயவு “கிறிஸ்து இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தோடும் அன்போடும் . . . அபரிமிதமாய்ப் பெருகிற்று;” ஆகவே அவருக்கு இரக்கம் காண்பிக்கப்பட்டது. பாவிகளில் பிரதான பாவியாக அவர் இருந்தார்; அப்படியிருந்தும் ‘பாவிகளை இரட்சிக்க உலகத்தில் வந்த’ கிறிஸ்து இயேசுவின் நீடிய பொறுமைக்கு இவரே கண்கூடான சான்றானார். கனத்தையும் மகிமையையும் என்றென்றும் பெறுவதற்கு நித்தியத்தின் ராஜா எவ்வளவு தகுதியுள்ளவராக இருக்கிறார்! “விசுவாசமும் நல்மனச்சாட்சியுமுடையவனாய்” நல்ல போராட்டத்தைப் போராடும்படி பவுல் தீமோத்தேயுவுக்கு கட்டளையிடுகிறார். தேவ தூஷணம் செய்து ‘விசுவாசத்தில் கப்பற்சேதத்திற்குள்ளாகி’ பவுலால் சிட்சிக்கப்பட்ட இமெனேயையும் அலெக்சந்தரையும் போல் அவர் இருக்கக்கூடாது.​—1:​14, 15, 19, தி.மொ.

9சபையில் வணக்கத்தையும் ஒழுங்கமைப்பையும் குறித்த போதனைகள் (2:​1–6:2). கிறிஸ்தவர்கள் தேவபக்தியுடன் சமாதானமாய் வாழ்வதற்காக உயர் பதவியில் இருப்போர் உட்பட, எல்லா ஜனங்களுக்காகவும் ஜெபிக்க வேண்டும். “எல்லா மனுஷரும் இரட்சிப்பைப் பெறவும் சத்தியத்தை அறிகிற முற்றறிவை அடையவும் வேண்டுமென்பது” கடவுளுடைய சித்தம். “கடவுள் ஒருவரே, கடவுளுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே; இவர் மனுஷனாகிய கிறிஸ்து இயேசு. இவரே எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மைத் தாமே ஒப்புக்கொடுத்தார்.” (2:​4-6, தி.மொ.) இவற்றை விளக்குவதற்காக பவுல் அப்போஸ்தலனாகவும் போதகனாகவும் நியமிக்கப்பட்டார். ஆகவே உண்மைமாறா பற்றுறுதியுடன் ஜெபிக்கும்படி ஆண்களுக்குக் கூறுகிறார்; தேவபக்தியுள்ளவர்களுக்கு தகுந்தவாறு பெண்கள் அடக்கமான உடை அணிய வேண்டுமென கூறுகிறார். ஒரு பெண் அமைதலுடன் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும், ஆணின் மீது அதிகாரம் செலுத்தக்கூடாது, “ஏனெனில், முதலாவது உருவாக்கப்பட்டவன் ஆதாமே, பின்புதான் ஏவாள்.”​—2:​13, தி.மொ.

10கண்காணியாயிருக்க நாடுபவன் நல்ல வேலையை விரும்புகிறான். பின்பு, கண்காணிகளுக்கும் உதவி ஊழியருக்கும் இருக்க வேண்டிய தகுதிகளை பவுல் வரிசையாக குறிப்பிடுகிறார். ஒரு கண்காணி “குற்றஞ்சாட்டப்படாதவனும் ஒரே மனைவியையுடைய புருஷனும் தெளிந்த சிந்தையுள்ளவனும் நிதான புத்தியுள்ளவனும் யோக்கியதையுள்ளவனும் அந்நியரை உபசரிக்கிறவனும் போதக சமர்த்தனுமாயிருக்க வேண்டும். அவன் மதுபானப்பிரியனும் அடிக்கிறவனுமாயிராமல் பொறுமையுள்ளவனும் சண்டை செய்யாதவனும் பண ஆசையில்லாதவனுமாயிருந்து தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனும் தன் பிள்ளைகளை எல்லா ஒழுக்கமுள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாய் இருக்கவேண்டும். . . . புதிய சீஷனாயிருக்கக்கூடாது. . . . புறம்பானவர்களால் நற்சாட்சி பெற்றவனாயுமிருக்க வேண்டும்.” (3:​2-7, தி.மொ.) உதவி ஊழியர்களுக்கும் இதைப்போன்ற தகுதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன, நியமிப்பதற்கு முன்பாக இவர்களுடைய தகுதி சோதிக்கப்பட வேண்டும். “சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிற” கடவுளின் சபையில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்று தீமோத்தேயு அறியும்படி பவுல் இவற்றை எழுதுகிறார்.​—3:15.

11பிற்காலங்களில் பேய்களின் போதகங்களால் சிலர் விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள். பாசாங்குக்காரர் பொய்களைப் பேசி, மணம் செய்யாதிருக்கும்படியும் நன்றியோடு அருந்தும்படி கடவுள் படைத்த உணவு வகைகளைத் தவிர்க்கும்படியும் கட்டளையிடுவார்கள். நல்ல ஊழியக்காரனாக, தீமோத்தேயு கட்டுக்கதைகளுக்கும் ‘கிழவிகளின் கதைகளுக்கும்’ விலகியிருக்க வேண்டும். மறுபட்சத்தில், தேவபக்தியை குறிக்கோளாக வைத்து தன்னை பயிற்றுவித்துக் கொள்ள வேண்டும். “எல்லா மனுஷருக்கும், விசேஷமாக விசுவாசிகளுக்கும் இரட்சகராயிருக்கிற ஜீவனுள்ள கடவுள்மேல் நன்னம்பிக்கை வைத்திருக்கிறபடியால் இதற்கென்றே உழைத்தும் போராடியும் வருகிறோம்” என்று பவுல் சொல்கிறார். ஆகையால் தீமோத்தேயு தொடர்ந்து இந்தக் கட்டளைகளை அவர்களுக்கு போதிக்க வேண்டும். அவருடைய இளமையைக் குறித்து ஒருவரும் அவரை அவமதிக்க இடமளிக்கக்கூடாது, அதற்கு மாறாக, நடத்தையிலும் தேவபக்தியுள்ள ஊழியத்திலும் முன்மாதிரியாக நடந்துகொள்ள வேண்டும். இவற்றில் நிலைத்து நின்று தனக்கும் தன் போதகத்துக்கும் இடைவிடாத கவனத்தைச் செலுத்த வேண்டும். இவற்றில் அவர் நிலைத்திருந்தால் ‘தன்னையும் தன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்வார்.’​—4:​7, 10, 16, தி.மொ.

12தனிப்பட்டவர்களை எவ்வாறு நடத்துவது என்பதைப் பற்றி பவுல் தீமோத்தேயுவுக்கு அறிவுரை கூறுகிறார்: முதிர்வயதான ஆண்களைத் தகப்பன்மார் போலவும், வாலிபரை சகோதரரைப் போலவும், முதிர்வயதான பெண்களைத் தாய்மார் போலவும், வாலிபப் பெண்களைச் சகோதரிகள் போலவும் நடத்த வேண்டும். உண்மையில் விதவைகளாக இருப்போருக்குத் தகுந்த ஆதரவளிக்க வேண்டும். கூடுமானால், ஒரு விதவையின் குடும்பத்தாரே அவரை கவனித்துக்கொள்ள வேண்டும். இதில் தவறுவது விசுவாசத்தை மறுதலிப்பதாயிருக்கும். குறைந்தது 60 வயதுடைய விதவை, “நற்கிரியைகளைக் குறித்து நற்சாட்சி பெற்றவ”ளாயிருந்தால் அந்தப் பெயர் பட்டியலில் சேர்க்கப்படலாம். (5:10) மறுபட்சத்தில், தங்கள் பாலுணர்ச்சி வேகங்களை அடக்க முடியாத இளம் விதவைகள் அதில் சேர்க்கப்படக்கூடாது. அவர்கள் சுற்றித்திரிந்து வீணாக கிசுகிசுப்பதற்கு பதில் மணம் செய்து பிள்ளைகளைப் பெறட்டும். இதன் மூலம் எதிரி நிந்திப்பதற்கு இடம்கொடாமலிருக்க முடியும்.

13நன்றாக முன்நின்று நடத்தும் மூப்பர்களை, “விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் உழைக்கிறவர்களை” இரட்டிப்பான கனத்துக்கு தகுதியுள்ளவர்களாக கருத வேண்டும். (5:​17, தி.மொ.) ஒரு மூப்பருக்கு எதிராக கொண்டுவரப்படும் குற்றச்சாட்டை இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் அத்தாட்சிகளில்லாமல் ஏற்கக்கூடாது. பழக்கமாய்ப் பாவம் செய்யும் ஆட்களை எல்லாருக்கும் முன்பாக கடிந்துகொள்ள வேண்டும்; ஆனால் இப்படிப்பட்ட விஷயங்களில் விசாரிக்குமுன் தீர்ப்புசெய்வதோ பட்சபாதம் காட்டுவதோ கூடாது. அடிமைகள் தங்கள் எஜமானருக்கு மரியாதை கொடுத்து, நல்ல சேவை செய்ய வேண்டும். முக்கியமாய் ‘விசுவாசிகளும் பிரியருமாயிருக்கிற’ சகோதரருக்கு அவ்வாறு செய்ய வேண்டும்.​—6:2.

14‘போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தி’யைப் பற்றிய அறிவுரை (6:​3-21). ஆரோக்கியமான வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவன் இறுமாப்புள்ளவனும் தர்க்கங்களினால் மனநோய் பிடித்தவனுமாயிருக்கிறான். இதனால், அற்ப காரியங்கள் மூர்க்கமான வாக்குவாதங்களுக்கு வழிநடத்துகின்றன. மறுபட்சத்தில், ‘போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தி’ பெரும் ஆதாயத்துக்கு வழிநடத்துகிறது. ஒரு விசுவாசி உண்ணவும் உடுக்கவும் இருந்தால் போதுமென்றிருக்க வேண்டும். ஐசுவரியவானாக வேண்டுமென தீர்மானிப்பது அழிவுக்கு வழிநடத்தும் ஒரு கண்ணியே; பண ஆசை “எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது.” கடவுளின் மனிதனாக, இந்தக் காரியங்களுக்கு விலகியோடும்படியும், கிறிஸ்தவ பண்புகளை நாடித்தொடரும்படியும், விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடும்படியும், “நித்தியஜீவனைப் பற்றிக்கொள்”ளும்படியும் பவுல் தீமோத்தேயுவை உற்சாகப்படுத்துகிறார். (6:​6, 10, 12) கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படும் வரை அவர் இந்தக் கட்டளையை ‘மாசில்லாமலும் குற்றமில்லாமலும் கைக்கொள்ள’ வேண்டும். ஐசுவரியவான்கள், உண்மையான ஜீவனை உறுதியாக பிடிப்பதற்கு, “நிலையற்ற ஐசுவரியத்தின்மீதல்ல, . . . கடவுளின்மீதே நன்னம்பிக்கை வைக்க” வேண்டும். தீமோத்தேயு கொள்கைகளை பொறுப்பாய் காத்துக்கொள்ளும்படியும், சீர்கேடான பேச்சுகளுக்கும் “ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும்” விலகும்படியும், முடிவாக பவுல் உற்சாகப்படுத்துகிறார்.​—6:​13, 17, தி.மொ., 20.

ஏன் பயனுள்ளது

15வீண் மனக்கோட்டைகளை கட்டி அவற்றில் உழலுவோருக்கும் தத்துவஞான தர்க்கங்களில் ஈடுபடுவோருக்கும் மிகக் கண்டிப்பான எச்சரிக்கையை இந்த நிருபம் அளிக்கிறது. ‘சொற்களைப்பற்றிய தர்க்கங்களுக்கு’ அகந்தையோடு தொடர்பிருக்கிறது, எனவே அவற்றைத் தவிர்க்க வேண்டும். அவை கிறிஸ்தவ வளர்ச்சியைத் தடைசெய்கின்றன; ‘விசுவாசத்தின் சம்பந்தமாக எதையாவது கடவுளிடமிருந்து பெறுவதற்கு பதில் ஆராய்வதற்கான கேள்விகளையே’ இப்படிப்பட்ட தர்க்கங்கள் அளித்தன என்று பவுல் நமக்குச் சொல்கிறார். (6:​3-6; 1:​4, NW) இந்த வாக்குவாதங்கள் மாம்ச கிரியைகளாக செயல்படுவதோடு, “நித்தியானந்த தேவனுடைய மகிமையான சுவிசேஷத்தின் . . . ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிரிடையாயிருக்கி”ன்றன.​—1:​10, 11.

16பண ஆசை நிறைந்த எபேசுவில் வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கு பொருளாசையையும் அதோடு சம்பந்தப்பட்ட கவனச் சிதறல்களையும் எதிர்த்துப் போராடுவதற்கு அறிவுரை தேவைப்பட்டிருக்க வேண்டும். பவுல் அந்த அறிவுரையைக் கொடுத்தார். ‘பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது’ என்ற பவுலுடைய வார்த்தைகளை இந்த உலகம் விளம்பரப்படுத்தியிருக்கிறது; ஆனால் வெகு சிலரே அதற்கு செவிகொடுக்கின்றனர்! மாறாக, உண்மை கிறிஸ்தவர்கள் எப்போதும் இந்த அறிவுரைக்கு செவிகொடுக்க வேண்டும். இது அவர்களுக்கு ஜீவனைக் குறிக்கிறது. பொருளாசையின் கண்ணிக்கு விலகியோடி, தங்கள் நம்பிக்கையை “நிலையற்ற ஐசுவரியத்தின் மேலல்ல, அநுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குத் தாராளமாய்க் கொடுக்கிற கடவுளின் மேலேயே” வைக்க வேண்டும்.​—6:​6-12, 17-19, தி.மொ.

17ஒரு கிறிஸ்தவ வாலிபர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்பதற்கு தீமோத்தேயு நல்ல முன்மாதிரியாக இருந்தாரென பவுலின் நிருபம் காட்டுகிறது. தீமோத்தேயு வயதில் இளைஞராக இருந்தபோதிலும் ஆவிக்குரிய வளர்ச்சியில் முதிர்ச்சியடைந்திருந்தார். ஒரு கண்காணியாவதற்கு தகுதிபெற்றிருந்தார். அந்தப் பொறுப்புகளை நன்றாக நிறைவேற்றியதால் ஆசீர்வதிக்கப்பட்டார். அதேசமயம், தொடர்ந்து முன்னேறுவதற்கு தீமோத்தேயு அறிவுரைகளைப் பற்றி இடைவிடாமல் சிந்தித்து அவற்றில் நிலைத்தும் இருக்க வேண்டியிருந்தது. வைராக்கியமுள்ள இன்றைய இளம் ஊழியர்களும் அவ்வாறே செய்ய வேண்டும். கிறிஸ்தவ முன்னேற்றத்தில் மகிழ்ச்சியை நாடும் யாவருக்கும் பவுலின் அறிவுரை காலத்துக்கேற்றது: “உன்னைக்குறித்தும் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு, இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்.”​—4:​15, 16.

18தேவாவியால் ஏவப்பட்ட இந்த நிருபம் கடவுளுடைய முறையான ஏற்பாடுகளுக்கு மதித்துணர்வை வளர்க்கிறது. சபையில் தேவராஜ்ய ஒழுங்கு நிலவ, ஆண்களும் பெண்களும் என்ன செய்யலாம் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. (2:​8-15) இதைத் தொடர்ந்து கண்காணிகளுக்கும் உதவி ஊழியர்களுக்குமுரிய தகுதிகளை பற்றி சொல்கிறது. இப்படிப்பட்ட பொறுப்புகளில் சேவிப்பவர்களுக்கான தகுதிகளைப் பரிசுத்த ஆவி குறிப்பிடுகிறது. ‘கண்காணிக்கும் பொறுப்பை நாடுகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான்’ என்று குறிப்பிட்டு, ஒப்புக்கொடுத்த எல்லா ஊழியர்களும் இந்தத் தராதரங்களை எட்ட வேண்டும் என்று இந்த நிருபம் ஊக்குவிக்கிறது. (3:​1-13, NW) சபையிலுள்ள வெவ்வேறு வயதினரிடமும் ஆண்களிடமும் பெண்களிடமும் கண்காணிக்கு இருக்க வேண்டிய சரியான மனப்பான்மையைப் பொருத்தமான முறையில் விவரிக்கிறது. குற்றச்சாட்டுகளை சாட்சிகளுக்கு முன்னால் எவ்வாறு கையாளுவது என்பதையும் குறிப்பிடுகிறது. திருவசனத்திலும் உபதேசத்திலும் கடினமாய் உழைக்கும் மூப்பர்கள் இரட்டிப்பான கனத்திற்குத் தகுதியாக இருக்கிறார்கள் என்பதாக பவுல் அறிவுறுத்துகிறார். அதை வலியுறுத்த இருமுறை எபிரெய வேதாகமத்தை அதிகாரத்துவமாக குறிப்பிடுகிறார்: “போரடிக்கிற மாட்டை வாய்க்கட்டாயாக என்றும், வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றும் வேதவாக்கியம் சொல்லுகிறதே.”​—1 தீ. 5:​1-3, 9, 10, 19-21, 17, 18; உபா. 25:4; லேவி. 19:13.

19இப்படிப்பட்ட அறிவுரைகளை அளித்ததற்கு பிறகு, ‘அரசர்களாக ஆளுவோரின் அரசராகவும் கர்த்தாக்களாக ஆளுவோரின் கர்த்தராகவும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படும் வரையில்’ மாசில்லாமலும் குற்றமில்லாமலும் இந்தக் கட்டளையைக் கைக்கொள்ள வேண்டுமென்று பவுல் கூறுகிறார். இந்த ராஜ்ய நம்பிக்கையின் அடிப்படையில், கிறிஸ்தவர்களுக்குப் பின்வரும் சக்திவாய்ந்த அறிவுரை கொடுப்பதோடு இந்த நிருபம் முடிகிறது: “நன்மைசெய்யவும் நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும் தாராளமாய்க் கொடுக்கிறவர்களும் உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும், உண்மையில் ஜீவனாயிருப்பதைப் பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் வேண்டும்.” (1 தீ. 6:​14, 15, 18, 19, தி.மொ.) தீமோத்தேயுவுக்கு எழுதிய முதலாம் நிருபத்தின் அறிவுரைகள் நிச்சயமாகவே நன்மையளிக்கின்றன!

[அடிக்குறிப்புகள்]

a 1970, ஹெச். எஸ். கெஹ்மன் பதிப்பித்தது, பக்கம் 721.

b நைஸீனுக்கு முந்திய பிரமுகர்கள், (ஆங்கிலம்) தொ. I, பக்கம் 6, “கிளெமென்ட் கொரிந்தியருக்கு எழுதிய முதல் நிருபம்,” அதி. V.

c நியூ பைபிள் டிக்ஷ்னரி, இரண்டாம் பதிப்பு, 1986, ஜே. டி. டக்லஸ் பதிப்பித்தது, பக்கம் 1203.

[கேள்விகள்]

1, 2. (அ) அப்போஸ்தலர் புத்தகத்திலும் இரண்டு தீமோத்தேயுவிலும் கொடுக்கப்பட்டுள்ள பவுலின் சிறையிருப்பைப் பற்றிய விவரிப்புகளுக்கு இடையே என்ன வேறுபாடு காணப்படுகிறது? (ஆ) ஒன்று தீமோத்தேயு எப்போது எழுதப்பட்டதாக தோன்றுகிறது, ஏன்?

3, 4. (அ) பவுல் சிறையிலிருந்து விடுதலையான பிறகு என்ன செய்திருக்க வேண்டும்? (ஆ) ஒன்று தீமோத்தேயுவை அவர் எங்கிருந்து எழுதினார்?

5. தீமோத்தேயுவுக்கு எழுதிய நிருபங்களின் நம்பகத் தன்மைக்கு என்ன அத்தாட்சி உள்ளது?

6. (அ) எந்த காரணங்களுக்காக பவுல் ஒன்று தீமோத்தேயுவை எழுதினார்? (ஆ) தீமோத்தேயு எப்படிப்பட்ட சூழ்நிலையிலிருந்து வந்தவர், அவர் முதிர்ச்சியடைந்த ஊழியரென எது காட்டுகிறது?

7. ஏன் எபேசுவில் தொடர்ந்திருக்கும்படி பவுல் தீமோத்தேயுவை உற்சாகப்படுத்துகிறார்?

8. பவுலுக்கு இரக்கம் காட்டியது எதை அறிவுறுத்தியது, என்ன நல்ல போராட்டத்தைப் போராடும்படி தீமோத்தேயுவை அவர் உற்சாகப்படுத்துகிறார்?

9. (அ) ஜெபங்கள் எத்தகையவையாக இருக்க வேண்டும், ஏன்? (ஆ) சபையில் பெண்களைக் குறித்து என்ன சொல்லப்படுகிறது?

10. கண்காணிகளுக்கும் உதவி ஊழியர்களுக்குமான தகுதிகள் யாவை, பவுல் ஏன் இவற்றை எழுதுகிறார்?

11. (அ) பின்னால் என்ன பிரச்சினைகள் தோன்றும்? (ஆ) தீமோத்தேயு எதற்கு கவனம் செலுத்த வேண்டும், ஏன்?

12. சபையிலுள்ள விதவைகளையும் மற்றவர்களையும் கையாளும் முறையைக் குறித்து என்ன அறிவுரை கொடுக்கப்படுகிறது?

13. மூப்பருக்கு என்ன மதிப்பு கொடுக்க வேண்டும், பழக்கமாக பாவத்தைச் செய்யும் ஆட்களை எவ்வாறு கையாள வேண்டும், அடிமைகளின் கடமை என்ன?

14. ‘போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியின்’ சம்பந்தமாக அகந்தையையும் பண ஆசையையும் பற்றி பவுல் என்ன சொல்கிறார்?

15. வீண் மனக்கோட்டைகளுக்கும் தர்க்கங்களுக்கும் எதிராக என்ன எச்சரிக்கை கொடுக்கப்படுகிறது?

16. பொருளாசை பற்றி பவுல் கொடுத்த அறிவுரை என்ன?

17. தீமோத்தேயுவுக்குக் கொடுத்த எந்த அறிவுரை இன்றிருக்கும் வைராக்கியமுள்ள எல்லா இளம் ஊழியர்களுக்கும் பொருந்தும்?

18. சபையில் உள்ள எப்படிப்பட்ட ஏற்பாடுகள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன, எவ்வாறு பவுல் எபிரெய வேதாகமத்தை அதிகாரத்துவமாக பயன்படுத்துகிறார்?

19. ராஜ்ய நம்பிக்கை எவ்வாறு வலியுறுத்தப்படுகிறது, இதன் அடிப்படையில் என்ன அறிவுரை கொடுக்கப்படுகிறது?