Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் புத்தக எண் 57—பிலேமோன்

பைபிள் புத்தக எண் 57—பிலேமோன்

பைபிள் புத்தக எண் 57—பிலேமோன்

எழுத்தாளர்: பவுல்

எழுதப்பட்ட இடம்: ரோம்

எழுதி முடிக்கப்பட்டது: ஏ. பொ.ச. 60-61

பவுல் எழுதிய மிகச் சாதுரியமான, அன்பு ததும்பும் இந்த நிருபம் இன்று கிறிஸ்தவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இது ‘புறஜாதிகளுக்கு அப்போஸ்தலனாகிய’ பவுலால் எழுதப்பட்ட மிகச் சிறிய நிருபம். முழு பைபிளிலும், இதைவிட குறைந்த தகவல் யோவானின் இரண்டாம் மூன்றாம் நிருபங்களில் மட்டுமே காணப்படுகின்றன. மேலும், இது மட்டுமே ‘தனிப்பட்ட ஒரு நபருக்கு’ பவுல் எழுதிய ஒரே கடிதம். ஏனெனில், இது ஒரு சபைக்கோ பொறுப்புள்ள கண்காணிக்கோ முறைப்படி எழுதப்படவில்லை, ஒரு தனிப்பட்ட நபருக்கே எழுதப்பட்டது. அவருடைய பெயர் பிலேமோன்; இவர் ஆசியா மைனரின் மத்தியில் பிரிகியா பகுதியில் கொலோசெ பட்டணத்தில் பணக்காரராக வாழ்ந்திருக்க வேண்டும். இந்தக் கிறிஸ்தவ சகோதரனோடு பவுல் கலந்துபேச விரும்பிய ஒரு தனிப்பட்ட பிரச்சினை மாத்திரமே இந்தக் கடிதத்தில் கையாளப்பட்டது.​—ரோ. 11:13.

2இந்த நிருபத்தின் நோக்கம் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது: ரோமில் முதல் சிறையிருப்பின்போது (பொ.ச. 59-61) கடவுளுடைய ராஜ்யத்தைப் பிரசங்கிக்க பவுலுக்கு அதிக சுதந்திரம் இருந்தது. அப்போதுதான் அவர் ஒநேசிமுவோடு கலந்துரையாடியிருக்க வேண்டும்; பவுலின் நண்பராகிய பிலேமோனின் வீட்டில் அடிமையாக இருந்த ஒநேசிமு ஓடிவந்துவிட்டார். பவுலின் பிரசங்கத்துக்குச் செவிசாய்த்தவர்களுக்குள் ஒநேசிமுவும் ஒருவர். இதனால் ஒநேசிமு கிறிஸ்தவரானார். ஒநேசிமுவின் சம்மதத்துடன் பவுல் அவரைப் பிலேமோனிடம் திரும்ப அனுப்பத் தீர்மானித்தார். இதே சமயத்தில், எபேசுவிலும் கொலோசெயிலும் இருந்த சபைகளுக்குப் பவுல் நிருபங்களை எழுதியிருந்தார். கிறிஸ்தவ அடிமைகளும் அடிமைகளின் எஜமானர்களும் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற அறிவுரைகளை இந்த இரண்டு நிருபங்களிலும் அளித்தார். (எபே. 6:5-9; கொலோ. 3:​22–4:1) இதற்கும் மேலாக பிலேமோனுக்கும் பவுல் ஒரு நிருபத்தை எழுதினார்; இதில் ஒநேசிமுவுக்காக தனிப்பட்ட முறையில் மன்றாடினார். இது அவரே எழுதிய நிருபம்; பவுல் சாதாரணமாக அவ்வாறு எழுதுவதில்லை. (பிலே. 19) அவரே கைப்பட எழுதியதால், அவருடைய மன்றாட்டின் முக்கியத்துவம் இன்னும் சிறப்பித்துக் காட்டப்பட்டது.

3பவுல் ஏறக்குறைய பொ.ச. 60-61-ல் இதை எழுதியிருக்கலாம். ஏனெனில் ரோமர்கள் மதமாற்றம் செய்யுமளவு அவர் அதிக காலம் பிரசங்கித்திருக்க வேண்டும். மேலும், விடுதலை செய்யப்படலாம் என்ற நம்பிக்கையை 22-ம் (NW) வசனத்தில் அவர் குறிப்பிடுகிறார். அதனால், இந்த நிருபம் சிறிது கால சிறையிருப்பிற்குப் பின்பு எழுதப்பட்டதென்ற முடிவுக்கு நாம் வரலாம். பிலேமோனுக்கும், எபேசுவிலும் கொலோசெயிலும் இருந்த சபைகளுக்கும் எழுதப்பட்ட இந்த மூன்று நிருபங்களும் தீகிக்கு மற்றும் ஒநேசிமுவிடம் கொடுத்து அனுப்பப்பட்டிருக்கலாம்.​—எபே. 6:​21, 22; கொலோ. 4:​7-9.

4பிலேமோன் நிருபத்தின் எழுத்தாளர் பவுல் என்பது முதல் வசனத்தில் அவரது பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதில் இருந்து தெரிகிறது. பவுலே எழுத்தாளர் என்பதை ஆரிகெனும் டெர்ட்டுல்லியனும் ஒப்புக்கொண்டனர். a பொ.ச. இரண்டாம் நூற்றாண்டின் மியூராட்டோரியன் சுருள்களின் பாகங்களில், பவுலின் மற்ற நிருபங்களோடு இந்த நிருபமும் பட்டியலிடப்பட்டிருக்கிறது; எனவே இதன் நம்பகத் தன்மை உறுதிசெய்யப்பட்டு, ஆதரிக்கப்படுகிறது.

பிலேமோனின் பொருளடக்கம்

5ஒநேசிமு ‘அடிமையைவிட மேலானவனாக’ எஜமானரிடம் திரும்ப அனுப்பப்படுகிறார் (வச. 1-25). பிலேமோனுக்கும், “நம் சகோதரி” (NW) அப்பியாளுக்கும், ‘நம் உடன் போர்ச்சேவகன்’ அர்க்கிப்புவுக்கும், பிலேமோனின் வீட்டில் கூடிவரும் சபைக்கும் பவுல் அன்பான வாழ்த்துதலை அனுப்புகிறார். கர்த்தராகிய இயேசுவிடமும் பரிசுத்தவான்களிடமும் பிலேமோனுக்கு (“அன்புள்ளவன்” என்று பொருள்) இருக்கும் அன்பையும் விசுவாசத்தையும் அவர் பாராட்டுகிறார். பிலேமோனின் அன்பைப் பற்றிய அறிக்கைகள் பவுலுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் ஆறுதலையும் தந்தன. முதிர்வயதானவராகவும் கைதியாகவும் இருக்கும் பவுல், தன் “பிள்ளை” ஒநேசிமுவைக் குறித்து உரிமையுடன் எழுதுகிறார்; சிறைக் கட்டுகளில் இருக்கும்போது இவருக்கு ‘தகப்பனானார்.’ ஒநேசிமு (“பயன்படுகிறவன்” என்று பொருள்) முன்பு பிலேமோனுக்குப் பயனற்றவராக இருந்தார், ஆனால் இப்போது பிலேமோனுக்கும் பவுலுக்கும் பயனுள்ளவர்.​—வச. 2, 10, தி.மொ.

6சிறைச்சாலையில் பணிவிடை செய்வதற்காக ஒநேசிமுவை தன்னிடம் வைத்துக்கொள்ள அப்போஸ்தலன் விரும்புகிறார், ஆனால் பிலேமோனின் சம்மதம் இல்லாமல் அவ்வாறு செய்ய விரும்பவில்லை. ஆகவே அவரைத் திரும்ப அனுப்புகிறார், “இனி . . . அடிமையாகவல்ல, அடிமையிலுமேலான பிரிய சகோதரனாக” அனுப்புகிறார். பவுல் வந்தால் எவ்வாறு ஏற்றுக்கொள்வாரோ அதே விதத்தில் ஒநேசிமுவை தயவோடு ஏற்றுக்கொள்ளும்படி பவுல் கேட்கிறார். பிலேமோனுக்கு ஒநேசிமு அநியாயம் செய்திருந்தால் அது பவுலின் கணக்கில் சுமத்தப்படட்டும், ஏனெனில் ‘நீர் உம்மைத்தாமே எனக்குக் கடனாகச் செலுத்தவேண்டுமென்று’ பவுல் பிலேமோனுக்குச் சொல்கிறார். (வச. 15, 19) அவர் சீக்கிரத்தில் விடுதலை செய்யப்படலாமென்றும் பிலேமோனை சந்திக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டு வாழ்த்துக்களுடன் முடிக்கிறார்.

ஏன் பயனுள்ளது

7பவுல் “சமூக சீர்திருத்தத்திற்காக” பிரசங்கிக்கவில்லை என்பதை இந்த நிருபம் காட்டுகிறது. அதாவது அடிமைத்தனம் போன்ற அச்சமயத்து பழக்கங்களை அவர் ஒழிக்க முயற்சி செய்யவில்லை. கிறிஸ்தவ அடிமைகளையும் மனம்போன போக்கில் அவர் விடுதலை செய்யவில்லை. மாறாக, ஓடிவந்த அடிமையாகிய ஒநேசிமுவை அவருடைய எஜமானர் பிலேமோனிடமே திரும்ப அனுப்பி வைத்தார்; அது ரோமிலிருந்து கொலோசெக்கு கிட்டத்தட்ட 1,400 கிலோமீட்டருக்கும் அதிக தூரமான பயணமாக இருந்திருக்கும். ‘தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கித்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய விசேஷங்களை உபதேசிக்கும்’ பொறுப்பை கடவுள் பவுலுக்கு அளித்திருந்தார். இவ்வாறு நடந்துகொண்டதன் மூலம் அப்போஸ்தலனாக தனக்கு கொடுக்கப்பட்ட மேம்பட்ட அழைப்பிற்கு இசைவாக பவுல் செயல்பட்டார்.​—அப். 28:31; பிலே. 8, 9.

8பிலேமோனுக்கு எழுதிய நிருபத்தில் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் மத்தியில் இருந்த அன்பையும் ஒற்றுமையையும் காண முடிகிறது. பூர்வ கிறிஸ்தவர்கள் ஒருவரையொருவர் ‘சகோதரன்’ மற்றும் “சகோதரி” என்றழைத்தனர் என்று நாம் அறிந்துகொள்கிறோம். (பிலே. 2, 20, தி.மொ.) மேலும், இந்த நிருபம் கிறிஸ்தவ சகோதரர்களின் மத்தியில் கிறிஸ்தவ நியமங்களை நடைமுறையில் பொருத்திப் பயனடைவதன் அவசியத்தை இன்றுள்ள கிறிஸ்தவர்களுக்கு வெளிப்படுத்துகிறது. பவுல் வெளிக்காட்டும் சகோதர அன்பையும், சமுதாய உறவுகளுக்கும் மற்றவரின் உடைமைகளுக்குமான மதிப்பையும், திறம்பட்ட சாதுரியத்தையும், போற்றத்தக்க மனத்தாழ்மையையும் இக்கடிதத்தின் வாயிலாக காண்கிறோம். பவுல் கிறிஸ்தவ சபையில் முக்கியமான கண்காணியாக இருந்தார். எனவே தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒநேசிமுவை மன்னிக்கும்படி பிலேமோனை பவுல் கட்டாயப்படுத்தவில்லை. அதற்கு பதில் கிறிஸ்தவ அன்பு மற்றும் நட்பின் அடிப்படையில் அவரிடம் மன்றாடினார். பவுல் பிலேமோனை சாதுரியமாக அணுகியதிலிருந்து இன்று கண்காணிகள் பயனடையலாம்.

9சந்தேகமில்லாமல் தன் வேண்டுகோளுக்குப் பிலேமோன் இணங்குவார் என்று பவுல் எதிர்பார்த்தார். பிலேமோன் அவ்வாறு செய்வது மத்தேயு 6:​14-ல் இயேசு சொன்னதையும், எபேசியர் 4:​32-ல் பவுல் சொன்னதையும் நடைமுறையில் பொருத்துவதாக இருக்கும். இதைப் போலவே, குற்றம் செய்யும் ஒரு சகோதரனிடம் தயவாயும் மன்னிப்போராயும் இருக்கும்படி கிறிஸ்தவர்கள் இன்று எதிர்பார்க்கப்படுகின்றனர். தனக்கு சொந்தமான அடிமையை பிலேமோன் தன் விருப்பப்படி தண்டிக்கலாம். அதற்கு சட்டப்படி அவருக்கு உரிமையிருந்தது; இருந்தும் அவர் அந்த அடிமையை மன்னிப்பது சாத்தியமென்றால் குற்றம் செய்யும் ஒரு சகோதரனை கிறிஸ்தவர்கள் மன்னிக்க முடியும்; ஏனெனில் இது அதைப் பார்க்கிலும் மிக எளிய காரியமே.

10யெகோவாவின் ஆவி செயல்படுவது பிலேமோனுக்கு எழுதப்பட்ட இந்த நிருபத்தில் வெகு தெளிவாகிறது. கடினமான ஒரு பிரச்சினையை திறம்பட்ட விதத்தில் பவுல் கையாண்டதை இது வெளிப்படுத்தியிருக்கிறது. மற்றவர்களுடைய உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பது, கனிவான பாசத்தை காட்டுவது, உடன் கிறிஸ்தவனில் நம்பிக்கை வைப்பது ஆகியவற்றை பவுல் வெளிப்படுத்தியதிலிருந்து இது தெளிவாகிறது. மற்ற வேதவாக்கியங்களைப்போல் பிலேமோனுக்கு எழுதிய நிருபம் கிறிஸ்தவ நியமங்களைக் கற்பிக்கிறது. இது கிறிஸ்தவ ஒற்றுமையை ஊக்குவிக்கிறது, ‘பரிசுத்தவான்களுக்குள்’ நிரம்பியிருக்கும் அன்பையும் விசுவாசத்தையும் உயர்த்திக் காட்டுகிறது. கடவுளுடைய ராஜ்யத்தில் நம்பிக்கை வைக்கும் இவர்கள் யெகோவாவின் தயவை தங்கள் நடத்தையில் காட்டுகின்றனர்.​—வச. 5.

[அடிக்குறிப்பு]

a தி இன்டர்நாஷனல் ஸ்டாண்டர்ட் பைபிள் என்ஸைக்ளோப்பீடியா, ஜி. டபிள்யு. பிரோமிலி பதிப்பித்தது, தொ. 3, 1986, பக்கம் 831.

[கேள்விகள்]

1. பிலேமோனுக்கு எழுதிய நிருபத்தின் தனிச் சிறப்புகள் யாவை?

2. இந்த நிருபம் எந்த சந்தர்ப்பத்தில் என்ன நோக்கத்துக்காக எழுதப்பட்டது?

3. பிலேமோனுக்கு எழுதிய நிருபம் எப்போது எழுதப்பட்டிருக்கலாம், எவ்வாறு அனுப்பப்பட்டது?

4. பிலேமோன் புத்தகத்தின் எழுத்தாளர் யார் என்பதையும் அதன் நம்பகத் தன்மையையும் எது நிரூபிக்கிறது?

5. (அ) என்ன வாழ்த்துக்களோடும் பாராட்டுதலோடும் இந்த நிருபம் தொடங்குகிறது? (ஆ) பிலேமோனிடம் அவருடைய அடிமை ஒநேசிமுவைப் பற்றி பவுல் என்ன சொல்கிறார்?

6. ஒநேசிமு என்ன வகையில் நடத்தப்பட வேண்டுமென்று பவுல் சிபாரிசு செய்கிறார், என்ன சாதுரியமான விளக்கத்துடன்?

7. ஒநேசிமுவின் விஷயத்தில், அப்போஸ்தலனாக தன் மேம்பட்ட அழைப்பிற்கு இசைவாக பவுல் எவ்வாறு செயல்பட்டார்?

8. கிறிஸ்தவ நியமங்களை நடைமுறையில் பொருத்தும் என்ன முறையை பிலேமோன் விளக்குகிறது?

9. பவுலின் வேண்டுகோளுக்கு இணங்குவதால், பிலேமோன் இன்றைய கிறிஸ்தவர்களுக்கு எப்படிப்பட்ட முன்மாதிரியாகிறார்?

10. யெகோவாவின் ஆவி செயல்படுவது பிலேமோனுக்கு எழுதிய நிருபத்தில் எவ்வாறு வெகு தெளிவாகிறது?