Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் புத்தக எண் 58—எபிரெயர்

பைபிள் புத்தக எண் 58—எபிரெயர்

பைபிள் புத்தக எண் 58—எபிரெயர்

எழுத்தாளர்: பவுல்

எழுதப்பட்ட இடம்: ரோம்

எழுதி முடிக்கப்பட்டது: ஏ. பொ.ச. 61

“புறஜாதிகளுக்கு” அப்போஸ்தலன் என பவுல் நன்கு அறியப்பட்டிருக்கிறார். அப்படியென்றால் அவர் யூதரல்லாதவர்களிடம் மட்டுமே ஊழியம் செய்தாரா? இல்லவேயில்லை! பவுல் முழுக்காட்டப்பட்டு ஊழியத்திற்காக அனுப்பப்படுவதற்கு முன்பு அவரைக் குறித்து கர்த்தராகிய இயேசு அனனியாவிடம், ‘அவன் [பவுல்] புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்’ என்று சொன்னார். (அப். 9:15; கலா. 2:​8, 9) இயேசுவின் பெயரை இஸ்ரவேல் புத்திரருக்கு அறிவிப்பதும் பவுலுடைய ஊழியத்தின் பாகமாக இருந்தது; எனவே எபிரெயர் புத்தகத்தை அவர் எழுதியது பொருத்தம்தான்.

2எனினும், எபிரெயர் புத்தகத்தை பவுல்தான் எழுதினார் என்பதை சில விமர்சகர்கள் சந்தேகிக்கின்றனர். பவுலின் பெயர் இந்த நிருபத்தில் குறிப்பிடப்படவில்லை என்பது ஒரு காரணம். இது உண்மையில் ஒரு பிரச்சினை அல்ல. அதிகாரப்பூர்வ பட்டியலிலுள்ள அநேக புத்தகங்களில் எழுத்தாளருடைய பெயர் காணப்படுவதில்லை. ஆனால் எழுத்தாளரின் எழுத்துநடை போன்ற பைபிள் சார்ந்த அத்தாட்சியால் எழுத்தாளரை அநேக சந்தர்ப்பங்களில் அடையாளம் காண முடிகிறது. பவுலின் பெயரை கேட்டாலே ஜனங்களுக்கு வெறுப்பு ஏற்படும்படி யூதேயாவில் இருந்த சில யூதர்கள் செய்திருந்தனர். எனவே, யூதேயாவிலிருந்த எபிரெய கிறிஸ்தவர்களுக்கு பவுல் எழுதும்போது தன் பெயரை வேண்டுமென்றே குறிப்பிடாமல் இருந்திருக்கலாம் என்பது சிலரின் கருத்து. (அப். 21:28) இதைப் போலவே பவுலுடைய எழுத்துநடை மற்ற நிருபங்களின் எழுத்துநடையிலிருந்து மாறியிருந்தாலும் அவர்தான் எழுத்தாளர் என்பதில் சந்தேகமில்லை. புறமதத்தாரிடமோ யூதரிடமோ அல்லது கிறிஸ்தவர்களிடமோ நற்செய்தியை பகிர்ந்து கொள்ளும்போது ‘எல்லாருக்கும் எல்லாமாகும்’ திறமை பவுலுக்கு எப்போதும் இருந்தது. நியாய விவாதங்களை அவர்கள் முழுமையாய்ப் புரிந்துகொண்டு மதிப்பதற்காகவே, ஒரு யூதன் மற்ற யூதர்களுக்கு விளக்குவதாக அவரது விளக்கங்கள் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன.​1 கொ. 9:22.

3பவுலே இந்தப் புத்தகத்தின் எழுத்தாளர் என்பதற்கு பைபிள் சார்ந்த அத்தாட்சி முழுமையான ஆதரவளிக்கிறது. இதன் எழுத்தாளர் இத்தாலியில் இருந்தார், தீமோத்தேயுவுடன் அவருக்கு கூட்டுறவு இருந்தது. இந்த உண்மைகள் பவுலுக்குப் பொருந்துகிறது. (எபி. 13:​23, 24) மேலும், விவாதங்கள் யூத நோக்குநிலையிலிருந்து அளிக்கப்பட்டிருந்தாலும் கோட்பாடுகளை விளக்கும் விதம் பவுலின் பாணியில் இருக்கிறது. எனவே எபிரெய சபைக்காகவே எழுதப்பட்ட இந்தக் கடிதம் அவர்களது அக்கறையை தூண்டும் வகையில் திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த விஷயத்தில், கிளார்க்கின் கமென்டரி தொ. 6, பக்கம் 681, எபிரெயர் நிருபத்தைக் குறித்து இவ்வாறு சொல்கிறது: “இது யூதருக்குத்தான் எழுதப்பட்டது என்பதை இந்த நிருபத்தின் முழு அமைப்பும் நிரூபிக்கிறது. இது ஒருவேளை புறஜாதியாருக்கு எழுதப்பட்டிருந்தால் அவர்களில் பத்தாயிரத்தில் ஒருவர்கூட அந்த விவாதத்தைப் புரிந்துகொண்டிருக்க முடியாது; ஏனெனில் அவர்களுக்கு யூத ஒழுங்குமுறையைப் பற்றி எதுவும் தெரியாது. அதை வாசிப்பவர்களுக்கு இப்படிப்பட்ட அறிவு இருக்கிறது என்பதன் அடிப்படையில்தான் எழுத்தாளர் முழு நிருபத்தையும் எழுதியிருக்கிறார்.” இதன் மூலம், பவுலின் மற்ற நிருபங்களிலிருந்து எழுத்துநடை ஏன் வேறுபடுகிறது என்பதற்கான காரணத்தை விளங்கிக் கொள்ள முடியும்.

4பவுல்தான் இந்த நிருபத்தின் எழுத்தாளர் என்பதற்கு கூடுதல் அத்தாட்சியை செஸ்டர் பியட்டி பப்பைரஸ் சுவடி எண் 2 (P46) அளித்திருக்கிறது; இந்தச் சுவடி ஏறக்குறைய 1930-ல் கண்டுபிடிக்கப்பட்டது. பவுல் மரணமடைந்து கிட்டத்தட்ட நூற்றைம்பது ஆண்டுகளுக்குப்பின் இந்த பப்பைரஸ் எழுதப்பட்டது. இந்தப் பப்பைரஸ் சுவடியைப் பற்றி, பிரிட்டனைச் சேர்ந்த மூலவாக்கிய விமர்சகர் சர் ஃபிரெட்ரிக் கெனியன் இவ்வாறு கூறினார்: “ரோமர் புத்தகத்திற்கு அடுத்ததாக எபிரெயர் வைக்கப்பட்டிருப்பது (இதற்கு முன் இவ்வாறு வரிசைப்படுத்தப்படவில்லை) கவனத்திற்குரியது. இந்தக் கையெழுத்துப்பிரதி எழுதப்பட்ட சமயத்தில் பவுல்தான் நிருபத்தை எழுதியவர் என்பதை யாரும் சந்தேகிக்கவில்லை என்பது இதிலிருந்து தெளிவாயிருக்கிறது. a இதே கேள்வியைப் பற்றி மக்ளின்டாக், ஸ்டிராங்ஸ் ஆகியோரின் ஸைக்ளோப்பீடியா தெளிவாக பின்வருமாறு கூறுகிறது: “பவுலைத் தவிர வேறு யாராவது இந்த நிருபத்தை எழுதியிருக்கலாம் என்று சொல்வதற்கு பைபிள் சார்ந்த அல்லது பைபிள் சாராத அத்தாட்சி எதுவுமே இல்லை.” b

5எபிரெயர் புத்தகத்தை பூர்வ கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொண்டதும், அதன் பொருளடக்கமும்கூட அது “கடவுளால் ஏவப்பட்டது” என்பதற்கு சான்றளிக்கின்றன. அது எபிரெய வேதாகம தீர்க்கதரிசனங்களிடம் வாசகர்களின் கவனத்தை திருப்புகிறது. பூர்வ எழுத்துக்களிலிருந்து பல மேற்கோள்களை குறிப்பிட்டு, இவை கிறிஸ்து இயேசுவில் எவ்வாறு நிறைவேறின என்று அது காட்டுகிறது. குமாரன் இப்போது தேவதூதர்களைவிட மேம்பட்டவர் என்ற குறிப்பு படிப்படியாக விளக்கப்படுகிறது. அதற்காக எபிரெய வேதாகமத்திலிருந்து கிட்டத்தட்ட ஏழு மேற்கோள்கள் முதல் அதிகாரத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. யெகோவாவின் வார்த்தையையும் அவருடைய பெயரையும் தொடர்ந்து மகிமைப்படுத்துகிறது. இயேசுவே ஜீவாதிபதி என்றும், அவர் மூலம் ஸ்தாபிக்கப்படும் கடவுளுடைய ராஜ்யமே மனிதவர்க்கத்தின் ஒரே நம்பிக்கை என்றும் காட்டுகிறது.

6பவுல் இத்தாலியில் இருந்தபோது இந்த நிருபத்தை எழுதினார் என்பது ஏற்கெனவே எடுத்துக்காட்டப்பட்டது. அவர் இந்த நிருபத்தை முடிக்கையில், ‘நமது சகோதரராகிய தீமோத்தேயு விடுதலையாக்கப்பட்டாரென்று அறிந்துகொள்ளுங்கள். அவர் சீக்கிரமாய் வந்தால் அவரோடு நானும் உங்களைக் காண்பேன்’ என்று சொல்கிறார். (13:​23, தி.மொ.) சிறையிலிருந்து சீக்கிரத்தில் விடுதலை செய்யப்படலாம் என்று பவுல் எதிர்பார்த்தார் என்பதை இதன் மூலம் புரிந்துகொள்ளலாம்; ஏற்கெனவே விடுதலை செய்யப்பட்டிருந்த தீமோத்தேயுவுடன் சேர்ந்து வரமுடியும் என்று எதிர்பார்த்தாரென்பதும் தெரிகிறது. ஆகவே, ரோமில் பவுலின் முதல் சிறையிருப்பின் கடைசி ஆண்டில், அதாவது பொ.ச. 61-ல் இதை எழுதியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

7யூத ஒழுங்குமுறையின் கடைசி காலம் யூதேயாவிலிருந்த எபிரெய கிறிஸ்தவர்களுக்கு, முக்கியமாக எருசலேமில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு கடுமையான துன்புறுத்துதலின் காலமாக இருந்தது. நற்செய்தி எல்லா இடங்களிலும் பிரசங்கிக்கப்பட்டது. அநேகர் அதை ஏற்றுக்கொண்டனர். இதைக் கண்ட யூதர்கள், கிறிஸ்தவர்கள் மேல் அதிக மனக்கசப்பை வளர்த்து அவர்களை மதவெறியுடன் துன்புறுத்தினர். சில ஆண்டுகளுக்கு முன், பவுல் எருசலேமுக்கு வந்தபோது ஒரு பெரிய கலகமே ஏற்பட்டது. மதவெறி பிடித்த யூதர்கள் பின்வருமாறு கூச்சலிட்டனர்: “இப்படிப்பட்டவனைப் பூமியிலிருந்து அகற்றவேண்டும்; இவன் உயிரோடிருக்கிறது நியாயமல்ல.” பவுலைக் கொலைசெய்யும் வரை சாப்பிடவோ பானம்பண்ணவோ மாட்டோம் என்று 40-க்கு மேற்பட்ட யூதர்கள் சபதம் எடுத்திருந்தனர். ஆகவே, இரவு நேரத்தில் அவரை செசரியாவுக்குக் கொண்டுவருவதற்கு ஆயுதம் தாங்கிய பலத்த படையின் பாதுகாப்பு தேவைப்பட்டது. (அப். 22:22; 23:​12-15, 23, 24) இப்படிப்பட்ட மத வெறியும், கிறிஸ்தவர்கள் மீது வெறுப்பும் இருந்த சூழ்நிலையில்தான் அந்தச் சபையினர் வாழ்ந்தனர். இதன் மத்தியில்தான் அவர்கள் பிரசங்கிக்கவும், விசுவாசத்தில் உறுதியாய் நிற்கவும் வேண்டியிருந்தது. கிறிஸ்து எவ்வாறு நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றினார் என்பதைப் பற்றிய திருத்தமான அறிவும் புரிந்துகொள்ளுதலும் அவர்களுக்கு தேவைப்பட்டது; இதன் மூலம் அவர்கள் மிருக பலிகளைச் செலுத்தி மோசேயின் நியாயப்பிரமாணத்தை கைக்கொண்டு திரும்ப யூத மதத்தில் வழுவி விழாதபடி தங்களைக் காத்துக்கொள்ள முடியும். ஏனெனில் நியாயப்பிரமாணம் சம்பந்தப்பட்ட யாவும் இப்போது வெறும் ஆசாரமாகிவிட்டன.

8யூதக் கிறிஸ்தவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியையும் துன்புறுத்துதலையும் அப்போஸ்தலன் பவுலைத் தவிர வேறு யாரும் சரியாக புரிந்துகொண்டிருக்க முடியாது. யூதப் பாரம்பரியங்களை தவறென நிரூபிப்பதற்கு வலிமைமிக்க விவாதங்களையும் குறிப்புகளையும் எடுத்துக் காட்ட முன்னாள் பரிசேயனாகிய பவுலைவிட தகுதிபெற்றவர் வேறு யாருமேயில்லை. கமாலியேலிடம் கல்வி கற்றதால் மோசேயின் நியாயப்பிரமாணத்தை குறித்து அவருக்கு ஆழமான அறிவு இருந்தது. அதைப் பயன்படுத்தி நியாயப்பிரமாணம், அதில் உட்பட்ட சடங்குகள், பலிகள் போன்றவற்றின் நிறைவேற்றம் கிறிஸ்துவே என்பதற்கு மறுக்க முடியாத அத்தாட்சிகளை அளித்தார். முன்நிழலாக இருந்தவை எல்லாம் இப்போது மகிமைபொருந்திய இயேசுவில் நிஜமாயின; எனவே ஒரு புதிய மற்றும் மேம்பட்ட உடன்படிக்கையால் மதிப்பிட முடியாத சிறந்த நன்மைகள் விளைந்திருக்கின்றன என்பதை எடுத்துக் காட்டினார். அறிவுக்கூர்மை மிக்க அவர் அத்தாட்சிகளை படிப்படியாக, தெளிவாக, நம்பவைக்கும் முறையில் அளித்தார். ஆர்வத்தைத் தூண்டும் அந்தப் புதிய போதகங்கள் இவையே: நியாயப்பிரமாண உடன்படிக்கை முடிவுற்று புதிய உடன்படிக்கையின் ஆரம்பம்; ஆரோனிய ஆசாரியத்துவத்துக்கு மேலாக கிறிஸ்துவின் ஆசாரியத்துவத்தின் மேன்மை; காளை, வெள்ளாட்டுக்கடாக்களின் பலியைவிட கிறிஸ்துவினுடைய பலியின் உண்மையான மதிப்பு; வெறும் பூமிக்குரிய கூடாரத்துக்குள் பிரவேசிப்பதைவிட கிறிஸ்து பரலோகங்களில் யெகோவாவின் முன்னிலையில் பிரவேசிப்பது. அவிசுவாசிகளான யூதருக்கு இவை வெறுப்புண்டாக்கின. ஆனால், நேர்மையான எந்த யூதனும் இவற்றை உண்மை என்று ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்; ஏனெனில் எபிரெய வேதாகமத்திலிருந்து ஏராளமான அத்தாட்சிகளுடன் இவை எபிரெய கிறிஸ்தவர்களுக்கு அளிக்கப்பட்டன.

9இந்த நிருபத்தை ஆயுதம்போல் உபயோகித்து தங்களைத் துன்புறுத்தும் யூதர்களின் வாயை எபிரெய கிறிஸ்தவர்கள் அடக்க இயலும்; அதோடு கடவுளுடைய சத்தியத்தை நாடும் நேர்மையுள்ள யூதர்களுக்கு மெய்யை நிரூபித்து, மதம் மாறுவதற்குத் தூண்டும் விவாதங்களை அளிக்கும் வல்லமைவாய்ந்த புதிய ஆயுதமாக இந்த நிருபம் இருந்தது. எபிரெய கிறிஸ்தவர்களிடம் பவுலுக்கிருந்த ஆழ்ந்த அன்பை இது தெளிவாக காட்டுகிறது. தேவையான சமயத்தில் அவர்களுக்கு நடைமுறையான விதத்தில் உதவிசெய்ய வேண்டும் என்ற அவரது ஆவலையும் இந்த நிருபம் எடுத்துக்காட்டுகிறது.

எபிரெயரின் பொருளடக்கம்

10கிறிஸ்துவின் உயர்ந்த ஸ்தானம் (1:​1–3:6). கிறிஸ்துவின் மேல் கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்கு ஆரம்ப வார்த்தைகள் உதவுகின்றன: “பூர்வகாலத்தில் கடவுள் பற்பல பங்காகவும் பற்பல வகையாகவும் தீர்க்கதரிசிகளின் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றி இந்தக் கடைசி நாட்களிலே குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்.” எல்லாவற்றிற்கும் உரிமையாளராக இந்தக் குமாரனே நியமிக்கப்பட்டிருக்கிறார்; இவர் தன்னுடைய பிதாவின் மகிமையை பிரதிபலிக்கிறார். நம்முடைய பாவங்களுக்குச் சுத்திகரிப்பை ஏற்படுத்தியவரும் இவரே. இப்போது “உன்னதங்களில் மகத்துவமானவரின் வலதுபாரிசத்தில் உட்கார்ந்தார்.” (1:​1-3, தி.மொ.) இயேசு தேவதூதர்களைவிட மேலான நிலையில் இருக்கிறார் என்பதை நிரூபிப்பதற்கு அடுக்கடுக்காக வேதவசனங்களை பவுல் மேற்கோள் காட்டுகிறார்.

11வழக்கத்துக்கும் மேலாக “மிகுந்த ஜாக்கிரதையாய்க் கவனிக்க வேண்டும்” என்று பவுல் எழுதுகிறார். ஏன்? ஏனெனில், “தேவதூதர் மூலமாய்ச் சொல்லப்பட்ட வசனத்திற்கு” கீழ்ப்படியாதவர்களுக்கு கடுமையான தண்டனை இருந்ததென்றால், “கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்[] . . . இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக் குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்” என்று பவுல் விவாதிக்கிறார். கடவுள் தம்முடைய தகுதியற்ற தயவினால், ‘மனுஷகுமாரனை ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கினார்.’ ஆனால் இப்போது இந்த இயேசு “மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்” என்று கூறுகிறார். (2:​1-3, 7, 9) குமாரர்கள் பலரை மகிமைக்குக் கொண்டுவருவதற்காக கடவுள் முதலாவதாக இவரை ‘உபத்திரவங்களினாலே பூரணப்படுத்தினார்’; இவரே அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதி. இவரே பிசாசானவனை அழித்து “ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும்” விடுதலை செய்கிறார். இவ்வாறு இயேசு “இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியரா”கிறார். அவர்தாமே சோதனையின்கீழ் பாடனுபவித்ததால், “சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்.” (2:​10, 15, 17, 18) ஆகையால், மோசேயைப் பார்க்கிலும் அதிக மகிமைக்குப் பாத்திரராக இயேசு கருதப்படுகிறார்.

12விசுவாசம், கீழ்ப்படிதலின் மூலம் கடவுளுடைய இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்தல் (3:​7–4:13). “ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம்” வளர்ந்துவிடாதபடி கிறிஸ்தவர்கள் கவனமாக இருக்க வேண்டும்; இஸ்ரவேலரின் உண்மையற்ற முன்மாதிரி அவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். (எபி. 3:12; சங். 95:​7-11) எகிப்தைவிட்டு வெளிவந்த இஸ்ரவேலர் கீழ்ப்படியாமையாலும் அவிசுவாசத்தாலும் கடவுளுடைய இளைப்பாறுதல் அல்லது ஓய்வுக்குள் பிரவேசிக்க தவறினர். அந்த ஓய்வின்போது கடவுள் பூமிக்குரிய படைப்பு வேலைகளிலிருந்து ஓய்ந்திருந்தார். எனினும், பவுல் இவ்வாறு விளக்குகிறார்: “கடவுளின் ஜனங்களுக்கு ஓய்வின் காலமொன்று வரவிருக்கிறது. ஏனெனில், அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசித்தவன் கடவுள் தமது கிரியைகளை முடித்து ஓய்ந்திருந்ததுபோலத் தானும் தன் கிரியைகளை முடித்து ஓய்ந்திருக்கிறான்.” இஸ்ரவேல் ஜனம் காட்டிய கீழ்ப்படியாமையின் மாதிரியைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், “கடவுளின் வார்த்தை ஜீவனும் சக்தியுமுள்ளதாயும் இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்குள்ளதாயும் . . . இருதயத்தின் சிந்தனைகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயுமிருக்கிறது.”​—எபி. 4:​9, 10, 12, தி.மொ.

13கிறிஸ்துவின் ஆசாரியத்துவத்தைப் பற்றிய முதிர்ச்சியுள்ள நோக்கு (4:​14–7:28). எபிரெயர்கள் இரக்கத்தைக் கண்டடையும்படி, பரலோகங்களுக்கு சென்ற மகா பிரதான ஆசாரியராகிய இயேசுவை தொடர்ந்து அறிக்கையிடும்படி பவுல் அவர்களை உற்சாகப்படுத்துகிறார். கிறிஸ்து தம்மைத்தாமே மகிமைப்படுத்திக் கொள்ளவில்லை, “மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நீர் என்றென்றைக்கும் ஆசாரியரே” என்று சொன்னவர் பிதாவே. (எபி. 5:​6, தி.மொ.; சங். 110:4) முதலாவதாக, தாம் பட்டபாடுகளின் மூலம் கீழ்ப்படிதலைக் கற்று பிரதான ஆசாரியரின் ஸ்தானத்துக்கு கிறிஸ்து பூரண தகுதியுள்ளவராக்கப்பட்டார்; இதன் மூலம் தமக்குக் கீழ்ப்படியும் யாவருக்கும் நித்திய இரட்சிப்பை அளிக்கும் வழியானார். பவுலுக்குப் “பேச . . . பல காரியங்களுண்டு; . . . அவற்றை விளங்கப்பண்ணுவது அரிது.” (தி.மொ.) ஆனால், எபிரெயரோ போதகர்களாக இருக்க வேண்டிய சமயத்தில் குழந்தைகளைப் போல் பால் குடிக்கும் நிலையில் இருந்தனர். “பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சிசெய்யும் ஞானேந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும்.” “முதிர்ச்சியை நோக்கி முன்னேறிச் செல்”லும்படி அப்போஸ்தலன் அவர்களை ஊக்குவிக்கிறார்.​—எபி. 5:​11, 14; 6:​1, NW.

14கடவுளுடைய வார்த்தையை அறிந்து பின்னர் வீழ்ந்துபோவோரை மறுபடியும் மனந்திரும்புதலுக்கு மீட்பது கூடாத காரியம். ‘ஏனெனில் கடவுளுடைய குமாரனை அவர்கள் மறுபடியுமாக கழுமரத்தில் அறைந்து யாவரறிய அவமான காட்சியாக்குகின்றனர்.’ ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதியை, விசுவாசத்தினாலும் பொறுமையினாலும் மட்டுமே விசுவாசிகள் அடைய முடியும். கடவுளுடைய வார்த்தை, கடவுளுடைய ஆணை ஆகிய மாற்ற முடியாத இரண்டு காரியங்களால் இந்த வாக்கு நிச்சயமும் உறுதியுமாக்கப்பட்டிருக்கிறது. அவர்களுடைய நம்பிக்கை, ‘நிலையும் உறுதியுமான ஆத்தும நங்கூரம்’ போன்றது; அது, மெல்கிசேதேக்கின் முறைமையின்படி முன்னோடியாகவும் பிரதான ஆசாரியராகவும் “திரைக்குள்” இயேசு பிரவேசித்ததால் உறுதியாக்கப்பட்டிருக்கிறது.​—6:​6, NW, 19.

15இந்த மெல்கிசேதேக்கு “சாலேமின் ராஜாவும்,” ‘உன்னதமான தேவனுடைய ஆசாரியனுமாயிருந்தார்.’ கோத்திரத் தகப்பனாகிய ஆபிரகாமுங்கூட இவருக்குத் தசமபாகங்களைச் செலுத்தினார். அவர்மூலம் ஆபிரகாமின் சந்ததியில் வந்த லேவியும் அவ்வாறே செலுத்தினார். மெல்கிசேதேக்கு ஆபிரகாமை ஆசீர்வதித்தார்; அந்த ஆசீர்வாதம் பிறவாதிருந்த லேவியையும் சென்றெட்டியது. இதன் மூலம் லேவிய ஆசாரியத்துவம் மெல்கிசேதேக்கின் ஆசாரியத்துவத்தைவிட கீழானது என்பது தெரிகிறது. மேலும் ஆரோனின் லேவிய ஆசாரியத்துவத்தின் மூலம் பரிபூரணம் வருவதாக இருந்தால் “மெல்கிசேதேக்கினுடைய முறைமையின்படி” மற்றொரு ஆசாரியர் வரவேண்டிய அவசியம் இருந்திருக்குமா? இதைப் போலவே, ஆசாரியத்துவம் மாற வேண்டியிருப்பதால், “நியாயப்பிரமாணமும் மாற்றப்பட வேண்டியதாகும்.”​—7:​1, 11, 12.

16உண்மையில், நியாயப்பிரமாணம் எதையும் பரிபூரணமாக்கவில்லை, அது பலவீனமுள்ளதாயும் பயனற்றதாயும் இருந்தது. அவர்கள் மரித்ததால் பலர் அதன் ஆசாரியர்களாக இருந்தனர்; ஆனால் இயேசு ‘என்றென்றும் உயிரோடு இருப்பதால் அவருடைய ஆசாரியத்துவத்திற்கு வாரிசுகள் தேவையில்லை. ஆகவே, தன் மூலம் தேவனை அணுகுகிறவர்களை அவரால் முழுமையாக இரட்சிக்க முடியும்; ஏனெனில் அவர்களுக்காக வேண்டுதல் செய்வதற்கு அவர் எப்பொழுதும் உயிரோடு இருக்கிறார்.’ இந்தப் பிரதான ஆசாரியராகிய இயேசு, ‘பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவருமாக’ இருக்கிறார், மாறாக, நியாயப்பிரமாணத்தால் நியமிக்கப்பட்ட பிரதான ஆசாரியர்கள் பலவீனராயிருந்தனர்; மற்றவர்களுக்காக அவர்கள் வேண்டுதல் செய்வதற்கு முன் தங்கள் சொந்த பாவங்களுக்காக முதலாவது பலிசெலுத்த வேண்டியிருந்தது. ஆகவே கடவுள் ஆணையிட்ட வாக்குறுதியின் வார்த்தையோ ‘என்றென்றும் பூரணமாக்கப்பட்ட குமாரனை நியமித்திருக்கிறது.’​—7:​24-26, 28, NW.

17புது உடன்படிக்கையின் மேன்மை (8:​1–10:31). இயேசு ‘மேலான வாக்குத்தத்தங்களின்பேரில் [“சட்டப்பூர்வமாய்,” NW] ஸ்தாபிக்கப்பட்ட மேலான உடன்படிக்கைக்கு மத்தியஸ்தராயிருக்கிறாரென’ காட்டப்படுகிறது. (8:​6, தி.மொ.) பவுல் எரேமியா 31:​31-34-ஐ மேற்கோள் காட்டி, புது உடன்படிக்கையில் இருப்போருடைய மனதிலும் இருதயத்திலும் கடவுளுடைய சட்டங்கள் எழுதப்பட்டிருக்கின்றன என்று சொல்கிறார்; அவர்கள் எல்லாரும் யெகோவாவை அறிந்திருப்பார்கள் என்றும் யெகோவா ‘அவர்கள் பாவங்களை இனி நினைக்கவே மாட்டார்’ என்றும் காட்டுகிறது. இந்தப் “புது உடன்படிக்கை” முந்தினதை (நியாயப்பிரமாண உடன்படிக்கையை) செல்லாததாக்கிவிட்டது; அது “ஒழிந்துபோகிறதற்குச் சமீபித்திருக்கிறது.”​—8:​12, 13, தி.மொ.

18முந்தின உடன்படிக்கையின் அடிப்படையில் ஆசரிப்புக் கூடாரத்தில் செலுத்தப்பட்ட வருடாந்தர பலிகள் ‘சட்டப்பூர்வமான தேவைகளே, . . . எல்லாவற்றையும் சரி செய்வதற்கு [நியமிக்கப்பட்ட] காலம் வரை சுமத்தப்பட்டன’ என்று பவுல் விவரிக்கிறார். எனினும், கிறிஸ்து பிரதான ஆசாரியராக வந்தபோது, ஆட்டுக்கடாக்கள் மற்றும் இளங்காளைகளின் இரத்தத்துடன் அல்ல, விலைமதிக்க முடியாத தம்முடைய சொந்த இரத்தத்துடனேயே வந்தார். மிருகங்களின் இரத்தத்தை மோசே தெளித்து முந்தின உடன்படிக்கையைச் சட்டப்படி செல்லுபடியாக்கினார்; இதன் மூலம் ஆசரிப்புக் கூடாரத்தைச் சுத்திகரிக்க முடிந்தது. ஆனால் புது உடன்படிக்கை சம்பந்தப்பட்ட பரலோக உண்மைகளுக்கு மேம்பட்ட பலிகள் தேவைப்பட்டன. “மெய்யான பரிசுத்த ஸ்தலத்துக்கு அடையாளமான கையினால் செய்யப்பட்டதாயிருக்கிற பரிசுத்த ஸ்தலத்திலே கிறிஸ்துவானவர் பிரவேசியாமல், பரலோகத்திலேதானே இப்பொழுது நமக்காகத் தேவனுடைய சமுகத்தில் பிரத்தியட்சமாகும்படி பிரவேசித்திருக்கிறார்.” இஸ்ரவேலின் பிரதான ஆசாரியன் செய்ததுபோல், கிறிஸ்து வருடாந்தர பலிகளைச் செலுத்த வேண்டியதில்லை; ஏனெனில், “அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்கும்பொருட்டாக இந்தக் கடைசிக்காலத்தில் ஒரேதரம் வெளிப்பட்டார்.”​—9:​10, 24, 26.

19“நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் . . . நிழலாய் மாத்திரம் இருக்கிறபடியால்,” அதன் அடிப்படையில் திரும்பத் திரும்பச் செலுத்தப்பட்ட பலிகள் ‘பாவத்தைப் பற்றிய உணர்வை’ (பொ.மொ.) நீக்க முடியவில்லை என்று சுருக்கமாக பவுல் சொல்கிறார். எனினும், இயேசு கடவுளுடைய சித்தத்தைச் செய்வதற்காக உலகத்திற்கு வந்தார். “இயேசு கிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்” என்று பவுல் சொல்கிறார். ஆகையால், எபிரெயர் தங்கள் விசுவாசத்தை யாவரறிய அறிக்கையிடுவதில் உறுதியாய் நிலைத்திருப்பார்களாக; ‘அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து,’ சபை கூடிவருதலை விட்டுவிடாமல் இருப்பார்களாக. சத்தியத்தின் திருத்தமான அறிவைப் பெற்ற பின்பு வேண்டுமென்றே அவர்கள் பாவத்தை பழக்கமாக செய்தால், ‘பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியில்லை.’​—10:​1, 2, 10, 24, 26.

20விசுவாசம் விவரிக்கப்பட்டு உதாரணங்களால் விளக்கப்படுகிறது (10:​32–12:3). பவுல் இப்போது எபிரெயருக்குச் சொல்வதாவது: “முந்தின நாட்களை நினைத்துக்கொள்ளுங்கள்; அந்த நாட்களில் நீங்கள் ஞானவெளிச்சத்தைக் கண்டுணர்ந்த பின் உபத்திரவங்களாகிய மிகுந்த போராட்டத்தைச் சகித்தீர்களே.” தங்களுடைய பேச்சு சுயாதீனத்தை அவர்கள் இழந்துவிடாதிருப்பார்களாக, அதற்கு மிகுந்த பலனுண்டு. வாக்குப்பண்ணப்பட்டதை அடைவதற்காக அவர்கள் சகித்து, “ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்க”ளாக இருப்பார்களாக. விசுவாசம்! ஆம், அதுவே தேவைப்படுகிறது. முதலாவதாக பவுல் அதை விளக்குகிறார்: “விசுவாசம் என்பது நம்பப்படும் காரியங்களின் நிச்சயிக்கப்பட்ட எதிர்பார்ப்பு, காணாவிடினும் உண்மைகளைப் பற்றிய தெளிவான மெய்ப்பிப்பு.” (NW) அதைத் தொடர்ந்து ஊக்கமூட்டும் ஓர் அதிகாரத்தில், விசுவாசத்தின்மூலம் வாழ்ந்து, உழைத்து, போராடி, சகித்திருந்து, நீதியின் சுதந்தரவாளிகளான பூர்வ மனிதர்களை ஒருவர்பின் ஒருவராக சுருக்கமாக வருணிக்கிறார். ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களில் வாழ்ந்த ஆபிரகாம் “விசுவாசத்தினாலே” மெய்யான “அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு” காத்திருந்தார்; அதைக் கட்டுபவர் கடவுளே. “விசுவாசத்தினாலே” மோசே “அதரிசனமானவரைத் தரிசிக்கிறதுபோல” உறுதியாய்த் தொடர்ந்தார். “பின்னும் நான் என்ன சொல்லுவேன்?” என்று பவுல் கேட்கிறார். “கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் என்பவர்களையும், தீர்க்கதரிசிகளையுங்குறித்து நான் விவரஞ்சொல்ல வேண்டுமானால் காலம் போதாது. விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள், நீதியை நடப்பித்தார்கள், வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள்.” நிந்தைகள், அடிகள், கட்டுகள், சித்திரவதைகளை மற்றவர்கள் அனுபவித்தனர். ஆனால் “மேன்மையான உயிர்த்தெழுதலை அடையும்படி” அவர்கள் துன்புறுத்துதலில் இருந்து விடுபட சம்மதிக்கவில்லை. மெய்யாகவே, “உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை.” இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சி பெற்றனர், எனினும் வாக்குறுதியின் நிறைவேற்றத்தை இன்னும் அடையவில்லை. “ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து கொண்டிருக்கப் பாரமான யாவற்றையும் நம்மை எளிதில் அகப்படுத்துகிற பாவத்தையுந் தள்ளிவிட்டு விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாகிய இயேசுவையே நோக்கி நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடு ஓடக்கடவோம்” என்று பவுல் தொடர்ந்து சொல்கிறார்.​—10:​32, 39, தி.மொ.; 11:​1, NW, 8, 10, 27, 32, 33, 35, 38; 12:​1, 2, தி.மொ.

21விசுவாச ஓட்டப்பந்தயத்தில் சகித்திருத்தல் (12:​4-29). விசுவாசத்திற்கான ஓட்டப்பந்தயத்தில் சகித்து நிலைத்திருக்கும்படி பவுல் எபிரெய கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை கூறுகிறார்; ஏனெனில், குமாரர்களாக அவர்களை யெகோவா சிட்சிக்கிறார். நெகிழ்ந்த கைகளையும் தளர்ந்த முழங்கால்களையும் பலப்படுத்துவதற்கும் பாதங்களுக்கு வழிகளைச் செவ்வைப்படுத்துவதற்கும் இதுவே சமயம். அவர்கள் கடவுளுடைய தயவை இழப்பதற்கு காரணமாகும் நச்சு வேர் அல்லது தூய்மையை கெடுக்கும் எதுவும் உட்பிரவேசிக்காமல் காவல் காக்க வேண்டும்; ஏனெனில் பரிசுத்த காரியங்களை மதித்துணராத ஏசாவைப்போல் ஆகிவிடக்கூடாது. சொல்லர்த்தமான மலையில், அச்சுறுத்தும் எரிகிற அக்கினியையும் மேகத்தையும் பார்த்து குரலையும் கேட்ட மோசே: “நான் மிகவும் பயந்து நடுங்குகிறேன்” என்று சொன்னார். இவர்களோ அதைக் காட்டிலும் பயங்கரமான காரியங்களை, அதாவது சீயோன் மலையையும், பரலோக எருசலேமையும், ஆயிரம்பதினாயிரமான தேவதூதர்களையும் முதற்பேறானவர்களின் சபையையும், யாவருக்கும் நியாயாதிபதியாகிய கடவுளையும், புது மற்றும் மேன்மையான உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவையும் அணுகியுள்ளனர். இப்போது கடவுளுடைய எச்சரிக்கைக்குச் செவிகொடுக்க மேலும் பலத்த காரணம் உள்ளது! மோசேயின் காலத்தில் கடவுளுடைய குரல் பூமியை அதிரச் செய்தது; இப்போதோ அவர் வானத்தையும் பூமியையும் அசைவிக்கப்போவதாக வாக்குக் கொடுத்திருக்கிறார். பவுல் இந்தக் குறிப்பைத் தெளிவாக விளங்கிக்கொள்ளுவதற்காக இவ்வாறு சொல்கிறார்: ‘அசைக்க முடியாத ஒரு ராஜ்யத்தை நாம் பெறவிருக்கிறோம் . . . எனவே கடவுளுக்கு ஏற்கத்தக்க முறையில் பரிசுத்த சேவையை தேவ பயத்தோடும் பக்தியோடும் செலுத்தலாம். ஏனெனில் நம் கடவுள் அழிக்கும் அக்கினியாக இருக்கிறாரே.’​—12:​21, 28, 29, NW.

22வணக்கத்தைப் பற்றி பல்வேறு அறிவுரைகள் (13:​1-25). கட்டியெழுப்பும் அறிவுரையோடு பவுல் இந்த நிருபத்தை நிறைவு செய்கிறார்: சகோதர அன்பு தொடர்ந்திருப்பதாக, உபசரிப்பதை மறவாதிருக்க வேண்டும், விவாகம் எல்லாருக்கும் கனமுள்ளதாயிருப்பதாக, பண ஆசைக்கு விலக வேண்டும், முன்நின்று நடத்துவோருக்குக் கீழ்ப்படிந்திருக்க வேண்டும், அந்நிய போதனைகளால் வசீகரிக்கப்படாதிருக்க வேண்டும். கடைசியாக, “அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர் [இயேசு] மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.”​—13:15.

ஏன் பயனுள்ளது

23எபிரெயருக்கு எழுதின நிருபம் ஈடு இணையற்ற தலைசிறந்த படைப்பு. அது கிறிஸ்துவை ஆதரிக்கும் சட்டப்பூர்வ ஒரு விவாதமாக, எபிரெய வேதத்திலிருந்து ஏராளமான சான்றுகளை அளித்து குறையின்றி அமைக்கப்பட்டுள்ளது. உடன்படிக்கை, இரத்தம், மத்தியஸ்தர், ஆசரிப்புக் கூடாரம், ஆசாரியத்துவம், காணிக்கைகள் போன்ற மோசேயினுடைய நியாயப்பிரமாணத்தின் பல்வேறு அம்சங்களை இது விளக்குகிறது. அவை, வரவிருந்த மேம்பட்ட காரியங்களை குறித்து கடவுள் அளித்த மாதிரியே; அவை யாவும் கிறிஸ்து இயேசுவிலும் அவருடைய பலியிலும் அதன் உச்சக்கட்டத்தை எட்டிவிட்டன, அதுதான் நியாயப்பிரமாணத்தின் நிறைவேற்றம். நியாயப்பிரமாணம் “பழமையானதும் நாள்பட்டதுமாயிருக்கிறது ஒழிந்துபோகிறதற்குச் சமீபித்திருக்கிறது” என்று பவுல் கூறினார். ஆனால் “இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.” (8:​13, தி.மொ.; 13:8; 10:1) எபிரெயருக்கு எழுதப்பட்ட இந்தக் கடிதத்தை அவர்கள் வாசித்து எவ்வளவு மகிழ்ச்சியடைந்திருப்பார்கள்!

24நம்முடைய சூழ்நிலைமையில் இந்தப் புத்தகத்தின் பயன் என்ன? நாம் நியாயப்பிரமாணத்தின்கீழ் இல்லை, எனவே பவுலின் விவாதத்தில் நமக்கு ஏதாவது நன்மை இருக்கிறதா? நிச்சயமாகவே. ஆபிரகாமின் வித்தின்மூலம் பூமியின் குடும்பங்கள் எல்லாம் தங்களை ஆசீர்வதித்துக்கொள்வார்கள் என்பதை அறிந்திருக்கிறோம்; இந்தப் புத்தகத்தில் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் மேம்பட்ட புது உடன்படிக்கை ஏற்பாட்டைப் பற்றி நமக்கு விவரிக்கப்பட்டிருக்கிறது. ஆபிரகாமின் வித்தாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் வரும் ஆசீர்வாதமே யெகோவாவின் பூர்வ உறுதிமொழியின் நிறைவேற்றம்; இதுதான் ஜீவனைப் பற்றிய நம்முடைய நம்பிக்கை, நம்முடைய ஒரே நம்பிக்கை. நியாயப்பிரமாணத்தின் கீழ் நாம் இல்லையென்றாலும் ஆதாமின் சந்ததியாக இருப்பதால் பாவத்தில் பிறந்திருக்கிறோம். எனவே, ஏற்கத்தக்க பாவநிவாரண பலியை அளித்தவரும், பரலோகத்தில் யெகோவாவின் முன்னிலையில் பிரவேசித்து, நமக்காக பரிந்து பேசக்கூடியவருமான இரக்கமுள்ள ஒரு பிரதான ஆசாரியர் தேவை. நம்மை யெகோவாவின் புதிய உலகத்தில் ஜீவனுக்கு வழிநடத்தும் பிரதான ஆசாரியரை இங்கே காண்கிறோம். இவர் “எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்”பட்டிருப்பதால் நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கத்தக்கவர். எனவே, ‘சரியான சமயத்தில் உதவியைப் பெறுவதற்காக நாம் இரக்கத்தையும் தகுதியற்ற தயவையும் கண்டடையும்படி, தகுதியற்ற தயவுக்குரிய சிங்காசனத்திடம் தயங்காமல் அணுக’ நம்மை அழைக்கிறார்.​—4:​15, 16, NW.

25எபிரெய வேதாகமத்தில் வெகு காலத்துக்கு முன்பு பதிவுசெய்யப்பட்ட தீர்க்கதரிசனங்கள் அதிசயமான முறையில் நிறைவேற்றமடைந்தன என்பதை பவுலின் கடிதம் காட்டுகிறது; இதற்கு இருதயத்தைத் தொடும் அத்தாட்சியை எபிரெயருக்கு எழுதின நிருபத்தில் காண்கிறோம். இவை யாவும் நம்முடைய போதனைக்காகவும் ஆறுதலுக்காகவும் பதிவு செய்யப்பட்டவை. உதாரணமாக, சங்கீதம் 110:​1-லுள்ள ராஜ்ய தீர்க்கதரிசனத்தின் வார்த்தைகளை, எபிரெயர் புத்தகத்தில் ராஜ்ய வித்தான இயேசு கிறிஸ்துவுக்கு ஐந்து தடவை பவுல் பொருத்தியிருக்கிறார். அவரே “சத்துருக்களைத் தமது பாதபடியாக்கிப்போடுமட்டும்” காத்திருக்கும்படி “கடவுளின் வலதுபாரிசத்தில் உட்கார்ந்திருக்கிறார்.” (எபி. 12:2; 10:​12, 13, தி.மொ.; 1:​3, 13; 8:1) ‘மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக’ இருக்கும் கடவுளுடைய குமாரன் வகிக்கும் முக்கிய பொறுப்பை விளக்குவதற்கு சங்கீதம் 110:4-ஐ பவுல் மேற்கோளாக குறிப்பிடுகிறார். பைபிள் பதிவில் ‘தகப்பனும் தாயும் வம்சவரலாறும் இல்லாதவரும், நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவும் இல்லாதவருமான’ பூர்வ மெல்கிசேதேக்கை இயேசுவோடு ஒப்பிடுகிறார்; இயேசு, அரசராகவும் ‘என்றென்றைக்கும் ஆசாரியராகவும்’ இருந்து, தம்முடைய அரசாட்சியில் கீழ்ப்படிதலுடன் இருக்கும் யாவருக்கும் தம்முடைய மீட்பின் கிரய பலியின் நித்திய நன்மைகளை வழங்குகிறார். (எபி. 5:​6, 10; 6:20; 7:​1-21) சங்கீதம் 45:​6, 7-ஐ மேற்கோளாக எடுத்துக் காட்டும்போதும் இதே அரச-ஆசாரியரை பவுல் குறிப்பிடுகிறார்: ‘கடவுளே யுகாயுகங்களாய் உமது சிங்காசனம். அவர் ராஜ்யத்தின் செங்கோல் நேர்மையுள்ள செங்கோல், நீர் நீதியைச் சிநேகித்து அக்கிரமத்தைப் பகைத்திருக்கிறீர்; அதனிமித்தம், கடவுளே, உமது கடவுளே, உமது தோழரைப் பார்க்கிலும் உம்மை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம் பண்ணினார்.’ (எபி. 1:​8, 9, தி.மொ.) எபிரெய வேதாகமத்திலிருந்து மேற்கோள்காட்டி அவை கிறிஸ்து இயேசுவில் நிறைவேறுவதை பவுல் எடுத்துக்காட்டுகையில், கடவுளது நோக்கங்கள் சரியாக நடந்தேறுவதை தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது.

26“தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகர”மாகிய ராஜ்யத்தையே, “பரம” நகரத்தையே ஆபிரகாம் ஆவலாக எதிர்பார்த்தார் என்று எபிரெயருக்கு எழுதிய நிருபம் தெளிவாக காட்டுகிறது. அவர் “விசுவாசத்தினாலே” அந்த ராஜ்யத்தை நாடினார்; ‘மேன்மையான உயிர்த்தெழுதலினால்’ அதன் ஆசீர்வாதங்களை அடைவதற்காக பெரும் தியாகங்களைச் செய்தார். விசுவாசம் மிக்க ஆபிரகாம் மற்றும் அவரைப் போன்ற ஆண்கள் பெண்களில் எத்தகைய முன்மாதிரியை நாம் காண்கிறோம்; ‘மேகம்போன்ற அத்தனை திரளான சாட்சிகள்’ என்று இவர்களைப் பற்றி எபிரெயர் 11-ம் அதிகாரத்தில் பவுல் விளக்குகிறார்! இந்தப் பதிவை வாசிக்கையில் நம்முடைய இருதயம் களிகூர்ந்து மகிழ்ச்சியால் துள்ளுகிறது. ஏனெனில், உண்மையுடன் உத்தமத்தைக் காத்த அத்தகைய ஜனங்களைப் போலவே நமக்கிருக்கும் பாக்கியத்தையும் நம்பிக்கையையும் நன்றியோடு மதித்துணர முடிகிறது. ஆகவே, ‘நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் சகிப்புத் தன்மையோடு ஓடுவதற்கு’ இந்த நிருபம் உற்சாகப்படுத்துகிறது.​—எபி. 11:​8, 10, 16, 35; 12:1, NW.

27ஆகாய் தீர்க்கதரிசனத்திலிருந்து மேற்கோள்காட்டி பவுல் கடவுளுடைய வாக்கிற்குக் கவனத்தை திருப்புகிறார்: “இன்னும் ஒருதரம் நான் பூமியை மாத்திரமல்ல, வானத்தையும் அசையப்பண்ணுவேன்.” (எபி. 12:26; ஆகா. 2:6) எனினும், வித்து என்று அடையாளப்படுத்தப்பட்ட கிறிஸ்து இயேசுவின் அதிகாரத்தில் கடவுளுடைய ராஜ்யம் என்றென்றுமாக நிலைத்திருக்கும். ‘அசைக்க முடியாத ஒரு ராஜ்யத்தை நாம் பெறவிருக்கிறோம் . . . எனவே கடவுளுக்கு ஏற்கத்தக்க முறையில் பரிசுத்த சேவையை தேவ பயத்தோடும் பக்தியோடும் செலுத்தலாம்.’ கிறிஸ்து இரண்டாந்தரம் தோன்றுவார், ஆனால் “பாவத்தின் பொருட்டு அல்ல, தமக்காகக் காத்திருப்பவர்களுக்கு மீட்பு அருளும் பொருட்டே தோன்றுவார்” என்று ஆர்வத்தைத் தூண்டும் இந்தப் பதிவு நிச்சயமளிக்கிறது. அவ்வாறெனில், கடவுளுடைய “நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர் மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.” யெகோவா தேவனின் மேன்மையான பெயர், அவருடைய அரச-ஆசாரியராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் என்றென்றுமாகப் பரிசுத்தப்படுத்தப்படுவதாக!​—எபி. 12:​28, NW; 9:28, பொ.மொ.; 13:​15.

[அடிக்குறிப்புகள்]

a பைபிளின் கதை (ஆங்கிலம்), 1964, பக்கம் 91.

b 1981 மறுபதிப்பு, தொ. IV, பக்கம் 147.

[கேள்விகள்]

1. தனக்கு அளிக்கப்பட்ட எந்த பொறுப்புக்கு இசைவாக பவுல் இந்த நிருபத்தை எபிரெயருக்கு எழுதினார்?

2. எபிரெயரை பவுல் எழுதினார் என்பதை சந்தேகிக்கும் விவாதங்களை எவ்வாறு தவறென நிரூபிக்கலாம்?

3. எபிரெயரை பவுல் எழுதினார் என்பதை ஆதரித்து, அவர் முக்கியமாய் யூதருக்காக எழுதினார் என்பதை என்ன பைபிள் சார்ந்த அத்தாட்சி காட்டுகிறது?

4. எபிரெயரின் எழுத்தாளர் பவுலே என்பதற்கு என்ன கூடுதல் அத்தாட்சி உள்ளது?

5. எபிரெயர் தேவாவியால் ஏவப்பட்டு எழுதப்பட்டது என்பதை அதன் பொருளடக்கம் எவ்வாறு நிரூபிக்கிறது?

6. எபிரெயர் எழுதப்பட்ட இடத்தையும் காலத்தையும் குறித்ததில் அத்தாட்சி என்ன காட்டுகிறது?

7. எருசலேமிலிருந்த யூதக் கிறிஸ்தவர்கள் என்ன வகையான எதிர்ப்பை எதிர்ப்பட்டார்கள், அவர்களுக்கு என்ன தேவைப்பட்டது?

8. எபிரெயருக்கு இந்த நிருபத்தை எழுத பவுல் நன்கு தகுதிபெற்றிருந்தார் என்று ஏன் சொல்லலாம், என்ன விவாதங்களை அவர் வரிசையாக அளித்தார்?

9. எபிரெயருக்கு எழுதின இந்த நிருபம் வல்லமைவாய்ந்த என்ன ஆயுதமாயிற்று, எவ்வாறு இது பவுலின் அன்பை மெய்ப்பித்துக் காட்டியது?

10. எபிரெயரின் தொடக்க வார்த்தைகள் கிறிஸ்துவின் ஸ்தானத்தைக் குறித்து என்ன சொல்கின்றன?

11. (அ) கேட்ட காரியங்களுக்கு வழக்கத்துக்கும் அதிகமான கவனம் செலுத்த வேண்டுமென்று பவுல் ஏன் அறிவுரை கூறுகிறார்? (ஆ) தமக்கிருந்த அனுபவங்களாலும் உயர்த்தப்பட்ட ஸ்தானத்தாலும் என்ன காரியங்களை இயேசுவால் நிறைவேற்ற முடியும்?

12. கிறிஸ்தவர்கள் கடவுளுடைய இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்க வேண்டுமென்றால் என்ன போக்கைத் தவிர்க்க வேண்டும்?

13. (அ) கிறிஸ்து எவ்வாறு நித்திய இரட்சிப்புக்குப் பொறுப்புள்ளவராக, ‘என்றென்றைக்கும் ஆசாரியரானார்’? (ஆ) எபிரெயரை முதிர்ச்சிக்கு முன்னேறும்படி பவுல் ஏன் உற்சாகப்படுத்துகிறார்?

14. எவ்வாறு விசுவாசிகள் வாக்குறுதியை சுதந்தரிக்கலாம், அவர்களுடைய நம்பிக்கை எவ்வாறு உறுதியாக்கப்பட்டிருக்கிறது?

15. மெல்கிசேதேக்கின் முறைப்படியான இயேசுவின் ஆசாரியத்துவம், லேவியின் ஆசாரியத்துவத்தைப் பார்க்கிலும் மேன்மையானதென எது காட்டுகிறது?

16. நியாயப்பிரமாணத்தின் கீழிருந்த ஆசாரியத்துவத்தைவிட இயேசுவின் ஆசாரியத்துவம் ஏன் மேம்பட்டது?

17. புது உடன்படிக்கை எதைவிட மேன்மையானது?

18. இரண்டு உடன்படிக்கைகளிலும் வரும் பலியை பவுல் எவ்வாறு ஒப்பிடுகிறார்?

19. (அ) நியாயப்பிரமாணத்தால் எதைச் செய்ய முடியவில்லை, ஏன்? (ஆ) பரிசுத்தமாக்கப்படுவதன் சம்பந்தமாகக் கடவுளுடைய சித்தம் என்ன?

20. (அ) விசுவாசம் என்பது என்ன? (ஆ) விசுவாசத்தைப் பற்றி எப்படிப்பட்ட காட்சிகளைப் பவுல் வருணிக்கிறார்?

21. (அ) விசுவாசத்திற்கான ஓட்டப்பந்தயத்தில் கிறிஸ்தவர்கள் எவ்வாறு சகித்து நிலைத்திருக்கலாம்? (ஆ) கடவுளுடைய எச்சரிக்கைக்கு செவிகொடுப்பதற்கு என்ன பலத்த காரணத்தை பவுல் கூடுதலாக அளிக்கிறார்?

22. கட்டியெழுப்பும் என்ன அறிவுரையோடு, எபிரெயருக்கு எழுதிய நிருபத்தை பவுல் நிறைவு செய்கிறார்?

23. நியாயப்பிரமாணத்தைப் பற்றி பவுல் விவாதிப்பது என்ன, தன் விவாதத்திற்கு என்ன ஆதாரம் அளிக்கிறார்?

24. நமக்கு அளவற்ற நன்மையளிக்கும் என்ன ஏற்பாடு எபிரெயரில் விளக்கப்பட்டிருக்கிறது?

25. எபிரெய வேதாகமத்தை உபயோகித்து பவுல் எவ்வாறு அருமையாக பொருத்திக் காட்டுகிறார்?

26. ஓட்டப்பந்தயத்தில் விசுவாசத்தோடும் சகிப்புத்தன்மையோடும் ஓடுவதற்கு என்ன ஊக்கமூட்டுதலை எபிரெயர் அளிக்கிறது?

27. எபிரெயரில் முக்கியப்படுத்திக் காட்டப்படும் மகிமையான ராஜ்ய எதிர்பார்ப்புகள் யாவை?