Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் புத்தக எண் 59—யாக்கோபு

பைபிள் புத்தக எண் 59—யாக்கோபு

பைபிள் புத்தக எண் 59—யாக்கோபு

எழுத்தாளர்: யாக்கோபு

எழுதப்பட்ட இடம்: எருசலேம்

எழுதி முடிக்கப்பட்டது: பொ.ச. 62-க்கு முன்

இயேசு, “மதிமயங்கி” இருப்பதாக அவருடைய உறவினர்கள் நினைத்தனர். அவர் பூமியில் ஊழியம் செய்தபோது, “அவர் சகோதரரும் அவர்மேல் விசுவாசம் வைக்கவில்லை.” யோசேப்பும் சீமோனும் யூதாவும் யாக்கோபும்கூட இயேசுவின் ஆரம்பகால சீஷர்களாக கருதப்படவில்லை. (மாற். 3:21; யோவா. 7:​5, தி.மொ.; மத். 13:​55, தி.மொ.) அப்படியென்றால் யாக்கோபு என்ற பெயர்கொண்ட பைபிள் புத்தகத்தை, இயேசுவின் சகோதரனாகிய யாக்கோபுதான் எழுதினார் என்பதாக எந்த ஆதாரத்தின் அடிப்படையில் சொல்லக்கூடும்?

2உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு யாக்கோபுக்கு காட்சியளித்தார் என்று பதிவு காட்டுகிறது. இது இயேசுவே மேசியாவென்று அவர் நம்புவதற்கு சந்தேகமின்றி உதவியாக இருந்தது. (1 கொ. 15:7) பெந்தெகொஸ்தேக்கு முன்புகூட, மரியாளும் இயேசுவின் சகோதரர்களும் எருசலேமில் ஒரு மேல்வீட்டில் அப்போஸ்தலரோடு ஜெபத்துக்காக கூடிவந்தனர் என்று அப்போஸ்தலர் 1:​12-14 காண்பிக்கிறது. ஆனால், அப்போஸ்தலரில் ஒருவரான யாக்கோபு இந்த நிருபத்தை எழுதவில்லையா? இல்லை, ஏனெனில் தொடக்கத்திலேயே இதன் எழுத்தாளர் தன்னை அப்போஸ்தலன் என்று சொல்லவில்லை, கர்த்தராகிய ‘இயேசு கிறிஸ்துவுக்கு அடியான்’ என்று குறிப்பிடுகிறார். மேலும், யாக்கோபைப் போலவே யூதாவின் அறிமுகச் சொற்கள், “இயேசு கிறிஸ்துவின் அடியானும் யாக்கோபின் சகோதரனுமான யூதா” என்று குறிப்பிடுகின்றன. (யாக். 1:​1; யூ. 1; தி.மொ.) ஆகவே, இயேசுவின் சகோதரர்களாகிய யாக்கோபும் யூதாவும், தங்கள் பெயர்கள் தாங்கிய பைபிள் புத்தகங்களை எழுதினார்கள் என்ற முடிவுக்கு நாம் வரலாம்.

3கிறிஸ்தவ சபைக்கு அறிவுரைகள் நிறைந்த ஒரு நிருபத்தை எழுதும் சிறப்பான தகுதியை யாக்கோபு பெற்றிருந்தார். எருசலேம் சபையில் அவர் ஒரு கண்காணியாக இருந்தார்; அவருக்கு நல்ல மதிப்பு இருந்தது. கேபாவும் யோவானும் சபையின் ‘தூண்களாக’ கருதப்பட்டனர்; அவர்களோடு ‘கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபும்’ ஒரு தூணாக இருந்தார் என்று பவுல் சொல்கிறார். (கலா. 1:19; 2:9) பேதுரு சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டவுடன் “யாக்கோபுக்கும் சகோதரருக்கும்” சொல்லி அனுப்பினார்; யாக்கோபு முதன்மையானவராக விளங்கினார் என்பது இதிலிருந்து காட்டப்படுகிறது. விருத்தசேதனத்தைப் பற்றி முடிவெடுக்கும்படி விண்ணப்பிப்பதற்கு பவுலும் பர்னபாவும் எருசலேமுக்குப் பயணம் செய்தனர்; அப்போது, “அப்போஸ்தலருக்கும் மூப்பருக்கும்” பிரதிநிதியாக பேசியவர் யாக்கோபுதான். இந்தத் தீர்மானத்தின் ஆரம்பத்திலும் யாக்கோபுடைய நிருபத்தின் ஆரம்பத்திலும் “வாழ்த்துதல்” என்ற வார்த்தை காணப்படுகிறது. இதிலிருந்து அவற்றை எழுதியவர் ஒருவரே என்பதற்கு இன்னொரு சான்று சுட்டிக்காட்டப்படுகிறது.​—அப். 12:17; 15:​13, 22, 23; யாக். 1:1.

4சதுசேயனும் பிரதான ஆசாரியனுமாகிய அனானஸேதான் (அனனியாஸ்) யாக்கோபின் மரணத்துக்கு காரணம் என்பதாகவும், அவர் கல்லெறிந்து கொல்லப்பட்டார் என்பதாகவும் சரித்திராசிரியன் ஜொஸிஃபஸ் சொல்கிறார். இது ஏறக்குறைய பொ.ச. 62-ல் ரோம அதிபதி பெஸ்துவின் மரணத்திற்குப் பின், அல்பினஸ் பதவி ஏற்பதற்கு முன் நடந்திருக்க வேண்டும். a யாக்கோபு இந்த நிருபத்தை எப்போது எழுதினார்? எருசலேமிலிருந்து யாக்கோபு இந்த நிருபத்தை எழுதினார். அவர், “சிதறியிருக்கிற பன்னிரண்டு கோத்திரங்களுக்கு,” எழுதினார்; சொல்லர்த்தமாக, ‘சிதறியிருப்போருக்கு’ என்பது அதன் அர்த்தம். (யாக். 1:1, NW அடிக்குறிப்பு) பொ.ச. 33-ல் பரிசுத்த ஆவி ஊற்றப்பட்ட பிறகு கிறிஸ்தவம் பரவுவதற்கு காலம் எடுத்திருக்கும்; இந்த நிருபத்தில் சொல்லப்பட்ட கவலை தரும் நிலைமைகள் ஏற்படுவதற்கும் காலமெடுத்திருக்க வேண்டும். மேலும், கிறிஸ்தவர்கள் சிறிய தொகுதிகளாக இருக்கவில்லை என்பதை இந்தக் கடிதம் காட்டியது; அதற்கு பதில் அவர்கள் சபைகளாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தனர் என்றும் பலவீனருக்காக ஜெபித்து அவர்களை ஆதரிக்கும் முதிர்ச்சி வாய்ந்த “மூப்பர்கள்” அந்த சபைகளில் இருந்தனர் என்பதையும் கவனிக்கிறோம். இதோடுகூட, ஓரளவு அக்கறையின்மையும் சடங்கு சம்பிரதாயங்களும் சபைக்குள் நுழையும் அளவிற்கு காலம் கடந்திருந்தது. (2:​1-4; 4:​1-3; 5:14; 1:​26, 27) ஆகையால், யாக்கோபு தன் நிருபத்தை, பிற்காலத்தில், ஒருவேளை பொ.ச. 62-க்குச் சற்று முன்பு எழுதியிருக்கலாம். பெஸ்துவின் மரணத்தைப் பற்றி ஜொஸிஃபஸ் அளிக்கும் விவரம் சரியாக இருந்து, பெஸ்துவின் மரணத்தை ஏறக்குறைய பொ.ச. 62 என காட்டும் ஆதாரங்கள் திருத்தமாயிருந்தால் மேற்சொன்ன குறிப்பு சரியாக இருக்கும்.

5இது வாடிகன் எண் 1209, சினியாட்டிக், அலெக்ஸாண்ட்ரின் கையெழுத்துப் பிரதிகளில் அடங்கியுள்ளது. இவை யாக்கோபு நிருபத்தின் நம்பகத் தன்மைக்கு சான்றளிக்கின்றன. பொ.ச. 397-ல் நடந்த கார்த்தேஜ் ஆலோசனை குழுவுக்கு முந்தைய, குறைந்தபட்சம் பத்து பூர்வ புத்தகப் பெயர்ப்பட்டியல்களில் இது சேர்க்கப்பட்டிருக்கிறது. b பூர்வ சர்ச் எழுத்தாளர்களால் விரிவாய் மேற்கோள் காட்டப்பட்டது. தேவாவியால் ஏவப்பட்ட மற்ற வேதவசனங்களோடு யாக்கோபு முழுமையாக ஒத்திசைந்திருப்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

6யாக்கோபு இந்த நிருபத்தை ஏன் எழுதினார்? இந்த நிருபத்தை கவனமாக படிக்கும்போது, அப்போதைய நிலைமைகள் சகோதரருக்குள் பிரச்சினைகளை ஏற்படுத்தியிருந்தன என்பது புலனாகிறது. கிறிஸ்தவ தராதரங்கள் மதிப்பிழந்தன, ஏன், புறக்கணிக்கவும்பட்டன. சிலர் உலக சிநேகத்தால் ஆவிக்குரிய விபசாரக்காரர்களாக ஆகிவிட்டனர். முரண்பாடுகளை கண்டுபிடிப்பதற்காக ஆவல்கொண்டு சிலர் யாக்கோபின் நிருபத்தை பவுலின் நிருபத்தோடு ஒப்பிட்டனர்; யாக்கோபின் நிருபம் செயல்களைக் கொண்ட விசுவாசத்தை ஊக்குவிக்கிறது, செயல்களால் அல்ல விசுவாசத்தால் இரட்சிப்பு என்று பவுலின் நிருபங்கள் சொல்கின்றன. எனவே இது முரண்பாடாக தோன்றுவதால் பவுலின் நிருபத்தை இவரது எழுத்துக்கள் செல்லாததாக்கிவிடுகின்றன என்றும் வாதாடினர். ஆனால், யாக்கோபு வெறும் வார்த்தைகளால் அல்ல, செயல்களால் ஆதரிக்கப்பட்ட விசுவாசத்தைக் குறிப்பிடுகிறார். பவுலோ நியாயப்பிரமாணத்தின் கிரியைகளை அல்லது செயல்களை குறிப்பிடுகிறார் என்பதை சூழமைவு தெளிவாக வெளிப்படுத்துகிறது. பவுலின் வார்த்தைகளை யாக்கோபு நிறைவு செய்கிறார் என்பதுதான் உண்மை; விசுவாசம் எவ்வாறு வெளிப்பட்டது என்பதை யாக்கோபு விளக்குவதால் இன்னும் கூடுதலான தகவலை அளிக்கிறார். யாக்கோபின் ஆலோசனைகள், ஒரு கிறிஸ்தவனின் அன்றாட பிரச்சினைகளை நடைமுறையில் கையாளுவதற்கு பயனுள்ளவை.

7மிருகங்கள், கப்பல்கள், விவசாயிகள், தாவரங்கள் உட்பட அன்றாட வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டவைகளிலிருந்து யாக்கோபு உதாரணங்களை அளித்தார்; விசுவாசம், பொறுமை, சகிப்புத்தன்மை போன்றவற்றை அவர் விளக்குவதற்கு அவை நல்ல ஆதாரத்தை அளிக்கின்றன. இதன் மூலம் இயேசுவின் வெற்றிகரமான கற்பிக்கும் முறைகளை இவர் பின்பற்றியிருக்கிறார்; எனவே இவருடைய அறிவுரை அதிக ஆற்றல் வாய்ந்ததாக இருக்கிறது. யாக்கோபு மற்றவர்களின் உள்நோக்கங்களை எந்தளவு நன்கு புரிந்துகொண்டார் என்பதை இந்த நிருபம் காட்டுகிறது.

யாக்கோபுவின் பொருளடக்கம்

8‘திருவசனத்தின்படி செய்கிறவர்களாக’ பொறுமையோடு சகித்திருத்தல் (1:​1-27). யாக்கோபு தனது நிருபத்தை ஊக்கமூட்டும் வார்த்தைகளோடு தொடங்குகிறார்: “என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, . . . அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.” பொறுமையுடன் சகிப்பதன்மூலம் அவர்கள் பூரணராக்கப்படுவார்கள். ஒருவன் ஞானத்தில் குறைவுபட்டால் கடவுளிடம் அதற்காக தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்க வேண்டும். காற்றினால் அலைக்கழிக்கப்படும் கடலின் அலையைப்போல் அல்ல, விசுவாசத்துடன் கேட்க வேண்டும். தாழ்ந்தவன் உயர்த்தப்படுவான், ஆனால் ஐசுவரியவான் அழிந்துபோகும் பூவைப்போல் வாடிப்போவான். சோதனையை சகிக்கிற மனிதன் சந்தோஷமுள்ளவன். ஏனெனில் ‘தம்மைத் தொடர்ந்து நேசிக்கிறவர்களுக்கு யெகோவா வாக்குக் கொடுத்த ஜீவ கிரீடத்தை அவன் பெறுவான்.’ மனிதன் வீழ்ச்சியடைய வேண்டும் என்பதற்காக தீமையான காரியங்களால் கடவுள் அவனை சோதிப்பதில்லை. மனிதனின் தவறான ஆசையே கர்ப்பந்தரித்து பாவத்தைப் பிறப்பித்து பின்னர் மரணத்தில் விளைவடைகிறது.​—1:​2, 12, NW, 22.

9நல்ல அன்பளிப்புகள் யாவும் எங்கிருந்து வருகின்றன? ஒருபோதும் மாறாத ‘பரம ஜோதிகளின் பிதாவிடமிருந்து’ வருகின்றன. “அவர் சித்தங்கொண்டு, தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலே ஜநிப்பித்தார்” என்று யாக்கோபு சொல்கிறார். அப்படியென்றால் கிறிஸ்தவர்கள் கேட்பதற்குத் தீவிரமாகவும், பேசுவதற்கும் கோபிப்பதற்கும் தாமதமாகவும் இருக்க வேண்டும். அவர்கள் எல்லா அழுக்கையும் ஒழுக்கக்கேட்டையும் ஒழித்துவிட்டு, இரட்சிப்பின் வார்த்தை உள்ளத்தில் நாட்டப்படுவதை ஏற்க வேண்டும். “கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.” கண்ணாடியைப் போன்ற சுயாதீனப் பிரமாணத்துக்குள் உற்றுப் பார்த்து அதில் நிலைத்திருக்கிறவன் ‘அதைச் செய்வதில் சந்தோஷமுள்ளவனாயிருப்பான்.’ தன் நாவை அடக்காத மனிதனின் வணக்கம் பிரயோஜனமற்றது; ஆனால், “நமது கடவுளும் பிதாவுமானவரின் முன்னிலையில் மாசற்ற சுத்தமான தெய்வ வழிபாடு என்னவென்றால் ஆதரவற்ற பிள்ளைகளையும் விதவைகளையும் அவர்கள் உபத்திரவத்தில் விசாரிக்கிறதும் உலகத்தால் கறைபடாதபடி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமேயாம்.”​—1:​17, 18, 22, 25, 27, தி.மொ.

10விசுவாசம் சரியான செயல்களால் பூரணப்படுகிறது (2:​1-26). ஏழைகளுக்கு மேலாக ஐசுவரியவான்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, சகோதரர்கள் பாரபட்சம் காட்டுகின்றனர். ஆனால் ‘கடவுள் உலக விஷயத்தில் தரித்திரரானவர்களை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும் . . . ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தேர்ந்தெடுத்தது’ உண்மையல்லவா? ஐசுரியவான்கள்தான் மற்றவர்களை ஒடுக்குகிறவர்கள் அல்லவா? “உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல அயலானிடத்திலும் அன்புகூர வேண்டும்” என்ற ராஜரிக பிரமாணத்தைச் சகோதரர்கள் அனுசரித்து பட்சபாதத்தை விட்டொழிக்க வேண்டும். அவர்கள் இரக்கத்தையும் அனுசரிக்க வேண்டும், ஏனெனில் நியாயப்பிரமாணத்தை பொருத்தவரை ஒரு சட்டத்தில் தவறுகிறவன் எல்லாவற்றிலும் தவறினவனாகிறான். செயலற்ற விசுவாசம் அர்த்தமற்றது; அது ஒரு சகோதரனுக்கு அல்லது சகோதரிக்கு தேவைப்படும் உதவி அளிக்காமல், “குளிர்காய்ந்து பசியாறுங்கள்” என்று சொல்வதற்கு சமம். செயலில்லாமல் விசுவாசத்தைக் காட்ட முடியுமா? ஆபிரகாமின் விசுவாசம் ஈசாக்கைப் பலிபீடத்தின் மீது பலிசெலுத்தும் செயலால் பூரணமாக்கப்பட்டதல்லவா? அவ்வாறே, வேசியாகிய ராகாப் ‘செயல்களினாலே . . . நீதியுள்ளவள் என்று அறிவிக்கப்பட்டாள்.’ ஆகவே செயல்களில்லாத விசுவாசம் செத்ததாயிருக்கிறது.​—2:​5, 8, 16, 19, 25, NW.

11ஞானத்தைப் போதிப்பதற்கு நாவை அடக்குதல் (3:​1-18). கடினமான தீர்ப்பை பெறுவதைத் தவிர்க்க சகோதரர்கள் போதகர்களாவதைக் குறித்து முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். எல்லாரும் பல தடவை தவறுகிறோம். குதிரையை கடிவாளமும், பெரிய கப்பலை ஒரு சிறிய சுக்கானும் கட்டுப்படுத்துவதுபோல், சிறிய உறுப்பாகிய நாக்கிற்கு அதிக வல்லமை இருக்கிறது. ஒரு பெரிய காட்டைக் கொளுத்திவிடக்கூடிய நெருப்பைப் போன்றது அது! இந்த நாவைப் பார்க்கிலும் மூர்க்க மிருகங்களை எளிதில் அடக்கிவிடலாம். மனிதர்கள் நாவால் யெகோவாவைத் துதிக்கின்றனர், அதேசமயம் மற்றவர்களையும் சபிக்கின்றனர். இது சரியல்ல. ஒரே நீரூற்றிலிருந்து கசப்பும் இனிப்புமான தண்ணீர் சுரக்குமா? அத்திமரம் ஒலிவப் பழங்களைக் கொடுக்குமா? திராட்சக்கொடி அத்திப்பழங்களைத் தருமா? உவர்ப்பான நீர் இனிப்பான நீரைத் தருமா? யாக்கோபு கேட்கிறார்: ‘உங்களில் ஞானியும் விவேகியுமாக இருப்பவன் யார்?’ அவன் தன் செயல்களைச் சாந்தத்தோடே காண்பிக்கக்கடவன். சச்சரவையும், சத்தியத்துக்கு எதிராக வீணான தற்பெருமை பேசுவதையும் தவிர்ப்பானாக. ஏனெனில் ‘பரத்திலிருந்து வருகிற ஞானம் முதலாவதாகக் கற்புள்ளதும், பின்பு சமாதானமானதும், நியாயமானதும், கீழ்ப்படிய ஆயத்தமாயும், இரக்கமும் நற்கனிகளும் நிறைந்ததாயும், பட்சபாதம் செய்யாமலும், மாயமற்றதாயும் உள்ளது.’​—3:​13, 17, NW.

12சிற்றின்பத்தையும் உலக சிநேகத்தையும் தவிர்த்தல் (4:​1-17). ‘எதற்காக உங்களுக்குள் சண்டைகள் ஏற்படுகின்றன?’ யாக்கோபு தன்னுடைய கேள்விக்கு தானே பதிலளிக்கிறார்: ‘சிற்றின்பத்தை நாடும் உங்கள் இச்சைகளே’! சிலருடைய உள்நோக்கங்கள் தவறானவை. உலகத்தின் சிநேகிதராயிருக்க விரும்புவோர் ‘விபசாரர்களே’; இவர்கள் கடவுளுடைய சத்துருக்களாகின்றனர். ஆகையால் அவர் அறிவுரை கூறுவதாவது: “பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். கடவுளிடம் சேருங்கள், அப்பொழுது அவரும் உங்களிடம் சேருவார்.” தாழ்மையுள்ளோரை யெகோவா உயர்த்துவார். ஆகவே சகோதரர்கள் ஒருவரையொருவர் நியாயந்தீர்ப்பதை விட்டுவிட வேண்டும். அடுத்த நாள் உயிரோடு இருப்போமா என்று நம்மில் ஒருவரும் நிச்சயமாக சொல்ல முடியாது. ஆதலால், “யெகோவாவுக்குச் சித்தமானால், நாம் உயிரோடிருந்து இதை அல்லது அதைச் செய்வோம்” என்று சொல்ல வேண்டும். பெருமை பொல்லாதது; சரியானது எது என்று அறிந்தபின் அதைச் செய்யாதிருப்பது பாவம்.​—4:​1, NW, 4, 7, 8, தி.மொ., 15, NW.

13நீதியில் சகித்திருப்போர் சந்தோஷமுள்ளவர்கள்! (5:​1-20). ‘ஐசுவரியவான்களே, அலறி அழுங்கள். . . . அவைகளிலுள்ள [ஐசுவரியத்தின்] துரு உங்களுக்கு விரோதமாக சாட்சியாயிருக்கும். உங்களால் அநியாயமாக, கூலியை கொடுக்காமல் பிடித்து வைக்கப்பட்ட அறுவடையாளர்களுடைய கூக்குரல் சேனைகளுடைய கர்த்தரின் [யெகோவாவின்] செவிகளில் கேட்டது. நீங்கள் சம்பிரமமாய் வாழ்ந்து, சுகபோகத்தில் உழன்றீர்கள்; நீதிமானை நீங்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்துக் கொலைசெய்தீர்கள்’ என்று யாக்கோபு அறிவிக்கிறார். கர்த்தரின் வருகை சமீபமாயிருப்பதால், சகோதரர்கள் அறுப்புக்காக காத்திருக்கும் பயிரிடுகிறவனைப்போல் பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் “யெகோவாவின் பெயரில் பேசின” தீர்க்கதரிசிகளின் மாதிரியையும் கவனிக்க வேண்டும். சகித்து நிலைத்திருப்பவர்கள் சந்தோஷமுள்ளவர்கள்! யோபின் சகிப்புத்தன்மையையும் யெகோவா அளித்த பலனையும் சகோதரர்கள் நினைவில் வைக்க வேண்டும், ‘யெகோவா பாசத்தில் மிகக் கனிவுள்ளவராயும் இரக்கமுள்ளவராயும் இருக்கிறாரே.’​—5:​1-6, 10, 11, NW.

14ஆணையிடுவதை அவர்கள் நிறுத்த வேண்டும். அதற்கு பதில் அவர்களுடைய ‘ஆம் என்பது ஆம் எனவும் இல்லை என்பது இல்லை எனவும் இருக்கக்கடவது.’ தங்கள் பாவங்களை வெளிப்படையாய் அறிக்கையிட்டு ஒருவருக்காக மற்றவர் ஜெபிக்க வேண்டும். “நீதிமான் செய்யும் வேண்டுதல் . . . மிகவும் வல்லமையுள்ளது” என்பது எலியாவின் ஜெபத்திலிருந்து வெளிப்படையாக தெரிகிறது. சத்தியத்திலிருந்து விலகிப் போனவரை திரும்ப சத்தியத்துக்குத் திருப்புகிறவன் அவனுடைய ‘ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்துத் திரளான பாவங்களை மூடுவான்.’​—5:12, 16, 20, தி.மொ.

ஏன் பயனுள்ளது

15இயேசுவின் பெயரை இருமுறை மாத்திரமே யாக்கோபு குறிப்பிடுகிறார் (1:1; 2:1). என்றபோதிலும், அவருடைய போதகங்களை நடைமுறையில் நல்ல விதத்தில் பொருத்திப் பயன்படுத்துகிறார்; யாக்கோபின் நிருபத்தையும் எஜமானரின் மலைப்பிரசங்கத்தையும் கவனமாய் ஒப்பிடும்போது இது தெளிவாக தெரிகிறது. அதேசமயத்தில், யெகோவாவின் பெயர் 13 முறை (NW) வருகிறது. விசுவாசத்தைக் காத்துக்கொள்ளும் கிறிஸ்தவர்களுக்கு அளிக்கப்படும் வெகுமதியே அவருடைய வாக்குறுதிகள் என்பது அறிவுறுத்தப்படுகிறது. (4:​10; 5:11) உதாரணங்களுக்காகவும் பொருத்தமான மேற்கோள்களுக்காகவும் எபிரெய வேதாகமத்திலிருந்து பல குறிப்புகளை யாக்கோபு கூறுகிறார்; இதன் மூலம் நடைமுறையில் பயனுள்ள ஆலோசனைகளை படிப்படியாக விளக்குகிறார். “வேதவாக்கியம் சொல்லுகிறபடி,” “வேதவாக்கியம் நிறைவேறிற்று,” ‘வேதவாக்கியம் சொல்லுகிறது’ என்ற சொற்களை பயன்படுத்துவதன் மூலம் விளக்கத்திற்கான அடிப்படை ஆதாரத்தை அடையாளம் காட்டுகிறார். இந்த வேதவாக்கியங்களைக் கிறிஸ்தவ வாழ்க்கைக்குப் பொருத்திப் பயன்படுத்துகிறார். (2:​8, 23; 4:5) அறிவுரையின் குறிப்புகளைத் தெளிவாக்குவதற்கும் முழுமையாக கடவுளுடைய வார்த்தையில் விசுவாசத்தை பலப்படுத்துவதற்கும் யாக்கோபு பின்வரும் உதாரணங்களை குறிப்பிடுகிறார்; ஆபிரகாமுடைய விசுவாச செயல்களையும், ராகாப் விசுவாசத்தைச் செயல்களால் மெய்ப்பித்துக் காட்டியதையும், யோபின் சகிப்புத் தன்மையையும், ஜெபத்தில் எலியாவின் உறுதியான நம்பிக்கையையும் அவர் குறிப்பிடுகிறார்.​—யாக். 2:​21-25; 5:​11, 17, 18; ஆதி. 22:​9-12; யோசு. 2:​1-21; யோபு 1:​20-22; 42:10; 1 இரா. 17:1; 18:​41-45.

16மதிப்புமிக்க அறிவுரைகளை யாக்கோபு அளிக்கிறார். அதன்மூலம் வார்த்தையை வெறுமனே கேட்பவராக அல்ல, அதைச் செய்பவராக இருக்க முடியும். விசுவாசத்தை நீதியின் செயல்களால் நிரூபிக்க முடியும். பல்வேறு சோதனைகளை சகிப்பதில் மகிழ்ச்சியைக் காண முடியும். ஞானத்துக்காக கடவுளிடம் தொடர்ந்து கேட்க முடியும். எப்போதும் ஜெபத்தில் அவரிடம் நெருங்கி இருக்க முடியும். “உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக” என்ற ராஜரிகப் பிரமாணத்தைப் பழக்கமாய் அனுசரித்து வரமுடியும். (யாக். 1:22; 2:24; 1:​2, 5; 4:8; 5:​13-18; 2:8) தவறானவற்றை கற்றுக்கொடுப்பது, நாவைத் தவறான முறையில் பயன்படுத்துவது, சபையில் ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்துவது, சிற்றின்பத்துக்காக ஆவல்கொள்வது, அழிவுள்ள ஐசுவரியத்தில் நம்பிக்கை வைப்பது ஆகியவற்றை பற்றிய எச்சரிக்கைகள் கடுமையானவை. (3:​1, 8; 2:4; 4:3; 5:​1, 5) உலகத்தோடு சிநேகம் என்பது ஆவிக்குரிய விபசாரம் என்றும் கடவுளிடம் பகை என்றும் யாக்கோபு தெளிவாக்கினார்; கடவுளுடைய பார்வையில் சுத்தமான வணக்கம் நடைமுறையில் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை இவ்வாறு விளக்குகிறார்: “திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே.” (4:4; 1:27) பூர்வ கிறிஸ்தவ சபையின் ‘தூணாக’ யாக்கோபு கருதப்பட்டார்; எனவே நடைமுறையில் பயன்படுத்துவதற்கும் புரிந்துகொள்வதற்கு எளிமையாகவும் இருக்கும் இந்த அறிவுரைகள் இவரிடமிருந்து வருவது நியாயமானதே. (கலா. 2:9) இதன் தயவான செய்தி, ‘நீதியாகிய கனியைப்’ பிறப்பிக்கிற ‘பரத்திலிருந்து வருகிற ஞானமாக’ இருக்கிறது; எனவே குழப்பமான நம்முடைய காலங்களிலும் கிறிஸ்தவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறது.​—3:​17, 18.

17கடவுளுடைய ராஜ்யத்தில் ஜீவனை அடைய வேண்டும் என்பதே சகோதரர்களின் இலக்கு; எனவே அவர்களுக்கு உதவிசெய்ய யாக்கோபு ஆவலாயிருந்தார். ஆகவே அவர்களை இவ்வாறு உற்சாகப்படுத்துகிறார்: “நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே.” அவர்கள் தொடர்ந்து சோதனையைச் சகித்து நிலைத்திருந்தால் மகிழ்ச்சியுள்ளவர்கள்; ஏனெனில் கடவுளுடைய அங்கீகாரமானது, ‘தம்மைத் தொடர்ந்து நேசித்துவருவோருக்கு யெகோவா வாக்குக்கொடுத்த ஜீவகிரீடத்தைப்’ பெறுவதைக் குறிக்கிறது. (5:8; 1:​12, NW) இவ்வாறு கடவுளுடைய வாக்குறுதியாகிய ஜீவகிரீடத்தை​—பரலோகங்களில் அழியாமைக்குரிய ஜீவனை அல்லது பூமியில் நித்திய ஜீவனை​—பெறுவதே, உண்மையுள்ள செயல்களில் நிலைத்திருப்பதற்குப் பலத்த காரணம் என இந்த நிருபம் வலியுறுத்துகிறது. பரலோகத்திலோ அல்லது ராஜ்ய வித்தாகிய நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் ஆளப்படும் யெகோவாவின் புதிய உலகத்திலோ நித்திய ஜீவனைப் பெறும் இலக்கை எட்டுவதற்கு இந்தச் சிறந்த நிருபம் எல்லாரையும் நிச்சயமாகவே ஊக்குவிக்கும்.​—2:5.

[அடிக்குறிப்புகள்]

a ஜூயிஷ் ஆண்டிக்விட்டீஸ், XX, 197-200 (ix, 1); வெப்ஸ்டர்ஸ் நியூ பையக்ராஃபிக்கல் டிக்ஷ்னரி, 1983, பக்கம் 350.

b பக்கம் 303-லுள்ள அட்டவணையைப் பாருங்கள்.

[கேள்விகள்]

1. யாக்கோபு என்று பெயரிடப்பட்ட புத்தகத்தை யாக்கோபுதான் எழுதினார் என்பதைக் குறித்து ஏன் சந்தேகம் வருகிறது?

2. இயேசுவின் சகோதரனே யாக்கோபு புத்தகத்தின் எழுத்தாளரென ஏன் சொல்லலாம்?

3. எழுதுவதற்கு யாக்கோபுக்கு இருந்த தகுதிகள் யாவை?

4. பொ.ச. 62-க்குச் சற்று முன்பு யாக்கோபின் நிருபம் எழுதப்பட்டதென எது காட்டுகிறது?

5. யாக்கோபு நிருபத்தின் நம்பகத் தன்மையை எது நிரூபிக்கிறது?

6. (அ) என்ன சூழ்நிலைமைகள் நிலவியதால் யாக்கோபு இந்த நிருபத்தை எழுதினார்? (ஆ) முரண்படுவதற்கு பதில், விசுவாசத்தைக் குறித்த பவுலின் விவாதத்தை யாக்கோபு எவ்வாறு நிறைவு செய்கிறார்?

7. இயேசுவின் கற்பிக்கும் முறைகளை யாக்கோபு எவ்வாறு பின்பற்றுகிறார், அதன் விளைவு என்ன?

8. பொறுமையுடன் சகிப்பதால் என்ன பயன், தவறான ஆசையால் உண்டாகும் விளைவென்ன?

9. ‘வார்த்தையின்படி செய்கிறவர்களாக’ இருப்பதில் என்ன உட்பட்டிருக்கிறது, என்ன வகையான வணக்கத்தைக் கடவுள் அங்கீகரிக்கிறார்?

10. (அ) என்ன பட்சபாதங்களை விட்டொழிக்க வேண்டும்? (ஆ) விசுவாசத்திற்கும் செயல்களுக்கும் உள்ள சம்பந்தம் என்ன?

11. (அ) என்ன உதாரணங்களைப் பயன்படுத்தி யாக்கோபு நாவைப் பற்றி எச்சரிக்கிறார்? (ஆ) ஞானமும் விவேகமும் எவ்வாறு காட்டப்பட வேண்டும்?

12. (அ) என்ன தவறான நிலைமைகள் சபையில் இருந்து வருகின்றன, அவற்றின் மூலக்காரணம் என்ன? (ஆ) என்ன மனப்பான்மையைத் தவிர்க்க வேண்டும், யெகோவாவின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு என்ன பண்பை வளர்க்க வேண்டும்?

13. (அ) ஐசுவரியவான்களுக்கு ஏன் ஆபத்து? (ஆ) பொறுமையும் சகிப்புத்தன்மையும் தேவைப்படுவதை யாக்கோபு எவ்வாறு உதாரணங்களினால் விளக்குகிறார், அதன் பலன்கள் யாவை?

14. பாவத்தை அறிக்கையிடுவதையும் ஜெபத்தையும் பற்றி என்ன முடிவான அறிவுரை கொடுக்கப்படுகிறது?

15. எபிரெய வேதாகமத்தை யாக்கோபு எவ்வாறு பொருத்திப் பயன்படுத்துகிறார்? உதாரணத்தைக்கொண்டு விளக்குங்கள்.

16. என்ன அறிவுரைகளையும் எச்சரிக்கைகளையும் யாக்கோபு கொடுக்கிறார், நடைமுறையில் பயன்படுத்தக்கூடிய இத்தகைய ஞானம் எங்கிருந்து வருகிறது?

17. உண்மையுள்ள செயல்களில் சகித்து நிலைத்திருப்பதற்கு என்ன பலத்த காரணம் கொடுக்கப்பட்டிருக்கிறது?