Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் புத்தக எண் 6—யோசுவா

பைபிள் புத்தக எண் 6—யோசுவா

பைபிள் புத்தக எண் 6—யோசுவா

எழுத்தாளர்: யோசுவா

எழுதப்பட்ட இடம்: கானான்

எழுதி முடிக்கப்பட்டது: ஏ. பொ.ச.மு. 1450

காலப்பகுதி: பொ.ச.மு. 1473-ஏ. 1450

அந்த ஆண்டு பொ.ச.மு. 1473. அந்தக் காட்சி பிரமிப்பூட்டுகிறது, சிலிர்ப்பூட்டுகிறது. இஸ்ரவேலர் தற்போது மோவாபின் சமவெளிகளில் பாளையம் இறங்கியுள்ளனர். வாக்குப்பண்ணப்பட்ட தேசமாகிய கானானுக்குள் நுழைவதற்கு தயாராக இருக்கின்றனர். யோர்தானுக்கு அக்கரையிலிருக்கும் அந்தப் பகுதியில் அநேக சிற்றரசுகள் இருக்கின்றன. ஒவ்வொரு சிற்றரசுக்கும் சொந்தமாக தனித்தனி படையும் இருக்கிறது. அவை தங்களுக்குள் பிரிந்து இருப்பதுடன், எகிப்தின் பல்லாண்டுகால கொடுங்கோல் ஆட்சியால் வலுவிழந்து காணப்படுகின்றன. இருந்தாலும் இஸ்ரவேலருக்கு இச்சிற்றரசுகள் எளிதில் வெல்ல முடியாத எதிரிகளே. வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைக் கைப்பற்ற வேண்டுமெனில் எரிகோ, ஆயி, ஆத்சோர், லாகீஸ் போன்ற அரணான மதில்களையுடைய பல பட்டணங்களைப் பிடித்தே ஆகவேண்டும். அதிக கடினமான காலம் அவர்களுக்குக் காத்திருக்கிறது. அவர்கள் யுத்த களத்தில் இறங்கி பட்டணங்களை கைப்பற்ற வேண்டும். அதேசமயத்தில், யெகோவா அவர்களுக்கு அந்தத் தேசத்தை கொடுக்கப்போவதாக வாக்குறுதி அளித்திருந்தார். அதனால், தம் ஜனங்களின் சார்பில் அவர்தாமே களமிறங்கி பலத்த அற்புதத்தை நடத்த வேண்டும். யெகோவா தம்முடைய ஜனங்களை வழிநடத்திய வெவ்வேறு சந்தர்ப்பங்களிலேயே மிக முக்கியமான, ஆர்வத்தைத் தூண்டும் இச்சம்பவங்களை கண்கண்ட சாட்சி ஒருவர் பதிவுசெய்தே ஆக வேண்டும். அதற்கு மோசேயை அடுத்து யெகோவா நியமித்த யோசுவாவைத் தவிர சிறந்தவர் வேறு யாராக இருக்க முடியும்!​—எண். 27:​15-23.

2தலைவராகவும், நடக்கவிருக்கிற சம்பவங்களைப் பதிவுசெய்பவராகவும் யோசுவா தெரிந்தெடுக்கப்பட்டது மிகப் பொருத்தமே. ஏனெனில் வனாந்தரத்திலே செலவிட்ட அந்த 40 ஆண்டுகளும் அவர் மோசேயின் மிக நெருங்கிய தோழராக இருந்துள்ளார். “தன் வாலிப காலமுதல் மோசேக்குத் துணையா[ய்]” இருந்திருக்கிறார். இது அவரை ஆவிக்குரிய தலைவராகவும் இராணுவத் தலைவராகவும் இருப்பதற்கு தகுதியானவர்தான் என நிரூபிக்கிறது. (எண். 11:28, தி.மொ.; யாத். 24:13; 33:11; யோசு. 1:1) இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வெளியேறின வருடமான பொ.ச.மு. 1513-ல், அமலேக்கியரைத் தோற்கடித்தபோது இஸ்ரவேல் படைத்தலைவராக இருந்த அனுபவமும் அவருக்கிருந்தது. (யாத். 17:​9-14) கானானை வேவுபார்க்கும் ஆபத்தான வேலைக்காக ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒரு நபர் தெரிந்தெடுக்கப்பட்டார். மோசேயின் உண்மையுள்ள தோழராகவும் தைரியமான படைத்தலைவராகவும் யோசுவா இருந்தார். எனவே, எப்பிராயீம் கோத்திரத்தின் சார்பில் சிரமமின்றி தெரிந்தெடுக்கப்பட்டார். அந்தச் சந்தர்ப்பத்தில் அவர் தைரியத்துடனும் உண்மைத்தன்மையுடனும் நடந்துகொண்டதால்தான் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைய முடிந்தது. (எண். 13:8; 14:​6-9, 30, 38) ஆம், நூனின் குமாரனான இந்த யோசுவா, ‘ஆவியைப் பெற்றிருந்த,’ ‘யெகோவாவை முழுமையாகப் பின்பற்றின,’ ‘ஞானத்தின் ஆவியினால் நிறையப்பட்ட’ ஒரு மனிதன். ஆகவே, ‘யோசுவா உயிரோடிருந்த சகல நாட்களிலும், . . . இஸ்ரவேலர் யெகோவாவைச் சேவித்துவந்தார்கள்’ என்பதில் ஆச்சரியமில்லை.​—எண். 27:​18; 32:​12, NW; உபா. 34:9; யோசு. 24:​31.

3யெகோவாவை உண்மையாக வணங்கிவந்த யோசுவாவின் அனுபவம், பயிற்றுவிப்பு, பரீட்சிக்கப்பட்ட பண்புகள் ஆகியவற்றை கவனிக்கையில், ‘கடவுளால் ஏவப்பட்ட வேதாகம’ எழுத்தாளர்களில் ஒருவராக பயன்படுத்தப்படுவதற்கு அவர் முற்றிலும் தகுதிவாய்ந்தவரே என்பதில் துளியும் சந்தேகமில்லை. கட்டுக்கதையில் வரும் வெறும் ஒரு கதாபாத்திரம் அல்ல யோசுவா. மாறாக அவர் யெகோவாவின் ஊழியராக உண்மையில் வாழ்ந்தவர். கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் அவருடைய பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது. (அப். 7:45; எபி. 4:8) ஆகவே, தன் வாழ்நாளில் நடந்த சம்பவங்களைப் பற்றி எழுதுவதற்கு மோசே எப்படி பயன்படுத்தப்பட்டாரோ, அதைப் போலவே அவருக்குப் பின்பு தலைமைதாங்கிய யோசுவாவும், தான் கண்கூடாகக் கண்ட சம்பவங்களை பதிவு செய்வதற்கு பயன்படுத்தப்படுவார் என்பது நியாயமானதே. இப்புத்தகத்தை எழுதியவர், நடந்ததை நேரில் கண்டவராகவே இருக்க வேண்டும் என்பதற்கு யோசுவா 6:25 ஓர் எடுத்துக்காட்டு. இப்புத்தகத்தை யோசுவா எழுதியதாக யூதப் பாரம்பரியம் சொல்கிறது. இந்தப் புத்தகம்தானே சொல்வதாவது: “இந்த வார்த்தைகளை யோசுவா தேவனுடைய நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதி[னார்].”​—யோசு. 24:26.

4எரிகோ அழிக்கப்பட்ட சமயத்தில், அந்த நகரம் திரும்பக் கட்டப்படுவது சம்பந்தமான சாபத்தை யோசுவா முன்னுரைத்தார். அது, ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்குப் பிறகு இஸ்ரவேலின் அரசனாகிய ஆகாபின் நாட்களில் நிறைவேறியது. (யோசு. 6:26; 1 இரா. 16:​33, 34) இப்புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவங்களை யோசுவாவுக்கு பின்வந்த பைபிள் எழுத்தாளர்கள் அநேக தடவை குறிப்பிட்டிருக்கிறார்கள். இது, யோசுவா புத்தகத்தின் நம்பகத்தன்மைக்கு இன்னொரு அத்தாட்சி. சங்கீதக்காரர்கள் பல தடவை இவற்றை குறிப்பிடுகின்றனர். (சங். 44:​1-3; 78:​54, 55; 105:​42-45; 135:​10-12; 136:17-22) அவ்வாறே நெகேமியாவும் (நெ. 9:​22-25), ஏசாயாவும் (ஏசா. 28:21), அப்போஸ்தலன் பவுலும் (அப். 13:19; எபி. 11:​30, 31), சீஷனாகிய யாக்கோபும் (யாக். 2:25) குறிப்பிடுகின்றனர்.

5பொ.ச.மு. 1473-ல் கானானுக்குள் இஸ்ரவேலர்கள் பிரவேசித்தனர். ஏறக்குறைய பொ.ச.மு. 1450-ல் யோசுவா ஒருவேளை இறந்திருக்கலாம். இதற்கிடைப்பட்ட 20 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலப்பகுதி யோசுவாவின் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. யோசுவா (எபிரெயுவில் யெஹோஷுவா [Yehoh·shuʹaʽ ]) என்ற பெயரின் அர்த்தம் “யெகோவாவே இரட்சிப்பு” என்பதாகும். தேசத்தை கைப்பற்றும் காலத்தில் இஸ்ரவேலின் காணக்கூடிய தலைவனாக யோசுவா வகித்த முக்கியமான பாகத்தை வைத்துப் பார்த்தால் இந்தப் பெயர் மிகவும் பொருத்தமானதே. யெகோவாவே விடுவிப்பாளர் என எல்லா மகிமையையும் அவருக்கே யோசுவா கொடுத்தார். செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பில் இந்தப் புத்தகம் (யெஹோஷுவா என்பதற்குச் சமமான கிரேக்கச் சொல்லாகிய) ஈசூஸ் (I·e·sousʹ ) என அழைக்கப்படுகிறது, இதிலிருந்தே இயேசு என்ற பெயர் வருகிறது. தைரியம், கீழ்ப்படிதல், உத்தமம் போன்ற சிறந்த பண்புகளின் உருவானவர் யோசுவா. இவ்வாறு, “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து”வின் மிகச் சிறந்த தீர்க்கதரிசன மாதிரியாக இருந்தார்.​—ரோ. 5:1.

யோசுவா புத்தகத்தின் பொருளடக்கம்

6பொதுவாக இப்புத்தகத்தை நான்கு பிரிவுகளாக பிரிக்கலாம். (1நதியைக் கடந்து வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்குள் செல்லுதல், (2கானானை கைப்பற்றுதல், (3தேசத்தைப் பங்கிட்டுக் கொடுத்தல், (4யோசுவாவின் பிரியாவிடை அறிவுரைகள். இந்த முழு விவரப்பதிவும் தத்ரூபமாக சொல்லப்படுகிறது. அதில் சிலிர்ப்பூட்டும் நிகழ்ச்சிகள் ஏராளம்.

7நதியைக் கடந்து வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்குள் செல்லுதல் (1:​1–5:12). எதிர்காலத்தில் யோசுவாவுக்கு சோதனைகள் காத்திருந்தன என்பது யெகோவாவுக்குத் தெரியும். அதன் காரணமாக தொடக்கத்திலேயே யோசுவாவுக்கு அவர் நம்பிக்கையையும் நல்ல ஆலோசனையையும் கொடுக்கிறார்: “[நீ] மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு. . . . இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய். நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; . . . நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் [“யெகோவா,” NW] உன்னோடே இருக்கிறார்.” (1:7-9) யெகோவாவே உண்மையான தலைவர், சேனாதிபதி என அவருக்கே புகழ் சேர்த்து, யோசுவா தனக்குக் கட்டளையிடப்பட்டபடி யோர்தானை கடப்பதற்கு உடனடியாக தயார் செய்கிறார். மோசேக்குப் பின் பொறுப்பேற்ற யோசுவாவை இஸ்ரவேலர் ஏற்றுக்கொள்கின்றனர். யோசுவாவுக்கு உண்மையாயிருப்பதாக அவர்கள் உறுதிகூறுகின்றனர். கானானை கைப்பற்ற புறப்படுகின்றனர்!

8எரிகோவை வேவு பார்ப்பதற்கு இரண்டு பேர் அனுப்பப்படுகின்றனர். வேசியாகிய ராகாப், தன் உயிரையே பணயம் வைத்து அந்த வேவுகாரர்களை மறைத்துவைக்கிறாள். இவ்வாறு, யெகோவாவில் தனக்கிருக்கும் விசுவாசத்தை நிரூபித்துக் காட்ட அச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்கிறாள். இதற்குக் கைமாறாக, எரிகோ அழிக்கப்படுகையில் அவள் காப்பாற்றப்படுவாள் என்பதாக அந்த வேவுகாரர்கள் ஆணையிடுகின்றனர். அத்தேசத்தின் குடிகளெல்லாரும் இஸ்ரவேலர்களைக் குறித்து பயந்திருந்தனர் என்ற செய்தியை அந்த வேவுகாரர்கள் கொண்டுசெல்கின்றனர். அந்த அறிவிப்பு சாதகமாக இருந்தது. ஆகவே யோசுவா உடனடியாக தனது படையை யோர்தான் நதிக்கு வழிநடத்துகிறார். அந்நதியில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. யோசுவாவை தாம் ஆதரிப்பதை யெகோவா இப்பொழுது வெளிப்படையாக காட்டுகிறார். மோசேயின் காலத்தைப் போலவே இப்பொழுதும் இஸ்ரவேலின் மத்தியில் “ஜீவனுள்ள தேவன்” இருக்கிறார் என்பதற்கு அத்தாட்சி அளிக்கிறார். (3:​10) உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்து செல்லும் ஆசாரியர்கள் யோர்தானுக்குள் காலடியெடுத்து வைக்க, கரைபுரண்டு ஓடும் வெள்ளம் பிரிந்து அப்படியே குவியலாக நின்றுவிடுகிறது. இப்போது இஸ்ரவேலர்கள் உலர்ந்த தரையில் எளிதாக கடந்து செல்கின்றனர். யோசுவா அந்த நதியின் நடுவிலிருந்து 12 கற்களை நினைவாக எடுத்து வருகிறார். இன்னும் 12 கற்களை, ஆற்றின் நடுவிலே ஆசாரியர்கள் நின்றுகொண்டிருந்த இடத்திலே வைக்கிறார். அதன் பிறகு ஆசாரியர்கள் கடந்து சென்ற பின், மீண்டும் அந்த ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடத் தொடங்குகிறது.

9ஆற்றை கடந்த பிறகு, ஜனங்கள் யோர்தானுக்கும் எரிகோவுக்கும் இடையே கில்காலில் பாளையமிறங்குகின்றனர். இங்கே யோசுவா நினைவுச் சின்னங்களாகிய அந்தக் கற்களை வரவிருக்கும் சந்ததிகளுக்குச் சாட்சியாக இருக்க நாட்டி வைக்கிறார். ‘பூமியின் சகல ஜனங்களும் கர்த்தருடைய [“யெகோவாவுடைய,” NW] கரம் பலத்ததென்று அறியும்படிக்கும், சகல நாளும் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படும்படிக்கும்’ அவ்வாறு செய்கிறார். (4:​23) (அதன்பின்பு கில்கால் சிறிது காலம் முகாமாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என யோசுவா 10:15 காட்டுகிறது.) வனாந்தர பயணத்தின்போது இஸ்ரவேல் மக்களுக்கு விருத்தசேதனம் எதுவும் செய்யப்படவில்லை. ஆகவே இங்கேயே அவர்களுக்கு விருத்தசேதனம் செய்யப்படுகிறது. பஸ்கா ஆசரிக்கப்படுகிறது. மன்னா நிறுத்தப்படுகிறது. கடைசியாக இஸ்ரவேலர் அந்தத் தேசத்தின் விளைச்சலை சாப்பிடத் தொடங்குகின்றனர்.

10கானானை கைப்பற்றுதல் (5:​13–12:24). இப்பொழுது கைப்பற்ற வேண்டிய முதல் நகரம், கொஞ்ச தூரத்தில்தான் இருக்கிறது. ஆனால் “முற்றிலும் அடைபட்டிருந்த” மதில்சூழ்ந்த இந்நகரமாகிய எரிகோவை கைப்பற்றுவது எப்படி? (6:​1, தி.மொ.) என்ன செய்ய வேண்டும் என்பதை யெகோவாவே குறிப்பிடுகிறார். ‘தமது சேனாபதியை’ அனுப்பி யோசுவாவுக்கு அதை விளக்கமாக சொல்கிறார். (5:​14, தி.மொ.) ஒரு நாளுக்கு ஒரு தரமாக ஆறு நாட்கள், இஸ்ரவேலின் சேனைகள் அந்த நகரத்தைச் சுற்றி அணிவகுத்து நடந்து வரவேண்டும். போர்வீரர்கள் முன்னே செல்ல வேண்டும். அவர்களைப் பின்தொடர்ந்து ஆசாரியர்களில் சிலர் செம்மறியாட்டுக் கடாவின் கொம்பினால் செய்யப்பட்ட எக்காளங்களை ஊதிக்கொண்டு செல்ல வேண்டும். மற்றவர்கள் உடன்படிக்கை பெட்டியைச் சுமந்து செல்ல வேண்டும். ஏழாம் நாளில், அவர்கள் ஏழு தரம் சுற்றி வரவேண்டும். பெற்றுக்கொண்ட இந்தக் கட்டளைகளை யோசுவா உண்மையுடன் ஜனங்களுக்கு அறிவிக்கிறார். கட்டளைக்கு இணங்க அந்தப் படைகள் எரிகோவைச் சுற்றி வருகின்றன. எவரும் ஒரு வார்த்தையும் பேசுவதில்லை. காலடியோசையும் ஆசாரியர்கள் ஊதும் கொம்பு எக்காளங்களின் ஓசையுமே கேட்கின்றன. பின்பு, கடைசி நாளில் ஏழாவது சுற்றை முடித்த பின்பு, எல்லாரும் ஆர்ப்பரிக்கும்படி யோசுவா சமிக்கை செய்கிறார். ஜனங்கள் சத்தமிட்டு “மகா ஆரவாரத்தோடே முழங்கு”கின்றனர். எரிகோவின் மதில்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின்றன! (6:20) மொத்த ஜனத்தாரும் அந்த நகரத்துக்குள் பாய்ந்து அதைக் கைப்பற்றி, தீயினால் சுட்டெரிக்கின்றனர். உண்மையுள்ள ராகாபும் அவளுடைய வீட்டாரும் மாத்திரமே காப்பாற்றப்படுகின்றனர்.

11அடுத்து கைப்பற்ற வேண்டியது மேற்கேயுள்ள ஆயி பட்டணம்! மற்றொரு வெற்றி எளிதாக கிடைக்குமென்ற நம்பிக்கை மறைந்து, பயம் உருவெடுக்கிறது. காரணம் என்ன? ஆயியை கைப்பற்றும்படி அனுப்பப்பட்ட 3,000 இஸ்ரவேல் வீரர்களை அப்பட்டணத்தினர் புறமுதுகுகாட்டி ஓடும்படி செய்தார்கள். என்ன நடந்தது? யெகோவா அவர்களை கைவிட்டாரா? யோசுவா மனக்கவலையுடன் யெகோவாவிடம் விசாரிக்கிறார். அதற்கு யெகோவா பதிலளிக்கிறார். எரிகோவிலுள்ள எல்லாவற்றையும் அழித்துவிடும்படி கட்டளையிட்டிருந்தார். ஆனால் பாளையத்திலிருக்கும் ஒருவன் அதற்குக் கீழ்ப்படியாமல் ஏதோவொன்றை திருடி மறைத்து வைத்திருக்கிறான் என சொல்லுகிறார். இஸ்ரவேலர் யெகோவாவின் ஆசீர்வாதத்துடன் தொடர்ந்து வெற்றிசிறக்க வேண்டுமெனில், இந்த அசுத்தம் பாளையத்திலிருந்து நீக்கப்பட வேண்டும். அந்தத் தீமையைச் செய்த ஆகான், கடவுளுடைய வழிநடத்துதலினால் கண்டுபிடிக்கப்படுகிறான். அவனும் அவனுடைய வீட்டாரும் கல்லெறிந்து கொல்லப்படுகின்றனர். கடவுளுடைய தயவை மீண்டும் பெற்ற இஸ்ரவேலர் இப்பொழுது ஆயிக்கு எதிராக படையெடுக்கின்றனர். அவர்கள் எவ்வாறு போர்புரிய வேண்டும் என்பதை மறுபடியும் யெகோவாவே வெளிப்படுத்துகிறார். ஆயி பட்டணத்தினர் தங்கள் மதில்சூழ்ந்த பட்டணத்திலிருந்து வெளியே வரும்படி வஞ்சிக்கப்படுகின்றனர். பட்டணத்தின் பின்னால் இந்தச் சந்தர்ப்பத்திற்காக காத்துக்கொண்டு பதுங்கியிருந்த இஸ்ரவேல் போர்வீரர்களிடம் அவர்கள் வசமாக மாட்டிக்கொள்கின்றனர். பட்டணம் கைப்பற்றப்பட்டு சுட்டெரிக்கப்படுகிறது. அதனுடைய எல்லா பிரஜைகளும் ஒட்டுமொத்தமாக அழிக்கப்படுகின்றனர். (8:​26-28) எதிரிகளுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை!

12மோசே மூலம் கொடுக்கப்பட்ட யெகோவாவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, யோசுவா அடுத்தபடியாக ஏபால் மலையில் ஒரு பலிபீடத்தைக் கட்டி அதன்மீது “நியாயப்பிரமாணத்தை” எழுதுகிறார். (8:32) பின்பு இஸ்ரவேல் மக்களில் பாதிப்பேர் கெரிசீம் மலைக்கு எதிராகவும், பாதிப்பேர் ஏபால் மலைக்கு எதிராகவும் கூடியிருக்கிறார்கள். அப்போது அந்த முழு ஜனக்கூட்டத்திற்கு முன்பாக, ஆசீர்வாதமும் சாபமும் உட்பட நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை யோசுவா வாசிக்கிறார்.​—உபா. 11:29; 27:​1-13.

13யோசுவா அதிவிரைவாக பட்டணங்களைக் கைப்பற்றி வருவதைக் கண்டு பீதியடைந்த கானானிய சிற்றரசுகள் பல அதைத் தடுப்பதற்காக கூட்டுசேர்கின்றன. எனினும், ‘எரிகோவுக்கும் ஆயிக்கும் யோசுவா செய்ததைக் கிபியோனியர் கேள்விப்பட்டு . . . தந்திரமாக’ செயல்படுகின்றனர். (யோசு. 9:​3, 4) கானானுக்கு வெகு தூரமாயுள்ள ஒரு தேசத்திலிருந்து வருவதுபோல் பாசாங்கு செய்து, “தங்களுடைய உயிரை காப்பாற்றும்”படி யோசுவாவுடன் ஓர் உடன்படிக்கை செய்கின்றனர். இந்தத் தந்திரமான ஏற்பாட்டை இஸ்ரவேலர் பிற்பாடு கண்டுபிடித்தபோதிலும், அவர்களோடு செய்த அந்த உடன்படிக்கையை மதிக்கின்றனர். ஆனால் ‘அடிமைகளுக்கு அடிமைகளைப்போல்’ கிபியோனியரை “விறகு வெட்டுகிறவர்களாகவும் தண்ணீர் எடுக்கிறவர்களாகவும்” ஆக்குகின்றனர். இவ்வாறு, தேவ ஏவுதலினால் காமின் குமாரனான கானானுக்கு நோவா கொடுத்த சாபத்தின் ஒரு பகுதியை நிறைவேற்றுகின்றனர்.​—யோசு. 9:​15, 27; ஆதி. 9:25.

14கிபியோனியர் இவ்வாறு எதிரி பக்கம் சேர்வது சாதாரண காரியமல்ல. ஏனெனில் “கிபியோன் . . . பெரிய பட்டணமும், ஆயியைப் பார்க்கிலும் பெரிதுமாயிருந்த[து] . . . அதின் மனுஷரெல்லாரும் பலசாலிகளாயிருந்த”னர். (யோசு. 10:​2) கிபியோனியரின் இந்த நடவடிக்கையால் தனக்கும் கானானின் மற்ற ராஜ்யங்களுக்கும் ஆபத்து என எருசலேமின் அரசனாகிய அதோனிசேதேக் உணருகிறான். இவ்வாறு வேறு யாராவது எதிரிகளின் பக்கம் சாய்வதை தடுத்து நிறுத்த ஒரு பாடம் கற்பிக்க வேண்டும். ஆகவே அதோனிசேதேக்கும், (எபிரோன், யர்மூத், லாகீஸ், எக்லோன் ஆகிய ராஜதானி பட்டணங்களின்) நான்கு அரசர்களும் ஒன்றுசேர்ந்து கிபியோனுக்கு எதிராக போரிடுகின்றனர். கிபியோனியரோடு செய்த தன் உடன்படிக்கையை மதித்த யோசுவா, இரவு முழுவதும் அணிவகுத்துச் சென்று, அவர்கள் சார்பாக போரிட்டு அந்த ஐந்து அரசர்களின் சேனைகளையும் வீழ்த்துகிறார். மறுபடியும் யெகோவா போரில் தலையிட்டு, மனித சக்திக்கு அப்பாற்பட்ட வல்லமைகளையும் அடையாளங்களையும் பயன்படுத்துகிறார். எதிரிகள் படுமோசமான அழிவை சந்திக்கின்றனர். வானத்திலிருந்து பயங்கரமான கல்மழை பெய்கிறது. இஸ்ரவேல் படையினரின் கையால் செத்தவர்களைப் பார்க்கிலும் இந்தக் கல்மழையால் செத்தவர்கள் அதிகம். பின்பு, ஆச்சரியத்திலும் ஆச்சரியமான ஒன்று நடக்கிறது. ‘சூரியன் அஸ்தமிக்காமல் ஏறக்குறைய ஒரு நாள்முழுதும் நடுவானத்தில் நிற்கிறது.’ (10:13, NW) இது, எதிரிகளை சிறு தடயம்கூட இல்லாதபடி முற்றிலும் அழிக்க உதவுகிறது. இந்த அற்புதமான நிகழ்ச்சியை உலக ஞானிகள் நம்ப மறுக்கலாம், ஆனால் விசுவாசமுள்ளவர்கள் இந்தத் தெய்வீக பதிவை உண்மை என ஏற்றுக்கொள்கின்றனர். ஏனெனில் சர்வலோகத்தின் சக்திகளை தம்முடைய சித்தத்தின்படி கட்டுப்படுத்தி அவற்றை இயக்க யெகோவாவுக்கு இருக்கும் வல்லமையை இவர்கள் நன்றாக அறிந்திருக்கின்றனர். உண்மையில், “யெகோவா, இஸ்ரவேலுக்காக யுத்தம் பண்ணினார்.”​—10:​14, தி.மொ.

15அந்த ஐந்து அரசர்களையும் கொன்ற பின்பு, யோசுவா மக்கெதாவை முழுமையாக அழிக்கிறார். விரைவில் தெற்கே கடந்து சென்று, உப்புக் கடலுக்கும் பெருங்கடலுக்கும் இடையே குன்றுகளின் மேலுள்ள பட்டணங்களாகிய லிப்னா, லாகீஸ், எக்லோன், எபிரோன், தெபீர் ஆகியவற்றை முற்றிலும் அழித்துப்போடுகிறார். இதற்குள் இந்தப் படையெடுப்பின் செய்தி கானான் முழுவதும் ‘காட்டுத் தீ’ போல பரவிவிடுகிறது. வடக்குப் பகுதியில், ஆத்சோரின் அரசனாகிய யாபீன் அபாய எச்சரிக்கை விடுக்கிறான். இஸ்ரவேலருக்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க ஒன்று திரளும்படி அறிக்கை அனுப்புகிறான். இந்த அறிக்கை, யோர்தானின் இருபுறங்களிலுள்ள எல்லா திசைகளுக்கும் செல்கிறது. எர்மோன் மலையின்கீழ், மேரோம் தண்ணீர் நிலைகளுக்கு அருகில் சத்துருக்கள் பாளையம் இறங்குகிறார்கள். கூடியிருக்கும் இப்படைகள் ‘கடற்கரை மணல்போல் ஏராளமாக’ இருக்கின்றன. (11:​4, தி.மொ.) மறுபடியும் யெகோவா, யோசுவாவுக்கே வெற்றி என உறுதியளித்து போர் செய்யும் உத்தியையும் குறிப்பிடுகிறார். இதன் பலன்? யெகோவாவின் ஜனங்களுடைய எதிரிகளுக்கு மறுபடியும் படுதோல்வி! ஆத்சோர் தீக்கிரையாக்கப்படுகிறது, அதனுடைய கூட்டாளி பட்டணங்களும் அவற்றின் அரசர்களும் அழிக்கப்படுகின்றனர். இவ்வாறு யோசுவா, இஸ்ரவேலின் ஆதிக்கத்தைக் கானான் தேசத்தின் நாலா பக்கமும் விரிவாக்குகிறார். முப்பத்தொரு அரசர்களை தோற்கடிக்கிறார்.

16தேசத்தைப் பங்கிட்டுக் கொடுத்தல் (13:​1–22:34). முன்னிலையில் இருந்த அரணான பட்டணங்கள் பல கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டிருந்தன. மேலும், ஒருங்கிணைந்த எதிரிகளின் தாக்குதல் தற்சமயம் தகர்க்கப்பட்டிருந்தது. இருந்தாலும், “சுதந்தரித்துக் கொள்ளவேண்டிய தேசம் இன்னும் மகா விஸ்தாரமாயிருக்கிறது.” (13:1) யோசுவாவோ 80 வயதை எட்டிக்கொண்டிருக்கிறார். மற்றொரு பெரிய வேலையும் செய்யப்பட வேண்டும். அதாவது, ஒன்பது முழு கோத்திரங்களுக்கும் மனாசேயின் பாதிக் கோத்திரத்துக்கும் அத்தேசத்தை சுதந்தரமாக பங்கிட்டுக் கொடுக்க வேண்டும். ரூபனும், காத்தும், மனாசேயின் பாதிக் கோத்திரமும் யோர்தானுக்குக் கிழக்கே உள்ள தேசத்தில் தங்களுக்கு சுதந்திரமாக நிலத்தைப் பெற்றுவிட்டனர். லேவி கோத்திரத்திற்கு சுதந்திரமாக நிலம் கொடுக்கப்படுவதில்லை. ஏனெனில் ‘இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவே’ அவர்கள் சுதந்தரம். (13:​33, தி.மொ.) ஆசாரியராகிய எலெயாசாரின் உதவியுடன், யோசுவா இப்பொழுது யோர்தானுக்கு மேற்கே நிலங்களை ஒதுக்குகிறார். 85 வயதான காலேப், யெகோவாவின் சத்துருக்களை இறுதிவரை எதிர்த்து போரிடுவதற்கு ஆர்வமுள்ளவராக இருக்கிறார். இவர் ஏனாக்கியர் நிறைந்த நிலப்பகுதியாகிய எபிரோனைக் கேட்கிறார். அப்பகுதி அவருக்காக ஒதுக்கப்படுகிறது. (14:​12-15) சீட்டுப்போட்டு தெரிந்தெடுப்பதன் மூலம் கோத்திரங்கள் தங்கள் சுதந்தரத்தைப் பெறுகின்றன. பிறகு யோசுவா, எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள திம்னாத்சேரா என்னும் பட்டணத்தைக் கேட்கிறார். “கர்த்தருடைய வாக்கின்படியே” இது அவருக்குக் கொடுக்கப்படுகிறது. (19:​50) எப்பிராயீமின் மலைப்பாங்கான பிரதேசத்திலுள்ள சீலோவிலே ஆசரிப்புக் கூடாரம் நிறுத்தப்படுகிறது.

17அறியாமல் கைப்பிசகாய் எவரையாவது கொன்றுவிடுவோருக்கு ஆறு அடைக்கலப் பட்டணங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. யோர்தானுக்கு இக்கரையில் மூன்று பட்டணங்களும் அக்கரையில் மூன்று பட்டணங்களும் உள்ளன. கலிலேயாவில் காதேஸ், எப்பிராயீமில் சீகேம், யூதாவின் மலைத்தேசத்தில் எபிரோன் ஆகியவை யோர்தானுக்கு மேற்கே உள்ளன. ரூபனின் பிராந்தியத்தில் பேசேர், கீலேயாத்தில் ராமோத், பாசானில் கோலான் ஆகியவை யோர்தானுக்கு கிழக்கே உள்ளன. இந்த நகரங்களுக்கு “பரிசுத்த ஸ்தானம்” அளிக்கப்படுகிறது. (20:​7, NW) கோத்திரப் பாகங்களிலிருந்து நாற்பத்தெட்டு பட்டணங்களும் அதன் மேய்ச்சல் நிலங்களும் லேவியருக்குக் குடியிருப்புப் பட்டணங்களாக சீட்டுப்போட்டு கொடுக்கப்படுகின்றன. இவற்றில் ஆறு அடைக்கலப் பட்டணங்களும் அடங்கியுள்ளன. இவ்வாறு இஸ்ரவேலர் ‘தேசத்தை சுதந்தரித்துக்கொண்டு, அதில் குடியிருந்தார்கள்.’ யெகோவா வாக்குக் கொடுத்திருந்தபடியே “எல்லாம் நிறைவேறிற்று.”​—21:​43, 45.

18ரூபன் மற்றும் காத் கோத்திரங்களையும் மனாசேயின் பாதி கோத்திரத்தையும் சேர்ந்த போர்வீரர்கள், இந்தச் சமயம் வரை தொடர்ந்து யோசுவாவுடன் இருந்துவந்துள்ளனர். உண்மையுள்ளவர்களாய் இருப்பதற்கு அவர் கொடுத்த அறிவுரைகளையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டு யோர்தானுக்கு அக்கரையிலுள்ள தங்கள் சுதந்தரங்களுக்கு இந்த வீரர்கள் திரும்புகின்றனர். யோர்தானுக்கு வெகு அருகில் ஒரு பெரிய பலிபீடத்தைக் கட்டுகின்றனர். இது விரைவில் பெரும் பிரச்சினையை கிளப்பிவிடுகிறது. யெகோவாவை வணங்குவதற்காக நியமிக்கப்பட்ட இடம் சீலோவிலுள்ள ஆசரிப்புக் கூடமாகும். ஆகவே மேற்கில் குடியிருக்கும் கோத்திரத்தார் இவர்கள் நம்பிக்கை துரோகம் செய்து, உண்மையற்று நடந்துவிட்டதாக நினைக்கின்றனர். ஆகவே கலகக்காரராக எண்ணப்பட்ட இவர்களுக்கு எதிராக போர்புரிய ஆயத்தமாகின்றனர். எனினும், அந்தப் பலிபீடம் பலி செலுத்துவதற்கல்ல, ‘யெகோவாவே உண்மையான தேவன் என்பதற்கு நமக்குள்ளே [யோர்தானுக்குக் கிழக்கேயும் அதற்கு மேற்கேயும் இருந்த இஸ்ரவேலருக்குள்ளே] சாட்சியாக’ விளங்குவதற்கு மாத்திரமே என விளக்கப்பட்டபோது இரத்தம் சிந்துதல் தவிர்க்கப்படுகிறது.​—22:​34, NW.

19யோசுவாவின் பிரியாவிடை அறிவுரைகள் (23:​1–24:33). ‘யுத்தஞ்செய்யும் எந்தச் சத்துருவும் இஸ்ரவேலை சுற்றியிராதபடி செய்து யெகோவா அவர்களை [இஸ்ரவேலர்களை] இளைப்பாறப் பண்ணுகிறார்; நெடுநாள் செல்கிறது; யோசுவாவும் வயதுசென்று முதிர்ந்தவராகிறார்.’ இச்சமயத்தில், உணர்ச்சிப்பூர்வமான பிரியாவிடை அறிவுரைகளைக் கொடுப்பதற்காக இஸ்ரவேலர் எல்லாரையும் ஒன்றாக அழைக்கிறார். (23:​1, தி.மொ.) யோசுவா இறுதிவரை மனத்தாழ்மையுடனிருந்து, தேசங்களின்மீது அடைந்த பெரும் வெற்றிகளுக்கு யெகோவாவுக்கே எல்லா போற்றுதல்களையும் உரித்தாக்குகிறார். இப்போது எல்லாரும் தொடர்ந்து உண்மையுள்ளவர்களாக இருப்பார்களாக! “மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவைகளையெல்லாம் கைக்கொள்ளவும் செய்யவும் மிகவும் மனோபலமுள்ளவர்களாயிருங்கள்; அதைவிட்டு வலதுபுறம் இடதுபுறம் விலகாதிருங்கள்.” (23:​6, தி.மொ.) பொய்த் தெய்வங்களுக்கு அவர்கள் அறவே விலகியிருக்க வேண்டும். மேலும், ‘அவர்கள் மிகவும் ஜாக்கிரதையாயிருந்து தங்கள் கடவுளாகிய யெகோவாவில் அன்புகூர வேண்டும்.’ (23:​11, தி.மொ.) மீதமான கானானியரோடு எவ்விதத்திலும் ஒத்துப் போவதோ, திருமண சம்பந்தம் கொள்வதோ, கலப்பு விசுவாச ஒப்பந்தங்கள் செய்வதோ கூடாது, அப்படி ஏதாவது செய்தால், யெகோவாவின் கோபம் பற்றியெரியும்.

20யோசுவா எல்லா கோத்திரங்களையும் சீகேமில் கூடிவரச் செய்து, அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அதிகாரிகளை யெகோவாவுக்கு முன்பாக அழைக்கிறார். பிறகு, ஆபிரகாமை யெகோவா அழைத்து அவரைக் கானானுக்குள் கொண்டுவந்த சமயத்திலிருந்து, வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைக் கைப்பற்றி அதில் குடியேற்றினது வரை தம்முடைய ஜனத்துடன் கொண்ட செயல்தொடர்புகளைப் பற்றிய யெகோவாவின் சொந்த விவரத்தைக் கூறுகிறார். மறுபடியும் யோசுவா, பொய் மதத்திற்கு எதிராக எச்சரிக்கிறார். “யெகோவாவுக்குப் பயந்து குற்றமற்றவர்களாய் உண்மையோடு அவரை சேவி[க்கும்படி]” இஸ்ரவேலரை கேட்டுக்கொள்கிறார். ஆம், ‘யெகோவாவைச் சேவியுங்கள்’ என்கிறார்! பின்பு அவர்கள் எடுக்க வேண்டிய தீர்மானத்தை மிகத் தெளிவாக கூறுகிறார்: “யாரைத்தான் சேவிப்பது என்று இந்நாளிலே தெரிந்துகொள்ளுங்கள்; . . . உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ? நீங்கள் வாசம்பண்ணவந்த தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ? நானும் என் வீட்டாருமோ யெகோவாவையே சேவிப்போம்.” யெகோவா ‘பரிசுத்தமுள்ள கடவுள்; தனிப்பட்ட பக்தியை வற்புறுத்துகிற கடவுள்’ என்பதை மோசே காண்பித்த அதே திடநம்பிக்கையுடன் இஸ்ரவேலருக்கு நினைப்பூட்டுகிறார். ஆகையால், அந்நிய தெய்வங்களை அகற்றிப்போடுங்கள்! இவ்வாறு அந்த ஜனங்கள் ஒருமுகமாக இவ்வாறு கூறும்படி தூண்டுவிக்கப்படுகிறார்கள்: “நமது கடவுளாகிய யெகோவாவையே சேவித்து அவர் சப்தத்திற்கே செவிகொடுப்போம்”! (24:​14, 15, 19, 24, தி.மொ.) அவர்களை அனுப்பிவிடுவதற்கு முன்பு, ஜனங்களோடு யோசுவா ஓர் உடன்படிக்கை செய்கிறார். இந்த வார்த்தைகளை கடவுளின் நியாயப்பிரமாண புத்தகத்தில் எழுதி, சாட்சியாக ஒரு பெரிய கல்லை நாட்டுகிறார். பின்பு யோசுவா தனது 110-வது வயதிலே மரணம் எய்துகிறார். திம்னாத் சேராவில் அவரது சடலம் அடக்கம் செய்யப்படுகிறது.

ஏன் பயனுள்ளது

21உண்மையுள்ள சேவையைப் பற்றிய யோசுவாவின் பிரியாவிடை அறிவுரைகளை நீங்கள் வாசிக்கும்போது அது உங்கள் இருதயத்தைத் தூண்டியெழுப்புகிறது அல்லவா? 3,400-க்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்னால் யோசுவா சொன்னார்: “நானும் என் வீட்டாருமோ யெகோவாவையே சேவிப்போம்.” இதே வார்த்தைகளை நீங்களும் எதிரொலிக்கிறீர்கள் அல்லவா? மற்ற விசுவாசிகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு அல்லது இக்கட்டான நிலைமைகளின்கீழ் நீங்கள் யெகோவாவை சேவித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்குள் படையெடுக்கத் தொடங்குகையில், “மனோபலங்கொண்டு தைரியமாயிரு” என யெகோவா யோசுவாவுக்குச் சொன்ன வார்த்தைகளிலிருந்து ஊக்கமூட்டுதலைப் பெறுவீர்கள் அல்லவா? மேலும், ‘உன் வழி வெற்றிசிறப்பதற்கு, [பைபிளை] தாழ்ந்த குரலில் இரவும் பகலும் வாசி’ என்ற கடவுளுடைய அறிவுரையைப் பின்பற்றுவதால் விலைமதியா நன்மையைப் பெறுகிறீர்கள் அல்லவா? நிச்சயமாகவே, இப்படிப்பட்ட ஞானமான அறிவுரையைப் பின்பற்றும் அனைவருமே இதிலிருந்து மிகச் சிறந்த பயனை அடைவார்கள்.​—24:15; 1:​7-9, NW.

22யோசுவா புத்தகத்தில் மிகத் தத்ரூபமாக விவரிக்கப்படும் சம்பவங்கள் பூர்வ சரித்திரம் மட்டுமே அல்ல. இவை தெய்வீக நியமங்களை சிறப்பித்துக் காட்டுகின்றன. முக்கியமாக, யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெற முழு விசுவாசமும் கீழ்ப்படிதலும் இன்றியமையாதவை என வலியுறுத்திக் காட்டுகின்றன. விசுவாசத்தினால் “எரிகோ பட்டணத்தின் மதில்கள் ஏழுநாள் சுற்றிவரப்பட்டு விழுந்தது,” மேலும் விசுவாசத்தினிமித்தம் “ராகாப் என்னும் வேசி . . . கீழ்ப்படியாதவர்களோடேகூடச் சேதமாகாதிருந்தாள்” என்று அப்போஸ்தலன் பவுல் பதிவு செய்திருக்கிறார். (எபி. 11:​30, 31) அதேவிதமாக, விசுவாச செயல்களை நடப்பிப்பதில் ராகாப், கிறிஸ்தவர்களுக்கு நன்மைபயக்கும் முன்மாதிரியாக இருப்பதாக யாக்கோபு குறிப்பிடுகிறார்.​—யாக். 2:​24-26.

23யோசுவா 10:​10-14-ல் பதிவுசெய்யப்பட்டுள்ளபடி, சூரியன் அசைவற்று நின்றது, சந்திரன் தரித்து நின்றது போன்ற இயற்கைக்கு அப்பாற்பட்ட அசாதாரணமான சம்பவங்களும், தம்முடைய மக்களின் சார்பாக யெகோவா நடப்பித்த மற்ற பல அற்புதங்களும் எதை காட்டுகின்றன? யெகோவா தம்மை எதிர்க்கும் பொல்லாதவர்கள் அனைவரையும் பூண்டோடு அழிக்க திறன்பெற்றிருக்கிறார், அதுவே அவர் நோக்கம் என்பதை சிறப்பாக நினைப்பூட்டுகின்றன! யோசுவாவின் காலத்திலும் தாவீதின் காலத்திலும் கிபியோனில் போர் நடந்த சமயத்தைப் போலவே இப்போதும் யெகோவா கொதித்தெழுவார் என ஏசாயா சொல்கிறார். அவர் “தம் பணியை நிறைவேற்றுவார்! விந்தையானது அவர்தம் செயல்! புதிரானது அவர்தம் பணி!”​—ஏசா. 28:​21, 22, பொ.மொ.

24யோசுவா புத்தகத்திலுள்ள இந்தச் சம்பவங்கள் கடவுளுடைய ராஜ்யத்தை குறிப்பிட்டுக் காட்டுகின்றனவா? அதில் கொஞ்சம்கூட சந்தேகமில்லை. வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைக் கைப்பற்றியதும் அதில் குடியேறியதும் மிக மேம்பட்ட ஒன்றை முன்நிழலாக காட்டியதாக அப்போஸ்தலன் பவுல் சுட்டிக்காட்டினார்: “யோசுவா அவர்களை இளைப்பாறுதலுக்குட்படுத்தியிருந்தால், பின்பு அவர் வேறொரு நாளைக் குறித்துச் சொல்லியிருக்க மாட்டாரே. ஆகையால், தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனி வருகிறதாயிருக்கிறது.” (எபி. 4:​1, 8, 9) ‘கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்தில் பிரவேசிக்கத்தக்கதாக’ அவர்கள் முன்னேறிச் செல்கிறார்கள். (2 பே. 1:​10, 11) மத்தேயு 1:​5-ன்படி, ராகாப் இயேசு கிறிஸ்துவின் ஒரு மூதாதையானாள். இவ்வாறு யோசுவாவின் புத்தகம், ராஜ்ய வித்து பிறப்பிக்கப்படுவதை படிப்படியாக விவரிக்கும் பதிவில் மற்றொரு முக்கியமான இணைப்பை அளிக்கிறது. யெகோவாவின் ராஜ்ய வாக்குகள் நிச்சயம் நிறைவேறும் என்பதற்கு உறுதியான நம்பிக்கையையும் இது அளிக்கிறது. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்குக் கொடுக்கப்பட்டதும், அவர்களுடைய சந்ததியாராகிய இஸ்ரவேலருக்குத் திரும்பச் சொல்லப்பட்டதுமான கடவுளுடைய வாக்கைக் குறித்துப் பேசும் இந்தப் பதிவு, யோசுவாவின் நாளைப் பற்றி கூறுவதாவது: “யெகோவா இஸ்ரவேல் குடும்பத்தாருக்குச் சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை; எல்லாம் நிறைவேறிற்று.” (யோசு. 21:​45; ஆதி. 13:​14-17) அதைப் போலவே, நீதியுள்ள பரலோக ராஜ்யத்தைப் பற்றிய யெகோவாவின் “நல்வார்த்தை” எல்லாம் நிறைவேறும்!

[கேள்விகள்]

1. பொ.ச.மு. 1473-ல் இஸ்ரவேல் ஜனம் எப்படிப்பட்ட சூழ்நிலையை எதிர்ப்படுகிறது?

2. தலைவராகவும் பதிவுசெய்பவராகவும் யோசுவா தெரிந்தெடுக்கப்பட்டது ஏன் பொருத்தமானது?

3. யோசுவா யெகோவாவின் ஊழியராக உண்மையில் வாழ்ந்தவர் என்பதையும், தன் பெயர் தாங்கிய புத்தகத்தை அவரே எழுதினார் என்பதையும் எது நிரூபிக்கிறது?

4. யோசுவா புத்தகத்தின் நம்பகத்தன்மை, தீர்க்கதரிசன நிறைவேற்றத்தாலும் பைபிளின் பிற்பட்ட எழுத்தாளர்களின் அத்தாட்சியாலும் எவ்வாறு நிரூபிக்கப்பட்டுள்ளது?

5. (அ) யோசுவாவின் புத்தகத்தில் எந்த காலப்பகுதி அடங்கியுள்ளது? (ஆ) யோசுவா என்ற இந்தப் பெயர் ஏன் பொருத்தமானது?

6. பொதுவாக, யோசுவா புத்தகத்தை எத்தனை பிரிவுகளாக பிரிக்கலாம்?

7. யெகோவா யோசுவாவை எவ்வாறு ஊக்கமூட்டி அவருக்கு ஆலோசனை கொடுக்கிறார்?

8. (அ) ராகாப் எவ்வாறு தன் விசுவாசத்தை செயலில் காட்டுகிறாள்? (ஆ) யெகோவா எவ்வாறு இஸ்ரவேலின் மத்தியில் தம்மை ‘ஜீவனுள்ள கடவுளாக’ காட்டுகிறார்?

9. அடுத்தபடியாக கில்காலில் என்ன நடக்கிறது?

10. எரிகோவை கைப்பற்றுவதைக் குறித்து யெகோவா எவ்வாறு யோசுவாவுக்கு கட்டளை கொடுக்கிறார், பிரமிப்பூட்டும் என்ன நிகழ்ச்சி பின்தொடருகிறது?

11. ஆயி பட்டணத்தில் முதலில் ஏற்பட்ட தோல்வி எவ்வாறு வெற்றியாக மாறுகிறது?

12. கடவுளுடைய எந்தக் கட்டளையை யோசுவா அடுத்ததாக நிறைவேற்றுகிறார்?

13. கிபியோனியர் ‘தந்திரமாக’ செயல்படுவதால் உண்டாகும் பலன் என்ன?

14. யெகோவா இஸ்ரவேலுக்காக போரிடுவதை கிபியோனில் எவ்வாறு நிரூபித்துக் காட்டுகிறார்?

15. படையெடுப்பையும் ஆத்சோரில் அதன் உச்சக்கட்டத்தையும் விவரியுங்கள்.

16. நிலங்கள் எவ்வாறு பங்கிடப்படுகின்றன?

17. அடைக்கலப் பட்டணங்களுக்காகவும் லேவியரின் குடியிருப்புப் பட்டணங்களுக்காகவும் என்ன ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன?

18. கிழக்கேயும் மேற்கேயும் உள்ள கோத்திரங்களுக்கு இடையே என்ன பிரச்சினை ஏற்படுகிறது, ஆனால் இது எவ்வாறு தீர்க்கப்படுகிறது?

19, 20. (அ) என்ன பிரியாவிடை அறிவுரைகளை யோசுவா கொடுக்கிறார்? (ஆ) இஸ்ரவேலருக்கு முன்பாக என்ன தீர்மானத்தை வைக்கிறார், இஸ்ரவேலர் எடுக்க வேண்டிய சரியான தீர்மானத்தை அவர் எவ்வாறு வலியுறுத்துகிறார்?

21. யோசுவாவின் புத்தகத்திலுள்ள ஞானமான என்ன அறிவுரை இன்று மிகச் சிறந்த முறையில் பயனுடையது?

22. உண்மை வணக்கத்தின் இன்றியமையாத என்ன பண்புகள் சிறப்பித்துக் காட்டப்படுகின்றன?

23. யோசுவா புத்தகத்திலுள்ள சிறந்த நினைப்பூட்டுதல்கள் யாவை?

24. யோசுவா புத்தகம் ராஜ்ய வாக்குகளோடு எவ்வாறு பொருந்துகிறது, இவை ‘எல்லாம் நிறைவேறும்’ என்பதற்கு என்ன உறுதியை அளிக்கிறது?

[பக்கம் 41-ன் அட்டவணை]

உபாகமத்தில் சில சட்டப்பூர்வ முன்மாதிரிகள் a

I. தனிப்பட்ட மற்றும் குடும்ப சட்டங்கள் அதிகாரங்களும் வசனங்களும்

அ. தனிப்பட்ட உறவுகள்

1. பெற்றோரும் பிள்ளைகளும் 5:16

2. திருமண உறவுகள் 22:30; 27:​20, 22, 23

3. விவாகரத்து சம்பந்தமான சட்டங்கள் 22:​13-19, 28, 29

ஆ. சொத்துரிமைகள் 22:​1-4

II. அரசியலமைப்பு சட்டங்கள்

அ. அரசரின் தகுதிகளும் 17:​14-20 கடமைகளும்

ஆ. இராணுவப் பிரமாணங்கள்

1. இராணுவச் சேவையிலிருந்து 20:​1, 5-7; 24:5 விலக்கு

2. சிறிய அதிபதிகள் 20:9

III. நீதித்துறை

அ. நீதிபதிகளின் கடமைகள் 16:​18, 20

ஆ. மேல் முறையீடு செய்வதற்கு உச்சநீதிமன்றம் 17:​8-11

IV. குற்றச்செயலுக்கான சட்டங்கள்

அ. அரசாங்கத்துக்கு எதிரான குற்றங்கள்

1. லஞ்சம், நியாயத்தைப் புரட்டுதல் 16:​19, 20

2. பொய்ச்சாட்சி 5:20

ஆ. நல்லொழுக்கத்துக்கு எதிரான குற்றங்கள்

1. விபசாரம் 5:18; 22:​22-24

2. சட்டத்திற்கு புறம்பான மணம் 22:30; 27:​20, 22, 23

இ. மனிதனுக்கு எதிரான குற்றங்கள்

1. கொலையும் திடீர்த் தாக்குதலும் 5:17; 27:24

2. கற்பழிப்பும் ஒழுக்கக்கேட்டிற்கு தூண்டுதலும் 22:​25-29

V. மனிதாபிமான சட்டங்கள்

அ. மிருகங்களிடம் இரக்கங்காட்டுதல் 25:4; 22:​6, 7

ஆ. நல்வாய்ப்பு இல்லாதவர்களுக்கு 24:6, 10-18 தயவு காட்டுதல்

இ. கட்டிட பாதுகாப்பு சட்டம் 22:8

ஈ. அடிமைகளும் சிறைப்பட்டோரும் உட்பட, 15:​12-15; 21:10-14; சார்ந்து வாழ்வோரை 27:​18, 19 நடத்தும் முறை

உ. தேவையில் இருப்பவர்களுக்கு 14:​28, 29; 15:​1-11;

சமூக உதவி ஏற்பாடுகள் 16:​11, 12; 24:​19-22

[அடிக்குறிப்பு]

a இஸ்ரவேலின் சட்டங்களும் சட்டப்பூர்வ முன்மாதிரிகளும், (ஆங்கிலம்) 1907, சி. எஃப். கென்ட், பக்கங்கள் vii-லிருந்து xviii வரை; வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 2, பக்கங்கள் 214-20-ஐயும் காண்க.