Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் புத்தக எண் 60—1 பேதுரு

பைபிள் புத்தக எண் 60—1 பேதுரு

பைபிள் புத்தக எண் 60—1 பேதுரு

எழுத்தாளர்: பேதுரு

எழுதப்பட்ட இடம்: பாபிலோன்

எழுதி முடிக்கப்பட்டது: ஏ. பொ.ச. 62-64

ஆரம்பகால கிறிஸ்தவர்கள் கடவுளுடைய மகத்துவங்களை எங்கும் அறிவித்து வந்தனர். ரோமப் பேரரசு முழுவதும் ராஜ்ய வேலை அதிக பலனளித்தது, பெருகவும் செய்தது. எனினும், ஆர்வமிக்க இந்தத் தொகுதியைக் குறித்து சில தப்பெண்ணங்களும் தலைதூக்கின. ஒரு காரியமானது, அவர்களுடைய மதம் எருசலேமிலிருந்தும் யூதருக்குள்ளிருந்தும் தோன்றியிருந்தது. அரசியல் பற்றுமிக்க, வெறிபிடித்த யூதர்களில் சிலர் ரோம ஆட்சியின் அடிமைத்தனத்தால் எரிச்சலடைந்து உள்ளூர் தலைவர்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தனர். மெய் கிறிஸ்தவர்களோடு இந்தக் கலகக்காரர்களை சிலர் குழப்பிக் கொண்டனர். மேலும், கிறிஸ்தவர்கள் பேரரசனுக்குப் பலிசெலுத்த மறுத்தனர். அல்லது அந்நாளைய புறமத ஆசாரங்களில் கலந்துகொள்ளவும் மறுத்தனர். இவ்வகையில் கிறிஸ்தவர்கள் வித்தியாசமானவர்களாய் திகழ்ந்தனர். அவர்களுடைய விசுவாசத்தின் காரணமாக மோசமாக விமர்சிக்கப்பட்டனர்; பல இக்கட்டுகளை அனுபவித்தனர். ஏற்ற சமயத்தில், கடவுளுடைய வழிநடத்துதலை சுட்டிக்காட்டும் முன்யோசனையுடன் பேதுரு தன் முதல் நிருபத்தை எழுதினார். கிறிஸ்தவர்களை உறுதியாய் நிலைத்திருக்கும்படி உற்சாகப்படுத்தினார்; அந்தச் சமயத்தில் இராயனாயிருந்த நீரோவின் ஆட்சியில் தங்களை எவ்வாறு நடத்திக்கொள்ள வேண்டும் என்பதன்பேரில் அறிவுரை வழங்கினார். அதே சமயத்தில் கடும் துன்புறுத்துதலின் தாக்குதல் தொடங்கியது. எனவே, இந்த நிருபம் காலத்துக்கு ஏற்றதாக இருந்தது.

2பேதுருவே இதன் எழுத்தாளர் என்பது அதன் தொடக்க வார்த்தைகளில் தெளிவாய் தெரிகிறது. மேலும், ஐரீனியஸ், அலெக்ஸாண்டிரியாவின் கிளெமென்ட், ஆரிகென், டெர்ட்டுல்லியன் என அனைவரும் இந்த நிருபத்தை மேற்கோள்காட்டி, பேதுருவையே எழுத்தாளராக குறிப்பிடுகின்றனர். a தேவாவியால் ஏவப்பட்ட மற்ற நிருபங்களைப் போலவே ஒன்று பேதுருவின் நம்பகத் தன்மைக்கும் நன்கு சான்றளிக்கப்படுகிறது. சர்ச்சின் மூப்பர்கள் இந்த நிருபத்தைத் தாராளமாக பயன்படுத்தினார்கள் என்பதாக யூஸிபியஸ் நமக்கு சொல்கிறார்; அதன் நம்பகத் தன்மைக்கு அவருடைய காலத்தில் (ஏ. பொ.ச. 260-342) எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்த இக்னேஷியஸ், ஹெர்மஸ், பர்னபாஸ் என யாவரும் இதைக் குறிப்பிடுகின்றனர். b தேவாவியால் ஏவப்பட்ட வேதாகமத்தின் மற்ற புத்தகங்களோடு ஒன்று பேதுரு முற்றிலும் ஒத்திசைந்துள்ளது. மேலும், ஆசியா மைனரிலிருந்த, ‘பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா தேசங்களிலே சிதறி, பரதேசிகளாகத்’ தங்கியிருந்த யூத மற்றும் யூதரல்லாத கிறிஸ்தவர்களுக்கு வலிமைமிக்க செய்தி இதில் அடங்கியிருந்தது.​—1 பே. 1:1, NW.

3இந்த நிருபம் எப்போது எழுதப்பட்டது? கிறிஸ்தவர்கள் புறமதத்தினரிடமிருந்து அல்லது மதம் மாறாத யூதரிடமிருந்து துன்பங்களை அனுபவித்தார்கள் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. நீரோ பொ.ச. 64-ல்தான் துன்புறுத்துதலை தூண்டினார். அதற்கு சற்று முன்பே, பெரும்பாலும் பொ.ச. 62-க்கும் 64-க்கும் இடைப்பட்ட காலத்தில் பேதுரு இந்த நிருபத்தை எழுதியிருக்கலாம். பேதுருவுடன் அப்போது மாற்கு இருந்தது உறுதியாய் இந்த முடிவுக்கு வர செய்கிறது. ரோமில் பவுலின் முதல் சிறையிருப்பு காலத்தின்போது (ஏ. பொ.ச. 59-61) மாற்கு பவுலுடன் இருந்தார், ஆனால் ஆசியா மைனருக்கு பயணப்படும் தறுவாயில் இருந்தார். பவுலின் இரண்டாவது சிறையிருப்பின்போது (ஏ. பொ.ச. 65), மாற்கு மறுபடியுமாக ரோமில் பவுலுடன் சேர்ந்துகொள்ள இருந்தார். (1 பே. 5:13; கொலோ. 4:10; 2 தீ. 4:11) இந்த இடைப்பட்ட காலத்தில் பாபிலோனில் பேதுருவுடன் தங்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கும்.

4பேதுருவின் முதலாம் நிருபம் எங்கே எழுதப்பட்டது? இப்புத்தகத்தின் நம்பகத் தன்மை, அதிகாரப்பூர்வ பட்டியலின் பாகமாய் இருப்பது, எழுத்தாளர், எழுதப்பட்ட காலம் ஆகியவற்றில் பைபிள் கருத்துரையாளர்கள் ஒத்துப்போகின்றனர். என்றாலும், அது எழுதப்பட்ட இடத்தைக் குறித்ததில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு நிலவுகிறது. பேதுருவின்படி, பாபிலோனில் இருக்கையில் அவர் தன் முதல் நிருபத்தை எழுதினார். (1 பே. 5:13) ஆனால் சிலர், “பாபிலோன்” என்பது மறைமுகமாக ரோமுக்கு பயன்படுத்தப்பட்ட பெயரென்று சொல்கின்றனர். எனவே, அவர் ரோமிலிருக்கையில் இதை எழுதியதாக வாதாடுகின்றனர். எனினும், அத்தாட்சி அத்தகைய கருத்தை ஆதரிக்கிறதில்லை. பாபிலோன் ரோமைக் குறிப்பதாய் பைபிளில் எங்குமே குறிப்பிடப்படவில்லை. சொல்லர்த்தமான பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா ஆகியவற்றில் இருந்தவர்களுக்குப் பேதுரு தன் நிருபத்தை எழுதினார். அதனால், பாபிலோன் என அவர் குறிப்பிட்டதும் சொல்லர்த்தமான பாபிலோனையே குறித்தது. (1:1) பேதுரு பாபிலோனில் இருந்தார் என்பதற்கு தகுந்த காரணங்கள் இருந்தன. ‘விருத்தசேதனம் செய்தவர்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படியான’ பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது; பாபிலோனில் பெருவாரியான யூதர்கள் இருந்தனர். (கலா. 2:​7-9) பாபிலோனிய தால்மூட்டின் படைப்பை குறித்து பேசுகையில், பொது சகாப்தத்தின்போது யூதேய மதம் சார்ந்த “பாபிலோனிய பெரும் கல்வி சாலைகள்” இருந்ததாக என்ஸைக்ளோப்பீடியா ஜுடேய்க்கா குறிப்பிடுகிறது. c

5பேதுரு எழுதிய இரண்டு நிருபங்கள் உட்பட, தேவாவியால் ஏவப்பட்ட வேதவாக்கியங்கள் அவர் ரோமுக்குச் சென்றதாக குறிப்பிடுவதே இல்லை. தான் ரோமில் இருந்ததைப்பற்றி பவுல் சொல்கிறார், ஆனால் பேதுரு அங்கிருந்ததாக ஒருபோதும் குறிப்பிடுகிறதில்லை. ரோமருக்கு எழுதிய தன் நிருபத்தில் பவுல் 35 பெயர்களைக் குறிப்பிட்டு, 26 பேருக்குத் தனிப்பட வாழ்த்துக்களை அனுப்புகிறார். என்றபோதிலும், பேதுருவைப் பற்றி ஏன் அவர் குறிப்பிடுவதில்லை? ஏனெனில் அச்சமயத்தில் பேதுரு அங்கே இல்லையே! (ரோ. 16:​3-15) பேதுரு தன் முதல் நிருபத்தை எழுதிய அந்தப் “பாபிலோன்” மெசொப்பொத்தாமியாவில் ஐப்பிராத் நதியின் கரைகளில் அமைந்திருந்த சொல்லர்த்தமான பாபிலோனே என்பது தெளிவாயிருக்கிறது.

ஒன்று பேதுருவின் பொருளடக்கம்

6கிறிஸ்துவின் மூலம் ஜீவனுள்ள நம்பிக்கைக்குப் புதிய பிறப்பு (1:​1-25). தொடக்கத்திலேயே பேதுரு, ‘ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி புதிதாய் பிறந்திருப்பதை’ வாசகரின் கவனத்திற்கு கொண்டுவருகிறார். பரலோகத்தில் அவர்களுக்காக வைக்கப்பட்டுள்ள அழியாத சுதந்தரத்தைப் பற்றியும் குறிப்பிடுகிறார். இது இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் மூலமான கடவுளின் இரக்கத்தின்படியாகும். ஆகையால், ‘தெரிந்தெடுக்கப்பட்டவர்கள்’ பலவித சோதனைகளால் துக்கப்படுகையிலும், மிகவும் சந்தோஷப்படுகின்றனர். இவ்வாறு தங்கள் விசுவாசத்தின் பரீட்சிக்கப்பட்ட தன்மை, “இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது புகழ்ச்சிக்கும் கனத்திற்கும் மகிமைக்கும் ஏதுவாக காணப்பட வேண்டுமென்றிருக்”கின்றனர். பூர்வ தீர்க்கதரிசிகளும், ஏன் தேவதூதர்கள்கூட, இந்த இரட்சிப்பைக் குறித்து விசாரித்திருக்கின்றனர். ஆகவே, தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் தங்கள் மனதை செயலாற்றுவதற்குத் தயாராக்கிக்கொண்டு, இந்தத் தகுதியற்ற தயவின்மீது தங்கள் நம்பிக்கையை வைத்து, தங்கள் நடத்தைகளில் எல்லாம் பரிசுத்தராய் இருக்க வேண்டும். அழிந்து போகிறவற்றால் அல்லாமல், “மாசில்லாத கறையற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலைமதிப்பில்லாத இரத்தத்தினால்” அவர்கள் மீட்கப்பட்டிருப்பதால் இப்படி நடந்துகொள்ள வேண்டியது தகுந்ததல்லவா? அவர்களுடைய ‘புதிய பிறப்பு’ ஜீவனுள்ள, நிலைத்திருக்கும் கடவுளாகிய யெகோவாவின் வார்த்தையின் மூலமானது; இது என்றென்றும் நிலைத்திருக்கிறது. நற்செய்தியாக அவர்களுக்கு அறிவிக்கப்பட்டும் இருக்கிறது.​—1:​1, NW, 3, 7, 19, தி.மொ., 23, NW.

7புறதேசத்தாருக்குள் நல்நடக்கையைக் காத்துவருதல் (2:​1–3:22). ஜீவனுள்ள கற்களாக கிறிஸ்தவர்கள், ஆவிக்குரிய வீடாய் கட்டப்படுகின்றனர். அஸ்திவார மூலைக்கல்லாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் கடவுளுக்கு ஏற்கத்தக்க ஆவிக்குரிய பலிகளைச் செலுத்துகின்றனர். கீழ்ப்படியாதவர்களுக்கு இவர் இடறுவதற்கேதுவான கல்லானார். விசுவாசத்தைக் காட்டுவோர், ‘அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய மகத்துவங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும்’ ஆகியிருக்கின்றனர். தேசத்தாருக்குள் தற்காலிக குடியிருப்பாளர்களாய் அவர்கள் மாம்ச இச்சைகளுக்கு விலகி, நல்நடக்கையைக் காத்துவருவார்களாக. அரசனுக்கானாலும் சரி அவருடைய அதிகாரிகளுக்கானாலும் சரி, “மனுஷ ஏற்பாடுகள் யாவற்றிற்கும்” அடங்கியிருப்பார்களாக. ஆம், ‘எல்லாரையுங் கனம்பண்ணட்டும்; சகோதரக்கூட்டத்தாரில் அன்புகூரட்டும்; கடவுளுக்குப் பயந்திருக்கட்டும், ராஜாவைக் கனம்பண்ணட்டும்.’ அவ்வாறே, வேலைக்காரர்கள் தங்கள் எஜமானர்களுக்கு நல்மனசாட்சியுடன் கீழ்ப்பட்டிருப்பார்களாக; அநியாயமாய் துன்பம் அனுபவித்தாலும் சகித்திருப்பார்களாக. கிறிஸ்துவுங்கூட, பாவமற்றவராயிருந்தும், வையப்படுவதற்கும், பாடுபடுவதற்கும் தம்மைக் கீழ்ப்படுத்தி, அவருடைய அடிச்சுவடுகளை நெருங்கப் பின்பற்றும்படி “மாதிரியை” பின்வைத்துப் போனார்.​—2:​9, 13, 17, தி.மொ., 21.

8கீழ்ப்பட்டிருப்பது, மனைவிகளுக்கும் பொருந்துகிறது. இவர்கள் ஆழ்ந்த மரியாதையோடு, கற்புள்ள நடக்கையின் மூலம், அவிசுவாசியான கணவரையும் ஒரு வார்த்தைகூட பேசாமல் ஆதாயப்படுத்திக் கொள்ளலாம். வெளி அலங்காரத்திலேயே அவர்கள் கண்ணும் கருத்துமாய் இருக்கக்கூடாது. கீழ்ப்படிதலுள்ள சாராளைப்போல இருக்க வேண்டும்: “அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே . . . தேவனுடைய பார்வையில் விலையேறப் பெற்றது.” கணவர்கள் மனைவிகளை ‘பலவீன பாண்டங்களாக’வும் ‘தங்களோடு ஜீவகிருபைக்குச் சுதந்தரரென்றும்’ கருதி, அவர்களுக்கு உரிய கௌரவத்தைக் கொடுக்க வேண்டும். கிறிஸ்தவர்கள் அனைவரும் சகோதர அன்பைக் காட்ட வேண்டும். ‘ஜீவனை நேசிக்கிறவன் . . . , தீமையானதிலிருந்து விலகி நன்மைச் செய்யக்கடவன்; சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடரக்கடவன். ஏனெனில் யெகோவாவின் கண்கள் நீதிமான்கள்மீது நோக்கமாயிருக்கின்றன.’ மனிதருக்கு பயப்படுவதற்குப் பதிலாக, தங்கள் நம்பிக்கையைக் குறித்துப் பேசுவதற்கு அவர்கள் எப்போதும் தயாராய் இருக்க வேண்டும். தீமைசெய்து கஷ்டம் அனுபவிப்பதைப் பார்க்கிலும், கடவுளுக்குச் சித்தமானால், நன்மை செய்து பாடனுபவிப்பது மேலானது. “நம்மைக் கடவுளிடம் சேர்க்கும்படி கிறிஸ்துவும் அநீதியுள்ளவர்களுக்காக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் மரித்தார்; அவர் மாம்சத்தில் கொல்லப்பட்டார்; ஆவியிலோ உயிர்ப்பிக்கப்பட்டார்.” பேழையைக் கட்டுவதில் நோவா விசுவாசத்தை வெளிக்காட்டினார். அதன் விளைவாக அவரும் அவருடைய குடும்பத்தினரும் பாதுகாக்கப்பட்டனர். அதற்கொப்பான முறையில், உயிர்த்தெழுப்பப்பட்ட கிறிஸ்துவில் விசுவாசத்தைக் காண்பிப்போர், கடவுளுக்குத் தங்களை ஒப்புக்கொடுக்கின்றனர்; அந்த விசுவாசத்தின் அடையாளமாக அவர்கள் முழுக்காட்டப்படுகின்றனர். இப்படியாக, கடவுளுடைய சித்தத்தைத் தொடர்ந்து செய்துவருவோர் இரட்சிக்கப்பட்டு கடவுளால் நல்மனசாட்சி அளிக்கப்படுகின்றனர்.​—3:​4, 7, 10-12, NW, 18, தி.மொ.

9துன்பம் அனுபவிக்கிறபோதிலும், கிறிஸ்தவராக கடவுளின் சித்தத்தைச் செய்வதில் சந்தோஷம் காணுதல் (4:​1–5:14). கிறிஸ்துவின் மனப்பான்மையே கிறிஸ்தவர்களுக்கும் வேண்டும்; இனிமேலும் புறதேசத்தாரின் சித்தத்தின்படி அல்லாமல், கடவுளின் சித்தத்தை செய்வதற்காகவே வாழவேண்டும். “துன்மார்க்க உளையிலே” அவர்களோடுகூட தொடர்ந்து ஓடாததற்காக புறதேசத்தார் அவர்களை தூஷிக்கிறபோதிலும் அவ்வாறு செய்ய வேண்டும். எல்லாவற்றிற்கும் முடிவு சமீபத்திருக்கிறது; ஆகவே, அவர்கள் மனத்தெளிவுடனும், ஜெபசிந்தையுடனும், ஒருவருக்கொருவர் ஊக்கமான அன்புடனும் இருக்க வேண்டும்; கடவுளின் மகிமைக்காகவே எல்லாவற்றையும் செய்ய வேண்டும். கடும் பரீட்சைகளை அவர்கள் எதிர்ப்படுகையில் திகைக்கக்கூடாது. மாறாக, கிறிஸ்துவின் பாடுகளில் பங்காளிகளாக சந்தோஷப்பட வேண்டும். எனினும், ஒருவனும் தீமையின் காரணமாக துன்பம் அனுபவியாதிருப்பானாக. நியாயத்தீர்ப்பு கடவுளுடைய வீட்டில் தொடங்குவதால், “தேவனுடைய சித்தத்தின்படி பாடநுபவிக்கிறவர்கள் நன்மை செய்கிறவர்களாய்த் தங்கள் ஆத்துமாக்களை உண்மையுள்ள சிருஷ்டிகர்த்தாவாகிய அவருக்கு ஒப்புக்கொடுக்கக்கடவர்கள்.”​—4:​4, 19.

10மூப்பர்கள் கடவுளுடைய மந்தையை மனப்பூர்வமாகவும், ஆர்வத்தோடும் மேய்க்க வேண்டும். மந்தைக்கு முன்மாதிரியாய் இருப்பது, பிரதான மேய்ப்பர் வெளிப்படுகையில் மகிமையின் வாடாத கிரீடத்தைப் பெறும் நிச்சயத்தை அவர்களுக்கு அளிக்கும். இளைஞர் முதியோருக்கு கீழ்ப்பட்டிருக்க வேண்டும்; எல்லாரும் மனத்தாழ்மையோடு இருக்க வேண்டும். ஏனெனில் “பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.” விசுவாசத்தில் அவர்கள் உறுதியாயிருந்து, “கெர்ச்சிக்கிற சிங்க”மாகிய பிசாசானவனைக் குறித்து எச்சரிக்கையாய் இருப்பார்களாக. மறுபடியுமாக, நம்பிக்கையளிக்கும் வல்லமைவாய்ந்த வார்த்தைகளால் பேதுரு தன் அறிவுரையை முடிக்கிறார்: “கிறிஸ்துவுக்குள் உங்களைத் தமது நித்திய மகிமைக்குள்ளாக அழைத்தவராகிய சகல கிருபையுமுள்ள கடவுள் தாமே கொஞ்சக்காலம் பாடநுபவித்த உங்களைப் பூரணப்படுத்தி ஸ்திரப்படுத்திப் பலப்படுத்தி நிலைநிறுத்துவாராக. அவருக்கே வல்லமை யுகாயுகங்களாயிருப்பதாக; ஆமென்.”​—5:​5, 8, 10, 11, தி.மொ.

ஏன் பயனுள்ளது

11பேதுருவின் முதலாம் நிருபத்தில் கண்காணிகளுக்கு சிறந்த அறிவுரை உள்ளது. யோவான் 21:​15-17-ல் இயேசுதாமே கொடுத்த அறிவுரையையும் அப்போஸ்தலர் 20:​25-35-லுள்ள பவுலின் அறிவுரையையும் பின்பற்றி பேதுரு, கண்காணியின் சேவையைப் பற்றி குறிப்பிடுகிறார்; அது மேய்க்கும் வேலை என்றும், தன்னலமற்ற விதத்திலும் மனப்பூர்வமாகவும் ஆர்வத்தோடும் செய்யப்பட வேண்டுமென்றும் சுட்டிக்காட்டுகிறார். கண்காணி, துணை மேய்ப்பராயிருக்கிறார்; ‘பிரதான மேய்ப்பராகிய’ இயேசு கிறிஸ்துவுக்குக் கீழ்ப்பட்டு சேவிக்கிறார். கடவுளுடைய மந்தைக்காக அவருக்கு கணக்கொப்புவிக்க வேண்டிய பொறுப்பில் இருக்கிறார். மந்தைக்கு முன்மாதிரியாகவும் சகல விதத்திலும் மனத்தாழ்மையோடும் இருந்து மந்தையின் தேவைகளை அவர் கவனிக்க வேண்டும்.​—5:​2-4.

12கிறிஸ்தவ கீழ்ப்படிதலில் உட்பட்டுள்ள மற்ற பல அம்சங்களும் பேதுருவின் நிருபத்தில் குறிப்பிடப்படுகின்றன; மிகச் சிறந்த அறிவுரையும் கொடுக்கப்படுகிறது. 1 பேதுரு 2:​13-17-ல், அரசர், அதிபதிகள் போன்று ஆட்சிசெய்வோருக்குத் தகுந்த விதத்தில் கீழ்ப்பட்டிருக்கும்படி அறிவுரை கொடுக்கப்படுகிறது. எனினும் இது, சம்பந்தப்பட்ட கீழ்ப்படிதலே; கர்த்தருக்காகவும் ‘தேவ பயத்தோடு’ கீழ்ப்படிய வேண்டும். கிறிஸ்தவர்கள் தேவனுக்கே அடிமைகளாக இருக்கின்றனர். வீட்டு வேலைக்காரர்கள் தங்கள் எஜமானருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்படியும், “தேவன்மேல் பற்றுதலாயிருக்கிற மனச்சாட்சியினிமித்தம்” தாங்கள் துன்பம் அனுபவிக்க நேரிடுகையில் பொறுமையோடு சகித்துக்கொள்ளும்படியும் அறிவுரை கூறப்படுகின்றனர். மனைவிகளும், அவிசுவாசிகளாக இருப்போர் உட்பட, தங்கள் கணவர்களுக்குக் கீழ்ப்பட்டிருக்கும்படி மதிப்புமிக்க விதத்தில் அறிவுரை கூறப்படுகின்றனர். அவர்களுடைய கற்புள்ள, பயபக்தியோடுகூடிய நடத்தை, “தேவனுடைய பார்வையில் விலையேறப் பெற்றது.” அதன்மூலம் தங்கள் கணவர்கள் சத்தியத்தை ஏற்கும்படியும் செய்யலாமென்று காட்டப்படுகிறது. இங்கே இந்தக் குறிப்பை வலியுறுத்த, ஆபிரகாமுக்கு சாராள் உண்மையுடன் கீழ்ப்பட்டிருந்த உதாரணத்தைப் பேதுரு குறிப்பிடுகிறார். (1 பே. 2:​17-20; 3:​1-6; ஆதி. 18:12) கணவன்மார்களும் தங்கள் பங்கில், ‘பலவீன பாண்டத்துக்குத்’ தகுந்த கரிசனை காட்டும் விதத்தில் தங்கள் தலைமை வகிப்பை செயல்படுத்த வேண்டும். இந்த விஷயத்தின் பேரில் தொடர்ந்து அறிவுரை கூறுகிறவராய் பேதுரு, “இளைஞரே, முதியோருக்கு அடங்கியிருங்கள்” என்கிறார். பின்பு மனத்தாழ்மைக்கும், பணிவுக்குமான தேவையை வலியுறுத்துகிறார்; இது அவருடைய நிருபம் முழுவதிலும் அறிவுறுத்தப்படுகிற கிறிஸ்தவ பண்பாகும்.​—1 பே. 3:​7-9; 5:​5-7, தி.மொ.; 2:​21-25.

13தீ போன்ற கடுமையான பரீட்சைகளும் துன்புறுத்துதல்களும் மறுபடியும் கொழுந்துவிட்டெரிய தொடங்கிய சமயத்தில், பேதுரு பலப்படுத்தும் ஊக்கமூட்டுதலை அளித்தார். இன்று அத்தகைய சோதனைகளை எதிர்ப்படுகிற யாவருக்கும் அவருடைய நிருபம் நிச்சயமாகவே மதிப்புமிக்கது. யெகோவாவின் வார்த்தைகளை எபிரெய வேதாகமத்திலிருந்து எவ்வாறு மேற்கோள் காட்டுகிறார் என்பதைக் கவனியுங்கள்: “நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்.” (1 பே. 1:16; லேவி. 11:44) மற்றொரு பகுதியில், தேவாவியால் ஏவப்பட்ட மற்ற வேதவசனங்களை அதிகமாய் மேற்கோள் காட்டி, கிறிஸ்தவ சபை எவ்வாறு கிறிஸ்துவை அஸ்திவாரமாக கொண்டு, அவர்மீது ஜீவனுள்ள கற்களால் ஆவிக்குரிய வீடாகக் கட்டப்படுகிறது என்பதைக் காட்டுகிறார். என்ன நோக்கத்திற்காக? பேதுரு பதில் சொல்கிறார்: ‘நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தமது ஆச்சரியமான வெளிச்சத்தினிடத்திற்கு வரவழைத்தவரின் மகத்துவங்களை அறிவிக்கும்படி, தெரிந்தெடுக்கப்பட்ட சந்ததியும் ராஜரிகமான ஆசாரியக் கூட்டமும் பரிசுத்த ஜாதியும் அவருக்குச் சொந்தமான ஜனமுமாம்.’ (1 பே. 2:​4-10; ஏசா. 28:16; சங். 118:22; ஏசா. 8:14; யாத். 19:​5, 6; ஏசா. 43:21; ஓசி. 1:10; 2:23) கடவுளுடைய பரிசுத்த ஜனம் முழுவதும் அடங்கிய பொது ஆசாரியத்துவமாகிய இந்த ‘ராஜரிகமான ஆசாரியக் கூட்டத்துக்கே’ பேதுரு ராஜ்ய வாக்குறுதியின் சிலாக்கியத்தைக் குறிப்பிடுகிறார். அது, ‘அழியாததும் மாசற்றதும் வாடாததுமான சுதந்தரம்,’ ‘மகிமையின் வாடாத கிரீடம்,’ ‘கிறிஸ்துவுடன் நித்திய மகிமைக்குரியது.’ இவ்வாறு, இவர்கள் இயேசுவின் ‘மகிமை வெளிப்படும்போது களிகூர்ந்து மகிழ்ந்து’ தொடர்ந்து சந்தோஷப்படுமாறு மிகவும் உற்சாகப்படுத்தப்படுகின்றனர்.​—1 பே. 1:4; 5:​4, 10, தி.மொ.; 4:13.

[அடிக்குறிப்புகள்]

a மக்ளின்டாக், ஸ்டிராங்ஸ் ஆகியோரின் ஸைக்ளோப்பீடியா, 1981-ன் மறுபதிப்பு, தொ. VIII, பக்கம் 15.

b நியூ பைபிள் டிக்ஷ்னரி, இரண்டாம் பதிப்பு, 1986, ஜே. டி. டக்லஸ் பதிப்பித்தது, பக்கம் 918.

c ஜெரூசலம், 1971, தொ. 15, பத்தி 755.

[கேள்விகள்]

1. கிறிஸ்தவர்கள் ஏன் பல இக்கட்டுகளை அனுபவிக்க வேண்டியிருந்தது, ஒன்று பேதுரு ஏன் காலத்துக்கேற்றது?

2. பேதுருவின் பெயர் தாங்கிய நிருபத்திற்கு அவரே எழுத்தாளரென எது நிரூபிக்கிறது, இந்த நிருபம் யாருக்கு எழுதப்பட்டது?

3. ஒன்று பேதுரு எழுதப்பட்ட காலத்தைக் குறிப்பிட என்ன அத்தாட்சி உள்ளது?

4, 5. (அ) பேதுரு தன் முதல் நிருபத்தை ரோமிலிருந்து எழுதினாரென்ற வாதத்தை எது தவறென நிரூபிக்கிறது? (ஆ) சொல்லர்த்தமான பாபிலோனிலிருந்தே அதை எழுதினாரென எது காட்டுகிறது?

6. என்ன நம்பிக்கையைப் பற்றி பேதுரு எழுதுகிறார், எந்த ஆதாரத்தின்பேரில் இந்த நம்பிக்கைக்கான ‘புதிய பிறப்பு’ சாத்தியமாகிறது?

7. (அ) கிறிஸ்தவர்கள் என்னவாக கட்டப்பட்டு வருகின்றனர், என்ன நோக்கத்துக்காக? (ஆ) தற்காலிக குடியிருப்பாளர்களாக, அவர்கள் தங்களை எவ்வாறு நடத்திக்கொள்ள வேண்டும்?

8. (அ) என்ன நல்ல அறிவுரை மனைவிகளுக்கும் கணவர்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது? (ஆ) கடவுளுக்கு முன்பாக நல்மனசாட்சியோடு இருக்க என்ன தேவை?

9. கிறிஸ்தவர்களுக்கு என்ன மனப்பான்மை தேவை, எதன் மத்தியிலும்?

10. முதியோருக்கும் இளைஞருக்கும் என்ன அறிவுரை கொடுக்கப்பட்டிருக்கிறது, என்ன வல்லமைவாய்ந்த வாக்குறுதியுடன் ஒன்று பேதுரு முடிகிறது?

11. கண்காணிகளுக்கு அறிவுரை கொடுப்பதில் எவ்வாறு இயேசு, பவுல் ஆகியோரின் அறிவுரையை பேதுரு பின்பற்றுகிறார்?

12. (அ) ஆட்சியாளர்களுக்கும் எஜமானர்களுக்கும் காட்ட வேண்டிய சம்பந்தப்பட்ட கீழ்ப்படிதல் என்ன? (ஆ) மனைவியின் கீழ்ப்படிதலையும், கணவனின் தலைமை வகிப்பையும் குறித்து பேதுரு என்ன அறிவுரை அளிக்கிறார்? (இ) எந்தக் கிறிஸ்தவ பண்பு இந்த நிருபம் முழுவதிலும் அறிவுறுத்தப்படுகிறது?

13. (அ) கிறிஸ்தவ சபையைக் கடவுள் அழைத்ததற்கான நோக்கத்தை பேதுரு தன் நிருபத்தில் எவ்வாறு தெளிவாக்குகிறார்? (ஆ) மகிழ்ச்சிக்குரிய என்ன சுதந்தரத்தை பேதுரு குறிப்பிட்டுக் காட்டுகிறார், யார் அதை அடைகின்றனர்?